• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ராணி மங்கம்மாள்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
ராணி மங்கம்மாள் - முன்னுரை


ராணி மங்கம்மாளின் கதை தென்னாட்டு வாழ்க்கையோடு இரண்டறக் கலந்திருப்பது, சுவையானது.

மங்கம்மாள் சாலை, மங்கம்மாள் சத்திரம், மங்கம்மாள் தானதருமம் என்று மக்கள் அன்றாடம் பேசி மகிழும் சிறப்புடன் கதாபாத்திரமாக அவள் விளங்குகிறாள்.

அந்த மங்கம்மாவை நாயகியாக வைத்து ஒரு நாவல் எழுத எண்ணி வரலாற்று நூல்கள்களையும், கர்ண பரம்பரைக் கதைகளையும், செய்திகளையும் ஆராய்ந்ததன் விளைவே இந்தப் புத்தகம்.

மங்கம்மாளை மட்டுமே முக்கியக் கதாபாத்திரமாக ஏற்காமல் நாயக்கர் வரலாற்றை விவரிக்கப் புகுந்திருந்தால் இந்நாவல் ஒரு வேளை இதை விடவும் பெரிதாக அமைந்திருக்கக்கூடும்.

ஆனால் என் நோக்கத்தை நான் முன்பே வரையறுத்துக் கொண்டு விட்டதால் கதைப் போக்கிற்கும் இதை உருவாக்கிய எனக்கும் வேலை கச்சிதமாக அமைந்துவிட்டது.

இன்று பெரிதாகப் பேசப்படும் மதங்கள் சம்மந்தமான சமரச மனப்பான்மையைத் திருமலை நாயக்கர் தொடங்கி மங்கம்மாள் வரையிலான நாயக்க வம்சத்தினர் இயல்பாகக் கடைப்பிடித்திருக்கிறார்கள்.

எந்த மதுரைச் சீமையில் சமணரைக் கழுவேற்றுகிற அளவு மத உணர்வு தீவிரமாக இருந்ததோ அதே மதுரைச் சீமையில் இப்படியும் சமரசம் நிலவச் செய்திருக்கிறார்கள் நாயக்க வம்சத்தினர். கிழவன் சேதுபதி போன்ற தீவிர உணர்வாளர்களும் அதே காலகட்டத்தில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதையும் மறப்பதற்கில்லை.

கதையில் ராணி மங்கம்மாளுக்கு அடுத்தபடி நம்மைக் கவருகிற கதாபாத்திரம் கிழவன் சேதுபதி தான். மடங்கா வீரமும் பிறருக்கு அடங்கா ஆற்றலும் கொண்ட அந்தக் கிழச்சிங்கம் நம் கவனத்தைக் கவர்வதில் வியப்பேதும் இருக்க முடியாது. நாயக்கர்கள் காலத்து மதுரை, இராமநாதபுரம், திரிசிரபுரம் பிரதேசங்களின் நிலையையும் இந்நாவலின் மூலம் காணமுடிகிறது.

இப்புத்தகத்தின் வாசகர்களுக்கு என் அன்பையும் வாழ்த்துக்களையும் கூறி விடைபெறுகிறேன்.

நா. பார்த்தசாரதி
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
1. சித்ரா பெளர்ணமியன்று கிடைத்த செய்தி

மதுரை மாநகரம் கோலாகலமாக விழாக் கோலம் பூண்டிருந்தது. பார்க்கும் இடமெல்லாம் புதுமையும், பொலிவும், திருவிழாக் கலகலப்பும் தென்பட்டன. வேனிற் காலத்தில் இளந்தென்றலின் இதமான சுகானுபவம் தன் பொன்மேனிக்குக் கிடைக்க வேணும் என மார்புக் கச்சுக்கு மேல் நிறை ஆடைகள் அணியாமல் தோளில் ஓர் ஓரமாக அலங்கார மேலாடைச் சரியவிட்டுக் கொண்டு மஞ்சத்தில் துவண்டு கிடக்கும் இளமங்கை போல் மணல் திட்டுக்களுக்கிடையே ஓர் ஓரமாகச் சிறிதளவே நீர் பாயும் இளைத்த எழில் நதியாக வையை இலங்கிக் கொண்டிருந்தாள். ஆம்! அது தான் அவளுடைய வேனிற் காலத்து விழாக்கோலம். அவளது பொன்னிற மணல் மேனியில் பந்தல்களும், தோரணங்களும் தென்பட்டன. பெரும் புலவர்களும், பேரறிஞர்களும், மக்களும் கூடிச் சிந்திக்கும் முதன்மையும் அருமையும் இருப்பதால்தானே இந்த நகரத்திற்குக் கூடல் என்றே ஒரு பெயர் வைத்திருக்கிறார்கள்! உலகத்தை முழுவதையும் பெயர்த்துக் கொண்டு வந்து ஒரு தராசுத் தட்டில் வைத்து மற்றொரு தராசுத் தட்டில் மதுரை மாநகரத்தை மட்டும் வைத்தால் கூட இதன் மதிப்புதான் அதிகமாக இருக்கும் என்றெல்லாம் புலவர்கள் புகழ்ந்தது பொருத்தம் என்றே தோன்றியது.

மீனாட்சி கல்யாணம் முடிந்து தேர் நிலைக்கு வந்து மகிழ்ச்சி நிறைவடையு முன்னே ஆற்றில் அழகர் வந்து இறங்குகிறார். தென்னாடு முழுவதும் குழந்தை குட்டிகளோடும் மனைவி மக்களோடும் தத்தம் சொந்த ஊர்களிலிருந்து ஒழித்துக்கோண்டு மதுரையிலே கூடிவிட்டாற்போல் நகரம் முழுவதும், சுற்றுப்புறங்களிலும் எள் விழ இடமின்றி மக்கள் கூடிவிட்டார்கள். நிறைய விருந்தனர் வந்திருக்கும் வீட்டில் எப்படி அதிகக் கலகலப்பும், பரபரப்பும், மகிழ்ச்சியும், உபசரணைகளும், உல்லாசமும் நிரம்பியிருக்குமோ அப்படி நகருக்கே உல்லாசம் வந்துவிட்டது போலிருந்தது; நகருக்கே விருந்து வந்தது போலிருந்தது.

பூக்கள் தீபதூப வாசனைகளின் நறுமணமும் வாத்தியங்களின் இன்னொலியும், ஆரவாரங்களின் அழகும், அலங்காரப் பந்தல்கள், அழகுத் தோரணங்களின் காட்சியும் நகரையே இந்திரலோகமாக்கியிருந்தன. சித்திரா பெளர்ணமி நகரையே சிங்கார புரியாக்கியிருந்தது. எங்கும் ஆரவாரம், எங்கும் மகிழ்ச்சி, எங்கும் விழாக்கோலம்.

இப்போது இந்த விழாவுக்காகவே ராணி மங்கம்மாளும், இளவரசர் ரங்ககிருஷ்ண முத்துவீரப்பரும் திரிசிரபுரத்திலிருந்த்து தமுக்கம் அரண்மையிலே வந்து தங்கியிருக்கிறார்கள். தமுக்கம் ராஜகிருஹத்திற்கு இப்போது புதுமணப் பெண்ணின் பொலிவு வந்திருக்கிறதென்றால் மகாராணியும் இளவரசரும் வந்து தங்கியிருப்பது தான் அதற்குக் காரணமாக இருந்தது.

நேற்று மீனாட்சி கல்யாணத்தைத் தரிசித்தாயிற்று. ஆற்றில் அழகர் இறங்குவதைக் கண்டு வணங்கிவிட்டு மகாராணியும், இளவரசரும் திரிசிரபுரத்திற்குத் திரும்பிவிடக் கூடுமென்று தெரிகிறது.

ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளி ஆற்றின் கரைக்கு வந்ததும் குதிரை வாகனத்திற்கு மாறித் தரிசனமளித்தார் கள்ளழகர். காலை இளங்கதிரவனின் செம் பொன்னொளி பட்டு அழகரின் குதிரை வாகனம் மின்னுகிறது. இது வையை ஆறா அல்லது மக்கள் நதியா என்று மாற்றி நினைக்கும்படி நதிப்பரப்பே கண்ணுக்குத் தெரியாதபடி அவ்வளவு மக்கள் கூட்டம். அரண்மனைச் சேவகர்கள் வழிவிலக்கி இடம் செய்து கொடுத்தும் அந்தப் பெருங்கூட்டத்தினரிடையே ராணி மங்கம்மாளும் இளவரசர் ரங்ககிருஷ்ண முத்துவீரப்பரும் அமர்ந்திருந்த சித்திரப் பல்லக்கு, கீழிறங்க முடியாமல் இருந்தது. பல்லக்குத் தூக்கிகள் எப்படியோ சிரமப்பட்டுப் பல்லக்கை மணற்பரப்பில் இறக்கினர்.

மகாராணியும் இளவரசரும் பல்லக்கிலிருந்து இறங்கினர். அரசியையும், இளவரசரையும் கண்ட மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். நெருக்கியடித்துக் கொண்டு காண முந்தினர். மகிழ்ச்சி ஆரவாரமும் வாழ்த்தொலிகளும் விண்ணை எட்டினாற்போல் முழங்கின. அனைவர் முகமும் பயபக்தியோடு கூடிய மகிழ்ச்சியை அடைந்தன.

இன்னும் இளமை வாடா வனப்பும், காம்பீர்யமும், கட்டழகுமாக ராணி மங்கம்மாள் இறங்கி நின்ற போது அந்த எடுப்பான எழில் தோற்றமே சுற்றி நின்றவர்களிடையே ஒரு பயபக்தியை உண்டாக்கிற்று. கறைதுடைத்த முழுமதி போன்ற ராணியின் அழகும், காம்பீர்யமும் இவள் கணவனை இழந்தவள் என்ற அனுதாப உணர்வை ஏற்படுத்துவதற்குப் பதில் தனது சாதுர்யத்தால் பாலப் பருவத்தைக் கடந்து இப்போதுதான் இளைஞனாகியிருக்கும் ரங்ககிருஷ்ண முத்து வீரப்பனுக்காக நாட்டைக் கட்டிக் காத்து வருகிற தைரியசாலி என்ற பெருமித உணர்வையே உண்டாக்கின.

மிக இளம் வயதாயிருந்தும் அரும்பு மீசையும், எடுத்து அள்ளி முடிந்த குடுமிக் கொண்டையும் ஆஜானுபாகுவான உயரமுமாயிருந்தான் ரங்ககிருஷ்ண முத்துவீரப்பன். அழகில் தாய் மங்கம்மாளையும், உயரத்திலும் ஆஜானுபாகுவான உடலமைப்பிலும், தந்தை சொக்கநாத நாயக்கரையும் கொண்டு விளங்கினான் அவன். தெய்வ தரிசனத்தோடு ராஜ குடும்பத்தின் தரிசனமும் கிடைத்த மகிழ்ச்சியில் திளைத்திருந்தது மக்கள் கூட்டம்.

அழகர் ஆற்றில் இறங்கினார். ராணி மங்கம்மாளும், ரங்க கிருஷ்ண முத்துவீரப்பனும் கள்ளழகரின் திருவடிகளைச் சேவித்த அருள் உவகையோடு தமுக்கம் அரண்மனைத் திரும்பினர். நேரம் நண்பகலாயிருந்தது. தமுக்கம் அரண்மனையின் முகப்புத் தோட்டம் அமைதியாயிருந்தது.

அவர்கள் பல்லக்கு தமுக்கம் அரண்மனையில் நுழைந்த போதே அரண்மனை முகப்பிலுள்ள புல்வெளியில் புதிய குதிரைகள் இரண்டு மூன்று நின்று கொண்டிருந்தன. யாரோ தேடி வந்திருக்கிறார்கள் என்று தெரிந்தது. வந்திருக்கும் புதியவர்கள் யாராயிருக்கக் கூடும் என்கிற யோசனையுடனே ராணி மங்கம்மாளும், ரங்ககிருஷ்ண முத்துவீரப்பனும் பல்லக்கிலிருந்து இறங்கினர்.

அவர்களுடைய சந்தேகத்தை அதிக நேரம் நீடிக்க விடாமல் அரண்மனைக் காவலாளி ஒருவன் வந்து தெரிவித்தான். அவன் எதிர்கொண்டு வந்து தெரிவித்த விதமே செய்தியின் அவசரத்தையும், அவசியத்தையும் உணர்த்துவதாயிருந்தது.

"திண்டுக்கல்லிலிருந்தும் அம்மையநாயக்கனூரிலிருந்தும் நம் படைத் தலைவர்களும், ஒற்றர்களும் அவசரமாகத் தங்களைக் காண வந்திருக்கிறார்கள் மகாராணீ!"

ராணி மங்கம்மாளோ, இளவரசனோ காவலாளிக்கு மறுமொழி எதுவும் கூறாமல், அவன் உரைத்த விவரத்தைக் கேட்டுக் கொண்டதை முகஜாடையால் ஏற்றுக்கொண்ட பின் உள்ளே விரைந்தனர். தெரிவதற்கிருந்த செய்தியில் அந்த இருவர் மனமுமே மிக விரைந்த நாட்டமும் பரபரப்பும் அடைந்திருந்தன. இளவரசன் ரங்ககிருஷ்ண முத்துவீரப்பனை விட ராணி மங்கம்மாளின் மனம் தான் அதிகக் கலக்கமும் பரபரப்பும் அடைந்திருந்ததென்று சொல்லவேண்டும். மகாவீரனும், பேரழகனுமாகிய தன் கணவன் சொக்கநாத நாயக்கன் எந்தச் சூழ்நிலையில் காலமானான் என்பதை அவள் எண்ணினாள். நாட்டையும், தன்னையும், இளங்குருத்தான ரங்ககிருஷ்ணனையும் எந்த நிலையில் விட்டுச் சென்றார் என்பதையும் எண்ணினாள். நாட்டைச் சுற்றிலும் பகைவர்களும், ஆதிக்க வெறியர்களும், மதுரைச் சீமையைக் கைப்பற்றி ஆள இரகசிய ஆசை வைத்திருக்கும் அந்நியர்களுமாகச் சூழ்ந்திருக்கும் கவலைக்கிடமான காலத்தில் கணவனை இழந்து பால் மணம் மாறாத சிறுவன் ரங்ககிருஷ்ணனை இடுப்பில் ஏந்திச் சீராட்டி வளர்த்தது போலவே தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட நாட்டையும் மற்றொரு குழந்தையாக எண்ணிப் பாதுகாக்க வேண்டி நேர்ந்த தன் மனச் சுமையின் கனத்தை எண்ணினாள். அனுபவங்களாலும், அவசியத்தாலும், அவசரத்தாலும், சந்தர்பங்களின் நிர்ப்பந்தங்களாலும், தான் மெல்ல அரசியல் சிக்கல்களில் சிக்கியதையும், சிக்கல்களிலிருந்து தன்னையும் நாட்டையும், ஆட்சியையும் விடுவிக்கக் கற்றுக் கொண்டதையும் நினைத்தாள்.

"அறிவு ஒருவனை வெறும் விவரந் தெரிந்தவனாக மட்டுமே ஆக்குகிறது. அனுபவம்தான் உலகிலேயே மிகப்பெரிய ஆசிரியன். அனுபவம் தான் திறமையைக் கற்றுக் கொடுக்கிறது. அனுபவம் தான் மனத்தையும், வாக்கையும் புத்தியையும் பளிச்சென்று இலட்சணமாகத் தெரியும்படி மெருகிடுகிறது" என்று பாவாடை அணியும் சிறுமியாக சந்திரகிரியில் தன் தந்தை லிங்கம நாயக்கரோடு வாழ்ந்த போது அவர் தனக்குக் கூறிக்கொண்டிருந்த புத்திமதி இப்போது கணவனின் மரணத்துக்குப்பின் இப்படித் தன் வாழ்விலேயே பலித்து விடும் என்று மங்கம்மாள் கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை.

சிறு பருவத்தில் தந்தையிடம் கேட்டுக் கேட்டு ரசித்த இராமாயணம், பாரதம், முதலிய வீரதீரக் கதைகள் நினைவு வந்தன. பயம் தயக்கம் என்பதெல்லாம் என்னவென்றே அறியாமல் சந்திரகிரிக் காடுகளிலும் மலைகளிலும் தோழிகளோடும் தனியேயும் சுற்றிய நாட்கள் ஞாபகத்தில் மேலெழுந்து மிதந்தன. அப்படி அடங்காப்பிடாரியாகச் சுற்றிய நாட்களில் ஒரு நாள் தன் வளர்ப்புத் தாதியரும் செவிலித்தாயும் தந்தையிடம் போய், தன்னைப் பற்றிக் குறை கூறிய போது "உன்னை நான் சிறிதும் அடக்கவோ, ஒடுக்கவோ, கட்டுப்படுத்தவோ விரும்பவில்லை மகளே! நீ சுதந்திரமாகக் காட்டு மல்லிகை போல இஷ்டப்படி வளரலாம். சுதந்திரமாக வளர்பவர்கள் எதிர்காலத்தில் விரும்பத்தகுந்த நல்ல கட்டுப்பாடுள்ளவர்களாக மாறுவதும், கட்டுப்பாடாக வளர்பவர்கள் எதிர்காலத்தில் விரும்பத்தகாதபடி தாறுமாறாகத் திரிவதும் சகஜம். காடு மலைகளில் அலைகின்ற தண்ணீர் ஒரு நாள் ஓரிடத்தில் கரைகளுள்ள நதியாக மாறிப் பேரும் புகழும் பெற்றுக் கடலை அடையும் தகுதியைப் பெறும் என்பது தான் நியதி. உன் தாதியாரும் செவிலியும் உன்னைப் பற்றிக் கூறும் குறைகளை நான் இலட்சியம் செய்யப் போவதில்லை. கவலைப் படாமல் உன் விருப்பப்படி இரு குழந்தாய்!" என்று தன்னைக் கூப்பிட்டு அன்போடு அரவணைத்துப் பிரியத்தோடு அவர் கூறிய நல்லுரைகளை எண்ணினாள். மனம் அந்நினைவில் இளகி நெகிழ்ந்தது.

காடு மலைகளில் அலைகின்ற தண்ணீரெல்லாம் கீழே இறங்கியதும் ஓரிடத்தில் கரைகளுள்ள நதியாவது போல் தன் வாழ்வும் இப்போது ஆகியிருப்பதனை மங்கம்மாள் உணர்ந்தாள்.

"அம்மா!... என்ன யோசனை... இப்படி ஒரேயடியாக...? ஒற்றர்களும் படைவீரர்களும் இங்கே ஆலோசனை மண்டபத்து முகப்பில் காத்திருக்கிறார்கள். நீங்கள் பாட்டுக்கு ஏதோ யோசித்தபடியே அந்தப்புரத்தை நோக்கி நடக்கிறீர்களே?" என்று ரங்ககிருஷ்ணன் குறுக்கிட்ட பின்புதான் மங்கம்மாள் நிகழ்காலத்துக்கே வந்தாள்.

புகழ்பெற்ற திருமலை நாயக்கரின் பேரரும் தன் கணவருமான காலஞ்சென்ற சொக்கநாத நாயக்கரின் கம்பீரத் திருவுருவை மனக்கண்ணில் உருவகப்படுத்திப் பார்த்துவிட்டு அந்த நினைவு மாறுவதற்குள்ளே அதே ஞாபகத்தோடு அருகே உடன் வந்து கொண்டிருந்த மகன் ரங்ககிருஷ்ணமுத்து வீரப்பனையும் புறக்கண்களால் பார்த்து உள்ளூற ஒப்பிட்டுக் கொண்டாள் ராணி மங்கம்மாள்.

தஞ்சை மன்னர்களின் விரோதப் போக்கு, சேதுபதிகளின் மறவர் சீமை மனஸ்தாபங்கள், ரஸ்டம்கான் என்ற படைத் தளபதி தன் கணவரை 'அரசரே இல்லை' என்று கூறி அவமானப்படுத்த முயன்ற சம்பவம், கணவரின் சிரமங்கள், ஆட்சிக்கால வேதனைகள்... எல்லாம் ஞாபகம் வந்து அந்த ஞாபகத்தோடு மகனின் முகத்தை நம்பிக்கை பொங்கப் பார்த்தாள் அவள். அவன் சொன்னான் :

"ஏதோ கஷ்டம் வரப்போகிறது என்று இப்போது மனசில் படுகிறது அம்மா!"

மகனின் குரலிலே கவலை தோய்ந்திருப்பது தெரிந்திருந்தது.

"கவலைப்ப்டாதே! ஒவ்வொரு கஷ்டமும் நம்மை வளர்ப்பதற்குத்தான் வரும்! சுகங்கள் நம்மை ஒரேயடியாக அயர்ந்து தூங்கச் செய்துவிடாதபடி அடிக்கடி நம்மை விழிப்பூட்டுவதற்கு வருபவை எவையோ அவற்றிற்குத்தான் ஜனங்களின் பாமர மொழியில் கஷ்டங்கள் என்று பெயர் அப்பா!"

"கள்ளழகர் கருணையாலும் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் திருவருளாலும் உங்கள் அரிய ஆலோசனையின் உதவியாலும் எந்தக் கஷ்டத்தையும் வென்று விடலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது அம்மா!"

"மகனே! நம்பிக்கை தான் அரசியலில் தவம்! நம்பிக்கை தான் வெற்றி! நம்பிக்கை இருந்தால் எதையும் வெல்லலாம். நம்பிக்கை இல்லாதவர்கள் எல்லோரும் ஒன்றைத் தொடங்கு முன்னேயே தோற்றுப் போகிறார்கள். நம்பிக்கை உள்ளவர்களோ தோற்றுப்போன பின்னும் வெற்றி கொள்ளத் தொடங்குகிறார்கள். இந்த தாரக மந்திரம் உன் இதயத்தில் இடைவிடாமல் ஞாபகம் இருக்க வேண்டும். இந்த ஒரே மந்திரத்தால் தானே பெண் பிள்ளையாகிய நானே இத்தனை காலம் இத்தனை துன்பங்களுக்கும் விரோதங்களுக்கும் நடுவே இந்த நாட்டையும் உன்னையும் பாதுகாத்து வளர்க்க முடிந்தது?"

இவ்வாறு கூறிய படியே மகனுடன் தமுக்கம் அரண்மனைக்குள்ளே இருந்த விசாலமான ஆலோசனை மண்டபத்திற்குள் நுழைந்தாள் ராணி மங்கம்மாள்.

அங்கே காத்திருந்த படைத் தலைவர்களும் ஒற்றர் தலைவர்களும் முன் வந்து ஏழடி விலகி நின்று பயபக்தியோடு ராணி மங்கம்மாளையும், இளவரசரையும் வணங்கினார்கள். மங்கம்மாள் தான் முதலில் அவர்களை வினவினாள்:

"என்ன விஷயம்? நீங்கள் எல்லோரும் இத்தனை அவசரமாகப் புறப்பட்டு வந்திருப்பதிலிருந்து ஏதோ அவசரமான காரியம் என்று நான் அநுமானித்துக் கொண்டது சரியாக இருக்குமா?"

"உங்கள் அநுமானம் முற்றிலும் சரிதான் மகாராணீ! டில்லி பாதுஷா ஒளரங்கசீப்பின் படை வீரர்களும், செருப்பு ஊர்வலமும் திண்டுக்கல்லைக் கடந்து வேகமாக மதுரையை நோக்கி வந்து கொண்டிருப்பதைத் தெரிவிக்கவே நாங்கள் விரைந்து வந்தோம்".

"இது படையெடுப்பா? அல்லது பயமுறுத்தலா?"

"இரண்டும்தான் மகாராணீ!"

"அது சரி; என்னவோ செருப்பு ஊர்வலம் என்கிறீர்களே...? அது என்ன கூத்து?"

"வருஷா வருஷம் தென்னாட்டு அரசர்களிடமும், சிற்றரசர்களிடமும் கப்பமும், வரியும் வாங்குவதற்குப் பாதுஷாவின் படைவீரர்கள் புறப்பட்டு வருவதுண்டல்லவா? இந்த வருஷம் ஒரு புது ஏற்பாடாக ஒளரங்கசீப்பின் கால் செருப்பு ஒன்றை யானை மேல் அலங்கார அம்பாரியில் ஜோடித்து வைத்து அனுப்பியிருக்கிறாரகள். கப்பம் கட்டுகிற நாட்டு அரசர்களும், மக்களும் அந்தச் செருப்பை வணங்கி வழிபட வேண்டுமாம்".

"வணங்கி வழிபட மறுத்தால்?"

"அப்படி மறுப்பவர்களோடு அவர்கள் போர் தொடுப்பதாகப் பயமுறுத்துகிறார்கள்; அந்த பயமுறுத்தலுக்கு நடுங்கி எல்லா இடங்களிலும் அந்தப் பழைய செருப்புக்கு வணக்கமும், வழிபாடும் நடக்கிறது மகாராணீ!"

"இது, அக்கிரமம்... அநியாயம்..."

"அதிகாரத் திமிரில் இருப்பவர்கள் தங்கள் அக்கிரங்களையும், அநியாயங்களையும் கூடச் சட்ட ரீதியானவை என்று பிரகடனம் செய்து விட முடிகிறது அம்மா! அதை மீறினால் தண்டனை என்று அறிவித்து விடவும் முடிகிறது. அறியாது மக்கள் செய்யும் சில குற்றங்கள் சட்டப்படி தவறாகின்றன என்றால் இப்படி மன்னர்கள் செய்யும் சட்டங்களே தவறுகளாக இருக்கின்றன!"

"நம் நிலை என்ன? நாம் என்ன செய்யப் போகிறோம் என்றறிந்து செல்லவே மகாராணியையும், இளவரசரையும் காண வந்தோம்."

"அம்மா! அழகரையும், ஆலவாயண்ணலையும் வணங்கிய தலையால் அந்நிய அரசனின் அடிமைச் சின்னமாகிய செருப்பை வணங்குவதற்கு ஒருபோதும் நாம் சம்மதிக்கக் கூடாது" என்று ரங்ககிருஷ்ண முத்துவீரப்பன் அன்னையை முந்திக்கொண்டு கொதிப்படைந்து சீறினான்.

படைவீரர்கள் ராணி மங்கம்மாளின் முகத்தை உத்தரவுக்காகப் பார்த்தனர். அது பதற்றமோ, பரபரப்போ, சலனமோ அற்று நிதானமாகவும், சிந்தனை லயிப்போடும் இருந்தது. ஒவ்வொரு வார்த்தையாகத் தேர்ந்தெடுத்து அளந்து பதறாத குரலில் மங்கம்மாள் பேசலானாள்:

"நீ சொல்வதை நான் மறுக்கவில்லை முத்து வீரப்பா! ஆனால் இதை ஆத்திரத்தோடு சமாளிப்பதைவிட மிகவும் அடக்கமாகவும் இராஜ தந்திரத்தோடும் சமாளிக்க வேண்டும். முன் கோபமும், ஆத்திரமும் அரசியல் காரியங்களில் ஒரு போதும் வெற்றியைத் தராது. நமது எதிரியைச் சந்திக்கத்தக்க விதத்தில் நம்மைப் பலப்படுத்தி ஆயத்த நிலையில் வைத்துக் கொண்டு தான் செயலில் இறங்க வேண்டும். அதற்குக் கொஞ்சம் அவகாசம் தேவை.

'பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்'

என்று வள்ளுவர் சொல்லியிருப்பதை நினைத்துப் பார்! எதிரியைக் கண்டு உடனே வியர்க்க விறுவிறுக்க முன் கோபப்பட்டுப் பயனில்லை. கோபம் முதலில் உள்ளத்தில் எழுதல் வேண்டும். பின் சமயம் பார்த்து அது வெளிப்படவும் வேண்டும்."

"தங்கள் உத்தரவு எப்படியோ அப்படியே நடக்கும் மகாராணீ!"

"எங்கள் இளவரசர் ரங்ககிருஷ்ண முத்து வீரப்பர் சித்ரா பௌர்ணமிக்காகத் தரிசனத்துக்கு வந்த இடத்தில் நோய்வாய்ப் பட்டு மறுபடி திரிசிரபுரத்துக்கே திரும்பிவிட்டார். ஆகையால் நீங்கள் மதுரையில் சென்று அவரைச் சந்திக்க இயலாத நிலை" என்று கோபப்படாமல் பதறாமல் அடக்கமாகச் சென்று பாதுஷாவின் படைத் தலைவனிடம் தெரிவியுங்கள்..."

"பாதுஷாவின் படைத்தலைவன் தங்களைப்பற்றி விசாரித்தால்...?"

"என்னை இதில் சம்பந்தப்படுத்த வேண்டாம். அரசியல் காரியங்களை இளவரசரே நேரில் கவனிப்பதாகச் சொல்லிக் கொள்! நான் செய்ய வேண்டியதைப் பின்னால் திரை மறைவிலிருந்து செய்து கொள்ள முடியும்".

"பாதுஷாவின் படைகளும் செருப்பு ஊர்வலமும் நம் ராஜ தானியாகிய திரிசிரபுரத்துக்கே தேடிக் கொண்டு வந்தால்...?"

"அப்படி வந்தால் அவர்களையும் அந்த பழைய செருப்பையும் எப்படிச் சந்திக்க வேண்டுமோ அப்படிச் சந்திக்க எல்லாம் ஆயத்தமாயிருக்கும், கவலை வேண்டாம். பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது. வீரர்களே! நாம் கடவுளுக்குப் பக்தர்களாக இருக்க முடியுமே ஒழிய மனிதர்களுக்கு அடிமைகளாக இருக்க முடியாது."

இதைக் கூறும் போது ராணியின் குரலில் அழுத்தமும் காம்பீர்யமும் ஓர் உத்தரவின் உறுதியும் தொனித்தன.

இப்படி உத்தரவு கிடைத்தபின் ராணியையும் இளவரசரையும் வணங்கிவிட்டுப் புறப்பட ஆயத்தமான படை வீரர்களின் தலைவனை மீண்டும் அருகே அழைத்துத் தணிந்த குரலில் அவனிடம் சில இரகசிய உத்தரவுகளையும் பிறப்பித்த பின், "நினைவிருக்கட்டும்! நான் கூறியதை எல்லாம் உடனே நிறைவேற்று. நானும் இளவரசரும் இன்று மாலையிலேயே திரிசிரபுரம் புறப்பட்டுப் போய்விடுவோம்" என்றாள் அவள்.

வடக்கே அம்மைய நாயக்கனூரிலிருந்தும், திண்டுக்கல்லிலிருந்தும் வந்திருந்த படை வீரர்கள், ஒற்றர்களின் குதிரைகள் உடனே அங்கிருந்து வேகமாகப் புறப்பட்டதைத் தமுக்கம் மாளிகையின் உப்பரிகையிலிருந்து ராணியும் இளவரசரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
2. சின்ன முத்தம்மாளுக்குப் பெரிய முத்துமாலை



படை வீரர்களின் குதிரைகள் கண்பார்வைக்கு மறைகிற வரை அந்தத் திசையிலேயே பார்த்துக் கொண்டிருந்தான் ரங்ககிருஷ்ண முத்துவீரப்பன். படை வீரர்களின் தோற்றம் கண் பார்வையில் தொலைதூரத்துப் புள்ளியாக மங்கி மறைந்த பின் தன் தாய் ராணி மங்கம்மாளின் பக்கம் திரும்பினான்.

"இது குனியக் குனியக் குட்டுவது போல் இல்லையா அம்மா? எவ்வளவு தான் பொறுத்துக் கொள்வது?"

"மகனே! அரசியலில் பொறுமை என்பதன் அர்த்தமே வேறு. நமது எதிரிக்கு நாம் அடக்கமாக இருப்பதுபோல் தோன்றச் செய்துவிட்டு அவனை எதிர்க்க இரகசியமாக நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்வதற்குத் தான் பொறுமை என்று பெயர்."

"நாம் இப்படி நினைக்கிறோம். ஆனால் நம் எதிரிகளோ தூங்கினவன் தொடையில் திரித்தமட்டும் கயிறு மிச்சம் என்று நினைக்கிறார்கள்."

"நாம் தூங்கினால்தானே அவர்கள் கயிறு திரிக்க முடியும்?"

தாயின் இந்தக் கேள்வியில் இருந்த குரல் அழுத்தம் மகனுக்குத் தெளிவாகப் புரிந்தது. அவள் நினைவோ உணர்வோ தூங்கவில்லை என்பதை அந்தக் குரல் புரியவைத்தது. தன்னை விட அதிக ஆத்திரம் அடைந்திருந்தும் தாய் அதை வெளிப்படுத்திக் கொள்ளாமல் உள்ளூறத் திட்டமிடுகிறாள் என்பதும் விளங்கிற்று.

அங்கே தமுக்கம் ராஜமாளிகையின் மேல் மாடத்திலிருந்து கம்பீரமாகத் தெரிந்த மதுரை மாநகரின் முழுமையான தோற்றமும், வையை நதியும் நகரின் இடையே இருந்தாலும் நகரை விட நாங்கள் உயர்ந்தவை என்பதுபோல் மேலெழுந்த கோபுரங்களும் அவனுள்ளே இருந்த பெருமிதத்தை வளர்த்தன. அவன் தோள்களைப் பூரிக்கச் செய்தன.

பகல் உணவுக்குப் பின் சிறிது களைப்பாறிவிட்டுத் தாயும், மகனும் திரிசிரபுரத்துக்குப் புறப்பட்டார்கள். அந்தப் பல்லக்குப் பயணம் மிகவும் பரபரப்பான மனநிலையோடு துரிதமாக மேற்கொள்ளப்பட்ட ஒன்றாக இருந்தது. வழி நெடுகிலும் இரைபட்டுக் கிடந்த வசந்த கால வளங்களைப் பார்க்கும் பொறுமையோ மனநிலையோ அப்போது அவர்களுக்கு இல்லை. மனதில் வேறு காரியமும் அதைப் பற்றிய கவலையும் இருந்தன. ஆற்றில் அழகர் இறங்குவதைத் தரிசனம் செய்து விட்டுத் திரும்புவோரும், தொடர்ந்து நடைபெறவிருந்த திருவிழாவைக் காண மதுரை மாநகருக்குச் செல்லுவோருமாகச் சாலையெங்கும் கலகலப்பாக இருந்தது. மதுரையின் திருவிழா வனப்பு சாலைகளிலும், சோலைகளிலும் தர்ம சத்திரங்களிலும் வழிப் பயணிகளிடமும் தேசாந்தரிகளிடமும் கூடத் தெரிந்தது. பால் பொழிவது போன்ற அந்த முழுநிலா இரவில் பிரயாணம் செய்யும் சுகத்தைக் கூட அவர்கள் அப்போது உணரவில்லை. சூரியாஸ்தமனமோ சந்திரோதயமோ கூட அவர்கள் மனத்தைக் கவரவில்லை.

அந்தப் பல்லக்கில் அமர்ந்திருப்பவர்களின் மனநிலையைப் பிரதிபலிப்பதுபோல் அதைத் தூக்கிச் சென்றவர்கள் வாயு வேகத்தில் விரைந்து கொண்டிருந்தனர். ரங்ககிருஷ்ணன் பல்லக்கினுள் எதிரே அமர்ந்திருந்த தன் தாயைக் கேட்டான்.

"அம்மைய நாயக்கனூரிலிருந்தும் திண்டுக்கல்லிலிருந்தும் பாதுஷாவின் செருப்பு ஊர்வலத்தைப் பற்றிச் சொல்லிவிட்டுப் போக வந்தவர்களிடம் எனக்கு உடல் நலமில்லை என்றும் அதனால் நான் உடனே திரிசிரபுரம் திரும்புவதாகவும் சொல்லி அனுப்பினீர்களே, அதன் பொருள் என்ன அம்மா?"

"பாதுஷாவின் செருப்பையும், அதைவிட அடிமைகளான ஏவலாட்களையும் மதுரையிலேயே நாம் ஏன் காத்திருந்து எதிர்கொண்டு சந்திக்கவில்லை என்பதற்கு ஏதாவது ஒரு காரணத்தைச் சாக்குப்போக்காகச் சொல்ல வேண்டுமே அதனால் தான்..."

"மதுரையிலேயே அவர்களை எதிர்கொண்டு 'மாட்டேன்' என்று நேருக்கு நேர் மறுத்துவிட்டிருக்கலாமே அம்மா?"

"அது ராஜதந்திரமில்லை மகனே! போருக்கும் விரோதத்துக்கும் முன்னால் முதலில் நாம் நமது எதிரியைப் போதுமான அளவு குழப்பவும் இழுத்தடிக்கவும் வேண்டும். நாம் என்ன செய்யப்போகிறோம் என்பது நம் எதிரிக்கு முன்கூட்டியே தெரிந்துவிடக்கூடாது. நமது எதிரி அதிகபட்சமான தவறுகளையும் குழப்பங்களையும் புரிந்து தடுமாறுகிற எல்லைவரை நாமே அவனைத் துணிந்து அனுமதிக்கவேண்டும். யாரைத் தேடி வந்திருக்கிறார்களோ அவனுக்கே உடல் நலமில்லை என்றால் அவர்களது வேகம் தானே மட்டுப்படும்? எதிரியின் அந்த வேகக் குறைவு நாம் வேகம் பெறப் பயன்படும்."

தாயின் மறுமொழியில் இருந்த சாமர்த்தியமும், சாதுர்யமும் ரங்ககிருஷ்ணனை வியப்பிலாழ்த்தின.

கிழக்கு வெளுத்துப் பின் மெல்ல மெல்லச் சிவக்கத் தொடங்கியது. அடிவான வெளுப்பில் அப்படியே ஒரு சித்திரத்தை எழுதிப் பதித்தது போல் மலைக்கோட்டையும் திரிசிரபுர நகரமும் தெரியத் தொடங்கின. புள்ளினங்களின் குரல்களும் அதிகாலையின் குளிர்ந்த காற்றும் பல்லக்கில் அமர்ந்திருந்தவர்களின் தளர்ச்சியைப் போக்கின. காவிரிக்கரை பிரதேசம் நெருங்க நெருங்கப் பல்லக்குத் தூக்கிகளின் உற்சாகம் அதிகமாகியது. பல்லக்குக்கு முன்னும் பின்னும் தீப்பந்தங்களோடு வெளிச்சத்துக்காக ஓடிக்கொண்டிருந்தவர்கள் தீவட்டிகளை அணைத்தார்கள். பல்லக்குத் தூக்கிகள் களைப்புத் தெரியாமலிருப்பதற்காகவும் உறங்கி விடாமல் இருப்பதற்காகவும் ஒரு சீரான குரலில் பாடிக்கொண்டிருந்த வழிநடைப் பாடல்கள் நகரம் நெருங்குவதையறிந்து ஒலி மங்கிப் படிப்படியாக நின்றன. உறையூரையும் கடந்தாயிற்று.

பல்லக்கினுள் ராணி மங்கம்மாள் திருவரங்கமும் மலைக்கோட்டையும் இருந்த திசைகளை நோக்கிக் கைகூப்பினாள். ரங்ககிருஷ்ண முத்துவீரப்பனும் அந்தத் திசைகளை நோக்கித் தொழுதான். மங்கம்மாள் கூறினாள்:

"மதுரையில் மீனாட்சி சுந்தரேசரும், கள்ளழகப் பெருமாளும் நம்மைக் காப்பாற்றி விட்டார்கள். இங்கே ரங்கநாதரும் மலைக்கோட்டைப் பெருமானும் காக்க வேண்டும்."

"பாதுஷாவின் ஆட்கள் மதுரையோடு திரும்பிப் போய் விடமாட்டார்கள். இங்கேயும் வந்து தொல்லை கொடுப்பார்கள் என்றே தோன்றுகிறது அம்மா!"

"மகனே! உத்தமமான வீரர்கள் நியாயமான முறையில் தன் எதிரியை மதித்து அவனை வெல்லவேண்டும் என்று மட்டுமே நினைப்பார்கள். மத்திமமான வீரர்கள் எதிரியை அழித்து அவன் உடைமைகள் பொருள்கள் பெண்டு பிள்ளைகளைச் சூறையாட வேண்டும் என்று நினைப்பார்கள். மிகவும் மூன்றாந்தரமானவர்கள் எதிரியை வெல்வதோடு அவனையும் அவனைச் சேர்ந்தவர்களையும் அவமானப்படுத்த வேண்டும் என்றும் நினைப்பார்கள். டில்லி பாதுஷ ஔரங்கசீப்பின் ஆட்கள் மூன்றாவது வகையைச் சேர்ந்தவர்கள் என்று தோன்றுகிறது."

"இருக்கட்டும் அம்மா! மூன்றாந்தரமான அவர்களுக்கு நாம் முதல் தரமான பாடத்தைக் கற்பித்து அனுப்பலாம்."

திரிசிரபுரம் கோட்டையில் புகுந்த பல்லக்கு அரண்மணை முகப்பில் இறக்கப்பட்டது.

உயரமும் அதற்கேற்ற உடலழகும் நிறைந்த பேரழகி ஒருத்தி இளவரசன் ரங்ககிருஷ்ண முத்துவீரப்பனுக்கு ஆரத்தி சுற்றிக் கொட்டி வரவேற்றாள். ராணி மங்கம்மாள் ஆரத்திக்குக் காத்து நிற்கவில்லை. ராணியை அழைத்துக் கொண்டு பணிப்பெண்கள் அந்தப்புரத்துக்குள் சென்றுவிட்டார்கள்.

அழகாகக் கோலமிட்டு இருந்த தரையில் ஆரத்தி சுற்றிக் கொட்டிய பெண்ணிடம் ரங்ககிருஷ்ணன் புன்முறுவலுடன் வினவினான்.

"நீ வரைந்த கோலத்தை உன் ஆரத்தி நீரால் நீயே அழித்து விட்டாயே முத்தம்மா!"

"சில திருக்கோலங்களைக் காண வந்தால் இப்படிச் சொந்தக் கோலங்கள் அழிவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது இளவரசே!"

"மதுரை மாநகரத்தில் இருந்த சில நாட்களில் உன்னை ஒரு கணம் கூட மறக்க முடியவில்லை முத்தம்மா!"

"அப்படியானால் பல கணங்கள் மறந்திருந்தீர்கள் போலிருக்கிறது".

"அழகான பெண்கள் குதர்க்கமான பேச்சுக்களைப் பேசக் கூடாது."

"இன்னும் கொஞ்ச நேரம் உங்களைப் பேச அனுமதித்தால் குதர்க்கமாகப் பேசுகிறவர்கள் அழகாக இருக்கக்கூடாது என்று கூடச் சொல்வீர்கள் போலிருக்கிறதே!"

"சொல்லலாம் தான்! ஆனால் அந்தத் தத்துவம் உனக்கு மட்டும் பொருந்தவில்லையே என்றுதான் தயங்க வேண்டியிருக்கிறது" என்று கூறியபடியே அவளருகில் நெருங்கினான் ரங்ககிருஷ்ணன். அங்கங்கே நின்ற பணிப்பெண்கள் மலர் கொய்யப் போகிறவர்கள் போல் விலகி நந்தவனத்திற்குள் புகுந்தனர்.

"சற்று எட்டியே நிற்கலாம், திடீரென்று மகாராணியாரே வந்தாலும் வந்துவிடுவார்."

"அந்தக் கவலை உனக்கு வேண்டாம் முத்தம்மா. அம்மா நீராடித் திருவரங்கத்திற்கும் மலைக்கோட்டைக்கும் முதலில் தரிசனத்திற்குச் சென்று விட்டுத்தான் வேறு பக்கம் திரும்பவே அவகாசமிருக்கும்."

"மாமன்னர் சொக்கநாத நாயக்கருக்கும் ராணி மங்கம்மாளுக்கும் புதல்வராகத் தோன்றிய தாங்கள் படையெடுக்கத் தேசங்களும், எதிரிகளும் இல்லாமற் போயிற்றா என்ன? இப்படித் திடீர் திடீரென்று என்னைப் போல அபலைப் பெண்களின் மேல் படையெடுப்பது ஏனோ?"

"மன்மதன் காரணமாக இருந்து நடக்கிற ஆக்கிரமிப்புகள் எதிரிகளோடு நடப்பதில்லை பெண்ணே! பரஸ்பரம் இருவருமே ஜெயிக்கிற போருக்கு எதிரி ஏது? நண்பன் ஏது?"

"மதுரை மாநகரிலிருந்து உங்கள் பிரியத்துக்குரியவளுக்கு என்ன வாங்கி வந்தீர்களாம்?" - அவள் குரலில் பிணங்குவது போன்ற சிணுக்கம் ஒலித்தது. ரங்ககிருஷ்ணன் அவளது சின்ன இடையைத் தன் கரங்களால் வளைத்துத் தழுவினான். பின் தனது இடுப்பிலிருந்து பட்டுத் துணியாலான சுருக்குப்பை ஒன்றை எடுத்துப் பிரித்துப் பளீரென்று மின்னும் அழகிய பெரிய முத்துமாலை ஒன்றை அவள் கழுத்தில் அணிவித்தான்.

"சின்ன முத்தம்மாவுக்குப் பெரிய முத்துமாலை."

"இந்த முத்துமாலையை விட்டால் மதுரை மாநகரத்தில் வாங்கிவர வேறென்ன கிடைக்கப்போகிறது உங்களுக்கு?"

"நீ வாய்விட்டுக் கலீர் கலீரென்று சிரிக்கும் போதெல்லாம் உன் பல் முத்துக்களைப் பார்த்து இந்தப் புகழ்பெற்ற கொற்கை முத்துக்கள் அவமானப்பட்டுப் புழுங்கட்டுமே என்றுதான் இவற்றை வாங்கி வந்தேன்."

"ஆகா! பிரமாதம்! பிரமாதம்! நீங்கள் இந்த இளவரசுப் பொறுப்பை விட்டுவிட்டு, கவி எழுதவே போகலாம்."

"பாடுவதற்குரிய பொருளாக அல்லது பாத்திரமாக உன்னைப் போல் வசீகரமான பேரழகி ஒருத்தி கிடைப்பதாயிருந்தால் அதற்கும் நான் சித்தமாயிருக்கிறேன் முத்தம்மா!"

"அப்படியானால் ஓர் அழகான பெண் அகப்பட்டால் இருக்கிற பொறுப்புகளை எல்லாம் கைகழுவத் துணிவீர்கள் என்று சொல்லுங்கள்!"

"எல்லா அழகான பெண்களுக்காகவும் அல்ல. இந்தச் சின்ன முத்தம்மாள் என்கிற ஒரே ஓர் அழகிக்காக மட்டும் தான் அதைச் செய்யமுடியும்."

அவள் நாணித் தலைகுனிந்தாள். மணமுள்ள பூவுக்கு நிறம் போல அழகிய அவளுக்கு அந்த நாணம் மேலும் அழகூட்டியது. உயரத்திலும் வனப்பு வாய்ந்த கட்டழகுத் தோற்றத்திலும் முத்தம்மாள் ரங்ககிருஷ்ணனுக்கு இணையாக இருந்தாள். அந்த அரண்மனையிலேயே நம்பிக்கைக்குரியவளாக வளர்ந்த முத்தம்மாளும் ரங்ககிருஷ்ணனும் ஒருவருக்கொருவர் மிக நெருக்கமாகவும், பிரியமாகவும் நேசிப்பது ராணிமங்கம்மாளுக்குத் தெரிந்த விஷயம் தான். ஆனால் எல்லோருக்கும் ஒரு சிறிய சந்தேகமும் இருந்தது. நாயக்க வம்சத்தில் பலர் வைத்துக் கொண்டிருந்தது போல் அந்தப்புரத்து உரிமை மகளிரில் ஒருத்தியாக முத்தம்மாளை ஏற்றுக் கொள்வார்களா? அல்லது ரங்ககிருஷ்ணனின் பட்டத்தரசியாகவே ஏற்பார்களா என்பது சந்தேகத்துக்கிடமானதாயிருந்தது.

ராணி மங்கம்மாள் குடிப்பிறப்பு அந்தஸ்து என்றெல்லாம் பார்த்து எங்கே முத்தம்மாளை வெளிப்படையாகப் பட்டத்து மகிஷியாய் ஏற்காமல் அந்தப்புரத்து மகளிர் எனற அழகு மந்தைக்குள் தள்ளிவிடுவார்களோ என்னும் பயத்துக்குக் காரணமில்லாமலில்லை.

ராணி மங்கம்மாளை மணப்பதற்கு முன் அவள் கணவர் சொக்கநாத நாயக்கர் தஞ்சை நாயக்க அரசபரம்பரையைச் சேர்ந்த விஜயராகவ நாயக்கரின் வம்சத்தில் பெண்ணெடுக்க முயன்று முடியாமற் போயிற்று. காரணம், தஞ்சை நாயக்க வம்சம் விஜயநகர அரச வம்சத்துக்கு இணையான அந்தஸ்து உடையது என்றும், மதுரை நாயக்க வம்சம் அத்தகைய அந்தஸ்து உடையதில்லை என்றும் சொல்லப்பட்டது. அதிலிருந்தே தஞ்சை நாயக்க வம்சத்துக்கும் மதுரை நாயக்க வம்சத்துக்கும் விரோதம் நீடித்தது.

விஜயநகர மாமன்னராய் இருந்த அச்சுதராயரின் தங்கை கணவரான செல்லப்ப நாயக்கர் தஞ்சையில் ஆண்ட நாயக்க வம்சத்தின் முதல்வர். ஆனால் சொக்கநாத நாயக்கரோ பேரரசின் ஊழியராக நியமனம் பெற்று மதுரைக்கு வந்த விசுவநாத நாயக்கரின் வழித்தோன்றல்களில் ஒருவர். நேரடியான அரசவம்சமில்லை. இந்த அந்தஸ்துப் பிரச்சனை சொக்கநாத நாயக்கரையே உறுத்தியது; இதே அந்தஸ்தை மனதில் கொண்டு ரங்ககிருஷ்ணனுக்கு எந்த அந்தஸ்துமில்லாமல் சிறு வயதிலிருந்தே அரண்மனையில் வளர்ந்துவரும் முத்தம்மாளை மணமுடிக்கத் தயங்குவார்களோ என்ற சந்தேகம் சகலருக்கும் இருந்தது.

தாங்கள் உயர்ந்த ராஜவம்சம் என்று மற்றவர்களுக்கு நிரூபித்துக் காட்டுவதற்காகவே ராஜபரம்பரையில் மங்கம்மாள் தன் மருமகளைத் தேடக்கூடும் என்ற எண்ணம் அரண்மனை வட்டாரத்தில் பரவலாக நிலவியது. ஆனால் ரங்ககிருஷ்ணனோ தன் ஆருயிர்க் காதலி பேரழகி முத்தம்மாளுக்கு வாக்குக் கொடுத்திருந்தான். "மணந்தால் உன்னை மட்டுமே மணப்பேன். உடலாலும் உள்ளத்தாலும் உன் ஒருத்திக்கு மட்டுமே நாயகனாக இருப்பேன்."

இப்படி அவன் வாக்களித்தபோது முத்தம்மாள் அவனிடம் ஞாபகமாக ஒன்றைக் கேட்டிருந்தாள்.

"உங்கள் அரசவம்சத்தில் ஒவ்வோர் இளவரசரும் குறைந்தது இருநூறு பெண்களுக்காவது வாக்களித்திருக்கிறார்கள். இருநூறு பேரையும் அந்தப்புரத்தில் ஆசை நாயகிகளாக வைத்துக்கொண்டு அந்த வாக்கைக் காப்பாற்றி விட்டு அப்புறம் ஒரு பட்டத்து அரசியையும் மாலையிட்டு மணந்திருக்கிறார்கள். நீங்களும் அப்படி ஒரு வாக்குறுதியைத்தானே எனக்கு அளிக்கிறீர்கள்? அப்படி வாக்குறுதிக்கும் நீர்மேலெழுதிய எழுத்துக்கும் என்ன வித்தியாசம்?"

"இல்லை முத்தம்மா! எங்கள் வம்சத்திற்கே இது விஷயத்தில் நான் முன்னுதாரணமாக இருப்பேன். எனக்குப் பட்டத்தரசி, ஆசை நாயகி எல்லாமுமாக நீ ஒருத்திதான் இருப்பாய்" என்று அப்போது அவன் அவளுக்கு உறுதி கூறி வாக்களித்திருந்தான்.

ஆனால் மகாராணியும் அமைச்சர்கள் பிரதானிகள் ஆகியோரும் மூத்தவர்களும் பட்டத்தரசி விஷயமாக முடிவு செய்யும்போது அரசியல் காரியங்களைக் கொண்டு முடிவு செய்வார்களோ அல்லது ரங்ககிருஷ்ணனின் சொந்த இலட்சியத்துக்காக முடிவு செய்வார்களோ என்ற கலக்கமும் ஐயமும் முத்தம்மாளுக்கே உள்ளூற இருந்தன.

"ஓர் அரச வம்சத்துக்கு இளவரசரின் திருமணம் என்பது அவனுடைய சொந்த ஆசையைப் பொறுத்தது மட்டுமில்லை. அவனது ஆசை மிகவும் சிறிய குறைந்த முக்கியத்துவமுள்ளதாகி அதைவிடப் பெரிய முக்கியத்துவமுள்ள ராஜதந்திர பிரச்சனைகளுக்காகவும் அது எதிர்பாராத விதமாக நடந்துவிடலாம். உலகில் பல அரச குடும்பங்களில் அப்படித்தான் நடந்திருக்கிறது" என்றெல்லாம் முத்தம்மாளே ரங்ககிருஷ்ணனிடம் விளையாட்டாகவும் வினையாகவும் வாதிட்டிருக்கிறாள். இன்றும் கூட மதுரையிலிருந்து திரும்பியிருந்த இளவரசரிடம் அதேபோலச் சொல்லிப் பிணங்கினாள் அவள்.

