• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ராணி மங்கம்மாள்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
19. நம்பிக்கைத் துரோகம்

ராணி மங்கம்மாளால் சேதுபதியை எதுவும் செய்ய முடியவில்லை. அசைக்க முடியாத கருங்கல்லாக இருந்து விட்டார் அவர். ராணி மங்கம்மாளிடம் அடங்கிக் கப்பம் கட்டாததால் தான் தவறு செய்கிறோம் என்ற உணர்வே சேதுபதியிடம் இல்லை. இயல்பாகத் தான் இருக்க வேண்டிய நிலையே கப்பம் கட்டாமல் இருப்பது தான் என்பது போல் வாளா இருந்தார் அவர். அவரை நிர்ப்பந்தப்படுத்தவோ ராணி மங்கம்மாளின் ஆட்சிக்குத் தாம் கடமைப்பட்டிருப்பதாக உணர்த்தவோ முடியவில்லை.

கட்டுப்பட்டிருக்கிறோம் என்பதே புரியாத ஒருவரை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று அறியாமல் திணறினாள் அவள். மங்கம்மாளின் கணவர் சொக்கநாத நாயக்கரின் இறுதிக் காலத்திலேயே ஏறக்குறைய அந்த மனநிலைக்கு வந்திருந்தார் அவர். ஆட்சி மங்கம்மாளிடமும், ரங்ககிருஷ்ணனிடமும் வந்த போது கிழவன் சேதுபதியிடமும் அந்த உணர்வு உறுதிப்பட்டிருந்தது. ரங்ககிருஷ்ணனும் மறைந்த பின்னர் எதற்கும் யாருக்கும் கட்டுப்படாத சுதந்திரத் திளைப்பில் இருந்தார் அவர்.

ராணி மங்கம்மாள் கூப்பிட்டு அனுப்பிக் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து வந்தவர்போல் அல்லாமல் அரச குடும்பத்து விருந்தினர் போல சில தினங்கள் வந்து மதுரையில் தங்கிவிட்டு அப்புறம் புறப்பட்டுச் சென்றார் கிழவன் சேதுபதி. அவரை யாராலும் அப்போது எதுவும் செய்ய முடியவில்லை.

மங்கம்மாள் மதுரை மாநகரில் தங்கியிருந்த ஆண்டுகளில் புதிதாக எதையும் சாதிக்க முடியவில்லை. மறவர் சீமையைத் தனி நாடாக்கிக் கொண்டதைத் தவிர வேறுவகை அத்து மீறல்களைச் சேதுபதி செய்யவில்லை என்பதே திருப்தியாக இருந்தது. திருவாங்கூர் மன்னன் ரவிவர்மன்கூட ஆண்டுதோறும் மதுரையிலிருந்து படைகளை அனுப்பிக் கொள்ளையிடப் போவது போல மிரட்டினால்தான் திறைப்பணம் கட்டுவதென்று வைத்துக் கொண்டிருந்தான். அவன் தானாக முன்வந்து கட்டவில்லை என்பதே ராணி மங்கம்மாளுக்கு எரிச்சலூட்டியது. மதுரைப் படைகளைக்கூட அவன் மதிப்பதற்கும் கண்டு மிரளுவதற்கும் வேறு ஒரு காரணம் இருப்பதாகத் தோன்றியது.

ரவிவர்மனது ஆட்சிக்கு அமைச்சர் முறையுடையவர்களாகிய எட்டு வீட்டுப் பிள்ளைமார்களின் ஓயாத விரோதத்தால் அவன் மதுரைப் படைகளை எதிர்க்கும் ஆற்றலின்றி இருந்தான். உள்நாட்டுக் கலகமும், அருகிலேயே உடனிருக்கும் தொல்லைகளுமே அவனை அவனது எதிரிகள் முன் வலுவிழக்கச் செய்திருந்தன.

இந்தச் சூழ்நிலை மங்கம்மாளுக்குச் சாதகமாயிருந்தது. எட்டுவீட்டுப் பிள்ளைமார்கள் அமைச்சர்கள் என்ற முறையில் தங்களுக்குள் ஒற்றுமையின்றி இருந்தனர். ரவிவர்மனை எதிர்க்கும்போது மட்டும் ஒருவிதச் செயற்கையான ஒற்றுமை நிலவியது அவர்களிடையே. அரசனும் வலுவிழந்து போயிருந்தான். அவனை ஆட்டிப் படைத்த அமைச்சர்களும் ஒற்றுமை குலைந்து திரிந்தனர். இதனால் 'பாண்டிப்படை' என அவர்களால் அழைக்கப்பட்ட மதுரைப்படை எப்போது படை எடுத்து வந்தாலும் அதற்குக் கொண்டாட்டமாயிருந்தது. திருவாங்கூர் மக்களைக் கொள்ளையடிக்கவும் சூறையாடவும் முடிந்தது.

பாண்டிப்படை வீரர்கள் ராணி மங்கம்மாளுக்குக் கிடைக்க வேண்டிய திறைப்பணத்தையும் வாங்கினர். தங்களுக்கு வேண்டியதையும் அபகரித்து மகிழ்ந்தனர். நீண்ட காலமாக இப்படியே நடந்து வந்தது. திருவாங்கூருக்குப் படை எடுப்பு என்றாலே வீரர்கள் மகிழ்ச்சியால் துள்ளினர்.

இப்படி ஆட்சிச் சூழ்நிலையினாலும் எல்லைப்புறச் சிக்கல்களாலும் ராணி மங்கம்மாள் மதுரைநகரிலும், திரிசிரபுரத்திலுமாக மாறி மாறி இருந்து வந்தாள்.

சில ஆண்டுகளுக்குப்பின் இதே போலத் திருவாங்கூருக்கு அனுப்பிய மதுரைப் படைகள் முற்றிலும் எதிர்பார்த்திராத ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்ள நேர்ந்து விட்டது. பாண்டிப் படை வீரர்கள் திருவாங்கூருக்குப் போகிறார்கள் என்றால் எந்த விதமான தொல்லையுமில்லாமல் வெற்றியோடும் திறைப் பணத்தோடும் திரும்புகிறார்கள் என்றிருந்த நிலைமை திடீரென்று மாறியது. மதுரைப் படைகள் கல்குளம் என்னும் தலைநகர எல்லையை அடைகிற வரை எந்தத் திருவாங்கூர் படை வீரனும் எதிர்க்க வரவில்லை. ஒவ்வொரு முறையும் பேருக்காவது சிறிது எதிர்ப்பு இருக்கும். அந்த எதிர்ப்பும் திருவாங்கூர் அரசின் எல்லையைப் படைகள் அடைந்தவுடனேயே இருக்கும். இந்தத் தடவை ராஜதானியின் பிரதான வாயில் வரை எதுவும் கேள்வி முறையில்லாமல் போகவே சந்தேகமாயிருந்தது.

கல்குளம் கோட்டை வாயில் கதவுகள் கூட அகலத்திறந்து வைக்கப்பட்டிருந்தன. மதுரைப் படைத்தலைவனும் வீரர்களும் தயங்கினர்.

"தயக்கம் எதற்கு? வருக! வருக! மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம். மலர்ச்சியோடு வரவேற்கிறோம்."

இப்படி இந்தக் குரலைக் கேட்டுத் திகைப்புடன் பார்த்த போது கோட்டைக் கதவருகே மன்னன் ரவிவர்மனே புன்னகையோடு நின்று கொண்டிருந்தான். விருந்தாட வந்த உறவினர்களை வரவேற்பது போல மதுரைப் படைத் தலைவனையும் படைவீரர்களையும் இருகரம் நீட்டி அன்பாகவும் ஆதரவாகவும் வரவேற்றான் ரவிவர்மன். படை வீரர்களுக்கு நடந்து வந்த களைப்புத்தீர உபசாரங்கள் நடந்தன. படை வீரர்கள் கோட்டைக்குள்ளேயே தங்க வைத்துக் கொள்ளப் பட்டார்கள்.

படைத் தலைவனை இரவிவர்மனே உடனழைத்துச் சென்று ராஜோபசாரம் செய்தான். பெரிதாகப் பீடிகை போட்டுக் கொண்டு ஆரம்பித்தான்:

"இம்முறை நீங்கள் மதுரைப் பெருநாட்டுக்குச் சேர வேண்டிய திறைப் பொருளைப் பெற்று, செல்ல வந்ததாக மட்டும் நினைக்காதீர்கள்! மதுரைப் பெருநாட்டின் மேலாதிக்கத்தையும் என்னையும் பிடிக்காத சிலரை ஒழித்துக் கட்டவும் உங்கள் உதவி எனக்குத் தேவை. என்னுடைய ஜன்ம எதிரிகளான எட்டுவீட்டுப் பிள்ளைமார்களைத் தொலைத்தாக வேண்டும். மதுரைப் படைத் தலைவராகிய நீங்கள் வருஷந்தவறாமல் இங்கு என்னைத் தேடி வந்து திறைப்பணம் வாங்கிச் செல்கிறீர்கள். இப்படி நேராமல் ஆண்டு தோறும் திறைப் பணமே உங்கள் இருப்பிடத்திற்குத் தேடி வந்து விடும்படியாகச் செய்ய என்னால் முடியும். என்னைத் தலையெடுக்கவே விடாமல் இடையூறுகள் செய்து கொண்டிருக்கும் எட்டு வீட்டுப் பிள்ளைமார்களை அழிப்பதற்கு ஒத்துழைத்தீர்களானால் நான் அதைச் செய்து விடுவேன்."

"கப்பம் கட்டுகிறேன் என்று வார்த்தையையே காப்பாற்றாத நீங்கள், இந்த வார்த்தையை மட்டும் காப்பாற்றுவீர்க்ள் என்பது என்ன உறுதி? உங்களை எப்படி நம்புவது?"

"மதுரை நாட்டுக்குக் கப்பம் கட்டுவது மட்டுமில்லை! நான் சொல்கிறபடி நீங்கள் ஒத்துழைத்தால் என்னுடைய அரசாட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சரிபாதிப் பகுதியையே மதுரைப் பெருநாட்டுக்கு வழங்குவேன்."

"உங்கள் வாக்குறுதியை நான் நம்புகிறேன் என்றே வைத்துக் கொள்ளுங்கள். அதற்கான உங்கள் நிபந்தனையை எப்படி நிறைவேற்றுவது? உங்கள் உதவியும் யோசனையும் இன்றி எட்டு வீட்டுப் பிள்ளைமார்களை நாங்கள் எப்படி ஒழிக்கமுடியும்?"

"கவலை வேண்டாம்! அந்தப் பாவிகளை எப்படி ஒழித்துக்கட்டுவது என்பதற்காக நீண்ட யோசனைக்குப் பின் ஒரு திட்டமே போட்டு வைத்திருக்கிறேன்."

திருவாங்கூர் மன்னன் - ரவிவர்மனின் வேண்டுகோளுக்குச் செவி சாய்ப்பதா? தவிர்ப்பதா? என்று சிந்தித்துத் தயங்கினான் மதுரைப் படைத் தலைவன். வெறும் திறைப் பொருளைக் கொண்டு போய்ச் சேர்த்தாலே மகிழக்கூடிய ராணிக்குத் திருவாங்கூர் ராஜ்யத்தில் பாதியையும் ஆளும் உரிமையைக் கொண்டு போய்க் கொடுக்கிற நிலை வந்தால் தன் பெருமை உயரும் என்று படைத் தலைவனுக்கு ஆவலாகவும் இருந்தது. முயற்சி தோற்று வம்பிலே சிக்கிக் கொண்டால் ராணியிடம் தன் பெயர் கெட்டு விடுமே என்று தயக்கமாகவும் இருந்தது. தன்னுடைய பங்காளிகளை அழிப்பதற்கு எதிரியின் உதவியை வேண்டும் ரவிவர்மனின் இந்த மனப் பான்மையை வியந்தான் மதுரைப் படைத் தலைவன். அவனால் உடனடியாக ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. சிந்தித்துத் தயங்கினான்.

சிந்தனையின் முடிவில் ஆசைதான் வெற்றி பெற்றது. திறைப் பொருளோடு, திருவாங்கூர் ராஜீயத்தில் பாதியை ஆளும் உரிமையையும் பெற்றுக் கொண்டு போய் மகாராணியை மகிழ்ச்சிகரமான திகைப்பில் ஆழ்த்த வேண்டும் என்று முடிவு செய்தான் படைத்தலைவன். ரவிவர்மன் தன் திட்டத்தை விளக்கமாகக் கூறலானான்.

"கோட்டையை உங்கள் பொறுப்பில் ஒப்படைத்து விட்டு போகிறாற் போல நான் ஒதுங்கிப் போய்க் கொண்டு எட்டு வீட்டுப் பிள்ளைமார்களைத் தந்திரமாக உள்ளே வரச் செய்கிறேன். அவர்களை உள்ளே வரவழைப்பதற்கு ஒரு கவர்ச்சியாக ஆட்சியையும், கோட்டையையும் அவர்கள் பாதுகாப்பில் விட்டு விடுவது போல பாவனை காண்பித்து ஏமாற்றப் போகிறேன். அவர்கள் அதை நம்பி உள்ளே வந்ததும் மறைந்திருக்கிற நீங்களும் உங்கள் படைகளும் அவர்களைத் திடீரென்று தாக்கிக் கொன்று தீர்த்துவிடலாம்...."

"அதெல்லாம் சரி! அவர்கள் உங்களை நம்பிக் கோட்டைக்குள் வருவார்களா?"

"பதவியும் ராஜ்யமும் கோட்டைப் பொறுப்பும் கிடைக்கிறதென்றால் விழுந்தடித்துக் கொண்டு உள்ளே வரத் தயங்கமாட்டார்கள்!"

"நாங்கள் திறைப்பணத்தைப் பெற்று முடித்துக் கொண்டு படைகளுடன் இரவோடிரவாக மதுரைக்குத் திரும்பி விட்டதாக எட்டு வீட்டுப் பிள்ளைமார்களிடம் முதலில் அவர்கள் நம்பும்படியாக ஒரு பொய்யை நீங்கள் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் எங்களை நினைத்துப் பயந்து அவர்கள் கோட்டைக்குள் வரத் தயங்கிவிடக் கூடும். ஜாக்கிரதை!"

"அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். எட்டு வீட்டுப் பிள்ளைமார்களைக் கூண்டோடு கோட்டைக்குள் அனுப்ப வேண்டியது என் பொறுப்பு! அவர்கள் மறுபடி கோட்டைக்குள்ளேயிருந்து வெளியே உயிரோடு வராமல் கூண்டோடு அழித்துவிட வேண்டியது உங்கள் பொறுப்பு" என்றான் ரவிவர்மன். மதுரைப் படைத்தலைவன் சம்மதித்தான்.

திட்டமிட்டபடி எல்லாம் நடந்தன. இருளில் எட்டு வீட்டுப் பிள்ளைமார்கள் கல்குளம் அரண்மனையைக் கைப்பற்றி ஆளும் ஆசையுடன் கோட்டைக்குள் நுழைந்த போது மறைந்திருந்த மதுரைப் படை திடீரென்று பாய்ந்து அவர்களைத் தாக்கியது. எதிர்பாராத அந்தத் தாக்குதலினால் அவர்கள் பதறி நிலைகுலைந்தனர். எதிர்த்துத் தாக்குவதற்கு அவர்களிடம் ஆட்கட்டோ ஆயுத பலமோ இல்லை. மதுரைப் படைவீரர்கள் எட்டு வீட்டுப் பிள்ளைமார்களின் ஆட்களில் பலரைக் கொன்றுவிட்டார்கள். எஞ்சிய மிகச் சிலர் தப்பி ஓடிவிட்டார்கள். மந்திரம் போட்டு அடக்கியது போல எட்டு வீட்டுப் பிள்ளைமார்களின் கொட்டம் இரவோடிரவாக ஒடுங்கி விட்டது. பிழைத்தவர்கள் தப்பி ஓடிவிட்டார்கள். மதுரைப் படை வீரர்களும் தலைவனும் வெற்றி ஆரவாரத்துடனும், மகிழ்ச்சியுடனும் கோட்டைக்குள் ரவிவர்மனை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் பொழுது விடிவதற்குள் எதிர்பார்த்தது நடக்க வில்லை. எதிர்பாராத்து நடந்துவிட்டது. கோட்டைக்குள் மதுரைப்படை வீரர்களை வைத்துவிட்டு வெளியேறியிருந்த ரவிவர்மன் வெளியே போய்த் தன் ஆட்களை அதிக அளவில் திரட்டியிருந்தான். வேறு விதமான ஆசை அவனுக்கு உண்டாயிற்று. தன்னிடம் செய்து கொண்ட ஒப்பந்தப்படி மதுரைப் படைத் தலைவனும் படைகளும் எட்டு வீட்டுப் பிள்ளைமார்களை அழித்துத் துரத்திய பின் ரவிவர்மன் மதுரைப் படையையும் தொலைத்துவிட்டு ஏமாற்ற எண்ணினான். மதுரைப் படைத் தலைவனுக்குக் கொடுத்துள்ள வாக்குறுதியைக் காற்றிலே பறக்க விட்டான். ஆயத்த நிலையில் இல்லாதிருந்த மதுரைப் படைகளைப் பின்னிரவில் தன் ஆட்களோடு திடீரென்று கோட்டைக்குள் புகுந்து தாக்கத் தொடங்கினான் ரவிவர்மன்.

இதை முற்றிலும் எதிர்பாராத மதுரை நாட்டுப் படைவீரர்களும் அவர்கள் தலைவனும் திணறிப் போனார்கள். தீட்டிய மரத்திலேயே பதம் பார்த்த கதையாக முடிந்துவிட்டது. தனது நிரந்தர எதிரியாகிய எட்டு வீட்டுப் பிள்ளைமார்களைத் தொலைத்தவுடன் அதற்குப் பேருதவி புரிந்தவர்களாகிய பாண்டிப் படைகளையும் தொலைத்து விடத் துணிந்திருந்தான் ரவிவர்மன்.

உடனே மதுரைப் படைகளை அழிக்காவிட்டால் கொடுத்த வாக்கின்படி அவர்களுக்கும் பாதி ராஜ்யத்தைத் தர நேருமோ? என்று பயந்தே ரவிவர்மன் இப்படிச் செய்திருந்தான். 'எட்டு வீட்டுப் பிள்ளைமார்களை அழித்த கையோடு இனி உடனே ஆயுதமேந்திப் போர் புரியும் அளவு எதிரிகள் இல்லை' - என்ற நம்பிக்கையோடு உறங்க முற்பட்டிருந்த மதுரைப் படைகள் இரவிவர்மனின் திடீர்த் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் புறமுதுகிட்டு ஓட நேர்ந்தது. ஓடியவர்களையும் துரத்திக் கொல்லுமளவு கருணையற்றிருந்தான் ரவிவர்மன். பலரை ஈவு இரக்கமின்றிக் கொன்றும் விட்டான். ரவிவர்மனின் இந்தப் பச்சையான நம்பிக்கைத் துரோகம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் புறமுதுகிட்டு ஓடிய மதுரைப் படையில் சிலரே மதுரை வரை உயிரோடு திரும்பித் தப்ப முடிந்தது.

தப்பியவர்கள் மதுரை நகரை அடைந்ததும் ராணி மங்கம்மாள் அப்போது மதுரையில் இல்லை என்பது தெரிந்தது. ராணி விஜயரங்கனோடும் பரிவாரங்களோடும் திரிசிரபுரம் போயிருந்தாள். செய்தியின் அவசரமும் அவசியமும் கருதித் திரிசிரபுரத்திற்குத் தூதர்கள் விரைந்தனர். ரவிவர்மனின் நம்பிக்கைத் துரோகம் ராணி மங்கம்மாளிடம் தெரிவிக்கப்பட்டது.

ரவிவர்மனின் துரோகம் பற்றிய இச்செய்தி அவளை அடிபட்ட புலியாக்கியது. செய்தியை அவளறிந்த போது நள்ளிரவு. நேரத்தைப் பொருட்படுத்தாமல் உடனே இராயசத்தையும் பிரதானிகளையும் வரவழைத்து ஆலோசனை செய்தாள். தொடர்ந்து என்ன நடவடிக்கை எடுத்து ரவிவர்மனை ஒடுக்குவது என்று அவளும் இராயசம் முதலிய பிரதானிகளும் ஒரு நிச்சயமான முடிவுக்கு வந்தனர்.

அதிவீர பராக்கிரமசாலியான தளவாய் நரசப்பய்யாவின் தலைமையில் மற்றொரு மாபெரும் படையைத் திருவாங்கூருக்கு அனுப்ப ஏற்பாடாயிற்று.

"பிறர் செய்யும் துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளலாம். துரோகத்தைப் பொறுத்துக் கொள்ளமுடியாது - கூடாது" என்று படைகளை அனுப்புமுன் நரசப்பய்யாவிடம் வீர முழக்கமிட்டாள் ராணி மங்கம்மாள். படைகள் நரசப்பய்யாவின் தலைமையில் திரிசிரபுரத்திலிருந்து தெற்கே புயலெனப் பாய்ந்து புறப்பட்டன.

நம்பிக்கைத் துரோகத்தை எதிர்த்து இரவு பகல் பாராது ராணி மங்கம்மாள் நடத்திய ஆலோசனையால் எதிர்பாராத அபவாதம் ஒன்று மெல்ல மெல்லப் புகைந்தது. ராணி அதைப் பொருட்படுத்தவோ பெரிதுபடுத்தவோ விரும்பவில்லை. ஆனால் வாய்ப்புக் கிடைக்கும்போது உலகம் எப்படிப் பட்டவரை வேண்டுமானாலும் அபவாதத்தில் சிக்க வைத்து விடும் என்பது மட்டும் அதனால் அப்போது அவளுக்கு நன்றாகப் புரிந்தது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
20. அபவாதமும் ஆக்கிரமிப்பும்

கணவனை இழந்து பல நாட்கள் வரை தன்மேல் படராமலிருந்த ஓர் அபவாதம் இப்போது படரத் தொடங்கிவிட்டதை எண்ணி ராணி மங்கம்மாள் மனம் வருந்தினாள். ஊர் வாயை மூட முடியாது. மூடுவதற்குச் சரியான உலை மூடியும் இல்லை என்பதை அவள் இப்போது தான் நன்றாகப் புரிந்து கொண்டாள்.

மிகவும் அழகாகவும் ஆஜானுபாகுவாகவும் கம்பீரமாகவும் இருந்தது இராயசம் அச்சையாவின் தவறு இல்லை. அவள் கணவனை இழந்த நடுத்தர வயதுப் பெண்ணாக இருந்தாள். பரந்த மார்பும் திரண்ட தோள்களும் அழகிய முகமண்டலமும் உடைய சுந்தர புருஷனாக இருந்தார் அவர்.

மதுரையில் போய்த் தங்கியிருந்த நாட்களில் தவிர்க்க முடியாத அரசியல் யோசனைகளுக்காக அவர் உடனிருக்க நேரிடும் என்று கருதி அவரையும் அழைத்துச் சென்றிருந்தாள் அவள்.

மதுரையிலிருந்து திரிசிரபுரம் திரும்பிய பின்பும் திருவாங்கூர் மன்னன் ரவிவர்மன் செய்த நம்பிக்கைத் துரோகத்தை முறியடிப்பதற்காக அவள் இரண்டொரு நள்ளிரவுகளில் இராயசத்தை அரண்மனைக்கு வரவழைக்க நேரிட்டது. அதில் ஒரு நள்ளிரவில் பல்லக்கில்கூடத் திரும்பிச் செல்ல முடியாத அளவு புயலும் அடைமழையும் பிடித்துக் கொண்டுவிட்ட காரணத்தால் இராயசம் அரண்மனையிலேயே தங்கி விடியற்காலையில் சென்றார்.

ரங்ககிருஷ்ணனும், சின்ன முத்தம்மாளும் உயிரோடிருந்த காலத்தில் கூட இப்படிச் சில தவிர்க்க முடியாத இரவுகளில் இராயசம் அரண்மனையில் தங்க நேரிட்டிருக்கிறது. ஆனால் அப்போதெல்லாம் இப்படி ஓர் அபவாதமும் வம்பும் கிளம்பியதில்லை.

