மாந்த்ரீகன் - 18

#1
வானமகன் மழை எனும் பெயரில் விண்ணிலிருந்து இறங்கி வந்து, மண் மகளை மனமாற புணர்ந்து சென்றிருந்தான். கடந்த மூன்று நாட்களாக அவன் தழுவிச் சென்ற இடங்களிலெல்லாம் இன்று புத்துயிர் கண்டிருந்தது. வனமெல்லாம் வண்ண மலர்கூட்டம் மலர்ந்து வாசனை பரப்பிற்று... செம்மணல் தரையெல்லாம் மருதாணி வைத்தது போல் இன்னும் சிவந்து நாணிற்று... மரக்கிளையில் இலைகளுக்கிடையில் தலை உணர்த்தும் பறவைக் கூட்டங்கள் கீச்சு கீச்சென இன்னிசை எழுப்பிற்று...

கிராமத்தின் பொது ஆலமரத்தின் கீழ் கூடியிருந்த மக்கள் முன், அவர்களின் முதுமகள் 'சுரும்பார் குழலி' பாட்டி அமர்ந்திருந்தார். கொற்றவை திருவிழாவிற்கென நாள் குறிப்பதற்கும் அதன் பிறகு மாந்தன் யாளியின் திருமண நாள் குறிப்பதற்கும் அவர்கள் அனைவரும் அங்கே ஒன்றாக கூடி இருக்கின்றனர்.

முதுமகள் 'சுரும்பார் குழலி' பாட்டி தன் விழிகளை மூடி கொற்றவையின் அருள் கேட்டு காத்திருந்தார். நெடு நேர தவத்திற்கு பிறகு சடாரென கண் விழித்தவர், "இன்றிலிருந்து ஆறு வாரத்திற்கு பிறகு வரும் வெள்ளிக்கிழமையில், அன்னை அவளுக்கென விழா எடுத்துக்கொள்ள அனுமதி தந்திருக்கின்றாள். திருவிழா முடிந்த மூன்றாம் நாள் மாந்தனுக்கும் யாளிக்கும் விருப்பம்போல் மணம் செய்விக்கலாம்..." என்று உரக்க கத்தினார்.

அதைக்கேட்ட கிராம மக்கள் அனைவரும் சந்தோஷமாக, ஒருவருக்கொருவர் பேசிச் சிரித்து தத்தமது மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். அங்கே அறுவடை விழா முடிந்து விட்டதனால் கொற்றவை திருவிழா வரையில் மாந்தை குல மக்களுக்கு வேறு எந்த வேலையும் கிடையாது. வரப்போகும் ஆறு வாரங்களும் விதவிதமான விளையாட்டுக்களும் வழிபாட்டு முறைகளுமே நிகழ்ந்தேர இருக்கின்றது.

அவை முறையே வேனிற்விழா, பெருஞ்சோறு, நீர் விழா, கோடியர் விழா, வேட்டைவிழா, பூச்சொரிதல், வெறியாட்ட விழா... எனவே வரப்போகும் ஆறு வாரங்களும் மாந்த்ரீகபுரி நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக, பன்னிறம் வாய்ந்த வானவில்லென எழில் கோலம் கொண்டு காட்சியளிக்க இருக்கின்றது. வேறொரு வகையில் சொல்வதென்றால் மாந்தனும் யாளியும் மகிழ்ச்சியாகக் கழிக்க போகின்ற இறுதி ஆறு வாரங்கள் வர இருக்கின்றது.

முதல் விழா வேனிற்விழா, நிகழ்ந்து முடித்த வேனல் காலத்தினுக்கு நன்றி கூறி விழா எடுக்கும் வைபவம். ஐந்திணை நிலங்களில்(குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை) நான்கு திணை மக்கள் ஆரம்ப காலங்களில் வேனிற் விழாவை திருமாலுக்கும் இந்திரனுக்கும் எடுத்தனர், அதன் பின் ஒரு சில இடங்களில் வேறு தெய்வங்களுக்கும் வேனிற் விழா எடுக்க தொடங்கிட அவர்களின் வழக்கு முறை மாறி போயிற்று. ஆனால் முல்லை நில மக்கள் மாத்திரம் வேனில் விழாவினை ஆரம்பம் தொட்டு இறுதிவரையில் காமனுக்கு மட்டும் எடுக்கும் வழக்கம் கொண்டவர்களாக இருந்தனர்.

முதுமகள் உத்தரவு கிடைத்த மாத்திரத்திலேயே ஊரெல்லாம் மாவிலை தோரணமும் வேப்பிலை தோரணமும் சரசரக்க வேனில் விழா தொடங்கியது. நேற்று மணம் புரிந்த இளம் தம்பதிகள் முதல், வாழ்வின் கரை கண்ட வயதான தம்பதிகள் வரையில் வயது வேறுபாடின்றி அனைவரும் தத்தமது இணையோடு காடு, மலை என்று காலநேரம் பார்க்காமல் கலவி கொள்ளச் சென்று விடுவார்கள்.

