யாரோ அவன்? 13

Yuvakarthika

Author
Author
SM Exclusive Author
#1
Hi friends,

தவறாமல் லைக்ஸ் கமெண்ட்ஸ் கொடுத்து வரும் அனைவருக்கும் நன்றி மக்கா.

அடுத்த பதிவு போட்டிருக்கேன் மறவாமல் படிங்க, தவறாமல் உங்க கருத்துக்களை கமெண்ட்ல அடிங்க...
IMG_20190705_100837.jpg
 
Last edited:

Yuvakarthika

Author
Author
SM Exclusive Author
#2
யாரோ அவன்? 13

வெளியே கார் சத்தம் கேட்டதும், சாப்பிடுவதை விட்டு எழுந்து வேகமாக ஓடி சென்று எட்டி பார்த்த சுவாதியின் பிஞ்சு முகம் வாடி போனது! அது வெற்றியின் கார் இல்லை.

"பாட்டி, அப்பா ஏன் இன்னிக்கு கூட வரல? எப்ப வருவாரு?" அத்தனை ஏக்கமாய் குழந்தை கேட்க, வெண்ணிலாவின் மனதும் பாரமானது.

"தெரியலையே சுவாதி, இதுவரைக்கும் ஒரு நாள் கூட வராம இருந்தது இல்ல, நாலு நாள் ஆச்சு, ஒரு ஃபோனும் பண்ணல. நேர்லயும் வரல! திடீர்னு என்னாச்சு அவனுக்கு?" என்று தனக்குத்தானே கேட்டு கொண்ட கற்பகம்,

"நிலா, வெற்றிய பார்த்தா வீட்டுக்கு வர சொல்லேன். சுவாதி அவன் ஞாபகமாவே இருக்கா பாரு" என்று சொல்ல, வெண்ணிலா பதிலாக காரமான பார்வையை தந்து விட்டு நகர்ந்தாள்.

'அம்மாவுக்கு அவன் பெரிய உத்தமன்னு நினப்பு. நான் எதை சொன்னாலும் அவங்க நம்ப போறதில்ல, செய்யறதையும் செஞ்சிட்டு என்னவோ என்னை தப்பா சொல்லிட்டு போனான், ச்சே ஒரு நிமிசத்தில என்னை அடி முட்டாளாக்கிட்டான். அவன பத்தி எனக்கென்ன?' என்று அவளும் உள்ளுக்குள் புழுகி தவித்தாள்.

# # #

எந்த வழியில் சென்று அலசினாலும் மீண்டும் மீண்டும் ஆரம்பித்த அதே புள்ளியில் வந்து முடிந்தது இந்த வழக்கு விசயம்!

முடிவு தெரியாமல் வெற்றி வேந்தன் மன உளைச்சலில் சோர்ந்து போனான்.
அவன் மனதில் கரணின் நினைவுகள் எழுந்தன.

'கரண், எவ்வளவு நல்லவன். அவன் அதிர்ந்து பேசி கூட பார்த்தது இல்லை. எந்த வம்பு தும்புக்கும் போகாதவன். அவனுக்கு தெரிந்தது எல்லாம் அவனுடைய தொழில் மட்டும் தான். தன்னுடைய தொழிலை விரிவாக்க அவன் இத்தனை மோசமான நண்பன் உடனா கூட்டு சேரணும்? அதனால் இப்போது அவனுக்கு கிடைத்த லாபமென்ன? கொலைகாரன் என்ற பட்டம்' வெற்றி துயர பெருமூச்செறிந்தான்.

சிறையில் கரண் சொன்னது மீண்டும் அவன் நினைவில் எதிரொலித்தது.

'நான் உறுதியா சொல்றேன். அந்த பொண்ணு தான் கொலை பண்ணி இருக்கணும்! நான் அந்த லாடஜ்ல நுழையும் போது, கையில குழந்தையோட ஏதோ பயத்தில அவ வெளியே போறதை நான் பார்த்தேன்! நான் சொல்றதை போலீஸ் நம்பவே மாட்டேங்கிறாங்க! என்கிட்ட எந்த ஆதாரமும் இல்ல!'

!

மேலும் அந்த விடுதி வேலையாள், 'அவங்க பேரெல்லாம் எனக்கு தெரியாது, ரொம்ப அயகா இருந்தாங்க. கண்ணாலம் ஆனவங்க தான் சார்" சொன்ன விசயங்களும் வெண்ணிலாவிற்கு ஒத்து போனது.

!?

