மாந்த்ரீகன் - 20

#1
நிலவில்லா இரவின் குளிர் காற்று எவரும் அறியாமல் பூக்களின் நறுமணத்தை கடத்திச் செல்வது போல, நாவினியனின் கனவு அவனது உறக்கத்தினை கடத்திச் சென்றுவிட்டது. தன் நண்பனது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அந்தக் கொடூர கனவினை கண்டதன் தாக்கத்தால் நாவினியனது இமைகள் இரண்டும் இணைய மறுத்துவிட்டன.

'மாந்தன் எப்போது வருவான்?...' என்று அவன் வரும் வழியை எதிர் நோக்கியபடி விழி திறந்து படுத்திருந்தான் அவன். மிகச்சரியாக நான்காம் ஜாமப் பொழுதினில் மாந்தன் அங்கே திரும்பி வந்தான். மற்றவர்கள் அனைவரும் வேட்டையாடிய அசதியில் அயர்ந்து துயில்வதாய் நினைத்துக் கொண்டு, ஓசை எழுப்பாமல் உள்ளே வந்து நாவினியனுக்கு அருகில் படுத்து கொண்டான்.

அது நேரம் வரையில் அமைதியாக இருந்த நாவினியன், மாந்தன் படுத்தவுடன் அவனை இறுக்கி பிடித்து கொண்டு, "வாருங்கள் இளவரசே... தங்களுக்காகத் தான் நான் நெடுநேரமாய் உறங்காமல் காத்திருக்கின்றேன். தங்களின் நகர்வலம் நல்லபடியாக முடிந்ததா? ஆங்... உங்களுக்கான வரவேற்பினை அளிக்க மறந்து விட்டேனே..." என ஒரு உருட்டை கட்டையை எடுத்து மாந்தன் முன்னால் ஆட்டினான்...

மாந்தன் அதிர்ச்சியோடு, "நீ இன்னமும் உறங்க வில்லையா இனியா..." என்றான்.

"வேட்டைக்குச் சென்ற எனதருமை எருமை நண்பன் திரும்பாத பொழுது, எனக்கு எப்படி உறக்கம் வரும்? வந்ததும் சிறப்பாக கவனிக்க வேண்டும் இல்லையா?" என்று கட்டையினாலே காலில் ஓரடி அடித்தான்.

"நான் இங்குதானடா இருந்தேன், நீ சரியாக கவனிக்காமல் இருந்துவிட்டு என்னை எருமை என்பதா?..."

"இங்கு என்றால் எங்கே? மரத்தின்மேலா, இல்லை மண்ணிற்கு கீழா? எங்கிருந்தாய் என்று சொல்லிவிடு பார்க்கலாம்..."

இனியனிடம் வசமாக மாட்டிக் கொண்டதை உணர்ந்த மாந்தன், "வேண்டாமடா நான் உன் உயிர் நண்பன்...." என்று தப்பிக்கும் வழியை யோசிக்கலானான்.

அவனுக்கு அந்த வாய்ப்பைத் தராமல், "அதனால்தான் உயிரை எடுத்துக் கொள்ளப் போகின்றேன், சொல் மாந்தா... இத்தனை நேரம் எங்கு சென்றாய்?..." என்று மீண்டும் உருட்டு கட்டையை உயரமாய்த் தூக்க, மாந்தன் அதற்குமேல் நொடிப்பொழுதும் தாமதிக்காமல் நான்கு கால் பாய்ச்சலில் ஓடத் துவங்கினான்.

உறக்கம் கலைந்தெழுந்த சிலர் இவர்களின் கூத்தைப்பார்த்து வாய் விட்டு சிரிக்கக்கண்ட மாந்தன் ஓடிக்கொண்டே, "இனியா... அனைவரும் நம்மைக்கண்டு எள்ளி நகையாடுகிறார்கள் பார். எதுவாயிருந்தாலும் அந்தப் பக்கம் போய் அமர்ந்து பேசித் தீர்த்துக் கொள்ளலாம், வா நண்பா..." என்று அன்புக் கோரிக்கை விடுத்தான்.

நாவினியனக்கும் தற்சமயம் அவனோடு தன் உள்ளுணர்வு காட்டிய உணர்வுகள் பற்றி பேச வேண்டி இருந்ததால் முரண்டு செய்யாமல் உடன் சென்றான்.

இருவரும் கூட்டத்தை விட்டு சற்று தொலைவு வந்ததும் மாந்தன் குறும்பான குரலில், "அதாவது இனியா, நேற்று எனக்கு வேட்டையாட மிகவும் தாமதமாகி விட்டது. வெளிச்சம் இல்லா இரவினில் குருதி கொட்டும் மிருகத்தை சுமந்துகொண்டு, நெடுந்தொலைவு பயணிக்க யோசனையாக இருந்தது. ஆகவேதான் நேற்று வேட்டையாடிய இடத்திலேயே நான் உண்டு உறங்கி விட்டேன். இதற்கு ஏன் இத்தனைக் கோபமடா?..."

