மாந்த்ரீகன் - 11

#1
தென்றலெனும் தேர்மீது வண்ண மலர்கள் அசைந்தாடி வரும் அந்த அழகான காலைப்பொழுதில், காற்றெங்கிலும் கலந்திருந்த கதிர் அறுபடும் வாசனையை நுகர்ந்தபடி, வேம்பு மரத்தின் மலர்கள் உதிர்ந்த பாதை தனிலே வேங்கை அவன் விருவிருவென நடந்து சென்றான். ஆனால் அவனது கால்களின் வேகத்தைவிட அவன் மனதானது அதி வேகமாக பயணித்துக் கொண்டிருந்தது.

'அது எப்படி இந்த பெண்கள் இவ்வளவு எளிதில் ஒருவரோடு ஒருவர் இணைந்து கொள்கின்றார்கள்? அதிலும் வயதுவரம்பு பார்க்காமல் அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் அளவிற்கா பாட்டியும் யாளியும் செல்வது? அவளைக் குற்றம் சொல்லி என்ன செய்ய? அவளுக்கு இந்த அளவிற்கு உரிமை கொடுத்து கெடுத்து வைத்திருக்கும் என் பாட்டியை அல்லவா சொல்ல வேண்டும்... அதென்ன, சொந்தப் பேரனான என்னவிட அதிக இடத்தினை அந்த வாயாடிக்கு கொடுக்க வேண்டி வந்தது என் பாட்டிக்கு? அவள் இங்கிருந்து கிளம்பியதும் கண்ணே கனியே என்று என் கன்னத்தை வருட வருவார்களே அப்பொழுது கவனித்து கொள்கின்றேன்...' என்று உள்ளுக்குள் பொறிந்து தள்ளினான்.

பெண் மனமானது ஒருவரிடம் தனக்கு கிடைக்கும் பாசத்தையும் பாதுகாப்பையும் கொண்டே மற்ற செயல்களின் எல்லையை நிர்ணயிக்கும் என்பது ஆண் பிள்ளையாகிய அனழேந்தி அறிந்திராத ஓர் உண்மை. தன்போக்கில் கடகடவென வந்தவன் காளைகளின் தொழுவ கதவை திறந்து விட ஆவினங்களை ஒன்றன்பின் ஒன்றாக வெளியேறி வரத் தொடங்கின.

அப்போது அங்கே தன் வேட்டை நாயோடு வந்த அனழேந்தியின் நண்பனாகிய நாவினியன், "என்ன நண்பா... பயண அலுப்பு தீர இன்று ஒரு நாள் நீ விருப்பம் போல உண்டு உறங்கி ஓய்வெடுப்பாய் என்று நான் நினைத்திருந்தால், வந்த முதல் நாளே என் வேலையை நீ எடுத்துக் கொள்ள நினைக்கிறாயே...." என்றான்.

"நானும் அப்படித்தானடா நினைத்திருந்தேன், ஆனால் என் மடியோடு கட்டி அழைத்து வந்திருந்தேனே அந்த மதயானை, அது முட்டி மோதி என்னையே என் வீட்டை விட்டு வெளியே தள்ளிவிட்டதடா."

"அந்த யானையை நான் சற்று முன்பு தானே வயல்வெளிப் பக்கம் பார்த்தேன்... அதற்குள்ளாகவா குடில்களுக்குள் புகுந்து விட்டது?"

"அட போடா... அந்த யானை புயல் காற்றினை விட அதிக வேகம் கொண்டிருக்கின்றது... அது மீண்டும் இந்த பக்கம் வருவதற்குள் நாம் விரைந்து கானகத்திற்கு சென்று விடுவோம் வா..."

"அதுசரி... உங்களது வேட்டை நாயினை நீ உன்னோடு அழைத்து வரவில்லையா?..."

"அடடா... கோபமாய் வந்ததில் மறந்துவிட்டேனே. உன்னுடைய நாய் இருக்கின்றது, அது போக நாம் இருவர் இருக்கின்றோம், ஆவினங்களை காக்க இது போதுமில்லையா..."

"என்ன மாந்தா, இன்று அறுவடை நடக்கின்றது என்பதையே மறந்துவிட்டாயா? இன்று முதல் உழவுக்குரிய மாடுகளையும் நாம் நம்மோடு என்று அழைத்து செல்ல வேண்டுமே... இன்னும் ஒரு வேட்டை நாய் இருந்தால் சற்று பாதுகாப்பாக இருக்கும். வேண்டுமானால் நான் உன் குடிலுக்குச் சென்று நாயை அழைத்து வரட்டுமா?..."

