• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பாவமன்னிப்பு(தௌபா) செய்வோம்.

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,598
Reaction score
36,373
Location
Srilanka
பாவமன்னிப்பு (தௌபா)

இஸ்லாமிய வழக்கில் பாவமன்னிப்பு (தௌபா) என்றால் பாவங்களை விட்டு அல்லாஹ்வின் பக்கம் திரும்புதல் என்று பொருள். ஒரு மனிதன் பாவத்தை செய்தவுடன் அல்லாஹ்வை விட்டுத் தூரமாகிவிடுகிறான். அவன் பாவமன்னிப்புக் கோரி திரும்பினால் அல்லாஹ்வினால் மன்னிக்கப்பட்டு அவனுக்கு நெருக்கமாகிறான். இதையே தௌபா எனப்படுகிறது. இதையே ‘அல்லாஹ் அவன் பக்கம் திரும்பினான்’ என்று சொன்னால் அல்லாஹ் அவனது பாவமன்னிப்பைக் கோரலை ஏற்றுக்கொண்டான் என்று பொருள். ஒருவரின் தௌபா ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு நிபந்தனையும் இருக்கிறது. அது அவர் தம் பாவத்தைக் கைவிட்டு நேர்வழியில் செல்வதாகும்.



இஸ்லாமிய விளக்கம்

தௌபா(பாவமன்னிப்பு) என்றால் அல்லாஹ்வுக்கு மாறுசெய்வதிலிருந்து திரும்பி அவனுக்குக் கீழ்ப்படிவதாகும்.



குர்ஆன்

பாவமன்னிப்புக் கோரிக்கையை அல்லாஹ் நேசிக்கிறான். அவன் கூறுகிறான்:நிச்சயமாக அல்லாஹ் (பாவத்தைவிட்டு) வருந்தி மீளுகிறவர்களை விரும்புகின்றான்; சுத்தமாக இருப்பவர்களையும் விரும்புகின்றான்.(2.222)



பாவமன்னிப்புக் கேட்பது ஒவ்வொரு இறைநம்பிக்கையாளரின் மீதும் கடமையாக உள்ளது.



அல்லாஹ் கூறுகிறான்: நம்பிக்கையாளர்களே, கலப்பற்ற மனதோடு அல்லாஹ்வின் பக்கம் பாவமன்னிப்புக் கேட்டுத் திரும்புங்கள். (66.8)



பாவமன்னிப்புக் கேட்பது ஈடேற்றத்திற்கும் வெற்றிக்கும் வழியாகும்.



அல்லாஹ் கூறுகிறான்:நம்பிக்கையாளர்களே! (இதில் எந்த விசயத்திலேனும் உங்களால் தவறு ஏற்பட்டுவிட்டால்) நீங்கள் வெற்றி பெறும்பொருட்டு அல்லாஹ்வின் பக்கமே பாவ மன்னிப்புக் கோரித் திரும்புங்கள்.(24.31)



வெற்றி என்றால் ஒருவர் எதை எதிர்பார்க்கிறாரோ அதை அடைந்து, எதிலிருந்து தப்பிக்க நினைக்கிறாரோ அதைவிட்டு ஓடிவிடுவதாகும்.



மனத்தூய்மையுடன் பாவமன்னிப்புக் கேட்டால் அல்லாஹ் எந்தப் பாவத்தையும் மன்னித்துவிடுகிறான். அது எவ்வளவு பெரியதாக இருந்தாலும், எத்தனை எண்ணிக்கையில் இருந்தாலும் மன்னித்துவிடுகிறான்.



அல்லாஹ் கூறுகிறான்; (நபியே!) நீர் கூறும்:என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டபோதிலும், அல்லாஹ்வின் அருளைப் பற்றி நீங்கள் நம்பிக்கை இழந்துவிட வேண்டாம். (நீங்கள் பாவத்திலிருந்து விலகி, மனம் வருந்தி மன்னிப்பைக் கோரினால்) நிச்சயமாக அல்லாஹ் (உங்களுடைய) பாவங்கள் அனைத்தையும் மன்னித்துவிடுவான். ஏனென்றால், நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவனும், கருணை உடையவனுமாக இருக்கின்றான்.(39.53)



