பேரழகு விருந்து

#1
FB_IMG_1563351214630.jpg

பேரழகு விருந்து

முகில்துளி முக்காடிட்ட
இலைமுக ஏந்திழையோ....

கார்துளி கண்கொண்ட
விரிதோகை இலைமயிலோ..

உண்டி தயாரித்த
தளிரிலை தாய்முகத்தில் பூத்த
வியர்துளி அன்போ..

எண்ணிலா முகங்களில்
துளித்திரி ஏற்றிய இலைதீபமோ..

சாகரத்துளிகள் அலங்கரித்த
இலை சாமரமோ...

இலைவலையில் சிக்கிய
திவலை கயல்களோ..

உணவூட்டும் பசுமைக்கு
உயிர்மாரி சூட்டிய முத்துச்சரமோ..

நீர்மணிகள் நெருங்க கோர்த்த
பசுந்தழை பட்டாடையோ..

தற்கொலை முனைப்பில்
இலைநுனி முகடேறிய
மழைத்துளி குழுமமோ...

வானது தாண்டி வளியிலிறங்க
நில்லாதுழைத்த பசுந்தழைக்கு
நீர்மழையின் நேசசூட்டலோ..

பகல்கொள்ளை கதிரவன்
பரிதாபத்தில் விட்டுவைத்த வைரமணியோ..

எதேதோவாய்
கணக்கிலா கற்பனைவித்தாய்
இயம்பவியலா எழிலுடன்
இருவிழிகள் பசியாற
இயற்கை பரிமாறிய
பேரழகு விருந்து...
 

Advertisements

Top