Latest Episode மிதக்கும் ஆயுதங்கள் - - அத்தியாயம் 8

Kathambari

Author
Author
#1
ஆணையர் அலுவலகம்

ப்ரித்தீஷ் அவன் இருக்கையில் அமர்ந்திருந்தான். அவனருகில் மேஜையில் சாய்ந்து நின்றிருந்தான் ஆரின்பன். இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

“அமைச்சர்ட இந்தக் கேஸப்பத்தி சொன்னியா.. “

ஆமாம் என்பது போல் தலையை அசைத்தான்.

“என்ன சொன்னாரு… “

“டைம் வேஸ்ட்… தேவ இல்லாத வேலனு சொல்றாரு”

“உருப்படியா ஒன்னு சொல்லிருக்காரு”

“எங்க மேல கோபமா ப்ரித்திஸ் … வேற வழி இல்லடா… பாதிக்கப்பட்ட பொண்ணுங்க ப்யூச்சருக்காக எப்ஐஆர் போடாம பண்றோம்.. லேசா அந்தப் பசங்கள தட்றோம்… ”

“ லேசா?? … ஆனா எத்தன ஏரியா போலீஸ் ஸ்டேஷன்ல நான் பேச வேண்டி இருக்கு தெரியுமா… ”

“புரியுது.. “

அந்த அறையில் அமைதி நிலவியது.

“ஆனா இந்த கேஸ்ல நீ கரெக்ட்டா போற… எப்ஐஆர் போடச் சொல்ற.. டேரக்டா இன்வால்வ் ஆகாம.. ஆனந்திய விட்டே டீல் பண்ற.. சந்தோஷமா இருக்கு… “

“அவ்வளவுதானடா.. சொல்லிட்டல.. விடு…இந்தக் கேஸ, லா அன்ட் ஆர்டர்ங்கற ஒரே நேர்கோட்ல எப்படி கொண்டு போறேனு மட்டும் பாரு.. யார்கிட்டயும் எனக்காக, நீ பேச வேண்டிய அவசியம் வராது… “என்றான் ப்ரித்திஸ் தோள் மீது கை வைத்து.

உள்ளே வந்த இளமதி, இதைப் பார்த்து விட்டு ‘இதே வேலயா போச்சு ‘ என்று நினைத்தபடி.

“ ரொம்ப சந்தோஷமா இருக்கியா ப்ரித்திஸ் .. “ எனக் கேட்டான்.

“ஆமாடா… இவன் இந்தக் கேஸ்ல லா அன்ட் ஆர்டர் பாலோவ் பண்றேன்னு சொன்னான்… “

“அப்ப உனக்க டபுள் சந்தோஷம்… “

“எப்படி .. “

“எனக்கென்னமோ அந்தக் கொலகாரன் ஸெராக்ஸ் கட வச்சிருப்பானு தோணுது.. “

இவன் என்ன சொல்ல வர்றான் என்பது போல் பார்த்தார்கள்.

“ஈவினிங் ப்ரேக்கிங் நியூஸ்.. அதே மாதிரி டெத் … வேற ஒரு இடத்தில.. காரு பார்க் பண்ணி இருக்கு.. சிசிடிவி கேமரா எதுவுமில்ல.. செல்போன் மிஸ் ஆகுது.. அந்த பையன் கையில் காயம் இருக்கு… “

இன்பன் ஆரம்பித்தான்…

“ யாரு ஏரியா “

“ முரளியோடது …”

“ ச்சு.. வேல வாங்கறது கஷ்டம்.. . “

“கொலை எப்ப நடந்திருக்கும்னு சொல்றாங்க.. “

“மிட்நைட் இருக்கலாம்… “ என்று சொல்லிக் கொண்டே வந்து ப்ரித்திஸிற்கு எதிரில் அமர்ந்தான்.

“இவ்வளவு லேட்டா நியூஸ் வருது.. உடனே சொல்ல மாட்டாங்களா”என்றான் இன்பன் எரிச்சலாக.

