• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

வடம் பிடிக்க வாங்க, ஜப்பானுக்கு!

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
புள்ளி கோபமாக ஷூமாசிச்சியைப் பார்த்தார். அவளது விரித்த குடையைத் தாண்டி அந்த மரத்தைப் பார்க்க வேண்டும் என்று பலமுறை முயற்சி செய்தும் முடியவில்லை.

ஷூமாசிச்சி நடனமாடிக்கொண்டே குடையைச் சுழலவிட்டு அங்குமிங்கும் நகர்த்தி - புள்ளியின் பார்வையை மறைத்துக் கொண்டேயிருந்தாள்.

கோபம் வந்தது புள்ளிக்கு ! பற்களை நறநறவென்று கடித்தார்.

அதே நேரம் ஷூமாசிச்சியின் காதில் மாட்டாவின் பதட்டக் குரல் விழுந்தது.

"ஷூமாசிச்சி! விடாதே! அவன் பார்வையைத் தடுத்துக் கொண்டே இரு! நமது ஆட்கள் அங்கே வந்துகொண்டிருக் கிறார்கள். அதுவரை சமாளி!"

பென்னட்டுக்கு இங்கே கோபம். "ஜார்ஜ்! அந்த ஆசாமி உன் பல்பைப் பார்க்க முடியாமல் கஷ்டப்படறான்! நீ விளக்கைப் போட்டுக்கிட்டு உயர எம்பிக் குதி! சீக்கிரம்! சீக்கிரம்!

பென்னட் அதைச் சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு அவசரமாக அப்பால் செல்ல, ஏதோ ஒரு நெருடல் தோன்றி திரும்பிப் பார்த்தான்.

அவன் நினைத்தது சரியாக இருந்தது.

இரு கண்கள் அவனை ஒரு கோணத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தன.

யார் அது! தெரிந்த முகம்தான். ஆமாம்; அந்த ஐஸ்கிரீம் பார்லரின் முதலாளி !

'களீர்' என்று ஒரு நாடி இழுத்தது.

'இவன் ஒற்றனா? அல்லது ஜப்பானிய ஒற்றனுக்கு உடந்தை ஆசாமியா?

சட்டென்று திரும்பி அந்த பார்லர் ஆசாமி நின்ற பக்கம் நெம்பிக் கொண்டு போக, பார்லர் ஆசாமி அங்கிருந்து அகல முயன்றார். தம் கையிலிருந்த பொய்த் துப்பாக்கியை எடுத்து ஆகாயத்தை நோக்கிச் சுட்டார்!

வெறும் சத்தமும், புகையுமாய்க் கிளம்பினால் போதும்! அதற்குத்தான் அந்த முயற்சி! அந்த ஒற்றர் கும்பல்களுக்கிடையே எத்தனையோ சங்கேத சமிக்ஞைகள்.

இதற்குள் ஜார்ஜ் எம்பிக் குதிக்க, புள்ளி பல்பைப் பார்த்துவிட, பிரமுகர்களை நோக்கி அவர் காமிராவைத் திருப்பிவிட்டார்!

டக் டக் , டக் என்று விநாடிகள் பறக்க, இதோ ட்ரிகரை அழுத்தப் போகிறார் புள்ளி.

”யாவ்வ்வ்" என்று ஒரு கராத்தே கதறல் அந்தத் தேரையே உலுக்கியது!

பறந்து வந்த ஜப்பானிய ஒற்றன் ஒருவனுடைய கால் ராக்கெட் போல் வந்து அந்தக் காமிராவை உதைத்து ஆகாயத்தில் பறக்க விட்டது.

"அடேய் அநியாயக்காரா" என்று புள்ளி கூச்சல் போட, தேர்த்தட்டில் ஒரே களேபரம்!

அதே நேரம் அந்த மரத்தின் பக்கத்திலும் ஒரு பொய். வெடிச் சத்தம் கிளம்புவதைக் கேட்டு ஏராளமான ஜரூபானிய ஒற்றர்கள் ஏவுகணைகள் போல் வந்து குதித்தார்கள்!

