• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

புறநானுற்று சிறுகதைகள்----41---- அன்பின் அறியாமை

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
அப்போது கார்காலம். மலை நங்கை தன் பசுமை கொழிக்கும் உடலில் நீலநிறப்பட்டாடை அணிந்தாற்போல முகில்கள்மலைச் சிகரங்களில் கவிந்திருந்தன. பொதினி மலையின் வளத்தைக்காண்பதற்குச் சென்றிருந்தான் பேகன். அவன் ஆவியர் குடிக்குத் தலைவன். பொதினி மலை அவன் ஆட்சிக்குஉட்பட்டது.


மலைமேல் மேக மூட்டமும் குளிர்ச்சியும் மிகுந்திருந்ததனால் சிலுசிலுவென்று குளிர் காற்று வீசிக் கொண்டிருந்தது. உடலில் குளிர் உறைத்ததனால் தோளில் தொங்கிய பட்டாடையை மார்பிலேபோர்த்துக்கொண்டான் பேகன்.விலைமதிக்க முடியாத
அந்தப்பட்டாடை குளிர் வேதனையிலிருந்து அவனைக் காப்பாற்றியது.

குளிரினால் பறவைகள் கூட்டைவிட்டு வெளியே புறப்படவில்லை. வேடர்களும் மலையில்வாழும் பளிஞர்களும் அங்கங்கே நெருப்புமூட்டிக் குளிர்காய்ந்துகொண்டிருந்தார்கள். வானிலிருந்து பூந்தாதுக்களாகிய மாவைஅள்ளித் தெளிப்பதுபோலச் சாரல்
வேறு மெல்லிதாக வீழ்ந்து கொண்டிருந்தது.


அருவிகளையும் மலர்ச்செடிகளையும்உயரிய மரக்கூட்டங்களையும் கண் குளிரப்பார்த்தவாறே சென்று கொண்டிருந்தான் பேகன் வழியில் ஒரு சிறு பாறையின்மேல்அந்தக் காட்சியை அவன் கண்கள் கண்டன. பேகன் மனத்தில் இரக்கம் சுரந்தது. இயற்கையில் எந்த உயிரும் துன்பத்தைஅனுபவிக்குமாறு விட்டுவிடக்கூடாது என்றநல்ல உள்ளம் கொண்டவன் அவன். அதனால்தான் பாறைமேல் கண்ட காட்சிஅவன் உள்ளத்தை உருக்கியது.


அங்கே ஒரு மயில் தோகை விரித்து ஆடிக்கொண்டிருந்தது. பக்கத்தில் உயரமானஇடத்திலிருந்து ‘சோ’வென்று வீழ்ந்துகொண்டிருந்த அருவியின் சின்னஞ்சிறுநீர்த் திவலைகள் தெறித்துக்கொண்டிருந்தன. மயிலின் தலைக்கொண்டையும் தோகையும்தோகையிலுள்ள வட்டக்கண்களும் நடுங்கி உதறுவதுபோல மெல்ல ஆடிக்கொண்டிருந்தன. அந்த மயிலின் மெல்லியஉடல் முழுவதும் ‘வெடவெட’ வென்றுநடுங்கிக் கொண்டிருப்பது போலத்தோன்றியது பேகனுக்கு.


“ஐயோ! பாவம். இவ்வளவு அழகானபிராணி குளிர் தாங்க முடியாமல் நடுங்கிப்போய் ஆடுகிறதே? இதை இப்படியேவிட்டுவிட்டுப் போய்விட்டால் குளிரில்விறைத்துப் போகுமே? நான் மனிதன். எனக்குக் குளிர் உறைத்தவுடன்போர்வையை எடுத்துப்
போர்த்துக்கொண்டு விட்டேன். மலையில் யாராலும்பாதுகாக்கப்படாமல் வாழும் இந்தமயிலுக்குக் குளிர்ந்தால் இதுஎன்னசெய்யும்? யாரிடம்போய்முறையிடும்? பாவம் வாயில்லாத உயிர்.”


அவன் மனம் எண்ணியது. அந்தக்காட்சியைக் காண விரும்பாமல் மேலேபோய்விட எண்ணினான். ஆனால் அவன்அன்பு உள்ளம் அப்படிச்செய்யவிடவில்லை.

“கூடாது கூடவே கூடாது உலகத்தில் அழகுஎங்கே எந்த வடிவத்தில் இருந்தாலும் அதைநாம் காப்பாற்ற
வேண்டும். துன்பப்பட்டு வருந்தி அழியும்படியாக விட்டு விடக்கூடாது.” பேகன் அந்த மயிலுக்கு அருகில் சென்றான். தன் உடலைப் போர்த்திக்கொண்டிருந்த பட்டாடையை எடுத்தான். தோகை விரித்து ஆடிக் கொண்டிருந்தமயிலின்மேல் அப்படியே அதை
போர்த்தினான்.


மேலே போர்வை விழுந்ததனால் அஞ்சிக் கூசிய மயில் தோகையை ஒடுக்கிக்கொண்டு ஆடுவதை நிறுத்திவிட்டது.தான் போர்வையைப் போர்த்தியதால்தான் மயிலின் குளிர் நடுக்கம் நின்றுவிட்டது என்றெண்ணிக் கொண்டான் அவன். அந்தஅழகிய பிராணிக்கு உதவி செய்து, அதன் துன்பத்தைத் தணிக்க முடிந்த பெருமிதம், திருப்தி, மகிழ்ச்சி எல்லாம் அவன்அகத்திலும் முகத்திலும் நிறைந்தன.


