• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

லலிதோபாக்யாணம் (லலிதையின் சரிதம்)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
1618844776866.png

அறிமுகம்
__________________________________



மகாபாரதத்தில் பகவத் கீதை ஒளிந்துள்ளது போல் பதினெட்டு புராணங்களில் ஒன்றான பிரம்மாண்ட புராணத்தில் உத்தர காண்டத்தில் சிப்பிக்குள் முத்துப் போல அமைந்துள்ளது ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமமும், லலிதோபாக்யாணம் என்னும் ஶீ லலிதையின் சரிதமும்.
பராம்பிகையின் லீலாவினோதங்கள் என்றுமே கேட்பதற்கு இனியது. அதனை பற்பல புராணங்கள் பலவாக பேசும். தேவி பாகவதம் புவனேஸ்வரியாக அவளை புகழும், தேவி மாஹாத்மியம் சன்டியாக பாடிப் பரவும் . தத்தாத்ரேயரின் த்ரிபுரா ரகஸ்யம் முதல் சங்கரரின் ஸெளந்தர்ய லஹரி வரை வேறு எந்த தெய்வ வடிவம் கொண்டிராத அளவுக்கு பராசக்தியான அம்பிகையின் பெருமையை பறைசாற்றும் நூல்கள் அநேகம். அவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் விளங்குவது ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம். தேவாதி தேவர்க்கும் மூவர்க்கும் முன்னவளாய் தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமாக விளங்கும் ஸ்ரீ மாதாவின் பெருமையை பாடுவது லலிதையின் ஸஹஸ்ரநாமம். மற்ற ஸஹஸ்ரநாமங்கள் தேவர்களாலும் ரிஷிகளாலும் சொல்லப்பட்டிருக்க, லலிதையின் ஆயிரம் நாமங்களையும் சொன்னது சாட்சாத் அம்பிகையின் சக்திகளான வாக் தேவிகளே.
நாம் வசிக்கும் இந்த பிரபஞ்சம் போல் அண்டவெளி எங்கும் தனித்தனியே பல கோடி உலகங்கள் உண்டு. அந்த ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் அதற்கென உலகங்களும் மக்களும் தேவர்களும், மும்மூர்த்திகளும் தனித்தனியே உண்டு. இந்த அண்டசராசரங்கள் அனைத்துக்கும் நாயகியாக விளங்குபவள் அகிலாண்டேஸ்வரியான ஸ்ரீ லலிதா மஹா திரிபுரசுந்தரி.
ஒருமுறை அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியான அம்பிகையை தரிசிக்க பற்பல அண்டங்களின் அனைத்து தேவர்களும் மும்மூர்த்திகளும், சித்தர்களும் ரிஷிகளும் கூடினர். அனைவரையும் ஒருங்கே கூடி இருந்ததை கண்ட அம்பிகையின் தாய் உள்ளம் உருகியது. அவர்கள் உய்யும் வண்ணம் ஒரு எண்ணம் கொண்டு சங்கல்பித்தால். தன் அருட்பார்வையை வாக்குக்கு அதிபதிகளான வசினி முதலான வாக் தேவிகளை நோக்கி , என் தத்துவம் விளங்க என்னுடைய ஸஹஸ்ர நாமங்களை வெளிப்படுத்துங்கள் . இதனைக் கொண்டு என் பக்தர்கள் என்னை துதிக்கும் போது
நான் மிக எளிதில் பிரீத்தி கொள்கிறேன் என்று கட்டளையிட,. "ரகஸ்ய நாம ஸஹஸ்ரம் "என்று போற்றப்படும் லலிதா ஸஹஸ்ரநாமம் தோன்றியது. . இதில் ஒவ்வொரு நாமாவும் மந்திர சாரமாகவே விளங்குகிறது. ஸஹஸ்ரநாமம் போற்றும் இந்த லலிதையின் சரிதம் மஹோன்னதமானது. இந்த சகஸ்ரநாமத்தில் முதல் 100 நாமங்கள் லலிதாம்பிகையின் கதையை நமக்கு தெளிவாக காட்டுகிறது. அம்பிகையின் சரிதம் மந்திர வடிவமானது, பல ரகஸ்யார்த்தங்களை கொண்டது.
அணடங்களுக்கெல்லாம் நாயகியாக ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியை கூறுகிறோம். யார் இந்த லலிதை . அவள் தோன்றியது எவ்வாறு. அவள் எங்கிருக்கிறாள் என்ற அனைத்து கேள்விகளுக்கும் விடை தருவது ஸ்ரீ லலிதோபாக்யானம். லலிதா ஸஹஸ்ரநாமத்தை அளித்த பிரம்மாண்ட புராணம் தன் இறுதிப்பகுதியில் லலிதையின் கதையைக் கூறி நிறைவு செய்கிறது.
கோடி கோடி விஷ்ணுக்களும், ருத்ரர்களும் தேடிவந்து தொழும் அந்த பரதேவதையை சிந்திப்பது பலப்பல ஜென்மங்களின் செய்த புண்ணியத்தின் பலனே ஆகும். "குருமூர்த்தி" எனப்படும் அம்பாளின் பாதத்தை வணங்கி , ஹயக்ரீவருக்கும் அகஸ்தியருக்கும் இடையே நடக்கும் சம்பாஷணையாக அமைந்திருக்கும் ஸ்ரீ லலிதா மஹா திரிபுரசுந்தரி சரிதம் என்னும் அமுதத்தை ஒரு துளியேனும் பருக முயல்வோம்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
1) அகஸ்தியரின் தவம்
_________________________


