• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

வராக புராணம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
இப்புராணம் பற்றி….

வராகம் என்பது விஷ்ணு எடுத்த வராக அவதாரத்தைக் குறிக்கும். 24000 பாடல்களை உடைய முதல் வராக புராணம் இழக்கப்பெற்றதால், அந்த இடத்தை நிரப்ப 10,000 பாடல்களுடன் இப்போது காணப்படும் வராக புராணம் இயற்றிச் சேர்க்கப்பட்டுள்ளது. இது பொதுவாக இல்லாமல் வைஷ்ணவத்தைப் பற்றியே கூறுவதாகவும், விஷ்ணுவை வழிபடுவதற்கு ஒரு கையேடாகவும் அமைந்துள்ளது. மற்றைய புராணங்களில் காணப்படும் புராணத்திற்குரிய ஐந்து இலக்கணங்கள் இப்புராணத்தில் இல்லை. பாஞ்சராத்ரா ஆகமத்தை விரிவாகப் பேசும் இப்புராணம் அதை மிக உயர்த்திக் கூறி அதில் சொல்லப்பட்ட முறையில் விஷ்ணு வெளிப் பட்டால் மிக உயர்ந்த நற்பயன்களை அடையலாம் என்று சொல்கிறது. வராக புராணத்தில் விஷ்ணு என்ற பெயருக்கு பதிலாக நாராயணன் என்ற பெயரே வழங்கப் படுகிறது.

அவதாரம் என்ற சொல்லுக்கு மேலிருந்து கீழிறங்குதல் என்பது பொருளாகும். தர்மம் தறிகெட்டு, அதர்மம் மேலோங்கும் பொழுது கடவுள் மனித அல்லது விலங்கு அவதாரம் எடுக்கிறார். அந்த அவதாரத்தின் நோக்கம் தர்மத்தை நிலைநிறுத்த வருவதாகும். அவதாரங்கள் இரண்டு வகைப்படும். பரசுராமன் போன்றவர்களை அம்சாவதாரம் என்று கூறுவர். இந்த அவதாரங்கள் அபார சக்தி உடையவை ஆயினும், பூரண அவதாரங்கள் ஆகமாட்டா. இராமாவதாரம், கிருஷ்ணாவதாரம் போன்றவை பூரண அவதாரங்களாகும். பூரண அவதாரங்கள் பதினாறு வகையான பண்புகளைப் பெற்றிருக்கும் ஐம்பொறி புலன்களோடு வாழ்வது முதல் ஐந்து பகுதியாகும். மனம், சித்தம், புத்தி அகங்காரம் என்ற நான்குடன் வாழ்வதும், ஏனைய மனிதர்களோடு ஒன்றாக உள்ளவை. எஞ்சியுள்ள ஏழு பகுதிகளும் மனிதனுக்கப்பாற்பட்ட பகுதிகளாகும். 1) கருணை-தக்கவர்கள் உரிய முறையில் கடமையைச் செய்தாலும் அதற்குரிய பலன் அவர்களுக்குக் கிட்டாத பொழுது கடவுளின் கருணை அளவு நிறைவு செய்கிறது. 2) அனுக்கிரகம்-கருணையைப் பெறுகின்றவர்கள் தகுதியுடையவர்கள் அல்லாதவர்கள் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் தரப்படுவது அனுக்கிரக மாகும். 3) புதிய நடைமுறையை உருவாக்குதல்சமூகத்திலும் தனிமனிதனிடத்திலும் பழைய எண்ண 4) நன்மை தளர்ச்சியுற்று தன்னைத்தான் பாதுகாத்துக் கொள்ள முடியாத நிலையில் தள்ளாடும் பொழுது அதற்கு உதவி செய்து, அதை நிலைநிறுத்துவது 5) தீமையை அழிக்கின்ற சக்தி 5 பக்தர்கள் மனத்தில் எந்த அவதார வடிவை தியானிக்கின்றார்களோ அந்த வடிவத்தை உடனடியாக ஏற்றுக் கொண்டு பக்தர்கள் மனத்தில் காட்சி தருதல் 7) இந்தப் பேராற்றலை வழங்கும் மந்திரமாக உள்ள ஒரு பெயரை ஏற்றுக் கொள்ளுதல். இந்த ஏழு பண்புகளும் அவதாரங்கள் மானிடர்களாக வடிவெடுத்தாலும் ஏனைய மாந்தர்களிடத்து இல்லாததும் அவதாரங்களுக்கே உரியதும் ஆன பண்புகளாகும்.

அவதாரங்கள் பகவான் என்று குறிக்கப்படுகின்றன. இச் சொல்லில் உள்ள 'பக' என்ற பகுதிக்கு ஆறு பண்புகள் உண்டு. அவையாவன : சிரியை; யக்ஷா; ஐஸ்வர்யா; வீர்யா; ஞானம்; வைராக்கியம் ஆகியவை யாகும.

வராகம் என்ற சொல்லை வரா என்றும் அக என்றும் பிரித்துக் காட்டுகிறது வராக புராணம். வரா என்றால் போர்த்துபவர் என்பது பொருளாகும். அகா என்றால் முடிவில்லாப் பொருளுக்கு ஒரு முடிவை கற்பிப்பவர் எனப் பொருள்படும். அப்படியானால் வராக என்ற சொல்லுக்கும் அனைத்தையும் போர்த்துபவன் என்ற பொருளும், எல்லையில்லாப் பொருளுக்கு ஒரு எல்லை கற்பிப்பவன் என்றும் பொருள் கொள்ளலாம். வராக அவதாரத்தில் பிரபஞ்ச உற்பத்திக்கு முற்பட்ட குழப்பமான காலத்தில் இருளில் கிடந்த பூமியைத் தூக்கி நிறுத்துபவ ராகும்.

உதயகிரியில் உள்ள குகைக்கோயிலில் வராக அவதாரம், மனித உடலும், வராக முகமும் கொண்டுள்ள சிற்பம் உள்ளது. தாமரை மாலையும், இடுப்பில் வேட்டியும், உத்தரியமும் அணிந்துள்ளது. தன்னுடைய இடது காலைத் தூக்கி, நாகமாகிய சேஷன் தலையில் வைத்திருக்கிறது. வலப்புறக் கொம்பைப் பற்றிக் கொண்டு பூமிதேவி பெண்வடிவில் தொங்குவது போல் அமைக்கப்பட்டுள்ளது. பின்னணியில் கடலும், முனிவர்கள் முதலானோர் வராகத்தை வணங்குவது போல் அமைக்கப்பட்டுள்ளது. இது ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும்.

பாதாமியில் மேலைச் சாளுக்கியர்கள் வடிவமைப்பில் ஒரு வராக அவதாரச் சிற்பம் இருக்கிறது. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். வராக வடிவம் ஆபரணங்களை அணிந்த ஆண் வடிவில் வராகத்தின் தலை பொருந்தியது போல் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வராக உருவத்திற்கு நான்கு கைகள் உள்ளன. அவற்றில் முறையே சங்கு சக்கரம் அமைந்துள்ளன. மூன்றாவது கை தொடையின் மீது வைக்கப்பட்டுள்ளது. நான்காவது கை பூமிதேவியை தாங்கிக் கொண்டிருக்கிறது. சேஷன் வராகத்தின் பாதத்தில் அமர்ந்திருக்கிறது. இதே வடிவுடன் எட்டாவது நூற்றாண்டைச் சேர்ந்த சிற்பம் ஒன்று எல்லோராவில் உள்ள தசாவதாரக் குகையில் அமைக்கப் பட்டுள்ளது.

விஹார என்னும் கிராமம், வடக்கு குஜராத்தில் உள்ளது. பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த, வராக சிற்பம் உள்ளது. இச் சிற்பம் மனித உடலைப் பெறாமல், ஒரு பன்றியின் உடலமைப்பையே பெற்றுள்ளது. வராக உருவம் பொருந்திய நாணயங்கள் பல இங்கு கண்டு எடுக்கப்பட்டுள்ளன.

யக்ஞ வராகம் என்று ஒன்று உண்டு. பூமி, நாராயணன் பற்றிய மந்திரங்களைச் சொல்ல, பூமியைக் கடலினின்று காப்பாற்றிக் கொண்டுவர என்ன உருவம் எடுப்பது என்று விஷ்ணு யோசித்தார். முடிவில் யக்ஞ வராக உருவம் எடுக்க முடிவெடுத்தார். இந்த அவதாரம் பற்றி வாயு புராணம், பிரம்மாண்ட புராணம், பிரம்ம புராணம், பத்ம புராணம், மச்ச புராணம் ஆகியவற்றில் உள்ள பாடல்கள் குறிப்பிடு கின்றன. வராக புராணத்தில் இவை காணப்படவில்லை.

யக்ஞ வராகம் என்ற இந்தக் கருதுகோளில் யக்ஞம் என்ற சொல் பிரபஞ்சத்தை உற்பத்தி செய்யும் மாபெரும் மூல ஆற்றலைக் குறிப்பதாகும். வராகம் என்பது குழப்பம், ஒழுங்கின்மை என்பவற்றிலிருந்து பூமியை வெளிக் கொணர்வது என்பதன் குறியீடாகும். யக்ஞம், வராகம் என்ற இரண்டு சொற்களும் ஒன்றையொன்று சார்ந்து நிற்கின்ற பொருளுடையதாகவும், ஒன்றில் ஒன்று கரைந்து ஒன்றாகி விடும் பொருளுடையதாகவும் இருப்பதை அறியலாம். முப்பத்தைந்து பல்வேறுபட்ட சொற்களால் யக்ஞ வராகம் அழைக்கப்படுகிறது. இந்தச் சொற்கள் அனைத்தும் யக்ஞத்தின் பல்வேறு பகுதிகளைக் குறிக்கின்ற சொற்களாகவும், வராகத்தின் பல்வேறு உறுப்புக்களைக் குறிக்கின்ற சொற்களாகவும் இருப்பது சிந்திக்கத் தக்கதாகும்.

1) வேதபாதா: வராகத்தின் நான்கு பாதங்களும், நான்கு

2) யூபதம்ஷ்தரா: வராகத்தின் நீண்டிருக்கும் இரு கொம்புகளும் யாகத்தில் நடப்பட்டுள்ள யூபங்களாகும்.

3) கிரதுதந்தா: வராகத்தின் பற்கள் யாகத்தில் செய்யப்படும் 64 வகை பலிகளைக் குறிக்கும்.

4) சிட்டிமுகா: வராகத்தின் வாய் யாக குண்டமாகும்.

5) அக்னிஜிக்வா: வராகத்தின் நாக்கு குண்டத்தின் நெருப்பாகும்.

