மாந்த்ரீகன் - 7

#1
கீழ்வானம் இருள தொடங்கிய அந்தி மாலை நேரம் வீரேந்திர புரியின் முக்கிய நகர வீதியினில் தப்பட்டைகாரன் தன் பறையினை ஊரெல்லாம் கேட்க உரக்க ஒலிக்கும்படி தன் பலமெல்லாம் திரட்டி அடிக்க ஆரம்பித்தான். பறையின் ஒலி கேட்டதும் செந்நிற மண்ணுடைய முல்லை நிலத்தினை போலவே செவ்வண்ண தேகம் கொண்ட பெண்டிர் தங்களது கருங் கூந்தலை அள்ளி முடித்துக்கொண்டு அஞ்சனம் என்னும் மலரினை தன் தலையில் சூடி, வளையொலி குலுங்க, விளக்கேற்ற பட்ட தங்களது வீட்டு மாடத்தினை கடந்து வீதியில் வந்து நின்றனர். அது நேரம் வரையில் வீதியோரங்களில் இருக்கும் ஊர் மன்றத்தில் அளவளாவிக் கொண்டிருந்த வேல் சுமந்த ஆடவர்களும் பறையொலி கேட்டதும் மன்றத்தை விட்டு இறங்கி வந்து நின்றனர்.

தப்பட்டை காரன் தன் கடை விழியில் கரை கடந்து வழியும் கண்ணீரை பொருட்படுத்தாமல் பெரும் குரலெடுத்து, "இதனால் சகலமானவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால், அரச உத்தரவை மீறிய குற்றத்திற்காக வீரேந்திர பூரியின் முடி இளவரசர் அனழேந்தி தன் இளவரச பதவியினை இன்றோடு இழக்கின்றார். இளைய இளவரசராகிய இளவளவனுக்கு அடுத்த முகூர்த்தத்திலேயே இரும்பொறை தேசத்து இளவரசியோடு திருமணமும் அதற்கடுத்த முகூர்த்தத்தில் இளவரச முடியும் சூட்டப்பெறும்....." என்றவன் மீண்டும் தன் பறையினை உரக்க அடிக்க ஆரம்பித்தான். அச் செய்தியை கேட்ட நொடி முதலே, தப்பட்டைக்காரனது வலுவான அடியின் வீரியம் தாங்காமல் அதிரும் அப்பறையினை போல, அங்கிருந்தவர்கள் அத்தனை பேர் உள்ளமும் ஒருசேர அதிர தொடங்கிற்று....

அடுத்த இரண்டு நாழிகைக்குள் ஊர் மக்கள் அத்தனை பேரும் அரண்மனை வாயிலின் முன்பு அழுது அரற்றியபடி ஒன்று கூட துவங்கினார்கள். அவர்கள் கூச்சல் கேட்ட அரண்மனைக் காவலர்கள் உடனடியாக அத்தகவலை கோவேந்தன் இயல்பரசனுக்கும் மகாராணி அருள்விழி தேவியாருக்கும் தெரிவித்தனர். அடுத்த கணமே அரண்மனை மேல் மாடத்தினில் அகன்ற தோளும், இரும்பு வேலும், இடையில் வாளுமென கம்பீர தோரணையில் வந்து நின்றார் இயல்பரசன். அவரின் பின்னாலேயே கரு நிற மை கலைந்து, செவ்வண்ணம் பூசிய விழிகளோடு மகாராணி அருள் விழியும் வந்து நின்றார்.

"உம் மூதாதையரை போலவே நீதி நெறி வழுவாது அரசாட்சி புரியும் மன்னவா, சற்று முன் தப்பட்ட காரன் உரைத்த கொடுஞ்செய்தி கேட்டு எங்களது சித்தம் கலங்கி விட்டிருக்கின்றது. இந்த க்ஷணம் வரையில் அவன் உரைத்ததை உண்மை என்று எங்களால் நம்ப முடியவில்லை ஐயா, என்ன நடந்தது அரசே? உம்மக்களது மனதிற்கினிய அந்த இளம் மன்னவனை எந்த உத்தரவை மீறிய குற்றத்திற்காக பதவி விலக்கினீர்கள்?" என்று கூட்டத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது....

