பொறி | அறிபுனை சிறுகதை | பகுதி 2/2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

இந்தக் கதைக் காட்டுவதைப் போன்ற ஒரு எதிர்காலத்தைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?

 • இப்படி இருந்தால் நன்றாக இருக்கும்

  Votes: 1 100.0%
 • இது சரி வராது

  Votes: 0 0.0%
 • இப்படியும் இருக்கலாம், வேறு மாற்றங்களும் தேவை

  Votes: 0 0.0%

 • Total voters
  1

Vijayanarasimhan

Author
Author
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,238
Points
113
Location
Chennai, Tamil Nadu, India

காலையில் வழக்கம் போலத் தோட்ட வேலைகளை முடித்துகொண்டு வீடு திரும்பிய திரையன் திண்ணையில் அமர்ந்திருந்த மாறனைப் பார்த்ததும் புன்சிரிப்போடு வரவேற்றார். ஆனால் சிரிப்பில் ஒரு இறுக்கம் இருந்தது!

மருதனும் பரிதியும் அவர்களைத் தேடி வந்திருந்த பறவைகளுக்கும் அணில்களுக்கும் உணவிட்டுக்கொண்டிருந்தனர்.

காலையுணவின் ஊடே எரிகலத்தை மேம்படுத்தி அமைப்பதைப் பற்றித் திரையனும் மாறனும் பேசிக்கொண்டனர். அமுதாவும் பரிமாறியபடியே அவர்கள் உரையாடலில் கலந்துகொண்டாள்.
உரையாடல் பரிதியின் யோசனைக்கு
வந்து சேர்ந்தது.

”பரிதியா இத யோசிச்சான்? என்கிட்ட சொல்லவே இல்லையே இத!”

“எங்களுக்கும் ஆச்சரியந்தான்... உன் பையன் ஒரு பொறையனா ஆனாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல...”

”அட நீ வேற திரையா... அப்புறம் துப்புரவு வேலைய யாரு பாப்பாங்க?”

திரையன் சொன்னதைக் கேட்டுத் தன் முகம் மலர்ந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாதவர் போலச் சொன்னார் மாறன்.

”அதுக்கு வேற ஒருத்தன் வருவான், அண்ணா... அவன அடுத்த ‘தூயரா’ ஆக்கிட வேண்டியதுதான்... எல்லாருக்குமேவா எந்திரங்களப் பிடிக்கும், ஊரச் சுத்தமா வெச்சுக்கணும், இயற்கையப் பேணிக் காக்கணும்னு நினைக்குறவங்களும் இருப்பாங்கல?”

அமுதா கூறியதைக் கேட்டு மாறன் ஆமோதிப்பாய்த் தலையசைத்தார்,

“இருந்தாகணும்... இல்லேனா முன்னாடி மாதிரி மறுபடி அழிவுதான் மிஞ்சும்!”

”ம்ம்... சும்மா சொல்லக் கூடாது பொடிசுங்க ரெண்டும் நல்லாவே யோசிச்சிருக்காங்க, சின்னதா ஒரு மாதிரி சுழலி கூட பண்ணத் திட்டம் போட்டிருக்காங்க...”

திரையன் பெருமையாகச் சொல்லிக் கொண்டிருக்கும்போது சிறுவர்கள் இருவரும் அவர்களை நெருங்கியிருந்தனர்.

”பாரு திரையன் மாமாவே நல்ல யோசனைனு சொல்றாரு, நீ சரியா வராதுனு சொன்னாருனு சொல்ற?”

பரிதி மலர்ந்த முகத்தோடு மருதனைப் பார்த்துக் கேட்டான். மருதன் குழப்பத்துடன் தன் தந்தையைப் பார்த்தான்.

”நல்ல யோசனைதான் பரிதி... நீங்க இது மாதிரி நிறைய யோசிக்கணும்... ஆனா, நடைமுறைக்கு ஒத்து வரா மாதிரி யோசிக்கணும், அதுக்கு உங்களுக்கு முறையான பயிற்சி தேவை... நாளைலேர்ந்து அமுதா அத்தை உனக்கும் மருதனுக்கும் அறிவியல், எந்திரவியல் எல்லாம் கத்துத் தருவாங்க... அப்புறம் நீங்க இன்னும் நல்லா யோசிக்கலாம்... சரியா?”

