• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மார்க்கண்டேய புராணம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
இப்புராணம் பற்றி….

மார்க்கண்டேய புராணம். பதினெண் புராண வரிசையில் ஏழாவதாக உள்ளது. அது 9,000 பாடல் களைக் கொண்டது என்று சொல்லப்பட்டிருப்பினும், இன்று கிடைப்பது 6,900 பாடல்களே. மிகப் பழைய முதலாவதாக வைத்து எண்ணாமல், கிருத்திகையை ஒன்று என்று வைத்து எண்ணுகின்ற பழங்காலத்தைச் சேர்ந்தது. பல முக்கியமான பகுதிகளைக் கொண்டது இப்புராணம். இன்று பிரபலமாகச் செய்யப்படுகின்ற சண்டி ஹோமத்திற்கு அடிப்படையாக உள்ள துர்க்கா சப்தசதி என்ற பெயருள்ள துர்க்கையைப் போற்றும் 700 பாடல்கள் 81ஆம் அதிகாரத்தில் இருந்து 93ஆம் அதிகாரம் வரை உள்ளன. துர்க்கா சப்தசதி மிகவும் சக்தி வாய்ந்த ஒர் அறிவுரையைத் தருகின்றது. இந்த மாபெரும் சக்தியைப் பணிவு, அன்பு, வணக்கம் இவற்றோடு கூடிய மனத்துடன் வழிபட்டால், எத்தகைய துன்பத்தையும் எதிர்ப்பையும் வெல்லும் சக்தியைத் தருகின்றது. அஞ்ஞானம், ஆணவம் முதலியவற்றால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் அழிக்கப்படுகிறார்கள். கருணையே வடிவான அந்த மாபெரும் சக்தி நல்லோரைக் காக்கத் தயாராக இருக்கின்றது. 'யாதேவி! சர்வபூதேவி. என்று தொடங்கும் பாடலில், "எல்லா மனிதருடைய இதயக் கமலங்களில் தங்கி இருப்பவளான அந்த மகாசக்தியை நான் வணங்குகிறேன், வணங்குகிறேன், வணங்குகிறேன்” என்ற ஒரு நம்பிக்கையோடு கூடிய பெரும் சக்தியை நமக்கு அளிக்கின்றது. சப்தசதி.

மனிதனிடத்தில் பேராற்றல் உள்ளே மறைந்து நிற்கின்றது. உலக நன்மைக்காக ஒருவன் அதனைப் பயன்படுத்த விரும்பினால் அது வெளிவந்து தொழிற்படும். ஒருவேளை அந்த முயற்சி பயன் தரவில்லையானால், பெண்சக்தி அதனை வெளிப்படுத்தி அந்தப் பயனைப் பெறுமாறு செய்கிறது. இந்தச் செய்தியை ஒர் உருவகமாகத் தருவதுதான் துர்க்கா சப்தசதி. ஆணுக்குப் பெண் எவ்விதத்திலும் குறைந்தவள் அல்லள் என்பதையும், மிக முக்கியமான நேரத்தில் ஆண் சக்தி தொழிற்பட முடியாமல் திகைக்கும் பொழுது, பெண்சக்தி போரில்கூட வெளிப்பட்டு ஆண் சக்திக்கு உதவி புரியும் என்ற மாபெரும் தத்துவத்தின் உருவகக் கதையே துர்க்கா சப்தசதி ஆகும்.

துர்க்கையைப் பற்றி உள்ளது என்பதால் சாக்தர்கள் மட்டும் இதனைப் பாராயணம் செய்கிறார்கள் என்று சொல்லமுடியாது. சைவர்கள், வைணவர்கள்கூட துர்க்கா சப்தசதியைப் பாராயணமாகச் செய்வது, ஹோமமாகச் செய்வது என்ற பழக்கத்தை மேற்கொண்டுள்ளனர். தசரா பண்டிகைக்கு முன்னர் 9 நாட்கள் துர்க்கையை வணங்கும் பழக்கம் இருந்து வந்தது. இப்புராணம் 137 அதிகாரங்களை உடையது.

ஜெய்மினியும் மார்க்கண்டேயனும்

மிகப் பெரிய முனிவராகிய ஜெய்மினி ஒருமுறை மார்க்கண்டேயரைப் பார்க்க வந்தார். வந்தவர், “முனிவரே! எனக்கு அடிப்படையில் சில சந்தேகங்கள் உள்ளன. அவற்றைத் தெளிவுபடுத்திக் கொள்ள விடை கூறக் கூடியவர் தாங்கள் ஒருவரே. விஷ்ணு எங்கும் நிறைந்தவர். வடிவமும் உருவமும் அற்றவர். அப்படி இருக்க, அவர் ஏன் பூலோகத்தில் மனிதனாக கிருஷ்ணர் என்ற பெயருடன் பிறக்க வேண்டும்? பாண்டவர்கள் ஐவரையும் திரெளபதி ஏன் மணக்க வேண்டும்? அவருடைய பிள்ளைகளாகிய இளம் பஞ்ச பாண்டவர்கள் ஐவரும் ஒரே நேரத்தில் ஏன் கொல்லப்படவேண்டும்? இவைகளுக்கு விடைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்” என்றார். அதற்கு விடையாக மார்க்கண்டேயர் கூறியதாவது: "முனிவரே! பிரார்த்தனை செய்யவே எனக்கு நேரம் போதவில்லை. உம்முடைய கேள்விகளுக்கு விடை அளிக்க எனக்கு அவகாசம் கிடையாது. இவ்வினாக்களுக்கு விடை கூறக் கூடியவர்கள் யார் என்று மட்டும் கூறுகிறேன். அவர்களிடம் சென்று உங்கள் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ளலாம். விந்தியமலையில் நான்கு பறவைகள் வாழ்கின்றன. அவை பிங்கக்ஷா, விவோதா, சுபுத்ரா, சுமகா என்ற பெயர்களால் அழைக்கப் படுகின்றன. அவை துரோணரின் பிள்ளைகள். அங்கே செல்லலாம்." இப்படிக் கூறியவுடன், ஜெய்மினி இடை மறித்து, “முனிவரே! பறவைகள் வேதம், சாஸ்திரம் இவற்றை நன்கு அறிந்துள்ளன என்கிறீர்கள். பறவைகள் எப்படி இவற்றை அறிய முடியும்? பறவைகள் எப்படிப் பேச முடியும்? அவற்றின் தந்தை என்று சொல்லப்படும் துரோணர் யார்?’ என்று கேட்டார். மார்க்கண்டேயர் கூறிய விடை வருமாறு

பறவைகள்

ஒருமுறை நாரதர் நந்தன கானகம் என்ற பூந்தோட்டத்திற்குச் சென்றார். அங்கே பல அப்ஸ்ரஸ்கள் நாட்டியம் ஆட இந்திரன் அதனை ரசித்துக் கொண்டிருந்தான். நாரதரைக் கண்டவுடன் அவர்கள் எழுந்து மரியாதை செய்தனர். அப்பொழுது இந்திரன் “இவர்கள் அனைவரும் மிகச் சிறந்த நாட்டியக் கலைஞர்கள். யாருடைய நாட்டியத்தைப் பார்க்க விரும்புகிறீர்கள்?” என்று கேட்டான். நாரதர், “நான் வேண்டுவது மிகச் சிறந்த அழகும், நாட்டியக் கலையில் வன்மையும் உடைய ஒரு அப்ஸரஸைத் தேடுகிறேன். உங்களில் யார் இரண்டிலும் சிறந்தவர்கள்?" என்று கேட்க, அவர்கள் அனைவரும் தாம் தாம் என்று வாதிட்டுக் கொண்டனர். இதைப் பார்த்த நாரதர் அவர்களைப் பார்த்து, நல்லது, உங்களுக்குள் முடிவு செய்ய முடியாத பொழுது நான் சொல்லும் காரியத்தை யார் நிறைவேற்றுகிறீர்களோ, அவர்கள் தான் இரண்டிலும் சிறந்தவர்கள் என்ற முடிவிற்கு வரலாம்' என்றார். அவர்கள் அனைவரும் ஒப்புக் கொள்ளவே நாரதர் பேசலானார். "இமயமலையில் துர்வாசர் தவம் செய்து கொண்டிருக்கிறார். உங்களில் யார் சென்று அவருடைய தவத்தைக் கலைக்க முடியும்” என்றார். துர்வாசர் பெயரைக் கேட்டவுடன் எல்லாரும் பின்வாங்கி விட்டனர். வட என்ற அப்ஸரஸ் மட்டும் துணிந்து முன்வந்து, “நீங்கள் சொன்ன காரியத்தை நான் செய்கிறேன்" என்று சொன்னாள். அனைவரும் ஒப்புக் கொள்ளவே வட இமயமலைக்குச் சென்று துர்வாசர் தவம் செய்யும் இடத்திற்கு நேரே செல்லாமல் சற்று எட்டி இருந்து கொண்டு குயில்போல் கூவ ஆரம்பித்தாள். அந்தக் குயிலோசையைக் கேட்ட துர்வாசர் அந்தக் குரலில் ஐயம் கொண்டு பார்க்க வந்தார். வட நிற்பதையும், குயில்போல் பாடுவதையும் கண்ட அவர், “என் தவத்தைக் கலைப்பதற்காகவே நீ வந்துள்ளாய் என்று தெரிகிறது. பறவைபோல் பாடியதால் நீ பறவையாகப் போவாய்! பதினாறு ஆண்டுகள் கழித்து, ஒரு வேடன் உன்னைக் கொல்வான். பிறகு தேவலோகம் திரும்பி வருவாய்!” என்று சாபமிட்டார்.

கருடனின் பரம்பரையில் தோன்றிய கன்கா, காந்தாரா என்ற இரு சகோதரப் பறவைகள் இருந்தன! முதலில் கன்கா என்ற பறவை இமயமலை நோக்கிப் பறந்து சென்றது. அங்கே குபேரனின் பணியாளன் ஆகிய ‘வித்யுத்’ என்ற அரக்கன் மதனிகா என்ற தன் மனைவியுடன் தனியே அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தான். கன்கா அங்கே சென்றதும் தங்கள் சல்லாபத்திற்கு இடையூறாக இருந்ததால், வித்யுத் அப்பறவையைக் கொன்று விட்டான். தன் சகோதரப் பறவை இறந்ததை அறிந்த காந்தாரா, வித்யுத் இருக்குமிடம் வந்து பழி வாங்கும் நோக்கத்துடன் அவனுடன் போரிட்டு அவனைக் கொன்று விட்டது. உடனே அவன் மனைவியாகிய மதனிகா ராட்சசி ஆகையால், பறவை வடிவம் எடுத்துக் கொண்டு காந்தாராவை மணந்து கொண்டது. இவர்கள் இருவருக்கும் துர்வாசரால் சபிக்கப்பட்ட வட என்ற அப்ஸரஸ் தர்ஷி என்ற பெயருடன் பெண்ணாகப் பிறந்தது. இந்த தர்ஷி என்ற பெண்ணையே துரோணர் என்ற பிராமணர் மணந்து கொண்டார். ஒருமுறை குருக்ஷேத்திரப் போர் நடைபெறும் பொழுது தர்ஷி அங்கே சென்றது. எதிர்பாராமல் அர்ச்சுனன் அம்புபட்டு தர்ஷி இறக்க நேரிட்டது. அது இறப்பதற்குள் அதன் வயிற்றில் இருந்து நான்கு முட்டைகள் பூமியில் விழுந்தன. பகுதத்தன் என்ற அரசனுடைய சுப்ரதிகா என்ற யானை அந்த இடத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது. யானையின் கழுத்தில் கட்டி இருந்த பெரிய மணி எதிர் பாராதவிதமாக ஒர் அம்பு பட்டதால் அறுந்து கீழே விழுகையில் இந்த நான்கு முட்டைகளையும் மூடி மறைத்துக் கொண்டது.

பாரதப் போர் முடிந்து பல காலம் ஆன பிறகு, ஷமிகா என்ற முனிவர் அவ்விடத்தில் நடக்கையில் இந்தப் பெரிய மணிக்குள் பறவைகளின் சப்தத்தைக் கேட்டு மூடியிருந்த மணியை அகற்றினார். நான்கு குஞ்சுகள் உயிருடன் இருப்பதை அறிந்தார். அவற்றை எடுத்துக்கொண்டு தம் ஆசிரமம் சென்று எவ்வித ஆபத்தும் வராதபடி பாதுகாப்பான இடத்தில் வைத்து இக் குஞ்சுகளை வளர்த்தார். அவை பெரிய பறவைகள் ஆனதும், காட்டில் சுதந்திரமான பறவைகளாய்த் திரிந்தன. இருந்தாலும் இரவானதும் ஆசிரமத்தில் வந்து தங்கிவிட்டன. அப்படித் தங்கி இருக்கும் பொழுது அங்கு விவாதிக்கப்படும் வேதங்கள், சாத்திரங்கள் ஆகியவற்றை ஒரளவு புரிந்து கொண்டன. ஒருநாள் இந்தப் பறவைகள் நான்கும் ஷமிகா முனிவர் எதிரே சென்று மிக்க வணக்கத்துடன், “முனிவரே! நாங்கள் நால்வரும் இந்த உடம்புடன், உயிருடன் இருப்பது தங்கள் கருணையால்தான். அது மட்டுமல்ல; தாங்கள் எங்களுக்கு இங்கே இடம் தந்ததால்தான் வேத சாஸ்திர புராணங்களைப் பற்றியும் தெரிந்து கொண்டோம்” என்று கூறின.

பறவைகள் பேசுவதைக் கண்டு வியப்பில் ஆழ்ந்து போன ஷமிகா முனிவர், "உண்மையில் நீங்கள் பறவைகள் அல்ல. நீங்கள் யார் என்பதை எனக்குச் சொல்ல வேண்டும்?” என்று கேட்டவுடன் அப் பறவைகள் ஒரு கதையைச் சொல்ல

பறவைகளின் கதை

நீண்ட காலத்திற்கு முன்னர் சுக்ரிஷா என்றொரு முனிவர் வாழ்ந்து வந்தார். அவருடைய பிள்ளைகளே இந்த நான்கு பறவைகளும் ஆகும். ஒருநாள் இந்திரன் வயதான, பெரிய பறவை உருவம் எடுத்து அங்கு வந்தான். தனக்கு மிகவும் பசியாக இருப்பதாகவும், மனித மாமிசம் கொடுத்தால் தனக்கு மிகவும் திருப்தியாக இருக்கும் என்றும் அப்பறவை கூறியது. உடனே சுக்ரிஷா முனிவர் தம் பிள்ளைகளை அழைத்து அவர்களையே அப் பறவைக்கு உணவாகும்படிக் கூற, அந்த நால்வரும் இதை மறுத்து விட்டனர். இதனால் கடுங்கோபம் கொண்ட முனிவர், தன்னுடைய நான்கு மகன்களும் பறவை களாகப் பிறக்கும்படி சாபமிட்டு, தன் உடம்பையே பறவையாக வந்த இந்திரனுக்கு உணவாக அளிக்க விரும்பினார். இந்திரன், மன்னிப்புக் கேட்டான். சாபமிடப்பட்ட நான்கு மகன்களும் தங்கள் தந்தையை வணங்கி, தாங்கள் தங்கள் உடல் மீது மிகுந்த பற்றுக் கொண்டுள்ளபடியால், தந்தை கூறியதை ஏற்க மறுத்தனர் என்றும், உண்மையான ஞானத்தைப் பெறும் பொழுது உடல் மீதுள்ள பற்று நீங்கும் என்றும் கருதி, அடுத்த பிறவியிலாவது எங்களுக்கு உண்மை ஞானம் கிடைக்க அருள் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். முனிவரும் "அப்படியே ஆகட்டும் என்றார். அந்த நான்கு பிள்ளைகளும் இந்தப் பிறவியில் தர்ஷியின் வயிற்றில் பறவைகளாகப் பிறந்தோம். அந்த நால்வரும் நாங்களே என்று பறவைகள் சொல்ல, முனிவர், “விந்திய மலைக்குச் செல்லுங்கள்” என்று கட்டளை இட்டார்.

இந்த நீண்ட கதையை ஜெய்மினிக்குச் சொல்லிய மார்க்கண்டேயர், நீங்கள் சென்று அந்தப் பறவைகளைப் பாருங்கள் என்று கூறி விடை கொடுத்தார்.

ஜெய்மினியும் பறவைகளும்

ஜெய்மினி பறவைகளைப் பார்த்து, இரண்டு கேள்வி களைக் கேட்டார்: “பஞ்ச பாண்டவர் யார்? திரெளபதி ஏன் ஐவரையும் மணம் செய்து கொள்ள வேண்டும்? அதற்குப் பறவைகள் சொன்ன விடை கீழே தரப்பட்டுள்ளது.

முன்னொரு காலத்தில் துவஷ்டா என்ற அசுரனின் மகன் திரிசரா என்பவன் தலைகீழாக நின்று கடுந்தவம் இயற்றிக் கொண்டிருந்தான். அவனுடைய தவம் நிறைவேறினால் தன் ஆட்சிக்கு ஆபத்து விளையும் என்பதை அறிந்த இந்திரன் மறைவாக நின்று தவத்தில் இருந்த திரிசராவைக் கொன்று விட்டான். திரிசரா பிராமணன் ஆகையினாலும், தவத்தில் இருந்தானாகையாலும் அவனைக் கொன்ற இந்திரனின் ஆற்றலில் ஒரு பகுதி தருமதேவதையிடம் சென்று விட்டது. திரிசரா கொல்லப்பட்டதை அறிந்த துவஷ்டா தன் தலையில் இருந்து ஒர் உரோமத்தை எடுத்து அக்னியில் போட, அதிலிருந்து சர்வ வல்லமை உள்ள விருத்ராசுரன் தோன்றினான். விருத்திரனைக் கண்டு அஞ்சிய இந்திரன், சப்த ரிஷிகளிடம் சென்று முறையிட்டு தனக்கும் விருத்திரனுக்கும் நட்புச்செய்து வைக்குமாறு வேண்டிக் கொண்டான். இருவரும் நண்பர்கள் ஆயினர். மனத்துக்குள் வஞ்சகத்தை நிரப்பி இருந்த இந்திரன், நம்பி இருந்த விருத்திராசுரனை வஞ்சகமாகக் கொன்றுவிட்டான். இந்தத் தவறான கொலையின் காரணமாக இந்திரன் தன் ஆற்றலின் ஒரு பகுதி வாயுவிடம் சென்று விட்டது.