மேலும் நீங்கள் அனைவருமே அல்லாஹ்வின் பக்கம் பாவமன்னிப்புத் தேடி திரும்புங்கள். அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்களே!இதன் மூலம் நீங்கள் வெற்றி பெறக்கூடும். (24:31)



அல்லாஹ் தனது அடியார்கள் மீது அன்பும் இரக்கமும் கொண்டவனாக இருக்கிறான். அவனது கருணை அனைத்துப் பொருட்களையும் சூழ்ந்திருக்கிறது. யாரெல்லாம் தங்களின் பாவத்திற்கு மன்னிப்புத் தேடுகிறார்களோ, அவர்களுடைய பாவமன்னிப்புக் கோரிக்கையை அவன் ஏற்றுக்கொள்கிறான். அவன் மிகவும் மன்னிப்பவனாகவும் கருணை உள்ளவனாகவும் இருக்கிறான்.



அல்லாஹ் கூறுகிறான்: எவரேனும் தம்முடையபாவச் செயலுக்குப் பின்பு வருத்தப்பட்டு "இனி ஒருபோதும் அதன் பக்கம் செல்ல மாட்டேன்" என்ற உறுதியுடன் அல்லாஹ்விடம் மன்னிப்பைத் தேடி, அதைவிட்டு விலகிச் சீர்திருத்திக் கொண்டால், நிச்சயமாக அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்துவிடுவான். (ஏனென்றால்,) நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையவனாகவும் இருக்கின்றான்.(5:39)



தவறுகளோ, பாவங்களோ, குற்றங்களோ மன்னிக்கத் தகுதியற்றவையாகவும் தெரியலாம். ஆனால் யார் அல்லாஹ்வின் கருணை மீது நம்பிக்கை வைத்துள்ளார்களோ அவர்கள் நிச்சயம் அவனை நம்புவார்கள்.



உங்களுடைய இறைவன் (உங்களுக்கு) அருள்புரிவதைத் தன் மீது கடமையாக்கிக் கொண்டான். நிச்சயமாக உங்களில் எவரேனும் அறியாமையின் காரணமாக பாவத்தைச் செய்துவிட்டு, பின்னர் அதற்காக வருத்தப்பட்டு (‘இனி ஒருபோதும் அப்பாவத்தின் பக்கம் செல்ல மாட்டேன்’ என்ற உறுதியுடன் அல்லாஹ்விடம் மன்னிப்பைத் தேடி, அதிலிருந்து) விலகி, நற்செயல்களைச் செய்தால் (அப்பாவத்தை அல்லாஹ் மன்னித்துவிடுவான். ஏனென்றால்) நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவனும், கருணையுடையவனுமாக இருக்கின்றான்என்றுநீர்கூறும்.(6:54)



நபிமொழிகள்

என் சகோதரரே, பாவங்களில் விழுந்துவிட்டால் அல்லாஹ்வின் கருணை மீது நம்பிக்கை இழந்துவிடாதீர்கள். மன்னிப்பின் வாசல் சூரியன் மேற்கில் உதிக்கின்ற காலம் வரும் வரை, அதாவது மறுமை ஏற்படும் வரை திறந்தே இருக்கின்றது.



நபியவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக அல்லாஹ் பகலில் பாவம் செய்தவரின் பாவமன்னிப்பை ஏற்றுக்கொள்ள இரவு வரை தனது கரத்தை விரிக்கிறான். மேலும் இரவில் பாவம் செய்தவரின் பாவமன்னிப்பை ஏற்றுக்கொள்ள பகல் வரை தனது கரத்தை விரிக்கிறான். இது சூரியன் மேற்கில் உதிக்கும் வரை நடக்கும். (ஸஹீஹ் முஸ்லிம் 2759)



தவறுகள், பாவங்கள் செய்வது மனித இயற்கைதான். அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிவதில் யாருமே தவறு செய்யாமல் இருக்க முடியாது. பாவங்களால் அல்லது மறதியால் அவனுக்கு மாறுசெய்துவிடுவோம். அனைவருக்கும் இந்த நிலை இருக்கிறது. குறைபாடு இல்லாமல் இருக்கமாட்டோம். ஆகவேதான் நபியவர்கள் கூறினார்கள்: என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக, நீங்கள் பாவம் செய்யாதவர்களாக இருந்தால், அல்லாஹ் உங்களை விட்டுவிட்டு வேறு மக்களைக் கொண்டு வருவான். அவர்கள் பாவம் செய்த நிலையில் அவனிடம் பிரார்த்திப்பார்கள், மன்னிப்புக் கேட்பார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் 6621)