"அரசகுமாரர்கள் காதல் வேட்கை மிகுதியால் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு அளிக்கும் மோதிரங்கள் முத்து மாலைகள் எல்லாம் வரலாற்றில் துயரங்களின் சாட்சியாக நிரூபணமாகி இருக்கின்றனவே ஒழியச் சத்தியங்களின் சாட்சியமாகவோ சாத்தியங்களின் சாட்சியமாகவோ நிரூபணமானதாக ஒரு சின்ன உதாரணம் கூட இல்லையே இளவரசே?" "நீ அதிகம் தான் சந்தேகப்படுகிறாய் முத்தம்மா!"

"சாம்ராஜ்யாதிபதிகள் விஷயத்தில் சந்தோஷப்படுவதை விட அதிகம் சந்தேகப்பட வேண்டிய அவசியம் தான் இருக்கிறது இளவரசே! சகுந்தலை ஏமாந்தாள். காளிதாஸனுக்குக் காவியம் கிடைத்தது. என்னைப்போல் ஓர் அப்பாவி ஏமாந்தால் வரலாறுகூட அதை மறந்துவிடும். அல்லது மறைத்துவிடும்."

"உனக்கு எதற்குக் காவியம் முத்தம்மா! நீயே ஒரு நடமாடும் காவியமாக இருக்கிறாயே?"

"எல்லா அரசகுமாரர்களுக்கும் எது தெரிகிறதோ தெரியவில்லையோ, வஞ்சகமில்லாமல் புகழத் தெரிகிறது. புகழ் என்பது செலவில்லாதது. சுலபமானது...! காற்றோடு போய்விடக் கூடியது."

"உன் விஷயத்தில் அது இயற்கையானது. பொருத்தமானது. உன்னைப் புகழும் போது வார்த்தைகள் ஏழ்மை அடைந்து விடுகின்றன. பொருள் வறுமைப்பட்டுப் போகிறது."

"போதும் உங்கள் புகழ்! என் தோழிகள் நந்தவனத்திலிருந்து திரும்புவதற்குள் நானும் அங்கு போக வேண்டும். இல்லையானால் அவர்களே இங்கு என்னைத் தேடிக்கொண்டு வந்து விடுவார்கள். நான் போய் வருகிறேன்" என்று ரங்ககிருஷ்ணனிடமிருந்து விடுபட்டு நந்தவனத்துப் பக்கமாக நழுவினாள் முத்தம்மாள்.

பொற்சிலை போன்ற அவள் நடந்து செல்லும் அழகை இரசித்தபடி நின்றான் ரங்ககிருஷ்ணன்.

எதிர்பாராத விதமாக அன்று அவனையும் திருவரங்கம் கோவிலுக்கு வரவேண்டும் என்று தாய் மங்கம்மாள் திடீரென்று வேண்டவே அவனும் நீராடித் தாயுடன் தரிசனத்துக்குப் புறப்பட வேண்டியதாயிற்று.

பல்லக்கில் போகும் போது தாய் அவனிடம் மீண்டும் டில்லி பாதுஷா விஷயத்தை அவளாகவே தொடங்கினாள்.

"ஔரங்கசீப்பின் ஆட்கள் இங்கு வர இன்னும் இரண்டு மூன்று நாட்கள் ஆகலாம். அதற்குள் இங்கே சில முக்கிய மாறுதல்கள் நடந்தாக வேண்டும். இப்போது இந்த அரண்மனையிலுள்ள இரண்டுங்கெட்ட நிலை நீடிக்கக்கூடாது. நான் இதுவரை உனக்குப் பட்டம் சூட்டவில்லை. முழுமையாக நானேயும் ஆளவில்லை. கணவனை இழந்த நிலையில் ஏதோ சமாளிக்கிறேன். எதிரிகள் வந்து நம் கதவைத் தட்டும் போது எவ்வளவுதான் கெட்டிக்காரியாக இருந்தாலும் ஒரு பெண் என்ற முறையில் சிலவற்றை நான் எதிர்கொள்வதில் பல பண்பாட்டுச் சிக்கல்கள் உண்டாகும் மகனே! அந்நிய அரசன் அந்நிய மதத்தைச் சேர்ந்தவன். ஒரு செருப்பை அனுப்பிக் 'கும்பிடு' என்கிறான். என்னைப்போல் ஓர் அரச குடும்பத்துப்பெண் அதை ஆதரிக்கவும் முடியாது. எதிர்த்து அவமதித்தாலும் ஒரு பெண் அவமதித்த விட்டாளே என்ற உணர்வில் எதிரியின் ஆத்திரம் பலமடங்கு அதிகமாகும். எதிர்க்கவும் வேண்டும். நாம் எதிர்த்தது நியாயமென்றும் ஆண்மையென்றும் எதிரிக்கு உறைக்கும்படி எதிர்க்கவும் வேண்டும். என்ன செய்வதென்று முடிவைப் பள்ளிகொண்ட பெருமாளிடமே கேட்கப் போகிறேன் மகனே!"

"எப்படி அம்மா?"

"பூக்கட்டி வைத்துப் பார்த்தால் அரங்கன் முடிவைச் சொல்லுவான் அப்பா!"

அவர்கள் பேசிக்கொண்டிருந்த போதே பல்லக்கு சந்தனமும் சண்பகமும் பச்சைக் கர்ப்பூர வாசனையும் மணந்து கொண்டிருந்த திருவரங்கமுடையானின் சந்நிதி முகப்பில் போய் இறங்கியது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
3. பாதுஷாவின் பழைய செருப்பு

அரவணையில் துயிலும் அரங்கநாதப் பெருமாளின் தரிசனம் கிடைத்ததோடன்றி, ராணி மங்கம்மாள் தன் மனத்தில் கருதிப் பூக்கட்டி வைத்துப் பார்த்த மிக முக்கியமான அரசியல் பிரச்சனைக்கும் அந்தப் பெருமாளே வழிகாட்டி உதவவும் செய்தார். அவள் எண்ணியபடியே செய்ய அரங்கனின் உத்தரவும் கிடைத்தது. திரும்புகிற வழியில் திருவானைக்காவிலும், நகருக்குள் மலைக்கோயிலிலும் வழிபாட்டை முடித்துக்கொண்டு, அவர்கள் அரண்மனைக்குத் திரும்பும்போது உச்சிவேளை ஆகியிருந்தது.

மலையிலிருந்து கீழே இறங்கும்போதே, கோயிலில் உச்சிகால பூஜைக்கான மணி ஒலிக்கத் தொடங்கிவிட்டது.

"மகனே! நான் உன்னிடம் எதைப் பேச நினைத்தேனோ அதைப் பேசத் தொடங்கும்போதே ஆலயமணியின் அருள் நாதம் கூட அதை ஆமோதிப்பது போல ஒலிக்கிறது. திருவரங்கத்துக்குப் போகும்போது நான் ஏற்கனவே சொல்லியபடி பொறுப்புகளை உன்னிடம் ஒப்படைக்க அரங்கனும் அனுமதி அளித்துவிட்டான்."

"அதற்கு இத்தனை அவசரமும் அவசியமும் ஏன் அம்மா?"

"இந்த அவசரத்துக்கும் அவசியத்துக்கும் என்ன காரணம் என்பதை நீயே நாளடைவில் புரிந்து கொள்வாய் ரங்ககிருஷ்ணா! உன் தந்தை இறந்த போதே, நானும் என்னை மாய்த்துக்கொள்ள நினைத்தேன்; அப்போது உன்னை நான் கருவுற்றிருந்த காரணத்தினால் என் உள்ளுணர்வே என்னைத் தடுத்தது. மற்றவர்களும் தடுத்துவிட்டார்கள். இந்த வம்சம் வாழவும் இதன் ஆளுமைக்கு உட்பட்ட மக்கள் நன்றாயிருக்கவுமே நான் இந்தச் சுமையை ஏற்றுத் தாங்கிக் கொண்டேன். சக்தியால் சிலவற்றையும் சமாளித்து வருகிறேன். ஆனாலும் தொடர்ந்து நான் இவற்றை நேரடியாகச் செய்யமுடியாது. உனக்குப் பட்டம் சூட்டியே ஆகவேண்டும்..."

"உங்கள் உத்தரவை மீறக்கூடாது என்பதற்காக நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொண்டாலும், தொடர்ந்து உங்களது யுக்தியாலும் சக்தியாலுமே நான் காரியங்களைச் சாதிக்கமுடியும் அம்மா!"

"அந்த வகையில் என் ஒத்துழைப்பை நீ குறைவில்லாத வகையில் பெறமுடியும் மகனே!"

- இந்த உரையாடலுக்குப் பின் அரண்மனைக்குத் திரும்பிய மறுகணத்திலிருந்து போர்க்கால அவசரத்தோடு துரிதமாக ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினாள் ராணி மங்கம்மாள். அரண்மனைப் புரோகிதர்களை அழைத்து அவசரமாக நல் முகூர்த்தங்களைப் பார்த்தாள். அவளுடைய அவசரத்துக்கும் அவசியத்துக்கும் ஏற்றபடி அடுத்த சில நாட்கள் தொடர்ந்து நல்ல நாட்களாகவே வாய்த்திருந்தன. அரண்மனை வட்டாரத்தினர் அனைவருக்குமே அந்த ஏற்பாடுகளின் வேகம் ஆச்சரியத்தை அளித்தது. ரங்ககிருஷ்ண முத்துவீரப்பனின் விவாகத்துக்கும் முடிசூட்டு விழாவுக்கு அடுத்தடுத்து மங்கல முகூர்த்தங்கள் குறிக்கப்பட்டாயிற்று.

அரண்மனையில் விவரமறிந்த எல்லாரும் வியக்கும்படி ரங்ககிருஷ்ணமுத்துவீரப்பனின் திருமணம் சின்ன முத்தம்மாளுடன் நிச்சயிக்கப்பட்டிருந்தது. ராணி மங்கம்மாளுக்கே அவளுடைய தாய் வீட்டுப் பெயராக 'அன்ன முத்தம்மாள்' என்பது திருமணத்துக்கு முன் வழங்கிய காரணத்தால் அரண்மனையிலேயே மங்கம்மாளுக்குத் துணையாகவும், உறவினராகவும் உடனிருந்த மூத்த பெண்கள் சிலர் பழைய பழக்கத்தை மாற்றிக்கொள்ள முடியாமல் 'ராணி முத்தம்மா' என்றே அழைத்தும் வந்தனர். அன்ன முத்தம்மாளான ராணி மங்கம்மாளுக்கும், இந்த இளம்வயது முத்தம்மாளுக்கும் ஓர் அடையாள வித்தியாசமாகத்தான் இவளைச் 'சின்ன முத்தம்மாள்' என்று அழைக்கத் தொடங்கியிருந்தார்கள்.

ஒரு ராஜதந்திர நடவடிக்கையாக விரைந்து மேற்கொள்ளப்பட்ட திருமண வைபவமும், முடிசூட்டு விழாவும் அளவு கடந்த கோலாகலத்தையும், குதூகலத்தையும் கொண்டிருக்கவில்லை. அரண்மனைச் சுற்றத்தையும், உறவினரையும் தவிர, அந்த ஆட்சியின் ஆதிக்கத்துக்கு உட்பட்டு அங்கங்கே இருந்த படைத் தலைவர்களுக்கும், தளபதிகளுக்கும், தளவாய்களுக்கும், தலைக்கட்டுக்களுக்கும் மட்டுமே அவசரம் அவசரமாக அழைப்புச் சொல்லி வரத் தூதுவர்கள், விரைந்து பாயும் புரவிகள் மூலம் அனுப்பப்பட்டனர்.

இந்த ஏற்பாடுகள் அரண்மனை வட்டாரங்களிலும் சுற்றத்தினரிடமும் இரண்டு விதமான வியப்பைக் கிளரச் செய்தன. பாதுகாப்பையும் அரசியல் உதவியையும் கருதி மங்கம்மாள் ஒரு பெரிய அரச வம்சத்தில்தான் பெண்ணெடுப்பாள் என்று நினைத்திருந்தவர்களுக்கு, அவள் சின்ன முத்தம்மாளைத் தேர்ந்தெடுத்தது வியப்பாயிருந்தது. திடீரென்று இந்த வைபவங்கள் ஏற்பாடு செய்யப்படுவானேன் என்பது மற்றொரு வியப்பாயிருந்தது. காரணம், இந்த ஏற்பாட்டில் சம்பந்தப்பட்டிருந்த ராஜதந்திரப் பிரச்சனைப் பலருக்குத் தெரியாதிருந்ததுதான்.

திரிசிரபுரத்தில் அந்தத் திருமண வைபவமும், பட்டாபிஷேகமும் அதை ஒட்டி நடந்த பட்டணப்பிரவேசமும் நம்பமுடியாத வேகத்தில் நடந்து முடிந்தன. பட்டணப்பிரவேசம் முடிந்து அரண்மனை திரும்பியதுமே முடிசூடிய கோலத்தில் பட்டத்தரசியாகச் சின்னமுத்தம்மாளையும் அருகிலழைத்துக் கொண்டு, எதிரே தன் ஆசிகோரி வந்து வணங்கிய மகனைப் பார்த்ததும் ராணி மங்கம்மாள் அவனுக்கு ஆசி கூறி வாழ்த்திய பின் மேலும் கூறினாள்.

"மகனே! பாதுஷாவின் ஆட்களும் பழைய செருப்பும் நாளைப் பகலில் இங்கே வரக்கூடுமென்று தெரிகிறது. உனது திருமணத்திற்காகவும், முடிசூட்டு விழாவுக்காகவும் இங்கே வந்த படைத்தலைவர்களும், படைவீரர்களும் கோட்டைச்சுற்றி நாலா பக்கமும் மறைந்திருப்பார்கள். நானும் சின்ன முத்தம்மாளும் சபைக்கு வரா விட்டாலும் உப்பரிகையில் அமர்ந்து சபையைக் கவனித்துக் கொண்டிருப்போம். உன்னுடைய இந்தப் பேரழகியான மனைவியின் கடைக்கண் பார்வையில் நீ உறுதியாக நடந்து கொள்ளத்தக்க நெஞ்சுரம் உனக்குக் கிடைக்க வேண்டும் என்று நான் உன்னை வாழ்த்துகிறேன்."

"தாயே! உங்கள் ஆசி கிடைக்குமானால் எத்தகைய எதிரியையும் வெல்லும் பலம் எனக்கு வந்துவிடும்".

"சொல்லிக் கொடுத்த வார்த்தைகளும், கட்டிக் கொடுத்த சோறும் அதிக நேரம் கெடாமல் இருக்காது மகனே! என்று எந்த வேளையில் எப்படி எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று அன்று அந்த வேளையில் அப்போதே துணிந்து முடிவு செய்யும் மனோதிடம் உனக்கு வந்தாலொழிய ராஜ்ய பாரத்தைத் தாங்க உன்னால் முடியாது."

"நீங்கள் உடனிருக்கும் வரை எனக்கு எதுவும் சிரமமில்லை தாயே!" என்று மீண்டும் வணங்கினான் ரங்க கிருஷ்ண முத்துவீரப்பன்.

ராணி மங்கம்மாள் சிரித்தபடியே சின்ன முத்தம்மாளைப் பார்த்துக் கூறலானாள்:

"முத்தம்மா! இளவரசரைக் கெட்டிக்காரியும் பேரழகியுமான உன்னைப் போன்ற பெண் ஒருத்தியிடம் ஒப்படைத்திருக்கிறேன். இளவரசரின் வீரத்தையும், செருக்கையும், தன்மானத்தையும் வளர்ப்பதாக உன் அழகு அமைய வேண்டும்! கெட்டிக்காரத்தனமில்லாத அழகும் - அழகில்லாத கெட்டிக்காரத்தனமும் அரசியல் காரியங்களுக்குப் பயன்படுவதில்லைப் பெண்ணே!"

சின்ன முத்தம்மாள் இதைக் கேட்டுப் பவ்யமாக நாணித் தலை குனிந்தாள். அவர்கள் இருவரையும் விடைகொடுத்து அனுப்பிவிட்டு இராயசத்தை அழைத்துச் சில உத்தரவுகள் போட்டாள் ராணி மங்கம்மாள்.

மறுநாள் பொழுது புலரும் பொழுது காவிரிக்கரையில் கதிரவன்கூட ஆவலோடு உதித்தாற் போலிருந்தது. திரிசிரபுரம் கோட்டையில் அரசவை கூடிய போது பட்டம் சூடிக்கொண்ட ரங்ககிருஷ்ண முத்துவீரப்பன் அரியணையில் கம்பீரமாகக் கொலுவீற்றிருந்தான்.

அந்தப்புர பகுதியிலிருந்து புறப்பட்டு வந்து அப்படியே மேல்மாடத்து உப்பரிகையிலிருந்து அரசவையைக் காண முடிந்த வகையில் ராணி மங்கம்மாளும் சின்ன முத்தம்மாளும் அங்கே அமர்ந்திருந்தார்கள்.

பட்டம் சூடிப் பதவியேற்றிருக்கும் இளவரசைப் புகழ்ந்து தமிழ்ப் புலவர்களும், சில தெலுங்குப் புலவர்களும் கவிதை பாடினார்கள்.

சபையும், அரசரும் கவிதைகளை இரசித்துக்கொண்டிருக்கும் போதே, "டில்லி பாதுஷாவின் பிரதிநிதியும், ஆட்களும் கோட்டை வாசலில் காத்திருக்கிறார்கள்" என்று தகவல் வந்தது. அவர்களை உள்ளே அழைத்து வரச் சொல்லி ரங்ககிருஷ்ண முத்துவீரப்பன் சிறிதும் தயங்காமல் உடனே எதிர்கொள்ள ஆயத்தமானான்.

யானையைக் கோட்டை வாசலிலேயே நிறுத்திவிட்டு அதன்மேல் அம்பாரியிலிருந்த ஔரங்கசீப்பின் பழைய செருப்பை அலங்கார வேலைப்பாடுகள் நிறைந்த ஒரு பழுக்காத் தாம்பாளத்தில் எடுத்து வைத்துக்கொண்டு உடன் வந்திருந்த வீரர்கள் பின் தொடர ஆடம்பரமாகவும் படாடோபமாகவும் உள்ளே நுழைந்தான் பாதுஷாவின் பிரதிநிதி.

நெடுந்தூரம் பயணம் செய்திருந்த களைப்பாலும் எங்கேயும் யாரும் போரிடாததாலும் டில்லியிலிருந்தே உடன் வந்திருந்த படை வீரர்களில் பெரும் பகுதியினரை அநாவசியம் என்று கருதி மதுரையிலிருந்தே அவசரப்பட்டு வடக்கே திருப்பி அனுப்பியிருந்தான் அந்தப் பிரதிநிதி.

"இளவரசருக்கு உடல் நலமில்லை. திரிசிரபுரம் திரும்புகிறார்" என்று மதுரை தமுக்கம் மாளிகையிலிருந்து ராணி மங்கம்மாள் திண்டுக்கல்லுக்கு அனுப்பியிருந்த தகவல் வேறு டில்லியிலிருந்து வந்திருந்த ராஜப்பிரதிநிதியின் வேகத்தைத் தடுத்துப் போதுமான அளவு குழப்பியிருந்தது.

எல்லாரும் தலைவணங்கிவிட்ட செருப்புக்கு ரங்ககிருஷ்ண முத்துவீரப்பனும் மறுக்காமல் தலை வணங்கி விடுவான். படைபலத்தைக் காட்டி அவனை மிரட்ட வேண்டிய அவசியம் இராது. தானும் சில வீரர்களும் பழைய செருப்புடன் திரிசிரபுரம் சென்றாலே போதுமானது என்ற முடிவுடந்தான் அந்தப் பிரதிநிதி அன்று அங்கே வந்திருந்தான்.

டில்லி பாதுஷாவின் பிரதிநிதி வேகம் குறைந்து குழம்பி விடவேண்டும் என்பதை எதிர்ப்பார்த்துத்தான் மதுரையிலேயே அவனை எதிர்கொண்டு சந்திக்காமல் கவனத்தைத் திசை திருப்பி மகனுக்கு உடல் நலமில்லை என்று சொல்லித் திரிசிரபுரம் திரும்பியிருந்தாள் ராணி மங்கம்மாள்.

"இத்தனைப் பேர் எதிர்க்காத பாதுஷாவின் செருப்பை ஒரு விதவையை தாயாகக் கொண்ட நோயுற்ற ஓர் இளவரசனா எதிர்க்கப்போகிறான்?" - என்று நினைத்து மிகவும் அலட்சியமாகவும் சற்று அஜாக்கிரதையாகவும் திரிசிரபுரத்துக்கு வந்திருந்தான் டில்லி பாதுஷாவின் பிரதிநிதி.

பாதுஷாவின் பிரதிநிதியை எதிர்கொண்டு வரவேற்று அவையில் அமரச் செய்தான் ரங்ககிருஷ்ணன். இராயசத்தை அழைத்துத் தந்தை சொக்கநாத நாயக்கரின் மறைவுக்குப் பின் தாய் வழக்கமாக டில்லி பாதுஷாவுக்குச் செலுத்தி வந்த கப்பத்தொகையையும் கூட முறையாகச் செலுத்தச் செய்தான். பெருமக்கள் நிறைந்திருந்த அந்த ராஜசபையில் பாதுஷாவின் பிரதிநிதியையும் உடன் வந்திருந்தவர்களையும் அதிகபட்ச முகமலர்ச்சியோடும் விநயத்தோடும் மரியாதையோடும் நடத்தினான் ரங்ககிருஷ்ணன்.

ஒரு சுவாரஸ்யமான ஏற்கனவே நன்கு ஒத்திகை செய்யப்பட்ட நாடகத்தைப் பார்ப்பதுபோல் மேலே உப்பரிகையிலிருந்து ராணி மங்கம்மாளும் சின்ன முத்தம்மாளும் அவையில் நடப்பதை எல்லாம் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள். பாதுஷாவின் பிரதிநிதிக்கும் ரங்ககிருஷ்ணனுக்கும் உரையாடல் தொடர்ந்தது.

"இளவரசருக்கு உடல் நலமில்லை என்பதாகச் சொன்னார்கள். இப்போது எப்படியோ?"

"நோயும் விருந்தும் எப்போதாவது வரக்கூடியவை... இப்போது தாங்கள் வந்திருப்பதைப் போல..."

"நோயாக வந்திருக்கிறேன் என்கிறீர்களா? விருந்தாக வந்திருக்கிறேன் என்கிறீர்களா?"

"நான் விருந்தென்று எண்ணித்தான் சொன்னேன். தங்களுக்கு எப்படித் தோன்றுகிறதோ அப்படி வைத்துக் கொள்வதில் எனக்கு ஆட்சேபணை இல்லை."

"முடிசூடிப் பட்டமேற்றுக் கொண்டபின் இளவரசருக்கு மிகவும் சாதுர்யமாகப் பேச வருகிறது."

"பேச்சு மட்டும் அப்படி என்று பாதுஷாவின் மேலான பிரதிநிதி அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வந்துவிடக்கூடாது."

"தாங்கள் தாய் மகாராணி மங்கம்மாள் இப்படியெல்லாம் சாமர்த்தியமாகப் பேசுவதில் நிபுணர் என்று கேள்வி..."

"மறுக்கவில்லை. ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இப்போது நீங்கள் என்னோடு தான் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்."

"பாதுஷாவின் புதிய நிபந்தனை இளவரசருக்கும் மகாராணிக்கும் தெரிவிக்கப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன்."

"எப்போது நிபந்தனை புதிதோ அப்போது அதை நீங்களே வெளிப்படையாகச் சொல்லிவிட வேண்டியதுதான் முறை."

பதில் பேசாமல் பாதுஷாவின் பிரதிநிதி தன்னுடன் வந்திருந்த வீரர்களில் ஒருவனுக்குச் சைகை காட்டி அழைத்து ஏதோ கூறினான்.

உடனே அந்த் டில்லி வீரன் பட்டுத்துணியிட்டு மூடியிருந்த பழுக்காத் தாம்பாளத்தை அப்படியே அரியணைக்கு முன்பிருந்த அலங்கார மேடையில் வைத்துவிட்டுத் துணியை நீக்கினான்.

தாம்பாளத்தில் ஔரங்கசீப்பின் பழைய செருப்பு ஒன்று இருந்தது. அதைக் கண்டவுடன் ரங்ககிருஷ்ணனின் முகத்திலிருந்த மலர்ச்சியும் புன்னகையும் மறைந்தன. மீசை துடிதுடித்தது. ஆனாலும் பொறுமையை இழந்துவிடாமல் கேட்டான்.

"என்ன இது?"

"டில்லி பாதுஷாவின் பாதுகை".

"டில்லி பாதுஷா மற்றொரு காலுக்குச் செருப்பே போட்டுக் கொள்வதில்லையா?"

"மரியாதையாகப் பேசக் கற்றுக் கொள்ளுங்கள் இளவரசே! பாதுஷா கப்பம் வாங்குகிறவர். நீங்கள் கப்பம் கட்டுகிறவர்! ஞாபகமிருக்கட்டும்."

"மரியாதை என்பது கொடுத்துப் பெற வேண்டியது. கேட்டுப் பெறக்கூடியது இல்லை."

"மறுபடியும் எச்சரிக்கிறேன். நீர் கப்பம் கட்டுகிறவர். பாதுஷா வாங்குகிறவர்."

"அவர் கப்பத்தை வாங்கலாம். மானத்தை வாங்கிவிட முடியாது. கூடாது."

"டில்லிப் பேரரசுக்கு அடங்கிக் கப்பம் கட்டுகிற அனைவரும் இந்தப் பாதுகையை வணங்கவேண்டும் என்பது பாதுஷாவின் புதிய கட்டளை."

"தெய்வங்களின் திருவடிகளைத்தான் பாதுகை என்று சொல்வதும், வணங்குவதும் எங்கள் வழக்கம். மனிதர்களின் பழைய செருப்பை நாங்கள் பாதுகையாக நினைப்பதில்லை."

"இன்றைய திமிர் நாளைய விளைவைச் சந்திக்க வேண்டியதாகிவிடும் இளவரசே!"

"அன்புக்குக் கட்டுப்படலாம். பயமுறுத்தலுக்குப் பணிய முடியாது. மீண்டும் சொல்கிறேன். தெய்வங்களின் திருவடிச் சுவடுகளைத் தலைவணங்கலாம். மனிதர்களின் கிழிந்த செருப்பை வணங்குவது பற்றி நினைக்கக்கூட முடியாது."