இயல்பரசன் மகாராஜா சற்றும் தலை தாழ்த்தாமல் நிமிர்ந்த வாக்கிலேயே கூடிநின்ற மக்களைப் பார்த்து, "காரணமின்றி இங்கே எக்காரியமும் நிகழவில்லை, உங்கள் அரசனும் நீதி நெறி பிறளவில்லை, அவரவர் வினைக்கான பலனை அவரவர் அனுபவிக்கிறார்..." என்றார் கர்ஜனையாக.

கூட்டத்தினர், "அப்படியெனில் முடி இளவரசனது தாழ் பிடித்து தங்களின் உத்தரவை ஏற்கச் சொல்லி நாங்கள் மன்றாடுகின்றோம், தயை கூர்ந்து அவரை பதவி இழக்க சொல்லாதீர்..." என்றனர்.

"ஏன்? இளைய இளவரசனுக்கு முடிசூட்ட கூடாதா? அவன் அரசாள்வதில் என்ன குறை வருமென நினைக்கிறீர்கள்?"

அரசனின் கோபம் கண்டு அரண்ட கூட்டத்தினர், "நாங்கள் அப்படி கூறவில்லை மன்னவா, இரண்டு இளவரசர்களும் எங்களுக்கு இரு கண்களை போன்றவர்கள், அதில் ஒன்று குறைந்தாலும் எங்களால் உயிர்வலி பொறுக்க முடியாது. சடுதியில் உருவான முடி இளவரசனது அண்மை இன்மை எங்களை பிதற்ற வைக்கின்றது. தாயே அருள்விழி தேவி.... தாங்களாவது இம்முடிவை மாற்றச் சொல்லி மன்னரிடம் எங்களுக்காக ஒரு மொழி கூறக் கூடாதா?" என்றதும் மகாராணியார் தன் தலையை கவிழ்ந்து கொண்டார்.

கூட்டத்தனர், "தங்களின் கையறு நிலை புரிகின்றது மகாராணி, போனது போகட்டும். நாங்கள் முடி இளவரசரோடு சிறிது நேரம் அளவளாவவேனும் அனுமதி தாருங்களேன்...."

மகாராஜா, "அதற்கான காலம் கடந்துவிட்டது. ஏனெனில் அனழேந்தி இப்போது இங்கே இல்லை, அவன் இந்த ராஜ்யத்தை விட்டு வெளியேறிச்சென்று இரு தினங்களாகிவிட்டது... காலம் தாழ்த்தி தகவலை உங்களுக்கு தெரிவிக்க சொன்னதே அவன் தான்...." என்றொரு பேரிடியை மக்களின் தலை மேல் இறக்கிவிட்டு, மகாராணி அருள் விழியை பார்த்து இளக்காரமாய் ஒரு சிரிப்பு சிரித்தபடி அரண்மனைக்குள் சென்றுவிட்டார்.

அரண்மனையில் இச் சம்பவம் நிகழும் அதே நேரத்தில் அனழேந்தி ராஜ்ஜியத்தின் எல்லையை விட்டு பல காத தூரம் தள்ளி பயணித்துக் கொண்டிருந்தான். மழை காணா மண் போல மக்கள் தான் அவனைப் பிரிந்து வாடினரே தவிர, அவன் இத்தனை வருடங்களில் இல்லாத அளவிற்கு அகமும் முகமும் துளிர்க்க ஆடிப்பாடி மகிழ்ந்து கொண்டிருந்தான்.

அகன்று விரிந்து கிடந்த கானகப் பாதையில் கட்டவிழ்த்து விடப்பட்ட கன்றுக்குட்டி என சுற்றி திரிந்தான்.... மலைக் குன்றுகளின் உச்சிக்கு ஏறும் மலை ஆடுகளோடு போட்டி போட்டுக்கொண்டு தானும் மலை ஏறினான்.... கானகத்து பொய்கையில் நீந்தும் முதலைகளுக்கு இணையாக நீந்தி கரையேறினான்... ஆலம் விழுதுகளிலெல்லாம் ஆசனமிட்டு அமர்ந்திருந்த அனுமந்த புத்திரர்களிடம் அனுமதி கேட்காமல் அவனும் ஆனந்தமாய் ஆடிக்களித்தான்.... அருவியினை கண்டாலோ அதன் ஆழம் பார்த்துவிட்டே அடுத்த அடி நகர்ந்தான்.... இத்தனை செய்தும் இடைப் பகுதியில் இறுக்கி கட்டியிருந்த மரப்பாவையினை மட்டும் அவன் அவிழ்க்கவே இல்லை.