ஒரு சமயம் முனிஸ்ரேஷ்டரான அகத்தியர் தீர்த்தயாத்திரைகளை மேற்கொண்டு மலைகள், காடுகள், நதிகள், புண்யக்ஷேத்ரங்கள் போன்ற இடங்களில் சுற்றிக்கொண்டு ஆங்காங்கே தேவதைகளைப் போற்றிக் கொண்டு வந்தார். அப்பொழுது ஜனங்கள் உலக வாழ்க்கையிலேயே நாட்டம் கொண்டவர்களாகவும், தங்கள் புலன்களைத் திருப்திப் படுத்துபவர்களாகவும், சுயநலவாதிகளாகவும் இருப்பதைக் கண்டு மிகவும் வருத்தம் அடைந்தார். அவர் அப்படியே வருத்தத்துடன் மிகப்புண்ணிய க்ஷேத்ரமான காஞ்சி நகரை அடைந்தார். அங்கு ஏகாம்பர நாதரையும் கலிதோஷங்களை நீக்கும் காமாக்ஷி தேவியையும் பூஜித்து, உலகத்தில் மனிதர்களின் நலனைக் கருதி வெகுகாலம் தவம் புரிந்தார். அப்பொழுது மஹாவிஷ்ணுவானவர் சங்கு, சக்கரம், ஜபமாலை, புஸ்தகங்களைத் தரித்து ஹயக்ரீவ வடிவமாக சின்மாத்ரமாகவும், தன் ஒளியால் உலகங்களைப் பிரகாசிக்கச் செய்பவராகவும் அவருக்கு முன் தோன்றினார். அகத்தியர் மிகவும் சந்தோஷப்பட்டு பலமுறை வணங்கி வினயத்துடன் துதித்தார்.
ஹயக்ரீவர் அகத்தியரைக் பார்த்து
“தங்களின் தவத்திற்கு மெச்சினேன். தங்களுக்கு நலமுண்டாகட்டும். வரம் ஏதாவது வேண்டுமென்றால் தாங்கள் கேட்டுக் கொள்ளலாம்” என்று வினவினார். அப்பொழுது அகத்தியர் ஹயக்ரீவரின் பாதங்களைச் சேவித்து, “ஸ்வாமி! இந்தப் பாமர மக்கள் எந்த உபாயத்தினால் முக்தர்கள் ஆவார்கள்? அதைத் தெரிவிக்கவும்” என்று கேட்டார்.
ஹயக்ரீவர் மிகவும் ஸந்தோஷத்தையடைந்து, “இதே கேள்வி தான் ஒரு காலத்தில் என்னால் பரமேஸ்வரனிடம் கேட்கப்பட்டது. பிறகு ஒரு முறை பிரம்மதேவரும் இதையே கேட்டார். அதே போல் துர்வாஸரும் கேட்டுக் கொண்டார். இப்பொழுது தாங்கள் கேட்கிறீர்கள். இந்தக் கேள்விக்கு என்னால் வழங்கப்படும் பதிலானது உலகங்களுக்கு நன்மையளிக்கட்டும்”
தவத்தாலும் கர்மங்களை யாகம் செய் வதாலும் ஒருவன் குணம் குறியற்ற நாமரூப வடிவமற்ற இறைவனை அடைகிறான். இது சாதாரண மக்களுக்கு எளிதானதல்ல.
ஆனால் மற்றொரு எளிய வழி உண்டு. அது ஜகன்மாதாவான பராசக்தியின் மேல் பக்தி கொண்டு அவள் ரூபத்தை மனதால் ஸ்மரணம் பண்ணிக்கொண்டு உளமார பக்தியுடன் பூரணமாக சரணடைவது.
அந்த பராசக்தியை தியானம் செய்து சிவபெருமானும் அனைத்து சித்திகளையும் அடைந்து ஈஸ்வரனாக சக்தியை இடப்பாகத்தில் பெற்ற அர்த்தநாரியான. பிரம்மா முதலான அனைத்து தேவர்களும் அன்னையை வணங்கியதாலேயே தங்களுக்கு உரிய சக்தியைப் பெற்றனர். அதனால் அம்பிகையை வணங்குவதைத் தவிர வேறு வழி எதுவும் கிடையாது என்றார்.
அகஸ்தியர் ஹயக்ரீவரை பார்த்து
"பெருமானே அப்பேர்ப்பட்ட பராசக்தியான அம்பிகை யார்?. அவளை எப்படி அறிந்து கொள்வது?. தயவுசெய்து எனக்கு கூறி அருள வேண்டும் என்று வேண்டினார்.
அதற்கு ஹயக்ரீவர் , ஜகன் மாதாவான அம்பிகை பிறப்பும் இறப்பும் இல்லாதவள், மெய்யறிவில் மட்டுமே அரிய தக்கவள் . ஞானமும் அதனை அடையும் வழியும் ஆனவள். எங்கும் நிறைந்த அவள் பிரம்மதேவனின் தவத்தின் பயனாய் வெளிப்பட்டாள். அப்போது அவள் பிரகிருதி என்று அழைக்கப்பட்டாள். அதுவே அவள் தன்னை வெளிப்படுத்திக் காட்டிய முதல் அவதாரம்.
தொடர்ந்து பயணிப்போம்..
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
2) தாக்ஷாயணியும் சக்தி பீடங்களும்