"இதுதான் உங்கள் முடிவான பதிலா?"

"இதை விட முடிவான பதில் தேவையானாலும் தர முடியும். இது புரியாவிட்டால் அதையும் தருகிறேன்."

"இந்த மிரட்டல் சிறுபிள்ளைத்தனமானது இளவரசே!"

"பெருந்தன்மையான காரியங்கள் என்னவென்றே தெரியாதவர்கள் சிறுபிள்ளைத்தனம் எது என்றும் கண்டுபிடிக்கத் தகுதியற்றவர்களாகி விடுகிறார்கள்."

"பேச்சு எல்லை மீறுகிறது."

"புரியவில்லையானால் செயலிலேயே காட்டிவிடுகிறேன். இதோ" என்று கூறிய படியே அரியணையிலிருந்து எழுந்து ரங்ககிருஷ்ணன் அந்தப் பழுக்காத் தாம்பாளத்திலிருந்த செருப்பை, தன் காலில் எதற்குப் பொருந்துமோ அதில் அணிந்து கொண்டான். பாதுஷாவின் பிரதிநிதியைக் கம்பீரமாக நிமிர்ந்து பார்த்துச் சொன்னான்.

"இவ்வளவு பெரிய மகாராஜாவான டில்லி பாதுஷா போன்றவர்கள் கேவலம் ஒற்றைக் காலுக்கு மட்டுமா செருப்பு அனுப்புவது? முடிந்தால் மற்றொரு காலுக்கும் சேருகிறார் போல் அனுப்பி வைக்கும்படி சொல்லுங்கள்."

பாதுஷாவின் பிரதிநிதி இதைக் கண்டு ஸ்தம்பித்துப் போனான். அவன் இப்படி நடக்கும் என்று எதிர்ப்பார்க்கவே இல்லை. அவமானப்பட்டுவிட்ட உணர்விலும், ஆத்திரத்திலும் அவன் முகம் சிவந்தது. கடுமையாக ஏதோ சொல்ல விரும்பி ஆனால் உணர்ச்சி மிகுதியால் வார்த்தைகள் வராமல் அவனுடைய உதடுகள் துடித்தன. புருவங்கள் நெரிந்தன. முகம் வியர்த்தது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
4. இராயசம் அச்சையாவும் ரகுநாத சேதுபதியும்

டில்லி பாதுஷாவின் பிரதிநிதி ஆத்திரம் அடைந்ததைக் கண்டு ரங்ககிருஷ்ணமுத்து வீரப்பன் அவனை நோக்கிப் புன்னகை பூத்தான்.

"நெருப்புடன் விளையாடுகிறீர்கள்! இதன் விளைவுகள் கடுமையாயிருக்கும் என்பதைச் சிந்திக்காமல் செயல்படுகிறீர்கள் என்பதை மீண்டும் வற்புறுத்த விரும்புகிறேன்" என்றான் பாதுஷாவின் பிரதிநிதி.

"தங்கள் பேரரசுடன் முன்பு நாங்கள் செய்து கொண்ட உடன்படிக்கையின் படி கப்பம் கட்டுவதாக மட்டும் ஒப்புக் கொண்டது உண்மை. செருப்பை வணங்குவது அந்தப் பழைய உடன்படிக்கையில் அடங்காத ஒன்று. உடன்படிக்கைப்படி பார்த்தால் வரம்பை மீறுவது தங்கள் அரசரேயன்றி நாங்கள் இல்லை."

"வலிமை உள்ளவர்களுக்கு வலிமையற்றவர்கள் அடங்கித்தான் ஆகவேண்டும்."

"அடக்கம் வேறு; அடிமைத்தனம் வேறு."

"இதற்குப் பாடம் கற்பிக்காமல் விடப்போவதில்லை."

"முடிந்தால் செய்யுங்கள்."

இவ்வளவில் பாதுஷாவின் பிரதிநிதியும் உடன் வந்திருந்தவர்களும் வெளியேறி விட்டார்கள். படைகளையெல்லாம் மதுரையிலிருந்து அவசரப்பட்டு வடக்கே திருப்பியனுப்பி விட்டது எத்தனை பெரிய தவறு என்ற ஏக்கத்துடனே வேறு வழியில்லாத காரணத்தால் ஒன்றும் செய்யமுடியாமல் டில்லி திரும்பினான் ஔரங்கசீப்பின் பிரதிநிதி. போகிற போக்கில் திரிசிரபுரம் கோட்டையும் அதன் சுற்றுப்புறங்களும் படை வீரர்களால் நிரப்பப்பட்டு ஆயத்தமாயிருப்பதையும் அவன் கண்டுகொண்டான். கையாலாகாத்தனமும் ஆத்திரமும் அவன் உள்ளத்தை வெதுப்பின. அந்த ஆத்திரக் குமுறலில், முத்து வீரப்பனின் கோட்டைப் படை வீரர்களுடன் பாதுஷாவின் ஆட்கள் போர் செய்ய முயன்று தோற்றுப் போனார்கள். சிலர் அதில் உயிரிழக்கவும் நேரிட்டது.

'கணவனை இழந்து கைம்பெண்ணான ஒரு ராணி உங்களை அவமானப்படுத்திவிட்டாள்' என்பதாகப் பாதுஷாவிடம் போய் அவருக்குச் சினமூட்டுகிற விதத்தில் சொல்லலாம் என்றால் மங்கம்மாள் தான் இதில் சம்பந்தப்படாமல் எல்லாவற்றையுமே சாதுரியமாகச் செய்திருந்தாள். அவளுடைய அந்தச் சாதுரியத்தை நினைக்கும்போது அவன் குமுறல் இரண்டு மடங்காயிற்று. நேரடியாக அவமானப்பட்டது முத்து வீரப்பனிடம் என்றாலும் தங்களை அவமானப்படுத்திய மதிநுட்பம் ஒரு பெண் பிள்ளையினுடையது என்ற உறுத்தல் உள்ளே இருந்தது அவனுக்கு.

டில்லி பாதுஷாவின் ஆட்கள் திரும்பிப்போன பின்புதான் கைப்பிடித்த மனைவி சின்ன முத்தம்மாளுடன் இரண்டு வார்த்தை சிரித்துப் பேசவும், சரசமாடவும் நேரம் கிடைத்தது முத்துவீரப்பனுக்கு. அடுத்து சில நாள்கள் மண வாழ்வின் இனிய மயக்கத்தில் கழிந்தன. காவிரியில் புதுவெள்ளம் வந்தது. அவர்கள் மனத்தைப் போலவே காவிரியும் நிரம்பி வழிந்தது. கோடையின் சுகத்தைக் காவிரிக்கரையின் இதமான மாந்தோப்புகளில் செலவிட்டார்கள் அந்த இளம் காதலர்கள். ஆடிப்பாடி மகிழவும் படகு செலுத்திக் களிக்கவும் நேரம் போதாமலிருந்தது அவர்களுக்கு.

ஒரு மண்டலத்திற்குப் (40 நாள்) பின் விடிந்த ஒரு வைகறையில் ராணி மங்கம்மாளும் இராயசம் அச்சையாவும் (அரண்மனைக் காரியஸ்தர்) அவசரம் அவசரமாக முத்து வீரப்பனை அழைத்து வரச் சொல்லி அந்தப்புரத்திற்கு ஆளனுப்பினார்கள். விடியலின் கனவும் நனவும் கலந்த இனிய உறக்கத்திலிருந்து அவன் எழுந்திருந்து விரைவாக அவர்கள் இருவரையும் அரண்மனை மந்திராலோசனை மண்டபத்தில் வந்து சந்திக்க வேண்டுமென்று ராணி மங்கம்மாளிடமிருந்து வந்த ஆள் கூறிவிட்டுப் போயிருந்தான். அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த சின்ன முத்தம்மாளை எழுப்பாமலே தாயையும் இராயசத்தையும் சந்திக்கச் சென்றான் அவன். இன்னும் இருள் பிரியவில்லை. காற்று சில்லென்றிருந்தது.

தன் தாயோடு அரண்மனை இராயசமான அச்சையாவும் கூட இருக்கிறார் என்றறிந்ததுமே ஏதோ மிகவும் இன்றியமையாத காரியத்தைப் பற்றி ஆலோசனை நடக்கிறது என்பதை முன்கூட்டியே முத்துவீரப்பன் அநுமானம் செய்துகொள்ள முடிந்தது. தாயின் நம்பிக்கைக்குரியவர் அச்சையா என்பதை அவன் அறிவான். அதிகமான செயல் திறமையையும் மிகக குறைவான வார்த்தைகளையும் உடையவர் அவர். மிகப் பெரிய ராஜதந்திரியான அவர் எதிரே நின்று பேசுகிறவர்களை பயபக்தியோடு தம்மை அணுகச் செய்து விடும் ஆஜானுபாகுவான சுந்தரபுருஷர். தீர்க்கமாகப் பார்க்கும் ஒளி நிறைந்த கண்களும், கூரிய நாசியும், விசாலமான நெற்றியும், அழுத்தமான உதடுகளுமாக அச்சையாவை ஏறெடுத்துப் பார்க்கும் யார்க்கும் அவர் முன் ஒரு பணிவு தானாக வந்துவிடும். அள்ளி முடித்த குடுமியும், நெற்றியில் சந்தனத் திலகமுமாக அவர் சிரிக்கும்போது வெளேரென்று தெரியும் அழகான அளவான பல்வரிசை யாரையும் வசியப்படுத்திவிடக் கூடியது. நின்றால் பரந்த மார்பும் திரண்ட புஜங்களுமாக முழங்காலைத் தொடக்கூடிய நீண்ட கரங்களோடு எடுப்பும் ஏற்றமுமாகக் காட்சியளிப்பார் அச்சையா. அசைப்பில் கோயில் ராஜகோபுரம் எதிரே நிற்பது போல இருக்கும்.

இப்படி அச்சையாவைப் பற்றிய கம்பீரமான நினைப்புகளுடன் அவன் மந்திராலோசனை மண்டபத்திற்குள் நுழைந்த போது, "வா மகனே! காரியம் மிகவும் அவசரமானது! அதனால் தான் உன்னைத் தூக்கத்திலிருந்துங்கூட எழுப்பிவிட்டேன்" என்றாள் தாய். தாயையும் இராசயம் அச்சையாவையும் வணங்கிவிட்டு அமர்ந்தான் முத்துவீரப்பன்.

"தூங்கிக் கொண்டிருந்தால் கூட என்னை விழிப்பூட்டுவது உங்கள் கடமை அம்மா!"

"நீ சிறிது குழந்தையாயிருந்த வரை உன்னைத் தாலாட்டிச் சீராட்டிப் பாலூட்டித் தூங்கச் செய்வது மட்டும் தான் என் கடமையாயிருந்தது மகனே!"

"இப்போது இன்னும் நான் குழந்தையில்லை அம்மா. ஆகவே இப்போது நீங்கள் விழிப்பூட்ட வேண்டுமேயன்றித் தூங்கச் செய்யக் கூடாது."

"பிரமாதமான வார்த்தை முத்துவீரப்பா! ஆனால் இன்னும் நீ குழந்தை என்பதை நீ உணர்ந்தால் மட்டும் போதாது. உன் எதிரிகளும் உணர வேண்டும்."

"முதல் எதிரியாக என் முன் எதிர்பட்ட டில்லி பாதுஷா ஔரங்கசீப்பின் பிரதிநிதிக்கு அதை நான் நன்றாக உணர்த்தி விட்டேன். இன்னும் வேறு யாருக்காவது அதை உணர்த்துவதற்கு அவசியமிருந்தால் சொல்லுங்கள் ஐயா உணர்த்துகிறேன்."

"அவசியம் நேற்று வரை ஏற்படவில்லை, இன்று இப்போது இதோ ஏற்பட்டிருக்கிறது".

"சற்றே விவரமாகச் சொல்லுங்கள்! எங்கே யாரிடம் அந்த அவசியம் ஏற்பட்டிருக்கிறது?"

"எதிரிகளை விடத் துரோகிகள் மோசமானவர்கள்."

"யார் அந்தத் துரோகிகள்?"

"இந்த அரண்மனை கடந்த காலத்தில் கண்ட துரோகி அழகிரிநாயக்கன். இன்று காணும் துரோகி கிழவன் சேதுபதி என்ற இரகுநாத சேதுபதி! அன்று உன் தந்தை சொக்கநாத நாயக்கரின் உத்தரவுப்படி அவர் அரசாள தஞ்சையை ஆளச் சென்ற அழகிரி நாயக்கன் உன் தந்தைக்குத் துரோகம் செய்து பின்பு வெங்கண்ணாவின் சூழ்ச்சியால் தானும் சீரழிந்துப் போனான். அதே போல் உன் தந்தை சொக்கநாத நாயக்கரிடம் பணிந்து சிற்றரசனாக இருந்த கிழவன் சேதுபதி இப்போது தான் தோன்றித்தனமாக நடந்து கொள்ளத் தொடங்கிவிட்டார். முன்பு உன் தந்தைக்கும் ருஸ்டம்கானுக்கும் போர் ஏற்பட்ட போது இந்தக் கிழவன் சேதுபதி, பெரிதும் உதவியாயிருந்து உன் தந்தையை அவனிடமிருந்து காப்பாற்றினார். அதற்குப் பிரதியாக உன் தந்தை கிழவன் சேதுபதிக்குப் பரிசில்களும் விருதும் கொடுத்துப் பாராட்டியதோடு தன்னிடமிருந்த அதிபுத்திசாலியான குமாரப்ப பிள்ளை என்ற தளவாயையும் சேதுபதிக்கு உறுதுணையாக ஆட்சிப் பணிபுரிய இராமநாதபுரம் அனுப்பி வைத்தார்.

"உன் தந்தையால் அனுப்பப்பட்ட அந்த அரிய மனிதரான குமாரப்ப பிள்ளையைக் குடும்பத்தோடு கொலை செய்து இப்போது பழிதீர்த்துக் கொண்டு விட்டார் கிழவன் சேதுபதி. நமது ஆட்சிப் பிடிப்பின் கீழ் சிற்றரசராக இருக்க விரும்பாத சேதுபதி தஞ்சை நாயக்க மன்னர் பரம்பரையின் வாரிசான செங்கமலதாசனுடனும், பழைய மதுரைத் தளவாய் வேங்கட கிருஷ்ணப்பனோடும் சேர்ந்து நமக்கு எதிராகச் சதி செய்த போது அந்தச் சதியை எதிர்த்து அதற்கு உடன்பட மறுத்தார் என்ற ஒரே காரணத்துக்காகக் குமாரப்ப பிள்ளை குடும்பத்தோடு கொல்லப்பட்டிருக்கிறார்.

"நல்லது சொல்லியவருக்கு இப்படி ஒரு கொடுந்தண்டனையா?"

"நம்மையும் நமது ஆட்சியையும் அழிப்பதற்குப் பரிசாகத் தனக்கு உதவி செய்ய முன்வரும் தஞ்சை மன்னனுக்குப் புதுக்கோட்டைக்கும், பாம்பாற்றுக்கும் இடைநிலப் பகுதியில் வரி வாங்கும் உரிமையை விட்டுக் கொடுத்திருக்கிறார் சேதுபதி. இந்த நன்றி உணர்வற்ற சதியை முறியடித்துச் சேதுபதியையும் வேங்கடகிருஷ்ணப்பனையும் திருத்த முயன்ற போது தான் குமாரப்ப பிள்ளை கொல்லப்பட்டிருக்கிறார்."

"நமக்கு வேண்டியவரைக் கொன்றால் என்ன? நம்மைக் கொன்றால் என்ன?"

"இந்த விசுவாச உணர்வுதான் நம்மைக் காக்கக்கூடியது முத்துவீரப்பா! கிழவன் சேதுபதி முரட்டு மனிதர்! மனித வாழ்வை அர்த்தமுள்ளதாகச் செய்யக்கூடிய எந்த இங்கிதமான உணர்வுகளும் இல்லாதவர். ஆட்சியையும், செல்வத்தையுமே மதிப்பவர். நாம் அவருக்குப் பாடம் கற்பிக்க வேண்டிய காலம் வந்து விட்டது."

"இப்போதே படைகளோடு புறப்படுகிறேன். பாடமும் புகட்டுகிறேன்."

"அது அத்தனை சுலபமானதில்லை மகனே! மறவர் சீமையின் கிழட்டுச் சிங்கத்தை எளிதாக வென்றுவிட முடியாது. இரகுநாத சேதுபதி மற்ற மறவர்களை அழைத்துத் தலையைக் கொடு என்றாலும் கொடுத்து விடுவார்கள். அவ்வளவு செல்வாக்கும் கட்டுப்பாடும் அங்கே அவருக்கு உண்டு."

"நன்றியும் விசுவாசமும் இல்லாத இடத்தில் எத்தனைக் கட்டுப்பாடு இருந்தால் என்ன; எவ்வளவு செல்வாக்கு இருந்தால் என்ன?"

"உன் கேள்வியிலுள்ள நியாயம் கூட புரியாத வன்கண் மறவர் அவர். அவருடைய சக மறவர்கள் அவரைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுகிறார்கள். ஆகவே அவருக்கு ஆள்கட்டு அதிகம். ஒரு பாவமும் அறியாத அந்நிய நாட்டுக் கிறிஸ்தவப் பாதிரிமார்கள் கூட அவருடைய கொடுமைக்குத் தப்ப முடியவில்லை மகனே!"

"சொந்த நாட்டு நண்பர்களிடமே விசுவாசமாயில்லாத ஒருவர் அந்நிய நாட்டுப் பாதிரிமார்களிடம் கருணை காட்டுவார் என்று எப்படி அம்மா நீங்கள் எதிர்பார்க்க முடியும்?"

"உன் கொள்ளுப் பாட்டனார் திருமலை நாயக்கரும், தந்தையாரும் கிறிஸ்தவப் பாதிரிமார்களையும் அவர்களைப் பின்பற்றியவர்களையும்கூட அன்போடும் ஆதரவோடும் பெருந்தன்மையாக நடத்தினார்களே?..."

"என் கொள்ளுப் பாட்டானாருக்கு இருந்த பெருந்தன்மையும் தந்தைக்கு இருந்த தாராள மனமும் கிழவன் சேதுபதிக்கு இல்லையானால் அதற்கு யார் என்ன செய்ய முடியும் அம்மா?"

"கிழவன் சேதுபதியால் கொல்லப்பட்ட குமாரப்ப பிள்ளை கூடக் கிறிஸ்தவ வெறுப்பில் கிழவன் சேதுபதியை மிஞ்சியவராக இருந்திருக்கிறார். பாதிரிமார்களையும், உபதேசியார்களையும் பலாத்காரமாகச் சிவலிங்கத்தை வழிபடும்படி வற்புறுத்துகிறார் அவர்" என்றார் இராயசம் அச்சையா.

"அது அக்கிரமம் ஐயா! பாதுஷாவின் பழைய செருப்பைக் கும்பிடும்படி நம்மை வற்புறுத்தியவர்களுக்கும் குமாரப்ப பிள்ளைக்கும் என்ன வேறுபாடு?"

"நாகரிகமடைந்த நல்லவர்களுக்குத் தான் உன் கேள்வியும் அதன் நியாயமும் புரியும். துவேஷமும் வெறுப்பும் குரோதமும் நிரம்பியவர்களுக்கு நாகரிகம் என்றால் என்னவென்றே தெரியாது முத்துவீரப்பா."

"போர்ச்சுக்கல் நாட்டிலிருந்து வந்த ஜான்டிபிரிட்டோ பாதிரியாரைத் தடுத்து மறவர் நாட்டு எல்லைக்குள் கிறிஸ்தவ சமயத்தைப் பரப்ப முயன்றால், தோலை உரித்து மரத்தில் தலைகீழாகத் தொங்கவிட்டுவிடப் போவதாகப் பயமுறுத்துகிற அளவு கிழவன் சேதுபதி கடுமையானவராயிருந்திருக்கிறார் என்று கூடக் கேள்விப்பட்டிருக்கிறேன் ஐயா!"

"சிலரைத் தோலை உரித்துத் தலைகீழாக மரங்களில் கட்டித் தொங்கவிட்ட கொடுமையும் நடந்திருக்கிறது முத்துவீரப்பா!"

"கேட்பதற்கே அருவருப்பாயிருக்கிறது ஐயா! குமாரப்ப பிள்ளை நம் அரண்மனையிலிருந்து சேதுபதிக்கு உதவியாக அனுப்பப்பட்டவர். அவரைக் கொன்றதே தாங்கமுடியாத கொடுமை; அவர் குடும்பத்தினரையும் கொன்றது பயங்கரமான பாவம். கிறிஸ்தவப் பாதிரிமார்களைத் துன்புறுத்துவது பொறுத்துக் கொள்ள இயலாதது. நாம் எப்படியும் அவரை அடக்கியே ஆகவேண்டும்."

"ஒரு விநாடி கூடக் காலந்தாழ்த்தக்கூடாது மகனே! பாதுஷாவுக்காகத் திருச்சியில் கூட்டிய படை வீரர்களோடு உடனே மறவர் சீமையின்மீது போர் தொடுத்தாக வேண்டும். தனது தூதரைக் கொல்லும் அந்நிய அரசனைப் படையெடுத்துத் தாக்கும் நியாயம் ஒவ்வொரு நல்ல அரசனுக்கும் உண்டு அப்பா! குமாரப்ப பிள்ளை நம்மால் அங்கு அனுப்பப்பட்டவர். அவரைக் கூண்டோடு அழித்தது நம்மை அவமானப்படுத்தியது போல் தான்! நீ உடனே போருக்கு ஆயத்தமாக வேண்டும் என்பதைச் சொல்லவே உன்னை நானும் இராயசமும் இங்கே அழைத்தோம்."

இராயசம் எழுந்து நின்றார். கம்பீரமும் அழகும் வசீகரமும் நிறைந்த அவரது தோற்றத்தைப் பார்த்து ராணியே ஒரு கணம் யாரோ புதியவர் ஒருவரைக் காண்பதுபோல் உணர்ந்தாள்.

"இந்த மறவர் சீமைப் படையெடுப்புக்கு உங்கள் இருவர் ஆசியும் வேண்டும்" என்று வணங்கினான் முத்து வீரப்பன்.

"மிகப் பெரிய படிப்பாளியாகிய நம் இராயசம் உன்னை வாழ்த்தினாலே போதுமானது மகனே!" என்றாள் மங்கம்மாள். இராயசம் அச்சையா ராணியை நோக்கிப் புன்முறுவல் பூத்தார்.

முத்துவீரப்பன், ஆஜானுபாகுவாக எழுந்து நின்ற இராயசம் அச்சையாவையும் அன்னை ராணி மங்கம்மாளையும் வணங்கி விடைபெற்றான். அவன் வணங்கித் தலைநிமிரவும் அரண்மனை வீரன் ஒருவன் பரபரப்பாக அங்கு உள்ளே நுழையவும் சரியாயிருந்தது. வந்த வீரன் வணங்கிவிட்டு மூவரையும் பார்த்துச் சொல்லலனான்.

"இராமநாதபுரத்திலிருந்து இரகுநாத சேதுபதியின் தூதன் ஒருவன் தேடி வந்திருக்கிறான்."

மூவரும் தங்களுக்குள் வியப்போடு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஆவலும் பரபரப்பும் முந்திய மனநிலையோடு, "உடனே அவனை இங்கே அழைத்துக் கொண்டு வா!" என்று சேதி கொண்டு வந்தவனுக்கு மறுமொழி கூறினான் முத்துவீரப்பன்.

"வருகிற தகவலில் நாம் மகிழ்ச்சியடையவோ, நமது முடிவை மாற்றிக் கொள்ளவோ காரணமான எதுவும் இருக்கப்போவதில்லை" என்று பதறாத குரலில் நிதானமாகச் சொல்லிவிட்டு மீண்டும் இருக்கையில் அமர்ந்தார் அச்சையா. ரங்ககிருஷ்ண முத்துவீரப்பனும், ராணி மங்கம்மாளும் சேதுபதியின் தூதன் வரவேண்டிய நுழைவாயிலையே பார்த்த வண்ணமிருந்தனர்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
5. பக்கத்து வீட்டுப் பகைமை

கட்டுமஸ்தான உடலமைப்பும் அந்த வலிமையை மிகைப்படுத்தி எடுத்துக் காட்டும் கரிய நிறமும் கொண்ட மறவர்சீமை வீரன் ஒருவன் கையில் ஓலையோடு நுழைவாயிலருகே தென்பட்டான்.

மின்னலைப் போல் சரேலேன்று உள்ளே நுழைந்த அவன், "மறவர் நாட்டு மாமன்னர் ரகுநாத சேதுபதியின் தூதன் நான். இது அவர் அனுப்பிய ஓலை" என்று இராயசம் அச்சையாவிடம் நீட்டிவிட்டு, மூன்று பேருமே எதிர்பாராத வகையில் பதிலை எதிர்பாராமலே விருட்டென்றுத் திரும்பிச் செல்லத் தொடங்கினான். சம்பிராதாயத்துக்குப் புறம்பாகவும், பண்பாடின்றியும் இருந்தது அவனது செயல்.

உடனே அதைக் கண்டு ஆத்திரமடைந்த ரங்ககிருஷ்ணன் பின் தொடர்ந்து அவனைப் பாய்ந்து கைப்பற்ற முயன்றபோது சைகையால் இராயசம் அவனைத் தடுத்துவிட்டார். ஆத்திரத்தோடு ரங்ககிருஷ்ணன் கேட்டான்;

"வழக்கமில்லாத புதுமையாக நமக்கு அடங்கிய சிற்றரசன் 'மறவர் நாட்டு மாமன்னர் ரகுநாத சேதுபதி' என்றான். அனுப்பிய ஓலையைப் படிப்பதற்கு முன்பே திரும்பிப் போகிறான். இதெல்லாம் என்ன? இதைவிட அதிகமாக நம்மை வேறெப்படி அவமானபடுத்த முடியும்? இந்த முறைக்கேட்டையும், அவமானத்தையும் நாம் ஏன் பொறுத்துக் கொள்ள வேண்டும்?"

"பொறுத்துக் கொள்ள வேண்டாம் தான்! எய்தவனிருக்க அம்பை நொந்து பயனென்ன ரங்ககிருஷ்ணா? சேதுபதியிடம் தொடுக்க வேண்டிய போரை அவனுடைய தூதனிடமே தொடுக்க வேண்டாம் என்று தான் உன்னைத் தடுத்தேன்" என்று ரங்ககிருஷ்ணனுக்கு மறுமொழி கூறிவிட்டு இரகுநாத சேதுபதியின் ஓலையைப் படிக்கத் தொடங்கினார் அச்சையா. முதலில் மெல்லத் தமக்குள் படிக்கத் தொடங்கியவர், பின்பு, இரைந்தே வாய் விட்டுப் படிக்கத் தொடங்கினார்.