தன் வக்கீல் சூரிய நாராயணன் சொன்னது. 'சாத்தானால செய்ய முடியாததை கூட ஒரு பொண்ணால செய்ய முடியும்!'

வெற்றி தன் தலையை கெட்டியாக பிடித்து கொண்டான்.

'என்ன சுத்தி இருக்கிறவங்க, எல்லாரும் வெண்ணிலாவை பத்தி சொல்லியும் ஏன் என் மனசு அதை நம்ப மறுக்குது? ஏன்? என்னால வெண்ணிலாவை ஒரு கொலை காரியா நினைச்சு கூட பார்க்க முடியல?' தன் நினைவுகளின் சுழலில் மாட்டி தவித்தான்.

'எவ்வளவு தேடியும் நிலாவுக்கு எதிரா ஒரு சின்ன ஆதாரம் கூட அவ வீட்ல கிடைக்கலையே! ஏன்?'

அவன் மனம் குழப்பத்தில் செயலற்று தவிக்க, கைப்பேசி சிணுங்கல் அவன் யோசனைகளை கலைத்தது.

கைப்பேசியை எடுத்து பார்த்தவனுக்கு வியப்பாக தான் இருந்தது.

அதிசயமாய் அதுவும் இந்த நடுநிசியில் வெண்ணிலாவின் அழைப்பு வர, மொபைலை உயிர்ப்பித்து காதில் ஒற்றினான்.

"...!?"

மறுமுனையில் எந்த பதிலும் இல்லை.

"...!?"

வெற்றியும் ஏதும் பேசாமல் இறுக்கமாக இருந்தான்.

வெண்ணிலாவே தயக்கமாக பேச தொடங்கினாள்.

"இந்த நேரத்தில தொந்தரவு செஞ்சிட்டேன் சா...சாரி!"

"...!?"

"சுவாதிக்கு உடம்பு சரியில்ல. தூக்கத்தில கூட, 'அப்பா, அப்பா'ன்னு உளரிட்டு இருக்கா! ஒருவேளை, உன்ன பார்த்தா சுவாதிக்கு ஆறுதலா இருக்கும்னு தான் ஃபோன் பண்ணேன்!" நிலா வேதனையோடு சொன்னாள்.

"...!?"

இப்போதும் வெற்றி பதில் பேசாமல் இருந்தான்.

"வெற்றி, சுவாதி உண்மையாவே உன்ன அவளோட அப்பாவா நினைச்சிட்டு இருக்கா! காய்ச்சல்ல அவ படற வேதனைய என்னால தாங்க முடியல. ப்ளீஸ்!" நிலா மகளுக்காக கலக்கத்துடன் கெஞ்சினாள்.

"சுவாதிகிட்ட நான் உடனே வரேன்னு சொல்லு" என்றவன் இணைப்பை துண்டித்தான்.

அடுத்த இருபது நிமிடங்களில் வெற்றி வேந்தன், வெண்ணிலாவின் வீட்டை அடைந்திருந்தான்.

அவனுக்காக காத்திருந்த நிலா, வாசற் கதவை திறந்து விட்டாள்.

வேதனையில் முழுவதுமாய் வாடி போயிருந்த, அவளின் முகத்தை கவனித்தவன், "சுவாதி எங்க?" நேராக கேட்டான்.

"மேல" என்று மேல் அறையை நிலா கைகாட்ட, வெற்றி படிகளில் துரிதமாக ஏறிச் சென்றான்.

வாடிய பிச்சி பூவாய், சுவாதி கட்டிலில் தோய்ந்து கிடக்க, காய்ச்சல் குறைவதற்காக குழந்தையின் நெற்றியில் ஈரத்துணி பற்று வைக்கப்பட்டிருந்தது.

எப்போதும் துறுதுறுவென விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தை, சோர்ந்து கிடப்பதை பார்க்க வெற்றியின் மனமும் கலங்கியது.

சுவாதியின் அருகில் வந்து அவள் பிஞ்சு கையை மென்மையாய் பற்றினான். அவள் உடல் நெருப்பாய் சுட்டது.

உலர்ந்து கிடந்த அவள் மலர் உதடுகளில் உயிரோட்டமாய், "அப்பா, அப்பா, அப்பா..." என்ற முனங்கல் கேட்க, வெற்றி துடிதுடித்து போனான்.

இந்த பூவுலகில் 'அம்மா' என்ற சொல்லின் புனித தன்மையையும் பெருமையையும் மட்டுமே அறிந்திருந்தவன், 'அப்பா' என்ற சொல்லும் அதேயளவு ஆழமுடையது! என்ற பேருண்மையை இப்போது தான் உணர்ந்து கொண்டதால், நெகிழ்ந்து போனான்.

