• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

முதல் பாகம் : கோடை

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Yazhini1

Moderator
Staff member
Joined
Nov 8, 2019
Messages
228
Reaction score
23
1.11. 'எனை மணந்த மணவாளன்'


பிறகு கல்யாணம் எவ்விதமான தங்கு தடையாவது, சண்டை சச்சரவாவது இல்லாமல் நடந்தேறியது. சம்பந்திகள் எள்ளு என்று கேட்பதற்குமுன் எண்ணெயாகவே கொடுத்துவிடும்படி சம்பு சாஸ்திரியின் உத்தரவு. ஆகவே, அவர்களுக்கு எவ்வித மனக் குறையும் ஏற்படவில்லை. உண்மையில், இந்தக் கல்யாணத்தில் ஆன வீண் செலவுகளைப் பற்றிச் சம்பந்தியம்மாளே புகார் சொல்லும்படியிருந்தது. "அடாடா! இது என்ன ஊதாரித்தனம்! இப்படியா பணத்தை வாரி இறைப்பார்கள்? நாங்கள் சம்பந்திகள் வந்திருப்பது முப்பது பேர். இங்கே சாப்பாடு நடக்கிறது ஐநூறு பேருக்கு. வருகிறவாள், போகிறவாள் எல்லாரும் இப்படியா வாரிக் கொட்டிக்கொண்டு போகவேண்டும்?" என்று தங்கம்மாள் வயிறு எரிந்தாள். இப்படிச் செலவாகிற பணமெல்லாம் மாட்டுப் பெண் மூலமாகத் தன் பிள்ளைக்கு வந்து சேரவேண்டிய பணம் என்ற ஞாபகமானது அந்த வயிற்றெரிச்சலை அதிகமாக்கியது.

கல்யாணம் அமர்க்களமாகத்தான் நடந்தது. இந்தக் கல்யாணத்தில் எப்போது பார்த்தாலும் அண்டா நிறையக் காப்பி தயாராயிருந்ததையும், நினைத்தவர்கள் நினைத்த போது காப்பி சாப்பிட்டுக் கொண்டிருந்ததையும் பற்றி அந்தப் பிரதேசத்தில் வெகு நாளைக்குச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அக்கிரகாரத்தில் முக்கால்வாசி வீடுகளில் ஆறு மாதத்துக்குக் காப்பிக்கு வேண்டிய சர்க்கரை கல்கண்டு இந்தக் கல்யாணத்தில் சேர்ந்துவிட்டது. குடியானத் தெரு ஜனங்களுக்கும் இந்தக் கல்யாணத்தில் குதூகலந்தான். நாலு நாளும் இராத்திரியில் குடி படைகளுக்குச் சாப்பாடு போட்டுவிட வேண்டுமென்று சாஸ்திரி உத்தரவிட்டிருந்தார். இந்தக் கல்யாணச் சாப்பாட்டை உத்தேசித்து குடியானத் தெருவில் சில வீடுகளுக்கு வெளி ஊர்களிலிருந்து உறவு முறையார் கூட வந்திருந்தார்கள். குடிபடைகளுக்குச் சாப்பாடு போட்டு வெற்றிலை பாக்கு வாங்கிக் கொடுப்பதில் புகாருக்கு இடமில்லாமல் முன்னின்று நடத்தி வைக்கும் பொறுப்பு நல்லானுக்கு ஏற்பட்டது. அவன் இது விஷயத்தில் கொஞ்சமும் பின்வாங்கவில்லை. சாதாரணமாய், சாஸ்திரியாரின் க்ஷேம லாபத்தில் அவன் ரொம்ப அக்கறையுள்ளவனாயிருந்தும், இந்தச் சமயத்தில், 'எங்கெங்கிருந்தோ முன் பின் தெரியாத ஐயமாரெல்லாம் வந்து சாப்பிட்டுட்டுப் போறாங்களே? வருஷமெல்லாம் உழைக்கும் குடியான ஜனங்களும்தான் சாப்பிடட்டுமே! இவங்களுக்கு எஜமானிடம் நன்றி விசுவாசமாவது இருக்கும்' என்று அவன் எண்ணி, மிகவும் தாராளமாகவே வந்தவர்களுக்கெல்லாம் வாரி விட்டுக்கொண்டிருந்தான்.