நான்கு நாள் பயணத்திற்குப் பிறகு அவன் சேர வேண்டிய மலையின் உச்சி அவன் கண்ணுக்கு புலப்பட மனதிற்குள், "வந்துவிட்டேன்.... என் இடத்திற்கு நிரந்தரமாக தங்கிட வந்துவிட்டேன்.... பொய்யாய் பேசி, பொய்யாய் வாழ்ந்து, பொய்யாய் சிரித்து புத்தி பேதலித்தனை போல வாழ்ந்த அந்நகரினை விட்டு மெய்யான மகிழ்ச்சி ததும்பும் என் வாழ்விடத்தினுக்கு வந்துவிட்டேன்.... இன்னும் சில நாழிகைகள் மட்டும்தான், என்னை விட்டு விலகி நின்றிருந்த என் இன்னுயிர் என் உடலினுள் புகுந்து கொள்ளும்...." என்று தனக்குத் தானே எடுத்துரைத்தபடி எட்டி நடையினை போட்டான். அடுத்த சில நாழிகைகளில் பலவித பறவைகள் மேய்ந்து கொண்டிருக்கும் அவன் ஊருக்கு சொந்தமான, விளை வயல் நிலங்களின் வரத்து ஆரம்பித்துவிட்டது.

அந்தி மாலை நேரம் அந்த சிறு கிராமத்தையே மொத்தமாய் சூழ்ந்திருந்த வரப்பு எனப்படும் முள்ளாலான இடுப்பளவு வேலியினை திறந்து கொண்டு அனழேந்தி ஊருக்குள் நுழைந்தான். அவ்வரப்புகள் யானைத் தந்தங்கள் கொண்டு கட்டப்பட்ட நெருப்பு பந்தங்களை, அணைந்த நிலையில் தன் தலை மீது தாங்கி இருந்தது. அதைத் கடந்து உள்ளே வந்தவனது கண்களில் முதலில் பட்டது, அவனுக்கு மிகவும் பிடித்தமான ஆநிரைகளின் கூட்டம். ஊரின் எல்லைப் பகுதிகளில் மாட்டுத் தொழுவங்களையும், அதனையடுத்து தானியங்களைச் சேமித்து வைக்கும் உயரமான குதிர்களையும் அமைப்பது அவர்களின் வழக்கம். அவற்றின் குதிர்முற்றம் எனப்படும் உட்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பந்தல் கால்கள் அனைத்தும் யானையின் கால்களைப் போலப் பெரியது. அந்தக் கால்கள் முழுவதும் இயற்கையான குளுமையின் காரணமாய் பசுந்தழைகள் வளர்ந்து படர்ந்திருந்தன. அப்பந்தலை சுற்றிலும் கொன்றை பூக்களும், கோடல் பூக்களும் வரைமுறை இன்றி மலர்ந்து கிடந்தன. அந்த புதர்களுக்கு பின்னால் மதிய நேர மேய்ச்சலை முடிந்து ஓய்வெடுக்கும் புள்ளி மான்களின் கூட்டம் ஒன்று தென்பட்டது.

அனழேந்தி புதரில் இருந்து தன் கை நிறைய பூக்களை பறித்து மான்கள் கூட்டத்தின் மேல் தூவினான். திடீரென உருவான சலசலப்பில் காரணமாய் சில பெண் மான்கள் மருண்டு ஓட, ஆண் மான்கள் அனைத்தும் தன் நீண்ட கொம்பை காட்டி அவனை முறைத்துக்கொண்டு நின்றன. "முறைக்காதே மானே... நானும் உங்களினத்தை சேர்ந்தவன் தான், உன் அன்னை தந்தையரை என் கைகளால் தூக்கி வளர்த்தவன்..." என்று சொல்லிக்கொண்டே தனக்கு அருகில் இருந்த ஒரு மரத்தில் இருந்து சில கிளைகளை முறித்து மான் கூட்டத்தின் முன்னால் போட்டான். பெரிய மான்கள் இன்னமும் தன் முகபாவனையை மாற்றாமல் இருக்க சிறிய மான்கள் பயமின்றி முன்னால் வந்து கிளைகளை மேயத் தொடங்கின.