சுவாதியை இரு கரங்களில் அள்ளி எடுத்து மார்போடு அணைத்துக் கொண்டான்.

"நான் வந்துட்டேன் சுவாதி. நான் உன்ன விட்டு எங்கேயும் போகல. உன் பக்கத்தில தான் இருக்கேன். உனக்கு பிடிச்ச சாக்லேட் கூட வாங்கி வந்திருக்கேன்." என்று அந்த மழலையின் அளவற்ற அன்பில் கரைந்து போனான்.

வெண்ணிலா கவனித்து கொண்டு தான் இருந்தாள்.

வெற்றியின் கண்களின் ஓரம் ஈரம் கசிவதை பார்த்து அவளும் நெகிழ்ந்து தான் போனாள்.

இரத்த சம்பத்தத்தை மீறிய பாசத்தை அவளும் இன்று தான் உணர்ந்து கொண்டாள்.

இவளை பெற்ற தகப்பனோ ஒரு நாளும் சுவாதியை தன் மகளாய் பாவித்தது இல்லை. மனித உருவத்தில் மிருகமாய் அவன்.

ஆனால், யார் இவன்? பெறாத மகளை மார்பில் தாங்குகிறான்! சின்ன குழந்தையின் பாசத்தில் நிறைந்து போகிறான்!

சுவாதி மெல்ல கண்திறந்து வெற்றியை பார்த்தாள். "அப்பா, ஏன் என்னை பாக்க வரவே இல்ல?" அவள் மென்குரல் தேய கேட்டாள்.

"சாரி செல்லம்மா, இனிமே எதுக்காகவும் உன்ன விட்டு போக மாட்டேன். யாருக்காகவும் உன்ன விட்டு கொடுக்க மாட்டேன்!" என்று அவன் உணர்ச்சி மிகுதியில் உறுதி தர,
சுவாதி மெலிதாய் புன்னகைத்து அவன் மார்பில் தோய்ந்தாள்.

வெற்றி நிமிர்ந்து, "டாக்டர் என்ன சொன்னார்?" என்று நிலாவிடம் விசாரிக்க,

"காய்ச்சல் ரெண்டு நாள்ல குணமாயிடும்னு சொன்னாங்க, எத்தனை முறை மருந்து கொடுத்தும் காய்ச்சல் குறையவே இல்ல, அதான் பயந்து உனக்கு ஃபோன் பண்ணேன்" என்று விளக்கினாள்.

வெற்றி அதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை. வெண்ணிலா இளஞ்சூடான பால் கலந்து சுவாதியை பருக வைத்தாள்.

அப்பா தன்னுடனேயே படுத்து கொள்ளும் படி சுவாதி அடம்பிடிக்க, வெற்றி வேறு வழியின்றி தயக்கத்துடன் குழந்தையின் அருகில் படுத்து கொண்டு கதை சொல்ல தொடங்கினான்.

சுவாதியின் தெளிந்த முகத்தை பார்த்து, வெண்ணிலாவின் தவிப்பும் குறைந்தது.

'வெற்றியை பார்க்காத ஏக்கத்தில் தான் குழந்தைக்கு காய்ச்சல் வந்திருக்குமோ! என்னவோ?' என்று எண்ணி கொண்டாள்.

கட்டிலின் அருகே சிறு மேசையை இழுத்து வைத்து, அதில் அமர்ந்து கொண்டாள்.

அவர்கள் இருவரும் உறங்கிய பின்னரும் கூட, சுவாதியின் காய்ச்சல் குறைகின்ற வரை வெண்ணிலா அவளுக்கு நெற்றி பற்று போட்டு கொண்டிருந்தாள்.
 

Yuvakarthika

Author
Author
SM Exclusive Author
#3
கண்ணிமைகள் மெல்ல விரிந்தன. வெண்ணிலா, தான் அமர்ந்த படியே உறங்கி போயிருந்ததை இப்போது தான் கவனித்து நிமிர்ந்தாள்.

அவள் சுவாதியின் கையையும் நெற்றியையும் தொட்டு பார்க்க, காய்ச்சல் விட்டிருந்தது.

சற்று நிம்மதியாக உணர்ந்தவள், வெற்றி வேந்தன் படுக்கையில் இல்லாததை கவனித்து சுற்றும் முற்றும் பார்த்தாள்.

அந்த அறையின் சின்ன பால்கனியில் நின்றிருந்தான் அவன்.

அழகான காலை பொழுதை அவன் வெறுமையாய் பார்த்து கொண்டிருந்தான்.