திமிறிக் கொண்டு ஓடப் பார்த்த பென்னட்டையும், ஜார்ஜையும் எளிதாகப் பிடித்து அமுக்கிவிட்டார்கள்.

தேருக்கு வெளியே விழுந்த அந்தக் காமிராவைத் தூக்கி, புல்லட் வெளிவர முடியாத அளவுக்கு அதை ஒரு பைக்குள் போட்டு வெகு தூரம் கொண்டு போய்விட்டார்கள் சில ஜப்பானிய ஒற்றர்கள்.

எல்லாம் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்து போயிற்று.

சிலருக்குத்தான் ஏதோ 'கசமுசா' நடந்தது போல் லேசாகத் தெரிந்தது. ஆனாலும், என்னவென்று தெளிவாகப் புலப்பட வில்லை. நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது பேருக்கு நடந்தது எதுவுமே தெரியவில்லை.

மறுநாள், பிரெஞ்ச் பிரசிடெண்ட் கொல்லப்பட இருந்ததையும், அவரைக் கொல்வதற்காக ஒரு வெள்ளைக்காரக் கூட்டம் ஜப்பானுக்கு வந்து ரகசிய வேலை செய்ததையும், கிஜிமா, ஷூமாசிச்சி, ஐஸ்க்ரீம் பார்லர் முதலாளி மூலமாக அதைத் துப்பறிந்து ஜப்பானிய அரசு ஒற்றர்கள் முறியடித்ததையும், தினசரி பத்திரிகைகளில் மக்கள் பக்கம் பக்கமாய்ப் படித்தார்கள்.

ஜார்ஜின் கவனப் பிசகினால் அவன் பார்லரில் மறந்து விட்டுப்போன டயரியை ஷாமா சிச்சி, பார்லர் முதலாளி, கிஜிமா மூவருமே படித்து விட்டிருந்தார்கள். எனினும், பிரெஞ்ச் பிரசிடெண்டை ஜார்ஜ் குழுவினர் எப்படிக் கொல்லப் போகிறார்கள் என்பது மர்மமாகவே இருந்தது. ஜப்பானிய ஒற்றர்கள் எல்லா விதமாகவும் யோசித்து அதற்குத் தக்கபடி திட்டமிட்டு வைத் திருந்தார்கள்! அவர்களது அசாத்தியமான திறமையும், எச்சரிக்கை உணர்வும், மதிநுட்பமும் கவனமும் தான் அந்தச் சூழ்நிலையை
முறியடித்தது.

ஜப்பானியப் போலீஸார் ஜார்ஜைக் கைது செய்து கொண்டு போகும்போது கிஜிமா தூரத்திலிருந்து கண்கலங்கிப் பார்த்தாள்.

அவள் முகத்தில் லேசான சோகம்!

நல்லவேளை! ஜார்ஜுடன் காதலில் மூழ்கித் தலைகால் தெரியாமல் நடந்து கொள்ளவில்லை என்று எண்ணிக் கொண்டாள்.

அப்படிப் போயிருந்தால் அவளால் அவளது நாட்டுக்கு ஒரு களங்கம் ஏற்பட்டிருக்குமே!

இப்போது நிம்மதியாகப் புன்முறுவல் பூத்தாள், நாட்டுக்காக ஒரு அரும்பும் காதலைத் தியாகம் செய்தோம் என்ற மனத்திருப்தியுடன்!
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
வடம் பிடிக்க வாங்க, ஜப்பானுக்கு - 11



”தேரை நகர்த்த ஆரம்பிக்கலாமா?' என்று பொதுவாகக் கேட்டார் கோபாலகிருஷ்ணன், விழாவேந்தனும் தேர்த் தொண்டர் களும் பச்சைக் கொடி காட்ட அங்கங்கே தயாராக நின்றார்கள்.

சக்ரவர்த்தியும் அவர் மனைவியும் மற்ற அரண்மனை வாசிகளும் தேர் நகரப் போவதை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

"நீங்களும் வடம் பிடித்து இழுக்கலாம்" என் று சக்ரவர்த்தியை அழைத்தார் கோபாலகிருஷ்ணன்.

