பொறி | அறிபுனை சிறுகதை | பகுதி 1/2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijayanarasimhan

Author
Author
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,238
Points
113
Location
Chennai, Tamil Nadu, India
பொ.பி. 2325...

வழக்கத்தைவிட இன்று சீக்கிரமாகவே தனது காலைக்கடன்களை முடித்துக்கொண்டு தோட்டப் பராமரிப்பு வேலையையும் விரைந்து கவனித்துக்கொண்டிருந்தார் திரையன். இன்று சூரியத்தகடுகளைப் பராமரிக்கும் நாள். மாதம் ஒருமுறை செய்யும் பணி, இடையில் எந்தச் சிக்கலும் வராமல் இருந்தால்! மருதனையும் இன்று தன்னோடு அழைத்துச் செல்வதாக உறுதியளித்திருந்தார். அவன் எழுந்து தயாராகியிருப்பானா? இன்னும் உறங்கிக்கொண்டிருப்பானா? தன் இளம் மகனின் துருதுருப்பை மெச்சியவாறே தலையை நிமிர்த்தியவரின் கண்கள் விரிந்தன...

கிழக்கு வானத்தில் மெல்ல உயர்ந்து கொண்டிருந்த கதிரவன் உலகத்திற்கு அழகாக நிறமூட்டிக்கொண்டிருந்தான். முதிர்ந்த இலைகளின் அடர்பச்சையும், இளந்தளிர்களின் செம்பச்சையும் தம்மூடாக வரும் ஒளியினால் பலவகை மரகதக் கற்களின் அணிவகுப்பாய்க் கண்களைக் கவர்ந்தன! கருநீலத்திலிருந்து இளஞ்சிவப்பிற்கு மாறிய கீழ்வானத்துப் பகுதி கதிரவன் இரவின் போர்வையை விலக்கிக்கொண்டு எழுகிறான் என்ற தோற்றத்தைக் கொடுத்தது! இரைதேடிக் கூடுகளைவிட்டுக் கிளம்பும் பறவைகளின் கீச்சுக் குரல்கள் இன்னிசையாய் செவிகளை நிரப்ப, ஆவியாகும் பனியின் மணம் காற்றில் கலந்து நாசியில் இரசவாதம் செய்ய, இரவின் குளிரை மிச்சவைத்திருந்த அதிகாலைக் காற்று நீண்ட பிரிவிற்குப் பிறகு தழுவும் காதலியைப் போல மேனியை ஆரத்தழுவ...

’என்னை மட்டும் ஏன் விட்டாய்?’ என்று வாய்ப்புலன் கேட்பதைப் போல வயிற்றில் பசி கிளம்பியது திரையனுக்கு!

வழக்கமான தோட்டப்பணிகளை ஒருவாறு முடித்துவிட்டோம் என்ற திருப்தியோடு எழுந்தவர், அருகில் ஓடிய ஓடையை அடைந்து கைகால்களைத் தூய்மை செய்துகொண்டு அந்தப் பெரிய தோட்டத்தின் நடுநாயகமாய் அமைந்திருந்த தன் வீட்டை நோக்கி விரைந்தார்.

மருதன் இவருக்காக வாசலிலேயே காத்திருந்தான். திரையனைப் பார்த்ததும் துள்ளிக்குதித்து ஓடிவந்தவனை அள்ளி அணைத்துக்கொண்டார்.

“போலாமாப்பா?”

“சாப்டியா நீ?”

உள்ளிருந்து பதில் வந்தது,

“இன்னும் இல்ல, நீங்க அவன விட்டுட்டுப் போயிட்டீங்கனு ஒரே அழுக, தோட்டத்துலதான் இருக்கீங்கனு நம்பமாட்டாராம் ஐயா, அவரே நேர்ல போய் பாக்கணுமாம்... நல்ல வேள நீங்க சீக்கிரம் வந்தீங்க! வாங்க, ரெண்டு பேரும் சாப்டுட்டுக் கிளம்புங்க!”

சொன்னபடியே இருவருக்கும் உணவைப் பரிமாறினாள் அமுதா, திரையனின் மனைவி.