இப்போது ராணி மங்கம்மாள் அரண்மனையில் தனியாயிருந்தாள். மகனும் இல்லை. மருமகளும் இல்லை. அபவாதம் உண்டாக வசதியாகப் போயிற்று. நரசப்பய்யாவும் படைகளும் தெற்கே திருவாங்கூரை நோக்கிப் புறப்பட்டுப் போன மறுநாள் காலை ராணி மங்கம்மாள் அரண்மனை நந்தவனத்தில் தன் செவிகளாலேயே அதைக் கேட்டாள். வைகறையில் எழுந்து நீராடி நந்தவனத்தில் திருத்துழாயும் பூக்களும் கொய்யச் சென்ற ராணி மங்கம்மாள் தான் அங்கு வரப்போவது தெரியாமல் தனக்காகப் பூக்கொய்ய வந்திருந்த பணிப்பெண்கள் அங்கு ஏதோ பேசிக்கொண்டு நிற்கவே செடி மறைவில் நின்று அதைக் கேட்கத் தொடங்கினாள். பேச்சு தன்னைப் பற்றியதாகத் தோன்றவே அவள் ஆவல் மேலும் அதிகமாயிற்று.

"இவ்வளவு அவசரமாகப் பூக்கொய்ய வந்திருக்க வேண்டாமேடீ! இராயசம் இப்போது தான் அரண்மனையை விட்டுப் போகிறார்...."

கூறி முடித்து விட்டு சிரித்தாள் முதல்பெண்.

"இந்த இராயசம் அடிக்கொருதரம் எதற்கு இப்படி வந்து வந்து போகிறார்? இங்கேயே தங்கிவிட வேண்டியது தானே. அலர்மேலம்மாள் ராணிக்குக் கட்டுப்பட்டவள். அவளால் எந்த இடையூரும் வரப்போவதில்லை."

மறைந்து நின்று ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த ராணி மங்கம்மாளுக்குத் தீயை மிதித்தது போலாகிவிட்டது. தான் இவ்வளவு அதிகாலையில் எழுந்து நீராடி நந்தவனத்துக்கு வரக்கூடும் என்று ஒரு சிறிதும் எதிர்பாராதபடி அவர்கள் சுதந்திரமாகத் தங்கள் போக்கில் பேசிக் கொண்டிருப்பதாகப்பட்டது அவளுக்கு. அவர்கள் பேசிக் கொண்டதைக் கேட்டு அவள் மனம் பதறியது.

பெரும்பாலான மனிதர்கள் சரியான அல்லது தவறான அனுமானங்களிலேயே வாழ்கிறார்கள் என்பது புரிந்தது. பலர் திரும்பத் திரும்பப் பேசி வதந்தியைப் பரப்புவதாலேயே சில தவறான அனுமானங்கள் கூட மெய்போலப் பரவ முடிகிறது. யாரும் பரப்பாத காரணத்தால் சரியான அனுமானங்கள் பரவாமலே போய்விட முடிகிறது.

அப்போது தன் மனசாட்சிக்கு துரோகம் செய்யாமல் தனக்குத் தானே அந்தப் பணிப்பெண்கள் பேசியதைப் பற்றி நினைத்துப் பார்த்தாள் ராணி மங்கம்மாள். இராயசம் அச்சையாவின் ஆஜானுபாகுவான நெடிதுயர்ந்த பொன்னிறத் திருமேனியையும், கம்பீரமும் அறிவு ஒளியும் தேஜஸும் நிறைந்த திருமுக மண்டலத்தையும் கண்டு அவள் தன் மனத்திற்குள் அவ்வப்போது மயங்கியதுண்டு. மனத்தளவில் ஈடுபட்டது உண்டு. மனத்தளவில் ஈடுபடுவது என்பது எத்தகைய கட்டுப்பாடுள்ள பெண்ணாலும் தவிர்க்க முடியாதது தான். வெளி உலகில் வீரதீரப் பிரதாபங்கள் மிகுந்த ராஜதந்திரி - சாதுரியக்காரி என்றெல்லாம் பேர் வாங்கி இருந்தாலும் முடிவாக அவள் ஒரு பெண்தான். பெண் மனத்திற்கு இயல்பான சலனங்களும் சபலங்களும் அவளிடமும் இருக்கத்தான் செய்தன. பெண்ணும் தனிமையும் சேருவது என்பது பஞ்சும் நெருப்பும் சேருவதைப் போன்றது. வதந்தி என்ற நெருப்புப் பற்றிக் கொள்வது அப்போது பெரும்பாலும் நேர்ந்துவிடுகிறது.

பேசிக் கொண்டிருந்த பணிப் பெண்கள் மேல் கோபப் படுவதோ, அவர்களைத் தண்டிப்பதோ சரியில்லை என்று அவள் மனத்தில் பட்டது. அப்படி ஆத்திரப்பட்டுச் செயலில் இறங்குவதனாலே அவர்கள் என்ன பேசிக் கொண்டிருந்தார்களோ அதைத்தானே தன் ஆத்திரத்தின் மூலம் மெய்ப்பிப்பதாய் ஆகிவிடும்!

நந்தவனத்தில் கேட்டது மனதைப் பாதித்தாலும் அவள் பொறுமையாக இருக்க முயன்றாள். மனித இயல்பை எண்ணி வியப்பதைத் தவிர அவளால் அப்போது வேறெதுவும் செய்ய இயலவில்லை.

உலகில் மிக உன்னதமான கற்பனை உணர்ச்சியுள்ளவர்கள் மகாகவிகளாகிறார்கள். மிகக் கொச்சையான கற்பனை உணர்ச்சியுள்ளவர்கள் தங்களைத் தவிர மற்றவர்களைப் பற்றியே வம்புகளையும் வதந்திகளையும் கற்பித்து மகிழ்கிறார்கள்.

மிக உயர்ந்த கற்பனை கவிதையாகிறது. அரைவேக்காட்டுக் கற்பனை வதந்தியாகிறது. அறிவும் காரணமும் அழகும் அமைப்பும் கலவாத தான்தோன்றிக் கற்பனைதான் வதந்தி. அறிவின் அழகும் அடக்கத்தின் மெருகும் கலந்த வதந்தி தான் கற்பனையாகிறது. பணிப் பெண்களின் நிலைமைக்கு அவர்கள் இந்தப் போக்கில் இப்படித்தான் கற்பனை செய்ய முடியும் என்று ராணி மங்கம்மாளுக்குத் தோன்றியது. அப்போது அவர்களுடைய பரபரப்பையும் பதற்றத்தையும் அதிகப்படுத்தும் என்றெண்ணி ஓசைப்படாமல் திருத்துழாய் மட்டுமே பறித்துக் கொண்டு மெல்லத் திரும்பிவிட்டாள் அவள்.

"அரங்கேசா! இதுவும் உன் சோதனையா? வெளியே எல்லைகளில் ஏற்பட்டிருக்கும் அரசியல் விரோதங்களும் ஆக்கிரமிப்பு எண்ணங்களும் போதாதென்று இப்படி மனத்திற்குள்ளேயே குழம்பித் தவிக்கவும் ஓர் அபவாதத்தைத் தந்துவிட்டாயே!" என்று வைகறை வழிபாட்டை முடித்து விட்டு இறைவனுக்கு அர்ச்சித்த திருத்துழாயைக் கண்களில் ஒற்றிக் கொள்ளும் போது தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள் அவள். மனம் சிறிது கலக்கமுற்றாலும் தேற்றிக் கொண்டாள். கூரிய முள்ளிலிருந்து ஆடையை எடுப்பது போல் ஆடையும் கிழியாமல், முள்ளும் குத்தாமல் அந்த அபவாதத்தைப் பொறுத்த வரையில் நடந்துகொள்ள முயன்றாள். சில சிறிய அபவாதங்களைத் தடுத்துத்தெறியும் முயற்சிகளின் மூலமாகவே அவை பெரிய அபவாதங்களாக உரு எடுத்துவிடும். சில அபவாதங்களை அவற்றின் வெளியே தெரியாத அடிமண் வேரை அறுத்து மேற்கிளைகள் வாடி அழியச் செய்யவேண்டும். வேறு சில அபவாதங்களை நாமாக அழிக்கவே முயலாமல் அது தானே ஓடியாடி அலுத்துப் போய் இயல்பாகச் சாகும்படி விட்டுவிட வேண்டும். தானே சாகிற அபவாதங்களை உயிர்ப்பிக்கும் முயற்சியிலோ, உடனே கொன்றுவிட வேண்டிய அபவாதங்களைத் தொடரவிடுகிற முயற்சியிலோ இறங்கிவிடக்கூடாது என்ற ராணி மங்கம்மாள் வழக்கமான ராஜதந்திர உணர்வு அவளை எச்சரித்தது.

எதிர்பாராமல் இப்போது தன் மேல் ஏற்பட்டிருக்கும் இந்த அபவாதத்தை அவள் பெரிது படுத்த விரும்பவில்லை. 'இயல்பாக மூத்துப்போய் தானே அழியட்டும்' என்று விட்டுவிட விரும்பினாள். அச்சையாவிடமும் வித்தியாசம் காண்பிக்காமல் எப்போதும் போலப் பழகினாள். குழந்தை விஜயரங்கன் பெரியவனானால் தனக்கு ஒரு நல்ல துணையும் பாதுகாப்பும் கிடைத்துவிடும். இத்தகைய வீண் அபவாதங்களெல்லாம் வராது என்று நம்பிக்கையோடு இருந்தாள். அரசியல் காரியங்களில் கவனம் செலுத்தினாள்.

நாட்கள் சென்றன. ரவிவர்மனின் நம்பிக்கைத் துரோகத்திற்குப் பதிலடி கொடுக்கச் சென்ற படைகளின் நிலையைப் பற்றித் தகவல் அறிய ஆவலாயிருந்தாள் மங்கம்மாள்.

மிகச் சில நாட்களில் நல்ல செய்தி கிடைத்தது. நம்பிக்கைத் துரோகம் செய்த இரவிவர்மனுக்குப் பாடம் கற்பிக்கத் தளபதி நரசப்பய்யாவின் தலைமையில் சென்ற படைகள் வெற்றிமேல் வெற்றி பெற்று கற்குளம் கோட்டையையே நோக்கி முன்னேறிக் கொண்டிருப்பதாகத் தகவல் கிடைத்தது. இறுதியில் கற்குளம் கோட்டையைப் பிடித்துத் திருவாங்கூர் மன்னனை வென்று அவன் அதுவரை செலுத்தாதிருந்த திறைப்பணம் முழுவதையும் பெற்று வெற்றி வாகை சூடிய புகழுடன் திரும்புவதாகத் தளவாய் நரசப்பய்யாவின் தூதன் வந்து தெரிவித்த போது ராணி மங்கம்மாளுக்கு நிம்மதியாயிருந்தது. அவள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தாள். நரசப்பய்யாவின் திறமையை வியந்தாள்.

ஆனால் அவளது மகிழ்ச்சி இரண்டு முழுநாட்கள் கூட நீடிக்கவில்லை. படைகளும் படைத் தலைவர்களும் தளபதி நரசப்பய்யாவும் ஊரில் இல்லாத நிலையை அறிந்து தஞ்சையை ஆண்டுவந்த ஷாஜி மதுரைப் பெருநாட்டுக்குச் சொந்தமான நகரங்களையும், சில ஊர்களையும் தனது சிறுபடைகளை ஏவிக் கைப்பற்றிவிட்டான். எதிர்பாராதபடி திடீரென்று அந்த ஆக்கிரமிப்பு நடந்துவிட்டது.

கவனக் குறைவாக அயர்ந்திருந்த சமயம் பார்த்து அவன் செய்த ஆக்கிரமிப்பு மங்கம்மாளுக்கு ஆத்திரமூட்டியது. முன்பெல்லாம் இப்படிப்பட்ட அண்டை வீட்டார் ஆக்கிரமிப்புகளைச் சமாளிக்கப் பாதுஷாவின் படையுதவியையும், படைத் தலைவர்களின் உதவியையும் நாடுவது அவள் வழக்கமாயிருந்தது. இப்போது அந்த வழக்கத்தையும் அவள் கைவிட்டிருந்தாள். பக்கத்து வீட்டுப் பகைமைகளை ஒழிக்கத் தொலைதூரத்து அந்நியர்களின் படையுதவியை நாடுவது ஏளனமாகப் பார்க்கப்பட்டது. சொந்தத்தில் எதுவும் செய்யத் திராணியற்ற கையாலாகாதவள் என்ற அபிப்பிராயம் தன்னைப்பற்றி மற்றவர்களிடம் ஏற்பட்டுவிட அது காரணமாகி விடுமோ என்று அவளே அதை மறுபரிசீலனை செய்திருந்தாள். தஞ்சை நாட்டை ஆண்ட செங்கமலதாசனை வென்று அடித்துத் துரத்திய பின் மராத்திய மன்னனான ஏகோஜி சிறிது காலத்தில் எதிர்பாராத விதமாக இறந்துபோய் விட்டான். ஏகோஜியின் புதல்வனாக ஷாஜி பட்டத்துக்கு வந்திருந்தான். இந்த ஷாஜி பட்டத்துக்கு வந்த புதிதில் மங்கம்மாளுடைய நாட்டின் சில பகுதிகளை ஆக்கிரமித்த போது பாதுஷாவின் படைத் தலைவன் சுல்பீர்கானின் உதவியால் தான் அந்த ஆக்கிரமிப்பை முறியடித்திருந்தாள் அவள். அப்போது அப்படித்தான் செய்ய முடிந்திருந்தது.

இப்போது அதே ஷாஜி மறுபடியும் வாலட்டினான். இம்முறை பாதுஷாவின் ஆட்களையோ, பிறர் உதவியையோ நாடாமல், தன் படைகளையும், தளபதி நரசப்பய்யாவையும் வைத்தே அவனை அடக்க விரும்பினாள் ராணி மங்கம்மாள். தளபதி நரசப்பய்யா திருவாங்கூரில் வென்ற திறைப் பணத்தோடு திரும்பிக் கொண்டிருக்கும் செய்தி தெரிந்திருந்தது.

தஞ்சை மன்னன் ஷாஜியைக் கொஞ்ச நாட்கள் அயரவிட்டு விட்டு அப்புறம் நரசப்பய்யாவை விட்டு விரட்டச் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்திருந்தாள் ராணி மங்கம்மாள். தான் திடீரென்று ஆக்கிரமித்த மதுரை நாட்டுப் பகுதிகள் தனக்கே உரிமையாகி விட்டாற் போன்ற அயர்ச்சியிலும் மிதப்பிலும் ஷாஜி ஆழ்ந்திருக்க அவகாசம் கொடுத்துவிட்டுப் பின்னர் அவற்றை அவனே எதிர்பாராத சமயத்தில் திடீரென்று மீட்க வேண்டுமென்று மங்கம்மாள் தன் மனத்திற்குள் முடிவு செய்து கொண்டிருந்தாள். ஆனால் அந்த முடிவை யாரிடமும் அவள் தெரிவிக்கவில்லை.

தெற்கே திருவாங்கூர் மன்னனை வெற்றி கொண்டு நரசப்பய்யா கோலாகலமாகத் திரிசிரபுரத்திற்குத் திரும்பி வந்தார். ராணியும், இராயசமும், அமைச்சர் பிரதானிகளும், திரிசிரபுரம் நகரமக்களும் நரசப்பய்யாவையும் படை வீரர்களையும் ஆரவாரமாக வரவேற்றனர். நரசப்பய்யா திரும்பி வந்து, ராணி மங்கம்ம்மாள் அவரிடம் தஞ்சை மன்னன் ஷாஜியின் அடாத செயலைக்கூறிப் படை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்பே ஷாஜி மங்கம்மாளின் பொறுமையையும் அடக்கத்தையும் கையாலாகாத்தனமாகப் புரிந்து கொண்டு காவிரிக்கரையைக் கடந்து திருச்சி நகருக்குள் புகுந்து இரவு நேரங்களில் கொள்ளையடிக்க ஆரம்பித்தான்.

கரையோரத்து ஊர்கள் ஷாஜி படைவீரர்களால் அலைக்கழிப்புக்கு ஆளாயின. பீதியும், நடுக்கமும் பரவின. பாதுகாப்பற்ற நிலை உருவாயிற்று.

எப்படியும் இந்தக் கொள்ளையை முதலில் தடுத்தாக வேண்டுமென்று கொள்ளிடத்தின் வடக்குக் கரை நெடுகப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து பாசறை அமைத்துப் படைகளுடன் தங்கினார் தளபதி நரசப்பய்யா.

பாசறை அமைத்த பிறகு ஷாஜியின் கொள்ளை, கொலைகள் தொடர்ந்தன. நரித்தனமாகவும், நயவஞ்சகமாகவும் உள்ளே ஊடுருவி நுழைந்து கொள்ளையடிப்பதில் தேர்ந்த தஞ்சைக் குதிரைப் படை வீரர்கள் திரிசிரபுரம் வடபகுதியில் காவிரிக்கரை ஊர்களைக் கொள்ளையடித்துத் தொல்லை கொடுப்பதைத் தொடர்ந்தனர்.

ராணி மங்கம்மாளிடம் காவிரிக்கரை ஊர்களின் மக்கள் முறையிட்டனர். தேர்ந்த தளபதி நரசப்பய்யாவினாலேயே இந்தத் தஞ்சைக் கொள்ளைக்காரர்களின் கொட்டத்தை ஒடுக்க முடியாது போகவே ராணி கவலையில் மூழ்கினாள். நரசப்பய்யாவைக் கூப்பிட்டு மறுபடி ஆலோசனை செய்தாள். அவர் கூறினார்;

"நம் ஊர்களைக் கொள்ளையிடும் ஆசையில் தங்கள் தலைநகரான தஞ்சையைக்கூடப் பாதுகாப்பு இல்லாமல் விட்டுவிட்டு இங்கே வந்து தொல்லை கொடுக்கிறார்கள் ஷாஜியின் ஆட்கள். அவர்களைத் தந்திரத்தால் தான் முறியடிக்க வேண்டும். நம் படைவீரர்களில் சிலரை அவர்கள் தலைநகராகிய தஞ்சைக்கு அனுப்பி அங்கே பதிலுக்குக் கொள்ளையிடச் செய்தால் தான் வழிக்கு வருவார்கள்."

"கொள்ளிடத்தைக் கடந்து படை தஞ்சைக்குப் போக முடியுமா தளபதி?"

"சில நாட்களில் கொள்ளிடத்தில் நீர் ஆழம் குறைகிற ஒரு நேரம் பார்த்து நாம் கரையைக் கடந்து தஞ்சைக்குள் நுழைந்து விடலாம்."

"எப்படியோ இது ஒரு மானப்பிரச்சினை! நம்மை விடச் சிறிய மன்னன் ஒருவன் நமக்குத் தலைவலியாயிருக்கிறான்; இதை நாம் இப்படியே அனுமதித்துக் கொண்டிருக்க முடியாது."

"கவலைப்படாதீர்கள் மகாராணீ! அவர்கள் நம் காவிரிக் கரை ஊர்களில் கொள்ளையிட்டதற்குப் பதில் வட்டியும் முதலுமாகத் திருப்பிப் பெற்றுத் தருகிறேன். இது என் சபதம்" என்றான் வீரத் தளபதி நரசப்பய்யா.

"ரவி வர்மனுக்குப் புத்தி புகட்டியது போல் ஷாஜிக்குப் புத்தி புகட்டியாக வேண்டிய காலம் வந்து விட்டது! வெற்றியோடு திரும்பி வருக!" என்று நரசப்பய்யாவை வாழ்த்தி வீரவிடை கொடுத்தாள் ராணி மங்கம்மாள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
21. இஸ்லாமியருக்கு உதவி

தஞ்சைப் படைகளையும், ஷாஜியையும் ஒடுக்குவதற்கு நரசப்பய்யா புறப்பட்டுச் சென்ற தினத்தன்று நல்ல நிமித்தம் என்று நினைக்கத் தக்க வேறொரு நிகழ்ச்சியும் திரிசிரபுரம் அரண்மனையில் நடைபெற்றது.

தஞ்சைக்குப் புறப்பட்டுச் சென்ற ராணி மங்கம்மாளிடம் அரண்மனைச் சேவகன் ஒருவன் பவ்யமாக வந்து ஏதோ சொல்லும் குறிப்போடு வணங்கி நின்றான். தயங்கி நின்ற ராணி என்ன என்று வினவும் குறிப்போடு அவனை ஏறிட்டுப் பார்த்தாள். அவன் குறிப்பறிந்து சொல்லலானான்.

"கிழிந்த ஆடையும் அழுக்கடைந்த தோற்றமுமாகப் பக்கிரி போல் தோற்றமளிக்கும் இஸ்லாமியர் ஒருவர் தங்களைக் காண வேண்டுமென்று வந்திருக்கிறார்."

"என்னக் காரியமாகக் காண வேண்டுமாம்?"

"காரியம் என்னவென்று அவர் சொல்லவில்லை. தாங்கள் விரும்பினால் சந்திக்கலாம். இல்லாவிட்டால் அவரைத் திருப்பி அனுப்பி விடுகிறோம்."

"திருப்பி அனுப்ப வேண்டாம் உடனே வரச் சொல் பார்க்கலாம்! பாவம் அவருக்கு என்ன சிரமமோ?"

மிகவும் ஏழையாகவும் எளியவராகவும் தென்பட்ட அந்தப் பக்கிரியை அப்போதிருந்த போர் அவசரத்தில் ராணி மங்கம்மாள் சந்திக்க மாட்டாள் என்றுதான் அரண்மனைக் காவலர்கள் நினைத்தார்கள். ஆனால் அதற்கு நேர்மாறாக அவள் உடனே அவரைச் சந்திக்க இணங்கியது ஆச்சரியத்தை அளித்தது. அந்தப் பக்கிரியை அழைத்து வந்து காவலர்கள் ராணியின் முன்னே நிறுத்தினார்கள்.

"உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?"

"மகாராணீ! நீங்கள் எனக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பின்பு சொல்லுகிறேன். உங்களுக்குக் கிடைக்க இருக்கும் கீர்த்தியையும் வெற்றியையும் இப்போது சொல்கிறேன். கேட்டுக் கொள்ளுங்கள். இந்தப் போரில் நீங்கள் மகத்தான வெற்றி பெறப் போகிறீர்கள்."

"உங்கள் ஆருடத்திற்கு நன்றி! இப்போது உங்களுக்கு நான் என்ன செய்யவேண்டும்? உங்கள் கஷ்டம் என்னவானாலும் தயங்காமல் என்னிடம் சொல்லலாம்."

"என் காரியத்துக்கு அவ்வளவு அவசரமில்லை மகாராணீ! உங்களுக்கு இந்தப் போரில் வெற்றி கிடைத்த பின்னர் வந்து மகிழ்ச்சியோடு என் கோரிக்கையைச் சொல்வேன்."

"போரில் நான் வெற்றி பெற வேண்டுமென்று வாழ்த்துகிறீர்கள்! வாழ்த்துகிறவர்களை வெறுங்கையோடு அனுப்புவது இந்த அரண்மனை வழக்கமில்லை."

"மன்னிக்க வேண்டும் மகாராணீ! எனக்கு வேண்டியதை எப்போது வந்து பெற்றுச் செல்ல வேணுமோ அப்போது கட்டாயம் தேடி வருவேன்."

என்று கூறி வணங்கிவிட்டுப் பதிலையே எதிர்பாராமல் விருட்டென்று திரும்பிச் சென்றுவிட்டார் அந்தப் பக்கிரி.

ராணிக்கு இது பெரிய ஆச்சரியமாயிருந்தது. தேடி வந்து மின்னலைப்போல் எதிர் நின்று வாழ்த்திவிட்டு உடனே விரைந்து சென்றுவிட்ட அந்த மனிதர் ராணிக்கு ஒரு புதுமையாகத் தோன்றினார்.

வியப்புடன் உள்ளே சென்றாள் ராணி. இந்த இஸ்லாமியர் வந்தது, சொல்லியது, திரும்பியது எல்லாமே புதுமையாக இருந்தன.