முதலில் கலைஞர் வடத்தைப் பிடித்து விழாவைத் தொடங்கி வைக்க, அவரோடு சக்ரவர்த்தியும் மற்ற நாட்டுத் தலைவர்களும் சேர்ந்து இழுத்தார்கள். அதிர்வேட்டுகளும், தாரை தப்பட்டைகளும் எக்காள மிட்டன. பெரிய பெரிய பலூன்கள் ஆகாசத்தில் பறந்தன!

ஜப்பானியரும் தமிழ்நாட்டவரும் சேர்ந்து வடத்தை இழுத்தபோது பின்னாலிருந்து சிலர் உலுக்கு மரம் போட்டுத் தேரை நகர்த்த உதவி செய்தார்கள்.

அந்த அபூர்வக் காட்சி, இரண்டு நாட்டுக் கலாசாரங்களும் இணைந்து உறவுக்குக் கைகொடுப்பது போல் இருந்தது!

தமிழ்நாட்டு கமர்கட், கலர் மிட்டாய், அரிசிப் பொறி, பட்டாணிக் கடலை இவ்வளவும் தேரோடும் வீதி ஓரங்களில் கடை பரப்பப்பட்டிருந்தன.

மிக்கிமாட்டோ, மப்ஸ்யா , மட்ஸுஜகாயா, மிட்ஸுகோஷி. நேஷனல், லீக்கோ, ஸண்ட்டோரி, ஸோனி ஸான்யோ, காளியோ, போன்ற ஜப்பானின் புகழ் பெற்ற நிறுவனத்தினர் தங்கள் தங்கள் பெயர்களில் அங்கங்கே 'தண்ணீர்ப் பந்தல் தர்மம்' செய்து கொண்டிருந்தார்கள்!

தேருக்கு முன்னால் நாதஸ்வரம், பாண்டு வாத்தியம் - ஓதுவார்கள் இசையுடன், பொய்க்கால் குதிரை, புலிவேடம். கரகாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் ஜன வெள்ளத்தில் நீந்திக்கொண்டிருந்தன.

மாடிகளிலிருந்து பைனாகுலர் வழியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வெளிநாட்டுப் பார்வையாளர்கள் சிலர் தேர் வருவதைக் கண்டுவிட்டு 'There There' என்று உற்சாகக் குரல். எழுப்பினர்,

அவர்கள் 'There There' என்று ஆங்கிலத்தில் சொன்னது, ’தேர் தேர்' என்று தமிழில் சொல்வது போலிருந்தது

அப்படி இப்படி என்று தேரைத் தெருமுனைக்குக் கொண்டு போய்ச் சேர்க்க ஏறத்தாழ மணி இரண்டாகிவிட்டது. ஒரு மணி நேரம் லஞ்ச் ப்ரேக் விட்டதும் தேரைத் திருப்பி அடுத்த வீதிக்குக் கொண்டு போய் ஓட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.

"தேரோட்டத்தின் முக்கிய கட்டமே இனிமேல் தான்" என்றார் விழாவேந்தன். நூறு இருநூறு பேர் சேர்ந்து தேர் வடங்களைத் தூக்கிச் சென்று அடுத்த தெருவில் கொண்டு போய்ப் போட்டதும், சிலர் சக்கரங்களுக்குக் கீழே வலிமை மிக்க ஸ்டீல் தகடுகளை வைத்து அவற்றின் மீது விளக்கெண்ணெய் டின்களை உடைத்து ஊற்றினார்கள், வழவழப்பான அந்தத் தகடுகளின்மீது தேர்ச் சக்கரங்கள் வழுக்கிக்கொண்டு திரும்பப் போகும் அபூர்வக் காட்சியைக் காணப் பல்லாயிரக்கணக்கான பேர் அந்த முச்சந்திக் கட்டடங்கள் மீதும் மொட்டைமாடிகளின் மீதும் கூடியிருந்தனர். சக்ரவர்த்தியும் அவர் குடும்பத்தாரும் அரண்மனைக்குள்ளேயே உயரமாய்க் கட்டப்பட்டிருந்த கண்ணாடி மாளிகையில் நின்ற வண்ணம் தேர் திரும்பப் போகும் வேடிக்கையை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