"ஆஹான்!.... தாங்கள் எந்த மிருகத்தை வேட்டையாடினார்கள் இளவரசே? வேட்டை விழாவின் விதிமுறைப்படி மிருகத்தின் பல், கொம்பு குறைந்தபட்சம் நகம் என்று எதையாவது கொண்டு வந்திருக்கிறீர்களா?"

"அடடா?! உண்ட களிப்பில் அதை மறந்து விட்டேனே..."

"அப்படியா? சரி, தங்களின் கரங்களை நீட்டுங்கள், நான் மிருகத்தின் வாடையை வைத்து கண்டு கொள்கின்றேன்...."

"வேறு எந்த மிருகமும் வாடை பிடித்து, என்னை பின் தொடர்ந்து வந்து விட கூடாதென்று, நான் அப்போதே கைகளை நன்றாக கழுவி விட்டேனே நண்பா..."

"எனில் எனக்கு வேறு உபாயம் இல்லை, தங்களின் வயிற்றைக் கிழித்து பார்த்துவிட வேண்டியதுதான். எனக்கு வயிற்றைக் கிழிக்கும் முறையை என் நண்பன் இள வயதிலேயே செய்து காண்பித்து இருக்கின்றான். அக்கலையினை இப்பொழுது நான் முறையாக பயிலும் நேரம் நெருங்கிவிட்டது, அஞ்சாமல் அருகில் வாருங்கள் இளவரசே..." என்று நெருங்கி கைகலப்பில் ஈடுபட, மாந்தனும் அவனுக்கு பதில் கொடுக்க ஆரம்பித்தான். இருவரும் சில நிமிடங்கள் சிறு குழந்தைகள் போல மண்ணில் கட்டிப் புரண்டு உருண்டார்கள்.

இருவருக்கும் சமமான அடிகள் கிடைத்தபிறகு மாந்தனை விட்டு விலகிய நாவினியன் மூச்சு வாங்க, "எங்கு சென்றாய் என்று வினவினால், ஒரு வார்த்தை உண்மை சொல்வதை விடுத்து ஒரு கோடி பொய்களைச் சொல்கின்றாய்? எவரிடமிருந்து வந்து ஒட்டியது இப்பழக்கம்?..." என்றான்.

"எவரிடமிருந்து வந்தென்று உண்மையைச் சொன்னால் அதற்கும் சேர்த்து இரண்டடி போடுவாயே. இப்போது நான் என்ன செய்ய இனியா?"

"யாளியின் பெயரால் பேச்சை மாற்றாதே மாந்தா, நான் கடும் கோபத்தில் இருக்கின்றேன்..." என்று மீண்டும் மல்யுத்தம் செய்ய முன்வந்தான்.

"ஏன் இவ்வளவு கோபமடா உனக்கு?... வேண்டாம் இனியா... சற்று பொறு... நான் சொல்வதைக்கேள்..."

"எது சொல்வதானாலும் அரை நொடிக்குள் சொல்லிவிடு, அதற்கு மேல் என் பொறுமையை என்னால் கட்டுப்படுத்த இயலாது..."

"நான் பச்சைமலை செல்வதாய் இருக்கின்றேன் இனியா..."

நாவினியனுக்கு அடுத்த குலத் தலைவனாகும் வாய்ப்பு இருப்பதனால் அவனுக்கு மாந்தை குலத்தின் பாரம்பரிய முறைகளையும், பரம்பரை ரகசியங்களையும் ஆரம்பம் தொட்டே பயிற்றுவித்து வந்திருந்தனர். ஆதலால் பச்சைமலை சிவன் பற்றிய ரகசியமும் அவனுக்கு அத்துப்படி.

நாவினியன், "ஏன் மாந்தா இந்த திடீர் முடிவு? நீயும் யாளியும் மணம் முடித்து நம் கிராமத்திலேயே தானே இருக்க போகின்றீர்கள். இனி எதற்காக ஆத்ம பலனும், கருந்துளையும் உனக்கு தேவை படப் போகின்றது?"

"அப்படித்தான் பாட்டி ஊர் மக்கள் அனைவரிடமும் தற்சமயம் சொல்லி வைத்திருக்கின்றார். ஆனால் பாட்டியின் முடிவு, என்னையும் யாளியையும் இங்கிருந்து அவளின் உலகத்திற்கு அனுப்பி வைப்பதே..."

நாவினியன் சற்று முன்பு தனக்கு தோன்றிய உள்ளுணர்வின் தாக்கத்தால், 'இதுதான் ஒருவேளை என் கனவில் தோன்றிய ஆபத்தா?...' என்று மனம் குழம்ப அமைதியாக இருந்தான். மாந்தனோ தாங்கள் இருவரும் மீண்டும் பிரியப்போவதால், அவன் வருந்தி மௌனமாய் இருப்பதாக நினைத்துக் கொண்டான்.