இந்திரன் ஆற்றலின் மற்றொரு பகுதி நேரே அருச்சுனனுக்குச் சென்றது. கெளதமன் என்று நம்பிய முனிபத்தினி யாகிய அகலிகையை ஏமாற்றியதால், இந்திரனிடம் மிஞ்சி இருந்த ஆற்றல் முழுவதும் இரண்டு அஸ்வினிகளிடம் சென்று விட்டது.

இந்த நிலையில் பூமியில் அரக்கர்கள் மிகுதியாகத் தோன்றி விட்டமையால், பூமி தேவி சுமேரு மலைக்குச் சென்று தனது ஆற்றாமையை வெளியிட்டாள். தேவர்கள் அவளுக்கு பாரத்தைக் குறைப்பதாகக் கூறி தருமதேவதை இந்திரனிடம் பெற்ற ஆற்றலை யுதிஷ்டிரனாகவும், வாயு பெற்ற ஆற்றலை பீமனாகவும், இந்திரன் ஆற்றல் அருச்சுனனாகவும், அஸ்வினிகளின் ஆற்றல் நகுல, சகாதேவர்களாகவும் பிறக்குமாறு செய்தார்கள். இந்திரன் மனைவியாகிய சச்சி திரெளபதி யாகவும் பூமியில் பிறந்து ஐவரையும் மணந்து கொண்டாள். யுதிஷ்டிரன் முதல், சகாதேவன் வரை உள்ள ஐவரும் மனிதர்கள் என்ற முறையில் வெவ்வேறானவர்களாக இருப்பினும், இந்திரனுடைய ஆற்றலின் ஒவ்வொரு கூறாகவே இருந்தனர். இந்த ஐவரும் இந்திரன் ஆற்றல்களே. ஆதலால் சச்சி அல்லது திரெளபதி ஐவரையும் மணந்ததாகச் சொன்னாலும், உண்மையில் இந்திரன் ஒருவனையே மணந்தாள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

அரிச்சந்திரன் கதை

முன்னொரு காலத்தில் திரேதாயுகத்தில் அரிச்சந்திரன் என்ற மன்னன் இந்த நில உலகை ஆண்டு வந்தான். அவன் ஆட்சிச் சிறப்பால் பஞ்சம், நோய், பிணி முதலிய எதுவும் ன் நாட்டில் ட்டவில் வேட்டைக்கச் சென்ற அவன், தப்பி ஓடிய சில மான்களைத் துரத்திக் கொண்டு காட்டில் வெகுதூரம் வந்து விட்டான். மானின் பின்னே ஒடிக்கொண்டிருந்த மன்னன் காதுகளில், “எங்களைக் காப்பாற்றுங்கள் என்ற பெண்களின் அபயக் குரல் விழுந்தது. உடனே, மானின் பின் போவதை விட்டுவிட்டு அபயக் குரல் வந்த திசைப் பக்கம் சென்றான். அங்கே ஒரு முனிவர் தவம் செய்து கொண்டிருப்பதையும், அவர் எதிரே சில பெண்கள் 'காப்பாற்றுங்கள் என்று ஒலமிடுவதையும் கண்டான். வில்லில் அம்பைப் பூட்டிய மன்னன் எதிரே இருப்பவர் ஒரு முனிவர் என்பதை அறிந்து கொண்டான். அந்தப் பெண்கள் உண்மையில் பெண்களே அல்ல. வித்யாஞானத்தின் பல கூறுகளே ஆவர். வித்யா ஞானத்தின் பல்வேறு பகுதிகளையும் உள்ளவாறு அறிந்து கொண்டு அதன் மூலம் உண்மையான ஞானத்தை அடைய விரும்பினார் எதிரிலிருந்த முனிவர் விசுவாமித்திரர். அதனால்தான் வித்யாவின் பல பகுதிகள் வெளிப்பட்டு 'எங்களைக் காப்பாற்றுங்கள் என்று முறை யிட்டன.

அரிச்சந்திரனைக் கண்டதும் அவர்கள் ஒலம் நின்றது. காரணம் கடுந்தவத்தில் இருந்த விசுவாமித்திரர் மிக்க கோபமாக அப்பெண்களைப் பார்த்தவுடன் அவர்கள் அஞ்சி மறைந்து விட்டனர். பெண்கள் மறைந்தவுடன் வெட்கிப்போன அரிச்சந்திரன் விசுவாமித்திரர் கால்களில் விழுந்து, "என்னை மன்னித்து அருளல் வேண்டும். இங்கு நடந்தது ஒன்றும் தெரியாது எனக்கு. பெண்களின் அபயக் குரலைக் கேட்டு அரசன் என்ற முறையில் அவர்களைக் காக்க முன்வந்தேன்” என்று கூறினான். விசுவாமித்திரர், 'உன்மேல் எனக்கு ஒன்றும் கோபமில்லை. எல்லாவற்றையும் நன்கு அறிந்தவனாகிய உன்னிடம் சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன்” என்றார். மேலும் விசுவாமித்திரர் மூன்று கேள்விகளைக் கேட்டார். "யாருக்கு தருமம் செய்ய வேண்டும்? யாரைக் காப்பாற்ற வேண்டும்? யாருடன் போரிட வேண்டும்?”

இந்த வினாக்களுக்கு விடை கூறப் புகுந்த அரிச்சந்திரன், முதல் கேள்விக்கு பதிலாக, தவசிகட்கும், முனிவர்கட்கும், பிராமணர்களுக்கும் தானம் செய்ய வேண்டும். அஞ்சினவர் களைக் காப்பாற்ற வேண்டும். பகைவர்களிடம் போரிட வேண்டும்” என்று கூறி முடித்தவுடன், விசுவாமித்திரர், "அரசனே! நான் பிராமணன் என்பது உனக்குத் தெரியு மல்லவா? உன்னிடம் தானம் கேட்க விரும்புகிறேன்” என்று கூறியவுடன் அரிச்சந்திரன் மிக்க மகிழ்ச்சியோடு "எதைக் கேட்டாலும் தருகிறேன்” என்று கூறிவிட்டான். விசுவாமித்திரர், “நீ ஆளும் உலகம் முழுவதும் அதிலுள்ள பொருள்கள், ராஜ்ஜியத்தில் உள்ள தேர்கள், யானைகள், குதிரைகள், பொன் ஆபரணங்கள், வெள்ளி ஆபரணங்கள் ஆகிய அனைத்தும் எனக்கு வேண்டும். சுருங்கச் சொன்னால், நீ உன் மனைவி, உன் மகன் ஆகிய மூவர் தவிர உன் ராஜ்ஜியத்தில் உள்ள மக்கள் அனைவரும் என் உடைமை ஆகவேண்டும்” என்று கூறினார். அரிச்சந்திரன், "இப்பொழுதே தந்து விட்டேன்” என்று கூறினான். “என்னுடைய ராஜ்ஜிய எல்லைக்குள் நீ இருப்பதை நான் விரும்பவில்லை. எனவே இந்த எல்லைக்கப்பால் நீ உன் மனைவி, மகனுடன் சென்று விடுவாயாக!” என்றார் முனிவர். “முனிவர் உத்தரவுப்படியே இந்த நாட்டின் எல்லைக்கப்பால் செல்கிறேன்.” என்று புறப்பட்ட அரிச்சந்திரனைத் தடுத்து நிறுத்திய விசுவாமித்திரர், "நீ செய்த ராஜதுய யாகத்தில் எல்லா பிராமணர்களுக்கும் தட்சணை தந்தாய் அல்லவா? என்னுடைய பங்கை இப்பொழுது தரவேண்டும்” என்றார் முனிவர். அரிச்சந்திரன், “முனிவரே! என்னிடம் உள்ள அனைத்தையும் தந்துவிட்டேன். இப்பொழுது என்னைத் தவிர என்னுடையது என்று சொல்லக் கூடியது எதுவுமில்லை. நான் என்ன செய்ய முடியும்?” என்றான். அதைக் கேட்ட விசுவாமித்திரர், "நீ சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. என் தட்சிணையைத் தந்தே தீர வேண்டும்” என்றார். ஒரு விநாடி திகைத்து நின்றுவிட்ட அரிச்சந்திரன், “முனிவரே! ஒரு மாதம் அவகாசம் கொடுங்கள். நான் நிச்சயமாக வந்து உங்களுக்குரிய தட்சினையைத் தந்து விடுகிறேன்” என்றான். அவன் வாய்மொழியை ஏற்றுக் கொண்டு, “சென்று வா” என்று அனுப்பிவிட்டார் விசுவாமித்திரர்.

நாட்டின் எல்லையை விட்டுப் போய்க் கொண்டிருந்தான் அரிச்சந்திரன். அவன் மனைவி அரசியாகவே இருந்து பழகி விட்ட காரணத்தால், வேகமாக நடக்க முடியாமல் கொஞ்சம் மெல்லவே நடந்து சென்றாள். சினம் கொண்ட விசுவா மித்திரர் “சீக்கிரம் இவ்வெல்லையை விட்டுப் போ” என்று சொல்லிக் கொண்டே அரிச்சந்திரன் மனைவியாகிய ஷைவியாவை ஒரு தடி கொண்டு பலமுறை அடித்தான். அரிச்சந்திரன் இதுபற்றி ஒரு சிறிதும் கவலைப்படாமல், "இதோ போய் விடுகிறோம், கோபம் வேண்டாம் முனிவரே என்று கூறினான். ஆனால் மேலே இருந்து இந்தக் கொடுமையைப் பார்த்துக் கொண்டிருந்த விஸ்வதேவர்கள் ஐவரும் மன வருத்தம் தாங்காமல், 'விஸ்வாமித்திரர் செய்வது வெட்கக் கேடு, வெட்கக் கேடு என்று கூறிவிட்டனர். அந்தச் சொற்கள் காதில் விழுந்ததும், விஸ்வாமித்திரர் கோபம் கொண்டு விஸ்வதேவர்கள் ஐவரையும் மானிடராகப் பிறக்கக் கடவது' என்று சாபமிட்டார். கலங்கிப் போன ஐவரும் வந்து முனிவரிடம் மன்னிப்புக் கேட்க முனிவர் மனமிரங்கி, "மானிடராகப் பிறந்தாலும் உங்கட்கு மனைவி, குழந்தைகள் என்ற பந்தமிராது. சாதாரண மனிதர்களை ஆட்டிப் படைக்கும் எந்தத் துன்பமும் உங்கள் ஐவரையும் பாதிக்காது” என்றார்.

சாபம் பெற்ற ஐந்து விஸ்வதேவர்களே, பாண்டவர்களின் புதல்வர்களாக- இளம் பஞ்சபாண்டவர்கள் என்ற பெயரில் திரெளபதிக்குப் பிறந்தனர்.

பறவையிடம் அரிச்சந்திரன் கதையை அறிய ஆவலாக இருக்கிறேன் என்று ஜெய்மினி முனிவர் கூறியவுடன், பறவைகள் சொல்ல ஆரம்பித்தன. "நாட்டின் எல்லைக்கு வந்த அரிச்சந்திரன் எங்கே போவது என்று தெரியாமல் தவித்தான். எங்கே சென்றாலும் அது விசுவாமித்திரருக்கு தானம் செய்த பகுதியாகவே இருந்தது. இந்த நிலையில் வாரணாசி அவன் நினைவுக்கு வந்தது. அந்த ஊர் எந்த அரசனுக்கும் சொந்த மில்லை. சிவனுக்குரிய ஊர். எனவே மனைவியையும் குழந்தை யையும் அழைத்துக் கொண்டு வாரணாசிக்குள் புக முற்பட்டான். விசுவாமித்திரர் தடுத்து நிறுத்தினார். “அரிச்சந்திரா! நீ சொன்ன சொல்லைக் காப்பாற்றவில்லை. ஒரு மாதம் தவணை
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
கேட்டாய். நேற்றோடு இருபத்து ஒன்பது நாட்கள் முடிந்துவிட்டன. இந்த ஒரு நாளில் என்ன செய்யப் போகிறாய்?" என்றான். “முனிவரே! இன்றைய பொழுதுக்குள் உங்களுக்குத் தர வேண்டியதைத் தந்து விடுகிறேன்” என்று கூறிவிட்டு நகருக்குள்ளே வந்து கலங்கிப் போய் நின்றான். அவன் மனைவி ஷைவ்வியா, “அன்பரே! கலங்க வேண்டாம். என்னை விற்றுக் கடனை அடையுங்கள்” என்றாள். மயங்கி விழுந்த அரிச்சந்திரன் மூர்ச்சை தெளிந்து எழுந்ததும், வேறு வழியின்மையால் மனைவியை விற்கக் கூவ ஆரம்பித்தான். கொடுமையான கிழட்டுப் பிராமணன் ஒருவன் ஷைவ்வியா வையும், அவன் மகன் ரோஹித்தையும் விலை கொடுத்து வாங்கி, இருவரையும் கட்டி இழுத்துக் கொண்டு போனான். கண்ணிர் ததும்பக் கலங்கி நின்ற அரிச்சந்திரனிடம் விசுவாமித்திரர் வந்து பணம் கேட்டார். விற்ற பணத்தை விசுவாமித்திரரிடம் கொடுக்க, விசுவாமித்திரர் கோபம் பொங்க, “அரிச்சந்திரா! என்ன நினைத்து விட்டாய்? இந்தத் தொகையையா என் போன்ற ஒரு முனிவனுக்கு தட்சினையாகக் கொடுப்பது? இதை விசிறி அடித்து விடுவேன். இன்னும் நேரமிருக்கிறது. அதற்குள் எனக்குரிய தொகையைத் தர வேண்டும்” என்றார்.

இந்த இக்கட்டான சூழ்நிலையைச் சமாளிக்க தரும தேவதை ஒரு சண்டாள வடிவம் கொண்டு வந்தது. தன்னையே விற்கத் துணிந்த அரிச்சந்திரனிடம் பேசி வாங்க முயன்றான் அந்தச் சண்டாளன். பழைமையில் ஊறிய அரிச்சந்திரன், ஒரு கூடித்திரியன் ஒரு சண்டாளனுக்கு அடிமை ஆவதை விரும்பாமல் இருந்தான். பொழுது செல்லச் செல்ல வேறு வழி இல்லாததால் சண்டாளனுக்குத் தன்னை விற்க முடிவு செய்தான். அந்த நிலையில் அங்கு வந்த விசுவாமித்திரர், சண்டாளனிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு கடன் தீர்ந்தது என்று கூறிப் போனார்.

சண்டாளனுடன் சென்ற அரிச்சந்திரன் தனக்குரிய பணி யாது, ஊர் யாது என்பதை அறிந்து கொண்டான். பிணத்தைச் சுட வருகின்றவர்கள் கொடுக்கும் தொகையில் ஆறில் ஒரு பங்கு அரசனுக்குரியதாகும். அரைப் பங்கு சண்டாளனுக்கும், மூன்றில் ஒரு பங்கு அரிச்சந்திரனுக்கும் கொடுக்கப்படும். மி கக் கொடுமையானதும், பேய் பிசாசுகளின் உறைவிடம் ஆனதும், நரிகள் போன்றவற்றின் உறைவிடமும் ஆன அந்த மயானத்தில், அரிச்சந்திரன் பன்னிரண்டு மாதங்களைக் கழித்தான். ஒரு நாள் இன்னும் பன்னிரண்டு வருடங்கள் அங்கேயே இருந்த பிறகுதான் தனக்கு விடுதலை கிட்டும்' என்று கனவு கண்டான். இந்தக் கனவின் பயனாக மறுநாள் மனங்கலங்கி, தான் யார் என்பதைக் கூட மறந்து வாழத் தொடங்கினான். அந்த நிலையில் அவன் மகன் ரோஹித்வஷாவைப் பாம்பு கடித்துவிட அவன் உடலை எரிப்பதற்காக ஷைவ்வியா கொண்டு வந்தாள். மனங்கலங்கித் தன்னையே அறியாமல் இருந்த அரிச்சந்திரனுக்கு அது யாருடைய பிணம் என்றோ, அதைக் கொண்டு வந்தவள் யார் என்றோ தெரியவில்லை. வெகு நேரம் கழித்துத்தான் அவர்கள் யார் என்று அவனும், அவன் யார் என்று அவன் மனைவியும் அறிந்து கொண்டனர். ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு 'ஒ' என்று கதறினர். மகனையும் இழந்த நிலையில் வாழப் பிடிக்காமல் அவர்கள் இருவரும் நெருப்பில் வீழ்ந்து உயிர் விடத் துணிந்தனர். அப்பொழுது இந்திரன், விசுவாமித்திரர் ஆகிய அனைவரும் ஒன்று சேர்ந்து அவனைத் தடுத்து அவன் மனைவி மக்களோடு இந்த உடம்போடு சொர்க்கம் போகலாம் என்று கூறி, ரோஹித்வஷாவின்மேல் அமிர்தம் தெளித்து உயிர் கொடுத்தார். அது கேட்ட அரிச்சந்திரன், “அரசனாக இருந்த நான், என் கீழ் வாழும் மக்களின் சுக துக்கங்களில் பங்கு கொள்வதுதான் முறை. சந்தர்ப்பம் கிடைத்தது என்பதற்காக நான் மட்டும் மோட்சம் போகத் தயாரில்லை!” என்று அவன் கூறியவுடன், இந்திரன் அவனைப் பார்த்து, “அரிச்சந்திரா! நீ கூறுவது சரியில்லை. ஒவ்வொருவர் செய்த பாவ புண்ணியங் களுக்கு ஏற்ப ஒருவர் சொர்க்கம் செல்ல முடிகிறது. எல்லா மக்களும் ஒரே அளவாகப் பாவ புண்ணியங்களைச் செய்ய வில்லை. ஆகவே, நீ நினைப்பது போல நடைபெறுவது கடினம்’ என்று கூறினார். உடனே அரிச்சந்திரன் தான் சேகரித்திருந்த புண்ணியத்தின் பெரும் பகுதியைத் தன் குடிமக்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்து விட்டு, மகன் ரோஹித்வஷாவை அரசனாக்கினான். வந்த விமானத்தில் தான் தன் மனைவியோடு சொர்க்கம் சென்றான்.

