• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பார்வையே ரம்மியமாய் - 5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
பார்வை - 5

அண்டமாய் அவனியாகி

அரியொணாப் பொருள தாகித்

தொண்டர்கள் குருவு மாகித்

துகளறு தெய்வ மாகி

எண்டிசை போற்ற நின்ற

என்னருள் ஈச னான

திண்டிறல் சரவணத்தான்

தினமும் என் சிரசைக் காக்க

தெய்வீகமான குரலில் ஒலித்துக் கொண்டிருந்தது ஷண்முகக் கவசம். பழைய காலத்து முறைப்படி கட்டப்பட்ட தொட்டிக் கட்டு வீடு. வீட்டின் நடுவில் இருந்த முற்றத்தில் துளசி மாடம் அமைக்கப்பட்டு செழிப்பாக வளர்ந்திருந்த துளசிச் செடி சொல்லாமல் சொன்னது அந்த வீட்டின் செழுமையை.

துளசி மாடத்தில் விளக்கேற்றப்பட்டு ஊதுபத்தி மணம் கமழ்ந்து கொண்டிருந்தது. முற்றத்தின் பின்புறம் வலது கோடியிலிருந்த பூஜை அறையில் அமர்ந்து ஷண்முகக் கவசம் சொல்லிக் கொண்டிருந்தார் கோதை.

கோதை, பெயருக்கேற்றாற் போன்ற தெய்வீகக் களை பொருந்திய முகம். பார்ப்பதற்கு அசப்பில் பூவே பூச்சூடவா படத்தில் நடித்த நடிகை பத்மினியைப் போன்ற தோற்ற அமைப்பு. நெற்றியில் சிறு கீற்றாக விபூதி, தங்க நிற பிரேமினால் ஆன கண்ணாடிக்குள் அடங்கியிருந்த அந்தக் கண்களில் அவ்வளவு தீட்சண்யம்.

மூக்கில் இருந்த வைர பேசரி டாலடித்து அவருடைய அழகை இன்னும் கொஞ்சம் தூக்கிக் காட்டியது. அரக்கு நிறத்தில் புடவையணிந்து, புடவைத் தலைப்பை போர்த்தினாற் போல் கொண்டு வந்து முன்புறம் சொருகியிருந்தார்.

கோதையின் கணவர் கமலநாதன் கோவை வட்டாரத்தில் மிகப் பெரிய ஜமீன் வம்சம். கமலநாதனுடைய தாத்தா அரசாங்க உத்தரவுக்கு முன்னதாகவே தன்னுடைய சொத்துக்களை தன்னிடம் வேலை செய்தவர்களுக்கும், ஊர் மக்களுக்குமாகப் பிரித்துக் கொடுத்த வள்ளல். காலப்போக்கில் ஜமீன் முறை அழிந்தாலும் இவர்களை விடப் பெரும் பணக்காரர்கள் வந்த பொழுதிலும் கூட இவர்களுக்குரிய மரியாதை இன்று வரை நீடித்திருக்கிறது.

கோதை - கமலநாதன் தம்பதியரின் ஒரே செல்ல மகள் லலிதா. அந்த ஊரில் உள்ள அரசாங்கத்துக்கு சொந்தமான கரும்பாலை மில்லில் வேலைக்காக வந்தவர் குமரப்பன். இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பிய காரணத்தால், எந்தவிதப் பாகுபாடும் பார்க்காமல் தன் மகளை அவள் விரும்பியவனுக்கே மணமுடித்து வைத்தார் கமலநாதன்.

குமரப்பன் குணத்திலும் கரும்பைக் கொண்டிருந்ததால் மிகவும் இனிமையாகவே நடந்தது இல்லறம். ஆசைக்கு ஒரு பெண் மீனலோசினி, ஆஸ்திக்கு ஒரு ஆண் முகிலன் என்று இரண்டு பிள்ளைச் செல்வங்கள் லலிதா - குமரப்பன் தம்பதிகளுக்கு.