அந்தக் கிராமத்திற்கே மின்னாற்றல் வழங்கும் சூரியத்தகட்டுக் கலத்தைப் பராமரிக்கும் பொறுப்பு திரையனின் குடும்பத்தைச் சார்ந்தது. அதனால் இவர்களுக்குப் ‘பொறையர்’ என்ற பட்டமும் உண்டு. காற்றாலைகள், கடலலை ஆற்றல் ஆகியவற்றையும் சார்ந்திருந்த வேறு பிற கிராமங்களைப் போலன்றி இவர்களின் கிராமம் முழுக்க முழுக்கச் சூரிய ஆற்றலை மட்டுமே நம்பியிருந்தது. மின்சாரம் இல்லாமல் காலந்தள்ளுவது அப்படியொன்றும் கடினமல்ல என்றாலும், மின்னாற்றல் இல்லையென்றால் உற்பத்தித் திறன் குறைந்துவிடும் என்பதில் ஐயமில்லை!

“பாத்து, பாத்து... மெதுவா சாப்பிடு... அப்பா உன் பக்கத்துலதான இருக்காரு? உன்னவிட்டுட்டுப் போகமாட்டாரு!”

மேலுமொரு கொய்யாப்பழத்துண்டை மருதனின் தட்டில் வைத்துவிட்டு அவனது முதுகில் வாஞ்சையுடன் தடவிக்கொடுத்தாள் அமுதா. மகனை மெச்சுவதில் ஒரு போட்டி வைத்தால் இருவரில் யார் வெல்வார்கள் என்று சொல்வது கடினம்!

தாய் சொன்னதைக் காதில் வாங்காமல் அவள் பரிமாறிய களியையும் பழத்துண்டுகளையும் அவசர அவசரமாக விழுங்கிக்கொண்டிருந்தான் மருதன். முதன்முறையாகச் சூரியத்தகடுகளை நேரில் காணப் போகிறோம் என்ற ஆவல்!

அவன் கைக்குழந்தையாக இருக்கும் பொழுது ஒன்றிரண்டு முறை அவனைச் சூரியக்கலத்திற்குத் தூக்கிச் சென்றுள்ளதாக திரையன் சொன்னாலும், மருதனைப் பொறுத்தவரை இதுதான் முதல்முறை!

தன் குடும்பத்தின் சொத்து என்றே அவன் எண்ணும் அந்தச் சூரியமலர்களைப் பார்க்கப் பௌர்ணமிக் கடலைப் போல அவனுள் ஆர்வம் பொங்கியது!

இன்னொரு காரணம் கிராமத்தின் எல்லையைத் தாண்டிப் போகப் போகிறோம் என்பது. ஒவ்வொரு கிராமமும் தன்னிறைவோடும் முழுமையான தற்சார்போடும் அமைந்திருந்தன. எனவே கிராமவாசிகளுக்கு வேற்றூர்களுக்குச் செல்வதற்கான காரணங்கள் குறைவு. உறவினர்களைச் சந்தித்தல், அந்தந்தப் பகுதிக்கே தனித்துவமாக உள்ள கோயில்கள், சுற்றுலாத் தலங்கள் முதலியவற்றைப் பார்த்தல் போன்ற அரிதான காரணங்களுக்காக மட்டுமே வெளியூர்ப் பயணம் மேற்கொள்வர். அதற்கும் அரசாங்கத்திடம் முறையான அனுமதி பெற வேண்டும். வருடத்திற்கு ஒருமுறை அனுமதி கிடைக்கும்.

சுற்றுச்சூழல் மாசிற்கான முதன்மையான காரணிகளில் ஒன்று படிம எரிபொருள்தான் என்று தெரிந்தும் அதை விட முடியாமல் மனித இனம் இருந்தது. பயணங்களைக் குறைப்பதற்கான வழியாகத் தன்னிறைவு-தற்சார்பு மண்டலங்கள் உருவாக்கப்பட்டன. தனது கிராமத்தைவிட்டு வெளியில் செல்லக் கூடாது என்பதை ஒரு கட்டுப்பாடாக யாரும் கருதுவதில்லை, தொடக்கத்தில் அப்படிச் சில சிக்கல்கள் எழுந்தன, ஆனால், ஒருவர் விரும்பினால் அவர் தன் இருப்பிடத்தை மாற்றிக்கொள்ளும் சுதந்திரம் முழுமையாக இருந்தது. பயணங்களைக் குறைத்துக்கொள்வதன் பயனைச் சுற்றுச்சூழலில் மட்டுமின்றி வாழ்க்கைமுறையிலும் அனுபவித்தவர்கள் மெல்ல மெல்ல மண்டலங்களைக் கிராமங்களாகச் சுருக்கிக்கொண்டு நிறைவாக வாழ்கின்றனர்!