வசிட்டரும் விஸ்வாமித்திரரும்

அரிச்சந்திரனுக்கும், அவனுடைய பரம்பரையினருக்கும் குல குருவாக இருந்தவர் வசிட்டர் ஆவார். விஸ்வாமித்திரர், அரிச்சந்திரனுக்கு இவ்வளவு தொல்லைகள் தந்த பொழுது, குல குருவாகிய வசிட்டர் அரிச்சந்திரனுடன் இல்லை. நீருக்கடியில் நின்று பன்னிரண்டு ஆண்டுகள் தவம் செய்யப் போய்விட்டார். அந்த இடைக் காலத்தில்தான் அரிச்சந்திரனுக்கு இந்தச் சோதனைகள் ஏற்பட்டன. அனைத்தும் முடிந்து, அரிச்சந்திரன் சொர்க்கம் வந்த பிறகு தவத்தில் இருந்து மீண்ட வசிட்டர், நடந்தவற்றைக் கேள்விப்பட்டார். கடுஞ்சினம் கொண்டார். விஸ்வாமித்திரரை ஒரு பறவையாகப் போகட்டும் என்று சபித்தார். இதை அறிந்த விஸ்வாமித்திரர், வசிட்டரும் ஒரு பறவையாகப் போகட்டும் என்று எதிர் சாபம் கொடுத்தார். இரண்டு பேரும் மாபெரும் தவம் உடையவர்களாதலின் இருவர் சாபமும் பலித்தன. இருவரும் பறவையாயினர். மலை போன்ற உடல் படைத்த மிகப் பெரிய பறவைகளாக ஆயினர். பறவையான பிறகும் ஒருவர்மேல் ஒருவர் கொண்டிருந்த கோபம் தணியவில்லை. இரண்டு பறவைகளும் ஓயாது ஆகாயத்தில் பெரும் போர் புரிந்தன. அப்போரின் விளைவாக பூமியில் உள்ள மலைகள் பிளந்தன. சில இடங்களில் பூமி வெடித்து நீரூற்று பெருகிற்று. இப்போரின் தேவையற்ற தன்மையையும், அதனால் பிற உயிர்கட்கு விளையும் தீமையையும் கண்டு அஞ்சிய பிற முனிவர்கள், தேவர்கள் ஆகியோர் பிரம்மனிடம் சென்று முறையிட்டனர். பிரம்மன் நேரே வந்து போரை நிறுத்துமாறு சொல்லியும், பயன் ஒன்றும் இல்லை. பிரம்மன் உடனே அவர்கள் இருவரையும் அவரவர் சுய வடிவிற்கு மாற்றிவிட்டார். மானிட வடிவு பெற்ற வசிட்டரும், விஸ்வாமித்திரரும் தங்கள் செயலுக்கு வெட்கித் தலைகுனிந்தனர். பிரம்மன் வசிட்டரைப் பார்த்து, விஸ்வாமித்திரர் செய்த காரியத்தால்தான் அரிச்சந்திரன் இந்த உடம்போடு மோட்சம் செல்ல முடிந்தது என்று கூறிய வுடன், வசிட்டரும் அதை ஏற்றுக் கொண்டு, விஸ்வாமித்திரரைக் கட்டிப் பிடித்து பகைமையை மறந்தார்.

மகாமதியும் சுமதியும்

பார்க்கவ பரம்பரையில் மகாமதி என்ற பிராமணனுக்குச் சுமதி என்றொரு மைந்தன் இருந்தான். இளைஞனாக வளர்ந்த பிறகும்கூட அவன் வெளியே எங்கும் செல்லாமல், யாரையும் பார்க்காமல், வாய் திறந்து பேசாமல் இருந்து வந்தான்.

மகாமதி, 'சுமதி! உடனடியாக வெளி உலகிற்குச் சென்று ஒரு குருவைத் தேடிக்கொள். வேதங்கள், சாத்திரங்கள் ஆகியவற்றை நன்கு கற்றுக் கொள். பிறகு ஒரு பெண்ணை மணந்து குழந்தை பெற்ற பிறகு காட்டிற்குச் சென்று தவம் செய்து, பிரம்ம ஞானம் பெற முயற்சி செய்” என்று அடிக்கடி கூறி வந்தார்.

பல நாட்கள், பலமுறை மகாமதி கூறியதைக் கேட்டு ஒரு நாள் மகன் சுமதி, வாய் திறந்து பேச ஆரம்பித்தான். "தந்தையே! தாங்கள் சொல்லும் பிரம்ம ஞானத்தை என்றோ அடைந்து விட்டேன். இப்பிறப்பில் உங்கள் மகனாக இருக்கின்ற நான் இதற்கு முன்னர் எத்தனையோ பிறப்புகள் எடுத்து உள்ளேன். புழுவில் தொடங்கி, விலங்குவரை பிறந்து, அதற்கு மேல் நான்கு வர்ணத்திலும் பல பிறவிகள் எடுத்துள்ளேன். நூற்றுக்கணக்கான தாய் தந்தையர், நூற்றுக்கணக்கான மனைவியர், ஆயிரக்கணக்கான நண்பர்கள் பகைவர்கள் ஆகியவர்களோடு பல பிறவிகள் வாழ்ந்துள்ளேன். பலரைக் கொன்றுள்ளேன். பலரால் பலமுறை கொல்லப்பட்டேன். ஒரு சில பிறப்புகளில் நல்ல குருமார்களைப் பெற்று வேத, சாஸ்திரங்களைப் பயின்றுள்ளேன். இப்பிறப்பில் அதிர்ஷ்ட வசமாக ஜதீஸ்மரா சக்தி எனக்குக் கிடைத்திருப்பதால், என் பழம் பிறப்புகளை எல்லாம் நினைத்துப் பார்க்க முடிகிறது. எனவே இப்பிறப்பில் புதிதாக ஒரு குருவைத் தேடிச் சென்று எதையும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் எனக்கில்லை. முந்தைய பிறப்புகளில் கற்றுக் கொண்ட வேத சாஸ்திர அறிவு என்னுள் நிறைந்துள்ளது” என்று கூறினான்.

அதிசயத்தால் வாயடைத்து நின்ற மகாமதி, மகனுடைய பழம்பிறப்புகளில் சிலவற்றையும், அப்பிறப்பில் நடந்த நிகழ்ச்சிகளையும் கேட்டு அறிந்து கொண்டான்.

மாண்டவி முனிவரை வென்றவள்

பிரதிஷ்தானா என்ற நகரத்தில் ஒரு பிராமணன் வசித்து வந்தான். அவன் தொழுநோயாளியாக இருந்த போதிலும், அவன் மனைவி அவனுடைய நோய்க்கு மருந்திட்டு அவனைக் காப்பாற்றி வந்தாள். சிடுமூஞ்சியாகிய அந்த பிராமணன் எவ்வளவு மோசமாக நடந்து கொண்டும், கற்பு நிலை வழுவாது அவன் மனைவி அவன்பால் எல்லையற்ற அன்புடையவளாய் நடந்து கொண்டாள். ஒருமுறை மேகங்கள் சூழ்ந்து ஒரே இருட்டாக இருக்கின்ற நேரத்தில், பிராமணன் வெளியே செல்ல வேண்டுமென்று சொன்னான். அவன் மனைவி இருட்டைப் பொருட்படுத்தாமல் அவனைத் தோளில் சுமந்து கொண்டு உலாவுவதற்குப் புறப்பட்டாள். நன்கு வழி தெரியாமையாலும், எதிரே இருப்பவர்கள் யார் என்று அறிய முடியாத இருட்டு ஆகையாலும் நோயாளியைத் தூக்கிச் சென்ற பொழுது, அந்த நோயாளியின் கை மற்றொருவர்மேல் பட்டு அவருடைய தவத்தைக் கலைத்து விட்டது. தவம் கலைந்த மாண்டவி முனிவர், “யாருடைய எந்த உறுப்புப் பட்டு என் தவம் கலைந்ததோ, அந்த உறுப்பை உடையவன் சூரிய உதயமானவுடன் இறந்து விடுவான்” என்று சாபம் கொடுத்தார். இந்தச் சாபத்தைக் காதில் வாங்கிக் கொண்ட பிராமணன் மனைவி கண் தெரியாத இருட்டில் எதிர்பாராமல் நடந்துவிட்ட இந்த மிகச்சிறிய குற்றத்திற்கு இவ்வளவு பெரிய தண்டனையா என்று மனம் பதறிப் போன அவள், சூரிய உதயமே ஆகாமல் போகட்டும்” என்று எதிர் சாபமிட்டாள். கற்புடைய பெண்ணின் சாபம் பலித்தது. பத்து நாட்களாகச் சூரியன் வெளிவரவில்லை. தேவர்கள், பிரம்மனிடம் சென்று முறையிட்டார்கள். பிரம்மன் உடனே காரணத்தை அறிந்து கொண்டார். “ஒரு கற்புக்கரசியின் சாபத்தால் இந்நிலை வந்தது. இதில் நாம் தலையிட்டு ஒன்றும் செய்ய முடியாது. மற்றொரு கற்புக்கரசியாகிய அனுசுயாவிடம் நீங்கள் சென்று வேண்டிக் கொண்டால் அவர் தலையிட்டு ஏதாவது செய்யலாம்” என்று பிரம்மன் கூறினார். அனைவரும் அனுசுயையிடம் சென்று முறையிட அனுசுயை அந்த ஏழைப் பிராமணத்தியினிடம் வந்து, அவளுடைய சாபத்தைத் திருப்பிப் பெற்றுக் கொள்ளுமாறு வேண்டினாள். மேலும் மாண்டவியின் சாபத்தால் அவள் கணவன் இறந்தால், அவன் உயிரை மீட்டுத் தரும் சக்தி தனக்கு உண்டு என்றும் அறிவித்தாள். பிராமணன் மனைவி சாபத்தை மீட்டுக் கொண்டாள். சூரியன் புறப்பட்டான், தொழுநோயாளியான பிராமணன் இறந்தான். உடனே அனுசுயை தன் ஆற்றலால் பிராமணன் உயிரை மீட்டாள். அதுமட்டுமல்லாமல், அவன் நோய் தீர்ந்து, இளமை யோடு வாழ அருள் செய்தாள். தேவர்கள் அனுசுயையின் உதவிக்கு நன்றி பாராட்டி அவள் வேண்டும் வரத்தைத் தருவதாகக் கூறினர். அனுசுயை, "திரிமூர்த்திகளும் தனக்குப் பிள்ளைகளாகப் பிறக்க வேண்டும்” என்ற தன் விருப்பத்தைத் தெரிவித்தாள். தேவர்கள், "அப்படியே ஆகட்டும்” என்றனர்.

அனுசுயா பெற்ற பிள்ளைகள்

தேவர்கள் கொடுத்த வரப்படியே அனுசுயைக்குத் திரிமூர்த்திகளில் ஒருவராகிய பிரம்மன், சந்திரன் என்ற பிள்ளையாகவும்: விஷ்ணு தத்தாத்ரேயர் என்ற பிள்ளையாகவும் சிவன் துர்வாசர் என்ற பிள்ளையாகவும் தோன்றினர்.

முன்னொரு காலத்தில் கார்த்தவீரியன் என்ற மன்னன் உலகை ஆட்சி செய்து வந்தான். அவன் இறந்த பிறகு அவனுடைய மகனாகிய அர்ச்சுனன் என்பவன் ஆட்சியை ஏற்க மறுத்துவிட்டான். “எப்படி ஆட்சி செய்தாலும் அரசன் என்பவன் நரகத்திற்கே போக நேரிடும். வரி வசூலிப்பது என்பதும், வரி விதிப்பது என்பதும் எனக்குப் பிடிக்காத காரியம். வியாபாரிகளிடமிருந்து

பன்னிரெண்டில் ஒரு பங்கும் விவசாயிகளிடமிருந்து ஆறில் ஒரு பங்கும் பெறுவது சரி என்று. சாஸ்திரம் சொல்லுகிறது. ஆனால், இது சரியா என எனக்குத் தெரியாது. வரி வசூலிப்பது மக்களைக் காப்பாற்றுவதற்கே யாகும். அப்படியிருந்தும் மக்களைக் காப்பாற்ற முடிகிறதா எனத் தெரியவில்லை. அப்படிக் காப்பாற்றாவிட்டாலும் நரகம் போக நேரிடும். எப்படிப் பார்த்தாலும் ஒர் அரசன் நரகம் போவது உறுதி. எனவே இந்த அரசாட்சி எனக்கு வேண்டாம்" என்று கூறினான். அங்கு இருந்த முனிவர்களில் கார்கா என்பவர், “அரசனே! நீ எதற்கும் பயப்பட வேண்டாம். தத்தாத்ரேய முனிவர் சாயா என்ற மலையில் ஒரு குகையில் வசித்து வருகிறார். தத்தாத்ரேயர் எப்படிப்பட்டவர் என்று உனக்குச் சொல்கிறேன், கேள். ஒருமுறை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் ஏற்பட்ட போரில் தேவர்கள் நன்றாக அடி வாங்கினர். அவர்கள் ஒடிச்சென்று தத்தாத்ரேயரிடம் முறையிட்டனர். முனிவர் அவர்களைப் பார்த்து இன்னும் ஒருமுறை அசுரர்களோடு போரிடுங்கள். போரிட்டுக் கொண்டே தான் இருக்கும் இடத்திற்கு அவர்கள் வரும்படி செய்யுங்கள் என்று கூறினார். அவர் சொன்னபடியே தேவர்களும் அசுரர்களைப் போருக்கு அழைத்தனர். போர் நடக்கையில் அசுரர்கள் தத்தாத்ரேயர் இருக்கும் இடத்திற்கு வருமாறு செய்தனர். தத்தாத்ரேய முனிவர் மகாவிஷ்ணு அவதாரம் ஆகையால், இலக்குமி அவர் கூடவே இருந்தார். இலக்குமியைப் பார்த்ததும் போர் நடப்பதை மறந்து இலக்குமியைத் தூக்கிக் கொண்டு ஒட முயன்றனர். ஒரு பல்லக்கில் இலக்குமியை வைத்து அப்பல்லக்கைத் தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டு ஒட ஆரம்பித்தனர். முனிவரின் உத்தரவுப்படி தேவர்கள் அந்த நேரத்தில் போர் தொடுத்தனர். அசுரர்கள் யாவரும் அழிந்து விழுந்தனர். இதற்கு ஒரு காரணம் உண்டு. இலக்குமி ஒருவருடைய கால் பக்கம் இருக்கும் போது, அவனுக்கு வீடு, மனை முதலிய வசதிகள் இருக்கும் இலக்குமி ஒருவனுடைய தொடைப் பக்கம் இருக்கும்போது அவனுக்குக் குழந்தைகள் பிறக்கும் இலக்குமி ஒருவனுடைய இதயத்தில் இருக்கும் போது அவன் எல்லா ஞானமும் பெறுவான்; இலக்குமி ஒருவனுடைய தலைப் பக்கம் இருந்தால் அவள் அவர்களை விட்டுப் போகப் போகிறாள் என்று அர்த்தம். இப்பொழுது அசுரர்கள் இலக்குமியைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டதால் அவள் அவர்களை விட்டுப் போய் விட, அசுரர்கள் போரில் மடிந்தனர். கார்கா சொன்னதைக் கேட்ட அருச்சுனன் தத்தாத்ரேயரிடம் சென்று அவரை வழிபட்டு, பல வரங்களைப் பெற்றான். ஒன்று, ஆயிரம் கைகளை உடையவனாக இருப்பது இரண்டு, ஈடு இணையற்ற உலகத்தின் தலைசிறந்த வீரனாலேயே தான் கொல்லப்பட வேண்டுமென்பது எல்லா இடங்கட்கும் செல்லக் கூடிய ஆற்றலைப் பெறுவது; பகைவர்கள் இருக்குமிடத்தை மானசீகமாகக் கண்டு அறிவது.

இந்த வரங்களைப் பெற்றுக் கொண்ட அருச்சுனனுடைய முடிசூட்டு விழா மூன்று உலகத்திலும் உள்ள பெரியோர்களெல்லாம் வந்து காணுமாறு நடைபெற்றது. அவன் ஹைஹய நாட்டின் மன்னனாக முடிசூட்டிக் கொண்டான்.

அலார்க்கா

முன்னொரு காலத்தில் மிக்க பலம் வாய்ந்த சத்ருஜித் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான். அவனுக்கு ரிதத்துவஜா என்ற மகன் இருந்தான். அரசகுமாரனாகிய அவன் பலத்தில் இந்திரனையும், அழகில் அஸ்வினிகளையும், அறிவுக் கூர்மையில் பிருஹஸ்பதியையும் ஒத்து இருந்தான். நற்பண்புகளுக்கெல்லாம் உறைவிடமான அவனுக்கு பிராமண, க்ஷத்டித்திரிய, வைசியர்களில் பல பல நண்பர்கள் இருந்தனர். அதே நேரத்தில் நாக லோகத்தில் இருந்து அஸ்வதாரா என்ற மன்னனின் மைந்தர்கள் இருவர் ரிதத்துவஜாவிடம் நட்புக் கொண்டனர். அவனுடைய நற்பண்புகளில் ஈடுபட்ட இருவரும், பகலெல்லாம் இவனுடன் இருந்துவிட்டு இரவு நேரத்தில் மட்டும் தங்கள் உலகிற்குச் சென்றனர். ஒருநாள் அஸ்வதாரா தன் மைந்தர்களைப் பார்த்து, “பிள்ளைகளே! பல நாட்களாகப் பகல் நேரத்தில் உங்களைக் காணவே முடியவில்லை. இரவில் மட்டும் இங்கே வருகிறீர்கள். பகல் பொழுதை எங்கே கழிக்கிறீர்கள்?" என்று கேட்டவுடன், மைந்தர்கள் இருவரும் ரிதத்துவஜா பற்றியும், அவனுடைய பராக்கிரமம், நற்பண்புகள் பற்றியும்

கூறினர். இதைக்கேட்ட அஸ்வதாரா, “நல்லது பிள்ளைகளே! பல நாட்களாக அவருடைய உபசரிப்பைப் பெற்றுக் கொண்ட நீங்கள் பதிலுக்கு ஏதாவது செய்ய வேண்டாமா? நம்முடைய நாட்டில் மிகுதியாகக் கிடைக்கின்ற பொன், வெள்ளி, மாணிக்கம், வைரம் ஆகியவற்றை எடுத்துச் சென்று உங்கள் நண்பனுக்குப் பரிசளியுங்கள்” என்று கூறினார். "தந்தையே! இந்தப் பொருள்களை அவன் ஏற்றுக் கொள்வது கடினம். அவனுடைய நாட்டிலேயே இவை ஏராளமாக இருக்கின்றன. மேலும் அவனைப் பற்றி ஒரு நிகழ்ச்சியைச் சொல்லுகிறேன், கேளுங்கள்.”