தன் நண்பனின் மனதைத் தேற்றும் விதமாய், "நானும் முதலில் இம் முடிவினை ஏற்றுக் கொள்ளவில்லை, ஆனால் பாட்டி என்னை வற்புறுத்துகின்றார். தன் மகளுக்கு நிகழ்ந்த கொடூரமான மரணம் பாட்டியை மிகவும் பாதித்திருக்கின்றது. எக்காரணம் கொண்டும் அந்நிலை யாளிக்கு வரக்கூடாது என்று அவர் மிகவும் உறுதியாக இருக்கின்றார். 'யாளியை மணம் புரியும் எண்ணம் இருந்தால் மாற்றுப் பாதையில் செல்லவும் தயாராகிக்கொள். அவளுக்கு மகாராணியாக நடந்து கொள்வதற்கான பயிற்சி கொடுப்பதை விடுத்து, நீ எதிர்காலத்தில் வாழும் பயிற்சியை மேற் கொள்' என உத்தரவிட்டு விட்டார்."

"......"

"என்னை மன்னித்து விடு நண்பா... இதில் நான் மட்டும் சம்பந்தப்பட்டிருந்தால் என் உயிருக்காக அஞ்சி ஒதுங்கியிருக்க மாட்டேன், நிச்சயமாக பாட்டியின் இம்முடிவை ஏற்க மறுத்து தட்டிக்கழித்து இருப்பேன். ஆனால் இப்போது என்னோடு உன் தங்கையும் சம்பந்தப்பட்டு இருக்கின்றாள். நான் பாலகனாக இருந்த பொழுதே என்னை கொல்ல பல முறை ஆள் அனுப்பியதாம் அந்த அதிகார வர்க்கம்."

"நானும் என் தாயின் மூலமாக அவற்றை கேள்விப்பட்டிருக்கின்றேன் மாந்தா..."

"ஏதோ ஒரு காரணத்திற்காக அவர்களுக்கு என் உயிர் தேவை, முன்பைப்போல் எதிர்காலத்தில் ஏதாவது ஒரு காரணம் காட்டி என்னை மீண்டும் அழைத்துச் செல்ல நிச்சயம் அவர்கள் வரக்கூடும். என்னை பிரிந்து ஒரு நாளிலேயே யாளி எவ்வளவு துவண்டு போய் விட்டாள் தெரியுமா? என் விதிப்பயன், காட்டு வாழ்க்கையையும் நாட்டு வாழ்க்கையையும் நான் கலந்து வாழ்கின்றேன். ஆனால் யாளி நானின்றி என் செய்வாள்? ஒன்று, நான் வருவேன் என்ற நம்பிக்கையோடு அவள் தன் வாழ்நாளெல்லாம் இங்கே தனிமையில் காத்திருக்க வேண்டும். இல்லையெனில் என்னை விரும்பிய ஒரே காரணத்திற்காக அந்த மரண வாயிலில் போய் நிற்க வேண்டும். அவள் விஷயத்தில் எனக்கு இவ்விரண்டுமே செய்ய மனம் வரவில்லை நண்பா..."

"உண்மைதான், நீ அருகில் இருந்து அக்கறையாய் பார்த்துக் கொண்டாலுமே, நாட்டை ஆளும் மகாராணியின் பொறுப்பில் அப்பேதைப் பெண்ணால் நெடுநாள் இருக்கவியலாது. நீ அருகில் இல்லாத சமயத்தில் ஏதேனும் இக்கட்டு நேர்ந்தால் தன்னைக் காத்துக் கொள்ள அவளுக்கு மாந்திரீக பலனும் கிடையாது, அவர்கள் செய்யும் ராஜதந்திரமும் புரியாது..."

மாந்தன், "நான் நமது குலத் தலைவனாக பொறுப்பேற்றதும் அவ்வரசாட்சியின் தொடர்பை விட்டு விலகிக் கொள்ளலாம் எனும் எண்ணத்தில் இருந்தேன். ஆனால் பாட்டி அதுவுமே எனக்கு ஆபத்தென்று அஞ்சுகிறார், முடிந்த மட்டில் விரைவாக என்னை இங்கிருந்து அனுப்புவதிலேயே அவர் குறியாக இருக்கின்றார். தற்சமயம் நமது குலத்தினர் கொண்டிருக்கும் ஆத்ம சக்தி, இருவர் பயணிக்குமளவு கருந்துளை உருவாக்குவதற்கு போதுமானதாய் இல்லை. ஆதலால் பச்சை மலைக்கு சென்று நம் முன்னோர்களின் ஆத்ம சக்தியினை நான் அடைய வேண்டும்."