6) தர்ப்பலோமா: வராகத்தின் உடம்பில் உள்ள மயிர்கள் யாகசாலையில் உள்ள தர்பைப் புல்லாகும்.

7) பிரம்மசீர்ஷா: வராகத்தின் தலை பிரம்மனுக்கு ஒப்பாகும்.

8) அகோர திருக்ஷநாதரா: பகல் இரவு என்பவை வராகத்தின் இரு கண்களாகும்.

9) வேதாங்க சுருதிபூஷ்ணா: வேதத்தின் ஆறு அங்கங்கள், வராகத்தின் காதுகளில் உள்ள குண்டலங்களாகும்.

10) குஹ்ய உபநிஷதஆசன: வராகம் அமர்ந்திருக்கின்ற அமைப்பு, உபநிஷதங்களை ஆய்கின்றவர்கள் என்று கூறி அமர்ந்து சிந்திப்பது போல் உள்ளது. கூர்மையான அறிவு படைத்த ஒரு சிலர் மட்டுமே இதில் ஈடுபட முடியும்.

(இந்த வராக கற்பனை தோன்றுவதற்கு ஆகாயத்தில் உள்ள மிருக சீரிஷம் என்ற தட்சத்திரக் கூட்டம் இங்கிருந்து பார்ப்பதற்கு ஒரு வராகம் போல் இருப்பது காரணமாய் இருந்திருக்கலாம் என ரிக்வேதம் பேசுகிறது).

முதலில் நாம் அனைவரும் விஷ்ணுவை வணங்குவோ மாக.

முன்னொரு காலத்தில் பிருத்வி ஆனவள் விஷ்ணுவிடம் சென்று வணங்கி, பின்வருமாறு பேச ஆரம்பித்தாள். ஒவ்வொரு கல்ப முடிவிலும் என்னைக் காப்பாற்றுகின்றவர் மச்சமாகவும், ஆமையாகவும், வராகமாகவும், மாறிமாறி வந்து என்னைக் காப்பாற்றி நான் இருக்க வேண்டிய இடத்தில் இருக்குமாறு செய்கின்றவர் தாங்களே ஆவீர். இப்படி எங்களுடைய அறிவுக்குப் புலப்படாத வகையில் பலவற்றிலும் ஊடுருவி நிற்கும் தங்களை நாங்கள் கண்டுகொள்வது எளிதன்று. தங்களுடைய முழுவன்மை என்ன என்பதை நான் இன்னும் அறிந்து கொள்ளவில்லை. தங்களின் உண்மை சொரூபம் என்ன? தங்களை அடைதற்குரிய உண்மையான வழி யாது? பிரபஞ்சப் படைப்பு என்பது எவ்வாறு ஆரம்பித்து- எவ்வாறு முடிகிறது? நாலு யுகங்கள் என்று சொல்லப்படுபவற்றின் உண்மையான இயல்புகள் யாவை?

பிருத்வியின் இந்த வினாக்களைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த வராகம் மெல்லச் சிரிக்க ஆரம்பித்தது. அந்த வராகத்தின் வயிற்றில் பிரபஞ்ச உற்பத்தியில் காணப்படும் முட்டை இருந்தது. அம்முட்டைக்குள் இனி அடுத்த கல்பத்தில் தோன்ற வேண்டிய உயிர்கள் அனைத்தும் இருந்ததைப் பிருத்வி கண்டது. வராகத்தின் வயிற்றுள்ளும் அடுத்த கல்பத்தில் வெளிவரவேண்டிய பொருள்கள் அனைத்தும், தொடக்கப் பருவத்தில் இருந்ததைப் பிருத்வி கண்டாள்.

பூமியின் இந்தக் கேள்விகளையும், கேள்விகளைக் கேட்ட பிருத்வியின் மனத் தூய்மை, ஒழுங்கு ஆகியவற்றையும் நன்கறிந்திருந்த வராகம் அவள் வினாக்களுக்கு மகிழ்ச்சியுடன் விடை கூறத் துவங்கியது. அந்த வினாவும் விடையும்தான் வராக புராணம் எனப் பேசப்படுகிறது.

ஏனைய புராணங்களைப் போலவே, வராக புராணமும் பிரபஞ்சப் படைப்பு பற்றி விரிவாகப் பேசுகிறது. இந்தப் படைப்பின் பின்னணியில் நம் நினைவுக்கப்பாற்பட்ட பரப்பிரம்மம் உள்ளது. இந்தப் பரம்பொருள் பிறப்பு, இறப்பு இல்லாததாய், எவ்வித மாற்றமும் இன்றி எங்கும் நிறைந் துள்ளதாய் உள்ளது. அப் பரப்பிரம்மம் படைப்பினை மேற்கொள்ள வேண்டும் என்று சங்கல்பித்துக் கொண்ட மாத்திரையில், வெவ்வேறு பொருள்களாகப் பரிணமிக்கின்றது. உலகத்தில் உள்ள எல்லாப் பொருள்களிலும் அடிப்படையான மூன்று குணங்களும் வெவ்வெறு அளவுகளில் தங்கியுள்ளன. அவை சத்வம், ராஜசம், தாமசம் என்று கூறப்படும்.

ஆதியில் எங்கும் சூனியம். அந்தச் சூனியத்திலிருந்து ஆதி நாதம் தோன்றியது. நாதத்திலிருந்து ஆகாயம், ஆகாயத்தினின்று காற்று, காற்றிலிருந்து நெருப்பு நெருப்பிலிருந்து நீர், நீரிலிருந்து பூமி முதலியவை தோன்றின. இந்தப் பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் எல்லா உயிர்களும் வாழும் எல்லா வகை உடம்புகளும் படைக்கப்பட்டன. இந்த உயிர்கள் அனைத்தும் வாழக்கூடிய இடமாக பூமியை ஏற்பாடு செய்து, அந்த பூமியை நீருக்குள்ளிருந்து வெளியே எடுத்து விடுகிறார் விஷ்ணு. இதையே மகாபிரளயம் என்று கூறலாம். ஏனைய புராணங்கள் இந்த மகாபிரளயம் பற்றியோ, இதன் முடிவில் பரப்பிரம்மமோ, பொருள்களைத் தோற்றுவிக்கின்ற முறை பற்றியோ, மும்மூர்த்திகளைத் தோற்றுவிக்கின்ற முறை பற்றியோ ஒன்றும் சொல்லவில்லை. அந்தப் புராணங்கள் சொல்லும் பிரளயம் பிரம்மனுடைய ஒரு பகல் முடிந்து இரவு வரும்பொழுது ஏற்படுகின்ற சாதாரணப் பிரளயம் பற்றியதாகும். அந்தப் பிரளயத்தின் முடிவில் எங்கும் நீரே நிறைந் திருக்கும். நாராயணன் உறங்குவார்.

(இதை அடுத்து வராக புராணம், கல்பங்கள் பற்றியும், நில இயற்பொருள் இயங்கியற் பொருள், பிரம்மன் பிரபஞ்சம் படைத்த கதை ஆகியவை ஏற்கெனவே மற்றப் புராணங்களில் விவரிக்கப்பட்டிருப்பதால், இங்கு அதனைக் கூறவில்லை,)

நாரதர் கதை

முன்னொரு சமயம் பிரியவரதா என்ற மன்னனைக் காண நாரதர் புறப்பட்டார். அவரைக் கண்ட அரசன் ஒரு முனிவருக்குச் செய்ய வேண்டிய உபசரணைகள் செய்து முடித்த பின், “முனிவரே! தாங்கள் எல்லா உலகமும் போய் வருகிறவர். சாதாரணமாக அல்லாமல், மிகச் சிறப்பான நிகழ்ச்சி ஒன்றனை எங்கும் கூற வேண்டுகிறேன்” என்று கேட்க, நாரதர் கூற ஆரம்பித்தார்.

ஸ்வேத துவீபம் என்ற பகுதியில் நிகழ்ந்த ஒன்றைக் கூறப் போகிறேன். மிக அழகியதும், குளிர்ச்சி பொருந்தியதுமான ஒரு ஏரி அங்கிருந்தது. ஏரி நிரம்ப தாமரை மலர்களும் இலைகளும் நிரம்பி இருந்தன. ஒரு தாமரை மலரின் பக்கத்தில் மிக அழகிய பெண் ஒருத்தி நின்று கொண்டிருந்தாள். அவள் நிற்பதைக் கண்ட நான், "அம்மா! நீ யார்? ஏன் இங்கு நிற்கிறாய்?” என்று கேட்டேன். கேட்டவுடன் அப் பெண்ணிட மிருந்து மூன்று ஒளிக் கற்றைகள் தோன்றி மறைந்தன. வியப்பால் வாயடைத்து நின்ற நாரதனைப் பார்த்து, அப் பெண் சொல்ல ஆரம்பித்தாள். நாரதா! என் பெயர் சாவித்திரி என்பதாகும். நீ பார்த்த மூன்று ஒளிக் கற்றைகளும் மூன்று வேதங்கள். நீ என்னை அடையாளம் கண்டு கொள்ளாதிருக்கும்படி நாரதனாகிய உன்னுடைய ஞானத்தைக் கவர்ந்துகொண்டேன். என்னிடமிருந்து முதலில் புறப்பட்ட ஒளி ரிக்வேதமாகும். அதை வாய்விட்டுப் படிப்பவர்கள் எல்லாப் பாவங்களினின்றும் விடுபடுவர். ரிக்வேதமே நாராயண சொரூபம் ஆகும். இரண்டாவதாக உள்ள யஜுர் வேதம் பிரம்ம சொரூபமே ஆகும். மூன்றாவது உள்ள சாமவேதம் சிவசொரூபம் ஆகும்.'

சாவித்திரி தேவதையைப் பார்த்து நாரதன், ‘என்னுடைய அறிவை எல்லாம் பறித்துக் கொண்டாயே, இழந்துவிட்ட அறிவை எப்படிப் பெறுவேன்’ என்று கேட்டவுடன் சாவித்திரி, 'இந்தக் குளத்தில் மூழ்கி எழுந்தால் நீ இழந்த அறிவைப் பெறுவாய், உன் போன ஜன்மம் பற்றியும் அறிந்து கொள்ள முடியும் என்றார். உடனே நாரதரும் அவ்வாறே செய்தார்.