மேலும் கூறினார்கள்: ஆதமின் மகன் ஒவ்வொருவரும் பாவம் செய்யக்கூடியவர்களே. அவர்களில் சிறந்தவர்கள் யாரெனில் பாவம் செய்ததை எண்ணி வருந்தி மன்னிப்புத் தேடுகிறவர்கள் ஆவர். (திர்மிதீ2499 அல்பானீ ஹசன்)



அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:"அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு நாளில் எழுபது தடவைக்கு மேல் "அஸ்தஃக் ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி(நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவன் பக்கமே திரும்புகிறேன்)” என்று கூறுகிறேன் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்.(ஸஹீஹுல் புகாரீ 6307)



நபியவர்கள் மேலும் கூறியுள்ளார்கள்: தனது அடியானின் தொண்டையில் கர்கர் என்று மரண மூச்சிழுப்பு ஏற்படுவதற்கு முன்பு வரை அல்லாஹ் அவனுடைய பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறான். (திர்மிதி 3537)



பாவமன்னிப்பு குறித்த ஹதீஸ் குத்சீ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:பனூ இஸ்ராயீல்களின் சமுதாயத்தில் ஒரு மனிதர் இருந்தார். அவர் தொண்ணூற்றொன்பது மனிதர்களைக் கொன்று விட்டிருந்தார். பிறகு (தன் குற்றங்களுக்காக மனம் வருந்தி, தனக்கு மன்னிப்புக் கிடைக்குமா என்று) விசாரித்தபடி, "(எனக்குப்) பாவ மன்னிப்புக் கிடைக்குமா?'' என்று ஒரு பாதிரியாரிடம் வந்து கேட்டார். அந்தப் பாதிரியார், "கிடைக்காது'' என்று கூற, அவரையும் அம்மனிதர் கொன்றுவிட்டார். பிறகு, (மீண்டும் மனம் வருந்தி) விசாரிக்கலானார். அப்போது ஒரு மனிதர், "(நல்லோர் வாழும்) இன்ன ஊருக்குப் போ!'' என்று அவருக்குச் சொன்னார். (அந்த ஊரை நோக்கி அவர் சென்றபோது பாதி வழியில்) மரணம் அவரைத் தழுவியது. (மரணத் தருவாயில்) அவர் தன் நெஞ்சை அந்த ஊர் இருக்கும் திசையில் சாய்த்துக் கொண்(டே இறந்து விட்)டார்.



அப்போது அல்லாஹ்வின் கருணையைப் பொழியும் வானவர்களும் அல்லாஹ்வின் தண்டனைகளை நிறைவேற்றும் வானவர்களும் அவர் விஷயத்தில் (அவரை யார் அழைத்துச் செல்வது என்று) சச்சரவிட்டுக் கொண்டனர். உடனே அல்லாஹ் அதை நோக்கி, "நீ நெருங்கி வா!'' என்று (அவர் செல்லவிருந்த ஊருக்கு) உத்திரவிட்டான். இதை நோக்கி, "நீ தூரப் போ!'' என்று (அவர் வசித்து வந்த ஊருக்கு) உத்திரவிட்டான். பிறகு, "அவ்விரண்டுக்கு மிடையே உள்ள தூரத்தைக் கணக்கெடுங்கள்'' என்று (வானவர்களுக்குக்) கூறினான். (அவ்வாறே கணக்கெடுத்த போது) செல்ல விருந்த ஊருக்கு (அவர் வசித்து வந்த ஊரை விட ஒரே) ஒரு சாண் அளவிற்கு அவர் (உடைய உடல்) சமீபமாக இருந்த காரணத்தால் அவருக்குப் பாவ மன்னிப்பு வழங்கப்பட்டது.