“உடனே சொல்லனும்னா கொல பண்ணவனதான் சொல்லச் சொல்லணும்… “

அவனது தலையில் லேசாக அடித்து விட்டு, சிறிது நேரம் யோசித்தான் இன்பன் …

“சரி.. பையன் சைடுல இருந்து… யாராவது கம்ப்ளைன்ட் கொடுக்கிறாங்களா… “என்றான்.

“இல்லடா செத்தவனோட அண்ணன் சின்னதா காய்கறி கட வச்சிருக்கானாம்… காசு செலவழிச்சி கேஸ நடத்த முடியாதாம்… “

“என்ன நம்புற மாதிரியா இருக்கு… தம்பிக்குக் கார் வாங்கிக் கொடுத்து… பப்புக்கு அனுப்புறான்… அவன் கிட்ட காசு இல்லையா.. “

“பப்ல இருந்து வந்தானானு தெரியாது.. நீயா முடிவு பண்ணாத… “

“அப்ப அத கண்டுபிடிக்கனும்… ”

“ம்ம்”

“அண்ணன் பேரென்ன.. “

“தினேஷ்… “

“எதோ தப்பான வேலை பார்க்கிறான்.. அதான் போலீஸ் கிட்ட நெருங்கப் பயப்படறான்… “

“இப்ப என்ன செய்ய… “

“நான் சொல்றபடி கேளு…எப்ஐஆர் போட வேண்டாம்.. அதான் நல்லது… கேஸ் ஒரு பக்கம் போட்டும் … அட்டாப்ஸி பண்ணனும், பப்ல விசாரிக்கனும்.. முக்கியமா இந்த ரெண்டு பசங்களுக்கும் என்ன சம்பந்தம்னு பாக்கனும் .. அவங்க அண்ணன நீ பாலோவ் பண்ணு… என்னைக்காவது, எங்கயாவது இந்தக் கேஸ் நகராம நின்னதுனா.. அப்போ இந்த தினேஷ யூஸ் பண்ணிக்கலாம்… ப்ரித்திஸ் நீ என்ன சொல்ற… “ என அவனைக் கேட்க திரும்பினான் ஆரின்பன் .

அங்கே தலையில் கை வைத்தபடி அமர்ந்திருந்தான் ப்ரித்திஸ்.

ஆரின்பன், மதியை தொட்டுக் கூப்பிட்டு ‘நான் கிளம்புறேன்’ என்று சைகை செய்து, தலையைக் குனிந்தபடியே அறையின் வெளியே வந்தவன் எதிரே வந்த அனலிக்கா மீது மோதிக் கொண்டான்.

“வாங்க டாக்டர்.. “

“மத்தவங்களுக்கு தான் நான் டாக்டர்.. உங்களுக்கு இல்ல.. “

“என் டயலாக் எனக்கேவா.. “

“ என்ன டயலாக்.. “ என புரியாமல் விழித்தாள்.

“அத விடுங்க.. அது வேற ட்ராக்.. நானே உங்கள பார்க்க வர நெனச்சேன்… “

“எதுக்கு.. “

“நேத்து நீங்க பாக்கனும்னு சொன்னதல இருந்து உங்களையே நினச்சிக்கிட்டு இருந்தா… எதுக்குனு கேக்கறீங்க.. “

அவளது மொத்த காதலையும் கண்களில் கொண்டு வந்து நிறுத்தி , அவனிடம் காட்டினாள்.

சில நொடிகள் அதை ரசித்துவிட்டு..

“இது கமிஷனர் ஆபீஸ்.. “ என்று அவளை தன்னிலைக்கு கொண்டு வந்தான்.

மெல்லிய புன்னகை முகத்தில் ஏந்தியபடி” ஸாரி… “ என்றாள் .

“ போயி கார எடுத்துட்டு ரெடியா இருங்க.. ஒரு பைவ் மினிட்ஸ்ல வரேன் … “

சரி எனத் திரும்பி சென்றாள்.

திரும்பவும் அறையின் உள்ளே சென்றவனை “நீ இன்னும் போகல” என்றான் மதி.

“கிளம்பிட்டேன் “என்றான் மேஜையில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து குடித்தபடி.