ஒரு நொடி தாமதித்த மாந்த நேயன், "வேண்டாம் இனியா... மேய்ச்சலுக்கு செல்கின்றோம் என்று தெரிந்தும் அதற்கு முக்கியமான வேட்டை நாயையே மறந்துவிட்டு வந்தது என் பிழைதான், நானே சென்று அழைத்து வருகின்றேன்...."

"செல் நண்பா... நீயே சென்று வா..." என்ற நாவினியன் அந்தப்புறமாய் திரும்பி சிரித்துக் கொண்டது சத்தியமாக நம் நாயகனது செவியில் விழவில்லை.

தான் திரும்பி வந்து சென்றதற்கான எந்த தடையமுமின்றி விரைந்து கிளம்பி விட வேண்டும் என்ற ஆசையோடு வீடு வந்தவனை, முச்சந்தி பிள்ளையார் போல வீட்டின் முன்னால் அமர்ந்திருந்த யாளி சற்று சத்தமாகவே வரவேற்றாள்.

"வாங்க... வாங்க... வாங்க... பாட்டி இங்க பாருங்க, உங்க பேரன் வந்தாச்சு..."

அனழேந்தி, "பெண்ணே... இப்போது ஏன் தேவையில்லாமல் பாட்டியை இங்கே அழைக்கின்றாய்?"

"உங்க பாட்டி தான் நீ கோபத்துல உன் நாய்க்குட்டியையும் சாப்பாட்டு மூட்டையையும் மறந்துட்டு போயிட்டன்னு சொன்னாங்க. நீ வந்ததும் தகவல் சொல்லச் சொல்லி என்ன இங்கேயே உக்கார்ந்திருக்கச் சொன்னாங்க..."

"நான் ஒன்றும் கோபத்தில் மறந்து செல்லவில்லை, என் நண்பனது வேட்டை நாய் போதும் என்ற நினைப்பிலும் உணவின் மேல் விருப்பமில்லாமலும் அவற்றை விட்டுவிட்டு சென்றேன்."

"சரிங்க இளவரசே... நீங்க சொல்றது உண்மைனு நான் நம்பிட்டேன்..."

"உன்னை....." என்று அவன் அவளை நெருங்கிடும் பொழுது, ஒரு நீண்ட தட்டைக் கம்பின் முனையில் உணவு மூட்டையினை கட்டிக்கொண்டே பாட்டி குடிலுக்குள் இருந்து வெளியே வந்தார். அந்த கம்பு பார்ப்பதற்கு மிக உறுதியாகவும் தடிமனாகவும் இருக்க, அதன் மேல் முனையில் ஒரு சலங்கை கட்டப்பட்டிருந்தது. அச்சலங்கையை ஆவினங்களை வழிநடத்தும் நேரம் மட்டும் பயன்படுத்துவார்கள் போல, பாட்டி இப்போதுதான் சலங்கையையும் உணவு மூட்டையையும் கம்பின் மீது கட்டினார்கள்.

மாந்தைதேவி பாட்டி மாந்த நேயனை பார்த்து, "உன் குரல் கேட்டு அரை நொடி தானே ஆனது, அதற்குள் எப்படித்தான் இருவருக்குள்ளும் சண்டை மூண்டது?" என்றார்.

யாளி, "எப்படியும் உங்க செல்ல பேரன், நான் தான் சண்டையை ஆரம்பிச்சேன்னு சொல்லப் போறாரு... தெரிஞ்சே ஏன் பாட்டி அவருகிட்ட கேக்குறீங்க?"

"எத்தனை முறை சொன்னாலும் உண்மை பொய்யாகிடாது பெண்ணே..."

"சரிங்க ஆணே...."

பாட்டி, "ஷ்... யாளி அமைதியாய் இரேனம்மா..." என்று அவளை சற்று அடக்கி விட்டு அனழேந்தியின் கன்னம் வருடி, "ஐயா... என் ராஜா... இன்று உனக்கு மிகவும் பிடித்த இராசன்னமும் மாதுளம் பிஞ்சு பொறியலும் பொட்டலத்தில் வைத்துள்ளேன். இதை எடுத்துக்கொள்ளய்யா....."

யாளி, "இராசன்னம்னா என்ன பாட்டி?"