இந்த மாதிரியெல்லாம் செலவாவதைப் பற்றிச் சம்பந்தியம்மாளைக் காட்டிலும் பத்து மடங்கு வயிறெரிந்து கொண்டிருந்தார்கள், மங்களமும் அவள் தாயாரும். ஆனால், இந்தக் களேபரத்தில் அவர்களால் ஒன்றும் குறுக்கிட்டுச் சொல்ல முடியவில்லை. சொன்னாலும் தங்கள் பேச்சு ஏறாதென்று அவர்களுக்குத் தெரிந்திருந்தது. ஆகவே, தாயாரும் பெண்ணும் கூடிக் கூடிப் பேசிக்கொள்வதுடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று. அவர்களுடன் சிலசமயம் மங்களத்தின் தம்பி செவிட்டு வைத்தியும் சேர்ந்து கொண்டான். பாவம்! செவிட்டு வைத்திக்கு, சாவித்திரியைத் தனக்குக் கல்யாணம் செய்து கொடுப்பார்கள் என்ற ஓர் ஆசை மனத்திற்குள் இருந்துகொண்டிருந்தது. அது இப்போது நிராசையாய்ப் போயிற்று. ஊரில் சிலர் அவனை இது சம்பந்தமாகப் பரிகாசமும் செய்தார்கள். ஆகவே, ஏக்கமும் பொறாமையும் முகத்தில் பொங்கி வழிய அவன் கல்யாண வீட்டில் உள்ளுக்கும் வாசலுக்கும் போய் வந்து கொண்டிருந்தான். அடிக்கடி மங்களம் இருக்குமிடத்துக்குப் போய், "அக்கா! கல்யாண தட்சிணை ஆளுக்கு ஒரு ரூபாயாம்!" என்றும், "ராத்திரி முந்நூறு தேங்காய் கிடந்தது; இப்போ ஒண்ணு கூட இல்லை" என்றும், இந்த மாதிரி ஏதாவது சொல்லிக்கொண்டிருந்தான்.

இப்படியாக அந்தக் கல்யாணத்தை மிகவும் சந்தோஷமாயும் குதூகலத்துடனும் அநுபவித்தவர்கள் பலர்; மனத்துக்குள் எரிந்துகொண்டு வெளியில் காட்டிக்கொள்ளாதிருந்தவர்கள் சிலர். அவர்களுள் எல்லாம் அளவிலாத ஆனந்தத்தில் மூழ்கிச் சொர்க்க வாழ்வையே அடைந்துவிட்டதாக எண்ணிய ஒரு ஜீவனும், சொல்ல முடியாத சோக சாகரத்தில் மூழ்கித் தத்தளித்துக் கொண்டிருந்த ஓர் ஆத்மாவும் இருந்தார்கள். அவர்கள் மணப்பெண்ணாகிய சாவித்திரியும் மணமகனாகிய ஸ்ரீதரனுந்தான்.

"பிள்ளையாண்டானுடைய மோவாய்க் கட்டையைப் பிடித்து அப்பா, ஐயா என்று கெஞ்சியாக வேண்டும்" என்று சம்பந்தியம்மாள் சம்பு சாஸ்திரியிடம் சொன்ன போது உண்மையையே சொன்னாள். ஆனால் அவள் சொன்ன காரணம் மட்டும் சரியல்ல. தங்கம்மாள் சென்னைப் பட்டணத்துக்குப் போய் வழக்கம்போல் தன்னுடைய சக்தி முழுவதையும் பிரயோகித்தாள். மூன்று மணி நேரம், வாக்குவாதம், கோபதாபம், அழுகை புழுகை எல்லாம் ஆனபிறகு கடைசியாக அவள், "இப்பொழுது ஒண்ணும் முழுகிப் போகவில்லை. எல்லாருமாகக் கிளம்பிக் கல்யாணத்துக்குப் போவோம். நீயே பொண்ணைப் பாரு. பொண்ணைப் பார்க்காமயா தாலி கட்டப் போறே? பார்த்த பிறகு உனக்குப் பிடிக்காட்டா, என்கிட்டே சொல்லு. நான் எப்படியாவது கல்யாணத்தை நிறுத்திடறேன். எல்லாருமாத் திரும்பி வந்துடலாம்" என்று சொன்னாள். "அது நன்னாயிருக்குமா?" என்று ஸ்ரீதரன் கேட்டதற்கு, "ஏன் நன்னாயிருக்காது? இப்போது பணம் அட்வான்ஸ் வாங்கிண்ட அப்புறம் ஒரு காரணமும் இல்லாமல் வாண்டான்னாத்தான் அவமானம். அப்போ உனக்குப் பொண் பிடிக்கலைன்னா ஏதாவது நான் சாக்குச் சொல்லிவிட்டுக் கிளம்பி விடறேன். உனக்கென்ன அதைப்பத்தி?" என்றாள். இதன்மேல், ஸ்ரீதரன் வேண்டா வெறுப்பாகச் சம்மதித்தான். சம்பு சாஸ்திரியின் பெரிய மனுஷத்தன்மையைப் பற்றியும் சாவித்திரியின் அழகைப் பற்றியும் அவள் வர்ணித்ததும் ஒருவாறு அவன் மனத்தை இளகச் செய்திருந்தன.