திட்டமிட்டபடி தளபதி நரசப்பய்யா மிகவும் இரகசியமாகப் படைகளுடன் தஞ்சையை நோக்கி முன்னேறினார்.

கொள்ளிடத்தில் நீர்ப்பெருக்குக் குறைவாக இருந்த சமயத்தில் ஆழம் குறைவாக இருந்த இடம் பார்த்துப் படைகளுடன் ஆற்றைக் கடந்து அக்கரை சென்றிருந்தார் அவர்.

தளபதி நரசப்பய்யாவின் படைகள் தஞ்சை செல்வதை அறியாத தஞ்சைப் படைவீரர்கள் திரிசிரபுரத்தின் கரையோரக் கிராமங்களில் கொள்ளையடிப்பதில் தொடர்ந்து ஈடுபட்டிருந்தார்கள்.

நரசப்பய்யாவின் தலைமையில் சென்றிருக்கும் மங்கம்மாளின் படைவீரர்கள் தஞ்சைப் பகுதியில் சூறையாடுகின்றனர் என்று தஞ்சை வீரர்களுக்குத் தகவல் எட்டியபோது, பதறிப் போனார்கள். பதற்றத்தில் ஊரைக்காக்க விரையும் எண்ணத்தோடு கொள்ளிடத்தில் மிகவும் ஆழமான இடத்திலே இறங்கி ஆற்றைக் கடக்கத் தொடங்கினார்கள்.

கெடுவான் - கேடு நினைப்பான் என்பதுபோல் அவர்கள் ஆற்றைக் கடக்கிற நேரத்தில் மேற்கே எங்கோ பெருமழை பெய்திருந்த காரணத்தினால் கொள்ளிடத்தில் வெள்ளம் வேறு வந்துவிட்டது. பெரிய பெரிய மரங்களை எல்லாம் வேருடன் அடித்துக் கொண்டு வருகிற அளவு வெள்ளம் பயங்கரமாயிருந்தது. காட்டாற்றில் சிக்கிக் கொண்ட தஞ்சை வீரர்கள் வெள்ளத்தோடு அடித்துக் கொண்டு போகப் பட்டுவிட்டார்கள்.

படைகளும், குதிரைகளும், ஆயிதங்களும் திரிசிரபுரத்துக் கரையோரப் பகுதிகளில் கொள்ளையிட்ட பொருள்களும் ஆற்றோடு போய்விட்டன. மிகக் குறைந்த எண்ணிக்கையுள்ள தஞ்சைப் படை வீரர்களே உயிர் பிழைத்துக் கரையேறினர். அவர்களும் அப்போதிருந்த நிலையில் எவரையும் எதிர்த்துப் போரிடுகிற வலிமையோடில்லை.

கரையேறிய தஞ்சைப் படைவீரர்களைத் தளபதி நரசப்பய்யா நிர்மூலமாக்கி விட்டார். எதிர்ப்பே இல்லாமல் மங்கம்மாளின் படைவீரர்கள் தஞ்சையையும் சுற்றுப்புறத்து ஊர்களையும் சூறையாடத் தொடங்கினார்கள். ஏறக்குறைய தஞ்சை நாடு ஸ்தம்பித்துப் போய்விட்டது.

தோல்வியிலும், விரக்தியிலும் மிகவும் ஆத்திரம் அடைந்த தஞ்சை மன்னன் இந்த விளைவுகளுக்கு எல்லாம் காரணம் தன் பிரதான அமைச்சன் பாலோஜி பண்டிதனே என்றிண்ணினான். அவனது யோசனைகளால் தான் இவ்வளவு கெடுதலும் ஏற்பட்டதென்று தோன்றவே ஷாஜியின் இந்த மனநிலையைப் புரிந்து கொண்டு பாலோஜிபண்டிதனின் எதிரிகள் வேறு இதற்குத் தூபம் போட்டனர். பாலோஜியை எப்படியும் தொலைத்தாக வேண்டுமென்று ஷாஜிக்கு யோசனை கூறினார்கள்.

அமைச்சன் பாலோஜி நிலைமையை அறிந்தான். தந்திரத்தால் தான் அரசன் மனத்தை மாற்ற வேண்டுமென்று தீர்மானித்தான். நேரே அரசன் ஷாஜியிடம் போய், "அரசே! கோபப்படாதீர்கள். தயவு செய்து எனக்கு மட்டும் ஒரு வார காலம் தவணை கொடுங்கள்! திரிசிரபுரத்து வீரர்களுக்கும் நமக்கும் ஏற்பட்ட பகையைச் சரி செய்து எல்லாவற்றையும் சமாதானமாக முடித்துத் தருகிறேன்" என்று மன்றாடினான். ஷாஜியும் அதற்கு ஒருவாறு சம்மதித்தான்.

தஞ்சையில் நிலைமை இவ்வாறு இருக்கத் திரிசிரபுரம் நகரம் வெற்றிக் களிப்பில் திளைத்திருந்தது. திருவிதாங்கூர் ரவிவர்மனின் கொட்டத்தை ஒடுக்கிவிட்டுத் திரும்பிய சுவட்டோடு தஞ்சையையும் வெற்றி கொண்டிருந்தார் நரசப்பய்யா.

படைகள் தஞ்சைக்குப் புறப்பட்டபோதே இந்த வெற்றியைப் பற்றி ஆரூடம் கூறிய இஸ்லாமியரை இப்போது நினைத்தாள் ராணி மங்கம்மாள். அப்போது வாயிற் காவலர்கள் வந்து கூறினார்கள்.

"அரண்மனை வாயிலில் யாரோ தங்களைக் காணத் தேடி வந்திருக்கிறார்! இப்போதுள்ள பரபரப்பில் தங்களைக் காண முடியாதென்று எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவர் கேட்பதில்லை! தாங்கள் ஏற்கனவே தஞ்சைப் போர் முடிந்ததும் அவரைச் சந்திப்பதாக வாக்குக் கொடுத்திருக்கிறீர்களாம்."

அந்தப் பக்கிரியாகத்தான் இருக்கவேண்டுமென்று நினைத்தாள் ராணி மங்கம்மாள். "அவருக்கு ஆயுள் நூறாண்டு" என்று மனத்துக்குள் அவரை வாழ்த்தினாள்.

"வந்திருப்பவரை இப்போதே உள்ளே அழைத்து வா!" என்று காவலருக்கு உத்தரவு இட்டாள். தேடி வந்திருப்பவர் மேல் ராணிக்கு இருந்த அக்கறை காவலருக்கே எதிர்பாராத ஆச்சரியத்தை உண்டாக்கியக்க வேண்டும். காவலர்கள் உடனே விரைந்தோடிச் சென்று அந்த இஸ்லாமியரை அழைத்து வந்தனர்.

அரண்மனைக்குள்ளே வந்ததும் ராணியை வணங்கினார் அவர். ராணி மங்கம்மாள் அவரைப் பிரியத்தோடும் மரியாதையோடும் வரவேற்றாள்.

"ஐயா! நீங்கள் கூறியபடி தஞ்சையில் எங்களுக்குப் பெருவெற்றி கிடைத்திருக்கிறது. முதலிலேயே நீங்கள் தான் நல்வாக்குக் கூறினீர்கள்! இதோ இந்தப் பரிசுப் பொருள்களை என் அன்பின் அடையாளமாக ஏற்றுக் கொள்ளுங்கள்."

"நான் ஏழைதான். ஆனால் பரிசுகள் எதுவும் எனக்குத் தேவையில்லை மகாராணீ! என் வார்த்தைகள் பலித்து நீங்கள் வெற்றி பெற்றதில் நானடைந்திருக்கும் மகிழ்ச்சியைத் தெரிவிக்கவே வந்தேன்."

"பரிசுகள் வேண்டாம் என்கிறீர்! வேறு ஏதேனும் உதவியை நான் செய்ய முடியுமானால் சொல்லுங்கள். உடனே செய்கிறேன்."

"எனக்குச் சொந்தமாக எதுவும் வேண்டாம் மகாராணீ! தெய்வபக்தி மிகுந்த மக்களுக்குப் பொதுவாக ஓர் உதவி நீங்கள் செய்ய வேண்டும். இன்று நிராதரவாகவும் ஏழையாகவும் ஆகிவிட்ட என்னிடம் பெனுகொண்டா நகரின் 'தர்க்கா' ஒன்றைக் கவனித்து நிர்வகிக்கும் பொறுப்பு இருக்கிறது. அடிக்கடி நடக்கும் போர்களால் தர்க்காவின் நிர்வாகம் சரியாக நடைபெறவில்லை. தர்க்காவுக்கென்று இருக்கும் பரம்பரைச் சொத்துகளிலிருந்தும் வருமானம் சரியாகக் கிடைக்கவில்லை."

"நான் என்ன செய்யவேண்டுமோ சொல்லுங்கள்! உடனே செய்ய உத்தரவிடுகிறேன்."

"அந்தத் தர்க்கா நிர்வாகமும் அதில் வழிபாடும் சரியாக நடைபெற உதவினால் இந்த ஏழையின் மனம் மகிழ்ச்சி அடையும் மகாராணீ!"

உடனே அதிகாரிகளை அழைத்துத் திரிசிரபுரத்துக்கு அருகிலுள்ள சில காவிரிக்கரை சிற்றூர்களை அந்தத் தர்க்காவுக்கு மானியமாக வழங்க உத்தரவிட்டாள் ராணி மங்கம்மாள்.

இஸ்லாமியத் துறவி மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.

"ஆண்டவன் உங்களுக்குப் பரந்த மனத்தைக் கொடுத்திருக்கிறான் அம்மா! நீங்கள் ஒரு குறையும் வராமல் நீடூழி வாழ வேண்டும்."

"ஸ்ரீ ரங்கநாதன் மேல் எனக்கு எவ்வளவு பக்தி உண்டோ அவ்வளவு நல்லெண்ணமும் பக்தியும் என் ஆட்சியில் வாழும் எல்லாப் பிரிவு மக்கள் மேலும் உண்டு ஐயா!" என்றாள் ராணி மங்கம்மாள். பக்கிரி விடைபெற்று வாழ்த்திவிட்டுச் சென்றார்.

ராணி மங்கம்மாள் விரைந்து அரண்மனையின் உட்பகுதிக்குச் செல்ல இருந்தாள். அப்போது மீண்டும் வாயிற் காவலன் ஒருவன் அவளெதிரே தோன்றி, "காவிரிக்கரையில் வேளாண் தொழில் செய்து உழுதுண்டு வாழும் உழவர்கள் சிலர் தங்களைக் காண அவசரமாக வந்திருக்கிறார்கள் மகாராணீ!" என்று பவ்யமாக வணங்கியபடி தெரிவித்தான்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
22. காவிரி வறண்டது!

அப்போதிருந்த பரபரப்பில் காவிரிக்கரை உழவர்களைப் பார்க்க முடியாது போலிருந்தது. தேடி வந்திருக்கும் அந்த உழவர்களைத் திருப்பி அனுப்பிவிட்டு மறுபடி சில நாள் கழித்து வந்து தன்னைச் சந்திக்கச் சொல்லலாமே என்று தான் முதலில் ராணி மங்கம்மாளுக்குத் தோன்றியது. ஆனால் அடுத்த கணமே அந்த அபிப்ராயத்தை அவள் மாற்றிக் கொண்டாள்.

தேடி வந்திருப்பவர்கள் ஏழைகள் உழவர்கள் என்பதனால் அவர்களை அலைக்கழிக்காமலும், இழுத்தடிக்காமலும் உடனே பார்ப்பதுதான் முறை என்று எண்ணி அவர்களை அப்போதே தன்னைச் சந்திக்க அனுமதிக்குமாறு காவலர்களிடம் கூறி அனுப்பினாள்.

சிறிது நேரத்தில் உழவர்கள் கூட்டமாக அவளைச் சந்திக்க வந்தார்கள். அவர்கள் முகங்களில் எல்லாம் பயமும் கவலையும் அணைகட்டித் தேக்கினாற் போலிருந்தன. அவர்களுக்கு ஏதோ தீராத பிரச்சினை இருக்கவேண்டும் என்று ராணி மங்கம்மாளால் பார்த்த அளவிலேயே அனுமானிக்க முடிந்தது.

அவள் அவர்களை அன்போடு கேட்டாள்;

"உழவர் பெருமக்களே! உங்கள் கவலை என்ன? என்னால் முடியுமானால் உங்கள் கவலையைக் களைவேன். தயங்காமல் சொல்லுங்கள்."

"மகாராணீ! திடீரென்று காவிரியில் நீர் வற்றி வறண்டு விட்டது. மேல்மழை பெய்ததும் சரியாகும் என்று நினைத்துக் காத்திருந்தோம். அப்படியும் சரியாகவில்லை. சோழ நாட்டின் பெரும்பகுதி நிலங்களும் எங்களை ஒத்த விவசாயிகளும் காவிரியை நம்பித்தான் இருக்கிறோம் என்பது தாங்கள் அறியாததில்லை. மைசூர் மன்னன் சிக்கதேவராயனுக்கும், தங்களுக்கும் உள்ள பகையினால் தங்களுக்கும் தங்களது நாட்டு மக்களுக்கும் தொல்லைக் கொடுக்கக் கருதி மைசூரார் காவிரியை அணை எடுத்துக் தேக்கிவிட்டார்கள் என்று கேள்விப் படுகிறோம். காவிரி வறண்டிருப்பதால் உழவர்களாகிய எங்கள் வாழ்வும் வறண்டுவிட்டது."

சிக்கதேவராயன் காவிரியை அணை கட்டித் தடுத்து நிறுத்திவிட்டான் என்று கேள்விப்பட்டு ராணி மங்கம்மாள் ஆச்சரியப்படவில்லை. அவன் அப்படித்தான் செய்திருக்கக் கூடும் என்பதில் அவளுக்குச் சிறிதும் சந்தேகமில்லை. திரிசிரபுரத்தை முற்றுகையிட்ட சிக்கதேவராயரின் படைகளையும், தளபதி குமரய்யாவையும் தாங்கள் மைசூருக்குத் துரத்திய பின்பே இப்படிப் பழிவாங்கும் எண்ணம் அவனுக்கு ஏற்பட்டிருக்கவேண்டுமென்று தோன்றியது.

இந்தப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண்பதற்காக உழவர்களுக்கு ஆறுதலும் மறுமொழியும் கூறி அவர்களைத் திருப்பி அனுப்பிவிட்டு இராயசத்தையும், பிரதானிகளையும் படைத்தலைவர் நரசப்பய்யாவையும் உடனே அது பற்றிக் கலந்து ஆலோசித்தாள் அவள்.

"இந்தக் காவிரி நீர்ப் பிரச்சினையால் நாம் மட்டும் பாதிக்கப்படவில்லை. அண்டை நாடாகிய தஞ்சை நாட்டுக்கு நம்மைவிட அதிகப் பாதிப்பு ஏற்படும்" என்றார் இராயசம்.

அவர் இப்படிக் கூறி முடிக்கவும் வாயிற்காவலன் உள்ளே வந்து தஞ்சையின் மன்னர் ஷாஜியின் பிரதிநிதியாக அமைச்சர் பாலோஜி சந்திக்க வந்திருப்பதாகத் தெரிவிக்கவும் சரியாயிருந்தது. ஏற்கனவே தஞ்சை அரசன் ஷாஜியின் கோபத்துக்கு ஆளாகியிருந்த பாலோஜி தன் ஆள்கள் மூலம் தஞ்சை நாட்டின் பெரு வணிகர்களையும், செல்வர்களையும் தன் உறவினர்களையும் வற்புறுத்திப் பெரும் பொருள் திரட்டியதோடு அரசாங்கக் கருவூலத்திலிருந்து ஒரு பெருந்தொகையையும் எடுத்துக்கொண்டு திரிசிரபுரத்துக்கு வந்திருந்தான். திரட்டிய பொருளைத் திறைப்பணமாக அளித்து, ராணிமங்கம்மாளோடு சமாதானம் செய்துகொண்டு, அந்த சமாதானத்தைச் செய்து வந்தவன் என்ற பெருமையில் தன் அரசனான ஷாஜியின் கோபத்தைத் தணிக்க முயலவேண்டும் என்பது பாலோஜியின் திட்டமாக அப்போது இருந்தது.

திடீரென்று திரிசிரபுரம், தஞ்சை இருபகுதி ஆட்சிக்கும் நிர்ப்பந்தத்தை உண்டாக்கும் பொருட்டு மைசூர் மன்னன் ஏற்படுத்திவிட்ட காவிரிநீர்த் தடுப்பு பிரச்சனை பாலோஜிக்கு இப்படி ஓர் இராஜதந்திர லாபத்தை உண்டாக்கித் தந்தது.

மைசூர் மன்னன் சிக்கதேவராயன் என்கிற பொது எதிரியைத் தொலைக்கும் முகாந்திரத்தை முன்வைத்து ராணி மங்கம்மாளையும், தஞ்சை மன்னன் ஷாஜியையும் சமாதானப்படுத்த முடியும் என்ற புது ஞானோதயம் பாலோஜிக்கு உண்டாயிற்று. அதை வெறும் சமாதானமாக மட்டும் நிறுத்திவிடாமல் சிநேகிதமாக மாற்றித் திரிசிரபுரம், தஞ்சை இரண்டையும் நட்பு நாடுகளாக்கிவிடத் திட்டமிட்டான் அவன். காற்று அவனுக்குச் சாதகமாக அவனது பக்கம் வீசியது.

அவன் திரிசிரபுரத்துக்கு வந்த போது கையில் பெரிய அளவு திறைப்பொருளோடும் காவிரி நீரைப் பற்றிய பிரச்சனையோடும் வந்து சேர்ந்திருந்தான்.

ஒரு வலுவான பொது எதிரி ஏற்பட்ட பின் உதிரியாகத் தங்களுக்குள் விரோதிகளாக இருந்த பலர் அந்தப் பொது எதிரியைக் கருதித் தங்கள் சிறிய விரோதங்களைத் தவிர்த்து விட்டு நண்பர்களாகி விடுவதும், ஒரு வலுவான பொது நண்பனை அடையும் முயற்சியில் தங்களுக்குள் நண்பர்களாக இருந்த பலர் அந்தப் பொது நண்பனின் சிநேகிதத்தைப் பெறும் போட்டியில் தங்கள் நட்பை இழந்து விரோதிகளாகிவிட நேர்வதும் இராஜ தந்திரத்தில் தவிர்க்க முடியாதவை என்பதைப் பாலோஜி அறிந்திருந்தான். மைசூர்ச் சிக்கதேவராயன் காவிரியை மட்டும் தடுத்திராவிட்டால் பாலோஜி இந்த இராஜதந்திர லாபத்தை அடைந்தே இருக்க முடியாது. சந்தர்ப்பத்தைத் தனக்கு ஏற்படுத்தித் தந்த தெய்வத்துக்கு இதயபூர்வமாக நன்றி தெரிவித்துக் கொண்டே திரிசிரபுரத்துக்கு வந்து காத்திருந்தான் அவன். இந்த ராஜதந்திர லாபத்தை வைத்து ஷாஜியிடம் தன் பதவியைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்று எண்ணினான் அவன்.

ராணி மங்கம்மாளும் அவளுடைய இராயசமும், பிரதானிகளும், தளபதியும், தஞ்சை மன்னனின் அமைச்சனான பாலோஜியைச் சந்திக்க இணங்கினார்கள். பாலோஜி அவர்களைச் சந்தித்து மிகவும் பவ்யமாக நடந்து கொண்டான். சிரமப்பட்டுத் திரட்டியிருந்த பெரும்பொருளை ராணி மங்கம்மாளிடம் காணிக்கையாகச் செலுத்தினான்.

"மகாராணீ! நடந்துவிட்ட சில தவறுகளுக்காகவும், முறைகேடுகளுக்காகவும் தஞ்சை நாட்டின் சார்பில் என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமக்குள் ஒற்றுமையும், பரஸ்பர உதவியும் வேண்டும். நாம் ஒற்றுமையாயில்லாதிருந்த காரணத்தினால்தான் காவிரியை அணையிட்டுத் தடுத்துக்கொள்ளும் துணிவு மைசூர் அரசர் சிக்கதேவராயனுக்கு வந்தது. நம் இரு நாடுகளுக்கிடையே ஏற்படும் ஒற்றமையே நமது பொது எதிரியைத் தயங்கச் செய்யும். முடிந்தால் காவிரி நீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காகவே நாம் ஒன்று சேர்த்து மைசூர் மேல் படையெடுக்க முடியும் மகாராணீ!"

"நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான் அமைச்சரே! ஆனால் முதலில் ஒற்றுமையின்மைக்கு வித்திட்டது யார் என்று சிந்தித்துப் பாருங்கள். திரிசிரபுரத்தைச் சேர்ந்த காவிரிக்கரைக் கிராமங்களைக் கொள்ளியிடும்போது உங்கள் அரசருக்கு இந்த ஒற்றுமை யோசனை ஏன் தோன்றவில்லை? சிலருக்கு மனத் தெளிவினால் புத்தி வருகிறது. இன்னும் சிலருக்குப் பட்டால்தான் புத்தி வருகிறது."

"உண்மைதான் மகாராணீ! தவறு யார் மேலிருந்தாலும் இனி அந்தத் தவறுகள் நேர வேண்டாமென்று நினைக்கிறேன். இதோ இங்கு நம்மிடையே இருக்கும் வீரத்தளபதி நரசப்பய்யாவின் தலைமையில் உடனே மைசூர் மன்னனுக்குப் பாடம் கற்பிக்க நமது படைகள் இணைந்து புறப்படட்டும். நமது ஒற்றுமை அவனுக்குப் புரியட்டும்."

"நம்மிலிருந்து வெகு தொலைவிலிருக்கும் அந்நியனுக்குப் புரிவதற்கு முன் முதலில் நமது ஒற்றுமை நமக்கே சரியாகப் புரியவேண்டும். நட்புக்கு அது அவசியம். நமக்கே புரியாத ஒற்றுமைகளை நாம் பிறருக்குப் புரிய வைக்கமுடியாது."

இராயசம் இப்படிக் கூறியது தன்னையும் தன் நாட்டையும் குத்திக் காட்டுவது போலிருந்தாலும், காரியம் கெட்டுப் போகக்கூடாதென்ற கருத்தில் அதை எதிர்த்துப் பேசாமல் பொறுத்துக் கொண்டான் பாலோஜி.

அதே தொனியில் மறுமொழியும் கூறினான்; "ஒற்றுமையை முதலில் நாமே புரிந்து அங்கீகரித்துக் கொண்டதற்கு அடையாளமாக இன்று முதல் நம்மிரு நாடுகளும் ஒருவர் எல்லையில் இன்னொருவர் அத்துமீறுவதில்லை, ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டும் என்பதை இருவருமே ஏற்போம்."

"இந்த வார்த்தைகளை நம்பிக் காவிரி நீர்ப் பிரச்சினையில் நாம் நமது பொது எதிரியைச் சந்திக்கிறோம். தஞ்சைப் படைகளை உடனே திரட்டித் திரிசிரபுரத்துக்கு அனுப்பி வையுங்கள்" என்றாள் ராணி மங்கம்மாள். திரிசிரபுரத்துக்கு அந்தப் படைகள் வந்ததும் அங்குள்ள படைகளையும் சேர்த்துக் கொண்டு தளபதி நரசப்பய்யாவை மைசூருக்குப் புறப்படச் செய்யலாம் என்பது ராணியின் எண்ணமாயிருந்தது.

பாலோஜிக்கு இதைக்கேட்டு உச்சிகுளிர்ந்து போயிற்று. நேரே தஞ்சைக்குப் புறப்பட்டுச் சென்று தன்னால்தான் ராணி மங்கம்மாளுடன் இந்தச் சமாதான ஏற்பாடு சாத்தியமாயிற்று என்பதை மன்னன் ஷாஜியிடம் விளக்கிக் கூறி அவனது நல்லபிமானத்தை மீண்டும் பெறலாம் என்று எண்ணினான் அவன்.

நரசப்பய்யா தஞ்சையை வளைத்துக் கொள்ளையடித்த பின், தன் எதிரிகளின் தூண்டுதலால் மன்னன் ஷாஜி தன்னைத் தண்டிக்க விரும்பிச் சீற்றம் அடைந்ததை மாற்ற இதுவே தக்க தருணம் என்பதை உணர்ந்திருந்தான் பாலோஜி. ஷாஜியின் நிலை அவனுக்கு நன்கு புரிந்திருந்தது.