திரையன் அவனுக்கு அன்போடு பதில் சொன்னார். ஆனால், சிறுவர்கள் முகத்தில் ஒரு நம்பிக்கையின்மை தெரிந்தது.

”அதில்ல மாமா, இதுவே நல்ல யோசனைதான்... நானும் மருதனும் இதப் பத்தி நல்லா பேசிட்டோம்... சின்னதா ஒரு சு-”

“ஒத்து வராதுனு சொன்னா கேக்கணும்... வரும்னு அடம்பிடிக்கக் கூடாது!”

பரிதியை இடைவெட்டிய திரையனின் குரலில் இலேசாய் கடுமை தொனித்தது. பரிதியின் முகம் சுருங்கியது.

”அச்சோ... அறிவியல்ல இதெல்லாம் இயல்பு, கண்ணா... மாமா இவ்ளோ ஆண்டா பொறையரா இருக்காரு, அவருக்குத் தெரியாதா, ஒரு யோசனை சரி வருமா, வராதானு? நானும் பொறையர்தான், நாளைலேர்ந்து நானே உங்களுக்கு அறிவியல் கத்துத் தரேன், அப்புறம் நீங்களே புரிஞ்சுப்பீங்க...”

அமுதா வாஞ்சையுடன் பரிதியின் முதுகில் தடவிக்கொடுத்து ஆறுதல்படுத்த முயன்றாள்.

”இல்ல அத்த... நான் படம்லாம் கூட வரைஞ்சிருக்கேன்... இங்கப் பாருங்க...”

பரிதி தன் பையிலிருந்து ஒரு காகிதத்தை எடுத்து நீட்டினான். அதில் அவனும் மருதனும் ஒரு சிறிய நீராவிச் சுழலிக்கான திட்டப்படங்களைத் தீட்டியிருந்தனர். எந்திரவியலின் ஆணா ஆவண்ணா கூட தெரியாத இரண்டு சிறுவர்களின் கிறுக்கல் என்று அதை முற்றாக ஒதுக்கிவிட முடியாது. ஆங்காங்குப் பளிச்சிட்ட சில அடிப்படைக் கூறுகள் அவர்கள் இருவருக்கும் இயல்பாகவே புலப்பட்டிருப்பதைக் கண்டு அமுதாவின் கண்கள் விரிந்தன.

”நாங்க பண்ணி-”

“பெரியவங்க சொன்னாக் கேக்கணும் பரிதி... எதித்து எதித்துப் பேசுறா மாதிரியா நாங்க உன்ன வளத்திருக்கோம்?”

மாறன் சினந்தார்.

அமுதா திரையனையும் மாறனையும் நோக்கி ‘இதை நான் பார்த்துக்கொள்கிறேன்!’ என்று கண்சாடை காட்டிவிட்டுச் சிறுவர்களை வீட்டிற்குள் அழைத்துச் சென்றாள்.

’இந்த யோசனை ஒத்து வராது’ என்று அவர்களை நம்ப வைக்க முயன்றவளுக்குத் தோல்வியே எஞ்சியது. குறிப்பாகப் பரிதி உறுதியாக நின்றான்.

பேச்சைத் திசைத்திருப்ப அவர்களுக்கான அறிவியல் பாடத்தை அப்பொழுதே தொடங்கப் போவதாக அறிவித்தாள் அமுதா.

சிறுவர்களுக்கு அவளின் நோக்கம் புரிந்தாலும், நமக்கு அறிவியல் அடிப்படை தெரியவில்லை என்று சொல்லித்தானே திரையன் நம் யோசனையை ஒத்துக்கொள்ள மறுக்கிறார், அந்த அறிவியலைக் கற்றுக்கொண்டே இவர்கள் முன் நிற்போம் என்ற உறுதியினால் ஏற்பட்ட ஆர்வத்தோடு பாடங்கேட்க அமர்ந்தனர்.

”அறிவியல் என்பது நம்மைச் சுற்றியுள்ள அனைத்தையும் புரிந்துகொள்ள முயலும் அடிப்படை ஆர்வத்தின் கட்டுமானம்... எந்த ஒரு நிகழ்வையும் ஏன், எப்படி என்ற கேள்விகளோடு அணுகும் மனப்பான்மை-”

“ஏன் எங்க யோசனைய ஒத்துக்க மாட்டேங்குறீங்க?”