"எனக்கு நிதர்சனம் புரிகின்றது, ஆனாலும் மனம் எதையோ நினைத்து தவிக்கின்றது மாந்தா. எதற்கும் நானும் உன்னோடு பச்சை மலை வருகின்றேன்."

"நிச்சயம் நண்பா... வேட்டை விழா முடிந்ததும் நாம் குலத் தலைவியிடம் இது பற்றி ஆலோசிக்கலாம். அதற்கு முன்னால் உன்னால் எனக்கொரு உதவி தேவை படுகின்றது."

"இதற்குத்தான் என்னை தனியாக தள்ளிக் கொண்டு வந்தாயா நீ?..."

"உன் தங்கையை போலவே நீயும் மிக புத்திசாலியாய் இருக்கின்றாய் நண்பா."

"பாராட்டில் பாகு காய்ச்சியது போதும், என்ன உதவி வேண்டும் என்று தெளிவாகச் சொல்."

"என் மகாராணியாருக்கு முயல் வேண்டுமாம், நாம் வேட்டைவிழா முடிந்து வரும்போது கட்டாயம் முயலோடு தான் வர வேண்டுமென்று என்னை என்னவள் பணித்திருக்கின்றாள். நாம் நமது இருப்பிடத்தைச் சுற்றி அமைத்த வலையில் ஒரு சில முயல்கள் சிக்கி இருக்கும். அதை வேறு யாரும் எடுத்து செல்லும் முன்னால் நாம் இருவரும் எடுத்துக் கொள்ள வேண்டும்."

"நான் வருங்கால குலத் தலைவன் பொறுப்பில் இருப்பவனடா, என்னைப்போய் திருட்டு வேலைக்கு உன்னுடன் வரச் சொல்லி அழைக்கின்றாயே?..."

"எனில் நீ கொற்றவையின் அருள்பெற்ற யாளியின் விருப்பத்தை நிறைவேற்ற போவதில்லையா? அப்படியானால் குலதெய்வத்தின் சாபத்தை வாங்க போகின்றாயா நண்பா?"

"உன்னோடு கூட்டு சேர்ந்ததற்கு இன்னும் எதை எல்லாம் அனுபவிக்க போகின்றேனோ? வா... திருடித் தந்து தொலைகின்றேன்."
 
#2
அதிகாலைக் கதிர்கள் மலைமுகட்டின் மீது, அலைவரிசை போல் சீராக பாயத் தொடங்கிய காலை நேரம். பாட்டியின் குடிலினுள் யாளி நேற்று இரவு மாந்தன் சொல்லிச் சென்ற தகவல்களை நினைத்து மனம் வாடி அமர்ந்திருந்தாள். இன்னும் சில தினங்களில் இங்கிருந்து செல்ல வேண்டும் என்ற எண்ணமே அவளை மிகவும் வருத்திப் பார்த்தது.

யாளிக்கு அவளின் தந்தையை பிரிந்த பொழுது எவ்வளவு வலித்ததோ, அதே அளவிற்கு இப்பொழுது பாட்டியையும் இந்த கிராமத்தையும் பிரிவதற்கு மனம் வலித்தது. ஆனால் அவளின் மனம் கொண்ட மன்னவனுக்கு ஆபத்தென்று அவனே கூறும்போது, இத்துன்பத்தை ஏற்றுக் கொள்வதைத் தவிர அவளுக்கு வேறு வழியில்லையே. எனவே அவனுக்காக தன் ஆசைகளை விலக்கிக்கொள்ளும் முடிவிற்கு வந்திருந்தாள். ஆனால் அந்த முடிவை அவளின் இளமனது தாங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது.

அந்த நேரத்தில் அவளை பார்க்க குட்டி நேயனோடு வந்திருந்த அந்தனமல்லி தன் விழிகளாலேயே பாட்டியிடம், 'இவளின் சோகத்திற்கு என்ன காரணம்?' என்று வினவினாள்.

பாட்டியும் பதிலுக்கு, 'நீயே போய் கேள்...' என்று சைகை செய்தார். குளக்கரையின் அருகினில் குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருந்த யாளியிடம் வந்தாள் அந்தனமல்லி...

"யாளி... என்ன ஆனதம்மா? ஏன் வாடிய மலர் போல உன் வதனத்தை வைத்திருக்கின்றாய்?"

"அப்டியெல்லாம் ஒன்னும் இல்ல மல்லி..."

"ஏன் என்னிடம் பொய்யுரைக்க முயல்கிறாய்? உன் முகத்தினை பார்த்தாலே உன் அகம்படும் பாடு தெளிவாகத் தெரிகின்றதே... நானும் திருமணமான புதிதில் என்னவரின் பிரிவை தாங்காமல் மனம் வாடியவள்தான். உன் நிலை எனக்குப் புரியாதா?"

"புரியாது மல்லி... என்னோட நிலமை உனக்கு புரியாது."