விழா வேந்தனும் புள்ளி சுப்புடுவும் இங்குமங்கும் ஓடி ஆடி , ”ம், தள்ளுங்க! முட்டுக்கட்டை போடுங்க! ஆச்சா, போச்சா!" என்று குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். தொம்பைகள் காற்றிலே ஊசலாட, தேர் ஜாம் ஜாம் என்று கம்பீரமாய் அடுத்த வீதியில் திரும்பியபோது, உயரத்தில் பறந்து வந்த ஹெலிகாப்டர் விமானம் தேரின் தலைக்கு மேலே வட்டமடித்துப் பறந்து மலர்மாரி பொழிந்தது !

”காஞ்சிபுரத்தில் கருடசேவையன்று தேர் ஊர்வலத்தின் போது கருடன் இப்படித்தான் ஆகாசத்தில் பறந்து வட்டமடிப்பது வழக்கம்" என்றார் புள்ளி சப்புடு.

கலர் மிட்டாய், கொட்டாங்கச்சி வாத்தியும், அதிர் வேட்டுப்புகை, ஜப்பானியச் சிறுவர்கள் கையில் மிட்டாய்ரிஸ்ட் வாச் கட்டிக்கொள்வது போன்ற வேடிக்கைகளை டெலிவிஷனில் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர். விழாவுக்கு வரமுடியாத ஜப்பானிய மக்கள்.
----------

மறுநாள் மாலைதான் தேர் நிலைக்கு வந்து சேர்ந்தது. இரவு விருந்துக்குப் பின்னர் தமிழ் நாட்டிலிருந்து வந்திருந்த தேர்க் குழுவினர் அத்தனை பேருக்கும் சக்ரவர்த்தி தம்பதியர் பரிசுகள் வழங்கி வழி அனுப்பி வைத்தனர்.

வடம் பிடித்து இழுத்தவர்கள் எல்லோரையும் சக்ரவர்த்தி மேடைக்கு அழைத்து ஒவ்வொருவரையும் கைகுலுக்கி "நீங்கள் உதவி செய்யவில்லையென்றால் தேர் நகர்ந்திருக்காது. உங்களுக்கு நன்றி கூறுவதுடன் உங்களுடைய கையில் இந்த லீக்கோ ரிஸ்ட் வாச்சை என் அன்பளிப்பாகக் கட்டி மகிழ்கிறேன்" என்று கூறி ஒவ்வொருவர் கையிலும் வாச்சைக் கட்டிவிட்டார்!

அடுத்தாற்போல் இந்தியன் வங்கி கோபாலகிருஷ்ணனை அமைத்து 'உலகத்தின் உயர்ந்த பண்பாளர்' என்ற எழுத்துக்கள் பொறித்த தங்கப்பதக்கம் ஒன்றை அவர் கழுத்தில் அணிவித்தார். அத்துடன் நிஸ்ஸான் (க்ளோரியா) கார் ஒன்றும் அவருக்குப் பரிசாக அளித்தார்.

”ஓடி ஆடி வேலை செய்து விழாவை வெற்றிகரமாக்கிய விழாவேந்தனுக்கு சக்ரவர்த்தி என்ன பரிசு தரப் போகிறாரோ?" என்று சிலர் அந்தக் கூட்டத்தில் பேசிக்கொண்டனர்.

”அவர் எங்கே ஆடினார்? ஓட மட்டும் தானே செய்தார்! பத்மா சுப்ரமணியம், சுதாராணி ரகுபதி - இவங்கதானே ஆடினாங்க!" என்றார் மனோரமா.

விழாவேந்தனுக்கு டோயோடா (கிரெளன்) கார் ஒன்றைப் பரிசாகக் கொடுத்துக் கைகுலுக்கினார் சக்ரவர்த்தி.