கமலநாதான் இருக்கும் வரை வரப் போக இருந்தவர், அவர் இறந்த பிறகு கோதையைத் தனியே விட மனமில்லாமல் இங்கேயே குடும்பத்துடன் வந்துவிட்டார் குமரப்பன். தான் எதுவும் சொல்லாமலேயே குறிப்பறிந்து தன் மனம் கோணாமல் நடக்கும் மருமகன் மீது எப்பொழுதுமே தனிப்பாசம் உண்டு கோதைக்கு.

சுலோகங்கள் எல்லாம் சொல்லி முடித்தக் கோதை மணியடித்துக் கொண்டே தீபாராதனை காட்டவும் சமையலறையில் இருந்து அவரது மகள் லலிதாவும், வெளியில் தாழ்வாரத்தில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த அவரது மருமகன் குமரப்பனும் வந்து தீப ஆரத்தியைக் கண்ணில் ஒற்றிக் கொண்டார்கள். அவர்கள் இருவருக்கும் துளசித் தீர்த்தம் வழங்கியவாறே,

"மீனா எங்கம்மணி?" என்றுத் தன் மகள் லலிதாவிடம் கேள்வி எழுப்பினார் கோதை.

"இன்னிக்கு மாப்பிள்ளை வீட்டுக் காரங்க் வாராங்க் இல்லீங்கம்மா, அதுதானுங்க நான் நம்ம செல்வி புள்ளைய வாசத் தொளிச்சு சாணம் போட்டு மொழுகிக் கொஞ்சம் பெரிய கோலமா போடச் சொன்னேனுங்கம்மா. உங்க பேத்தி தானே ரங்கோலி போடறதா சொல்லிப் போட்டுக் காலையிலிருந்து அங்கனயே தானுங்கம்மா உட்கார்ந்துக்கிட்டிருக்கா" என்றார் லலிதா.

"நல்லாயிருக்கு அம்மணி நீ சொல்றது. அவளைப் பொண்ணு பார்க்க வாரதுக்கு அவளையே கோலம் போடச் சொன்னியாக்கும். போய் வெரசா முடிச்சுட்டு உள்ர வரச் சொல்லு அம்மணி" என்று கோதை சொல்லத் தான் சென்று அழைத்து வருவதாகக் கூறி லலிதா வாசலுக்குச் சென்றார்.

அங்கு பல வண்ணக் கலவையில் அழகாக சிரித்துக் கொண்டிருந்தது பல வகைப் பூக்களும் அவற்றுக்கிடையில் ஒரு மயிலும். அந்த அவசரத்திலும் ஒரு நிமிடம் நின்றுத் தன் மகளின் கைவண்ணத்தை ரசித்துவிட்டே அவளைத் தேடிக் கொண்டு சென்றார் லலிதா.

"ராசு சின்னம்மணி எங்க?" என்று அங்கிருந்த பண்ணை ஆளிடம் கேட்க,

"நம்ம பாக்யம் கன்னுக்குட்டி ஈன்றுச்சுங்க அம்மணி. செல்விப் பொண்ணு வந்து அதைச் சொல்லவும் சின்னம்மணி கட்டுத்தரைக்குப் போயிட்டாங்கங்கோ" என்று பணிவாகப் பதில் வந்தது அவனிடமிருந்து.

"இந்தப் பொண்ணோட" என்று முணுமுணுத்தவாறே வீட்டுக்குப் பின்புறம் இருந்த மாட்டுத் தொழுவத்தை நோக்கிச் சென்றார் லலிதா.

அங்கு சென்றும் மீனலோசனியைக் காணாமல், அதற்கு மேலும் தேடுவதற்கு அந்தப் பரந்து விரிந்தத் தோட்டம் அனுமதி தர மறுத்தக் காரணத்தால் வீட்டுக்குள் சென்று கோதையிடமே அந்தப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டார் அவர்.