"சரி புரியாமலே போகட்டும், அதற்காக நீ முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தால் எல்லாம் அதுவாக சரியாகிவிடுமா? அடுத்தடுத்து செய்ய வேண்டியதை நீ தானே யோசிக்க வேண்டும். வா... எழுந்திரு நாம் இருவரும் காலார கொற்றவை கோவில் வரை நடந்துவிட்டு வரலாம்..."

"வேண்டாம் மல்லி...."

"மணநாள் நெருங்கும் நேரத்தில் மணப்பெண் இப்படி முகம் வாடலாகாது. என்னோடு வா யாளி..." என்று வற்புறுத்தி அவளை அழைத்துச் சென்றாள்.

அப்போதிலிருந்து மாலை வரையில் அந்தன மல்லி யாளியை தனித்திருக்க விடவே இல்லை. ஏதாவது ஒரு வேலையை செய்ய கொடுத்துக் கொண்டே இருந்தாள். அவளின் மைந்தன் குட்டி நேயனோ யாளியின் சிந்தனையை வேறுபக்கம் திசை திருப்பக் கூட முடியாத அளவு குறும்புகள் செய்து அவள் மனதை வசியம் செய்திட்டான். பாட்டியும் யாளிக்கு பிடித்த உணவு வகைகளை அடிக்கடி செய்து தந்து அவளை மனம் நோகாமல் பார்த்துக் கொண்டார்.

மெல்லிய தூறலோடு இருள் வண்ணம் உலகில் படர துவங்கிய அந்திமாலை நேரத்தில், தூரத்தில் எங்கோ பறை அடிக்கும் சத்தம் கேட்டது. அதைக் கேட்ட மாத்திரத்திலேயே கடந்த இரண்டு தினங்களாக கணவனை காணாமல் தவித்தபடி, தத்தமது வீடுகளில் அடைந்திருந்த பெண்கள் அனைவரும், ஆனந்தக் கண்ணீரோடு வெளி வரத் துவங்கினர்.

அந்தனமல்லி, "வந்தாயிற்று தேவி தங்களின் ஆசைக்காதலர். தாங்கள் முதலில் குலத் தலைவியோடு கொற்றவை கோவிலுக்கு செல்லுங்கள். நான் என் இல்லத்திற்கு சென்று என்னவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகளை செய்யதுவிட்டு கோவிலுக்கு வந்து விடுகின்றேன். பூசை முடியும் வரையில் மட்டுமே, தங்களுக்கு குலத் தலைவியின் பேரனை காண அனுமதி. அதன் பிறகு தாமதிக்காமல் நமது குடிலுக்கு தாங்கள் வந்து விட வேண்டும்" என்று தனது குடில் இருக்கும் திசைக்கு விரைந்து செல்லத் துவங்கினாள்.

யாளியும் மாந்தனைக்காணும் ஆர்வத்தோடு பாட்டியுடன் கொற்றவை கோவிலுக்கு வந்து நின்றாள். வேட்டை விழாவிற்கு சென்றிருந்த ஆடவர்கள் அத்தனைபேரும் தூரத்தில் கூட்டமாக வந்து கொண்டிருந்தனர். பல ஆண்டுகள் கழித்து இரண்டாம் நாளே வேட்டை விழா முடிந்து விட்டதைக்கண்டு, கோவிலில் கூடியிருந்த ஊர் மக்கள் அனைவரும் ஆரவாரமாக அதை கொண்டாடத் துவங்கினர்.

இரண்டாம் நாள் ஆகையால் ஒரு சிலர் தாங்கள் வேட்டையாடிய விலங்குகளை கையோடு எடுத்து வந்திருந்தனர். இந்த வருடத்தின் அதிர்ஷ்டம் மிக்க நபராக நாவினியன் தேர்வாகி இருந்தான். அதை அனைவருக்கும் அறிவுறுத்தும் விதமாக, அஞ்சன மலர்ச்சரம் ஒன்று அவன் தோள் மீது கூத்தாடி கொண்டிருந்தது. அவன் வேட்டையாடிய மிகப்பெரிய காட்டு எருதினை, ஒரு மரக்கிளையில் கட்டி இருவர் சுமந்து கொண்டு வந்திருந்தனர். ஏனையவர்களும் புலி, மான், காட்டுப்பன்றி என்று ஏதாவது ஒரு விலங்கினையோ அல்லது அவற்றின் கொம்புகளையோ கையில் எடுத்து வந்திருந்தனர்.

மாந்தன் மட்டும் விதிவிலக்காக தனது கையில் ஒரு பனையோலை கூடையினை சுமந்து வந்திருந்தான். கூட்டம் கொற்றவை கோவிலை நெருங்கியதும் வெற்றியாளன் முதுமகளின் காலில் நெடுஞ்சான் கிடையாய் விழுந்து வணங்கினான். அவனது தலையினில் செவ்வண்ண மலர்களைத்தூவி வாழ்த்திய முதுமகள், வேட்டைவிழாவின் அடுத்த கொண்டாட்டத்தை ஆரம்பிக்கலாம் என்று அனுமதி அளித்தார்.

