• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பேருந்து பயணங்களில் _ 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Nanthalala

அமைச்சர்
SM Exclusive
Joined
Jul 1, 2019
Messages
3,126
Reaction score
4,628
Location
Coimbatore
சம்சாரம் என்பது வீணை



கோவில்பாளையத்தில் இருந்து காந்திபுரம் செல்லும் பேருந்திற்காக காத்து நின்றவர்கள் பேருந்து வந்ததும் துண்டு , வயர் கூடை, ஜூட் பேக் ,பர்ஸ் மற்றும் செல்போனை கையில் எடுத்துக் கொண்டு கிட்டத்தட்ட காலியான ஹேண்ட் பேக் என்று தங்கள் கைவசம் இருந்த ‘போனா போகுது’ பொருட்களை போட்டு இடம் பிடித்து ஏறினார்கள்.



வண்டியை நிறுத்திய ஓட்டுநர் ‘நீங்க எப்படி வேணா அடிச்சிக்கோங்க. நான் மெதுவாத்தான் வண்டி எடுப்பேன்’ என்று மிதப்பாக பார்த்துவிட்டு பேருந்து நிலையத்திற்கு அருகில் இருந்த நவீன இலவச கழிப்பறைக்குச் சென்றார்.



நடத்துனர் கொஞ்சம் நடந்து பக்கத்தில் இருந்த டீக்கடைக்குச் சென்றார். தினசரி வருபவர் என்பதால் கடைக்காரர்களுக்கு அவர்களை நல்ல பழக்கம் உண்டு.



இவர் போய் அங்கிருந்த பணியாளர்களிடம் நாட்டு நடப்பு பற்றி உரையாடிக் கொண்டு இருக்க ஓட்டுநரும் வந்து விட்டார்.



இருவருமாக டீயும் உளுந்துவடையும் சாப்பிட்டு விட்டு கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டு ஏதேதோ பேசி நேரத்தைக் கடத்திக் கொண்டு இருக்க பேருந்தின் உள்ளே வழக்கமான பிரச்சனை புதிய இருவருக்குள் ஆரம்பித்து இருந்தது.



“ரெண்டு பேரு உக்காரதுக்கு நான் எடம் புடிச்சுப் போட்டிருக்கேன். நீ வந்து என்னை இடிச்சுக்கிட்டு உக்காந்தா என்ன நியாயம்? “ என தன்னருகில் நீலச் சேலை கட்டிக்கொண்டு அமர்ந்திருந்த சக பெண் பயணியிடம் வாதாடிக் கொண்டே -



“கலா! சட்டு புட்டுனு வான்னா வர முடியாது உனக்கு. எல்லோரையும் போகட்டும் போகட்டும்னு விட்டுட்டு பின்னாடி வந்து நீ நிக்கிற? இங்க என்னடான்னா வயசுப் பொண்ணு வயசானவங்களை இடிச்சுக்கிட்டு முன்னாடி வந்து போட்டு வச்சிருந்த சீட்டையும் புடிச்சிக்கிட்டு” என்று தன் அருகில் நின்று கொண்டு இருந்தப் பெண்ணிடம் வெற்றிலை வாயோடு படபடவென அங்கலாய்த்துக் கொண்டு இருந்தார் நடுத்தர வயதுப் பெண் ஒருவர்.



“விடு மயிலு” என்று மயிலுவின் சண்டையைத் தடுத்துக் கொண்டு இருந்தார் ,மயிலுவால் ‘கலா’ என்று அழைக்கப்பட்ட மேகலா.



மயிலு எதை விட்டாலும் அந்த நீலச் சேலையை விடுவாதாயில்லை போலும். இந்தச் சேலை அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. ஆனால் அதை அணிந்திருந்த பெண்ணைப் பிடிக்கவில்லை.



இரண்டு சணல் (ஜுட்) பைகளில் பொருட்களை வைத்துக் கொண்டு அவற்றை எடுத்துக் கொண்டு கூட்டத்தில் வர சிரமமாக இருந்ததால் முன்னே போய் இடம் பிடிக்கச் சொல்லி இருந்தார் மேகலா.



இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம் இருக்க வேலை செய்து அசந்துபோய் வந்திருந்த அந்தப் பெண்ணோ இந்த நியாயப் பெண்ணின் அருகில் இருந்து எழுந்து கொள்ளத்தான் நினைத்தாள். ஆனாலும் தானாக வந்த சண்டையை விட மனமின்றி -



“இதப்பாருங்க! ஒரு துண்டு போட்டா ஒருத்தர்தான் உக்காரணும். நீங்க பஸ்ஸ_ல ஏறுங்க இல்ல ஏறாம போங்க. அது உங்க இஷ்டம் அடுத்தவங்க அப்படி ஏறுனாங்க - இப்படி ஏறுனாங்கனு தேவையில்லாம நீங்க எதுக்கும்மா பேசறீங்க. என்னமோ உங்க வீட்டு சொத்து மாதிரி?” என்று மயிலுவின் அருகில் உட்கர்ந்திருந்தவாறே கொஞ்சம் கெத்தாகப் பேசவும் மயிலுவிற்கு கோபம் வந்துவிட்டது.



“என்னது? என் வீட்டு சொத்தாவா? ஏன் இது உன் வீட்டு சொத்தா? பகுமானமா என் பக்கத்துல வந்து உக்காந்திருக்க? ஜன்னல்கிட்ட துண்டு போட்டாதான் ஒருத்தருக்கு. நான் அதுக்கு அடுத்தது போட்டிருக்கேன். அப்ப ஜன்னல் சீட்டும் அடுத்த சீட்டும் எனக்குத்தான்”



‘ புதூஊஊஊ ரூல்ஸா இருக்கே?’ என்ற யோசித்துக் கொண்டே என்னதான் மனதுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் தனக்கு இருக்கும் முதுகு வலியில் நின்று கொண்டு செல்ல முடியாதே? என்ற ஒரே காரணத்திற்காக அதே சீட்டில் அடமாக உட்காந்து இருந்தாள் நீலச் சேலை.



நின்று கொண்டு இருந்த மேகலாவிடம் இருந்தவைகளை வாங்கி ஒன்றை மடியிலும் ஒன்றை கால்களுக்கு அடியிலும் வைத்துக் கொண்டு -



“வந்திர்றாளுங்க பையை மாட்டிக்கிட்டு” என்று சத்தமாதகவே முணுமுணுத்தார் மயிலு.



இதற்கும் பதிலுக்கு கொடுக்கலாம் என்று நீலச்சேலை வாயைத் திறக்க யோசித்த நேரம் ஓட்டுநர் தனது இருக்கைக்கு வந்து விட்டார்.



வண்டி கிளம்பவும் மயிலுவை கண்டு கொள்ளாமல் அவரை விட்டு மெல்லிய ஒதுக்கத்தோடு அமர்ந்து கொண்டாள் அவள்.



இவற்றை எல்லாம் உருளைக் கிழங்கு சிப்ஸ் சாப்பிட்டுக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தாள் சகுந்தலா. சகுந்தலாவும் இன்னொரு பெண்ணும் அந்த நீலச்சேலைப் பெண்ணும் மயிலுவும் இருந்த இருக்கைக்கு எதிர்வலது பக்க இருக்கையில் இருந்தனர். கூட்டத்தில் முழுவதும் தெரியாவிட்டாலும் சகுநதலா இவர்கள் சண்டையை அவ்வப்போது பிறர் கண்டு கொள்ளாதவாறு நாசூக்காக எட்டி எட்டிப் பார்த்தாள்.

அடுத்து குரும்பபாளையத்தில் சிலர் இறங்க தங்களின் பின் இருக்கை காலியாகவும் மயிலுவும் கலாவும் அடித்து பிடித்து அதில் உட்கார்ந்து விட்டனர்.

நீலச்சேலை அருகில் இருப்பது மயிலுவிற்கும் பிடிக்கவில்லை. தவிர தனது தோழியுடன் இருந்;து கொள்ளலாம் என அடுத்த இருக்கைக்கு ஒடி விட்டவர் போகும் போது அந்தப் பெண்ணைப் பார்த்து முகத்தைத் தோளில் இடித்துக் கொண்டு ஏதோ முணுமுணுத்தார். நீலச்சேலை அதைக் கண்டும் காணாத மாதிரி செல்போனை நோண்டியது. பின்னே இவர்களிடம் பதிலுக்கு பதில் பேச அவளிடம் எங்கே எனர்ஜி இருக்கிறது?