பரிதி அவளை இடைவெட்டினான்.

“ம்ம்?”

அமுதா அவனைச் செல்லமாக முறைத்தாள்.

”அறிவியல்னா கேள்வி கேக்குறதுதான? அதான் பரிதி கேக்குறான், பதில் சொல்லுங்க... நீங்களும் பொறையர்தான!”

தன் தாயையே மடக்கிவிட்ட உற்சாகத்தோடு மருதன் நண்பனோடு சேர்ந்துகொண்டான்.

”அதான் திரையனே சொன்னாரே, உங்க யோசனை நடைமுறைக்கு ஒத்து வராது!”

தங்கள் யோசனையைக் காத்து நிற்க அந்தச் சிறுவர்களிடம் ததும்பும் ஆர்வத்தைப் புன்னகையுடன் இரசித்தபடியே அமுதா விடை தந்தாள்.

”அதான் ஏன்? நாங்க விவரமா பேசித்தான் திட்டம் போட்டிருக்கோம்... ஒத்து வரும்!”

மருதன் உறுதியாகச் சொன்னான்.

”ஆமா அத்த, சின்னதா ஒரு சுழலியச் செஞ்சுதான் பாத்துரலாமே?”


”ஆமாம்மா, இது எதோ எங்க விளையாட்டுனு விட்டுருங்களேன்?”

”உங்க திட்டப்படத்தப் பாத்தேன், நல்லாதான் பண்ணிருக்கீங்க, சின்ன அளவுல செய்யும்போது சரியா இருக்குறா மாதிரிதான் தெரியும், ஆனா, ஒரு ஊருக்கே பயன்படுற அளவுக்குச் செய்யும்போது சரிப்படாது... நிறைய சிக்கல்கள் வரும்!”

அமுதா பொறுமையாகச் சொன்னாள். அவர்களின் திட்டப்படங்கள் அவளை நன்றாகக் கவர்ந்திருந்தன. இந்த இளம் அறிவாளிகளை எச்சரிக்கையாகக் கையாள வேண்டும், சரியாக வழிகாட்ட வேண்டும், இல்லையேல் ஒட்டுமொத்தமாக அறிவியல் மீதே அவர்களுக்கு ஒவ்வாமை வந்துவிடும் வாய்ப்புள்ளது என்பதை அவள் நன்கு உணர்ந்திருந்தாள்.

”அதெப்படிம்மா? சின்னதா இருக்குறதத்தான அப்படியே பெருசா பண்ணப் போறோம், இது வேல செய்யும், அது செய்யாதுனா எப்படி?”

அமுதா புன்னகையுடன் மருதனின் கன்னத்தைத் தட்டிக்கொடுத்தாள்.

“வலிக்குதா?”

“இல்லம்மா...”

மருதன் குழைந்து அவள் கையைத் தழுவிக்கொண்டான்.

”ம்ம்... ஆனா, இதையே நான் ஓங்கி அடிச்சிருந்தா?”

அமுதா கேட்டதன் பொருள் புரிந்ததும் சிறுவர் இருவரும் ஒரு நொடி திகைத்தனர். அமுதா கண்களில் வெற்றிக் களிப்பு மின்ன அவர்களை ஏறிட்டாள்.

முதலில் சுதாரித்துக்கொண்டவன் பரிதிதான்.

“தட்றது வேற, அடிக்குறது வேற... அத்த!”

”எப்படி? ரெண்டும் ஒன்னுதானே? இலேசாத் தட்டும்போது விசை கம்மி, ஓங்கி அடிக்கும்போது விசை அதிகம், அவ்ளோதானே?”

”ம்ம்... ஆனா-”

யோசனையில் ஆழ்ந்து நின்ற பரிதியை ‘என்ன’ என்ற கேள்வியோடு பார்த்துக்கொண்டிருந்தாள் அமுதா.

”நம்ம சூரியத்தகடுகள் இருக்குல?”

மருதன் தன் நண்பனின் துணைக்கு வந்தான்.

“ஆமா... இருக்கு... அதுக்கென்ன?”