இப்போது நெடுங்கரைக்கு வந்து அந்தப் பட்டிக்காட்டையும் 'ஜான்வாஸ' ஊர்வலத்தின் அழகையும் பார்த்த பிறகு அவன் மனம் சோர்ந்துவிட்டது. அவனுக்கு மாமனாராக வரவிருந்த சம்பு சாஸ்திரி இன்னாரென்று தெரிந்ததும் அவனுக்குப் பஞ்சப் பிராணனும் போய்விட்டது. கோவிலில் வைத்து உபசாரங்கள் நடந்த போதெல்லாம், சம்பு சாஸ்திரி குறுக்கே நெடுக்கே போய்க் கொண்டிருந்ததைப் பார்த்து, அவர் அந்தக் கோவிலின் குருக்கள் என்று அவன் எண்ணினான். அப்புறம், அவர்தான் சம்பு சாஸ்திரி என்று தெரிந்தபோது, "ஐயோ!" என்று அசந்து போனான். 'இந்தக் கட்டுப்பெட்டிப் பிராமணனா எனக்கு மாமனார்? இவருடைய பெண்ணும் இப்படித்தானே இருக்கும்?' என்று எண்ணியபோது அவனுக்குச் சொரேல் என்றது. தன் சிநேகிதன் நாணா சொன்னதெல்லாம் நிஜந்தான், பரிகாசமல்ல என்று அவனுக்கு நிச்சயம் ஏற்பட்டது. இந்தக் கண்ணராவியையெல்லாம் பார்க்க நாணா கல்யாணத்துக்கு வராமல் போனதே நல்லது என்றும் நினைத்தான்.

ஊர்வலம் முடிந்து, சம்பந்திகளுக்காக ஏற்பட்டிருந்த ஜாகைக்குப் போனதும், அம்மாவைத் தனியாக அழைத்து அழமாட்டாத குரலில், "என்னால் முடியாது; இந்தக் கல்யாணம் எனக்கு வேண்டாம். இப்போதே நான் ஓடிப் போறேன்" என்றான்.

இவர்களுக்குள் வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தபோதுதான் தீக்ஷிதர் சம்பு சாஸ்திரியை அழைத்துக் கொண்டு வந்து சேர்ந்தார். தங்கம்மாள் சாஸ்திரியுடன் பேரம் பேசி, அவர் அதிகப் பணம் கொடுக்கச் சம்மதித்துவிட்டுப் போனதும், மறுபடியும் தன் மகனிடம் வந்தாள். "அப்பா! குழந்தை! நீயுந்தான் இப்படிச் சொல்றேன்னு, நான் அந்தப் பிராமணன் கிட்டே ஏதாவது சாக்குக் காட்டிக் கல்யாணத்தை நிறுத்திவிடலாம்னு பார்த்தேன். அது முடியலையேடாப்பா! இன்னொரு ஆயிரம் ரூபாய் அதிகம் கொடுக்கணும்னேன். உடனே சரீன்னுட்டார். என்ன பண்றதுடாப்பா, குழந்தை! கல்யாணத்தை நடத்தித்தான் ஆகணும்!" என்றாள்.