தயாளு அம்மாள், எம். எஸ். சுப்புலட்சுமி, ராஜாத்தி அம்மாள், மனோரமா, மணிகிருஷ்ண சாமி. பத்மா சுப்ரமணியம், சுதாராணி ரகுபதி ஆகிய ஏழு வி.ஐ.பிக்களுக்கும் மகாராணி ஏழு வைர நெக்லஸும் முத்துமாலைகளும் அணிவித்து கெளரவித்தார். மனோரமாவுக்கு மட்டும் மதிப்புமிக்க கிமோனோ உடை ஒன்றும் சிறப்புப் பரிசாகக் கொடுத்தார்

நாமகிரிப்பேட்டை கிருஷ்ணனுக்கு ஒரு மிட்ஸ் புஷி வேனும், தங்கச் சங்கிலியும், தவில்காரர்களுக்கு வைர மோதிரங்களும் கணபதி ஸ்தபதி, நன்னன் இருவருக்கும் வி. சி.ஆருடன் கூடிய இரண்டு டி. வி. செட்டுகளுடன் வைர மோதிரங்களும் பரிசாகக் கொடுத்து நன்றி தெரிவித்தார்.

புள்ளி சுப்புடுவுக்கு லேட்டஸ்ட் மாடல் காளியோ கால்குலேட்டருடன் நிக்கான் காமிராவும் கொடுத்து வாழ்த்தினார். தமிழ்நாட்டிலிருந்து வந்து விழாவுக்காக அரும்பாடுபட்ட அத்தனை தமிழர்களுக்கும் ஆளுக்கொரு ஸோனி டூ - இன் - ஒன்!

கடைசியாக, நல்லி குப்புசாமி - ஜப்பான் சக்ரவர்த்திக்கும் மகாராணிக்கும் பொன்னாடை போர்த்தி தமிழ்நாட்டின் சார்பில் நன்றி கூறினார். சக்ரவர்த்தி அவருக்கு நவரத்னக் கற்கள் பதித்த மோதிரம் ஒன்றை வழங்கி பதில் மரியாதை செய்தார்.

அதே மேடையில் இருபத்து நாலு காரட்டில் இரண்ட்டி உயரத்தில் செய்யப்பட்ட தங்கத்தேர் , ஒன்றைக் கலைஞருக்குப் பரிசாகத் தந்த சக்ரவர்த்தி கலைஞரைக் கட்டித் தழுவிக்கொண்ட காட்சி மறக்கமுடியாதது!

ஊருக்குப் புறப்படுமுன் எல்லோரும் அரண்மனையைப் பின்னணியாக வைத்து சக்ரவர்த்தி குடும்பத்தாருடன் ஒரு கருப் போட்டோ எடுத்துக்கொண்டனர்.

"மட்டா டோஸா! திரும்பி வாருங்கள்" என்று உளம் கனிந்து கைகூப்பி வழி அனுப்பி வைத்தனர் மகாராஜாவும் மகாராணியும்.

கண்களில் நீர் தளும்ப சக்ரவர்த்தியையும் மகாராணியை யும் பிரிய மனமின்றி "ஸயோனாரா! போய் வருகிறோம்" என்று சொல்லிப் புறப்பட்டனர் தேரோட்டக் குழுவினர்.

முற்றும்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
நன்றி



எத்தனை முறை ஜப்பானைப் பார்த்தாலும் எனக்குத் திருப்தி ஏற்படுவதில்லை. அந்த நாட்டின் வசீகரம் என்னைத் திரும்பத் திரும்ப அழைக்கிறது!

'வடம் பிடிக்க வாங்க தொடர் எழுதுமுன் அந்நாட்டை இன்னொரு முறை போய்ப் பார்த்துவிட்டு வந்தேன். புறப்படு முன் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களைச் சந்தித்து திருவாரூர்த் தேர் போல் ஒன்றைச் செய்து, அதில் வள்ளுவர் சிலையை வைத்து, டோக்கியோ நகரில் விடப் போகிறேன். கற்பனை யில்தான் 'வடம் பிடிக்க வாங்க' என்பது தலைப்பு. இதற்காக இப்போது ஒரு முறை ஜப்பான் போய் வரப் போகிறேன்" என்றேன்.