பிரம்மனின் மானஸ புத்திரருள் தலையாயவனுமான தட்ச பிரஜாபதி, மனுவின் மகளான பிரசூதியை மணந்து பல பெண்களைப் பெற்றான். அசுவதி முதல் ரேவதி வரையிலான 27 கன்னியரை சந்திரனுக்கு மணம் முடித்தான். அவன் செய்த தவத்தின் பயனாக, சாக்ஷாத் உமையம்மையே ஸதி என்ற பெயரில் அவனுக்கு மகளாகப் பிறந்தாள். ஸதி தேவி சிறுவயது முதலே ஈசனிடம் பக்தி கொண்டு அவரையே பதியாக கொள்ள தவம் செய்து வந்தாள். ஈசனும் ஸதி தேவியை தன் நாயகியாக ஏற்றார். மகேஸ்வரன் தனக்கு மருமகனாக வாய்த்ததும் தட்சனுக்கு சிறிது காலத்திலேயே ஆணவம் தலைக்கேறியது. ஈசனுக்கு பெண்ணை கொடுத்த நான் அவரை விட உயர்ந்தவன் என்று எண்ணி செருக்குற்றான் தட்சன். ஒரு முறை அவன் திருக்கயிலைக்கு வந்தபோது மாமனாரான தன்னை ஈசன் வணங்க வேண்டும் என்று எதிர்பார்த்தான். ஈசனோ யோக நிஷ்டையிலிருந்து எழுந்திருக்கக் கூட இல்லை. தான் எண்ணியது நடக்காதபோது ,ஈசன் தன்னை வேண்டுமென்றே அவமானப்படுத்தி விட்டதாக கூறி அவ்விடம் விட்டு அகன்றான். நாளடைவில் அவன் உள்ளத்தில் பகை வளர்ந்தது. ஈசனை அவமானப் படுத்தும் முகமாக, அவரை அழைக்காமலேயே ஒரு யாகத்தை செய்ய முற்பட்டான். வேண்டுமென்றே ஈசனுக்கு அழைப்பு அனுப்பாமல் மற்ற எல்லா தேவர்களையும் அழைத்து விழாவை நடத்தினான். தட்சன் கோலாகலமாக நடத்தும்
யாகத்தின் செய்தி மூவுலகங்களிலும் பேசப்பட்டது. இந்த செய்தி கயிலையிலும் எட்டியது. யாகத்தைப் பற்றி கேள்வியுற்ற தாட்சாயினி பிறந்த வீட்டின் பாசம் அழைக்க தன் தந்தையின் கிரஹத்துக்கு தானும் செல்ல விரும்பினாள்.
ஆனால் பரமன் அதற்கு சம்மதிக்கவில்லை. ஸதி தேவிக்கு அங்கு போகாமல் இருக்க மனம் இடம் கொடுக்கவில்லை, இறுதியில் இறைவன் எவ்வளவு தடுத்தும் கேட்காமல் அழையா விருந்தாளியாக தக்ஷனின் யாக சாலைக்கு ஸதிதேவி சென்றாள்.
மிகுந்த ஆசையுடன் சென்ற அவளை அகந்தையினால் தட்சன் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. வேண்டுமென்றே ஈசனை அவள் எதிரிலேயே பலவாறாக இழித்துரைத்தான். தந்தையின் இந்த செயல் சதிதேவியின் உள்ளத்தை புண்ணாக்கியது. பதிவிரதா ரத்தினமான அம்பிகைக்கு அதற்கு மேல் ஒரு கணமும் பொறுக்க முடியவில்லை. அவமானமும், கோபமும், வருத்தமும் ஒருங்கே பொங்க, "மூடன் தட்சனின் யாகம் நாசமாகட்டும் "
என்று சாபமிட்டு தீர்த்தாள். தாக்ஷாயணி என்ற தன் பெயரை வெறுத்தாள். தன் பெயருக்கு காரணமான தட்சனால் வந்த பிறவியையும் வெறுத்தாள். அவன் தந்த உடலும் வேண்டாம் என்று முடிவெடுத்தாள். யாரும் எதிர்பாராத வண்ணம் திடீரென்று தன்னுள் விளங்கிய யோகாக்னியை கிளப்பி அதனாலேயே தன்னை எரித்து பிராணத் தியாகம் செய்து விட்டாள்.
தன் ஸதியின் மரணச் செய்தியை அறிந்த பரமன் வெகுகொண்டு எழுந்தார்.. தன் சடையிலிருந்து கோபாவேசமாக வீரபத்திரனை தோற்றுவித்தார். வீரபத்திரன் யாகசாலைக்குள் புகுந்தான். அம்மைக்கு நேர்ந்த கொடுமைக்கு அனைவரையும் பழி வாங்கினார் வீரபத்திரர். யாகத்தில் பங்கு கொண்ட அனைவரும் வீரபத்திரரால் தண்டிக்கப்பட்டனர். தேவர்களை அடித்து அங்கங்களை வெட்டி, இறுதியில் தட்சனின் சிரத்தை கொய்து நெருப்பில் வாட்டி யாகசாலையை நாசம் செய்தனர் பூதப்படைகள்.
பின்னர் ஈசனின் கோபம் தணிந்ததனால் ஒரு ஆட்டின் தலையை தட்சனுக்கு பொருத்தி, தட்சனுக்கு உயிர் கொடுத்தார்.
சக்தி இல்லையேல் சிவம் என்ன செய்யும்?.
தேவியை பிரிந்து வாழ முடியாமல் பரமன் பரம விரக்த்தனாய் ஆனார்.
அன்னையின் உயிரற்ற உடலைக் கண்டு நிலைகுலைந்து பித்தன் ஆனார். தன் மனைவியின் உடலை சுமந்து கொண்டு எங்கும் திரிந்து ஊழி நடனம் புரியலானார்.
அண்டங்கள் அதிர துவங்கியது. கோள்கள் திசை மாறின. காலங்களும் தலைகீழானது. இந்தநிலை தொடராமல் தடுக்க எண்ணிய நாரணன் இதுவரை செய்ய எண்ணாத ஒரு காரியத்தை செய்தார்.
தன்னுடைய சக்கரத்தை அம்பிகையின் புனித தேகத்தின் மேல் ஏவினார். அன்னையின் புனித தேகம் அந்த சக்கரத்தால் அறுபட்டது. பரமனின் சம்ஹாரத் தாண்டவத்தை நிறுத்த நாராயணனுக்கு வேறு வழி தெரியவில்லை. ஈசன் தொடர்ந்து ஊழித் தாண்டவம் ஆடிக் கொண்டிருக்க தேவியின் உடலின் பாகங்கள் ஒன்றாக சிதர தொடங்கியது. அவளின் உடலின் பகுதிகள் விழுந்த ஒவ்வொரு தளமும் அன்னையின் அருட் பேராற்றல் கொண்ட 51 சக்தி பீடங்களாக உருவெடுத்தது.
மனைவியின் உடலும் போன பின்பு தளர்ந்து விழுந்த ஈசன், மனம் வெறுத்து துறவறம் பூண்டு விட்டார். ஸ்தாணு ஆசிரமத்தில் மௌனியாய் தவம்புரிய அமர்ந்துவிட்டார்.
அம்பிகை பார்வதியாக அவதாரம் செய்ததை மேலும் காண்போம்.
தொடர்வோம்
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
3) பார்வதியின் அவதாரமும் காம தகனமும். :--