ஒருமுறை காலவன் என்ற பிராமணன் ஒர் அதிசயமான குதிரையை சத்ருஜித்துக்குப் பரிசளித்தான். அந்தக் குதிரை செல்லாத இடமே இல்லை. நான் வசிக்கும் ஆசிரமத்தில் தைத்திரியர்கள் பல மிருகங்களின் வடிவத்தினை ஏற்றுக் கொண்டு வந்து தொல்லை தருகின்றனர். அப்போது இந்தக் குதிரை ஆகாயத்தில் இருந்து வந்தது. இந்தக் குதிரையை வைத்துக் கொண்டு உன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள் என்று அசரீரி பிறந்தது. அதனால்தான் குதிரையை உங்களிடம் கொண்டு வந்தேன்’ என்று கூறினான் பிராமணன். இதைக் கேட்டு மகிழ்ந்த சத்ருஜித் தன் மகனை அழைத்து, அக் குதிரையை அவனுக்குப் பரிசளித்து, இந்த பிராமணனுக்கு இடையூறு செய்யும் தைத்திரியர்களை அழித்து வருவாயாக என்றான். ரிதத்துவஜா அந்த மாயக் குதிரையில் ஏறிக் கொண்டு அந்த பிராமணர் ஆசிரமத்தை அடைந்தான். தைத்திரியர்கள் பன்றி, புலி, சிங்கம் ஆகிய வடிவங்களில் ஆசிரமத்திற்குப் பக்கத்தில் வந்தனர். அனைவரையும் வீழ்த்திய அரசகுமாரன் ஒரே ஒரு பன்றி மட்டும் தப்பி ஒடுவதை அறிந்து, அதைத் துரத்திச் சென்றான். கடைசியாக அந்தப் பன்றி ஒரு பிலத்திற்குள் நுழைந்தது. அதனுள் சென்ற அரசகுமாரன் இருட்டாக இருந்த பகுதியைக் கடந்து புதிய உலகத்திற்கே வந்து விட்டான். அனைத்தும் பொன்னால் ஆன அரண்மனையில், யாரும் நடம்ாட்டமே இல்லாதிருப்பதைக் கண்டான். ஆனாலும் அழகே வடிவான ஒரு பெண் ஒரிடத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டான். அவளை யாரென்று கேட்க மதலசா என்ற அப்பெண், தான் விஷ்வவக என்ற கந்தர்வனின் மகள் என்றும், பாதாள கேது என்ற அசுரன் தன்னை இங்கே வைத்திருப்ப தாகவும், தன்னைத் திருமணம் செய்து கொள்ள அவள் ஏற்பாடு செய்வதாகவும் கூறினாள். ரிதத்துவஜா அவளை மணக்க விரும்பினான். மணம் செய்து வைக்கும் ஆச்சாரியன் இல்லை ஆதலால், அப்பெண் தன் குருவான தும்புருவை வேண்டினாள். உடனே அவர் அங்குத் தோன்றி, இருவருக்கும் மணம் செய்வித்தார். மணமக்கள் அந்த இடத்தை விட்டுப் புறப்பட நினைக்கையில், பாதாள கேதுவும் அவன் துணைவர் களும் படையெடுத்து வந்து அரசகுமாரனைக் கொல்ல நினைத்தனர். துவஸ்திரா என்ற அஸ்திரத்தைப் பயன்படுத்தி தைத்திரியர்கள் அனைவரையும் அழித்தான். பிறகு அப் பெண்ணோடு தந்தையை வந்து வணங்கினான். அரசகுமாரன் இத்தனை சாகசச் செயல்களைச் செய்ய உதவியாக இருந்தது அந்த பிராமணன் கொடுத்த குதிரை. அக்குதிரையின் பெயர் 'குவலயா என்பதாகும். அக் குதிரையை ஒட்டும் அரசகுமாரன் 'குவலயஷ்வா என்று பெயர் பெற்றான்.

சில நாட்கள் கழித்து மன்னன் சத்ரஜித் தன் மகனை அழைத்து, "மகனே! நீ பகலில் ஒரு பகுதியில் உலகத்தைச் சுற்றி வந்து தவசிகளுக்குத் துன்பம் தரும் தானவர்களையும் தைத்திரியர்களையும் அழைத்து வருவாயாக!” என்று கட்டளை இட்டான். அன்று முதல் அரசகுமாரன் மதியம் வரை உலகைச் சுற்றி வந்து மாலைப் பொழுதில் தன் மனைவியாகிய மதலசாவுடன் பொழுதைக் கழித்து வந்தான். ஒருமுறை அவன் ஒரு போலி முனிவனைச் சந்திக்க நேர்ந்தது. அந்தப் போலி முனிவன், அரசகுமாரனால் கொல்லப்பட்ட பாதாள கேதுவின் தம்பியாகிய தாலகேது. அவன் முனிவன் வேடத்தில் இருந்ததால், அரசகுமாரன் அவனை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. ஆனால் தாலகேது அரசகுமாரனை அடையாளம் கண்டு கொண்டு பழிவாங்க முடிவு செய்தான். போலி முனிவர், “அரசே! நான் ஒரு பெரிய யாகம் செய்ய வேண்டும். அதற்குப் பொருள் இல்லை. தங்கள் கழுத்தில் இருக்கும் மணிமாலையைத் தந்தால் அதை வைத்து யாகம் செய்ய முடியும்” என்றார். அவன் வஞ்சனையை அறியாத அரசகுமாரன்,
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
மாலையைக் கழற்றிக் கொடுத்தான். பெற்றுக் கொண்ட போலித் துறவி, “நான் குளித்து விட்டு வரும் வரை இங்கேயே இரு” என்று சொல்லிவிட்டுப் போனான். குளிக்கச் செல்லாமல் சத்ரஜித் மன்னனிடம் அரசகுமாரனின் மாலையைக் காட்டி அவன் இறந்து விட்டதாக ஒரு கதையைக் கட்டி விட்டான். இதைக் கேட்டவுடன் அரசகுமாரன் மனைவி மதலசா உடனே உயிர் விட்டாள். திரும்பி வந்த போலிச் சாமியார் அரசகுமாரனைப் பார்த்து, மிக்க நன்றி. நீ போகலாம் என்றான். அரசகுமாரன் தந்தையிடம் வந்த பொழுதுதான் நடந்தது தெரிந்தது. மனமொடிந்த அரச குமாரன் மனைவியை நினைத்தே உருகலானான்.

நாக மன்னன் தந்த பரிசு

நாகலோக அரசனாகிய அஸ்வதாரா, தன் பிள்ளைகள் மூலம் அரசகுமாரன் கதையினைக் கேள்விப்பட்டு இமயம் சென்று சரஸ்வதியை நோக்கித் தவம் செய்தான். சரஸ்வதி வெளிப்பட்டதும், உலகில் ஈடு இணையற்ற பாடகனாகத் தான் ஆகவேண்டும் என்று வரம் கேட்டான். அந்த வரத்தைப் பெற்றுக் கொண்டு கைலயங்கிரிக்குச் சென்று சிவன் காதில் படும்படியாக அற்புதமாகப் பாடினான். மகிழ்ந்த சிவன், “உனக்கு என்ன வரம் வேண்டும்” என்று கேட்க, "ஐயனே! இறந்து போன மதலசா எனக்கு மகளாக வரவேண்டும். அது குழந்தையாகப் பிறந்து வளராமல், அவள் இறக்கும் பொழுது, எந்த வயதுடன் எவ்வளவு அழகுடன் இருந்தாளோ அப்படியே என் மகளாகப் பிறக்க வேண்டும்” என்று வரம் கேட்டான். அப்படியே ஆகட்டும் என்று சிவன் சொல்ல, நாக மன்னனாகிய அஸ்வதாரா உண்மையில் பல தலைகள்ை' (படங்கள்) உடைய நாகம் ஆதலால், ஒரு படத்தில் இருந்து மதலசா வந்தாள். அவளை அழைத்து வந்த அஸ்வதாரா, தன் பிள்ளைகளுக்குக் கூட அவள் வருகையை அறிவிக்க வில்லை. தன் பிள்ளைகளை அழைத்து, "இத்தனை முறை பூலோகம் சென்று ரிதத்துவஜாவுடன் பொழுதைக் கழிக்கிறீர்களே. ஒருமுறை அவனை இங்கு அழைத்து வாருங்கள்” என்றான். பிராமண வடிவுடன் அந்தப் பிள்ளைகள் ரிதத்துவஜாவுடன் இருப்பது வழக்கம். அதே வடிவுடன் சென்று அவனைத் தங்கள் வீட்டிற்கு வருமாறு அழைத்தனர். பின் மூவருமாக அங்கே வந்தனர். நண்பர்கள் மூவரும் கோமதி ஆற்றின் நடுப் பகுதியில் நாகலோகம் செல்லும் வழி இருந்ததால், அதில் இறங்கினர். இப்பொழுது நண்பர்கள் இருவரும் நாக வடிவு எடுத்ததைக் கண்ட அரசகுமாரன் ஆச்சரியப்பட்டான். நண்பர்கள் இருவரும் தங்கள் கதையைச் சொல்லி, நாக லோக மன்னனாகிய தங்கள் தந்தை அஸ்வதாராதான் ரிதத்துவஜாவை அழைத்து வர ஏவினான்’ என்ற உண்மையையும் கூறினார்கள். மகிழ்ந்த அரசகுமாரன் நாகலோகத்தில் இறங்கி பாம்பு வடிவத்தில் இருந்த அஸ்வதாரா மன்னன் பொன்னும் மணியும் இறைத்த சிம்மாசனத்தில் இருக்க, வணக்கம் செய்தான். மன்னன் அஸ்வதாரா, “அரசகுமாரனே! என் பிள்ளைகள் மூலம் உன்னுடைய அறிவு, அழகு, பராக்கிரமம் ஆகியவற்றை அறிந்தேன். என் பிள்ளைகளிடம் நீ காட்டிய அன்புக்குரிய பரிசாக ஏதாவது ஒன்றைத் தர விரும்புகிறேன், கேள்” என்றான். அது கேட்ட அரசகுமாரன், “நாக மன்னரே! நன்றி பெரிதும் உடையேன். என் தந்தையிடம் எல்லாச் செல்வங் களும் நிறைந்திருக்கின்றன. எனக்குள் பேராசை கிடையாது. நான் எதையும் விரும்பவில்லை” என்று கூறினான். அது கேட்டு மகிழ்ச்சி அடைந்த நாக மன்னன், “நல்லது அரச குமாரனே. இந்த உலகப் பொருள்களில் உனக்குப் பற்று இல்லை என்பதை அறிந்து பெருமகிழ்ச்சி அடைகிறேன். இருந்தாலும் நீ வியப்படையக்கூடிய பரிசினை உனக்கு வழங்கப் போகிறேன்” என்று கூறி, மதலசாவை வரவழைத் தான். வியப்பால் திடுக்குற்ற அரசகுமாரன் இது ஏதோ மாயை நாடகம் என்று நினைத்து விட்டான். அவன் குழப்பத்தை அறிந்த மன்னன் நடந்தவற்றைக் கூறி, "இப்பொழுது என் மகளாகப் பிறந்த இவளை ஏற்றுக் கொண்டு நெடுநாள் வாழ்வாயாக’ என்று ஆசீர்வதித்தான். அங்குத் தங்கி அவன் உபசரிப்பை ஏற்றுக் கொண்ட அரசகுமாரன், மனைவியோடு தன் நாட்டிற்கு வந்தான்.

சிலகாலம் கழித்து, சத்ரஜித் காலமாகி விடவே, ரிதத்துவஜா அரசனாகி விட்டான். அரசனான பிறகு குவலயஷ்வா என்று அழைக்கப்படும் ரிதத்துவஜாவிற்கும், அவன் மனைவி மதலசாவிற்கும் ஒருவர் பின் ஒருவராக, விக்ரந்தா, சத்ருமத்தனா, சுவாகு என்ற மூன்று பிள்ளைகள் பிறந்தனர். சிவனுடைய அருளால் மறுபிறவி பெற்ற மதலசா பெரிய ஞானியாக ஆகிவிட்டாள். எனவே இந்த மூன்று மைந்தர்கட்கும் ஆத்மாவின் இலக்கணத்தையும், உலகப் பொருள்களையும், மாயை, நிலையாமை ஆகியவற்றையும் நன்கு சொல்லிக் கொடுத்தாள். அதன் பயனாக அரசகுமாரர்களாகப் பிறந்த இந்த மூவரும் உலக விவகாரங்களில் எவ்வித ஈடுபாடும் இல்லாமல் ஆன்ம விசாரணையில் இறங்கி விட்டனர். இதனை அடுத்து நான்காவது பிள்ளை பிறந்தது. அலார்க்கா என்று பெயரிட்ட பொழுது, மன்னன் குவலயஷ்வா மனைவியைப் பார்த்து ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டிய சத்ரியன் அறிய வேண்டியவற்றை இவனுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும் எனறான.

அவன் மனைவி அதை எதிர்த்து, இவை அனைத்துமே மாயை. அரசன் என்று ஒருவனுமில்லை. அவனுக்குப் பகை என்று ஒன்றுமில்லை. ஒர் ஆத்மாவிற்கு நண்பன் என்றோ, பகைவன் என்றோ யாருமில்லை. எனவே போர் புரிய வேண்டும் என்ற அவசியமில்லை என்று கூறினாள்.

அலார்க்காவின் துறவு

ரிதத்துவஜாவின் நான்காவது பிள்ளையாகிய அலார்க்கா, சத்திரியர்களுக்குரிய கல்வி கற்று அரசை ஏற்றுக்கொண்டான் அவன் தாய் மதலசா காட்டுக்குப் போகும்போது மகனிடம் ஒரு மோதிரத்தைத் தந்தாள். 'மகனே! இதற்குள் ஒரு கடிதம் இருக்கிறது. எப்பொழுதாவது உனக்குப் பெரும் துன்பம் வந்து செய்வதறியாது மனம் பேதலித்தால், அந்த நேரத்தில் இதனுள் இருக்கும் கடிதத்தை எடுத்துப் படித்துப் பார்” என்று சொல்லிவிட்டுக் கணவனுடன் காட்டுக்குப் போய்விட்டாள்.

மிக்க பலவானும், அறிவாளனும் ஆகிய அலார்க்கா, மிக்க நேர்மையாகவும் மகிழ்ச்சியுடனும் ஆட்சி செய்து வந்தான். அவனுடைய மூத்த அண்ணன் சுவாகு காட்டில் தவம் புரிந்து கொண்டிருந்தான். தன் தம்பி உலக இன்பங்களில் சிக்கி உழன்று கொண்டிருக்கிறான் என்பதறிந்து அவனுக்கு ஒரு பாடம் கற்பிக்க எண்ணினான். நேரே காசிராஜாவிடம் சென்று, அலார்க்காவின் ராஜ்ஜியத்தைத் தனக்குத் தருமாறு ராஜாவைச் சொல்ல வைத்தான். அலார்க்காவிற்கு சுகபோகங்களை விட்டுக் கொடுக்க மனமில்லை. எனவே மறுத்து விட்டான். இப்பொழுது காசிராஜா அலார்க்காவின் ராஜ்ஜியத்தின்மீது படையெடுத்தான். தோல்வி அடைந்த போது தாய் தந்த மோதிரம் நினைவுக்கு வர, அந்தக் கடிதத்தை எடுத்துப் படித்துப் பார்த்தான். 'ஆத்மாவின் இலக்கணம் பற்றியும், ராஜ்ஜியம், யானைப் படை, குதிரைப் படை இவையெல்லாம் மனத்தின் ஆசாபாசங்களைப் பொறுத்ததே என்றும், ஆத்மா இந்த எதனோடும் தொடர்பில்லாதது என்பதை அறிய வேண்டும் என்றும் எழுதி இருந்தது. உண்மையறிவு பெற்ற அலார்க்கா, காசிராஜாவிடம் சென்று தமயன் சுவாகுவே ராஜ்ஜியத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறினான்.

சுவாகு சிரித்துக் கொண்டே என்றுமே தனக்கு இம்மாதிரி பற்றுக்கள் இல்லை என்றும், தம்பியின் போக்கைத் திருத்தவே இந்த நாடகம் ஆடியதாகவும், தம்பி மனம் திருந்தியது கண்டு மகிழ்ச்சி அடைவதாகவும் கூறிவிட்டுக் காட்டிற்குப் போய் விட்டான்.

காசிராஜாவும் சிரித்துக் கொண்டே, சுவாகுவும் தானும் சேர்ந்து ஆடிய நாடகம் இது என்று கூறிவிட்டு, அலார்க்காவின் ராஜ்ஜியத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டான்.

தன் நாட்டிற்குத் திரும்பி வந்த அலார்க்கா நல்ல ஞானம் கைவரப் பெற்றவனாய்ப் பந்த பாசம், அதிகார ஆசை என்பவற்றிலிருந்து முற்றிலும் விடுபட்டவனாய் ஆகிவிட்டான். மறுபடியும் அரசனாகும் விருப்பம் ஒருசிறிதும் இல்லாத அலார்க்கா, தன் மூத்த மகனுக்குப் பட்டம் கட்டிவிட்டுத் தவம் செய்யக் காட்டிற்குப் போய் விட்டான்.