காலை நடைப்பயிற்சி செய்பவர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக தென்பட்டனர்.

சைக்கிளில் வந்த ஒரு பையன், வீடு வீடாய் தினசரிகளை வீசிவிட்டு போனான். பால் காரனும் பால் பாக்கெட்டுகளை வீடு வீடாக போட்டு விட்டு போனான்.

அங்கிருந்து தூரமாய் உச்சி பிள்ளையார் கோயில் ரம்மியமாய் தெரிந்தது. வெற்றியின் பார்வை சிறிது நேரம் அங்கு நிலைத்தது.

வெண்ணிலா, அவன் பின்னால் வந்து நின்று,என்ன பேசுவது என்று தயங்கினாள்.

"சாரி நிலா! எப்பவுமே நான் உன்ன தப்பான கண்ணோட்டத்தில பார்த்தது கிடையாது! அன்னிக்கு சும்மா விளையாட்டுக்கு உன்கிட்ட வம்பிழுக்க போய்! என்ன இருந்தாலும் நான் உன்கிட்ட அப்படி நடந்திருக்க கூடாது" வெற்றி வேந்தன் உண்மையாகவே அவளிடம் மன்னிப்பு கேட்டான்.

அவன் தன் பக்கம் திரும்பாமல் கூட எங்கோ பார்த்த படி தன்னிடம் பேசுவது அவளுக்கு வியப்பாக தான் இருந்தது.

அவன் காமுகனாய் இருந்து இருந்தால் தன்னிடம் மன்னிப்பு கேட்டிருக்க மாட்டான் என்று வெண்ணிலாவுக்கு தோன்றியது.

அதோடு, நேற்று சுவாதியை அணைத்தப்படி அவன் கண்களில் கசிந்த கண்ணீர் போலியாக இருக்க வாய்ப்பில்லை என்று நம்பினாள்.

அதனால், "தப்பு என்மேலயும் இருக்கும் போது, நானும் உன்ன அடிச்சிருக்க கூடாது வெற்றி, சாரி!" வெண்ணிலாவும் மன்னிப்பு கேட்க, வெற்றி திரும்பி அவளை பார்த்தான்.

அவளின் சங்கடமான நிலை புரிந்தவனாய், "அம்மாவ எங்க காணோம்?" என்று பேச்சை மாற்ற,

"அக்கம் பக்கத்தில இருக்கிறவங்களோட சேர்ந்து திருப்பதி கோயிலுக்கு போயிருக்காங்க. இன்னைக்கு வந்திடுவாங்க" என்று பதில் தந்தாள்.

கற்பகம் உடன் இல்லாத நேரத்தில் சுவாதியின் உடல்நிலை மோசமானதால், வெண்ணிலா மிகவும் தவித்து போயிருந்தாள்.

மேலும் இருவரும் ஏதும் பேசிக் கொள்ளவில்லை. காலை வேளையில் நிலாவுக்கு வீட்டு வேலைகள் சரியாய் இருந்தன.

ஏதோ முக்கிய வேலையென்று வெளியே சென்ற வெற்றி வெகு சீக்கிரமே திரும்பி வந்து விட்டான்.

இன்று முழுவதும் அவன் சுவாதியுடன் தான் இருந்தான். மதிய வேளைக்கு பிறகு குழந்தையின் உடல் நிலை தெளிவாக, மறுபடி காய்ச்சல் வராமல் இருந்தது.

"அப்பா ஐஸ்கிரீம் வேணும்!" சுவாதி ஆசையாய் கெஞ்ச,

"இப்ப தான் காய்ச்சல் விட்டிருக்கு,
அதெல்லாம் இப்ப சாப்பிட கூடாது சுவாதி" வெண்ணிலா மறுத்து சொல்ல, மென் மோட்டின் முகம் சுருங்கி போனது.

"ப்ளீஸ்ஸ்ஸ்ப்பா" என்று ஏக்கமாக கண்களால் கெஞ்சினாள் அவள்.

அவளின் முகபாவமும் கெஞ்சலும் வெற்றியின் இதழில் இளநகை பரவ செய்ய, வெண்ணிலா அமர்த்தலான பார்வையில் மகளை அடக்கினாள்.

வெற்றி, "விடு நிலா" என்று அவளை கையமர்த்தியவன், மகளை தூக்கி தன் மடியில் அமர்த்தி கொண்டான்.