பழம்பிறப்பு பற்றிய விளக்கம் நாரதருக்குத் தோன்ற லாயிற்று. அந்தப் பிறப்பில் நாரதர் சரஸ்வதி பிராமணனாகப் பிறந்து வாழ்ந்தார். இந்த மானிடப் பிறப்பே வீண் என்றும், குடும்பம், மனைவி, மக்கள் என்பவை எல்லாம் மாயை என்றும் காட்டிற்குச் சென்று தவம் செய்வதுதான், செய்யப்பட வேண்டிய காரியம் என்றும் உணர்ந்தார். உடனே தன் சொத்து முழுவதையும் மகனிடம் கொடுத்துவிட்டுக் காட்டிற்குச் சென்று தவம் புரியலானார். அவர் தவத்தை மெச்சி விஷ்ணு எதிரே வந்த பொழுது, நான் இந்த உடம்புடன் விஷ்ணுவிடம் கரைந்து விட வேண்டும் என்ற வரத்தை வாங்கினார். இந்த உடம்புடன் அத்தகைய காரியத்தைச் செய்ய முடியாது என்று கூறியவர் அவருக்கு நாரதர் என்ற பெயரையும் கொடுத்து மறைந்தார். நாரதர் இந்த உலகத்தில் நெடுநாள் வாழட்டும், என்று கூறி விட்டு விஷ்ணு மறைந்து விட்டார்.

நீண்ட காலம் தவம் செய்து இறந்த பிறகு பிரம்மலோகம் சென்று அங்கு நீண்ட காலம் தங்கிவிட்டு, பிரம்மனுக்கு மகனாக நாரதர் என்ற பெயருடன் பிறந்தார்.

அடுத்தபடியாக நாரதர், பிரியவரதனை நோக்கி அரசே! அடியிற் கண்ட விஸ்வ மந்திரத்தை உனக்கு உபதேசிக்கப் போகிறேன். அதை நன்கு பயன்படுத்திக் கொள்வாயா என்று கூறி ஒரு பாடலைக் கூறினார்.

ஆயிரக்கணக்கான கண்கள், கைகள், கால்கள் உடைய பரம்பொருளே! உனக்கு வணக்கம், சூரியனையும், சந்திரனை யும் கண்களாக உடைய பரம்பொருளுக்கு வணக்கம். சத்திய யுகத்தில் வெள்ளை உடையும், திரேதா யுகத்தில் சிவப்பு உடையும், துவாபர யுகத்தில் மஞ்சள் உடையும், கலியுகத்தில் கறுப்பு உடையும் அணிந்து காட்சிதரும் பரம்பொருளே, உன்னை வணங்குகிறேன். கேடயம், வாள், கதாயுதம், தெய்வீகத் தாமரை ஆகியவற்றை எப்பொழுதும் தாங்கிக் கொண்டிருப்பவரே உனக்கு வணக்கம்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
வராக புராணம், நாராயணனைப் பற்றிப் பின்வருமாறு பேசுகிறது.

பூமிதேவி: வராகமே! நாராயணனும் பரப்பிரம்மமும் ஒருவரா? அல்லது பலரா?

வராகம்: இருவரும் ஒருவரே ஆவர். என்றாலும் நாராயணனை நேரடியாக தரிசிப்பது என்பது கடினமான காரியம். அவர் எடுக்கும் பல்வேறு அவதாரங்கள் மூலமே அவரைக் காணமுடியும். பிரம்மனும், சிவனும் நாராயணனின் ஒரு பகுதியே ஆவர். பஞ்ச பூதங்களிலும் நாராயணனைக் காணலாம். பிரபஞ்சம் முழுவதுமே நாராயணனின் பல்வேறு சொரூபங்கள் ஆகும்.

அஷ்வசீரா என்ற மன்னன் கபில முனிவரிடம் நெருங்கிப் பழகிக்கொண்டிருந்தான். அவரைப் பெரிய தவமுனிவர் என்று கருதினானே தவிர, அவர் உண்மையில் யார் என்பதை அவன் அறியவில்லை. ஒருநாள் மன்னன் கபிலரிடம் வந்து முனிவரே! நாராயணனை தரிசனம் பண்ண நினைக்கிறேன். அது எப்படி முடியும் என்று கேட்டார். உடனே முனிவர், இரண்டு நாராயணர்கள் இருக்கின்றார்களே, நீ எந்த நாராயணனை தரிசனம் செய்ய விரும்புகிறாய் என்றார். வியப்படைந்த மன்னன், நீங்கள் சொல்லுகின்ற இரண்டாவது நாராயணன் யார் என்றார். கபிலர், அந்த நாராயணனை எளிதில் காணமுடியாது. இதோ என்னைப் பார்க்கிறாய் அல்லவா? நானும் நாராயணன்தான் என்றார். அதுகேட்ட மன்னவன், அது எப்படி முடியும். நான்கு கைகளும், சங்கு சக்கரம், கருடவாகனம் உடையவரல்லவா நாராயணன். இது எதுவுமே உங்களிடம் இல்லையே என்றான் மன்னன். கபிலர் சிரித்துக் கொண்டே அரசனே! என்னை நன்றாகக் கூர்ந்து பார், என்றார். மன்னன் அவரைக் கூர்ந்து பார்க்க. நான்கு கரங்களும், சங்கு சக்கரமும், கருடனும் ஆக கபிலர் காட்சி அளித்தார். வியப்படைந்த மன்னனுக்குக் கபிலர் விளக்கம் கூறுகிறார். “நாராயணனைப் பொறுத்தவரை வெளிப்பட்டு நிற்கும் நிலை, வெளிப்படாது உள்ளடங்கி நிற்கும் நிலை என இரண்டு பகுதிகள் உண்டு. வெளிப்படாத நிலையை யாரும் காணமுடியாது. அது ஒரு பொருளும் அன்று. அதற்கு ஒரு பெயரும் இல்லை, வடிவமும் இல்லை. ஆனால் வெளிப்பட்டு நிற்கும் நிலையில் அவதாரங்களாகத் தோன்றியதோடல்லாமல், பஞ்சபூதங்களாகவும் அவற்றின் பேராற்றல்களாகவும் அவர் காட்சி அளிக்கிறார். அவனை உன்னுள்ளும் காணலாம். வெளியில் உள்ள எப்பொருளிலும் காணலாம். நாராயணனை எல்லாப் பொருளிலும் காண்பதுதான் உண்மையான ஞானம் எனப்படும்.”

இப்பொழுது மன்னன் கபிலரைப் பார்த்து ஞானம் சிறந்ததா? செயல் சிறந்ததா? என வினா எழுப்பினான். உடனே கபிலர் ரைவியா, வசு இவர்களின் கதையைச் சொல்லத் துவங்கினார்.

ரைவியாவும் வசுவும்

பிரம்மனின் பரம்பரையில் வந்தவனாகிய வசு என்ற மன்னன் ஒருநாள் தேவகுருவாகிய பிரகஸ்பதியைக் காணப் புறப்பட்டான். அவனை வழியில் சந்தித்த சித்ரவதா என்ற கந்தர்வன், அரசனே! பிரகஸ்பதி இப்பொழுது அவர் வீட்டில் இல்லை. தேவர்களையும், ரிஷிகளையும் ஒரு கூட்டத்திற்கு வருமாறு பிரம்மா அழைத்திருக்கிறார். எனவே பிரகஸ்பதி அக்கூட்டத்திற்குச் சென்றுள்ளார். கூட்டம் நடைபெறுகின்ற இடத்திற்கு வெளியே நீங்கள் காத்திருந்தால், பிரகஸ்பதி வெளியே வரும்பொழுது அவரைச் சந்திக்கலாம் என்று கூறினார். கந்தர்வனின் யோசனையை ஏற்றுக்கொண்ட வசு மன்னன் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வெளியே பொறுமையோடு காத்திருந்தார். அவன் காத்திருக்கும் நேரத்தில் ரைவியா முனிவனும் பிரகஸ்பதியைக் காணவந்தார். வசு மன்னன் தங்கிய இடத்திற்குப் பக்கத்திலேயே முனிவனும் தங்கினான். சற்று நேரத்தில் பிரகஸ்பதி வெளியே வந்தார். இருவரும் எழுந்து மிக்க வணக்கத்தோடு பிரகஸ்பதியைக் கும்பிட்டனர். நான் என்ன செய்ய வேண்டும் என்று அவர் கேட்க, இருவரும் ஒரே குரலில், ஞானம் சிறந்ததா செயல் சிறந்ததா என்பதை எங்களுக்குத் தெளிவிக்க வேண்டும் என்று வேண்டினர். அதைக் கேட்ட பிரகஸ்பதி நான் இப்பொழுது ஒரு கதை சொல்லப்போகிறேன். அதிலிருந்து உங்கள் வினாவிற்கு விடையை அறிந்து கொள்ளலாம் எனக் கூறிவிட்டுக் கதையைச் சொன்னார்.

கங்கைக் கரையில் சம்யமனா என்ற பிராமணன் வசித்து வந்தான். வேதங்கள் படித்து, அறிவு வளர்த்து ஒரளவு ஞானம் பெற்றவனாகவே இருந்தான். பக்கத்தில் குடியிருந்த வேடன் நிஷ்டுரகா, எந்தக் கலையையோ, ஞானத்தையோ கற்கவில்லை. பறவைகளை வேட்டையாடுவதையே தன் தொழிலாகக் கொண்டிருந்தான். ஒருநாள் இந்த பிராமணன் அந்த வேடனைப் பார்த்து இத்தனை உயிர்களைக் கொல்கிறாயே, நீ செய்வது பாவமில்லையா என்றார். அதற்கு நிஷ்டுரகா வேடன் விடை கூறினான்.

பிராமணனே! யார் யாரைக் கொல்லுகிறோம் என்று நினைத்துப் பார்த்தீரா? எல்லா உடல்களிலும் தங்கி இருக்கும் ஆன்மா கொல்வதும் இல்லை, கொல்லப்படுவதும் இல்லை. உடம்பு செய்கின்ற செயல்களுக்கு ஆன்மா பொறுப்பாவதும் இல்லை. எல்லா உடம்புகளிலும் பரவி இருந்தாலும் ஆத்மா ஒன்றே ஆகும் அல்லவா? எந்த ஒரு தனிப்பட்ட உயிருடன் கூடிய உடம்புக்குத் தீமை செய்தால், அது எல்லா உடம்பிலுள்ள உயிர்களுக்கும் சேரும். ஆகவே ஒரு தனிப்பட்ட உயிரை உடம்புடன் கூடிய உயிரைப் பிரிக்க முடியாது. இதை நீர் புரிந்து கொள்வதற்கு நான் ஒரு செயல் செய்து காட்டுகிறேன் என்று கூறி நெருப்பைப் பற்ற வைத்தான். அது கொழுந்து விட்டு எரியும் பொழுது பிராமணனைப் பார்த்து இந்தத் தீ இத்தனை நாக்குகளோடு எரிகிறதே, ஏதாவது ஒரு நாக்கை மட்டும் எடுத்து அணைத்துப் பார் என்றான். பிராமணன் முயன்றபொழுது எந்த நாக்கில் தண்ணீர் பட்டாலும் அது தீ முழுவதையும் அனைத்துவிடக் கண்டான். இப்பொழுது வேடன் சொன்னான், எந்தச் செயலையும் நான் செய்கிறேன் என்று நினைத்தால் அது ஆணவத்தின் எல்லையாகிவிடும், நாராயணன் என்னைக் கருவியாகக் கொண்டு செய்கிறான் என்று நினைத்தால் இதில் கோபிப்பதற்கு, அகங்காரம் கொள்வதற்கு இடமே இல்லை என்று கூறியவுடன், தேவ உலகினின்று விமானம் வந்து அவ்வேடனை அழைத்துச் சென்றுவிட்டது.