அன்றைய நாள் முழுவதும் வேட்டையாடிக் கொண்டு வந்த மிருகங்களின் புலாலும், தோப்பி எனப்படும் மதுவும் மட்டுமே ஆண்களுக்கு உணவு. தோப்பி எனப்படுவது தினைச் சோற்றுக் கஞ்சியை புளிக்கச் செய்து உருவாக்கப்படும் கள். இதைத்தவிர நறவு எனப்படும் பழச்சாறு கொண்டு தயாரிக்கப்பட்ட கள்ளும் மாந்தை குல மக்களால் அதிகம் பருகப்படுவது. தோப்பி கள்ளினை வேட்டைவிழாவின் போதும், நறவு கள்ளினை வெறியாட்ட விழாவின்போதும் அவர்கள் பருகுவர்...

வேட்டை விழாவில் வெற்றி பெற்றவனுக்கு மாத்திரம் நீலம் எனப்படும் தனிப்பட்ட வகையான கள் வழங்கப்படும். நீலப் பைங்குடம் எனும் பானையில் மட்டுமே உருவாக்கப்படுவதால் இவ்வகை கள் நீலம் எனும் பெயர் பெற்றது. வென்றவன் ஒரு பானைக் கள்ளையும் ஒரே நேரத்தில் பருகிடும் படி சுவை நிறைந்தது அக்கள்.

கொற்றவையினை வணங்கி முடித்ததும், பெண்கள் கொல்லப்பட்ட மிருகங்களை தத்தமது வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர். அவர்கள் மிருகத்தின் தோலை நீக்கி, உலர்ந்த மூங்கிலில் நெருப்பினை உண்டாக்கி புலாலை சமைக்கும் வேலையில் இறங்கினர். ஆண்களோ வீதிக்கு வீதி வைக்கப்பட்டிருந்த மதுப் பானைகளை முற்றுகையிட துவங்கினர். அது நேரம் வரை குலத் தலைவியின் பின்னால் நின்று, ஓர விழிப் பார்வை வீசிக்கொண்டிருந்த யாளியிடம் மாந்தன் வந்தான்.

பேரனின் மனமறிந்த பாட்டி, "கூடையில் கொண்டுவரும் அளவிற்கு எதை வேட்டையாடினாய் மாந்தா?" என்றார் சிரித்துக் கொண்டே...

"உங்களின் பேத்திக்காக, முயல்களை கொண்டு வந்திருக்கின்றேன் பாட்டி..."

"சரிதான், அம்மாடி யாளி. உனக்கான பரிசினை நீயே முன்வந்து பெற்றுக் கொள்ளம்மா..." என்று யாளியை முன்நிறுத்திவிட்டு, கொற்றவையை கவனிக்கும் முதுமகளுக்கு உதவச் சென்றார் பாட்டி.

அத்தனை பேர் கூடியிருக்கும் இடத்தில் அச்சமின்றி அவன் வெளிப்படுத்திய காதலால், அணு அணுவாய் வெட்கப்பூ பூக்க புல்லரித்து நின்றிருந்தாள் யாளி.

அது தெரிந்தே அவளை சீண்டும் விதமாக மாந்தன் அவளை நெருங்கி வந்து, "இவற்றை வாங்கிக் கொள்ள விருப்பம் இல்லையா என் மகாராணிக்கு?" என்றான்.

ஏதோ ரகசியம் சொல்வது போல மென்மையான குரலில் யாளி, "ஏன் இவ்ளோ பக்கத்துல வந்து நிக்கிற? எல்லாரும் பாக்குறாங்க, தள்ளிப்போ..." என்றாள் .

"எல்லோரும் அவரவர் வேலையைத்தான் பார்க்கின்றார்கள், நம்மை எவரும் கவனிக்கவில்லை அன்பே!..." என்றான் அவனும் ரகசியமாய்.

"எனக்கு வெக்கம் வெக்கமா வருது, நீ போ... நான் அப்புறமா பாட்டிட்ட வந்து முயலெல்லாம் வாங்கிக்குறேன்."

"அதுநேரம் வரை இவை தாங்காது, இப்போதே எடுத்துக்கொள்ளடி...."

"இப்போ வேணாம்..."

"அடம்பிடிக்கலாகாது அன்பே..." என்று அவளின் வலது கரத்தை தன் இடது கரத்தால் பற்றிக்கொண்டான்.

"விடு... விடு... பாட்டி பாக்குறாங்க..."

"பார்த்தால் என்ன?..."

"ஐயோ விடு மாந்தா..."

