• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ராணி மங்கம்மாள்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
29. பிரக்ஞை நழுவியது!

சிறைக்குள் பசி தாகத்தால் ராணி மங்கம்மாள் நா வறண்டது. நம்பிக்கையும் வறண்டது. பசியுந் தாகமுமாக இப்படித் தவித்துச் சாக விடுவதற்கு பேரனுக்குத் தான் எந்தத் தீமையும் செய்யவில்லையே என்று அவள் எண்ணி எண்ணிக் குமைந்தாள். உள்ளம் புழுங்கி வெந்து நைந்தாள்.

கிழவன் சேதுபதியோ, மைசூர் மன்னனோ விரோதம் காரணமாகத் தன்னைச் சிறையில் அடைத்திருந்தால்கூட அவள் இவ்வளவு வேதனைப்பட்டிருக்க மாட்டாள். தான் சொந்த அரண்மனையில் சொந்தப் பேரனாலேயே அவமானப்படுத்தப் பட்டு விட்டோமே என்று மாலை மாலையாகக் கண்ணீர் வடித்தாள் அவள். வாழவும் முடியாமல், சாகவும் முடியாமல் மானமிழந்து மரியாதை இழந்து இப்படி அங்கே அடைபட்டுக் கிடந்தாள் மங்கம்மாள்.

தன் அருமைக் கணவர் சொக்கநாத நாயக்கர் காலமான பின் அந்த மரணத்தின் சோகத்தையும் ராஜ்ய பாரத்தையும் சேர்ந்தே சுமந்து சிரமப்பட்டது எல்லாம் இப்போது இப்படி அவமானப்படவா என்று எண்ணிய போது இதயத்தில் இரத்தம் கொப்பளித்துக் கசிவது போலிருந்தது அவளுக்கு.

தன் அரண்மனையிலுள்ள விசுவாச ஊழியர்கள் யாராவது தன்னைப் பார்க்கவும், பேசவும் விரும்பாமல் இவ்வளவு உதாசீனமாக இருப்பது சாத்தியமே இல்லை என்று அவளுக்குப்பட்டது. கல்நெஞ்சம் படைத்த கிராதகனான தன் பேரன் விஜயரங்கன் தன்னை யாரும் பார்க்கவோ, பேசவோ முயன்றால் அவர்கள் தண்டிக்கப் படுவார்கள் என்று உத்தரவு போட்டிருக்க வேண்டும் என்று அநுமானித்தாள் அவள். தன் வம்சத்திலா இப்படி ஒரு கோடரிக்காம்பு என்று சில சமயங்களில் நினைக்கும்போது அவளுக்குத் திகைப்பாகவும் இருந்தது. சினமாகவும் இருந்தது.

இங்கே அவள் நிலைமை இவ்வாறிருக்க விஜயரங்கனோ மமதையிலும், அகங்காரத்திலும் திளைத்திருந்தான். தான் தந்திரமாகப் பாட்டியிடம் இருந்து கைப்பற்றிய ஆட்சியை எப்படியும் கட்டிக் காத்துக் கொள்ள வேண்டும் என்ற பேராசையில் எத்தகைய குரூரமான செயலைச் செய்யவும் துணிந்திருந்தான் அவன். முடிசூட்டிக் கொண்டவுடன் தன்னோடு ஒத்துழைத்த படைத் தலைவர்களிடம், "என் பாட்டியாயிற்றே என்று பார்த்து இரக்கம் காட்ட வேண்டியதில்லை. ராணி மங்கம்மாள் உயிரோடிருக்கிற வரை என் ஆட்சிக்கு அபாயம் உண்டு" என்று ஆக்ரோஷமாகத் தெரிவித்தான் அவன்.

அப்போது ஒரு படைத்தலைவர், "ராஜ்யத்தைத்தான் பிடித்தாயிற்று! இனி நம் விருப்பத்துக்கோ ஆட்சிக்கோ உங்கள் பாட்டி எந்த வகையிலும் தடை செய்ய முடியாது! பாவம், வயதான காலத்தில் பாட்டியை ஏன் சிறையில் அடைத்துக் கொடுமைப் படுத்த வேண்டும்? தயவு செய்து பாட்டியை விடுதலை செய்து விடுங்கள். தங்களுக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டுவிடக்கூடாது" என்று பயந்து கொண்டே அறிவுரை கூறினார்.