இப்படி ஒரு சூழலில் வளரும் மருதனைப் போன்ற சிறுவர்களுக்குத் தம் கிராமத்தின் எல்லைக்கு வெளியே இருப்பதைப் பார்த்துவிடும் ஆர்வம் அதிகமிருப்பதில் வியப்பில்லைதானே? வேற்றுக் கிராமங்களைப் பற்றிய ஆர்வமூட்டும் மர்மங்கள் நிறைந்த கதைகளுக்கு என்றுமே அவர்களிடம் பஞ்சம் இருந்ததில்லை! வளர வளரப் பள்ளி மூலமும் சுற்றுலா மூலமும் வெளியில் சென்று வந்தபின் அந்தக் குழந்தைப் பருவ ஆர்வம் மறைந்துவிடும். இயற்கையின் மீதும் சுற்றுச்சூழலின் மீதும் காதலும் பொறுப்பும் கொண்ட நற்குடிமக்களாக இளைஞர்களை இந்தச் சமுதாயம் தவறாமல் மாற்றிவிடும்.

”அப்பா... ஒரு நிமிஷம்...”

காலையுணவை முடித்துக்கொண்டு தயாராகிப் புறப்பட்டு அப்பாவோடு வெளியில் வந்த மருதன் சட்டென ஏதோ நினைவு வந்தவனாய் மீண்டும் வீட்டிற்குள் ஓடினான். அவன் மறுபடி வெளியில் வந்தபோது அவனது பிஞ்சுக்கைகள் தானியங்களும் பழத்துண்டுகளும் நிறைந்த சட்டிகளை ஏந்தியிருந்தன.

வழக்கமாக அவனைத் தேடி வரும் அணில்களும், குருவி, காக்கைகளும் இன்று அவன் சீக்கிரமே எழுந்துவிட்டதைக் கண்டு திகைத்தாலும் சுதாரித்துக்கொண்டு வீட்டின் வாயிலில் கூடியிருந்தன.

மருதன் தான் கொணர்ந்த உணவுப்பண்டங்களை அவற்றுக்கு ஊட்டிவிட்டுத் தந்தையின் கையை உற்சாகத்துடன் பிடித்துகொண்டான்,

“ம்ம்ம்... இப்ப கிளம்பலாம்!”

செய்கையில் முதிர்ச்சியும் பேச்சில் மழலையும் தொனித்த தன் ஆசை மகனை வாஞ்சையுடன் வரித்துக்கொண்டு, தன் அன்பு மனையாளிடம் கண்களால் விடைபெற்றுக்கொண்டு சூரியக் கலத்தை நோக்கி நடக்கத் தொடங்கினார் திரையன்.

அவர்கள் குடும்பத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்த மின்சிற்றுந்தை அவர் அவசரத் தேவை என்றால் மட்டுமே பயன்படுத்துவார். மற்றபடி காலார நடந்து, அதிகாலைப் பொழுதையும் வழிநெடுகிலும் இருக்கும் பசுமையையும் இயற்கை இனிமையையும் நண்பர்களையும் பார்த்துக்கொண்டே செல்வதுதான் அவருக்குப் பிடிக்கும். தொலைவும் அதிகமில்லை, வீட்டிலிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர்தான். தானாக நடந்தால் விறுவிறுவென்று முக்கால்மணி நேரத்தில் சென்றுவிடுவார், இன்று மகனோடு பேசிக்கொண்டே அவன் கேட்கும் வினாக்களுக்கெல்லாம் விடைதந்து கொண்டே சென்றதால் ஒரு மணி நேரம் ஆனது!

”ஆஆ!”

அருகே வந்து பார்த்ததும் வியப்பில் தன்னை மறந்து நின்றான் மருதன்.