"இன்று இவ்வோலை எழுதும் போது தொடங்கி மறவர் நாடு இனி யார் தலைமைக்கும் கீழ்ப்பணிந்து சிற்றரசாக இராது என்பதை இதன் மூலம் மறவர் நாட்டு மாமன்னர் ரகுநாத சேதுபதி, சம்பந்தப்பட்ட சகலருக்கும் பிரகடனம் செய்து கொள்கிறார்."

"குமாரப்ப பிள்ளையும் அவர் குடும்பத்தையும் கொன்றது போதாதென்று சுயாதீனப் பிரகடனம் வேறா?"

ராணி மங்கம்மாள் இவ்வாறு வினவியவுடன் "எவ்வளவு திமிர் இருந்தால் அதை நமக்கே ஓலையனுப்பித் தெரிவித்து விட்டு நம்முடைய மறுமொழியை எதிர்பாராமலே தூதுவனைத் திரும்பியும் வரச்சொல்லிப் பணித்திருக்க வேண்டும்? குமாரப்ப பிள்ளையை அவர்கள் கொன்றது நியாயமென்றால் இப்போது இங்கு வந்து சென்ற இந்தத் தூதுவனை நாம் மட்டும் ஏன் தப்பிப் போகவிட வேண்டும்?" என்று கொதிப்போடு கேட்டான் ரங்ககிருஷ்ணன். கிழவன் சேதுபதி என்னும் பட்டப்பெயரை உடைய ரகுநாத சேதுபதியிடமிருந்து வந்திருந்த ஓலையைப் படித்துச் சொல்லிவிட்டு மேலே எதுவும் கூறாமல் இருந்த அச்சையா இப்போது வாய் திறந்தார்.

"ஒரு தவற்றை இன்னொரு தவற்றால் நியாயப்படுத்தி விடமுடியாது ரங்ககிருஷ்ணா!"

"பல தவறுகள் நடந்துவிட்ட பின்பும் இப்படிப் பொறுமையாக இருந்தால் எப்படி?"

"எதிரிகளை அழிப்பதில் பல ராஜதந்திர முறைகள் உண்டு அப்பா! அதில் ஒன்று அவர்களை அதிகத் தவறுகள் செய்ய அனுமதிப்பது. கோழை பின்வாங்கித் தயங்குவதற்கும், வீரன் பின்வாங்கி நிதானிப்பதற்கும், நிறைய வித்தியாசங்கள் உண்டு. கோழை பயத்தினால் பின்வாங்குவான். வீரன் எதிரியை முன்பை விட அதிக வேகமாகப் பாய்ந்து தாக்குவதற்குப் பின்வாங்குவான். நமது நிதானம் இதில் இரண்டாவது வகையைச் சேர்ந்ததாக இருக்கட்டும்."

"டில்லி பாதுஷாவின் ஆட்கள் பழைய செருப்புடன் ஊர்வலம் வந்த போது அம்மா சொல்லிய அதே அறிவுரையைத்தான் இப்போது நீங்களும் கூறுகிறீர்கள் ஐயா!"

"சொல்லுகிற மனிதர்கள் வேறுபட்டாலும் அறிவும், அறிவுரையும் வேறுபடுவதில்லை! மறவர் நாட்டின் மேல் படையெடுத்தாக வேண்டுமென்ற நமது முந்திய முடிவுக்கும் இந்த அறிவுரைக்கும் தொடர்பு இல்லை. உனது முன் கோபத்தையும் ஆத்திரத்தையும் தணித்துச் செயலில் ஈடுபாடு கொள்ளச் செய்வதற்குத்தான் இந்த அறிவுரை."

"ஆமாம் ரங்ககிருஷ்ணா! இராயசம் சொல்வதெல்லாம் உன் நன்மைக்குத் தான் அப்பா! எதிரியை விட்டுவிட்டு அவனுடைய தூதுவனை அழிப்பதால் என்ன பயன் விளையப்போகிறது? கிழவன் சேதுபதியை இப்படியே விட்டுவிட்டால் அவர் மற்றவர்களைக் கூட்டுச் சேர்த்துக் கொண்டு படையெடுத்து நமது மதுரைச் சீமையைக் கைப்பற்ற முயலுவார்" என்றாள் மங்கம்மாள்.

"இன்றே நமது படைகளோடு மறவர் சீமைக்குப் புறப்படுகிறேன் அம்மா!"

"உனது வீரத்தில் நிதானமும் நிதானத்தில் வீரமும் கலந்திருக்கட்டும் அப்பா! கிழவன் சேதுபதி மிகவும் சிக்கலான எதிரி. தெளிவான எதிரியில்லை. சிக்கலான எதிரிகளிடம் எப்போதுமே அதிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்."

"உங்கள் அறிவுரை எனக்கு எப்போதும் ஞாபகம் இருக்கும் அம்மா!"

திரிசிரபுரம் கோட்டையின் முகப்பில் படைகள் திரண்டன. போர்முரசு முழங்கியது. குதிரைகளும், யானைகளும் தரையைத் துவைத்துக் கிளரச் செய்த புழுதிப்படலம் விண்ணை மறைத்தது. தாயும், இராயசம் அச்சையாவும் வாழ்த்த, சின்ன முத்தம்மாள் நெற்றியில் வீரத் திலகமிட்டு வழியனுப்ப, ரங்ககிருஷ்ண முத்துவீரப்பன் படையோடு புறப்பட்டான். ரங்ககிருஷ்ணனுக்கும் படைவீரர்களுக்கும் திரிசிரபுரத்து மக்கள் மலர்மாரி பொழிந்து விடைகொடுத்தனர். பழைய செருப்போடு வந்த டில்லி பாதுஷாவின் ஆட்களை எதிர்க்கும் அவசியத்துக்காக அங்கங்கே சேர்த்து வைத்த படைவீரர்களையெல்லாம் ஒன்று திரட்டிக் கொண்டு ரங்ககிருஷ்ணன் மறவர் சீமை மேல் படையெடுத்திருந்தான்.

தனக்கு மாலை சூட்டி வீரத்திலகமிட்டு வழியனுப்பும்போது சின்ன முத்தம்மாளின் கண்களில் நீர் திரண்டு பிரிவுத்துயரம் பொங்கியதை அத்தனை அவசரத்திலும் அத்தனை பரபரப்பிலும் அவன் கவனிக்கத் தவறியிருக்கவில்லை. உலகின் மிகப்பல பாமர மக்களில் கணவனும் மனைவியுமாக மாலை மாற்றிக் கொள்கிறவர்களுக்கு இருக்கும் உரிமையும் இன்பமும் சுகமும் நிம்மதியும் கூட அரச குடும்பத்தினரான மற்றவர்களுக்கு இல்லையே! என்று எண்ணிச் சின்ன முத்தம்மாள் ஏங்கியிருக்கக் கூடும். திருமணமான உடனேயே போருக்காகப் படையோடு புறப்பட்டுவிட்ட கணவனை வீரமங்கையாகத் திலகமிட்டு வழியனுப்பினாலும், பிரிவு பிரிவு தானே? படைகளை நடத்திச் செல்லும் போது இதை எல்லாம் எண்ணிப்பார்த்தான் ரங்ககிருஷ்ணன்.

முதல்நாள் பகல் பொழுது முடிந்து அந்தி சாய்ந்ததும் காடாரம்பமான ஓரிடத்தில் இரண்டு மூன்று பெரிய ஆலமரங்கள் இருந்த பகுதியில் படைகள் பாசறை அமைத்துத் தங்க நேர்ந்தது. இன்னும் மறவர் சீமை எல்லைக்குப் போய் சேரவில்லை என்றாலும், வீரர்களிடம் போர் உணர்ச்சி இப்போதே வந்திருந்தது. மறவர் சீமையை அடைந்த உடனேயே போர் நிகழலாம் என்ற பிரக்ஞையும் எல்லாருக்கும் வந்திருந்தது. ரங்ககிருஷ்ணனைப் பொறுத்தவரை இதுதான் அவனது முதற் படையெடுப்பு என்று சொல்ல வேண்டும். அவசர அவசரமாக நிகழ்ந்த திருமணம். அவசர அவசரமாக நிகழ்ந்த முடிசூட்டு விழா இப்போது அவசர அவசரமாக வாய்த்துவிட்ட இந்தப் படையெடுப்பு எல்லாமே நினைத்துப் பார்க்க முடியாத வேகத்தில் நேர்ந்திருந்தன.

நள்ளிரவாகியும் பாசறைக் கூடாரத்தில் உறக்கமின்றித் தவித்தான் ரங்ககிருஷ்ணன். பல்வேறு வகைப் படைவீரர்கள் தங்கியிருந்த பகுதிகளில் கூத்துகளும், களியாட்டங்களும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. சில வீரர்கள் கூடிப் பேசிக் கொண்டிருந்தார்கள். சிலர் பொழுது போக்கான விளையாட்டுக்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். வேறு சிலர் ஒரு வீரனுக்கு ரதி வேடம் போட்டுக் காமன் பண்டிகைக் கூத்தாக இருபிரிவாய் பிரிந்து எரிந்த கட்சிக்கும், எரியாத கட்சிக்கும் பாடிக் கொண்டிருந்தார்கள்.

தனது படைவீரர்கள் இந்தப் போரைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் எப்படி உணர்ந்திருக்கிறார்கள் என்று காணவும் விரும்பினான் ரங்ககிருஷ்ணன். மாறுவேடத்தில் நகர பரிசோதனை செய்யச் செல்லும் மன்னர்கள் போல முற்றிலும் தன் தோற்றத்தை மாற்றிக் கொள்ளாவிட்டாலும், தன்னை யாரும் அடையாளம் காண முடியாத விதத்தில் ஒரு போர்வையைப் போர்த்திக் கொண்டு புறப்பட்டான் அவன். உடன் துணை வர முயன்ற மெய்க் காப்பாளனைக் கூடத் தடுத்துவிட்டான். இது முதற் படையெடுப்பு என்பதால் மட்டும் அவன் மனதில் ஆவலும் பரபரப்பும் நிரம்பியிருக்கவில்லை. படையெடுப்பவராகிய கிழவன் சேதுபதியைப் பொறுத்தே பல மடங்கு அதிகரித்திருந்தன.

'கிழவன்' என்ற தமிழ்ச்சொல்லுக்கு 'உரியவன்' என்று பொருள். இரகுநாத சேதுபதி மறவர் நாட்டுக்கு உரியவர் மட்டுமில்லை. மறவர் அனைவரின் நம்பிக்கைக்கும் உரியவர். பயபக்திக்கு உரியவர். அத்தகையவரோடு தான் போர் புரிவதற்கும் முரண்படுவதற்கும் அரசியல் காரணங்களிருந்தன என்றாலும் தன்னைச் சுற்றியுள்ள மக்களின் நம்பிக்கைக்கும் நாணயத்திற்கும், மதிப்புக்கும் உரிய ஒருவரை வெறும் அரசியல் காரணங்களுக்காக வெல்வது சிரமமான காரியமாயிருக்கும். மறவர் சீமையின் முரட்டுச் சிங்கத்தோடு விரோதத்தைத் தவிர்த்திருப்பது தான் இராஜ தந்திரமாயிருந்திருக்கும். சில விரோதங்களைத் தவிர்ப்பது தான் விவேகம். வேறு சில விரோதங்களை எதிர்கொண்டு ஏற்றாக வேண்டும். இதில் கிழவன் சேதுபதியோடு ஏற்பட்டு விட்ட விரோதம் முந்தின வகையினது. அது தவிர்க்கப்படவேண்டியது. ஆனால் தவிர்க்க முடியாதபடி சேதுபதியே அதை வலிந்து ஏற்படுத்திக் கொண்டு விட்ட பின் தன் தரப்பிலிருந்து பணிந்து போவது என்பது பிறர் எள்ளி நகையாடக் காரணமாகி விடலாம். குமாரப்ப பிள்ளையைக் குடும்பத்தோடு கொன்றது போதாதென்று மறவர் சீமையைச் சுயாதீனமுள்ள நாடாகப் பிரகடனம் செய்ததும் சேர்ந்து, தவிர்த்திருக்க வேண்டிய இந்தப் படையெடுப்பை அவசியமும் அவசரமும் உள்ளதாக்கிவிட்டன. அநாவசியமான விரோதத்தைத் தேடுவது எப்படி ராஜ தந்திரமில்லையோ, அப்படியே அவசியமாக வந்து வாயிற் கதவைத் தட்டி அழைக்கும் விரோதத்தைத் தவிர்ப்பதும் ராஜ தந்திரமில்லை. சேதுபதியைக் கண்டு ராணி மங்கம்மாளும் அவள் மகனும் பயப்படுகிறார்கள் என்று பிறர் பேசவும் இடம் கொடுத்துவிடக் கூடாது.

கிழவன் சேதுபதியைப் பொறுத்தவரை இந்த விரோதத்தை உடனடியாகத் தேடுவதில் பயன் இருந்தது. இந்த விரோதத்தால் அவருக்கு ராஜ தந்திர பயன்களும் ஊதியமும் இருந்தன. ஆகவே இவர் இதைத் தேடியதில் அவரளவுக்குக் காரணம் சரியாயிருந்தது. அவரளவுக்கு அரசியல் நோக்கமும் சரியாக இருந்தது.

தன் கூடாரத்தை விட்டு வெளியேறி வீரர்களின் மனநிலையைக் கண்டறிய இருளில் புறப்பட்ட போது ரங்ககிருஷ்ணனின் மனதில் இவ்வளவு சிந்தனைகளும் இழையோடின. அடுத்திருந்து கெடுதல் செய்பவனின் விரோதத்தை விலை கொடுத்தாவது பெற்றாக வேண்டும் என்றாலும் கொடுக்கவேண்டிய விலை என்னவாக இருக்கும் என்பது இந்த விநாடி வரை புரியாமல் இருந்தது. சிந்தனை வயப்பட்டவனாக ஆல மரத்தடியில் சில வீரர்கள் கூடிப் பேசிக் கொண்டிருந்த பகுதிக்கு வந்திருந்தான் அவன். அவர்களுடைய பேச்சும் கிழவன் சேதுபதியைப் பற்றியதாயிருக்கவே, ஆலம் விழுது ஒன்றின் மறைவில் ஒதுங்கி நின்று அதை ஒட்டுக் கேட்கலானான்.

"நமக்குச் சோறு போட்டு வளர்ப்பது நாயக்கவம்சம். நாம் எதிர்த்துக் கொள்ள முடியாத சுயஜாதி மனிதர்களில் மிகவும் பெரியவர் இரகுநாத சேதுபதி. இந்த யுத்தம் தர்மசங்கடமானது. சோறு போடுபவர்களுக்கு விசுவாசமாக இருப்பதா? இனத்துக்கு விசுவாசமாக இருப்பதா? நமது மதிப்பிற்குரிய சேதுபதிக்கு எதிராக நாமே ஆயுதம் ஏந்தும் நிலையை இந்தப் போர் உண்டாக்கிவிட்டது அண்ணே!"

"சேதுபதிகள் இராமபிரானுக்கே தோழனாக இருந்த குகனின் வம்சம். தெய்வாம்சம் பொருந்தியவர்கள். நம்மைப் போல் மற்ற மறவர்கள் கைகூப்பித் தொழ வேண்டிய நிலையிலிருப்பவர் இரகுநாத சேதுபதி. அவருக்கு எதிராக நின்று போர் புரிவதில் மனப்பூர்வமான ஈடுபாடு நம்மைப் போன்ற ஜாதி மறவர்களுக்கு இருக்க முடியாது. வேண்டுமானால் உண்ட உணவுக்குச் செஞ்சோற்றுக் கடன் கழிக்கலாம்."

"ஆமாம்! நீ சொல்வது தான் சரி அண்ணே! அரசர்கள் இன்றைக்குச் சண்டை போட்டுக் கொள்வார்கள். நாளைக்கு ஒன்று சேர்ந்து விடுவார்கள். அதற்காக நாம் ஏன் நடுவில் ஜாதி அபிமானத்தைக் கெடுத்துக் கொண்டு குலத்தை வேரறுக்கும் கோடரிக் காம்புகளாகத் தலை எடுக்க வேண்டும்?"

"சேதுபதியை எதிரே பார்த்தாலே எனக்குக் கைநடுக்கம் வந்துவிடும் அண்ணே! வாளைக் கீழே போட்டுவிட்டு நெடுஞ்சாண் கிடையாக வணங்கத் தோன்றுகிற மனிதருக்கு எதிராக எப்படி அண்ணே நான் துணிந்து வாளை ஓங்க முடியும்?"

"அதுதான் முதலிலேயே சொன்னேனே? நமக்கு இது ஒரு தர்மசங்கடமான போர் அண்ணே!"

"இன்றைக்குச் சேதுபதிக்கு எதிராக வாளை உயர்த்திவிட்டு நாளைக்குப் போர் முடிந்ததும் மானாமதுரைக்கோ மங்கலத்துக்கோ போய் நின்றால் சுயஜாதிக்காரன் நம்மை முகத்திலே காறித் துப்புவான்."

"துப்புறதாவது...? நம்மை கண்டம் துண்டமாக வெட்டிப் போட்டால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை."

"இன்றைக்கு சண்டை வரும். போகும். ஜாதிக் கட்டுப்பாடு நமக்கு என்றைக்கும் வேணும் பாட்டையா! எங்கள் ஊர் எல்லையிலே சேதுபது வாராருன்னா ஊருக்குள்ளாற ஒருத்தன் மார் மேலே துணியோ, கால்லே செருப்போ போட்டுகிட்டு நடமாட மாட்டான் அண்ணே! அத்தனை மருவாதி (மரியாதை) அவருக்கு உண்டு."

இருளில் அங்கு உரையாடிக் கொண்டிருந்த படைவீரர்களனைவரும் மறவர் இனத்தினர் என்பதை ரங்ககிருஷ்ணனால் மிக எளிதாகவே அநுமானம் செய்து கொள்ள முடிந்தது. தன்னை அவர்கள் பார்த்து விடாதபடி மெல்ல அங்கிருந்து விலகிச் சென்றான் ரங்ககிருஷ்ணன். டில்லி பாதுஷாவை எதிர்க்க ஆவேசத்தோடு ஒன்று திரண்ட படை, சேதுபதி விஷயத்தில் அப்படி ஒன்றாக இல்லை என்று புரிந்தது.

துணிவும், தன்னம்பிக்கையும் கொண்டிருந்த ரங்ககிருஷ்ணனின் உறுதியான் உள்ளத்திலும் மெல்ல எழுந்தது ஒரு சிறு தயக்கம். இந்தப் போரிலுள்ள பகை பக்கத்து வீட்டுப்பகை என்பதால் ஏற்படும் படை வீரர்களின் விசுவாசத் தயக்கங்களையும், இடம் மாறிய முறை மாறிய விசுவாசங்களையும் எல்லை மாறக்கூடிய சந்தேகத்துக்கிடமான நம்பிக்கைகளையும் பற்றிய கலக்கம் அவன் மனத்தில் இப்போது இந்நள்ளிரவில் புதிதாக ஏற்பட்டது. வெளியே சூழ்ந்திருந்த இருள் தன் மனத்துக்குள்ளும் கொஞ்சம் புக முயல்வதைப் போல உணர்ந்தான் ரங்ககிருஷ்ணன். கடவுள் மனிதர்களைப் படைத்த போது உலகைப் பற்றி வைத்திருந்த சந்தோஷத்தையும் நம்பிக்கையையும் மனிதர்கள் ஜாதிகளையும் சமயங்களையும் உண்டாக்கிக் கெடுத்துக் கொண்டு விட்டார்களோ? என்று அந்தக் கணத்தில் அவனுக்குத் தோன்றியது.

அபிமானம், அன்பு, விசுவாசம், நன்றிக்கடமை ஆகிய ஜாதி சமயம் கடந்த உயரிய மனித குணங்களைக்கூட ஜாதி சமயங்கள் பாதிக்க முடியும் என்பது இப்போது அவனுக்குப் புரிந்தது. அவன் சிந்தனை வயப்பட்டான். அன்றிரவு பாசறையில் அவனால் நிம்மதியாக உறங்க முடியவில்லை.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
6. கிழவன் சேதுபதியின் கீர்த்தி

ரங்ககிருஷ்ணன் முற்றிலும் எதிர்பாராத பகுதியிலிருந்து சலனமும் தயக்கமும் ஏற்பட்டிருந்தன. திரிசிரபுரம் கோட்டையிலும், மதுரைக்கோட்டையிலும் இருந்த படைவீரர்களில் பெரும் பகுதியினர் மறவர் சீமையைச் சேர்ந்தவர்கள். வெகு தொலைவில் இருந்து வந்து ஒரு புதிய நிலப்பரப்பில் சாம்ராஜ்யத்தை நிறுவ நேர்கிற அனைவருக்கும் இது ஏற்படக்கூடியது தான் என்று தோன்றியது. அரசு என்கிற மாளிகையைத் தாங்கும் நான்கு இன்றியமையாத தூண்களில் ஒன்றாகிய படை உள்நாட்டு மக்களைக் கொண்டதாகத்தான் அமைய முடியும். அமைந்திருந்தது.

ஒரு படையில் உட்பகை உண்டாகிவிட்டாலோ, உண்டாவது போலத் தோன்றினாலோ, அது எள்ளை இரண்டாகப் பிளந்தது போலச் சிறியதானாலும் கூடப் பெரிதும் ஆபத்தானது. அப்படி ஆபத்தின் அடையாளங்கள் இப்போது தெரியத் தொடங்கியிருந்தன. வெளிப்படையாக அது தனக்குத் தெரிந்ததை ரங்ககிருஷ்ணன் யாரிடமும் காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் மனதில் அந்தச் சலனம் ஏற்பட்டுவிட்டது. இதைக் கருத்திற் கொண்டுதான் தாய் ராணி மங்கம்மாளும், இராயசம் அச்சையாவும் கிழவன் சேதுபதியைச் சிக்கலான எதிரி என்று வர்ணித்தார்களோ என்று கூட இப்போது அந்தத் தொடருக்குப் புது விளக்கமே தோன்றியது அவனுக்கு.

தன்னுடைய உள்நாட்டு மக்களிடமும் தன் நாட்டிலும் முழுநம்பிக்கைக்குரியவராகக் கீர்த்தி பெற்றிருக்கும் ஒருவரை வெளியேயிருந்து படையெடுத்து வந்து செல்வது எத்தனை சிரமமான காரியமாயிருக்கும் என்பது மெல்ல மெல்லப் புரிந்தது. தீர்க்க தரிசனம் பிடிபடாத வரை அரசியல் பொறுப்புகள் சிரம சாத்தியமானவையாகவே இருக்குமென்று தோன்றியது. அரசியலுக்குத் தீர்க்க தரிசனம் மிகமிக முக்கியமென்றும் புரிந்தது.

மறுநாள் அதிகாலையில் படைகள் பயணத்தைத் தொடர்ந்தன. திட்டமிட்டபடி எல்லாமே நடந்தன. ஆனால் பெரிய அதிசயம் என்னவென்றால் மறவர் சீமை எல்லைக்குள் நுழைந்ததும் அங்கே இவர்களை எதிர்த்து யாரும் சீறிப்பாயவில்லை. இலட்சியம் செய்யவுமில்லை. "புதிதாகப் பட்டமேற்றுள்ள சின்ன நாயக்கர் படை பரிவாரங்களோடு தரிசனத்துக்காகவும் தீர்த்தமாடிப் புண்ணியம் அடைவதற்காகவும் இராமேஸ்வரம் போகிறார் போலிருக்கிறது" என்பதுபோல் பேசிக் கொள்ளவும் செய்தார்கள். ரங்ககிருஷ்ணன் மனதை இது மிகவும் உறுத்திற்று.

தங்கள் சீமைக்குள் தங்களை யாரும் எதுவும் செய்து விடமுடியாது என்ற மிதப்பில் அவர்கள் இருப்பதாகப்பட்டது. ஆள்கட்டும் ஒற்றுமையும், அந்நியருக்கு விட்டுக் கொடுத்துத் தளர்ந்துவிடாத உறுதியும், எதற்காகவும் தங்களைச் சேர்ந்தவரை அந்நியரிடமோ, வெளியாரிடமோ காட்டிக் கொடுத்துவிடாத இயல்பும், மறவர் சீமையின் தனித்தன்மைகள் என்பதை ரங்ககிருஷ்ணன் அறிந்திருந்தான். எவ்வளவு பெரிய எதிர்ப்பையும் பகையையும் சமாளிக்கக்கூடிய நிலைமையை இந்த ஆள்கட்டும் ஒற்றுமையுமே அவர்களுக்கு அளித்திருந்தன என்பதும் அவனுக்குப் புரிந்திருந்தது. ஒரு முறை இராமேஸ்வரத்தில் தரிசனம் செய்ய வந்திருந்த சேர அரசன் ஒருவன் திரும்பும் போது சேதுபதியைக் காண இராமநாதபுரம் வந்து ஏழுநாள் காத்திருக்க வேண்டியதாயிற்று. பேரரசனாகிய சேரனே சிற்றரசனாகிய சேதுபதியைச் சந்திக்க ஏழுநாள் காத்திருக்க நேர்ந்தது. இராமேஸ்வர தரிசனத்தின் பயன் சேதுபதியையும் கண்டு முடித்தாலொழியப் பூர்த்தியாகாது என்ற ஐதீகத்தால் சேரன் பொறுமையாக ஏழுநாள் தங்கிக் காத்திருந்து, சேதுபதியையும் பார்த்துவிட்டுத் திருவனந்தபுரம் புறப்பட்டுச் சென்றான் என்பதைத் தனது தாய் சொல்லிக் கேள்விபட்டிருந்தான் ரங்ககிருஷ்ணன்.

சிவகங்கையைக் கடந்து மானாமதுரை ஊர் எல்லைக்குள் புகுந்த பின்னும் ரங்ககிருஷ்ணனையோ, அவனது படைகளையோ, யாரும் பொருட்படுத்தவில்லை. 'ஊர் எல்லையிலோ, எதிர்பார்த்த இடங்களிலோ சேதுபதியின் படை வீரர்கள் எதிர்ப்பதற்குத் திரண்டு நிற்கவில்லை. எங்கும் வாழ்க்கை எப்போதும் போல் சகஜமாயிருந்த்து.