வயல் வெளியில் இருக்கும் பரணிப் பந்தல்கள், சமவெளியற்ற மணற் பரப்புங்கள், அடர்ந்த மரங்களினால் சூழப்பட்டு இருள் திரை மூடியிருக்கும் காட்டு நிலப் பகுதிகள், ஊரைவிட்டு ஒதுங்கி இருக்கும் மலர்ச் சோலைகள், குளிர்ந்த மணலையுடைய ஆற்றங் கரைகள், மரம் தாழ்ந்து குடை செய்திருக்கும் மணல் படுக்கைகள், காலில் சலங்கை கட்டிக்கொண்டு சலசலத்தபடி ஓடும் நீர்த்துறைகள் என எங்கு நோக்கினும் தம்பதிகளே உலவிக் கொண்டிருந்தனர். சந்தனமும் அகில் துகளும் குழைத்து மார்பில் பூசிய ஆண்மகன் முன்னால் செல்ல, மது வழியும் மலர்களைச் சூடிய அவனது தர்ம பத்தினி தன்னவனது பாதச் சுவடை பற்றி அவன் பின்னால் சென்றாள்.

மணம் புரிய காத்திருக்கும் இளவயது பதுமைகளுக்கும், அவர்களை வண்டென மொய்க்கும் கட்டிளம் காளைகளுக்கும் மண நாள் வரையில் காத்திருப்பதைத் தவிர வேறு வழி கிடையாது. அந்த வரிசையில் முதலாவதாக நிற்கும் மாந்தனை அவ்வளவு எளிதில் கட்டுப்படுத்த முடியாது என்று மாந்தை குல மக்கள் அனைவருக்கும் தெரியும். இருந்தும் வயதில் மூத்தவர்களாய் பொறுப்போடு நடந்து கொள்ளும் பொருட்டு, எதையாவது சொல்லி அவனை அச்சுறுத்தி வைக்க வேண்டியது அவர்கள் கடமையாயிற்றே!...

மாந்தன் சொல் பேச்சு கேட்க மாட்டான் என தெரிந்துமே, 'இந்த வாரம் முழுவதும் யாளியின் திசை பக்கமே நீ போகக் கூடாது...' என்று வாய் வார்த்தையாய் உத்தரவிட்டு வைத்திருந்தனர். ஆனால் வாதத்தால் அவன் பிடிவாதத்தை மாற்ற இயலாதென, மாந்தனின் உயிர் நண்பனை விட்டால் வேறெவர் அறிவார்?

மற்றவர்களை போலவே நண்பனிடம் வாய் வார்த்தை கொண்டு பேசினால் நாவினியனுக்கு மதிப்பேது? சத்தமில்லாமல் யுத்தமில்லாமல் ஒரு சிறு செய்கை மூலம் மாந்தனையும் யாளியையும் தன் கட்டுக்குள் கொண்டு வந்து விட்டு, காதல் மனைவி அந்தனமல்லியோடு கானகம் சென்றுவிட்டான் அவன். அந்த சிறு செய்கை என்னவென்றால், இந்த வாரம் முழுவதும் குட்டி நேயனை யாளியின் பொறுப்பில் விட்டு விடுவது...

ஊருக்கும் உறவுக்கும் தெரியாமல் மாந்தன் நாவினியனது வீட்டிற்குள் திருட்டுத்தனமாய் புகுந்த நேரம், யாளி குட்டி நேயனோடு மல்லுக்கட்டிக் கொண்டிருந்தாள். ஒரு நிமிடம் அவள் அயர்ந்தாலும் அவன் வெளியே ஓடி விடுவதில் கில்லாடியாக இருந்தான். முதல் ஒரு மணி நேரத்திலேயே யாளி பத்து முறைக்கு மேல் அவனை விரட்டிப் பிடித்து ஓய்ந்துவிட்டாள்.

யாளி, "ஏன்டா என்ன இப்டி படுத்துற? உன்னால எனக்கு தின்னதெல்லாம் பசிச்சிடுச்சுடா... தயவு செஞ்சு உட்கார்ந்து விளையாடுவோம், வாடா நேயா.." என அவனோடு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கையில் மாந்தன் அவள் அருகில் வந்து நின்றான்.

திடீரென்று அத்தனை அருகில் அவனைக் கண்டதும், "ஆ...." என்று அலறியவளின் அல்லி இதழ்களை, தன் ஐந்து விரல்கள் கொண்டு அடைத்து வைத்தான் மாந்தன்.

அவன் விரல்களை விலக்கிய யாளி ரகசிய குரலில், "இங்க எதுக்கு வந்தீங்க? யாராவது பார்த்தா தப்பா நினைச்சுக்குவாங்க, முதல்ல இங்கிருந்து போங்க..."