இக்கதையை சுமதி சொன்னதும் அவன் தந்தை மகாமதி 'இத்தனை யாகங்களைச் செய்து நான் என்ன பயனை அடையப் போகிறேன். இந்த விநாடியே எல்லாவற்றையும் விட்டுவிட்டுக் காடு சென்று தவம் செய்யப் போகிறேன்’ என்றான். தந்தையும், மகனும் இணைந்தே காடு நோக்கிப் புறப்பட்டு விட்டனர்.

இந்தக் கதைகளை எல்லாம் ஜெய்மினி முனிவருக்கு எடுத்துக் கூறிய நான்கு பறவைகளும் அமைதி அடைந்து விட்டன. ஜெய்மினியின் ஐயங்கள் அனைத்தும் தீர்ந்து விட்டன.

படைப்பின் கதை

ஜெய்மினி முனிவர், பல சந்தேகங்களையும் தீர்த்து வைத்த அந்தப் பறவைகளைப் பார்த்து, பிரபஞ்சப் படைப்பின் வரலாற்றை விளக்கமாகக் கூறுங்கள் என்று கேட்க, பறவைகள் சொல்ல ஆரம்பித்தன.

(பறவைகள் சொல்லிய படைப்பு வரலாறு, பிரம்ம புராணம் முதலியவற்றில் கூறியதை அப்படியே திருப்பிச் சொல்கின்றன. ஆதலின் அதனை விரிவாகச் சொல்லாமல், கருத்தை மட்டும் தந்துள்ளோம்)

பரப்பிரம்மம் வாக்கு, மனம், கற்பனை ஆகியவற்றைக் கடந்திருப்பது. வடிவோ உருவோ இல்லாமல் எங்கும், எல்லாவற்றிலும், எப்பொழுதும் ஊடுருவி நிற்பது. தொடக்கமோ முடிவோ இல்லாதது. குணம், குறி கடந்தது.

தொடக்கத்தில் எங்கும் தண்ணிர்- அதில் ஒரு பெரிய முட்டை வளர்ந்து கொண்டே வருதல்- அதனுள் பிரம்மன் தோன்றுதல்- பிரபஞ்சத்தில் உள்ள எல்லாப் பொருட்களும் அதனுள் இருத்தல்- முட்டையினுள் இருந்து வெளியே வந்த பிரம்மன் புல் பூண்டு முதல் ஜடப் பொருள்களையும், புழு, பறவை, பாம்பு, மிருகங்கள் அனைத்தையும் படைத்தல்-இச்சா மாத்திரையாய் பிருகு, அத்ரி முதலிய ஒன்பது முனிவர்களைப் படைத்தார். வேதங்கள், புராணங்கள் ஆகியவற்றைத் தமது நான்கு முகங்களாகப் படைத்தார்- நீரில் உறங்குவதால் நாராயணன் என்ற பெயர் பெறுதல்- ருத்ரன் பிரம்மன் மடியில் தோன்றுதல், பெயர் வேண்டி அழுதல், ருத்ரன் என்று பெயர் பெறுதல்.

வருதினியின் கதை

வருணா நதிக் கரையில் உள்ள அருணஸ்பதா என்ற ஊரில் ஒரு பிராமண இளைஞன் இருந்தான். வேத சாஸ்திரங்களில் வல்லவனாய் இருந்ததோடு, அழகிய அஸ்வினிகளைவிட அழகனாக இருந்தான். இவ்வளவு இருந்தும் அந்த இளைஞன் மனத்தில் உலகத்தைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை மிகுதியாக இருந்தது- அந்த இளைஞனை நாடி மற்றொரு பிராமணன் விருந்தினனாக வந்தான். வந்தவன் உலகின் பல்வேறு பாகங்களில் தான் கண்ட காட்சிகளை எல்லாம் வருணித்தான். அதைக்கேட்ட இந்த இளைஞன், “உன்னைப் பார்த்தால் இளைஞனாகத்தானே தெரிகிறாய்! அப்படி இருக்க இந்த வயதிற்குள் எப்படி உன்னால் இத்தனை இடங்களையும் பார்க்க முடிந்தது?” என்று கேட்டான். வந்தவன் மூலிகைகள், மந்திர உச்சாடனம் என்பவற்றில் தான் கைதேர்ந்தவன் என்றும், குறிப்பிட்ட சில மூலிகைகளைக் காலில் தடவிக் கொண்டால் ஒரு விநாடி நேரத்தில் எத்தனை தூரமாக இருந்தாலும், விரும்பிய இடத்திற்குப் போய்ச் சேரலாம் என்றும் கூறினான். அவ்வாறு சொல்லியதோடு மட்டுமல்லாமல், விருந்தினனாக வந்த அவன் இந்த இளைஞன் காலில் பல மூலிகைகளைத் தேய்த்து விட்டான். இந்த இளைஞன் இமய மலைக்குச் சென்று பார்க்கவேண்டும் என்று நினைத்த மாத்திரத்தில், தான் இமயத்தின் உச்சியில் நிற்பதைக் கண்டான். அங்குள்ள செடி, கொடிகள், மரங்கள், அருவிகள், ஓடைகள் என்பவற்றைப் பார்த்துத் தன்னை மறந்து நின்றான். நின்ற இடம் பனிக் கட்டியும் ஈரமும் இருந்த இடம் ஆதலின், மெல்ல அவன் காலில் தேய்த்திருந்த மூலிகைகள் கரைந்து ஒடிவிட்டன. அதை அறியாத இளைஞன் மாலை நேரத்தில் தன் ஊருக்கு வரவேண்டும் என்று நினைத்தான். காலில் மூலிகை இல்லாததால் அவனால் எங்கும் செல்ல முடியவில்லை.

இந்த நிலையில், அவன் அழகைக் கண்டு மயங்கிய வருதினி என்ற அப்சரஸ் அவனை நாடி தன்னை மணந்து கொள்ள வேண்டும் என்று கேட்டாள். ஆனால் இந்தப் பிராமணன் அவள் அன்பை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. பழைய முறையில் ஆகாய மார்க்கமாக வர முடியாதாகையால், அக்னி தேவனை வேண்டி, அவன் உதவியால் தன் இருப்பிடம் வந்து சேர்ந்தான்.

அவன் போய்விட்டாலும் அவனையே நினைந்து மெலிந்த வருதினி அந்த வனத்திலேயே தங்கி விட்டாள். முன்னர் அவளால் வேண்டாம் என்று ஒதுக்கப்பட்ட கலி என்ற கந்தர்வன் இப்போது அவள் மனநிலை அறிந்து, அவள் விரும்பிய பிராமண இளைஞனின் வேடம் கொண்டு அவளிடம் வந்தான். உண்மை அறியாத வருதினி அவனை மணந்து கொண்டாள். அவர்களுக்கு ஒரு பிள்ளையும் பிறந்தது. உடனே அக்கலி அவளைவிட்டுப் போய்விட்டான். வருதினியின் மகன் ஸ்வரோச்சா வளர்ந்து பெரியவனாகி சாத்திரங்களை எல்லாம் கற்றுத் தேர்ந்து அழகுள்ள இளைஞனாக இருந்தான்.

ஸ்வரோச்சா ஒருமுறை மந்தார மலைக்குச் சென்ற பொழுது ஒர் இளம்பெண் என்னைக் காப்பாற்றுங்கள் என்று சொல்லி அவன் எதிரே வந்தாள். “ஏன் ஓடி வருகிறாய்? உனக்கு என்ன தீங்கு ஏற்பட்டது?" என்று ஸ்வரோச்சா கேட்ட உடன், அப்பெண் தன் கதையைச் சொல்ல ஆரம்பித்தாள். "ஐயா! மனோரமா என்ற நானும், விபவரி, கலாவதி என்ற என் தோழிகளுடன் கைலாசத்தில் சுற்றிப் பார்த்துக் கொண் டிருந்தோம். முனிவர் ஒருவர் பெருந்தவத்தில் ஈடுபட்டிருந்த தால், அவருடைய உடம்பு இளைத்து, கண்கள் குழி விழுந்து பார்ப்பதற்கு பயங்கரமான தோற்றத்துடன் இருந்தார். அவரைப் பார்த்து நான் ஆணவத்தால் கேலி செய்துவிட்டேன். 'ஒரு ராட்சசன் வந்து என்னைப் பிடித்துக் கொள்வான்' என்று சாபமிட்டார். இவ்வளவு கொடிய சாபம் தருவது ஒரு முனிவருக்கு அழகல்ல' என்று என் தோழிகள் சொன்னவுடன், அவர் மேலும் கோபம் கொண்டு, ஒருத்திக்குக் குஷ்ட ரோகமும், இன்னொருத்திக்கு கூடியரோகமும் பீடிக்கட்டும்’ என்று சாபமிட்டார்.

"இது நடந்து மூன்று நாட்களாயின. இப்போது ஒரு கொடிய ராட்சசன் என்னைப் பின்தொடர்ந்து வருகிறான். என் கையில் ஒர் அற்புதமான ஆயுதம் இருக்கிறது. இந்த ஆயுதம் ருத்ரனால், சுவயம்பு மனுவிற்குத் தர, சுவயம்புமனு அதை வசிட்டருக்குத் தர வசிட்டர் அதை என் தாத்தாவிற்குத் தர, என் தாத்தா எனக்கு அதைத் தந்துள்ளார். எப்படிப் பட்டவரையும் அழிக்கக்கூடிய இந்த ஆயுதத்தை எப்படி வைத்திருப்பது, எப்படிப் பிரயோகிப்பது, எப்படி மீட்டுக் கொள்வது என்பதை நான் உங்களுக்குச் சொல்லித் தருகிறேன்” என்று கூறிவிட்டு, அந்த வித்தையினை அவனுக்குக் கற்றுத் தந்தாள். ஸ்வரோச்சா ஆயுதத்தை வாங்கிக் கொண்டதும் அரக்கன் அப்பெண்ணைப் பிடிக்க வந்தான். முனிவருடைய சாபப்படி பெண்ணைப் பிடிக்கட்டும். பிறகு மீட்டு விடலாம் என்ற நினைவில் ஸ்வரோச்சா சும்மா இருந்தான். அரக்கன் அப்பெண்ணைப் பிடித்துக் கொண்ட வுடன், இவன் ஆயுதத்தைக் கையில் எடுத்தான். அப்போது அந்த அரக்கன், ‘என் கதையைக் கேள்' என்று தன் வரலாற்றைச் சொல்லத் தொடங்கினான்.

அரக்கனின் கதை

“இளைஞனே! என் சொல்லைக் கேட்டு என்னைக் கொன்று விடாமல் விட்டாயே, உனக்கு என் நன்றி. இப் பெண் என்னுடைய மகள்தான். இவளுடைய தந்தையாகிய எனக்கு இந்திவரா என்று பெயர். ஆயுர்வேதத்தில் மிக வல்லவராகிய பிரமமித்ராவிடம் சென்று அவ்வித்தையைக் கற்றுக்
கொடுக்குமாறு கேட்டேன். அவர் மறுத்து விட்டார். எனவே அவருக்குத் தெரியாமல் ரகசியமாக மற்ற மாணவர்களுக்குப் பாடஞ்சொல்லும் பொழுது ஒட்டுக் கேட்டேன். இக்கலையை நன்கு தெரிந்து கொண்டேன். நான் இக்கலையில் வல்லவனாகிய செய்தி எப்படியோ பிரமமித்திரருக்குத் தெரிந்து விட்டது. அரக்கனாகப் போகுமாறு சபித்து விட்டார். அவர் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டேன். மனமிரங்கிய அவர், 'நீ ராட்சசனாகத் திரியும் பொழுது உன் மகள் என்று தெரியாமலேயே அவளைப் பிடித்துத் தின்ன முற்படுவாய். அந்த விநாடியில் உனக்கு விடுதலை கிடைக்கும் என்று விமோசனம் தந்தார். இப்பொழுது இவள் என் கையில் சிக்கியவுடன் என் சாபம் தீர்ந்து விட்டது. தயைகூர்ந்து என் மகளை நீ திருமணம் செய்து கொள்” என்று கூற, ஸ்வரோச்சா அதற்குச் சம்மதித்தான் என்றாலும் மனோரமா, "என் தோழிகள் இருவரும் இந்தப் பரிதாபமான நிலையில் இருக்கும் பொழுது நான் மட்டும் எப்படி மணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக இருக்கமுடியும்?” என்றாள். அதைக்கேட்ட ஸ்வரோச்சா மனோரமாவின் தந்தையான இந்திவராவிடம் கற்றுக்கொண்ட ஆயுர்வேதத்தைப் பயன்படுத்தி, அவள் தோழிகள் இருவரையும் குணப்படுத்தினான். பின்பு மூவரையும் திருமணம் செய்து கொண்டான். இம் மூவருள் விபவரி உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் பேசும் மொழியை அறிந்தவளாதலின், அக்கலையை அவனுக்குக் கற்றுக் கொடுத்தாள்.

இரண்டாவது மனுவின் கதை

மூன்று மனைவிகளுடன் வாழ்ந்த ஸ்வரோச்சா, மனோரமாவின் மூலமாக விஜயன் என்ற மகனையும், விபவரியின் மூலமாக மேருநந்தா என்ற மகளையும், கலாவதி மூலமாகப் பிரபதா என்ற மகனையும் பெற்றான். இம் மூவரும் பருவம் அடைந்தவுடன் ஸ்வரோச்சா தன் மூன்றாவது மனைவி கலாவதியிடம் கற்றுக் கொண்ட பத்மினி சக்தியைப் நாள் ஸ்வரோச்சா வேட்டையாடச் சென்றபொழுது ஒரு காட்டுப் பன்றியைத் துரத்திச் சென்று அதன்மேல் அம்பு எய்கையில், ஒரு மான் எதிரே வந்து, ஸ்வரோச்சா! அதன் மேல் அம்பை எய்யாதே! என் மேல் எய்து என்னைக் கொன்றுவிடு' என்றது. ஆச்சரியம் அடைந்த ஸ்வரோச்சா, "நீ யார்? நான் ஏன் உன்னைக் கொல்ல வேண்டும்?” என்று கேட்டான். அதற்கு அந்த மான், நான் உன்மேல் அளவற்ற காதல் கொண்டுள்ளேன்' என்றது. ஸ்வரோச்சா சிரித்துக் கொண்டே “ஒரு மனிதன் மானை எப்படி மணம் புரிய முடியும்?” என்றான். அதற்கு அந்த மான், "உனக்குச் சந்தேகம் இருந்தால் என்னைக் கட்டிப் பிடித்துக் கொள்” என்றது. மான் சொன்னபடியே ஸ்வரோச்சா அதனைக் கட்டிப் பிடித்தான். உடனே அது அழகிய பெண்ணாக மாறிற்று. நான் இந்த வனத்திற்கு அதிதேவதை. என்னை மணந்து கொள் என்று கூறியவுடன் ஸ்வரோச்சா நான்காவது மனைவியாக அப் பெண்ணை ஏற்றுக் கொண்டான். நாளடைவில் அவ்விரு வருக்கும் ஒர் அழகான குழந்தை பிறந்தது. அக்குழந்தை பிறந்த பொழுது கந்தர்வர்கள் பாடினார்கள். அப்ஸரஸ்கள் ஆடினார்கள். தேவர்கள் மலர்மாரி பொழிந்தனர். அக்குழந்தை உடம்பிலிருந்து பரவிய ஒளி எட்டுத் திக்கும் பரவிச் சென்றது. குழந்தைக்கு தையூதிமனு என்று பெயர் இட்டனர். இக் குழந்தை ஸ்வரோசிஷா மன்வந்திரத்தின் தலைவன்ாக, இரண்டாவது.மனுவாக உள்ளவன் ஆவான்.

மூன்றாவது மனுவின் கதை

துருவனின் தந்தையான உத்தானபாதன், சுருச்சி என்ற இரண்டாவது மனைவி மூலம் பெற்ற பிள்ளை உத்தமன் ஆவான். மிக்க பராக்கிரமசாலியும், நற்பண்புகளும் உடைய உத்தமன் மனைவி வகுளா என்பவள் ஆவாள். உத்தமன் மனைவியைப் பெரிதும் நேசித்தாலும், வகுளா அவனை அவ்வளவு நேசிக்கவில்லை. அவன் எவ்வளவு பரிசுகள் தந்தாலும் அவள் அதனால் திருப்தி அடையவில்லை. ராஜ சபையில் உத்தமனும் வகுளாவும் அமர்ந்திருக்கும் பொழுது திராட்சைரசம் அருந்திக் கொண்டிருந்த உத்தமன் அதில் கொஞ்சம் வகுளாவிற்கும் தந்தான். ஆனால் வகுளா
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அந்த உபசரிப்பை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டாள். பலர் முன்னிலையில் தான் அவமானப்படுத்தப்பட்டதாக நினைத்துச் சினம் கொண்ட உத்தமன், காவலர்களை அழைத்து வகுளாவைக் காட்டில் விட்டுவரச் செய்து விட்டான். வேறு மணம் செய்து கொள்ளாமல், ஆட்சி நடத்தி வந்தான்.