மேல் வேலைக்கு ஆட்கள் இருந்தாலும் சமையல் எப்பொழுதும் வீட்டுப் பெண்களிடம்தான். அதனால் அவர் அதைக் கவனிப்பதற்காகச் சென்றுவிட்டார். இன்று முதன் முறையாக அவருடைய ஆசை மகளைப் பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வருகின்றனரே! அவர்களை நன்றாகக் கவனிக்க வேண்டுமே என்ற பதட்டம் கொஞ்சமல்ல நிறையவே இருந்தது லலிதாவுக்கு.

மாட்டுத்தொழுவத்திலிருந்து சற்றுத் தள்ளி வாழைத் தோப்புக்கு அருகில் முகம் கொள்ளாப் புன்னகையுடன் நின்று கொண்டிருந்தாள் நமது கதாநாயகி மீனலோசனி. ஐந்தடி இரண்டு அங்குல உயரம், கொங்கு நாட்டுக்கே உரித்தான வாளிப்பானத் தோற்றம், செம்மஞ்சள் நிறமுடைய அழகி.

அடர்ந்த கூந்தல் இடைதாண்டிப் பின்னலிடப்பட்டிருக்க, ஆர்கிட் நிறச் சுடிதார் அவள் இடை தழுவியிருந்தது. அவள் கன்றிலிருந்தே ஆசையாக வளர்க்கும் பாக்யம் எனும் பசுமாடு இன்று கன்று ஈனப் போவதால் நேற்றிலிருந்து அந்த மாட்டைத் தான் சுற்றி வந்து கொண்டிருந்தாள் மீனா. இரவில் சரியாகத் தூங்கக் கூட முடியவில்லை அவளால்.

மாடு கொஞ்சம் சிரமப்படுவது போல் தோன்றவும் இன்று அதிகாலையிலேயே கால் நடை மருத்துவரும் வரவழைக்கப்பட்டிருந்தார். மீனாவின் பொறுமையை ரொம்பவும் சோதிக்காமல் அழகான ஒரு பெண் கன்றினை சற்று நேரத்துக்கு முன்பாகத்தான் ஈன்றெடுத்திருந்தது பாக்யம்.

"சின்னம்மணி வெள்ளிக்கிழமை அதுவுமா நல்ல சகுனமுங்கோ. நான் போய் பெரியம்மணிக்கிட்ட சொல்லிப் போட்டு வாரேனுங்" என்று அவர்கள் வீட்டுப் பண்ணையாள் அந்தப் பக்கம் நகரவும், பிறந்த கன்றுக்குட்டி ஒரு முறைத் துள்ளி அருகிலிருந்த கிணற்றுக்குள் விழவும் சரியாக இருந்தது.

அப்பொழுதுதான் பாக்யத்திடமிருந்து கன்றுக்குட்டியிடம் வந்து சேர்ந்தாள் மீனா. ஆசைதீர ஒரு முறைத் தடவிப் பார்ப்பதற்குள் இச்சம்பவம் நிகழ்ந்திருந்தது. அங்கிருந்த அனைவரும் சுதாரிப்பதற்குள் தானும் கிணற்றுக்குள் குதித்திருந்தாள் மீனலோசினி.

பிறந்ததிலிருந்தே நீச்சலடித்துப் பழகிய கிணறென்பதால் எந்தப் பயமும் இன்றிக் கிணத்துக்குள் குதித்திருந்தாள். இவள் குதிக்கவும் அங்கிருந்த மற்ற ஆண்கள் கிணற்றுக்குள் குதிக்கத் தயங்க, செல்வி நொடியில் புடவையை உதறிவிட்டு பாவாடையை மேலேற்றிக் கட்டிக் கொண்டு கிணற்றுக்குள் குதித்தாள்.