"உன்னை காண விரும்பி, ஊரை ஏமாற்றி, ஒளிந்து மறைந்து இத்தனைதூரம் வந்திருக்கின்றேன். என் மனம் புரியாமல் உடனே வெளியேறச் சொல்கிறாயே பெண்ணே? பெருமழைபோல் உன்மேல் காதலை பொழிகிறேன் நான்... என்மேல் ஒரு துளி காதலாவது இருக்கின்றதா பார் உனக்கு?"

"இத கேட்குறதுக்குத்தான் இவ்வளவு தூரம் ஒளிஞ்சு மறைஞ்சு வந்தீங்களா?" என்று யாளி கேட்டு முடிக்கும் முன் குட்டி நேயன் வெளியே ஓடிவிட்டான்.

பதினோறாவது முறையாக அவனைப் பிடித்து வந்த யாளி, "எப்பா... எவ்ளோ சேட்டை பண்றான். பயபுள்ள உங்கள மாதிரியே பொசுக்கு பொசுக்குனு வெளியில ஓடிடுது... ஏன் மாந்தா, உன் பேர் வச்சதுக்கே இது இப்டி இருக்குதே, அப்போ உனக்கு பொறக்குறது எப்டி இருக்கும்? அத நான் எப்படி சமாளிக்கிறது?" என்றாள் தன் உடலை நிமிர்த்தி, முதுகுத் தண்டில் நெளிசல் எடுத்துக் கொண்டே...

மாந்தநேயன், "கவலை வேண்டாம் மகாராணி, நம் குழந்தையையும் நாம் நாவினியனிடம் கொடுத்து வளர்க்க சொல்லி விடுவோம்."

"ஐயோ வேணாம்.. எங்க அண்ணன் சின்ன வயசுல உங்கள சமாளிச்சாரு, இப்போ இந்த குட்டி நேயன சமாளிக்கிறாரு, இன்னுமொரு நேயன கொடுத்தா பாவம்பா அந்த மனுஷன், எவ்வளவுதான் தாங்குவாரு?"

"அதெல்லாம் தாங்குவான். இன்று அவன் உன்மேல் இரக்கமின்றி இவ்வளவு கொடுமையான வேலையை தந்திருக்கும் பொழுது, எதிர்காலத்தில் நாம் அவனை கொஞ்சம் பழிவாங்கினால் அது நம் பாவக்கணக்கில் சேராது..."

"அப்டியும் சொல்லலாமோ?!..." என்று சிந்திக்கும் நொடியில் குட்டி நேயன் மறுபடியும் வெளியே ஓட துவங்கிவிட்டான். அந்த புதுக்கால்களின் வேகத்திற்கு ஈடு கொடுத்தபடி ஓடிய மாந்த நேயன், அவன் தன் கையில் அகப்பட்டதும் ஆட்டுக்குட்டி போல தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு வந்தான்.

யாளி, "ஹப்பாடா புடிச்சாச்சா... ஏன்டா உனக்கு கால் வலிக்கவே வலிக்காதாடா?" என்றதும் தன் முத்துபோன்ற முன் பற்களை காட்டி சிரித்தது குழந்தை.

"என்ன கேட்டாலும் இப்படி சிரிச்சு சிரிச்சே ஏமாத்திடுறான், என்னால முடியல மாந்தா..."

மாந்தநேயன், "நான் ஒரு வழி சொல்லட்டுமா?"

"சொல்லுங்க இளவரசே..."

"வேண்டுமானால் வெளியே ஓடாதபடி இவனை கட்டிவைத்து விடட்டுமா?"

"சின்ன குழந்தை மாந்தா, எனக்கு கால் வலிச்சாலும் பரவாயில்லை, அவன கட்டி வைக்க வேணாம்."

"எனில் வாயில் கதவை தாளிட்டு விடட்டுமா?"

"நாம ரெண்டு பேரும் தனியா உள்ள இருந்துகிட்டு கதவ பூட்டக்கூடாது மாந்தா. யாராவது வந்து பார்த்தா தப்பா நினைச்சுக்குவாங்க, இவன அடக்கி வைக்கிறதுக்கு வேற எந்த வழியுமே இல்லையா?"

"ஏன் இல்லை, நிறைய வழி உள்ளது. அங்கிருக்கும் பெரிய தாமிர பானைக்குள் இவனை உட்கார வைத்து விடுவோமா யாளி?"

ஒரு நொடி விட்டத்தைப் பார்த்து யோசித்தவள் முடிவாய், "பாவம்தான், வேற வழியில்ல... கட்டி வைக்கிறதுக்கு பதிலா பானைக்குள்ள உட்கார வைக்கிறது பெட்டர் சாய்ஸ்... அப்படியே செஞ்சுடலாம்" என்றாள்.