”ஊருக்கு வெளிய பெரிசா இருக்குற சூரியமலர்களை மாதிரியே சின்னதா ஒன்ன அப்பா நம்ம வீட்டுக்கு மேல வெச்சிருக்காருல? அவரோட ஆராய்ச்சிக்கு அதுலேர்ந்து வர மின்னாற்றலத்தான பயன்படுத்துறாரு?”

“ம்ம்...”

அமுதா ஆமோதித்தாள். தன் மகனின் வாதம் செல்லும் திசையை அவள் புரிந்துகொண்டாள். அச்சிறுவர்களின் அறிவுமுதிர்ச்சி அவளை மீண்டும் மீண்டும் வியப்பில் ஆழ்த்தியது. பொதுவாகப் பதினைந்து இருபது வயதிற்குமேற்பட்ட பொறையர் சிறுவர்/இளைஞர்கள் யோசிக்கும் அளவில் இந்த இரண்டு பிஞ்சுகளும் யோசிக்கின்றன!

”அந்தப் பெரிய சூரியமலர் ஒரு நாளைக்கு ஒரு பேரலகு ஆற்றல் தயாரிக்குது... அப்பாவோட சின்ன சூரியமலர் பத்து சிற்றலகு ஆற்றல் தயாரிக்குது... இது அதவிட நூறுமடங்கு சின்னது!”

“ஆங்... அதான! அருமைடா மருதா!”

பரிதி தன் நண்பனின் தோளில் மகிழ்வோடு தட்டிக்கொடுத்தான்.

”ஓகோ... இவ்ளோ தெரிஞ்ச உனக்கு அந்தப் பெரிய சூரியமலர்கள ஏன் ஊருக்கு வெளிய தள்ளிக்கொண்டு போய் வெச்சிருக்கோம்னும் தெரிஞ்சிருக்குமே?”

அமுதா புன்னகை மாறாமல் கேட்டாள். மருதனின் முகம் சுருங்கியது. ‘என்ன’ என்று அவனை நோக்கினான் பரிதி.

”தகடுகளால சூரிய ஆற்றலை முழுசா மின்னாற்றலா மாத்த முடியாது, எண்பது சதவிகிதந்தான் மாத்தும், மீதி ஆற்றல் வெப்பமா வெளிப்படும்... அதனால அந்தச் சூரியமலர்கள் இருக்குற இடத்துல வெப்பம் அதிகமா இருக்கும்... அதோட, சூரிய வெளிச்சம் முழுசா அதுங்க மேல படனும்னா சூரியமலர்கள் இருக்குற இடத்தச் சுத்திக் குறிப்பிட்ட தொலைவுக்குப் பெரிய மரமோ கட்டடமோ இருக்கக் கூடாது... அதனாலத்தான் அதைலாம் ஊரவிட்டுத் தள்ளி அமைச்சிருக்காங்க!”

”ஓ... ஆனா, அதுக்கும் இதுக்கும் என்ன தொடர்பு?”

பரிதி புரியாமல் கேட்டான்.

“எங்க வீட்ல இருக்குற சின்ன சூரியமலர்ல உண்டாகுற வெப்பம் ரொம்ப குறைவு... அதனால எந்தப் பாதிப்பும் இல்ல, ஆனா, அதே மலரப் பெருசா அமைக்குறப்ப வெப்பமும் அதிகமா வருது, அதனால அத வீட்டுக்குப் பக்கத்துல வெக்க முடியாது!”

பரிதியும் ஆமோதிப்பாய்த் தலையசைத்தான். இருவருக்கும் தங்கள் யோசனை ஒத்துவராது என்று ஏற்கவும் மனம்வரவில்லை, அதேவேளை தங்கள் முன் வைக்கப்பட்ட காரணங்களை ஒதுக்கவும் இயலவில்லை.

முகத்தில் படர்ந்த குழப்பரேகைகளோடு இருவரும் உம்மென்று அமர்ந்திருப்பதைப் பார்க்க அமுதாவிற்குப் பாவமாக இருந்தது.

”எழுந்திருங்க... நான் உங்களுக்கு ஒன்னு காட்டுறேன்...”

அமுதா துள்ளலோடு எழ, சிறுவர்களும் ஆர்வத்தோடு அவளைப் பின்பற்றினர்.

அமுதா இருவரையும் வீட்டின் ஒரு மூலையில் இருந்த தட்டுமுட்டுச் சாமான் அறைக்கு அழைத்துச் சென்றாள்.

