• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

யாதுமாகினாய்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
Part - 21

அன்றிரவே லாப்பை எடுத்து வைத்து கதை படிக்க ஆரம்பித்தாள் அனன்யா. அவள் சோபாவில் அமர்ந்து படித்துக் கொண்டிருக்க அவள் பின்னால் சோபாவில் கை ஊன்றி நின்ற சஞ்சய் தானும் அவள் படிப்பதை வாசிக்க ஆரம்பித்தான்.

"அய்யய்யோ"

அவன் புறம் திரும்பிய அனன்யா "என்ன சஞ்சய்? என்ன? என்னாச்சு?" என்றாள் பதட்டமாக.

"இங்கிலீஷ் படம் வேணாம்... கதையே போதும் போலேயே... ச்ச இத்தன நாள் இது தெரியாமப் போச்சே..." என்றுக் கூறி சோபாவை சுற்றி வந்து அவள் அருகில் அமர்ந்தான்.

“ஷப்பா இதுல ஒண்ணும் அப்படி எதுவும் இல்ல. ஓவரா பேசாத” என்று அனன்யா கூறியதும் அவளைத் திரும்பிப் பார்த்து முறைத்தான்.

சஞ்சய் “மினி லைப்ரரி” என்று பெயர் சூட்டியிருக்கும் அறைக்குள் சென்று தான் வாங்கிக் குவித்த புத்தகங்களை அலசி ஆராய்ந்து ஒன்றை தேர்வு செய்து எடுத்து வந்து “இந்தா நீ இத படி..." என்றுக் கூறி அவன் கையில் கொடுத்தாள் அனன்யா.

அரை மணி நேரம் அதை வாசித்தவன் "ம்ம்கும்ம்... அது எப்படிடி... கதைல மட்டும் இடிச்சா, மொறச்சா, திட்டுனா, கத்துனா, கொஞ்சுனா, கெஞ்சுனா உடனே லவ் வந்துடுது?." என்று ராகம் பாடினான்.

"பின்ன? என்னப் பண்ணா லவ் வருமாம்??”

"போடி... இதெல்லாம் என்னால படிக்க முடியாது... வேணுன்னா உன் கதையவே திரும்பப் படிக்குறேன்..." என்றுக் கூறி அனன்யா எழுதிய கதைகளுள் ஒன்றை எடுத்து படிக்க ஆரம்பித்தான். அனன்யா எதுவும் கூறாமல் அமைதியாக புன்னகைத்தாள்.

நீண்ட நேரம் கண் விழிக்க முடியாமல் சஞ்சய் எழுந்து சென்று படுத்ததும் "இன்னும் ஏழு பேஜ் தான் சஞ்சய்... படிச்சுட்டு படுக்குறேன்..." என்றுக் கூறி அவன் அருகில் மெத்தையில் அமர்ந்தாள் அனன்யா.

"இன்னைக்கும் லைட்ட போட்டு வெச்சு உக்காரப் போறியா? முதல்ல இதுக்கு ஒரு முடிவுக் கட்டுறேன்" எப்பொழுதும் போல் தலை வரை போர்த்தி உறங்க ஆரம்பித்தான்.

அடுத்த நாள் மாலை வீட்டிற்கு வரும்போது ஒரு பெரிய கவரோடு வந்தான் சஞ்சய்.

"என்ன சஞ்சய்? கொஞ்ச நாளைக்கு ஒரு வாட்டி பெரிய கவர தூக்கிட்டு வர?"

"எல்லாம் உன் இம்சை தாங்காம தான்"

சஞ்சய் கவரை அவள் கையிலேயே கொடுக்க ஆர்வமாக அதைப் பிரித்தாள். உள்ளே ஒரு சிறிய லேப்டாப் டேபிள் இருந்தது. அதில் ஒற்றை லாம்ப் ஒன்றும் பொருத்தப்பட்டு இருந்தது.

"ஹை... சூப்பரா இருக்கு சஞ்சய்" என்று கண்கள் விரிய கூறினாள் அனன்யா. சோபாவில் அமர்ந்து அதை விரித்து மடியின் மேல் வைத்து அந்த லைட்டை ஆன் செய்துப் பார்த்தாள்.

"இனி லைட் போட்டு வெச்சு என் தூக்கத்த கெடுக்காத" என்றுக் கூறி எழுந்து உள்ளே சென்றான் சஞ்சய். மடியில் இருந்த டேபிளை எடுத்து அருகில் வைத்து ஓடிச் சென்று அவனைப் பின்னாலிருந்து அணைத்து "நீ கோவமா இருக்கன்னு நம்பிட்டேன்..." என்றுக் கூறி அவன் முதுகில் முத்தமிட்டு "தேங்க்ஸ் சஞ்சய்" என்றாள்.

புன்னகையுடன் திரும்பி "என்னால உன் மேல கோவப்பட முடியாது அனு" என்றவன் குளியலறையுள் புகுந்துக் கொண்டான்.

அன்று இரவு லாப்புடன் அமர்ந்தாள் அனன்யா. அவளிடம் பேச வேண்டும் என்பதற்காகவே "என்னமோ படிக்கப் போறேன்னு சொன்ன?" என்றுக் கேட்டான் சஞ்சய்.

"அதான் நேத்துப் படிச்சேனே... நான் எழுத ஆரம்பிக்கப் போறேன். டைட்டில் தான் என்ன வெக்கன்னுத் தெரியல"

மெதுவாக சஞ்சையைத் திரும்பிப் பார்த்தவள் "மொத கதைக்கு இவன்கிட்ட டைட்டில் கேட்டப்பமே அந்த பாடு படுத்துனான்... அதுக்கு அப்பறம் எப்போக் கேட்டாலும் எடக்கு மடக்காவே சொல்லுறானே... இப்போ எப்படிக் கேக்குறது?" என்று யோசித்தாள்.

"ஹ்ம்ம்... கேட்டு தான் ஆகணும்..." என்று முடிவெடுத்தவள் மனதை தேற்றிக் கொண்டு "சஞ்சய் இந்த கதைக்கு இந்த டைட்டில் எப்படி இருக்குன்னு சொல்லு" என்றுக் கூறி தலைப்பைக் கூறினாள்.

தலை கவிழ்த்து யோசித்த சஞ்சய் "நீ சொல்லுறது 'ஊருக்கு வரேன் இப்போ நான்' ரேஞ்சுக்கு இருக்கு... ஏதோ தெலுங்கு பட டப்பிங் டைட்டில் மாதிரி... வேற டைட்டிலே கெடைக்கலையா?" என்றான்.

"ஆரம்பிச்சுட்டான்... இனி இவன ஒத்துக்க வெக்குறதுக்குள்ள..." என்று நினைத்த அனன்யா வருசையாக தான் யோசித்தவற்றைக் கூற ஆரம்பித்தாள்.

சிறிது நேரம் அனன்யா கூறிய எல்லாவற்றையும் கிண்டல் செய்த சஞ்சய் அவள் கூறிய ஒரு தலைப்பை ஒத்துக் கொண்டான். "அப்பாடா..." என்றிருந்தது அனன்யாவிற்கு. யோசனையாக அமர்ந்திருந்தவளைப் பார்த்தவன் "இன்னும் என்ன யோசிக்குற?" என்றான்.

"எப்படி ஸ்டார்ட் பண்ணுறதுன்னு யோசிக்குறேன்"

"Once upon a time னு ஸ்டார்ட் பண்ணு" என்று சீரியசாகக் கூறினான் சஞ்சய்.

"நான் ஒண்ணும் நம்மக் கொழந்தைக்கு ஸ்டோரி எழுதல…"

“நம்ம கொழந்த? ம்ம்???”

"அய்யய்யோ... சும்மா இருக்குறவன நம்மளே சொரியுறோமே… என்ன நெனைப்பான்?" என்று யோசித்தவள் "நீ தூங்கு சஞ்சய்... அதான் எனக்கு இந்த டேபிள்லயே லாம்ப் இருக்கே" என்றுக் கூறி வேகமாக விளக்கை அணைத்து வந்து அமர்ந்து டைப் செய்ய ஆரம்பித்தாள்.

"இப்படியேப் பண்ணிட்டிரு... அப்பறம் எங்கேந்து?? ஹ்ம்ம்"

"என்ன?"

"ஒண்ணும் இல்ல... வர வர என்ன கவனிக்கவே மாட்டேங்குற..."

தன் வாய் மேல் கை வைத்த அனன்யா "அட பாவி..." என்றாள். சிரித்துக் கொண்டே "குட் நைட்" என்றுக் கூறி உறங்கினான் சஞ்சய்.

அன்றிரவே நிறைய டைப் செய்த அனன்யா அடுத்த நாள் காலை சஞ்சய் சென்றதிலிருந்து தான் யோசித்தவரை கதையை டைப் செய்து முடித்தாள். மாலை சஞ்சய் வந்தபோது அவனிடம் அதை படிக்க சொல்லிவிட்டு சமைக்கத் துவங்கினாள்.

வேலை செய்தாலும் அவ்வபோது சமையலறையிலிருந்து எட்டிப் பார்த்துக் கொண்டே இருந்தாள். சஞ்சய் அமைதியாக கதையிலிருந்து கண் எடுக்காமல் படித்துக் கொண்டே இருந்தான். இரவு உணவைத் தயாரித்து அவன் அருகில் வந்தமர்ந்தாள் அனன்யா. சஞ்சய் அவளை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.

மணி 8.30 ஆகியும் அவன் படித்துக் கொண்டிருந்ததால் "சஞ்சய் சாப்பிடலாம் சஞ்சய். அப்பறம் படி..." என்றாள். லாப்பிலிருந்து கண்ணை எடுக்காமல் "ம்ம்... எடுத்துட்டு வந்து ஊட்டி விடு. நான் படிச்சுட்டே சாப்பிடுறேன்" என்றான்.

எழுந்து சென்று தட்டில் புட்டை எடுத்து வந்து ஊட்ட ஆரம்பித்தாள் அனன்யா.

பாதி சாப்பிடும்போதே படித்து முடித்தவன் "ம்ம்" என்றுக் கூறி லாப்பை மடியிலிருந்து எடுத்து சோபாவில் வைத்தான். கையில் ஒரு வாய் பிட்டை எடுத்தவள் அவன் செய்கையைப் பார்த்து "ம்ம் னா?" என்றாள்.

அவள் கைப் பிடித்து அவள் கையிலிருந்ததை வாயில் வாங்கியவன் "புட்டு சூப்பரா இருக்கு அனு" என்றான்.

"புட்டு நல்லா இருக்கா? சஞ்சய்... வெளயாடாத... கதை படிச்சல்ல... எப்படி இருக்குனு சொல்லு..."

"நல்லா இருக்கு..."

"நல்லா இருக்குன்னா?? ஹேய்... ரெண்டு பக்கம் படிச்சப்பல்லாம் ஆயிரத்தெட்டு கரெக்ஷன் சொல்லுவ... இத மாத்து அத மாத்துன்னுப் படுத்துவ... இப்போ 40 பக்கம் படிச்சிருக்க சஞ்சய்... ஏதாவது சொல்லு பா..."

"ஏன்டி இப்படிக் கெஞ்சுற?" என்றுக் கேட்டு சிரித்தான் சஞ்சய்.

"சொல்லு ப்ளீஸ்”

"40 பக்கம் படிச்சேன். எதுவும் சொல்லல. போர் அடிக்கல. அதுலயே தெரிய வேணாமா? ஸ்டோரி நல்லா இருக்குன்னு... இதுக்கு மேல 'ஐயோ இது நல்லா இருக்கு... அச்சச்சோ இது நல்லாருக்கு'ன்னு சொல்லணுமா?"

அனன்யாவிற்கு என்ன சொல்வதென்றேத் தெரியவில்லை. சஞ்சயின் கன்னத்தை கிள்ளி "ஐயோ... எனக்கு சந்தோஷம் தாங்கல..." என்றுக் கூறி எழுந்து சென்றாள்.

கிட்செனில் வேலைகள் அனைத்தையும் முடித்து அவன் அருகில் வந்தமர்ந்தவள் "என்ன பண்ணுற?" என்றுக் கேட்டு அவன் மடியில் இருந்த லாப்பை எட்டிப் பார்த்தாள்.

"இப்போ படிச்சதுக்கு ஏத்த மாதிரி தொடரும் பிக்சர் எடுக்குறேன்"

அவன் கழுத்தைச் சுற்றி கையை மாலையாகப் போட்டு அவனை அருகிலிழுத்து கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள் அனன்யா. கன்னத்தை தடவிக் கொண்டே "என்ன அனு ஆச்சு?" என்றுக் கேட்டான் சஞ்சய்.

"ம்ம்ஹும்..." என்றுக் கூறி தோளைக் குலுக்கி விட்டு அமைதியாக அமர்ந்திருந்தாள் அனன்யா. சிறிது நேரத்தில் அவன் டி ஷர்ட் காலரின் நுனியைப் பிடித்து இழுக்க ஆரம்பித்தாள்.

"எத்தன தடவ சொல்றது அனு? இப்படிப் பண்ணாதன்னு..."

"இப்போ அதுவா முக்கியம்???"

"எப்போ இத சொன்னாலும் ‘இப்போ அதுவா முக்கியம்?’னு தான் கேக்குற..." என்றுக் கூறி தன் வேலையைத் தொடர்ந்தான் சஞ்சய்.

"சஞ்சய்..."

"ம்ம்"

"சஞ்சய் கேளு..."

"கேட்டுட்டு தான் இருக்கேன்"

"நானு..."

"ம்ம்"

"இன்னைக்கு மாலினி போன் பண்ணா..."

"ம்ம்"

"அவக்கிட்ட பேசுனேன்..."

அனன்யாவை ஒரு முறைத் திரும்பிப் பார்த்து விட்டு "ம்ம்" என்றான் சஞ்சய்.

"அவக்கிட்ட நான் கத எழுதுறேன்னு சொல்லிட்டேன் சஞ்சய்" என்று மெதுவாகக் கூறினாள் அனன்யா.

சட்டென்று அவள் புறம் திரும்பிய சஞ்சய் "அதானப் பாத்தேன். பொண்ணுங்களால ஒரு விஷயத்த சீக்ரெட்டா வெச்சுக்க முடியுமா என்ன?" என்றான்.

"கிண்டல் பண்ணாத பா..."

"அதான் சொல்லிட்டியே... அப்பறம் என்ன?"

"ஒண்ணும் இல்ல... வா தூங்கலாம்"

லாப்பை எடுத்து அருகில் வைத்து வேகமாக அவள் புறம் திரும்பி அமர்ந்தவன் "தூங்கலாமா??? என்ன அதிசயமா இருக்கு? மணி 10 தான் ஆகுது..." என்றான் சஞ்சய்.

"காலையிலேருந்து டைப் பண்ணிட்டே இருக்கேனா... கண்ணெல்லாம் எரியுது சஞ்சய்"

"சரி சரி வா தூங்கலாம்..." என்றுக் கூறி லாப்பை அணைத்து வைத்து விட்டு அவளுடன் சென்றுப் படுத்தான் சஞ்சய்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
Part - 22

லாப்பை மடியில் வைத்துக் கொண்டு நீண்ட நேரமாக தரையை வெறித்து யோசித்துக் கொண்டிருந்தாள் அனன்யா.

"என்ன அனு யோசிக்குற? சோபால உக்காரு... எத்தன தடவ சொல்லுறேன்? ஏன் கீழ தரையில உக்காந்துருக்க?"

"இடுப்பு வலிக்குது சஞ்சய்"

"அப்போ மூடி வெச்சுட்டு நாளைக்கு எழுது"

"கதைய முடிக்கப் போறேன் சஞ்சய்... இன்னும் கொஞ்சம் தான் இருக்கு..."