தன் கைகளில் இன்னும் மணம் வீசிக்கொண்டிருக்கும் மலரின் வாசனை ஆழ் மனம் வரை நுகர்ந்து பார்த்துவிட்டு, ஊரின் உள்ளே வந்த அனழேந்தியின் கண்களில் ஆங்காங்கே நேற்றிரவு வேட்டையாடிய முயல்களை சுட்டி சமைத்ததற்கான அறிகுறிகளும், கழுவி சுவற்றில் சாற்றி வைக்கப்பட்டிருந்த ஈட்டிகளும் தெரிந்தன. அதனை கடந்ததும் அவ்வூரின் நடு நாயகத்தில் இருந்த பொது மன்றத்தில் மற்போர் நிகழ்ந்து கொண்டிருந்தனை கண்டான் அவன். அக்கிராமத்தின் ஆண்கள் ஓய்வு நேரங்களில் தன் உடல் வலிமையைக் காட்டி மற்போர் புரிந்து விளையாடுவார்கள். அதில் சலிப்பு தோன்றும்போது கொழுத்து பெருத்த காளைகளுக்கு தின்ன தினை கொடுத்து, தூண்டி விட்டுத் தம் தோள் வலிமையைக் காட்டி அடக்கி விளையாடுவார்கள். காளையோடு விளையாடும்போது ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தும் விதமாக வாயை மடித்து வீளை (விசில்) அடிப்பார்கள்.


ஐம்பது பேர் கூடியிருந்த அக்கூட்டத்தில் அனழேந்தியை முதலில் கண்டது அவனது உயிர் நண்பன் நாவினியன்தான்... இருவரும் ஒருவரையொருவர் சந்தித்து முழுதாக ஏழு ஆண்டுகள் கடந்திருந்தாலும் நொடிப்பொழுதில் இவனை அவன் அடையாளம் கண்டு கொண்டான்.

நண்பனைக் கண்ட நாவினியனது மனது மகிழ்ச்சியில் அலை கடலென ஆர்ப்பரிக்க, "மாந்தா....." என்று கத்திக்கொண்டே ஓடி வந்து அனழேந்தியை கட்டியணைத்துக் கொண்டான். அவனைத்தொடர்ந்து அனழேந்தியை அடையாளம் கண்ட அக்கிராம மக்கள் அனைவரும் எதிர்பாரா நொடியில் கிடைத்த இன்பத்தின் காரணமாய் அவனை கட்டியணைத்து உச்சி முகர்ந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இறுதியாய் இடுப்பில் கைவைத்தபடி அவன் முன்னால் வந்து நின்ற ஊர்த்தலைவர் காரொளிநாதன், "வீரேந்திர புரியின் முடி இளவரசனாகிய தாங்கள் இந்நேரத்தில், இங்கு இப்படி தனியாக வர காரணம் என்ன?" என்றார்.

அனழேந்தி, "நான் அந்த ராஜ்ஜியத்திற்கு ஆற்றிய தொண்டு போதுமென்று கருதி, அவர்களே என்னை வெளியேற்றி விட்டார்கள் தாத்தா...." என்றான் குறும்பாய்.
 
#2
ஊர்த்தலைவர், "எனில்??...."

"ஆம் தாத்தா... இனி தங்களின் பேரனாக மட்டும் நான் வாழ்ந்தால் போதுமாம்..." என்றான் தன் தாத்தாவின் தாள் பணிந்து....

இந்த நொடிக்காகவே இத்தனை வருடங்கள் தன் உயிரை இறுத்தி பிடித்திருந்ததை போல அவனை தூக்கி நிறுத்தி ஆர தழுவிக் கொண்டார் அவனது தாத்தாவாகிய அவ்வூர்த்தலைவர். இதற்குள் ஒரு சிலர் ஓடிச் சென்று அவன் பாட்டியையும் தகவல் சொல்லி பொது மன்றத்திற்கு அழைத்து வந்துவிட்டனர். பொன்னாலான நவரத்தினங்கள் பதிக்கப்பெற்ற வீரக் கழலையினை தன் காலில் அணிந்திருந்த பாட்டி தன் கால் கழலை ஒலி சினுங்க கூட்டத்திற்கு நடுவில் வந்து நின்றார். தாத்தாவைப் போல் இல்லாமல் கோபமான முகத்தோடு அவன் முன்னால் வந்து நின்றார். இருந்தும் அவரின் அகம் மகிழ்ந்து கோபப் பார்வையாலேயே தன் பாசத்தை பொழிவதை அனழேந்தி மட்டுமே அறிவான்.

