• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மௌனம் என்றொரு மொழி

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
பகுதி - 21

மறக்க முடியாத

தருணங்களில்

எல்லாம்

உன்னை பற்றிய

ஏதோ ஒரு நினைவு

கொசுறாக

புகழ் போனை வைக்கவும், ஷிவானி மீண்டும் அவனுக்கு அழைக்க, “சிவா... கஸ்டமர்கிட்ட பேசிட்டு இருக்கேன்...” புகழ் பொறுமையாகவே பதில் கூறி போனை அணைக்க,

“என்னை விட கஸ்டமர் முக்கியமா போயிட்டாங்களா?” என்று சிறுபிள்ளை போல பிடிவாதத்துடன் நினைத்துக் கொண்டவள், அவனுக்கு மீண்டும் அழைத்தாள்.

“சிவா... என்னம்மா? ஏதாவது உடம்புக்கு முடியலையா?” புகழ் கேட்க,

“எனக்கு உங்க கூட பேசணும் போல இருக்கு... ஒரு ரெண்டு நிமிஷம் பேசுங்களேன்...” தொண்டையடைக்க அவள் கேட்கவும், புகழிடம் சிறு அமைதி நிலவியது.

“ஒரு அஞ்சு நிமிஷத்துல கால் பண்ணறேன்..” என்று அவன் போனை அணைக்க, ஷிவானி போனை கையில் வைத்துக் கொண்டு அவனது அழைப்பிற்காக காத்திருந்தாள்.

சொன்னது போலவே அடுத்த ஐந்து நிமிடங்களில் புகழ் போன் செய்ய, போனை எடுத்த ஷிவானி, “லவ் யூ இனியன்...” என்று கூறி, அவனுக்கு முத்த மழை பொழியத் தொடங்கினாள். அவளது செயலில் புகழ் குழம்பிப் போய் இருக்க, அவளிடம் பேச வந்த மல்லிகா, அவளது செயலைப் பார்த்து, சிரித்துக் கொண்டே, வந்த தடம் தெரியாமல் திரும்பினார்.

“என்ன வணி? இதைச் சொல்லத் தான் கால் செய்தியா? அது தான் எனக்குத் தெரியுமே.. நான் என்னவோ ஏதோன்னு பயந்து போயிட்டேன்...” தன் மனைவி தன் மேல் வைத்திருக்கும் காதலைக் கண்ட புகழ் சிரிப்புடன் கேட்க,

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல... உங்க கூட ரொம்ப பேசணும் போல இருந்தது... அது தான்... ஹ்ம்ம்... ஏதாவது கொஞ்ச நேரம் பேசுங்களேன்...” அவனும் தன்னிடம் காதலைத் திரும்பச் சொல்வான் என்று நினைத்த ஷிவானி அவ்வாறு கேட்கவும்,

“என்ன பேசறது? அதுவும் வேலை நேரத்துல?” புகழின் பதிலில், ஷிவானிக்கு எரிச்சலாக வந்தது.

“மதியம் லஞ்சுச்கு வருவீங்க தானே... நான் உங்களுக்காக சாப்பிடாம காத்துட்டு இருப்பேன்.. அதைச் சொல்லத் தான் கூப்பிட்டேன்... இப்போ போனை வைக்கவா?” ஷிவானியின் குரலில் தெரிந்த அடம் புதிதாக இருக்க,

“எனக்கு நேரமிருந்தா வரேன் சிவா... எனக்கு எவ்வளவு வேலை இருக்குன்னு தான் உன்கிட்ட சொல்லி இருக்கேனே” என்று புகழ் அவளை சமாதானப்படுத்த முனைய,

“இல்ல.. நான் உங்களுக்காக காத்துட்டு இருப்பேன்... உங்களுக்கு பிடிச்சதை செய்யப் போறேன்... சாப்பிட நீங்க வந்துத் தான் ஆகணும்” என்றபடி, போனை வைத்தவள், சமையலறையை நோக்கிச் சென்றாள்.

“என்ன இவ இப்படி அடம் பண்ணிட்டு இருக்கா?” என்று நினைத்துக் கொண்ட புகழ், எங்காவது அவள் உண்ணாமல் இருந்துவிடப் போகிறாள் என்ற பயத்தில், சரியாக ஒரு மணிக்கெல்லாம் வீட்டிற்கு கிளம்பினான்.

புகழின் பைக் வாயிலில் நிற்கும் சத்தம் கேட்டதுமே ஷிவானி, துள்ளாத குறையாக வாயிலுக்கு விரைய, “சிவா... அவன் உள்ள தான் வருவான்... மெதுவா போயேன்..” என்று மல்லிகா கத்துவதை காதில் வாங்கிக் கொள்ளாமல், கதவைத் திறந்தவள்,

“என்னோட இனியன்னா இனியன் தான்... இப்படி சொன்ன நேரத்துக்கு வந்துட்டீங்களே...” என்று அவனது கையை பிடித்துக் கொண்டு உள்ளே வந்தாள்.

“சிவா.. என்ன இன்னைக்கு லஞ்ச்க்கு வர சொல்லி இப்படி அடம் பண்ணற? கடையை அப்படியே விட்டுட்டு வர முடியுமா? கடையில இருக்க பையனும் புதுசு... இப்போ உன்னால அவனை சாப்பிட அனுப்பிட்டு, கடையை மூடிட்டு வந்தேன்...” என்றவன்,

“சீக்கிரம் தட்டை வைங்கம்மா... கடைக்கு போகணும்.. நேரமாகுது...” மல்லிகாவிடம் கூறவும், மல்லிகா, இருவருக்கும் தட்டை வைத்து பரிமாறினார்.

“அத்தை... நீங்களும் சேர்ந்து சாப்பிடுங்க...” ஷிவானி அழைக்கவும்,

“ஆமாம்மா... சேர்ந்தே சாப்பிடலாம்...” அன்று சசி, பாஸ்கருடன் சேர்ந்து சாப்பிட்ட நினைவில், புகழ் சொல்ல, மல்லிகாவும் உணவுண்ண அமர, அதற்கு மேல் sஎன்ன பேசுவது என்று புரியாத புகழ், அமைதியாகவே உண்டு முடித்தான்.

தான் கேட்டதும் அவன் வீட்டிற்கு வந்ததே திருப்தியாக ஷிவானி வயிறார உண்டு முடிக்கும் போதே, கொட்டாவி ஒன்று அவள் அனுமதியின்றியே வெளி வர,

“உனக்கு ஜாலி தான் சிவா.. இப்போ ரெஸ்ட் எடுக்க பாப்பா கூப்பிடுது... உடனே படுக்காம கொஞ்சம் நேரம் கழிச்சு தூங்கு... நான் கடைக்கு கிளம்பறேன்...” என்ற புகழ், அவள் பதில் சொல்லும் முன்பே, கைகளை கழுவிக் கொண்டு, வண்டி சாவியை எடுக்க, அவசரமாக ஷிவானியும், கையை கழுவிக் கொண்டு, அவன் பின்னோடு ஓடினாள்.

“என்னடா சிவா... எதுக்கு இப்போ இப்படி ஓடிட்டு இருக்க?” புகழ் நின்றுக் கேட்கவும்,

“நைட்டும் சீக்கிரம் வருவீங்களா?” ஷிவானியின் கேள்வியில் அவளை முறைத்தவன்,

“நான் நேத்தே சொன்னேன் இல்ல சிவா... உங்க அப்பாவும் பிசினஸ் தானே செய்யறார்... உங்க அப்பாவைப் பார்த்து, அதுல எவ்வளவு கஷ்டம் இருக்கும்ன்னு உனக்கு ஏற்கனவே தெரியும் தானே... ஒரு லெவல் வர வரைக்கும் இப்படி தான் சிவா இருக்க முடியும்... நான் ஒண்ணும் பரம்பரை பணக்காரன் கிடையாது... கையை ஊணி கரணம் போட்டு, இந்த அளவுக்கு வளர்ந்திருக்கேன்... இன்னும் நான் நல்லா வளரணும்... நான் பெரிய ஆளா வருவேங்கற நம்பிக்கைல தான் உங்க அப்பா எனக்கு உன்னை கொடுத்திருக்கார்... நான் அதை காப்பாத்தணும்...” புகழ் பொறுமையாக விளக்கிக் கொண்டிருக்க,

“அப்போ நான் சாப்பிட மாட்டேன்...” அவன் சொன்னதற்கு சம்பந்தமே இல்லாமல் ஷிவானி அறிவித்தாள்.

அவள் கூறியதை கேட்டவனுக்கு கோபம் உச்ச கட்டத்தில் வந்தது... கண்ணை இறுக மூடி கோபத்தைக் கட்டுப் படுத்தியவன் அமைதியாகவே... “நீ சாப்பிடாம மட்டும் இரு... உன்னை கொண்டு போய் டாக்டர்கிட்ட நிறுத்தி ஊசி போடச் சொல்றேன்... அப்போ தான் நீ சரிபட்டு வருவ... நீ எனக்காக சாப்பிடல... நம்ம குழந்தைக்காக சாப்பிடற... அது நியாபகம் இருக்கட்டும்... அப்பறம் உன் இஷ்டம்..” புகழ் மிரட்டவும், ஷிவானி பேந்த விழித்துக் கொண்டிருக்க, அந்த இடைவெளியில் அவளது கன்னத்தைத் தட்டி விட்டு, புகழ் பைக்கில் ஏறிக் கிளம்பினான்.

“ச்சே...” என்று கையை உதறிக் கொண்டவள், நேராக சென்று டைனிங் டேபிளை சுத்தம் செய்துவிட்டு,

“எனக்கு தூக்கம் வருது அத்தை... நீங்களும் ரெஸ்ட் எடுங்க...” என்று சொல்லிவிட்டு, உறங்கச் சென்றவள், வெகுநேரம் நன்றாக உறங்கி எழுந்து வர, அவளுக்காக மல்லிகா சூடாக மாலை சிற்றுண்டியை செய்து வைத்திருந்தார்.

மல்லிகா இருந்த இரண்டு நாட்களும், ஷிவானிக்கு வகை வகையாக சத்துள்ள ஆகாரத்தை செய்து கொடுத்து, நன்றாக பார்த்துக் கொண்டவர், மூன்றாம் நாள் காலையில், மனமே இன்றி, சித்ராவின் வீட்டிற்கு கிளம்பத் தயாரானார்.

ஷிவானியின் முகம் சோர்ந்துத் தெரியவும், “இன்னும் கொஞ்ச நாள் சிவா... அவளை ட்ரேவல் பண்ணலாம்ன்னு டாக்டர் சொல்லிட்டாங்கன்னா நான் அவளையும் இங்க கூட்டிட்டு வந்துடறேன்... நான் தான் அங்க போறேனே தவிர, எனக்கு மனசெல்லாம் இங்கயேத் தான் இருக்கும்... உன்னை தனியா விட்டுட்டு போறேனேன்னு தவிப்பா தான் இருக்கு...” சொல்லி முடிக்கும் போதே மல்லிகாவின் குரல் தழுதழுக்க,

“ஹையோ அத்தை... நீங்க என்ன இப்படி வருத்தப்பட்டுக்கிட்டு இருக்கீங்க? எனக்கு பரவால்ல அத்தை... சித்ரா அண்ணிக்கு இப்படி படுத்தும்போது, அவங்களைத் தான் பார்க்கணும்... என்னை இனியன் நல்லா பார்த்துப்பார்.. கவலைப்படாம போயிட்டு வாங்க...” என்று அவருக்கு தைரியம் கூறினாள்.

“பெரிய மனுஷி சொல்லிட்டாங்கம்மா... நான் பார்த்துக்கறேன்... நீங்க வாங்க.. உங்களை விட்டுட்டு நான் திரும்ப கடைக்கு வரணும்...” புகழ் இடையில் புக,

“கடைக்கு போணும்... கஸ்டமர் போயிடுவாங்கன்னு... பதினாறு வயதினிலே கமலஹாசன் மாதிரியே சொல்லிட்டு இருக்காரே... இவரை என்ன செய்யலாம்...” மனதினில் சலித்துக் கொண்டவள், புகழ், கமலைப் போல் சொல்லிக் கொண்டே, நடந்து வருவதை நினைத்துப் பார்த்து, சிரித்துவிட, புகழும், மல்லிகாவும் அவளை கேள்வியாகப் பார்த்தனர்.

“ஒண்ணும் இல்ல.. உலகத்தை நினைச்சேன்... சிரிச்சேன்...” ஷிவானி குறும்பாக பதில் சொல்லவும்,

“ரொம்ப நினைக்காதே... அப்பறம் மூளை சூடாகப் போகுது...” என்று கிண்டலாகச் சொன்ன புகழ், காரை எடுப்பதற்காக கிளம்ப,

“பார்த்துக்கோடா..” என்றபடி மல்லிகாவும் சென்று காரில் ஏறினார்.

அன்றைய சமையலை அதிகாலையிலேயே செய்து வைத்து விட்டு, மல்லிகா கிளம்பி இருக்கவும், ஷிவானி வேலை எதுவும் இன்றி, டிவியை போட்டுக் கொண்டு, சிறிது நேரம் பொழுதை நெட்டித் தள்ளியவள், சோபாவிலேயே படுத்து உறங்கியும் போனாள்.

உறக்கத்தின் பிடியில் சுகமாக கட்டுண்டு கிடந்தவள், கதவு தட்டும் சத்தத்தில் கண் விழித்துப் பார்க்க, கடிகார முட்கள் மதியம் என்பதைக் குறிக்க, மணி இரண்டை தொட்டுக் கொண்டு நின்றது.

“இவ்வளவு நேரமாவா தூங்கி இருக்கோம்?” மனதினில் நினைத்தவள், மீண்டும் கதவு தட்டப்படும் ஒலியைக் கேட்டு,

“இனியன் தான் சாப்பிட வந்திருப்பாரு...” மனதினில் எழுந்த உற்சாகத்தில்,

“இதோ வந்துட்டேன் இனியன்..” என்று குரலில் உற்சாகத்துடன் கதவைத் திறக்க, வாயிலில் ரஞ்சிதா நின்றிருந்தாள்.

“ஓ... நீங்களா? வாங்க...” குரலில் உற்சாகம் வடிய, ஷிவானி அவளை உள்ளே அழைக்கவும்,

“உங்க அவர் வர நேரத்துல நான் வந்து தொல்லை கொடுத்துட்டேனா?” என்று ரஞ்சிதா சிரித்துக் கொண்டே கேட்கவும், ஷிவானி, மறுப்பாக தலையசைத்தாள்.

“அப்படி எல்லாம் இல்லைங்க.. அவர் சில நாளைக்கு தான் வருவார். கடையில ஆள் இல்லாததுனால விட்டுட்டு வர முடியாது..” ஷிவானி சொல்ல,

“அப்போ கையில எடுத்துட்டு போயிடுவாரா?” ரஞ்சிதா கேட்க, அதற்கும் இல்லையென்று ஷிவானி தலையசைத்தாள்.

“ஒரு ரெண்டு நிமிஷம்... பேஸ் வாஷ் பண்ணிட்டு வந்துடறேன்... காலையில அத்தை கிளம்பவும் நல்ல தூக்கம்... இப்போ தான் விழிச்சேன்...” என்று சொன்னவள், ரஞ்சிதா ‘சரி’ என்று சொல்லவும், உள்ளே சென்று முகம் கழுவிக் கொண்டு வர, ஹாலில் மாட்டப்பட்டிருந்த புகழ் ஷிவானியின் திருமண புகைப்படத்தை ரஞ்சிதா பார்த்துக் கொண்டிருந்தாள்.

“நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க... அவரும் ரொம்ப மேன்லியா இருக்கார்.. நல்ல ஜோடிப் பொருத்தம் தான்... லவ் மேரேஜா...” ரஞ்சிதாவின் கேள்விக்கு, ஷிவானி புன்னகையுடன் ‘ஆம்’ என்று தலையசைத்து,

“நான் அவரை லவ் பண்ணினேன்... அவர் எங்க வீட்டுக்கு வந்தாலும் என்னை பார்த்தது கூட இல்ல.. ரொம்ப நல்ல பிள்ள...” கேலி செய்துக் கொண்டே புகழின் நினைவில் மூழ்கியவளின் கண்களில் காதலின் மயக்கம்.

“உங்களுக்கு அவரை ரொம்ப பிடிக்கும் போல இருக்கே..” ரஞ்சிதா கேலி செய்ய,

“பின்ன.. என் இனியன் சர்க்கரை கட்டி...” ரஞ்சிதாவிடம் ஷிவானி பெருமை பீற்றத் தொடங்க,

“ஓ.. உங்க அவர் பேர் இனியனா? அவரைப் போலவே பேரும் நல்லா இருக்குங்க...” ரஞ்சிதா வெளிப்படையாக சொல்லவும், ஷிவானிக்கு சுருக்கென்று கோபம் எட்டிப் பார்த்தது.

“அவங்க இயல்பா சொல்றாங்க... விடு..” தன்னையே அடக்கிக் கொண்டவள்,

“நீங்க சாப்பிட்டாச்சா?” என்று கேள்வி கேட்க,

“ஹ்ம்ம்... ஆச்சுங்க... காலையிலேயே ஒருமுறை வந்து கதவைத் தட்டினேன்... நீங்க திறக்கல.. அது தான் மறுபடியும் வந்து பார்த்துட்டு போகலாம்ன்னு வந்தேன்.” ரஞ்சிதா விளக்கம் சொல்லவும், ‘நான் தூங்கிட்டேன்...’ ஷிவானி பதில் கூறினாள்.