“டிராப் பண்ண டாக்டர் வந்தாச்சா.. “

“ம்ம் “

“எத்தன நாளைக்கு இப்படியே.. அடுத்த ஸ்டேஜுக்கு எடுத்துட்டு போ.. “

பதிலேதும் சொல்லாமல் கிளம்பினான்.

“அந்தப் பொண்ணு இவன சமாளிக்குமா… “என்றான் ப்ரித்திஸ்.

“முதல சம்மதிக்கட்டும்.. “என்ற மதியின் மீது அதே தண்ணீர் பாட்டிலை தூக்கி எறிந்தான் ஆரின்பன்.

திரும்பிப் பார்த்த மதியிடம்..

“ரொம்ப பேசக்கூடாது… “என்றான்.

கீழே விழுந்து பாட்டிலை எடுத்து மதி திரும்ப எறிய… ஆரின்பன் விலக… திரைச்சீலைக்குப் பின் நின்ற கருப்பசாமியின் தோளைப் பாட்டில் பதம் பார்த்தது.

ப்ரித்திஸ் அவனது இருக்கையில் இருந்து திரும்பிச் சிரிக்க ஆரம்பித்தான்..

‘நேத்தே கொடுக்க வேண்டியது’ என்று மனதில் நினைத்தான் மதி .

ஆரின்பன் அவரது தோளைத் தடவி விட்டபடி “இவ்வளவு பெரிய பில்டிங்ல உங்களுக்கு உட்கார இடமில்லயா.. எப்ப பாரு ஸ்கிரீனுக்குப் பின்னாடியே நின்னுகிட்டு.. “என்றான்

“இல்ல சார்.. கமிஷனர் கிளம்பிட்டாரா.. ஜீப் ரெடி பண்ணவானு கேட்க வந்தேன்.. “

“உள்ள போய் கேளுங்க.. “ என்ற ஆரின்பன், அதன் பின் அங்கு நிற்கவில்லை.

காரினுள் நுழைந்தவனிடம்…

“போலாமா.. “என்றாள்.

“ம்… நேத்து கொஞ்சம் வேல… அதான் வரல.. “

இதழ் விரியாதப் புன்னகைத் தந்தாள்..

“இதுக்கு அர்த்தம் ‘பரவால்ல’.. கரெக்டா”என்றான்.

மறுபடியும் சிரித்துக், காரைக் கிளப்பினாள்.

காரை ஓட்டிக் கொண்டு, அவனுடன் பேசியபடியே வந்தவள், அவன் வீட்டுக்குச் செல்லும் ஒரு வழிச் சாலையில் நுழைந்தாள்… திடீரென முன்னே சென்ற கார் நின்றது.

“ எப்படி கார ஓட்டுறாங்க… “

“ஓட்டல… நிறுத்திட்டான்.. எடுக்க மாட்டான்… காரைத் திருப்பி, வேற வழியா போயி மெயின் ரோட பிடிக்கனும்... “ என்றான் படபடவென்று.

அவன் புறம் பார்வையைத் திருப்பி பார்த்தாள்.

“சீக்கிரமா.. “ என்றான்.

ரிவர்ஸ் கியர் போட்டு, வலது புறமாக திரும்ப முயன்ற போது … அங்கும் பாதையை அடைத்து மற்றொரு கார் நிறுத்தப்பட்டது...

தனது இடது கரத்தால் நெற்றியைத் தேய்த்தபடி யோசித்தவன், “இங்கேயே இருக்கனும்... “என்று சொல்லி முடிக்கும் முன்பே ஒரு பெரிய உருட்டுத் தடியால் காரின் முன் இன்ஜின் மீது அடிக்கப்பட்டது…

அவள் அவனைப் பயத்துடன் பார்க்க… ஒரு நொடி ப்ரித்திஸ் சொன்ன ‘கவனமா இரு” ஞாபகம் வந்தது. ஆனால் அடுத்த நொடியே காரின் கதவைத் திறந்து வெளியே வந்தான்.

வந்தவன், இஞ்சின் மேல் கை வைத்து எகிறிக் குதித்து, காரின் மறுபுறம் வந்து நின்றான்.

