You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.


மனதில் அன்று எழுதி வைத்தேன்

#1
பகுதி -3

காதோரம் இருபக்க முடிக்கற்றைகளையும் பின் உச்சியில் தூக்கி கிளிப் போட்டு, மற்ற முடி மயில் தோகையாய் முதுகில் புரள துப்பட்டா மானாய் ஓடி வந்து தன் அம்மாவை இறுக்கி கட்டிப் பிடித்துக் கொண்டாள் 20 வயது மிருதுளா.

"அம்மா நான் பி.ஏ. பாஸ் பண்ணிட்டேன்" என்றவள் நச்சென அம்மாவுக்கு ஒரு முத்ததை பதித்தாள்.

அம்மா கவுசல்யா அவசரமாய் சமையலைறைக்கு சென்று ஒரு கிண்ணத்தில் தயாராய் செய்து வைத்திருந்த குலோப் ஜாமூன்களை போட்டுக் கொண்டு வந்து மகளிடம் நீட்டினாள். "தெரியுமே.‌.. அதான் ஸ்வீட் செஞ்சு வெச்சிருக்கேன்."

"ஒ, நீயே ஸ்வீட் தானேம்மா" என்றபடி அதை வாங்கி முழுங்கியவள், "ஏதோ உலக சாதனை செஞ்சா மாதிரி இருக்கும்மா" என்றாள்.

"கண்டிப்பபாடா. படிப்பு மாதிரி ஒருத்தருக்கு துணை நிற்கக்கூடிய வேற எதுடா? பெரியவங்க சொன்னா மாதிரி படிப்பு களவு போகாது, நெருப்புல எரியாது, வெள்ளத்துல மூழ்காது. யாருக்காவது சொல்லிக் கொடுத்தா, நமக்கு குறைவு ஏற்படாது... கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்புதானே!"

"மேலே படிக்கட்டுமாம்மா?" கெஞ்சலாய் கொஞ்சினாள்.

"கட்டாயம் படிடாம்மா. வெறும் பி.ஏ‌ இந்த காலத்துல போதாது. இதுல டாக்டரேட் வாங்கற அளவு படி. நான் படிக்க வைக்கறேன்"

அம்மாவும் பெண்ணுமாக சின்ன குடும்பம் அது. அவள் அப்பா இறந்து விட, ஆரம்பப்பள்ளியில் ஆசிரியையாய் சேர்ந்து மகளை கண்போல் வளர்ந்தது வருகிறார். சின்ன ஒண்டுக்குடித்தன வாடகை வீடுதான். அதை சுத்தமாய் வைத்து அளவான சாமான்களோடு இருவருக்கும் தாராளமாய் புழங்கக் கூடிய அளவில் பராமரித்தார்கள் பள்ளி வருமானம் மட்டும் போதாது என, டியூசன் எடுத்தும் மேல் வருமானம் ஈட்டினாள் கவுசல்யா.

அந்த தெம்பில் தான் மகளை மேலும் படிக்க வைக்க முன்வந்தாள்.

"நான் படிச்சு வேலைக்குப் போய் உன்னை ராணி மாதிரி பார்த்துக்க போறேன்ம்மா" என்றாள் மகள்.

தாய் பூரித்தாலும், " என்னை ராணி மாதிரி பார்த்துக்கறதை விட, எல்லா விதத்திலும் நீ ராணி மாதிரி வாழறதை நான் பார்க்கணும்டா" என்று கண் கலங்கினாள் கவுசல்யா.

இளம் மிருதுளா அம்மாவை கட்டிக் கொண்டாள்.

எல்லாம் நன்றாகத் தான் போனது. மேலே படிக்க அப்ளிகேஷன் பார்ம் வாங்கி வந்தாள், மிருதுளா.

"நாளைக்கு கல்லூரில இதை கொண்டு போய் கட்டிடு" என்று பணத்தை கவுசல்யா எடுத்துக் கொடுத்து விட்டாள்.

ஆனால், மறுநாள் காலை மிருதுளா எழுந்து போது, காலை நேர பரபரப்பில் அம்மா சுழண்டு கொண்டிருக்கவில்லை சமையலறையிலிருந்து காபியும் குழம்பு கொதிக்கும் மணமுமாக கலவையாய் எழும் வாசம் வரவில்லை. குளியலறையில் இருந்து சோப்பின் மணமோ தண்ணீர் சப்தமோ வரவில்லை. பூஜை அலமாரியிலிருந்து ஊதுபத்தி வாசமோ அம்மா வாயிலிருந்து பிரவாகமாய் வெளிப்படும் 'சிவபுராணமோ' கேட்கவில்லை. முன்னூறு சதுரடி கூட இல்லாத அந்த வீட்டில் கண் விழித்தவுடன் அம்மாவின் சுழற்சி ஒவ்வொரு அடியிலும் வெளிப்படும்.

வாசல் பக்கம் ஏதாவது காரியமாய் போயிருப்பாளோ என்று எழுந்து கதவைப் பார்த்தாள். மூடி இருந்து, ஒருவேளை அம்மா இன்னும் எழவே இல்லையோ என்று சட்டென மறுபக்கம் பாயை பார்த்த போதுதான் திக்கென்றது. கண்மூடி அம்மா படுத்திருந்தாள். உடம்பு சரியில்லையா? ஜுரமா? நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள். சில்லென்று இருந்து.

?மிருதுளாஒட அம்மாக்கு என்னா ஆச்சு அடுத்த பகுதியில் பாக்கலாம் ?
 

Sponsored

Advertisements

Top