இதை அபூ சயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(ஸஹீஹுல் புகாரீ 3470)



ஸஹீஹ் முஸ்லிமின் அறிவிப்பில், “அம்மனிதர் நல்லோர்களின் ஊருக்கு ஒரு சாண் அளவு நெருக்கமாக இருந்தான். எனவே அவனை அந்த மக்களைச் சேர்ந்தவனாகக் கணக்கிடப்பட்டது” என்றும், அவனது நெஞ்சு அதை நோக்கியதாக இருந்தது என்றும் உள்ளது. (2716)



பாவமன்னிப்பின் பக்கம் அல்லாஹ் அழைக்கிறான்

அல்லாஹ் கூறுகிறான்:(நபியே!) நீர் கூறும்:என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டபோதிலும், அல்லாஹ்வின் அருளைப் பற்றி நீங்கள் நம்பிக்கை இழந்துவிட வேண்டாம். (நீங்கள் பாவத்திலிருந்து விலகி, மனம் வருந்தி மன்னிப்பைக் கோரினால்) நிச்சயமாக அல்லாஹ் (உங்களுடைய) பாவங்கள் அனைத்தையும் மன்னித்துவிடுவான். ஏனென்றால், நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவனும், கருணை உடையவனுமாக இருக்கின்றான்.(39.53)



நபியவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் வறண்ட பாலைநிலத்தில் தொலைத்துவிட்ட தனது ஒட்டகத்தை (எதிர்பாராதவிதமாக)க் கண்டுபிடிக்கும் போது, அவருக்கு ஏற்படும் மகிழ்ச்சியைவிடத் தன் அடியான் தவ்பா-பாவமன்னிப்புப் கோரி தன்னிடம் திரும்புவதில் அல்லாஹ் அதிகம் மகிழ்ச்சி அடைகிறான்.(ஸஹீஹுல் புகாரீ 6309)



ஃபாஹிஷா எனப்படும் மானக்கேடான தகாத பாலியல் குற்றத்தைச் செய்தவர் குறித்து அல்லாஹ் கூறுகிறான்:

மேலும், அவர்கள் ஏதேனும் ஒரு மானக்கேடான செயலைச் செய்துவிட்டாலும் அல்லது தங்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக் கொண்டாலும் உடனே அல்லாஹ்வை நினைத்து (அவனிடமே) தங்களுடைய பாவமன்னிப்பைத் தேடுவார்கள். (அல்லாஹ்வும் அவர்களை மன்னித்துவிடுவான்.) அல்லாஹ்வைத் தவிர (இவர்களின்) குற்றங்களை மன்னிப்பவன் யார்? அவர்கள் செய்த (தவறான) செயலை (தவறென்று) அவர்கள் அறிந்துகொண்டால் அதில் நிலைத்திருக்கவும் மாட்டார்கள்.(3:135)



பாவங்களில் மிகப் பெரிய பாவமான இணைவைத்தலை, அல்லாஹ்வுக்கு இணையாக படைப்புகளை வணங்குதலையும் கூட அல்லாஹ் மன்னித்துவிடுகிறான். எவர்கள் இயேசுவைத் தேவகுமாரர் என்று கூறுகிறார்களோ அவர்கள் தங்களுக்குத்தாமே அநியாயம் செய்துகொண்டு பாவத்தில் இருக்கிறார்கள். அவர்களைக் குறித்து அல்லாஹ் கூறுகிறான்: இவர்கள் அல்லாஹ்வின் பக்கம் திரும்பி, அவனிடம் தங்கள் குற்றத்தை மன்னிக்கப் பிரார்த்திக்க மாட்டார்களா? அல்லாஹ்வோ, மிக்க மன்னிப்பவனாகவும் நிகரற்ற அன்புடையவனாகவும் இருக்கின்றான்.(5:74)



படைப்பினத்தில் இறைநிராகரிப்பை வெளியே காட்டும் இறைநிராகரிப்பாளர்களைக் காட்டிலும் மிக மோசமானவர்கள் நயவஞ்சகர்கள் ஆவர். அவர்களுக்கும் தனது மன்னிப்பின் வாசல் திறந்தே இருக்கிறது என்கிறான் அல்லாஹ் பின்வரும் வசனங்களில்:

நிச்சயமாக இந்த நயவஞ்சகர்கள் நரகத்திலும் மிகக் கீழான அடிப்பகுதியில்தான் இருப்பார்கள். (அங்கு) அவர்களுக்கு உதவி செய்கின்ற எவரையும் நீர் காணமாட்டீர்.எனினும், எவர்கள் (தங்கள் பாவத்தை நினைத்து) வருத்தப்பட்டு (‘இனி ஒருபோதும் அப்பாவத்தின் பக்கம் செல்ல மாட்டோம்’ என்ற உறுதியுடன் அல்லாஹ்விடம் மன்னிப்பைத் தேடி, அதைவிட்டு) விலகி, நற்செயல்களையும் செய்து, அல்லாஹ்வை (அவனுடைய கட்டளைகளை) உறுதியாகப் பிடித்துக்கொண்டு, தங்கள் வணக்க வழிபாடுகளை அல்லாஹ்வுக்கு மட்டுமே கலப்பற்றதாகவும் ஆக்கிவைக்கின்றார்களோ அவர்கள் அல்லாஹ்வின் மீது (உண்மையாகவே) நம்பிக்கை வைத்திருப்பவர்களுடன்தான் (நேசமாக) இருப்பார்கள். இத்தகைய உண்மை நம்பிக்கையாளர்களுக்கு (மறுமையில்) அல்லாஹ் மகத்தான (நற்)கூலியைக் கொடுப்பான்.(4:145-146)



பாவமன்னிப்பு ஏற்கப்பட நிபந்தனைகள்

மனமுருகி பாவமன்னிப்புத் தேடுதல் என்பது வெறும் நாவால் மன்னிப்புக் கேட்பதுடன் முடிந்துவிடாது. அதற்குச் சில நிபந்தனைகள் உள்ளன. ஒரு மனிதன் முதலில் தனது பாவத்தை விட்டு நேர்வழிக்கு வர வேண்டும். தனது கடந்த காலப் பாவத்தை எண்ணி வருந்த வேண்டும். இனி மறுபடியும் அதைச் செய்யக் கூடாது என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும். தனது பாவத்தால் மக்களின் உரிமைகள் பாழாக்கப்பட்டிருந்தால் அதற்கு ஈடு செய்ய வேண்டும். ஒருவரின் சொத்தைப் பறித்திருந்தால் அதைத் திரும்ப தர வேண்டும். இவை அனைத்தையும் அவர் தமக்கு மரண வேதனை வருவதற்கு முன்பே செய்துவிட வேண்டும்.



அல்லாஹ் கூறுகிறான்:எவர்கள் தங்கள் அறியாமையினால் பாவத்தைச் செய்து (அதனைப் பாவமென அறிந்து) பின்பு வருத்தப்பட்டு அதிவிரைவில் (அதைவிட்டு) விலகிவிடுகின்றார்களோ, அத்தகையவர்களை மன்னிப்பதுதான் அல்லாஹ்வின் மீது கடமையாகும். ஆகவே, அல்லாஹ் அவர்களை மன்னித்துவிடுகின்றான். அல்லாஹ்தான் நன்கறிந்தவனும் தீர்க்கமான அறிவுடையவனுமாக இருக்கின்றான்.



எவர்கள் பாவங்களைச் செய்துகொண்டேயிருந்து, அவர்களுக்கு மரணம் நெருங்கிவிட்டபோது, ‘இதோ! நான் (என்) பாவங்களை விட்டுவிட்டேன்” என்று கூறுகின்றார்களோ அவர்களுக்கும், எவர்கள் அல்லாஹ்வை(யும் அவனுடைய இஸ்லாமிய மதத்தையும்) நிராகரித்த நிலையிலேயே இறந்தும் விடுகின்றார்களோ அவர்களுக்கும் பாவமன்னிப்பே கிடையாது. இப்படிப்பட்டவர்களுக்குத் துன்புறுத்துகின்ற வேதனையைத்தான் நாம் தயார்படுத்தி வைத்திருக்கின்றோம். (4:17-18)



கலப்பற்ற பாவமன்னிப்புக் கோரலில் ஐந்து நிபந்தனைகள் பூர்த்தியாக வேண்டும். அவை:

மனத்தூய்மையாக அல்லாஹ்வின் திருப்தியையும் அவனது நற்கூலியையும், அவனது தண்டனையிலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற எண்ணத்துடனும் பாவமன்னிப்புக் கோர வேண்டும்.
வருந்துதல்: செய்த பாவத்தைக் குறித்த கவலையும் இனி அதை எக்காலத்திலும் செய்யக் கூடாது என்ற விருப்பமும் இருக்க வேண்டும்.
பாவத்தை விடுதல்: உடனே பாவத்தைக் கைவிட வேண்டும். அந்தப் பாவம் அல்லாஹ்வுக்கு எதிரானதாகவோ அவன் தடைசெய்ததாகவோ இருந்தால் அதை நிறுத்திட வேண்டும். அப்பாவம் கடமையான ஒன்றை விட்டுவிட்டதின் காரணத்தால் ஏற்பட்டதாக இருந்தால், உடனே அதை நிறைவேற்ற வேண்டும். மேலும் அந்தப் பாவம் அல்லாஹ்வின் படைப்புகளுக்கு (உதாரணம் மனிதர்களுக்கு)ச் செய்த தீங்காக இருந்தால், அதிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்வதுடன், பாதிக்கப்பட்டவரிடம் மன்னிப்பும் கேட்க வேண்டும்.
உறுதிப்பாடு: எதிர்காலத்தில் அதைத் திரும்பவும் செய்யக் கூடாது என்று உறுதிகொள்ள வேண்டும்.
பாவமன்னிப்புக் கோருதல் அது ஏற்றுக்கொள்ளப்படும் நேரத்திற்குள் கேட்டாக வேண்டும். மரணத்திற்கு முன்பு அல்லது சூரியன் மேற்கில் உதிப்பதற்கு முன்பு கேட்டாக வேண்டும்.



இமாம் நவவீயின் பார்வையில் பாவமன்னிப்பு

அல்லாஹ்வின் பக்கம் பாவமன்னிப்புத் தேடி திரும்புதல், பாவத்தைக் கைவிடல், அதை வெறுத்தல், அல்லாஹ்வுக்கு மாறுசெய்தது குறித்து கவலைப்படுதல் இவையே தவ்பா ஆகும். இமாம் நவவீ (ரஹ்) கூறுகிறார்கள்: ஒவ்வொரு பாவத்திற்கும் மன்னிப்புக் கோருதல் அவசியமாகும். அது ஒரு மனிதருக்கும் அல்லாஹ்வுக்கும் இடையே உள்ள எந்தப் பாவமாக இருந்தாலும் சரியே. இதில் மூன்று நிபந்தனைகள் நிறைவேற வேண்டும்.

நீங்கள் அந்தப் பாவத்தைக் கைவிட வேண்டும்.
அதைச் செய்தது குறித்து வருத்தப்பட வேண்டும்.
அதைச் செய்யக் கூடாது என உறுதிகொள்ள வேண்டும்.



இவற்றில் ஒன்று தவறினாலும் உங்களின் பாவமன்னிப்புக் கோரல் மனத்தூய்மையானதாக இருக்காது. அந்தப் பாவமானது பிற மனிதரின் உரிமைகளைப் பாழ்படுத்தியதாக இருந்தால், நான்காவது நிபந்தனையும் இருக்கிறது. அதாவது, அம்மனிதரின் உரிமையை வழங்குவதாகும். அது பணம் அல்லது சொத்து போன்றவையாக இருந்தால் அவற்றைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும். அது அவரைக் குறித்து அவதூறு பேசியதாக இருந்தால், அவர் உங்களைத் தண்டிக்க அனுமதிக்க வேண்டும் அல்லது அவரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். அது அவரைப் பற்றிப் பேசிய புறமாக இருந்தாலும் மன்னிப்புக் கேட்க வேண்டும். ஆக ஒவ்வொரு பாவத்திலிருந்தும் தவ்பா செய்து மன்னிப்புக் கோருதல் கடமையே. ஒருவர் சில பாவங்களுக்கு மன்னிப்புக் கோரிவிட்டு மற்றவைகளைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டாலும் - நேர்வழி சென்ற அறிஞர்களின் கூற்றுப்படி - அவரின் அந்தக் குறிப்பிட்ட பாவமன்னிப்புக் கோரிக்கை செல்லத்தக்கதே. ஆனால் அவர் தமது மற்ற பாவங்களுக்கும் மன்னிப்புக் கோரியாக வேண்டும்.
 




Last edited:

இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,351
Reaction score
16,454
Location
Universe
அதிகளவு தௌபா அறிந்து மற்றும் அறியாமல் செய்த பாவத்திற்க்காக அல்லாஹு தாஆலாவிடம் கேட்போம்
 




Advertisements

Latest Episodes

Advertisements

Top