எல்லாப் பக்கமும் காடுகளாலும், தோப்புகளாலும், வயல்வெளிகளாலும் சூழப்பட்டிருந்த அந்தக் கிராமத்தின் கிழக்கே, சற்றே தள்ளி அமைக்கப்பட்டிருந்தது அந்தச் சூரியத்தகட்டுக் கலம். சரியாக இருபத்தைந்து ‘சூரிய மலர்’களைக் கொண்டிருந்தது அந்தக் கலம். ஒவ்வொரு சூரிய மலரும் ஆறு நீண்ட சரிவக (trapezium) ‘இதழ்’களைக் கொண்டிருந்தன. அவ்விதழ்கள் ஒவ்வொன்றும் ஒரு சூரியத்தகடு. காலை முதல் மாலைவரை மலர்கள் அனைத்தும் சூரியனையே நோக்கும் வண்ணம் தமது இதழ்களைத் திருப்பிக்கொண்டே வரும். பருவநிலைகளைக் கணக்கில் கொண்டும், சூரிய பாதைகளைக் கணக்கில் கொண்டும் ஆண்டு முழுவதும் அந்தக் கிராமத்தின் விவசாயத்திற்கும் வீடுகளுக்கும் தேவையான மின்னாற்றலைக் கச்சிதமாக உற்பத்தி செய்துவிடும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டிருந்தன.

’எதுக்கும் இருக்கட்டும்’ என்று தேவைக்கதிகமாக ஆற்றலை (எதையுமே!) சேமிக்கும் வழக்கம் இந்தத் தலைமுறையினரிடம் இல்லை! ஆற்றல் வழங்கலில் எந்தச் சிக்கலும் வராமல் பொறையர் குடும்பங்கள் சூரியகலத்தைச் சிறப்பாகப் பராமரித்து வந்துள்ளன!

வியப்பிலிருந்து வெளிப்பட்ட மருதன் அடுத்து வரிசையாகக் கேள்விகள் கேட்கத் தொடங்கினான். எங்கோ இருக்கும் சூரியனின் கதிர் இங்கே நம்மை வந்தடைய, அதனை ஒரு தகட்டின் மூலம் மின்னாற்றலாக்கிச் சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் நம் வீட்டில் இருக்கும் விளக்குகளும், விசிறிகளும், அடுப்பும் இயங்கப் பயன்படுத்துகிறோம் என்பதை அந்தப் பிஞ்சு மனம் முழுதாக உள்வாங்கிக்கொண்ட போது அதற்குப் பல விடைகளும், பற்பல வினாக்களும் கிடைத்தன.

அவனது கேள்விகளுக்கெல்லாம் விடை சொல்லிக்கொண்டே திரையன் தனது பராமரிப்புப் பணியில் ஈடுபட்டார்.

வேலை முடித்து அவர்கள் அங்கிருந்து கிளம்பும்போது மாலை நெருங்கிக்கொண்டிருந்தது. ஒரு நாள் முழுவதும் ஊருக்கு வெளியே இருந்தது, அங்கேயே மதிய உணவை உண்டது, அப்பாவுடன் ஓயாத கேள்வி-பதில் என்று சூரிய மலர்களைச் சுற்றிப்பார்த்தது என்று மருதன் மிகுந்த உற்சாகத்தோடு இருந்தான்.

தனது அனுபவத்தைத் தன் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ள அவனது மனம் தவித்துக்கொண்டிருந்தது. அதற்கேற்ப அவர்கள் வீடு திரும்பும் வழியில் அவனது நண்பன் பரிதியின் வீட்டின் வழியாக வந்தனர். தன் வீட்டு முகப்பில் இருந்த பூந்தோட்டத்தில் பறவைகளுக்குத் தானியம் இட்டுக்கொண்டிருந்த பரிதியைப் பார்த்ததும் மருதன் தந்தையிடம் அனுமதி வாங்கிக்கொண்டு மெல்ல அவனை நெருங்கினான்.

நண்பர்கள் இருவரும் பறவைகளுக்கு உணவளித்தபடியே அளவளாவத் தொடங்கினர்.

”வா திரையா, நல்லா இருக்கியா?”

”நல்லாருக்கேன் மாறா, நீ எப்படி இருக்க? எங்க ரெண்டு நாளா ஆளக் காணும்?”

மாறன் பரிதியின் தந்தை, அந்தக் கிராமத்தின் துப்புரவுப் பொறுப்பாளர். ‘தூயர்’ குடும்பம்.