விஜயரங்கன் அந்தக் கருணை உள்ளம் படைத்த தளபதியின் அறிவுரையை ஏற்காததோடு ஆத்திரமாக அவருக்கு மறுமொழியும் கூறி அவரைக் கண்டித்துக் கோபித்துக் கொண்டான்.

"உங்கள் அறிவுரை இது விஷயமாக எனக்குத் தேவையில்லை! பாட்டி இருக்கிறவரை இந்த நாட்டை நான் நிம்மதியாக ஆள முடியாது. ஆனால் அவளை நானாகக் கொல்லப் போவதில்லை. தொடர்ந்து வாழவிடப் போவதுமில்லை. நான் கொன்றுவிட்டேன் என்ற கெட்ட பெயர் வராமல் அவளே செத்தாள் என நாடு நம்பும்படிச் செய்யப் போகிறேன்."

"அரசே! என்னைப் பெரிய மனத்தோடு, தாங்கள் கருணை கூர்ந்து மன்னிக்க வேண்டும். தங்களை வளர்த்து ஆளாக்கிய பாட்டியாரைத் தாங்கள் இவ்வளவு கொடுமையாக நடத்தக்கூடாது. இன்று உங்களுக்குப் பயப்பட்டாலும் பின்னாளில் ஊர் உலகம் உங்களைப் பழிக்கும்."

"ஊர் உலகம் என்ன சொல்லும் என்பதைப் பற்றி நான் கவலைப் படவில்லை! என் பாட்டி என்னைக் கொடுமைப் படுத்தியதற்கு பதிலாக அணு அணுவாய்ச் சித்ரவதை செய்யப்பட்டுச் சாகவேண்டும். இதற்கு எதிராக யார் நின்று தடுத்தாலும் கேட்க மாட்டேன். உங்கள் கீதோப தேசம் எனக்குத் தேவை இல்லை."

இவ்வளவு கடுமையாக அவன் கூறியபின் மௌனம் சாதிப்பதைத் தவிர அந்தப் படைத் தலைவருக்கு வேறு வழியில்லாது போயிற்று. முதல் முதலாக அறிவுரை கூறிய அந்த ஒரு படைத்தலைவருக்கு ஏற்பட்ட அவமானத்தைப் பார்த்த பின் வேறு யாரும் அப்புறம் வாய் திறக்கத் துணியவில்லை. அவன் இஷ்டப்பட்டப்படி எப்படி வேண்டுமானாலும் செய்து தொலைக்கட்டும் என்று பேசாமல் இருந்து விட்டார்கள்.

விஜயரங்கன் ஈவு இரக்கமற்றுக் குரூரமாகவும், கொடூரமாகவும் நடந்து கொண்டான். நாளாக நாளாக அவனது குரூரம் அதிகமாயிற்றேயன்றி ஒரு சிறிதும் குறையவில்லை. பாட்டியைச் சித்ரவதை செய்தே தொலைத்து விடுவது என்னும் வெறி அவனுள் மூண்டிருந்தது.

பாட்டியைச் சிறை வைத்திருந்த அறைக்குள் உணவு பருகத் தண்ணீர் எதுவும் வழங்கலாகாது என்ற முதலில் தடை விதித்திருந்த விஜயரங்கன் பின்பு அதை விடக் கொடூரமான வேறொரு முறையைக் கையாண்டான். அதைப்பற்றிக் கேள்விப்பட்டவர்கள் கண்டவர்கள் எல்லாரும் மனம் வருந்தினார்கள். அருவருப்பு அடைந்தார்கள்.

ராணி மங்கம்மாள் சிறைப் படுத்தப்பட்டிருந்த அறை வாசலில் அறுசுவை உணவை அவள் பார்வையில் படும்படி வைக்கச் சொல்லி அவளுக்கு உண்ணக் கொடுக்காமல் தவிக்கவிடச் செய்தான் விஜயரங்கன்.

பசியையும் தாகத்தையும் விடக் கொடியது பசிக்கும் தாகத்துக்கும் அருமருந்தான உணவையும் நீரையும் எதிரே வைத்துவிட்டு உண்ணவும், பருகவும் விடாமல் தடுப்பது தான். அந்தக் கொடுமையைத் தன் பாட்டிக்குச் செய்து அவள் பசியாலும் தாகத்தாலும் தவித்துத் துடிதுடிப்பதைத் தன் கண்களாலேயே பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தான் விஜயரங்கன்.