ஒரு நாள், அரச சபையில் ஒரு பிராமணன் வந்தான். “அரசே! என்னுடைய மனைவியை யாரோ கவர்ந்து சென்று விட்டார்கள். அவளை எப்படியாவது மீட்டு வரவேண்டும்” என்றான். "ஆயிரக்கணக்கான பெண்கள் உள்ள நாட்டில் உன் மனைவியை எங்கே தேடுவது? அது முடியாத காரியம்” என்றான் அரசன். அதைக்கேட்ட பிராமணன், “அரசே! எங்கள் வருமானத்தில் ஆறில் ஒரு பங்கு உனக்கு வரியாகச் செலுத்துகிறோம். எதற்காக அதைச் செலுத்துகிறோம்? எங்களைக் காப்பாற்ற வேண்டியது உன் பொறுப்பு” என்றான். இதைக் கேட்ட அரசன் வேறு வழியில்லாமல் "உன் மனைவியின் அடையாளத்தைச் சொல்!” என்றான். பிராமணர், “அவள் ஒல்லியாக அழகே இல்லாத முகத்துடன், அவலட்சணமாக இருப்பாள்” என்றான். அரசன், "இப்படிப்பட்ட ஒரு மனைவி போய்விட்டதற்காக நீ ஏன் வருந்த வேண்டும்?” என்று கேட்டான். பிராமணன் அதற்கு “அவள் எப்படி இருந்தாலும் என்னுடைய மனைவி, அவளைக் காப்பாற்ற வேண்டியது என் கடமை" என்றான். வேறு வழியில்லாமல் உத்தமன் ரதத்தில் ஏறிப் புறப்பட்டான். எங்கெல்லாம் தேடியும் கிடைக்காமையால் காட்டில் இருந்த ஒரு முனிவரிடம் சென்றான். அரசனை வரவேற்ற முனிவர் தன் சிஷ்யனைப் பார்த்து, உபசரிக்கின்ற பொருட்களைக் கொண்டு வா! என்றார். சிஷ்யன் அரசன் முகத்தைப் பார்த்துவிட்டு, 'அதற்குத் தேவையில்லாத பாத்திரம் இது என்று கூறிவிட்டுப் போய்விட்டான். இருந்தாலும் முனிவர் அரசனை அமரச் செய்து வந்த விஷயம் என்ன என்று விசாரித்தார். முனிவர், “முக்காலமும் அறிந்தவன் நான். என் சீடனுக்கும் இதைச் சொல்லிக் கொடுத்திருக்கிறேன். உன் வாழ்க்கை முழுவதையும் என்னால் பார்க்க முடிகிறது. அதனால்தான் உன் முகத்தைப் பார்த்து, 'உபசரிப்புக்குத் தகுதியில்லாதவன் நீ என்று கூறிவிட்டான். இருந்தாலும் உன்னைப் பற்றிக் கவலை கொள்ளாமல் பிராமணன் மனைவியைத் தேடி வந்திருக்கிறாய். ஆதலால் உனக்கு உதவ வேண்டியது என் பொறுப்பாகிறது. வலகா என்ற ராட்சசன், உட்பலவதா என்ற காட்டில் அவளை ஒளித்து வைத்திருக்கிறான். நீ சென்று அவளை மீட்டுப் போ” என்று கூறிவிட்டார்.

அசுரன் இருக்குமிடத்தை நாடிச் சென்றான் உத்தமன். அந்த ராட்சசன் அரசனைக் கண்டதும் விழுந்து வணங்கி, “அரசே! என் இருப்பிடம் தேடி வந்த காரணம் யாது?’ எனக் கேட்டான். உத்தமன், “நீ பிராமணன் மனைவியை அபகரித்துக் கொண்டு வந்திருக்கிறாய். அவளைத் தின்னப் போகிறாயா? அல்லது மணம் செய்து கொள்ளப் போகிறாயா?” என்று கேட்டான். அதற்கு ராட்சசன், “அரசே! நீங்கள் நினைப்பது போல் நரமாமிசம் தின்னும் ராட்சசன் அல்ல நான். பிராமணன் மனைவியைத் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை. அழகான மனைவியர் பலர் எனக்கிருக்கின்றனர்” என்றான். உத்தமன், "அப்படியானால் இவளை ஏன் சிறைப்பிடித்தாய்?" என்று கேட்க, அரக்கன், “அரசே! எனக்கு அதீத சக்திகள் பல உண்டு. ஒருவரைக் கண்டால் அவரிடம் உள்ள தீய குணங்களை எல்லாம் உறிஞ்சி விடுவேன். அந்தப் பிராமணப் பெண்ணின் தீய குணங்களை உறிஞ்சிவிட்டேன். இவளைக் கொண்டு வந்ததற்கு முக்கிய காரணம் உண்டு. இவள் கணவன் ராட்சசர்களை ஒழிப்பதற்கும், துன்புறுத்துவதற்கும் நிறைய யாகங்கள் செய்கிறான். இந்த யாகங்களில் முக்கியமானது என்ன வென்றால், ஒருவன் மனைவியோடு இருந்துதான் யாகம் செய்ய வேண்டும். இவளைத் தூக்கி வந்துவிட்டபடியால், பிராமணன் இனி யாகம் செய்ய முடியாது. இப்போது அவளை உன்னுடன் அனுப்புவதில் தடையில்லை” என்று கூறி அனுப்பிவிட்டான்.

பிராமணன் கூறியதும், முனிவர் கூறியதும் உத்தமன் மனத்தை வாட்டிக் கொண்டிருந்தது. இறுதியாக உத்தமன் அந்த முனிவரிடம் சென்று “என் மனைவி எங்கிருக்கிறாள்” என்று கேட்டான். முனிவர், “அவள் காட்டில் திரிந்து கொண்டிருக்கும் பொழுது கபோதகா என்ற நாக அரசன் அவளை எடுத்துச் சென்று மணம் செய்து கொள்ளும் நோக்கத்தில் வைத்திருந் தான். ஆனால் கபோதகனுக்கு ஏற்கெனவே மனோரமா என்ற மனைவியும், நந்தா என்ற மகளும் இருந்தனர். நந்தா என்ற அந்தப் பெண் தன் தாயை விட்டு விட்டுத் தன் தகப்பன் வேறொரு பெண்ணை மணப்பதை விரும்பவில்லை. எனவே, உத்தமன் மனைவியாகிய வகுளாவை ஒளித்து வைத்து விட்டாள். கபோதகா கேட்ட பொழுது அவள் கூட்டிவர மறுத்து விட்டாள். அதனால் சினம் கொண்ட கபோதகன் மகளை ஊமையாகப் போகுமாறு சாபமிட்டான். இதுதான் உன் மனைவியின் நிலை” என்று முனிவர் சொல்ல, உத்தமன், பிராமணன் மனைவியைத் திருப்பித் தந்த ராட்சசன் உதவியை நாடினான். அந்த ராட்சசன் நாகலோகம் சென்று, கபோதகனின் கெட்ட குணத்தையும், வகுளாவின் குணத்தையும் மாற்றி விட்டான். பிறகு வகுளாவையும், கபோதகன் மகளையும் அழைத்து வந்த ராட்சசன் உத்தமனிடம் ஒப்படைத்தான். பேச்சை இழந்துவிட்ட கபோதகன் மகள் நந்தாவை மறுபடியும் பேச வைப்பதற்காக பிராமணனைக் கொண்டு யாகம் செய்வித்து, பேசுமாறு செய்தான். உடனே அந்தப் பெண் வகுளாவிற்கு வரம் தந்தாள். “உன் வயிற்றில் மூன்றாவது மனுவாகப் பிரபஞ்சத்தை ஆட்சி செய்யப் போகும் ஒர் அழகிய மகன் பிறப்பானாக!” என்று கூறிவிட்டுப் போய்விட்டாள்.

காலாந்திரத்தில் உத்தமனுக்கும் வகுளாவிற்கும் 'ஒளத்தமா' என்ற மகன் பிறந்தான். தேவர்கள் மலர் மாரி பொழிந்தனர். அவனே மூன்றாவது மனுவாகப் பொறுப்பு ஏற்றுக் கொண்டான். அவன் காலத்தில் இந்திரப் பதவி வகித்தவன் சுஷந்தி என்று அழைக்கப்பட்டான்.

நான்காவது மனுவின் கதை

முன்னொரு காலத்தில் மிக்க பராக்கிரமம் வாய்ந்த சுவரஷ்டிரா என்ற மன்னன் ஆட்சி செய்துவந்தான். அவனுக்கு மட்டும் நீண்ட ஆயுள் இருந்ததே தவிர, அவன் நூறு மனைவிமார், அமைச்சர்கள் ஆகிய யாவரும் காலாந்திரத்தில் இறந்து விட்டனர். தனியாக விடப்பட்ட மன்னனுடைய சக்தியும் குறையலாயிற்று. இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, வியர்தா என்ற பகை மன்னன் போரில் இவனைத் தோற்கச் செய்து, இவன் நாட்டையும் எடுத்துக் கொண்டான்.

எல்லாவற்றையும் இழந்த சுவரஷ்டிரா காட்டில் தவம் புரியலானான். மழைக் காலத்தில் வெட்ட வெளியில் நின்று தவம் செய்யும் பொழுது, பல நாட்கள் ஒயாது மழை பெய்து, பெருவெள்ளம் வந்தது. அந்த வெள்ளம் அடித்துச் செல்ல நடு வெள்ளத்தில் அகப்பட்ட அவன் மிகவும் கவலைப் பட்டான். அவ் வெள்ளத்தில் ஒரு மான் வர, அதன் வாலைப் பிடித்துக் கொண்டு வெள்ளத்தைக் கடக்க முயன்றான். ஆனால் மான் தண்ணிருக்குள் புகுந்து பாதாள லோகம் சென்றது. பொன்மயமான அந்த நகருக்கு அழைத்துச் சென்ற மான், தன் கதையைச் சொல்லிற்று. போன ஜென்மத்தில் அந்த மான் உத்பலவதி என்ற பெயருடன் அவன் மனைவியாக இருந்தவள். அவள் சிறுமியாக இருந்தபொழுது அவள் அடுத்த பிறப்பில் மானாகப் பிறக்கக் கடவள் என்று சுதபா முனிவர் சாபம் கொடுத்தார். இப்பொழுது சுவரஷ்டிராவிற்கும், அந்த மானுக்கும் ஒரு மகன் பிறந்தான். அந்தப் பிள்ளை பிறக்கின்ற நேரத்தில் உலகம் முழுதும் இருண்டு கிடந்ததால் தாமசமனு என்று பெயரிடப்பட்டான். அந்தக் குழந்தை பெரியவனாகி சூரியனை நோக்கித் தவம் இருந்து பல ஆயுதங்களைப் பெற்று, தன் தந்தையை வென்றவனைப் பழி வாங்கி உலகம் முழுவதையும் வென்றான். இந்த நான்காவது மனுவின் காலத்தில் இந்திரப் பதவியில் இருந்தவன் ஷிகி என்பவன் ஆவான்.

ஐந்தாவது மனுவின் கதை

ரிதவக் என்ற முனிவர் நீண்ட காலம் மகப்பேறு இல்லாமல் இருந்தார். ரேவதி நட்சத்திரத்தில் ஒர் ஆண் குழந்தை பிறந்தது. எல்லாக் கெட்ட பழக்கங்களையும் பெற்ற அவன் தீயவனாக வாழ்ந்தான். இதனால் மனத்துயர் அடைந்த முனிவர் நோய்வாய்ப்பட்டார். அவர் மனைவி தொழுநோயால் பிடிக்கப்பட்டாள். இதன் காரணத்தை அறிய விரும்பிய ரிதவக் முனிவர், கார்க முனிவரை அடைந்து, "நான் நேர்மையானவன், தவம் செய்தவன். எனக்கு இப்படி ஒரு பிள்ளை பிறந்துள்ளது. நான் செய்த பாவத்தினாலா அல்லது என் மனைவி செய்த பாவத்தினாலா, அல்லது குழந்தை செய்த பாவத்தினாலா? எதனால் இப்படி ஒரு குழந்தை பிறந்துள்ளது?’ என்றார். கார்க முனிவர், 'ரிதவக் முனிவரே! இப்பிள்ளை இப்படி இருப்பதற்கு நீங்கள் சொல்லிய எதுவும் காரணமன்று. அவன் பிறந்த பொழுது, விண்ணில் ஆட்சி செலுத்திய ரேவதி நட்சத்திரம்தான் அந்தக் கோளாறுக்குக் காரணம்” என்றார். அதைக் கேட்ட ரிதவக் முனிவர் "இப்படித் தீய விளைவுகளை ஏற்படுத்தும் ரேவதி நட்சத்திரம், ஆகாயத்தில் இருந்து கீழே விழுந்து விடட்டும்” என்று சபித்தார்.

அதிசயத்திலும் அதிசயம் அனைவரும் பார்த்துக் கொண் டிருக்கும் பொழுதே ரேவதி நட்சத்திரம் குமுத மலையின் மேல் விழுந்தது. அதனால் அம்மலையும், அதைச் சுற்றியுள்ள பிராந்தியமும் ஒளி வெள்ளத்தில் மூழ்கியது. இந்த இடத்தில் புதிய தாமரைக் குளங்கள் தோன்றலாயின. அதனால் அந்த இடம் ரைவதக என்று பெயர் பெற்றது. இந்தக் குளங்களில் உள்ள தாமரையில் இருந்து ரேவதி என்ற அழகான பெண் வெளிவந்தாள். பிரமுச்சா என்ற முனிவர் அவளை வளர்த்து வந்தார். அவள் மணப் பருவத்தை அடைந்தவுடன், அவளுக்கு ஏற்ற கணவனைத் தேட விரும்பினார் முனிவர். அக்னி தேவனை அழைத்து தன் மகளுக்கு ஏற்ற மணாளன் யார் என்று கேட்டார். "துர்கமா’ என்ற மன்னன் எல்லா விதத்திலும் ரேவதிக்கு ஏற்றவன்” என்று கூறினான், அக்னி. இது நடைபெற்ற சில நாட்கள் கழித்து துர்கமா என்ற மன்னனே வேட்டையாட வந்தான். பிரமுச்ச முனிவரின் ஆசிரமத்தில் நுழைந்தான். அவனைக் கண்ட முனிவர் தன் பெண்ணின் கதையைச் சொல்லி, அக்னி தேவன் கூறியதைச் சொன்னார். மன்னன் மணம் புரிய ஒப்புக் கொண்டான். ரேவதி ஒர் ஒப்பத்தக்க வரையறை விதித்தாள். அதன்படி கீழே விழுந்த ரேவதி நட்சத்திரம் பழையபடி ஆகாயத்தில் தன்னிடத்திற்குப் போகக் கூடுமேயானால் மணத்தை ஏற்றுக் கொள்வதாகக் கூறினாள். பிரமுச்ச முனிவர் தன் தவ வலிமையால் ரேவதியை ஆகாயத்திற்கு ஏற்றினார்.

துர்கம மன்னனைப் பார்த்து, மகளை மணம் செய்து கொண்ட மகிழ்ச்சியில் “என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு அந்த மன்னன், “முதல் மனுவாகிய சுவயம்பு மனுவின் பரம்பரையில் வருகிறவன் நான். அடுத்த மனு என் மகனாகப் பிறக்க வேண்டும்" என்றான். அப்படியே ஆகட்டும்! என்றார் முனிவர்.

துர்கமாவுக்கும், ரேவதிக்கும் பிறந்த குழந்தை 'ரைவத' மனு என்ற பெயரைப் பெற்று உலகை ஆட்சி செய்தது. இந்த மனுவின் காலத்தில் இருந்த இந்திரனுக்கு ரிபு என்ற பெயர் இருந்தது.

ஆறாவது மனுவின் கதை

சக்ஷீசா என்ற பெயருடன் வாழ்ந்த ஆறாவது மனுவின் கதை. இந்த மனு பழம்பிறப்பில் பிரம்மாவின் கண்ணி லிருந்து தோன்றியதால், இவனுக்கு சக்ஷீசா என்று பெயர். (சக்ஷீ-கண்). அனமித்ர என்ற முனிவருக்கும், பத்ரா என்ற மனைவிக்கும் ஒர் ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ஜதீஸ்மரா சக்தி உண்டு. பத்ரா, குழந்தையை மடியில் போட்டுக் கொஞ்சிக் கொண்டிருந்தாள். திடீரென்று குழந்தை சிரித்தது. ஆச்சரியப்பட்ட தாய் “ஏன் சிரிக்கிறாய்?” என்றாள். “சிரிக்காமல் என்ன செய்வது? பக்கத்தில் இருக்கும் பூனை சந்தர்ப்பம் கிடைத்தால் என்னைத் தின்னலாம் என்று பார்க்கிறது. ஜதஹர்ணி என்ற பெண் பிசாசும் சந்தர்ப்பம் கிடைத்தால் என்னைத் தின்னப் பார்க்கிறது. நீ மட்டும் என்ன? என்னைக் கொஞ்சுவதால் உனக்கு சந்தோஷம் உண்டாகிறது. நான் வளர்ந்தவுடன் தாய் என்ற முறையில், இது வேண்டும், அது

வேண்டும் என்று கேட்கப் போகிறாய். உலகத்தில் உள்ள அனைவரும் சுயநலவாதிகளே தவிர வேறு இல்லை.” இதைக் கேட்ட பத்ரா மிக்க கோபத்துடன் குழந்தையைக் கீழே போட்டு விட்டு அப்பால் சென்றுவிட்டாள். இந்தச் சந்தர்ப்பத்தை எதிர் பார்த்திருந்த ஜதஹர்ணி பிசாசு, இக்குழந்தையைத் தூக்கிச் சென்று, விக்ரந்தா மன்னனின் மனைவியின் பக்கத்தில் இருக்கும் குழந்தைக்குப் பதிலாக இந்தக் குழந்தையைப் போட்டுவிட்டு, மன்னனின் குழந்தையை எடுத்துச் சென்றது. அக்குழந்தையை ஒரு பிராமணன் வீட்டில் போட்டுவிட்டு, பிறந்த குழந்தையினை எடுத்துத் தின்ன ஆரம்பித்தது. இது மாதிரி காரியங்களை இப்பிசாசு அடிக்கடி செய்து வந்தது.

விக்ரந்த மன்னன் தன் மனைவியின் பக்கத்தில் இருந்த குழந்தையைத் தன் குழந்தை என்று நினைத்து, ஒரு சத்திரியக் குழந்தைக்கு வேண்டிய அனைத்தையும் செய்தான். ஆனந்தன் என்று பெயரிட்டான். குழந்தை ஆனந்தனுக்கு ஒரு குரு நியமிக்கப்பட்டார். முதல் நாள் அந்த குரு ஆனந்தனைப் பார்த்து, “முதலில் உன் தாய் தந்தையருக்கு வணக்கம் சொல்லி வா” என்று கூறினார். ஆனந்தன் சிரித்துக்கொண்டே “எந்தத் தாய், தந்தையரை வணங்குவது? பெற்றவர்களையா அல்லது வளர்த்தவர்களையா?” என்று கேட்டான். குரு குழப்பம் அடைந்தார். ஆனந்தன் நடந்தவற்றைக் கூறினான். அரசனுடைய உண்மையான குழந்தை பிராமணன் வீட்டில் வளர்கிறது என்று கூறினான். இந்தச் சிக்கலை எப்படித் தீர்க்கலாம் என்று குரு கவலைப்பட்ட பொழுது பிராமணன் வீட்டில் வளரும் ஷைத்ரா என்ற பையன்தான் உண்மையான அரசகுமாரன் என்று சொன்னான். மேலும், ஷைத்ராவைக் கொண்டு வந்து அரசனிடம் சேர்த்து விட்டு, முனிவர் மகனாகிய தான் தவம் செய்யக் காட்டுக்குப் புறப்பட்டான். பிரம்மன் எதிரே வந்து, அவனைத் தடுத்து, “நீ காட்டிற்குப் போகக் கூடாது. சக்ஷீச மனு என்ற பெயருடன் இந்த உலகை ஆள வேண்டும். இந்தக் காலகட்டத்திற்கு சக்ஷீச மன்வந்திரம் என்ற பெயர் ஏற்படும்” என்று கூறினான். ஆனந்தன் இதை ஏற்றுக் கொண்டு, மன்னன் உக்கிரனுடைய மகளாகிய விதர்பாவை மணந்து உலகை ஆட்சி செய்தான். இந்த சக்ஷீச மனுவின் காலத்தில் இருந்த இந்திரனுக்குப் பெயர் மனோஜலா என்பதாகும.