பாட்டி கோபமான குரலில், "வாருங்கள் வீரேந்திர புரியின் இளவரசே!!!" என்றார்.

அனழேந்தி தன் உடலை சற்று வளைத்து பாட்டியின் ஐந்தடி உயரத்திற்கு நேராக வந்து நின்று கொண்டு, "நன்றி, ஆனால் இளவரசனுக்கு தாங்களும் தமது குல மக்களும் தக்க மரியாதை தந்து வரவேற்கவில்லையே..."

அவன் திமிரில் சற்றும் தனக்கு குறைவில்லை என்பதைப்போல பாட்டி, "தாங்கள் திடீர் விஜயம் செய்ததால் முன்னேற்பாடாய் ஏதும் இங்கே இருக்கவில்லை, எனினும் இன்னும் சில நாழிகைக்குள் தங்களுக்கான வரவேற்பு விழாவினை துவங்குகிறோம் இளவரசே...." என்றார்.

அனழேந்தி தன் உடலை நீட்டி நெளித்து முறுக்கெடுத்தபடி, "ஆகட்டும் மாந்தை குலத்தலைவியே... முதலில் நான் அலுப்பு தீர அருவியில் நீராடிவிட்டு வருகின்றேன், அதற்குள் எனக்கான உணவு பதார்த்தங்களை தயாராக்கி வையுங்கள். கடந்த நான்கு தினங்களாக சுட்ட கிழங்கையும், பழுத்த பழங்களையும் தின்றபடியே உறக்கம் மறந்து நடந்து வந்திருக்கின்றேன்..." என்றதும்,

பாட்டி தன் கோபம் மறந்து, "ஐயா... என் குலக்கொழுந்தே!!! இத்தனை தூரம் நடந்தா வந்தாய்? ராஜ்ஜியத்தையே தருவதாகச் சொல்லி அழைத்துச் சென்ற அவர்களுக்கு, உன்னை திருப்பி அனுப்பும் பொழுது ஒரு புரவியை கொடுக்க வேண்டும் என்று கூட தோன்றவில்லையா?" என்றார் ஆற்றாமையோடு....

அனழேந்தி, "என்னையே வேண்டாம் என்ற அவ்வரசினுக்கு என் நலத்தினைப் பற்றி யோசிக்க எப்படி தோன்றிடும் பாட்டி?..."

பாட்டி, "அவர்கள் தரவில்லை என்றாலும், நீயாவது உன் தனிப்பட்ட புரவியை கேட்டு வாங்கி இருக்க கூடாதா?" என்றார்.

"என் செய்வது பாட்டி? நான் உங்களின் வம்சம் ஆயிற்றே... அவர்கள் சம்பந்தப்பட்டது எதுவும் வேண்டாம் என்று கிளம்பி வந்து விட்டேன். நடந்து வந்ததனால் இப்போது என்ன நேர்ந்து விட்டது? நான் என்ன மலைக்காடுகளை கடந்து பழக்கம் இல்லாதவனா? நீங்களே பாருங்கள் பாட்டி, ஆறு நாட்கள் கடக்க வேண்டிய தூரத்தை நான்கு நாட்களில் கடந்து வந்திருக்கின்றேன், இருந்தும் என் உடல் வலிமையில் ஏதேனும் குறை தென்படுகின்றதா???...."

பாட்டி அவனை நெட்டி முறித்து, "ஈரேழு உலகத்திலும் என் பேரனது வலிமைக்கு ஈடு இணை உண்டா?..." என திருஷ்டி கழித்தார். முழுமதி போன்ற தெளிவான அவனது மார்பின் மீது பூசப்பட்டிருந்த சந்தனம் அழிந்து, கடந்த நான்கு தினங்களாக தரையில் உருண்டு புரண்டதற்கான அங்க அடையாளங்களாய் மணல் திட்டுகள் ஆங்காங்கே விரவி நிற்பதை கண்டதும் தன் புடவை தலைப்பால் மணலை தட்டி விட்டார் பாட்டி....