பாட்டி, "இராசன்னம் என்பது நெய்யில் வறுத்து சமைக்கப்பட்ட நெல் சோறம்மா. மாதுளம் பிஞ்சினுள் மிளகுப் பொடி தூவி, வெண்ணையில் பக்குவமாய் வேக வைத்து, பொறியலாக்கி இராசன்னத்தோடு சேர்த்து உண்டால் மிக மிக ருசியாக இருக்கும். மாந்தனுக்கு அது மிகவும் பிடித்த பதார்த்தம்...."

அனழேந்தியோ வீம்பாய், "எனக்கு எதுவும் வேண்டாம் பாட்டி, பரந்து விரிந்து கிடக்கும் இந்தக் காடு நிறைய பலவகைப் பழங்கள் பழுத்துக் கிடக்கின்றன, என் பசிக்கு புசிக்க அதுவே போதும்.... நீங்கள் அரும்பாடுபட்டு சமைத்த இவற்றை எல்லாம் உங்கள் புது உறவான இந்த பேத்திக்கே படைத்து கொள்ளுங்கள், நான் கிளம்புகின்றேன்."

"அப்படி பேசாதே மாந்தா... அவளும் பாவம் உன்னைப் போலவே அன்னை இல்லாத பெண் ஐயா, தந்தையும் தன் பாதி வாழ்க்கையை பணிக்காக பயணங்களிலேயே கழித்தவராம்... உனக்காவது விவரம் தெரியும் வரை என் துணை இருந்தது அவளுக்கு அதுவும் இல்லை, அவள் உலகினுக்கு திரும்பிய பிறகு மீண்டும் அதே நிலையில் தானே இருக்க போகின்றாள். இங்கிருக்கும் சில காலமாவது நம்மவர்களின் அன்பு எனும் அரவணைப்போடு அவள் இருக்கட்டுமே..."

பாட்டியினது வார்த்தையின் பலனாய் யாளிமீது கொஞ்சம் இரக்கம் கொண்ட அனழேந்தி அதற்குமேல் வீம்பு செய்யாமல் உணவுப் பொட்டலம் கட்டப்பட்டிருந்த கம்பினை கையில் வாங்கி கொண்டே, "ஐந்து நிமிடத்திற்குள் இருவரும் இவ்வளவு பேசி முடித்துவிட்டீர்களா?" என்றான் ஆச்சரியமாய்...

யாளி, "இன்னும் நிறைய பேசியிருப்பேன், சாப்பிட்டுக்கிட்டே பேசினதால என் வாய்க்கு ரெண்டு வேலை இருந்தது, அதான் பேசுற வார்த்தையில கொஞ்சம் இடைவெளி விழுந்திடுச்சு...."

அனழேந்தி, "அதனால் என்ன பெண்ணே, இப்பொழுது உன் தலையைப் போலவே வாயும் வெற்றிடம் ஆகிவிட்டது இல்லையா? இருவரும் உட்கார்ந்து இன்று முழுவதும் பேசித் தீருங்கள், உங்கள் இருவருக்கும் இடைஞ்சலாக இல்லாமல் நான் என் நண்பன் நாவினியனோடு மேய்ச்சலுக்கு கானகம் கிளம்புகிறேன்..."

பாட்டி, "மாந்தா... எனக்கு ஒரு உதவி செய்கின்றாயா?"

"என்ன பாட்டி, என்னிடம் தாங்கள் உதவி என்று இறைஞ்சுகிறீர்கள், ஒரு வார்த்தை உத்தரவிட்டால் சிரம் மேற்கொண்டு செய்து முடிக்க மாட்டேனா என்ன?"

"செய்ய மாட்டாய் என்று தெரிந்து தானே உதவியாக கேட்கின்றேன்..."
 
#2
அனழேந்தி புரியாமல் முழிக்க பாட்டியே, "அது ஒன்றுமில்லை மாந்தா, நம் யாளிக்கு திறந்த வெளியில் நீராடி பழக்கம் இல்லையாம், நீயும் நாவினியனும் மேய்ச்சலுக்கு அருவி பக்கம்தானே செல்கிறீர்கள் அப்படியே இவளையும்....." என்று இழுக்க,

மாந்தன், "முடியவே முடியாது பாட்டி, இவளை விட்டு விலகி இருக்க விரும்பித்தான் இன்று நான் ஓய்வை விடுத்து மேய்ச்சலுக்கே போகின்றேன். நீங்கள் என்னவென்றால் எதை விட்டு விலகுகிறேனோ அதையே என்னோடு ஒட்ட பார்க்கிறீர்களே...."