"அட பாவி! உனக்கு நான் மனத்தாலும் கெடுதல் நினைத்ததில்லையே? என்னை ஏண்டா இப்படிச் சித்ரவதை செய்கிறாய்! தெய்வந்தான் உன்னைக் கேட்கவேண்டும்" என்று அவனை நோக்கிக் கதறினாள் ராணி மங்கம்மாள். அவனோ அவள் கதறலைக் கேட்ட பின்பும் அட்டகாசமாக ஆணவச் சிரிப்புச் சிரித்தான்.

"பட்டால்தான் பாட்டி உனக்குப் புத்தி வரும். நன்றாகப் படு! அப்போதுதான் உன் தவறுகளை நீயே உணரமுடியும்" - என்று ஆத்திரத்தோடு கூறினான்.

மங்கம்மாள் ஈனஸ்வரத்தில் பதில் கூறினாள். "இதெல்லாம் அடுத்த ஜன்மத்தில் நீ அநுபவிப்பாய்! கடவுள் உன்னைச் சும்மா விடமாட்டார்."

"இந்த ஜன்மத்தில் நான் சந்தோஷப்படவேண்டும் அதற்கு நீங்கள் இடையூறாக இருந்தீர்கள்! அதனால் தான் உங்களைச் சிறையில் அடைத்திருக்கிறேன். அடுத்த ஜென்மத்தில் என்ன நடக்கும் என்பதைப் பற்றி இப்போது நான் கவலைப்படவில்லை."

"அன்னமிட்ட கைக்குத் துரோகம் செய்கிற யாரும் உருப்பட்டதில்லை!"

"பிள்ளைக்கும் பேரனுக்கும் கிடைக்க வேண்டிய ஆட்சியைக் கிடைக்க விடாமல் செய்து, தானே ஆட்சியின் சுகத்தை அநுபவிக்க விரும்புகிறவர்களும் உருப்படமாட்டார்கள். இப்போது நீங்கள் அடைந்திருக்கும் இதே கதியைத் தான் அடைவார்கள்..."

"அட துரோகி! என்னைப் பற்றி கெட்ட நோக்கம் கற்பித்தால் உன் நாக்கு அழுகிப் போய்விடும். தக்க தருணத்தில் உன்னிடம் ஒப்படைப்பதற்காகத்தான் முள்ளைச் சுமப்பது போல் இந்த ஆட்சியைச் சுமந்து வந்தேன். அதற்குள் நீ அவசரப்பட்டு விட்டாய்!"

அப்போது அவளுடைய எந்தப் பதிலும் அவனைச் சமாதானம் அடையச் செய்ய முடியவில்லை. அவன் ஆத்திரம் தணியாதவனாக அவள் முன் நின்றான். அவளை ஒரு சிறிதும் பொருட்படுத்தாமலே புறப்பட்டுச் சென்றான். உணவையும், தண்ணீரையும் கண்முன்னால் காண்பித்துவிட்டுக் கொடுக்காமலே அவளை வதைக்கும் சித்திரவதை தொடர்ந்தது. அடையாளம் அறியமுடியாதபடி எலும்பும் தோலுமாகியிருந்தாள் அவள். அப்படியும் பேரப் பிள்ளையாண்டானுக்கு அவள்மேல் இரக்கம் வரவில்லை. விஜயரங்கன் சென்றபின் உணவும் தண்ணீரும் கொண்டு வந்து திரும்ப எடுத்துச் செல்லும் காவலாளி மௌனமாகக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டபடியே எடுத்துச் செல்லுவதைக் கண்டு பேரனுக்கு இல்லாத இரக்கம் அவனுள் இருப்பதைத் தெரிந்து கொண்டாள் ராணி மங்கம்மாள்.

இப்படியே ஒரு திங்கள் காலத்துக்கு மேல் கழிந்துவிட்டது. ஒரு மாறுதலும் நிகழவில்லை. ராணி மங்கம்மாள் மெல்ல மெல்லத் தேய்ந்து ஒடுங்கியிருந்தாள். இப்போது விஜயரங்கன் அவளைச் சிறை வைத்திருந்த இடத்துக்கு வந்து பார்ப்பதுகூட நின்று போயிருந்தது.