தன்இன்பத்தை மற்றவர்களுக்கு அளித்து, மற்றவர்களுடைய துன்பத்தைத் தான்பெற்றுக் கொள்வதுதானே தியாகம்? அந்தத் தியாகத்தின் இன்பம் அப்போதுஅவனுக்குக் கிடைத்திருந்தது. போர்வையற்ற அவன் உடலில் குளிர்ஊசியால் குத்துவது போல உறைத்தது.


“அடடா! சற்று நேரத்திற்குமுன் இந்தமயிலுக்கும் இப்படித்தானே குளிர்உறைத்திருக்கும்? ஐயோ, பாவம்! அதனால்தான் அது அப்படி வெடவெட'வென்று நடுங்கி ஆடிக்கொண்டிருந்தது. நல்லவேளையாக அதன்துன்பத்தைத் தீர்த்துவிட்டோம். நாமாவதுஇந்தக் குளிரைப் பொறுத்துக் கொண்டேநடந்து போய்விடலாம்!”


நிறைந்த மனத்தோடும் திறந்தஉடம்போடும் வந்த வழியே திரும்பி நடந்தான் அந்த வள்ளல். திடீரென்று பின்புறம் யாரோ கலகலவென்று சிரிக்கும்ஒலி கேட்டுத் திரும்பினான். பரணர்அருவிக்கரையிலுள்ள ஒரு மரத்தின் பின்புறமிருந்து வெளியே
வந்தார்.பேகன்வியப்போடு அவரைப்பார்த்தான்.அவர்சிரிப்பை அடக்கமுடியாமல் சிரித்துக்கொண்டே வந்தார். பேகனுக்கு அதன்காரணம் விளங்கவில்லை.


“என்ன பரணரே! நீங்கள் இங்கேஎப்பொழுது வந்தீர்கள்? எதற்காக இப்படிஅடக்கமுடியாமல் சிரிக்கிறீர்கள்? எனக்கு: ஒன்றும் புரியவில்லை?” “எப்படி அப்பா புரியும்? அன்பு நிறைந்த மனத்துக்கு அறிவு விரைவில் புலனாவது இல்லை. ஆனால், பேகா, நீ வாழ்க! உன் அறியாமையும்வாழ்க! அறியாமை ஒருவகையில்தடையற்ற அன்பிற்குக் காரணமாகஇருக்கிறது, போலும். நான் வந்துவெகுநேரம் ஆயிற்று. நீ செய்ததை எல்லாம்பாத்துக் கொண்டுதான் இருந்தேன்.”


“அறியாமை என்று நீங்கள் எதைக்கூறுகிறீர்கள் பரணரே! ஒரு அழகிய மயில்குளிரால் நடுங்கிக் கொண்டிருப்பதைப்பார்த்து இரங்கி,அதற்குப்போர்வையைஅளிப்பதா அறியாமை”


“பேகா! அந்த மயிலின் மேல் உனக்குஏற்பட்ட அன்பை நான் பாராட்டுகிறேன். ஆனால், நீ நினைத்ததுபோல அது குளிரால்நடுங்கவில்லை. மலைச் சிகரங்களில்தவழும் முகில் கூட்டங்களைக் கண்டுகளிப்போடு தோகை விரித்தாடிக்கொண்டிருந்தது. மேகத்தைக் கண்டால்ஆடுவது மயிலின் இயற்கை”

“அன்பின் மிகுதி அறிவை மறைத்துவிட்டதுபுலவரே!” பேகன் தலை குனிந்தான்.

“பரவாயில்லை பேகா வானிலிருந்து பெய்கின்ற மழை இது இன்ன இயல்புடையநிலம்’ என்று தான் பெய்யக்கூடியநிலங்களின் இயல்பை எல்லாம் அறிந்துகொண்டா பெய்கிறது? மழையைப் போலப்பரந்தது உன் அன்பு. அன்புக்குஅறியாமையும் வேண்டும்.
மற்றவற்றுக்குத்தான் அறியாமை கூடாது”


“அதோ, பார் அந்த மயிலை” பேகன்திரும்பிப் பார்த்தான். மயில் அவன்போர்த்திய போர்வையைக் கீழே உதறித்தள்ளிவிட்டுப் பாறையின் மற்றோர்மூலைக்குச் சென்று மறுபடியும் தோகைவிரித்தாடிக் கொண்டிருந்தது! அன்புமிகுதியால் தான் செய்த தவறுஅப்போதுதான் அவனுக்குப் புரிந்தது!

அறுகுளத் துகுத்தும் அகல்வயல்பொழிந்தும்
உறும்இடத் துதவாது உவர்நிலம் ஊட்டியும்
வரையா மரபின் மாரி போலக்
கடாஅ யானைக் கழற்காற் பேகன்
கொடைமடம் படுத லல்லது
படைமடம் படான். (புறநானூறு -142)
அறுகுளம் = நீர் வற்றிய குளம், உவர்நிலர் = களர் நிலம், ஊட்டி = பெய்து, மாரி = மழை, மடம் = அறியாமை.

 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top