எதிரியின் பகைமை அல்லது கோபத்தைக் கூடப் பொறுத்துக் கொண்டு விடலாம். ஆனால் அலட்சியத்தையோ அவமதிப்பையோ பொறுத்துக் கொள்வதென்பது முடியாத காரியம். கிழவன் சேதுபதி குமாரப்ப பிள்ளையைக் குடும்பத்தோடு கொன்றதாகவும், மறவர் நாட்டைச் சுவாதீனப் பிரகடனம் செய்ததற்காகவும் தன்னைக் கண்டித்து யாரேனும் படையெடுத்து வரமுடியும் என்று எதிர்பார்த்து ஆயத்தமாயிருப்பதாகவே தெரியவில்லை. ஒரு படையெடுப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் போர்க்கால ஆயத்தங்களோ அவசரங்களோ பரபரப்புகளோ எங்கும் இம்மியளவுகூடத் தென்படவில்லை என்பது ஏமாற்றமளித்ததோடு போகாமல் எரிச்சலும் ஊட்டியது.

ரங்ககிருஷ்ணன், 'முத்துராமலிங்க பூபதி' என்னும் தனது முன்னணிப் படைத்தலைவன் ஒருவனை அழைத்துப் பேசிப் பார்த்தான். அந்தப் படைத்தலைவனும் மறவர் சீமையைச் சேர்ந்தவன் தான்.

"ஒரு பாவமும் அறியாத மக்களை நாமாக வலிந்து தாக்கக் கூடாது! எங்கே நம்மை எதிர்கொண்டு மோதி எதிர்க்கிறார்களோ, அங்கேதான் நாம் போரைத் தொடங்கவேண்டும் மகாராஜா! இல்லாவிட்டால் தீவட்டிக் கொள்ளைக்காரர்களுக்கும் நமக்கும் வித்தியாசமில்லாமல் போய்விடும்" என்றான் முத்துராமலிங்க பூபதி. ரங்ககிருஷ்ணன் அவனைக் கேட்டான்.

"எங்கேயும் யாரும் நாம் படையெடுத்து வந்திருப்பதைப் பற்றிய பிரக்ஞையோ, கவலையோ, அக்கறையோ, காட்டுவதாகத் தெரியவில்லையே! வயல்களில் உழவர்கள் நிர்ப்பயமாக உழுது கொண்டிருக்கிறார்கள். வீடுகளில் குழந்தைகளைத் தாய்மார்கள் தாலாட்டும் பாடல்கள் இனிதாக ஒலிக்கின்றன. ஏற்றம் இறைப்பவர்கள் பாடும் ஏற்றப்பாட்டு நம் செவிகளில் ஒலித்த வண்ணமாயிருந்தன. வயல்களில் களை எடுக்கும் பெண்களின் குரவை ஒலி விண்ணை எட்டுகிறது. களத்து மேடுகளில் நெற்குவிப்போர் உல்லாசமாகப் பாடியபடி வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். தெருக்களில் போவோர் வருவோரும், சாவடிகளில் அமர்ந்து வம்புபேசுவோரும் கவலையின்றி உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். மரத்தடிகளிலும் வீட்டு முற்றங்களிலும் தாளலயத்தோடு உரலில் நெல் குத்தும் பெண்கள் வள்ளைப்பாட்டு பாடிக் கொண்டிருக்கிறார்கள். பயத்தையும் போர் வந்திருப்பதையும் இவர்களுக்கு நான் எப்படித்தான் உணர்த்துவது?"

"யாரோ சொல்லித் தூண்டி இப்படி இருக்கச் சொல்லியதால் இவர்கள் இப்படி இருக்கவில்லை மகாராஜா! இது இம்மக்களின் இயல்புகளில் ஒன்று".

முத்துராமலிங்க பூபதியின் இந்த பதிலைக் கேட்டுச் சந்தேகப்பட்டு அவன் முகத்தை ஊடுருவிப்பார்த்தான் ரங்ககிருஷ்ணன். தனது சந்தேகத்தைக் கூட அந்த முரட்டு மறவன் புரிந்து கொள்ளவில்லை என்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரங்ககிருஷ்ணன் தன் மனத்தில் அப்போது பெருகும் தாழ்வு மனப்பான்மையைத் தவிர்க்க முடியாமல் தவித்தான். போரைத் தொடங்குவதற்கு முன்பே எதிரில் கூட வராமலே தன் எதிரியின் மனத்தில் தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கிவிட்ட அந்தக் கிழட்டுச்சிங்கம் இரகுநாத சேதுபதியின் மேல் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது அவனுக்கு. அவன் மனநிலை புரியாமல் "இந்த இராமநாதபுரம் சீமைக்காரர்களுக்குச் சொல்லிக் கொடுத்தாலும் பயமும் கலக்கமும் என்னவென்று புரியவைப்பது சிரமம் மகாராஜா!" என்றான் முத்துராமலிங்க பூபதி. நிஷ்களங்கமாக அவன் இப்படிக் கூறியவுடன், 'நீ இந்தச் சீமையைச் சேர்ந்தவன் என்ற திமிரில் பேசுகிற பேச்சா இது?' என்று சுடச்சுடக் கேட்க வேண்டும் போலிருந்தது ரங்ககிருஷ்ணனுக்கு. வாய் நுனி வரை வேகமாக வந்துவிட்ட அந்த வார்த்தைகளைக் கேட்டுவிடாமல் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டான்.

இன்னும் பொழுது சாயவில்லை என்றாலும் மானா மதுரையிலேயே அவர்கள் தங்கினார்கள். மறவர் நாட்டு எல்லைப்பகுதிக்கு அப்பால் நள்ளிரவுத் தங்கலை வைத்துக் கொள்வதற்குப் பதில் மானாமதுரையிலேயே தங்கிக் கொண்டு, தான் படையோடு வந்திருப்பதை ஒரு குதிரை வீரன் மூலம் இராமநாதபுரத்திலுள்ள சேதுபதிக்கு முன் தகவலாகச் சொல்லி வர அனுப்பலாமென்று தீர்மானித்து அதன்படி செய்திருந்தான் ரங்ககிருஷ்ணன்.

போய் வருகிற வீரன் திரும்பி, என்ன தகவல் கொண்டு வருகிறானோ அதற்கேற்ப மறுநாள் முடிவு செய்யலாமென்று ரங்ககிருஷ்ணன் அபிப்பிராயம் கொண்டிருந்தான். எதிர்ப்பே இல்லாத பிரதேசத்திற்குள் படை நடப்பைத் தொடருவதா கூடாதா என்று குழம்பியிருந்தது அவனுக்கு.

நிலவுகிற இந்த அமைதி சகஜமானதா, தந்திரமானதா என்று வேறு புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது. ஓர் எதிர்ப்பும் எங்கும் இராதென்று நினைத்துப் படையெடுத்து வருபவர்களை நாட்டுக்கு உள்ளே வெகுதூரம் வரவிட்டுக் கொண்டு பாதியில் மடக்கித் தாக்குவதற்குச் சேதுபதி சதி செய்கிறாரோ? என்று அவனுக்குச் சந்தேகமாயிருந்தது. நிலைமை கிணற்றில் கல்லைப் போட்டதுபோல் இருந்தது. எதுவுமே புரியவில்லை. இராமநாதபுரத்துக்கு நேரில் போயிருக்கும் குதிரை வீரன் திரும்பினால் ஒரு வேளை ஏதாவது விவரம் புரியலாம். அவன் திரும்புகிற வரை மேற்கொண்டு எதுவும் செய்வதில்லை என்று அந்தரங்கமாக முடிவு செய்து கொண்டு ரங்ககிருஷ்ணன் மானாமதுரையிலேயேத் தங்கி இருந்தான்.

அன்று பொழுது சாயும் நேரத்துக்கு முன் ஊர் மக்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று யாருக்கும் தெரியாமல் தானே அறிந்து வரச் சென்றான் அவன். ஊரிலிருந்து சற்று ஒதுக்குப்புறமாக இருந்த மறவர் சாவடி ஒன்றருகே ஒரு மரத்தடியில் இரண்டு மறவர்குலப் பெண்கள் நெல்லுக்குத்திக் கொண்டிருந்தார்கள்.

  • "ரகுநாத சேதுபதி
    மகராசன் சீமையிலே
    மாதமும்மாரி பெய்யுதுன்னு
    சுகபோக வாழ்க்கையைச்
    சொல்லுங்கடி பெண்டுகளா!
    இகபர சௌக்கியத்துக்கு
    ரகுநாத சேதுபதி
    ஏதும் கவலை இல்லாத
    ராஜ்யத்தின் கீர்த்திகளை
    இதமாகப் பாடுங்கடி இந்த
    சுகபோக வாழ்க்கையைச்
    சொல்லிக் குத்துங்கடி".

  • என்று அவர்கள் பாடிக் கொண்டிருந்த இனிய குரலில் ரங்ககிருஷ்ணனனே ஓரிரு கணம் தன்னை மறந்து சொக்கிப் போய் விட்டான். வைரம் பாய்ந்த கருந்தேக்கில் இழைத்து இழைத்து மெருகேறியது போன்ற அந்தப் பெண்களின் கட்டான உடலழகும் ஒன்றோடொன்று போட்டியிட்டன. அவர்களது வள்ளைப் பாட்டில் இருந்த கிழவன் சேதுபதியின் கீர்த்தியைக் கேட்டபோது ஐந்தாறு வயதுச் சிறுவனாக இருந்த காலை, தாய் ராணி மங்கம்மாளுடன் தான் இராமேஸ்வரம் சென்றிருக்கையில் பார்த்திருந்த அந்தச் சிங்கம் போன்ற தோற்றத்தை உடைய கம்பீரமான ஆகிருதியை நினைவில் ஒன்று கூட்டிப் பார்க்க முயன்றான் ரங்ககிருஷ்ணன்.

    அந்த நினைப்பே ஒரு சிம்ம சொப்பனமாக இருந்தது. மலை உயர்ந்து எதிரே வந்து நின்றது போன்ற அந்தத் தோற்றமும் வீரகம்பீரத்தை எடுத்துக் காட்டிய வளமான மீசைகளும், கூரிய விழிப்பார்வையும் பாறை போல் பரந்த மார்பும் வலிய பருத்த தோள்களுமாகக் கிழவன் சேதுபதியின் காட்சி மனக்கண்ணில் படர்ந்தது. 'மறவர் சீமை அவரை வீரவணக்கம் செய்து கொண்டிருந்தது. மறவர் சீமையின் ஏழைப் பெண்களுக்கெல்லாம் அரண்மனைச் செலவில் திருமணம் செய்து உதவியதன் மூலமாகத் தெற்கத்திச் சீமையில் கன்னியாகுமரி அம்மனைத் தவிர வேறு குமரிப்பெண்ணே இனிமேல் கல்யாணத்திற்கு மீதமில்லை என்கிறார்போலச் செய்து விட்டார் சேதுபதி என நாட்டில் அவருக்கு ஒரு புகழும் ஏற்பட்டிருந்தது. அந்த மரத்தடியில் உலக்கையால் நெல் குத்தும் பெண்கள் மேலும் தங்களுக்குள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று கேட்டான் ரங்ககிருஷ்ணன்.

    "எந்த ராசா எந்தப் பட்டணம் போனா என்னடி அம்மா? நம்ம சேதுபதி மகராசன் தயவுலே நமக்கு ஒரு கொறையும் வராதுடீ வேலம்மா."

    "அது மட்டுமாடீ? தெற்கத்திச் சீமையிலே எல்லா ராசாமாரும் நம்ம சேதுபதி பேரைச் சொன்னாலே நடுங்கறாகளாம்டீ! மங்கம்மா ராணி கூட 'நீங்க கப்பம் கட்டாட்டியும் போகுது எங்க ராச்சியத்தோட சிநேகிதமா இருந்தாலே போதும்'னு நம்ம சேதுபதி ராசாகிட்டச் சொல்றாளாம். உனக்குத் தெரியுமாடீ சேதி?"

    ரங்ககிருஷ்ணன் அங்கிருந்து தற்செயலாகப் புறப்படுவது போல் மெல்ல மெல்ல மேலே நகர்ந்தான். சேதுபதியை எதிர்க்கவும் எதிர்க்க நினைக்கவுமே ஈரேழு பதினாங்கு புவனங்களிலும் ஆட்கள் இல்லை இருக்கமுடியாது என்கிற அசைக்க முடியாத தன்னம்பிக்கையோடு அந்த மறவர் சீமை மக்கள் இருக்கிற நிலைமையை அவ்வுரையாடலிலிருந்து புரிந்து கொள்ள முடிந்தது. இப்படித் திடமனமும் நம்பிக்கையும், எதற்கும் கலங்காத துணிவும் உள்ள மக்களே அவர்களை ஆள்கிறவனுக்கு ஒரு வரப்பிரசாதம் அல்லவா? கிழவன் சேதுபதிக்கு அப்படி மக்கள் வாய்த்திருந்தார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல விளங்கியது.

    அந்தி மாலை வந்தது. இரவும் வந்தது. நள்ளிரவும் கழிந்தது. இராமநாதபுரம் போன குதிரைவீரன் இன்னும் திரும்ப வரவில்லை. ரங்ககிருஷ்ணனின் குழப்பம் அதிகமாகியது. போன தூதனைச் சேதுபதியோ சேதுபதியின் ஆட்களோ பிடித்து வைத்துக் கொண்டு இருப்பார்களோ என்று கூடத் தோன்றியது. முந்திய இரவைப் போலவே அன்றும் ரங்ககிருஷ்ணனால் உறங்க முடியவில்லை. தூதனைப் பிடித்து வைத்துக் கொண்டதுமின்றி எந்த நேரத்திலும் எந்த திசையிலிருந்தும் சேதுபதியும் மறவர் சீமைப் படைகளும் அந்த நள்ளிரவில் தங்களைத் தேடி வந்து தாக்கக்கூடும் என்ற பயமும் ரங்ககிருஷ்ணனுக்கு இருந்தது. ஆனால் அவன் பயந்தபடி எதுவுமே நடக்கவில்லை.

    பொழுது விடிவதற்குச் சில நாழிகைகள் இருக்கும்போது தொலைவிலிருந்து பாசறையை நெருங்கிவரும் ஒற்றைக் குதிரையின் குளம்பொலி கேட்டது. போனவன் திரும்பி வந்திருந்தான்.

    ரங்ககிருஷ்ணனே ஆவல் மிகுதியினால் பாசறைக் கூடாரத்திலிருந்து வெளியே வந்து அந்த வீரனை எதிர்கொண்டு நின்றான்.

    "சேதுபதியைப் பார்த்தாயா? என்ன சொன்னார்?"

    "ஆன மட்டும் முயன்றேன். அவரைப் பார்க்க முடியவில்லை. ஊரில் இருக்கிறாரா, இல்லையா என்பதைக் கூட அறிய முடியவில்லை. சிலர் திருப்புல்லாணி போயிருக்கிறார் என்றார்கள். சிலர் உத்திரகோசமங்கை போயிருப்பதாகச் சொன்னார்கள். வேறு சிலர் இராமேஸ்வரம் போயிருக்கிறார் என்றார்கள்."

    "நீ நம்மிடமிருந்து வந்திருக்கும் தூதன் என்பதைக் கூறிய பின்புமா அந்த நிலை?"

    "ஆம் அரசே! இந்த ஊர் எப்படி அமைதியாகப் போர்க் கவலையின்றி இருக்கின்றதோ இதே போல் தான் இராமநாதபுரமும் இருக்கின்றது. யாருமே போரைப் பற்றிக் கவலைப் படவில்லை."

    "நான் படையெடுத்து மானாமதுரை வந்து தங்கியிருக்கிறேன் என்பதையாவது அவர்களுக்குத் தெரிவித்தாயா?"

    "சேதுபதியின் மாபெரும் அரண்மனையில் என்னிடம் அதைப் பொருட்படுத்திக் கேட்க யாருமில்லை."

    "திமிர் அதை ஒடுக்கியே ஆக வேண்டும். வேறு வழியில்லை."

    "இந்தப் படையெடுப்பால் எதுவும் பாதிக்கப்பட்டு விடமாட்டோம் என்பது போல் ஜனங்களும், அரண்மனையிலுள்ளவர்களும் மிதப்பாக இருக்கிறார்கள், அரசே! அவர்கள் நம்மை எதிர்ப்பதற்குத் தங்கள் படைகளைக் கூட ஆயத்தம் செய்யவில்லை."

    "சேதுபதி நம்மைத் தமது எதிரியாகக் கூட அங்கீகரிக்க மாட்டார் போலிருக்கிறதே?" என்று கண்களில் சிவப்பேறிச் சினம் ஜொலிக்கத் தனக்குத்தானே சொல்லிக் கொண்டான் ரங்ககிருஷ்ணன்.

    கடுமையான மல்யுத்தத்தில் அந்த யுத்தத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான ஜனங்களுக்குப் புரியாதபடி அடித்தவனுக்கும் அடி வாங்கியவனுக்கும் மட்டுமே புரியக்கூடிய மர்மமான அடியைப் பட்டுக் கொண்டு விட்டாற் போன்று அந்தரங்க வலியோடு அந்தக் கணத்தில் தனக்குள் நொந்து தவித்தான் ரங்ககிருஷ்ணன்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
7. வஞ்சப் புகழ்ச்சி வலை

இரகுநாத சேதுபதி தாம் மிகவும் சிக்கலான எதிரிதான் என்பதை நிரூபித்திருந்தார். மானாமதுரையிலேயே படைகளைத் தங்க வைத்துக் கொண்டு ரங்ககிருஷ்ணன் இராமநாதபுரத்துக்கு தூது அனுப்பியும் பயனில்ல்லை. போய் வந்த தூதுவன் இராமநாதபுரத்தில் பொறுப்புள்ள யாரையும் சந்திக்கவும் முடியாமல் மேல் விவரம் எதையும் தெரிந்து கொள்ளவும் முடியாமல் திரும்பியிருக்கிறான். அவன் போனதாலும் பயனில்லை. திரும்பி வந்தும் பயனில்லை.

ஒரு படையெடுப்பைப் பொருட்படுத்தி எதிர்ப்பதற்கு முன் வராத எதிரியின் நாட்டையோ, ஊர்களையோ, பொது மக்களையோ வலிந்து தாக்கினால் வீணாகத் தன் பெயரும் தாயின் பெயரும் தான் கெடும் என்பது ரங்ககிருஷ்ணனுக்குப் புரிந்தது. மறவர் சீமையையே தாய்நிலமாகக் கொண்ட தன் படை வீரர்களிலே எவ்வளவு பேர் அந்தத் தாக்குதலுக்கு ஒத்துழைப்பார்கள் என்பதையும் அவனால் சரியாக கணிக்க முடியாமல் இருந்தது. 'மதில் மேல் பூனை' நிலையிலிருந்தான் அவன்.

தங்கியிருந்த மானாமதுரையிலிருந்து அப்படியே படைகளைத் திருப்பிக் கொண்டு திரிசிரபுரம் போகவும் அவனால் முடியாது. பொழுது விடிகிற வரை ஒரே மனக்குழப்பமாயிருந்தது அவனுக்கு. விடிந்ததும் ஒரு முடிவு கிடைத்தது அவனுக்கு. எப்படியும் இராமநாதபுரம் சென்று சேதுபதியை நேருக்கு நேர் சந்திக்காமல் எதையும் முடிவு செய்வதற்கில்லை என்ற எண்ணத்துடன் படைகளோடு இராமநாதபுரம் நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தான் அவன். தாய்க்கும் ஒரு தூதுவன் மூலம் நிலைமையைச் சொல்லி அனுப்பினான்.

கோடையின் பகல் நேரம். பயணத்தில் வெப்பம் அதிகமாயிருந்தது. இந்தப் படைகள் மறவர் சீமைக்குள் நுழைந்து தலைநகரை நோக்கி விரைந்தது அந்தச் சீமையின் சிற்றூர்களையும், பேரூர்களையும், மக்களையும், எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்று தெரிந்தது. அந்த அலட்சியமும் தற்செருக்கும் ரங்ககிருஷ்ணனின் மனதில் அந்தரங்கமாக உறுத்தின. கண்மூடித் தனமாகத் தன்னை ஏற்று வழிபடும் மக்களை நம்பித்தான் சேதுபதி இத்தனை இறுமாப்போடு இருக்கிறார் என்பது புரிந்தது. பொது மக்களோ படை வீரர்களின் கட்டுப்பாட்டோடும், உறுதியோடும், ஒழுக்கத்தோடும் இருக்கிற தேசத்தில், அந்நியர்கள் புகுந்து தொல்லைப்படுத்தவே முடியாது தான். மறவர் சீமையின் தலைநகரான இராமநாதபுரத்தை நெருங்க நெருங்க இந்தக் கட்டுப்பாடு வெளிப்படையாகவே புரிந்தது. சேதுபதியின் வலிமையே இந்தக் கட்டுப்பாடுதான் என்று விளங்கியது.

அப்போது தானும் தன் படைவீரர்களும் மறவர் சீமை மேல் படையெடுத்து வந்திருப்பதும், தனக்கும் தன் தாய்க்கும் குமாரப்ப பிள்ளையைக் கொன்ற விஷயமாகவும், மறவர் நாட்டைச் சுயாதீனப் பிரகடனம் செய்ததன் மூலமாகவும் ஏற்பட்டிருக்கும் மனத்தாங்கல்கள், இவை எல்லாம் சேதுபதிக்குப் புரியாமல் இருக்கும் என்று ரங்ககிருஷ்ணன் நினைக்கவில்லை. திரிசிரபுரத்துக்குச் சுயாதீனப் பிரகடனம் செய்து மறவர் சீமையிலிருந்து தூதன் அனுப்பப்பட்ட விதம், இப்போது இந்தப் படையெடுப்பை எதிர்கொள்ளும் பாணி எல்லாவற்றிலுமே சேதுபதியின் அலட்சியப்போக்கு தெரிவதை ரங்ககிருஷ்ணனால் உய்த்துணர முடிந்தது.

'தன் தாய் கையாலாகாதவள். தான் சிறுபிள்ளை' என்ற எண்ணத்தில் தான் சேதுபதி இவ்வளவும் செய்கிறார் என்று அவனுக்குப் பட்டது.

தனது படைத்தலைவர்களில் ஒருவனாகிய முத்து ராமலிங்க பூபதியைக் கூப்பிட்டு ரங்ககிருஷ்ணன் மறுபடியும் பேசிப்பார்த்தான்.

"சேதுபதியின் படைகள் நம்மை எதிர்க்க வரவில்லை. மறவர் சீமைக்குள் வெகுதூரம் ஊடுருவி நாம் முன்னேறி விட்டோம். நாம் கடந்து வந்துவிட்ட பகுதிகளை நாமே வென்று கைப்பற்றி விட்டதாக் கருதலாமா?"

"தர்ம சங்கடமான நிலை அரசே! இப்போது நாம் வென்றதாகவும் சொல்ல முடியாது. தோற்றதாகவும் சொல்லி விடமுடியாது! சிங்கம் அயர்ந்து உறங்கும் போது அதன் குகைக்குள் தெரிந்தோ, தெரியாமலோ நுழைந்து விட்ட புள்ளிமான் அதைத் தன் வெற்றியாகச் சொல்லி கொண்டு விட முடியுமா? நம் நிலையும் அதுதான்..."

"சேதுபதி சிங்கம்... நாம் மான்... இல்லையா?"

"நம்மைக் குறைத்துச் சொல்லவில்லை அரசே! போரில் நாம் எதிரியை மதிப்பது தவறாகாது."

"வெற்றியும் தோல்வியும் தெரியாமலே எவ்வளவு தூரம்தான் படைகளோடு முன்னேறுவது?"

"இராமநாதபுரம் போய்ச் சேதுபதியைச் சந்தித்துவிட்டால் இரண்டில் ஒன்று தெரிந்துவிடும் அரசே!"

"போர்க்களத்தில் சந்திக்க வேண்டிய எதிரியை அரண்மனையிலா போய்ச் சந்திப்பது?"

"அரசியலில் நிரந்தரமான எதிரியுமில்லை. நிரந்தரமான நண்பனுமில்லை. சந்தர்ப்பங்கள் தான் நட்பையும், பகையையையும் உருவாக்குகின்றன என்று அமரராகிவிட்ட தங்கள் தந்தையார் அடிக்கடி சொல்வது உண்டு அரசே!"

தனக்கு மறுமொழி கூறுகிறவனுடைய வார்த்தைகளை அணுஅணுவாகக் கவனித்து அதில் எந்தச் சிறு தொனியிலும் கூட சேதுபதியைக் குறைத்துப் பேசவோ விட்டுக் கொடுக்கவோ செய்யாத உறுதி இருப்பதைப் புரிந்து கொண்டான் ரங்ககிருஷ்ணன். இப்படிப்பட்ட படை வீரர்களை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்ற மலைப்பு அவனுக்கு ஏற்பட்டது. அமைதியாகவும் இயல்பாகவும் இருக்கிற மக்களை எதிர்த்துத் தாக்குவதும் பொருத்தமாகப் படவில்லை. மறவர் சீமையைச் சேராத விஜயநகர வாரிசுகளாகிய இரண்டொரு சுயஜாதிப் படைத்தலைவர்களையும் நடுநடுவே அழைத்துத் தன் சந்தேகத்தைத் தெரிவித்து யோசனை கேட்டபோது அவர்கள் அனைவரும் ரங்ககிருஷ்ணனின் சந்தேகத்தை உறுதிப் படுத்தினார்கள்.

சேதுபதி வேண்டுமென்றே நாடகமாடுகிறார். அவருடைய நாடகத்தையும், பாசாங்கையும் கலைத்து அவரை உண்மையான கோபத்தோடு வெளிவரச் செய்ய எந்தத் தீவிரமான செயலில் இறங்குவது என்றுதான் புரியாமலிருந்தது. முன்னுக்குப் போனாலும் இடித்தது. பின்னால் நகர்ந்தாலும் உரசியது.

உண்மைப் போரைத் தொடங்குவதற்கு முன்பே தன் எதிரியைச் சொந்த மனப் போராட்டங்களிலேயே சிக்கித் தவித்துத் திணறும்படிச் செய்துவிட்ட கிழவன் சேதுபதியின் அரசியல் முதிர்ச்சியும், பக்குவமும், பிரமிக்கும்படி இருந்தன.

ரங்ககிருஷ்ணனின் படைவீரர்களும் அவனும் இராமநாதபுரத்தை அடைவதற்குள் திரிசிரபுரத்திலிருந்து ஒரு தூதுவனைத் தாய் மங்கம்மாள் அனுப்பியிருந்தாள். வந்து சந்தித்த அந்த தூதுவன் ஓர் ஓலையை அளித்திருந்தான்.

ரகுநாத சேதுபதி கிழச்சிங்கம் மிகவும் சிக்கலான எதிரி. ஆத்திரமோ, பரபரப்போ அடையாமல் நிதானமாக நடந்து வெற்றி கொள்ள முயல்க! என்பது போல் தாயும், இராயசம் அச்சையாவும் அந்த ஓலையில் ரங்ககிருஷ்ணனை எச்சரித்திருந்தார்கள். 'தங்கள் அறிவுரையை மதித்து அதன்படியே நடப்பேன் கவலை வேண்டாம்' என்று தாய்க்கு மறுமொழி அனுப்பிவிட்டு, மேலே பயணத்தைத் தொடர்ந்தான் ரங்ககிருஷ்ணன்.