சம்பு சாஸ்திரியின் தாராள சுபாவத்தை அறிந்ததும், உண்மையிலேயே தங்கம்மாளுக்கு இந்தக் கல்யாணத்தை எப்படியாவது நடத்திவிட வேண்டுமென்று உறுதி ஏற்பட்டிருந்தது.

ஸ்ரீதரனோ அத்தனைக்கத்தனை ஆத்திரம் அடைந்தான். "நீ நாசமாய்ப் போக! பணம், பணம், பணம் என்று அடித்துக்கொள்கிறாயே? பணம் உன்னோடு சுடுகாட்டுக்கு வரப்போறதா?" என்றான்.

இதுதான் சமயமென்று தங்கம்மாள் தன் கைவரிசையை ஆரம்பித்துவிட்டாள். "ஆமாண்டாப்பா! என்னை இந்த ஊரிலேயே சுடுகாட்டிலே வச்சுட்டுப் போயிடு. நான் இதோ கிணத்துலே விழுந்து செத்துப் போறேன். இந்த அவமானத்தோடே என்னாலே ஊருக்குத் திரும்பிப் போக முடியாது" என்று சொல்லி அழத் தொடங்கினாள். இந்த மாதிரி சோக நாடகமெல்லாம் கொஞ்ச நேரம் நடந்த பிறகு, கடைசியில் தங்கம்மாள், 'நான் சொல்றதைக் கேள்டா, குழந்தை! நீ இப்போ மாத்திரம் என் மானத்தைக் காப்பாத்திடு, அப்புறம் உனக்கு வேணும்னா, ஆம்படையாளை அழைச்சு வைச்சுக்கோ! இல்லாட்டா, வேண்டாம். அவ எனக்கு மாட்டுப் பொண்ணா இருந்துட்டுப் போகட்டும்" என்றாள். ஸ்ரீதரன், "அப்படின்னா, நீயே நாளைக்கு எனக்குப் பதிலாகத் தாலி கட்டிவிடு" என்றான்.

ஆனால், மறுநாள் ஸ்ரீதரன் தான் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட சுபலக்னத்தில் சாவித்திரிக்குத் தாலி கட்டினான். அதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு முதன் முதலாக, கல்யாணப் பந்தலில் மாலை மாற்றும் சந்தர்ப்பத்தில், ஸ்ரீதரன் சாவித்திரியைப் பார்த்தான். சாவித்திரி அப்போது குனிந்த தலை நிமிராமல் இருந்தாள். கிராமாந்தர வழக்கப்படி, அவளுக்குப் பதினெட்டு முழப் புடவை உடுத்தி, தலையில் பழைய காலத்து நகைகள் எல்லாம் அணிவித்து அலங்காரம் செய்திருந்தார்கள். அதைப் பார்த்த ஸ்ரீதரன், "கர்நாடகம் என்றால் படு கர்நாடகம்" என்று தீர்மானித்துக் கொண்டான். பிறகு, திருமாங்கல்ய தாரணத்துக்கு முன்பு மணமகனும் மணமகளும் மந்திரோச்சாடனத்துடன் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கும் கட்டம் வந்தது. இருவரையும் எதிர் எதிரே உட்காரவைத்து ஒரு பட்டுத் துணியைப் போட்டு மூடினார்கள். மந்திரம் பண்ணிவைத்த சாஸ்திரிகள் "முகத்தைப் பார்த்தாயா?" என்று கேட்டார். ஆம்; ஸ்ரீதரன் சாவித்திரியின் முகத்தைப் பார்த்தான். முதலில் அவளுடைய கண்கள் தான் தெரிந்தன. அந்தக் கண்களின் பார்வையில் இருந்த ஒருவிதப் பரிதாபம் அவன் இருதயத்தை ஒரு கண நேரம் என்னமோ செய்தது. அப்புறம், முகம் தெரிந்தது. வெகு நேரம் ஹோம குண்டத்துக்கு எதிரில் இருந்து சாவித்திரியின் முகம் புகையுண்டிருந்தது. போதாததற்குக் கண்களை அடிக்கடி கசக்கியதனால் கண்ணில் இட்டிருந்த மை கன்னமெல்லாம் வழிந்திருந்தது. மூக்கிலே புல்லாக்குத் தொங்கிற்று. இந்த நிலையிலிருந்த சாவித்திரியின் முகத்தைப் பார்த்ததும், ஸ்ரீதரன், 'இவ்வளவு அவலட்சணமான முகம் இந்த உலகத்திலேயே இருக்க முடியாது' என்று தீர்மானித்து விட்டான்.