பாட்டி, "இன்னும் மண்ணில் விளையாடும் பழக்கம் உனக்கு போகவில்லையா மாந்தா?"

அனழேந்தி, "நெடுநாள் கழித்து நான் பிறந்த மண்ணை பார்த்ததும், அதை தழுவிட ஆசை வந்தது பாட்டி...."

பாட்டி குரல் உடைய, "உன் அன்னையைப் போலவே பேசுகிறாயடா..." என்றார் அவனது கன்னம் வருடி.

ஊர்மக்களும் அவனோடு அளவளாவும் ஆசைகொண்டு முன்வருவதை கண்ட தாத்தா, "இனி மாந்தநேயன் எந்நேரமும் உங்களோடு தான் இருக்கப் போகின்றான்... நாளை முதல் அவனோடு ஆர அமர அளவளாவிக் கொள்ளுங்கள், இன்று அவன் பயண அலுப்பு தீரும்படி நன்றாக ஓய்வெடுக்கட்டும்...." என்று அன்புக் கோரிக்கை விடுத்தார்.

நாவினியன், "முதலில் குலத்தலைவிக்கு அதை கூறுங்கள், பாட்டியும் பேரனும் உலகம் மறந்து உறவாடி கொண்டிருக்கின்றனர்...."

பாட்டி, "நான் தூக்கி வளர்த்த என் பேரனை எப்படி வேண்டுமானாலும் செல்லம் கொஞ்சுவேன், உனக்கேனடா உள்ளுக்குள் எரிகிறது? வா மாந்தா, நாம் நம் குடிலுக்கு செல்லலாம், நிறைய கொள்ளி கண்கள் உன்னை சுற்றுகின்றன..." என்று நாவினியனது காலடி மண்ணெடுத்து அனழேந்தியை சுற்றி போட்டார்.

நாவினியன், "பேரன் வந்ததும் எம் குல தலைவிக்கு நான் வேண்டாதவனாய் ஆகிவிட்டேன்...." என்றான்.

காரொளிநாதன் தாத்தா, "மாந்தா, நீ இங்கே நிற்கும் வரையில் இவன் வாயை மூடிக்கொண்டு இருக்கப்போவதில்லை, பேசாமல் குடிலுக்கு செல் ஐயா...." என்று அவன் இடையினில் கை வைத்த பொழுது தான் அவர் அவன் கட்டி வைத்திருந்த மரப்பாவையினை உணர்ந்தார்.

தாத்தாவின் தயக்கம் புரிந்த அனழேந்தி அவர் வாய் விட்டுக் கேட்கும் முன்பாகவே அப்பாவை பொம்மையை எடுத்து வெளியே காட்டி, "இது பாவையல்ல தாத்தா, இவள் ஒரு பெண்.... சில தினங்கள் முன்பு இளவளவனது அறைக்கு வந்து சேர்ந்திருக்கிறாள். அந்த இக்கட்டான நேரத்தில் என்ன செய்வதென்று அறியாத இளவளவன் இப்பெண்ணை பாவை உருவத்திற்கு மாற்றிவிட்டான். ஆனால் பாவம் அவனுக்கு, இப்பெண்ணின் உயிரை மட்டுமே திருப்பி தர முடிந்தது, மறுபடியும் உருவத்தை மாற்ற தெரியவில்லை... என் வாளிலிருந்த மரகதக்கல் மூலமாய் வேறு காலக்கட்டத்திலிருந்து இங்கே வந்திருப்பதாய் இவள் சொன்னாள். என் வாளால் இடர் நேர்ந்த இப்பெண்ணை இனி நானே கவனித்துக்கொள்வதாய் இளவளவனுக்கும் இப்பெண்ணிற்கும் வாக்களித்துவிட்டேன் தாத்தா...."

தாத்தா, "நல்ல காரியம் செய்தாய் மாந்தா... பாவம் அப்பிள்ளை, மாந்திரீக பலம் கிடைத்தும் அதை முழுதாக உபயோகப்படுத்த தெரியாமல் தினறுகின்றான்."