பசி ஒருபுறம் வயிற்றைக் கிள்ள, அதனால், ரஞ்சிதாவிடம் பேசும் சுவாரஸ்யம் குறைந்து ஷிவானி அமர்ந்திருந்த வேளையில், புகழின் கார் வீட்டின் வாயிலில் நிற்கவும்,

“அவர் வந்துட்டார் போல இருக்கு.. இருங்க நான் வந்துடறேன்..” என்று பரபரத்தவள், வேகமாக வாயிலுக்குச் சென்றாள்.

“சிவா.. உனக்கு உடம்புக்கு ஒண்ணும் இல்லையே..” புகழ் கவலையாகக் கேட்க,

“இல்லையே... ஏன்? என்னாச்சு?” சாவுகாசமா அவள் கேட்கவும்,

“உன் போன் எங்க?” என்ற அடுத்த கேள்வி புகழிடம் இருந்து வந்தது.

“அது சைலன்ட்ல போட்டுட்டு தூங்கிட்டேன்... நல்ல தூக்கம்... இப்போ தான் எழுந்தேன்..” அவளது பதிலைக் கேட்டவன், அவளை முறைத்து,

“எவ்வளவு தடவ உங்க அம்மா கூப்பிட்டு இருக்காங்க தெரியுமா? நீ போனை எடுக்கலைன்னு எனக்கு போன் செய்தாங்க... நானும் ரெண்டு தடவ கால் செய்து பார்த்துட்டு, நேர்ல பார்க்கலாம்ன்னு வந்தேன்... சைலன்ட்ல எல்லாம் இனிமே போடாதே..” சொல்லிக்கொண்டே அவளோடு உள்ளே நுழைந்தவன், ஹாலில் அமர்ந்திருந்த ரஞ்சிதாவைப் பார்த்து ஒரு சில வினாடிகள் தயங்கி நிற்க,

“இனியன்... இவங்க தான் எதிர் வீட்டுக்கு புதுசா குடி வந்திருக்கறவங்க..” ஷிவானி சொல்லவும், ‘வாங்க’ என்பது போல தலையசைத்து விட்டு, வேகமாக அறைக்குள் நுழைந்துக் கொண்டான்.

“அவர் எப்பவுமே அப்படித் தான்.. என்னையே கல்யாணத்துக்கு முன்ன நிமிர்ந்து பார்த்தது இல்ல.. ஒரு நிமிஷம் வந்துடறேன்...” பெருமையாக சொல்லிக் கொண்டவள், புகழின் பின்னோடு அறைக்குள் நுழைந்தாள்.

“சாப்பிடலாமா?” ஷிவானி கேட்க,

“நான் அக்கா வீட்லேயே சாப்பிட்டேன் சிவா... உன்னைப் பார்க்கத் தான் வந்தேன்... சரி... நீ வந்து சாப்பிடு... நீ சாப்பிட்டதும் நான் கடைக்கு கிளம்பறேன்.. மணியாகுது..” அவளை விரட்டுவதிலேயே புகழ் இருக்க, ஷிவானி அவனை முறைத்துவிட்டு ஹாலிற்கு சென்றாள்.

“நீங்களும் வாங்களேன் சாப்பிடலாம்...” முறைமைக்காக ஷிவானி ரஞ்சிதாவை அழைக்க,

“நான் இப்போ தான் சாப்பிட்டேன்.. நீங்க சாப்பிடுங்க.. நான் வெயிட் பண்றேன்..” என்றவள், ஓடிக் கொண்டிருந்த டிவியைப் பார்க்கத் தொடங்க, ஷிவானி, உணவை எடுத்துக் கொண்டு அமர்ந்தாள்.

அவள் உண்டு முடிக்கும் வரை அமைதியாகவே அமர்ந்து, செல்லில் எதையோ பார்த்துக் கொண்டிருந்த புகழ், அவள் உண்டு முடித்து எழவும், “நைட்டும் நான் வர வரைக்கும் சாப்பிடாம இருக்காதே.. நான் கிளம்பறேன்...” என்று கூறிவிட்டு, கிளம்ப நினைத்தவன்,

“ஒரு டீ போட்டுத் தாயேன்..” என்று கேட்க, ஷிவானியும் டீ போடுவதற்கு உள்ளே சென்றாள்.

அவள் உள்ளே சென்றதும் அவள் பின்னோடு சென்றவன் அவளை இறுக அணைத்து விடுவித்து, “போன சைலென்ட்ல இருந்து மாத்து... இனிமே இப்படி எல்லாம் போட்டு வைக்காதே” என்று சொல்லவும், சரி என்ற தலையசைப்புடன், புகழுக்கு டீயை நீட்ட, அதை வாங்கிக் குடித்தவன், ‘பை’ என்றபடி, ஷிவானியிடம் விடைப்பெற்று, வேகமாக வெளியில் சென்றான்.

ஹாலில் அமர்ந்திருந்த ரஞ்சிதாவைத் திரும்பிப் பார்க்கவோ, அவளிடம் சம்ப்ரதாயத்திற்காக விடைபெறவோ செய்யாமல் சென்ற புகழைப் பார்த்த ஷிவானி, புன்னகையுடன் ரஞ்சிதாவின் அருகே வந்தமர்ந்தாள்.

“அவர் சாப்பிடலையா?” மீண்டும் புகழைப் பற்றியே ரஞ்சிதா கேட்க,

“இல்ல.. அவங்க அக்கா வீட்டுக்கு போயிருந்தாங்க... அங்கேயே சாப்பிட்டுட்டாங்களாம். அதனால டீ குடிச்சிட்டு போறாங்க...” என்று சொன்ன ஷிவானியை விசித்திரமாக பார்த்த ரஞ்சிதா,

“எப்படிங்க அப்படியே போன்னு விட்டீங்க? என் கூட ஹரீஷ் ஒரு வாயாவது சாப்பிடலைன்னா எனக்கு சாப்பாடே இறங்காது. அதுவும் அவர் கையால ஒரு வாய் எனக்கு ஊட்டி விட்டே ஆகணும்.. அது நாங்க கல்யாணம் ஆன அன்னைக்கு இருந்தே தொடர்ந்து வச்சிருக்கற ஒரு சட்டம் மாதிரி... அவருக்கும் நான் ஒரு வாய் ஊட்டி விடுவேன்... அப்போ தான் அவருக்கு திருப்தியா இருக்கும்...” என்று சொல்லிக் கொண்டே வந்தவள்,

“ஆமா... நீங்க ஹனிமூன் எங்கப் போனீங்க? நாங்க ஒரு வாரம் கேரளா பக்கம் சுத்திட்டு தான் வந்தோம்...” என்பதில் வந்து முடிக்க, ஷிவானி பதில் சொல்ல சிறிது திணறினாள்.

அவள் அமைதியாக இருப்பதைப் பார்த்து, “எங்கயுமே போகலையா?” ரஞ்சிதா தொடர,

“ஹ்ம்ம்... அப்போ அவருக்கு நிறைய வேலை இருந்தது... அதனால எங்கயுமே போகல...” ஷிவானி புன்னகையுடனே சமாளித்தாள்.

“ரொம்ப வேலை வேலைன்னு ஓடிட்டே இருப்பாரோ? இப்போ கூட வந்தாரு... நீங்க சாப்பிட்ட உடனே கிளம்பிப் போயிட்டார்... ராத்திரி ரொம்ப நேரம் கழிச்சு தான் வருவார் போல... தனியா உங்களுக்கு போர் அடிக்கும்ன்னு போன் செய்து பேசுவாரா?” ஷிவானி புகழ் எதையெல்லாம் செய்ய வேண்டும் என்று ஏங்கிக் கொண்டிருக்கிறாளோ, அந்த ஏக்கத்தை இன்னும் அதிகப்படுத்துவது போல ரஞ்சிதா கேட்க, ஷிவானி மனதினில், புகழின் அருகாமைக்காக ஏங்கத் தொடங்கி இருந்தாள்.

“அவர் அப்படி எல்லாம் போன் செய்து பேச டைம் இருக்காது... கடைக்கு போயிட்டா ரொம்ப பிஸியா இருப்பாங்க” ஷிவானி மெல்லிய குரலில் சொல்லவும்,

“இவங்க எல்லாம் கல்யாணத்துக்கு முன்ன நல்லா பேசுவாங்க.. அப்பறம் நம்மளை கண்டுக்கவே மாட்டாங்க...” சமயம் தெரியாமல், ரஞ்சிதா நீட்டி முழக்க, ஷிவானிக்கு சோர்வாக இருந்தது.

“அவர் எப்பவுமே பேசினது கிடையாது. அவர் ரொம்ப பேசவும் மாட்டார்.. ரொம்ப அமைதி.. எப்பவுமே நான் தான் ஏதாவது லொடலொடன்னு பேசிட்டே இருப்பேன்..” அதோடு புகழின் பேச்சு போதும் என்பது போல ஷிவானி சற்று அழுத்தமாகச் சொல்ல, ‘என்னது?’ ரஞ்சிதா காட்டிய அதிர்ச்சியில், ஷிவானி குழம்பிப் போனாள்.

“என் ஹரீஷ் இருக்கார் இல்ல.. கல்யாணத்துக்கு முன்ன போன் செய்தார்ன்னா வைக்கவே மாட்டார்.. நேரம் கிடைக்கும் போதெல்லாம் பேசிட்டே இருப்பார்.. கல்யாணத்துக்கு முன்ன எங்க போன் பில்லைப் பார்த்து எங்க அம்மா அப்பா... சீதனம் தரவா வேண்டாமான்னு கேட்டாங்கன்னா பாருங்களேன்... அப்பறம் ஜோடி சிம் கார்ட் வாங்கி பேசிட்டு இருந்தோம்... அதுவும் போக.. ஏதாவது ஒரு சாக்கு சொல்லி, வாரத்துல நாலு நாள் என்னை பார்க்க வந்துடுவார்.. அப்படியே வெளிய கூட்டிட்டு போவார்.. நிறைய கிஃப்ட் வேற வாங்கித் தருவார்... இப்போவும், அவருக்கு தோணிச்சுன்னா... ஏதாவது ஒரு கிஃப்ட் வரும்... எங்காவது வெளிய போகணும்..” என்று தொடங்கி, ஹரீஷின் புராணத்தை ரஞ்சிதா சொல்லத் தொடங்க, ஷிவானியின் மனதில், தான் நல்ல மதிப்பெண்கள் எடுத்து பாஸ் செய்த போதும், தனக்கு பரிசு கொடுக்க, விக்ரம் தானே சொல்ல வேண்டி இருந்தது.. என்ற எண்ணம் எழுவதை தடுக்க முடியாமல், தடுமாறிக் கொண்டிருக்க, ஷிவானிக்கு தலை வலிப்பது போல இருந்தது.

அவள் முகம் சுருங்கி அமைதியாகவும், “உங்களுக்கு உடம்புக்கு ஏதாவது பண்ணுதா? நான் ஹெல்ப் பண்ணவா?” ரஞ்சிதா கேட்க,

“இல்ல... தலை சுத்தறா மாதிரி இருக்கு...” ஷிவானி சொல்லவும், உரிமையாக டைனிங் டேபிளின் மீது வைத்திருந்த பாட்டிலை எடுத்துக் கொண்டு வந்து தந்தவள், அவள் தண்ணீர் பருகியதும்,

“சொல்ல மறந்துட்டேன் பாருங்க... சாயந்திரம் நான் ஹரீஷ்க்காக கட்லெட் செய்யலாம்ன்னு இருக்கேன்... உங்களையும் சாப்பிடக் கூப்பிடத் தான் வந்தேன்.. உங்களுக்கும் சேர்த்து செய்யறேன்... வாய்க்கு நல்லா இருக்கும்...” என்று ரஞ்சிதா அழைக்க, ஷிவானி தயக்கத்துடன் அவளைப் பார்த்தாள்.

“உங்களுக்கு என்ன தனியாவா செய்யப் போறேன்.. சேர்த்து தானே செய்யறேன்.. நீங்களும் நாள் பூரா தனியா இருக்கீங்க... அங்க வாங்க.. பேசிட்டு இருக்கலாம்..” என்று ரஞ்சிதா அழைக்கவும், ஷிவானியும் ஒப்புக் கொண்டாள்.

“கண்டிப்பா வாங்க... இப்போ முடியலைன்னு சொல்றீங்களே... கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க.. அப்பறம் நீங்க என்ன படிச்சு இருக்கீங்க? எப்போ முடிச்சீங்க?” என்ற விபரங்களை ரஞ்சிதா கேட்கத் தொடங்கவும், ஷிவானி சொன்ன பதிலைக் கேட்டவள், கண்களை விரித்து,

“ஹையோ... ஷிவானி... நீங்க இவ்வளவு சின்னப் பொண்ணா.. இப்போ தான் படிப்பு முடிச்சு இருக்கீங்களா? கொஞ்ச நாள் வேலைக்கு போயிட்டு... ஜாலியா லைஃப்பை என்ஜாய் பண்ணாம... என்னங்க இது?” குறைப்பட்டவள், மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு வீட்டிற்குக் கிளம்ப, ஷிவானிக்கு புயல் அடித்து ஓய்ந்தது போல இருந்தது.

புயல் அடித்து ஓய்ந்து போன அமைதி வீட்டினில் நிலவினாலும், ஷிவானியின் மனதில் புயல் அடிக்கத் தொடங்கி இருந்தது என்பது உண்மை தான். தனது கல்லூரி நாட்களில், வழக்கமாக எல்லா பெண்களுக்கும் உள்ள எதிர்பார்ப்பு, கனவு போல அவள் கண் முன்னே விரிந்தது.

திருமணத்திற்கு புகழ் வந்து பெண் பார்த்து சென்ற பிறகு, ஷிவானி சிறகு இல்லாமலே பறந்துக் கொண்டிருந்த சமயம், அவளது தோழிகளும் அவளை கிண்டல் செய்ய, வெளியில் மிரட்டி சிணுங்கினாலும், உள்ளூர அவளது மனம் அதை ரசித்து விரும்பவே செய்தது.

புகழ் போனில் பேசுவான் என்று அவள் எதிர்பார்த்திருக்க, அவன் பேசாதது முதலில் ஏமாற்றமாக இருந்தாலும், பின்பு தன் படிப்பு கெடக் கூடாது என்று அவன் போன் செய்யவில்லை என்று நினைத்து தன்னை தேற்றிக் கொண்டாள்.

பின்பும், திருமணத்திற்கு பின்பு, அவனுடன் எப்படி ஒவ்வொரு நாளும் கடக்கும் என்ற கற்பனைகள் சிறகு விரித்து பறந்தது. கதைகளில் படிக்கும் ஹீரோக்களைப் போல, நிறைய பரிசுகள், திடீரென ஹோட்டலுக்கு அழைத்துச் செல்வது, தன்னையே சுற்றி வந்து, சமையல் அறையில் செய்யும் சரசங்கள், சிணுங்கல்கள், நாணச் சிவப்புகள் அத்தனையும் கனவாகிப் போனதே என்று மனதில் எழுந்த எண்ணங்கள் மொத்தமும், அவளை தன்னுள் சுருட்டிக் கொள்ளத் துவங்கி இருந்தது.

பரிசுகள் வங்கித் தந்தான் தான்... அதுவும் விக்ரம் சொல்லி... சினிமாவிற்கு அழைத்துச் சென்றான் தான்... அதுவும் விக்ரமின் உதவியுடன்... எதுவுமே புரியாமல் ஜடமாக இருக்கும் அவனை என்ற எரிச்சலும் சேர்ந்துக் கொள்ள, மனதினில் அனைத்தையும் போட்டு குழம்பி, ரஞ்சிதா கூறிய ஹரீஷின் பெருமைகளுடன், புகழை ஒப்பிட்டு பார்த்து, புகழ் ஏன் அவ்வாறு இல்லை... தன்மேல் காதல் இல்லையோ அதனால் தான் தனது கனவுகள் மொத்தத்தையும் சிதைக்கிறானே என்ற எண்ணம் வலுப்பெற, ஷிவானி ஏக்கத்தில் சிக்கி மறுகத் தொடங்கினாள்.

யாதார்த்தமான வாழ்க்கையில், ரஞ்சிதா, ஹரீஷைப் பற்றி கூறுவது போல, அல்லது கதைகளில் வரும் ஹீரோக்களைப் போல, ஒரு கணவன் இருப்பதென்பது வெகு வெகு அரிதே.. ஹோட்டல் செல்வது, திடீர் பரிசுகள் கொடுப்பது என்பதெல்லாம் வெகு அரிதான ஒன்று. இயல்பான வாழ்க்கையில், அதெல்லாம் அனைவரின் வீட்டிலும் நடக்குமா? ஏன் தனது தந்தை அவ்வாறு அன்னைக்கு வாங்கித் தந்திருக்கிறாரா? என்பதை எல்லாம் ஷிவானி யோசிக்க தவறினாள்.

அடுத்தவர்களைப் பார்த்து, அவ்வாறு நாம் இல்லையே என்று ஏங்கி, நமது நிம்மதியையும் கெடுத்துக் கொள்ளக் கூடாது என்பதை அவள் யோசிக்க மறந்திருந்தாள். புகழ் முன்பிருந்தே அப்படித் தானே இருக்கிறான்.. அவன் தன்மேல் வைத்திருக்கும் காதல் எத்தகையது என்பதையும் அவள் யோசிக்காமல் விட்ட காரணத்தினால், மனதில் அமைதியின்றி ஏக்கங்களுடன் நிம்மதியை குலைத்துக் கொள்ள துவங்கினாள்.