அப்புறம் அந்தக் கல்யாணத்தின்போது, சாவித்திரியின் முகத்தை இன்னொரு தடவை பார்க்க ஸ்ரீதரன் முயற்சி செய்யவில்லை. 'ஏதோ தலைவிதியினால் இந்தப் பந்தம் ஏற்பட்டுவிட்டது; ஆனால் இப்போது தாலி கட்டுவதுடன் சரி, அப்புறம் எனக்கும் இவளுக்கும் யாதொரு சம்பந்தமும் கிடையாது' என்று அடிக்கடி அவன் மனத்தில் உறுதி செய்து கொண்டான். அந்தப் பெண்ணிடம் அவனுக்கு லவலேசமும் இரக்கம் உண்டாகவில்லை. 'இவள் ஏன் பிறந்தாள்? இவள் பிறந்ததனால் தானே நாம் இந்தச் சங்கடத்தில் அகப்பட்டுக்கொள்ள நேர்ந்தது?' என்று எண்ணி என்ணி அவன் ஆத்திரப் பட்டான்.

சாவித்திரியின் மனோ நிலையோ இதற்கு நேர் மாறாக இருந்தது. கல்யாணம் நிச்சயமானதிலிருந்து அவள், 'ஸ்ரீதரன், ஸ்ரீதரன்' என்று மனத்திற்குள் ஜபம் செய்து கொண்டிருந்தாள். காகிதத்தையும் பென்ஸிலையும் எடுத்துக் கொண்டு போய்த் தனியான இடத்தில் உட்கார்ந்து கொண்டு, "ஸ்ரீதரன், பி.ஏ." "ஸ்ரீதரய்யர், பி.ஏ." "மகா-௱-௱-ஸ்ரீ ஸ்ரீதரய்யர் அவர்கள்" என்றெல்லாம் எழுதி எழுதிப் பார்ப்பாள். கல்யாணத் தேதி நெருங்க நெருங்க, ஸ்ரீதரனைப் பார்க்கவேண்டுமென்னும் அவளுடைய ஆவலும் அதிகமாகிக் கொண்டிருந்தது.

கல்யாணத்துக்கு முதல் நாளிரவு அவளுடைய ஆவல் உச்ச நிலையை அடைந்திருந்த சமயத்தில், 'கசு முசு' என்று பலரும் இரகசியம் பேசிக்கொண்டதை அவள் கவனித்தாள். வம்புக்கார ஸ்திரீகள் இரண்டொருவர் அவளிடம் வந்து, "அடியே! சாவித்திரி! 'பொண்ணு பிடிக்கலை, கல்யாணம் வேண்டாங்'கறானாம் உன் ஆம்படையான்!" என்று சொன்னார்கள். இது சாவித்திரி காதில் நாராசமாக விழுந்தது. ஆனாலும் அதை அவள் நம்பவில்லை. சம்பு சாஸ்திரி திரும்பி வந்ததும், "என்ன அப்பா எல்லோரும் கூடிக் கூடிப் பேசிக்கிறாளே," என்று கேட்டாள். "உனக்கு ஒன்றுமில்லை, அம்மா! கல்யாணம்னா அப்படித்தான் இருக்கும். சம்பந்திகள் அது பண்ணலை, இது போறலை என்று சொல்லிக் கொண்டிருப்பா, நாலு பேர் நாலு வம்பு வளப்பா! அதையெல்லாம் நீ காதிலேயே போட்டுக்கப்படாது, அம்மா!" என்றார். சாவித்திரிக்கு இதனால் சமாதானம் உண்டாயிற்று.