வீட்டினுள் இருந்த ஒரு பெரிய தாமிர பானையை எடுத்து துடைத்து நடு வீட்டினில் வைத்தான் மாந்தன். தண்ணீரை விட்டு வெளியே வந்ததும் நிலை கொள்ளாமல் துள்ளும் மீன் போல, யாளியின் கைகளுக்குள் அடங்க மறுத்து ஆடிக்கொண்டே வந்த குட்டி நேயனை வெகு சிரமப்பட்டு இருவரும் பானைக்குள் இறக்கினர். அவனுக்கு துணையாக சில செவ்வாழை பழங்களையும், சில மரப்பாச்சி பொம்மைகளையும் சேர்த்து பானைக்குள் போட்டனர். குட்டி நேயன் என்ன நினைத்தானோ! அமைதியாய் உள்ளேயே அமர்ந்து விளையாட தொடங்கி விட்டான்.

யாளி, "சாதிச்சுட்டோம்ல..." என்று கயிற்றுக்கட்டிலில் ஆசுவாசமாய் அமர்ந்தாள்.
 
#2
"என் மருமகனால் என் மகாராணிக்கு எத்தனை துயரங்கள்? விரைவில் ஒரு மகளைப் பெற்று இவன் கொட்டத்தை நாம் அடக்க வேண்டும். அசதியாய் இருக்கிறதா யாளி? நான் வேண்டுமானால் பனையோலை விசிறி கொண்டு வந்து உனக்கு விசிறட்டுமா கண்ணே?" என்றபடியே அவளருகில் ஆசையாய் அமர்ந்தான் மாந்தன்.

யாளி, "வேணாம் மிஸ்டர் அனழேந்தி... ஏற்கனவே எனக்கு ஆண்டவன் ரெண்டு கை கொடுத்திருக்காரு... தேவைப்பட்டா எனக்கு நானே விசிறிக்குவேன், நீங்க அந்த கடைசியில போய் உக்காருங்க."

"வேனில்விழா நாளில், விரும்பியவளை அருகில் வைத்துக்கொண்டு, விலகி இருத்தல் போல ஆணுக்கு வேறேதும் சாபமில்லையடி பெண்ணே..."

"அதுக்குனு என்ன இடிச்சுக்கிட்டு வருவீங்களா? உங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தா, இந்த விழாவ உங்க பட்டியல்ல இருந்து தூக்கிடுங்க..."

"ஆங்... அப்படி செய்தால் அது மிகப்பெரிய தெய்வ அவமரியாதை ஆகிவிடும். விழாவை நீக்க எம் குலத்தலைவிக்கே அதிகாரம் கிடையாது தெரியுமா? முன்னாளில் பூம்புகாரில் வேனில் விழா எடுக்காமல் விட்ட காரணத்தால் தான் அந்த நகரமே கடல் கொந்தளிப்பில் அழிந்து போனதாம்... ஆகவே எந்த ராஜ்ஜியமும் பூம்புகார் போல அழியக்கூடாதென வருடம் தவறாமல் வேனில்விழா எடுத்துவிடுவர்..." என விளக்கம் கொடுத்துக் கொண்டே அவளை நெருங்கி இருந்தான்.

"நிஜமாவா சொல்றீங்க?..."

"ஆண்டவன் மீது ஆணை... வேனிற்விழா மிக மிக அவசியம்... அதை நாமும் சிறிது அனுபவித்து பார்க்கலாமா யாளி?"

"நாம அடுத்த வருஷம் கொண்டாடிக்கலாம், இப்போ கிளம்புங்க. நீங்க உள்ள இருக்கிறத யாராவது பார்த்தா அடிதான் விழும்..."

"என்னை நெருங்க எவனால் முடியும்?" என்று தற்பெருமை பேசிக்கொண்டு இருக்கையில் டமால் என்ற சத்தத்துடன் தாமிர பானை உருண்டு விழுந்தது. வலையில் இருந்து வெளியேறும் நண்டு போல உள்ளிருந்து நான்கு கால் பாய்ச்சலில் வெளியேறிய குட்டி நேயன், அடுத்த நொடியே வாசலைக் கடந்து ஓடத் துவங்கி இருந்தான்.

யாளி, "போய்ப்புடிங்க மாந்தா..." என்று பரபரத்தாள்.

மாந்தன், "என்னை இம்சிப்பதற்கென்றே நீயும் உன் அப்பனும் இந்த ஜென்மம் வாங்கி வந்திருக்கிறீர்களடா..." என்று புலம்பியபடி குட்டி நேயனை விரட்ட தொடங்கினான்.

குழந்தையோடு திரும்பி வந்த மாந்தநேயனை வாசலிலேயே வழிமறித்துக் கொண்ட யாளி, "நீங்க செஞ்ச உதவிக்கி ரொம்ப நன்றி மிஸ்டர் அனழேந்தி. மறுபடியும் உங்கள வீட்டுக்குள்ள விட்டா விசிறி விடறேன்னு விளையாட ஆரம்பிச்சிடுவீங்க. அதுனால நீங்க இப்டியே உங்க வீட்டுக்கு கிளம்பலாம்..." என்றாள்.