“இதோ...”

சில நொடித் தேடலுக்குப் பின் தான் தேடியதைக் கண்டுபிடித்தவள் அதன் மீது படர்ந்திருந்த ஒட்டடைகளை ஒதுக்கிவிட்டு அதை எடுத்து அவர்கள் முன் வைத்தாள்.

அது என்ன என்று புரிந்துகொள்ளப் பரிதிக்கும் மருதனுக்கும் அதிக நேரம் ஆகவில்லை.

அச்சாகத் தங்கள் திட்டப்படி இல்லையென்றாலும், அடிப்படையில் அது அவர்களின் யோசனையைப் போலவேதான் இருந்தது-

சிறிய நீராவிச் சுழலி!

”திரையன் சின்ன வயசுல செஞ்சது இது... அப்ப அவருக்கு உங்களவிட ரெண்டு வயசு அதிகம், கிட்டத்தட்ட உங்க திட்டம் மாதிரியே இருக்குல?”

சிறுவர்கள் இருவரையும் வியப்பும் குழப்பமும் ஒரு சேர ஆக்கிரமித்துக்கொண்டன.

தாங்கள் செய்ய எண்ணிய ஒன்று பல ஆண்டுகளுக்கு முன்பே செய்யப்பட்டு இப்போது ஒட்டடைப் படிந்து மூலையில் கிடப்பதைப் பார்த்து எப்படி அணுகுவது என்று புரியாமல் தவித்தனர்.

மருதன் அந்தச் சுழலியை எடுத்துச் சுற்றிப் பார்த்தான்.

“இதோ இந்தக் கலத்துல தண்ணி நிரப்பி அடுப்புல வெச்சா, இந்தச் சுழலி சும்மா கரகரனு சுத்தும்... செஞ்சுக் காட்டவா?”

அமுதா அமைதியைக் கலைத்தாள்.

”வேணா அத்த!”

பரிதியின் குரலில் ஒரு ஏமாற்றம் தொனித்தது, அமுதாவின் நெஞ்சைப் பிசைந்தது அது! இந்தப் பிஞ்சு உள்ளங்களை எச்சரிக்கையாகக் கையாள வேண்டிய தருணம் இது!

அமுதா அவர்களை மீண்டும் கூடத்திற்கு அழைத்து வந்து அமர வைத்தாள். உண்பதற்குப் பாலும் பழத்துண்டுகளும் பரிமாறிவிட்டு இருவரது தலைகளையும் வாஞ்சையோடு வருடிக்கொடுத்தாள்.

”காட்டிட்டியோ?”

திரையனும் அவர்களோடு இணைந்துகொண்டார். பரிதியைப் பிறகு தானே வீட்டில் கொண்டு வந்துவிடுவதாகச் சொல்லித் திரையன் மாறனை அனுப்பிவைத்திருந்தார்.

”ஆமா... ரெண்டு பேரும் அறிவியலை வெச்சே என்னை மடக்கிட்டாங்க, வேற வழியில்ல!”

அமுதா புன்னகையோடு சொன்னாள்.

”நான் சொல்லப் போறத நீங்க ரெண்டு பேரும் ரொம்ப கவனமா கேக்கனும்... சரியா?”

பலத்த பீடிகையோடு தொடங்கியவளை அந்த இரண்டு சோடி இளம்விழிகளும் ஆர்வமும் குழப்பமும் கலந்து நோக்கின.

”நீராவிச் சுழலி மட்டுமில்ல, நீராவிப் பொறியே கண்டுபிடிச்சிருந்தோம் நாம... நாமனா மனித இனம்... 500 ஆண்டுகளுக்கு முன்னாடியே நீராவிப் பொறிய நாம கண்டுபிடிச்சுட்டோம்... நீராவிப் பொறி, கல்நெய்ப் பொறின்னு நம்ம ‘வளர்ச்சி’ கிடுகிடுனு போச்சு...”

அமுதா ‘வளர்ச்சி’ என்பதை ஒரு எள்ளலோடு உச்சரித்தாள்.

“கல்நெய்னா?”

பரிதி வினவினான்.