மாலை, ரஞ்சிதா ஷிவானியை மீண்டும் அழைக்க, மனதின் புயல் சுவாரஸ்யத்தை குறைக்க, ஷிவானி அவளது வீட்டிற்குச் சென்றாள். இப்பொழுது கட்லெட்டை கையில் கொடுத்தவள், தங்களுடைய புகைப்படங்களை காட்ட, அதில் அவர்களின் நெருக்கத்தைப் பார்த்த ஷிவானி அதற்கு மேல் அமர முடியாமல்,

“எனக்கு ரொம்ப டயர்ட்டா இருக்கு ரஞ்சிதா... நான் போய் ரெஸ்ட் எடுக்கறேன்...” என்று கிளம்ப,

“சரிங்க... தூங்காத நேரத்துல என்னை கூப்பிடுங்க... நானே வரேன்... கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாம்... பொழுதும் போகும்..” என்று கூறியவள், ஷிவானிக்கு விடை கொடுக்க, மனதினில் தன்னையே நொந்துக் கொண்டு ஷிவானி வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.

இரவு வீட்டிற்கு வந்த புகழ், ‘சாப்ட்டியா’ என்று கேட்டுவிட்டு, தனது வேலையைத் தொடர்ந்தான். ஷிவானி அவனிடம் எதுவும் பேசும் நிலையிலும் இல்லை... அதைக் கூட உணராமல், புகழ் தனது வேலையில் கவனம் செலுத்தினான்.

நாட்கள் அதன் ஓட்டத்தில் ஓடத் துவங்கியது. அவள் உண்பதை உறுதி செய்துக் கொண்டு, அவளுக்கு எந்த வகையிலும் சிரமத்தை கொடுக்கக் கூடாது என்ற எண்ணத்துடன், அவள் எழும் முன்பே வீட்டின் வேலைகளை முடித்து, உணவு தயாரித்து, வீட்டை சுத்தம் செய்ய வேலைக்கு ஒருவரையும் அமர்த்தி, மதியம் உணவு நேரத்திற்கு சரியாக வீட்டில் இருப்பவன், ஷிவானி உண்டு முடித்ததும், தானும் உண்டு முடித்து கடைக்குக் கிளம்பி, இரவு அவளை அருகில் அமர்த்திக் கொண்டு, உணவு உண்டு முடித்து, சுத்தம் செய்ய உதவிவிட்டு, மீண்டும் தனது வேலையைத் தொடர, ஷிவானியின் கலகலப்பு குறைந்ததோ, அவன் கேட்பதற்கு மட்டுமே வாயைத் திறந்து அவள் பதில் சொல்வதையோ அவன் உணராமல், அவளது மசக்கையின் விளைவே இந்த சோர்வு என்று முகத்தைப் பார்த்து முடிவு செய்துக் கொண்டு, அவளுக்கான வேலைகளைக் குறைத்தான்.

ஷிவானியோ புகழின் குணம் அது தான் என்பது போல இதுவரை விட்டுக் கொடுத்துக் கொண்டு வந்தவள், அவள் எதிர்பார்த்து ஏமாந்த அளவின் ஏக்கத்தின் அளவு அதிகமாயிருக்க, அதில் இருந்து மீள முடியாமல், ஏதோ யோசனையாகவே தனது நாட்களை கடத்தத் துவங்கி இருந்தாள்.

இடையிடையே.. ரஞ்சிதா அவளிடம் பேச வந்து, ஹரீஷின் புகழ் பாடிவிட்டு செல்ல, ஷிவானிக்கு அவளைக் கண்டாலே, தலைச் சுற்றலும், தலைவலியும் சேர்ந்து வந்து தாக்காத் துவங்கி இருந்தது.

ஒருவாரத்தில், சசியும், பாஸ்கரும் தங்களது பயணத்தை முடித்துக் கொண்டு, ஊருக்கு வந்து சேர்ந்தனர். வீட்டிற்கு வந்த சசி ஷிவானியின் முகத்தைப் பார்த்து அதிர்ந்து போனார்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
பகுதி - 22
எதிர்ப்பார்ப்பாக

நீயே மாறிப் போனதால்

எனக்கு பிடித்தமான

எல்லாவற்றிற்கும் எப்போதும்

உன் மேல் கோபம் தான்

ஊரில் இருந்து திரும்பி வந்த சசிக்கும் பாஸ்கருக்கும் எப்பொழுது ஷிவானியைப் பார்ப்போம் என்றிருந்தது. அதிகாலையில் திரும்பி வந்திருந்தவர்கள், விடிந்து சிறிது நேரத்தில் எல்லாம், ஷிவானியைப் பார்க்க ஓடி வந்தனர்.

வாயில் கதவைத் திறந்த ஷிவானியைப் பார்த்த சசி அதிர்ந்து, “என்ன சிவா? என்னடி முகமெல்லாம் இப்படி இருக்கு?” என்று கேட்க,

“தூக்க கலக்கம்மா... உள்ள வா.. எப்படி இருந்தது ட்ரிப் எல்லாம்?” என்று கேட்டவளின் கண்கள் கலங்கத் துவங்க, அதைப் பார்த்த சசி, பதறிப் போனார்.

“என்னடி... நேத்து கிளம்பும் போது பேசினப்போ கூட நல்லா தான பேசின... இப்படி இல்லையே.. என்னாச்சு?” மீண்டும் மீண்டும் அவர் கேட்க, அவளது கண்கள் கலங்கியதே தவிர, பதில் சொல்லாமல் நின்றாள்.

சசியின் பதறிய குரலைக் கேட்டு, சமயலறையில் வேலை செய்துக் கொண்டிருந்த புகழ் வெளியில் வந்து எட்டிப்பார்த்து, அவர்களைப் ‘வாங்க’ என்று அழைத்து, மூவரையும் குழப்பத்துடன் பார்க்க,

“என்னாச்சு மாப்பிள்ளை... ஒண்ணும் பிரச்சனை இல்லையே...” முதலில் பாஸ்கர் வாயைத் திறந்து கேட்டார்.

“இல்லையே மாமா.. ஒண்ணும் பிரச்சனை இல்ல.. ஏன்? என்னாச்சு? இப்படி கேட்கறீங்க?” புகழ் குழப்பத்துடன் கேட்க, பாஸ்கரும் சசியும் ஷிவானியைப் பார்க்க, புகழ் மேலும் குழம்பிப் போய் ஷிவானியைப் பார்த்தான்.

அவளது கண்களில் கண்ணீரைக் கண்டவன், “சிவா... என்னாச்சு?” பதறி அவளிடம் விரைந்து சென்றவன்,

“உடம்பு முடியலையா? ஏதாவது பண்ணுதா? டாக்டர்கிட்ட போகலாமா?” என்று அவன் பதைபதைக்க, ஷிவானி வேகமாக கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

“ஒண்ணும் இல்ல... அம்மாவை இவ்வளோ நாள் பிரிஞ்சு இருந்தது இல்ல... இது தான் முதல் தடவ.. அதான் அவங்களைப் பார்த்த உடனே அழுகை வந்துருச்சு...” என்று சொன்னவள், சசியை அழைத்துக் கொண்டு சோபாவிற்குச் சென்று அமர வைத்து அவரது மடியில் படுத்துக் கொண்டாள்.

ஷிவானியின் தலையை வருடிய சசி, “இதுக்குத் தான் நான் போகலைன்னு சொன்னேன்...” அவளை கொஞ்சம் சரி செய்வதற்காக கேலியில் இறங்கியவர்,

“அடுப்புல எதையாவது வச்சு இருக்கப் போற... வா... நாம அங்க போய் பேசலாம்...” என்றபடி அவளை எழுப்பி முன்னே நடந்தார்.

“நான் அடுப்பை ஆஃப் பண்ணிட்டேன் அத்தை.. வேலை எல்லாம் முடிஞ்சது... இருங்க காபி எடுத்துட்டு வரேன்...” புகழ் பதில் சொல்ல, சசி பாஸ்கரைப் பார்க்க, பாஸ்கர் ஷிவானியைப் பார்த்தார்.

“இருங்க மாப்பிள்ளை... நான் போய் போடறேன்... இவளை ரொம்ப கெடுத்து வச்சிருக்கீங்க. அவளை செய்ய விடுங்கன்னு சொன்னேன் இல்ல...” சசி அங்கலாய்த்துக் கொண்டே, அடுப்பங்கரைக்குச் செல்ல, புகழ் அவருக்கு தேவையானதை எடுத்துக் கொடுக்க அவரைத் தொடர, ஷிவானியும் அவனுடன் உள்ளே வந்து,

“நீங்க அப்பாவோட பேசிட்டு இருங்க... நான் அம்மாவுக்கு ஹெல்ப் பண்றேன்...” என்று சொல்லவும், அவளது தலையை கோதியவன்,

“வயித்தைப் பிரட்டறது போல இருந்தா வெளிய வந்துடு... வாந்தி எடுக்காதே...” என்று சொல்லிவிட்டு, புகழ் பாஸ்கரின் அருகே சென்று பேசத் தொடங்கினான்.

“ரொம்ப வயித்தை பிரட்டுதா? வாந்தி இருக்கா என்ன?” சசி சந்தேகமாகக் கேட்கவும்,

“வேகற ஸ்மெல் இருந்தா ஒரு மாதிரி இருக்குன்னு தெரியாம சொல்லிட்டேன்... அதனால என்னை கிட்செனுகுள்ளேயே விடறதே இல்ல... மதியமும் சாப்பிட வந்துட்டு நைட்டுக்கும் செய்து வச்சிட்டுத்தான் போறார்...” குரலில் சுரத்தே இல்லாமல் சொன்னவளைப் பார்த்த சசி, தனது பிரிவு தான் அவளை இந்த அளவுக்கு பாதித்திருக்கிறது என்று நினைத்து, மனதினில் நொந்துக் கொண்டார்.

“இன்னைக்கு ஸ்கேன்க்கு போகணும்மா... டாக்டர் வரச் சொல்லி இருக்காங்க...” ஷிவானி சொல்லவும், சசி சிறிது யோசனையுடன் அவளைப் பார்த்தார்.

“ஏன் சிவா... நீ அங்க நம்ம வீட்ல கொஞ்ச நாள் இருக்கியா.. மாப்பிள்ளைகிட்ட பேசவா?” என்று கேட்கவும், உடனே ஷிவானியும் சரியென்று தலையசைத்தாள்.

இது போன்ற நேரத்தில், பெண்கள், தாயின் அருகாமைக்கும், தாயின் கைப் பக்குவத்திற்கும் தான் ஏங்குவார்கள் என்று நினைத்து சிரித்துக் கொண்ட சசி, புகழிடம் காபியுடன் சென்று நின்றார்.

காபியை அவனிடம் நீட்டியவர், “ஸ்கேன் பண்ண இன்னைக்கு போகணுமா மாப்பிள்ளை... அப்படியே சிவாவை கொஞ்ச நாளைக்கு நான் அங்க கூட்டிட்டு போகவா? கொஞ்சம் அவளுக்கு சத்துள்ள ஆகாரத்தை கொடுக்கலாம். ரொம்ப டயர்ட்டா தெரியறா...” சசி அவனிடம் அனுமதி வேண்டவும், புகழ் ஷிவானியைப் பார்த்தான்.

ஷிவானி அவனது முகத்தை ஆவலாகப் பார்த்துக் கொண்டிருக்க, அவளை விட்டு பிரிய வேண்டுமே என்ற வருத்தம் அவனைத் தாக்கியது. அதை விட, ஷிவானியின் ஆரோக்கியம் முக்கியமாகப் பட, ‘அடுத்த தெருவில் தானே வீடு... பார்த்துக் கொள்ளலாம்...’ என்று தன்னையே தேற்றிக் கொண்டு,

“சரிங்க அத்தை... கூட்டிட்டு போங்க.. எப்பவுமே ரொம்ப டயர்ட்டா இருக்கா... கொஞ்சம் நல்லா பார்த்துக்கோங்க... நல்லதுன்னு அவளை வேலை எல்லாம் செய்ய விடாதீங்க..” என்று புகழ் அவருக்கு அறிவுரை சொல்லிக் கொண்டே போக, சசிக்கு சிரிப்பாக இருந்தது.

“சரிங்க மாப்பிள்ளை... நான் பார்த்துக்கறேன்... இப்போ எத்தனை மணிக்கு கிளம்பணும்?” அவனிடம் விவரம் கேட்டுக் கொண்டவர், ‘பத்து மணிக்கு’ என்ற அவனது பதிலைக் கேட்டு,

“நீ போய் குளிச்சிட்டு சாப்பிட்டு கிளம்புடி... மசமசன்னு நின்னுக்கிட்டு...” சசி அவளை விரட்டவும், ஷிவானி அவரை முறைக்க,

“அவ இப்போ சுறுசுறுப்பா இருந்து என்ன செய்யப் போறா? மெதுவா கிளம்பட்டும் அத்தை..” என்ற புகழ், அவளது முந்தய ரிப்போர்ட்டை எடுத்து வைத்தான்.

“நான் கிளம்பறதைப் பத்தி ஒரு கவலையும் இல்ல... ஹப்பா தொல்லை ஒழிஞ்சதுன்னு இருப்பார் போல... எல்லாத்தையும் எடுத்து வைக்கிறதைப் பாரு...” புகழ் அவள் செய்வதற்கு உடனே சம்மதிக்கவும், ஏக கடுப்பில் இருந்த ஷிவானி, அவனை வசை பாடிக்கொண்டே, குளித்துக் கிளம்பித் தயாரானாள்.

ஸ்கேன் செய்த டாக்டர் சிசுவின் வளர்ச்சி நன்றாக இருப்பதாகவும், ஷிவானியின் உடல் எடை தான் முதல் தடவை வந்ததிற்கும் இப்பொழுதிற்கும் குறைந்துள்ளது என்பது போலச் சொல்ல, புகழ் குழப்பத்துடன் ஷிவானியைப் பார்த்துவிட்டு,

“அவ வாந்தியும் அவ்வளவா எடுக்கறது இல்ல டாக்டர். நல்லா தானே சாப்பிடறா... நிறைய காய்கறி பழம்ன்னு எல்லாம் தானே கொடுக்கறோம்..” என்று அவன் சந்தேகமாக இழுக்க,

“சில சமயம் அந்த மாதிரி இருக்கும் புகழ்... இதுல கவலைப்படறதுக்கு ஒண்ணும் இல்ல... பார்ப்போம்.. அவங்க நல்லா ரெஸ்ட் எடுக்கட்டும். கூடவே ஒரு ஆள் எப்பவும் இருந்துட்டே இருங்க..” என்று டாக்டர் தனது அறிவுரையைச் சொல்ல, மீண்டும் தனது சந்தேகங்களைக் கேட்டுக் கொண்டு புகழ் ஒருவழியாகக் கிளம்பினான்.

“ஆனாலும் மாப்பிள்ளை... நீங்க டாக்டர்கிட்ட ரொம்ப சந்தேகம் கேட்கறீங்க... உங்க மாமா என் கூட வரும்போது இந்த அளவுக்கு எல்லாம் கேள்வி கேட்டது இல்ல... உங்களை விட கொஞ்சம் கம்மி தான்னு சொல்ல வரேன்... நல்லவேளை இப்போவும் அவர் தொழிலைப் பார்க்க போனார்.. அவரும் கூட வந்து உங்கள மாதிரி சந்தேகம் கேட்டிருந்தா பாவம் டாக்டர்.. அப்பறம் உங்களை இனிமே வரவே கூடாதுன்னு சொல்லி இருப்பாங்க” சசி கிண்டலடித்துக் கொண்டே வீட்டிற்கு வந்து, ஷிவானிக்கு தேவையானதை எடுத்து வைக்க உதவத் தொடங்கினார்.

புகழ் கடைக்குக் கிளம்பாமல் அங்கேயே சுற்றிக் கொண்டிருக்க, “இங்கயே இரு... நான் உன்னை பார்த்துக்கறேன்னு சொல்லலாம் தானே... அப்படி என்ன என்னை விட கடை ரொம்ப முக்கியமா? அதுவும் முக்கியம் தான்... ஆனா.. அதை யாருக்காக செய்யறாங்க? இவருக்கு என்னை விட்டுப் பிரியறதுல கொஞ்சம் கூட வருத்தமே இல்லையா?” என்று மனதிற்குள் குறைப்பட்டுக் கொண்டே, ஷிவானி சசியுடன் கிளம்பத் தயாரானாள்.

“நீங்க இங்க தனியா அல்லாடிக்கிட்டு இருக்க வேண்டாம் மாப்பிள்ளை.. சாப்பிட அங்க வந்துடுங்க... ஒரு நாள் விட்டு ஒருநாள், இங்க வீட்டையும் பூட்டி வைக்காம, இங்க வந்துட்டு போயிக்கலாம்...” சசி சொல்லவும்,

“நான் அங்க சாப்பிட வரேன் அத்தை... ராத்திரி இங்க வீட்டை பூட்டி வைக்க வேண்டாம்... நான் ஷிவாவை வந்து பார்த்துட்டு இங்க வந்துடறேன்...” என்று சொல்லிவிட்டு, ஷிவானி ஏதாவது கிண்டல் செய்வாளோ என்பது போல புகழ் அவளைப் பார்க்க, அவளோ இருவரையும் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“அம்மா வீட்டுக்கு போறதுனால நம்மளைக் கண்டுக்க மாட்டேங்கறா பாரேன்...” புகழ் தன் பங்கிற்கு சலித்துக் கொண்டவன், “சிவா.. ஒருநிமிஷம் என் கூட வா...” அவளது தோளில் கைப் போட்டு, அவளை அழைத்துக் கொண்டு தங்கள் அறைக்குச் சென்றான்.