தஞ்சை சென்று மன்னன் ஷாஜியைச் சந்தித்து, மங்கம்மாளுடன் சமாதானம் ஏற்பட்டதைத் தெரிவித்துக் காவிரி நீர் தடுக்கப்பட்டதை எதிர்த்து மைசூர் மன்னன் சிக்க தேவராயனைக் கண்டித்து திரிசிரபுரம் படைகளும், தஞ்சைப் படைகளும் சேர்ந்து போரிட ஏற்பாடாகியிருப்பதையும் விளக்கிச் சொன்னான் பாலோஜி. சிக்க தேவராயன் காவிரி நீரைத் தடுத்ததால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தவன் தஞ்சை மன்னன் ஷாஜிதான். ஆகவே ஷாஜி இந்த ஏற்பாட்டைக் கேட்டதும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

இந்த சமாதான ஏற்பாட்டைக் கேட்டதும் பாலோஜியின் மேல் வேறு காரணங்களுக்காக ஏற்கெனவே அவனுக்கு ஏற்பட்டிருந்த சீற்றமெல்லாம் பஞ்சாய் பறந்துவிட்டது. பாலோஜியின் ராஜதந்திரத்தை மெச்சிப் புகழ்ந்தான் அவன்.

"நான் மட்டும் தனியே மைசூரின் மேல் படையெடுத்து அவனை வழிக்குக் கொண்டு வருவதென்பது நடவாத காரியம். அவ்வளவு வலிமையும் படை பலமும் என்னிடம் இல்லை. இந்த இக்கட்டான சமயத்தில் தஞ்சை நாட்டைக் காப்பாற்ற ராணி மங்கம்மாளோடு சமாதான உடன்பாடு செய்த உன் சாதுரியத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும் அப்பா! முன்பு உன்னைப் பற்றி நான் தவறாக நினைத்திருந்ததற்காக இப்போது நீ என்னை மன்னித்து விடவேண்டும்" என்று மனமுருகிப் பாலோஜியை வேண்டினான் ஷாஜி.

உடன் தஞ்சைப் படைகள் திரிசிரபுரத்துக்கு விரைந்தன. அங்கு ஏற்கனவே மைசூருக்குப் புறப்பட ஆயத்தமாக இருந்த ஒரு பெரும் படையுடன் தளபதி நரசப்பய்யா காத்திருந்தார்.

சோழ நாட்டின் உழவர் வாழ்வுக்கு உயிரோட்டமாயிருந்த காவிரி நீர்ப்பெருக்கு வறண்டதால் விளைந்த சீற்றம் அந்தப் படைவீரர்களின் வெப்பம் கலந்த மூச்சுக்காற்றில் மேலும் சூடேற்றியிருந்தது. எப்படியும் மைசூரின் மேல் படையெடுத்துக் காவிரி நீரைத் தடுக்கும் அணையை உடைத்தே ஆகவேண்டும் என்ற வேகத்தோடு படைகள் இருந்தன. தஞ்சை நாட்டுக்கும், மதுரைப் பெரு நாட்டுக்கும் ஒற்றுமை ஊற்றுச் சுரப்பதற்குக் காவிரி வறண்டு போக வேண்டியிருந்தது.

காவிரி வறண்டிருக்காவிட்டால் அந்த ஒற்றுமையே ஏற்பட்டிராது. அந்த அசாத்தியமான் ஒற்றுமையைக் காவிரியின் வறட்சிதான் அவர்களிடையே ஏற்படுத்தியிருந்ததென்று சொல்ல வேண்டும்.

தஞ்சைப் படைகளும், திரிசிரபுரம் படைகளும் மைசூரை நோக்கிப் பாயத் துணிந்து நின்றன. படைகளின் தளபதி நரசப்பய்யா மைசூரை வெல்லும் மன உறுதியோடு நிமிர்ந்து நின்றார்.

ஆனால் முற்றிலும் யாரும் எதிர்பாராத அதிசயமாக அந்தச் சமயத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி அப்படையெடுப்புக்கே அப்போது அவசியம் இல்லாமல் போகும்படிச் செய்துவிட்டது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
23. சேதுபதியின் மூலபலம்

மேற்கே மலைப்பகுதிகளில் இடையறாது அடைமழை பெய்ததால் நீர்ப்பெருக்கு அதிகமாகி சிக்க தேவராயன் காவிரியின் குறுக்கே எடுத்திருந்த அணை தானே நலிந்து நகர்ந்து போய்விட்டது. அப்போதிருந்த பயங்கரமான வெள்ளப் பெருக்கில் சிக்க தேவராயன் மறுபடி காவிரியை வழிமறித்து நிறுத்தலாம் என்று நினைக்கக்கூட முடியவில்லை. காவிரி மீண்டும் தன் இஷ்டப்படி ஓடினாள்.​

திரிசிரபுரம் தஞ்சைப் பகுதிகளில் காவிரியில் வெள்ளம் இருகரையும் நிமிர ஓடியது. வறட்சி தவிர்ந்தது. உழவர்களின் துயரம் ஒழிந்தது. இதனால் மைசூரின் மேல் படை எடுப்பது என்ற திட்டம் கைவிடப்பட்டது. ஆனாலும் காவிரி நீர்ப் பிரச்சினை காரணமாகத் திரிசிரபுரத்துக்கும், தஞ்சைக்கும் ஏற்பட்ட ஒற்றுமை மட்டும் தொடர்ந்து நீடித்தது. அந்த நட்பு வேறொரு படையெடுப்புக்குப் பயன்பட்டது. வேறொரு படையெடுப்புக்கு அவசியமும் ஏற்பட்டது.

இங்கே ராணி மங்கம்மாள் திரிசிரபுரத்திலிருந்து கொண்டு தஞ்சையிலும், மைசூரிலும் கவனம் செலுத்தி வந்த சமயத்தில் கிழவன் சேதுபதி பெரும்படையோடு படையெடுத்துச் சென்று மதுரையையும் சுற்றுப்புற நகரங்களையும் கைப்பற்றிக் கொண்டிருந்தார். இப்படி நடக்கும் என்று ராணி மங்கம்மாள் முற்றிலும் எதிர் பார்த்திருக்கவில்லை. சேதுபதி தந்திரமாக மதுரையைக் கைப்பற்றியிருந்தார்.

ஏற்கெனவே மதுரைப் பெருநாட்டுக்குப் பணிந்து திறை செலுத்த மறுத்ததோடு மேலே எதுவும் செய்யாமல் இருந்து விடுவார் என்றுதான் சேதுபதியைப் பற்றி ராணி மங்கம்மாள் நினைத்திருந்தாள். புதிதாக விரோதங்கள் எதையும் வளர்க்கமாட்டார் என்று அவள் எண்ணியிருந்ததற்கு மாறாக அவர் மதுரை நகரையும், சுற்றுப்புறங்களையும் மறவர் படையோடு வந்து ஆக்கிரமித்தது அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருந்தது.

காவிரி நீர்ப்பிரச்சினையை ஒட்டி நட்பு ஏற்படுவதற்கு முன்னர் சேதுபதியே ஒருமுறை மங்கம்மாளுக்கு எதிரணியில் தஞ்சை மன்னர் ஷாஜியோடு இணைந்து மங்கம்மாளுக்குத் தொல்லை கொடுத்திருக்கிறார். இப்போது அதே சேதுபதியை எதிர்த்து ஷாஜியைத் தன் அணியில் திரட்ட வேண்டிய கட்டாயமும் நிர்ப்பந்தமும் மங்கம்மாளுக்கு ஏற்பட்டன.

இதற்கு முன்னால் ஒருமுறை சேதுபதி மதுரை நகரைக் கைப்பற்றி ஆள முயன்ற போது ஷாஜியின் துணையின்றியே தளவாய் நரசப்பய்யா மதுரைக்குப் படை எடுத்துச் சென்று தனியே வென்றிருக்கிறார். இப்போது தஞ்சைப் படைகளும் உதவிக்குக் கிடைக்கிற காரணத்தால் தளவாய் நரசப்பய்யா சேதுபதியை ஓட ஓட விரட்டிவிடலாம் என்றே எண்ணினார்.

முன்பு தன் மகன் ரங்ககிருஷ்ணன் சேதுபதியை அடக்கி வெற்றி கொள்ள முடியாமல் திரும்பியதிலிருந்து தொடர்ந்து அவர் அடங்க மறுத்து வந்திருக்கிறார் என்பதை நினைவு கூர்ந்த ராணி மங்கம்மாள் மதுரையைக் கைப்பற்றிய நிகழ்ச்சியை அவரது அடங்காமையின் அதிக எல்லையாகக் கருதினாள். திமிர் நிறைந்த காரியமாக எண்ணினாள்.

பேரன் விஜயரங்கன் வளர்ந்து பெரியவனாகிப் பொறுப்பை ஏற்கும் நாள்வரை நாட்டின் எல்லைகள் பறிபோகாமல் கட்டிக் காக்க வேண்டிய அவசியம் அவளுக்கு இருந்தது. விஜயரங்கன் அவனுடைய தந்தை ரங்ககிருஷ்ணனைப் போல் இளம் பருவத்திலேயே அரசியல் பொறுப்புகளை ஏற்கக்கூடிய பக்குவமுள்ளவனாக இல்லை. சின்னஞ்சிறு வயதில் அவனை நம்பி முடிசூட்டுவது அவனையும் நாட்டையும் அபாயத்தில் கொண்டு போய் விட்டுவிடக்கூடும் என்பது ராணி மங்கம்மாளுக்கே தெளிவாகப் புரிந்திருந்தது. விளையாட்டுப் பிள்ளையாகவும் விடலையாகவும் அவன் இருந்தான்.

அதனால் அரசியல் காரியங்களில் விஜயரங்கனை அவள் சம்பந்தப்படுத்தவேயில்லை. சேதுபதி மதுரை நகரையும் சுற்றுப் புறங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டு ஆளும் தகவல் தெரிந்ததும் இராயசம் முதலியவர்களோடு மந்திராலோசனை செய்தபின் தளவாய் நரசப்பய்யாவிடம் தான் அவள் மனம் திறந்து பேசினாள்.

"உங்களுக்கு இது பெரிய காரியமில்லை! இதே கிழவன் சேதுபதியை முன்பு மதுரையிலிருந்து மானாமதுரை வரை ஓட ஓட விரட்டியிருக்கிறீர்கள் நீங்கள். அந்த நம்பிக்கையில் இந்தப் பொறுப்பை இப்போது உங்களிடம் மீண்டும் ஒப்படைக்கிறேன்..."

"ஒருமுறை நம்மிடம் தோற்றிருப்பதால் சேதுபதியும் இப்போது அத்தனை அலட்சியமாக இருக்க மாட்டார் முன்னை விட படைபலத்தைப் பெருக்கியிருப்பார்! ஆனாலும் கவலை வேண்டாம் மகாராணீ! மதுரையை சேதுபதியிடமிருந்து மீட்டுவிட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது!."

"இந்தச் சமயத்தில் சேதுபதியை அடக்க வேண்டிய அரசியல் அவசியம் உண்டு! போனால் போகிறதென்று விட்டால் அவர் இதோடு நிற்க மாட்டார். நமது ஆட்சிக்கு உட்பட்ட வேறு பிரதேசங்களையும் கைப்பற்றத் துணிவார். பிறருடைய செருக்கைவிடத் தமது செருக்கு ஒருபடி அதிகம் என்று நிரூபிப்பதில் எப்போதுமே அவருக்கு ஆவல் உண்டு. 'இராமபிரானுக்கு உதவிய குகனின் வம்சத்தினர் நாங்கள்! பிறரைச் சென்று தரிசிப்பவர்களில்லை. பிறரால் தரிசித்து வணங்கப்பட வேண்டியவர்கள்' என்று என்னைச் சந்திக்கும் போதெல்லாம் குத்தலாகவும் ஆணவத்தோடும் என்னிடம் அவர் சொல்லியிருக்கிறார். இப்போது அவருக்கு நாம் பாடம் புகட்ட வேண்டிய காலம் வந்துவிட்டது."

"உங்கள் விருப்பத்தைக் கட்டாயமாக நிறைவேற்ற முயல்வேன் மகாராணீ!" என்ற மங்கம்மாளிடம் உறுதியளித்து விட்டு காவிரி நீர்ப் பிரச்சினைக்காக உதவிபுரிய வந்திருந்த தஞ்சைப் படைவீரர்களையும் சேர்த்துக் கொண்டு படையெடுப்பைத் தொடங்கினார் தளவாய் நரசப்பய்யா. பெரும்படை மதுரையை நோக்கி விரைந்தது. கிழவன் சேதுபதி இந்தப் படையெடுப்பை எதிர்பார்த்து ஆயத்தமாக இருந்தார். இவருடைய மறவர் சீமைப் படைகள் முன்னேற்பாட்டுடனும், கட்டுப்பாடாகவும் இருந்தன. விரைந்து சென்று குறிப்பிட்ட குறுகிய காலத்தில் கொள்ளையடித்து முடித்துக் கொண்டு திரும்பிவிடுகிறாற் போன்ற ஒரு சுறுசுறுப்பு மறவர் சீமைப் படைகளிடம் இருந்தன. முன்னைவிட எண்ணிக்கையில் அதிகமான மறவர் சீமைப் படையை ஆயத்தமாக வைத்திருந்தார் அவர்.

"ஒருவேளை திரிசிரபுரத்திலிருந்த ராணி மங்கம்மாளின் படை மதுரையை நோக்கி வருமானால்" என்று அதை முன் ஏற்பாடாக எதிர்பார்த்து வருகிற படையை எங்கெங்கே எதிர்கொண்டு எப்படி எப்படித் தாக்குவது என்றெல்லாம் தீர்மானமாகத் திட்டமிட்டு வைத்திருந்தார் சேதுபதி. இராஜதந்திரத்திலும் உபாயங்களிலும் எதிரிகளை எப்படி எப்படி எல்லாம் மடக்கி அழிக்கலாம் என்ற சாதுரியத்திலும் தேர்ந்தவரான கிழவன் சேதுபதி தீர்க்க தரிசனத்தோடு எல்லாத் தற்காப்பு ஏற்பாடுகளையும் செய்து வைத்துக் கொண்டிருப்பதை நரசப்பய்யா எதிர்பார்க்கவில்லை.

தான் முன்பு ஒருமுறை வென்றது போல் இம்முறையும் கிழவன் சேதுபதியைச் சுலபமாக வென்று வெற்றிவாகை சூடிவிடலாம் என்ற நம்பிக்கையோடு திரிசிரபுரத்திலிருந்து மிகவும் அலட்சியமான எண்ணத்தோடு படைகளோடு புறப்பட்டிருந்தார் நரசப்பய்யா.

சேதுபதியின் திட்டமும் ஏற்பாடுகளும் வேறுவிதமாக இருந்தன. நரசப்பய்யாவின் படைகள் மதுரையை அடைவதற்கு முன்பே களைத்து சோர்ந்து போய் விடும்படி நடுவழிகளிலேயே அவர்களை மறித்துத் தாக்குவதற்கான மறவர் சீமைப் படைகளை எதிர்பார்க்கவோ அனுமானிக்கவோ இயலாத நரசப்பய்யா படைகளோடு முன்னேறிக் கொண்டிருந்தார். நரசப்பய்யாவின் அலட்சியப் போக்கு ஆபத்தாக முடியுமென்று யாருக்குமே முதலில் தெரிந்திருக்கவில்லை.

பேரன் விஜயரங்கனுக்கு ஒரு குறையுமில்லாத முழுப்பேரரசை அப்படியே கட்டிக்காத்து அளித்து முடிசூட்ட வேண்டுமென்ற ஆசையில் ராணி மங்கம்மாளுக்கு தளவாய் நரசப்பய்யாவைப் படைகளுடன் மதுரைக்கு அனுப்பிவிட்டுக் காத்திருந்தாள்.

படைகள் மதுரை எல்லையை அடையுமுன்னே குழப்பமான செய்திகள் ஒவ்வொன்றாக வந்தன. ராணி மங்கம்மாளின் நம்பிக்கை தளர்ந்தது. மறவர் சீமையைக் கடந்து மதுரைப் பகுதிக்குள் நுழைவதற்கு முன்னதாகவே மங்கம்மாளின் படைத்தலைவர் நரசப்பய்யா கொலையுண்டு இறந்து போனார்.

தளபதியை இழந்த படைகள் அதிர்ச்சியில் சிதறிப் பிரிந்தன. படைகளைப் பகுதி பகுதியாகப் பிரித்துத் திடீர் திடீரென்று மறைந்திருந்து தாக்கினர் மறவர் சீமை வீரர்கள். படைகள் புறமுதுகிட்டன. சேதுபதியை அழிக்க முடியவில்லை. தஞ்சைப் படைகளும் அறந்தாங்கி வழியாகத் திரும்பி ஓட்டமெடுத்தன.

கிழவன் சேதுபதியிடம் தோற்ற இந்தத் தோல்வி ராணி மங்கம்மாளுக்குப் பேரிடி ஆயிற்று. பல ஆண்டுகள் மதுரைச் சீமையைப் பற்றி நினைப்பதுகூடக் கெட்டகனவாக இருந்தது. கிழவன் சேதுபதி என்ற பெயரே சிம்மசொப்பனமாகிவிட்டது. அவரை அவளால் அசைக்க முடியவில்லை. எவ்வளவோ முயன்றும் சேதுபதி மடங்காமல் நிமிர்ந்து நின்று தன்னிச்சையாக ஆட்சிநடத்த முற்பட்டுவிட்டார்.

சில ஆண்டுகளில் மறவர் சீமைப் பகுதிகளிலும், இராமநாதபுரத்திலும் ஒரு கடும் வறட்சியும் பஞ்சமும் ஏற்பட்டன. அதே நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு ராணி மங்கம்மாளின் ஒத்துழைப்போடு தஞ்சை மன்னன் ஷாஜி மறவர் சீமையின் மேல் படையெடுத்தான்.

ராணி மங்கம்மாள் தான் நேரடியாக ஈடுபடாவிட்டாலும் ஷாஜியைக் கொண்டு சேதுபதியை இம்முறை ஒடுக்கிவிடும் நோக்குடன் அவனுக்கு எல்லா உதவிகளையும் மறைவாகச் செய்திருந்தாள்.

ஷாஜியின் படையெடுப்பு மார்க்கம் இம்முறை மாற்றப்பட்டிருந்தது. தஞ்சையிலிருந்து படைகள் அறந்தாங்கி வழியாக நாட்டிற்குள் நுழைந்தன.

சோற்றுப் பஞ்சமும் தண்ணீர்ப் பஞ்சமும் மறவர் சீமை வீரர்களை நலியச் செய்திருக்கும் என்று ஷாஜியும் மங்கம்மாளும் போட்டிருந்த கணக்குத் தப்பாகிவிட்டது.

கடுமையான பஞ்சத்தினால் பீடிக்கப்பட்டிருந்த போதிலும் மறவர் சீமை வீரர்கள் அடிபட்ட புலிபோல் சீறியெழுந்தனர். வயிற்றுப் பசியை விட நாட்டைக் காக்கும் தன்மானம் பெரிதெனப் போரில் இறங்கினர் மறவர்கள். அந்தச் சிரமதசையிலும் சேதுபதியின் கட்டளையைத் தெய்வ வாக்காக மதித்து அதற்குக் கீழ்ப்பணிந்து போரிட்டனர். பஞ்சமும், பசியும் அவர்களது வீரத்தையும் விசுவாசத்தையும் ஒரு சிறிதும் பாதிக்கவில்லை. பசியைவிட நாட்டைக் காக்கும் உணர்வு அவர்களிடம் பெரிதாக இருந்தது. அதன் விளைவாகத் தஞ்சை அரசன் ஷாஜியின் முயற்சி பலிக்கவில்லை. தஞ்சைப் படைகளையும், ஷாஜியையும் ஓட ஓட விரட்டினார்கள் மறவர் சீமை வீரர்கள். தஞ்சைப் படைகளும் ஷாஜியும் அறந்தாங்கி வரை பின்வாங்கி ஓட நேரிட்டது. சேதுபதி அறந்தாங்கியை வென்று அறந்தாங்கிக் கோட்டையைக் கைப்பற்றிக் கொண்டு விட்டார்.

தனக்கு ஓயாத தொல்லை கொடுத்து வந்த பல எதிரிகளை வெல்ல முடிந்தாலும் கிழவன் சேதுபதி என்ற மூத்த சிங்கத்திடம் மட்டும் ராணி மங்கம்மாளின் முயற்சிகள் பலிக்கவில்லை. சேதுபதி அஜாதசத்ருவாக இருந்தார். ராஜ தந்திரத்திலும் சரி, வீரத்திலும் சரி, போர் முறைகளிலும் சரி, அவரை வெல்வது மிகவும் அரிதாக இருந்தது.

அவருடைய சுட்டுவிரல் எந்தத் திசையில் எப்படி அசைகிறதோ அப்படி நடந்து கொள்ள மறவர் நாடு முழுதும் ஆயத்தமாக இருந்தது. மறவர் நாட்டிலிருந்த இந்தக் கட்டுப்பாடும் விசுவாசமும் சேதுபதியின் வலிமைகளாக அமைந்திருந்தன. அவரை யாரும் எதுவும் செய்து வீழ்த்த முடியாத மூலபலம் மறவர் சீமையில் அவருக்கிருந்த செல்வாக்கில் குவிந்திருந்தது.

கிழவன் சேதுபதி விஷயத்தில், இனி எதுவும் நம்மால் முடியாது என்ற முடிவுக்கு வந்தாள் ராணி மங்கம்மாள். தோல்வியை அவள் ஒப்புக் கொள்ள வேண்டியதாயிற்று. கிழவன் சேதுபதியை தானோ மற்றவர்களோ வெல்ல முடியாது என்பதற்காகக் கவலைப்பட்டதைவிட வேறொன்றிற்காக அவள் அதிகம் கவலைப்பட வேண்டியிருந்தது. சாம்ராஜ்யத்தை விஸ்தரிக்க முடியவில்லையே என்று கவலைப்படாவிட்டாலும் இருப்பதைப் படிப்படியாக இழந்துவிடக் கூடாதே என்ற கவலை முதன்முதலாக அவள் மனத்தில் இப்பொழுது மேலெழுந்து வாட்டத் தொடங்கியது.

பேரன் விஜயரங்கனின் வளர்ச்சியில் எந்தத் தனித் திறமையையும் காணமுடியாமல் இருந்தது வேறு அவள் மனவாட்டத்துக்குக் காரணமாயிற்று.

இராயசம் அச்சையாவே தளவாயானார். மறவர் நாடு தனி நாடாகச் சுயாதீனம் பெற்று நிமிர்ந்து நிற்பதை அவர்கள் சிரமத்தோடு ஜீரணித்துக் கொண்டு வாளா இருக்க வேண்டியதாயிற்று.

வயதாக வயதாகக் கிழவன் சேதுபதியின் வீரமும் பிடிவாதமும் அதிகமாயிற்றேயன்றிக் குறையவில்லை. நினைத்ததை முடிக்க முயலும்போது சேதுபதியின் விழிகளில் வீரக்கனல் தெறித்தது.

இந்தச் சமயத்தில் கிழவன் சேதுபதியின் பங்காளி ஒருவரைப் பிரிட்டோ பாதிரியார் மதம் மாற்றிக் கிறிஸ்துவராக்கியதால் மறவர் சீமையில் பெரும் புயல் வீசியது. சேதுபதி சீறி எழுந்தார். அதன் விளைவுகள் மிகவும் பயங்கரமாக இருந்தன.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
24. பிரிட்டோ பாதிரியார் கொலையும் பின் விளைவுகளும்

கிழவன் சேதுபதியைப் போலவே அரசுரிமை வாரிசுகளில் ஒருவராக இருந்த தடியத்தேவர் என்பவரை ஜான்டி பிரிட்டோ பாதிரியார் முயன்று கிறிஸ்தவராக மதம் மாற்றி விட்டார்.