அவன் அடுத்த அடுத்து செய்த காரியங்களில், அவள் முகம் வெவ்வேறு உணர்ச்சிகளைக் காட்டியது.

திடுமென காரை விட்டு இறங்கி, ஓடிச் சென்று… அவன் கையைப் பிடித்துக் கொண்டாள். என்ன என்பது போல் திரும்பிப் பார்த்தான்.

“ப்ளீஸ்…வேண்டாம் ..போலாம்.. “

ஆனால் அவன் எதுவும் சொல்லாமல், அவளை இழுத்துக் கொண்டு காரை நோக்கிச் சென்றான்… அதற்குள் ஒருவன்… அவன் பின்னே கத்தியைக் கொண்டு வந்தான்…. முன்னெச்சரிக்கையாகக் காதை பின்புறமும் வைத்துக் கொண்டதால் கையைப் பின்புறம் நீட்டித் தடுத்தான்…. இருந்தும் கத்தி அவனது கையை இலேசாக பதம் பார்த்தது. ஆனால் அதன்பிறகு அந்தக் கத்தியை ஏந்தியவனின் நிலை பரிதாபமாக ஆயிற்று…

அவனை எப்படியாவது தடுத்து நிறுத்த எண்ணியவள்.. “இதெல்லாம் வேண்டாம்.. நீங்க ஏன் அடிக்கிறீங்க… பிரச்சன வரும்.. போலிஸ்கிட்ட பிடிச்சி கொடுங்க...“ என்று கெஞ்சினாள் .

திரும்பி கேள்வியாக அவளைப் பார்த்து “அப்ப நான் யாரு.. “ என்றான்.

ஏதோ சொல்ல முயன்றவளை, வலுக்கட்டாயமாக இழுத்து வந்து காரில் உட்கார வைத்தான். கார் கீயை எடுத்து.. வெளியிலிருந்து காரை லாக் செய்தான் .

அதற்கப்புறம் அவனை யாரும் தடுக்க இயலவில்லை. அவனும் தடுக்கும் நிலையில் இல்லை.

எல்லாம் முடிந்த பின் காரினுள் வந்து அமர்ந்தான்.. அவளின் பார்வை வேறு விதமாக இருந்தது…

“தண்ணி இருக்கா.. “என்று கேட்டான்.

அவளது கைப்பையில் இருந்து எடுத்து நீட்டினாள்.

அவன் குடிக்கும் போது.. அவளின் பார்வை, அவனது கையில் கத்தி கிழித்து ரத்தம் கசிந்து கொண்டிருந்த இடத்தில் இருந்தது….

ஓரப்பார்வையில் அவளைப் பார்த்தவன் “ இதுவும் காயம் தான்.. இதுக்கு கூட கட்டு போடலாம்…. “ என்றான்.

அவள் எதுவும் பேசவில்லை. காரைக் கிளப்பினாள்.

அவன்தான் இடையே “மதி வீட்ல டிராப் பண்ணனும்… “ என்றான் .

இளமதி வீடு வந்தவுடன் அவன் இறங்கி சென்றுவிட்டான்.

இளமதி வீடு

அழைப்பு மணியின் சத்தத்தை கேட்டதும், இளமதி வந்து கதவைத் திறந்தான்…

எதுவும் சொல்லாமல் உள்ளே வந்த ஆரின்பன் , சோபாவில் பொத்தென சரிந்தான்.

“என்ன, இப்ப வந்திருக்க.. “

எதுவும் பேசவில்லை இன்பன்.

“ எத்தன பேருடா”

எதுவும் சொல்லாமல் அவன் கையைத் தலைக்கு அனைவாக வைத்து கண்மூடினான்.

“ஓ.. டாக்டர் கூட இருந்தாங்களா “என்று சிரித்தான்.

சடாரென எழுந்தான் ஆரின்பன். “டாக்டரா அது.. டேய் நீ என்னைக்காவது ஹ்யூமன் ரைட்ஸ் ஆளுங்கள கூடவே வச்சுக்கிட்டு அடிச்சிருக்க… அப்படி இருந்துச்சு.. “

(தொடரும்)
 

Latest Episodes

Sponsored Links

Top