"இதையே தான் 2 நாளா சொல்லிட்டு இருக்க..." என்றுக் கூறி அவள் அருகில் சுவற்றில் சாய்ந்து கால் நீட்டி தரையில் அமர்ந்தான் சஞ்சய்.

"நீ இது வரைக்கும் எழுதுனத படிச்சல்ல? நானும் மாத்தி மாத்தி யோசிக்குறேன்... இந்த எடத்துல எதுவும் ஓட மாட்டேங்குது பா..." என்றுக் கூறி அவனின் தோளில் தலை சாய்த்துக் கொண்டாள் அனன்யா.

"பொறுமையா யோசி அனு"

"இத படி. இது நல்லா இருக்கா சொல்லு" என்று லாப்பை அவன் பக்கம் நீட்டினாள்.

"போடி..." கையை தரையில் ஊன்றி எழ முயன்றான் சஞ்சய். அவன் எழுந்து செல்கிறான் என்றதும் "ஐயோ நீ வா…" என்று அவன் டி ஷார்ட்டைப் பிடித்து இழுத்து அவனை அமர வைக்க முயன்றாள்.

"தோ வந்துட்டேன்…" அவள் இதழ் நோக்கி வேகமாகக் குனிந்தான் சஞ்சய்.

"ச்சீ போ சஞ்சய்" என்று அவனைத் தள்ளியவள் "ஒழுங்கா சொல்லு... இது நல்லா இருக்கானு..." என்று மீண்டும் லாப்பை நீட்டினாள்.

சிரித்துக் கொண்டே அவள் கையில் இருந்து லாப்பை வாங்கியவன் அவள் படிக்க சொன்னதை வாசித்து முடித்து "நல்லா தான் இருக்கு...” என்றுக் கூறி லாப்பை அவள் மடியில் வைத்து “போதும் இதெல்லாம் எடுத்து வெச்சுட்டு வா..." என்றான்.

"எங்க?"

"அதான் கதை முடிச்சுட்டல்ல? வா வெளிலப் போயிட்டு வருவோம்"

"இரு இரு... இன்னும் கொஞ்சம் நடுல டைப் பண்ண வேண்டியது இருக்கு"

"மரியாதையா எந்திரிச்சு வந்துடு... இல்லனா லாப் டாப்ப தூக்கிப் போட்டு ஒடச்சுடுவேன்"

அவனுக்கு கோபம் வந்து விட்டதைப் புரிந்துக் கொண்ட அனன்யா "போகலாம் போகலாம்" என்றுக் கூறி வேகமாக எழுந்தாள்.

"கத எழுதுன்னு விட்டா ஓவரா தான் பண்ணுறது..." அவளை முறைத்தபடியே அறைக்குள் சென்றான் சஞ்சய்.

அன்று மாலை முழுவதும் வெளியே சுற்றித் திரிந்து விட்டு இரவு வீட்டிற்கு வந்தனர். இருவருக்குமே மிகவும் களைப்பாக இருந்தாலும் அனன்யாவிற்கு தான் எழுதாமல் விட்ட கதையின் ஒரு சிறு பகுதியை முடித்து விட்டால் கதை முழுதாக முடிந்து விடும் என்றுத் தோன்றியது.

அதனால் சஞ்சய் படுக்க சென்றதும் விளக்கை அணைத்து அறையில் இருந்த சேரில் தன் லாப் டேபிளுடன் அமர்ந்து அதில் இருந்த விளக்கை எரிய விட்டு லாப்பை ஆன் செய்தாள். அவள் புறம் திரும்பிப் படுத்த சஞ்சய் “நீயும் தூங்க மாட்ட…” என்று இழுத்தான்.

அனன்யா அவனை நிமிர்ந்துப் பார்த்து “சஞ்சய் வேணாம்…” எனவும் “இல்ல அனு… எனக்கு தூக்கம் வருதுன்னு சொல்ல வந்தேன்…” என்றுக் கூறி கண்ணடித்தான்.

“உன்ன...” அருகிலிருந்த பேணாவை தூக்கி அவன் மேல் எறிந்தாள். சஞ்சய் சத்தமாக சிரித்து விட்டு திரும்பிப் படுத்து உறங்க ஆரம்பித்தான்.

மறுநாள் மாலை வீட்டிற்குள் நுழையும்போதே “எழுதி முடிச்சுட்டியா அனு?” என்றுக் கேட்டுக் கொண்டே வந்தான் சஞ்சய்.

“ம்ம்… முடிச்சுட்டேன்… படிச்சுட்டு சொல்லு சஞ்சய்... எப்படி இருக்குன்னு...” அவன் கையிலிருந்த லாப் டாப் பாகை வாங்கித் திரும்பினாள் அனன்யா.

“படிச்சு சொல்லணுமா???” தாடையைத் தடவியவன் “அப்போ எனக்கு என்ன தருவ?” என்றான்.

"உனக்கு என்ன தரணும்?" என்றுக் கேட்டுக் கொண்டே அறைக்குள் சென்றாள் அனன்யா.

"ஓய்... என்ன கிண்டல் பண்ணுறியா? நான் உனக்கு படிச்சு சொல்லணும்னா எனக்கு என்ன தருவ? அத முதல்ல சொல்லு... அப்பறம் படிக்கலாமா வேணாமான்னு யோசிக்குறேன்" என்றுக் கூறி குளியலறைக்குள் புகுந்துக் கொண்டான்.

சஞ்சய் குளித்து முடித்து வந்ததும் அவன் கையில் காபி கப்பை கொடுத்து "என்ன வேணும் சொல்லு. ஏதோ ரொம்ப ஆசைப்பட்டுக் கேக்குற... அதனால செய்யுறேன்... ஹ்ம்ம்..." என்றவள் மெத்தை மேல் இருந்த துணிகளை மடிக்க ஆரம்பித்தாள்.

"அப்படியெல்லாம் ஒண்ணும் நீ கஷ்ட்டப்பட வேண்டாம்... நான் படிக்கல" காபி கப்புடன் ஹாலுக்கு விரைந்தான் சஞ்சய்.

கையில் இருந்த துணியை பெட்டில் போட்டு "அய்யய்யோ... நான் எப்போ அப்படியெல்லாம் சொன்னேன்... சஞ்சய்... நில்லு சஞ்சய்... படிச்சு சொல்லு... உனக்கு என்ன வேணும் சொல்லு..." என்று அவன் பின்னால் ஓடினாள்.

அவளை ஓரக் கண்ணால் பார்த்து விட்டு சோபாவில் அமர்ந்தவன் தீவிரமாக யோசிப்பது போல் பாவனை செய்தான்.

"இவன் சும்மா கேட்டாலே பெருசா தான் கேப்பான்... இப்படி யோசிக்குறானே..." என்று நினைத்து அவன் முகத்தை பார்த்தபடியே அவனருகில் அமர்ந்திருந்தாள் அனன்யா.

"இன்னிலேருந்து இன்னும் ஒரு வாரத்துக்கு... நான் ஈவ்னிங் வீட்டுக்குள்ள நுழஞ்சதுலேருந்து காலையில கெளம்புற வரைக்கும்... அதாவது நான் வீட்டுல இருக்க நேரம்... நீ லாப் டாப்ப தொடக் கூடாது..." என்று நிறுத்தி நிதானமாகக் கூறினான் சஞ்சய்.

அனன்யா ஏதோக் கூற வாய் திறக்கவும் "Including weekends..." என்றான். அவன் முகம் பார்த்து ஒரு நெடிய மூச்சை இழுத்து விட்டவள் "ஓகே ட்ரை பண்ணுறேன்" என்றாள்.

"ஓகே... அப்போ நானும் படிச்சு சொல்ல ட்ரை பண்ணுறேன்" என்றுக் கூறி தோளைக் குலுக்கி எழுந்து கிட்செனுள் சென்றான்.

"சஞ்சய் நில்லு சஞ்சய்... இப்படி சொன்னா எப்படி சஞ்சய்? ஒன் வீக் ஜாஸ்த்தி பா... நான் வேணா ரெண்டு நாளைக்கு..."

"அதெல்லாம் முடியாது. ஒன் வீக். ஓகேனா சொல்லு. படிக்குறேன்" கப்பை சின்க்கில் வைத்து வெளியே வந்தான்.

கிட்செனுள்ளேயே நின்று யோசித்த அனன்யா "ஒரு வாரம் நம்மளால இருக்க முடியுமா?" என்று நீண்ட நேரம் யோசித்து "வேற வழி இல்ல..." என்று முடிவெடுத்தாள்.

அவள் வெளியே ஹாலிற்கு வந்தபோது கையை தலைக்கு பின்னால் கோர்த்து சோபாவில் நன்றாக சாய்ந்து அமர்ந்திருந்தான் சஞ்சய்.

"சீக்கிரம் சொல்லு அனு" என்று அவன் கூறியதும் "சரி... இருக்கேன்" என்று பல்லைக் கடித்துக் கூறினாள் அனன்யா.

உடனே எழுந்து அறைக்குள் சென்று அவள் லாப்பை எடுத்து படிக்க ஆரம்பித்தான். சிறிது நேரம் கழித்து வெளியே வந்தவன் "எப்படிடி இப்படியெல்லாம் யோசிச்ச? ரொம்ப நல்லா இருக்கு அனு..." என்றுக் கூறி புன்னகைத்தான்.

அதுவரை சோபாவில் நகத்தைக் கடித்தபடியே சஞ்சய் வந்து என்ன சொல்வானோ என்று யோசித்துக் கொண்டிருந்தவள் அவன் இவ்வாறுக் கூறவும் "நெஜமாவா?" என்றுக் கேட்டு எழுந்தாள்.

"நெஜமா சூப்பர்" என்றுக் கூறி அவளை அணைத்து அவள் நெற்றியில் முத்தமிட்டான்.

"நான் பயந்துட்டே இருந்தேன் சஞ்சய்... இப்போ தான் நிம்மதியா இருக்கு"

சிறிது நேரம் அமைதியாக அவன் அணைப்பிலேயே நின்றவள் "எனக்கு சில genre எழுத வராதுல்ல சஞ்சய்..." என்றுக் கேட்டு சஞ்சய்யை விட்டு விலகி அவனை நிமிர்ந்துப் பார்த்தாள்.

அவள் கண்களை நேராய்ப் பார்த்து சில நொடிகள் அமைதியாக நின்ற சஞ்சய் தலையை இடமிருந்து வலமாக ஆட்டினான்.

"ஆமாந்தான சஞ்சய். எனக்கு சில ஸ்டைல் வராது. க்ரைம் எல்லாம்..." அவளை பேச விடாது "உன்னால எப்படி வேணா கத எழுத முடியும் அனு" என்றான் அழுத்தமாக.

"இல்ல சஞ்சய்..." என்றுக் கூறி அவனிடமிருந்து விலகி "நைட் வெளில போய் சாப்பிடலாமா? போர் அடிக்குது" என்றாள் அனன்யா. அவளை ஒரு முறை ஆழமாகப் பார்த்தவன் "கிளம்பு" என்றான்.

வெளியே சென்று வீடு திரும்பிய பின் இரவு படுக்கும்போது "அப்பாடா... எத்தன நாள் கழிச்சு என் கூட படுத்துத் தூங்குற தெரியுமா? நெறைய நாள் நீ எப்போ வந்து படுக்குறன்னுக் கூட எனக்குத் தெரியாது அனு..." என்றுக் கூறி அனன்யாவை தன் இடது கையால் வளைத்து அவள் தலையை தன் நெஞ்சில் வைத்துக் கொண்டான் சஞ்சய்.

அவன் ஒரு வாரம் ‘நான் வீட்டில் இருக்கும்போது லாப்பை தொடாதே’ என்றுக் கூறியபோது ‘தன்னால் அது முடியுமா?’ என்று யோசனையாக இருந்த அனன்யாவிற்கு இப்போது அந்த சந்தேகம் துளியும் இல்லாமல் போனது.

இத்தனை நாள் தான் எதை இழந்தோம் என்று புரியத் துவங்கியது. சஞ்சயின் மார்பை தன் கைகளால் தடவியவள் தன் தலையை இன்னும் வாகாக அவன் நெஞ்சில் பதித்துக் கொண்டாள்.

"இனி நைட் டைப் பண்ண மாட்டேன் சஞ்சய்" என்றுக் கூறி அவனை இறுக அணைத்துக் கொண்டாள் அனன்யா. சிரித்து விட்டு அவள் உச்சந்தலையில் முத்தமிட்டவன் "தூங்கு அனு" என்றுக் கூறி உறங்க ஆரம்பித்தான். வெகு நாட்களுக்கு பிறகு நிம்மதியாக தூங்கப் போவதாகத் தோன்றியது அனன்யாவிற்கு.

"அனு உன்ன ஒரு வாரத்துக்கு தான் நான் வீட்டுல இருக்கும்போது லாப்ப தொடக்கூடாதுன்னு சொன்னேன்... நீ அத இன்னும் கண்டின்யூ பண்ணிக்கிட்டிருக்க..."

அன்று வார இறுதியாகையால் வீட்டில் இருந்தான் சஞ்சய். வாஷிங் மாஷீன் போட்டுக் கொண்டிருந்த அனன்யா "இதுவே நல்லாயிருக்கு சஞ்சய். நீ வீட்டுல இருக்கப்போ உன்கூட டைம் ஸ்பென்ட் பண்ண முடியுது. நான் அந்த கதை முடிச்சுட்டேன். வேற ஒரு கதை யோசிச்சேன்" என்றாள்.

"அத விடு" என்றுக் கூறி எழுந்து அவளருகில் சென்ற சஞ்சய் "நான் ஒரு கத யோசிச்சேன்..." என்றுக் கூறவும் அவனை ஆச்சர்யமாகத் திரும்பிப் பார்த்தாள் அனன்யா.

"நெஜமா அனு..."

"என்ன யோசிச்ச? சொல்லு சொல்லு"

"நாலே நாலு கேரக்டர்ஸ் வெச்சு ஒரு கொலையக் கண்டுப் புடிக்குற மாதிரி..."

அனன்யா கையில் இருந்த சோப்பு டப்பாவை ஷெல்பில் வைத்து "ஓஹோ" என்றாள்.

"ஆனா இத எப்படி ஸ்டார்ட் பண்ணன்னுதான் தெரியல அனு” என்றுக் கூறி வாஷிங் மஷீனை ஆன் செய்தான் சஞ்சய்.

"அது பெரிய விஷயம் இல்ல சஞ்சய்... டைரக்டா கொலை நடந்த இடத்துலேருந்து அந்த deadbody வெச்சே ஸ்டார்ட் பண்ணலாம்"

"ஹ்ம்ம்"

கிட்செனுள் சென்று இருவருக்கும் ஐஸ் கிரீம் எடுப்பதற்கு பவுள் எடுத்தான். "இந்த கதைல எப்படி அனு ட்விஸ்ட் வெக்குறது?" என்றுக் கேட்ட சஞ்சய் ப்ரிட்ஜ் அருகில் சென்றான்.

அவன் பின்னால் சென்ற அனன்யா "எப்படியும் அந்த நாலு பேருல ஒருத்தன் போலீஸ் ஆபீசர்... சோ மீதி மூணு பேருல ஒருத்தன் மேல சந்தேகப்படுற மாதிரி எழுதிட்டு அப்பறம் கொலை செஞ்சவன் வேற ஒரு ஆளுன்னு எழுதலாம் சஞ்சய்" என்றாள் அனன்யா.

ஐஸ் கிரீம் ஸ்கூப்களை பவுளில் போட்டு ஒன்றை அனன்யாவிடம் நீட்டி தன் கையில் இருந்த பவுளிலிருந்து ஒரு வாய் எடுத்து சாப்பிட்டு "ம்ம்... அது ஓகே... எப்படி முடிக்குறது?" என்றுக் கேட்டுக் கொண்டே ஹாலிற்கு வந்து சோபாவில் அமர்ந்தான்.