மாந்தை தேவி பாட்டி, "இப்பொழுது தானே யாளியைப் பற்றிய அனைத்தும் சொன்னேன், மீண்டும் இப்படி முரண்டு செய்தால் எப்படி ஐயா?"

"ஆனால் அவள் என்னோடு சண்டை போடுவதையே முழு நேர வேலையாய் வைத்திருக்கிறாளே பாட்டி..."

யாளி, "பாட்டி... இவருக்கு சண்டைதான் பிரச்சனைனா நான் அருவிக்கு போயிட்டு திரும்பி வர்ற வரைக்கும் எந்த சேட்டையும் செய்யாம, ஏன் வாயக்கூட திறக்காம செல்ப்ஃ கன்ட்ரோலா, ஐ மீன் சுய கட்டுப்பாட்டோட இருந்துக்குறேன் பாட்டி..."

அனழேந்தி, "........"

பாட்டி, "அவளே தன் வாயால் திரும்பி வரும் வரையில் சண்டையிட மாட்டேன் என்றுவிட்டாள், பிறகென்ன ஐயா?..."

"பாட்டி...." என்று சிணுங்கினான் மாந்த நேயன்.

முகம் வாடிப் போன பாட்டி, "ஹூம்.... சரி இருக்கட்டும் ஐயா, நீ கிளம்பு. அம்மாடி யாளி, நீ உனக்கு நீராட தேவையான பொருட்களை எல்லாம் எடுத்துக் கொள்ளம்மா. நானே உன்னை அருவி வரையில் அழைத்து செல்கின்றேன்..." என்றார்.

அனழேந்தி, "ஆனால் பாட்டி அறுவடை விழா முடியும் நேரத்தில் நிறைவு விழா பூஜைக்காக தாங்கள் இங்கிருக்க வேண்டுமே..."

"அதனால் என்ன ஐயா... நிறைவு விழாவை நீயும் உன் தாத்தாவும் இருந்து கவனித்துக் கொள்ளுங்கள், என் விருந்தினளாய் வந்திருப்பவளை நானே கவனித்துக் கொள்கின்றேன்."

அனழேந்தி இறுக்கமான முகத்தோடு, "வேண்டாம் பாட்டி, நிகழும் கதிரறுப்பு விழாவினை சிறப்பாக முடித்து வைக்க குலத் தலைவியான தாங்கள் இங்கே இருக்க வேண்டியது அவசியம். யாளியை நானே பத்திரமாக அருவிக்கு அழைத்துச் செல்கின்றேன், மாலை மேய்ச்சலை முடித்ததும் மூவரும் சேர்ந்தே வீட்டிற்கு வந்து விடுகின்றோம். அனுப்பி வையுங்கள் அவளை..." என்றான் தலைகுனிந்தபடி.

குதித்து எழுந்த யாளி, "ரொம்ப நன்றி மிஸ்டர் அனழேந்தி, ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணுங்க, வந்திடுறேன்...." என்றவள் தடதடவென குடிலுக்குள் ஓடிச் சென்று தனக்கு தேவையானவற்றை எடுத்துக் கொண்டு வந்தாள். இடையில் வாளும், ஒரு கையில் வேட்டை நாயும், மற்றொரு கையில் கம்புமாய் அனேழைந்தி முன்னால் நடக்க யாளி இரண்டடி இடைவெளி விட்டு அவனை பின்தொடர்ந்தாள். அந்த இடைவெளிக்கான காரணம், யாளி அவன் மேல் கொண்ட மரியாதை என்று பார்ப்பவர்கள் அனைவரும் நினைத்திருக்க, வேட்டை நாய் மீதான அவளின் பயமே அந்த இடைவெளி என்ற உண்மையை அவளும் அவனும் மட்டுமே அறிந்திருந்தனர்.

இருவரும் முள் வேளிகளால் வேயப்பட்ட ஊர் எல்லைக்கு வந்ததும் அங்கே ஆவினங்களோடு தயாராகக் காத்திருந்த நாவினியனைக் கண்ட யாளி, "ஹாய் அண்ணா...." என்றாள்.

நாவினியன், "என்ன அண்ணனா?"

யாளி, "ம்... எங்க ஊர்ல எல்லாம் பிரண்டோட ஹஸ்பண்ட அண்ணான்னு தான் சொல்லுவோம். உங்களுக்கு பிடிக்கலைன்னா சொல்லுங்க வேற பேர் வச்சு கூப்பிடுறேன்..."