சுயப் பிரக்ஞை தவறி நினைவிழக்குமுன் வரும் மங்கலான ஞாபகம் போலப் பளீரென்று தனது கடந்த காலம் ஒரு முறை நினைவு வந்தது அவளுக்கு. பல்லாண்டுகளாகக் கட்டிக் காத்த நாயக்க சாம்ராஜ்யம் இனிச் சீரழிய போவதற்கு முன்னடையாளம்தான் பேரன் விஜயரங்கனின் ஆணவமோ என்று எண்ணினாள் அவள். கடந்த காலத்தில் தான் கண்ட துர்ச் சொப்பனங்கள், இடக் கையால் தாம்பூலம் தரித்தது எல்லாம் ஒவ்வொன்றாக நினைவு வந்தன. கண்களில் நீர் கசிந்து மல்கியது.

அணையப்போகும் விளக்கானது கடைசி கடைசியாகப் பிரகாசமாகச் சுடர்விடுவது போல் அவள் மனத்தில் தன் வாழ்வின் கீர்த்தி நிறைந்த கடந்த காலச் சம்பவங்கள் ஞாபகம் வந்தன.

'இனியும் இந்த அவல நிலை நீடிக்காமல் என்னை அழைத்துத் திருவடியில் இடம் அளியுங்கள்' என்று திருவரங்கத்துப் பெருமானையும் மதுராபுரி நாயகி மீனாட்சியன்னையையும் உள்ளமுருகப் பிரார்த்தித்துக் கொண்டாள் அவள்.

ஒவ்வொரு வீர வரலாற்றுக்கும் ஒரு முடிவு உண்டு. நாயக்கப் பேரரசின் வீர வரலாற்றுக்கும் முடிவு வந்து விட்டதென்று தோன்றியது. சுயநலமிகளும், அடிவருடிகளும் தான் ஒருவனை அண்டிப் புகழ்ந்து சீரழிப்பவர்களில் முதன்மையானவர்கள். தன் பேரனை அண்டியிருப்பவர்களும் அப்படிப்பட்டவர்கள் தான் என்பதை இந்த நலிந்த நிலையிலும் அவளால் உய்த்துணர முடிந்தது. எதிர்காலத்தில் வரலாறு கூறுகிறவர்கள் பேரன் ஆளும் போது சிறையில் கொடுமைப் படுத்தப்பட்ட பாட்டியாகிய தன்னைப்பற்றி என்ன கூறுவார்கள் எப்படிக் கூறுவார்கள் என்று உள்ளம் உருக எண்ணிப் பார்த்தாள் அவள்.

அப்போது அவளது வலக் கண் துடித்தது. உடலும் உள்ளமும் சோர்ந்து தளர்ந்து போயிருந்தன. மறுபடியும் பேரனைப் பார்க்க நேர்ந்தால் மறந்து விடாமல் ஞாபகமாக அவனை ஒரு கேள்வி கேட்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டாள்.

மெல்ல மெல்ல நினைவு நழுவியது. கிட்டத்தட்ட ஒரு மண்டலம் வரை பட்டினி போடப்பட்ட உடல் நினைவு மங்குவதும், மலர்வதுமாக இருந்தது. தனிமைக் கொடுமை வேறு.

தான் சிறை வைக்கப்பட்டிருந்த அறையை நோக்கி யாரோ நடந்து வருகிற காலடி ஓசை கிணற்றுக்குள்ளிருந்து கேட்கிறாற் போல் மங்கலாக ஒலித்தது. பேரனாக இருக்குமோ என்று ஒரு சிறிய சந்தேகத்துடன் பிரக்ஞையை எல்லாம் ஒன்றுதிரட்டிக் கொண்டு எழுந்திருக்க முயன்றாள் அவள்.