சோபாவின் கைப்பிடியில் அமர்ந்த அனன்யா "அந்த இன்னொரு கேரக்டர் ஒரு பொண்ணா வெச்சு அந்த போலீஸ் ஆபீசர லவ் பண்ணுற மாதிரி எழுதி அவங்க கல்யாணத்துலக் கூட முடிக்கலாம்" என்றுக் கூறி ஐஸ் கிரீமை சாப்பிட்டாள்.

அவள் இடையை சுற்றி கை போட்டு "உனக்கு க்ரைம் ஸ்டோரி எழுத வராதா? இப்போ நான் எதுவுமே சொல்லல... நீ தான் மொத்த கதையையும் சொன்ன. உன்னோட அடுத்த கதையா இத எழுது" என்றுக் கூறி புன்னகைத்தான்.

கையில் ஸ்பூனுடன் வாயை பிளந்து அவனைப் பார்த்தாள் அனன்யா. பின் ஐஸ் கிரீம் சாப்பிட்டுக் கொண்டே யோசிக்க ஆரம்பித்தாள். சஞ்சய் சாப்பிட்டு முடித்து எழுந்த போது "நான் எழுதுறேன் சஞ்சய்" என்றுக் கூறி தானும் எழுந்தாள்.

"ஒரு நிமிஷம் கிட்ட வாயேன்" என்று சஞ்சய் கூற "ஏன்?" என்று புரியாமல் கேட்டு அவன் அருகில் சென்றாள் அனன்யா.

அவள் அருகில் வந்ததும் இறுக அணைத்து "சூப்பர் அனு..." என்றுக் கூறி அவள் கன்னத்தில் முத்தமிட்டான் சஞ்சய்.

"இதுல உனக்கு என்ன இவ்வளவு சந்தோஷம்? எப்படியும் உன்ன தூங்க விடாம தொல்ல பண்ணப் போறேன்..."

"போடி. என் பொண்டாட்டி கத எழுதுறா..." என்றுக் கூறி அவள் கையில் இருந்த பவுளை வாங்கி சமையலறை நோக்கிச் சென்றான்.

"என்னால முடியாதுன்னு நான் சொன்ன ஒரு விஷயத்த என் வாயாலயே சொல்ல வெச்சு... அதுக்கு நான் சப்போர்ட் பண்ணுறேன்னு வேற சொல்லாம சொல்லிட்டுப் போறானே..." என்று யோசித்தவள் ஓடிச் சென்று அவனை இறுக அணைத்து அவன் இதழில் அழுத்தமாக முத்தமிட்டாள்.

அவள் விலகியதும் "என்ன அனு?" என்றான் சஞ்சய்.

"ஐ லவ் யூ" என்றுக் கூறி அவன் கன்னத்தில் முத்தமிட்டு லாப்பை எடுத்து வைத்து அப்போதே அந்த கதையை டைப் செய்ய ஆரம்பித்தாள் அனன்யா.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
Part - 23

அன்று மாலை வீட்டிற்குள் வந்ததிலிருந்து அனன்யாவின் அருகிலேயே நின்று அமைதியாக அவள் செய்வதனைத்தையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான் சஞ்சய்.

அவள் அறைக்கு வந்து மெத்தையில் லாப்புடன் அமர்ந்ததும் அருகில் அமர்ந்து "அனு" என்றழைத்தான். "ம்ம்" என்றுக் கூறி டைப் செய்யத் துவங்கினாள்.

"அனு"

அவனைத் திரும்பிப் பார்த்தாள் அனன்யா. அவள் முகத்தையேப் பார்த்தவன் "டைப் பண்ணுறியா அனு?" என்றுக் கேட்டான். முகத்தை சுருக்கி அவனை ஒரு பார்வைப் பார்த்து விட்டு மீண்டும் டைப் செய்ய ஆரம்பித்தாள்.

"அனு"

அவன் மீண்டும் மீண்டும் அழைக்கவே சலிப்படைந்தவள் "என்ன சஞ்சய் வேணும்?" என்று சற்று எரிச்சலாகவேக் கேட்டாள்.

"நீ தான்" நிதானமாக அழுத்திக் கூறினான் சஞ்சய்.

"என்னது?"

"நீ தான் வேணும்"

"சஞ்சய் வெளயாடாத..."

"இல்லையே"

"போ சஞ்சய்" என்றுக் கூறி டைப் செய்ய ஆரம்பித்தாள் அனன்யா.

"அனு"

"என்ன???"

"அதான் சொன்னேன்ல... இதுக்கு மேல உன்கிட்ட பேசுனா வேலைக்காகாது" என்றவன் அவள் மடியிலிருந்த லாப்பை எடுத்து அருகில் வைத்து அவள் மீதே கவிழ்ந்தான்.

"சஞ்சய் ப்ளீஸ்... இன்னும் கொஞ்சம் மட்டும் டைப் பண்ணி... மறந்துடும் சஞ்சய்... ப்ளீ..." அதற்கு மேல் அனன்யாவை பேச விடாமல் அவள் இதழைத் தன் இதழால் மூடினான்.

நீண்ட நேரம் கழித்தே அவளை விடுவித்தான் சஞ்சய். அருகில் படுத்திருப்பவனை ஒரு முறைத் திரும்பிப் பார்த்தவள் மொபைலை எடுத்து மணிப் பார்த்தாள்.

"போ சஞ்சய்... இப்படியா பண்ணுவாங்க...” என்று அவள் சிணுங்க சஞ்சய் கண்களை மூடி அமைதியாகவேப் படுத்திருந்தான்.

“மணி என்ன ஆச்சுத் தெரியுமா... இப்..."

"மணி 2 ஆகுது... அதுக்கு என்ன இப்போ?"

"நீ முதல்ல கைய எடு... நான் மறந்துப் போறதுக்குள்ள டைப் பண்ணி வெச்சுடறேன்..."

"மாட்டேன்"

"சஞ்சய் விடு சஞ்சய்.... கைய்ய்ய எடு...." தன் மேல் இருக்கும் அவன் கையை எடுக்க முயன்றாள் அனன்யா.

"முடியாது போடி..." அவளை இன்னும் நெருங்கிப் படுத்தான் சஞ்சய்.

"ஏன் சஞ்சய் இப்படிப் பண்ணுற? நான் தான் எனக்கு மறந்துடும்னு சொல்லுறேன்ல..."

"அதுக்கு?"

"ஐயோ... கைய எடு... ப்ளீஸ்... 10 மினிட்ஸ் தான்... டைப் பண்ணிடுறேன்... எடு சஞ்சய்..."

"அதெல்லாம் காலையில பண்ணிக்கோ... நான் அபீஸ் போனதுக்கு அப்பறம் வெட்டியாதான இருக்க?"

"ஒழுங்கா அப்பயே டைப் பண்ணியிருப்பேன்... ஏன் இப்படிப் படுத்துற?"

சட்டென்று நிமிர்ந்து அவளைப் பார்த்தவன் "நான் உன்ன படுத்துறேனா அனு?" என்றுக் கேட்டான்.

"இதெல்லாம் மட்டும் நல்லாக் கேளு... அப்படியே பாவமா மூஞ்சிய வெச்சுக்கிட்டு... விடு சஞ்சய்..."

"போடி... மறுபடியும் அதுலயே நிக்குற..." அவள் நெஞ்சில் தலை வைத்துப் படுத்து "தூங்குப் பேசாம..." என்றான் சஞ்சய்.

இதற்கு மேல் இவனிடம் பேசி பயனில்லை என்றெண்ணி கண்களை மூடி உறங்க ஆரம்பித்தாள் அனன்யா. விடியலில் கண் விழித்தவ சஞ்சய் தன் கை அணைப்பில் உறங்குபவளைப் பார்த்தான்.

புன்னகையுடன் அவள் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டு அவள் தூக்கம் கலையா வண்ணம் அவளைத் தன்னை விட்டு விளக்கி அருகில் படுக்க வைத்தான்.

பின் சத்தம் வராமல் எழுந்துச் சென்று அவளுடைய லாப்பை எடுத்துக் கொண்டு ஹாலிற்கு வந்து விளக்கை போட்டு அவள் டைப் செய்த வரை அந்த கதையை படித்தான். சிறிது நேரம் அப்படியே அமர்ந்து யோசித்தவன் பின் தனக்கு தோன்றியவற்றை டைப் செய்ய ஆரம்பித்தான்.

5 பக்கம் டைப் செய்ததும் கண் எரிச்சல் தோன்றவே ஷட் டவுன் செய்து லாப்பை எடுத்த இடத்தில் வைத்துவிட்டு மெத்தையில் அனன்யாவின் அருகில் படுத்து அவளை அணைத்தபடியே உறங்க ஆரம்பித்தான்.

சஞ்சய் காலை கண் விழித்தபோது அனன்யா அருகில் இல்லாமல் போகவே எழுந்து அறையை விட்டு வெளியே வந்துப் பார்த்தான். அவள் வீட்டை சுத்தம் செய்துக் கொண்டிருந்தாள்.

வேகமாக உள்ளே சென்று லாப்பை எடுத்து தான் டைப் செய்ததை அவளிடம் நீட்டினான். ஒரு முறை அவனை விழி விரித்துப் பார்த்தவள் கையில் இருந்த துடைப்பத்தை கீழேப் போட்டு விட்டு அதை வாங்கி வாசிக்க ஆரம்பித்தாள்.

அவன் எழுதியது முழுவதையும் வாசித்து முடித்தபோது ஆச்சரியமாக இருந்தது.

"நீ என்ன விட நல்லா எழுதுற சஞ்சய்... பேசாம நீ ஒரு கத எழுது"

"போடி... வீட்டுல நீ ஒருத்தி கத எழுதுறதே தாங்க முடியலையாம்... இதுல நான் வேற கத எழுதணுமா?" துண்டை தோளில் போட்டு அவளை முறைத்தபடியே குளியலறைக்குள் சென்றான் சஞ்சய்.

இன்னொரு முறை அவன் எழுதியதை வாசித்தவள் எழுந்து சென்று சமையலை கவனிக்க ஆரம்பித்தாள்.

"சஞ்சய் இன்னைக்கு என்ன சூப்பர் மார்கெட் கூட்டிட்டுப் போறியா? திங்க்ஸ் வாங்கணும்..."

"ம்ம் போகலாம்... அப்படியே வெளியில சாப்பிட்டு வந்துடலாமா?"

"எல்லாத்தையும் தூக்கிட்டு போய் எப்படி சாப்பிடுறது?"

"ஏன்? ஒண்ணு பண்ணுறேன்... இன்னைக்கு கார் எடுத்துட்டுப் போறேன்... நீ என் அபீஸ் கிட்ட வந்துடு... எல்லாத்தையும் வாங்கிட்டு சாப்பிட்டு வந்துடலாம்..."

"ஓகே... எப்போ வரணும்னு சொல்லு... நான் அதுக்கேத்த மாதிரிக் கெளம்பி வரேன்"

இரண்டு நொடி அமைதியாக இருந்த சஞ்சய் "வேணாம். நானே வந்துக் கூட்டிட்டுப் போறேன்" என்றான்.

"இல்ல சஞ்சய்... நானே வரேன்"

"இல்ல அனு. நான் வந்துக் கூட்டிட்டுப் போறேன். கொஞ்சம் சீக்கிரம் வரேன். மதியம் போன் பண்ணுறப்போ டைம் சொல்லுறேன். நீ ரெடியா இரு".

"சரி"

சொன்னது போலவே மாலை 5 மணிக்கு அனன்யா கால் செய்தபோது இன்னும் ஒரு மணி நேரத்தில் தயாராக இருக்குமாறுக் கூறினான் சஞ்சய். அவளும் அவன் கூறியது போலவேக் கிளம்பினாள்.

கீழிருந்தே அனன்யாவை அழைத்த சஞ்சய் வீட்டைப் பூட்டி விட்டு வருமாறுக் கூறினான். அவள் வந்ததும் காரை கிளப்பினான் சஞ்சய்.

அவன் காரை வேறு திசையில் செலுத்துவதை கவனித்தவள் "ஏன் சஞ்சய் இந்தப் பக்கம் போற?" என்றுக் கேட்டாள்.

"சொல்லுறேன்" என்றுக் கூறி அமைதியாக காரை ஓட்டியவன் சிறிது நேர பயணத்திற்குப் பின் ஒரு தெருவின் உள்ளே காரை செலுத்தினான்.

அவன் வந்திருக்கும் இடத்தைப் பார்த்ததும் "சஞ்சய்... இது..." என்று என்ன கூறுவதென்றுத் தெரியாமல் விழித்தாள் அனன்யா.

காரை ஒரு வீட்டின் முன் நிறுத்தி அவளை இறங்க சொல்லி கேட்டின் முன் அழைத்துச் சென்றான் சஞ்சய். பான்ட் பாக்கேட்டிலிருந்து சாவியை எடுத்து அவள் கையில் கொடுத்து கதவை கைக் காட்டினான். கையிலிருந்த சாவியையும் அவனையும் மாறி மாறிப் பார்த்தாள் அனன்யா.

"லோன் சாங்க்ஷன் ஆகிடுச்சு அனு... போன வாரம். உனக்கு சர்ப்ப்ரைஸா இருக்கணும்னு தான் எல்லா வேலையும் முடிச்சுட்டு இங்கக் கூட்டிட்டு வந்தேன். ஓபன் பண்ணு ஸ்வீடி" என்று மலர்ந்த முகத்துடன் கூறினான் சஞ்சய்.

சட்டென்று சஞ்சய்யை தாவிக் கட்டி அணைத்துக் கொண்டாள் அனன்யா. "போச்சு போச்சு... யாராவதுப் பாக்கப் போறாங்க..." என்றுக் கூறினாலும் தானும் அவளை அணைத்துக் கொண்டான்.

அனன்யா அமைதியாகவே இருந்தாள். அந்த அணைப்பிலிருந்து விலக இருவருக்குமே மனம் இல்லாமல் போனது.

சஞ்சய் தலை திருப்பி "அனு யாரோ வராங்க" என்றுக் கூறவும் அவசரமாக அவனை விட்டு விலகி நின்று சுற்றும் முற்றும் பார்த்தாள்.

தெருவில் யாரும் இல்லை என்றதும் "போ சஞ்சய்" என்றுக் கூறி அவன் சட்டை காலரின் நுனியைப் பிடித்து இழுக்க ஆரம்பித்தாள்.

"டி ஷர்ட் எல்லாத்தையும் வீணாக்கிட்ட... இப்போ சட்ட காலரையும் பிடிச்சு இழுக்க ஆரம்பிச்சுட்டியா?"

"அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல..." என்றுக் கூறி கையிலிருந்த சாவிக் கொண்டு வீட்டைத் திறந்தாள்.

உள்ளே நுழைந்ததும் "வீடு உன் செலெக்ஷன் தான்... எப்போ இங்க வரப் போறோம்?" என்றுக் கேட்டபடியே அவள் பின்னால் சென்றான்.

"நெக்ஸ்ட் வீக்? லெட்ஸ் ஷிப்ட் ஆன் பர்ஸ்ட் சஞ்சய்"

"அதுக்குள்ள எல்லாம் பேக் பண்ணிட முடியுமா?" ஒரு வீட்டையே மூட்டைக் கட்ட வேண்டுமே என்ற கவலை அவனுக்கு.

"நீ ஹெல்ப் பண்ண மாட்டியா என்ன?" என்றுத் தலை சாய்த்துக் கேட்டாள் அனன்யா.

புன்னகையுடன் "நெக்ஸ்ட் வீக்ல ஒரு நாள் லீவ் போட்டு பேக் பண்ண ஹெல்ப் பண்ணுறேன். அது போக வீக்கென்ட்லயும் பேக் பண்ணுவோம்" என்றான் சஞ்சய்.