"ஹூம்... எனக்கு இந்த வருடம் கொடுத்து வைத்தது இவ்வளவுதான் போல... நான் செல்கிறேன். ஆனால் தாங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை மகாராணி. நான் எங்கிருந்தாலும் என் செவியில் உன் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்" என்று சொல்லிக்கொண்டே தன் திசையில் நடக்க துவங்கினான்.

குட்டி நேயனோடு போராட இனி தன்னால் இயலாது என்பதால், யாளி குழந்தைக்கு பூப்பந்தை தந்து உள்ளேயே விளையாட வைத்துவிட்டு வாயில் கதவினை பூட்டிவிட்டாள். கட்டிலில் அமர்ந்த யாளிக்கு ஏனோ தன்னருகில் அனழேந்தி அமர்ந்திருப்பதை போன்று பிரம்மை தோன்றிற்று.

அந்த கற்பனை உருவத்திடம் குழைவான குரலில், "நான் பேசறது உனக்கு கேக்குதா மாந்தா? நீ அடிக்கடி என்னத் தேடி இங்க வர்றது எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்குது தெரியுமா? ஆனா பாட்டியும் அண்ணனும் நம்ம மேல ரொம்ப பாசம் வச்சிருக்காங்க. எக்காரணம் கொண்டும் அவங்க நம்பிக்கைய நாம பொய்யாக்க கூடாது மாந்தா... நீ பக்கத்துல இருந்தா எனக்கு ஏனோ கிறுக்குத்தனமான ஆசை நிறையா வருது. நீ ஆம்பள, மனசுல நினைக்கிறத யோசிக்காம சட்டுனு சொல்லிடுற. நான் பொண்ணுல, எனக்கு உன்ன கட்டிபுடிச்சுக்க ஆசையா இருக்குனு என்னால எப்டி சொல்ல முடியும்? உன் கன்னம் கிள்ளி விளையாட ஆசையா இருக்குனு என்னால எப்டி சொல்ல முடியும்? உன் கைய புடிச்சுக்கிட்டே இந்த காடு முழுக்க சுத்தி வர ஆசையா இருக்குதுன்னு என்னால எப்படி சொல்ல முடியும்? நேரம் காலம் பாக்காம என் மடியில உன்ன படுக்க வச்சுக்க ஆசையா இருக்குனு என்னால எப்டி சொல்ல முடியும்? வேற யார் கண்லயும் படாம உன்ன அள்ளி எடுத்து என் கருவறைக்குள்ள ஒளிச்சு வைக்க ஆசையா இருக்குனு என்னால எப்டி சொல்ல முடியும்?" என்று முணங்கி முடிக்கையில் குடிலின் கதவு தட்டப்பட்டது.

யாளி, 'ஐயயோ... மாந்தன் எல்லாத்தையும் கேட்டுட்டானா? போச்சு... போச்சு... வசம்மா மாட்டிக்கிட்டேனே...' என்று புலம்பியபடி கதவை திறக்க அங்கே அந்தனமல்லி நின்றிருந்தான்.

யாளி, "நீங்களா..."

"ஏன் யாளி? வேறு யாராவது வருவதாய் சொன்னார்களா?"

"இல்லையே... இல்ல... இந்த நேரத்துல வேற யாரும் வரமாட்டாங்களே.. அதான் யாரோன்னு நெனச்சிட்டேன்..." என்று உளறிக் கொட்டினாள்.

அந்தனமல்லி, "குழந்தையை உன்னால் சமாளிக்க முடிகின்றதா யாளி? அவன் மிகவும் கஷ்டப்படுத்திவிட்டானா?"

"அடிக்கடி வெளியில ஓடிர்றான், மத்தபடி நேயன் ரொம்ப நல்ல பையன். கஷ்டம்னு நினைக்காம நானும் இப்போ இருந்து ட்ரெய்னிங் எடுத்தாத்தான எனக்கு பியூச்சர்ல ஈசியா இருக்கும்..."

"என்ன சொல்கிறாய்?... எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே?"

"அது ஒண்ணுமில்ல சும்மா சொன்னேன்... அதுசரி, நீயும் அண்ணனும் சாயங்காலம் வருவோம்னு சொன்னீங்க, ஏன் இப்போவே வந்துட்டீங்க? குட்டி நேயன பத்தி கவலைப் பட்டு தான் நீ சீக்கிரமே வந்துட்டியா மல்லி?"