இரு பெண்களுமாகச் சேர்ந்து இருபத்தி ஐந்து கிலோ எடையுடைய அந்தக் கன்றுக்குட்டியைக் காப்பாற்றி கிணற்றுக்குள் இருக்கும் படி வரைக்கும் நீந்தி வந்து ஒருவழியாக அதனைத் தூக்கிக் கொண்டு மேலேறி வந்தார்கள். கொஞ்சம் மேலே ஏறவுமே அங்கிருந்த பண்ணையாட்கள் சென்றுக் கன்றுக்குட்டியைக் கையில் வாங்கிக் கொண்டார்கள்.

வெளியே வரவும் கால்நடை மருத்துவர் அந்தக் கன்றுக்குட்டியைப் பரிசோதித்து ஒன்றும் ஆகவில்லை என்று சொன்னதும் தான் அனைவருக்கும் நிம்மதியானது. அதன் பிறகே சுடிதாரை உதறிக் கொண்டு மேலே வந்த மீனா பார்த்ததெல்லாம் தன்னை முறைத்துக் கொண்டு நின்றத் தன்னுடைய அம்மத்தா கோதையைத்தான்.

"அம்மத்தா நீங்க எதுக்குங் இம்புட்டுத் தூரம் வந்தீங்?" என்று அசடு வழிந்து கொண்டே கேள்வி கேட்க,

"நான் வாரது இருக்கட்டுங்கண்ணு. நீ என்ன பண்ணியிருக்குறேன்னு புரியுதா? ஒன்ன ஆரு கண்ணு கிணத்துக்குள்ளாற குதிக்க சொன்னது? நீ குதிச்சதால இவிங்க ஆரும் குதிக்க முடியாம நிக்கிறாங்க.

ஆம்பளை ஆளுக குதிச்சா சுளுவா கன்னைத் தூக்கிடுவாங்க. உன்னால முடியுமா கண்ணு. எதாவது ஒன்னு கிடக்க ஒன்னு ஆச்சுதுன்னா உன்ர அப்பன் ஆத்தாளுக்கு ஆரு பதில் சொல்றது கண்ணு" என்று கடிந்தவாறே பேத்தியின் கைப்பிடித்து வீடு நோக்கி நடக்கத் தொடங்கிவிட்டார் கோதை.

"அம்மத்தா... அம்மத்தா... ஒரே நிமிசமுங். நான் இன்னும் கன்னுக்குட்டியை ஒழுங்கா கொஞ்சவே இல்லீங். நீங்க வூட்டுக்குப் போறதுக்குள்ளார நான் ஒரே ஒருக்கா கொஞ்சிப் போட்டு வந்துடறேனுங்க அம்மத்தா. ப்ளீஸ்..." என்று சிறு பிள்ளையாய் மாறிக் கெஞ்சும் பேத்தியைக் கண்டு இளகிய மனத்தை இறுக்கிப் பிடித்தவராய்,

"உறம்பிர எல்லாம் வார நேரமாச்சு கண்ணு. பேசாம வா சாமி. உன்ர பொறந்தவன் வந்தப்புறம் ரெண்டு பேரும் ஒட்டுக்கா வந்து கொஞ்சிக்கோங்க" என்று சொல்லியவாறே பிடித்தக் கையை விடாமல் அழைத்துச் சென்றுவிட்டார் கோதை. செல்லும் முன் அங்கிருந்த பண்ணை ஆட்களை முறைக்கவும் தவறவில்லை.

வேறு வழியில்லாமல் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றாள் மீனா. தம்பியின் வரவைப் பற்றி அம்மத்தா கூறியதும் அவள் மனதும் குளிர்ந்து தான் போனது. அவ்வளவுப் பிரியம் தம்பியின் மீது. இருவருக்குமிடையில் ஆறு வருட வயது வித்தியாசம்.