அவளை தழுவிக் கொண்டவன் சிறிது நேரம் அமைதியாகவே நின்று, பின் அவளது கழுத்து வளைவு, கன்னம், நெற்றி என்று இதழ்களைப் பதித்துக் கொண்டே வந்தவன், “உன்னை விட்டு நான் எப்படி இருப்பேன்? நீ இல்லாம இந்த வீட்டுல எப்படி இருக்கறது... இந்த ரூம் கூட என்னக்கு வெறுப்பா இருக்குமே... நீ இல்லாம தனியா இருக்கறது கொடுமை தான் வணி. ஆனா... உனக்கு இப்போ ரெஸ்ட் தேவை.. அம்மாவும் இங்க இல்ல.. அங்க இருந்தா தான் உனக்கு நல்லது...” வெளியில் அதை சொல்லாமல், மனதினில் மட்டுமே கவலையுடன் நினைத்துக் கொண்டு நின்றான்.

“ஒழுங்கா ரெஸ்ட் எடுத்துட்டு நல்லா சாப்பிடு சிவா... நான் தினமும் வந்து உன்னைப் பார்க்கறேன்..” அவளிடம் சொல்ல,

“அது மட்டும் போதுமா இனியன்... நான் உங்க கூடவே இருக்க வேண்டாமா? என்னை அனுப்பிட்டு நீங்க இங்க என்ன செய்வீங்க? உங்களால தனியா இருக்க முடியுமான்னு யோசிக்கத் தோணலையா? போகாதேன்னு ஒரு வார்த்தை சொல்லுங்களேன்..” ஷிவானி மனதில் மறுகிக் கொண்டே, அவனது அணைப்பில் நின்றிருந்தாள்.

“என்னடா சிவா.. என்னாச்சு?” புகழ் கேட்க, தலையை மட்டும் அசைத்தவள், அப்படியே நிற்க,

“அம்மா வீட்டுக்குப் போய் ஜாலியா இருக்கப் போற.. குதிச்சி கிதிச்சு சேட்டைப் பண்ணாதே...” புகழ் கிண்டலாகச் சொல்லவும், அவள் எதிர்ப்பார்த்த பதில் வராத கடுப்பில்,

“ஹ்ம்ம்... இனிமே நான் தனியா இருக்கேன்னு ஓடி ஓடி வர வேண்டாம். லேட்டா வந்தாலும் உங்களுக்கு ஒண்ணும் இல்ல... கடையை நல்லா பார்த்துக்கோங்க..” ஒருமாதிரிக் குரலில் சொல்லிவிட்டு, அவனிடம் இருந்து விலகி நடந்தவளைப் பார்த்து புன்னகைத்தவன்,

“அதை நான் பார்த்துக்கறேன்... நீ உடம்பைப் பார்த்துக்கோ..” மீண்டும் சொல்லிவிட்டு, அவளை அழைத்துக் கொண்டு வெளியில் வந்தான்.

உள்ளே என்ன நடந்திருக்கும் என்று ஓரளவு யூகித்திருந்த சசி, ஷிவானியின் முகம் நாணத்தில் சிவந்து இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்க, வெளியில் வந்தவளின் முகத்தில் எந்த வித மாற்றமும் இன்றி இருப்பதைக் கண்டு குழப்பத்துடன் இருவரையும் பார்த்துக் கொண்டு நிற்க,

“அம்மா... போகலாமா? போன உடனே எனக்குத் தூங்கணும்... தூக்கம் தூக்கமா வருது.. இல்ல.. நான் தூங்கி எழுந்துக்கற வரை இங்கேயே இருக்கலாம்...” ஷிவானி சொல்லவும்,

“இல்லடி... வா கிளம்பலாம்... அங்க போய் நான் மதியத்துக்கு சமையல் செய்யணும்... உங்க அப்பா வந்திருவார்..” சசி பரபரப்புடன் ஷிவானியை அழைத்துக் கொண்டு கிளம்பினார்.

ஷிவானியை அவர்கள் வீட்டில் விட்டு விட்டு கடைக்குச் சென்ற புகழ், குழந்தை பிறப்பதற்கு முன், தொழிலில் ஒரு நிலைபெற்று, அதற்கு பின்பு அதிகளவு நேரத்தை குழந்தையுடனும், ஷிவானியுடன் செலவு செய்ய வேண்டும் என்ற முடிவை எடுத்துக் கொண்டு, அதை செயல்படுத்தத் துவங்கினான்.

அதற்குத் தகுந்தாற் போல அவர்களது கடையின் வியாபாரமும் சூடு பிடிக்கத் துவங்கி இருந்தது. சர்வீஸ், சேல்ஸ் என்று புகழும் வேலையில் தன்னை ஈடுபத்திக் கொள்ளத் துவங்கி இருந்தான். ஷிவானியைப் பாதுகாப்பாக, பார்த்துக்கொள்ள சசி இருக்கும் தைரியத்தில், காலையும், இரவும் சாப்பிடச் செல்லும் சாக்கில், ஷிவானியைப் பார்த்துவிட்டு, அவளுடன் சிறிது நேரம் இருந்துவிட்டு வீட்டிற்குத் திரும்பும் வழக்கத்தை கொண்டிருந்தான்.

இரவில் வீட்டின் வெறுமையும், அவளின் வாசனை இல்லாத தலையணையும் புகழைக் கொல்ல, செல்போனில் இருக்கும் அவளது புகைப்படங்களையும், அவர்களது திருமணப் புகைப்படங்களையும் பார்த்து பொழுதைக் கழிக்கத் துவங்கினான்.

ஷிவானியின் முகம் சோர்ந்து இருப்பதைப் பார்த்த சசிக்கும், அவளது அமைதி உறுத்த, அவளிடம் பலவாறு கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருக்க, “ஒண்ணும் இல்லன்னு சொல்றேனேம்மா.. ஏதாவது இருந்தா தானே சொல்ல முடியும்.. ரொம்ப டயர்ட்டா இருக்கும்மா... தூங்கிட்டே இருக்கணும் போல இருக்கு.. உன் மாப்பிள்ளை வாயைத் திறந்து சண்டை போட்டுட்டாலும்... இந்த உலகமே தலைகீழ சுத்த தொடங்கிடுமே...” என்று ஷிவானி அவரிடம் பதில் சொல்லி சமாளித்துக் கொண்டிருந்தாள். இடையில் மல்லிகாவும் ஒருமுறை ஷிவானியை வந்து பார்த்துவிட்டுச் சென்றார்.

குறும்பு முற்றிலுமாக குறைந்து, தனது பெற்றவர்களுக்காக என்று ஓரளவு பேசிக்கொண்டிருந்த ஷிவானியை கவனித்த சசி, அதற்குக் காரணம் அவளது தற்போதைய நிலை என்று கருதி, தன்னால் முடிந்த அளவு அவளிடம் பேசி சிரித்து, அவளையும் சிரிக்க வைத்துக் கொண்டிருந்தார். பாஸ்கரும் வழக்கம் போல சாப்பிடும் வேளையில் கலகலத்து விட்டு, தன்னுடைய தொழிலைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

இது போலவே இரண்டு மாதங்கள் கடந்திருந்த நிலையில், ஒவ்வொரு மாதமும் மருத்துவரிடம் செல்லும் போதும், ஷிவானியின் எடை குறைந்தும், குழந்தை மட்டும் நன்றாக வளர்ந்தும் இருக்க,

“இவங்க ஏன் வெயிட் குறைஞ்சுக்கிட்டே போறாங்க? சரியா சாப்பிடறாங்களா?” மருத்துவர் கவலையாய் கேட்க,

“நல்லா தான் சாப்பிடறா டாக்டர்... தினமும் அவளுக்கு நான் சாப்பிட சத்துள்ள சாப்பாடா தான் நான் கொடுக்கறேன்... ஏன் இப்படி இருக்கான்னே தெரியலையே...” என்று சசி, தான் அவளுக்கு கொடுக்கும் உணவையும், அதன் நேரத்தையும் குறிப்பிட, மருத்துவர் மேலும் குழம்பிப் போனார்.

“என்ன ஆச்சு? சிவா.. மனசுல உங்களுக்கு மனசுல, டெலிவரி பத்தின பயம்... இல்ல.. வேற எதையாவது நினைச்சு குழம்பிட்டு இருக்கீங்களா? இப்போ எல்லாம் ஒரு பயமும் இல்ல ஷிவானி.. நல்லபடியா ஈஸியா குழந்தை பெத்துக்கலாம்..” என்று டாக்டர் அவளுக்கு அறிவுரை சொல்ல,

“அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல டாக்டர்..” அவருக்கு பதில் சொன்னவள், அதற்கு மேல் அமைதியாக அமர்ந்துக் கொண்டாள்.

“சரிம்மா... இதே போல சாப்பிடுங்க... பார்ப்போம்.. இந்த மருந்து எல்லாம் சாப்பிடத் தொடங்குங்க...” என்றபடி மருந்துகளை மாற்றி எழுதிக் கொடுக்க, அவரிடம் இருந்து விடைப்பெற்று கிளம்பியவர்களைப் பார்த்து,

“Mr. புகழ் கொஞ்சம் உங்ககிட்ட பேசணும்... நீங்க மட்டும் இருங்க” என்று டாக்டர் அவனைத் தேக்கவும் புகழ் நிற்க, ஷிவானியை அழைத்துக் கொண்டு சசி வெளியே சென்றார்.

“என்ன டாக்டர்? ஏதாவது பிரச்சனையா?” புகழ் கேட்க,

“ஒண்ணும் இல்ல... அவங்க முன்னை விட கொஞ்சம் ஏதோ டிஸ்டர்ப்டா இருக்கற மாதிரி இருக்கு... மனசு ஏதோ சரி இல்லன்னு நினைக்கிறேன்... அவங்க முதல்முறை வந்ததுக்கும் இப்போ இருக்கறதுக்கும் நிறைய வித்தியாசம் தெரியுது.. கொஞ்சம் பார்த்துக்கோங்க... இப்படியே போனா டெலிவரி ரொம்ப கஷ்டமாக சான்சஸ் இருக்கு.. கவனமா பார்த்துக்கோங்க.. அவங்களை மனசைத் திறந்து பேச வைங்க.. அது டெலிவரியைப் பத்தின பயமா இருந்தாலும் பிரச்சனை இல்ல... அவங்களுக்கு எக்ஸ்ப்ளைன் பண்ணிக்கலாம்... ஒருவேளை வேற எதைப்பத்தியாவது யோசிச்சு குழப்பிக்கறாங்களோன்னு தோணுது ...எதுக்கும் தன்மையா மனசுவிட்டுப் பேசிப் பாருங்க... கண்டிப்பா அவங்களையும் மனசுல உள்ளதெல்லாம் பேச வைங்க...” என்று டாக்டர் அழுத்திச் சொல்லவும், தலையசைத்து கேட்டுக் கொண்டு வெளியே வந்தவன், யோசனையுடன் ஷிவானியைப் பார்த்தான்.

“டாக்டர் என்ன சொல்றாங்க மாப்பிள்ளை?” சசி கவலையுடன் கேட்க,

“ஒண்ணும் இல்ல... அப்போ சொன்னதையே தான் சொன்னாங்க...” யோசனையுடனே பதில் சொன்னவன், சந்தேகமாக,

“அத்தை.. அவ ஒழுங்கா சாப்பிடறாளான்னு பார்க்கறீங்களா? இல்ல நீங்க கொடுத்துட்டு அந்தப் பக்கம் போனதும், அதை வெளியே சாப்பிடாம கொட்டிறாளா? ஏன் அவளுக்கு வெயிட் போடவே இல்ல... அதே வெயிட்ல இருந்தா கூட ஓகே... எப்படி குறையுது? ஒழுங்கா ரெஸ்ட் எடுக்கறாளா? இல்ல தூங்காம டிவி பார்த்துட்டு இருக்காளா?” புகழ் கேள்விகளை கேட்டுக் கொண்டே வர, சசிக்குமே சந்தேகம் எட்டிப் பார்த்தது.

“இல்லையே மாப்பிள்ளை.. நான் அவளுக்கு எதைக் கொடுத்தாலும் குடிக்க வச்சிட்டுத் தானே வரேன்... முதல் தடவ டாக்டர் சொன்ன போதே, எனக்கு சந்தேகம் வந்து, அவளை தனிய விடறதே இல்லையே.. கூடவே இருந்து தானே சாப்பிட வைக்கிறேன்... இதுக்கும் மேல என்ன செய்யறது?” புகழிடம் குழப்பமாக பதில் சொன்னவர்,

“ஏய் மனசுல ஏதாவது ஆசையை வச்சிட்டு இருக்கயா சிவா... சொல்லு.. என்ன வேணும்னாலும் வாங்கித் தர்றோம்... இந்த நேரத்துல எல்லாம் மனசுல ஆசையை வச்சிக்கிட்டு மறுகக் கூடாது.. சொல்லேண்டி... இப்படி எங்களை குழப்பத்துல சுத்த விடறதுல உனக்கு என்ன இருக்கு?” காலம் காலமாக அந்த நேரத்தில் பெண்களுக்கு ஏற்படும் ஆசைகள் நிறைவேறாமல் போனாலும், இது போல ஆகலாம் என்று சொல்லி கேள்விப்பட்டிருந்த சசி, ஷிவானியிடம் கேட்க, புகழ் அவளை யோசனையோடு பார்க்க, ஷிவானி புகழைப் பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டு,

“ஒண்ணும் இல்லம்மா... என்னால முடிஞ்ச அளவுக்கு வெயிட் போட எக்ஸ்ட்ராவா சாப்பிட்டுப் பார்க்கறேன்...” என்று பதில் சொல்லிவிட்டு, கண்களை மூடிக் கொண்டாள்.

அவர்கள் வீட்டிற்கு வரும்போதே, ஷிவானியின் வீட்டு வாயிலில் புகழின் நண்பர்கள் அவர்களுக்காக காத்திருக்க, “இவங்க எதுக்கு இப்போ இங்க வந்திருக்காங்க? ஏதாவது பிரச்சனையா?” மனதினில் யோசித்துக் கொண்டே வந்தவன், காரை அவர்கள் அருகில் நிறுத்திவிட்டு, வேகமாக இறங்கி மனதினில் நினைத்த கேள்வியைக் கேட்க,

“பிரச்சனை எல்லாம் ஒண்ணும் இல்லடா... சிஸ்டர் ரெஸ்ட் எடுக்கறாங்கன்னு சொல்லியே எங்களை எல்லாம் பார்க்க விடாம இத்தனை நாளா தடுத்துட்டு இருந்த தானே... அதனால நாங்களே இப்போ சொல்லாம கொள்ளாம வந்துட்டோம்..” விக்ரம் கிண்டலாக சொல்லிக் கொண்டே, பின்னால் இருந்து இறங்கிய ஷிவானியைப் பார்த்து புன்னகைத்தான்.

ஷிவானியும் முறைமைக்காக புன்னகைத்து, “வாங்கண்ணா... எப்படி இருக்கீங்க?” என்று கேட்க,

“நாங்க நல்லா இருக்கோம் சிஸ்டர்.. வாழ்த்துக்கள்... இந்தாங்க ஸ்வீட்...” என்று விக்ரம் நீட்டவும், ஷிவானி அதை வாங்கிக் கொண்டு,

“உள்ள வாங்கண்ணா...” என்று அவர்களை வீட்டிற்குள் அழைத்துச் சென்றவள், விக்ரமின் கேள்விகளுக்கு மட்டுமே பதில் சொல்லிக் கொண்டிருக்க, சசி அவர்களுக்கு காபி கொடுத்து உபசரித்தார்.

“சிஸ்டர்... இந்த புகழ் கூட ரொம்ப சேராதீங்க... உங்களையும் அவனை மாதிரியே இப்படி மாத்தி வச்சிருக்கானே... ஹையோ ஷிவானி அமைதியானா இந்த உலகம் தாங்குமா?” என்று விக்ரம் போலியாக அங்கலாய்க்க, ஷிவானி அதிர்ச்சியாகப் பார்க்க,

“விக்ரம் சிஸ்டரை ரொம்ப கலாய்க்காதே... பாவம்... அவங்க பயந்துட்டாங்க பாரு...” ரவி ஷிவானிக்கு சப்போர்ட் செய்வது போல பேசினான்.

“சும்மா சிஸ்டர்... ரொம்ப டயர்ட்டா இருக்கீங்க போல.. நாங்களும் ரொம்ப தொல்லை பண்ணறோம்...” என்று அவர்கள் விடைபெற, ஷிவானியும் புன்னகையுடன் அவர்களை அனுப்பி வைத்தாள்.

“ஒரு அரை மணி நேரம்டா விக்ரம்... நான் வந்துடறேன்...” புகழ் சொல்லிவிட்டு, அவர்களை அனுப்பி வைத்துவிட்டு உள்ளே வந்தவன், ஷிவானியை அமர வைத்து,

“சாப்பிடறியா சிவா... உன்னை என்ன கேட்கறது? இரு... நானே ஊட்டறேன்..” என்று சசியிடம் கேட்டு, அவர் தயாரித்து வைத்த உணவை எடுத்து ஊட்டத் துவங்கினான்.