"இல்லை யாளி... திடீரென மாந்தன் அண்ணன் எங்களைத் தேடி வந்தார். அவரோடு தான் இப்பொழுது உன் அண்ணனும் சென்றிருக்கிறார். இருவரும் இணைந்து பேச தொடங்கினால் அவர்களுக்கு நேரம் போவதே தெரியாது, ஆகவே நான் குடிலுக்கு திரும்பிவிட்டேன். ஆங்... சொல்ல மறந்துவிட்டேன். மாந்தன் அண்ணா உன் ஆசைகள் அத்தனையையும் விரைவில் நிறைவேற்றி வைப்பாராம், தற்சமயம் குட்டி நேயனை வைத்து ஆசைகளை தீர்த்துக் கொள்ள சொன்னார். அப்படி என்ன ஆசையம்மா உனக்கு? சொன்னால் நாங்களே நிறைவேற்றி வைப்போமில்லையா? யாளி... யாளி... பதில் கூறிடு..."

எங்கே பதில் கூறுவது, அவள்தான் அப்போதே உறைந்து போய்விட்டாளே... அடுத்த வந்த வேனிற்விழா நாட்களை அந்த கரிகாலன் காலத்து காதலனும், கலிகாலத்துக் காதலியும், ஊடலும் கூடலுமென நகர்த்தினர்.

இரண்டாம் வாரம் பெருஞ்சோறுக்கான விழா துவங்கியது. பெருஞ்சோறு திருவிழா பெயருக்கு ஏற்றார் போன்று பெரிய உணவுத் திருவிழா. மாந்தை குலத்தினர் சாதாரண நாட்களிலேயே உணவினை அவித்தல், வறுத்தல், சுடுதல், வற்றலாக்குதல், எண்ணெயில் இட்டுப் பொரித்தல், ஊறவைத்தல் போன்ற எண்ணிலடங்கா முறைகளைப் பின்பற்றி சமைக்கும் வழக்கம் கொண்டவர்கள். இப்பொழுது பெருஞ்சோறு திருவிழா என்பதால் வீட்டுக்கு வீடு மிடாமிடாவாய் உணவைச் சமைத்து அக்கம் பக்கத்தினருக்கு பகிர்ந்து வழங்கி மகிழ்ந்தனர்.

அதிலும் உணவினை அவர்கள் உட்கொள்ளும் விதங்களே பலதரப்பட்டவை. அவை முறையே: அருந்துதல் (மிகச் சிறிய அளவே உட்கொள்ளல்), உண்ணல் (பசிதீர உட்கொள்ளல்), உறிஞ்சல் (வாயைக் குவித்துக்கொண்டு நீரியற் பண்டத்தை ஈர்த்து உட்கொள்ளல், குடித்தல் (நீரியல் உணவான கஞ்சி போன்றதை சிறிது சிறிதாக பசி நீங்க உட்கொள்ளல்), தின்றல் (தின்பண்டங்களை உட்கொள்ளல்), துய்த்தல் (சுவைத்து மகிழ்ந்து உட்கொள்ளுதல்), நக்கல் (நாக்கினால் துழாவி உட்கொள்ளுதல்), நுங்கல் (முழுவதையும் ஓர் வாயில் ஈர்த்துறிஞ்சி உட்கொள்ளுதல்), பருகல் (நீரியற் பண்டத்தை சிறுகக் குடிப்பது), மாந்தல் (பெருவேட்கையுடன் மடமடவென்று உட்கொள்ளுதல்), மெல்லல் (கடிய பண்டத்தைப் பல்லால் கடித்துத் துகைத்து உட்கொள்ளுதல்), விழுங்கல் (பல்லுக்கும் நாக்குக்கும் இடையே தொண்டை வழி உட்கொள்ளுதல்).

உணவு சமைக்கப்படும் தன்மைக்கு ஏற்ப அவற்றை குல தெய்வம் கொற்றவைக்கு, முன்னோர்களாகிய காக்கைக்கு, அக்கம்பக்கத்தில் வாழும் உறவினர்களுக்கு என்று படைத்து மகிழ்ந்தனர். கடுகு தாளித்து செய்த உணவை காக்கைக்கு படைத்தனர். தேவி கொற்றவைக்கோ அவளுக்கு மிகவும் விருப்பமான அவரை, துவரை, எள்ளுருண்டை, இறைச்சி முதலியன படைக்கப்பட்டன. நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தின்றல் வகை தின்பண்டங்கள் அதிகளவு பகிர்ந்தளிக்கப்பட்டது.

ஒரு வீட்டில் பொன்னை நறுக்கினார்ப் போன்ற நுண்ணிய அளவுடைய அரிசியை, வெள்ளாட்டு இறைச்சியுடன் கூட்டி சமைத்தனர் எனில், அடுத்த வீட்டில் தடித்த நெல் சோற்றை பெட்டைக்கோழி பொரியலுடன் உண்டாக்கினர். வீடு தேடி வந்த விருந்தினருக்கு நெய் விட்டு சமைத்த கொழுப்பு நிறைந்த ஊனையும், மூங்கில் அரிசிச் சோற்றையும் முக்கிய உணவாய் வழங்கினர். அதனோடு பலாக்கொட்டை, மா, புளிநீர், மோர் போன்றவற்றில் செய்த பொரியல் வகைகளையும் படைத்தனர்.