தம்பி கேட்டானென்றால் அவனுக்காக எதையும் செய்வாள் மீனலோசினி. ஊருக்குள்ளிருந்த பள்ளியில் இவள் வேலைக்குச் சேர்ந்த பிறகு அக்கா சம்பாதிப்பது அனைத்தும் தம்பிக்குத்தான். லலிதா பண விவகாரங்களில் கொஞ்சம் கெடுபிடி. அவ்வளவு எளிதில் அவரிடமிருந்து பயலால் பணம் வாங்கிவிட இயலாது. அதற்காகவே அக்காவுக்கு காக்கா பிடித்து வேண்டியவற்றை வாங்கிவிடுவான்.

இப்பொழுது கோயம்புத்தூரில் உள்ள பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு வானூர்திப் பொறியியல் படித்துக் கொண்டிருக்கிறான் முகிலன். அக்காவுக்கு மட்டும் செல்லமாக முகில். அங்கே கல்லூரி விடுதியில் தங்கிப் படிப்பதால் இப்பொழுதெல்லாம் வார விடுமுறை நாட்களில் மட்டுமே அவனைக் காண முடியுமென்பதில் அவ்வளவு கவலை மீனாவுக்கு.

இன்று வெள்ளிக்கிழமை என்பதாலும் அக்காவைப் பெண் பார்க்க வருவதாலும் கல்லூரியிலிருந்து சீக்கிரமே கிளம்பி வருவதாகச் சொல்லியிருந்தான். வரப்போகும் மாப்பிள்ளையைக் கூட இவ்வளவு ஆவலாக எதிர்பார்க்கவில்லை மீனா. தம்பியின் வரவைத் தான் ஆவலோடு எதிர்நோக்கியிருந்தாள்.

ஒருவழியாக அம்மத்தாவும் பேத்தியும் வீட்டுக்குள் வந்து சேர்ந்தார்கள். மீனாவுடைய ஈர உடையைப் பார்த்து லலிதா திட்டத் தொடங்க அவரிடமிருந்து எப்படியோ தப்பித்து உடை மாற்றுவதாகப் பேர் பண்ணிக் கொண்டு தனதறைக்கு வந்து சேர்ந்தாள் மீனா.

உள்ளே நுழைந்தவுடன் தனது அலைபேசியை எடுத்துத் தம்பிக்கு அழைப்பு விடுக்க,
 




Last edited:

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
"அக்கா கிளாஸ் ஆரம்பிச்சிடுச்சுங். நான் மதியம் கிளம்பி சரியா ரெண்டு மணிக்கெல்லாம் உங்க முன்னாடி நிப்பேனுங். இப்ப எனக்குத் திட்டு வாங்கிக் கொடுக்காம போனை வைங்கக்கா" கிசுகிசுத்தான் முகிலன்.

"அப்போ இப்ப மட்டும் எப்படிப் பேசிறீங்களாம்?" அவனைப் போலவே கிசுகிசுப்பானக் குரலில் கேட்டாள் மீனா.

"அது பென்சுக்குக் கீழே குனிஞ்சுப் பேசிக்கிட்டு இருக்கேனுங்கக்கா" அழைப்பைத் துண்டிக்காமல் தமக்கைக்குப் பதில் கொடுத்துக் கொண்டிருந்தான்.

"சரி சரி முகிலா சீக்கிரமா வந்துடு சாமி. எனக்கு ஒரு மாதிரி குழப்பமா இருக்கு கண்ணு. நீ என்ர கூடவே இருக்கோணும் சரியா" என்று தன் மன அலைப்புறுதலைக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள் மீனா.

உடை மாற்றுவதற்காக வார்ட் ரோபைத் திறக்க அங்கு மேலாக வைக்கப்பட்டிருந்த கவர் இவள் கவனத்தை ஈர்த்தது. அதை எடுத்துப் பிரித்தவள், அதன் உள்ளிருந்த புகைப்படத்தை எடுத்துக் கொண்டு,

"என்ன மிஸ்டர்.பிரபாகரன் உங்களைப் பத்தி வர்ற சேதி ஒன்னும் நல்லதா படலையே. பேசாம ரிஜெக்ட் பண்ணிடவா?" என்று கேட்டவாறே வில்லென வளைந்திருந்தத் தன் புருவங்களில் ஒன்றினை ஏற்றி இறக்கினாள்.