நாவினியன் பொய்யாய் நடுங்கிக் கொண்டு, "வேண்டாம்... வேண்டாம்... எனதருமை தமக்கையே, நான் தங்களுக்கு அண்ணனாய் இருக்கவே விரும்புகின்றேன், தயவு செய்து வேறு எந்த பெயரும் வைத்து விடாதீர்கள். தாங்களும் எங்களோடு மேய்ச்சலுக்கு வருகிறீர்களா தமைக்கையே?" என்றான்.

யாளி, "இல்லப்பா, நான் அருவில குளிக்கிறதுக்காக வர்றேன்... சமூகத்துக்கு ஒரு சின்ன வேண்டுகோள், என்ன நீங்க வாடி போடின்னு வேணும்னாலும் கூப்பிடுங்க, ஆனா தமக்கையேனு கூப்பிடாதீங்க அண்ணா, அந்த பேரு நல்லாவே இல்ல..."

"அப்படியா அம்மணி, இனி தங்களை அப்படி அழைக்கமாட்டேன். நீங்கள் நீராடப்போகும் அருவியினுக்கு அருகில்தான் ஆவினங்களின் மேய்ச்சல் நிலமும் இருக்கின்றது. வாருங்கள் செல்லலாம்..."

மாடுகளோடு மூவரும் கிராமத்தின் வலதுபுறம் தெரிந்த ஒடுங்கிய மண் பாதையில் நடக்க தொடங்கினர். பாதையின் இருபுறமும் அடர்ந்து வளர்ந்திருந்த உயர்ந்த மரங்களும், பெரிய புதர்களும் மாடுகளை பாதுகாக்கும் அரண்போல் இயற்கையாய் அமைந்திருந்தது. அனைத்து மாடுகளுக்கும் முன்னால் காவலுக்காக நடந்த வேட்டை நாய்கள், பாதுகாப்பிற்காக அவ்வப்போது குலைத்துக் கொண்டே நடந்தன. வழக்கமான பாதை என்பதால் மாடுகளும் வழி மாறாமல் வரிசையாக சென்றன.

மாடுகளின் இறுதி வரிசையில் மூவரும் நடந்து வர யாளி, "நாவினியா அண்ணா, உங்க அருவி பார்க்க எப்படி இருக்கும்? உயரமா இருக்குமா? நிறைய தண்ணீர் விழுமா? ஆறோட வேகம் ரொம்ப அதிகமா இருக்குமோ?" என்று கேள்வி மேல் கேள்வி கேட்க அத்தனைக்கும் நாவினியனே பொறுமையாய் பதில் சொல்லிக் கொண்டு வந்தான். அனழேந்தியோ தனக்கும் அவர்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பதை போல மலைகளையும் மாடுகளையும் வேடிக்கை பார்த்தபடியே நடந்து கொண்டிருந்தான்.

நாவினியன், "இல்லையம்மா... வெறும் இருபதடி உயர அருவிதான், ஆனால் அகன்று விரிந்து பாயும் அருவி அது. சீரான வேகத்தில் தண்ணீர் பாய்வதாலும், பெரிய பாறைகள் நிறைய இருப்பதனாலும் கீழிருக்கும் ஆற்றின் வேகம் சற்று குறைவாகத்தான் இருக்கும். நீச்சல் தெரியாதவர்கள் கூட அந்த அருவிதனிலே மிகச் சுலபமாக நீராடலாம்...." என்று அவள் கேட்காத கேள்விக்கும் சேர்த்தே பதில் சொன்னான்.

அவன் காட்டிய அக்கறையில் மனம் மகிழ்ந்த யாளி, "ஏன் அண்ணா... நான் உங்கள ஒண்ணு கேட்டா தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே...." என்று பேச்சிலேயே தூண்டில் போட்டாள்.

"தாங்கள் என்னை தமையன் என்று அழைத்த பிறகு, தாம் தெரிந்தே தவறாக கேட்டாலும் நான் எதுவும் நினைத்துக்கொள்ள மாட்டேன், தயங்காமல் கேளம்மா..."

"அது ஏன் அண்ணா நானும் மல்லியும் பேசும் போது நீங்க அடிக்கடி நடுவுல வந்தீங்க?"

"அப்படியெல்லாம் இல்லையே...."