“அது ஒரு எரிபொருள், பலவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாடி வாழ்ந்த உயிரினங்களும் மரஞ்செடிகளும் பூமிக்குள்ள புதைஞ்சு போய் இருந்து, பூமிக்குள்ளயே இருந்ததால அந்த வெப்பத்துனாலயும் அழுத்ததாலயும் அவற்றோட வேதியல் கட்டமைப்பு மாறிக் கரிமப் பொருளா நமக்குக் கெடச்சுது... நாம அதத் தோண்டி எடுத்துச் சுத்தம் பண்ணி எரிபொருளா பயன்படுத்தினோம். பலமடங்கு ஆற்றல் உள்ள பொறிகளைக் கட்டமைச்சோம்... நிலாக்கும் செவ்வாய்க்கும் வெள்ளிக்கும் ஏவூர்திகள் செஞ்சு போய்ட்டு வந்தோம்-”

“நிலாக்குலாம் போனோமா?”

சிறுவர்கள் இருவரும் நம்ப முடியாமல் கேட்டனர்.

இதற்கிடையே திரையன் எழுந்து சென்று ஒரு பெரிய தடிமனான புத்தகத்தோடு வந்திருந்தார்.

அதில் சிறுசிறு விளக்கங்களுடன் பலப்பல புகைப்படங்கள் இருந்தன.

அமுதா தொடர்ந்தாள்,

”இயற்கை ஒவ்வொரு விலங்குக்கும் ஒரு ஆயுதத்தைக் கொடுத்திருக்கு... கொம்பு, நகம், பல்லு, ஓடு... ஆனா, மனித இனத்தின் ஆயுதம் அறிவு! எல்லா விலங்கும் இயற்கை தனக்குக் கொடுத்த ஆயுதத்தத் தன்னைப் பாதுகாத்துக்கவும், தன் வாழ்வாதாரத்தைத் தேடிக்கவும் மட்டுமே பயன்படுத்துதுங்க... ஆனா, மனிதர்கள் மட்டும் இன்னும் வேணும் இன்னும் வேணும்னு தங்களோட தொழில்நுட்பத்தை வளர்த்துக்கிட்டே போனாங்க... இது நல்லதா கெட்டதா, தேவையா தேவையில்லையானுலாம் யோசிக்கல... என்னால முடியும், அதனால இதப் பண்றேன்னு ஒரு திமிர் வந்துடுச்சு நம்மகிட்ட...”

அமுதா சற்றே இடைவெளிவிட்டு மூச்சு வாங்கிக்கொண்டாள்.

விரிந்த கண்களுடன் அந்தப் பெரிய நூலின் பக்கங்களைப் புரட்டிக்கொண்டே அமுதாவின் பேச்சிற்கும் செவிமடுத்துக்கொண்டிருந்த சிறுவர்கள் இருவரும் அவளை நிமிர்ந்து பார்த்தனர்.

”அந்தத் திமிருக்கு இயற்கை ஒரு பெரிய முற்றுப்புள்ளி வெச்சுது, முன்னூத்தி ஆறு ஆண்டுகளுக்கு முன்னாடி!”

”என்னாச்சு?”

பரிதியின் குரலில் இலேசான அச்சம் தொனித்தது. மருதனும் கலக்கத்தோடு அமுதாவைப் பார்த்தான்.

”எனக்கு எல்லாம் தெரியும்னு இயற்கையையே சீண்டிப் பாத்த மனிதர்களைப் பார்த்து இயற்கை ‘உனக்கு ஒன்னும் தெரியாது’னு அடிச்சுச் சொல்லிச்சு... கண்ணுக்குத் தெரியாத ஒரு கிருமி, கட்டுப்படுத்திடலாம்ன்ற ஆணவத்தோட சில மனிதர்கள் உருவாக்கினது அவர்கள் கைமீறிப் போய் உலகத்தையே ஆட்டிப்படைச்சிடுச்சி... கிட்டத்தட்ட ரெண்டு ஆண்டுகள் உலகத்துல இருக்குற எல்லா மனிதர்களும் அந்தக் கிருமிக்குப் பயந்து முடங்கிப் போனாங்க... அதோட பரவலத் தடுக்க வீட்டுக்குள்ளயே இருக்க வேண்டியதா இருந்துச்சு... செவ்வாய்க்கும் சூரியனுக்கும் போகத் துடிச்சிட்டிருந்த மனிதர்களத் தங்களோட வீட்டவிட்டே வெளிய வர முடியாதபடி முடக்கி வெச்சுது அந்தக் கிருமி...”