ஏழாவது மனுவின் கதை

வைவஸ்வத மனுவின் கதை முன்னரே புராணத்தில் கூறப்பட்டுள்ளது. சாயாவுக்குப் பதிலாக இப்பொழுது சம்ஜனாவே மறுபடியும் சூரியனிடம் வந்து விட்டாள். இருந்தாலும், சூரியனுடைய மிகுதியான சக்தி அவளை வருத்தியது. அவளுடைய தந்தையாகிய விஸ்வகர்மா அவள் தாங்குமளவிற்குச் சூரியனின் ஆற்றலைக் குறைத்தார். அதிகப்படியாக சூரியனிடமிருந்து பெற்ற ஆற்றலை எல்லாம் ஒன்று திரட்டி சிவனுக்குரிய திரிசூலமாகவும், விஷ்ணுவின் சக்கரமாகவும், அஷ்டவசுக்களுக்கும், சிவனுக்கும், அக்னிக்கும், சக்திகளாகப் பெற்றுக் கொடுத்தார். இவை அனைத்தும் போக எஞ்சிய சக்தியைப் பல தெய்விக ஆற்றல்களாகவும், குபேரனுக்குரிய பல்லக்காகவும் செய்து தந்தார். இப்பொழுது நடைபெறும் வைவஸ்வத மனுவின் மன்வந்திரத்தில் இந்திரனுக்கு உருஜஸ்வி என்பது பெயராகும்.

எட்டாவது மனுவின் கதை

ஒவ்வொரு கர்ப்பத்திலும் பதினான்கு மனுக்கள் தோன்றுவர். அவர்களுடைய காலம் மன்வந்திரம் எனப்படும். இதுவரை ஏழு மனுக்களில் ஏழு மன்வந்திரங்கள் விளக்கப்பட்டன. எட்டாவது மன்வந்திரம், சூரியனுக்கும் சாயாவுக்கும் பிறந்த சுரன்னி என்பவனுடைய மன்வந்திரம் ஆகும். இந்த மன்வந்திரத்தில் தைத்திய மன்னனாகிய வலி இந்திரனாவான்.

மது, கைடபன், மகாமாயா

இரண்டாவது மன்வந்திரமாகிய ஸ்வரோசிஷா மன்வந்திரத்தில், சரதா என்று ஒர் அரசன் ஆட்சி செய்து வந்தான். சிலகாலம் கழித்துப் பகை அரசர்கள் அவனைத் தோற்கடித்து அவன் நாட்டைக் கைப்பற்றினர். மன்னன் தோல்வி அடைய அவனுடைய அமைச்சர்களில் சில துரோகிகளும் காரணமாக இருந்தனர். எல்லாவற்றையும் இழந்த மன்னன் காட்டிற்கு வந்து மேத்தா என்ற முனிவரின் ஆசிரமத்தில் தங்கி இருந்தான். அங்கு தங்கி இருந்தாலும் ஒயாமல் தன் நாட்டையும் மக்களையும் நினைத்துக் கொண்டே இருந்தான். ஒரு நாள் ஆசிரமத்திற்கு வெளியே வந்த பொழுது சமாதி என்ற வைசியனைச் சந்தித்தான். அவன் பெரிதும் வருந்தி இருந்ததால், நாட்டு மக்களின் நிலைமை எவ்வாறு உள்ளது என்று கேட்டான். தன்னுடைய மனைவி, பிள்ளைகளுமே தன் சொத்துக்களை எல்லாம் பறித்துக் கொண்டு தன்னை விரட்டி விட்டதை சமாதி சொல்லி அழுதான். இருவரும் சென்று முனிவர் மேத்தாவிடம் நடந்தவற்றைக் கூறி, ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது? என்று கேட்டார்கள். அவர்கள் துயரக் கதையைக் கேட்ட மேத்தா முனிவர், "இது மகாமாயையின் திருவிளையாடலால் நடைபெறுகின்ற செயல்களாகும். இவை அனைத்தும் மாயையே. அதைப் புரிந்து கொண்டால் இதில் வருத்தப்படுவதற்கு எதுவுமே இல்லை” என்று கூறிவிட்டு, மகா மாயையின் திருவிளையாடலை விளக்க, மேத்தா முனிவர் மது, கைடபர்கள் கதையைச் சொல்ல ஆரம்பித்தார். "இரண்டாவது மன்வந்திரத்தில் எங்கும் நீராக இருந்த பொழுது, விஷ்ணு அந்த நீரில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது அவரது இரண்டு காதுகளில் இருந்தும் இரண்டு அசுரர்கள் வெளிப்பட்டனர். அவர்கள் திருமாலின் உந்தியில் இருந்த பிரம்மனைத் தாக்கினார்கள். நீண்ட போரில் அவரை வெல்ல முடியாத நிலையில் பிரம்மன் கண்களை மூடி மகாமாயையை தியானித்தார். உறங்கிக் கொண்டிருந்த விஷ்ணுவின் கண் இமைகளில் இருந்தும், வாயிலிருந்தும், புஜங்களிலிருந்தும் மகாமாயை வெளிப்பட்டாள். மகாமாயை வெளிப்பட்டதால், விஷ்ணுவே உறக்கத்தினின்று விழித்து விட்டார். நிலைமையைப் புரிந்து கொண்டு மது, கைடபர்களுடன்டதானே போர் புரியத் துவங்கினார். இந்தப் போர் ஐயாயிரம் ஆண்டுகள் நீடித்தது. இறுதியாக மகாமாயையின் சக்தியால் மது, கைடபர்கள் உள்ளத்தில் தாங்களே வெற்றி பெற்றது போல ஒரு மாயத் தோற்றம் உண்டானது. அதை நம்பி அவர்கள் எக்களிப்புடன் விஷ்ணுவைப் பார்த்து, “நாங்கள் இருவரும் உனக்கு ஒரு வரம் தருகிறோம். நீ எது கேட்டாலும் தருகிறோம்" என்றார்கள். உடனே விஷ்ணு, “நீங்கள் இருவரும் என் கையால் சாக வேண்டும்” என்றார். மது, கைடபர்கள் ஏற்கெனவே வாக்குக் கொடுத்துவிட்டபடியால், வேறு ஒன்றும் செய்ய முடியாமல் “நீ கேட்ட வரத்தைத் தருகிறோம். அதில் ஒரு சிறு வரையறை உள்ளது. தாங்கள் எங்களைக் கொல்வது, எங்களுக்குத் திருப்தி அளிக்கக் கூடியதுதான். ஆனால் தண்ணீர் இல்லா இடத்தில்தான் எங்களைக் கொல்ல வேண்டும்” என்றனர். உடனே விஷ்ணு அந்த அசுரர்களைத் தன் தொடைமீது வைத்துத் தன் சக்கரத்தினால் அவர்களைக் கொன்றார்.

மகிஷாசுர வதம்

மேத்தா முனிவர் அரசிழந்த சுரதாவுக்கும், வீடிழந்த சமாதிக்கும் மகிஷாசுரன் கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.

முன்னொரு காலத்தில் புரந்தரன் என்பவன் இந்திரப் பதவி வகித்து வந்தான். மகிஷாசுரன் அசுரர் தலைவனாக இருந்தான். வழக்கம் போல் தேவாசுர யுத்தம் நூறு ஆண்டுகள் நடந்தன. அசுரர் கை ஓங்கியது. இந்திரர்களும் தேவர்களும் தேவருலகத்தில் இருந்து விரட்டப்பட்டனர். அவர்கள் பூவுலகைச் சுற்றித் திரிந்தார்கள்.

இந்திரனும், ஏனைய தேவர்களும் கூடி பிரம்மனிடத்தில் தங்கள் பரிதாப நிலையைக் கூறினர். தான் தனியே ஒன்றும் செய்ய முடியாது என்பதை அறிந்த பிரம்மன், அனைவரையும் அழைத்துக் கொண்டு சிவனும் விஷ்ணுவும் இருக்குமிடம் சென்றார். நடந்ததைக் கேட்ட சிவனும் விஷ்ணுவும் பெருங் கோபம் அடைந்தனர். அப்போது, அவர்கள் ஒவ்வொருவரிடம் இருந்தும் மாபெரும் ஆற்றல் வெளிப்பட்டது. சிவன், விஷ்ணு, பிரம்மன் ஆகிய மூவரிடம் இருந்தும் வெளிப்பட்ட ஆற்றல் களோடு, இந்திரன் முதலிய எட்டுத் திக்குபாலர்களிடமிருந்தும் ஆற்றல்
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
வெளிப்பட்டது. இந்தச் சக்திகள் அனைத்தும் ஒன்று கூடியவுடன் அழகிய பெண் வடிவு கொண்டு நின்றது. இந்த மகாசக்தியின் வடிவில் சிவனுடைய ஆற்றல் முகமாகவும், விஷ்ணுவின் ஆற்றல் கைகளாகவும், யமனுடைய ஆற்றல் முடியாகவும், சந்திரன் ஆற்றல் மார்பகங்களாகவும், இந்திரன் ஆற்றல் இடையாகவும், வருணன் ஆற்றல் தொடையாகவும் பிரம்மனின் ஆற்றல் பாதங்களாகவும், சூரியனின் ஆற்றல் கால் விரல்களாகவும், அஷ்ட வசுக்களின் ஆற்றல் கைவிரல்களாகவும், குபேரனின் ஆற்றல் மூக்காகவும், அக்னியின் ஆற்றல் மூன்று கண்களாகவும், பவனனின் ஆற்றல் காதுகளாகவும் உருவெடுத்தன. தங்கள் ஆற்றல் மூலம் வெளிப்பட்ட இப்பெண் உருவைப் பார்த்து தேவர்கள் பெரிதும் மகிழ்ந்தனர்.

இப்பெண்ணிற்குச் சிவன் திரிசூலத்தையும், விஷ்ணு சக்கரத்தையும், வருணன் சங்கையும், அக்னி சக்தியையும், வாயு அம்பு, வில், அம்பறாத்தூணி ஆகியவற்றையும், இந்திரன் வஜ்ராயுதத்தையும், ஐராவதம் என்ற யானையின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த மணியையும், யமன் நீண்ட கம்பையும், வருணன் பாசக் கயிற்றையும், தட்சன் மணிகள் பதித்த கழுத்து மாலையையும், பிரம்மன் ஒரு பாத்திரத்தில் புண்ணிய நீரை யும் கொடுத்தனர். சூரியன் தன் ஒளியினால் அவளுக்கு ஆற்றலையும், சந்திரன் ஒரு வாளும் கேடயமும், கடல் கழுத்து மாலையையும் துணிகளையும் கொடுத்தன. விஸ்வகர்மா கோடரிகள், கவசங்கள் முதலியவற்றைச் செய்து கொடுத்தான். வருணன் மாலைகளையும் தாமரை மலர்களையும், இமவான் ஆபரணங்களையும், ஏறிச் செலுத்த சிம்ம வாகனத்தையும், நாகங்களின் அரசன் பாம்புகளையும் மாலையினையும் கொடுத்தனர். ஏனைய தேவர்கள் தந்த மற்ற ஆயுதங்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காதது. இந்த அலங்காரங்களுடன் புறப்பட்ட சக்தி வெடிச்சிரிப்புச் சிரிக்க ஆரம்பித்தாள். அந்தச் சிரிப்பின் ஒசையில் உலகங்கள் அதிர்ந்தன. அன்னையின் வடிவைக் கண்ட தேவர்கள் 'ஜெய ஜெய காளி' என்று கோஷமிட்டனர். முனிவர்களும் ரிஷிகளும் கைகூப்பி வணங்கினர். தேவர் உலகத்தில் ஒரு பகுதியில் ஏற்பட்ட இந்த சப்தத்தைக் காதில் வாங்கிய அசுரர்கள், என்ன நடக்கிறது என்று புரியாததால் சென்று பார்க்க விரும்பினர். மகிஷாசுரன் படைகளைத் திரட்டிக் கொண்டு பார்க்கப் புறப்பட்டான். வந்தவனுக்கு அதுவரை தேவருலகத்தில் காணாத ஒரு காட்சி தென்பட்டது. ஒரு பெண் வடிவம் பெரிய சிங்கத்தின் மேலமர்ந்து இருப்பதைக் கண்டான். அந்தப் பெண்ணின் தரையில் ஊன்றிய இடது பாதம் பாதாளம் வரை சென்றது. அவளது திருமுடி விண்ணைப் பிளந்து கொண்டு மிக உயரத்தில் சென்றது. அவள் அமர்ந்திருக்கும் நிலை உலகம் முழுவதையும் வியாபித்து இருந்தது. அவளுடைய ஆயிரம் கைகள் திசைகள் அனைத்தையும் அணைப்பது போல் இருந்தன.

அசுரர்கள் தேவியிடம் போர் புரியத் தொடங்கினர். போருக்கு முதலில் புறப்பட்டவன் மகிஷாசுரனின் படைத் தலைவனான சிக்ஷீரா என்பவன் ஆவான். உதக்ரா, மஹாஹனு, சிலோமா, வஸ்கலா, பரிவரிதா, வீரலக்ஷா ஆகியோர் நால்வகைப் படையுடன் தாக்கியது போக ரதங்கள், யானைகள் ஆகியவற்றைக் கொண்டு தனித்தனியாகவும் தேவியைத் தாக்கினர். மகிஷாசுரன் கோடிக்கணக்கான யானைகள், குதிரைகள் ஆகியவற்றைக் கொண்டு எதிர்த்தான். பல்லாயிரக்கணக்கான ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. அரக்கர்கள் பாசக்கயிறு, அம்பு, வாள் ஆகியவற்றைக் கொண்டு போர் புரிந்தனர். தேவி தன் ஆயுதங்களால் இவை அனைத்தையும் பொடி ஆக்கினாள். அவள் வாகனமாகிய சிம்மம், பகைவர்களைத் தின்று தீர்த்தது. தேவியின் மூச்சுக் காற்றிலிருந்து பல கணங்கள் உருவாகி, மற்ற அசுரர் களுடன் போர் புரிந்தனர். தேவி ஆயிரக்கணக்கான அசுரர் களைத் தன் சூலாயுதத்தாலும், சக்தியினாலும், வாளினாலும் அழித்தாள். சிலர் அவள் மணியோசை கேட்டு மயக்கமாயினர். பலர் அவளது பாசக்கயிற்றில் கட்டப்பட்டனர். பலர் கண், காது, கை, கால் எனப் பல உறுப்புகளை இழக்க வேண்டியதாயிற்று. இரத்த ஆறு ஓடியது. போர்க்களம் முழுவதும் இறந்து போன யானைகள், குதிரைகள், அசுரர்கள் ஆகியவற்றால் நிரம்பி இருந்தது. விநாடிப் பொழுதில் காய்ந்த மரங்களை நெருப்பு எரிப்பது போல் பகைவர்களை தேவி அம்பிகை எரித்தாள்.

தன்னுடைய சேனை பொடி சூரணம் ஆவதைக் கண்ட அசுரர் படைத்தலைவன் சிக்ஷீரா சுமேரு மலையில் மேகங்கள் மழை பொழிவது போல் பாணங்களைப் பொழிந்தான். தேவி இவற்றைத் தடுத்து அவனுடைய குதிரைகள், ரதம், வில் ஆகியவற்றைப் பொடி செய்தாள். இறுதியாக ஈட்டியால் அவனைக் கொன்றாள். சிக்ஷீராவிற்குப் பிறகு சமரா, உதக்ரா, தம்ரா, உக்ரஸ்யா, மஹாஹனு ஆகியோரைக் கொன்ற பின்பு, துர்முகன், துர்தரா ஆகியோரை வில்லினால் கொன்றாள்.

தன் சேனை சின்னாபின்னப்படுவதைக் கண்ட மகிஷாசுரன், ஒர் எருமை வடிவைப் பெற்றுக் கொண்டு, தேவியைத் தாக்கினான். தேவியின் படைகளைத் தன் கொம்பு களால் கொன்றான். இறுதியாக அன்னை ஏறியிருந்த சிம்மத்தை மகிஷாசுரன் தாக்க முற்பட்டதும், தேவிக்குச் சினம் ஏற்பட்டது. மாபெரும் எருமை வடிவம் கொண்ட அசுரனின் கால் குளம்புகள் பூமியைப் பிளந்தன. எருமையின் வாலாட்டத்தால் கடல் கொந்தளித்தது. அக் கொம்புகளில் பட்ட மலைகள் பொடியாயின. ஆனால் தேவி எருமையைத் தன் பாசக் கயிற்றால் பிணித்தாள்.

தேவி எருமையைப் பிணித்ததும், அசுரன் எருமை வடிவை நீத்து சிம்ம வடிவம் கொண்டான். சிம்மத்தின் தலையைத் தேவி துணித்ததும், சிம்மத்தின் உடலிலிருந்து வாளோடு வெளிப்பட்டான் அசுரன். பல பாணங்களையும் ஆயுதங்களையும் அசுரன் மேல் செலுத்தவும், அவன் யானை வடிவம் எடுத்து தேவியின் வாகனமாகிய சிங்கத்தைத் துதிக்கையால் பற்றி இழுத்தான். தேவி யானையின் துதிக்கையை வெட்டவும், அசுரன் மறுபடியும் எருமை வடிவெடுத்தான். எருமை வடிவிலிருந்து அசுரன் முதுகில் ஏறி எருமையின் தலையைத் துணித்தாள் தேவி. எருமை உடலிலிருந்து மகிஷாசுரன் வெளி வருவதற்காகத் தலையை வெளியே நீட்டியவுடன், தலையைத் துணித்தாள் தேவி.