சகுந்தலாவிற்கு அருகில் இருந்தப் பெண்மணியும் சரவணம்பட்டியில் இறங்கி விட்டார். அங்கே ஏறிய மற்றொரு பெண்ணும் ஹேண்ட்பேகுடன் ஏற - அவரைப் பார்த்து சிநேகமாகப் புன்னகைத்தாள் சகுந்தலா.



அவளும் புன்னகைத்தபடி இவள் அருகில் அமர்ந்து கொண்டாள். தன்னிடம் இருந்த சிப்சை சகுந்தலா அந்தப் பெண்ணிடம் நீட்ட கொஞ்சம் தயங்கிக் கொண்டு “ சிப்ஸ் அயிட்டம் சாப்பிடறதில்லை” என்று றுத்தாள் அவள். பஸ்ஸில் யாரும் எதுவும் கொடுத்தால் வாங்கிச் சாப்பிடக்கூடாது என தன்னைப்போலவே அவளுக்கும் அறிவுறுத்தப்பட்டு இருப்பதை உணர்ந்து தனக்குள் சிரித்துக் கொண்டாள் சகுந்தலா.





பேருந்து கிளம்பியது.சரவணம்பட்டியில் பெரும்பாலான பயணிகள் இறங்கிவிட்டபடியினால் பேருந்து கொஞ்சம் காற்றாட இருந்தது.



சகுந்தலா தனக்கு வந்த அலுவலகம் சம்பந்தப்பட்ட தொலைபேசி இணைப்பில் இடைவிடாமல் வாய் ஓயாமல் பேசி முடித்து விட்டு நிமிர்ந்தால் பக்கவாட்டு சீட்டில் மேகலாவும் மயிலுவும் பேசுவது கேட்டது.



“எங்க கலா இறங்கற நீ? காந்திபுரம் வரை வருவியா? இல்ல கணபதி ஏறி மாறிப் போறியா?”



“பாப்பா வீட்டுக்கு வர்றேன்னு சொல்லி இருக்கேன். எனக்கு பாப்பாவைப் பாக்கனும் போல இருக்கு.”



“பாப்பாவுக்கு எத்தனை மாசம் ஆச்சுதாமா?”



“அதாச்சு ஒரு வயசு. நடக்குதாளாம்!”



பாதியில் வந்து கேட்டுக் கொண்டு இருந்த சகுந்தலாவுக்கு மண்டை காய்ந்தது.



அவள் குழப்ப முகத்தைப் பார்த்து விட்டு சரவணம்பட்டியில் ஏறிய அவளது இன்ஸ்டன்ட் தோழி ராஜசெல்வம் -



“மொதல்ல சொன்ன பாப்பா அந்தம்மா பொண்ணு. ரெண்டாவது சொன்ன பாப்பா அந்தம்மாவோட பொண்ணோட பொண்ணு” என கிசுகிசுத்தாள். இதற்கு முன் அவர்கள் குடும்ப விவகாரங்கள் அலசப்பட்டிருக்கும் போல.



ஒரு அசட்டு சிரிப்பை ராஜசெல்வமும் சகுந்தலாவும் பரிமாறிக் கொண்டனர்.







மாசு வரணும்

டஃப்பு தரணும்

அதுக்கு அவன்தான் பொறந்து வரணும்







கணீரெண்று பாடல் ஒலிக்க பயணிகள் அனைவரும் யாரின் செல்போன் என ஒருவரை ஒருவர் மாறிமாறிப் பார்க்க மேகலாதான் போனை எடுத்தார்.



“ஹலோ சொல்லு பாப்பா”



‘தட் பாப்பா’ என்று சகுந்தலாவும் ராஜசெல்வமும் கண்களால் ‘ஹைபை’ செய்து கொண்டார்கள்.



சில பல நலம் விசாரிப்புகளுக்குப் பின் எதிர்முனை என்ன சொன்னதோ -



“ முடியாது பாப்பா. அவனெல்லாம் ஒருமனுசனா? அவனைப் போய் நான் பாக்க மாட்டேன். “



“-----------------“



“உன் வீடடுக்கு பக்கத்து ஆஸ்பத்திரில உங்கப்பனை நீ சேர்திருந்தா அது உன்னோட. நானென்னத்துக்கு அவனைப் போய் பாக்கோனும்?”