('நீ இப்படி ஈர டிரஸ்சோட நின்னுக்கிட்டுப் புருவத்துல டான்ஸ் ஆடிக் கேட்டின்னா பய இங்கேயே ஃபிளாட் ஆகிடுவாம்மா' அப்படின்னு நாம கத்துறது அவளுக்குக் கேட்கலைப் போல மக்கா!)

முதலில் மீனலோசனிக்குத் தங்கள் சொந்தத்துக்கு உள்ளேயே அக்கம் பக்கத்து ஊர்களில் தான் வரன் தேடினார் கோதை. ஒன்றும் ஒத்து வராமல் இருந்த பொழுது தான் இவர்களது உறவு முறைப் பெண்ணின் கணவரான மாணிக்கம் வந்து இந்த வரனைப் பற்றிக் கூறினார்.

எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாமல் வரன் கிடைப்பதே இந்தக் காலத்தில் அபூர்வம். அதிலும் தன் சொந்தக் காலில் நின்று உழைத்து முன்னேறித் தன் தாயையும் தமக்கைகளையும் நன்றாகப் பார்த்துக் கொள்ளும் ஒருவன் நிச்சயம் தங்கள் பெண்ணையும் நன்றாகப் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை தாமாகவே அவரிடம் உதயமாகியிருந்தது.

பிரபாகரனின் புகைப்படமும் திருப்திகரமாகவே இருந்தது பெரியவர்களுக்கு. மீனலோசினியை அழைத்து சம்மதம் கேட்க அவளும் சம்மதம் தெரிவித்த பின்னர் தான் இந்தப் பெண் பார்க்கும் படலத்துக்கு நாள் குறிக்கப்பட்டது.

மீனலோசினி மனதிற்குள் நினைத்திருந்தது வேறு. முதலில் மதுரையா, அவ்வளவு தூரமா என்று யோசித்தாள். எப்படியும் தன் தம்பி படிக்கும் படிப்புக்கு அவன் நிரந்தரமாக இங்குத் தங்கப் போவதில்லை. அம்மத்தா, அப்பா, அம்மா அனைவருக்கும் வயதும் கூடிவிட்டது. இனி இந்த தோட்டம், துரவு, வரவு, செலவு, அனைத்தையும் தான் பார்த்துக் கொள்ளக் கூடிய வகையில் அருகிலேயே இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணியிருந்தாள்.

பின் பிரபாவின் வேலையைப் பற்றி அறிந்ததும், அவன் கப்பலுக்குச் செல்லும் நாட்களில் தான் வந்து இங்கு இவர்கள் அனைவரையும் கவனித்துக் கொள்ளலாமே என்ற ஒரு காரணத்துக்காக மட்டுமே சம்மதித்திருந்தாள்.

நேற்று போனில் அழைத்திருந்த மாணிக்கம் சித்தப்பா வேறொரு விஷயத்தைக் கூறியிருந்தார். அது அத்தனை உவப்பானதாகத் தோன்றவில்லைப் பெண்ணுக்கு. பிரபாகரன் கனடாவில் வேலைக்கு முயற்சிப்பதாகவும் அது கிடைத்துவிட்டால் இது போன்று நாடாறு மாதம் கடலாறு மாதம் என்ற நிலை இருக்காதென்றும், நிரந்தரமாகவே கனடாவில் செட்டில் ஆகி விட வாய்ப்புள்ளதாகக் கூறியிருந்தார்.