இக்கதையைக் கூறிவிட்டு பிரகஸ்பதி, அரசன், முனிவன் ஆகிய இருவரையும் பார்த்து உங்கள் கேள்விக்கு விடை கிடைத்து விட்டதல்லவா என்று கேட்க அவர்கள் மகிழ்ச்சியுடன் திரும்பி விட்டனர். இக்கதையினைக் கேட்ட அஷவசீரா தன் மகனிடம் அரசாட்சியை ஒப்படைத்து விட்டுக் காட்டிற்குத் தவம் புரியச் சென்றான்.

வசு

தன் மகன் விவஸ்வானிடம் அரசாட்சியை ஒப்படைத்து விட்டு புஷ்கரா தீர்த்தம் சென்று யாகம் ஒன்றினைச் செய்தார். அந்த யாகத்தினின்று ஒர் உருவம் வந்து, 'நான் என்ன செய்ய வேண்டும் என்று வசுவைப் பார்த்துக் கேட்டது. வசுவும், நீ யார்? எங்கிருந்து வருகிறாய்? என்று கேட்டான். அந்த உருவம் கீழ்க்கண்ட கதையினைச் சொல்லத் துவங்கியது.

முற்பிறப்பில் வசு காஷ்மீரத்தில் அரசு செலுத்தி வந்தான். அவன் ஒருமுறை வேட்டையாடக் காட்டிற்குச் சென்றான். அப்பொழுது ஒரு முனிவர், மான் வடிவத்தில் இங்கும் அங்கும் உலவிக்கொண்டிருந்தார். மானை முனிவர் என்று அறியாத வசு, அம்மானைக் கொன்றுவிட்டான். உண்மையை அறிந்து வருந்திய அரசன், பிராயச்சித்தங்கள் பல செய்தான். ஒருநாள் வசு அரசன் தாங்கொணா வயிற்றுவலி காரணமாக இறந்து போனான். அவ்வாறு இறக்கும் சமயத்தில் 'நாராயணா' என்று கூறியபடி உயிர் துறந்தான். யாக குண்டத்தில் இருந்து வெளிவந்த உருவம் "நான் ஒரு ராட்சசன். வசு அரசனின் பிரம்மஹத்தி தோஷத்தால் நான் உன் உடம்பில் புகுந்து கொண்டேன். அதனாலேயே மிகுந்த வயிற்றுவலியினால் நீ துன்பமுற்று இறந்து போனாய்" என்று கூறிற்று. அவ்வாறு இறந்த மன்னன் நாராயணா என்று கூப்பிட்டதால் வைகுண்ட வாசிகள் வந்து, ராட்சசனிடமிருந்து அரசனை மீட்டு அழைத்துச் சென்றனர். அரசன் வைகுண்டத்தில் நீண்ட ஆண்டுகள் மகிழ்ச்சியுடன் இருந்து பின் மீண்டும் காஷ்மீரத்து அரசனாகப் பிறந்தான். பிரம்ம ராட்சசனும் மீண்டும் அரசன் உடம்பில் புகுந்து கொண்டான். அரசன் ஒரு யாகம் செய்து விஷ்ணுவின் பெயரைக் கூறியவுடன், ராட்சசன் அரசன் உடம்பிலிருந்து வெளியே வரும்படி ஆயிற்று. ஆனால் இம்முறை விஷ்ணுவின் நாமத்தைக் கேட்டதால், பிரம்ம ராட்சசனின் பாவங்கள் அனைத்தும் விலகி, அவன் நேர்மையானவனாக மாறினான். வசு அரசன் அவனைப் பாராட்டி அவனுக்கு ஒரு வரம் கொடுக்க விரும்பினான். அந்த வரத்தின்படி பிரம்மராட்சசன் ஒரு வேடனாகப் பிறந்து தர்மவியாதா என்ற பெயருடன், நேர்மையானவனாகத் திகழ்வான் என்று கூறினான். வரத்தைக் கொடுத்த வசு அரசன், வைகுந்தலோகம் சென்றான்.

ரைவியாவின் கதை

ஒருமுறை ரைவியா என்ற முனிவன் தனது குடிலில் அமர்ந்திருக்கும் பொழுது, மற்றொரு முனிவன் திடீரென்று உள்ளே நுழைந்து, ரைவியாவுக்குத் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தான். தெரிவித்த உடனேயே வந்தவன், காற்றடைத்த பையைப் போல உடம்பு பருமனாகிக் கொண்டே போக, மிக மிகப் பெரிய வடிவத்தை எடுத்தான். வியப்பில் ஆழ்ந்த ரைவியா, முனிவனே! நீ யார்? என்னை ஏன் வாழ்த்தினாய்? என்ற இரு வினாக்களை ரைவியா கேட்க அந்த உருவம் பதில் கூறிற்று. முதலில் நான் யார் என்பதை நீ அறிந்துகொள். பிரம்மனின் நான்கு புதல்வர்களில் ஒருவனாகிய சனத்குமாரன் தான் நான். உன்னை வாழ்த்தியதற்கு ஒரு காரணம் உண்டு. நீ புண்ணிய தீர்த்தமாகிய கயைக்குச் சென்று உன் மூதாதையர் கட்குப் பிண்டம் போட்டாய் அல்லவா? அது ஒரு மிகச் சிறந்த காரியம், அதனால்தான் உன்னை வாழ்த்தினேன். அதன் சிறப்பை அறிய ஒரு கதை சொல்கிறேன் கேட்பாயாக என்று கூறிவிட்டு, கதை சொல்ல ஆரம்பித்தார் சனத்குமாரர்.

ஒருமுறை வைசால நாட்டை ஆண்ட விசாலா என்ற மன்னன், எல்லாச் செல்வங்களும் நிறைந்திருந்தாலும், தனக்கு மகன் இல்லை என்பதால் பெரிதும் நொந்து போய் இருந்தான். அமைச்சர்கள் முதலானோர் ஒன்றுகூடி ஆராய்ந்து, அரசே! கயைக்குச் சென்று உன்னுடைய முன்னோர்கள் திருப்தி அடையும் வகையில் பிண்டங்கள் போட்டால் உன் குறை நீங்கும் என்று கூறினார்கள். அப்படியே விசால மன்னன் கயைக்கும் சென்று, பிதுர்க்களுக்கு வழிபாடு செய்தான். அப்பொழுது ஆகாயத்தில் மூன்று வடிவங்கள் தோன்றி நின்றன. ஒரு வடிவம் தூய்மையான வெண்மை உடையது; மற்றொன்று சிவப்பு நிறமுடையது; மூன்றாவது வடிவம் கறுப்பு நிறம் கொண்டது. தோன்றிய மூன்று வடிவங்களில் வெண்மையான வடிவம் விசால மன்னனின் தந்தை, சிவப்பு வடிவம் அவன் பாட்டன், கறுப்பு வடிவம் மன்னனின் கொள்ளுப் பாட்டன் வடிவம். விசால மன்னனின் தந்தை எவ்வித பாவமும் செய்யாததால் வெண்மை நிறத்துடன் இருந்தார். அவன் பாட்டன், கொள்ளுப் பாட்டன் பூமியில் வாழ்ந்த பொழுது மிகுந்த தவறு செய்ததால் இந்நிறங்களைப் பெற்றனர். இப்பொழுது விசால மன்னன் கயையில் பிதுர்க்கள் அனைவருக்கும் பிண்டம் போட்டதால் அவனுடைய பாட்டன், கொள்ளுப் பாட்டன் ஆகியவர்கள் செய்த பாவங்களில் இருந்து விடுபட்டுத் தூய்மை அடைந்தார்கள்.

சனத்குமாரன் சொல்லியதிலிருந்து கயையில், பிதுர்க்களுக்குப் பூஜை செய்வதால் அவர்கள் செய்த பாவங்களில் இருந்து உடனே விடுதலை அடைகிறார்கள் என்பதும் பிதுர்க் கடன் செய்பவர்கள் தாங்களும் பெரிய புண்ணியத்தைப் பெறுகிறார்கள் என்பதும் இக்கதையின் மூலம் தெரிய வருகிறது.

சனத்குமாரர் மறைந்த பின் ரைவிய முனிவர் விஷ்ணுவை கதாதர சொரூபத்தில் தியானம் செய்தார். சிலகாலம் கழித்து விஷ்ணு அவருக்கெதிரே தோன்றி, என்ன வரம் வேண்டும் எனக் கேட்க, சனத்குமாரர் வாழ்கின்ற உலகில் தானும் சென்று வாழ வேண்டும் என்று முனிவர் கேட்க, அவ்வாறே ஆகட்டும் என விஷ்ணு வரம் கொடுத்தார்.

வைஷ்ணவி தேவி

பிரபஞ்சம் பதினான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஏழு பிரிவுகள் மேலுலகம் என்றும், மற்ற ஏழும் கீழுலகம் என்றும் கூறப்படும். மேலுலகம் என்று கூறப்படும் பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், மகர்லோகம், ஜனலோகம், சத்யலோகம், தடலோகம் ஆகியவை. கல்பத்தின் முடிவில் பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம் ஆகியவை அழிந்துவிடும். மீதமுள்ள நான்கு லோகங்கள் மகாப்பிரளய காலத்தில் மட்டுமே அழிகின்றன. மக்கள் பூலோகத்திலும், பறவைகள் புவர்லோகத்திலும், நேர்மையும், தகுதியும் உள்ளவர்கள் சுவர்லோகத்திலும், முனிவர்கள் மகர்லோகத்திலும் உள்ளனர்.