மறுநாள் சாவித்திரி, முதன் முதலாக ஸ்ரீதரனைப் பார்த்தபோது, அவள் உடல் முழுதும் மகிழ்ச்சியினால் ஒரு குலுங்குக் குலுங்கிற்று. அவள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தபடி ஸ்ரீதரன் உச்சிக் குடுமியுடன் இராமல், நாகரிகமாகக் கிராப் வைத்துக் கொண்டிருப்பதையும், சிவந்த மேனியுடன் சுந்தர புருஷனாய் விளங்குவதையும் கண்டதும், கர்வத்தினால் அவளுடைய உடல் பூரித்தது. திருமாங்கல்ய தாரணத்துக்கு முன்னால், பட்டுத் துணியினால் மறைக்கப்பட்ட சமயம், ஸ்ரீதரனுடைய முகத்தைப் பார்த்தபோது, அவளுக்கு மயிர்க் கூச்சம் எடுத்து, கண்களில் ஜலம் வந்துவிட்டது.

அப்புறம் அவனுடைய அழகிய முகத்தை மறுபடி பார்க்க வேண்டுமென்று அடிக்கடி அவளுக்கு ஆவல் உண்டாயிற்று. சில தடவைகளில் ரொம்பவும் துணிச்சலுடன் நிமிர்ந்து பார்ப்பாள். அப்போதெல்லாம் அவன் தன்னைப் பாராமல் குனிந்து கொண்டிருப்பதையோ அல்லது வேறு பக்கம் நோக்கிக் கொண்டிருப்பதையோ பார்த்ததும் அவளுக்கு அவமானமாய்ப் போய்விடும். 'அவர் எவ்வளவு அடக்கமாக இருக்கிறார்? நமக்கு எவ்வளவு துணிச்சல்' என்றெண்ணித் தன் ஆவலை அடக்கிக் கொண்டாள்.

கல்யாணம் நாலு நாளும் சாவித்திரி இந்த உலகத்திலேயே இருக்கவில்லை. துயரம் என்பதே இல்லாத ஆனந்த கற்பனாலோகத்தில் வசித்து வந்தாள்.

'கோடையிலே யிளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த
குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே
ஓடையிலே யூறுகின்ற தீஞ்சுவைத் தண்ணீரே
உகந்ததண்ணீ ரிடைமலர்ந்த சுகந்தமண மலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே
மென்காற்றில் விளைசுகமே சுகத்திலுறும் பயனே
ஆடையிலே யெனைமணந்த மணவாளா!......'

என்று அவளுடைய குழந்தை உள்ளம் ஓயாமல் பாடிக் கொண்டேயிருந்தது. தனக்குப் புருஷனாக வாய்த்தவர் சாதாரண மனுஷர் அல்ல, தன்னுடைய தகப்பனார் பூஜை செய்யும் ஸ்வாமிதான் தன்னைச் சிறு தாயாரின் கொடுமையிலிருந்து மீட்பதற்காக இப்படி மனுஷ ரூபத்தில் வந்திருக்கிறார் என்று எண்ணினாள்.

தன்னுடைய துயரங்கள் எல்லாம் தீர்ந்துவிட்டனவென்றும், இனிமேல் தன் வாழ்க்கையில் சந்தோஷத்தைத் தவிர துக்கம் என்பதே கிடையாதென்றும் அவள் நினைத்து நினைத்து மனம் பூரித்தாள். வாழ்க்கையில் தன்னுடைய கஷ்டங்களெல்லாம் உண்மையில் அப்போதுதான் ஆரம்பமாகின்றன என்பது அந்தப் பேதைப் பெண்ணுக்கு எப்படித் தெரியும்?

கடவுளின் கருணை அற்புதமானது; அனந்தமானது. மனுஷ்யர்களுக்கு அவர்களுடைய வருங்காலத்தை அறியும் சக்தி இல்லாமல் பகவான் செய்திருக்கிறார் அல்லவா? இந்த ஒன்றிலேயே இறைவனுடைய கருணைத் திறத்தை நாம் நன்கு அறிகிறோம். வருங்காலத்தில் நிகழப்போவதெல்லாம் மட்டும் மனுஷனுக்குத் தெரிந்திருந்தால், அவன் ஒரு கணமாவது உண்மையான மகிழ்ச்சி அநுபவிக்க முடியுமா?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top