இதைக் கேட்ட வீட்டிலிருந்தப் பெரியவர்களுக்கெல்லாம் சந்தோஷம் மீனாவைத் தவிர. இந்த ஒரு விஷயத்துக்காகத்தான் பிரபாகரனை நிராகரித்து விடலாமா என்று அவன் புகைப்படத்திடமே கேட்டுக் கொண்டிருந்தாள். இந்த யோசனையிலேயே மீனா சுற்றிக் கொண்டிருக்க, சொன்ன நேரத்துக்கு முன்னதாக சீக்கிரமே வந்து சேர்ந்தான் அவளுடைய தம்பி முகில்.

"என்னடா அக்காவைப் பொண்ணு பார்க்க வர்றாங்களே, கொஞ்சம் முன்னாடியே வந்து அம்மா அப்பாவுக்கு உதவுவோம், அதெல்லாம் கிடையாது. இப்படித்தான் கடைசி நிமிசத்துக்கு வருவியா சாமி?" என்று கொஞ்சம் கோபத்துடனேயே மகனை வரவேற்றார் லலிதா.

"வந்ததும் வராததுமா ஏன் அம்மணி புள்ளையை ஏசுற? லீவ் போட்டா ஏன் போட்டேன்னு ஏச வேண்டியது. பொறுப்பா காலேசுக்கு போயிட்டு வந்தா அதுக்கும் ஏசுவியா?" என்று கூறியவாறே பேரனுக்காகப் பரிந்து கொண்டு வந்தார் கோதை.

"நல்லா கேளுங்க அம்மத்தா. புள்ள ஹாஸ்டல்ல இருந்து வந்தவுடனே, 'ஏங்கண்ணு இப்படி மெலிஞ்சு போயிட்ட'ன்னு சொல்லிச் செல்லம் கொஞ்சி சாப்பாடு போடோணும். அதை விட்டுப்போட்டு... ம்...." என்று வாகாக அம்மத்தாவின் தோளில் சாய்ந்து கொண்டே செல்லம் கொஞ்சினான் முகில்.

முகிலை நெருங்கி வந்த லலிதா, அவன் கன்னத்தைத் தடவியவாறே, "எனக்கும் அப்படிச் சொல்ல ஆசைத் தான் கண்ணு. அதுக்கு நீ மெலியோணுமே. ஒவ்வொரு வாரமும் உப்பிப் போய்த்தானே சாமி நீ வார" என்று நமுட்டுச் சிரிப்புடன் சொல்ல, இதைக் கேட்ட கோதையுமே சிரித்துவிட்டார்.

"ம்க்கூம்" என்று முறைத்துக் கொண்டுத் தன் தமக்கையின் அறைக்குச் செல்ல முற்பட், "வேணாஞ்சாமி அப்புறம் அவ வேற வந்து ஒரண்டை இழுப்பா. வந்து சாப்பிடு கண்ணு" என்று வேறு வழியில்லாமல் லலிதா தான் இறங்கி வர வேண்டியதாயிற்று.

"அந்தப் பயம் இருக்கோணுங்கம்மா" என்று கெத்தாகக் கூறிவிட்டு உணவருந்தி முடித்தப் பின் தான் தன் தமக்கையைத் தேடிச் சென்றான் முகிலன்.

"ஏனுங்க்கா உள்ர வரலாங்களா? உங்க ட்ரீம்ஸ்சு எல்லாம் முடிஞ்சுதுங்களா?" என்று கேட்டவாறே அறையினுள் நுழைந்த முகிலனை ஓடிச் சென்று கையைப் பிடித்து உள்ளே அழைத்து வந்தாள் மீனா.

"எப்பயிலிருந்து அக்கா ரூமூக்குள்ள வாரதுக்கெல்லாம் பர்மிஷன் கேட்க ஆரம்பிச்ச முகில்?" செல்லமாகக் கோபித்துக் கொண்டாள் மீனா.

"அப்புறம் மச்சான் வரப் போறாரில்லீங்க். இதெல்லாம் பழகிக்கத்தான் வேணும்"

"ம்ப்ச்" சலித்துக் கொண்டாள் பெண்.