"பொய் சொல்லாதீங்க நான் கவனிச்சேன்... நானும் மல்லியும் நட்போட பழகுறது உங்களுக்கு பிடிக்கலையா? பிடிக்கலைன்னா இப்பவே சொல்லிடுங்க, நான் ஒதுங்கி போயிடுறேன்."

இதற்குமேல் மறைத்து பயனில்லை என்று நினைத்த நாவினியன், "அது ஏனென்றால் தாங்களும் மாந்தனும் வாழ்வில் நிச்சயமாக இணைவீர்கள் என்ற உறுதியான ஒரு உள்ளுணர்வு எனக்கு வந்தது தான் காரணம்."

யாளி, "அது ஒரு காலும் நடக்காது அண்ணா, அப்படியே நடந்தாலும் அதுக்கும் மல்லிக்கும் என்ன சம்பந்தம்னு எனக்கு புரியலியே...."

நாவினியன், "புரியும் படியே சொல்கின்றேனம்மா, எம் மாந்தை குல மக்களில் ஒரு சிலருக்கு மட்டும் பிறக்கும் பொழுது ஏதாவது ஒரு தனி திறமையும் உடன் பிறந்திருக்கும். மாந்த நேயனுக்கு விழியும் செவியும் அதீத கூர்மை வாய்ந்தவை, எனக்கு நிகழப்போகும் சம்பவங்களை உணர்த்தும்படியான உள்ளுணர்வு பலம் உண்டு."

யாளி, "அது எப்டி மத்தவங்களுக்கு இல்லாமல் உங்களுக்கு மட்டும் தனி திறமை வந்தது?"

"எங்களின் மாந்த்ரீக பலம் எங்களுக்குள் இருக்கும் ஆத்ம பலனை பொறுத்து மாறுபடும். ஆத்ம பலன் என்பது மூதாதையர் வழிச்சொத்தாய் வருவது. ஒவ்வொரு குடும்பத்தின் மூத்த சந்ததியினரும் தம் ஆயுட்காலம் முடியும் நேரம் தனது மாந்திரீக பலத்தை ஆத்மாவோடு சேர்த்தெடுத்து, அடுத்த சந்ததிக்கு தானம் செய்வார்கள். அதை நாங்கள் தொல்கொண்டி என்றழைப்போம். பிறக்கும் பொழுது இயல்பாக வந்த ஒற்றை ஆத்ம பலமும், பரம்பரையாய் வந்த தொல் கொண்டியையும் இணைத்தே ஒருவரது பலம் இங்கே வரையறுக்கப்படும். எனில் ஒருவருடைய பரம்பரையை பொறுத்தே ஒருவருக்கான தொல்கொண்டி அதிகமாகவோ குறைவாகவோ கிடைக்கும், அதன் படி எங்கள் ஒவ்வொருவரின் ஆத்ம பலத்தின் அளவும் மாறுபடும். எவர் ஒருவருக்கு ஆத்ம பலம் அதிகமாக உள்ளதோ அவரே எமது குலத்தின் குலத் தலைவராகவோ அல்லது குலத் தலைவியாகவோ அங்கீகரிக்கப்படுவார். அளவுக்கதிகமான ஆத்ம பலன்களை கொண்ட ஆணும் பெண்ணும் இணையும் பொழுது, அவர்களுக்கு பிறக்கும் குழந்தை தனி திறமையோடு பிறக்கும். இப்படித்தான் எனக்கும் மாந்தநேயனுக்கும் தனிப்பட்ட திறமைகள் வந்தன...."
 
#3
"ஸோ, இப்போ உங்க உள்ளுணர்வு நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்குவோம்னு சொல்லுதா? அது நடக்கும்னு நான் எப்டி நம்புறது?"

"இதுநாள் வரையில் என் உள்ளுணர்வின் கூற்று பொய்யாய் போனது இல்லை. என் உள்ளுணர்வின் படி நீங்கள் இருவரும் இணைவீர்களாயின் தாங்கள் எதிர்காலத்தில் வீரேந்திர புரியின் மகாராணியாகவோ அல்லது எம் மாந்தைகுல தலைவனின் மனைவியாகவோ மாறும் வாய்ப்பு உண்டு. நீங்கள் இருவரும் இறுதி வரையில் இப்படியே மாந்திரீக புரியிலேயே இருந்துவிட்டால் ஏதும் இடர் இல்லை, ஒருவேளை எங்களை விட்டுப் பிரிந்து மகாராணியாகிவிட்டால்..." என்று தன் வார்த்தைகளை முடிக்காமல் நிறுத்தி விட்டான்.