திரையன் தொடர்ந்தார்,

“எல்லா நாடுகள்லயும் நிறைய பேர் இறந்துபோனாங்க, தொழில்கள்லாம் நின்னுப் போச்சு... உலகமே கலங்கிப் போச்சு... ஆனா, பல நூறு ஆண்டுகளா மனிதர்கள் உண்டாக்கியிருந்த சேதங்கள்லேர்ந்து தன்னை மீட்டுக்க இயற்கைக்கு இது ஒரு வாய்ப்பா அமைஞ்சுது... மனித இயக்கமும் நடமாட்டமும் கட்டுப்பட்டதால காத்துல இருந்த மாசு குறைஞ்சுது, புவி வெப்பமயமாதல் போன்ற சிக்கல்களில் மாற்றங்கள் தென்பட்டன... முன்னேற்றம் முன்னேற்றம்னு தொழில்நுட்ப வளர்ச்சிய நோக்கி ஓடிட்டு இருந்த மனிதர்களுக்கும் ஓய்வா வீட்டுக்குள்ள உக்கார நேரம் கிடைச்சப்ப அவங்களும் கொஞ்சம் யோசிக்க ஆரம்பிச்சாங்க... தங்களோட இந்த ஓட்டத்துல பொருள் இருக்கா, முடிவா இதுல நன்மை இருக்கானுலாம் சிந்திக்கத் தொடங்கினாங்க...”

”ஓ...”

மருதன் சொல்ல, பரிதியும் தலையசைத்துக் கேட்டுக்கொண்டான்.

”அப்ப உருவான ஒரு சிந்தனைப் பொறியோட முழுவடிவந்தான் இப்ப இருக்குற நம்ம சமூக அமைப்பும், வாழ்க்கை முறையும்! அறிவியலுக்கும் தொழில்நுட்பத்திற்கும் எல்லை இல்லை, ஆனா, அவற்றைக் கையாள்வதில், பயன்படுத்துவதில் ஒரு எல்லை இருக்கனும்ன்ற முடிவுக்கு மனித இனம் மெல்ல மெல்ல வந்துச்சு... நம்மால ஒன்னச் செய்ய முடியுங்குறதுக்காக மட்டுமே அதைச் செய்யணும் தேவையில்ல என்ற ஞானத்தின் அடிப்படையே இப்ப நாம வாழ்ற வாழ்வு! இயற்கையோட இசைந்து வாழணும்னா நாம சில சொகுசுகளை விட்டுக்கொடுத்துத்தான் ஆகணும்... நீராவிச் சுழலியும் அதுல ஒன்னுதான்!”

சிறுவர்கள் இருவரும் ஆமோதிப்பாகத் தலையசைத்தனர்.

”ஒன்றை எப்படிப் பயன்படுத்தணும்னு தெரிஞ்சுக்குறது மட்டும் அறிவு இல்ல, எப்படிலாம் பயன்படுத்தக் கூடாதுனு தெரிஞ்சுக்குறதுந்தான் அறிவு... ‘அறிவு அற்றம் காக்கும் கருவி’னு 2400 ஆண்டுகளுக்கு முன்னாடி ஒரு தமிழ்ப்புலவர் எழுதி வெச்சிருக்காரு... அத நாம ரெண்டாயிரத்தி எரநூறு ஆண்டுகள் கழிச்சுதான் சரியா புரிஞ்சுக்கிட்டோம்!”

”ம்ம்...”

பரிதியும் மருதனும் ஆழ்ந்த சிந்தனையுடன் அமர்ந்திருந்தனர்.

”நீராவிப் பொறி, கல்நெய்ப் பொறினு பொறிகளாலத்தான் மனித இனம் பெரிய பெரிய காரியங்களைச் சாதிச்சுது, அந்தப் பொறிகளை ஆள்பவர் பொறியாளர்... பொறியாளர்ன்ற சொல்தான் காலப்போக்கில் மருவி இப்ப நமக்குப் ‘பொறையர்’ன்ற பட்டமா இருக்கு... அறிவுன்றதையும் பொறினு சொல்லலாம், அந்த அறிவைச் சரியாப் பயன்படுத்துறவர்தான் பொறியாளர்... பொறையர்! நான் பார்த்ததுலயே சிறந்த பொறையர் நீங்க ரெண்டு பேருந்தான்... சரியான அறிவைச் சரியான முறைல பயன்படுத்தி இயற்கையோட இசைந்து மனித இனத்தை எதிர்காலத்துல வழிநடத்தப் போறவங்கள்ல நீங்க ரெண்டு பேரும் கண்டிப்பா இருப்பீங்க... அமுதா அதுக்கு உங்களத் தயார் பண்ணுவா!”