போர்ச்சுகலுக்குப் போய்விட்டுத் திரும்பி வந்தவுடன் அவர் செய்த மதமாற்றங்களில் இது மிகவும் பெரியதாகவும், சர்ச்சையைக் கிளப்பக் கூடியதாகவும் அமைந்தது. இம்முறை பிரிட்டோ பாதிரியாரும் தாம் இதற்கு முன்பு செய்தது போல் தயக்கமோ பயமோ இல்லாமல் தமது உயிரையே இழந்தாலும் பரவாயில்லை என்கிற அளவு துணிச்சலுடன் மதமாற்ற முயற்சிகளில் தீவிரமாக இறங்கினார். இராமநாதபுரத்து மறவர் சீமையைச் சேர்ந்த இந்துக்களின் எதிர்ப்பைக்கூட அவர் பொருட்படுத்தவில்லை.

கிழவன் சேதுபதிக்குப் பிறகு அல்லது அவர் உயிருடன் இருக்கும்போதே ஆட்சி தடியத்தேவருக்குக் கிடைக்கும்படிச் செய்யப்படும் என்ற ஆசை வார்த்தைகளும் கிழவன் சேதுபதி மேலிருந்த வெறுப்புமே தடியத் தேவர் கிறிஸ்தவத்தை விரும்பி ஏற்கச் செய்திருந்தன.

இராமநாதபுரம் மன்னர்களுக்குப் பல மனைவியர் இருந்ததினால் அரசுரிமை வாரிசுகள் என்று சிலரே தகுதி பெற்றனர். அந்தச் சிலரில் கிழவன் சேதுபதி பட்டம் ஏற்றிருக்காவிட்டால் தடியத்தேவர் தான் பட்ட மேற்றிருப்பார் என்கிற அளவிற்கு நெருக்கமாக இருந்தும் அவரது வாய்ப்புத் தவறிப் போயிருந்தது. தடியத்தேவர் விரக்தியோடிருந்தார். அத்தகையவரைத் தேடிப் பிடித்துக் கிறிஸ்தவராக்கிய ஜான்டி பிரிட்டோவின் செயல்கள் கிழவன் சேதுபதிக்குப் பலத்த சந்தேகங்களை உண்டாக்கின. ஆட்சியை அபகரிப்பதற்கான சதியோ என்றுகூட இதனைப் பற்றிக் கிழவன் சேதுபதி நினைத்தார்.

இந்தச் சந்தேகத்துக்குக் காரணம் இல்லாது போகவில்லை. கிழவன் சேதுபதி மறவர் சீமையின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்காவிட்டால் தடியத்தேவர் தான் அதை ஏற்றிருப்பார் என்கிற அளவு நெருக்கமான வாரிசாக இருந்தார் அவர். தடியத்தேவரை மதம் மாற்றியது கிழவன் சேதுபதியைச் சீறி எழ்ச் செய்தது. இதற்கு மற்றொரு காரணமும் இருந்தது.

தடியத்தேவர் கிறிஸ்தவ மதத்துக்கு மாறும்முன் தமக்கிருந்த ஐந்து மனைவிமார்களில் நான்கு பேரை விலக்கிவிட்டு ஒரே ஒருத்தியை மட்டும் மனைவியாக ஏற்க வேண்டியதாயிற்று. மற்ற நால்வரையும் தள்ளி வைப்பது தவிர்க்க முடியாது போயிற்று. அப்படி அவர் நீக்கி வைத்த நான்கு மனைவிமார்களில் ஒருத்தி கிழவன் சேதுபதியின் சகோதரி மகளாக இருந்தாள். மணவாழ்வில் சுகங்களை அதிகம் அடையாத இளம் பெண்ணாக இருந்த அவள் தன் கணவன் தடியத்தேவரிடம் போய்த் 'தன்னைத் தொடர்ந்து மனைவியாக ஏற்றுக்கொள்ளும்படி' கெஞ்சிப் பார்த்தாள். தடியத்தேவர் பிடிவாதமாக அதற்கு மறுத்துவிட்டார்.

கணவன் மறுத்தவுடன் நேரே தன்னுடைய தாய் மாமனான கிழவன் சேதுபதியிடம் போய் நடந்த விவரங்களைத் தெரிவித்தாள் அந்தப் பெண். கூடப் பிறந்தவளின் மகள் தன்னிடம் வந்து கதறியழுது கண்ணீர் சிந்தியதைக் கண்டு மனம் கொதித்தார் சேதுபதி.

தடியத்தேவர் மேல் எழுந்த ஆத்திரம் அவர் மாறிய மதத்தின் மேலும் அவரை அப்படி மாற்றியவர்கள் மேலும் பாய்ந்தது. தடியத் தேவரின் மத மாற்றத்தைப் பெரிய அரசியல் சதியாகக் கருதினார் சேதுபதி. தடியத் தேவரைக் கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றியதன் மூலம் நமது அரசையும், ஆட்சியையும் கவிழ்ப்பதற்கு ஏற்பாடு நடப்பதாக சேதுபதியும் அவருடை நெருங்கிய நண்பர்களும் நினைத்தார்கள். பெருவாரியான மறவர் சீமை வீரர்களும் அப்படியே எண்ணினார்கள். அதன் விளைவாக மறவர் சீமையில் பெரும் புயல் எழ்ந்தது. சேதுபதியின் கட்டளைப்படி மறவர் நாடு முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்கள் இடித்துத் தள்ளப்பட்டன. பாதிரியார்கள் பலத்த கொடுமைக்கு ஆளாயினர்.

"என் சகோதரி மகளை வாழாவெட்டியாக்கி என் ஆட்சியையும் அழிப்பதற்கு ஏற்பாடு நடக்கிறது! இதை நான் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது" என்று குமுறி எழுந்த சேதுபதி பிரிட்டோ பாதிரியாரையும் ஏனைய பாதிரிமார்களையும் சிறைச்சாலையில் பிடித்து அடைக்கும்படி உத்தரவிட்டார்.

வெளியூரில் சிறைப்படிக்கப்பட்ட பிரிட்டோ பாதிரியார் இராமநாதபுரம் கொண்டு வரப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

பிரிட்டோ பாதிரியார் சிறைவைக்கப்பட்ட சமயம் தடியத்தேவரும் இராமநாதபுரத்தில் தான் இருந்தார். பாதிரியாரை எதுவும் செய்தால் தடியத்தேவர் கலவரம் விளைவிக்கக்கூடும் என்று தயங்கினார் கிழவன் சேதுபதி. தடியத்தேவர் இராமநாதபுரத்திலேயே தொடர்ந்து தங்கியிருந்தது பிரிட்டோ பாதிரியார் விஷயத்தில் ஒரு முடிவெடுக்க முடியாமல் சேதுபதியைத் தயங்க வைத்தது.

இராமநாதபுரத்தில் வெடித்த இந்தக் கிறிஸ்தவ எதிர்ப்பு உணர்ச்சி மெல்ல மெல்ல தஞ்சைக்கும் பரவியது. தஞ்சை மன்னன் உடையார் பாளையம் குறுநில மன்னனுக்கும், திரிசிரபுரத்திலிருந்த ராணி மங்கம்மாளுக்கும் அவரவர்கள் நாட்டிலிருந்த கிறிஸ்தவர்களை உடனே வெளியேற்றுமாறு தன் கைப்பட எழுதியனுப்பினான். வேறு காரணங்களுக்காகத் தஞ்சை நாட்டுடன் ராஜதந்திர நட்பு வைத்துக் கொண்டிருந்தாலும் அந்நாட்டு மன்னனின் கிறிஸ்தவ எதிர்ப்புச் சம்பந்தமான யோசனையை ராணி மங்கம்மாள் ஏற்கவில்லை. சேதுபதியைப் போலவோ, தஞ்சை மன்னனைப் போலவோ நடந்து கொள்ளாமல் நேர்மாறாகத் தன் ஆட்சி எல்லைக்குட்பட்ட நிலப்பரப்பில் கிறிஸ்தவர்கள் எப்போதும் போல் அமைதியாகவும், நலமாகவும் வாழுமாறு பார்த்துக் கொண்டாள் அவள். எல்லா மக்களிடமும் காட்டிய அன்பையும் ஆதரவையும், பரிவையும், கிறிஸ்தவர்கள் மேலும் காட்டினாள். அவர்கள் பாதுகாப்பாக வாழுமாறு பார்த்துக் கொண்டாள்.

"கிறிஸ்தவர்களை நாட்டை விட்டு வெளியேற்றாவிட்டால் இந்து சமயத்துக்கும், இந்துக் கோயிலுக்கும், இந்துக்களால் ஆளப்படும் அரசாட்சிக்கும் உடனடியாக ஆபத்து ஏற்படும்" என்று தஞ்சை மன்னன் ராணி மங்கம்மாளுக்கு மிகவும் வற்புறுத்தி எழுதியிருந்தான்.

"இறைச்சி உண்பவர்கள் எல்லாரும் அருகில் வாழ்ந்தாலே அரிசிச் சாதம் உண்பவர்கள் அனைவருக்கும் உடனடியாக ஆபத்து என்பது போலிருக்கிறது உங்கள் கூற்று. அதை நான் ஏற்பதில்லை. காய்கறி, அரிசிச் சோறு உண்பவர்களையும், இறைச்சி, மீன் உண்பவர்களையும் எப்படி ஒரே ஆட்சியின் கீழ் சம உரிமைகளோடு மக்களாக வாழ விடுகிறோமோ அப்படித்தான் இந்தப் பிரச்சனையையும் நான் பார்க்கிறேன். ஓர் ஆட்சியின் கீழ் வாழும் மக்களில் யார் எந்த எந்த மதநெறியை ஏற்றுக்கொண்டு அநுசரித்து வாழ விரும்பினாலும் அதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு. அதுதான் தர்மம். இதை அரசாட்சி வற்புறுத்தித் திணிக்க முடியாது என்று நினைக்கிறேன்" என்று தஞ்சை மன்னனுக்கு மிக விளக்கமாக மறுமொழி அனுப்பியிருந்தாள் ராணி மங்கம்மாள்.

சேதுபதி கிறிஸ்தவர்களை எவ்வளவுக்கு எவ்வளவு வெறுத்தாரோ அவ்வளவுக்கு அவ்வளவு ராணி மங்கம்மாள் அவர்கள் மேல் அன்பும் ஆதரவும் காட்டினாள்.

பங்காளித் தடியத்தேவருக்குத் தெரியாமலே பாம்பாற்றங்கரையில் இருந்த ஓரியூருக்குப் பிரிட்டோ பாதிரியாரை அனுப்பி அங்கு அவரைக் காவலில் வைக்க ஏற்பாடு செய்தார் கிழவன் சேதுபதி. ஓரியூர் சேதுபதியின் ஆட்சிக்கு அடங்கிய சிறு தலைக்கட்டி ஒருவரால் நிர்வாகம் செய்யப்பட்டு வந்தது. சேதுபதிக்கு மிகவும் வேண்டியவர் அந்த ஓரியூர்த் தலைக்கட்டுத் தேவர். அந்தத் தேவருக்கு எழுதியனுப்பிய அந்தரங்கக் கடிதத்தில் பாதிரியாரைக் கண்டம் துண்டமாக வெட்டிக் கொன்று விடுமாறு உத்தரவு இட்டிருந்தார் கிழவன் சேதுபதி.

ஓரியூர்த் தலைக்கட்டு பாதிரியாரைக் கொல்லத் தயங்கினார். ஆனால் அவருடைய பிரதானியாயிருந்த முருகப்பப் பிள்ளை என்பவர் துணிந்து சேதுபதியின் கட்டளைப்படி பாதிரியாரை உடனே கொன்றுவிட வேண்டும் என்றும் இல்லாவிட்டால் சேதுபதியின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்றும் தேவரை வற்புறுத்தி நிர்ப்பந்தப்படுத்தினார்.

கிழவன் சேதுபதியின் கடுங்கோபத்துக்கு ஆளாகிச் சிரமப்படுவதைவிடப் பாதிரியாரைக் கொன்று விடுவது நல்லது என்ற முடிவுக்கு வந்தார் ஓரியூர்த் தலைக்கட்டுத் தேவர்.

இம்முடிவின் விளைவாக ஜான்டி பிரிட்டோ பாதிரியார் கொல்லப்பட்டார். அவர்களுடைய உடல் சின்னாபின்னப்படுத்தப் பெற்றுக் கழுகுகளுக்கு உணவாக இடப்பட்டது.

நீண்ட நாள்களுக்கு இந்தக் கொலை இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. மறவர் சீமையில் எழுந்த புயலும் ஓயவில்லை. தொடர்ந்து கிறிஸ்தவ சமய அன்பர்களும், மதகுருமார்களும் தொல்லைக்கு ஆளானார்கள்.

பெர்னார்டு பாதிரியார் என்ற மற்றொரு குரு முப்பத்திரண்டு பற்களும் நொறுங்கி உதிருமாறு தாக்கப்பட்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பெர்னார்டு பாதிரியாரின் சீடர்கள் பிரக்ஞை மங்கித் தரையில் விழுகிற வரை சவுக்கடி பெற்றார்கள். இவற்றை எல்லாம் கேள்விப்பட்டு ராணி மங்கம்மாள் மனம் வருந்தினாள். மறவர் நாட்டிலும், தஞ்சையிலும் கிறிஸ்தவர்களும், கிறிஸ்தவ மத குருக்களும் கொடுமைப்படுத்தப்பட்டது போல் தன் ஆட்சியில் எதுவும் நடைபெற்றுவிடாமல் பொது நோக்கோடு கவனித்துக் கொண்டாள் அவள். தன் சொந்தமதமாகிய இந்து மதத்தின் மேலுள்ள பற்றை விட்டு விடாமல் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் பேருதவிகளைச் செய்து மிகவும் பரிவுடன் நடந்து கொண்டாள் அவள்.

கிழவன் சேதுபதி பிடிவாதத்தாலும், கோபத்தாலும் தொடர்ந்து சிறைவாசத்தை அநுபவித்துச் சாவை எதிர்பார்த்துக் கொண்டிருந்த மெல்லோ பாதிரியார் உயிர் பிழைத்துச் சிறையிலிருந்து விடுதலை பெறவும் மங்கம்மாள் உதவி செய்தாள். இப்போதும் இதற்கு முன்பும் இப்படிப் பல உதவிகளைச் செய்து, புகழ்பெறுவது அவளது இயல்பாக இருந்து வந்திருக்கிறது.

இதற்கு முன்பு ஒருமுறை மதுரையில் புச்சட் என்னும் பாதிரியாருக்கும் அவருக்குக் கீழே பணிபுரிந்த உபதேசியார்களுக்கும் ஏற்பட்ட சர்ச்சையைத் தளவாய் நரசப்பய்யா உயிரோடிருந்த காலத்தில் அவர் மூலம் சுமூகமாகத் தீர்த்து வைத்து நல்ல பெயரெடுத்திருந்தாள். பள்ளி வாசலுக்கும், தர்க்காக்களுக்கும், கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் நிறைய மானியங்களும், நிலங்களும் அளித்துப் பெயர் பெற்றிருந்தாள். அதே சமயத்தில் இந்துக் கோயில்களுக்கும் எண்ணற்ற அறங்களைச் செய்திருந்தாள்.

மங்கம்மாள் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களுக்கு நன்மை செய்வதைப் போலவே இந்துக்களில் ஒரு பிரிவினராகிய சௌராஷ்டிரர்களுக்கு நியாயமான உரிமைகளை வழங்கினாள். சௌராஷ்டிரர்கள் முப்புரி நூலணிந்து அந்தணர் நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கலாமா? என்பது பற்றி எழுந்த சர்ச்சைக்குத் தக்க அறிஞர்கள் மூலம் தீர்வு கண்டு நியாயம் வழங்கினாள் ராணி மங்கம்மாள். அது அவள் புகழை உயர்த்தி வளர்த்தது.

இது சம்பந்தமான சர்ச்சை எழுந்ததுமே தன் பிரதானிகளையும், காரியஸ்தர்களையும், வித்வான்களையும், ஆசாரியர்களும் மேதைகளும் நிறைந்த திருவரங்கத்திற்கு அனுப்பி அவர்களைக் கலந்தாலோசித்து அறிவுரை பெற்று வரச் செய்தாள் ராணி.

திருவரங்கத்து மகான்கள் கூறிய யோசனைப்படியே சௌராஷ்டிரர்களுக்குச் சாதகமாக இராயசம் கோடீஸ்வரய்யா மூலம் உத்தரவு பிறப்பித்திருந்தாள். சௌராஷ்டிரர்கள் மனம் மகிழ்ந்து ராணி மங்கம்மாளை வாழ்த்தினர். நன்றி செலுத்தினர்.

இவ்வளவு நன்மைகளுக்கும் நடுவே மங்கம்மாளுக்குக் கவலையளித்த செய்தி ஒன்றிருந்தது. பேரன் விஜயரங்கனின் நிலையில் எந்த வளர்ச்சியும் இல்லை. வெறும் வயதுதான் வளர்ந்ததேயன்றி அறிவு வளர்ச்சியில் அவன் பின்தங்கி இருந்தான். இளைஞனான பின்னரும்கூட அவன் அப்படியே இருந்ததைப் பற்றி அவள் கவலைப்பட்டு உருகினாள்.

சில சமயங்களில் அவளையே எதிர்த்துப் பேசவும் அவன் தயங்கவில்லை. முரட்டுத்தனமாகப் பழகினான். அவன் சிறு குழந்தையாயிருந்தபோது வண்டியூர்த் தெப்பக் குளத்தின் மைய மண்டபக் கோப்புரத்திலிருந்து தன்னைக் கீழே பிடித்துத் தலைக்குப்புறத் தள்ளுவதுபோல தான் கண்டிருந்த கெட்ட சொப்பனம் இப்போது அடிக்கடி அவளுக்கு நினைவு வந்தது.

இராயசம் பொறுப்பைக் கோடீசுவரய்யாவிடம் ஒப்படைத்து விட்டுத் தளவாய் ஆகியிருந்த அச்சையாவும் ராணி மங்கம்மாளும் அரசியல் விஷயமாகத் தனியே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது ஒரு சமயம் விஜயரங்கன் அந்தப் பக்கமாக வந்தான்.

அநுமதியின்றித் திடும் பிரவேசமாக அவன் அப்படி மந்திராலோசனை மண்டபத்துக்குள் நுழைந்ததே அவர்கள் இருவருக்கும் பிடிக்கவில்லை. குதிரை குப்புறக்கீழே தள்ளியதுமன்றிக் குழியையும் பறித்ததாம் என்பதுபோல அவன் அவர்களை கேட்ட கேள்வி எரிச்சலும் அருவருப்பும் உண்டாக்கக் கூடியதாயிருந்தது. ராணி மங்கம்மாள் தன் அருமைப் பேரன் இப்படி இந்தச் சிறிய வயதில் அப்படி ஒரு விஷத்தைத் தன்முன் கக்கமுடியும் என்று எதிர்பார்த்திராத காரணத்தால் அதிர்ச்சியடைந்தாள். அச்சையா அவன் கூற்றைக் கேட்டுக் கூச்சமும் அருவருப்பும் அடைந்தார்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
25. பாவமும் பரிகாரங்களும்

அன்றொரு நாள் அரண்மனை நந்தவனத்தின் அதிகாலை இருளில் பணிப் பெண்கள் தங்களுக்குள் ஒட்டுப் பேசியதை இன்று வெளிப்படையாகவே தனக்கும் அச்சையாவுக்கும் முன்னால் விஜயரங்கன் பேசக் கண்டாள் ராணி மங்கம்மாள்.

முதலில் பணிப்பெண்கள் மத்தியில் முளைவிட்ட ஓர் அபவாதம் இப்போது தன் பேரன் வரை பரவியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தாள் அவள். பனைமரத்தின் கீழே நின்று ஒரு கலயத்தில் பசுவின் பாலைக் குடித்தாலும் உலகம் அதை நம்பாது என்பது மெல்லப் புரிந்தது. இராயசம் அச்சையா ஆஜானுபாகுவாகவும், அழகாகவும் கம்பீரமாகவும் இருந்தது தான் காரணம் என்று தோன்றினாலும் மனம் அதை நினைத்துப் பார்க்கவே கூசியது. பேரன் விஜயரங்கன் அப்பாவி என்ற நினைப்பு மாறி அவனுக்குள்ளும் விஷம் இருப்பது புரியத் தொடங்கியது அவளுக்கு.

மிகவும் பெரிய பெரிய ராஜ தந்திரப் பிரச்சனைகளுக்குக் கூடப் பதறாமல் இருந்த ராணி மங்கம்மாள் இந்தச் சொந்த அபவாதத்துக்காகப் பதறிக் கலங்கினாள். அவள் மனம் சஞ்சலப்படத் தொடங்கியது. சொந்தப் பேரனே முளைத்து மூன்று இலைவிடாத சிறு வயதில் இப்படி அபவாதங்களையும் வதந்திகளையும் நம்பித் தன்னை எதிர்த்துக் கேட்கும்படி ஆகிவிட்டதே என்று வருந்தினாள். யாராவது அவனுடைய மனத்தை அப்படிக் கெடுத்திருப்பார்களோ? என்றுகூட எண்ணிக் கவலைப்பட்டாள்.

அப்படியே ஒருவர் தவறாகச் சொல்லிக் கொடுத்திருந்தாலும் சிறிதுகூட இங்கிதமும் நாசூக்கும் இல்லாமல் அவன் நடந்துகொண்டவிதம் அவளை ஆழமாகப் புண்படுத்திப் பாதித்திருந்தது. பேரன் விஜயரங்கன் இப்படி நடந்து கொண்டதைப் பார்த்து மதிப்பும் கௌரவமும் நிறைந்த அச்சையா தன்னைப் பற்றி என்ன எண்ணியிருப்பார் என்று நினைத்து மனம் குன்றிப் போயிருந்தாள் அவள்.

தான் எத்தனையோ பெரிய காரியங்களைச் செய்த போது தனக்கு வந்த புகழை விடச் செய்யாத தவறு ஒன்றிற்காக ஏற்படும் அபவாதம் பெரிதாக எழுவது கண்டு மனம் நலிந்தாள். தான் செய்தவற்றில் பெரிய காரியங்கள் எனத் தோன்றியவற்றை மீண்டும் அவள் நினைவு கூர்ந்தாள். பலவீனமான மனநிலையில் பழைய சாதனைகளை நினைத்து ஆறுதலடையும் மனநலிவு அப்போது அவளையும் விட்டபாடில்லை.

முன்பு கணவர் சொக்கநாத நாயக்கர் காலமாகி ரங்ககிருஷ்ணன் கைக்குழந்தையாக இருந்தபோது ஆட்சி அவள் பொறுப்பில் இருந்தது. அப்போது நிகழ்ந்த மறக்க முடியாத சம்பவம் ஒன்றை இன்று அவள் நினைத்தாள்.

வடக்கே சந்திரகிரியிலிருந்து வந்து திரிசிரபுரம் அரண்மனையில் தங்கியிருந்தவனும் மகாராணி மங்கம்மாளுக்கு இளைய சகோதரன் முறையுள்ளவனுமாகிய ஓர் அரச குடும்பத்து மனிதன் பெரிய தவறு ஒன்றைச் செய்துவிட்டான். அவன் செய்திருந்தது பழிபாவத்துக்கு அஞ்சாத படுபாதகமான செயல்.

அதற்காக மரண தண்டனையே வழங்கபட்டிருக்க வேண்டும். ஆனால் நீதிமன்றமும், நீதிவழங்கவேண்டி நீதிபதியும், குற்றவாளி ராணிக்கு உடன் பிறந்தான் முறையினன் ஆயிற்றே என்று தீர்ப்புக் கூறாமலே விட்டுவிட்டார்கள். குற்றவாளி தன் சகோதரன் முறையினன் என்பதற்காக ஏதாவது சலுகை காண்பிக்கிறார்களா என்பதை முதலில் இருந்தே ஒற்றர்கள் வைத்துக் கண்காணித்து வந்த ராணி மங்கம்மாள் துணிந்து தானே நீதி வழங்க முன் வந்தாள்.