மந்தரமலை என்ற மலை, பூமியில் அமைந்துள்ளது. வைஷ்ணவி தேவி திருமணம் செய்து கொள்வதில்லை என்று முடிவு செய்து, மந்தர மலைக்குச் சென்று தவம் இயற்றினாள். (வராக புராணம் வைஷ்ணவி தேவியும், சரஸ்வதியும் ஒன்றே எனக் கூறுகிறது,)

ஒரு சமயம் வைஷ்ணவி தேவியின் தவம் சற்றுக் கலைந்து, அதிலிருந்த லட்சக்கணக்கான அழகான பெண்கள் தோன்றினர். இந்தச் சிறு தேவதைகளுக்கென ஒரு அழகிய அரண்மனையை நிர்மாணித்தனர். பிரம்மன், இந்திரன் ஆகியோரைக் காணச் சென்றுகொண்டிருக்கும் பொழுது, இந்த அழகிய வடிவம் கொண்ட வைஷ்ணவி தேவி, மற்றும் உள்ள பெண்களைப் பார்த்து வியப்படைந்தார். இவர்களைக் கண்டவுடன், மிகவும் சக்தி வாய்ந்த மகிஷாசுரனை ஒழிப்பதற்கு ஒரு நல்ல உபாயத்தைக் கண்டார் நாரதர்.

கடற்கரையில் மாபெரும் நகரம் அமைத்து அதில் ஆட்சி செய்து வந்த மகிஷாசுரனைக் காணச் சென்றார் நாரதர். அவனைப் பார்த்து மந்தர மலையில் வைஷ்ணவி தேவி என்ற அழகான பெண்ணைப் பார்த்தேன். உன்னைவிடச் சிறந்த மணவாளன் அவளுக்குக் கிடைப்பது கடினம். யாரையாவது அனுப்பி அவளை மணம் பேசி முடித்துக் கொள் என்று கூறிப் போனார் நாரதர்.

நாரதர் பேச்சைக் கேட்ட மகிஷன் தன் பிரதானிகள் முதலானவர்களை அழைத்தான். அவர்களில் யாரையாவது அனுப்பி மணம் பேசலாம் எனக் கூறினார். மகிஷன் அதற்கு ஒப்புக் கொள்ளாமல் பெரிய படையை விருபாக்ஷன் தலைமையில் அனுப்பிப் போரில் வைஷ்ணவியைத் தோற்கச் செய்து மணந்து கொள்வதே சரி என்று எண்ணினான்.

அதன்படி ஒரு பெரிய அசுரப்படை மந்தர மலைக்கு வந்தது. தேவர்கள் அனுப்பிய படை அசுரர்களை எதிர்க்க முடியாமல் சின்னாபின்னப்பட்டு ஓடின. அப்பொழுது மகிஷனுடைய பணியாளர்களில் ஒருவராகிய வித்யுத்பிரபா என்பவர் வைஷ்ணவியிடம் சென்று, மகிஷனைவிடச் சிறந்த மாப்பிள்ளை கிடைப்பது முடியாத காரியம். ஆகவே அவனை மணந்து கொள் என்று புத்திமதி கூறினார். இத்தோடு நில்லாமல், வித்யுத்பிரபா, மகிஷனுடைய பழைய வரலாற்றையும் சொல்ல ஆரம்பித்தார்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
மகிஷனின் பூர்வக் கதை

முன்னொரு காலத்தில் விப்ரசித்தி என்ற கொடிய அரக்கன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு மிக அழகான ஒரு பெண் இருந்தாள். மகிஷ்மகி என்ற பெயருடைய அவள், தன் தோழிகளோடு சேர்ந்து அழகிய பள்ளத்தாக்கு ஒன்றில் சென்று கொண்டு இருக்கையில், ஆற்றங்கரையில் அமைந்த அழகிய ஆசிரமம் கண்டார்கள். அந்த ஆசிரமம், அது அமைந்திருக்கும் சூழ்நிலை ஆகியவற்றைக் கண்ட மகிஷ்மகி அந்த ஆசிரமத்தைத் தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்தாள். உள்ளே ஒரு முனிவர் தவம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்து எப்படியாவது விரட்டிவிட வேண்டும் என்று முடிவு செய்தாள். அவர் அந்த இடத்தை விட்டுப் போய்விட்டால், அந்த ஆசிரமம் தனக்குக் கிடைக்கும் என்று எண்ணிய மகிஷ்மகி ஒரு பெண் எருமை வடிவு கொண்டு ஆசிரமத்தின் வெளியே குழப்பம் விளைவித்தாள். பிறகு முனிவனை பயமுறுத்த அவ்வடிவுடன் உள்ளே நுழைந்தாள். முதலில் சற்று பயந்து போன முனிவர் உடனே தன் அறிவு விளக்கத்தால் அந்த எருமை மகிஷ்மகி என்பதைக் கண்டு விட்டார். கடுங் கோபம் கொண்ட அவர், நீ ஒரு பெண் எருமையாக நூறு ஆண்டுகள் திரிவாயாக என்று சாபமிட்டார். மகிஷ்மகி தன் பிழையைப் பொறுக்க வேண்டும் என்று மிகவும் வேண்டிக் கொள்ள அவளுக்கு எப்பொழுது ஒரு ஆண் குழந்தை பிறக்கிறதோ அப்பொழுது அவளுடைய சாபம் நீங்கும் என்றும், சாப விமோசனம் கூறினார்.

நர்மதை ஆற்றின் கரையிலேயே இந்தப் பெண் எருமை திரிந்து கொண்டிருக்கும் பொழுது அந்த ஆற்றில் ஒரு விசேஷம் நடைபெற்றது. சிந்து துவீபா என்ற முனிவனின் சக்தியால், நர்மதை ஆற்று நீர் ஒரு மாபெரும் சக்தியைப் பெற்றது. அந்த நேரத்தில் இந்தப் பெண் எருமை நர்மதை நீரில் குளிக்கவும், அவளுக்கு ஒர் ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை தான் மூன்று உலகங்களும் யாருடைய பெயரைக் கேட்டவுடன் நடுங்குகின்றனவோ அந்த 'மகிஷாசுரன்’ ஆகும்.

இதே மகிஷாசுரன் தான் வைஷ்ணவி தேவியை மணக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தூதர்களை அனுப்பினான். வைஷ்ணவி தேவி தன்னையோ தன் பரிவாரங்களில் எந்த ஒருவரையுமோ கூட அவன் மணக்க முடியாது என்று சேதி அனுப்பி விட்டாள். அதன் பிறகு தேவபடைகள் அழிந்தாலும் வைஷ்ணவி தேவியும், அவரது துணைவியரும் போருக்கு எழுந்த பொழுது அசுரப் படைகள் அழிந்தன. இறுதியாக தேவியே, மகிஷாசுரனுடன் நேரடியாகப் போர் புரிந்தார். பல காலம் போர் புரிந்தபின், வைஷ்ணவி தேவி மகிஷனை வென்றாள் என்று வராக புராணம் கூறுகிறது.

(இக்கதையை விரிவாகச் சொல்லும் மார்க்கண்டேய புராணம், தேவி பாகவதம் ஆகிய அனைத்துமே துர்க்கைதான் மகிஷனைக் கொன்றவள் என்று பேசுகின்றனவே தவிர, வைஷ்ணவியின் பெயரைக் கூறவில்வை என்பதைச் சிந்திக்க வேண்டும்,)

வராக வடிவிலிருந்த விஷ்ணு, பிருத்விக்குச் சொன்ன சத்யதபா முனிவர் கதை

சத்யதபா என்ற முனிவர் காட்டில் தவம் செய்து கொண்டிருந்தார். ஒரு முறை சுள்ளிகளைச் சேர்த்துக் கட்டுவதற்காக வெட்டின பொழுது அவருடைய கையிலுள்ள சுண்டுவிரல் வெட்டப்பட்டு தெறித்து விட்டது. வெட்டப்பட்ட விரலில் இருந்து ரத்தம் வராமல், சாம்பல் போன்ற பொடி வெளி வந்தது. துண்டிக்கப்பட்ட விரலை எடுத்து வெட்டுண்ட பகுதியில் வைத்து அமுக்கியவுடன் அந்த விரல் உடம்புடன் ஒட்டிக் கொண்டது. அந்த முனிவர் எந்த மரத்தடியில் தங்கி இருக்கும் பொழுது இந்நிகழ்ச்சி நடைபெற்றதோ அந்த மரத்தில் கின்னர தேவ ஜாதியைச் சேர்ந்த ஒரு கணவனும் மனைவியும் இந்த நிகழ்ச்சி முழுவதையும் பார்த்துக்கொண்டிருந்தனர்.

இதில் ஏற்பட்ட அதிசயம் தாங்காமல் அவர்கள் இருவரும் தேவேந்திரனிடம் சென்று தாங்கள் கண்டதைக் கூறினர். தேவேந்திரன் விஷ்ணுவிடம் சென்று இவர்கள் கூறியதை எடுத்துச் சொல்லி, அந்த முனிவனைச் சோதிக்க வேண்டு மென்று கேட்டுக் கொண்டான்.

இந்திரன் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட விஷ்ணு ஒரு பன்றி வடிவெடுத்து சத்யதபா ஆசிரமத்தைச் சுற்றிக் கொண்டிருந்தார். அவர் உடம்பில் ஒர் அம்பு பாதி குத்திக் கொண்டும், பாதி வெளியிலும் நின்றது. சற்று நேரத்தில் இந்திரன், வேடன் வடிவில் முனிவரிடம் வந்தான். முனிவரே உமது ஆசிரமத்தைச் சுற்றி பாதி குத்திய அம்புடன் ஒரு பன்றி சுற்றி வருவதைப் பார்த்தீரா? நான்தான் அந்த அம்பை எய்தேன். ஆனால் ஒரே ஒரு அம்பு குத்தினதால் அந்தப் பன்றி சாகவில்லை. இப்பொழுது அந்தப் பன்றிதான் என் குடும்பம் முழுவதற்கும் ஆகாரம் ஆக வேண்டும். ஆகவே பன்றி எங்கே போயிற்று என்று சொல்லும்” என்று கேட்டான்.