பிரக்ஞை நழுவியது. உடல் தள்ளாடி நடுங்கியது. எழுந்திருக்க முடியவில்லை. அரும்பாடுபட்டுப் பேரனிடம் கேட்க விரும்பிய கேள்வியை வலிந்து முயன்று ஞாபகத்தில் கொண்டு வருவதற்கு மீண்டும் தனக்குத்தானே முயற்சி செய்தாள் அவள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
30. இருள் சூழ்ந்தது

உணர்வு மங்கிய அந்த நிலையிலும் கூடப் பேரனுக்குக் கெடுதல் நினைக்கவில்லை ராணி மங்கம்மாள். 'தனக்குக் கெடுதல் செய்தாலும் நாட்டு மக்களுக்கு அவன் நன்மை செய்து சிறப்பாக ஆட்சி நடத்தி நாயக்க வம்சத்துக்கு நற்பெயர் தேடித்தர வேண்டும்' என்றே அவள் உள்ளூற எண்ணி அவனை வாழ்த்தினாள்.

பிரக்ஞை தவறிக்கொண்டிருந்த நிலையில் அரண்மனைக் காவலன் ஒருவன் வந்து அறையின் வெளிப்பக்கமாக நின்றபடியே அவளைக் கவனித்தான். அவளிருந்த நிலை கண்டு அவன் மனம் இளகிப் பாகாய் உருகியது.

"தான தர்மங்களைத் தாராளமாகச் செய்து சத்திரம் சாவடிகளைத் திறந்து சாலைகள் அமைத்து, குளங்கள் வெட்டி அறம் செய்த மகாராணி மங்கம்மாள் தலையில் கடைசிக் காலத்தில் இப்படியா எழுதியிருக்க வேண்டும்? பாவம்!" என்று அந்தக் காவலன் அனுதாப உணர்வோடு தனக்குத் தானே முணுமுணுத்தது அவள் செவிகளில் விழுந்ததா இல்லையா எனத் தெரியவில்லை.

ராணி மங்கம்மாளைச் சொந்தப் பேரன் அரண்மனையிலேயே சிறை வைத்துவிட்டான் என்ற செய்தி மெல்ல மெல்ல வெளி உலகில் மக்களிடையே பரவி விட்டது. அப்படிப் பரவுவதைத் தடுக்கவோ தவிர்க்கவோ முடியவில்லை.

'இத்தனை தான தர்மங்களைச் செய்த புண்ணியவதிக்கா இந்தக் கதி நேர்ந்தது?' என்று தனியாகவும் இரகசியமாகவும் தங்களுக்குள் அநுதாபமாகப் பேசிக் கொண்ட மக்கள் கூடத் தங்கள் உள்ளுணர்வை வெளிப்படையாகக் காண்பித்துக் கொள்ள அஞ்சித் தயங்கினார்கள். பாட்டியின் மேல் தீராப் பகையும் குரோதமும் கொண்டுவிட்ட பேரன் தங்களை என்னென்ன தண்டனைக்கு உள்ளாக்குவானோ என்று யாவரும் பயந்தார்கள். அநுதாபத்தைப் பயமும் தயக்கமும் வென்றுவிட்டன.

ராஜ விசுவாசத்துக்குப் பங்கமில்லாதது போன்ற ஒரு வகை அடக்கமும் அமைதியும் நாடு முழுவதும் தென்பட்டாலும் உள்ளூற இந்த அக்கிரமத்தைக் கேட்டு மக்கள் மனம் குமுறிக் கொண்டிருந்தார்கள். வெளிப்படையாகத் தெரியாத ஒருவகை உள்ளடக்கிய வெறுப்பு நாடு முழுவதும் பரவியிருந்தது. நீறுபூத்த் நெருப்பாயிருந்த இந்த வெறுப்புணர்வை விஜயரங்கனோ, அவனுக்குத் துணையாயிருந்த அவனை ஆட்சியில் அமர்த்திய கலகக்காரர்களோ புரிந்து கொள்ளவில்லை. எதையும் தங்களால் அடக்கிவிட முடியும் என்ற திமிரோடு இருந்தார்கள். ஆட்சி கையிலிருந்ததுதான் அதற்குக் காரணம்.

ஆனால் அரண்மனை முழுவதும் இது அடாத செயல் என்ற எண்ணமே பரவியிருந்தது. விஜயரங்கனை எதிர்த்தும் முரண்பட்டும் கலகம் செய்ய அவர்களால் முடியவில்லையேயன்றி, 'ராணியை இப்படிச் செய்தது அக்கிரமம்' என்று அரண்மனை ஊழியர்கள் அனைவரும் உணர்ந்திருந்தார்கள்.