'ராணிக்குச் சகோதரன் முறை என்பதனால்தான் குற்றவாளிக்குத் தண்டனை எதுவும் கொடுக்கவில்லை' என்று ஊரெல்லாம் வேறு பேச்சுக் கிளம்பிவிட்டது. ராணி மங்கம்மாள் தானே நீதிமன்றத்தைக் கூட்டினாள். "தங்கள் சகோதரனுக்கு எப்படி மரண தண்டனை அளிப்பது என்பதே எங்கள் தயக்கம் என்றுதான் நாங்கள் தீர்ப்புக் கூறவில்லை" என்று நியாயாதிபதிகள் அவளிடமே தயக்கத்தோடு கூறினார்கள். "வேண்டியவர்கள் வேண்டாதவர் என்றெல்லாம் பார்ப்பது நியாயத்திற்கு அழகில்லை. குற்றவாளிக்கு, அரசியாகிய நானே மரணதண்டனை விதிக்கிறேன்" என்று சிறிதும் கலங்காத குரலில் தீர்ப்பளித்தாள் ராணி மங்கம்மாள். அந்த நேர்மையைக் கண்ட அன்று நீதிபதிகள் வியந்தனர்.

அப்படி வியப்பைச் சம்பாதித்த தனது நேர்மைக்கா இன்று இப்படி ஓர் அபவாதம் என்றெண்ணும் போது அவள் கண்களில் நீர் சுரந்தது.

இன்னொரு முறை அவள் பழனி மலையிலுள்ள முருகப் பெருமாளை வணங்குவதற்குச் சென்றிருந்தாள். அடிவாரத்திலிருந்து மலைக்குச் செல்லும்போது உரிய காவலர்கள், பரிவாரம் மெய்க்காப்பாளர்கள் எல்லாரும் உடனிருந்தும்கூட ஒரு சிறிய அசம்பாவிதம் நேர்ந்துவிட்டது.

ராணி தரிசனத்துக்காக மலைமேல் ஏறிக் கொண்டிருக்கும்போது தரிசனத்தை முடித்துவிட்டுப் பக்தி பரவசச் சிலிர்ப்போடு தன்னை மறந்த இலயிப்பில், மலையிலிருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்த வாலிபன் ஒருவன் அவள்மேல் மோதிவிடுவது போல் மிக அருகே வந்துவிட்டான்.

மங்கம்மாளின் மெய்க்காப்பாளர்கள் அந்த வாலிபனைப் பிடித்துத் தண்டிக்க ஆயத்தமாகி விட்டார்கள். ராணியோ மெய்க்காப்பாளர்கள் அவ்விதம் அவனைத் தண்டித்து விடாமல் தடுத்ததுடன் மன்னித்து அனுப்பினாள்.

"இந்த இளைஞன் வேண்டுமென்று தவறு செய்யவில்லை. பக்திப் பரவசத்தில் இவன் தன்னை மறந்து கீழே இறங்கி வரும்போது எதிரே நான் வருவதைக் கவனிக்கத் தவறிவிட்டான். இறைவனாகிய முருகனுக்கு முன்னால் ஏற்றத் தாழ்வுகள் இல்லை. அனைவரும் சமமான பக்தர்களே! இவனை இவன் வழியில் போகவிடுங்கள்" என்று கூறிப் பெருந்தன்மையோடு நடந்துகொண்டாள் ராணி மங்கம்மாள்.

அன்று அந்தப் பெருந்தன்மை நாடு முழுவதும் பரவிப் புகழாக மலர்ந்ததே, அது இன்று எங்கே போயிற்று?

முன்பொரு முறை கொள்ளிடத்தில் பெரிய வெள்ளம் வந்து சில கரையோரத்துச் சிற்றூர்களும், அவற்றின் கோயில்களும் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளத்தன்று மறுநாள் இரவு இங்கே அரண்மனையில் உறங்கிக் கொண்டிருந்த ராணி மங்கம்மாளின் கனவிலே திருமால் தோன்றி, 'ராணி! நான் கொள்ளிடக்கரை மணலில் கேட்பாரற்று அநாதையாக ஒதுங்கிக் கிடக்கிறேன். என்னை வந்து காப்பாற்றுவாயாக' என்பது போல் கட்டளையிட்டார். முதலில் வெள்ளத்தில் சீரழிந்த மக்களுக்கு உணவு, உடை, உறையுள் உதவிகள் செய்ய உத்தரவுகளைப் பிறப்பித்தாள். பின்பு தன் கனவில் வந்த இடத்தை அடையாளம் கண்டு தேடிச் சென்று விக்ரகங்களை எடுத்துக் கோயில் கட்டிக் கும்பாபிஷேகம் செய்ததோடு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கரையோரத்துச் சிற்றூர்களையும் புனர் நிர்மாணம் செய்ய உடன் உத்தரவிட்டாள் ராணி மங்கம்மாள்.

அப்போது மக்கள் அவளைக் கொண்டாடி வாயார வாழ்த்தினார்களே, அந்த வாழ்த்து இப்போதும் இருக்கிறதா, இல்லை மங்கிப் போய்விட்டதா? தன் புகழும் பெருமையும் மங்குவதுபோல் அவளுக்குள் ஒரு பிரமை ஏற்பட்டது. எல்லாத் திசைகளிலும் தனக்கு எதிர்ப்பும் அபவாதமும், பெருகுவது போல் ஒரு நினைவு மனதில் மேலெழுந்தது. அவளால் அப்போது அப்படி நினைவுகள் எழுவதைத் தடுக்கவும் முடியவில்லை. பேரன் விஜயரங்கன் தன்மேல் பரிவுடன் இல்லாததோடு வெறுக்கிறான் என்பதும் புரிந்தது. அவனாகக் கெட்டுப் போனானா அல்லது அவன் மனத்தை யாராவது வலிந்து முயன்று கெடுத்தார்களா? என்பது அவளுக்குப் புரியவில்லை. அவள் மனம் அலை பாய்ந்தது. அமைதி இழந்தது. தன்னை வளர்த்து ஆளாக்கியவள் என்று பாட்டியாகிய ராணி மங்கம்மாளின் மேல் விசுவாசம் கொள்வதற்குப் பதில் ஆத்திரமும் எரிச்சலும் கொண்டிருந்தான் விஜயரங்கன். இந்த நிலையைக் கண்டு அவள் திகைத்தாள். மனம் தளர்ந்தாள்.

தான் செய்த எல்லா நல்ல செயல்களையும் புண்ணியங்களையும் நினைத்து மனம் குமுறினாள். கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் பேதமின்றி நலங்களைப் புரிந்ததையும் வேண்டியபோதெல்லாம் விரைந்து சென்று உதவியதையும் எண்ணித் தனக்கா இப்படி அபவாதங்களும் விசுவாசத் துரோகங்களும் ஏற்படுகின்றன என்று மனமுறுகி அலமந்து போனாள்.

பேரனின் போக்கும் மற்ற நிகழ்ச்சிகளும் அவளை நடைப் பிணமாக்கியிருந்தன. ஒருநாள் பகலில் உணவுக்குப் பின்னர் அந்தப்புரத்தில் அரண்மனைப் பணிப் பெண்கள் சூழத் தாம்பூலம் தரிப்பதற்கு அமர்ந்தாள் ராணி மங்கம்மாள். மனம் வேறு எதையோ பற்றி நினைத்தபடி இருந்தது. உண்ணும்போது உணவிலும் மனம் செல்லவில்லை. கடனைக் கழிப்பது போல் உண்டு முடித்திருந்தாள். தாம்பூலம் தரிக்கும்போதும் அவளுடைய கைகள் ஏதோ இயங்கிச் செயல்பட்டனவேயன்றி மனம் அதில் இல்லை. அவள் விரும்பியிருந்தால் பணிப்பெண்களே பவ்யமாக அவளுக்கு வெற்றிலை மடித்துக் கொடுத்திருப்பார்கள். ஆனால் அவள் அவர்கள் யாரையும் நாடாமல் தானே வெற்றிலை நரம்பு கிள்ளிச் சுண்ணாம்பு தடவி மடித்து உண்டு கொண்டிருந்தாள்.

திடீரென்று ஒரு வயது முதிர்ந்த பணிப்பெண் ராணி மங்கம்மாளை நோக்கி கூப்பாடு போட்டாள்.

"அம்மா! உங்களை அறியாமலே ஆகாத காரியம் பண்ணிக் கொண்டிருக்கிறீர்களே! இடக் கையால் வெற்றிலை மடித்துப் போட்டுக் கொள்கிறீர்களே? எல்லாம் தெரிந்த உங்களுக்கு இதுகூடவா மறந்துவிட்டது? கேடுகாலம் வந்தால்தான் இடக்கையால் தாம்பூலம் போட நேரிடும் என்பார்கள்."

தன் நினைவு வந்து தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை நிதானித்துப் பார்த்தபோதுதான் மங்கம்மாளுக்குப் பகீரென்றது. ஏதோ யோசனைப் போக்கில் தான் மாபெரும் தவறு செய்திருப்பது அவளுக்குப் புரிந்தது. கைத் தவறுதலாக நடந்திருந்தாலும் என்னவோ அபசகுனம் போல மனதில் உறைத்தது. அது நடக்கப் போகிற பெரிய அமங்கலம் ஒன்றின் சிறிய அமங்கல முன்னோடியாகவும் அது தோன்றியது. மனம் சஞ்சலம் அடைந்தது. கைதவறிக்கூட அமங்கலமான காரியத்தையோ பிழையான செயலையோ செய்துவிடாமல் விழிப்பாயிருக்கும் தானா இப்படி நடந்து கொண்டோம் என்றெண்ணிக் கூறினாள் அவள்.

இடக்கையால் தாம்பூலம் தரித்துக்கொள்வது மிகப்பெரிய பாவங்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. சாஸ்திர விற்பன்னர்களும், அரண்மனை புரோகிதர்களும் உடனே வரவழைக்கப்பட்டார்கள். தான் செய்த தவற்றைக் கூறி, "அதற்கு என்ன பரிகாரம்?" என்று அவர்களைக் கேட்டாள் மங்கம்மாள்.

அவர்கள் தங்களுக்குள் கலந்து பேசி நூல்களையும் ஆராய்ந்து பார்த்தார்கள். ராணி மங்கம்மாள் அவர்களைப் பணிவாக வேண்டிக் கொண்டாள்.

"இந்தப் பாவத்திற்கு என்ன பரிகாரங்களை நீங்கள் கூறினாலும் செய்யத் தயாராயிருக்கிறேன்! உடனே சொல்லுங்கள்."

அவர்கள் விவரிக்கத் தொடங்கினார்கள். "மகாராணீ! இதற்குப் பரிகாரமாக நீங்கள் எண்ணற்ற விதங்களில் பல தான தருமங்களைச் செய்ய வேண்டும். அன்னதானம், சாலைகள், சத்திரங்கள் அமைத்தல், சுமங்கலிகளுக்கு வஸ்திரதானமும் தீபதானமும் செய்தல், கோயில்களுக்கு மானியங்கள் அளித்தல் ஆகியவை அவசியம் செய்யப்பட வேண்டிய தான தருமங்களில் சில ஆகும்."

"பெரியோர்களே! மிகவும் நன்றி! உங்கள் அறிவுரைப்படி இன்றுமுதல் ஏராளமான தான தர்மங்களைச் செய்ய உத்தரவிடுகிறேன்" என்று கூறி அவர்களுக்கு உரிய சன்மானங்களை அளித்து விடை கொடுத்து அனுப்பி வைத்தாள் ராணி மங்கம்மாள். ஆனால் அரண்மனையிலிருந்து தான தருமங்கள் தொடங்கிய போது பேரன் விஜயரங்கன் அதற்குக் குறுக்கே நின்று தடுத்தான்.

"பாட்டீ! ராஜ்யத்தை என்னிடம் ஒப்படைப்பதற்குள் அரண்மனைக் கருவூலத்தை வெற்றிடமாக்கி என்னை நடுத்தெருவில் பிச்சையெடுக்க வைக்கவேண்டுமென்று சதி செய்கிறீர்களா? உங்கள் பாவத்துக்கு அரண்மனைச் சொத்தா பிணை?" என்று கடுமையாக ராணி மங்கம்மாளை எதிர்த்து வினவினான் விஜயரங்கன்.

ராணி மங்கம்மாள் முதலில் அவனது எதிர்ப்பைப் பொருட்படுத்தவில்லை. பற்பல அன்னசத்திரங்களைக் கட்டித்திறக்கும்படி உத்தரவிட்டிருந்தாள். ஏற்கெனவே மதுரையில் ஒரு பெரிய அன்ன சத்திரத்தைக் அவள் கட்டியிருந்தாள். புதிய சாலைகள் அமைக்கச் சொன்னாள். குதிரைகள், பசுக்கள், காளைகள் நீர் அருந்துவதற்கு வசதியாக சாலை ஓரங்களில் தண்ணீர்த் தொட்டிகளைத் திறக்கச் சொல்லி உத்தரவிட்டாள். பொது மக்களுக்காகக் குடிநீர் குளங்கள், ஊருணிகள், கிணறுகளைத் தோண்டச் செய்தாள். கோயில்களுக்கு மானியங்களை அளித்தாள். இன்னும் பற்பல தான தருமங்களை அயராமல் செய்தாள்.

இந்த தான தருமங்களுக்காக மக்கள் எல்லாரும் அவளைக் கொண்டாடினாலும் பேரன் மட்டும் விரோதியாகி விட்டான். ஆட்சியைத் தன்னிடம் ஒப்படைக்கப் பாட்டி தாமதப் படுத்துவதாகப் புரிந்து கொண்டு கலகம் செய்யவும் எதிர்ப்புக் குரல் கொடுக்கவும் தயங்கவில்லை அவன். அதற்காக அவனை யார் தூண்டி விட்டிருக்கிறார்கள் என்பதையும் ராணி மங்கம்மாளால் கண்டுபிடிக்க முடியவில்லை. அரண்மனையிலேயே சில உட்பகைப் பேர்வழிகளும், கலகக்காரர்களும் அவனைத் தூண்டுவதாகத் தெரியவந்தது. அவர்களை மங்கம்மாளால் உடனடியாகக் கண்டுபிடித்துத் தண்டிக்கவும் முடியவில்லை. குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக்காம்பு போல் பேரன் நடந்து கொள்ளத் தலைப்பட்டது அவளை மீளாக் கவலையில் வீழ்த்தியது. விஜயரங்க சொக்கநாதனுக்கு அந்த பால்ய வயதிலேயே தன்னைப் பற்றித் துர்ப்போதனை செய்கிறவர்கள் யார் யாரென்று அறிந்து அவர்களை உடன் முளையிலேயே கிள்ளி எறிய முயற்சி எடுத்துக் கொண்டாள் அவள்.

ஆனால் அம்முயற்சி பலிக்கவில்லை. அவர்கள் மிக இரகசியமாகச் செயல்பட்டார்கள். "இப்படியே இன்னும் சிறிது காலம் நீ கோட்டை விட்டுக் கொண்டிருந்தால் உனக்கு ஆட்சியைத் தராமலே உன் பாட்டி உன்னை ஏமாற்றிவிடுவாள்! தானதருமங்கள் செய்தே அரண்மனை கஜானாவையெல்லாம் காலியாக்கிவிடுவாள்" என்ற துர்ப்போதனை விஜயரங்கனுக்கு இடைவிடாது அளிக்கப்பட்டு வந்தது.

அவன் அடிக்கடி பாட்டியிடம் வந்து சீறினான். எதிர்த்துப் பேசினான். தர்மசங்கடமான கேள்விகளைக் கேட்டான். தனக்கு உடனே முடிசூட்டுமாறு வற்புறுத்தினான். வசைபாடினான். பாசத்துக்கும் ஆத்திரத்திற்கும் நடுவே சிக்கித் திணறினாள் ராணி மங்கம்மாள். அவளுடைய மனநிம்மதி இப்போது அறவே பறிபோய்விட்டது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
26. பேரனின் ஆத்திரம்

விஜயரங்க சொக்கநாதனுக்கு அப்போது இரண்டுங்கெட்டான் வயது. கைக்குழந்தையாக இருந்தபோதே அவனுக்கு முடிசூட்டியாயிற்று என்று பேர் செய்திருந்தாலும் அவனுக்கு இன்னும் பக்குவம் வரவில்லை என்பதை அறிந்து அவன் சார்பில் தானே ஆட்சி நிர்வாகப் பொறுப்புகளைக் கவனித்து வந்தாள் ராணி மங்கம்மாள்.

பேரனின் நன்மைக்காக அவனைப் பற்றிய நல்லெண்ணத்தோடு அவள் செய்து வந்த இக்காரியம் அவனாலேயே தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டபோதுதான் அவளுக்கு ஆச்சரியமும் ஆத்திரமும் ஏற்பட்டது. ஊர் உலகமெல்லாம் தன்னை மெச்சிப் புகழும்படி தான் ஆட்சி நடத்திவந்த போது தன் சொந்தப் பேரனே தனக்குத் தலைவலியாக உருவாகித் தொல்லை கொடுக்கத் தொடங்கியது அவள் மனத்தைப் பெரிதும் பாதித்தது.

அருமைத் தந்தையையும் ஆருயிர்த் தாயையும் அடுத்தடுத்து இழந்த குழந்தையைப் பாலூட்டிச் சீராட்டி வளர்த்து ஆளாக்கிய தனக்கா இந்தக்கதி என்று எண்ணியபோது அவள் மனம் நலிந்தது. மைசூர் மன்னனையும், இராமநாதபுரம் கிழவன் சேதுபதியையும் போன்ற புறப்பகைவர்களைப் பற்றிக் கவலைப் படுவதைவிட அதிகமாக இந்த உட்பகைமையையும், இதற்குக் காரணமான பேரன் விஜயரங்கனையும் பற்றிக் கவலைப்பட ஆரம்பித்தாள் அவள். பேரனின் மனதைக் கெடுத்துத் துர்ப்போதனை செய்யும் கலக்க்காரர்களும் கெடுமதியாளர்களும் உள்ளேயே இருக்கிறார்கள் என்று தெரிந்தது. ஆனால் அவர்கள் கையும் களவுமாகச் சிக்கவில்லை.

பேரன் விஜயரங்கனுக்கு அப்போது பதினெட்டு வயது. அரண்மனையைச் சேர்ந்த சில துர்ப்போதனையாளர்கள் அவனைத் தோப்புத் துரவுகளுக்குத் தனியே அழைத்துச் சென்று மங்கம்மாளைப் பற்றித் தொடர்ந்து கோள் மூட்டினார்கள்.

இயல்பிலேயே விஜயரங்கன் இரண்டுங்கெட்டானாகவும் நைப்பாசைக்காரனாகவும் இருந்தான். பாட்டியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு அரசனாக வேண்டும் என்கிற ஆசை உள்ளவனாக இருந்த அவனை மற்றவர்கள் மேலும் கலைத்தனர்.

"உன் தந்தை ரங்ககிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கரின் காலத்திலும் இப்படித்தான் நடந்தது. அவருடைய இளமைப் பருவத்தில் பேருக்கு அவருக்கு முடிசூட்டிவிட்டு இவளே ஆட்சியை நடத்தினாள். இவளுக்குப் பதவி வெறியைத் தவிர வேறெதுவும் இல்லை. இவள் உயிரோடிருக்கிறவரை உன்னை ஆட்சி பீடத்தில் ஏற்கவே விடமாட்டாள். நீ இப்படியே வெறும் இளவரசு பட்டத்தைச் சுமந்து கொண்டு திரிய வேண்டியது தான். கடைசிவரை உன்னிடம் ஆட்சியை ஒப்படைக்காமலே உன்னை ஏமாற்றி விடுவாள் இவள். போதாக்குறைக்குத் தளவாய் அச்சையா வேறு இப்போது உன் பாட்டியோடு நெருக்கமாக இருக்கிறார். உன்னை எப்படி ஏமாற்றுவது என்பதற்கு அவர் வேறு யோசனைகளைக் கூறுவார்! அச்சையாவும் பாட்டியும் இந்த ஜன்மத்தில் உன்னை ஆளவிடப் போவதில்லை" என்று அவர்கள் விஜயரங்கனிடம் இடைவிடாமல் உருவேற்றிக் கொண்டிருந்தார்கள்.

இளவரசன் விஜயரங்கன் அவர்களுக்குச் செவி சாய்த்தான். அவர்கள் கூறுவதெல்லாம் சரியாயிருக்கும் என்றே அவனுக்குத் தோன்றியது. பாட்டி தன்னைப் பிரியமாக அரவணைத்து ஆளாக்கி வளர்த்ததெல்லாம் அவனுக்கு மறந்துவிட்டது. ஆசை பாசத்தை மறைத்துவிட்டது. பாட்டி மங்கம்மாள் தான் தன்னுடைய முதல் எதிரி என்று எப்படியோ அவனுடைய மனத்தில் ஒரு தப்பான அபிப்ராயம் ஏற்பட்டுவிட்டது. அவனைச் சுற்றியிருந்தவர்களில் ஒருவர்கூட அந்தத் தப்பான அபிப்ராயத்தை மாற்ற முற்படவில்லை. மாறாக அதற்கு உரமேற்றி அதை மேலும் மேலும் அவன் உள்ளத்தில் வளர்க்கவே முயற்சி செய்தார்கள்.

இராயசம் அச்சையாவுக்கும் தன் பாட்டிக்கும் தகாத முறையில் உறவு இருப்பதாகத் தன்னிடம் கோள் மூட்டியவர்களின் கூற்றை அவன் நம்பினான். 'கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது' என்ற பழமொழி விஜயரங்கனின் விஷயத்தில் உண்மையாயிருந்தது. கலகக்காரர்களின் போதனையே அவன் மனத்தினுள்ளே உருவேறிற்று. தான் அரசாட்சியை அடையாமல் இருக்கப் பாட்டி சதி செய்கிறாள் என்றே நம்பினான் அவன்.

போதாக்குறைக்கு அவனைக் கெடுத்த வந்தவர்கள் அவன் மனத்தில் பதியும்படி ஒன்றைச் சுட்டிக் காட்டத் தவறவில்லை. அவர்கள் சுட்டிக் காட்டியது அப்போது பொருத்தமாக இருந்தது. உடனே நம்பி ஏற்கும்படியாகவும்கூட இருந்தது.

இடக்கையால் தாம்பூலம் தரித்துவிட்ட பாவத்திற்காக மங்கம்மாள் ஏதேதோ தான தருமங்களைச் செய்யப்போக அதை அவர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு விஜயரங்கனிடம் சொல்லித் தூற்றுவதற்கு இடம் கிடைத்தது.

"அருமை இளவரசே! உங்கள் பாட்டியார் மகாராணி மங்கம்மாள் போகிற போக்கைப் பார்த்தால் காற்றையும் காவிரித் தண்ணீரையும் தவிர உங்களுக்கு வேறு எதையும் மீதம் வைத்து விட்டுப் போகமாட்டார்கள் போலிருக்கிறது. அரண்மனைச் சொத்துகள் எல்லாம் தான தருமங்களுக்குப் போய்க் கொண்டிருக்கின்றன. கோயில் குளங்களுக்கும், தர்ம சத்திரங்களுக்கும் போவதற்கு இது என்ன பிள்ளையில்லாத சொத்தா? இந்தச் சொத்து ஏன் இப்படிப் பாழ் போகிறது? ஏற்கெனவே பாதி ராஜ்யத்தைக் கிழவன் சேதுபதி பறித்துக் கொண்டாயிற்று. மீதி இருப்பதையும் எவனாவது பறித்துக் கொள்வதற்குள்ளாவது ஆட்சியை நீங்கள் கைப்பற்ற வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் காலம் இப்படியே இளவரசுப் பட்டத்தோடு கழியவேண்டியது தான். இளவரசுப் பட்டத்தால் என்ன லாபம்? ஆட்சி மட்டும் பாட்டியிடம். வெறும் இளவரசுப் பட்டம் மட்டும் உங்களிடம். நீங்கள் உடனே தட்டிக் கேட்காவிட்டால் உங்களுக்கு எதுவும் கிடைக்காது" என்று தூபம் போட்டார்கள் கலகக்காரர்கள். விஜயரங்கன் அதைக் கேட்டு ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்காமல் புத்தி பேதலித்துப் போனான். தன் நன்மைக்காகவே அவர்கள் அந்த யோசனைகளைச் சொல்வதாக நம்பினான். அவர்களுடைய சுயநன்மைக்காகவே ஆட்சி தன் கையில் வரவேண்டுமென அவர்கள் நினைத்துத் தன்னைத் தூண்டுகிறார்கள் என்பது அப்போது அவனுக்குப் புரியவில்லை.