எதுவும் பேசாமல் வாங்கிக் கொண்டவள், உண்டு முடிக்கவும், “நைட் வரேன்... ஒழுங்கா தூங்கி ரெஸ்ட் எடு... ஏதாவது வேணும்னா சொல்லு வாங்கிட்டு வரேன்...” சசி சொன்னதை வைத்து ஷிவானியிடம் கேட்டவன், மனமே இல்லாமல் கடைக்குக் கிளம்பிச் சென்றான்.

கடைக்குக் கிளம்பினாலும், புகழின் மனதில் பல யோசனைகள் ஓடத் துவங்கி இருந்தது. வெளியில் வந்தவன் மல்லிகாவிற்கு கால் செய்து டாக்டர் சொன்னதை சொல்லிவிட்டு அவரது பதிலுக்காக காத்திருக்க,

“ஆமா புகழ்... நான் வந்த போதே எனக்கும் உறுத்திச்சு... அதைச் சொன்னா... நல்லா பார்த்துட்டு இருக்கற அவங்க அம்மாவை சரியா பார்த்துக்கலைன்னு குறை சொன்னது போல ஆகும்ன்னு தான் நான் எதுவும் பேசல.. அவ முன்னைப் போல இல்ல புகழ்... ரொம்ப அமைதியா இருக்கா... கொஞ்சம் அவகிட்ட என்ன ஏதுன்னு பேசுடா..” மல்லிகா சொல்லவும், ‘சரி...’ என்ற புகழ், மீண்டும் யோசனைக்குத் தாவினான்.

“ஆமா... வணி ரொம்ப அமைதியாகிட்டா. நான் ஒரு வார்த்தை பேசினா பதிலுக்கு நாலு வார்த்தை பேசுவா..... இப்போ கேக்கற கேள்விக்கு பதில் சொல்லறத கூட அளந்து இல்ல பேசறா” முதல்முறையாக புகழுக்கு ஷிவானியின் அமைதி உறுத்தத் துவங்கியது.

“எப்போலேருந்து அவ இவ்வளவு அமைதி ஆனா?” புகழ் யோசித்துக் கொண்டே காரை வீட்டிற்குச் செலுத்தினான். வீட்டின் முன்பு அவன் காரை நிறுத்தவும், ரஞ்சிதா அவன் அருகே வந்து ஷிவானியைப் பற்றி விசாரிக்க, அவளுக்கு பதில் சொல்லிவிட்டு, வீட்டின் உள்ளே சென்றவனுக்கு இத்தனை நாட்களை விட, இப்பொழுது ஷிவானி இங்கு இல்லாதது அதிகம் தாக்கியது.

வீட்டின் வெறுமை முகத்தில் அறைய, தங்களது திருமண ஆல்பத்தை எடுத்துப் பார்த்தவன், அதில் ஷிவானியின் கண்களில் நிரம்பி வழிந்த குறும்பையும், நாணத்தையும் ரசித்துக் கொண்டே அதைப் பார்த்து முடித்தவன், அதை எடுத்து பெட்டின் அருகே இருந்த டேபிளில் வைத்துவிட்டு, கடைக்குச் செல்லக் கிளம்ப, ஹாலின் வாயிலை நோக்கி இருந்த ஜன்னலின் அருகே போடப்பட்டிருந்த சேர் மேலும் அவனை யோசிக்க வைத்தது.

“அம்மா இருக்கும் போது இந்த சேர் இங்க இருக்காதே...” என்று யோசித்தவன், ஷிவானியை சசி அழைத்துச் செல்வதற்கு முன் சிறிது நாட்கள் இங்கே அமர்ந்து வாசலில் வேடிக்கைப் பார்த்தது நினைவிற்கு வர, புகழும் ஜன்னலைத் திறந்து வைத்துக் கொண்டு, அந்த சேரில் அமர்ந்தான்.

அப்பொழுது, ரஞ்சிதா ஹரீஷுடன் சிரித்துப் பேசிக் கொண்டே வருவதைப் பார்த்தவன் ஜன்னலை மூடிவிட்டு கடைக்குக் கிளம்பினான்.

ஷிவானியின் அமைதி எப்போதிலிருந்து? மீண்டும் மீண்டும் யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு, கடைக்குச் சென்றும், அவனது மனம் ஷிவானியையே சுற்றிக் கொண்டிருந்தது.

ஷிவானியின் ஒவ்வொரு அசைவையும் ரசித்து மனதினில் சேகரித்து வந்தவனாயிற்றே, அனைத்தையும் திரும்ப மனதினில் ஓட்டிப் பார்க்க, மல்லிகா ஊருக்கு சென்றதும் தான் அவளது பேச்சு குறைந்து போனதை ஒருவாறு கண்டு பிடித்தான்.

மேன்மேலும் அவளது செயல்களை ஓட்டிப் பார்த்தவன், ரஞ்சிதாவின் வீட்டிற்கு சென்று வந்த பிறகே ஷிவானியின் முகம் முற்றிலும் சோர்ந்து போனதும், பேச்சு குறைந்து போனதையும் கண்டு பிடித்து மனம் வருந்தியவன், ‘ரஞ்சிதா வந்த பிறகு தான் அவ இப்படி ஆகிட்டாளோ? இல்ல.. இன்னும் வேற ஏதாவது இருக்குமோ? எதுக்கும் வாட்ச் பண்ணிப் பார்ப்போம்..’ நூலைப் பிடித்துவிட்ட திருப்தியில், கடைக்குள் காலெடுத்து வைத்தவனை, விக்ரம் முறைத்துக் கொண்டு நின்றான்.

“ஏண்டா... என்னாச்சு? இப்படி நின்னுட்டு இருக்க?” புகழ் கேட்க,

“உன் கூட சண்டைப் போடத் தான் இப்படி நிக்கறேன் புகழ்...”

“என்கூட சண்டைப் போடப் போறியா? எதுக்குடா...” புகழ் புரியாமல் கேட்க,

“என்னடா ஆச்சு ஏன் ஷிவானி இப்படி அமைதியா இருக்கா... எப்படி துருதுருன்னு இருப்பாட...... இப்போ உன்னோட சேர்ந்து சேர்ந்து அவளும் இப்படி ஆகிட்டாளா... அவகிட்ட ஏதோ சரியில்ல புகழ்... அவ கண்ணுல எப்பவும் உன்னைப் பார்க்கும் போது இருக்கற காதல் இல்ல... ரொம்ப வெறுமையா இருக்கு.. அவ ஏண்டா இப்படி இருக்கா? உனக்கு ஏதாவது தெரியுமா?” விக்ரமின் கேள்விக்கு, தலையை மட்டும் இடம் வலமாக அவன் அசைக்க, விக்ரமின் கோபம் ஏறியது.

“அவ கூட வாய்விட்டு பேசி சந்தோஷமா இருக்கியா இல்லையா? இல்ல அவகிட்டயும் இப்படி பூம் பூம் மாடு மாதிரி தலையை மட்டும் ஆட்டி வைக்கறையா? ஒழுங்கா வாயைத் திறந்து பேசு புகழ்... அவளைப் பார்த்துட்டு வந்து எனக்கு இன்னும் மனசே ஆறலடா...” விக்ரம் பொரிந்து தள்ள, இப்பொழுதும் புகழ் அமைதியாகவே நின்றான்.

“நீ கடை வேலைன்னு இங்கயே சுத்திட்டு அவளை கவனிக்காம விட்டு, அவ அதப்பத்தி கேட்டு அதனால உங்களுக்குள்ள ஏதாவது சண்டையா? அதனால தான் ரொம்ப நாளா அவ அவங்க அம்மா வீட்ல இருக்காளா?” விக்ரமின் கேள்விகள் எதற்கும் பதில் சொல்லாமல் நின்ற புகழின் மீது அவனுக்கு கோபம் கட்டுக்கடங்காமல் போக,

“இல்ல... நான் தெரியாமத் தான் கேட்கறேன்... நீ தான் மௌனச் சாமியார் மாதிரி உட்கார்ந்து இருக்கன்னா... அவளையும் எப்படிடா அப்படி மாத்தி வச்சிருக்க? ஏதோ அவ வந்த அப்பறம் கொஞ்சம் சிரிச்சு பேசறியேன்னு நினைச்சேன்.. இப்போ மொத்தமா கவுத்துட்டு நிக்கறியேடா...

உன்கிட்ட நான், கல்யாணம் ஆன புதுசுலே சொல்லி இருக்கேன், நியாபகம் இருக்கா? அவளை புரிஞ்சிட்டு நடக்க முயற்சி பண்ணுன்னு சொன்னேனே... கேட்டியாடா... உன்னை விரும்பி கல்யாணம் செய்துக்கிட்டு வந்த பொண்ணை, இப்படி வத்தலா.... ஜீவனே இல்லாம ஆக்கி வச்சிருக்கியே புகழ்... உனக்கே நியாயமா இருக்கா?” விக்ரம் கேட்கவும், புகழ் குற்ற உணர்வில் தலைக் கவிழ்ந்தான்.

ஆனாலும் ஷிவானியின் அமைதிக்கு தான் தான் முழு பொறுப்பு என்று முழுவதுமாக உணராதவன், மெல்ல “நான் என்னடா செய்தேன்?” குழப்பத்துடன் கேட்க,

“நீ தாண்டா ஏதோ செய்திருக்க... உனக்கு இன்னுமா புரியல? அவளைப் பார்த்தா, சோர்வுல பேசாம இருக்க மாதிரியா இருக்கு.. இல்ல பேசப் பிடிக்காம இருக்கற மாதிரி இருக்கு. அதுவும், இவன் கூட சேராதேன்னு நான் சொன்ன போது அவ அதிர்ச்சியா பார்த்தா...

அப்போவே எனக்கு சந்தேகம்.. அவ கண்ணுல உன்னைப் பார்க்கும் போது எப்போதும் இருக்கும் சந்தோஷமும் சிரிப்பும் காணோம்டா... உன்னைப் பார்க்கும்போது எல்லாம் பேசற கண்ணும் இப்போ வெறுமையா இருக்கு புகழ்... இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பேசாம அமைதியா ஜடமா இருப்ப? நாளைக்கு உன் குழந்தை வந்தாலும் இப்படியே தான் இருக்கப் போறியா? இப்படியே பேசாமையே அமைதியா இருந்தா வாழ்க்கையே போர் அடிச்சிடும்... கொஞ்சமாவது உன்னோட கூட்டுல இருந்து வெளிய வாடா... ஷிவானிக்காக... உன் குழந்தைக்காக.” என்ற விக்ரம், ஷிவானியின் இந்த நிலைமைக்கு என்ன காரணம் என்று தெரியாமல், ஏதோ கோபத்தில் தொடங்கி அங்கலாய்ப்பில் முடிக்க, புகழ் அவனுக்கு எந்த பதிலையும் சொல்லாமல், தனது இடத்தில் சென்று அமர்ந்தான்.

அவனது முகம் யோசனையைக் காட்டவும், விக்ரம் அதற்கு மேல் எதுவும் பேசாமல், தனது வேலையைப் பார்க்கச் சென்றுவிட, “என்னால தான் சிவா இப்படி இருக்காளா? நான் தான் அவளுக்கு பொருத்தம் இல்லாம, அவளோட உணர்வுகளையே கொன்னுட்டேனா?” என்று யோசிக்கத் தொடங்கி, தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்தான்.

“ரவி... கொஞ்சம் கடையைப் பார்த்துக்கோ..” என்று இன்னொரு நண்பனிடம் கூறியவன், அவன் ‘என்னாச்சு?’ என்று கேட்பதைக் கூட கவனியாமல், வேகமாக வீட்டிற்குச் சென்றான். ஷிவானி அமர்ந்த சேரில் அமர்ந்தவன், அந்த ஜன்னல் வழியே மீண்டும் வேடிக்கைப் பார்க்கத் தொடங்க, சிறிது நேரத்தில், ஹரீஷும் ரஞ்சிதாவும் திரும்பி வந்தனர்.

ரஞ்சிதாவின் கையில் ஏதோ துணிக்கடையின் பெயரிட்ட கவரும், ஹரீஷ் அவளை அணைத்த வாக்கில், அவளை நடத்திச் செல்வதையும், இருவரும் கலகலவென்று பேசி சிரித்து, விளையாடிக் கொண்டே வீட்டின் கதவைத் திறந்து உள்ளே செல்வதைப் பார்த்தவனுக்கு, ஷிவானி தானும் அவளிடம் இது போல நடந்து கொள்ள வேண்டும் என்று விரும்பி இருப்பாளோ என்ற எண்ணம் எழுந்தது.

அடுத்து என்ன என்று வேடிக்கைப் பார்த்தவன், மீண்டும் ஹரீஷ் கிளம்புவதையும், ரஞ்சிதா வாயிலில் வந்து பிரியா விடை அளிப்பதையும், மனமே இல்லாமல் ஹரீஷ் அவளை கொஞ்சிக் கொண்டே எங்கோ வெளியில் கிளம்புவதையும் பார்த்தவனுக்கு, மனதில் நிறைய ஆசைகள் இருந்தாலும் அதை வெளிப்படுத்தத் தெரியாத தன்னுடைய இந்த அமைதியை நினைத்து வெறுப்பாக இருந்தது.

ஜன்னலை மூடிவிட்டு அதில் சாய்ந்து அமர்ந்தவனின் மனதில், ஒருநாள் அவன் கடைக்குக் கிளம்பும் போது ஷிவானி பார்த்த ஏக்கப் பார்வை மின்னி மறைந்தது. “அப்போ, அன்னைக்கு நான் மதியம் சாப்பிட்டு கடைக்குக் கிளம்பும் போது, இவங்களைத் தான் ஷிவானி பார்த்துட்டு இருந்தாளா? இவங்களைப் பார்த்துட்டுத் தான் என்னை ஏக்கமா பார்த்தாளா? அய்யோ கடவுளே!” என்று நொந்துக் கொண்டான்.

“அப்போ என்னோட வணி... நானும் இப்படித் தான் இருக்கணும்னு ஆசைப் பட்டாளா?” என்று நினைத்து நினைத்து மறுகியவன், அதைக் கூட புரிந்துக் கொள்ளாமல் விட்ட தனது மடத் தனத்தை எண்ணி அந்த ஜன்னல் கம்பிகளிலேயே முட்டிக் கொள்ளத் துவங்கினான்.

“இல்ல... இதுக்கும் மேல முட்டாள் மாதிரி இருக்க நான் விரும்பல... வணியை இனிமே கஷ்டப்பட விட மாட்டேன்... இங்க கூட்டிட்டு வந்து அவளை நல்லா பார்த்துப்பேன்..” என்று தனக்குள் சொல்லிக் கொண்டவனின் மனதில், இரண்டு மாதங்களாக, ஷிவானி இங்கே வரவே விருப்பம் தெரிவிக்காமல் இருப்பது ஓங்கி அறைய, ஒரு முடிவுடன் ஷிவானியைப் பார்க்கக் கிளம்பினான்.

அவளை வெறும் கையோடு பார்க்கச் செல்லக் கூடாது என்று நினைத்து, இன்று எப்படியும் பழைய ஷிவானியை மீட்டு எடுக்க வேண்டும் என்ற உறுதியுடன், ஒரு கடைக்குள் நுழைந்தவன் என்ன வாங்குவது என்று புரியாமல் குழம்பி நின்றான்.

“அவளுக்கு என்ன பிடிக்கும்” என்று யோசித்தவன், “புடவையே வாங்கிடலாமா?” என்று யோசிக்க,

“அது தான் ஏற்கனவே கொடுத்தாச்சே.. இப்போ வேற தான் வாங்கணும்... அந்த டைம், அந்த புடவை அவளுக்கு பிடிச்சது என்னோட லக்.. இந்த தடவையும் புடவையே வாங்கிட்டு போனா... எனக்கு வேற எதுவும் வாங்கத் தெரியாதுன்னு நினைச்சிடுவா.. நினைச்சிடுவா..”அதுவும் இப்போ என்மேல இருக்க கடுப்புக்கு... வேண்டாம்டா சாமி..” தனக்குள்ளே தனது யோசனைக்கு கொட்டு வைத்துக் கொண்டவன், அங்கிருந்த டெட்டி பொம்மையைப் பார்க்க, மனதினில் உற்சாகம் பிறந்தது.

“ஹ்ம்ம்... இதை வாங்கலாம்.. அவ ரூம்ல இது போல நிறைய இருக்கறதை பார்த்து இருக்கேன்... அப்போ அவளுக்கு பிடிக்கும்ன்னு நினைக்கிறேன்” என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டு, இதயத்தை தனது கையில் ஏந்திக் கொண்டு இருந்த அழகான ஒரு டெட்டியை வாங்க, அந்த கடைக்காரர் அதில் அவர்களது பெயரை எழுதித் தருவதாகச் சொல்ல, சிறு குழந்தை போல, புகழ் சந்தோஷத்தில் துள்ளாத குறையாக மனதினில் துள்ளிக் கொண்டான்.