வீட்டை ஒரு முறை சுற்றிப் பார்த்து விட்டு அங்கிருந்து கிளம்பினர் இருவரும். தனி வீடு வாங்க வேண்டும் என்பது அனன்யாவின் விருப்பம். அதற்காகவே தான் சஞ்சய் வீட்டு லோன் வாங்க அலைந்துக் கொண்டிருந்தான். கையிருப்பும் கொஞ்சம் இருந்தது.

சில வீடுகளை பார்த்து ஒன்றை வாங்கலாம் என்றும் முடிவு செய்திருந்தனர். இப்போது லோன் கிடைத்ததும் அந்த வீட்டையே வாங்கிவிட்டான் சஞ்சய். அவள் ஆசைக்காக அவன் மெனக்கெட, அவளோ அவனைக் கண்டுக் கொள்ளாமல் போனதால் தான் அன்று அவன் வேதனையுற்றது.

காரில் செல்லும்போது "என்னைக்கு பால் காய்ச்சுறது? க்ரஹப்பிரவேசம் மாதிரி தான் வெக்கணும். அதுக்கு வேற எல்லாரையும் கூப்பிடணுமே..." என்றுக் கேட்டான் சஞ்சய்.

"ஆமா சஞ்சய்... யோசிக்கணும்..." என்றுக் கூறிய அனன்யா அதன் பின் அமைதியாகவே வந்தாள்.

சூப்பர் மார்க்கெட்டிற்குள் நுழைந்ததும் அங்கிருந்த ஒரு ட்ராலியை தள்ளிக் கொண்டே நடந்தவள் தேவையானவற்றை எடுத்து அதில் நிரப்பிக் கொண்டிருந்தாள்.

"அனு நான் போய் உப்பும் சக்கரையும் எடுத்துட்டு வந்துடறேன்..." என்றுக் கூறி வேறு புறம் சென்றான் சஞ்சய்.

ஒரு கூடையில் இன்னும் சில பொருட்களுடன் அவன் திரும்பி அவளிடம் வந்தபோது "சஞ்சய் அம்மாக்கிட்ட பேசிட்டேன். அடுத்த வாரம் புதன் கிழமை நாள் நல்லா இருக்காம். இன்னைக்கு தர்ஸ் டே.

இந்த வீக்கெண்ட் முடிஞ்ச வர பேக் பண்ணிட்டா அடுத்த வாரம் பால் காய்ச்சிட்டு நெக்ஸ்ட் வீக்கெண்ட்ல ஷிப்ட் பண்ணிடலாம். அத்தைக்கிட்டயும் கேட்டேன். அவங்களும் அதான் சொன்னாங்க. அதனால..." என்று பேசிக் கொண்டேப் போனாள் அனன்யா.

"இரு இரு... என்ன அடுக்கிக்கிட்டேப் போற? ஒரு உப்பு பாக்கெட் எடுக்க தானப் போனேன்?? அதுக்குள்ள இவ்வளவு நடந்துடுச்சா??? என்கிட்ட எதுவுமேக் கேக்காம அது எப்படி நீங்களா முடிவுப் பண்ணலாம்?”

சுற்றி ஒரு முறைப் பார்த்த அனன்யா யாரும் தங்களை கவனிக்கவில்லை என்று உறுதிப்படுத்திக் கொண்டு மெதுவாக அவன் அருகில் நகர்ந்துச் சென்று அவனை நெருங்கி நின்று சிறிது எக்கி அவன் காதில் "உனக்கு கோவம் வந்துடுச்சுன்னு நம்பிட்டேன்" என்றுக் கூறி அவனுக்குப் பின்னால் இருந்த சோப்பை எடுத்து அவன் கையில் இருந்த கூடைக்குள் போட்டாள்.

"அங்க இருக்க கேமரால நீ பண்ணதெல்லாம் ரெகார்ட் ஆகிடுச்சு" என்று மேலே கை காட்டி வேகமாகக் கூறித் திரும்பி நின்றான் சஞ்சய். அனன்யா சட்டென்று அவன் கை காட்டிய திசையில் நிமிர்ந்துப் பார்த்தாள். அங்கு எந்த கேமராவும் இல்லை. திரும்பி அவனைப் பார்த்தாள்.

அவன் மும்முரமாக பேஸ்ட்டைத் தேடிக் கொண்டிருந்தான். "சஞ்சய்" என்று பல்லைக் கடித்துக் கூறி அடுத்த அடுக்கை நோக்கி நகர்ந்தாள் அனன்யா.

அவள் முகபாவனையைப் பார்த்து சிரித்துக் கொண்டே அவள் அருகில் வந்து நின்று மசாலா பாக்கெட்டுகளை ஆராயத் துவங்கினான்.

"சிரிக்கறத முதல்ல நிறுத்து"

"முடியலையே...” என்றுக் கூறி மேலும் சில நொடிகள் சிரித்தவன் அவள் முகத்தைப் பார்க்க பாவமாக இருக்கவே “சரி சொல்லு... வீட்டுல என்ன சொன்னாங்க?" என்று பேச்சை மாற்றினான்.

"அதான் சொன்னேனே... நைட் நீ ஒரு வாட்டி பேசிடு... சரியா?"

"ம்ம்... பேசிடுறேன். எல்லாம் எடுத்தாச்சுன்னா பில் போட்டுடலாம் அனு... மணி 7. இப்போக் கெளம்புனா சாப்பிட்டு வீட்டுக்குப் போக சரியா இருக்கும்"

"மைதா மட்டும் மறந்துட்டேன். அத எடுத்துட்டு வந்துடறேன்" என்றுக் கூறி வேகமாக சென்று அதை எடுத்து வந்தாள் அனன்யா. சஞ்சய் பில் போடுவதற்கு வரிசையில் நின்றிருந்தான்.

அனன்யா வந்ததும் அவள் கையில் இருந்தவற்றையும் வாங்கி பில் போட்டு பணம் கட்டி அவற்றை காரில் கொண்டு வந்து வைத்தான்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
Part - 24

ஒரு ரெஸ்டாரண்ட்டின் உள் உணவிற்கு ஆர்டர் கொடுத்து விட்டு அமர்ந்திருந்தனர் இருவரும்.

"யாரெல்லாம் சஞ்சய் கூப்பிடணும்?" என்று பேச்சைத் துவங்கினாள் அனன்யா. கையிலிருந்த மெனு கார்டை மூடி கீழே வைத்து விட்டு "அதையும் வீட்டுலயேக் கேட்டிருக்க வேண்டியது தான?" என்று நக்கல் குரலில் கேட்டான் சஞ்சய்.

"ஐயோ அவங்க ஒரு பெரிய லிஸ்டே சொன்னாங்க. என்ன ஒரு நல்ல விஷயம்... அவங்க யாரையும் நம்ம இன்வைட் பண்ணத் தேவ இல்ல... வீட்டுலயே சொல்லிடுறேன்னு சொல்லிட்டாங்க... நம்ம பிரண்ட்ஸ்னு யாரக் கூப்பிடணும்?"

"அபீஸ்ல டீம்ல இருக்க எல்லாரையும் கூப்பிடணும். உன் பிரண்ட்ஸ் நீ கூப்பிட்டுக்கோ. எனக்கு ஒரு நாலு அஞ்சுப் பேரு இருக்காங்க. உனக்கேத் தெரியுமே... அவங்கள நான் போன் பண்ணிக் கூப்பிடுறேன்"

"நம்ம எல்லாத்தையும் பேக் பண்ணுறதா... இல்ல பங்க்ஷன்கு ஏற்பாடுப் பண்ணுறதா?" பெருமூச்சு விட்டாள் அனன்யா.

"அதெல்லாம் கவலைப்படாத... எல்லாரும் தங்குறதுக்கு எத்தன ரூம் வேணும்னு சொல்லிட்டா என் பிரண்ட் ஒருத்தன்... நம்ம வீட்டுக்கு கல்யாணம் முடிஞ்சு வந்தானே... ஞாபகம் இருக்கா?"

"யாரு? உங்க க்ளோஸ் பிரண்ட்... பட் கல்யாணத்துக்கு வர முடியலன்னு சொல்லி வீட்டுக்கு வந்து கிப்ட் குடுத்தாங்களே..."

"அவன் தான். அவன் ரூம் ஏற்பாடுப் பண்ணிடுவான். அவனுக்குத் தெரிஞ்சவங்க இருக்காங்க. வீட்டு பக்கத்துலயே ரூம்ஸ் புக் பண்ணிட சொல்லலாம். சாப்பாடு வெளியில சொல்லிடலாம். அதுவும் அவனே சொல்லி விட்டுடுவான்.

அதுக்கப்பறம் என்ன வேல இருக்கு? பேக் பண்ணுறதுக்கு நான் ஹெல்ப் பண்ணுறேன் ஸ்வீடி... டோன்ட் வர்ரி" அவள் கையைப் பற்றி அழுத்தினான் சஞ்சய்.

வீடு வந்ததும் முதல் வேலையாக இரு வீட்டாருக்கும் பேசி செய்ய வேண்டியக் காரியங்களை முடிவு செய்தான் சஞ்சய்.

பின் உடை மாற்றி வந்து "அனு கிட்சென்ல அடுக்க வேண்டியத கடைசியா அடுக்கலாம்" என்றான்.

தலைக்கு மேல் இருக் கரங்களையும் தூக்கி கும்பிட்டு "வேணவே வேணாம்... நீ மத்த திங்க்ஸ் அடுக்கு... நான் கிட்சென்ல வெக்க வேண்டியதப் பாத்துக்கறேன்..." என்றுக் கூறி கையில் சில பைகளை எடுத்து சென்றாள் அனன்யா.

"என்னவோ போ... எப்போ உனக்கு ஹெல்ப் பண்ணுறேன்னு சொன்னாலும் விட மாட்டேங்குற..." என்றுக் கூறி மற்ற பைகளில் இருந்த பொருட்களை வெளியே எடுக்கத் துவங்கினான்.

சஞ்சய் கூறிய அளவு எல்லா வேலைகளையும் செய்து முடிப்பது அவ்வளவு எளிதானதாக இல்லை. அவன் காலை கிளம்பிச் சென்றதும் கொஞ்சம் கொஞ்சமாக பொருட்களை எடுத்து பேக் செய்ய ஆரம்பித்தாள் அனன்யா.

ஆனாலும் இன்னும் ஒரு வாரம் இருந்தபடியால் தினம் உபயோகிக்கத் தேவையானவை என்று நிறைய பொருட்களை எடுத்து வைக்க முடியவில்லை.

சஞ்சய் மாலை வந்ததும் மேலே லாப்டில் இருக்கும் பொருட்களை இறக்கிக் கொடுத்தான். அவற்றை எடுத்து அட்டைப் பெட்டிகளில் வைத்து இருவருமாக பேக் செய்தனர்.

தினமும் இரவு உணவை வெளியே வாங்கி வந்தான் சஞ்சய். திங்களன்றே இருவரின் பெற்றோரும் வந்து சேர்ந்தனர். வீட்டில் அவர்களையும் கவனித்துக் கொண்டு, வேலைகள் செய்து, இருந்த பொருட்களை பேக் செய்து, அவற்றை ஒதுக்கி வைத்து என்று அனன்யாவிற்கு நேரம் சரியாக இருந்தது.

செவ்வாய் அன்று மற்ற உறவினர்கள் அனைவரும் வந்து சேர்ந்தனர். அன்று அவர்களை தங்க வைத்து சாப்பிட வைத்து சஞ்சய் வீட்டிற்கு வரவே இரவு மணி பத்தரை ஆகியது.

இருவரின் பெற்றோர்கள் மட்டுமே அவர்களின் வீட்டில் தங்கியிருந்தனர். அடுத்த நாள் சீக்கிரம் எழ வேண்டும் என்பதால் அவர்களும் உறங்கி இருந்தனர். சஞ்சய் கடைக்கு சென்று திரும்பியிருந்தான்.

"சாப்பிட்டியா சஞ்சய்?"

"ம்ம்... நீ சாப்பிட்டியா?"

"ம்ம்... ரெண்டு நாளா உன்ன சரியா கவனிக்கவே இல்ல சஞ்சய்..."

சட்டை பட்டனை கழட்டிக் கொண்டிருந்தவன் "அப்போ வா... கவனி" என்றுக் கூறி அனன்யாவை அணைக்க வந்தான்.

"ஹேய் என்னப் பண்ணுற? வீட்டுல எல்லாரும் இருக்காங்க..." அவசரமாக அவனை விட்டு விலகினாள் அனன்யா.

"அவங்கல்லாம் தூங்கிட்டாங்க அனு" என்றவன் அவளை இழுத்தணைத்தான்.

"எனக்கு எப்போ உன் கூட நிம்மதியா உக்காந்து பேசுவோம்னு இருக்கு பா... சரியாப் பேசவே முடியல..." என்றுக் கூறி அவனை அணைத்தாள் அனன்யா.

"ஹ்ம்ம்..." அவள் நெற்றியில் முத்தமிட்ட சஞ்சய் "தூங்கு அனு... காலையில சீக்கிரம் எழுப்பி விட்டுடுவாங்க..." என்றுக் கூறி அவளை அனுப்பி வைத்தான்.

காலை விடியலுக்கு முன்பே எழுந்த அனைவரும் ஒருவர் பின் ஒருவராகக் குளித்து ஆயத்தமாகத் துவங்கினர். சஞ்சய் முன்னே சென்று புது வீட்டில் ஏற்பாடுகள் செய்வதாகவும் வந்தவர்களை கவனிப்பதாகவும் கூறி முதலில் கிளம்பிச் சென்றான். சிறிது நேரம் கழித்து அனன்யா பெரியவர்களுடன் டாக்ஸியில் கிளம்பி வந்தாள்.

புது வீட்டில் காரிலிருந்து இறங்கிய மனைவியை பார்த்ததும் உறவினர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்த சஞ்சய் பேச்சை நிறுத்தி அவளையே பார்த்தான்.

அனன்யா அருகில் வந்து அவனைக் கடந்து செல்லும்போது "சஞ்சய் என்ன இப்படிப் பாக்குற?" என்று மெல்லியக் குரலில் கேட்டு விட்டு உள்ளே சென்றாள்.

"உக்காருங்க" என்று தான் பேசிக் கொண்டிருந்தவரிடம் கூறி வேகமாக அவள் பின்னோடு வந்தான் சஞ்சய். அனன்யா ஒரு அறையில் பூஜை பொருட்களை எடுத்துத் தட்டில் அடுக்கிக் கொண்டிருந்தாள்.

"அனு...... சான்சே இல்ல... ஸாரீல செமயா இருக்க..." என்றுக் கூறி அவளை அணைக்க வந்தான். அப்போது ஒரு பெண் வந்து வெளியே அவளை அழைப்பதாகக் கூறவும் ஏக்கமாகப் பார்த்தவனை பார்த்து சிரித்து விட்டு வெளியே சென்றாள்.

இருவரும் அருகருகில் அமர்ந்து பூஜைகள் செய்தபோது "அனு... அழகா இருக்க" என்று சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவள் காதில் கூறிக் கொண்டே இருந்தான் சஞ்சய்.

அனைவரும் சாப்பிட அமர்ந்ததும் அனன்யாவும் பரிமாறினாள். அதைப் பார்த்த சஞ்சய் அவ்விடம் வந்து “நானும் பரிமாறுவேன்” என்று கையில் கிடைத்ததை தூக்கிக் கொண்டு அவள் பின்னால் சுற்றிக் கொண்டிருந்தான்.

"சஞ்சய் மானத்த வாங்காத... போய் ஒழுங்காப் பரிமாறு..."

அவள் பேச்சை அவன் கேட்டான் இல்லை. இது சரி வராது என்று நினைத்தவள் பரிமாறுவதை நிறுத்தி விட்டு சென்றாள்.