பிரக்ஞை தவறுகிற நிலையில் ராணி மங்கம்மாளைச் சிறையில் பார்த்த காவலன் பதறி நிலைகுலைந்து ஓடிப் போய் அதை விஜயரங்கனிடம் தெரிவித்தான். பாட்டியார் ஏறக்குறைய மரணப்படுக்கையில் இருப்பதாகப் புரிந்து கொண்ட விஜயரங்கன் உடனே தன் சகாக்களைக் கலந்தாலோசித்தான்.

"இறக்கும் தறுவாயிலிருக்கிற ராணி மங்கம்மாளை வெறுக்க வேண்டிய அவசியமில்லை. பாட்டி சாகும்போதுகூட உங்களுடைய முகத்தில் விழிக்க விரும்பாமல் செத்தாள் என்ற கெட்ட பெயர் உங்களுக்கு வரக்கூடாது" என்றார்கள் அவனுடைய சகாக்களில் சிலர். விஜயனும் பாட்டியின் அந்திக் காலத்தில் ஒரு நாடகமாடித் தீர்த்து விடுவதென்று தீர்மானித்துக் கொண்டான். சிறையிலிருந்து தேடிவந்து செய்தி சொன்ன காவலனையே திரும்பவும் சிறைக்கு அனுப்பி, "முகத்தில் நீர் தெளித்துப் பருகத் தண்ணீர் கொடுத்து பாட்டிக்குத் தெளிவு வரச் செய்!" என்று அவசர அவசரமாக உத்தரவு பிறப்பித்தான் விஜயரங்க சொக்கநாதன்.

அந்தக் காவலனும் உடனே ஓடோடிச் சென்று சிறை வைக்கப்பட்டிருந்த ராணி மங்கம்மாளின் அறைக் கதவைத் திறந்து அவள் முகத்தில் நீர் தெளித்தான். மெல்ல மெல்லப் பிரக்ஞை வந்தது. சற்றே தெளிவும் பிறந்தது. "மகாராணீ! உங்களை இக்கதிக்கு ஆளாக்கியவர்கள் நன்றாயிருக்க மாட்டார்கள்" என்று காவலன் ஆத்திர்மாகச் சொன்னபோது கூட, "அவர்களை அப்படிச் சபிக்காதே! எனக்குக் கெடுதல் செய்தவர்களுக்குக்கூட நான் கேடு நினைக்க மாட்டேன்" என்று ஈனஸ்வரத்தில் கருணையோடும் பரிவோடும் பதில் கூறினாள் மங்கம்மாள். அவளுடைய குரல் கிணற்றிற்குள்ளிருந்து வருவது போலிருந்தது.

அவளுக்குப் பருக நீர் அளித்தான் அவன். ஆனால் அந்த நிலையிலும் அவள் அதைப் பருக மறுத்துவிட்டாள்.

"ஊழியனே! உன்மேல் எனக்கு எந்தக் கோபமுமில்லை! இதுவரை எனக்குப் பருக நீரோ உண்ண உணவோ தரக்கூடாது என்று உத்தரவு போட்டிருந்த என் பேரன் இன்றாவது தன் உத்தரவை மாற்றினானே என்பதில் எனக்கு மகிழ்ச்சிதான். பாட்டி நிச்சயமாகப் பிழைக்க மாட்டாள் என்பது தெரிந்த பின்னாவது பேரனுக்குக் கருணை வந்ததே! அந்த மட்டில் நிம்மதிதான். ஆனால் இதுவரை மானத்தோடு வாழ்ந்துவிட்ட நான் இன்று இந்த நீரைப் பருகி அதை இழக்க விரும்பவில்லை. தயவுசெய்து இப்போது என்னை நிம்மதியாகச் சாகவிடு; போதும்."

பேசிக் கொண்டிருக்கும்போதே அவள் கண்களில் நீர் மல்கியது. அவள் மேலும் தொடர்ந்தாள்:

"நான் சாவதற்குள் என் பேரனைப் பார்க்க முடியுமானால் எனக்கு அவனிடம் கடைசியாக ஒரு கேள்வி கேட்க வேண்டும். அது தவிர இப்போது எனக்கு அவன்மேல் கோபமோ ஆத்திரமோ எதுவும் இல்லை."

"முதலில் தண்ணீரைப் பருகுங்கள் மகாராணீ! தயைகூர்ந்து மறுக்காதீர்கள்."