பாட்டி ராணி மங்கம்மாளிடம் நேரில் போய் இரண்டில் ஒன்று கேட்டுவிடுவது என்று பிடிவாதமான முடிவுக்கு வந்தான் விஜயரங்கன். அரசாட்சி தொடர்பாகத் தன்னை எதுவுமே கலந்தாலோசியாமல் ஒதுக்கி வைக்கும் பாட்டியிடம் ஏதோ பெரிய சூழ்ச்சியும் சூனியக்கார எண்ணமும் இருப்பதாக அவன் நம்பத்தொடங்கிவிட்டான். ஆனால் ஒரு சிறு சந்தேகமும் இருந்தது. அந்தச் சந்தேகத்தைத் தனக்குப் போதனை செய்த நண்பர்களிடமே அவன் கேட்டுவிட்டான்.

"ஒருவேளை என் கோரிக்கையைப் பாட்டி மறுத்து விட்டாலோ, கண்டிப்பாக முடியாது என்று பதில் சொல்லி விட்டாலோ, அப்புறம் என்ன செய்வது?"

"அவள் மட்டும் முடியாதென்று சொல்லட்டும். அதன் பிறகு நாங்கள் அடுத்த யோசனையைச் சொல்கிறாம். முதலில் நீங்கள் அவளிடம் போய்க் கேட்பதைக் கேட்டுவிட்டு வாருங்கள்."

"நான் ஒன்றும் ஏமாளியில்லை. இதோ இப்போதே கேட்டு விட்டு வந்துவிடுகிறேன்" என்று ஆவேசத்தோடு புறப்பட்டான் விஜயரங்கன். அவன் முகம் சினத்தால் சிவப்பேறியிருந்தது. பார்வையில் கோபக்கனல் தெறித்தது. நெஞ்சில் பதற்றமும் படபடப்பும் நிறைந்திருந்தன.

அவன் தேடிச் சென்ற சமயம் அந்தப்புரத்தில் சில மூத்த தோழிப் பெண்களோடு அமர்ந்து தாயம் விளையாடிக் கொண்டிருந்தாள் ராணி மங்கம்மாள். விஜயரங்கன் புயல் போல் நேரே உள்ளே பாய்ந்தான். அவன் வந்த நிலைமையைப் பார்த்து மங்கம்மாளே தோழிப் பெண்களை விலகிச் செல்லுமாறு சைகை செய்தாள். அவர்கள் சென்றனர். அவனைத் தன் அருகே அமரச் சொல்லிப் பாசத்தோடும் பரிவோடும் அவள் அழைத்தாள். அவன் அமரவில்லை. வெறுப்போடு முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

"என்ன வேண்டும் விஜயரங்கா? பாட்டியின் மேல் இன்று உனக்கு ஏன் இத்தனை கோபம்?"

"உங்கள் பக்கத்தில் அமர்ந்து அத்தைப் பாட்டிக் கதைகளைக் கேட்டுக் கொண்டிருப்பதற்கு நான் இன்னும் பச்சைக் குழந்தையில்லை பாட்டி!"

"உண்மைதான்! உனக்கு வயதாகிவிட்டது. ஒப்புக் கொள்கிறேன்."

"நீங்கள் ஒப்புக் கொண்டாலும், ஒப்புக் கொள்ளாவிட்டாலும் அது உண்மையே பாட்டி! உங்களுக்கு எதுதான் நினைவிருக்கிறது?

"உங்களுக்கு மற்றவர்கள் வயதும் நினைவிருப்பதில்லை; உங்கள் வயதும் நினைவிருப்பதில்லை."

அவன் இந்த வார்த்தைகளைச் சொல்லுகிறவரை விளையாட்டாக ஏதோ பேசுகிறான் என்று நினைத்துக் கொண்டிருந்த ராணி மங்கம்மாளின் முகபாவம் இந்த வார்த்தைகளைக் கேட்டதும் இறுகியது. நெகிழ்ச்சி தவிர்ந்து கடுமையாக மாறியது. அவள் தலைநிமிர்ந்து விஜயரங்கனைக் கூர்ந்து பார்த்தாள். அவன் மெய்யாகவே அடக்க முடியாத ஆத்திரத்தோடு தன்னிடம் வந்திருப்பது புரிந்தது.

"ஆத்திரத்தில் வார்த்தைகளை அள்ளிக் கொட்டி விடாதே விஜயரங்கா! கொட்டிய வார்த்தைகளைத் திருப்பி மறுபடி எடுத்துக்கொள்ள முடியாது. யாரிடம் பேசுகிறாம் என்ன பேசுகிறோம் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு பேசு!"

"நல்ல ஞாபகத்தோடு தான் பேசுகிறேன் பாட்டீ! வயதாகி மூத்த பின்னும் ஆள வேண்டும் என்கிற பதவி ஆசையையும் வேறு ஆசைகளையும் விடமுடியாத மகாராணி மங்கம்மாளிடம் தான் பேசிக் கொண்டிருக்கிறேன் என்பது எனக்கு ஞாபகமில்லாமற் போகவில்லை! நன்றாக ஞாபகமிருக்கிறது."

"நாக்கை அடக்கிப் பேசக் கற்றுக்கொள்."

"முதலில் உங்கள் வயதுக்குத் தகுந்த அடக்கத்தை நீங்கள் தான் கற்றுக்கொள்ள வேண்டும்."

"இப்படிப் பொய்ப் புலம்பல் புலம்பியே என்னை இனி மேலும் நீங்கள் ஏமாற்றிவிட முடியாது பாட்டி!"

"என்னை ஏமாற்றினால் தானே நீங்கள் தொடர்ந்து ஆளமுடியும்? என் தந்தையார் காலத்திலும் அவரை ஏமாற்றிக் கைப் பொம்மையாக வைத்துக்கொண்டு நீங்களே ஆட்சி நடத்தினீர்கள் இப்போதும் அதையே தான் செய்கிறீர்கள்."

"உன் நன்மைக்காகத்தான் அதைச் செய்கிறேன். உனக்குப் பக்குவம் வந்ததும் நீயே ஆளலாம். அந்த நல்ல நாளை எதிர்ப்பார்த்துத்தான் நானும் காத்திருக்கிறேன். உன்னிடம் ஆட்சியை ஒப்படைப்பதைவிட மகிழ்ச்சியான சம்பவம் என் வாழ்வில் வேறொன்றும் வரப்போவதில்லை அப்பா!"

"வீணாக நாடகமாடிப் பயனில்லை! இப்படிச் சொல்லிச் சொல்லியே எனக்குக் குழிபறிக்க வேண்டாம் பாட்டீ!"

"உன் மனதை யாரோ கெடுத்திருக்கிறார்கள். அதனால் தான் நீ இப்படி எல்லாம் உளறுகிறாய்."

"உளறுவது யார்? நானா? நீங்களா?"

"உன் மேல் பிரியமில்லாமலா நீ மூன்று மாதத்துப் பாலகனாக இருக்கும்போதே உனக்கு முடி சூட்டினேன்."

"நல்லதற்காகவும், பிரியத்துக்காகவுமா அப்படிச் செய்தீர்கள்? என்னை ஏமாற்றிவிட்டு நீங்களும் தளவாய் அச்சையாவும் உல்லாச வாழ்க்கை வாழலாமென்று..." அவன் முடிக்கவில்லை. அதற்குள் அவள் குறுக்கிட்டாள்.

"விஜயரங்கா! வாயை மூடு..." அந்த மாளிகையின் நான்கு சுவர்களிலும் எதிரொலிக்கும்படி கூப்பாடு போட்டாள் ராணி மங்கம்மாள். பேரன் வாயிலிருந்து வெளிப்பட்ட சொற்களைக் கேட்டு தீயை மிதித்தவள்போல் ஆனாள் அவள்.

"இந்த அதிகாரமும் அடக்குமுறையும் இனிமேல் பலிக்காது பாட்டி! நீங்களாக அடங்காவிட்டால் நானே உங்களையும் அடக்க வேண்டி வரும்..."

இதைக் கேட்டு ஆத்திரத்தை அடக்க முடியாமல் சீறி எழுந்திருந்தாள் ராணி மங்கம்மாள். அவள் முகம் சிவந்து கண்களில் அனல் பறந்தது! ஒரு விஷமக்காரக் குழந்தையை இரண்டு குட்டுக் குட்டினால்தான் அடங்கும் என்ற எரிச்சலுடன் அவள் அவனை எட்டிப் பிடிக்க முயன்றபோது அவன் விருட்டென்று அங்கிருந்து வெளியேறிச் சென்று விட்டான்.

காவற்காரர்களை அழைத்து அவனைச் சிறைப்படுத்திக் கொண்டுவந்து தன்முன் நிறுத்தித் தண்டித்திருக்க அவளால் முடியும். அந்த அளவுக்குப் பேரன் அவளை அவமானப்படுத்தியிருந்தான் என்றாலும் நிதானமாக யோசித்து அவள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள். அவனை மற்றவர்கள் முன்னிலையில் பதிலுக்கு அவமானப்படுத்தவும் தண்டிக்கவும் அவள் தயங்கினாள். திருந்தி விடுவான் அல்லது தானே முயன்று திருத்தி விடலாம் என்று அவள் இன்னமும் நம்பினாள்.

ஆத்திரத்தில் பேரன் பேசியிருந்த ஒவ்வொரு சொல்லும் அவள் செவிகளில் நெருப்புக் கங்குகளாகச் சுழன்று கொண்டிருந்தன.

இவ்வளவு கடுமையான வார்த்தைகளை, பெற்ற தந்தையோ, தாயோ காலஞ்சென்ற ஆருயிர்க் கணவரோ கூட அவளிடம் பேசியதில்லை. பெற்றோரிடம் செல்லமாக வளர்ந்து கணவனிடம் மதிப்போடு வாழ்ந்து நாட்டு மக்களிடம் செல்வாக்கோடு வளர்ந்து பிரியமாக எடுத்து வளர்த்த சின்னஞ்சிறு பேரனிடம் இப்படி அவமானப்பட நேர்ந்ததே என்ற நினைப்பு ராணி மங்கம்மாளின் மனதை வலி உண்டாகும்படி இப்போது மிகவும் அழுத்தி உறுத்தியது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
27. விஜயரங்கன் தப்பி விட்டான்

ராணி மங்கம்மாளின் மனம் நிம்மதியிழந்து தவித்தது. பேரன் விஜயரங்க சொக்கநாதன் பேசிவிட்டுச் சென்ற சொற்களை அவளால் மறக்கவே முடியவில்லை.

பேரன் வலுவில் வந்து தன்னிடம் ஏறுமாறாகப் பேசி இப்படியெல்லாம் வற்புறுத்தியிராவிட்டால், அவளே ஒருவேளை அவனைக் கூப்பிட்டுச் சில நாட்களில் ஆட்சிப் பொறுப்பை அவனிடம் ஒப்படைக்கவேண்டும் என்றுகூட எண்ணியிருக்கலாம். ஆனால் அவனே வற்புறுத்தி நிர்ப்பந்தப்படுத்தியதால் அவளது சந்தேகம் அதிகமாயிற்று. அதில் ஏதோ பிறர் தூண்டுதல் அல்லது சதியிருக்க வேண்டும் என்று அவள் சந்தேகப்பட்டாள்; கலங்கினாள்.

அரச பதவியை அடைய அவன் பறந்ததும் அவசரப்பட்டதும் சிறுபிள்ளைத்தனமாகத் தோன்றியது. இவ்வளவு நாட்களாகத் தான் கட்டிக் காத்த பொறுப்புகளை அவன் சீரழித்து விடுவானோ என்று அஞ்சினாள் அவள்.

'அநுபவமோ, பக்குவமோ இல்லாமல் அவன் வயதுக்கு மீறி ஆசைப்படுகிறான்' என்பது அவளுக்குப் புரிந்தது. அதைப்பற்றிக் கலந்து ஆலோசிக்க வேண்டுமென்று கருதி உடனே தளவாய் அச்சையாவைக் கூப்பிட்டனுப்பினாள் அவள்.

அச்சையா வந்தார். எல்லா விவரங்களையும் ராணி மங்கம்மாள் அவரிடம் கூறினாள். அவர் மிகவும் சிந்தனை வயப்பட்டவராகச் சிறிதுநேரம் மௌனமாய் ஏதும் கூறாமல் இருந்தார். இந்த அதிர்ச்சி நிறைந்த செய்தியை அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார் என்று தோன்றியது. பின்பு நிதானமாகக் கூறினார்:

"இப்படி ஒன்று நடந்தது என்பதை யாரிடமும் கூற வேண்டாம்! இது மிகவும் இரகசியமாக இருக்கட்டும். 'ராணி மங்கம்மாளுக்கும் அவள் பேரனுக்கும் ஆகவில்லை, விரோதம் மூண்டுவிட்டது' என்ற செய்தி அவ்வளவு நல்ல விளைவுகளைத் தராது. உங்கள் எதிரிகளை மனம் மகிழச் செய்யும். அதனால் இப்படி ஒன்று நடந்தது என்பதையே மறந்து விட்டுப் பேசாமல் இருப்பதுதான் உத்தமம்."

"'எரியும் நெருப்பைப் பஞ்சால் மூடிவிட்டு அப்புறம் பேசாமல் இரு' என்பது போலிருக்கிறது நீங்கள் சொல்வது."

"விஜயன், தானே ஓய்ந்து போய் விடுவான் என்று எனக்குத் தோன்றிகிறது."

"எனக்கு அப்படித் தோன்றவில்லை! இந்தக் கலகம் தொடர்ந்து நடக்கும் என்றே படுகிறது."

"சிறுபிள்ளைகளுக்கு அவ்வப்போது ஏதேனும் புதிய விளையாட்டு விளையாடிப் பார்க்க வேண்டும் என்று ஆசையாயிருக்கும். இரண்டு நாள் ஒன்றும் பேசாமல் இருந்தால் பின்பு மூன்றாவது நாள் அவர்களுக்கே அது மறந்து போய் விடும்."

"அவன் வந்து நின்ற விதம், மிகவும் ஆத்திரப்பட்ட தோரணை, பேசிய சீற்றம், எல்லாவற்றையும் சேர்த்து நினைத்துப் பார்த்தால் அப்படி இது அவனுக்கு மறந்து போய்விடும் என்று தோன்றவில்லை.

"இருக்கட்டுமே! இளங்கன்று. அதனால் தான் பயமறியாமல் துள்ளுகிறது. கொஞ்சம் ஆறப்போட்டால் தானே மறந்து விடும்."

தளவாய் அச்சையா கூறியபடி விஜயரங்க சொக்கநாதன் எதையும் மறப்பான் என்று ராணி மங்கம்மாளுக்குத் தோன்றவில்லை.

இங்கே அரண்மனையில் மற்றவர்களிடமும் மற்றும் வெளியே பிறர் பலரிடமும் விஜயரங்கன் கண்டபடி பேசி வருவதாகத் தெரிந்தது. ராணி மங்கம்மாள் பதவி வெறி பிடித்தவள் என்றும் அவளுக்கும் அச்சையாவுக்கும் கள்ளக்காதல் நிலவுகிறது என்றும் செய்திகளைப் பரப்பினான் விஜயரங்கன். சொந்தப் பாட்டி என்று கூட நினையாமல் அவளை எதிர்த்து ஏறக்குறையப் போர்கொடியே உயர்த்தியிருந்தான் அவன். வதந்திகளாலும் குழப்பமான செய்திகளாலும் அரண்மனை நாறியது; குழம்பியது; கலங்கியது.

இவற்றையெல்லாம் கேள்விப்பட்டவர்களே இரண்டு விதமாகப் பேசினார்கள். 'சொந்தப் பாட்டி என்றுகூடப் பாராமல் விஜயரங்கன் விசுவாசத் துரோகம் செய்கிறான்' என்று அவனைத் தூற்றினார்கள் சிலர்.

'நெருப்பில்லாமல் புகையுமா? இவளும் அச்சையாவுமாகச் சேர்ந்துகொண்டு தாங்கள் உல்லாசமாக இருப்பதற்காகப் பேரப் பிள்ளையாண்டானை முடிசூடி அரசாளவிடாமல் தொல்லை கொடுக்கிறார்கள் போலிருக்கிறது' என்றும் பேசினார்கள் சிலர். இப்படி வம்புகளும் வதந்திகளும் பொறுமையைச் சோதிக்கிற அளவு வளர்ந்தன. அதை நீடிக்கவிடக்கூடாது என ராணி மங்கம்மாள் நினைத்தாள். விஜயரங்கனைக் கூப்பிட்டு மறுபடியும் கண்டிப்பாகப் பேசிவிட வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது.

அவனைக் கூப்பிட்டு அனுப்பினாள். அவளுடைய கட்டளையைப் பொருட்படுத்தி வராமல் முதலில் அவன் அலட்சியப்படுத்தினான். மறுபடியும் கூப்பிட்டு அனுப்பினாள். வேண்டா வெறுப்பாகவும், கோபமாகவும் வந்தான். அவனை ராணி மங்கம்மாள் எதிர்கொள்ளும்போது தளவாய் அச்சையாவும் உடனிருந்தார். சிறிதும் மதிப்போ மரியாதையோ இல்லாமல் அவர்களிருவரையும் அலட்சியமாகவும் ஏளனமாகவும், இகழ்ச்சி தோன்றவும் ஏறிட்டுப் பார்த்தான் அவன்.

அவர்கள் முன் அவன் எதிர்கொண்டு வந்த விதமும் பார்த்த விதமும் வெறுப்பூட்டக் கூடியவையாக இருந்தன. அந்தப் பார்வையில் எரிச்சலடைந்தாள் ராணி மங்கம்மாள். எனினும் பொறுமையை இழந்து விடாமல், "விஜயா! உன் போக்கு நன்றாக இல்லை! சேர்வதற்குத் தகாத கெட்டவர்களோடு சேர்ந்து நீ வீணாகச் சீரழியப் போகிறாய்! அதற்கு முன் உன்னை எச்சரிக்கலாம் என்றுதான் கூப்பிட்டனுப்பினேன்" என்று அவனுக்கு அறிவுரை கூறினாள் அவள்.

"எனக்கு யாருடைய எச்சரிக்கையும் தேவையில்லை. என் ஆட்சி உரிமையான நாட்டை என்னிடம் ஒப்படைத்தாலே போதுமானது!"

"தற்போது அது சாத்தியமில்லை அப்பா! குருவி தலையில் பனங்காயை வைத்தால் தாங்காது."

"நீங்கள் எதை எதையோ சொல்லி என்னை ஏமாற்றப் பார்க்கிறீர்கள்!"

இப்படிக் கூறிய அவனை இடைமறித்து அச்சையா ஏதோ சமாதானம் சொன்னார். விஜயரங்கன் உடனே அவரையும் எடுத்தெறிந்து பேசிவிட்டான். ராணி மங்கம்மாள் கடும் கோபத்தோடு அவனை எச்சரித்தாள்.

"நீ கேட்பார் பேச்சைக் கேட்டு நாசமாய்ப் போகாமல் தடுப்பதற்காகவே உன்னைக் கூப்பிட்டேன். நாயக்க வம்சத்தின் நல்லாட்சியைச் சீரழிக்க விரும்பும் கலகக்காரர்களின் தொடர்பால் தான் நீ அழியப் போகிறாய்."

"உண்மையில் அழியப் போவது யார், நீங்களா, நானா என்று பொறுத்திருந்து பாருங்கள்."

முகத்திலடித்தாற்போல இப்படிக் கூறிவிட்டு விரைந்து சென்றுவிட்டான் விஜயரங்கன். அவனைத் திருத்த முடியாதென்று அவர்களுக்குத் தெரிந்துவிட்டது.

அவன் சென்றபின் இனி அவனுக்கு அறிவுரைகள் கூறிப் பயனில்லை என்ற முடிவுக்கு வந்த ராணி மங்கம்மாளும் தளவாய் அச்சையாவும் விஜயரங்கனின் நடவடிக்கைகளை இடைவிடாமல் கண்காணிக்க ஒற்றர்களை ஏற்பாடு செய்தார்கள். நேரடியாக முழு ஆட்சிப் பொறுப்பையும் அவனிடம் அளிக்காவிட்டாலும் ஒரு சில பொறுப்புகளை அவனிடம் விட்டுவிடலாம் என்று முதலில் நினைத்தாள் ராணி மங்கம்மாள். ஆனால் தளவாய் அச்சையா அதற்கும் இணங்கவில்லை. அப்படிச் செய்வது விஷப் பரீட்சையாக முடிந்துவிடும் என்று அபிப்பிராயம் தெரிவித்தார் அவர்.

இவ்வளவுக்கும் பின்புதான் அவன் எங்கெங்கே போகிறான் என்னென்ன செய்கிறான் என்று இரகசியமாகக் கண்காணிக்க ஏற்பாடு செய்தாள் ராணி மங்கம்மாள்.

சில நாட்கள் கழிந்தன. ஒற்றர்கள் வந்து தெரிவித்த தகவல்கள் ராணி மங்கம்மாள் மேலும் கலக்கமடைவதற்குக் காரணமானவையாக இருந்தன. விஜயரங்க சொக்கநாதன் விஷமிகளும் கலகக்காரர்களுமாகிய பலரது ஒத்துழைப்போடு கலகத்தில் இறங்கிவிடத் தீர்மானம் செய்திருப்பது புரிந்தது. அதிக இடையூறாயிருக்கும் பட்சத்தில் ராணி மங்கம்மாளையும் தளவாய் அச்சையாவையும் ஒழித்துவிடக் கூடத் தயங்காத கல்நெஞ்சம் படைத்தவனாக அவன் இருப்பானென்று தெரிந்தது. ஒற்றர்கள் வந்து கூறிய செய்திகள் பல அச்சையாவையும் ராணியையும் துணுக்குற வைத்தன.

விஜயரங்கனைத் தூண்டி விடுவதற்கு மிகவும் பலம் வாய்ந்த கூட்டம் ஒன்று பின்னாலிருப்பது அவர்களுக்குப் புரிந்தது.

தவிர்க்க முடியாத வலிமையுள்ள படை வீரர்கள் போன்ற சதியாளர்கள் அவனோடு ஒத்துழைக்கிறார்கள் என்ற உண்மையும் தெரியவந்தது. வன்முறையில் ஈடுபட்டுத் தாங்கள் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு எதிராக இருப்பவர்களைக் கொன்று குவித்தாவது ஆட்சியைக் கைப்பற்றிவிடுவது என்று விஜயனும் அவனை ஊக்குவிப்பவர்களும் முயன்று கொண்டிருந்தார்கள் என்பதை ஒற்றர்கள் வந்து தெரிவித்தார்கள்.

வேறு வழியின்றி ராணியும் தளவாயும் ஒரு முடிவுக்கு வந்தார்கள். விஜயரங்கன் நினைத்தபடி நினைத்த இடங்களுக்குப் போகவும், வரவும், பேசவும் முடிவதால் தான் இதெல்லாம் சாத்தியமாகிறது. அவனுடைய இயக்கத்தைக் கட்டுப்படுத்தி அவனைக் காவலில் வைத்துக் கண்காணித்து வந்தால் இதெல்லாம் ஓரளவு குறையும் என்று அவர்கள் கருதினார்கள். அவனைத் தூண்டிவிட்டுக் கொண்டிருப்பவர்களை அவனும், அவனை அவர்களும் சந்தித்துக் கொள்ள முடியாத படி செய்து விட்டாலே போதுமென்று இருவரும் எண்ணினார்கள்.