“---------------------“





“இதப்பாரு ராஜி. எனக்கு பாப்பாவைப் பாக்கனும்போல இருக்கு. நான் பாப்பாவைப் பாக்க வர்றேன். வர்றதா? வேண்டாமா?”



எதிர்முனை பதறிப் போயிருக்கும் போல.



“அவன் பேச்ச நீ பேசாத பாப்பா எனக்குப் புடிக்கலை. “



“----------------------“



“ஆமா. குடும்பம் நடத்தினேன். கல்யாணம் பண்ண பாவத்துக்கு குடும்பம் நடத்தினேன். அதுக்காவ உனக்கே கல்யாணம் பண்ணிக் குடுத்திட்டேன் இன்னும் பண்ண முடியுமா?”



இதை ஒட்டெல்லாம் கேட்க வேண்டியிருக்கவில்லை. மேகலாவாகப்பட்டவர் மைக் இல்லாமல் உரத்துதான் பேசிக் கொண்டு இருந்தார்.



‘ஆத்தி! விசயம் விவகாரமால்லா இருக்கு!’ என சகுந்தலாவும் ராஜசெல்வமும் விழிக்க-



அதன்பிறகு கலா பேசியதை நல்ல வேளையாக சாலையில் சென்ற வாகனங்களின் சத்தமும் அவை எழுப்பிய ஹார்ன் ஒலிகளும் பெருமளவு மற்றவர்களை கேட்கவிடவில்லை.



“இவன் பண்ண கூத்துல இந்த வயசுல நான் ஆஸ்பத்திரில படுத்திருந்தேனே? எட்டிப் பாத்தானா இவன்? என இன்னும் சில பேச - கேட்டுக் கொண்டிருந்த பெண்களுக்கு தர்ம சங்கடமாகப் போய்விட்டது.



“இப்ப பேச மாட்டேங்கிறீங்க?“ என்று மேகலா மகளிடம் பேச –





‘இதெல்லாமா பஸ்ல பேசுவாங்க?’ என்று திருதிருத்தனர் இந்தப் பெண்கள்.



இத்தனையும் பேசிக் கொண்டு இருந்த அம்மணியை ஆவலுடன் முகத்தைத் திருப்பிப் பார்க்க அவர் இன்று குளித்த மாதிரி கூட தெரியவில்லை.



‘அய்யய்யோ! இதே பஸ்ல ஆட்கள் குறைந்தாலும் … ஆனா இருக்கத்தான் செய்றாங்களே? எல்லோரும் கேட்ருப்பாங்களே?’ என்ற பதட்டத்துடன் இவர்கள் விழிகளைச் சுற்றிப் பார்க்க பயணிகள் முகத்தில் இருந்து ஒன்றும் கண்டு பிடிக்க முடியவில்லை.



கணபதியில் இவர்கள் இருவரும் இறங்கினார்கள். அங்கேயே மேகலாவும் இறங்கினால் கொஞ்சம் புத்தி சொல்லலாம் என சகுந்தலா எதிர்பார்த்தாள்.



ஆனால் பேச்சு சுவாரசியமோ இல்லை திட்டத்தை ஏதும் மாற்றியதாலோ மேகலா பேசிக்கொண்டே போய்விட்டார்.



ஒரு நல்ல கதையை பாதியில் விட்ட உணர்வுடன் பெண்கள் இருவரும் தங்களுக்குள் நகைத்துக் கொள்ள –



“அந்தம்மா வீட்டுக்காரர் கொஞ்சம் சேட்டை போல இருக்கு.” என்று சிரித்துவிட்டு “ சரி . என்னைக் கூப்பிட அவர் வந்திட்டார். நான் கிளம்பறேன்” என்ற ராஜசெல்வம் எதிர்திசையில் நடக்கத் தொடங்கினாள்.



இருக்கைக்காக மயிலு சண்டை போட்ட போது அப்பிராணியாக அருகில் நின்ற மேகலா கண்முன் வந்து போக - தனது கணவன் தன்னை அழைத்துச் செல்ல எப்போதும் வந்து காத்திருக்கும் கடையை நோக்கி நடந்தாள் சகுந்தலா.
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,609
Age
38
Location
Tirunelveli
Ippadi than half boil a kekkratha sister🙄🙄🙄

Full boil epdi irukkum nu imagine laye travel pannanumo😳😳😳

Nalla kavanikringa, padikkavum suvarasiyamai👍👍👍👍
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top