இந்த நிலையில் சத்யதபா சிந்திக்கத் துவங்கினார். கடவுள் கொடுத்த ஐந்து உறுப்புகளும் ஒவ்வொரு பணிக்காகவே ஏற்பட்டுள்ளன. அடுத்ததொரு பணியை அது செய்யாது. கண் பார்க்கும். பார்த்ததைப் பற்றி வாயில்லாத காரணத்தால் அது சொல்லாது. மூக்கு மோக்கும். காது கேட்கும் என்றாலும் இவை ஒவ்வொன்றும் நிகழ்ந்ததைச் சொல்ல வேண்டுமானால் வாயின் உதவியை நாட வேண்டும். வாய், கண் பார்த்ததைச் சொல்லுமே தவிர, பார்க்கும் சக்தி வாய்க்கு இல்லை. எனவே கண் பார்த்ததை வாய் சொல்ல வேண்டும் என்று அவசிய மில்லை. முனிவரின் கண் பன்றியைப் பார்த்திருந்தாலும் அவர் வாய் பேசாது நின்று விட்டார். பொய் கூறாமலேயே முனிவர் பன்றியைக் காப்பாற்றிவிட்டார். இதனால் மகிழ்ந்த இந்திரனும், விஷ்ணுவும் முனிவரின் எதிரே காட்சி தந்தனர். இதனால் சத்யதபா என்ற முனிவரும் அவர் குரு அருணியும் விஷ்ணுவிடம் ஐக்கியமாயினர்.

அடுத்தபடியாக வராகம், பிருத்விக்குச் சொன்ன கதை

சுவேதா என்ற மன்னன் இலவிருதவர்ஷா என்ற நாட்டை ஆண்டு வரும்பொழுது பல யாகங்களும், தியானங்களும் செய்தான். அவன் குருவான வசிட்டர், அரசே! இந்த தானங் களோடு உண்பதற்குரிய அரிசியையும் தானம் செய்யுங்கள் என்றார். பொன், வெள்ளி இவற்றின் சிறப்பில் தன்னை மறந்திருந்த மன்னன் அரிசி தானத்தை மிக மட்டமாகக் கருதினான். ஆகவே அவன் அரிசி தானம் செய்யவில்லை. சொர்க்கம் சென்ற சுவேதா உண்பது முதற்கொண்டு எல்லாவற்றிற்கும் வேண்டுமான பொருள் சொர்க்கத்தில் இருப்பதைக் கண்டான். ஆனால் அரிசிச் சோறு தின்று பழகிய சுவேதாவிற்கு சொர்க்கத்தில் அரிசியே கிடைக்கவில்லை. உடனே அவன் பூமிக்குத் திரும்பி தான் இறந்த இடத்தை வந்து பார்த்தான். அங்கு பிண்டம் போட்ட அரிசி சிதறிக் கிடந்ததைக் கண்டு அதை உண்ண ஆரம்பித்தான். அப்போது அங்கு வந்த வசிட்டர், நான் சொல்லும்பொழுது நீ கேட்கவில்லை. அரிசி தானத்தை அலட்சியமாக நினைத்துவிட்டாய். இப்பொழுது தெரிகிறதா அதன் அருமை? இவ்வாறு அவனுக்கு அறிவுரை கூறிய வசிட்டர் மன்னன் சுவேதா விளங்கிக் கொள்வதற்காக மற்றொரு கதையும் எடுத்துக் கூறினார்.

விஷிதஷ்வா என்ற மன்னன் யாகம் செய்யும் பொழுது உணவுப் பண்டங்களையும் எள், அரிசி முதலானவற்றையும் தானம் செய்ய வேண்டும் என்று பெரியோர்கள் கூறிய அறிவுரையைச் சட்டை செய்யாமல் இருந்தான். அதனால் அவன் சொர்க்கம் சென்று பசியினால் வாட நேர்ந்தது. எனவே தானம் செய்பவர்கள் உணவுப் பொருட்களையும் தானம் செய்ய வேண்டும் என்று கூறி முடித்தார்.

இதுவரை கூறிக் கொண்டு வந்த அனைத்தும் வராக புராணத்தில், வராக சம்ஹிதையின் ஒரு பகுதி ஆகும். இந்தப் பகுதி முதன் முதலில் பரப்பிரம்மத்தால், பிரம்மனுக்குச் சொல்லப்பட்டது. பிரம்மனில் இருந்து, புலத்தியனுக்கும், அடுத்து பரசுராமனுக்கும், அடுத்து உக்ரனுக்கும், அடுத்து மனுவுக்கும் சொல்லப்பட்டது. இதைச் சொல்லிக் கொண்டு வந்த வராகம், இந்த சம்ஹிதை போக புராணப் பகுதியை பிற்காலத்தில் வேதவியாச முனிவர் பாடல்களாகப் புனையப் போகிறார் என்றும், பிறகு அவரே லோமஹர்ஷனருக்கும், செளனகருக்கும் அதைச் சொல்லித் தருவார் என்றும், எதிர்காலத்தைப் பற்றி வராகம் கூறிற்று. இந்தப் பகுதியை கார்த்திகை துவாதசி அன்று படிப்பவர், அவர் விரும்பியவற்றை எல்லாம் பெறுவர்.

வராகம் பூமியை மீட்ட கதை

சனத்குமார முனிவர், ஒரு முறை பூமிதேவியிடம் அவள் வராகத்தினால் காப்பாற்றப்பட்ட கதையினைக் கூறுமாறு கேட்டார். பூமிதேவியும் அக்கதையைக் கூறினாள். ஒருமுறை பூமியானது பாதாள உலகில் மூழ்கிப்போன போது, பூமி தேவி விஷ்ணுவிடம் வேண்டி தன்னைக் காப்பாற்றும்படிக் கேட்டாள். விஷ்ணுவைப் புகழ்ந்து அவள் பாடிய பாடல்களே கேசவ ஸ்துதி எனப்படும். இதனைப் படிப்பவர்கள், ஏழ்மை, பாவம் இவற்றினின்று விடுதலை பெறுவர். பூமிதேவி கூறியதைக் கேட்ட விஷ்ணு, மிகப் பெரிய வராக உருவம் எடுத்தார். ஆறாயிரம் யோஜனை உயரமும், மூன்றாயிரம் யோஜனை அகலமும் கொண்டிருந்தது அவ்வராகம். கடலினுள் புகுந்த வராகத்தினால் பூமிக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. பல மலைகள் கடலினுள் விழுந்தன.

வராகம், பூமியைத் தேடிக் கண்டுபிடித்து, தன் கொம்புகளிடையே வைத்து நீருக்கு மேலே கொண்டு வந்தது. ஆயிரம் வருடங்கள் தன் கொம்புகளிடையே பூமியை வைத்திருந்து, பிரபஞ்ச உற்பத்தியின் போது, பூமியை அதற்குரிய இடத்தில் வைததது.

விஷ்ணுவைத் திருப்திப்படுத்துதல் எவ்வாறு ?

பூமிதேவியை நோக்கி வராகம் சொல்லியதாவது: மக்கள் மேற்கொள்ளும் சடங்குகள், கிரியைகள், ஹோமங்கள் என்பவற்றால் நான் அதிகம் திருப்தி அடைவதில்லை. துவாதசி நாளன்று வெண்மையான உடை உடுத்திக் கொண்டு, வெண்மையான மலர்கள் கொண்டு விஷ்ணுவைப் பூஜித்தால் போதுமானது. அவ்வாறு பூஜை செய்பவர் மனம், மொழி, மெய் ஆகிய மூன்றும் ஒருசேர விஷ்ணுவை நினைப்பதில் ஈடுபடுவாரேயானால் அதைவிட விஷ்ணுவைத் திருப்தி செய்ய வேறு எந்த வழியும் தேவையில்லை. உண்மையான அன்பு ஒன்றையே விஷ்ணு விரும்புகிறார். சடங்குகளில் அன்புக்கு முக்கியத்துவம் இல்லை. ஆதலால் விஷ்ணு அதை அதிகம் விரும்புவதில்லை.

நால்வகை வர்ணத்தாரும் விஷ்ணுவின் ஆசியைப் பெறத் தகுதி உடையவர். மேல்நால்வகையினரும் நற்பழக்கங்கள், துயசிந்தனை, பிறருக்குக் கொடுத்தல், அன்புடைமை, பிறர் பொருளுக்கு ஆசைப்படாதிருத்தல் ஆகிய குணங்களுடன் இருப்பார்களேயானால் விஷ்ணுவின் ஆசியை எளிதில் பெற முடியும்.

சைவ உணவு உட்கொண்டு அமைதியாகவும், பொறி புலன்களை அடக்கிய முறையிலும், பிறரிடம் பகைமை, பொறாமை முதலிய தீக்குணங்கள் இல்லாமலும் யார் விஷ்ணுவை வழிபடுகிறார்களோ அவர்கள் எளிதில் விஷ்ணுவின் அருளைப் பெறுகிறார்கள். போதுமென்று மனத்தோடு வாழும் மனிதனையும், கணவனிடம் அன்பு கொண்ட மனைவியையும் விஷ்ணு அருள் செய்கிறார். விஷ்ணு மன்னிக்க முடியாததும், ஏற்றுக் கொள்ள முடியாததும் ஆகிய சிலவற்றைக் காணலாம்.

1. அசுத்தமான உணவை உண்ணுதல், 2. குளிக்காமலும், இறந்த உடலைத் தொட்டு, சுடுகாட்டில் எரித்து வந்தும் தன்னைத் தூய்மை செய்து கொள்ளாது விஷ்ணுவை வணங்குதல், 3 அமைதி இல்லா மனத்துடனும், யாரிடமாவது கோபம் கொண்ட மனநிலையிலும், 4. மீன் உணவு வாத்துக் கறி உண்ட பின்பு, 5. விஷ்ணுவிற்குப் படைக்காமல் உண்ணப் படுகின்ற உணவு, 5. மது உண்ட பின்பு, 7. பன்றிக் கறி உண்ட பின்பு, 8. இசைவு இல்லாமல் விஷ்ணு கோவிலைத் திறப்பதையும் அவர் ஏற்றுக் கொள்வதில்லை.

இறந்தவர்களுக்குச் செய்யும் மரியாதை

இறந்து போன மூதாதையர்களுக்கு எப்படி மரியாதை செலுத்த வேண்டும் என்று மார்க்கண்டேய முனிவரும் வராகமும் விவாதித்தனர்.

ஏழு தலைமுறைகளை மூதாதையர் என்று சொல்வர். இதில் ஒருவனுக்கு முற்பட்ட நான்கு தலைமுறைகளை பருப் பெருளாகவும், அதற்கு முற்பட்ட மூன்று தலைமுறைகளை நுண்பொருளாகவும் கொண்டு வழிபட வேண்டும். முன்னோர்களுக்குச் சிரார்த்தம் முதலிய கிரியைகள் செய்யும் பொழுது பொருட் செல்வம் என்பதும், பொருள்களைப் படைத்துத்தான் வழிபடவேண்டும் என்பதும் ஒரு பொருட்டே அல்ல. பொருளில்லாதவன் மூதாதையர்களை உளமார நினைத்து, தூய்மையான அன்புடன் கைகளைக் குவித்து வணங்கினால் அதுவே போதுமானது. மூதாதையர்கள், பொருள்களைப் படைத்து மனத்தில் அன்பில்லாமல் சடங்கு களாகச் சிரார்த்தம் முதலிய கிரியைகள் செய்து மகிழ்வதைவிட முதலில் சொன்ன முறையில் அன்போடு செய்யப்படும் வணக்கத்தில் அதிகம் மகிழ்கிறார்கள். இறந்தவர்களை எரிக்கும் சடங்கிற்கு எந்தவிதமான காலக்கட்டுப்பாடும் தேவையில்லை. உத்தராயணம், தட்சணாயணம், எந்த நட்சத்திரம் என்று கவலைப்படத் தேவையில்லை.