”வெள்ளூர் கிராமத்துக்குப் போயிருந்தேன்பா, அவங்க புதுசா அமைச்சிருக்குற திடக்கழிவு எரியுலை நல்லா இருக்குனு கேள்விப்பட்டேன், அதான் போய் பார்த்துட்டு வந்தேன், நானே உன்னப் பார்க்கணும்னு இருந்தேன், நம்ம ஊரு எரியுலையைக் கூட கொஞ்சம் மாற்றி அமைச்சு மேம்படுத்தலாம்... நாளைக்குக் காலைல வரவா?”

“தாராளமா, இன்னிக்குச் சூரியத்தகடு பராமரிப்ப முடிச்சுட்டேன், நாளைக்குப் பெரிசா எதுவும் வேல இல்ல, நீ வா, பேசுவோம்... காலைச் சிற்றுண்டிக்கே வந்துடு...”

“அதெல்லாம் எதுக்குப்பா, அமுதாக்குக் கூடுதல் வேல!”

”அப்படிலாம் ஒன்னுமில்ல, நீ வரன்னா அவ மகிழ்ச்சியா செய்வா, பாதி நாள் சமையல் என்னோட வேலையுந்தான்! பரிதியயும் கூட்டிட்டு வா...”

“ம்ம்... சரி”

மாறன் நட்போடு திரையனின் தோளில் கை வைத்தார்.

”மருதா... போலாமா?”

“அப்பா... நான் இன்னும் கொஞ்ச நேரம் பரிதியோட விளையாடிட்டு வரேனே?”

திரையன் தயங்க, மாறன் பதில் சொன்னார்,

“இருக்கட்டும் திரையா, இரவு நானே கொண்டுவந்து விடறேன், மருதனவிட்டா பரிதி வேற பசங்க கூட அவ்ளோவா விளையாடமாட்டான்!”

”சரிப்பா, நான் வரேன், தங்கச்சியக் கேட்டதான் சொல்லு!”

திரையன் மாறனிடம் சொல்லிவிட்டு, மருதனிடமும் பரிதியிடமும் விடைபெற்றுக்கொண்டு வீட்டை நோக்கி நடந்தார்.

***​

இரவுணவைத் திரையன் சமைத்துக்கொண்டிருந்தார். மின்னடுப்பில் இருந்த பானையில் கஞ்சி கொதித்துக்கொண்டிருந்தது. மருதனும் அவரோடு கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தான்.

சட்டென அமைதியானவன் அடுப்பில் இருந்த கஞ்சிப் பானையையே உற்றுக் கவனிக்கத் தொடங்கினான்.

பானைக்குள் கொதிக்கும் நீர் ஆவியாகிப் பானையைவிட்டு வெளியேறும்போது இலேசாகத் திறப்பதும், பின் மூடிக்கொள்வதுமாய் பானையை மூடியிருந்த தட்டு ‘தடதட’வெனத் தாளகதியோடு எகிறிக்கொண்டிருந்தது.

திரையன் எதுவும் சொல்லாமல் ஒரு மெல்லிய புன்னகையோடு மகனைப் பார்த்துக்கொண்டிருந்தார். அமுதா தன் பணிகளை முடித்துக்கொண்டு இவர்களோடு வந்து சேர்ந்தாள். அவளிடம் ‘அமைதி’ என்று செய்கை காட்டினார் திரையன்.

சற்று நேரம் அமைதியாகக் கொதிக்கும் கஞ்சிப் பானையைப் பார்த்துக்கொண்டிருந்தவன் இவர்களை நோக்கித் திரும்பினான்...

“சாப்டலாமா மருதா? அம்மாக்குப் பசிக்குது!”

அமுதா தன் செல்ல மகனைக் கொஞ்சலாகக் கேட்டாள்.

”சாப்டலாம்மா... அதுக்கு முன்னாடி நான் ஒன்னு கேக்கவா?”

“ம்ம்... “

”நம்ம தோட்டத்து ஓடைல ஒரு சுழலி இருக்குல? அது நீங்க பண்ணதுதான?”

“ஆமா...”

“அது எப்படி வேல செய்யுது?”

”ஏன், உனக்கே தெரியாதா?”