ரங்ககிருஷ்ணனும் படைவீரர்களும் மறுநாள் முற்பகல் வேளையில் இராமநாதபுர எல்லையை அடைந்தபோது, புறக்கோட்டையாகிய வெளிப்பட்டணத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டார்கள். மிகவும் சாதுரியமான முறையில் அந்தத் தடை செய்யப்பட்டிருந்தது. இராமநாதபுரம் அரண்மனைச் சேர்ந்த வீரர்கள், வெயில் நேரத்துக்கு இதமான குளிர்ந்த பானகமும், வெள்ளரிப் பிஞ்சுமாக எதிர் கொண்டு ரங்ககிருஷ்ணனின் படைவீரர்களை உபசரித்தார்கள்.

கோடை வெயிலில் அலைந்து வந்த களைப்பாலும், தாகத்தாலும் ரங்ககிருஷ்ணனின் படைவீரர்களாலும் அதை ஏற்காமல் இருக்க முடியவில்லை. ரங்ககிருஷ்ணனோ, படைத் தலைவர்களோ 'அந்த உபசரணையை ஏற்கக்கூடாது' என்று தங்கள் படைவீரர்களைத் தடுக்கவும் இயலாமற் போயிற்று. ரங்ககிருஷ்ணன் யோசித்துக் கொண்டிருந்தபோதே, இராமநாதபுரம் அரண்மனைச் சேர்ந்த மந்திரி பிரதானிகள் அவனை எதிர்கொண்டு வந்து, "சேதுபதி சபையில் கொலுவீற்றிருக்கிறார்! சபை நடந்து கொண்டிருக்கிறது. புலவர்களும், கலைஞர்களும் தங்கள் கவித்திறனையும், கலைத்திறனையும் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். பாதியில் எழுந்து வந்தால் புலவர்களையும், கவிஞர்களையும் அவமதித்ததுபோல் ஆகிவிடுமே என்று தயங்கி எங்களைக் கூப்பிட்டு உரிய ராஜ மரியாதையோடு தங்களை எதிர்கொண்டு அழைத்து வருமாறு அனுப்பினார்" என்றார்கள். அவர்கள் குரலில் பயபக்தி கனிந்திருந்தது.

அவர்கள் அழைப்பை ஏற்று உள்ளே போவதா, வேண்டாமா என்று ஓரிரு கணங்கள் தயங்கினான் ரங்ககிருஷ்ணன்.

ஒரு பெரிய விருந்தினரைச் சகல அந்தஸ்துகளுடன் வரவேற்பது போல்தான் அவனை வரவேற்றுக் கொண்டிருந்தார்கள் அவர்கள். ஆனால் ஒரு வித்தியாசத்தை ரங்ககிருஷ்ணன் அத்தனை பரபரப்பிலும் கூர்ந்து கவனிக்கத் தவறவில்லை.

ஒரு பேரரசனை அவனுக்குக் கீழ்படியும் ஒரு சிற்றரசன் வரவேற்பதுபோல் சேதுபதி தானே எதிர்கொண்டு வந்து வரவேற்காமல் ஒரு சுயாதீனமான நாட்டின் அரசன் மற்றொருவனை வரவேற்பது போல் மந்திரி பிரதானிகள் வந்து வரவேற்றுக் கொண்டிருந்தனர். புலவர்களையும், கலைஞர்களையும் சாக்குச் சொல்லிவிட்டுச் சேதுபதி சாமர்த்தியமாகக் கொலு மண்டபத்துக்குள்ளேயே இருந்து கொண்ட சாதுரியம் அவனுக்குப் புரிந்தது. புரிந்து என்ன செய்ய? அதற்குள்ளேயே அவனது சொந்தப் படைவீரர்களில் பெரும்பாலோர் சேதுபதியின் வீரர்கள் அளித்த சுக்கு மணம் கமழும் இனிய குளிர்ந்த பானகத்தையும், இளம் வெள்ளரிப் பிஞ்சுகளையும் இரசித்துச் சுவைக்க தொடங்கியிருந்தனர். எங்கும் உறவும் இணக்கமும் தெரிந்தனவே தவிரப் பகைமையோ, குரோதமோ தெரியவில்லை.

வேறுவழியின்றித் தன் நம்பிக்கைக்குரிய இரண்டொரு சுயஜாதிப் படைத் தலைவர்களோடு சேதுபதியின் ஆட்கள் வழிகாட்டி அழைத்துச் செல்ல அவர்களோடு கொலு மண்டபத்திற்குச் சென்றான் ரங்ககிருஷ்ணன்.

கொலு மண்டபத்தைச் சுற்றிலும், உட்கோட்டையிலும் மல்யுத்தம் புரிபவர்கள் போல் கட்டுமஸ்தான மறவர் சீமைவீரர்கள் நிறைந்திருந்தனர். உட்கோட்டையும், அரண்மனையும் ஆயிரக்கணக்கான வீரர்கள் நிறைந்து தென்பட்டன. எல்லாம் இயல்பாகவும் சகஜமாகவும் தெரிந்தாலும் கோட்டைக்குள் வந்திருக்கும் மரியாதைக்குரிய எதிரி முரண்டினால் அடுத்த விநாடியே, அடக்கிவிட ஏற்பாடுகள் ஆயத்தாமாயிருப்பது நன்கு புரிந்தது. விசாலமான அந்த அரண்மனையின் கொலு மண்டபத்தில் ரங்ககிருஷ்ணன் உள்ளே நுழைந்தபோது மயில் நடனம் எனப்படும் மயில் ஆட்டம் ஆடி முடித்திருந்த அதே மயில் ஆட்டத்திற்குரிய கோலத்திலிருந்த ஓர் அழகிய இளம் பெண்ணுக்கும் கரக ஆட்டம் ஆடி முடித்திருந்த ஒரு இளம் பெண்ணுக்கும் பரிசுகள் அளித்துக் கொண்டிருந்தார் கிழவன் சேதுபதி.

சேதுபதி, ரங்ககிருஷ்ணனும் அவனுடைய படைத் தலைவர்களும் உள்ளே நுழைந்ததை முதற் சில கணங்கள் தாம் கவனித்தாகவே காட்டிக் கொள்ளவில்லை. கலைஞர்களுக்கும், புலவர்களும் சன்மானம் அளிக்கிற சாக்கில் ரங்ககிருஷ்ணனைக் கொஞ்சம் அலட்சியப்படுத்த முடிந்தது அவரால். மிகவும் தற்செயலாக நேர்வதுபோல அதைச் செய்தார் அவர்.

ஆனால், அடுத்த சில கணங்களிலேயே சேதுபதி சமாளித்துக் கொண்டுவிட்டார்.

"வரவேண்டும்! வரவேண்டும்! சின்ன நாயக்கரை வரவேற்க இந்தச் சேதுபதியின் ஏழை ராஜசபை கொடுத்து வைத்திருக்கிறது. பட்ட மகிஷியுடன் வருவீர்கள் என்று விருந்தளிக்கக் காத்திருக்கிறேன் நான். தனியாக வந்திருக்கிறீர்களே?" என்று எதிர்கொண்டு நடந்து ஓடிவந்து ரங்ககிருஷ்ணனை அப்படியே கட்டித் தழுவிக் கொண்டார் அவர். கிழச்சிங்கம் ஒன்று ஓடிப் பாய்ந்து வந்து ஓர் இளைஞனைக் கட்டித் தழுவுவது போலிருந்தது அந்தக் காட்சி. ரங்ககிருஷ்ணன் அந்தத் தழுவுதலைத் தவிர்க்கவும் முடியாமல், ஏற்கவும் முடியாமல் திணறினான். அடுத்து அவர் செய்த காரியம் அவனை இன்னும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியது.

தன் சபைக்குள் திடீரென்று நுழைந்துவிட்ட ரங்ககிருஷ்ணன் முதலியவர்களை முறையாக வரவேற்பது போல் சபையினரை நோக்கிச் சேதுபதி கூறலானார்.

"சபையோர்களே! நம் சின்ன நாயக்கர் பதவியேற்று முடிசூடிக் கொண்டு படைகளுடன் இறைவன் அருளையும் ஆசியையும் பெற இராமேஸ்வர யாத்திரை மேற்கொண்டு இப்போது வந்திருக்கிறார். நமது மறவர் சீமை மேலும், என்மேலுமுள்ள அன்பைத் தெரிவிக்கவே நடுவழியில் இங்கு நமது விருந்தினராகத் தங்கப் போகிறார். ஐதீகப்படி இராமேஸ்வர யாத்திரை திரும்பும்போதும் மறுபடி இங்கு வருவார். இவருடைய இராமேஸ்வர யாத்திரை ஒரு குறையுமின்றிப் பூரணமாக நிறைவேற நாமும், நமது மறவர் சீமை மக்களும் சகல உதவிகளையும் செய்ய வேண்டும்" என்று உருக்கமான குரலில் சபையோர் கேட்கும் படி பகிரங்கமாகக் கணீரென்று முழக்கமிட்டு அறிவித்தார் சேதுபதி. ரங்ககிருஷ்ணனுக்கு இதைக் கேட்டு ஒரே திகைப்பு.

அப்போது அந்தச் சூழலில் அதை மறுக்கவும் முடியாமல் ஏற்கவும் முடியாமல் திணறினான் ரங்ககிருஷ்ணன். மறுத்தால் இராமேஸ்வரத்தை மதிக்காதவன் என்ற கெட்ட பெயர தனக்கு ஏற்படும். ஆதரித்தால் தான் படையெடுத்து வந்திருப்பதே யாருக்கும் தெரியாது போய்விடும். சேதுபதியின் சாதுரியத்தைக் கண்டு வியப்பு மட்டுமின்றி அதிர்ச்சியும் அடைந்தான் ரங்ககிருஷ்ணன். தன்னை அரசன் என்றோ! பேரரசன் என்றோ ஏற்பதை அறிவிக்கும் எந்தச் சொல்லாலும் அழைக்காமல் தந்திரமாக, 'சின்ன நாயக்கரே' என்று மட்டும் அழைத்துச் சமாளிக்கும் சேதுபதியின் தந்திரமும் அவனுக்குப் புரியத்தான் செய்தது. 'பரராச கேசரி' என்று சேதுபதிக்குப் பட்டமளித்துப் பாராட்டிய தன் தந்தை சொக்கநாத நாயக்கரையே "பெரிய நாயக்கர்" என்றுதான் அவர் அழைப்பது வழக்கமென்று ரங்ககிருஷ்ணன் கேள்விப்பட்டிருந்தான்.

உயரமும் பருமனுமாக உயர்ந்து நின்று பிடரி மயிரோடு சிலிர்த்துக் கொண்டு நிற்கும் சிங்கம் போன்ற சேதுபதியின் பார்வையைக் கண்டு என்ன சொல்லிச் சமாளிப்பதென்று புரியாமல் தயங்கினான் ரங்ககிருஷ்ணன். அதற்குள் அவனை அமரச் செய்தார் சேதுபதி.

"எங்கே? நம்முடைய புகழ்பெற்ற சேதுநாட்டு அவைப் புலவர்கள்? சின்ன நாயக்கரின் இராமேஸ்வர யாத்திரையைப் புகழ்ந்து பாடுங்கள்! பார்க்கலாம்" என்று கிழவன் சேதுபதி அதற்குள் முந்திக் கொண்டு சேதுநாட்டுத் தமிழ்ப் புலவர்களை அழைத்து ரங்ககிருஷ்ணனை மேலும் திணற அடித்தார்.

புலவர்களில் முதன்மையான ஒருவர் அவையில் முன்வந்து சேதுபதியையும், ரங்ககிருஷ்ணனையும் வணங்கி விட்டுப் பாடத் தொடங்கினார்.

  • "கத்துக்கடல்சூழும் ராமேசர்க் காண்பதற்காய்
    எத்தனையோ காதம் வழிநடந்த - பக்திமிகு
    சத்புருடன் நாயக்க சாம்ராஜ்ய மாமன்னன்
    முத்துவீரப்பன் முகம்."

  • பாட்டிலும் ரங்ககிருஷ்ணன் இராமேஸ்வர தரிசனத்துக்காகவே பல காததூரம் வழி நடந்து வந்திருப்பதாகவே பாடியிருந்தார் புலவர்.

    ரங்ககிருஷ்ணனுக்கு அருகே அமர்ந்திருந்த அவனுடைய சொந்தத் தளபதிகளில் ஒருவர் சற்றே அதிகமான தமிழ் ஞானமுடையவர். அவர் இந்த வெண்பாவைக் கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்துவிட்டு மெல்லத்திரும்பி ரங்ககிருஷ்ணனின் காதருகே குனிந்து, "பாட்டில் மோசம் இருக்கிறது அரசே! மேலோட்டமாக உங்களைப் புகழ்வதுபோல் பாடப்பட்டிருந்தாலும் உள்ளே பயங்கரமாகப் பொடி வைக்கப்பட்டிருக்கிறது" என்றார். ரங்ககிருஷ்ணன் அதைக் கேட்டு மேலும் அதிர்ச்சி அடைந்தான். அந்தப் பாடலில் அப்படி என்ன பொடி வைக்கப்பட்டிருக்கிறது என்பதை அங்கேயே அரசவையில் விரிவாகக் கேட்டறிய முடியாமல் இருந்தது. சூழ்நிலை அதற்கு இசைவாக இல்லை. சேதுபதியின் சாதுரியங்களும், சாமர்த்தியங்களும் வேறு ரங்ககிருஷ்ணனை அயர்ந்து போகச் செய்திருந்தன. சபையில் மேலும் பல புலவர்கள் ரங்ககிருஷ்ணனை வாழ்த்தினர். ஓரிரு கணங்கள் அந்தச் சீமையின் மேல் படையெடுத்து வந்திருக்கிறோம் என்பதைக்கூட ரங்ககிருஷ்ணனை மறந்து போகச் செய்திருந்தனர்.

    'இப்படியும் சாதுரியமாக நடிக்க முடியுமா?' என்று சேதுபதியைப் பற்றி வியந்து மலைத்துக் கொண்டிருந்த அதே சமயம் தன் படையெடுப்பு பயன்படாமல் தளர்ந்து போனதை எண்ணி ரங்ககிருஷ்ணனுக்கு வருத்தமாகவும் இருந்தது. அவனோடு வந்திருந்த படைவீரர்கள் வெளிக் கோட்டையில் சேதுநாட்டு விருந்துபசாரத்தை ஏற்று மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் இருந்தார்கள். அவனைத் தனியே பிரித்து அழைத்து வந்து உற்சாகமான புகழ் வார்த்தைகளால் சிறைப்படுத்த முயலவது போலிருந்தது சேதுபதியின் செய்கை.

    ஓர் எதிரியை மெய்யான சிறைச்சாலையில் அடைப்பதைக் கூடப் புரிந்துகொண்டு விடலாம். புகழ் வார்த்தைகள் என்ற சிறைச் சாலையைப் பின்னி அதிலடைப்பது மிகவும் அபாயகரமானது. 'கெட்டிக்காரர்கள் தங்களுக்கு வேண்டாத எதிரிகளைச் சிறையிலடைக்க மாட்டார்கள்; முகஸ்துதி செய்தே வீழ்த்திவிடுவார்கள்' என்று தாய் அடிக்கடி தன்னிடம் கூறியிருப்பதை இப்போது நினைத்தான் ரங்ககிருஷ்ணன்.

    கொழுந்து விட்டு எரியும் தீயில் தண்ணீரைக் கொட்டுவது போல் அவன் மனத்திலிருந்த பகைமை வெப்பத்தை அணையச் செய்து உபசரித்துக் கொண்டிருந்தார் சேதுபதி. படீரென்று பேச்சை நடுவிலே முறித்து எல்லா ராஜதந்திரத் திரைகளையும் களைந்தெறிந்துவிட்டு, "நீங்கள் எங்கள் மனிதராகிய குமாரப்பபிள்ளையைக் குடும்பத்தோடு கொன்று விட்டீர்கள்! சேது நாட்டைச் சுயாதீனப் பிரகடனம் செய்து கொண்டீர்கள்! இக்காரணங்களுக்காக உங்கள்மேல் நான் படையெடுத்து வந்திருக்கிறேன்" என்று முகத்துக்கு முகம் நேருக்கு நேர் சுடச்சுடச் சொல்லிவிட வேண்டும் என்று துடிதுடித்தான் ரங்ககிருஷ்ணன். ஆனால் அதுவும் அவனால் முடியவில்லை.

    சேதுபதி சாமர்த்தியமாக அவனைப் பேசவிடாமல் சமாளித்தார். அவரே தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
"நம்முடைய நட்பு உங்கள் தந்தையார் காலத்தில் இருந்து வளர்ந்து வருவது. பெரியநாயக்கர் அரசியல் விஷயங்களில் என்னைத் தமது வலக்கையாக நம்பி வந்திருக்கிறார் என்பதை உங்கள் அன்னையார் உங்களுக்குச் சொல்லியிருக்கலாம்..."

"அதெல்லாம் சரி!... இப்போது நான் வந்த காரியம்...."

"அதற்கென்ன அவசரம் சின்ன நாயக்கரே! வந்த காரியத்தைப் பேசாமல் நீங்களும் திரும்பிப் போய் விடப் போவதில்லை. கேட்டுக் கொள்ளாமல் நானும் விட்டுவிடப் போவதில்லை."

"ஒத்திப் போடாமல் அதைப் பேசிவிடுவது நம் இருவருக்குமே நல்லது! நீங்களும் என்னைப் புரிந்து கொள்ளலாம். நானும் உங்களைப் புரிந்து கொள்ளலாம்."

"நாமிருவரும் இனிமேல்தான் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டுமா சின்ன நாயக்கரே?" என்று கேட்டு விட்டு அர்த்த புஷ்டியோடு ரங்ககிருஷ்ணனின் முகத்தை ஏறிட்டு நோக்கிப் புன்னகை புரிந்தார் சேதுபதி. அந்தப் புன்னகை வெறும் புன்னகையா நமட்டுச் சிரிப்பா என்று வகைப்படுத்த முடியாதபடி இருந்தது. ரங்ககிருஷ்ணன் தொடர்ந்தான்.

"புரிந்து கொள்ளாமலே புரிந்து கொண்டு விட்டதாக நினைப்பதும் புரிந்து கொண்டு விட்டும் புரியமுடியாத சூழ்நிலைகளில் தவிப்பதும் இரு தரப்புக்குமே நல்லதில்லை..."

"அத்தகைய இரண்டுங்கெட்டான் நிலைமை என்றும் எதிலும் எனக்கு இன்றுவரை ஏற்பட்டதில்லை சின்ன நாயக்கரே!"

"இங்கே சபையில் பேச முடியாது! தனியே போய் நாம் பேசியாக வேண்டும்."

"இப்படிப் பதற்றமும், பரபரப்பும், வாலிப வயதுக்குரியவை சின்ன நாயக்கரே! பதற்றமும், பரபரப்பும் நீங்கி உணர்ச்சிகள் பக்குவப்பட அநுபவ முதிர்ச்சி தான் உதவமுடியும்."

"அறிவுரை கேட்டுக் கொள்ள நான் இங்கு வரவில்லை."

"ஆத்திரப்பட்டுப் பயனில்லை, சின்ன நாயக்கரே! இன்னும் சிறிது நேரத்தில் என்னோடு விருந்துண்ணப் போகிறீர்கள். அப்போது தனியாக அந்தரங்கமாக நாம் இருவர் மட்டும் இருப்போம். எல்லாம் பேசிக் கொள்ளலாம். பொதுவாகச் செயலில் காட்டமுடியாத ஆத்திரத்தை வார்த்தைகளில் காட்டி வீணாக்குபவர்களைப் பற்றி நான் அதிகம் கவலைப்படுவதில்லை. ஆனால் உங்களைப் பற்றி மட்டும் கொஞ்சம் கவலைப்படுகிறேன், சின்னநாயக்கரே!"

"இதற்கு என்ன அர்த்தம்?"

"புரிந்து கொள்ள வேண்டிய அர்த்தங்களைச் சொல்லிக் கொடுத்தா விளக்குவது சின்ன நாயக்கரே!"

"வார்த்தைகளையே ஆயுதங்களாகப் பயன்படுத்தி எதிரிகளை மர்மமாகத் தாக்கும் கலை எனக்குப் புதியது புரியாதது."

சேதுபதி இதைக் கேட்டுச் சிரித்தார். பின்பு நிதானமாகச் சொல்லலானார்.

"அஜாத சத்ரு என்று சமஸ்கிருதத்தில் ஒரு தொடர் கேள்விப் பட்டிருப்பீர்கள் சின்ன நாயக்கரே!"

"அதற்கென்ன இப்போது? 'தனக்கு இன்னும் எதிரியே பிறக்கவில்லை' என்று துணிந்திருக்கிற தீரனைப் பற்றிய தொடர் அது."

"அந்தத் தொடர் வாழ்வில் எனக்கு மிகவும் விருப்பமானது, சின்ன நாயக்கரே!"

இதைக் கேட்டு ரங்ககிருஷ்ணன் சேதுபதியின் முகத்தைக் கூர்ந்து நோக்கினான். அவருடைய முகமே அவருக்கு ஒரு முகமூடியாயிருந்தது. அவனால் அவரது உள்ளே ஓடும் எண்ணங்களை அப்போது நிறுத்துப் பார்க்க முடியவில்லை.

அரசவை கலைந்தது. ரங்ககிருஷ்ணனோடு உடன் வந்திருந்தவர்களை, விருந்தினர்கள் பொதுவாக உணவருந்தும் அரண்மனைப் போஜனைசாலைக்கு உரியவர்களோடு அனுப்பி விட்டு அவனை மட்டும் தன்னோடு தனியே அழைத்துக் கொண்டு சென்றார் சேதுபதி.

அவர்களுக்குச் சேதுபதியின் குடும்பப் பெண்டிரே பரிமாறினார்கள். அந்த அலங்கார அறையில் சிறப்பான சூழ்நிலையில் நெய் மணம் கமழும் அதிரசங்களையும், தேனில் பிசைந்த தினைமாவையும் உண்ணும்போதும் ரங்ககிருஷ்ணனின் மனம் என்னவோ கசப்பாகத்தானிருந்தது. சேதுபதி அவனை விழுந்து விழுந்து உபசரித்தார். உளுந்து அரிசியோடு வெந்தயமும் சேர்த்து அரைத்து மிருதுவாகவும் பத்தியமாகவும் வார்க்கப் பட்ட மெத்தென்ற தோசைகளும், நாசிக்கு இதமான கொத்தமல்லி வாசனையோடு கூடிய துவையலும் உண்ண ருசியாயிருந்தன. விருந்தோம்பலிலும் பிற உபசரணைகளிலும் அவனை மிகமிகக் கவனமாகவும், மரியாதையோடும் நடத்தினார் சேதுபதி.

"சின்ன நாயக்கரே! அரசர்கள் என்பதற்காகவோ, பேரரசர்கள் என்பதற்காகவோ நான் மயங்கிப் பயந்து மதிப்பதில்லை. இந்த அரண்மனையில் மிகவும் வேண்டியவர்களை மட்டும் தான் இப்படி என் குடும்பப் பெண்களே முன் வந்து உபசரிப்பார்கள்".

"மிகவும் வேண்டியவர்களுக்கு வேண்டியவர்களைக் கொன்று விடுவதும் கூட ஒருவகை உபசரணைதானோ?"

சேதுபதி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு கலத்தில்லிருந்த பார்வையை நிமிர்த்தி அவனைப் பார்த்தார்.

"சுவையான இனிய உணவை அருந்தியபடி கசப்பான விஷயங்களைப் பேசுகிறீர்கள் சின்ன நாயக்கரே!"

"கசப்பும் அறுசுவைகளில் ஒன்றுதானே?"

"இருக்கலாம்! ஆனால் எல்லா நேரத்திலும் அது உவப்பதில்லை. விருந்தினரைக் கசப்புக்கு உள்ளாக்குவது இந்த அரண்மனையில் வழக்கமில்லை."

"குமாரப்ப பிள்ளை..." என்று தான் தொடங்கிய வாக்கியத்தை ரங்ககிருஷ்ணன் முடிப்பதற்குள்ளேயே சேதுபதி குறுக்கிட்டு, "நல்ல மனிதராயிருந்தார். படிப்பாளியாயிருந்தார். ஆனால் அவருடைய விசுவாசமெல்லாம் புறப்பட்ட இடமாகிய சொக்கநாத நாயக்கரின் வம்சத்தில் தான் குவிந்திருந்ததே தவிர, வந்து சேர்ந்த இடமாகிய சேது நாட்டின் மேல் எள்ளளவும் இல்லை" என்றார்.

"உண்மையாக ஒரு தரப்புக்கு மட்டும் விசுவாசமாகயிருப்பது பாவம் என்று விசுவாசத்துக்கு புது விளக்கம் இப்போதுதான் புரிகிறது. எல்லாருக்கும் விசுவாசமாயிருப்பது இங்கிதமேயன்றி விசுவாசமாகாது."

"சின்ன நாயக்கர் சன்மார்க்க பாஷையில் விசுவாசத்தைப் பற்றி விளக்குகிறார் போலிருக்கிறது! எனக்கு அரசியல் நிகண்டின்படிதான் அதற்கு அர்த்தம் தெரியும் சின்ன நாயக்கரே!"

"சேதுநாட்டில் சன்மார்க்கத்துக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லாதபடிதான் ஆட்சியும் நடக்குமென்று இதுவரை புரிந்துகொள்ளாதது என் தவறென்று இப்போதுதான் தெரிகிறது."

"சன்மார்க்கத்தைப் பற்றிச் சின்ன நாயக்கரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய அளவுக்குத் தமிழ்ப்புலமைக்குப் பெயர்பெற்ற சேது நாட்டில் இன்னும் அத்தனை அறிவுப் பஞ்சம் ஏற்பட்டுவிடவில்லை."

"துரதிர்ஷ்டவசமாகச் சோற்றுப் பஞ்சத்தைப் போல் அறிவுப் பஞ்சம் கண்களுக்குத் தெரிவதில்லை."

"இந்த விருந்திலே இல்லாத கசப்புச்சுவையை உண்டாக்கி விட்டுத்தான் மறுவேலை பார்ப்பது என்று சின்ன நாயக்கர் கங்கணம் கட்டிக்கொண்டு வந்து இங்கே உட்கார்ந்திருப்பது போல் தோன்றுகிறது."