"என் தாகத்தைத் தணிப்பதற்காக நீ தண்ணீர் தருகிறாய்! அது என் தாகத்தை அதிகமாக்குமேயல்லாமல் குறைக்காது அப்பா! நான் இவ்வளவு அவமானப்பட்டது போதாது, என்னை இன்னும் சிறிது அதிகமாக அவமானப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உனக்கு இருந்தால் என்னைத் தண்ணீர் பருகும்படி நீ வற்புறுத்தலாம்."

இதைக் கேட்டபின் அந்தக் காவலன் நீர் பருகும்படி அவளை வற்புறுத்தவில்லை. அவள் மனநிலை அவனுக்கு நன்றாகப் புரிந்தது. விஜயரங்கனை அழைத்து வருவதற்காக ஓடினான். காவலன் விஜயரங்கனோடும் மந்திரிகள் பிரதானிகளோடும் அங்கே வந்து சேர்ந்த போது ராணி மங்கம்மாளின் நிலை மேலும் கவலைக்கிடமாகி இருந்தது.

பேரனைப் பார்த்ததும் கண்களில் நீர் மல்கிப் பளபளக்க அவள் ஏதோ பேச முயன்றாள். ஆனால் குரல் எழவில்லை. தளர்ச்சியும் சோர்வும் பசியும் தாகமும் ஏற்கெனவே அவளை முக்கால்வாசி கொன்றிருந்தன.

விஜயரங்கன் அவள் அருகே வந்தான். அவனை வாழ்த்த உயர்வதுபோல் மேலெழுந்த அவளுடைய தளர்ந்த வலக்கரம் பாதி எழுவதற்குள்ளேயே சரிந்து கீழே நழுவியது. கண்கள் இருண்டு மூடின. நா உலர்ந்தது. தலை துவண்டு சரிந்து மடங்கியது.

விஜயரங்கனோடு வந்திருந்த வயது மூத்த பிரதானி ஒருவர், ராணி மங்கம்மாளின் வலக்கரத்தைப் பற்றிப் பரிசோதித்து விட்டு உதட்டைப் பிதுக்கினார். "நாடி பேசவில்லை, குளிர்ந்துவிட்டது" என்றார். விஜயரங்கன் கூட இருந்தவர்களுக்காக ஏதோ அழுது புலம்புவது போலப் போலியாக நடித்தான்.

புகழ்பெற்ற ராணி மங்கம்மாளின் கதை முடிந்துவிட்டது. பதினெட்டு ஆண்டுக்காலம் மதுரைச் சீமையை ஆண்ட மகாராணி மரணம் அடைந்துவிட்டாள். அன்ன சத்திரங்களையும், ஆலயங்களையும், அறச் சாலைகளையும் வேறு பல தான தர்மங்களையும் செய்த புண்ணியவதி நிம்மதியாக அரங்கநாதப் பெருமானின் திருவடிகளைச் சென்று அடைந்து விட்டாள்.

பேரனின் சிறையிலிருந்து கிடைக்காத விடுதலையை மரணம் இன்று சுலபமாக அவளுக்கு அளித்துவிட்டது. உடற்சிறையிலிருந்து உயிர்ப்பறவையே விடுதலை பெற்றுப் போனபின், மனிதர்கள் இட்ட வெறும் சிறை அவளை இனிமேல் என்ன செய்ய முடியும்?

மகாராணி மங்கம்மாள் வரலாறானாள். மனிதர்கள் கேட்கும் கதையானாள். கர்ண பரம்பரையாய் வழங்கும் சுவையான செவிவிழி நிகழ்ச்சிகளின் தலைவியானாள். தென்னாட்டைத் தன்னந்தனியே ஆண்ட பெண்ணரசி என்று புகழ்பெற்றாள். போற்றுதல் அடைந்தாள்.