”தெரியும்... ஓடைல ஓடுற தண்ணியோட ஆற்றல்னால சுழலியோட தகடுகள் தள்ளப்படும், அப்ப சுழலி சுத்தும், அத வெச்சு மாவு இடிக்குற, அரைக்குற எந்திரங்கள்லாம் வேலை செய்யும்...”

”சரியா சொன்ன... நீதான் நிறைய நாள் என் கூடவே இருந்து அதைலாம் பாத்திருக்கியே... இப்ப ஏன் புதுசா கேக்குற?”

”அதில்லமா, இந்தப் பானையப் பாருங்க... தட்டு ஏன் தடதடனு ஆடுது?”

”இதுவும் உனக்குத் தெரிஞ்சிருக்குமே?”

தங்கள் செல்ல மகனின் மழலை மொழியில் பெரிய விளக்கங்களைக் கேட்பதில் இருவருக்கும் அலாதி இன்பம். ’மீன் குஞ்சிற்கு நீந்தக் கற்றுத்தர வேண்டுமா’ என்பதற்கேற்ப பொறையர் குல வாரிசு அறிவியல் சிந்தனைகளை வெளிப்படுத்துவதைக் கண்டு அவர்களின் பெற்றொர் உள்ளமும் பொறியாளர் அறிவும் ஒரு சேர மகிழ்வெய்தின!

”ம்ம்... தட்டு மூடியிருக்கும்போது பானைக்குள்ள நீராவி சேரும், அது சேரச் சேரப் பானைக்குள்ள அழுத்தம் அதிகமாகும், ஓரளவு அழுத்தம் சேர்ந்ததும் நீராவி தட்டத் தூக்கிட்டு வெளிய வந்துடும், அப்புறம் மறுபடி தட்டு பானைய மூடும்... இப்படியே மாறி மாறி நடக்குறதால தட்டு தடதடனு ஆடுது...”

“அருமை... அருமை... நல்லா சொன்ன!”

அமுதா மகனைக் கட்டிக்கொண்டாள்.

“சரி, சாப்டலாமா? எனக்குப் பசிக்குது!”

திரையன் விளையாட்டாகக் கேட்டார்.

“நான் என்ன யோசிச்சேன்னு இன்னும் சொல்லவே இல்லயே?”

மருதன் குழந்தைக் கோவத்தோடு கேட்டான்.

“அச்சோ, ஆமாமா... சொல்லுங்க சின்னப் பொறையரே!”

திரையன் முகத்தை ஆர்வமாக வைத்துக்கொண்டு அவன் அருகில் அமர்ந்தார்.

“ஓடைல இருக்குற சுழலி மாதிரி நீராவியால இயங்குற ஒரு சுழலி செஞ்சா எப்படி இருக்கும்?”

இது திரையனும் அமுதாவும் எதிர்பார்த்ததுதான் என்றாலும் தங்கள் செல்ல மகன் சிந்தித்துக் கண்டுபிடித்துள்ளான் என்ற மகிழ்ச்சியை வியப்பாக வெளிப்படுத்தினர்.

“அட... ஆமால?”

”ஆமாம்மா... ஓடைல அவ்ளோ தண்ணி ஓடுது, ஆனா அது சுத்த வெக்குற சுழலி சின்னதுதான், அத வெச்சு நம்மால பெரிய எந்திரங்கள இயக்க முடியாது... ஆனா, இங்க பாருங்க, பானைக்குள்ளேர்ந்து கொஞ்சமாத்தான் நீராவி வருது, ஆனா அதுவே இவ்ளோ கனமான மூடியத் தூக்குது, ஒரு பானைக்குள்ள நிறைய அழுத்தத்தோட நீராவிய வெச்சு ஒரு குழல் வழியா வெளிய விட்டு, அந்தக் குழல் கிட்ட ஒரு சுழலிய வெச்சோம்னா அதனால பெரிய பெரிய எந்திரங்களைக் கூட இயக்கலாம்... அது மட்டுமில்ல...”

மருதன் பெற்றோருக்கு ஆர்வமூட்டச் சற்றே நிறுத்தினான்.

“ம்ம்?”

அமுதா கண்களில் ஆர்வம் கொப்பளிக்கக் கேட்டாள்.