தக்ஷன் தந்த தேகத்தை அழித்துக் கொண்ட தேவி, தன் நாதனோடு மீண்டும் கூடும் பொருட்டு , மகப்பேறு வேண்டி தவம் இருந்த பர்வதராஜனான இமவானுக்கு மகளாகப் பிறந்தாள். பர்வத நந்தினியான பார்வதி, சிவத்தை கூடும் பொருட்டு, ஸ்தாணு ஆசிரமத்தில் தவம் புரிந்து கொண்டிருக்கும் பரமனுக்கு பணிவிடைகள் செய்ய முற்பட்டாள். பரமனும் அதற்கு சம்மதித்தார். பார்வதியின் சேவை தொடர்ந்த போதிலும் ஈசன் அவளை கண் திறந்து ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
இதற்கிடையில் தவம் பல புரிந்து வரம் பெற்ற தாரகாசுரன் என்னும் அசுர வேந்தன் தேவர் உலகை கைப்பற்றி அமரர்க்கு இன்னல் விளைவிக்க துவங்கினான். சிவ பார்வதி தம்பதிகளுக்கு தோன்றும் பிள்ளையாலயே தான் அழிய வேண்டும் என்ற வரம் பெற்றிருந்தான் தாரகாசுரன்.
சிவமும் சக்தியும் பிரிந்து இருக்கும் நிலையில் சிவ புத்திரன் ஜனனம் எப்படி சாத்தியமாகும் ?
அதனால் தேவர்கள் வேறு வழியின்றி மன்மதனை நாடினார்கள். எப்பேர்ப்பட்டவர்களையும் தன் கணைகளால் மோகிக்கச் செய்யும் மன்மதன் இதைக் கேட்டவுடன் பதைபதைத்து போனான். முன்னொரு சமயம் மன்மதன் விளையாட்டாக பிரம்மனின் மீது கணைகளைத் தொடுக்க, பிரம்மா அங்கிருந்த தன் மானஸ புத்திரியான திலோத்தமை மீது மோகம் கொண்டு துரத்தினார். இடையில் சிவபெருமான் வேடனாக தோன்றி பிரம்மனுக்கு உண்மையை விளக்கினர். இதனால் மன்மதன் மீது கோபம் கொண்ட பிரம்மா, நீ விரைவில் "சிவ அபராதம் திற்கு ஆளாகி இறந்து போவாய்" என்று சபித்துவிட்டார். இதனை நினைவு படுத்தி , ஈசனோடு எந்த விளையாட்டும் வேண்டாம் என்று தடுத்தாள் ரதிதேவி. ஆனால் தேவர்கள் விடுவதாக இல்லை.
அவர்கள் மன்மதனை பார்த்து,
உனது பெருமையும் பராக்கிரமமும் உன் காம பாணங்களும் எங்கும் தடையற்றது.
ஈசனின் மனதில் தேவி பால் நேசம் உண்டாகும்படி செய்ய உன்னால் மட்டுமே முடியும் , என்று பலவாறாக மன்மதனை புகழ்ந்து, ஈசனின் மேல் தனது கணைகளை தொடுக்குமாறு மன்மதனை தூண்டினர். தேவர்களின் புகழ்ச்சியும் வேண்டுகோளும் மன்மதனை நன்றாக தூண்டிவிட்டது. இறைவன் இருக்குமிடம் நெருங்கினான். ஸ்தாணு ஆசிரமத்தை நொடிப்பொழுதில் எழில் கொஞ்சும் வசனமாக மாற்றினான். மறைவாக இருந்து மகாதேவனை கண்டு நடுக்கம் உற்றான். ஆனாலும் பார்வதி அங்கு வந்த உடன் ஒருவாறு தைரியம் கொண்டு தன் காம பாணத்தை பரமன் மேல் விடுத்தான்.
தன்னை வணங்கி எழுந்த பார்வதியை ஈசன் வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தார். பார்வதியும் தனது நெடுநாளைய தவம் பூர்த்தியாகும் தருணம் வந்தது என எண்ணி மகிழ்ந்தாள். ஆனால் அண்டசராசரம் அடக்கி ஆளும் ஈசன் அடுத்த கணமே தெளிவு பெற்று விட்டார். தன் மனதின் மாற்றத்திற்கு யார் காரணம்? என்று கடுங்கோபத்துடன் நிமிர்ந்து பார்த்தார். அடுத்த கணமே அவருடைய நெற்றிக்கண் நெருப்பை பிழம்பாக கக்கியது. மறைந்து நின்ற மன்மதனை எரித்து சாம்பலாகி போனான். பிரம்மனின் சாபம் பலித்துவிட்டது கண்டு ரதிதேவி இடியென கலங்கி நின்றாள். சாபம் தந்த நான்முகனிடமே சரணடைந்து அதற்கு உண்டான விமோசனத்தையும் சொல்லி அருளும் படி கேட்டுக் கொண்டாள்.
பிரம்மனும் , கவலை வேண்டாம். மன்மதனின் உடல் அழியுமே தவிர உயிர் நீங்காது. பராம்பிகை விரைவில் லலிதா மஹா திரிபுர சுந்தரியாக தோன்றுவாள். அவளே அப்போது மன்மதனுக்கு மீண்டும் உயிரும் கொடுப்பாள். அதுவரை அந்த ஜெகஜ் ஜனனியை இடைவிடாது, அவளையே எண்ணி மனமுருக பிராத்தனை செய்வாய் , என்று ஆறுதல் கூறினார்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
4) பண்டாசுரனின் தோற்றம். :-





பரமனின் நெற்றிக் கண்ணிலிருந்து வெளிப்பட்ட அக்னிப் பிழம்பினால் மன்மதன் சாம்பலானான் இந்த நேரத்தில் சிவகணங்களில் ஒருவரான சித்ரகர்மன் என்பவர், விளையாட்டாக, அங்கு குவிந்து கிடந்த மன்மதனின் சாம்பலை ஒன்று திரட்டி அதில் ஒரு மனித உருவம் செய்து ஈசனிடம் காட்டினார். பரமனின் லீலா வினோதம் அலாதியானது. மூன்றாவது கண் எதை எரித்ததோ, அதை மற்ற இரு கண்களும் பார்த்தபோது அந்த சாம்பல் உருவம் உயிர் பெற்றது. பிறக்கும்போதே " பண்ட் பண்ட்" என்று சிரித்துக்கொண்டே பிறந்தது அந்த உருவம். அதனாலேயே பண்டாசுரன் என்று பெயர் பெற்றது.
அவனை தன் மகனாக ஏற்ற சித்ரகர்மன் , ஈசனை வணங்க செய்து, அவனுக்கு மிக அரியதான சத ருத்ரீய மந்திரத்தை உபதேசம் செய்து ருத்ரனை நோக்கி, தவம் செய்ய அறிவுறுத்தினார்.
பண்டாசுரனின் தவத்தில் மகிழ்ந்த சர்வேஸ்வரன் அவன் முன் தோன்றி வேண்டும் வரம் கேட்குமாறு கூறினார்.
உடனே பண்டாசுரனும்
என்னை எதிர்க்கும் எதிரியின் பலம் பாதியாக குறைந்து, அது என்னை அடைய வேண்டும் , அவனது எந்த ஆயுதத்தாலும் எனக்கு தீங்கு நேரக்கூடாது, என்ற வரம் கோரினான். கருணாமூர்த்தியான இறைவன் அவனுக்கு வரத்தையும் தந்து, அதற்கு அதிகமாகவே "அறுபதாயிரம் ஆண்டுகள் உன் ராஜ்யத்தை ஆட்சி செய்வாய் என்று ஆசி வழங்கி விட்டார்.
வரம் பெற்று விட்ட பண்டாசுரன், மிகவும் மகிழ்ந்த அட்டகாசம் புரியலானான். ருத்ரனின் கொபாக்னியில் உதித்தாலும்,. காமதேவனின் சாம்பலில் தோன்றியவன் ஆதலால் அவன் குரூர குணத்துடன் அசுரனாகவும் இருந்தான். பண்டாசுரன் தனது அதீதமான சக்தியால், தன் இடது தோளிலிருந்து விசுக்ரன் என்னும் மஹா அசுரனையும், வலது தோளிலிருந்து விஷங்கன் எனும் அரக்கனையும் தன் சகோதரர்களாக தோற்றுவித்தான் . இது அல்லாமல் தூமினி என்ற சகோதரியும் தோன்றினாள்.
அசுரர்களுக்கெல்லாம் மகா அசுரனாக ஒருவன் தோன்றி விட்டான் என்று மகிழ்ந்து அசுரகுருவான சுக்கிராச்சாரியார் பண்டாசுரனை ஆசீர்வதித்து அவனுக்கென்று ஒரு ராஜ்ஜியம் அமைக்க பணிந்தார். பண்டனும் அசுர சிற்பியான மயனை வரவழைத்து, அமர லோகத்துக்கு இணையான ஒரு நகரத்தை உருவாக்கும் படி உத்தரவிட்டான்.
மயனும் முன்பு அசுரலோகம் எங்கே இருந்ததோ , அதே இடத்தில் "சோணித புரம்" என்னும் ராஜ்யத்தை கணப்பொழுதில் உருவாக்கினான். பண்டாசுரனின் தலைநகரம் "சூன்யக பட்டினம் " என்று அழைக்கப்பட்டது. செல்வச் செழிப்பும், சௌந்தர்யமுமாக பண்டாசுரனின் நகரம் அமராவதிக்கு சமமாக விளங்கியது. சுக்கிராச்சாரியார் அவனுக்கு நீண்ட ஆயுளையும், நோயற்ற வாழ்வையும் தரக்கூடிய ஒளிமிக்க விசிறிகளையும், எந்த ஆயுதத்தாலும் அழிக்க முடியாத வலிமையைத் தரும் வெண்கொற்றக் குடையும், பேரொளி மிக்க ஸ்வர்ண சிம்மாசனத்தையும் அளித்து, அழிவே இல்லாத பிரகலாதனின் பெருமை மிக்க கிரீடத்தையும் சூட்டி, பண்டாசுரனை முடிசூட்டி வாழ்த்தினார்.
முடி சூட்டப் பெற்றது முதல் வேலையாக அமர லோகத்தை கைப்பற்றினான்.
இந்திரன் முதலான தேவர்கள் அனைவரும் பண்டனை பணிவதை தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்து அடிபணிந்து குற்றேவல் புரியலாயினர். அசுரரின் ராஜ்ஜியமே உலகாள துவங்கியது. விசுக்ரனும், விஷங்கனும் ,யுவராஜாக்கள் ஆயினர். ஸம்மோஹினி, குமுதினி, சித்ராங்கி ,ஸுந்தரி என்னும் நால்வரை மணந்து, பண்டன் பேரரசனானான்.
தொடர்வோம் ........
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
5) தேவர்களின் மஹாயாகம் :-