"நான் தருவதை நீ வாங்கிடும் வரையில் நான் உனை விடப்போவது இல்லை...."

அவன் வார்த்தைகளில் இரு பொருள் தோன்ற, அச்சமும் வெட்கமும் அவள் கன்னத்தை கோவைப்பழமென பழுப்பேற செய்திற்று. மெதுவாய் நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்தாள், அவனது விழிகளில் காதலெனும் கடல் பெறுக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது.

யாளி தன் குளிர் குரலால், "குடு...." என்றதும் அவன் கூடையை அவள் கரங்களுக்குள் திணித்தான்.

ஆசையாய் அதைவாங்கி திறந்து பார்த்தாள் யாளி. அதுவரை அவள் முகம் கொண்டிருந்த புன்னகையும் வெட்கமும் தூள்தூளாக சிதறி போக, கன்னச்சிவப்பு மறைந்து, கண்கள் சிவக்கும் அளவு கோபம் வந்து குடியேறி கொண்டது.

யாளி, "என்னதிது?..." என்றாள்.

"முயல்... நீ தானே முயல் வேண்டுமென்றாய்... அதனால்தான் இருபது முயல்களை வேட்டையாடி பிடித்து, பக்குவமாய்ச் சுட்டு சமைத்து கொண்டு வந்திருக்கின்றேன். எங்கே, வாயைத்திற, நான் உனக்கு ஊட்டி விடுகின்றேன்."

"நான் உயிரோட இருக்குற முயல கொண்டு வரச் சொன்னேன். உனக்கு எவ்ளோ நெஞ்சழுத்தம் இருந்தா நீ முயல புடிச்சு, சாகடிச்சு, சமைச்சு, வாயத்திற ஊட்டுறேன்னு எங்கிட்டேயே சொல்லுவ?..."

"உயிரோடிருக்கும் முயலா? வேட்டை விழாவினில் எவரும் உயிரோடு மிருகத்தை பிடித்து கொண்டு வந்து பழக்கம் இல்லையடி பெண்ணே..."

"அதெப்டி எனக்கு தெரியும்?... நீ முயல கொண்டு வரலைனா கூட நான் சும்மா இருந்திருப்பேன். இப்டி கொன்னுட்டு கொண்டு வந்திருக்கியேடா... உன்ன, இன்னிக்கி கொல்லாம விடமாட்டேன்...." என்று உக்கிரகாளியாய் உருமாறத் துவங்கினாள்.
 
#3
மாந்தன், "வேண்டுமானால் நான் மீண்டும் உனக்கு முயலை பிடித்து தருகின்றேன். கோபப்படாதே யாளி, அருகில் இருப்பவர்கள் அனைவரும் நம்மையே பார்க்கின்றனர்..."

யாளி, "எல்லோரும் அவரவர் வேலையைத்தான் பார்க்கின்றார்கள், நம்மை எவரும் கவனிக்கவில்லை அன்பே!..." என்றாள் சற்று முன்பு அவன் சொன்ன அதே தோரணையில்.

மாந்தன் ஓரடி பின்னால் நகர அவள் ஈரடி முன்னால் வந்தாள். அடுத்த நொடியே அவளிடம் இருந்து தன் இன்னுயிரை காத்துக்கொள்ள மாந்தன் ஓடத் துவங்கினான். அவனிடமிருந்து தப்பி ஓடிய முயல்களின் வேகத்தை விட அதிகமான வேகத்தில் இருந்தன அவனது கால்கள் இரண்டும்.

அவன் வேண்டுமென்றே அவளை நெருங்கி வரும்படி வேகம் குறைப்பதும், நெருங்கிய பிறகு வேகமெடுப்பதும் என்று போக்கு காட்டி ஓடினான். அவர்கள் கடந்து சென்ற வழியில் மதுக் குவளைகளையும் சுட்ட புலாலையும் கையில் ஏந்தியபடி, தங்களின் வீரதீர சாகசங்களை மற்றவர்களுக்கு விவரித்து மகிழ்ந்திருந்தனர் மாந்தை குல மக்கள். அவர்கள் அத்தனை பேரும் ஓடிவரும் மாந்தனை கிண்டல் செய்தும், யாளியிடம் சிக்கிக்கொள்ள வேண்டுமென அவனது வழிமறித்தும் விளையாடினரே, தவிர ஒருவரும் அவனுக்கு உதவி செய்ய முன்வரவில்லை.

இருவரும் ஊர் முழுவதும் சுற்றி ஓடி விளையாட வழியில் பாதி போதையில் மதுக்கோப்பையோடு நடந்து வந்து கொண்டிருந்த நாவினியன், "நான் அப்போதே சொன்னேன் இவனிடம். யாளி முயல்கறியை இதுவரையில் உண்ணவில்லையே, எதற்கும் அவளிடம் கேட்டுவிட்டு சமைப்போம் என்று... கேட்டானா? இப்போது அவதிப்படுகின்றான். படட்டும்... படட்டும்... நன்றாக அவதிப்படட்டும்... நான் மட்டும் படுகின்றேன்..."