"அப்படினா... இந்தப் பொறிகள், ஏவூர்தி போன்ற தொழில்நுட்பங்களைலாம் நாம மொத்தமா மறந்துட்டோமா?”

பரிதியின் கேள்விக்கு அமுதா விடை தந்தாள்,

“அதெப்படி? என்ன இருந்தாலும் அதுவும் ஒரு அறிவுதானே? எத்தனையோ பேர் எவ்ளவோ உழைச்சுக் கண்டுபிடிச்சதைலாம் அப்படி மொத்தமா கைவிட்டுட முடியுமா? அதைலாம் அரசாங்கங்கள் முறைப்படி ஆவணப்படுத்தி ஆங்கங்க இருக்குற பொறையர்கள் கட்டுப்பாட்டுல விட்டிருக்கு... உங்க பயிற்சியோட மேல்நிலைகள்ல நீங்க அதைலாமும் கத்துப்பீங்க, அவற்றை இப்ப இருக்குற சமூகத்தோட முன்னேற்றத்துக்கும் தேவைக்கும் ஏற்ற மாதிரி மேம்பட்டதா மாற்றிக் கையாள்ற உத்தி இனி வரப்போற பொறையர்களுக்குத் தோனலாம் இல்லையா?”

”ஓ... எரிகலத்த மேம்படுத்தனும்னு மாறன் மாமா அப்பாவோட பேசிட்டு இருந்தாரே, அது மாதிரியா?”

“அதே மாதிரிதான்!”

சிறுவர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துப் புன்னகையோடு தலையசைத்துக்கொண்டனர். அமுதா அவர்களை ஆரத்தழுவிக்கொண்டாள்.

திரையன் அவர்களின் திட்டப்படத்தை அலசத் தொடங்கியிருந்தார்!

*****முற்றும்*****
வணக்கம்,

கதையைப் படித்ததற்கு நன்றி. இந்தக் கதை
’எதிர்காலம் இப்படித்தான் இருக்கும்’ என்று அறுதியிடும் முயற்சியல்ல, ’இப்படி இருந்தால் நன்றாக இருக்கும்’ என்ற ஒரு கனவு, ஆசை! இக்கதையில் காட்டப்பட்ட அந்த எதிர்காலத்தின் கனவைக் கண்டவர் என் மனைவி, அவர் சொன்ன கருப்பொருளின் (theme) அடிப்படையில் ஒரு கதையை உருவாக்கி எழுதியது நான்! தாமரைக்கு நன்றி!

கதையைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தவறாமல் தயங்காமல் பகிர்ந்துகொள்ளுங்கள்.

நன்றி,

விசய்
 
Last edited:

AniRaje

Well-known member
Joined
Dec 8, 2018
Messages
313
Reaction score
731
Points
93
Location
Universe
நல்ல கரு. நல்ல கதை. மனைவியின் கருவை எழுத்தில் பிறக்க வைத்ததற்கு என் மனமார்ந்த பாராட்டுகள். இருவருக்கும் என் வாழ்த்துக்கள். உங்களிடம் இருந்து இது போல் மேலும் பல கதைகளை நான் எதிர்பார்க்கிறேன்.
 
ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
9,663
Reaction score
23,271
Points
113
Location
India
Nalla kathai thozhare... manaiviyin kanavai ungal yeluthu moolamaga engal paarvaikku kondu vanthamaiku nandri.. and thamarai Ku vaazhthugal
 
Balamurugan M

New member
Joined
Jun 12, 2021
Messages
1
Reaction score
0
Points
1
Location
Tiruvallur
கதை விறுவிறுப்பாக இருந்தது நல்ல கதை வாழ்த்துக்கள்
இதுபோன்ற மேலும் பல கதைகளை நீங்கள் எழுத வேண்டும் என விரும்புகிறேன்
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top