“ஓடைல இருக்குற சுழலிய நாம நினச்ச இடத்துல அமைக்க முடியாது, எங்கலாம் ஓடை, ஆறு இருக்கோ அங்கதான் அமைக்க முடியும், ஆனா, நீராவி சுழலினா நாம எங்க வேணா அமைச்சுக்கலாம், நெனச்ச இடத்துக்குக் கொண்டு போலாம்...”

”ஆகா... என் சின்னப் பையனுக்கு எவ்ளோ அறிவு... நானுந்தான் தினமும் கஞ்சிப் பானையப் பாக்குறேன், சட்டி சட்டியா கஞ்சி குடிக்குறேன்... ஒரு நாளாச்சு எனக்கு இப்படிலாம் யோசிக்கத் தோனுச்சா!”

திரையனின் முகத்தில் பெருமிதம் அப்பியிருந்தது.

ஆனால், பொறையர்கள் குடும்பத்தில் இது புதிதல்ல... ஒவ்வொரு தலைமுறையிலும் சிறுவர்களும் சிறுமிகளும் புதுப்புது எந்திரங்களுக்கான யோசனைகளைக் கண்டுபிடிப்பார்கள்தான். திரையனும் அமுதாவுமே கூட தங்கள் சிறுவயதில் இப்படிப் பல “கண்டுபிடிப்பு”களைச் செய்துள்ளனர். ஆனால் அடுத்து மருதன் சொன்னதைக் கேட்டதும் இருவரும் சற்றே ஆடிப்போயினர்...

”இதெல்லாம் என்னோட யோசனை இல்லப்பா... பரிதியோடது!”

”உன் நண்பன் பரிதியா? மாறனோட மகனா? அவனா இந்த யோசனையச் சொன்னான்?”

சூரியக் கிரகணம் வந்ததைப் போல அதுவரை பெருமிதத்தில் மலர்ந்திருந்த திரையனின் முகம் சட்டென இருண்டது!

”ஆமாம்பா... கஞ்சிப் பானையப் பார்த்து நீராவியோட ஆற்றலை அவன்தான் யோசிச்சான், ஆனா அத எப்படிப் பயன்படுத்துறதுனு அவனுக்கு யோசனை வரல, இன்னிக்கு நாங்க விளையாடும்போது அவன் என்கிட்ட இதச் சொன்னானா, அப்பத்தான் எனக்கு நம்ம ஓடைல இருக்குற சுழலி ஞாபகத்துக்கு வந்துச்சு... இது மாதிரி நீராவிய வெச்சு பண்ணுனா எந்திரங்கள உருவாக்கலாம்னு நான் சொன்னேன்... அப்புறம் நானும் அவனும் இதப் பத்தித்தான் ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தோம்... நாளைக்கு அவன் அப்பா இங்க வரப்ப அவனும் வரான், நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து சின்னதா ஒரு நீராவி சுழலி செஞ்சு பார்க்கலாம்னு இருக்கோம்...”

மருதன் சொன்னதைக் கேட்டு இருவர் முகத்திலும் குழப்பம் குடிகொண்டது.

”இதெல்லாம் யோசிக்க நல்லா இருக்கும் மருதா, ஆனா நடைமுறைல சரி வராது!”

திரையன் சொன்னதைக் கேட்டு மருதனின் பிஞ்சு முகம் சுருங்கியது.

“வரும்பா... நானும் பரிதியும் இத எப்படிப் பண்ணலாம்னு நிறைய திட்டம் போட்டிருக்கோம்... பரிதி படம்லாம் கூட வரைஞ்சு வெச்சிருக்கான்... நாளைக்-”

“சரி வராதுனு சொன்னா விட்ரனும்... சாப்டலாம் வா!”

திரையன் சற்றே கோவமாகச் சொல்லவும், மருதனின் கண்களில் நீர் கோத்தது!

அமுதா அவனை அணைத்துக்கொண்டு திரையனுக்குக் கண்சாடை காட்டினாள்.

சாப்பாடு வேண்டாம் என்று அடம்பிடித்த மகனைக் கெஞ்சிக் கொஞ்சிச் சாப்பிட வைத்தாள்.
 
Last edited:

Vijayanarasimhan

Author
Author
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,238
Points
113
Location
Chennai, Tamil Nadu, India

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top