தேவர்கள் இதனைக் கண்டு மகிழ்ச்சியோடு பூமாரி பொழிந்தனர். அப்ஸரஸ்கள் நடனமாடினர். கந்தர்வர்கள் பாடினர்.

சும்ப நிசும்பர் கதை

முன்னொரு காலத்தில் சும்பன், நிசும்பன் என்ற அசுர சகோதரர்கள் மூன்று உலகத்தையும் வென்று ஆட்சி செய்தனர். மாபெரும் வெற்றி அடைந்த அவர்கள் இந்திரனுடைய ஐராவதம் முதல், அக்னியின் அஸ்திரம் வரை தமதாக்கிக் கொண்டனர். சிந்தாமணி, பாரிஜாதம் முதலிய அனைத்தும் அவர்களுடையதாயிற்று. சண்டன், முண்டன் என்ற இரண்டு பணியாளர்களை வைத்திருந்தனர். ஒருமுறை கலங்கிப் போன தேவர்கள் ஒன்றும் செய்ய முடியாமல் கைலாயமலையில் வந்து தவமிருந்தனர். பார்வதி தேவியார் அவ்வழியே சென்றபொழுது இவர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி நின்று வணங்குவதைக் கண்டு, ‘என்ன விஷயம்! என்று கேட்க, அவர்கள் தங்கள் நிலையை எடுத்துக் கூறினர். இந்தக் கொடுமையைக் கேட்ட பார்வதி தன் உடம்பிலிருந்து சிவனையும் அம்பிகையையும் வெளிப்படுத்தினார். எல்லை மீறிய அழகுடன் அம்பிகை கைலையைச் சுற்றி வந்தாள். பணியாளர்களான சண்டனும் முண்டனும், அம்பிகையைப் பார்த்துவிட்டு தங்கள் தலைவர்களாகிய சும்ப, நிசும்பரிடம் ஒடிச் சென்றனர். அவர்களைப் பார்த்து, “அரசே, இந்திரன் அவனுடைய யானையாகிய ஐராவதம், அவர் குதிரை உச்சைஸ்ரவம், பாரிஜாதம் முதலிய அனைத்தும் தங்களிடம் இருக்கின்றன. இனித் தாங்கள் போர் செய்வதற்கும் யாருமில்லை; அடைய வேண்டிய பொருளும் எதுவுமில்லை. ஆனால் இன்று நாங்கள் கைலை மலையைச் சுற்றி வரும்பொழுது அம்பிகை என்ற பெண்ணைப் பார்த்தோம். அவளைப் பார்த்த பிறகு உங்கள் நிறைவான வாழ்க்கையில் உள்ள குறை தெரிந்தது. அவளை நீங்கள் மனைவியாகப் பெற்றுவிட்டால், அடைய வேண்டிய பேறு எதுவுமில்லை என்று கூறினர்.

அதைக்கேட்ட சும்பன் மகிழ்ச்சி அடைந்து, "அப்படி யானால் நீங்களே அவளிடம் சென்று நான் யார் என்பதை எடுத்துக் கூறி, அவளை மணக்கத் தயாராக இருக்கிறேன் என்ற செய்தியையும் சொல்லிவிட்டு வாருங்கள்” என்றான். அரசன் உத்தரவுப்படியே சண்டனும் முண்டனும் அம்பிகையிடம் வந்து கம்பனுடைய பெருமையையெல்லாம் எடுத்துக் கூறி, "அவர் தங்களை மணக்கத் தயாராக இருக்கிறார். உங்கள் சம்மதம் தேடி வந்தோம்” என்று கூறினர். அம்பிகை சிரித்துக் கொண்டே, "நான் ஒரு விரதம் பூண்டிருக்கிறேன். 'என்னை யார் போரில் தோற்கடிக்கின்றார்களோ அவர்களையே மணப்பது என்று இருக்கிறேன்" என்று கூறவே, சண்டனும் முண்டனும் அரசரிடம் ஒடிச் சென்று நடந்ததைக் கூறினர். ஒரு பெண்ணுக்கு இவ்வளவு துணிச்சலா என்று கோபம் கொண்ட சும்பன், பெரும் படையுடன் சென்று சண்டனும் முண்டனுமே அம்பிகையைத் தாக்க வேண்டுமென்று ஆணையிட்டான். சும்பனின் ஆணைப்படி சண்ட முண்டர்கள் பெரும் படையுடன் வந்து அம்பிகையை எதிர்த்தனர். சண்ட முண்டர்கள் படைகள் அனைத்தையும் அம்பிகை எரித்துச் சாம்பலாக்கினாள். தன் நெற்றியிலிருந்து காளியை உருவாக்கினாள். கரிய நிறமும், எல்லையற்ற படைக்கலங்களும், மிக நீண்ட நாக்கும் உடைய மகாகாளி உருவானாள். அம்பிகையை வணங்கி, “எனக்கிடும் பணி யாது?’ என்று கேட்க, அம்பிகை "உன் வாயைத் திறந்து கொண்டிரு எத்தனை அசுரர்களையும், அவர்கள் ஆயுதங்களையும் விழுங்க முடியுமோ அத்தனைனையும் விழுங்கிவிடு” என்றாள். மகாகாளி சிம்ம வாகனத்தில் ஏறிச் சண்ட முண்டர்களின் தலையை வாளால் வெட்டினாள். காளி அம்பிகையிடம் சென்று, 'தாயே என் பணி முடிந்து விட்டது. சும்ப நிசும்பர் களை நீயே அழித்தருள்வாயாக’ என்று வேண்டினாள். காளியின் வீரத்தைப் போற்றிய அம்பிகை சண்டனை வென்றதால் சண்டி என்றும், முண்டனை வென்றதால் சாமுண்டி என்றும் பட்டம் அளித்தாள்.

இந்த நிலையில் சும்பன் பெரும் படையுடன் போருக்கு வந்தான். சும்பன் போருக்கு வந்ததும், அவன் பலத்தை எண்ணிச் சிவன் தன் சக்தியாகிய மகேஸ்வரியையும், விஷ்ணு வைஷ்ணவியையும், பிரம்மன் பிராமியையும், கார்த்திகேயன் கெளமாரியையும், இந்திரன் ஐந்திரியையும் அம்பிகைக்குத் துணையாக அனுப்பினர். இறுதிப் போர் நிகழுமுன்னர் அம்பிகை சும்பனிடம் சிவனைத் தூதாக அனுப்பினாள்.

சும்பனிடம் சென்ற சிவன், “உன் படைகளும், சண்ட முண்டர்களும் அழிந்து போனதை நீ பார்த்தாயல்லவா? மேலும் போர் செய்து அழியாமல் அமைதியாகக் கீழ் உலகம் சென்று பிழைத்துக் கொள்வதானால் அம்பிகை உன்னை ஒன்றும் செய்ய மாட்டாள்" என்று கூறினார்.

ஆணவத்தில் மிகுந்து நிற்கும் சும்பன் இதைக் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. அவன் போருக்குப் புறப்படும் பொழுது, அவன் படைகளில் மிக முக்கியமானவனான 'ரக்தவிஜா பெரும் படையுடன் போருக்கு வந்தான். அவன் உடம்பில் பல கணைகளைச் செலுத்தி உதிரம் உதிருமாறு செய்தாள் அம்பிகை. ஆனால் அவள் எதிர்பாராத ஒன்று அங்கே நடந்தது. அவன் இரத்தம் பூமியில் விழவும், ஒவ்வொரு சொட்டு இரத்தமும் அவனைப் போலவே ஒரு ரக்தவிஜாவாக மாறிவிட்டது. உடனே அம்பிகை காளியை விளித்து, "நீ வாயைத் திறந்து அவன் உடம்பிலிருந்து ஒரு சொட்டு இரத்தம் கூடக் கீழே விழாதபடி அதனை விழுங்கிவிடு!” என்று ஆணையிட்டாள். காளி அவ்வாறு செய்யவே, ரக்தவிஜாவின் வாழ்க்கை முடிந்தது.

அதன்பிறகு அம்பிகை சும்ப, நிசும்பர்களோடு பெரும் போர் செய்து இருவரையும் இறுதியில் கொன்றுவிட்டாள்.

இக்கதையை சுரதா, சமாதி இருவருக்கும் கூறிவிட்டு மேத்தா முனிவர், தேவியின் திருவருளைப் பெற ஒரே வழி அவளைப் பிரார்த்திப்பதுதான் என்று கூறினார். அவர்கள் இருவரும் தவத்தை மேற்கொண்டனர். தேவி பிரசன்னமான வுடன் சுரதா, தோல்வியே காணாத மன்னனாகப் பிறக்க வேண்டும்" என்று வேண்டினான். அடுத்த பிறப்பில் 'சவர்ணி மனுவாகப் பிறப்பான் என்று அன்னை வரமளித்தாள். சமாதி, தேவியின் திருவருள் ஒன்றே போதும் என்று கூறி, உண்மையான ஞானத்தை அறிந்து கொண்டான்.

பிரபஞ்சப் படைப்பு

ஆதியில் தோன்றிய பிரம்மன் தனது வலக்கைச் சுண்டு விரலில் இருந்து தட்சனையும், இடக்கைச் சுண்டு விரலில் இருந்து தட்சன் மனைவியையும் உண்டாக்கினார். தட்சன் மகளான அதிதி, காசிப முனிவரை மணந்து, மார்த்தாண்டா என்ற பெயருடன் துரியனைப் பிள்ளையாகப் பெற்றார்கள். பிரபஞ்சத் தொடக்கத்தில், பிரம்மாண்டமாகிய முட்டையிலிருந்து பிரம்மனுடன் சேர்ந்தே சூரியனும் உடன் தோன்றி னான். அவனுடைய வெப்ப மிகுதியால் பிரம்மன் படைப்புச் சீர் குலைந்தது. செடி கொடிகள் கருகின. தண்ணீர் ஆவியாகப் போய்விட்டது. இவை இரண்டும் இல்லாமல் உயிர்கள் வாழ முடியாதாகையால், பிரம்மன் சூரியனைக் குறித்துத் தவம் இயற்றினான். மனம் இரங்கிய சூரியன் தன் சக்தியைக் குறைத்துக் கொண்டான். நீர் வந்தது. செடி கொடிகள் வந்தன. விலங்குகள் தோன்றின. பின், மனிதனும் தோன்றினான். பிரம்மனே தேவர்களையும், அவர்களுக்கெதிரான தைத்திரியர்களையும், நாகர்களையும் படைத்தான்.

பிரம்மாவின் மற்றொரு பிள்ளை மாரீச்சி. மாரீச்சியின் மகனே காசிபன். காசிபன் தட்சனுடைய பதின்மூன்று பெண் களை மணந்தான். அதிதியின் மக்களாகிய அதித்தியர்களுக்கும், திதியின் மக்களாகிய தானவர்களுக்கும் போர் நடந்தது. அதிதி சூரியனை வேண்டி, மார்த்தாண்டா என்ற சூரியனையே மகனாகப் பெற்றுத் தைத்திரியர்களை வென்றனர்.

முன்னொரு காலத்தில் ராஜ்யவர்த்தனா என்ற மன்னன் நீதி நெறி வழுவாமல் ஆட்சி செய்து வந்தான். அவன் அரசாட்சியில் மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தனர். நாட்டில் பஞ்சம் நோய் எதுவுமின்றி மக்கள் வாழ்ந்தனர். அரசன் ஏழாயிரம் ஆண்டுகள் ஆட்சி புரிந்தான்.

அரசனின் மனைவிக்கு மனினி என்பது பெயர். அரசனின் தலைக்கு எண்ணெய் தேய்த்துவிடும் பொழுது அவள் கண்ணில் இருந்து ஒரு சொட்டு நீர் அரசன் மேல் விழுந்தது. அரசன் வியப்புடன் “எதற்காக அழுகிறாய்?" என்று கேட்டான். அரசி சிறிது மெளனம் சாதித்து, பின்பு அரசன் தலையில் வெண்முடி இருப்பதைக் கூறினாள். அதைக் கேட்ட அரசன் சிரித்து விட்டு, “நான் வேதங்களைக் கற்றிருக்கிறேன். ஆயிரக்கணக்கான யாகங்களைச் செய்திருக்கிறேன். இது முதுமை அடைந்து விட்டேன் என்பதற்குச் சாட்சி ஆகும். நான் காட்டிற்குச் செல்லும் நேரம் வந்து விட்டது” என்று கூறினான்.

இதை அறிந்த மக்கள் பெரிதும் வருத்தமுற்றனர். அரசன் காட்டிற்குச் சென்று விட்டால் நாட்டின் சுபிட்சம் மறைந்து விடும் என்று கருதினர். அரசன் தன் மகனுக்கு முடிசூட்டு வதற்கு நாள் பார்க்கும்படி கூறியும், வேண்டுமென்றே நாளைக் குறிப்பதில் தாமதம் செய்தனர். அரசனைப் போகக்கூடாது என்று பிராமணர்கள் பலர் கூறினர். அரசன் அவர்கள் வார்த்தையைக் கேட்கவில்லை. உடனே பிராமணர்கள் அனைவரும் கூடி, காமரூபம் என்ற காட்டில் உள்ள சூரியன் கோயிலுக்குச் சென்று தவம் செய்தார்கள். மூன்று மாதம் ஆனவுடன் சூரியன் தோன்றினான். பிராமணர்கள் துரியனை வணங்கித் "தங்கள் அரசன் இன்னும் பதினாயிரம் ஆண்டுகள் இளமையோடு இருந்து அரசாட்சி செய்ய வேண்டும்” என்று வேண்டிக் கொண்டார்கள். சூரியன் அந்த வரத்தைக் கொடுத்ததும் பிராமணர்கள் மகிழ்ச்சியோடு வந்து அரசனிடம் கூறினார்கள். அரசன் மகிழ்ச்சி அடைவதற்கு பதிலாக வருத்தப்பட்டான். ஏனென்று கேட்டபொழுது

அவன் கூறிய விடையானது, "நீங்கள் சொல்கிறபடி நான் இன்னும் பதினாயிரம் ஆண்டுகள் இருந்தால் என்னுடன் யார் உயிரோடு இருக்கப் போகிறார்கள்! என் அருமை மனைவி, பிள்ளைகள், என் குடிமக்களாகிய நீங்கள் ஆகிய ஒருவரும் அவ்வளவு காலம் இருக்கப்போவதில்லை. நீங்களெல்லாம் இறந்த பிறகு நான் மட்டும் உயிரோடு இருந்து என்ன பயன்?” என்றான். பிராமணர்கள் வாயடைத்து நின்றனர். இதற்கு ஒரு வழி செய்கிறேன் என்று கூறிய மன்னன், மனைவியை அழைத்துக் கொண்டு காமரூபத்தில் உள்ள சூரியன் கோயிலுக்குச் சென்று ஒரு வருடம் உணவு முதலியவற்றை நீக்கித் தவம் இருந்தான். சூரியன் நேரே வந்தவுடன், ‘ஐயனே! தங்கள் வரப்படி நான் மட்டும் உயிரோடு இருந்து என்ன பயன்? என் மனைவி, மக்கள், குடிமக்கள் ஆகிய அனைவரும் என்னுடன் சேர்ந்து இன்னும் பதினாயிரம் ஆண்டுகள் வாழும்படி வரம் தர வேண்டுகிறேன்” என்றான். சூரியனும் அப்படியே ஆகட்டும்' என்றான்.

தந்தையும் மைந்தனும்

மார்த்தாண்டனின் பரம்பரையில் வந்த கரந்தமா என்பவனுக்கும், அவன் மனைவி கிரா என்பவளுக்கும் பிள்ளையாகப் பிறந்தான் அவிட்சிதா, இவனுடைய மகன் மருத்தா என்பவனாவான். மருத்தாவிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு அவிட்சிதா தவம் ஏற்கப் போய்விட்டான். ஒருநாள் மருத்தாவிடம் சில முனிவர்கள் வந்து, “அரசே! எங்கள் ஆசிரமம் இருக்கும் இடத்தில் பாம்புகள் தொல்லை மிகுதியாக உள்ளன. அவற்றைக் கொல்லும் சக்தி எங்களிடம் உள்ளது என்றாலும் முனிவர்களாகிய நாங்கள் உயிர்களைக் கொல்லக்கூடாது. எங்களைக் காப்பது அரசனுடைய கடமை” என்று கூறினார்கள். அதைக்கேட்ட அரசன் தக்க ஆயுதங்களை எடுத்துக் கொண்டு சென்று பாம்புகளை எல்லாம் கொன்று தீர்த்தான். சில பாம்புகள் ஒடிச்சென்று மருத்தாவின் தந்தை அவிட்சாவிடம் முறையிட்டான். அவிட்சா மகனிடம் வந்து, "மகனே, பாம்புகளைக் கொல்லுவதை நிறுத்திவிடு” என்று கூறினான். மருத்தா தந்தை சொன்னதை ஏற்றுக் கொள்ளாமல், “என்னுடைய கடமை முனிவர்களைக் காப்பது? அவர்களுக்கு இடையூறு செய்யும் பாம்புகளைக் கொல்வது நியாயமானது" என்றான். தந்தைக்கும் மகனுக்கும் வாக்குவாதம் முற்றிவிட, தந்தை மகனைக் கொல்வதற்காக ஒரு தெய்வீக அத்திரத்தை எடுத்தார். முனிவர்கள் ஒடி வந்து தந்தை-மகன் சண்டையை நிறுத்தினார்கள். பாம்புகளும் இறந்த முனிவர்களை எழுப்பி விட்டன.

முடிவுரை

பறவைகள் ஜெய்மினி முனிவருக்கு மார்க்கண்டேய புராணத்தைச் சொல்லி முடித்தன. முனிவர் அப்பறவை களுக்கு நன்றி செலுத்திவிட்டுத் தன்னுடைய ஆசிரமத்திற்குத் திரும்பினார்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top