“ஹப்பா... காதலைச் வெளிப்படுத்த நாம வாங்கற கிஃப்ட்லையும் இவ்வளவு சுகம் இருக்கா?” முணுமுணுத்துக் கொண்டே, அதில் தங்களது பெயரை எப்படி பொறிக்கலாம் என்ற சிந்தனையையும் ஓட்டி, இறுதியாக ‘வணி இனியன்” என்று எழுதி வாங்கிக் கொண்டு, அடுத்து என்ன என்று கேள்விக்கு விடையாக, திருமணமான புதிதில் விக்ரம் தனது மொபைலில் பதிவிறக்கம் செய்த ஒரு அப்ளிகேஷனைத் திறந்து, இரண்டு சினிமா டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொண்டு, சாக்லேட்டுகளையும், ஸ்வீட்டையும் வாங்கிக் கொண்டு, வீட்டிற்குக் கிளம்பினான்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அதே நேரம், மாலை சிற்றுண்டியை சாப்பிட உட்கார்ந்திருந்த பாஸ்கரும் சசியும் வழக்கம் போல கலகலக்க, ஷிவானி அவர்களை புன்னகையுடன் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

பேச்சு தங்களது திருமணமான நாட்களைப் பற்றி ஓடிக் கொண்டிருக்க, “உங்க பாட்டி, சினிமாவுக்கு போன்னாதான் உங்க அப்பா என்னைக கூட்டிட்டு போவார்... இல்லன்னா மனுஷனுக்கு அது கூடத் தெரியாது.. வெட்டிங்டேக்கு ஒரு முழம் பூ வாங்கிட்டு வரத் தெரியாது... புடவை வாங்கித் தரணும்னு தெரியாது... எதுவும் தெரியாது.. கொஞ்சம் கொஞ்சமா சொல்லி சொல்லி புரிய வச்சித் தானே உங்க அப்பா இந்த அளவுக்கு இருக்கார். அதை ஏன் கேட்கற சிவா...” சசி சலித்துக் கொண்டே பாஸ்கரைப் பார்க்க,

“இப்போ ஏன் என் மானத்தை வாங்கிட்டு இருக்க? ஏதோ அப்போ எல்லாம் எனக்கு எதை எப்படி செய்யணும்னு தெரியாது... எங்க வீட்லயும் அப்படி எல்லாம் யாரும் செய்து பார்த்ததும் இல்ல.. அதுக்காக எனக்கு உன் மேல அன்பு இல்லன்னு அர்த்தம் ஆகிடுமா என்ன?” சசியிடம் கேட்டவர்,

“நீயே சொல்லு சிவா... வெளிய கூட்டிட்டு போறதும், கிஃப்ட் வாங்கித் தரதும் தான் அன்பைச் சொல்லுமா என்ன?” ஷிவானியை அவர்களது பேச்சிற்குள் இழுக்க, தான் மனதில் நினைப்பதையே இருவரும் பேசவும், என்ன பதில் சொல்வதென்று புரியாமல், தோளைக் குலுக்கிக்கொண்டு,

“உங்க ரெண்டு பேருக்கும் இடையில நான் வரக் கூடாதுன்னு தானே என்னை கல்யாணம் செய்து துரத்தி விட்டீங்க... நீங்களே பேசித் தீர்த்துக்கோங்க..” என்று கேலியாக சொல்லிவிட்டு நகர்ந்தவள், சோபாவில் அமர்ந்து,

“என்னைப் போலத் தானே அப்போ அம்மாவும் ஃபீல் பண்ணி இருப்பாங்க... இந்த ஆம்பளைங்களே இப்படித் தானா? பொண்ணுங்க மனசுல என்ன இருக்குன்னே புரிஞ்சுக்கத் தெரியாத ஜடங்களா?” என்ற கேள்வி குடைய, அது கோபமாக கன்றத் துவங்கியது.

“சிவா... அப்பாவோட பீரோல இருந்து செக் புக்கை எடுத்துட்டு வா...” என்று சசி சொல்லவும், அதை எடுக்க எழுந்தவள், புகழ் கேட்டைத் திறந்துக் கொண்டு உள்ளே வருவதைப் பார்த்து அங்கேயே நின்றாள்.

“ஹாய் வணி... என்ன தூங்கி எழுந்தாச்சா?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்தவன், அவளிடம் ஸ்வீட்கள் இருந்த கவரை நீட்ட, வெகுநாட்களுக்குப் பிறகு அவன் அழைத்த வணியும், கவரையும் கேள்வியாக பார்த்துக் கொண்டே வாங்கிக் கொண்டவள், டைனிங் டேபிளின் மீது வைத்துவிட்டு, அவனது கையில் இருந்த இன்னொரு கவரைப் பார்த்தாள்.

“அது உனக்கு இல்ல... கொண்டு போய் ரூம்ல வை..” வேண்டுமென்றே அவளை வம்புக்கு இழுத்தவன், தன்னால் தான் ஷிவானி இப்படி இருக்கிறாள் என்று புரிந்துக் கொண்ட பின்பு, தனது தவறைத் திருத்தும் முயற்சியில் அடியெடுத்து வைத்தான்.

அவன் சொன்னது போலவே அதை அறையில் வைத்து விட்டு வந்தவள், “காபி குடிக்கறீங்களா?” என்று கேட்டுவிட்டு, அவன் பதில் சொல்கிறானா இல்லையா என்று கூட கவனிக்காமல், இயந்திரத்தனமாக காபியை கொண்டு வந்து கொடுத்தவள், மீண்டும் சென்று சசி செய்து வைத்திருந்த மாலைச் சிற்றுண்டியை எடுத்துக் கொண்டு வந்தாள்.

கண்களில் ஜீவனே இல்லாமல் வெறுமை மட்டுமே நிறைந்திருக்க, தன் அருகே நின்றவளைப் பார்க்கப் பார்க்க புகழின் நெஞ்சம் வலித்தது. தான் அவளது வாழ்வையே பாழடித்து விட்டோம்... தன்னை விடுத்து அவள் வேறொருவரை திருமணம் செய்திருந்தால் நிம்மதியாக சந்தோஷமாக பட்டாம்பூச்சி போல சுற்றிக் கொண்டிருப்பாள் என்று நினைத்தவனின் காதல் கொண்ட மனது,

“அப்படியே அறிவு வழியுது போ... அவளை இப்போவும் கூட பழையபடி பட்டாம்பூச்சியா மாத்தலாம். ஏன் நீ நினைச்சா முடியாதா? அதெப்படி அவளை ‘வேற ஒருத்தருக்கு மனைவியாகி இருந்தா’ன்னு யோசனை பண்ணுவ... அறிவே... போய்.. அவளை, அவ ஆசைகளை புரிஞ்சிக்காம sபோன உன் மடத்தனத்துக்கு முடிவு கட்டிட்டு சந்தோஷமா இரு... உன்னோட வணியை உன்னால சந்தோஷமா வச்சிக்க முடியும்...” என்று திட்டத் தொடங்க, காபியை குடித்து முடித்து, அவள் கொடுத்த சிற்றுண்டியை எடுத்துக் கொண்டு அறைக்குச் செல்ல, ஷிவானி சோபாவிலேயே அமர்ந்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“சிவா... மாப்பிள்ளை சீக்கிரமா வேற வந்திருக்கார்... ஏதோ யோசனையா இருக்கற மாதிரி இருக்கு... என்னன்னு போய் கேளு...” சசி விரட்ட,

“கடையை பத்தித் தான் யோசிச்சிட்டு இருப்பார்ம்மா... வேற என்னத்தை அவர் யோசிக்கப் போறார்..” என்று சலித்துக் கொண்டே, உள்ளே சென்றவள், கட்டிலில் சென்று அமர்ந்தாள்.

அவளது வருகைக்காக காத்திருந்தவன், “நீ சாப்ட்டியா சிவா... உங்க அம்மா செய்தது நல்லா இருக்கு... நீயும், இதெல்லாம் எப்படி செய்யறதுன்னு கத்துக்கோ..” என்று சொல்லவும்,

“என்ன இன்னைக்கு சீக்கிரம் வந்திருக்கீங்க? அதுவும் கடையை விட்டுட்டு... இன்னைக்கு சேல்ஸ் இல்லையா?” ஷிவானி நக்கலாகக் கேட்க,

“இல்ல.. என் பொண்டாட்டியைப் பார்க்க வந்துட்டேன்... சரி சொல்லு... எனக்கு இது போல செய்துத் தருவியா?” புகழ் கேட்க, ஷிவானி உதட்டைப் பிதுக்கினாள்.

“அப்போ... செய்து தர மாட்டியா?” மீண்டும் புகழ் கேட்க,

“எதுக்கு?” ஷிவானி பதிலுக்கு கேட்க, அவளது வாயைப் பிடுங்குவதற்காகவே பேச்சைத் தொடர்ந்தான்.

“எனக்கு செஞ்சு கொடுக்கத் தான்...” புகழின் பதிலில், ஷிவானி அமைதியாக இருக்க, புகழ் மீண்டும், “எனக்கு செய்து கொடுக்க முடியாதா? செய்துத் தர மாட்டியா?” என்று கேட்டான்.

“அதுக்கெல்லாம் இனி டைம் இருக்குமான்னு தெரியாது... நான் பக்கத்துல இருக்கற ஸ்கூல்ல வேலைக்கு போகலாம்ன்னு இருக்கேன்... வீட்ல இருந்து போர் அடிக்குது.. எப்படியும் நீங்க கடைக்கு காலையில போனா ராத்திரி தானே வர்ரீங்க. நான் மட்டும் வீட்ல கொட்ட கொட்ட வேடிக்கைப் பார்த்துக்கிட்டு என்ன செய்யறது? தேவை இல்லாத நினைப்பு எல்லாம் தான் வருது..” படபடவென்று ஷிவானி பேச, தான் கடை கடை என்று செல்வது அவளை பெரிதும் பாதித்திருக்கிறது என்பதை புகழ் புரிந்துக் கொண்டு, அமைதியாக அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“எப்போல இருந்து போகலாம்ன்னு முடிவு செய்திருக்க?” புகழ் கேட்க,

“போகணும்... இன்னும் அம்மாகிட்ட கேட்கல... அன்னைக்கு சும்மா பக்கத்து வீட்ல பேசிட்டு இருந்த போது, அந்த அக்கா டீச்சர் வேணும்ன்னு கேட்டுட்டு இருந்தாங்க.. அது தான் போகலாம்ன்னு ஒரு யோசனை.. ரெஸ்யூம் கூட ரெடி பண்ணிட்டேன்..” எங்கோ பார்த்துக்கொண்டு அவள் சொன்ன பதிலைக் கேட்டவன், மனதினில் மீண்டும் அடுத்த சவுக்கடி.

தன்னிடம் ‘போகவா’ என்று கேட்கக் கூட அவள் தயாராக இல்லை என்பதே பெரும் அதிர்ச்சியாக இருக்க, அதை வாய் விட்டும் கேட்டான்.

“உங்களுக்கு நான் பேசறதை நின்னு கேட்க நேரம் எல்லாம் இருக்கா என்ன?” கேள்வியாக நிறுத்தியவள்.... புகழ் பதில் ஏதும் சொல்லாமல் அவளைப் பார்த்துக்கொண்டு இருக்கவும்...

“நீங்க சாப்பிட வர நேரம் சொல்லலாம்ன்னு இருந்தேன்.. போன்ல பேசலாம்ன்னாலும்.. உங்க போன்ல கஸ்டமரைத் தவிர யாராவது கூப்பிடலாமா என்னன்னு தெரியல.. கூப்பிட்டாலும் பதில் வராதே.. அது தான்...” அடுத்த சவுக்கடியை ஷிவானி நாவினால் வீச, அவளுக்கும் இன்று ஏதோ கோபமாக பேச வேண்டும் போல இருப்பதை நினைத்து, புகழ் சந்தோஷப்படுவதா, தன்னை நினைத்தே வருந்திக் கொள்வதா, என்று புரியாமல் தடுமாறி, அவளது கையை எடுத்து தனது கைக்குள் வைத்துக் கொள்ள முயல, ஷிவானி தனது கையை உருவிக் கொண்டாள்.

“நான் போகத் தான் போறேன்... உங்களோட எந்த சமாதானத்தையும் நான் கேட்க விரும்பல..” ஷிவானி வெடுக்கென்று சொல்ல, ‘வணி’ புகழ் அதிர்ந்து கூவினான்.

“ஆமா... வணியாம் வணி... அந்த பேரை நீங்க கூப்பிட்டு எத்தனை காலம் ஆச்சுன்னு உங்களுக்குத் தெரியுமா? உங்களுக்கு காரியம் ஆகணும்ன்னா மட்டும் இந்த பேரைக் கூப்பிட வேண்டியது. நான் வேலைக்கு போகத் தான் போறேன். இனிமேலும் நீங்க எப்போ வருவீங்கன்னு பார்த்து, காத்துக்கிட்டு இருக்க முடியாது... சலிச்சு போச்சு இனியன்... ரொம்ப ரொம்ப சலிச்சு போச்சு... என்னடா வாழ்க்கை இதுன்னு எனக்கே சலிப்பா தான் இருக்கு.. ஏன் எனக்கு மட்டும் பெண்டாட்டியை முதன்மையா நேசிக்கிற கணவன் இல்லன்னு சலிப்பா தான் இருக்கு..

என்ன செய்தா, உங்களுக்கு என்னோட முக்கியத்துவம் தெரியும்ன்னு நானும் யோசிச்சு யோசிச்சு பார்க்கறேன்.. எனக்கு ஒண்ணுமே புரியல... உங்களுக்கு கடை தானே அவ்வளவு முக்கியம். அப்போ நான் வேலைக்கு போனா என்ன? எங்க இருந்தா என்ன?” கோபமாக அவள் கத்த, அவளது குரலைக் கேட்ட பாஸ்கரும், சசியும் பதறிக் கொண்டு அவளது அறைக்கு ஓடி வந்தனர்.

இதுவரை ஷிவானி கலகலத்து பேசி இருக்கிறாள் தான்.. அப்பொழுது கூட இந்த அளவிற்கு அவளது குரல் ஓங்கி ஒலித்தது கிடையாது. இப்பொழுது அவள் கோபமாக கத்தவும், அவளைப் பெற்றவர்கள் பயத்துடன் ஓடி வர, ஷிவானி எங்கோ பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்க, அவர்களது கலக்கம் புரிந்த புகழ், அவர்கள் அருகில் சென்று,

“ஷிவா... நம்ம பழைய ஷிவாவாத் தான் ரூம்ல இருந்து வெளிய வருவா... எங்களுக்குள்ள சண்டை எதுவுமே இல்ல.. எங்களுக்குள்ள காதல் நிறைய இருக்கு... ஆனா.. புரிதல் போதல... அது தான் பிரச்சனையே... இத்தனை நாளா புரியாம இருந்தது இப்போ புரிஞ்சிடுச்சு... நான் சரி பண்ணிடறேன்..” அவர்கள் இருவரையும் பார்த்து சொன்ன புகழ், அவர்கள் சென்றதும், கதவை அடைத்துவிட்டு, ஷிவானியின் அருகே வந்து தரையில் அமர்ந்துக் கொண்டான்.

என்ன பேசுவது? எப்படித் தொடங்குவது என்று புரியாமல் தடுமாற்றத்துடன் ஒரு சில நிமிடங்களைக் கடத்தியவன், தன்னுடைய அறியாமைத் தவறை திருத்தியே ஆக வேண்டும் என்ற முடிவுடன், தொண்டையைக் கனைக்க, அப்பொழுதும் ஷிவானி அமைதியாக அமர்ந்திருக்கவும், கையைத் தொடச் சென்றவன், அவள் இழுத்துக் கொள்வாளோ என்ற தயக்கத்துடன், அந்த அறையைச் சுற்றி பார்வையை ஓட்டியவனின் கண்களில் அவன் வாங்கி வந்திருந்த டெட்டிபியர் கவர் பட்டது. சைடு டேபிளின் மீது வைத்திருந்த அந்தக் கவரை எடுத்தவன், அதை அவள் முன்பு நீட்டிக் கொண்டு அமர்ந்தான்.

சில நிமிடங்கள் வரை தனது பார்வையை அதில் பதிக்காமல் பிடிவாதமாக இருந்தவள், “என் செல்லக்குட்டிக்கு என்ன வாங்கிட்டு வந்திருக்கேன்னு பார்க்க மாட்டியா?...” என்று கேட்கவும், மெதுவாக ஓரக் கண்ணால் அதைப் பார்த்தவள், இதயத்தை ஏந்திக் கொண்டு ஒரு அழகான டெட்டி இருக்கவும், நிமிர்ந்து புகழை வெற்றுப் பார்வை பார்த்தாள்.

அவளது பார்வையை கவனிக்காதவன் போல், “இது என்னோட செல்ல வணியாம்... உன் கையில இருக்கற ஹார்ட் இனியனோடதாம்... அதை கையில வச்சிக்கறதா... தூக்கிப் போடறதான்னு நீ தான் சொல்லணும்.. ஆனா... இனியன் பாவமில்ல...” டெட்டியிடம் அவன் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தவள், உச்சுக்கொட்டிவிட்டு திரும்ப நினைக்க, பட்டென்று அவன் பேசியது ஷிவானிக்கு உறைத்தது.

“என்ன? என்ன சொன்னீங்க?” தன் காதுகளில் கேட்டது சரிதானா என்பதை உறுதி செய்துக் கொள்ள ஷிவானி கேட்கவும்,

“அது வந்து வணி... இந்த டெட்டி என்னோட செல்ல வணியாம்.. உனக்குத் தெரியுமா?” என்று கேட்டுக் கொண்டே அவள் அருகில் பெட்டின் மீது ஏறி அமர்ந்தான்.