சிறுவர் சிறுமிகளுக்கென தனியாக திணை மாவும், நெய் பெய்து சமைத்த சோற்றையும், நண்டுக்கண் போன்ற தினையரிசிச் சோற்றில் பால் ஊற்றி அதை நன்கு அடித்து கலக்கி பால் சாதமும் செய்து தந்தனர். அது போக வீட்டுக்கு வீடு சுட்ட வட்ட அப்பத்தை பாலில் ஊறவைத்து தந்தனர். காரகல் என்னும் கருமையான வடையைச் சட்டியில் திரியிழையாகச் சுற்றி வட்டம் போல சுட்டு சிறுவர்களுக்கு தந்தார்கள்.

வாலிபர்களோ பதத்தோடு சுட்டுச் சமைத்த துருவைக் கறியும் சோறும் கூடிய உணவை விரும்பி உண்டனர். அருகம்புல்லை அதிகமாய் மேய்ந்த செம்மறியாட்டுக்கு துருவை என்னும் பெயர். பராரை எனப்படும் அதன் பருத்த கால்தொடையை , நீர் சேர்த்து வேகவைத்து சூப் போன்று செய்தனர். அந்த திரவத்தை காழ் எனப்படும் வைரம் பாய்ந்த கட்டையில் செய்த மரக் கிண்ணத்தில் ஊற்றி பருகினர்.

துருவாட்டங்கறியில் செய்த உணவு வகைகள் உடலுக்கு அதிக ஆற்றலை கொடுக்கும், ஆகையால் இளைஞர்கள் அதிகமாய் துருவையையே உண்டனர். இத்தனை அரும்பெரும் உணவுவகைகள் அம்மக்களின் முக்கிய விருந்தாளியான யாளிக்கு முப்பொழுதும் படைக்கப்பட்டதால், மறுக்க முடியாமல் உண்டு களித்து ஒரே வாரத்தில் ஒரு சுற்று பெருத்திருந்தாள்.
 
#3
அந்த கொழுப்பை கரைப்பதற்கென்றே மூன்றாவது வாரம் நீர்விழா துவங்கிற்று. ஆற்றில் பாய்ந்து வரும் நீரானது மலையின் முகட்டு பகுதியிலுள்ள புன்னையின் மலர்களை சுமந்தபடி தன் பயணத்தை துவங்கும். அது வழிந்து செல்லும் ஆற்றங்கரை பகுதியிலுள்ள வேங்கையின் பூக்களையும், அலரிப் பூக்களையும், உதிர்ந்த தோன்றிப் பூக்களையும், ஒள்ளிய நீலப் பூக்களையும் சுமந்து அருவியை அடையும். அருவிக்கு சற்று முன் மூங்கில்கள் நெருக்கமாக வளர்ந்துள்ள சோலைப் புறங்களின் காந்தள் மலர்களை தழுவி, அதன்பின் அருவியாய் அது வழிகையில் அது அத்தனை அருமையான மணம் கொண்டிருக்கும். அந்த அருவியின் நுரைகள் நிறையும் பகுதியில், இனிய மணம் கமழும் சந்தனக் குழம்பினை குழைத்து பூசி நீராடி விளையாடும் வைபவமே நீர் விழா....

நீர் விழாவின் போது தினமும் காலையில், கிராமம் முழுவதும் கேட்கும்படியாக பறை ஒலிக்கப்படும், அந்த பறையின் பின்னால் ஊர்வலம் போல மக்கள் தத்தமது உடைகளோடும் உணவு பொட்டலங்களோடும் அருவிக்குச் சென்று விடுவார்கள். அன்று மாலை ஆதவன் மேற்கு மலைக்குத் திரும்பும் வரையில் அவர்கள் அங்கேயே நீரில் விளையாடிக்கொண்டு இருப்பார்கள். ஆண்கள் பரிசல் போன்ற மிதவைகளைச் செய்து அவற்றில் ஏறி சவாரி செய்வதும், பெண்கள் நீரில் நீச்சல் அடித்து விளையாடுவதுமென அந்த வாரம் முழுவதும் அவர்களுக்கு ஆற்றங்கரையிலேயே கழியும்.

நான்காவது வாரம் கோடியர் விழா, அதாவது நடன விழா. இரவில் நிறை நிலா வெளிச்சத்தில் ஆண்களும் பெண்களும் ராஜ நாகம் போல் பின்னிப்பிணைந்து கால் பிறழாது ஆடும் காட்சியை காண்பதற்கு கண் கோடி வேண்டும். முழவு எனப்படும் ஒரு வகை தோல் கருவியை வாசிப்பதில் மாந்தை குலமக்கள் கைதேர்ந்தவர்கள். அதனையடுத்து மூங்கிலில் தீக்கடைக்கோலால் தீ உண்டாக்கி அம்மூங்கிலில் துளைபோட்டு குழல் ஊதும் வழக்கமும் அவர்களிடம் அதிகமாய் இருந்தது. குழலிசையில் வல்லவனான மாந்தனை, நிறையபேர் கெஞ்சி கேட்டும் பார்த்தும் அவன் ஏனோ குழல் இசைக்கவும் நடனம் புரியவும் மறுத்துவிட்டான்.