"சுவாதி குட்டிக்கு உடம்பு குணமானதுக்கு அப்புறம் அப்பா உனக்கு பத்த்த்து ஐஸ்கிரீம் வாங்கி தருவேனா" என்று அவன் தன் இரு கைவிரல்களையும் விரித்து காட்ட, சுவாதியின் கண்கள் அகல விரிந்தன.

வாயை பிளந்த படி, "பத்த்த்து ஐஸ்கிரீமா!" என்று குதூகளித்தாள்.

திடீரென சுவாதிக்கு வேறேதோ நினைவுக்கு வர, "அப்பா, நாம பார்க் போலாமா?" என்று ஆவலாக கேட்டாள்.

மேலும், அவன் பதிலுக்கு காத்திராமல், "சாந்தினி இல்லப்பா, டெய்லி ஈவினிங் அவ அப்பாவோட பார்க் போய் நிறைய விளையாடுவாளாம்!
என்னையும் கூட்டிட்டு போ ப்பா!" என்று விடாமல் கேட்க,

அவர்கள் இருவரின் முகமும் திகைத்தது. ஏதோ பொருள் புரிந்த பார்வையை நான்கு கண்களும் அரை நொடி பகிர்ந்து கொண்டன.

'மற்ற குழந்தைகளை போல தன் அப்பாவுடன் விளையாட வேண்டும்' என்ற சுவாதியின் ஏக்கமும் ஆசையும் இருவருக்கும் புரிவதாய்.

'நான் இவளுடைய அப்பா இல்லை, என்ற உண்மை தெரிந்தால் இந்த பிஞ்சு மனம் என்ன பாடுபடுமோ?' என்ற எண்ணம் வெற்றி வேந்தனின் மனதில் பாரத்தை ஏற்றியது.

'நான் என் தேவைக்காக எத்தனை பெரிய பொய்யை சுலபமாக சொல்லி விட்டேன்!' என்று இப்போது யோசிக்க, அவனது மனசாட்சி அவனை குற்றவாளி கூண்டில் ஏற்றியது.

'இப்படி பொய்களை சொல்லி நாடகமாடி என்னால் உண்மையின் மூலத்தை அடைய முடியுமா?!'

'இந்த பச்சிளங்குழந்தையின் கனவுகளை சூறையாடி என்னால் வெற்றி பெறத்தான் முடியுமா?!' என்ற கேள்விகள் அவனை பலவீனப்படுத்துவதை போல உணர்ந்தான்.

அவன் பதில் சொல்லாமல் மௌனமாகவே இருக்க, "என்னை பார்க் கூட்டிட்டு போக மாட்டிங்களாப்பா?" என்று அழுவது போல் கெஞ்சினாள் சுவாதி.

அவளின் கையை பிடித்து தன்னிடம் இழுத்து கொண்ட நிலா, "இன்னைக்கு பூரா வெற்றி, உன் கூடவே இருந்தாரில்ல. அவரை இப்படி தொந்தரவு செய்யறது ரொம்ப தப்பு சுவாதி! உன்ன நானே கூட்டிட்டு போறேன்!" என்று சமாதானமாக கூறினாள்.

வெற்றியை மேலும் சங்கடபடுத்த அவள் விரும்பவில்லை என்பது அவள் பேச்சிலேயே தெரிந்தது.

வெற்றி தனக்கான புன்னகையை சிதறவிட்டவன், "எனக்கு எந்த தொந்தரவும் இல்ல, சீக்கிரம் கிளம்புங்க நாம பார்க் போலாம்" என்று அவன் உற்சாகமாய் சொல்ல, சுவாதி துள்ளி குதித்தாள்.

ஏனோ சுவாதியை போல, வெண்ணிலாவின் உள்ளமும் துள்ளி குதிக்க தான் செய்தது!

தேடல் நீளும்...
 

srinavee

Author
Author
SM Exclusive Author
#10
இப்படி பாசம் காட்டி ஏமாத்தி தான் உண்மை தெரிஞ்சுக்கணுமா?:sneaky::eek:...

அந்த பாழாப்போன உண்மைய தெரிஞ்சுக்காம இருந்தா தான் என்ன?:rolleyes::rolleyes:

இப்படி பச்ச புள்ளைய போய் ஏமாத்திட்டு இருக்கியே:oops::oops:...

திட்டு வாங்குரத்துக்குனே உன்னோட கேரக்டர் வச்சுருக்காங்க author ji;);)...

உன்ன திட்டாம இருக்க முடியல வெற்றி:p:D... சுவே குட்டி சோ cute அண்ட் lovely டால்...:love::love:(y)(y)
 

Sponsored

Latest Episodes

Advertisements

Latest updates

Top