அனழேந்தி, "ஒரு வேளை மகாராணி ஆகிவிட்டால், தங்களை தங்களது தோழி பிரிந்து இருக்க வேண்டும். அதன்பிறகு வாழ்நாளில் எப்போது நீங்கள் சந்தித்தாலும் உன்னை மகாராணி என்ற மரியாதையோடே அவள் சந்திக்க வேண்டும். மகாராணியே விரும்பி தனதருகில் இடம் கொடுத்தாலும் அதை எடுத்துக் கொள்ள கூடாத தொலைவில் மல்லி நிற்க வேண்டும். சுருங்கச் சொல்வதென்றால் எங்களது ஏழு ஆண்டுகால வாழ்வினை நீங்கள் இருவரும் எதிர் காலம் முழுவதும் வாழ வேண்டியிருக்கும். பிரியமானவர்களை பிரிந்து வாழ்வது எவ்வளவு வலி என்று அதை அனுபவித்த உள்ளங்கள் மட்டுமே அறியும். நீயும் மல்லியும் அந்த வலியை அனுபவிக்க கூடாது என்று உங்கள் இருவரது நட்பிற்கும் இடையில் ஒரு திரைச்சீலையை விரிக்க நினைக்கின்றான் என் நண்பன், அப்படித்தானே இனியா?"

நாவினியன் வாட்டமான முகத்தோடு, "ஆம்...." என்றான்.

யாளி, "என்ன அண்ணா நீங்க? மாந்தநேயனவிட மக்கா இருக்கீங்க...." என்றதும் அவளின் அந்த திடீர் விமர்சனத்தில் நாவினியன் அதிர்ந்து போய் தன் விழியை விரித்து பார்த்திட, மாந்தநேயன் சிரமப்பட்டு வாய்மூடி சிரித்துக் கொண்டிருந்தான்.

"என்னையா மக்கு என்று விளித்தீர்கள் அம்மணி?..."

யாளி, "பின்ன... ரெண்டுபேரும் லூசுத்தனமா யோசிச்சா உங்கள வேற எப்டி சொல்றதாம்? உங்க நண்பன் என்னடான்னா நாட்டுக்கே ராஜாவாகப் போற வாழ்க்கையை வேணாம்னு சொல்லிட்டு இந்த கிராமத்துக்கு வந்துட்டான். நீங்க என்னடான்னா ஒரு விதைய மண்ணுல விதைக்க முன்னாலேயே பழம் எப்டி இருக்கும்னு யோசிக்கிறீங்க. நீங்க நினைக்கிற அளவுக்கெல்லாம் நான் போகவே மாட்டேன். முதல்ல நானும் மல்லியும் இன்னும் நல்லா பேசி பழகவே ஆரம்பிக்கல, அதுக்கப்புறம் தானே நாங்க ஒருத்தருக்கொருத்தர் உயிர் தோழியா ஆக முடியும்? ரெண்டாவது நான் இங்க ரொம்ப நாள் இருக்க மாட்டேன், கொற்றவை திருவிழா முடிஞ்சதுமே என்னோட உலகத்துக்கு போயிடுவேன்னு பாட்டி சொல்லிட்டாங்க. லாஸ்ட் பட் நாட் லீஸ்ட், நீங்க என்னை இந்த நாட்டுக்கே ராணியாக்குறேன்னு சொன்னாலும் சரி, உங்க கிராமத்தோட ஒட்டு மொத்த மந்திர சக்தியையும் எனக்கு இலவசமா கொடுக்க ஒத்துக்கிட்டாலும் சரி, கண்டிப்பா உங்க நண்பன நான் கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கவே மாட்டேன்..."

நாவினியன், "ஏனம்மா அப்படி?"

"ஏன்னா அவரு ஆளுற வர்க்கம், நான் ஆள்றவங்களுக்கு எதிரான போராடுற வர்க்கம்... எங்க ஊர்ல நான் எவ்வளவு பெரிய போராளி தெரியுமா? இந்நேரம் எங்க உலகத்துல இருந்திருந்தா ரெண்டு போராட்டத்துக்காவது போயிருப்பேன்... இப்போ உங்க ரெண்டு பேர் கூடவும் இந்த காட்டுல போராட வேண்டியிருக்கு..." என்று அவள் தன் போக்கில் பேசிக் கொண்டே செல்ல,

நாவினியன், "என்னடா இவள் ஏதோ போராளி என உளறுகிறாள்?..." என்று வினவினான்.