ஐந்தாம் வாரம் வேட்டை விழா துவங்கியதும், அதுவரை நாவினியனாலும் அந்தன மல்லியாலும் பொத்தி பொத்தி பாதுகாக்கப்பட்ட யாளி கட்டவிழ்த்து விடப்பட்டாள். ஏனெனில் வேட்டையாடுவதற்காக ஆண்கள் கானகம் சென்றால் திரும்பி வர குறைந்தது இரண்டு மூன்று தினங்கள் ஆகும். அந்த நாட்களில் அவர்கள் வனத்திலேயே தங்கிக் கொள்வார்கள்.

மாந்தை மக்கள் வலிகூட்டுண்ணும் குடியைச் சேர்ந்தவர்கள். உடல் வலிமையைக் கொண்டு உணவைப் பெறுவதற்கு வலிகூட்டுண்ணல் என்று பெயர். அந்த இளங் காளையர்கள் வேட்டை விழாவிற்கு சுற்றத்தாரோடு கூட்டமாகச் செல்வார்கள். வலிமை மிக்க வில்லும் வேலுமே அவர்களின் ஆயுதங்கள். வேட்டையில் யாருக்கு மிகப் பெரிய மிருகம் கிடைக்கிறதோ அவரே இந்த ஆண்டிற்கான அதிர்ஷ்டமான நபர் என்பது அவர்களின் நம்பிக்கை.

அவர்கள் பயன்படுத்தும் வில்லானது ஒரு மர வில் வகையைச் சேர்ந்தது. அவர்களின் அம்பானது இலக்கு அம்பு எனப்படும், இவ்வகை அம்புகள் முனையில் எவ்வித உலோகங்களும் இன்றி எளிய அம்பு முனைகளையே கொண்டிருக்கும். அதன் முனையை வேட்டையாடுவதற்கு வசதியாக பற்முனை வகையில் செய்து கொள்வார்கள். பற்முனை என்றால் குறுக்கு நெடுக்காக துருத்தி கொண்டிருக்கும் பற்கள் உடைய முனை கொண்ட அம்பு என்று பொருள்.

இவ்வகை அம்புகள் மிருகத்தின் தசைகளை ஊடுருவிய பின், அவ்வளவு எளிதில் வெளிவராது. மிருகம் தன் வாயால் பிடுங்கி எடுக்க முயன்றால் அதன் தசையை கிழித்து மேலும் சேதத்தையே அதனுக்கு உண்டாக்கிடும். வேட்டை திருவிழாவினுக்கு இவ்வகை முனைகள் கொண்ட அம்புகளே அதிகமாய் பயன் படுத்தபடும். அனைவரும் வில் அம்புகளை கையில் ஏந்தியிருக்க, மாந்தன் மட்டும் தன் கையில் வேலை எடுத்திருந்தான்.

வேட்டை விழாவின் முதல் நாள் அதிகாலைப் பொழுதிலே, மாந்தை குலத்தின் பெரும்பாலான ஆண்கள் வேட்டை நாய்களோடு கானகம் சென்றுவிட்டனர். இரண்டு நாட்களும் தாங்கள் தங்குவதற்கென பாதுகாப்பான ஓர் இடத்தை தயார் செய்தார்கள். அவ்விடத்தை சுற்றி விஷ பூச்சிகள் வராதபடி பச்சை இலைகளை தூவினர். தங்களின் இருப்பிடத்தைச் சுற்றி சிறிய வகை விலங்குகள் சிக்கும்படியாக ஆங்காங்கே வலை கட்டி வைத்து விட்டார்கள். அதன்பிறகு காட்டுப்பன்றி, மான் என வேட்டையாட கானகத்தின் உள் பக்கம் தனித்தனியே சென்றனர்.

வேட்டை முடிந்து மாலையில் அனைவரும் இருப்பிடம் திரும்பிய பிறகும் மாந்தன் வரவில்லை... 'மணநாள் குறிக்கப்பட்டவன், தனது எதிர்கால மணவாட்டியின் இருப்பிடத்தை தவிர, வேறு எங்கு சென்றிருப்பான்?...' எனும் நினைப்போடு அனைவரும் படுத்து உறங்க ஆரம்பித்தனர்.

அன்று நடு சாமத்தில் நாவினியன் கனவில் எதுவோ பயங்கரமாய்த் தோன்றிட, "மாந்தா..." என்று அலறியடித்தபடி சடாரென எழுந்து அமர்ந்தான்.
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top