அனழேந்திக்கு தன் உடன்பிறப்பை எண்ணி மனம் குமைய, "ஆம் தாத்தா, அவனுக்கு மாந்திரீகத்தை முறையாய் கற்க நிறையவே ஆசை, ஆனால் அவன் இருக்கும் இடம் அதற்கு எதிர்ப்பதமாக இருக்கின்றது... எனக்கோ மாந்திரீகம் நன்றாக தெரிந்தும் வெளிக் காட்டிக் கொள்ளவோ என் தம்பிக்கு முறையாய் பயிற்றுவிக்கவோ முடியாத சூழ்நிலை. எங்கள் ரகசியங்களை நாங்கள் காப்பதற்காக ஏதுமறியா இப்பெண்ணை இத்தனை நாட்களாக பாவை உருவிலேயே வைத்துக்கொண்டு இருக்கின்றோம்...." என்றான்.

பேரனது முகவாட்டம் பொறுக்காத பாட்டி, "விடு மாந்தா... அவரவர் பிறவிப்பயனை அவரவர் அனுபவித்து தான் ஆக வேண்டும், விரைவிலேயே இளவளவனுக்கும் இப்பெண்ணிற்கும் அவர்களின் விருப்பங்கள் நிறைவேற ஈசன் ஆசீர்வதிப்பார். எதோ உன் நல்ல நேரம், நீ உன் விருப்பப்படி நம்முடைய கிராமத்திற்கே திரும்பி வந்து விட்டாய், அதுவரையில் கிடைத்த மகிழ்ச்சியை நாம் கொண்டாடலாம் மாந்தா..." என்றார் அவனை தேற்றும் விதமாய்.

அனழேந்தி, "ஹா... ஹா... எனில் இந்த பெண் என் கையில் கிடைத்த நேரம்தான் எனக்கு நல்ல நேரமானது போல பாட்டி. இவளை நான் கண்ட அடுத்த நொடியே உப்பில்லா ஒரு காரணத்திற்காக பழி சுமத்தி என்னை அரண்மனையில் இருந்து வெளியேற்றி விட்டார் அந்த வீரேந்திர புரியின் அரசர்."

நாவினியன், "எனில் அப்பெண்ணையே நம் மாந்தனுக்கு மணமுடித்து வையுங்கள் பாட்டி, காலம் முழுவதும் அவன் நலமோடும் நம்மோடும் இருப்பான்..."

அனழேந்தி, "ஏனடா ஏன்?... எதற்கு என்னை இவ்வளவு பெரிய இக்கட்டில் மாட்டிவிட பார்க்கின்றாய்?...." என்று பொய்க் கோபம் காட்டினான்.

நாவினியன், "ஏன் இவ்வளவு பதறுகின்றாய் மாந்தா? இந்த பெண்ணின் அங்க லட்சணம் அவ்வளவு சரி இல்லையோ?"

அனழேந்தி, "எவர் கண்டது? நான் அவளது நிஜ உருவத்தை இதுவரையில் பார்த்ததில்லை, ஆனால் உன் குலத்தலைவி அளவுக்கு மிகப்பெரிய கோபமும் தைரியமுமான குணம் கொண்டவள் என்று மட்டும் உறுதியாக சொல்ல முடியும் நண்பா..."

"நல்ல வேளை எனக்கு அதைப் பற்றி முன்பே அறிவுறுத்தினாய், நான் இந்த நொடியே என் குடிலுக்கு புறப்பட்டு விடுகிறேனடா...." என்று விளையாட்டாய் சில அடிகள் பின்னோக்கி நகர்ந்தான் நாவினியன்.

நண்பர்களின் குறும்பு பேச்சினை கண்டு சிலாகித்திருந்த ஊர்மக்கள், "எங்கள் குலத் தலைவியினது குணத்தை கொண்டவளா? அப்படி எனில் அப்பெண்ணின் உருவத்தை நாங்கள் இப்பொழுதே பார்த்தாக வேண்டும் மாந்தா...." என்று அன்புத்தொல்லை செய்ய ஆரம்பித்தனர்.