கலைஞர் சிரித்தார். ஏதாவது ஒரு சாக்கு கிடைத்தால் போதும்; நான் ஜப்பான் போய் வந்துவிடுவேன் என்பது அவருக்குத் தெரியும்!

”சரி கதைக்கு என்ன தலைப்பு சொன்னீர்கள்? வடம் பிடிக்க வாங்க...' என்றா? தேரோட்டம் ஜப்பானில் நடக்கிறது என்று தெரிய வேண்டாமா? ஆகவே, 'வடம் பிடிக்க வாங்க. ஜப்பானுக்கு' என்று தலைப்பைக் கொஞ்சம் நீட்டி விடுங்கள்' என்றார். அவர் யோசனைப்படியே செய்துவிட்டேன்.

கலைஞர் அத்தோடு நின்றுவிடவில்லை. ஜப்பானுக்கே நேரில் வந்து (கற்பனையில்தான்) 'வடம் பிடித்து ' விழாவைத் தொடங்கியும் வைத்தார்.
அந்தத் தொடக்க விழாவில் தாங்கள் என்ன பேசுவீர்களோ அதை எழுதித் தர வேண்டும்' என்று கலைஞரிடம் கேட்டுக் கொண்டேன்.

அன்றிரவே அக்கட்டுரைத் தொடர் வந்திருந்த சாவி இதழ்கள் அனைத்தையும் ஒரே மூச்சில் படித்துவிட்டு என்னைப் போனில் அழைத்துப் பாராட்டியதோடு தம் சொற்பொழிவையும் எழுதி அனுப்பி வைத்துவிட்டார்!

மறுநாள் கலைஞரைக் கோட்டையில் சந்தித்தேன். "இவ்வளவு பிரச்னைகளுக்கும் இடையறா வேலைகளுக்கும் ஈடு கொடுத்து ஓய்வு ஒழிவு இல்லாமல் உழைத்துக் கொண்டிருக்கும் தங்களால் எப்படித்தான் இதையும் எழுதித்தர முடிந்ததோ! இத்தனைக்கும் இது உங்களுடைய வேலை அல்லவே! எனக்குச் செய்யும் உதவி அவ்லவா?" என்றேன்.

"இல்லை, இல்லை இது என்னுடைய வேலைதான்!" என்று அழுத்தமாகச் சொன்னார்.
என் கட்டுரைச் சிப்பிக்குள் கலைஞரின் சொற்பொழிவு எனும் முத்து கடந்த இதழில் ஒளிவீசிப் பிரகாசித்ததை வாசகர்கள் பார்த்திருப்பார்கள். அதில் அவர் குறிப்பிட்டுள்ள கருவாட்டுக் கதை நகைச்சுவையோடு மணம் வீசி மகிழ்விக்கிறது! அவருக்கு என் இதயபூர்வமான நன்றி.

இந்தியன் வங்கி சேர்மன் திரு கோபாலகிருஷ்ணன் அவர்கள் இந்த விழாவைச் சிறப்பாக நடத்தி வைக்கத் தேவையான அத்தனை உதவிகளையும் செய்ததோடு ஜப்பானுக்கே வந்திருந்து தம்முடைய முழு ஒத்துழைப்பையும் நல்கி இந்தத் தேரோட்ட விழாவைச் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடத்திக் கொடுத் துள்ளார். அவருக்கும் என் நன்றி.

கதைக்கு ஏற்ப, உயிரோட்டமான கதாபாத்திரங்களை உருவகப்படுத்தி வாசகர்களை மகிழ்விப்பதில் ஓவியர் கோபுலுவை யாரும் மிஞ்சிவிட முடியாது. இந்தக் கதையில் பங்கு பெற்றுள்ள இந்தியன் வங்கி கோபாலகிருஷ்ணன், விழா வேந்தன், நன்னன், மனோரமா, புள்ளி சுப்புடு ஆகியவர்களை கோபுலு எவ்வளவு சிறப்பாக ஜொலிக்க வைத்திருக்கிறார் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. அவருக்கும் என் நன்றி.

- சாவி
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top