பண்டாசுரன் மூன்று உலகங்களிலும் உள்ள தேவர்கள் மனிதர்கள் மற்றும் சகல ஜீவராசிகளின் ஜீவசக்தியை அபகாரம் செய்து உலகத்தை ஸ்தம்பிக்க செய்தான். இதற்கு மேலும் துன்பங்களை பொறுக்க முடியாமல், தேவர்கள் பிரம்மனின் தலைமையில் மாதவனை நாடிச் சென்றனர். மாதவன் நிலைமையை நன்றாக புரிந்து கொண்டார். அவர் தேவர்களைப் பார்த்து, நானும்
பிரம்மனும் ருத்ரனும் உலகத்தின் காரண புருஷர்கள். ஆனால் எங்களிடமே
பண்டாசுரனின் தொல்லைகள் செல்லுபடி ஆகிறது என்றால், இனி நம்மால் ஆவது ஒன்றுமில்லை. எல்லாம் வல்ல பரம்பொருளான அம்பிகையே, இனி நம் அனைவருக்கும் துணை. அவளை நாம் சரண் அடைவோம். அதுவரை சிறிது காலம் பண்டாசுரனை திசை திருப்ப முயற்சிக்கிறேன் என்று சொல்லி, தனது மாயையால் பேரழகியான ஒரு மாய மோஹினியை படைத்தார். அவளையும் அவளுக்கு துணையாக பல அப்ஸரஸ் கன்னிகைகளையும் பண்டனை மயக்கும் படி அனுப்பி வைத்தார். மாயவனின் திட்டம் சரியாகவே பலித்தது. அழகிகளை கண்டதும் அசுரர்கள் தடுமாறினார்கள். மாயா மோஹினியைக் கண்டு பண்டாசுரன் அதி மோஹம் கொண்டான் . அவனுடைய சிவபக்தி சின்னாபின்னமானது. குல குருவான சுக்கிராச்சாரியாரையே அவமதிக்கும் அளவுக்கு அசுரர்கள் மனம் மோஹத்தால் மயங்கி கிடந்தது.
ஒரு வழியாக பண்டனை திசை திருப்பிய பிறகு நாராயணன், தேவர்களிடம் நமக்கு இந்த நிலையில் பிரம்மாண்டங்களையும் கடந்து விளங்கும் பரம் பொருளான மகா சம்புவே காப்பாற்ற வல்லவர். அவரே பராசக்தியின், அருகில் உறைபவர். அவர் நமக்கு வழி காட்டுவார்., என்று கூறி அனைவரையும் அழைத்துச் சென்றார். பிரம்மாண்டத்தின் எல்லையை அடைந்த தேவர்கள், திக் கஜங்கள் துணை கொண்டு ஒரு பிளவை ஏற்படுத்தி கடந்து சென்றார்கள். பஞ்சபூதங்களின் தொடர்பற்ற சிதாகாசத்தை கண்டார்கள். அங்கே சூலமும் கபாலமும் ஏந்தி மகா சம்பு,
அக்ஷ மாலையும் புத்தகமும் கைகளில் ஒளிரும் தேவியுடன் தோன்றினார். இவரே ஆனந்த பைரவி யுடன் கூடிய ஆனந்த பைரவர்.
அவர் தேவர்களைப் பார்த்து, பிரளயத்துக்கு ஒப்பான துன்பம் தோன்றியுள்ள நிலையில், இதிலிருந்து நம்மை மீட்க லலிதா பரமேஸ்வரியால் மட்டுமே முடியும். தாயுள்ளம் கொண்ட ஸ்ரீலலிதா பரமேஸ்வரி தன் குழந்தைகள் துன்பப்படுவதை சிறிதும் பொறுக்க மாட்டாள். கணப்பொழுதில் துயரை போக்கி ஆனந்த வாழ்வை அழிக்கும் வலிமை அவளுக்கு மட்டுமே உண்டு. தியாக உள்ளத்துடன் அவளை நோக்கிக் கடுந்தவம் செய்து மன்றாடுவோம் வாருங்கள் ,என்று கூறினார். அவரே யாகத்திற்கு ஹோதாவாகி , அம்பிகையை குறித்து ஒரு மகா யாகம் புரியலானார்.
கடல்கள் எழும் ஜன சமுத்திரம் வற்றிப்போய் அந்த குழியே யாககுண்டம் ஆனது. மற்ற ஆறு கடல்கள், யாகத்தின் நெய் ஆயின. மகா சம்புவின் ஞானாக்னி சிதாக்னியாக அவர் நெற்றிக்கண் மூலமாக ஜொலித்தது., ஆறுவகை சிருஷ்டிகளும் யாகத்துக்கு பலியாயின. வானத்து தாரகைகள் பூக்கள் போல் அலங்கரிக்கப்பட்டன. யாக ஸ்ருக் ஸ்ருவமாக ( யாகம் செய்யும் கரண்டி) ப்ரளய காலத்து மேகங்கள் மாறின. யாகம் மகத்தான முறையில் நடைபெற்று கொண்டிருந்தது.
மேலும் தொடர்வோம்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
6) அம்பிகையின் தோற்றம்.