சஞ்சையும் கையில் இருந்த சாம்பார் வாலியை வைத்து விட்டு அவள் பின்னால் வந்து அங்கிருந்த ஒருவருடன் பேச ஆரம்பித்தான். பேசினானேத் தவிர பேச்சில் கவனமும் இல்லை... பார்வை அவரிடமும் இல்லை... அனன்யா அவ்விடம் விட்டு நகர்கிறாள் என்றதும் அவனும் உள்ளே செல்ல திரும்பினான்.

"எங்க தம்பி?" என்று அவர் கேட்கவும் "தோ வந்துடுறேன் சித்தப்பா" என்று அவரைத் திரும்பிப் பார்க்காமல் கூறினான் சஞ்சய்.

"என்னபா... மாமாவ சித்தப்பான்னு சொல்லுற?" என்று அவர் கேட்கவும் சட்டெனத் திரும்பியவன் அவர் கையைப் பிடித்துக் குலுக்கி "ஒண்ணும் பிரச்சன இல்ல..." என்றுக் கூறி விட்டு நடந்தான்.

"ச்ச... யாருக்கிட்ட பேசுறோம்னுக் கூட பாக்காமலா பேசிக்கிட்டு இருந்தோம்..." என்று யோசித்து அனன்யாவை தேடிச் சென்றான். எவ்வளவு முயன்றும் அவளுடன் பேச முடியவில்லை.

மாலை உறவினர்கள் அனைவரும் கிளம்பிச் சென்றதும் புது வீட்டை பூட்டக்கூடாது என்று சஞ்சய்யையும் அனன்யாவையும் அங்கேத் தங்க சொல்லிக் கூறினர் அவர்களின் பெற்றோர்கள்.

அனன்யா மறுக்கப் போன நேரம் "சரி வாங்க... உங்கள வீட்டுல விட்டுட்டு வந்துடறேன்" என்றுக் கூறி அவர்களை அழைத்துச் சென்றான்.

"ஐயோ இவன் கூட... இன்னைக்கு... தனியாவா???"

காலையிலிருந்து அவன் செய்ததனைத்தையும் யோசித்துப் பார்த்தவளுக்கு சிரிப்பு வந்தது. அதுவும் அவள் அறைக்குள் வந்தவுடன் பின்னாலயே வந்து அணைக்க வந்தபோது வெளியே அழைக்கிறார்கள் என்றதும் அழுது விடுபவன் போல் அவன் பார்த்ததை எண்ணியவள் வாய் விட்டு சிரித்தாள்.

அழைப்பு மணியின் ஓசையில் தன் சிந்தனையிலிருந்துக் களைந்து எழுந்து சென்று கதவைத் திறந்தாள். சஞ்சய் வீட்டினுள் நுழைந்ததும் கதவைத் தாழிட்டு அனன்யாவை இழுத்தணைத்து அவள் இதழில் அழுந்த முத்தமிட்டான்.

"இன்னைக்கு புல்லா நான் பட்ட பாடு...."

"போ சஞ்சய்"

"இனி அடிக்கடி ஸாரீ கட்டு"

"ஏன்?"

"சூப்பரா இருக்கு ஸ்வீடி"

"ம்ம்... கட்டுறேன்... என்கிட்ட நிறைய இல்லையே..."

"வாங்கிடலாம்... உன்னோட அடுத்த கதை முடிச்சதும் ஸாரீ தான்..."

"ம்ம்கும்... ஒரு வாரம் ஆச்சு... லாப்ப தொட்டு... கடைசியா என்ன எழுதனன்னுக் கூடத் தெரியாது... இப்..."

"ஆஹா... தேவ இல்லாம ஆரம்பிச்சு விட்டுட்டோமே..." என்று நினைத்த சஞ்சய் அவளை தன்னை விட்டு விளக்கி "இன்னைக்கு நான் நல்ல மூட்ல இருக்கேன்... ஏற்கனவே ரொம்ப நேரமா வெயிட் பண்ணிட்டேன்..." என்றுக் கூறி அவள் இதழ் நோக்கி குனிந்தான்.

அனன்யாவிற்கும் சஞ்சயின் தேவைத் தெரியுமாதலால் அதற்கு மேல் அவளும் பேசவில்லை.

காலை மொபைலிற்கு வந்த காலில் தான் எழுந்தனர் இருவரும். இரவு சஞ்சய் எடுத்து வந்திருந்த உடையை குளித்து மாற்றிக் கொண்டு வீட்டிற்குப் புறப்பட்டனர்.

வீட்டில் சாப்பாடுத் தயாராக இருந்தது. எல்லோரும் அமர்ந்து சாப்பிட்டு முடிக்கவும் பொருட்களை ஏற்றி செல்ல வண்டி வரவும் சரியாக இருந்தது.

சமைத்து முடித்து அடுப்பையும் மற்ற பாத்திரங்களையும் பேக் செய்து வைத்திருந்தனர் அனன்யாவின் அம்மாவும் அத்தையும். அவற்றையும் வண்டியில் ஏற்றி சஞ்சய் முன்னே செல்வதாகக் கூறி அந்த வண்டியிலேயே சென்றான்.

வீட்டைப் பூட்டி விட்டு அனன்யா பின்னே காரில் மற்றவர்களை அழைத்து வந்தாள். இவர்கள் அந்த புது வீட்டை அடையும்போதே மணி 11.30 ஆகியிருந்தது. மீண்டும் பொருட்களை அங்கே இறக்கி வைத்து வண்டிக்கு பணத்தைக் கொடுத்து நிமிர்ந்தபோது மணி 2 ஆகியது.

சஞ்சய் சென்று முதலில் சாப்பிட ஏதாவது வாங்கி வருவதாகக் கூறினான். அனைவரும் அமர்ந்து சாப்பிட்டு வீட்டில் அனைத்தயும் அடுக்க ஆரம்பித்தனர்.

எவ்வளவு சொல்லியும் அடுத்த நாள் கிளம்புவதாக இரு பெற்றோர்களுமே கூறி விட்டதால் அன்றிரவு சமைத்து, உறங்குவதற்குத் தேவையான பொருட்களை மட்டும் அடுக்கி வைத்து சீக்கிரமேப் படுத்தனர்.

காலை வேலை அனன்யாவிற்கு மூச்சு விடவும் நேரமில்லாமல் போனது. ஊருக்குக் கிளம்பியவர்களை வழி அனுப்பி வைத்து சஞ்சய்க்கு காலை உணவை செய்து மதியத்திற்கு சாப்பாடு பேக் செய்து என்று பம்பரமாக சுழன்றுக் கொண்டிருந்தாள்.

தான் வெளியில் சாப்பிட்டுக் கொள்வதாக அவன் எவ்வளவுக் கூறியும் அவள் கேட்கவில்லை. அனைவரும் கிளம்பிச் சென்றபோது வீட்டில் புயல் அடித்து ஓய்ந்தது போல் இருந்தது.

பாத்திரங்களை மட்டும் கழுவி வைத்து விட்டு காரை எடுத்துக் கொண்டு கிளம்பி தங்கள் பழைய வீட்டிற்கு சென்றாள். வீட்டின் சாவியை ஓனரிடம் கொடுத்து விட்டு இன்னும் வாங்க வேண்டிய சில பொருட்களை கடைக்குச் சென்று வாங்கி வந்தாள்.

சஞ்சய் வருவதற்குள் எடுத்து வைக்க வேண்டியவற்றை எடுத்து அடுக்க ஆரம்பித்தவள் மூன்று மணிக்கு மேல் களைப்பு மிகுதியால் உறங்கியும் போனாள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
Part - 25

சஞ்சய் வந்து இரண்டு முறை பெல் அடித்தும் அனன்யா கதவை திறக்காததால் தன்னிடம் இருந்த சாவியைக் கொண்டு கதவைத் திறந்து உள்ளே வந்தான்.

ஹாலில் தோளிலிருந்த பையை வைத்து விட்டு சமையலறையை ஒரு முறைப் பார்வையிட்டவன் படுக்கையறைக்குள் சென்றான். அனன்யா நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள்.

அவளை எழுப்ப வேண்டாம் என்று முடிவு செய்து மீண்டும் வீட்டைப் பூட்டி வெளியே சென்று இரவு உணவை வாங்கி வந்தவன் உணவை டைனிங் டேபிளில் வைத்து விட்டுக் குளித்து முடித்து வெளியே வந்து அவள் அருகில் அமர்ந்தான்.

அனன்யா இந்த இரு தினங்களாக எவ்வளவு வேலை செய்தாள் என்று அவனுக்கும் தெரியுமே... அவள் தலை கோதியபடி "அனு" என்று மென்மையாக அழைத்தான். மிகவும் சிரமப்பட்டு கண்களைத் திறந்துப் பார்த்தவள் அருகில் சஞ்சையை கண்டதும் வேகமாக எழுந்து அமர்ந்தாள்.

"எப்போ வந்த சஞ்சய்?"

"கொஞ்ச நேரம் முன்னாடி"

"எழுப்பி இருக்கலாம்ல... இரு காபி போடுறேன்..." என்றுக் கூறி கட்டிலிலிருந்து இறங்கினாள்.

"சாப்பிடலாம் அனு. மணி எட்டாச்சு"

"அவ்வளவு நேரம் ஆகிடுச்சா? சாரி சஞ்சய்... நல்லா தூங்கிட்டேன்"

"பரவாயில்ல அனு. எவ்வளவு டயர்டா இருக்கும்? நானும் இன்னைக்கு லேட்டா தான் வந்தேன். நாளைக்கு லீவ் சொல்லிட்டேன். எப்படியும் நீ தனியா எல்லாம் செய்யணும். இப்போ சாப்பிட்டு தூங்கு. நாளைக்கு நானும் ஹெல்ப் பண்ணுறேன்"

"இல்ல சஞ்சய். கிச்சென்ல மட்டும் இன்னும் கொஞ்சம் திங்க்ஸ் அடுக்கிடுறேன். நாளைக்கு மத்தது அடுக்கலாம்"

"வேணாம் அனு... நீ..."

"இப்போ இவ்வளவு நேரம் தூங்கிட்டேன் சஞ்சய். நைட் சீக்கிரம் தூக்கம் வராது"

"சொன்னாக் கேளு. நாளைக்கு அடுக்கலாம். வா சாப்பிடு" என்று அழுத்தமாகக் கூறி அறையை விட்டு வெளியே சென்றான் சஞ்சய்.

அனன்யா முகம் கழுவி விட்டு வர அவளை அருகில் அமருமாறுக் கூறியவன் அவளுக்கு ஊட்டி விட்டு சாப்பிட்டு முடித்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தான்.

படுத்து சில நொடிகளிலேயே உறங்கிப் போனாள் அனன்யா.

"படுத்ததும் தூங்கிட்டு... இதுல நைட் தூக்கம் வராதுன்னு வேற சொல்லுறா..." அவளை பார்க்க சிரிப்பு வர அவள் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டான்.

வெள்ளியன்று முழுவதும் பொருட்களை அடுக்குவதிலேயே சென்றது இருவருக்கும். சஞ்சையும் விடுப்பு எடுத்து உதவியதால் ஒரே நாளில் அனைத்தையும் எடுத்து வைத்தாள் அனன்யா.

சனிக்கிழமை எழும்போதே "இன்னைக்கு எங்கயாவதும் வெளியில போகலாமா அனு?" என்றுக் கேட்டான் சஞ்சய்.

"மூவி போகலாம் சஞ்சய். ரொம்ப நாள் ஆச்சு..."

"ம்ம்... ஓகே... நேத்து ரிலீஸ் ஆன படம் நல்லா இருக்குன்னு சொன்னாங்க. டிக்கெட் இருக்கான்னுப் பாக்குறேன்" என்றுக் கூறி எழுந்து பல் விளக்கி வந்து நெட்டில் டிக்கெட் கிடைக்கிறதா என்றுப் பார்த்தான் சஞ்சய்.

அவர்கள் போக நினைத்த படம் ஓடும் திரையரங்குகளை அலசியவன் "டிக்கெட் இருக்கு அனு... மதியம் போகலாம்... இப்பவே மணி 11 ஆகப் போகுது. ஓகே வா" என்றான்.

"ஓகே”

படம் பார்த்து திரும்பியதும் வெளியே சுற்றி வந்தக் களைப்புத் தீர குளித்து விட்டு அன்றிரவு நீண்ட நாட்களுக்குப் பின் லாப்பை எடுத்து வைத்துக் கொண்டு அமர்ந்தாள்.

"எத்தன நாள் ஆச்சு? எல்லாத்தையும் மறுபடியும் யோசிக்கணும்" என்றுக் கூறி அதை ஆன் செய்தாள். சஞ்சய் அவள் புறம் திரும்பிப் படுத்து அவள் செய்வதனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான்.

அனன்யா மும்முரமாக இது வரை டைப் செய்து வைத்திருந்ததை படிக்க ஆரம்பித்தாள். அவளுக்கே அவள் டைப் செய்திருந்தது அனைத்தும் புதிதாகத் தெரிந்தது.

"ஐயோ யாரோ எழுதுன கதைய படிக்குற மாதிரி இருக்கே... நம்மளா இப்படியெல்லாம் டைப் பண்ணோம்?" என்று யோசித்துக் கலவரமானாள்.

"உண்ண மறந்து விட்டேன் உன் இளமை என்னை விருந்துக்கு அழைத்ததால்..."

சட்டென்று அவனைத் திரும்பிப் பார்த்தவள் "சஞ்...ஜய்...... நீ கவிதை எல்லாம் சொல்லுவியா?” என்று விழி விரித்துக் கேட்டாள்.

உடனே விழுவது போல் பாவனை செய்து கவிழ்ந்துப் படுத்தவன் "உறங்க மறந்து விட்டேன் நீ கதை எழுத ஆரம்பித்ததால்..." என்றான்.

"போ சஞ்சய்... வெளயாடாத" என்றுக் கூறி மீண்டும் கதையை படிக்க ஆரம்பித்தாள் அனன்யா.

தலையைத் தூக்கி "உனக்கு என்ன பாத்தா பாவமாவே இல்லையாடி?" என்றுக் கேட்டான்.

"இல்லையே..." என்றுக் கூறி சிரித்து விட்டு லாப்பை பார்த்தவள் "எப்படியும் இதுல ஒண்ணும் புரியல..." என்று நினைத்து அதை மூடி வைத்து விட்டுப் படுத்தாள்.

"அதுக்குள்ள படுத்துட்ட?"

"பேசாமத் தூங்கு" என்றுக் கூறி கண்களை மூடிக் கொண்டாள் அனன்யா. "ஹ்ம்ம்... கவித சொன்னா உடனே தூங்கிடுவியா? இது நல்லா இருக்கே... ஆனா நான் ஒளருறதை எல்லாம் கவிதைன்னு நீதான் சொல்லிக்கணும்"

அவனை ஒரு முறை பார்த்து புன்னகைத்தவள் "நாளைக்கு உக்காந்து மறுபடியும் முதலேருந்துப் படிச்சுப் பாக்கணும்" என்று முடிவெடுத்து உறங்கினாள்.

சஞ்சய் கட்டிலில் அனன்யாவின் அருகில் மடியில் தலையணை வைத்து அமர்ந்துத் தன் இரு கன்னங்களையும் இரு கைகளில் தாங்கி அமைதியாக அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அனன்யா அவனை ஒரு முறை நிமிர்ந்துப் பார்த்து முறைத்து விட்டு மீண்டும் தீவிரமாக லாப்பை வெறித்தாள்.

இரண்டு நிமிடம் கழித்து "சஞ்சய்... இப்போ எதுக்கு இப்படிப் பக்கத்துல உக்காந்து இப்படிப் பாத்துக்கிட்டு இருக்க?" என்றுக் கேட்டு லேப்பில் வேகமாக எதையோத் தட்டினாள்.