தன் வாழ்வின் இறுதியில் பேரனின் சூழ்ச்சியால் அவள் அடைந்த கொடுமைகள் வரலாற்றில் மெல்ல மெல்ல மறைந்து மங்கிப் போயின. ஆனால் அவள் ஆண்டது, புகழ் பரப்பியது, தானதருமங்கள் செய்தது ஆகியவையே வரலாற்றில் நிலைத்தன, நின்று நிலவின; அவள் மரணத்தின் போது அந்த அரண்மனையைச் சூழ்ந்த இருள் மட்டும் அப்புறம் அங்கிருந்து விலகவேயில்லை. விஜயரங்கனின் பக்குவமின்மையாலும், அவசர புத்தியாலும் ஆத்திரத்தாலும் நாயக்க சாம்ராஜ்யம் ஒளிமங்கி அழிய ஆரம்பித்தது. எங்கும் விலக முடியாத இருள் சூழ்ந்தது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
முடிவுரை

ராணி மங்கம்மாளின் மரணத்திற்குப் பின் புதிய தளவாய் கஸ்தூரி ரங்கய்யாவும், பிரதானி வெங்கடகிருஷ்ணய்யாவும் கூறிய யோசனைகளின்படி விஜயரங்கசொக்கநாதன் ராஜ்யத்தின் வருவாயைப் பெருக்கக் கருதி கொள்ளையடிப்பது போல் மக்கள் மீது அதிக வரிச்சுமைகளைத் திணித்தான். கொடுமைப் படுத்தினான்.

அவன் இட்ட புதிய வரிப்பளுவைத் தாங்க இயலாமல் மதுரைச் சீமை மக்கள் அரசுக்கு எதிராகக் கொதித்து எழுந்தார்கள். கிளர்ச்சிகளும் கலகங்களும் மலிந்தன. ஆட்சி அமைதி இழந்தது. முன்பு தானமாகக் கொடுக்கப்பட்ட இறையிலி நிலங்களுக்குக்கூட இப்போது வரி கொடுக்குமாறு அதிகாரிகளால் மக்கள் வற்புறுத்தப்பட்டார்கள்.

தனது இறையிலி நிலத்துக்கு வரி கொடுக்கச் சொல்லி வற்புறுத்தியது பொறுக்காமல் கோயில் பணியாளர் ஒருவர் கோபுரத்தின் உச்சியில் ஏறிக் கீழே குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.

விஜயரங்கனின் ஆட்சித் தொடக்கத்திலேயே நிகழ்ந்த பாட்டி மங்கம்மாளின் மரணமும், கோயில் பணியாளரின் தற்கொலையும் ஆட்சிக்குப் பெரிய அபசகுனங்களாகவும் நேர்ந்துவிட்டன! அந்தக் கெட்ட பெயரே தொடர்ந்து நீடித்தது. பின்பு மனம் மாறித் தளவாயும், பிரதானியும் புதிய வரிகளை நீக்கி மக்களிடம் நல்ல பெயர் எடுக்க முயற்சி செய்தார்கள். ஆனால் அவர்கள் நினைத்தபடி மக்களிடமிருந்து எதிர்பார்த்த நல்ல பெயர் மீளவில்லை. இழந்தவை இழந்தவையாகவே போயின. விஜயனின் திறமைக் குறைவால் நாளடைவில் ஆட்சியின் எல்லைகள் சுருங்கின. ராஜதந்திரக் குறைபாடுகளால் எதிரிகள் பெருகினர். கவலைகள் அதிகமாயின. ஒன்றும் செய்ய இயலவில்லை. மங்கம்மாள் பதினெட்டு ஆண்டுகள் கட்டிக்காத்த ஆட்சியைப் பதினெட்டு மாதங்கள் கூட விஜயனால் நன்றாக ஆள முடியவில்லை.

விரக்தியாலும் கவலைகளாலும் திடீரென்று பக்திமானாக மாறிய விஜயரங்கன் தன் ஆட்சியின் வசத்திலிருந்த கொஞ்சம் நஞ்சம் சொத்துக்களையும் தல யாத்திரைகளிலும், கோயில் திருப்பணிகளிலும் எல்லையற்றுச் செலவழித்தான். மடாலயங்களுக்குக் கொடைகள் வழங்கினான். அரசியல் கடமைகளை மறக்கும் போக்கிடமாகப் பக்தியைப் பயன்படுத்தியதால் ஆட்சி மேலும் தேய்ந்தது. எங்கும் அதிருப்தி மலிந்தது. ராணி மங்கம்மாள் மறைந்த தினத்தன்று அவனைச் சூழ்ந்த அந்த இருளிலிருந்து மறுபடி அவனுக்கும் அவன் ஆட்சிக்கும் விடிவு பிறக்கவே இல்லை.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top