மாந்த நேயன், "அதுதானடா எனக்கும் புரியவில்லை, தினமும் நூறு முறை தன்னை போராளி போராளி என்று சொல்லிக் கொண்டே இருக்கின்றாள். அதைக் கேட்டு என் காதில் ரத்தம் வராதது ஒன்றுதானடா குறை... அப்படி எதற்காக போராடி தொலைத்தாள் என்று தெரியவில்லை, என்னால் முடிந்தால் நான் இப்பொழுது அவள் உலகத்திற்கு சென்று சம்பந்தப்பட்ட ராஜ்ஜியத்திடம் காலில் விழுந்தாவது இவள் கோரிக்கையை ஏற்க சொல்லிவிடுவேன்."

தனியாக பேசிக்கொண்டிருந்த யாளி திடீரென புலம்பிக் கொண்டிருந்த நண்பர்கள் இருவரையும் பார்த்து, "அது சரியா தப்பான்னு நீங்களே சொல்லுங்க?... ம்... சொல்லுங்க..." என்று கோபமாய் உத்தரவிட்டாள்.

நாவினியன், "எதைப் பற்றி கேள்வி கேட்டாள் என்று நான் கவனிக்கவில்லையே நண்பா, இப்பொழுது நாம் என்ன பதில் சொல்வது?"

அனழேந்தி, "உனதருமை தங்கைதானே, உனக்கு விருப்பமான பதிலை நீயே சொல்லிக் கொள் நண்பா..." என்றான் இளக்காரமாய்.

நாவினியனுக்கு யாளி கேட்ட கேள்வியில் தலையும் புரிய வில்லை வாலும் புரிய வில்லை. நண்பனும் கைகழுவி விட்டதால் பதில் சொல்ல தெரியாது வசமாய் மாட்டிக் கொண்ட நாவினியன், "அது கிடக்கட்டுமம்மா, உடல் வலிமை சிறிதுமின்றி எப்படி உன்னால் இவ்வளவு பெரிய போராளியாய் இருக்க முடிகின்றது?" என சடுதியில் பேச்சின் போக்கையே மாற்றிவிட்டான்.

யாளி, "எனக்கு வலிமை இல்லையா? ஹா... ஹா... ஹா... நான் எங்க ஊர்ல எவ்வளோ பெரிய கராத்தே சாம்பியன் தெரியுமா? எங்கிட்ட ஒரு பய வாலாட்ட முடியாது, தெருத்தெருவா விரட்டி அடிப்பேன். எனக்கு பயந்தே என்னோட ப்ரெண்ட்ஸ், அதாவது என் கூட படிக்கிற பொண்ணுங்ககிட்ட கூட எவனும் நெருங்க மாட்டான்? அந்த அளவுக்கு நான் பெரிய ஆளு..." என்று பெருமை பேசிக்கொண்டு இருந்தவள் தனது இடது புறம் ஏதோ செடி கொடிகள் சலசலக்கும் சத்தம் கேட்டு நின்றாள்.

நாவினியன், "ஏனம்மா, உனக்கு பயம் என்பதே கிடையாதா?" என்றான்.

"சே... சே... பயமாவது ஒண்ணாவது...." என்றவளின் வலது புறம் இப்போது இலை தழைகள் சலசலக்கும் சத்தம் கேட்டது.

இரண்டாவது முறையில் உன்னிப்பாக கவனித்திருந்தவள், "ரெண்டு பேரும் இங்க கொஞ்சம் வாங்களேன், அந்த புதருக்குள்ள ஏதோ இருக்குற மாதிரி தோணுது..." என்றாள்.

அனழேந்தி, "அங்கு எதுவும் இல்லை பெண்ணே...." என்றான்.

யாளி, "இல்ல... நான் பாத்தேன். ஆனா என்ன இருக்குதுன்னு எனக்கு சரியா தெரியல...."

அனழேந்தி, "சரி நீ இங்கேயே இரு பெண்ணே, நான் அதன் அருகில் சென்று பார்த்து வருகிறேன்...." என்று அவள் சுட்டிக் காட்டிய புதிரினை நோக்கி நடக்க ஆரம்பித்தான். சில அடி தூரம் தான் அவன் நடந்து இருப்பான், புதிரினுள் இருந்து கணப்பொழுதில் அவனை நோக்கி பாய்ந்தது ஒரு ஆளுயர மிருகம்.
 

Advertisements

Latest updates

Top