"என்ன அனு பண்ணுற?"

"காலையிலேருந்து சொல்லிக்கிட்டு இருக்கேன்... இப்போ ஏதோ புதுசா கேக்குற?"

"காலையிலேருந்து என்ன சொன்ன?"

"எனக்கு இந்த கதை எப்படி எழுதணும்னு யோசிச்சேன்னே மறந்துப் போச்சு"

"அச்சச்சோ... இப்போ என்ன பண்ணப் போற?"

திரும்பி சஞ்சய்யை முறைத்தாள் அனன்யா. அவன் முகத்தை பாவமாக வைத்து கன்னங்களை கைகளில் தாங்கியபடியே அமர்ந்திருந்தான்.

"தெரியல"

"இது வர எழுதுனத படிச்சுப் பாரு... அப்போப் புரியும்ல"

"இது வர எழுதுனதெல்லாம் எதுக்கு எழுதுனேன்னேத் தெரியல... அப்படியேப் புரிஞ்சாலும் இதுக்கு அப்பறம் என்ன எழுதணும்னு ஓட மாட்டேங்குது" என்றுக் கூறி தன் தலையில் கை வைத்தாள் அனன்யா.

காலையிலிருந்து எவ்வளவு யோசித்தும் ஒன்றும் பிடிப்படாத எரிச்சல் மனதில் மண்டிக் கிடந்தது. ஒரு சில வினாடிகளில் மனதில் மின்னல் வெட்ட சட்டென்று அவனைத் திரும்பிப் பார்த்து "சஞ்சய்... இந்த கதை நீ தான சொன்ன? இது வர நான் எழுதுனதப் படிச்சல்ல? சொல்லு... எப்படி எழுதணும்?" என்றுக் கேட்டாள்.

"கத எங்க ஸ்வீடி நான் சொன்னேன்? நீ தான் எல்லாத்தையும் சொன்ன..."

"உன்னக் கொண்ணுடுவேன்... எனக்கு இது எழுத வராதுன்னு சொன்னேன்... என் வாயக் கெளறி... ‘நீ இந்த கத எழுதுவப் பாரு’ன்னு சேலஞ்ச் பண்ணி..."

"ஆமா... அதான் எழுத ஆரம்பிச்சுட்ட இல்ல?"

"நான் இதுக்கப்பறம் என்ன எழுதப் போறேன்னு சொன்னேன்? சொல்லு..."

"நீ என்ன எழுதப் போறேன்னு எனக்கு எப்படி அனு தெரியும்?"

அருகிலிருந்த தலையணையை எடுத்து அவன் மீது தூக்கி போட்டு "நான் உன்கிட்ட சொன்னேன்... சொல்லு" என்றாள் அனன்யா.

சில நொடிகள் அமைதியாக அவளைப் பார்த்தவன் "அந்த பொண்ணு கொலை செஞ்சவன லவ் பண்ணுவா... ஆனா கடைசில அவன அரெஸ்ட் பண்ணதும் அந்த போலீஸ் ஆபீசர கல்யாணம் பண்ணிக்குவான்னு சொன்ன" என்றான் சஞ்சய்.

நெற்றி சுருக்கி தலைக் குனிந்து யோசித்தவள் சட்டென்று நிமிர்ந்து "இப்படியெல்லாம் நான் யோசிச்சிருக்க மாட்டேன்... மு... முதல்ல கன்னத்துலேருந்து கைய எடு நீ..." என்றுக் கூறி அவன் கையை தட்டி விட்டாள்.

"ஒஹ்ஹ்... அப்போ அந்த போலீஸ் ஆபீசர் தான் கொலைப் பண்ணி இருப்பான்னு சொன்னியா?"

"வெளயாடாத சஞ்சய்... ஒழுங்கா சொல்லு... அந்த போலீஸ் ஆபீசர் அந்த பொண்ணு வீட்டுக்கு எதுக்கு போனான்?"

அதன் பின் அரை மணி நேரத்திற்கு சஞ்சய் பலவற்றைக் கூறினான். அவை அனைத்தும் அனன்யாவை மேலும் குழப்புபவையாகவே இருந்தன. அவன் ஒவ்வொன்றாகக் கூற கூற அனன்யா கேள்விக் கேட்டுக் கொண்டே இருந்தாள்.

ஒரு கட்டத்திற்கு மேல் சஞ்சய் தன்னை நன்றாகக் குழப்புகிறான் என்றுப் புரிந்து "நீ கொஞ்ச நேரம் அமைதியா இரு... நானே யோசிச்சுக்குறேன்..." என்றாள் அனன்யா.

ஆனால் அப்போதும் அவன் எதையாவது சொல்லிக் கொண்டே இருக்க அனன்யா தலையைப் பிடித்துக் கொண்டு "நான் கதையே எழுதலப் போ... எதக் கேட்டாலும் மாத்தி மாத்தி சொல்லுற…" என்றுக் கூறி கட்டிலை விட்டு இறங்கினாள்.

"அப்ப்ப்ப்பாடா..." என்றவன் வேகமாக எக்கி மெத்தையின் அருகில் இருந்த சுவிட்ச்சை தட்டி விளக்கை அணைத்தான்.

அறையை விட்டு வெளியேறிக் கொண்டே "இப்போ எதுக்கு லைட் ஆப் பண்ணுற? தண்ணி தான் குடிக்கப் போறேன்... திரும்ப வந்து எழுதுவேன்…" என்றாள் அனன்யா.

"என்ன பண்ணாலும் விட மாட்டாப் போலயே.... ச்ச..." அலுத்துக் கொண்டே தலை வரை இழுத்துப் போர்த்திப் படுத்தான் சஞ்சய்.

திரும்பி வந்த அனன்யா லாப்பை எடுத்து லாப் டேபிளில் இருந்த ஒற்றை விளக்கை ஆன் செய்து மீண்டும் தான் எழுதியதை பொறுமையாக வாசித்தாள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
பாரதி - 26

நள்ளிரவிற்கு மேல், தான் எழுத நினைத்த அனைத்தும் முழுவதுமாக நினைவிற்கு வரா விட்டாலும் இனி அந்த கதையை எப்படிக் கொண்டுப் போக வேண்டும் என்று அனன்யாவால் ஒரு முடிவுக்கு வர முடிந்தது. அதைத் தனக்கு புரியும்படிக் குறிப்பெழுதி வைத்தாள்.

இனி கதையை எழுதி விடலாம் என்ற நம்பிக்கை வரவே லாப்பை மூடி வைத்து வந்து படுத்தாள். அருகில் படுத்திருந்த சஞ்சய் நல்ல உறக்கத்தில் இருந்தான். முக்காடு போட்டு தூங்கிக் கொண்டிருந்தவனின் போர்வையை மெல்ல விளக்கினாள்.

முகத்தை மூடாமல் அவனுக்குப் போர்த்தி விட்டு அவன் நெற்றியில் முத்தமிட்டு "கொஞ்ச நேரத்துல தல சுத்த வெச்சுட்ட... உன்ன வெச்சுகிட்டு..." என்றுக் கூறி அவன் மூக்கை பிடித்து லேசாக ஆட்டி விட்டு அவனைப் பார்த்தபடியேப் படுத்து உறங்க ஆரம்பித்தாள்.

அடுத்த நாள் மாலை அலுவலகத்திலிருந்துத் திரும்பி வந்த சஞ்சய்யிடம் தன் லாப்பை கொடுத்துப் படிக்க சொல்ல அவன் அமைதியாக படித்துக் கொண்டிருந்தான்.

"பரவாயில்ல... எவ்வளவு கொழப்புனாலும் கரெக்டா யோசிச்சு எழுதிட்ட... நல்லா இருக்கு அனு. I appreciate it"

"காலையிலேருந்து பொறுமையா யோசிச்சேன். அதான். சஞ்சய்..."

"என்ன?"

"நீ படிச்சல்ல... இந்த எடத்துல நீ இருந்தா என்ன சொல்லி இருப்பன்னு சொல்லு சஞ்சய். நான் நெறைய யோசிச்சேன்... ஆனா எதுவும் எனக்குப் பிடிக்கல..."

"நான்..."

அவனை ஆர்வமாகப் பார்த்தாள் அனன்யா. அவளின் ஆர்வம் புரிந்து "ஒஹ்ஹ்... நான் உனக்கு சொல்லணுமா?" என்று யோசித்து "சொல்ல முடியாது" என்றுக் கூறி எழுந்து சென்றான்.

"சஞ்சய் ப்ளீஸ் சஞ்சய்

"சொன்னா எனக்கு என்னத் தருவ?"

"எப்போப் பாரு உனக்கு ஏதாவதுக் குடுக்க முடியாது போ"

"சரி" என்றுக் கூறி பிரிட்ஜிலிருந்து தண்ணீரை எடுத்துப் பருகினான் சஞ்சய். இரண்டே நொடிகளில் அவனிடம் வந்த அனன்யா "சொல்லு சஞ்சய்" என்றாள்.

"எனக்கு என்ன தருவன்னு சொல்லு"

"உனக்குப் புடிச்ச சிக்கென் பிரியாணி பண்ணி தரேன்"

"நாளைக்கு?"

"ஓகே... பண்ணித் தரேன்"

சிறிது நேரம் யோசித்த சஞ்சய் அந்த இடத்தில் என்ன எழுதலாம் என்றுக் கூறினான். "தேங்க்ஸ் சஞ்சய்" என்றவள் சென்று அதை தனக்குப் பிடித்த மாதிரி டைப் செய்ய ஆரம்பித்தாள்.

சிறிது நேரத்தில் லாப்பை அவனிடம் நீட்டி "படிச்சுட்டு சொல்லு சஞ்சய்" என்றாள். அதை வாங்கிப் படித்தவன் "எப்படி இருக்குன்னு சொல்லணும்னா எனக்கு என்னத் தருவ?" என்றான்.

"சஞ்சய் இதெல்லாம் ஓவர் சஞ்சய்... இப்போ தான சிக்கென் பிரியாணி செஞ்சுத் தரேன்னு சொன்னேன்?"

"அது நான் சொன்ன விஷயத்துக்கு. இப்போ நான் படிச்சதுல ஒரு தப்பு இருக்கு. அது என்னன்னு சொல்லணும்னா என்ன தருவ?"

வேகமாக தான் எழுதியதை படித்துப் பார்த்த அனன்யா "இல்ல… இதுலத் தப்பு எதுவும் இல்ல." என்றாள்.

"இருக்கு... என்னன்னு சொல்லணும்னா எனக்கு ஏதாவது வேணும்..."

"ஓகே அடுத்த வாரம் உன்னோட ப்ராஜெக்ட் ப்ரெசெண்டேஷன் இருக்குல்ல? அதுக்கு நான் ப்ரிபேர் பண்ணித் தரேன். எனக்கும் அந்த ப்ராஜெக்ட் பத்தித் தெரியும்ல..."

"இது ஓகே" என்றுக் கூறி அவள் எழுதியதிலிருந்த தவறை சுட்டிக் காட்டினான் சஞ்சய்.

"ச்ச... இப்படி மாத்தி எழுதிட்டேனா? தேங்க்ஸ் சஞ்சய்" என்றவள் அதை சரி செய்தாள்.

சொன்னதுப் போலவே அடுத்த இரு தினங்களில் அவனின் ப்ரெசெண்டேஷனுக்கு தேவையான டாகுமெண்ட் அனைத்தையும் தயார் செய்துக் கொடுத்தாள் அனன்யா.

கதை எழுதாமல் தனக்காக மெனக்கெடும் மனைவியை பார்க்க சஞ்சய்க்கு பெருமையாக இருந்தது.

"என்ன இருந்தாலும் நமக்காக செய்யுறா..." என்று நினைத்தவன் அருகில் அமர்ந்து அவள் சந்தேகங்களைத் தீர்த்து வைத்து அவளுக்கு உதவினான்.

ப்ரெசெண்டேஷன் இருந்த அன்று மாலை வீடுத் திரும்பிய சஞ்சய் மிகவும் சந்தோஷமாகக் காணப்பட்டான்.

"தேங்க்ஸ் அனு. நீ ப்ரிப்பேர் பண்ணி குடுத்த டாகுமென்ட்ஸ் எல்லாம் எனக்கு எவ்வளவு ஹெல்ப் புல்லா இருந்துதுத் தெரியுமா?"

"நீ எனக்காக எவ்வளவோ செய்யுற சஞ்சய். இது ஒரு சின்ன வேலை தான? இந்தா... காபி குடி. நான் அதுக்குள்ள அயர்ன் பண்ணிட்டு இருந்தத முடிச்சுடுறேன்"

அன்று ஆபீசில் நடந்தவற்றையும் தனக்குக் கிடைத்த பாராட்டுக்களையும் அவளிடம் கூறினான்.

"இன்னைக்கு நான் சமைக்கப் போறேன்"

சஞ்சய்யை ஆச்சர்யமாகப் பார்த்தாள் அனன்யா.

"நெஜமா அனு. ம்ம்... உனக்கு என்னோட ட்ரீட். நீ என் பக்கத்துல நில்லு போதும். நான் டின்னெர் ரெடிப் பண்ணுறேன்" என்றுக் கூறி சமையலறைக்குள் புகுந்துக் கொண்டான். அனன்யா அவனுடன் பேசிக் கொண்டு அவன் அருகில் நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

சாப்பாடு தயார் செய்து டைனிங் டேபிளில் எடுத்து வைத்தான் சஞ்சய். "தேங்க்ஸ்" என்றுக் கூறி அவனை ஒரு முறை இறுக்கி அணைத்தாள்.

"கதை எது வரைக்கும் எழுதி இருக்க அனு?"

தான் எழுதிய, எழுத யோசித்திருக்கும் விஷயங்களைக் கூறினாள். சஞ்சய் தனக்குத் தோன்றிய சில மாற்றங்களைக் கூறினான். அனன்யா அவற்றுள் எதை எழுதலாம், எதை எழுத முடியாது, ஏன் எழுத முடியாது என்பதை எல்லாம் அவனுக்கு விளக்கினாள்.

சாப்பிட்டு முடித்ததும் தானே பாத்திரங்களை கழுவுவதாகக் கூறி வேலை செய்துக் கொண்டே அனன்யா கூறியவற்றைக் கேட்டுக் கொண்டிருந்தான் சஞ்சய். அனைத்தையும் முடித்து "நீ தூங்கு அனு. நான் டி வீ பாக்கப் போறேன்" என்றுக் கூறி அதை ஆன் செய்து ஹாலில் அமர்ந்தான்.

"நானும் உன் கூட உக்காந்துப் பாக்குறேன் சஞ்சய்" என்றுக் கூறி அவன் அருகில் அமர்ந்தாள் அனன்யா.

"அப்பறம் ‘நான் யோசிச்சதெல்லாம் மறந்துப் போயிடுச்சு... நேத்தே டைப் பண்ணி இருக்கணும்... எல்லாம் உன்னால தான்’னு நாளைக்கு சொல்ல மாட்டியே?" என்றுக் கேட்டு சிரித்தான்.

"அதெல்லாம் ஒண்ணும் இல்ல... இது மறக்காது"

"இப்போ நல்லா தான் பேசுவ... நாளைக்கு தெரியும்..." என்றுக் கூறி தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருந்த நிகழ்ச்சியில் மூழ்கினான் சஞ்சய்.

இரண்டு நாட்கள் எந்த வித மாற்றமும் இல்லாமல் செல்ல சஞ்சயின் அருகில் வந்து அமர்ந்திருந்தாள் அனன்யா. தன்னை கண்டுக் கொள்ளாமல் அருகல் அமர்ந்து அவனுடைய லாப்பில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தவனை ஓரக் கண்ணால் பார்த்தாள்.