அனழேந்தி, "ம், ஆகட்டும்..." என்றுவிட்டு அப்பாவை பொம்மையை எடுத்து கூட்டத்திற்கு நடுநாயகமாய் இருந்த ஓரிடத்தில் நிற்க வைத்தான். கிழக்கு திசைக்கு திரும்பி நின்றவன் தனது வலது கையை நெஞ்சுக்கு நேராக உயர்த்தி மெதுவாய் தன் பெரு விரலையும் ஆள் காட்டி விரலையும் கணப்பொழுது அசைவித்தான். அடுத்த நொடியே அவன் விரலில் இருந்து மின்னல் கீற்றுப் போல மஞ்சள் நிற ஒளிக்கீற்று பாய்ந்து சென்று தரையில் வைக்கப்பட்ட மரப்பாவையினை தாக்கியது.

அந்தப் பொன்னிற ஒளி தீண்டியதுமே பாவை உருவத்தில் இருந்த யாளி சிறிது சிறிதாய் பெரிதாகி பெண்ணுருவம் அடைந்தாள். பெண் உருவம் வந்ததும் அவள், தலைமேல் தூக்கி கட்டிய கொண்டையும், காதில் தண்டட்டியும், காதில் தண்டையுமாய் தன்னை சுற்றி நிற்கும் மனிதர்களை ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள். அதேபோல இருபத்தியோராம் நூற்றாண்டில் இருந்து இரவு நேரத்து உடையோடு வந்திருக்கும் வெள்ளை நிற தேவதை அவளை அவர்கள் அனைவரும் அதிசயம் போல பார்த்துக் கொண்டிருந்தனர்.

அனைவரும் சில நொடிகள் அமைதியாய் இருக்க யாளியே தன் குரல் உயர்த்தி, "இது என்ன இடம்?" என்றாள்.

அனழேந்தியின் பாட்டி யாளியின் கரம் பற்றி, "இது மாந்த்ரீகபுரம் எனும் கிராமம் அம்மா, நான் இந்த மாந்தை குலத்தின் தலைவி மாந்தைதேவி. என் மகள் வழிப் புதல்வன்தான் அனழேந்தி எனும் மாந்த நேயன், அவன் தான் உன் குறையை நிவர்த்தி செய்வதற்காக இங்கே அழைத்து வந்திருக்கிறான்..." என்று விளக்கி சொன்னார்.

யாளிக்கு பாட்டியின் கம்பீரம் தோரணை கண்டு என்ன தோன்றியதோ, சட்டென்று பாட்டியின் கால்களை தொட்டு நமஸ்கரித்தாள்.

பாட்டி, "தீர்க்காசாயோடு இருமம்மா, எழுந்திரி... நாம் நமது குடிலுக்கு செல்லலாம் வா. மாந்தா நீ விரைவில் அருவியில் நீராடிவிட்டு வா, நேரம் அந்திப் பொழுதை கடந்துவிட்டது காலம் தாழ்த்தாமல் வந்து விடய்யா..." என்றபடி யாளியை தன் கையோடு குடிலுக்கு அழைத்துச் சென்று விட்டார்.

கூட்டத்தினர் அனைவரும், 'நல்ல தைரியமான பெண் தான், நம்மை கண்டோ நமது குல தலைவியை கண்டோ அவள் வதனத்தில் சிறிதும் அச்சம் என்பதே தென்படவில்லை பார்த்தீர்களா?!' என்றபடி மெய்மறந்து அவள் பின்னால் குலத் தலைவியின் குடிலுக்கு சென்றனர்.

நாவினியன் மட்டும் மெதுவாய் கூட்டத்தில் இருந்து நகர்ந்து ஊர்ந்து வந்து அனழேந்தியின் காதினில், "இப்போது சொல்லடா நண்பா... இந்த பெண்ணை மணந்து கொள்ள சம்மதிக்கின்றாயா?" என்றான்.

அனழேந்தி, "விளையாடாதே நண்பா... நமது பாதை வேறு அவள் பாதை வேறு..." என்று வாய் வார்த்தையாய் சொன்னாலும், அவனது விழிகள் இரண்டும் வேறு ஒரு பதில் சொன்னது...

நண்பனது மனதினை அவன் விழியசைவினிலேயே புரிந்து கொண்ட நாவினியன் மனதிற்குள்ளே, 'பார்க்கத்தானே போகின்றேன் உங்கள் இருவரது பாதையையும் பயணத்தையும்' என்றான் குறும்பாய்....
 

Advertisements

Latest updates

Top