"ஏனுங்க்கா மாப்பிள்ளை பிடிக்கலீங்களா. ஏற்பாடு பண்ண முன்னுக்கு உங்க கிட்ட கேட்டாங்க தானே?" தமக்கையின் முகவாட்டம் பார்க்கப் பொறுக்கவில்லைத் தம்பிக்கு. தம்பியிடம் நேற்று மாணிக்கம் சித்தப்பா தொலைப்பேசி வாயிலாகத் தெரிவித்த அனைத்தையும் ஒப்பித்தாள் மீனா.

"இதுக்காங்க அக்கா இவ்வளவு பீலிங்கு? மச்சானோட உங்களைத் தனியா பேச வைக்கிறது என்ர பொறுப்புங்க. அப்ப கேட்டுத் தெளிவுப்படுத்திக்கோங்க. அதை விட்டுப் போட்டு இப்படி ஏழு முழத்துக்கு முகத்தை நீட்டி வைச்சா பார்க்க நல்லவா இருக்குங்க்" என்று கூறியவாறே அவள் முன்னுச்சி முடியை நீவி விட, மீனாவுக்கு மொத்த பாரமும் இறங்கினாற் போல நிம்மதியானது.

"நீ வேற ஏன்ரா அதுக்குள்ள மச்சான் மச்சான்னு ஏலம் விடுற. இப்பத்தானே பொண்ணு பார்க்கவே வாராங்க. இன்னும் எவ்வளவோ இருக்குல்ல கண்ணு" என்றாள் மீனா.

"எனக்கென்னவோ இவர்தான் என்ர மச்சான்னு உறுதியா தோனுதுங்கக்கா. ஆனா எனக்கு ஒரே ஒரு கவலை தானுங்கக்கா" என்று முகத்தைப் பாவம் போல் வைத்துக் கொண்டு கூறினான் முகிலன்.

தம்பி தன்னைப் பிரிய முடியாமல் தான் வருந்துகிறான் போல என்றெண்ணிய மீனா, கஷ்டப்பட்டு எம்பி நின்று முகிலனின் தலை கோதி வாஞ்சையுடன், "என்ன சாமி" என்று கேட்க,

"உங்களுக்கு ஒரே ஒரு கொளுந்தியாளாவது இருந்திருக்கலாங்க்கா. இப்படி மூணும் நங்கையாளா போச்சே" என்றான் உச்சுக் கொட்டியவாறே.

இதைக் கேட்ட மீனாவுக்குத்தான் ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை. புரிந்த பிறகு அவனை அடிப்பதற்குத் தோதாக எதையாவது தேடிக் கொண்டே, "உன்ர கவலை உனக்கு" என்று கூறிக் கொண்டே டிரஸ்சிங் டேபிளில் இருந்த சீப்பை எடுப்பதற்குள் முகிலன் ஓட்டம் எடுத்திருந்தான்.

நெருங்கிய சொந்தங்களுக்கு மட்டும் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்க, அவர்களும் வந்து சேரவும் இப்படியே கேலியும் கிண்டலுமாக ஒருவழியாகப் பெண் பார்க்கக் குறித்த நேரமும் வந்து சேர்ந்தது. பிரபாகரனும் தன் ஒட்டு மொத்தக் குடும்பத்துடன் வந்து சேர்ந்தான்.
 




Last edited:

bhagyalakshmi

அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
2,225
Reaction score
11,752
Location
Chennai
அப்படி போடு ங்க ஆத்தரே....
கோவத்துல பேசுனாக்கூட கொஞ்சி பேசுற மாதிரி தெரியுற கொங்கு நாட்டு பொண்ணுக்கும் பாசத்த கூட ஆர்ப்பாட்டமா காமிக்கிற மதுரைக்காரனுக்கும்
கன்னாலாமா. . !!!!!!???
நடக்கட்டும் நடக்கட்டும்....எப்படியோ நமக்கு எக்கச்சக்க என்டர்டெயின்மென்ட் ஆன் தி வே....???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top