அரண்மனையில் விஜயரங்கன் தங்கியிருந்த பகுதிக்குள்ளேயே அவனைச் சிறைப்படுத்திவிடத் தந்திரமாக ஏற்பாடாயிற்று. அவனுக்குத் தெரியாமலே அவனைச் சுற்றி இந்த ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது. கெட்ட எண்ணத்தோடு அவர்கள் இதைச் செய்யவில்லை. நல்லெண்ணத்தோடுதான் செய்தார்கள். தீயவர்களின் சகவாசத்திலிருந்து அவனை மீட்பதற்காகவே இந்த ஏற்பாடு அவசியம் என்ற எண்ணத்தில்தான் இது செய்யப்பட்டிருந்தது. இந்தக் கட்டுக்காவல் ஏற்பாடு தொடங்கிய பின்னர் முதல் நாலைந்து நாட்கள் அவர்கள் நினைத்த படியே எல்லாம் நடந்தன. விஜயரங்கன் அரண்மனையில் அவன் வசித்துக் கொண்டிருந்த பகுதியை விட்டு எங்குமே வெளியேற முடியவில்லை.

தாங்கள் நினைத்தபடி விஜயனை ஒடுக்கிவிட்டதில் அவர்களுக்குத் திருப்தியாயிருந்தது. விஜயனுடைய நன்மைக்காகவும் ஆட்சியின் நன்மைக்காகவும் அவர்கள் செய்த இந்தக் காரியம் விஜயனால் மிகமிகத் தவறாகவும் கடுமையாகவும் புரிந்து கொள்ளப்பட்டது. தன் நன்மைக்காக என்று அவன் இதைப் புரிந்து கொள்ளவே இல்லை. பாட்டி தனக்கும் தன்னைச் சேர்ந்தவர்களுக்கும் விரோதமாக இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாகவே உணர்ந்தான். அவன் அப்போதைக்கு ஆட்சியையோ அரச பதவியையோ அடையாமல் தடுக்கும் திட்டத்துடன் பாட்டி தன்னைச் சிறைப்படுத்திவிட்டாள் என்பதே இது பற்றி அவனது அநுமானமாக இருந்தது. வெளியே இருந்த அவனுடைய ஆட்களில் சிலர் ரகசியமாக அவனை வந்து பார்த்தனர். அவர்களுக்கும் இப்படியே செய்தியைத் தெரிவித்துப் பரப்பினான் விஜயரங்கன்.

அவன் மனநிலை இப்படி இருப்பதை அறியாமல் ராணி மங்கம்மாளும், தளவாய் அச்சையாவும் வேறு விதமாகத் தீர்மானித்துக் கொண்டார்கள்.

"அரண்மனைக்குள்ளேயே தங்க வைத்துத் தீயவர்களின் சகவாசத்தைத் தடுத்தது நல்லதாகப் போயிற்று! விஜயரங்கன் இதற்குள் கெட்ட எண்ணங்கள் எல்லாம் மாறித் திருந்தியிருக்க வேண்டும். என்னைப்பற்றிக்கூட அவன் நல்லபடி புரிந்து கொண்டிருப்பான். இன்றோ நாளையோ அவனை மறுபடி பார்த்துப் பேசினால் அவன் மனநிலை நமக்குப் புரியலாம்!" என்றாள் ராணி மங்கம்மாள்.

"இதற்குள் அவன் முற்றிலும் மனம் மாறியிருக்க முடியும் என்று நான் நம்பவில்லை. மாறாமலும் இருக்கலாம் என்பதற்குச் சாத்தியக் கூறுகள் உண்டு. முன்னைவிட உங்கள் மேலும் என் மேலும் விரோதங்கள் அதிகமாகி இருக்கவும் நியாயம் உண்டு. எதற்கும் போய்ப் பார்க்கலாம். எனக்கென்னவோ இதில் நம்பிக்கையில்லை..." என்றார் தளவாய்.

"நீங்கள் அதிக அவநம்பிக்கைப் படுகிறீர்கள்! என் பேரப் பிள்ளையாண்டான் அவ்வளவு கெட்டவன் இல்லை. கேட்பார் பேச்சைக் கேட்டுத்தான் இவன் கெட்டுப் போயிருக்கிறான். இப்போது திருந்தியிருப்பான்."

அச்சையா இதற்கு மறுமொழி எதுவும் கூறவில்லை. ஆனால் அதே சமயம் அவரது மௌனம் ராணி மங்கம்மாள் கூறியதை ஏற்றுக் கொள்கிற மௌனமாகவும் இல்லை.

அடுத்த நாள் அதிகாலையில் வழக்கத்திற்குச் சிறிது முன்பாகவே எழுந்து நீராடி வழிபாடுகளை எல்லாம் முடித்து, "தெய்வமே! என் பேரனுக்கு இதற்குள் நல்ல புத்தியைக் கொடுத்திருப்பாய் என்று நம்புகிறேன். தொடர்ந்து இனி மேலும் அவனுக்கு நல்ல புத்தியைக் கொடு" என்று பிரார்த்தனையும் செய்துவிட்டுச் சிறிது நேரத்தில் விஜயரங்கனைக் காண்பதற்குச் செல்லவேண்டும் என்றிருந்தாள் ராணி மங்கம்மாள்.

அப்போது காவலர்கள் பரபரப்பும் பதற்றமுமாக அவளைத் தேடி அங்கே ஓடிவந்தார்கள்.

"மகாராணீ! இளவரசர் காவலைத் தப்பிச் சென்று விட்டார். இரவோடு இரவாக எங்களுக்குத் தெரியாமலே இது நடந்துவிட்டது. நூலேணி ஒன்றின் உதவியால் மதிலில் ஏறி மதில் துவாரத்தின் வழியே அதே நூலேணியைப் பயன்படுத்தி மறுபக்கம் கீழே இறங்கி வெளியேறியிருப்பதாகத் தெரிகிறது. இதில் எங்கள் தவறு எதுவுமில்லை. எங்களைத் தப்பாக நினைக்கக்கூடாது" என்றார்கள் அவர்கள்.

அப்போது தன் செவிகள் கேட்டுக் கொண்டிருப்பது மெய்யா பொய்யா என்று முடிவு செய்து கொள்வதற்கே சில விநாடிகள் ஆயின ராணி மங்கம்மாளுக்கு.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
28. மங்கம்மாள் சிறைப்பட்டாள்

விஜயரங்கனை அரண்மனையிலிருந்து தப்பவிட்டுவிட்ட காவலாளிகளைச் சீறினாள் ராணி மங்கம்மாள். அவர்கள் களைத்துப் போய் உறங்கி விட்ட பிறகு இரவின் பின் யாமத்தில் தான் அவன் சுலபமாக நூலேணி மூலம் வெளியேறித் தப்பியிருக்க முடியும் என்று அவளுக்குத் தோன்றியது. தப்பிச் சென்றுவிட்ட பேரனைப் பற்றிக் கவலையாகவும் இருந்தது கோபமாகவும் இருந்தது.

தன் வயதுக்கு மீறிய காரியங்களில் அவன் ஈடுபடுவதாக அவள் எண்ணினாள். இந்த வயதில் இத்தனை தீவிரம் அவனுக்கு எப்படி உண்டாகியிருக்க முடியுமென்று அவளால் கற்பனை செய்யக்கூட முடியாமல் இருந்தது. அவனை நல்வழிக்குக் கொண்டுவர முடியும் என்கிற நம்பிக்கை இப்போது அவளுக்கு அறவே இல்லை.

அரண்மனை வீரர்களை அழைத்து "எங்கே தப்பிச் சென்றிருந்தாலும் விஜயனைத் தேடிப் பிடித்து வாருங்கள்! அவன் உடலுக்கோ உயிருக்கோ சேதமும் ஆபத்தும் இன்றி அழைத்து வாருங்கள்! மற்றவற்றை அப்புறம் நான் பார்த்துக் கொள்கிறேன்" - என்று மங்கம்மாள் கட்டளையிட்டாள்.

தப்பிச் சென்றுவிட்ட விஜயரங்கனோ யாரும் அறிய முடியாத ஒதுக்குப்புறமான மறைவிடம் ஒன்றில் போய்த் தங்கிக் கொண்டு தன் நண்பர்களையும் தன்னோடு ஒத்துழைத்த கலகக்காரர்களையும் சந்தித்துப் பேசினான். ராணி மங்கம்மாளின் ஆட்சியை எப்படி ஒழிப்பது என்று திட்டமிடலானான். பாட்டியைத் தன் விரோதி என்றே தீர்மானித்திருந்தான் அவன். தன்னைப் பற்றி பாட்டிக்கு நல்லெண்ணம் எதுவும் இருக்க முடியாது என்றே அவன் முடிவு செய்து விட்டான். அவனும் அவனுக்கு வேண்டியவர்களும் சதியாலோசனைகளைத் தொடர்ந்தார்கள்.

ராணி மங்கம்மாள் விஜயனைத் தேடி அனுப்பிய காவலர்களால் அவன் ஒளிந்திருந்த மறைவான இடத்தைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. பேரன் செய்வது விளையாட்டுப் பிடிவாதம் இல்லை. வினைதான் என்பது அவள் மனத்தில் இப்போது மீண்டும் உறுதிப்பட்டது. நாள் நீடிக்க நீடிக்க அவள் கவலை அதிகமாகியது. மேற்கொண்டு என்ன நடக்கும் என்பதை அவளாலேயே அநுமானிக்க முடியாமல் இருந்தது.

அதே சமயம் மறைந்து சதியாலோசனைகளில் ஈடுபட்டிருந்த விஜயரங்கனின் நிலைமையோ நாளுக்கு உறுதிப்பட்டு வந்தது. தன் ஆட்கள் சிலர் மூலமாக அரண்மனைப் படைத்தலைவர்கள் சிலரையும் பாதுகாப்புப் பொறுப்புகளில் இருந்த சிலரையும்கூடத் தனக்கு உதவுகிறபடி வளைத்திருந்தான் அவன்.

"எப்படியும் பாட்டிக்குப் பின் நான் தான் ஆளப்போகிறேன்! இப்போது உங்களில் யார் யார் என்னை எதிர்க்கிறீர்களோ அவர்களை நான் அரசனாகியதும் ஒழித்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பேன் என்பதை இப்படி இன்று நான் சொல்லித்தானா நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்? ஜாக்கிரதை! ஒழுங்காக இப்போதே என்னோடு ஒத்துழைத்து விடுங்கள்! இல்லாவிட்டால் பின்னால் சிரமப்படுவீர்கள்!"

படைத் தலைவர்கள் பலரிடம் இப்பேச்சு நன்றாக வேலை செய்தது. பலர் அப்போதே விஜயரங்கனோடு ஒத்துழைக்க முன் வந்துவிட்டார்கள். அநேகமாக அரண்மனைப் பாதுகாப்பு ஏற்பாடு முழுவதுமே மெல்ல மெல்ல இரகசியமாக விஜயரங்கனின் பிடியில் வந்துவிட்டது. எல்லாமே தனக்குச் சாதகமாக இருந்தும் விஜயரங்கன் சமயத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான். ராணி மங்கம்மாளுக்கும் தளவாய் அச்சையாவுக்கும் தெரியாமலே இரகசியமாக அரண்மனையும் படைத்தலைவர்களும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் விஜயரங்கனின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டிருந்தன. மேற்பார்வையில் மட்டும் நாடு ராணி மங்கம்மாளே எல்லாவற்றையும் ஆண்டு வருவது போலிருந்தது. உள்ளேயே சூழ்ச்சிகளும் சதிகளும் நிறைவேறி இருந்தன. முடிவில் ஒரு நாள் தான் மறைந்து தங்கியிருந்த இடத்திலேயே தன் சதிக்கு உடந்தையாக இருந்த நண்பர்கள் படைத் தலைவர்கள் கூடிய கூட்டத்தில் அவர்கள் முன்னிலையில் நாயக்க சாம்ராஜ்யத்தின் அரசனாக விஜயரங்கன் தனக்குத்தானே முடிசூட்டிக் கொண்டான்.

சதிக்கு ஒத்துழைத்த படைத்தலைவர்களையும் நண்பர்களையும் நம்ப வைப்பதற்கு இந்த மகுடாபிஷேக நாடகத்தை அவன் ஆடியே தீர வேண்டியிருந்தது. இரவில் பரம இரகசியமாக இது நடந்தது.

விஜயரங்கன் காணாமல் போய்த் தலைமறைவாகிச் சில நாட்கள் கழித்து ராணி மங்கம்மாள் அந்தப்புரத்தில் தன் படுக்கை அறையில் அயர்ந்து உறங்கிவிட்ட ஓர் அதிகாலையில் ஏதோ கூப்பாடுகளும் முழக்கங்களும் கேட்டுத் திடுக்கிட்டுக் கண் விழித்தாள்.

"மாமன்னர் விஜயரங்க சொக்கநாதர் வாழ்க! மதுரைச் சீமையின் மகராசர் விஜயரங்கர் வாழ்க!" - என்ற வாழ்த்தொலிகளால் அரண்மனை கலகலத்துக் கொண்டிருந்தது.

'என்ன நடந்து கொண்டிருக்கிறது. தான் எங்கே இருக்கிறாம்' - என்று சுதாகரித்துக் கொள்ளவே சில விநாடிகள் ஆகின. படுக்கை அறையிலிருந்து வெளியே வர வாயிலருகே சென்றாள் அவள்.

அறைக்கதவு வெளிப்புறமாக அடைத்துப் பூட்டப்பட்டிருந்தது. கதவு வரை சென்றுவிட்டு ஏமாற்றத்தோடும் திகைப்போடும் தலை குனிந்தபடி மீண்டும் உள்ளே திரும்பிய ராணி மங்கம்மாள் அறை வாசலில் ஏளனச் சிரிப்பொலி கேட்டு மறுபடி திரும்பிப் பார்த்தாள்.

விஜயரங்கன் தான் நின்றுகொண்டிருந்தான். அவன் தலையில் முடி சூட்டப்பட்டிருந்தது.

"விஜயரங்கா! இதெல்லாம் என்னடா கோலம்? யார் அறைக் கதவை வெளிப்புறமாகத் தாழிட்டுப் பூட்டியிருப்பது?"

"ஒன்றுமில்லை! சில நாட்களுக்கு முன் நீங்கள் எனக்குச் செய்த அதே உபசாரத்தை உங்களுக்கு இப்போது நான் திருப்பிச் செய்திருக்கிறேன். புரியும்படியாகச் சொல்வதனால் இந்த அறைக்குள் நீங்கள் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறீர்கள். உங்களுக்கு இந்த வயதான காலத்தில் அதிகச் சிரமம் வைக்கக்கூடாது என்பதற்காகச் சிறைச்சாலை இருக்கும் இடத்துக்கு உங்களை அனுப்பாமல் நீங்கள் இருக்கும் இடத்தையே சிறைச்சாலையாக மாற்றிவிட்டேன் பாட்டீ!"

"துரோகி! குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்பே! உன்னைப் பச்சிளம் பாலகனாக எடுத்துப் பாலூட்டித் தாலாட்டிச் சீராட்டி வளர்த்ததற்கு எனக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்."

"இதே முறையில் நான் இருந்த இடத்திலேயே என்னை நீங்கள் சிறைப்படித்தினீர்களே, அது துரோகமில்லாமல் என்னவாம்?"

"வார்த்தையை அளந்து பேசு! உன் நாக்கு அழுகிவிடும்."

"இனி உங்கள் சாபங்கள்கூடப் பலிக்க வழி இல்லை. அதிகாரம் இப்போது உங்களிடம் இல்லை. தலைவர்கள், படைகள், கோட்டை, கொத்தளம், ஆட்சி அத்தனையும் என்னிடம் இருக்கிறது என்பதை நீங்கள் ஞாபகம் வைத்துக் கொண்டு பேசினால் நன்றாயிருக்கும் பாட்டி!"

"அற்பனுக்கு வாழ்வு வந்தால் இப்படித்தானடா சொந்தப் பாட்டியிடம் கூடப் பேசமுடியும்."

"நான் அற்பனா வீரதீரனா என்பது போகப் போகப்புரியும் பாட்டி! இன்றைக்குத் தான் எனக்கு விடிந்தது. இனி உங்களுக்குப் பொழுது விடியாது! விடிய விடமாட்டேன்."

"இது அக்கிரமம்! நீ உருப்படமாட்டாய்."

"இதில் எதுவும் அக்கிரமமில்லை பாட்டீ! இந்த வயதான காலத்தில் உங்களைத் தொல்லைப்படுத்த வேண்டாமென்று நானே முடி சூட்டிக் கொண்டுவிட்டேன்; இதிலென்ன தவறு?"

ராணி மங்கம்மாள் அவனுக்கு மறுமொழி கூறவில்லை. சேற்றில் கல்லை வீசியெறிந்தால் பதிலுக்கு அது தன் மீது தான் தெறிக்கும் என்றெண்ணி அவனோடு பேசுவதைத் தவிர்த்தாள் அவள். விழிகளில் கண்ணீர் பெருக அவள் மீண்டும் தான் சிறை வைக்கப்பட்டிருந்த படுக்கை அறை முலையில் போய் அமர்ந்தாள். அவன் வெளியே எக்காளமிட்டுக் கைகொட்டி நகைத்தான். அந்த வஞ்சக நகைப்பைக் கேட்டு அவளுக்கு அடிவயிறு பற்றி எரிந்தது.

"பாட்டீ! ஞாபகம் வைத்துக் கொள்! நீ வைத்த கட்டுக்காவலில் இருந்து நான் தப்பி ஓடியது போல் நீ இங்கிருந்து தப்ப முடியாது. தப்ப முயற்சி செய்தாலோ பின் விளைவுகள் மிகவும் விபரீதமாயிருக்கும்..." என்று அவளை உரத்த குரலில் எச்சரித்துவிட்டுப்போய்ச் சேர்ந்தான் விஜயரங்கன்.

முன்பொரு நாள் இதே விஜயரங்கனின் குழந்தைப் பருவத்தில் இவன் வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தின் கோபுர உச்சியிலிருந்து தன்னைத் தலைகுப்புறப் பிடித்துத் தள்ளுவது போல அதிகாலையில் கண்ட கெட்ட கனவு இப்போது ராணி மங்கம்மாளுக்கு மீண்டும் ஞாபகம் வந்தது.

சுதந்திரமாக வளர்ந்து பேரரசனுக்கு வாழ்க்கைப் பட்டு அவன் மறைந்த பின்னும் அந்தப் பேரரசைத் தன்னந்தனியே வீராங்கணையாக நின்று கட்டிக்காத்து, முடிவில் சொந்தப் பேரனாலேயே இப்படிச் சிறை வைக்கப்பட்ட கொடுமை அவள் மனத்தைப் பிளந்தது. அவள் மனம் புழுங்கினாள். தவித்தாள். குமைந்தாள். குமுறினாள்.

தன்மேல் விசுவாசமுள்ள யாராவது பேரனுக்குத் தெரியாமல் தன்னை விடுவிக்க வருவார்கள் என்று நம்பினாள் அவள். அரண்மனையிலும், சுற்றுப்புறங்களிலும் உள்ள யாரும் சுயமாக இயங்கமுடியாதபடி விஜயரங்கனின் கட்டுப்பாட்டுக்குள் அடங்கிவிட்டதால் அவள் எண்ணியபடி எதுவும் நடக்கவில்லை. வெளியே என்ன நடக்கிறது என்று அவளுக்கு யாரும் வந்து சொல்லக்கூட முடியவில்லை. இந்தத் தனிமையும் நிராதரவுமே பேரனின் துரோகத்தைவிட அதிகமாக அவளைக் கொடுமைப்படுத்தின. அவள் மனம் ஒடுங்கி உணர்வுகள் செத்து நடைப் பிணமாகச் சிறையில் இருந்தாள். அவள் மான உணர்வு அவளைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சித்திரவதை செய்தது. இப்படியே இன்னும் சில நாட்கள் தனிமையில் அடைபட்டுக் கிடந்தால் சித்தப்பிரமை ஏற்பட்டுப் புத்தி சுவாதீனமே போய்விடும் போலிருந்தது.

"வாழ்க்கையில் இவ்வளவு தான தர்மங்களைச் செய்தும் எனக்கு இந்த கதியா? கடவுளே! நான் என்ன பாவம் செய்தேன்? என்னை ஏன் இத்தனை பயங்கரமான சோதனைகளுக்கு ஆளாக்குகிறாய்? நான் யாருக்கும் எந்தக் கெடுதலும் நினைத்ததில்லையே! என் பேரனுக்குப் பக்குவமும் வயதும் வந்ததும் ஆட்சியை அவனிடம் ஒப்படைக்கலாம் என்றுதானே நாட்களை எண்ணிக் கொண்டிருந்தேன்? எனக்கா இந்தத் தண்டனை?" என்று எண்ணி எண்ணி மனம் நைந்தாள் ராணி மங்கம்மாள்.

அவள் அந்தச் சிறைச்சாலையில் கவனிப்பாரற்றுக் கிடந்தாள். வேளா வேளைக்கு அன்ன ஆகாரமும் பரும் நீரும்கூடத் தருவாரில்லை. இதுவரை தன் பகையரசர்களிடம் கூடப் படாத அவமானத்தைச் சொந்தப் பேரப்பிள்ளையாண்டானிடம் படுகிறோமே என்ற எண்ணம் அவளை அணு அணுவாகச் சிதைத்து நலிய வைத்தது. பேரன் இத்தனை பெரிய கிராதகனாக இந்த வயதிலேயே உருவெடுத்து இப்படிக் கெடுதல்கள் செய்வான் என்பது அவள் கனவிலும் எதிர்பாராத அதிர்ச்சியாயிருந்தது. இன்னும் நடந்தவற்றை அவளால் நம்பி ஒப்புக்கொள்ளக்கூட முடியாமலிருந்தது. ஆனால் நடந்ததோ நடந்திருப்பதோ பொய்யில்லை. நிஜம்தான் என்பதும் நிதர்சனமாகப் புரிந்தது. சில நாட்களுக்குப் பின் யாரோ இரக்கப்பட்டு அவளுக்கு உணவும் தண்ணீரும் தர ஏற்பாடு செய்தார்கள். அப்புறம் சில நாட்களில் அதுவும் நிறுத்தப்பட்டது.

தனது சிறைக்குள் ராணி மங்கம்மாள் எலும்பும் தோலுமாக நலிந்து மெலிந்து போயிருந்தாள். அவளுடைய ராஜ கம்பீரப் பார்வை மங்கியிருந்தது. முகத்தில் கருமை தட்டியிருந்தது. கண்கள் குழி விழிந்திருந்தன. அந்தப்புரத்தின் அந்த ஒதுக்குப்புறமான படுக்கையறையிலேயே அவளுடைய சோக நாட்கள் ஒவ்வொன்றாகக் கழியலாயின. நம்பிக்கை வறண்டது.

விஜயரங்கனும் சிறையில் வந்து அவளைப் பார்க்கவில்லை. மற்றவர்களும் யார் என்ன ஆனார்கள் என்றே அவளுக்குத் தெரியவில்லை. அநாதரவாக அநாதையாக அவள் விடப்பட்டாள். தான் புறக்கணிக்கப்பட்டிருக்கிறோம், தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வே அவளைச் சரிபாதி கொன்று விட்டிருந்தது. இத்தனை கொடுமைகளை அடைய, தான் யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யவில்லையே என்று நினைத்துப் பார்க்கப் பார்க்க அவளுள் அழுகை குமுறியது.

பேரனோ பாட்டியின் தவிப்புகளையும், வேதனைகளையும் அறியாமல் அவளுக்குப் பருக நீரும், உண்ண உணவும்கூடத் தரலாகாது என்று கொடுமையான உத்தரவுகள் போட்டுக் கொண்டிருந்தான். அவன் நெஞ்சில் ஈவு இரக்கமே இல்லை. பாட்டியைத் தன் முதல் எதிரியாகவே பாவித்து நடத்த ஆரம்பித்திருந்த அவனுக்கு அறிவுரை கூற முதியவர்களும், பெரியவர்களுமாக எவருமே அப்போது அந்த அரண்மனையில் இல்லை. இருந்தவர்கள் அற்பனான அவனுக்கு எதையும் எடுத்துக் கூறவே பயப்பட்டார்கள். இதில் தங்களுக்கு எதற்கு வீண் வம்பு என்று பேசாமல் இருந்தார்கள்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top