அதைக் கேட்டவளின் கொதிப்பு பல மடங்கு உயர, “என்ன? டாக்டர் சொன்னதையும், எங்க அம்மா சொன்னதையும் வச்சிட்டு ரொம்ப யோசிச்சு, விக்ரம் அண்ணா கிட்ட ஐடியா கேட்டு இதை எல்லாம் வாங்கிட்டு வந்தீங்களோ?” நக்கலாக அவள் கேட்கவும்,

“இல்லையே..” புகழ் பதில் கூற,

“உங்களுக்கா இதெல்லாம் எங்க தோணப் போகுது... இன்னும் இன்னும் கடைக்கு எப்படி கஸ்டமரை வர வைக்கலாம்... எந்த இடத்துல கடையைத் திறக்கலாம்ன்னு தானே யோசிப்பீங்க... அதைத் தவிர வேற எண்ணம் எல்லாம் வரும்ன்னு நீங்க சொன்னா, அதை நம்ப நான் என்ன கேனையா? போய் எங்க அம்மா அப்பாகிட்ட கதை சொல்லுங்க... அவங்க நம்புவாங்க...” இன்னமும் நக்கலும் கோபமும் குறையாமல் அவள் பேச, புகழ் தலைகுனிந்து அமர்ந்திருந்தான்.

“இவருக்கு மட்டும் தான் எப்போப் பாரு கடை நினைப்பு... இவரோட பார்ட்னர்ஸ்ன்னு கூட இருக்கறவங்க எல்லாம் நார்மலா திங்க் பண்ணிக்கிட்டு சந்தோஷமா தான் இருக்காங்க.. இவருக்கு மட்டும் தான், கடையே உலகம்... பெண்டாட்டி எல்லாம் ராத்திரிக்கு மட்டும் தான்..” முணுமுணுத்துக் கொண்டே அமர்ந்திருந்தவளின் சொற்கள் அனைத்தும் புகழை குத்திக் கிழித்தது.

அந்த வலியை மென்று விழுங்க நினைத்து, அவளது முணுமுணுப்பிற்கு பதில் சொல்லும் விதமாக, “அவங்களோட லைஃப்ல கல்லும் முள்ளுமான பாதை இல்லையே... ஆண்டவன் அருளால அதெல்லாம் அவங்களுக்கு வேண்டாம்..” என்று பதில் கூற, ஷிவானி சட்டென்று நிமிர்ந்துப் பார்த்தாள்.

எங்கோ பார்வை பதிந்திருக்க அந்த பார்வை மொத்தமும் வலிகள் நிறைந்து இருக்க, “உனக்கு தெரியுமா வணி.. இந்தத் தொழிலை ஆரம்பிக்க, எனக்கும் சேர்த்து அவங்க தான் முதல் போட்டாங்க. அந்த முதல் போடக் கூட வக்கில்லாம தான் நான் இருந்தேன். எங்க அப்பா விட்டுட்டுப் போன கடனுக்கே.. நான் காலேஜ் படிப்போட, செல்ஃப் இண்டரெஸ்ட் எடுத்து கத்துக்கிட்ட அந்த ஹார்ட்வேர் சர்வீஸ் தான் உதவிச்சு. ஒரு கம்ப்யூட்டர் கடையில வேலைக்குச் சேர்ந்து, அதிலே கொஞ்சமா வந்த சம்பளத்தையும் கடன் அடைக்கத் தான் கொடுத்தேன்.

அப்பா குடிச்சிட்டு போய் ஆக்சிடென்ட் ஆனதுனால, அவரோட பென்ஷன், இன்சூரன்ஸ் எல்லாம் வாங்கறதுக்குள்ளேயே நொந்து போயிட்டேன்... அப்பறம் விக்ரமோட அப்பா உதவியோட அதை எல்லாம் வாங்கி, கடனை அடைச்சிட்டு நிமிர்ந்தா, இவங்க பிசினஸ் பண்ற பிளானைச் சொன்னாங்க... நான் தான் இந்த மாதிரி பிசினஸ் பத்தி சொல்லி அவங்களை யோசிக்கச் சொன்னேன்... ஐடியா மட்டும் தான் என்னது... மீதி எல்லாம் அவங்க தான் செய்தாங்க..

மொதல்ல வொர்க்கிங் பார்ட்னரா சேரறேன்னு சொன்னேன்.. நாலு பேரும் கேட்காம என்னோட பங்கையும் அவங்களே போட்டு இந்த தொழிலைத் தொடங்கினாங்க. அவங்க எனக்கு போட்ட மொதலை நான் உழைச்சு திருப்பித் தர வேண்டாமா சொல்லு... என் மேல எவ்வளவு நம்பிக்கை இருந்தா அவங்க எனக்குக் கடன் கொடுத்ததுக்கு ஒரு கையெழுத்து கூட வாங்காம செய்திருப்பாங்க... என்னோட லாபத்துல வந்த பைசாவை கொஞ்சம் கொஞ்சமா கொடுத்து கடனை அடைச்சேன்... இதுக்கு நடுவுல கல்யாண வயசுல அக்கா... அவங்க கல்யாணம்.... அம்மாவோட நிலைமை எல்லாம் இருக்கு” என்று தனது முள் பாதையை விவரித்தவன், அமைதியாக சிறிது நேரம், அந்த நேரத்து வலிகளை மென்று விழுங்கிக் கொண்டிருந்தான்.

“தப்பு தான்... நான் ஒரு சாதாரண மனுஷனா.. ஒரு சினிமாவுக்கு போறது, ஹோட்டல்ல சாப்பிடறது, பொண்ணுங்களை சைட் அடிக்கிறதுன்னு இல்லாம போனது தப்புத் தான். பசங்க எல்லாம் அதைச் செய்யும் போது எனக்கும் ஆசையா தான் இருக்கும்... ஆனா என்னோட சூழ்நிலை அப்படி இல்லையே. அந்த நேரத்து உணர்வுகளை எல்லாம், குடும்பம், முன்னேற்றம், கடன்ன்னு நினைச்சு நினைச்சே மூட்டைக் கட்டி வைச்சுட்டதனால, எல்லாமே மரத்துப் போச்சுன்னு நினைக்கிறேன்...

அதுக்காக உன் மேல காதல் இல்லன்னு அர்த்தம் இல்ல சிவா.. உன்னை நான், இது எல்லாத்தையும் விட அதிகமா விரும்பறேன்... எனக்கும் உணர்வுகள் இருக்குன்னு புரிய வச்சவ நீ தான்... நான் வாய்விட்டு சொல்லலையே தவிர என்னோட உயிரே நீதான் வணி... அது உனக்குத் தெரியுமா? நம்ம புனிதமான தாம்பத்யத்தை இப்படி கொச்சை படுத்திட்டியே..” வலியுடன் புகழ் கேட்டு நிறுத்திவிட்டு, அவளது சிஸ்டமை இயக்க, ஷிவானி கண்களில் கண்ணீருடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“அய்யோ கடவுளே... அவரைப் பத்தி தெரிஞ்சும், கோபத்துல என்ன வார்த்தை எல்லாம் பேசிட்டோன்.. எனக்கு அறிவே இல்ல... அவர் எவ்வளவு மனசு வருந்திப் பேசறார்?” என்று நினைத்துக் கொண்டவள், அவனது அருகில் சென்று நிற்க, சிஸ்டமை இயக்கியவன், அவளது புகைப்படங்கள் அடங்கிய போல்டரை எந்த தேடலும் இல்லாமல், தன்னுடைய சிஸ்டம் போல ஓபன் செய்ய, ஷிவானி ஆச்சரியத்தில் மெல்ல அவன் அருகே வர,

“நான் ஒவ்வொரு தடவ இந்த சிஸ்டமை ரிப்பேர் செய்ய வரும்போதும்... நீ ஸ்க்ரீன் சேவரா வச்சிருக்கற போட்டோசையும்... டெஸ்க்டாப்ல வச்சிருக்கற உன்னோட போட்டோவையும் பார்த்து ரசிக்காம போனது இல்ல தெரியுமா? இதுவும் நான் பொய் சொல்றேன்னு நினைச்சா... நம்ம கல்யாணத்துக்கு முன்னால ஒரு தடவ உங்க அப்பா உன்னோட சிஸ்டம் ஏதோ ஹேங் ஆகிட்டே இருக்குன்னு போன் செய்து சொன்னார் நியாபகம் இருக்கா?

அன்னைக்கு நான், உன்னைப் பார்க்கற ஆவல்ல உன்னோட போட்டோசைத் தேடி, நீ வச்சிருந்த போட்டோசைப் பார்த்தேன்... அதுல நம்ம நிச்சயதார்த்த போட்டோ தலைகீழா இருந்தது... அதைப் பார்த்துட்டு நான் மாத்தி.. சேவ் ஆன டேட் இருக்கும் பாரு..” என்று தேதியைச் சொல்ல, ஷிவானி அவனை அதிர்ச்சியும் ஆச்சரியமுமாகப் பார்த்தாள்.

“அன்னைக்கு நான் வந்த அப்போ நீ ரெட் கலர்ல கிரீன் கலர் பூ போட்டு இருந்த சுடிதார் போட்டுட்டு இருந்த... தலையை கூட ஒழுங்கா சீவாம, வெறும் கிளிப்பை மட்டும் போட்டுக்கிட்டு, அப்போத் தான் தூங்கி எழுந்தவ போல, அதோ அந்த சோபாவுல உட்கார்ந்து இருந்த... உனக்கு நியாபகம் இருக்கா?” என்று அவளது அறைக்கு எதிரில் இருந்த சோபாவைக் காட்டியவன், அவளது நிலையைக் கண்டு கொள்ளாமல்,

“அது கூட நான் ஏதோ பார்த்ததை வச்சு சொல்றேன்னு சொல்லலாம்... இதோ இந்த போட்டோ, நீ பெங்களூர் டூர் போயிட்டு வந்த போது எடுத்தது... இதோ... இது.. உங்க அம்மா பொண்ணு பார்க்க கேட்ட போது, நீ வேணும்னே போஸ் கொடுத்தது...” என்று ஒவ்வொரு போட்டோவாக அவன் விவரித்துக் கொண்டிருக்க, ஷிவானி பேச்சிழந்து நின்றாள்.

“உங்களுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?” என்று அவள் மெல்லக் கேட்க,

“நான் இங்க வந்ததும், உன்னோட குரலைக் கேட்கத் தான் என் காது காத்துக்கிட்டு இருக்கும்... அப்படி தெரிஞ்சிக்கிட்டது தான் எல்லாம்...” என்றவன் தொடர்ந்து,

“இப்போவாவது நம்பறியா? என் மனசுல நீ தான் நிறைஞ்சு இருக்கன்னு.. எனக்கு உன்னை விட்டா யாரு சிவா இருக்கா? நீயும் இப்படி இருந்தா, நான் என்ன தான் செய்வேன்.. எனக்குத் தெரியல.. நீ என்னைப் புரிஞ்சிட்டு தான் சந்தோஷமா இருக்கன்னு நினைச்ச என் முட்டாள்தனத்தை என்னன்னு சொல்லறது? இன்னைக்கு யோசிச்சா தான், நான் முட்டாளாவே இருந்திருக்கேன்னு தோணுது. நான்... எனக்கு எப்படி வெளிய வரதுன்னு தெரியல சிவா.. உன் கூட வம்பு பண்ணத் தோணும்.. சரிக்கு சரி அரட்டை அடிச்சு உன்னை அழ விட்டு, அப்பறம் கொஞ்சணும்னு தோணும்... உன்கிட்ட பல முறை என் காதலை சொல்லத் தோணும்... ஆனா... இதுக்கும் மேல அதெல்லாம் வாய்விட்டு சொல்ல வரல சிவா... நான் என்ன செய்யட்டும்?” தொண்டைக்குழியில் கையை அழுத்திக் கொண்டு பரிதாபமாக கேட்டவனைப் பார்த்து அருகில் நின்றிருந்த ஷிவானி, அவனது தலையை தனது வயிற்றோடு அழுத்திக் கொண்டாள்.

“பாப்பாவுக்கு வலிக்கும்...” என்றபடி நகர்ந்தவனை மீண்டும் இழுத்து வயிற்றோடு அணைத்துக் கொண்டவள், அவனது தலையைக் கோதிக் கொடுக்க,

“நான் எப்பவும் இங்க வீட்டுக்கு வர நேரத்தை எல்லாம் யோசிச்சு பாரு.. ஒண்ணு நீ காலேஜ் கிளம்பற நேரமா இருக்கும்... இல்ல காலேஜ்ல இருந்து வர நேரமா இருக்கும்... அப்போத் தான் உன்னைப் பார்க்க முடியும்ன்னு அந்த நேரமா பார்த்து வருவேன். உங்க அப்பா கல்யாணத்துக்கு கேட்ட போது கூட, எனக்குள்ள நான் உனக்கு பொருத்தமா இருப்பேனான்னு பயம் தான்.. ஆனாலும் உன் மேல இருந்த ஆசைல சரின்னு சொல்லி, வீட்ல பேசச் சொன்னேன்... அம்மா கேட்ட போது கூட, நான் பார்க்கற முதல் பெண்ணையே தான் நான் கல்யாணம் செய்துப்பேன்னு, மறைமுகமா உன்னைத் தான் கல்யாணம் செய்துப்பேன்னு சொன்னேன்..” தனது காதலை புரிய வைத்துவிடும் நோக்கத்தோடு புகழ் பேசிக் கொண்டே போக, ஷிவானியின் இதழ்கள், அவனது இதழ்களை மூடியது.

“வெரி வெரி ஸாரி.... உங்கள பத்தி தெரிஞ்சும் உங்கள நோக வச்சுட்டேன் இனியன்.. என்ன என்னமோ ஏக்கம்... தனிமை எல்லாம் சேர்ந்து, உங்கள தப்பா நினைக்க வச்சுருச்சு... நீங்க என் மேல இவ்வளோ காதலா இருப்பீங்கன்னு எனக்கு தெரியாம போச்சு.. அதைப் புரிஞ்சிக்காம, மத்தவங்களோட வாழ்க்கையோட அதை கம்பேர் பண்ணி... இப்படி உங்களையும் வருத்திட்டேன் பாருங்க...” என்று வருத்தவும்,

“அதுக்கு எதுக்கு வணி இவளோ ஸாரி சொல்லற... நானும் வேலை வேலைன்னு... உன்னோட டைம் ஸ்பென்ட் பண்ணாம தான போனேன்.... நான் என்னோட காதலை உனக்கு புரிய வச்சு இருக்கணும்.. அதையும் செய்யல” என்று தன் பங்கிற்கு அவனும் வருந்தவும்,

“போதும் நம்ம சாரி கேட்டது” என்று கூறியவள் அவனது இதழ்களை தனது இதழ் கொண்டு மூட, புகழின் கைகள் அவளை மென்மையாக அணைத்துக் கொண்டது.

இருவரும் ஒருவரோடு ஒருவர் கரைந்து, இத்தனை நாள் பிரிவிற்கு ஈடு செய்யது முடித்து சில நிமிடங்களில், அவளிடம் இருந்து விலகியவன், “உனக்கு மூச்சு முட்டும்..” என்று சொல்ல,

“அப்படியே ஒண்ணும் தராத மாதிரி தான் பேச்சு... சின்னப் பிள்ள... போய்யா...” என்று குறும்புடன் பழிப்புக் காட்டியவளின் இதழ்கள் இப்பொழுது புகழின் வசம் சிக்கித் தவித்தது.

அவளது நிலை கருதி அவளை விடுவித்தவன், “உனக்கு என் மேல இருந்த கோபம் போச்சா?” பரிதாபமாகக் கேட்க,

“என் புருஷன் இவ்வளவு பேசினதே பெருசாச்சே... ஆண்டவா... அதுவும் கல்யாணம் பேசறதுக்கு முன்னயே என்னை இப்படி சைட் அடிச்சிருக்கேன்னு ஆதார பூர்வமா நிரூபிச்சதுனால வேற வழி இல்லாம கோபத்தை விட்டுட்டேன்... என்ன செய்யறது? எனக்கு இப்போ சந்தோஷத்துல குதிக்கணும் போல இருக்கு...” ஷிவானி சொல்லவும்,

“குதிச்சு கிதிச்சு வச்சிடாதே தாயே... எனக்கு உன்னை ரொம்ப ரொம்பப் பிடிக்கும் வணி.. பிடிக்காம வெறும் ஆசைக்கு உன்னை தொட்டேன்னு எப்படி நினைச்ச? என்னோட ஒவ்வொரு செயல்லையும் உன் மேல நான் காட்டற அக்கறையும் காதலும் புரியலையா?” ஷிவானியின் கன்னத்தை நிமிர்த்தி புகழ் ஆதங்கத்துடன் கேட்க, ஷிவானி அவனைப் பார்த்து விழித்துக் கொண்டு நின்றாள்.

அவளைத் தனது மடியில் தாங்கியவன், “உனக்கு என்னைப் பிடிக்கும் தானே...” என்று கேட்க, ஷிவானி அவனை அணைத்துக் கொண்டு,

“ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.. உங்க கூடவே ரொம்ப நேரம் இருக்கணும்னு நிறைய கனவு கண்டு இருக்கேன்.. உங்க கையைப் பிடிச்சிக்கிட்டு, பார்க், பீச், சினிமான்னு சுத்தி வரணும்னு நிறைய ஆசை... இந்த இந்த படம் எல்லாம் உங்க கூட போகணும்னு பெரிய லிஸ்ட்டே போட்டு வச்சிருந்தேன்... உங்க கூட கதை பேசணும்னு மனசுல நிறைய கதைகளை யோசிச்சு வச்சிருந்தேன்... அதெல்லாம் இல்லை... கடை தான் உங்களுக்கு முக்கியம்ன்னு ஆனதும், முதல்ல எல்லாம் டேக் இட் ஈசியா எடுத்துட்டு போன என்னால, அத்தையும் ஊருக்கு போகவும், சுத்தமா அப்படி இருக்க முடியல...