துர்ஜயாவின் கதை

சத்ய யுகத்தில் இக்கதை இடம் பெற்றது. அரசன் சுப்ரதிகாவிற்கும், வித்யுத்பிரபாவிற்கும் மகனாகப் பிறந்தவன் துர்ஜயா. இவர் துர்வாசரிடமிருந்து வரமும், சாபமும் பெற்றவன். அவர் கொடுத்த வரத்தின்படி இவன் யாராலும் வெல்ல முடியாதவன். அவர் கொடுத்த சாபத்தின்படி இவன் கல் போன்ற மனத்தினை உடையவன். ஒரு சமயம் சுவயம்பு மனுவின் மகன்களாக ஹத்தி, சுஹத்ரி இருவரும் பெரும் படையுடன் சென்று தேவர்களை அழிக்க ஆரம்பித்தனர். அச்சமயம் விஷ்ணு, எண்ணிலடங்கா உருவம் எடுத்து, இவர்களைச் சுமேரு மலையில் சண்டையிட்டு வென்றார். ஹத்ரி, சுஹத்தி என்ற இருவர் மட்டுமே மீதமிருந்தனர். அவர்களும் மந்தர மலைக்கு ஓடிவிட்டனர். அங்கு ஹத்ரியின் மகள் சுகேஸியும், சுஹத்ரியின் மகள் மிஸ்ரகேஸியும் இருந்தனர். மந்தர மலைக்கு வந்த துர்ஜயன், இவ்விரு அழகிய பெண் களைப் பார்த்து மயங்கி மணம் செய்து கொண்டான். அவனுக்கு இரு மக்கள் தோன்றினர்.

துர்வாச முனிவரின் வரத்தின்படி, துர்ஜயன் மூவுலகும் வென்று, இந்திரனை தேவருலகில் இருந்து விரட்டினான். ஒரு சமயம், வேட்டைக்குச் சென்ற துர்ஜயன், முனிவர் கெளரமுகாவின் ஆசிரமம் வந்தடைந்தான். அவனுடன் அவனது ஐந்து படைத்தலைவர்களும், அவர்களது சேனைகளும் உடன் வந்தனர். இவ்வளவு பேருக்கும் ஒரு முனிவரால் உடனே உணவு படைப்பதென்பது முடியக் கூடிய காரியமன்று. ஆனால் கெளர முனிவர் நாராயணனிடம் வேண்டி சிந்தாமணி என்ற ஒர் ஆபரணத்தைப் பெற்றிருந்தார். இந்த ஆபரணத்தைக் கையில் கொண்டு, ஒருவர் என்ன வேண்டும் என்று நினைத்தாலும், அது உடனே கிடைத்துவிடும். ஆகையால் கெளரமுகா முனிவர் துர்வஜாவிற்கும், அவனுடன் வந்திருந்த போராளிகள் அனைவருக்கும் வேண்டிய உணவு, தங்கும் இடம் மற்றும் அனைத்து வசதிகளைச் செய்து கொடுத்தார்.

இவ்வளவு சக்தி வாய்ந்த சிந்தாமணி மாலையைப் பார்த்து மிகவும் ஆசை கொண்ட துர்ஜயன், தன் மந்திரியாகிய விரோசனனை அனுப்பிக் கேட்டான். அவர் கொடுக்க மறுக்கவே, தன் சேனைகளை அனுப்பி மாலையினைக் கவர்ந்து வருமாறு கூறினார். கெளரமுக முனிவர், தன்னைக் காப்பாற்றும்படி சிந்தாமணி மாலையினை அடிக்க லட்சக் கணக்கான படைவீரர்கள் தோன்றி துர்ஜயனின் படையினை விரட்டி அடித்தனர். விரோசனன் கொல்லப்பட்டான். ஹத்ரி, சுஹத்ரி இருவரும் தத்தம் படைகளை உதவிக்கு அனுப்பினர். ஆனால் கெளரமுக முனிவர் விஷ்ணுவை வேண்ட, விஷ்ணுவும் தன் சக்கரத்தால் துர்ஜயன், அவன் சேனை அனைவரையும் அழித்தார்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
நொடி என்பது காலத்தின் மிகச் சிறிய அளவாகும். கண்ணை ஒருமுறை சிமிட்ட ஒரு நொடி ஆகும். விஷ்ணு ஒரு நொடிப் பொழுதில் துர்ஜயன் படைகளை அழித்தார். வடமொழியில் நிமிவு என்றும் பொருளையுடைய நொடிப் பொழுதில் படைகளை அழித்த இடம் நைமிசாரண்யம் எனப் பெயர் பெற்றது. மிகப் புண்ணியம் வாய்ந்த இந்தக் காட்டில் விஷ்ணு எப்பொழுதும் இருந்து வருகிறார்.

பிரபசா என்ற பெயருடைய நைமிசாரண்ய வனத்திற்கு வந்த முனிவர் கெளரமுகா அங்கு தவம் இயற்ற ஆரம்பித்தார்.

திதிகள்

கெளரமுக முனிவர், சிந்தாமணியிடம் வேண்டிக் கொண்டவுடன் லட்சக்கணக்கான வீரர்கள் அதிலிருந்து வந்தார்கள் அல்லவா? விஷ்ணுவின் அருளால் அவர்கள் மன்னர்களாகத் திகழ்ந்தார்கள். இந்த மன்னர்களில், ஒரு மன்னன் வழிவந்தவன் பிரஜபாலா என்ற அரசன். அவன் ஒருமுறை மகாதபா என்ற சக்திவாய்ந்த முனிவரைச் சந்திக்க அவரது ஆசிரமம் சென்றான். பிரஜபாலா மன்னனிடம் அவர் திதிகளைப் பற்றியும், அவற்றின் பயன்கள் பற்றியும் கூறினார். சில குறிப்பிட்ட திதிகளில், இறைவன் மீது பாடல்களைக் கூறும்பொழுது, அவை சிறப்பான பலன்களைப் பெறுகின்றன என்றார்.

பிரதிபாதா

சுக்கிலபட்சம் முதல் நாள் பிரதிபாதா எனப்படும். இது அக்னி தேவனுக்குரிய நாள் ஆகும். பிரபஞ்ச உற்பத்தியின் போது, பிரம்மா தன்னுடைய கோபக்கனலில் இருந்து அக்னி தேவனை உருவாக்கினார். ஆகையால் அக்னியைத் தொழுவதற்கு இது உகந்த நாள்.

துவிதியை

சுக்கிலபட்சம் இரண்டாம் நாள் துவிதியை எனப்படும். இந்நாளில் அஸ்வினிகள் எனப்படும் தேவதைகளைத் தொழவேண்டும்.

குதிரையாகவும், பெண் குதிரையாகவும் இருந்த சூரியனுக்கும், சம்ஜனாவிற்கும் பிறந்த மக்கள் நதத்யா, தசரா. இவர்களின் பெற்றோர்கள் குதிரை வடிவில் இருந்த பொழுது இவர்கள் பிறந்ததால், அஸ்வினிகள் என்று அழைக்கப் பட்டனர்.

திரிதியை

மூன்றாம் நாள் திரிதியை என்று அழைக்கப்படுகிறது. இந்நாள் ருத்ரனுக்கு ஏற்ற நாள். இந்நாளில் கடைப் பிடிக்கப்படும் விரதம், திருமணமான தம்பதியருக்கு நல்ல வாழ்க்கையைக் கொடுக்கும்.

பிரம்மன், ருத்ரனைத் தோற்றுவித்து, உற்பத்தித் தொழிலைப் பார்த்துக் கொள்ளும்படிக் கூறினார். ருத்ரன் தன்னால் இயலாது எனக் கூறவும், அவனை நீருக்கடியில் ஆயிரம் வருடங்கள் தியானம் செய்து சக்தியைப் பெருக்கிக் கொள்ளும்படிக் கூறி அனுப்பினார் பிரம்மன். ருத்ரனும் அவ்வாறே செய்து, நீரிலிருந்து ஒளியுடன் கூடிய உடம்புடன் வெளியே வந்தார்.

தட்சன் ஒரு யாகம் செய்து வந்தான். நீரிலிருந்து வந்த ருத்ரன், இந்த யாகம் பற்றிக் கேள்விப்பட்டு மிகுந்த கோபம் கொண்டான். “பிரம்மா என்னிடம் படைக்கும் வேலையைக் கொடுக்க, அதனைச் செய்வதற்காக சக்தியைப் பெருக்கும் காரணத்தினால் நான் தவம் செய்யச் சென்றிருந்தேன். இன்னும் என்னுடைய தொழில் ஆரம்பிக்குமுன், இந்த யாகத்தை நடத்தியவர்கள், அதில் கலந்து கொண்டவர்கள் இவர் களெல்லாம் யார்? எங்கிருந்து வந்தார்கள். இவர்களை நான் அழித்தே தீருவேன்” எனக் கூறினான், ருத்ரன். அவன் காதுகளில் இருந்து வெளிவந்த நெருப்புப் பொறிகளிலிருந்து அசுரர்களும் வெளிவந்தனர். இவர்கள் யாகத்தில் மிகுந்த குழப்பங்களை விளைவிக்க, பிரம்மன் தேவர்களை அனுப்பி ருத்ரனை அமைதிப்படுத்தும்படி வேண்டினான். அவர்களும் அவ்வாறே செய்து, தட்சன் மகளாகிய தாட்சாயணியை, ருத்ரனுக்கு மணம் செய்து கொடுத்தனர்.

(தட்சன் யாகம் பற்றி மற்றப் புராணங்கள் கூறும் கதையினின்று மாறுபட்ட கதையினை வழங்குகிறது வராகபுராணம்,)

ருத்ரனை மணந்த தாட்சாயணி, தன் தந்தை யாகத்தில் தன் கணவனை அவமானப்படுத்தியதை நினைவில் கொண்டு, இமயமலை சென்று கடும் தவம் புரிந்தார். தன் கணவனுக்கு அவமானம் செய்த தட்சன் கொடுத்த உடம்பு ஆதலால் அந்த உடம்போடு இருக்க விரும்பவில்லை. அதனால் தன் உடம்பை நீத்தாள், தாட்சாயணி.