"இரண்டு நாளா வீட்டுக்கு வந்தும் வேல பாக்குறான்... ச்ச... படிச்சுப் பாத்து எப்படி இருக்குன்னு சொல்ல சொன்னா டைம் கெடைக்குறப்போ படிக்குறேன்னு சொல்லுறான்... இது எப்படி எழுதி இருக்கேன்னு ஒரு ஐடியாவே வர மாட்டேங்குது..." என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டிருந்தாள்.

சலிப்புடன் லாப்பை கையில் தூக்கிக் கொண்டு டைனிங் ஹாலிற்கு சென்று அங்கு அமர்ந்து டைப் செய்ய ஆரம்பித்தாள். சிறிது நேரத்திலேயே வேகம் குறைந்து தொய்ந்து "ஒண்ணும் ஓட மாட்டேங்குது..." என்ற எண்ணம் தோன்ற எழுந்து வந்து சஞ்சய்யின் அருகில் சோபாவில் அமர்ந்தாள்.

"சஞ்சய்" என்று அவனை அழைத்து அவனின் டி ஷர்ட்டின் காலர் நுனியை பிடித்து இழுக்க ஆரம்பித்தாள். வேலை பார்த்துக் கொண்டே அவளை நிமிர்ந்துப் பார்க்காமல் "ஆரம்பிச்சுட்டியா நீ?" என்றான் சஞ்சய்.

"அது இல்ல சஞ்சய்..."

"ம்ம்"

"நீ படிச்சுப் பாத்து சொல்லு பா... நீ படிக்காததுனால தான் எனக்கு எழுதவே வர மாட்டேங்குது..."

"இப்போ முடியாது அனு"

தலையை தொங்கப் போட்டு அவ்விடம் விட்டு எழுந்து சென்றாள் அனன்யா. அவள் முதுகை வெறித்த சஞ்சய்க்கு பாவமாக இருந்தது. அவளும் இரண்டு நாட்களாக கெஞ்சிக் கொண்டிருக்கிறாள். ஆனால் என்ன செய்ய... அவனுக்கு வேலை அதிகம் இருந்தது.

லாப்பை தூக்கிக் கொண்டு டைனிங் ஹாலிற்கு சென்றான். டேபிளில் தன்னுடைய லாப்பை வைத்ததும் அனன்யா ஆர்வமாக "படிச்சு சொல்லு சஞ்சய்" என்றாள்.

அவளுடைய லாப்பை கையில் எடுத்து அதை ஒரு முறை பார்த்து விட்டு கீழே வைத்து "ஆங்... படிச்சுட்டேன்... நல்லா இருக்கு... எழுது..." என்றுக் கூறி அவனுடைய லாப்பின் முன் அமர்ந்து வேலை பார்க்க ஆரம்பித்தான்.

இடுப்பில் கை வைத்து அவனை சிறிது நேரம் முறைத்தவள் சஞ்சய் அவளை நிமிர்ந்தும் பார்க்கவில்லை என்றதும் வேகமாகத் திரும்பி சமையலறைக்குள் சென்றாள்.

"இப்போ எதுக்கு இவ்வளவு வேகமாப் போறா?" என்று யோசித்து ஒரு முறை நிமிர்ந்து அவளைப் பார்த்தவன் மீண்டும் வேலையில் மூழ்கினான்.

சென்ற வேகத்தில் வெளியே வந்த அனன்யா "ஆங்... சமைச்சாச்சு... சாப்டுக்கோ..." என்றுக் கூறி சேரில் அமர்ந்து டைப் செய்ய ஆரம்பித்தாள்.

திரும்பி அருகில் அமர்ந்திருந்தவளைப் பார்த்தான் சஞ்சய். "ஏன் இந்தக் கொல வெறி???" என்றக் கேள்வி அவன் பார்வையில் தொக்கி நின்றது.

"எப்பப் பாரு சாப்பாட்டுல கை வெக்குறதே இவளுக்கு வேலையாப் போச்சு..." என்று நினைத்தவன் "இல்லம்மா... வேல இருக்கு... இந்த வேலைய முடிச்சுட்டுப் படிச்சு சொல்லுறேன்... அது வர நீ எழுதுன்னு சொல்ல வந்தேன் அனு. அதுக்குள்ள நீ தப்பாப் புரிஞ்சுக்கிட்ட..." என்றான்.

ஒரு முறை அவனை அலட்சியமாகப் பார்த்த அனன்யா "ம்ம்" என்றுக் கூறி டைப் செய்ய ஆரம்பித்தாள். அவன் கூறியவிதம் சிரிப்பை வரவழைக்க "தேங்க்ஸ்" என்று சஞ்சயின் கன்னத்தில் முத்தமிட்டு எழுந்து சமைக்கச் சென்றாள்.

"நெஜமா சமைக்கப் போறியா?" என்று அவன் குரல் கொடுக்க "ஆமா" என்று உள்ளேயிருந்து கத்தினாள் அனன்யா.

"இன்னைக்கு பஞ்சாயத்து முடிஞ்சுது" என்று பெருமூச்சு விட்ட சஞ்சய் விரைவாக தன் வேலையை முடித்தான்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
Part - 27

அனன்யா சமையலை முடித்து உணவை எடுத்து வந்து டேபிளில் வைத்த நேரம் அவள் எழுதி இருந்ததை படிக்க ஆரம்பித்திருந்தான் சஞ்சய். "நல்லா இருக்கு அனு. இதுக்கு ஏன் இவ்வளவு பயந்த? உண்மையிலேயே நல்லா எழுதி இருக்க" என்றுக் கூறி லாப்பை மூடி வைத்தான்.

"அப்பாடா... இத நீ சொல்லிட்டேன்னா எனக்கு நிம்மதியா இருக்கும். அது வர டென்ஷன் தான்"

"எப்போப் பாரு இதையே சொல்லு"

அது என்னவோ சஞ்சய் படித்துவிட்டு கூறும் வரை அவளுக்கு நிம்மதி இருப்பதில்லை. என்னதான் நினைத்ததை எழுத்தில் கொண்டு வந்து விட்டோம் என்ற திருப்தி இருந்தாலும் சஞ்சய் சொல்லும் வரை அதை முழுதாக அவளால் அனுபவிக்க முடிந்ததில்லை. அதை மாற்றவும் அவள் விரும்பவில்லை.

ஒரு வாரம் உருண்டோடிய நிலையில் சஞ்சய் மாலை வீடு வந்து சேர்ந்தபோது அனன்யா ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருந்தாள். அவன் உள்ளே வந்ததும் அவனைப் பார்த்து லேசாக புன்னகைத்தவள் அதன் பின் மருந்துக்கும் சிரிக்கவில்லை. சஞ்சய் பேசிய எதுவும் அவள் காதுகளில் விழவில்லை என்பதை அவள் முகமே அவனுக்கு சொல்லிற்று.

"என்ன ஆச்சு அனு?"

...

"என்ன ஸ்வீட்டி?"

...

அமைதியாக எழுந்து செல்லும் அனன்யாவை பார்த்த சஞ்சய் அவளை இயல்பாக்க அவளுடன் நின்று அவளை வம்பிழுத்துக் கொண்டிருந்தான். அது ஓரளவு வேலை செய்தது.

சாப்பிடும்போது தட்டில் கோலம் போட்டுக் கொண்டிருந்தவளிடம் இருந்து தட்டை வாங்கி தானே அவளுக்கு ஊட்டினான். அப்போதும் அவளை அமைதியாக இருக்க விடாமல் ஏதாவதுக் கேட்டு பேச வைத்தான். அனன்யாவும் ஓரிரு வார்த்தைகளில் பதில் சொன்னாள்.

இரவு படுக்கையில் லாப்பை எடுத்து வைத்து அதை வெறித்துக் கொண்டிருந்த அனன்யா சிறிது நேரத்தில் அதை மூடி வைத்து விளக்கை அணைத்தாள். அவள் கட்டிலின் அருகில் சென்றபோது அங்கு படுத்திருந்த சஞ்சய் அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.

தன் இடது கையை நீட்டி கண்களை மூடி திறந்து அவளை அருகில் அழைத்தான். அனன்யா அவன் கைகளுக்குள் படுத்து அவன் தோளில் தலை வைத்துக் கொண்டாள்.

சஞ்சய் அவளை அணைத்தவாறே அமைதியாக அவள் முதுகில் தட்டிக் கொடுக்க ஆரம்பித்தான். சிறிது நேரத்தில் கண்கள் சொருக உறங்க ஆரம்பித்தாள் அனன்யா.

அவள் நன்றாக உறங்கியதும் அவளை விட்டு எழுந்துச் சென்று அவளுடைய லாப்பை எடுத்தவன் அரை மணி நேரம் கழித்து வந்து அவள் அருகில் படுத்து உறங்கிப் போனான்.

அடுத்த நாள் விடுமுறையாதலால் காலை நன்றாக உறங்கிக்கொண்டிருந்த அனன்யாவை தட்டி எழுப்பினான் சஞ்சய். உறக்கம் களைந்து எழுந்தவள் வெளியே இன்னும் இருள் கவிழ்ந்திருப்பதைக் கண்டாள்.

குழப்பமாக சஞ்சய்யை நோக்கியவளை "கிளம்பு அனு" என்றுக் கூறி கையைப் பிடித்துக் கட்டிலிலிருந்து எழுப்பினான். ஒன்றும் புரியாதபோதும் எழுந்து அவன் கூறியபடி குளித்துக் கிளம்பினாள் அனன்யா.

பைக்கை கடற்க்கரை நோக்கி செலுத்தினான் சஞ்சய். கடற்க்கரை ஓரமாக சிறிது தூரம் பைக்கிலேயே அழைத்துச் சென்றவன் ஓரிடத்தில் நிறுத்தி அனன்யாவை இறங்க சொன்னான்.

வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு சஞ்சய் கடலை நோக்கி நடக்க ஆரம்பிக்க அவனோடு அமைதியாக நடந்து வந்தாள் அனன்யா. அலைகள் நனைக்க முடியாத தூரத்தில் மணலில் அமர்ந்தான்.

ஒரு முறை தாங்கள் நடந்து வந்த தூரத்தை திரும்பிப் பார்த்தவள் அமைதியாய் அவன் அருகில் அமர்ந்தாள். அதிகாலை நேரம் நடைபயிற்சி செய்ய சிலர் வந்திருந்தனர். சிலர் ஓடவும் செய்தனர்.

அதிக அரவம் இல்லாமல் அமைதியான அந்த சூழலில் அலையோசை மட்டுமே மனதை நிறைப்பதாய் இருந்தது. அலைகளையே பார்த்துக் கொண்டிருந்த அனன்யாவின் மனம் சிறிது நேரத்தில் அமைதியுற்று நிர்மலமானது. சுற்றி வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தாள்.

முழுதாக ஒன்றரை மணி நேரம் அதே இடத்தில் அமர்ந்திருந்தனர் இருவரும். "கெளம்பலாம் அனு. வெயில் வர ஆரம்பிச்சுடுச்சு" என்றுக் கூறி எழுந்தான் சஞ்சய். அவளும் எழுந்து அவனுடன் நடக்க ஆரம்பித்தாள்.

அங்கே வரும்போது இருந்த மன நிலைக்கும் இப்போது இருக்கும் மன நிலைக்கும் எவ்வளவு வித்தியாசம் என்று நினைத்துப் பார்த்தாள். இப்போது நடையின் வேகம் அதிகரித்திருந்தது. சுற்றி நடப்பவைகளை ரசிக்க முடிந்தது.

பைக்கில் வீடு திரும்பும்போது சில்லென்றக் காற்றும் மிதமான வேகமும் அனன்யாவை ஏதோ ஒரு பாடலை முனுமுனுக்க வைத்தது. சஞ்சய் அவளை கண்ணாடியில் பார்த்து புன்னகைத்தான். அனன்யாவும் புன்னகைத்து விட்டு அவன் கழுத்தைச் சுற்றி கைப் போட்டு அமர்ந்தாள்.

வீட்டிற்குள் வந்ததும் உடை மாற்றி காலை உணவைத் தயாரிக்க ஆரம்பித்தாள். சஞ்சையும் உடன் சென்று அவள் அருகில் இருந்து அவள் சமைப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டும் அவ்வபோது அடுப்பில் இருப்பதைக் கிளறிக் கொண்டும் நின்றான். அனன்யாவிற்கு அவன் அருகில் இருப்பதே மனதிற்கு இதமாக இருந்தது.

உணவு தயார் ஆனதும் தட்டில் போட்டு அவனே அவளுக்கு ஊட்டி விட்டான். பின் கார்ட்ஸ் எடுத்து வந்து “வா வெளையாடலாம்... ரொம்ப நாள் ஆச்சு அனு” என்று அவளை அழைத்தான்.

“உனக்கு என்கிட்டத் தோத்துடுவோம்னு பயம்… அதான் நீ வெளையாடுறத நிறுத்திட்ட...”

“அப்படியா? பாக்கலாம் வா...” என்றுக் கூறி சீட்டுக்களை குலுக்க ஆரம்பித்தான்.

முதல் இரண்டு ஆட்டத்தில் அனன்யாவிற்கு தெரிந்தே விட்டுக் கொடுத்தான். அனன்யா ஆட்டத்தில் கவனம் இல்லாமல் வேறு ஏதோ யோசிக்க ஆரம்பிக்கிறாள் என்றதும் அந்த ஆட்டத்தை தான் ஜெயித்து “பாத்தியா? நான் தான் ஜெயிச்சேன்… ஏதோ பெருசா பேசுன?” என்று அவளை சீண்டினான்.

“ஒரு கேம் ஜெயிச்சுட்டேன்னு ஓவரா பேசாத… இப்போப் பாரு…” என்றுக் கூறி அடுத்த ஆட்டத்தில் அதிக கவனமாக விளையாடி வென்றாள் அனன்யா. இன்னும் ஒரு ஆட்டம் விளையாடி விட்டு “சரி போதும்...” என்றவன் சீட்டுக்கட்டை எடுத்து அடுக்க ஆரம்பித்தான்.

“ஏன்? தோத்துட்டே இருக்கன்னதும் போதும்னு சொல்லுறியா?”

“அப்படி தான் வெச்சுக்கோயேன்… வா கடைக்கு போயிட்டு வரலாம்…”

“கடைக்கா? என்ன வாங்கணும்?”

“இந்த வீட்டுக்குன்னு நம்ம எதுவுமே வாங்கல அனு… முன்ன இருந்த வீட்ட விட இந்த வீட்டுல ஷோ கேஸ் பெருசா இருக்கு... அதுக்குள்ள வெக்குறதுக்கு ஏதாவது வாங்கிட்டு வரலாம்”

அப்போது தான் கவனித்தாள் அனன்யா... நிறைய இடம் காலியாக இருந்தது. அங்கு வைப்பதற்கு என்ன வாங்கலாம் என்று யோசித்தபடியேக் கிளம்ப ஆரம்பித்தாள்.

ஷோ கேஸில் வைப்பதற்கு வாங்குகிறேன் என்று அனன்யாவை பல கடைகளுக்கு அழைத்துச் சென்றான் சஞ்சய். இப்படியே மாலை ஆன போது ஒரு வழியாக நிறைய ஷோ பீஸ்களை வாங்கி வீடுத் திரும்பினர்.

எது எதை எங்கே வைப்பதென்று இருவரும் பேசி முடிவெடுத்து அவற்றை அடுக்கி வைத்து, ஏற்கனவே இருந்த சில ஷோ பீஸ்கலை இடம் மாற்றி என்று ஒரு மணி நேரம் போனது.

“கிளம்பு அனு...”

“மறுபடியுமா? டயர்டா இருக்கு சஞ்சய்… எங்க போகணும்?”