நாவினியன் கையில் இருந்த மது கோப்பையை லாவகமாக பிடுங்கிக்கொண்டு அவனை இடித்துத்தள்ளிய மாந்தன், "உளறாமல் ஓதுங்கிச்செல்லடா..." என்று மதுவினை குடித்தபடியே அடுத்த வீதிக்குள் புகுந்தான்.

"உன்ன இன்னிக்கு உயிரோட விடமாட்டேன்டா...." என்று விரட்டினாள் யாளி.

இருவரின் விளையாட்டையும் கண்டு இறைவனுக்கும் நகைப்பு தோன்றிற்றோ? வானம் இடியுடன் கூடிய பெருமழையை புவியை நோக்கி அனுப்பி வைத்தது. மழை தூவும் வீதிகளில் மதுக்குவளையோடு உற்சாகம் கரைபுரள ஓடி ஆடிக்கொண்டிருந்தனர் யாளியும் மாந்தனும். கொட்டும் மழையில் மண் தரை அவளை ஓட முடியாதபடி வழுக்கச் செய்ய, மேல் மூச்சுவாங்க ஓரிடத்தில் நின்றாள் யாளி. அவள் நின்றதும் அவனும் தப்பிச் செல்வதை நிறுத்தி விட்டு அவளருகில் வந்தான்.

பத்தடி தொலைவில் இருப்பவர்கள் கூட தெரியாத அளவிற்கு அடித்து பொழியும் மழையில் அவள் சொட்டச்சொட்ட நனைந்திருந்தாள், அவளின் ஆடைகளைப் போலவே அவளின் ஆசைக்காதலனது ஆண்மையும் அவளோடு ஒட்டிக்கொண்டது.

யாளி, "இங்க என்ன லுக்கு? கண்ணத்தோண்டி காக்காய்க்கு போட்ருவேன்..."

மாந்தன், "பரவாயில்லை, ஏனென்றால் என் கண்கள் எதற்காக பிறப்பெடுத்தனவோ அதில் பாதி பலனை அடைந்து விட்டது... மீதி பலனுக்கு இவ்விரு கரங்களும் போதும்..."

"அடிபிச்சிடுவேன், மரியாதையா மந்திரம் போட்டு எனக்கு காய்ஞ்ச டிரஸ் வர வச்சுக்கொடு..."

"மந்திரமா... எனக்கு அத்தனையும் மறந்து விட்டதே! எப்பொழுதும் செவ்வாழையை விரும்பி உண்டதால் உன் தேகமும் செவ்வாழை தண்டாய் மாறிவிட்டதோ. ஒன்றே ஒன்றுதான் என் நினைவில் உள்ளது, உன் உடற் கட்டிற்கு ஏற்ற உடையாக என் கரங்களை மாற்றவா கண்ணே?"

"உன் தலைக்கு ஏற்ற உருட்டுக் கட்டையாக என் கையை மாற்றவா கண்ணா?"

"அது ஏனடி அண்ணனும் தங்கையும் எப்பொழுதும் உருட்டுக்கட்டையிலேயே குறியாய் இருக்கிறீர்கள்? இன்று காலை உன் அண்ணன் அடித்த அடியில் என் உடலெல்லாம் விம்மிக் வீங்கி கிடக்கின்றது தெரியுமா?..."

"எங்க?..."

"இங்கே..." என்று தன் மார்போடு அவளை சேர்த்து அணைத்துக் கொண்டான்.

இளவரசன் இளவளவனது திருமணத்தை ஒட்டி விழாக்கோலம் பூண்டிருந்த வீரேந்திரபுரியின் அரண்மனைக்குள் ரகசிய வழி வழியே நுழைந்தான் ஒற்றன் ஒருவன். அரசருக்கு சொந்தமான எழுநிலை மாடத்தில், ஏழாவது அறையினுள் ரகசியக் கதவு வழியே வந்து சேர்ந்த அவன் ஓர் இடத்தில் மண்டியிட்டான்.

அவனுக்காக அங்கே காத்திருந்த உருவம் அதிகார தோரணையில், "இன்று என்ன தகவல் கொண்டு வந்திருக்கின்றாய் ஒற்றா?" என்றது.

ஒற்றன், "இரும்பொறை தேசத்தின் இளவரசர் மாந்திரீகபுரியினை நோக்கி பயணம் மேற்கொண்டு இருக்கின்றார். அவர் சென்ற காரியம் வெற்றி அடைந்தால், தாங்கள் எதிர்பார்த்த படியே இன்னும் சில தினங்களில் அனழேந்தி வந்துவிடுவார்..." என்றான்.
 

Sponsored

Latest Episodes

Advertisements

Latest updates

Top