கூடவே அந்த ரஞ்சிதா வேற அவ புருஷன் புராணத்தை பாடிக்கிட்டு இருந்தாளா... எனக்கு ரொம்ப ஒருமாதிரி ஆகிடுச்சு.. நான் என்ன செய்யட்டும்.. நான் ஆசைப்பட்டது நடக்க கொடுத்து வைக்கலையே..” தன்னை நினைத்தே வருந்திக் கொண்டவள், பின்பு புகழை வம்புக்கு இழுக்க, புகழ் புன்னகையுடன் அவளை அணைத்துக் கொண்டான்.

“இந்த ஜென்மத்துல உனக்கு வேற வழியே இல்ல... நான் யாருக்கும் உன்னை கொடுக்க மாட்டேன்... யாரும் உன்னை பார்க்கவும் விட மாட்டேன்..” என்று சொன்னதோடு அவளை இறுகத் தழுவிக் கொள்ள, ஷிவானி அவனோடு ஒன்றிக் கொண்டாள்.

ஆசாபாசமே இல்லாமல் மரம் போல இருக்கிறான் என்று தான் நினைத்துக் கொண்டிருக்க, மௌனமும் ஒரு மொழி தான்... அந்த மொழியிலும் காதல் சொல்ல முடியும் என்பதை உணராமல் போன தனது மடத்தனத்தையும், கனவும் வாழ்க்கையும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று விரும்பி, இரண்டு மாதங்களாக தன்னையும் வருத்திக் கொண்டு, மற்றவர்களையும் கவலைக்குள்ளாக்கிய தனது அறிவை எண்ணி ஷிவானி நொந்துக் கொண்டிருக்க, புகழ் தனது மொபைலை எடுத்து அவள் கையில் திணிக்க அவனிடம் இருந்து விலகி அதைப் பார்த்தவள், அதில் அவளை பெண் பார்க்க எடுத்த ஸ்பெஷல் போட்டோ இருக்க,

“அய்யே... இதையா ஸ்க்ரீன் சேவரா வச்சு இருக்கீங்க?” ஷிவானி முகத்தை சுளிக்க,

“எனக்கு இந்தப் பெண்ணை ரொம்ப பிடிச்சது... அதான் சுட்டுட்டேன்...” என்றவன்,

“உன்னை, அந்த போட்டோவைப் பார்க்க நான் கொடுக்கல... உள்ளே மெசேஜ்ஜைத் திறந்துப் பாரு... ஒரு சர்ப்ரைஸ் இருக்கு...” புகழ் சொல்லவும், திறந்துப் பார்த்தவள், அதில் அவன் சினிமாவிற்கு இரண்டு டிக்கெட்டுகளை புக் செய்திருப்பதைப் பார்த்து, அவனது முகமெங்கும் முத்திரைப் பதிக்க, புகழ் அதை தொடரத் தொடங்க,

“நிஜமா நாம போகப் போறோமா?” ஷிவானி அவனது முத்தங்களுக்கிடையே கேட்க,

“ஆமாடா செல்லக்குட்டி... சீக்கிரம் ரெடியாகு... நாம போயிட்டு வரலாம்...” என்று சொன்னவன், அவளை நகர்த்திவிட்டு முகம் கழுவச் செல்ல, அவசரமாக ஷிவானி அவனது போனை ஆராய்ந்தாள்.

அவனது போட்டோ ஆல்பம் முழுவதும் அவளது சிஸ்டமில் இருந்த அவளது புகைப்படங்களும், அவள் உறங்கும் போது, இரண்டு விரல்களை வாயில் வைத்துத் தூங்குவதையும் படம் பிடித்திருந்தான்,

“கள்ளன்... தூங்கற அப்போ என்ன என்ன திருட்டு வேலை செய்திருக்கார்..” என்று சந்தோஷச் சிணுங்கலுடன் எண்ணி சிரித்துக் கொண்டவள், கதவைத் திறந்து,

“சசி... எனக்கு உன்னோட சமையல் ராத்திரிக்கு வேண்டாம்... நானும் அவரும் நல்ல சாப்பாடு சாப்பிடப் போறோம்... அப்படியே நாளைக்கு நான் எங்க வீட்டுக்கு கிளம்பப் போறேன்... இனிமே என்னைப் பார்க்கணும்ன்னா அங்க வந்துப் பார்த்துக்கோ... பாவம் அவர்..” என்று ஷிவானி சத்தமாகச் சொல்ல, புகழ் புன்னகைத்துக் கொண்டே,

“போய் கிளம்பு...” என்று அவளை மெதுவாக உள்ளே நகர்த்திவிட்டு, ஹாலிற்குச் சென்று பாஸ்கரின் அருகில் அமர்ந்து, அவர் கவலையாகப் பார்ப்பதை புரிந்துக் கொண்டு, கண்களை மூடித் திறந்தான்.

அதற்கு மேல் அவர்களுக்கு இடையில் என்ன நடந்தது என்று துருவாமல் நாகரீகமாக விட்டவர் புகழைப் பார்க்க, “அவ இங்கயே இருக்கட்டும் அத்தை... உங்களுக்கு ஒண்ணும் சிரமம் இல்லையே... அங்கேன்னா தனியா இருக்கணும்... நானும் ரெண்டு நாளைக்கு ஒரு தடவ போல நைட் இங்கத் தங்கறேன்..” புகழ் சொல்லவும், சசி மகிழ்ச்சியில் தலையசைக்க, அவரின் கண்கள் நிறைந்திருந்தது.

இத்தனை நாட்களாக சுறுசுறுப்பு, என்றால் கிலோ எண்ண விலை என்று இருந்தவள் .. இன்று, “சீக்கிரம் இனியன்... டைம் ஆச்சு...” என்று பரபரக்க,

“மெல்ல வாயேன்.. படத்துக்கு இன்னும் நிறைய டைம் இருக்கு...” என்று சொன்னவனின் கையைப் பிடித்து நிறுத்திய ஷிவானி, “அந்த டெட்டியை எடுத்துட்டு வந்து கார்ல வைங்க...” என்று சொல்லவும், புகழ் ஓடிச் சென்று அதை எடுத்துக் கொண்டு வந்து அவளது கையில் வைக்க, ஷிவானி அதை கண்ணாடிக்கருகே வைத்துவிட்டு புகழின் தோள் சாய்ந்து கண்ணடிக்க, புகழ் நிம்மதியுடன் அவளைப் பார்த்துப் புன்னகைத்தான்.

சினிமாவிற்கு சென்றுவிட்டு, ஹோட்டலில் உணவை முடித்த வேளையில், “நம்ம வீட்டுக்கு போய் ரொம்ப நாளாச்சு இனியன்... இன்னைக்கு நைட் அங்க ஸ்டே பண்ணிக்கலாம்... நாளைக்கு காலையில நாம அம்மா வீட்டுக்கு வந்துடலாம்...” ஷிவானி சொல்லவும், ‘சரியென்று’ தலையசைத்தவன்,

“உங்க அம்மாவுக்கு போன் செய்து சொல்லிடு... அப்பறம் அவங்க ரொம்ப கவலைப்படப் போறாங்க..” என்றவன், ஏதோ தோன்ற,

“உன்னோட நைட் மெடிசன்ஸ் சாப்பிடணும்... பால் குடிக்கணும்.. அங்க ஒண்ணுமே இல்லையே...” புகழ் கவலையாகச் சொல்ல, அதைக் கேட்ட ஷிவானி,

“சரி அங்க போய் எல்லாம் முடிச்சிட்டு போகலாம்...” எனவும்,

“அலையணுமா சிவா?” கவலையாக அவன் கேட்கவும், ‘ஆமா...’ என்பது போல தலையசைத்தவள், அப்படியே செய்து முடித்து, புகழுடன் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.

கதவைத் திறந்ததும், கைகளை விரித்து அவனைத் தூக்கிக் கொள்ளச் சொல்ல, மென்மையாகத் தூக்கி அதே மென்மையுடன் பெட்டில் கிடத்தியவன், அவளை விட்டு விலக, ஷிவானி அவனைத் தன்னோடு இழுத்துக் கொண்டாள்.

அவனது சட்டையை இழுத்து, அவனோடு முகத்தோடு முகம் உரசியவளின் இதழ்களில் அழுத்தமாக முத்தம் பதித்தவனை, ஷிவானியின் அணைப்பு அவளுள் புதையைத் தூண்டியது. அவளது மேனியில் இதழ்களை உறவாடவிட, சிவானி கண்களை மூடிக் கிடக்க, அவளது வயிற்றின் அருகில் வந்ததும், அவளது நிலைமையை நினைவு வரவும்,

“வேண்டாம் சிவா... இதுக்கும் மேல நான் ரொம்ப நெருக்கினா பாப்பாவுக்கு ஏதாவது ஆகிடப் போகுது...” என்று கூறியவன், உடனே விலகிப் படுக்க, “அடக்கடவுளே இதுக்குத்தான் தள்ளி தள்ளி போனிங்களா? இதையும் தப்பாவே எடுத்துக்கிட்டேனா?” என்று மனதில் வருந்தி,

ஆனால் வெளியே அவனிடம், "அதெல்லாம் டாக்டர் அட்வைஸோட, ரொம்ப மென்மையா நடந்துகிட்டா ஒரு ப்ராப்ளமும் இருக்காது, என் செல்ல இனியா " என்று அவன் மூக்கில் உரசினாள்.

ஒரு புன்னகையுடன், ஷிவானியின் தலையை தனது கையில் வைத்துக் கொண்டு, அவளை அணைத்துக் கொண்ட சிறிது நேரத்திலேயே புகழ் நன்றாக குறட்டையுடன் உறங்கத் துவங்கினான்.

புகழ் உறங்கினாலும், ஷிவானிக்கு உறக்கம் வர மறுத்தது. அவனது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவள், அவனது நெற்றியில் இதழ் ஒற்றிவிட்டு, அந்த அறையை நோக்கி பார்வையை ஓட்ட, பெட்டின் அருகில் இருந்த அவர்களது புகைப்பட ஆல்பம் கண்ணில் பட, அவனும் தன்னை அங்கே விட்டுவிட்டு நிம்மதியாக இல்லை என்பதை உணர்ந்து நிம்மதி கொண்டவள், புகழ் அவள் மீது வைத்திருக்கும் அன்பை எண்ணி எண்ணி பூரித்து, அந்த பூரிப்புடனே கண்ணுறங்கினாள்.

காலையில் எழுந்தது முதலே புகழ் ஷிவானியை விரட்டிக் கொண்டிருக்க, “ஹையடா... அந்த காபியைக் குடிக்க அங்க போய் தான் ஆகணுமா என்ன? நான் இங்கேயே இருக்கேனே...” ஷிவானி கெஞ்சிக் கொண்டிருக்க,

“அம்மா தாயே... போதும்... கிளம்பு...” ஒரு ஒரு சொற்களாக சொன்ன புகழ், கிளம்புவதற்குத் தேவையானவற்றை எடுக்கத் துவங்கினான்.

“உங்க பிடிவாதம் இருக்கே..” என்று முணுமுணுத்துக் கொண்டே அவள் வாயிலுக்கு வர, அங்கு ரஞ்சிதா, அவளைப் பார்ப்பதற்காக காத்திருந்தாள்.

“சிவா... எப்படி இருக்க?” என்று அவசரமாகக் கேட்டவள், ஷிவானியின் பதிலுக்காகக் கூட காத்திருக்காமல்,

“உங்க கார்ல இருக்கற டெட்டிபியர் எங்க வாங்கினது? ரொம்ப அழகா இருக்கு... அவர் தான் எந்தக் கடைன்னு கேட்கச் சொன்னார்...” என்று கேட்க,

“அது இனியன் தான் வாங்கிட்டு வந்தாங்க.. இதோ வரார்.. அவர்கிட்டேயே கேட்டுக்கோங்க... நான் அம்மா வீட்டுக்கு கிளம்பறேன்... அங்க போய் தான் காபி குடிக்கணும்...” என்று அவளிடம் இருந்து விடைப்பெற்றவள், புகழ் தயாராக வைத்திருந்த காரில் ஏறி அமர்ந்தாள்.

வீட்டைப் பூட்டிக் கொண்டு வந்த புகழ், ரஞ்சிதா நிற்பதைப் பார்த்துவிட்டு அவளைக் கடந்தவன், காரின் அருகே சென்று ஏதோ யோசனையுடன் நிற்க... “சீக்கிரம் வாங்க... எனக்கு தூக்கம் வருது... நான் போய் தூங்கணும்...” ஷிவானி செல்லம் கொண்டாடத் துவங்கினாள்.

“இப்போ தானே எழுந்த... அதுக்குள்ள தூக்கமா... ஆனாலும் உன் அலும்பு தாங்கலை வணி... இன்னைக்கு நீ போட்டு இருக்கற லிஸ்ட் ரொம்ப ஓவர்.. ஷாப்பிங் போக நேரத்தைப் பார்த்திருக்காப் பாரு” புகழ் அவளை செல்லமாக விரட்ட,

“ஆமா.. உங்க குட்டி தான் என்னைத் தூங்க சொல்றா... இப்போ கூட அவ தான் ஷாப்பிங் போகணும்னு சொல்றா இனியன்... நீங்க உங்க செல்ல குட்டியை கூட்டிட்டு போக மாட்டீங்களா?” ஷிவானி பதில் பேச, புகழ் அதற்கு பதில் சொல்ல, இருவரையும் பார்த்த ரஞ்சிதாவின் முகம் ஒருமாதிரி ஆகியது.

இருவருக்கும் சண்டை என்று அவள் நினைத்துக் கொண்டிருக்க, இருவரும் கொஞ்சிக் குலாவுவதைப் பார்த்தவளின் முகம் கோணலாக மாற, அவளது முகத்தைப் பார்த்த ஷிவானி புகழிடம் கேலி செய்யத் துவங்கினாள்.

அவள் கிண்டல் செய்வதைப் பார்த்த புகழ், மீண்டும் ரஞ்சிதாவின் அருகே வந்து, “அன்பை வெளிப்படுத்த ஆயிரம் வழி இருக்கு... உண்மையான அன்புக்கு எந்த விளம்பரமும் வேண்டாம்.. உங்க வீட்டுக்காரர் உங்களுக்கு வாங்கித் தராங்கன்னா... அது உங்களோட... அதை எல்லாம் வெளிய மத்தவங்க கிட்ட சொல்லி விளம்பரப் படுத்திக்கணும்னு எந்த அவசியமும் இல்ல...” என்று சொன்னவன், காரில் ஏறி காரை எடுக்கவும், ஷிவானி அவன் தோள் மீது சாய்ந்துக் கொண்டாள்.

“என்ன ஹாப்பியா இருக்கியா?” புகழ் கேட்க,

“ஹ்ம்ம்.. ரொம்ப ரொம்ப.. என்னோட இனியன் இவ்வளவு ஆசையை என்ன மேல வச்சுருக்காருன்னா... இன்னமும் நம்ப முடியலையே... இது கனவில்ல தானே...” ஷிவானி கேட்க, பதில் எதுவும் சொல்லாமல், தோளில் இருந்த அவளது கன்னத்தை அவன் கடிக்க, ஷிவானி அலறினாள்.

“வலிக்குது பாரு... அதனால இது கனவில்ல...” கேலி செய்தவன், அவளது உச்சியில் முத்தம் வைத்து அவளை ஒருமுறை தன்னோடு சேர்த்தணைத்துக் கொண்டு,

“இனிமே என் வாயைப் பார்க்காதே... என் கண்ணைப் பாரு... அது உனக்கு நான் சொல்ல நினைக்கறதை எல்லாம் சொல்லும்... புரியுதா?” புகழ் கேட்கவும்,

“இப்போ ஒரு ட்ரை பண்ணலாம்...” ஷிவானி சொல்லவும், புகழ் ஷிவானியைப் பார்க்க, அந்தப் பார்வை புரிந்த ஷிவானி, “இதெல்லாம் கள்ளாட்டம்...” என்று நாணத்தில் முகம் சிவந்து, அவனது தோளிலேயே முகத்தைப் பதித்துக் கொள்ள, புகழ் சத்தமாக சிரிக்கத் தொடங்கினான்.

அவர்கள் வாழ்வில் என்றுமே இந்த சந்தோஷம், அழகான தென்றலாய் வீசி, இனிமையையும் சந்தோஷத்தையும் வழங்கும் என்ற மனநிறைவுடன் நாமும் வாழ்த்தி விடைபெறுவோம்...

மௌனம் ஒன்றே மொழியாக

வார்த்தைகள் எல்லாம் இல்லாமல்

இந்த காதலில் கசிந்து நிற்கும்

உன் அருகாமை ஒன்றே வரம்!!

விலகி நிற்கும் தைரியம் இல்லாமல்

உன்னை மட்டும் சுற்றிய வண்ணம்

என் எல்லா நேரங்களும்

இனிதாய் கழிய

எதிர்காலம் முழுதும் வசந்தம்

ஆக கண்ட கனவு

நனவாக தயாராகி நிற்கிறது!!
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top