சேதுபதி அதிராமல், அயராமல், பதற்றமின்றிச் சிரித்தபடிதான் உரையாடினார். விஷயங்களால் பாதிக்கப்பட்ட பரபரப்பும், பதற்றமும், ஆத்திரமும் ரங்ககிருஷ்ணனின் குரலிலும் வார்த்தைகளிலும் உண்டாக்கியிருந்த சூட்டைப் போன்றதொரு சூட்டை, சேதுபதியின் குரலிலோ, வார்த்தைகளிலோ காணமுடியவில்லை.

உடனே கோபமும், ஆத்திரமும் பட்டுவிடாத இந்த ராஜதந்திர அடக்கத்தைத்தான் 'பொள்ளெனப்புறம் வேர்க்காதிருத்தல்' எனத் தன் தாய் அடிக்கடி கூறுகிறாள் என்பது இப்போது ரங்ககிருஷ்ணனுக்குத் தோன்றியது.

சேதுபதியின் உரையாடல் இப்படி ரங்ககிருஷ்ணனுக்குத் தன் தாய் அடிக்கடி கூறும் வாசகம் ஒன்றை நினைவுபடுத்தியது. தொடர்ந்து சேதுபதியிடம் சொல்லிக் கொண்டே போனான் அவன்.

"சொல்லாமல் கொள்ளாமல் மற்றவர்களுக்குக் கப்பம் கட்டும் ஒரு நாடு திடீரென்று தனக்குத்தானே சுயாதினமாவது கூட அறிவுப் பஞ்சமில்லாததால் தான் நடக்கிறது போலும்."

"இதற்கு ஆமென்றும் பதில் சொல்லலாம். இல்லையென்றும் பதில் சொல்லலாம். ஆனால் இல்லையென்று பதில் சொல்லத் தன்மானம் தடையாயிருக்கிறது. ஆம் என்று பதில் சொல்லத் தன்னடக்கம் தடையாயிருக்கிறது சின்ன நாயக்கரே."

ரங்ககிருஷ்ணனிடம் அப்போது வார்த்தைகளையே கூராகத் தீட்டிப் பிரயோகித்து ஒரு ராஜதந்திரப் போரை நடத்தினார் சேதுபதி. அந்தப் போரிலும் கூட அவர் கைதான் ஓங்கியிருந்தது. தான் ஆத்திரப்படாமல் எதிரியை முதலில் உணர்ச்சிவசப்பட்டு ஆத்திரம் கொள்ளச் செய்கிறவன் அந்தக் கணமே எதிரியும் அறியாமலே அவனை இரகசியமாக வெற்றி கொண்டு விடுகிறான். ரங்ககிருஷ்ணனைப் பொறுத்தவரை அப்படி ஒரு மனோதத்துவ வெற்றியை ரகுநாத சேதுபதி அடைந்திருந்தார்.

உணவருந்தி முடித்துவிட்டுப் பெண்கள் அலங்காரத் தாம்பாளங்களில் கொணர்ந்து வைத்த கனிவகைகளையும் தாம்பூலத்தையும் தரித்துக் கொள்ள இருந்தபோது, ரங்ககிருஷ்ணன் மறுபடி அவரிடம் வகையாக மாட்டிக் கொண்டான். வாழைப்பழச் சீப்பிலிருந்து ஒரு பழத்தைத் தனியே எடுத்துக் கொண்டு "நன்றாகக் கனியவில்லை" என்றான் ரங்ககிருஷ்ணன்.

"நன்றாகக் கனியாத எதுவுமே இங்கே வராது. உரியுங்கள். கனிந்திருப்பது தெரியும். சில கனிகளைக் கனிந்திருக்கிறதா, இல்லையா என்று கண்டுபிடிக்கக்கூட நமக்கே ஒரு கனிவு தேவைப்படுவதுண்டு சின்ன நாயக்கரே!"

சிரித்தபடியே நகைச்சுவைக்குப் பேசுவதுபோல் பேசினாலும் தனக்கு அரசியல் விஷயங்களைப் பேசும் கனிவு போதாது என்பதைப் பொடி வைத்துச் சொல்லுகிற அவரது அங்கதப் பேச்சு ரங்ககிருஷ்ணனுக்குப் புரிந்து உறைத்தது.

"வாழைத் தாராக அரண்மனைக்கு வரும்போது இவை கனியாமல்தான் வரும். எப்படியும் நாங்கள் இவற்றைக் கனிய வைத்துவிடுவோம்."

"எப்படியும் கனியவைப்பது என்பது தர்மமாகாது. ஒவ்வொன்றைக் கனிய வைப்பதற்கும் ஒரு முறை இருக்குமே?"

"சில வேளையில் கனிகளைக் கனிய வைப்பதற்கான முறைகளும், தர்மங்களும், மனிதர்களைக் கனிய வைக்கப் போதுமானவையாகவோ பொருத்தமானவையாகவோ இருப்பதில்லை, சின்ன நாயக்கரே!"

அப்போது வாதத்தில் தன் பக்கம் தான் மெல்ல வலுவிழந்து போய்க் கொண்டிருக்கிறோம் என்பது ரங்ககிருஷ்ணனுக்கே நன்றாகப் புரிந்தது!
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
8. பாதிரியார் வந்தார்

இரகுநாத சேதுபதியின் அந்த வார்த்தை வித்தகம் ரங்ககிருஷ்ணனை மெல்லத் தளரச் செய்திருந்தது. பேச்சிலேயே எதிரியை வீழ்ச்சியடையச் செய்யும் அந்தக் கிழச் சிங்கத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினான் அவன். போரிலும் வெல்ல முடியாமல், பேச்சிலும் வெல்ல முடியாமல் சேதுபதியிடம் சிக்கித் திகைத்துக் கொண்டிருந்தான் ரங்ககிருஷ்ணன். சிக்கல்கள் இப்போது மேலும் சிக்கலாயிருந்தன.

ஆத்திரத்தோடு படையெடுத்து வந்த தன்னை விருந்தினனாக்கி இராமேஸ்வரத்துக்குத் தீர்த்த யாத்திரை வந்தவன் போல மாற்றிக் காட்டி நாடகமாடிய அந்தச் சாமர்த்தியம் அவனை மருட்டியது. திகைத்து மிரளச் செய்தது.

மறுநாள் வைகறையில் ரங்ககிருஷ்ணனின் ராமேஸ்வர யாத்திரைக்கு ஏற்பாடு செய்யத் தொடங்கியிருந்தார் சேதுபதி. அவனாலேயே அதைத் தடுக்க முடியவில்லை; ராமேஸ்வர தரிசனத்தைப் புறக்கணிக்கவும் முடியவில்லை.

சேதுபதியின் விருந்துபசாரம் முடிந்ததும் உடன் வந்திருந்த படைத்தலைவர்களும் ரங்ககிருஷ்ணனும் மறுபடி சந்தித்துக் கொள்ள முடிந்தது. இரவில் அவர்கள் தங்கிய விருந்தினர் மாளிகையில் ஓரளவு தனிமையில் உரையாட வாய்ப்புக் கிடைத்தது.

அதுவரை தன் மனத்தில் ஆவலோடு அடக்கிக் கொண்டிருந்த ஒரு சந்தேகத்தை அப்போது தான் ரங்ககிருஷ்ணன் தன்னுடன் வந்திருந்த படைத்தலைவர்களில் ஒருவனிடம் கேட்டான்.

"என்னைப் புகழ்ந்து சேதுபதியின் சபையில் பாடப்பட்ட அந்தப் பாட்டில் ஏதோ மோசம் இருப்பதாகச் சொன்னாயே அது என்ன?"

"சொல்கிறேன் அரசே! மேலோட்டமாகப் பார்த்தால் அப்படி எதுவும் மோசம் இருப்பது போல் தெரியாது. ஆனால் தமிழ் யாப்பு இலக்கண மரபு தெரிந்தவர்களால்தான் அதைப் புரிந்து கொள்ள முடியும்."

"எங்கே? எனக்குப் புரியும்படியாக அதை விளக்கிச் சொல். பார்க்கலாம்!"

"வெண்பாவில் 'வகையுளி' என்று ஒன்று உண்டு! நல்லெண்ணத்தோடு வாழ்த்திப் பாடுகிற பாடல்களில் அந்த வாழ்த்துக்கு உரியவரின் பெயரில் வகையுளி செய்து இரண்டு பிரிவாகப் பெயரைப் பிளக்கக்கூடாது."

"பெயரைப் பிளந்தால்?"

"அப்படிப் பிளப்பது மிகவும் அமங்கலமானது. மரபும் ஆகாது!... முத்து வீரப்பர் என்ற தங்கள் பெயரைப் பிளந்து வகையுளி செய்து வாழ்த்தியிருக்கிறார்கள்."

"புரிகிறது சந்தேகப்பட வேண்டிய காரியந்தான்" என்றான் ரங்ககிருஷ்ணன். மேலும் சில நாட்கள் இராமநாதபுரத்தில் சேதுபதியின் விருந்தினராகத் தங்கிய பின்னர் இராமேசுவர யாத்திரையையும் நிறைவு செய்து விட்டு முறைப்படித் திரும்பும் காலையில் மீண்டும் இராமநாதபுரம் வந்தபோது திரிசிரபுரத்திலிருந்து தூதன் வந்து காத்திருந்தான். வந்த தூதனிடம் இருந்து ரங்ககிருஷ்ணனுக்குப் பல விவரங்கள் தெரிந்தன.

தான் படைகளோடு புகுந்தபோது மறவர் சீமையிலிருந்த சூழ்நிலையை விவரித்துத் தாய்க்கு ரங்ககிருஷ்ணன் ஏற்கெனவே அனுப்பியிருந்த தகவல்களுக்கு அவளிடமிருந்து மறுமொழி இப்போது கிடைத்திருந்தது. "நிலைமையை மேலும் சிக்கலாக்க முயல வேண்டாம். போரிட ஏற்ற நிலைமையில்லாவிட்டால் பேசாமல் திரும்பி விடவும்" என்று மறுமொழி வந்திருந்தது. ரங்ககிருஷ்ணன் உள்ளடக்கிய ஆத்திரத்தோடும் படைகளோடும் வந்த வழியே திரும்ப நேர்ந்தது. வெற்றியா தோல்வியா என்று புரியாமலே போர் முடிந்திருந்தது.

முதலில் திரிசிரபுரத்திலிருந்து புறப்படும் போதிருந்த உற்சாகம் திரும்பும் போதில்லை. பட்டமேற்று முடிசூடிக் கொண்டதும் தொடங்கிய கன்னிப்போரே இப்படிக் காரிய சித்தி அடையாததாகி விட்டதே என்று மனம் கலங்கியது. ரங்ககிருஷ்ணனின் இரண்டு குற்றச்சாட்டுகளையுமே சேதுபதி ஏற்கவில்லை... மறுக்கவுமில்லை. இலட்சியமும் செய்யவில்லை. அலட்சியமும் செய்யவில்லை.

குமாரப்ப பிள்ளையின் கொலையைப் பற்றி மிக எளிதாகத் தட்டிக் கழித்துப் பதில் சொல்லிவிட்டார் அவர். முதலில் ஜாடைமாடையாக பதில்கள் இருந்தாலும், பின்னால் தொடர்ந்து தங்கியிருந்த சில நாட்களிலும் அப்பேச்சு நிகழ்ந்த போது நேரடியாகவே ரங்ககிருஷ்ணனும் கேட்டான். நேரடியாகவே சேதுபதியும் பதில் சொல்லியிருந்தார். பதிலில் பணிவோ பயமோ இருக்கவில்லை.

"குமாரப்ப பிள்ளை நாயக்க சாம்ராஜ்யத்தின் கௌரவத் தூதராக இங்கு வந்திருந்தது உண்மைதான். அவரது சாவைத் தடுப்பது ஒன்றே சேதுநாட்டின் இலட்சியமில்லை. சேது நாட்டில் வாழ்ந்த போது அவர் கொல்லப்பட்டார் என்பதற்காக நானும் வருந்துகிறேன்."

"வருந்தினால் மட்டும் போதாது! இதற்கு நீங்கள் பதில் சொல்லியாக வேண்டும்."

"கூற்றுவனாகிய யமதர்மராஜன் பதில் சொல்ல வேண்டிய விஷயங்களுக்கு எல்லாம் நான் எப்படிப் பதில் சொல்ல முடியும் சின்னநாயக்கரே!"

"குமாரப்ப பிள்ளையின் கொலைக்கும் சேது நாட்டு சுயாதீனம் கொண்டாடுவதற்கும் தொடர்ந்து சம்பந்தம் இருப்பதாக நான் நினைக்கிறேன். இரண்டும் அடுத்தடுத்து நிகழ்ந்திருக்கின்றன."

"நீங்கள் என்னென்ன நினைக்கிறீர்கள் என்றெல்லாம் அநுமானம் செய்துபார்த்துப் பதில் சொல்லிக் கொண்டிருக்க நான் கடமைப்பட்டிருக்கவில்லை சின்னநாயக்கரே!" என்று அந்த உரையாடலை முடித்துவிட்டார் சேதுபதி. அவரது முடிவான பதிலே சுயாதீன உரிமையை நிரூபிக்கும் விதத்தில் தான் அமைந்திருந்தது. சம்பிரதாயப்படி இராமேஸ்வர யாத்திரை என்று வந்தால் அதில் பகைமைக்கோ சச்சரவு சண்டைகளுக்கோ இடமில்லை. சமய ரீதியான சம்பிரதாயமும் அரசியல் பகைமையும் ஒன்றோடொன்று ஒத்துப் போவதில்லை. ரங்ககிருஷ்ணன் படையெடுத்து வந்த நோக்கத்தை மறைத்து இராமேஸ்வரத்துக்குத் தீர்த்தயாத்திரை வந்திருப்பதாக மாற்றி நாடகமாடியதிலேயே ஒரு போரை நாசூக்காகத் தவிர்த்து விட்டார் சேதுபதி. அதே சமயத்தில் பயந்தோ, பதறியோ, தவிர்த்ததாகவும் காண்பித்துக் கொள்ளவில்லை. தன் தந்தையார் காலத்திலிருந்தே நாயக்க சாம்ராஜ்யத்துக்குப் பெரிய தலைவலியாக இருந்து வந்திருக்கும் கிழச்சிங்கத்தைத் தானும் அதன் குகைக்குள்ளே போய்ப் பார்த்து விட்டு ஒன்றும் செய்ய முடியாமலே திரும்பிக் கொண்டிருக்கிறோம் என்று உணர்ந்தான் ரங்ககிருஷ்ணன். ஏமாற்றம், சிறிது விரக்தி, உள்ளூற மனவேதனை எல்லாவற்றோடும் திரும்பிக் கொண்டிருந்தான் அவன். இந்த விதமான துயர நிலைமைகளால் தலைநகரத்துக்குத் திரும்புகிற தொலைவு நீண்டு வளர்வது போலிருந்தது அவனுக்கு.

அவனும் அவனுடன் வந்திருந்த படைகளும் மறவர் சீமை எல்லையைக் கடந்து வெளியேறுவதற்குள்ளேயே இன்னும் அதிர்ச்சியூட்டக் கூடிய ஒரு செய்தியும் பரவியிருப்பது தெரிந்தது.

ரங்ககிருஷ்ணன் போரிடும் நோக்கத்தோடு வந்து, முடியாது என்ற பயத்தோடு தோற்றுத் திரும்பிக் கொண்டிருப்பதாகச் சேதுபதியே மறவர் சீமை முழுவதும் பரவும்படி ஒரு செவிவழித் தகவலை அவிழ்த்து விட்டிருந்தார். மறவர் சீமையின் மூலை முடுக்குகளிலெல்லாம் அச்செய்தி பரவியிருந்தது. படை திரும்புகிற வழியிலுள்ள பல சிற்றூர்களில் தானே மாறு வேடத்தில் சென்று அதைத் தன் செவிகளாலேயே ரங்ககிருஷ்ணன் கேட்க நேர்ந்திருந்தது. அதைக் கேட்டுக் கையாலாகாத வீண் கோபப் படுவதைத் தவிர அவன் வேறெதுவும் செய்ய முடியவில்லை.

மானாமதுரைக்கு அருகே நள்ளிரவில் ஒரு தெருக்கூத்து நாடகத்தில் கூட்டத்தோடு கூட்டமாக நின்று ஒட்டுக்கேட்டு இதை அவன் அறிய முடிந்திருந்தது.

அது இராமாயண தெருக்கூத்து. பல நாட்களாக அவ்வூரில் தொடர்ந்து நடந்து வந்த அந்தத் தெருக்கூத்தில் அன்று அசோகவனத்தில் திரிசடை முதலிய அரக்கியர் புடைசூழச் சிறை வைக்கப்பட்டிருக்கும் சீதையிடம் இராவணன் வந்து கெஞ்சும் பகுதி நடந்து கொண்டிருந்தது. கனமானத் தோலில் சொந்தத் தலையைத் தவிர மற்ற ஒன்பது தலைகளையும் எழுதிக் கட்டிக் கொண்டு இராவணன் சீதையிடம் அட்டகாசமாகச் சிரித்துப் பேசித் தன் வீரதீரப் பிரதாபங்களை அளந்தான். நடுநடுவே நாடகத்தின் சூத்திரதாரி குறுக்கிட்டு மறவர் நாட்டை ஆளும் சேதுபதியின் பெருமைகளைச் சொன்னான். அப்படிக் கூறும் ஒரு சந்தர்ப்பத்தில்தான் 'ரங்ககிருஷ்ணன் படையெடுத்து வந்து தோற்றுத் திரும்பிக் கொண்டிருப்பதாக' ஒரு செய்தியும் தோற்பாவைக் கூத்தின் நடுவே கூறப்பட்டது. வேறு சில ஊர்களிலும் இதே தகவலை ரங்ககிருஷ்ணன் தன் செவிகளாலேயே கேள்விப்பட்டான். மிகவும் வேண்டிய படைத் தலைவர்களும் அறிந்து கொண்டு வந்து இதைத் தெரிவித்தனர்.

நாட்டின் தெருகூத்துகள், நாடகங்கள் மூலமாகக் கூட ஓர் அரசியல் தகவலை மக்கள் நம்பும்படியாகப் பரப்பும் சேதுபதியின் தந்திரம் அவனுக்குப் புரிந்தது. அதே சமயம் தெருக்கூத்து மூலமாகப் பரப்பப்படும் ஒன்றை அதிகாரப் பூர்வமான தகவலாக தான் கிளப்பிப் பிரச்சினையாக்கவும் முடியாது.

'சிக்கல் நிறைந்த எதிரி' என்ற மிகமிகப் பொருத்தமான வார்த்தையால் சேதுபதியை வர்ணித்த இராயசம் அச்சையாவின் சொற்கள் அட்சர லட்சம் பெறக்கூடியவை என்பதை இப்போது ரங்ககிருஷ்ணன் பரிபூரணமாக உணர்ந்து அந்த மதியூகி, சேதுபதியை மிகமிகச் சரியான முறையில் எடை போட்டு நிறுத்தியிருப்பதைத் தன் மனத்திற்குள் பாராட்டிக் கொண்டான். பாம்பென்று அடிக்கவும் முடியாமல் பழுதை என்று தாண்டவும் முடியாமல் அவனைத் திணற அடித்தார் சேதுபதி.

ஒரு திங்கள் காலம், படையெடுத்து இராமநாதபுரம் சென்றதிலும் படைகளை வழிநடத்திக் கொண்டு மறுபடி திரிசிரபுரம் திரும்பியதிலுமே கழிந்துவிட்டது. ரங்ககிருஷ்ணனின் பயன் தராத இந்தப் படையெடுப்பைப் பற்றித் தாய் மங்கம்மாளோ, இராயசம் அச்சையாவோ அவனிடம் சிறிதும் வருத்தப்படவில்லை என்றாலும் அவன் சற்றே மனம் தளர்ந்து போயிருந்தான்.

அவன் மனைவி சின்ன முத்தம்மாள் மட்டும் படையெடுப்பின் வெற்றி தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாமல் அவன் திரும்பி வந்து தன் எதிரே முகமலர்ச்சியோடு ஆருயிர்க் கணவனாக அன்பு செலுத்தியதையே ஒரு வெற்றியாகக் கருதினாள். ரங்ககிருஷ்ணன் அவளைக் கேட்டான்.

"வெற்றி வாகை சூடி வராத நிலையில் கூட இவ்வளவு பிரியமாக வரவேற்கிறாயே? இன்னும் நான் வெற்றியோடு வந்திருந்தால் எப்படிச் சிறப்பான வரவேற்பு இருக்குமோ?"

"எனக்கு உங்களை விட எதுவும் முக்கியமில்லை! நீங்கள் தான் என் வெற்றி! நீண்ட பிரிவுக்குப் பின் மறுபடி உங்களைச் சந்திப்பதே என் வெற்றிதான்!"

"அரசர்களின் பட்டத்தரசிகள் அவர்களின் பிற வெற்றி தோல்விகளைப் பற்றியும் கவலைப்படத்தான் வேண்டும்."

"என்னைப் பொறுத்தவரையில் நீங்கள் அரசர் என்பதை விட என் ஆருயிர்க் காதலர் கணவர் என்பது தான் முக்கியம்" என்று பதில் கூறிய படி ரங்ககிருஷ்ணனின் கழுத்தில் மணம் கமழும் மல்லிகை மாலையை அணிவித்துத் தோள்களில் சந்தனக் குழம்பைப் பூசினாள் சின்ன முத்தம்மாள். ஆறுதலாக அவன் கால்களை நீவி விட்டாள். சின்ன முத்தம்மாளின் இந்தப் பிரியம் அவனைக் கவலைகளிலிருந்து மீட்டது. மகிழ்ச்சியிலும், களிப்பிலும் ஆழ்த்தியது. படை நடத்தி மீண்ட களைப்பை எல்லாம் களைந்தது. மணவாழ்க்கையின் சுகங்களைத் தடுப்பது போல் குறுக்கிட்ட படையெடுப்பைச் சின்ன முத்தம்மாள் தன் உள்ளத்தில் அந்தரங்கமாகச் சபித்திருக்கலாம். இப்போது அந்தச் சாபம் நீங்கியது போல் இருவரும் மகிழ்ச்சிக் கடலில் திளைக்க முடிந்தது. மண வாழ்வின் இன்பங்களை முழுமையாக நுகர முடிந்தது.

ரங்ககிருஷ்ணன் மறவர் சீமையின் மேல் படையெடுத்துத் திரும்பி வந்த பின் சில மாதங்களுக்குத் திரிசிரபுரத்தில் எல்லாம் அமைதியாயிருந்தன. எந்த அரசியல் பிரச்சினையும் பெரிதாக உருவாகவில்லை. ஒருநாள் பிற்பகலில் ராணி மங்கம்மாளும், ரங்ககிருஷ்ணனும், இராயசம் அச்சையாவும் ஆலோசனை மண்டபத்தில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று தாய் அவனை நோக்கிக் கூறலானாள்.

"நாட்டை ஆள்வது என்ற பொறுப்புக்கு வந்து விட்டால் எல்லா மக்களையும் நம் குழந்தைகள் போல் பாவித்து அன்பு செலுத்த வேண்டும். ஒரு கண்ணுக்கு வெண்ணெய் ஒரு கண்ணுக்குச் சுண்ணாம்பு என்று நடத்தக்கூடாது. பொறுப்பில் இருப்பவர்களுக்கு விருப்பு வெறுப்பு உண்டு என்று தெரிந்து விட்டால் அப்புறம் மக்களே விருப்பு வெறுப்புகளைத் தூண்டுவார்கள். விருப்பு வெறுப்புகள் என்ற வலைகளை நம்மைச் சுற்றிலும் பின்னிவிடுவார்கள். நாம் அப்புறம் அந்த வலைகளுக்குள்ளிருந்து வெளியேற முடியாமலே போய்விடும்."

திடீரென்று தன் தாய் ஏன் இதை இப்படிக் குறிப்பிடுகிறாள் என்று ரங்ககிருஷ்ணனுக்குப் புரியாமல் இருந்தது. அவன் இப்படி யோசித்துத் திகைத்துக் கொண்டிருக்கும் போதே இராயசம் அச்சையாவும் அந்த உரையாடலில் கலந்து கொண்டு,

"காய்தல், உவத்தல் அகற்றி ஒரு பொருளை ஆய்தல் தான் அறிவுடையார் செயலாகும்! விருப்பு வெறுப்புகள் அப்படி ஆராயும் நற்பண்பைப் போக்கிவிடும்" என்றார். உடனே தன் தாயை நோக்கி, "எப்போது எதில் நான் விருப்பு வெறுப்புகளோடு செயல் பட்டிருக்கிறேன் என்று நீங்கள் என் குறையைச் சுட்டிக் காட்டினால் நான் என்னைத் திருத்திக் கொள்ள வசதியாயிருக்கும் அம்மா!" என்றான் ரங்ககிருஷ்ணன்.

"நீ இதுவரை அப்படி எதுவும் செய்துவிட்டாய் என்று நாங்கள் சொல்ல வரவில்லை மகனே! இப்போது ஒரு சந்தர்ப்பம் வந்திருக்கிறது. அதில் நீ எப்படித் தீர்வு காண்கிறாய் என்பதை வைத்தே உன்னைப் புரிந்து கொள்ள முடியும்."

"சொல்லுங்கள் அம்மா!" அவன் இப்படிக் கூறியதும் சற்றுத் தொலைவில் நின்ற அரண்மனைச் சேவகன் ஒருவனைக் கைதட்டி அருகே அழைத்து,

"நீ போய் வெளியே காத்திருக்கும் அந்தக் கிறிஸ்தவப் பாதிரியாரை இங்கே அழைத்து வா அப்பா" என்றாள் ராணி மங்கம்மாள்.

சேவகன் சென்று உயர்ந்த தோற்றமுடைய வெள்ளை அங்கியணிந்த பாதிரியார் ஒருவரை மிகவும் மரியாதையாக உடன் அழைத்து வந்தான். அவரை வரவேற்று அமரச் செய்து விட்டு, "ரங்ககிருஷ்ணா! இவருடைய குறை என்னவென்று விசாரித்து உடனே அதைத் தீர்த்து வைப்பது உன் பொறுப்பு" என்று அவனிடம் தெரிவித்த பின் தாயும், இராயசம் அச்சையாவும் அங்கிருந்து பாதிரியாரிடமும் அவனிடமும் விடை பெற்றுக் கொண்டு வெளியேறி விட்டார்கள்.

ரங்ககிருஷ்ணன் அந்தக் கிறிஸ்தவப் பாதிரியாரைக் கூர்ந்து கவனித்தான். அலைந்து திரிந்து களைத்த சோர்வு அவர் முகத்தில் தெரிந்தது. அவரது தூய வெள்ளை அங்கி கூட இரண்டோர் இடங்களில் கிழிந்திருந்தது. அவருடைய கண்களில் கலக்கமும் பயமும் பதற்றமும் தெரிந்தன.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top