பண்டாசுரனை மாயையால் மயக்கி, மகா யாகத்தில் தேவர்கள் ஈடுபட்டிருப்பதை அசுரகுரு சுக்ராச்சாரியார் கண்டார். இது விஷ்ணுவின் மாயை என்பதை பண்டனுக்கு விளக்கி எடுத்துரைத்தார். உடனே சுதாரித்துக்கொண்ட பண்டன், தன் செயலை எண்ணி நாணம் கொண்டான். உடனே மீண்டும் தேவர்களை தாக்க தன் படைகளுடன் புறப்பட்டான்.
தன்னை நாடி ஒரு அடி எடுத்து வைத்து விட்டாலும், ரட்சிக்க ஓடி வந்து விடும் அம்பிகை தேவர்களை காப்பாற்றாமல் விட்டு விடுவாளா ?.
பண்டாசுரனுத் அவன் படையும் தேவர்களை நெருங்க முடியா வண்ணம் அவர்களை சுற்றி, ஒரு மாயை கோட்டையை உண்டு பண்ணினாள். எப்படி முயன்றும் பண்டனும் அவன் படைகளும் உள்ளே நுழைய முடியாத நிலையில் ஆத்திரத்துடன் பண்டாசுரன் தனது அரண்மனைக்கு திரும்பினான்.
தேவர்களின் யாகம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. ஆனால் தேவி தோன்றவில்லை. பண்டாசுரனுடன் அவன் படைகளும் தங்களை தாக்க வந்ததை அவர்கள் அறிந்தார்கள்.
அம்பிகை சீக்கிரத்தில் தோன்ற வேண்டும் என்று எண்ணி ஒவ்வொருவரும் தங்கள் தேகங்களின் பகுதிகளை அரிந்து யாகத்தில் ஆகுதியாக செய்தனர்.
தேவி பராசக்தி இன்னும் தோன்றாததால் சிவபெருமான் தேவர்களை நோக்கி, "தேவர்களே இனியும் நாம் செய்வதற்கு ஒன்றும் இல்லை. பராசக்தியை பரிபூரணமாக சரணடைவோம். இந்த மகா யாகத்தில் நம்மையே பூர்ணாஹுதியாக அர்ப்பணிப்போம். அன்னை மீண்டும் நம்மை உயிர்ப்பித்தால் நம் சாம்ராஜ்யத்தை ஆளுவோம் அல்லது அவளுடனேயே ஒன்றிவிடும் மோக்ஷ சாம்ராஜ்யத்தை அடைவோம், என்று கூறினார்.
யாக தலைவனின் பேச்சைக் கேட்ட அமரர்கள் அனைவரும் பரிபூரண சரணாகதி நிலையை அடைந்து ஒவ்வொருவராக தங்களையே யாகத்தில் அர்ப்பணித்தார்கள்.
பரிபூரண சரணாகதி! அதைத்தானே அம்பிகையின் எதிர்பார்க்கிறாள் !
அடுத்த கணமே தோன்றிவிட்டாள் ஸ்ரீமாதா லலிதா பரமேஸ்வரி.
யாக அக்னியிலிருந்து ஒரு ஜோதிப் பிழம்பு தோன்றியது. அருட்பெரும் ஜோதியாக கோடி சூரியப் பிரகாசமும், கோடி சந்திர தன்மையும், ஒருங்கே கொண்டு , பேரழகுடன் சிதக்னியிலிருந்து வெளிப்பட்டது. இவ்வாறு தோன்றிய அம்பிகை யாகத்தில் தங்களையே அர்ப்பணித்து விட்ட தேவர்கள் ஒவ்வொருவரையும் பொறிப்பொறியாக மீண்டும் உயிர்ப்பித்தாள். அனைவரையும் சிருஷ்டித்ததால் அம்பிகை "ஜகஜ்ஜனனி" என பெயர் பெற்றார்.
மீண்டும் உயிர்பெற்ற தேவர்கள் அம்பிகையை எழுந்தருள பிரார்த்தனை செய்தனர்.
உடனே அம்பிகை, மூவுலகையும் வெல்லும் அழகுடன், உதயகால சூரியனைப் போல் சிவந்த வர்ணத்துடன் சிருங்கார ரசத்தின் பூர்ண வடிவினளாக, சர்வாலங்கார பூஷிதையாக, பேரழகுடன் பதினாறு வயதான கன்னிப்பெண்ணாக தோன்றினாள்.
அவள் கண்கள், கருணை என்னும் அமுதத்தை பொழிந்தது, நான்கு கரங்களில் பாசம் அங்குசம் கரும்பு வில், புஷ்ப பாணம் இவைகளை ஏந்திக் கொண்டு காட்சி தந்தாள். அமரர்களை கருணா கடாக்ஷத்துடன் கனிவுடன் நோக்கினாள். அன்னையால் புத்துயிர் பெற்ற தேவர்களுக்கு அவள் தரிசனமே பேரானந்தத்தை கொடுத்துக் கொண்டு இருந்தது.
அம்பிகை தன் மதுர மொழிகளால் தேவர்களைப் பார்த்து "வேண்டும் வரத்தினை கேளுங்கள் "என்றாள்.
தேவர்களும், "அம்மா பண்டாசுரனால் சொல்லொணா துயர் அடைந்துவிட்டோம். எங்கள் உடலில் உயிர் மட்டுமே இருக்கிறது, தாயே நீயே எங்களை ரட்சித்து காக்கவேண்டும்" என்று தங்கள் நிலையை அம்பிகையிடம் எடுத்துரைத்தான் இந்திரன்.
அதற்கு அம்பாள் "கவலை கொள்ள வேண்டாம், பண்டாசுரனை நானே அழிப்பேன், மூவுலகையும் மீண்டும் தேவர்களுக்கு அளிப்பேன்" என்றாள்.
பேரானந்தம் அடைந்த தேவர்கள் அம்பிகையை "லலிதா ஸ்தவ ராஜம்" என்ற ஸ்தோத்திரத்தால் துதித்து கொண்டாடினார்கள்.
தொடர்வோம் ......
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
7)அம்பிகையின் மணக்கோலம். :-




தேவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப தோன்றியதால் அம்பிகை காமேஸ்வரி என பெயர் பெற்றாள். உலகெல்லாம் ஆளும் அவளை முறைப்படி தங்களுக்கு மகாராணியாக முடிசூட்ட எண்ணம் கொண்டார்கள் தேவர்கள். ராணியாக முடிசூட்ட மேரு மலையின் நடுவே தேவிக்கு என்று ஒரு ராஜதானிய உருவாக்கும்படி தேவசிற்பியான விஸ்வகர்மா விற்கு பிரம்மதேவன் உத்தரவிட்டார். பற்பல கோபுரங்களும், ராஜ வீதிகளும், மாட மாளிகைகளும் கொண்ட ஸ்ரீபுரம் என்ற நகரத்தை விஸ்வகர்மா நொடிப்பொழுதில் உருவாக்கினார். தேவாதி தேவர்களும் அன்னையை எப்பொழுதும் சிந்தித்துக் கொண்டிருக்க தங்களுக்கு என்று வாசஸ்தலங்களை அந்த நகரத்தின் அமைத்துக் கொண்டனர். ராஜ க்ருஹம் உருவாகிவிட்டது. ஆனால் ராஜ்ய பாரத்தை தம்பதிகளாக ஏற்க வேண்டுமல்லவா ?.
பிரம்மா இவ்வாறு யோசித்தார். சிருங்கார ரச சம்பூர்ண வடிவான இந்த திரிபுரசுந்தரிக்கு மங்கள நாயகனான ஈசனைத் தவிர வேறு யார் இருக்க முடியும் ?
ஆனால் அவரோ விரக்தனாக, மயான சாம்பலை பூசி, பாம்பை ஆரமாக பூண்டு, புலித்தோலை உடுத்து, முண்ட மாலை தரித்து, சடைமுடி கொண்டு, சூலமும் கபாலமும் இயங்கும் அவரை மங்கள வடிவினாள தேவி ஏற்பாளா?.
என்று எண்ணி, சிவபெருமானே மங்கள வடிவுடன் எழுந்தருளுமாறு மனதுக்குள் பிரார்த்தனை செய்தார். உடனே மகேஸ்வரனும், அதி சுந்தரியான பரமேஸ்வரிக்கு ஈடுகொடுக்கும் வகையில், மேனியில் களபச் சந்தனம் மணக்க, நவ ரத்ன கேயூர குண்டலங்களுடன், திவ்யாம்பரதனாக ஆடை அணிந்து மலர்மாலை சூடி, பொன் கிரீடம் அணிந்து ஆவிர்பவித்தார். அம்பிகைக்கு பொருத்தமான புருஷனாக அவள் கைகளில் ஏந்திய கரும்பு வில், பஞ்ச பாணம், பாசம் ,அங்குசம் இவைகளை தானும் ஏந்தி பேரழகனாக தோன்றினார். பிரம்மாவின் விருப்பத்திற்கேற்ப தோன்றியதால் காமேஸ்வரன் என்று அழைக்கப்பட்டார்.
மாப்பிள்ளையும் வந்தாகிவிட்டது.
சிவமும் சக்தியும் கூடிட அதுவே சுபமுகூர்த்தம் ஆக இருந்ததினால் வேதாகம முறையில் திருமணத்தை நடத்தி வைக்கும் பாக்கியத்தை பெற பிரம்மா துடிதுடித்தார். ஆதியும் அந்தமும் இல்லாத அவளை தாரை வார்த்துக் கொடுப்பது யார்? அவள்தான் கோவிந்த ரூபிணி யும் ஆயிற்றே !.
சகோதரனான நாரணன் சகல தேவ ரிஷி கந்தர்வர் முன்னிலையில் ஆகம விதிப்படி அம்பிகையை தாரை வார்த்து காமேஸ்வரனிடம் ஒப்படைத்தார். காமேஸ்வரன் மாங்கல்ய சூத்திரத்தை அவள் கழுத்தில் கட்ட , மஹா காமேஷ மகிஷியானாள் மஹா திரிபுரசுந்தரி.
திவ்ய தம்பதிகளுக்கு தேவர்கள் தங்களாலான பரிசுப் பொருட்களை காணிக்கையாக அளித்தார்கள்.
பிரம்மா கரும்பு வில்லை கொடுத்தார். நாரணன் அதற்கு மலர்க்கணைகளை அளித்தார். வருணன் நாக பாசத்தையும் விஸ்வகர்மா அங்குசத்தையும் அளித்தார்கள். அக்னிதேவன் ஜொலிக்கும் கிரீடத்தையும் சூரிய சந்திரர்கள் குண்டலங்களையும் தந்தார்கள். ரத்னாகரன் ஆன கடலரசன், ரத்ன ஆபரணங்கள் அளித்தான். பிரேமை என்னும் மது நிரம்பிய கிண்ணத்தை தம்பதிகளுக்கு தேவேந்திரன் சமர்ப்பித்தான். குபேரன் சிந்தாமணியிலான மாலை கொடுக்க நாராயணன் வெண்கொற்றக்குடை கொடுத்தார். உத்தம நதிகளான கங்கையும் யமுனையும் தங்கள் குளிர்காற்றை சாமரமாக்கி வீசினர். வசுக்கள் எண்மர், ஆதித்யர் பன்னிருவர், ருத்ரர் பதினொருவர், என முப்பத்து முக்கோடி தேவர்களும் தங்கள் ஆயுதங்களை திவ்ய தம்பதிகள் காலடியில் வைத்து பணிந்து நின்றார்கள். ராஜராஜேஸ்வரியான அம்பிகைக்கு ரத கஜ துரகங்கள் கோடிக்கணக்கில் அணிவகுத்து நின்றன. பிரம்மா சிவசக்தி தம்பதியருக்கு குசுமாகரம் என்ற திவ்ய விமானத்தை அளித்தார். தேவமாதர் எல்லாம் சுற்றி நின்று பூச்சொரிய வீணை, வேணு ,மிருதங்கள் ஒழிக்க, அப்சரஸ்கள் நாட்டியம் ஆட காமேஸ்வர காமேஸ்வரி தம்பதிகள் ராஜ வீதியில் வலம் வந்து சிம்மாசனம் ஏறினார்கள்.
அன்னையின் கடாக்ஷம் அங்கே குழுமியிருந்த ஒவ்வொருவர் மீதும் படர்ந்து கொண்டு வர, அவரவர் மனோ பீஷ்டங்கள் எல்லாம் உடனுக்குடன் நிறைவேறின. இந்த பேரதிசயத்தை கண்ட பிரம்மா "காமாக்ஷீ ,காமதா யினி "என்றெல்லாம் பலவாறு போற்றித் துதித்தார். இப்படியாக காமேஸ்வர காமேஸ்வரி திருமணம் திவ்ய வைபவமாக நிறைவேறியது.
தொடர்வோம்.........
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
8) அம்பிகையின் போர்க்கோலம் :-