“வா போகலாம்” என்றுக் கூறி அவளை முகம் கழுவி வேறு உடை மாற்ற சொல்லி அருகிலிருந்த ஒரு பூங்காவிற்கு நடந்தே அழைத்துச் சென்றான். அங்கே சென்று ஒரு பெஞ்சில் அமர்ந்தனர் இருவரும்.

சிறிது நேரம் அமைதியாக இருந்தான் சஞ்சய். அங்கே இருந்த அழகிய வண்ண மலர்களையும், துள்ளி குதித்து விளையாடிய சிறு குழந்தைகளையும் பார்த்து ரசிக்க ஆரம்பித்தாள் அனன்யா.

சஞ்சய் அவள் கை மீது தன் கையை வைத்ததும் அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

புன்னகையுடன் “சில கதை ரொம்ப ஈசியா இருக்கும் அனு. யோசிக்குறதுக்கும்… சொல்லுறதுக்கும்… எழுதுறதுக்கும்… சில கதை யோசிக்க முடியும்… முழுசா எழுதுறப்போ கஷ்டம் தெரியும்.

உன்னால எப்படிப்பட்ட கதயையும் எழுத முடியும்னு உனக்கு ப்ரூவ் பண்ண தான் இந்த கதைய எழுத சொன்னேன். அதுக்காக நீ இவ்வளவு டென்ஷன் ஆகுறது எனக்குப் பிடிக்கல அனு. கஷ்டமா இருக்கு…

இந்த கதை நீ இது வர எழுதுனது உண்மைல ரொம்ப நல்லா இருக்கு. இன்னும் கொஞ்சம் யோசிச்சன்னா எழுதி முடிச்சுடுவ… நீ தான் தேவ இல்லாம கொழப்பிக்குற” என்றுக் கூறி அவள் முகம் பார்த்தான்.

எப்படி முடிகிறது இவனால்? என்ன பிரச்சனை என்று தான் கூறவில்லை… அவன் கேட்கவும் இல்லை... ஆனால் அதைத் தெரிந்துக் கொண்டு, தன்னை புரிந்துக் கொண்டு, தனக்காக காலையிலிருந்து இவ்வளவும் செய்து… இப்போது தன் மனதைப் படித்தது போல் பேசுகிறானே என்று யோசித்து அவன் முகத்தையேப் பார்த்துக் கொண்டிருந்தாள் அனன்யா.

தனக்கு தன் மேல் இல்லாத நம்பிக்கை அவனுக்கு இருக்கிறதென்றால் அந்த நம்பிக்கையை ஏன் பொய்யாக்க வேண்டும்? தன் கை மீது இருந்த அவன் கையை இறுகப் பற்றி “நான் எழுதுறேன் சஞ்சய்… சீக்கிரமே முடிச்சுடறேன்” என்றாள்.

அவள் கண்களில் தெரிந்த உறுதியிலேயே அவள் தெளிந்து விட்டாள் என்பது சஞ்சய்க்கு புரிந்தது. இனி தான் பேச எதுவும் இல்லை என்றுத் தோன்றியதால் அவளைப் பார்த்து புன்னகைத்து விட்டு திரும்பி வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தான்.

இருட்டத் துவங்கியதும் எழுந்து அங்கிருந்துக் கிளம்பினர். வீடு வந்து சேரும் வரையிலுமே அவன் கையை விடவில்லை அனன்யா. வீட்டினுள் நுழைந்ததும் அவனை ஒரு முறை இறுக அணைத்து “ஐ லவ் யூ” என்றாள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
Part - 28

தனக்குப் பிடித்த பாடலை மெல்லிய குரலில் பாடியபடியே ஒரு லயத்துடன் அசைந்து ஆடி சமைக்கும் அனன்யாவை பார்க்க சஞ்சய்க்கு நிம்மதியாக இருந்தது. இதை காண வேண்டும் என்றுதானே அவனும் விரும்பினான்.

“அனு ஹாப்பி போல?” என்று அவன் கேட்க “ஓஹ்ஹ்ஹ்” என்று அதையும் ராகத்துடன் பாடியவள் அருகிலிருந்த டப்பாவிலிருந்து ஸ்வீட்டை எடுத்து அவன் வாயில் திணித்தாள்.

பாதி ஸ்வீட் வாய்க்குள் இருக்க மீதியை உடைத்தவன் அவளை இடையுடன் சேர்த்தணைத்து அவளுக்கு ஊட்டினான். அவளும் மறுக்காமல் சிரிப்புடன் அதை சாப்பிட்டாள்.

முதல் முறை அனன்யா மீதான காதலை சஞ்சய் உணர்ந்தது அவள் இப்படி மலர்ந்த முகத்துடன் சிரித்தபோது தான். மனதில் மின்னலடிக்க வைத்த தருணம்... இவள் எனக்கானவள் என்று உணர வைத்த தருணம்.

சஞ்சையின் முகத்தில் சிரிப்பு மறைந்து புன்னகை அரும்ப கண்களில் காதலுடன் அவளை பார்த்தான். அனன்யா அவன் முகமாற்றத்தில் சிவந்த தன் கன்னங்களை மறைக்க தலை குனிந்து நின்றாள்.

அன்றிரவு நேரமே வந்து படுத்தவளை ஆச்சரியமாகப் பார்த்தவன் “எழுதல?” என்றுக் கேட்டான். “இல்ல... நாளைக்கு ப்ரெஷா ஸ்டார்ட் பண்ணுறேன். குட் நைட்” என்றுக் கூறி அவன் கன்னத்தில் முத்தமிட்டு அமைதியாக படுத்துவிட்டாள் அனன்யா.

அவள் நாளையிலிருந்து எழுத ஆரம்பிக்கிறேன் என்றுதான் கூறினாள். ஆனால் இன்றோடு முடித்து விட வேண்டும் என்ற வேகத்துடன் காலை எழுந்ததிலிருந்து புயல் வேகத்தில் டைப் செய்துக் கொண்டிருந்தவளின் அருகில் அமர்ந்தான் சஞ்சய்.

“பாவம்டி… அந்த கீஸ் எல்லாம் உன்ன என்ன பண்ணுச்சு? ஏன் அத இந்த பாடு படுத்துற?”

“ஷ்ஷ்ஷு...” என்றுக் கூறி தன் வேலையைத் தொடர்ந்தாள் அனன்யா.

“அடேங்கப்பா… சரி மா… நான் பேசல” என்றவன் அவள் கன்னத்தை பிடித்து லேசாகக் கிள்ளி விட்டு அங்கிருந்து எழுந்துச் சென்றான். அதற்கு மேல் அவளை தொந்தரவு செய்ய அவன் விரும்பவில்லை.

அவளுக்கான space அவளுக்குக் கொடுத்தே தீருவதென்று அவன் முன்பே முடிவு செய்திருந்தான். அவள் எழுத ஆரம்பிப்பதற்கு முன்னரே அவர்களுக்குள் சிறு ஊடல் வந்து தன் மனக்கசப்பை அவளிடம் கூறியபோது அனன்யா அனுபவித்த வேதனையை பல நாட்கள் பார்த்தவனாயிற்றே...

“அனு”

“ம்ம்”

“அனு… இங்க பாரேன்…”

“ம்ம்ஹும்”

வீட்டிற்கு வந்ததிலிருந்து சஞ்சய் இதையே தான் சொல்லிக் கொண்டிருந்தான். ஞாயிறு அன்று எழுத ஆரம்பித்தவள் இரண்டு நாட்களாக தொடர்ந்து எழுதிக் கொண்டே இருந்தாள்.

“அனு… என் கிட்ட படிக்க சொல்லவே இல்லையே… நீயும் ரெண்டு நாளா நிறைய டைப் பண்ணுற?”

“இரு இரு… இன்னும் கொஞ்சம் தான்…”

ஒரு மணி நேரம் கழித்து சஞ்சய்யிடம் வந்து தன் லாப்பை நீட்டினாள் அனன்யா. சஞ்சய்க்கு அப்படி அவள் என்ன எழுதுகிறாள் என்றுத் தெரிந்துக்கொள்ளும் ஆர்வம் அதிகமாகவே இருந்தது.

இரண்டு நாட்களாக தன்னைப் படிக்க சொல்வாள் என்று எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருந்தான். ஆனால் அனன்யா அவனிடம் எதையும் படிக்க சொல்லவுமில்லை... ஒன்றும் கேட்கவும் இல்லை...

இப்போது அவளே “படி” என்றுக் கொண்டு வந்துக் கொடுத்ததும் வேகமாக வாங்கிப் படிக்க ஆரம்பித்தான்.

அரை மணி நேரம் கழித்து “சஞ்சய் சாப்பிடலாமா?” என்றுக் கேட்டாள் அனன்யா. பதில் இல்லை.

அவன் தோள் தொட்டு “சாப்பிடலாமா?” என்றாள். “ம்ம்ச்ச்” என்றுக் கூறி அவள் கையைத் தட்டி விட்டவன் “எடுத்துட்டு வா...” என்று முனகினான்.

“அப்படி என்ன கண்ண எடுக்காமப் படிக்குறான்?” என்று யோசித்து தட்டில் எடுத்து வந்து அவனுக்கு ஊட்டினாள் அனன்யா.

சாப்பிட்டு முடித்தும் நீண்ட நேரம் படித்தவன் லாப்பை கீழே வைத்து ஓடி வந்து கிட்செனுள் நின்றுக் கொண்டிருந்த அனன்யாவை தூக்கி ஒரு முறை சுற்றினான்.

“சூப்பர் அனு… செமையா இருக்கு…”

“நெஜமாவா?”

“பின்ன? இவ்வளவு நல்லா எழுதுறதுக்கு தான் இப்படி டென்ஷன் ஆனியா?”

“போ சஞ்சய்… எனக்கு பயமாவே இருந்துது…”

“இதுக்கு தான் ரெண்டு நாள் என்ன படிக்க விடாம எழுதுனியா?”

“அது என்னமோ அன்னைக்கு நீ பேசுனதுலேருந்து... என் மைண்ட் ப்ரீ ஆகுறதுக்காக அவ்வளவு செஞ்சதுலேருந்து... முழுசா எழுதி முடிச்சுட்டு தான் உன்கிட்ட காட்டணும்னுத் தோணுச்சு… அதான்…”

“நல்லா இருக்கு ஸ்வீடி” என்றுக் கூறி அவள் இதழில் அழுந்த முத்தமிட்டான் சஞ்சய்.

“நடுவுல இன்னும் கொஞ்சம் மாத்தணும்... அத மட்டும் இன்னைக்கு மாத்திடுறேன்”

“ம்ம்... மாத்திட்டு சொல்லு... படிச்சு பாக்குறேன்...”

அன்று அனன்யா என்னதான் எழுதுகிறேன் என்று சஞ்சயிடம் கூறிவிட்டாலும் மனதில் ஒரு பயம் இருந்துக் கொண்டே தான் இருந்தது... தன்னால் இந்த கதையை சரி வர எழுதி முடிக்க முடியுமா என்று. இப்போது சஞ்சயின் கூற்று அவளுக்கு புது நம்பிக்கையை கொடுத்தது.

மாலை வீட்டிற்குள் நுழைந்ததிலிருந்து அனன்யாவை கிளம்ப சொல்லிப் படுத்திக் கொண்டிருந்தான் சஞ்சய். அவள் தயார் ஆனதும் நேராக துணிக் கடை ஒன்றிற்கு அழைத்துச் சென்று புடவை எடுக்க சொன்னான்.

“சாரீ எதுக்கு சஞ்சய்? நான் கட்ட மாட்டேன்…”

“போடி… அன்னைக்கு புது வீட்டுல கட்டி இருந்தது எவ்வளவு அழகா இருந்துதுத் தெரியுமா? எப்பயாவதும் பங்க்ஷனுக்குக் கட்டுவல்ல? எடு அனு…”

கணவன் ஆசையாய் கேட்கும்போது மறுக்கத் தோன்றாமல் ஒரு டிசைனர் புடவையை தேர்வு செய்தாள் அனன்யா. சஞ்சய்க்கும் அந்த புடவை பார்த்தவுடன் பிடித்து விடவே அதையே வாங்கிக் கொடுத்தான்.

வீடு வந்து சேர்ந்ததும் முதல் வேலையாய் “அனு அந்த சாரீ கட்டி காமி...” என்றான் சஞ்சய்.

“இப்போவா?”

“ப்ளீஸ் ப்ளீஸ்… கட்டு அனு…”

“ஹ்ம்ம்… சரி...”

புடவையில் அறையை விட்டு வெளியே வந்த அனன்யாவை விழி விரித்துப் பார்த்தான் சஞ்சய். மெதுவாக அவள் அருகில் சென்று அவள் முகத்தை கைகளில் ஏந்தி சில நொடிகள் மெளனமாக பார்த்துக் கொண்டிருந்தவன் மெல்ல குனிந்து அவள் இதழில் முத்தமிட்டான்.

விழி மூடி நின்றவளை பார்த்து “நல்லா இருக்கு” என்றுக் கூறி புன்னகையுடன் அவள் நெற்றியிலும் முத்தமிட்டான்.

அனன்யா சிரித்து விட்டு சென்று உடை மாற்றி வந்தாள். "சீக்கிரம் வா படுக்கலாம்" என்றுக் கூறி அறையினுள் சென்றான் சஞ்சய். கிட்செனில் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு அறையினுள் நுழைந்தாள்.

சஞ்சய் கட்டிலில் அமர்ந்து அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தான். "தூங்கலையா சஞ்சய்? அப்போவே படுக்கப் போறேன்னு சொல்லிட்டு வந்த?" என்றுக் கேட்டு அவன் அருகில் அமர்ந்தாள்.

எதுவும் பேசாமல் அவளை தோளோடு அணைத்துக் கொண்டான். அவன் டி ஷர்ட்டின் காலர் நுனியை பிடித்து இழுத்துக் கொண்டே “சஞ்சய்…” என்றழைத்தாள்.

“என்ன அனு?”

“நான் இன்னொரு கதை யோசிச்சேன் சஞ்சய்…”

“என்னது????” அவளிடமிருந்து விலகி அவள் முகத்தைப் பார்த்தான் சஞ்சய்.

“நான் சொல்லுறேன்... நீ கேளேன்…”

“இன்னும் முடியலையாடி?? சொல்லு… கேக்குறேன்… வேற வழி?” சலித்துக் கொண்டவன் மீண்டும் அவளை தோளோடு அணைத்துக் கொண்டான். சிரித்து விட்டு அவன் மார்பில் சாய்ந்த அனன்யா கதையை கூற ஆரம்பித்தாள்.

அவள் கூறியதை முழுதாகக் கேட்டு முடித்த சஞ்சய் "இப்படியே போனா நமக்கு புள்ளப் பொறந்த மாதிரி தான் போ..." என்றுக் கூறி அருகில் இருந்த தலையணையைக் குத்தினான்.

"ஆமா... போ சஞ்சய்... என்னமோ இப்போ மட்டும் எதுவுமே பண்ணாதவன் மாதிரி தான்" என்றுக் கூறி அவன் மார்பில் குத்தினாள் அனன்யா.

என்னதான் சலிப்புடன் கேட்பதுபோல் பாவனை செய்தாலும் அவள் மீது அக்கறை கொண்டவனாயிற்றே... அனன்யாவை தன்னுடன் சேர்த்தணைத்துக் கொண்டான் சஞ்சய்.



கை பிடித்து நடை பழக்கினாய்
தடுமாறும் நேரம் தோள் தந்தாய்

குறை கூறாமல் குற்றம் சுட்டினாய்
அதை சீராக்கவும் கற்றுத் தந்தாய்

இதுவே உலகம் என்றாய்
அதை எதிர் கொள்ளும் சக்தி தந்தாய்

நேசம் உணர செய்தாய்
அதனையும் எனக்கு முழுதாய் தந்தாய்

எனையே எனக்கு உணர்த்தி
என் யாதுமாகி நின்றாயே!


முற்றும்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top