காமேஸ்வரர் மற்றும் காமேஸ்வரி திருமணம் நடந்ததை அடுத்து, அவர்கள் இருவருக்கும் சாம்ராஜ்ய பட்டாபிஷேகம் செய்து வைத்தார் பிரம்ம தேவர்.
நாரதரின் வேண்டுதலை ஏற்று தேவி, அனைவரையும் அவரவர் உலகிற்கு அனுப்பி விட்டு, போருக்கு ஆயத்தமானாள்.
இதை "தேவர்ஷிகண சங்காத ஸ்தூயமானாத்ம வைபவா" என்கிறது லலிதா சகஸ்ரநாமம்.
திரிலோக கண்டகனாகிய பண்டனை கொல்ல ஜகன்மாதாவான ஸ்ரீலலிதா தேவி கிளம்பினாள்.
சப்த சமுத்திரங்களும் மத்தளமாகி வானளாவ கோஷித்தது.
அம்பிகை தனக்கான சக்தி சேனையை தானே உருவாக்கினாள். கோடிக்கணக்கான சக்திகள் கணப்பொழுதில் தோன்றி நின்றார்கள். சக்தி தத்துவத்திலேயே உலகு இயங்குகிறது என்பதை உணர்த்த பெண்களின் சக்தி சேனையை கொடிய அசுரப் படைகளுக்கு எதிராக நிறுத்தினாள்..
வானமே இடிந்து விழும் படி பலகோடி யானைகள் பிளிறும் ஒலி லலிதாம்பிகையின் கை அங்குசத்திலிருந்து "சம்பத்கரி தேவி" தன் பரிவாரங்களுடன் தோன்றினாள். அம்பிகையின் யானைப் படைக்கு பொருப்பேற்று "சம்பத்கரி தேவி" காண்போர் வியக்கும் வண்ணம் "ரண கோலாகலம்" என்னும் தனது யானையின்மேல் லட்சக்கணக்கான யானை படை தொடர போர்க்களத்தில் இறங்கினாள்.
(சம்பத்கரீ சமாரூட ஸிந்தூர வ்ரஜஸேவிதா – லலிதா சகஸ்ரநாமம்)
ஸ்ரீலலிதா தேவியின் பாசத்திலிருந்து தோன்றிய அஸ்வாரூடா தேவி, “அபராஜிதம்” என்ற குதிரை மீதேறி போர்க்கோலத்துடன் புறப்பட்டாள்.
அவளைத் தொடர்ந்து, வநாயுஜம், காம்போஜம், பாரசீகம் முதலிய குதிரை படைகள் பின் சென்றன.
அஸ்வாரூடா தேவி தனது கரங்களில் பாசம், அங்குசம், பிரம்பு, கடிவாளம் ஆகியவற்றை ஏந்தி, குதிரைகளை நர்த்தனம் செய்வித்து கொண்டே சென்றாள்.
(அஸ்வாரூடா திஷ்டிதாஸ்வ கோடி கோடி பிராவ்ருதா – லலிதா சஹஸ்ரநாமம்)
அதைத் தொடர்ந்து ஸ்ரீலலிதா தேவி, அதி தீவிரமாக ஹூங்காரம் செய்தாள். அதிலிருந்து 64,00,00,000 யோகினி கணங்களும், 64,00,00,000 பைரவர்களும் தோன்றினர். எண்ணற்ற சக்தி சேனையும் தோன்றின.
பின்னர் ஸ்ரீலலிதை, தனது சக்ர ராஜ ரதத்திலிருந்து, கேய சக்கரம் மற்றும் கிரி சக்கரமெனும் இரண்டு உத்தம ரதங்களை தோற்றுவித்து,
அதனை தனது மந்திரிணியான சியாமளைக்கும், சேனாதிபதியான தண்டநாதைக்கும் அளித்தாள்.
(சக்ரராஜ ரதாரூடா, கேயசக்ர ரதாரூட மந்திரிணி பரிஸேவிதா, கிரிசக்ர ரதாரூட தண்டநாதா புரஸ்க்ருதா – லலிதா சஹஸ்ரநாமம்)
தொடர்வோம்..,.........
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
இவ்வாறு சர்வேஸ்வரரை மணமுடித்த தேவி ஸ்ரீசக்ர ரதத்தில் ஏறி சேனைத்தலைவியாய் மஹாவாராஹியும் , மஹாமந்திரியாய் ராஜஸ்யாமலையும் உடன் வர நொடிபொழுதில் லட்சம் சக்தி சேனையை உண்டாக்கி ஈசனின் அஸ்திரமான மகாபாசுபதாஸ்த்திரத்தை கொண்டு பண்டனை வதைத்தாள். தன் அன்னைக்கு துணையாக மஹாகணபதி போரில் உதவியதும், அன்னை பண்டனின் 30 புதல்வர்களை பாலாவாக வதைத்ததும் , விசுக்ரனை மஹாவாராஹி கொன்றொழித்ததும் இன்னும் பல லீலைகளும் தனித்தனி பதிவுகளாயிடும் அளவுக்கு விஷயம் நிறைந்தவை.

லலிதம் என்றால் ஆனந்தம். வானவர் மற்றும் தானவர் துயர்க்களைந்து ஆனந்தம் வழங்கியதால் லலிதை. ப்ரஹ்மானந்த ஸ்வரூபிணியாக விளங்குவதாலும் லலிதை. இவளின் பெருமையை 18 புராணங்களில் ஒன்றான ப்ருமாண்ட புராணத்தில் வரும் லலிதோபாக்கியானம் விரிவாக பேசுகிறது.

ஸ்ரீபுரம்


இவள் வசிக்கும் இடமே ஸ்ரீபுரம் ஆகும். இந்த ஸ்ரீபுரமானது அம்ரித கடலின் நடுவே உள்ள தீவு நகரமாகும். எண்ணற்ற நவரத்தின மாடங்களும் கூடங்களும் கற்பனைக்கு எட்டாத அழகும் நிறைந்தது ஸ்ரீபுரம். இந்த ஸ்ரீபுரத்தின் உள்ளே சிந்தாமணி க்ருஹத்தினுள் பஞ்ச ப்ரும்மாசனத்தின் மீதமர்ந்து லோகபரிபாலனம் செய்கிறாள் பரதேவதை. இவள் வசிக்கும் ஸ்ரீபுரத்தின் வடிவமே ஸ்ரீசக்ரம் ஆகும்.

ஸ்ரீசக்ரம்


வாக்கு மனம் சிந்தனை இவையனைதிற்க்கும் எட்டாத அழகுடன் ஸ்ரீபுரம் விளங்குகிறது. தேவியின் உபாசகர்கள் இறுதியில் ஸ்ரீபுரத்தை அடைந்து அன்னையின் திருவடி நிழலில் இளைபாறுகிறார்கள். இந்த அன்னையின் அருளின்றி இவளின் பெருமையை கேட்கவோ படிக்கவோ இயலாது என்பது தேவி உபாசகர்களின் நம்பிக்கை. எனவே லலிதையின் பெருமையினை சிறுதுளியாய் விவரிக்கும் இப்பதிவை படிப்பவர்கள் அனைவரும் பரதேவதையின் கடாக்ஷம் பெற்றவரே !
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top