இமவான் மகள் பார்வதியாக மீண்டும் பிறந்தார். சிவனையே கணவனாக அடைய வேண்டும் என்று தவத்தில் ஈடுபட்டார். ஒருநாள், மெலிந்த தேகமுடைய பிராமணன், பார்வதிதேவியின் ஆசிரமத்திற்கு தானம் கேட்டு வந்தார். பார்வதியும் சிறிது உணவினைக் கொண்டுவந்து, அந்த பிராமணனுக்குக் கொடுத்தார். உணவினை உண்பதற்கு முன் அந்த பிராமணர், ஆசிரமத்திற்கு அருகில் ஒடும் ஆற்றில் குளித்துவிட்டு வரச் சென்றார். அவர் அங்கு குளித்துக் கொண்டிருக்கும்பொழுது, ஒரு முதலை அவர் காலைப் பற்றிக் கொண்டது. பிராமணர் பெருங்குரலெடுத்து மற்றவர்களை உதவிக்கு அழைத்தார்.

பார்வதிக்கு என்ன செய்வதென்று குழப்பம் ஏற்பட்டது. அந்த பிராமணனுக்கு உடனே உதவி செய்தாக வேண்டும். ஆனால் அவர் தன் கணவருமல்லர் உறவினரல்லர்: அப்படிப்பட்ட ஒருவரைத் தொட்டு உதவி செய்தால் அது தவறாகும். அதே சமயத்தில், ஆபத்தில் இருக்கும் ஒருவருக்கு உதவி செய்யாமல் இருப்பது பாவம். ஒருவேளை அந்த பிராமணர் இறந்துவிட்டால், அக்குற்றத்திற்குத் தான் பொறுப்பேற்க வேண்டியிருக்கும். சிந்தித்துப் பார்த்த பார்வதி, உடனே உதவி செய்ய விரைந்தார். அந்த பிராமணனைத் தொட்டவுடன், அந்த உருவம் கலைந்து உண்மையான சிவன் வெளிப்பட்டார். சிவனுக்கும், பார்வதிக்கும் திருமணம் நடைபெற்றது. தேவர்கள், முனிவர்கள். அப்ஸ்ரஸ், கந்தர் வர்கள் திருமணத்தில் பங்கேற்றனர். திருமணம் திருதியை திதியில் நடைபெற்றதால், ருத்ரனை அந்நாளில் வழிபடுதல் சிறப்பாகும்.

சதுர்த்தி

சுக்கிலபட்சம் நான்காம் நாள் வருவது சதுர்த்தி விரதம். விநாயகருக்காக அனுஷ்டிக்கப்படுவது. இந்நாளில் எள்ளினை உண்ணுவது, மிகுந்த புண்ணியத்தைக் கொடுக்கும்.

தொடக்கத்தில், தகுதியை அடிப்படையாகக் கொண்டே எல்லாக் காரியங்களும் நடந்தன. காலப்போக்கில், நேர்மைக்கு இடம் குறைந்து கொண்டே வர, தேவர்கள் இந்த முட்டுக் கட்டைகளை நீக்கி, நல்ல காரியங்கள் நடைபெற ஒரு தேவனை உருவாக்கும்படி ருத்ரனை வேண்டினர். இதைக் கேட்ட ருத்ரன், விநாயகன் என்ற பெயரில் ஒர் உருவத்தைத் தன் வாயிலிருந்து தோற்றுவித்தார். அத்துடன் தன் மயிர்க்காலில் இருந்து பல்லாயிரக்கணக்கான விநாயகர்களைத் தோற்றுவித்ததால், இவர்களில் தலைமைப் பொறுப்பை ஏற்பவர் யார் என்று தெரியாமல் தேவர்கள் குழம்பினர். பிரம்மன் தலையிட்டு, ருத்ரனின் கோபத்தை அடக்கி, ருத்ரன் வாயிலிருந்து வெளிப்பட்ட விநாயகனே முதன்மையானவர் என்றும், மற்றவர்கள் அவருக்குத் தோழர்களாக இருப்பர் என்றும் கூறி கணங்களுக்குப் பதியாக இருப்பதால், தலைமைப் பொறுப் பேற்கும் விநாயகனுக்குக் கணபதி என்ற பெயர் கொடுத்தார். சதுர்த்தி அன்று கணேசர் பிறந்ததால் சதுர்த்தி சிறப்பு வாய்ந்த நாளாகும்.

(விநாயகர் பிறப்புப் பற்றி மற்ற புராணங்கள் வெவ்வேறு விதமாகப் பேசுகின்றன என்பதை அறியவும்,)

பஞ்சமி

சுக்கிலபட்சம் ஐந்தாவது நாள் வருவது பஞ்சமி, இந்நாளில் புளிப்பான உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். பாம்புகளுக்குப் பால் ஊற்றி வணங்க வேண்டும். பஞ்சமி அன்று தான் பிரம்மா, எல்லா நாகங்களையும் அழைத்து, அவற்றை பாதாள லோகத்திற்குச் செல்லுமாறு கூறினார்.

மிகுதியான விஷத்தினை உடைய அனந்தா, வாசுகி, பத்மா, மகாபத்மா, குளிகா போன்ற பாம்புகளை பிரம்மனே படைத்தார். இந்தப் பாம்புகள், பிரம்மனின் படைப்புகளைப் பாழ்செய்தமையால் மிகுந்த கோபம் கொண்ட பிரம்மன் நாகங்களை நோக்கி, “என் படைப்புகளைப் பெரிதும் வீணாக்கிய நீங்கள், உங்கள் தாயினாலேயே அழிக்கப் படுவீர்கள்” என்று சாபமிட்டார். இதைக் கேட்ட நாகங்கள், பிரம்மனை நோக்கி, ‘ஐயனே! எங்களைப் படைத்த நீரே, எங்களுக்கு இப்படி ஒரு குணத்தினைக் கொடுத்தீர்கள். இக்குணத்தினாலேயே நாங்கள் மக்களைக் கடிக்கிறோம். எங்களுக்கு விஷத்தன்மையைப் படைத்த நீங்கள், எங்களை ஏன் குறை சொல்கிறீர்கள், நாங்கள் எப்படிப் பொறுப்போம்? என்று கேட்டனர்.

இதைக் கேட்ட பிரம்மன், நாகங்களுக்குத் தனி இடம் ஒதுக்கிக் கொடுப்பதாகவும் அவர்கள் அவ்விடத்தில் தங்கி இருந்தால், மனிதர்களுக்கும், நாகங்களுக்கும் சண்டை ஏற்பட வாய்ப்பில்லை என்றும் கூறினார். பாதாள லோகத்தினை ஏழு பிரிவுகளாகப் பிரித்து, அதில் மூன்று பிரிவுகளில், நாகங்கள் தங்கள் இனத்தைப் பெருக்கிக் கொள்ளலாம்' என்றும் கூறினார்.

(பிரபஞ்ச உற்பத்தி பற்றிப் புராணங்களிடையே சில வேறுபாடுகள் உள்ளன. தேவர்கள், மனிதர்கள், அரக்கர்கள், மற்ற உயிரினங்கள் அனைத்தும் பிரம்மனிவிருந்து தோன்றியவை என்று சிவ புராணங்களும், காசிய முனிவர் அவர் மனைவிகளின் பிள்ளைகளே தேவர்கள், மனிதர்கள், மற்ற உயிரினங்கள் என்று சில புராணங்கள் பேசுகின்றன. இங்குக் காணப்படும் முரண்பாடு பின்னே வருவதற்குக் காரணமாக அமைந்துள்ளது.)

நாகங்களிடம், பிரம்மன் அடுத்த கல்பத்தில் காசிப முனிவருக்கும், அவன் மனைவி கத்ருவுக்கும் பிள்ளைகளாகப் பிறப்பார்கள் என்று கூறினார். காசிப முனிவர், தன் மனைவி கத்ருவின் விருப்பப்படியே அவள் ஆயிரம் நாகங்களைப் பெற்றெடுப்பாள் என்று வரம் கொடுத்தார். மற்றொரு மனைவியான வினதாவிடம், அவள் விருப்பப்படியே இரண்டு பிள்ளைகள் பெறுவாள் என்றும், அவர்கள் கத்ருவின் மக்களை விடப் பலம் வாய்ந்தவர்களாக இருப்பார்கள் என்றும் வரம் கொடுத்தார். கத்ருவிற்கு ஆயிரம் பாம்புகள் மக்களாகத் தோன்றினர். வினதாவிடம் இருந்து இரண்டு முட்டைகள் தோன்றின. நெடுநாட்கள் முட்டையினின்று எதுவும் வெளி வராததால், பொறுமையிழந்த வினதா ஒரு முட்டையை உடைத்தாள். அதிலிருந்து அங்கஹீனமுள்ள உருவம் வெளி வந்தது. அருணா என்ற பெயருடைய அவ்வுருவம், தன் தாயின் பொறுமை இன்மையால் தன் உருவம் பாழ்பட்டது என்பதால், தன் தாய் கத்ரு தனக்கு ஐந்நூறு ஆண்டுகள் அடிமையாக இருக்க வேண்டும் என்றும், மற்றொரு முட்டையினை உரிய காலம்வரை பத்திரமாக வைத்திருந்தால் அதிலிருந்து தோன்றும் மகன் தன் தாயினை விடுவிப்பான் என்றும் கூறினான். பின்பு, ஆகாயத்திற்குச் சென்று சூரியதேவனுடைய தேர்ப் பாகனானான்.

இதற்கிடையில் வினதாவிடம் இருந்து தோன்றிய மற்றொரு முட்டையிலிருந்து பாதி பறவையும், பாதி மனிதனும் சேர்ந்த உருவம் தோன்றிற்று. அதற்குக் கருடன் என்பது பெயர். பாம்புகளே தனக்கு இரையாக வேண்டும் என்ற வரத்தினை இந்திரனிடம் இருந்து கருடன் பெற்று வந்தது. கருடன் தன் தாயினை அடிமைத் தளையினின்று விடுவிக்க விரும்பியது. இதை அறிந்த பாம்புகள், தங்களுக்கு அமிர்தம் கொண்டு வந்து கொடுத்தால், கருடனின் தாய் வினதாவை விடுவிப்ப தாகக் கூறின. கடுமையான முயற்சிக்குப்பின் அமிர்தத்தைக் கொண்டு வந்தது கருடன். அமிர்தத்தை பாம்புகளுக்குக் கொடுப்பதற்குப் பதிலாக, சொரசொரப்பான விளிம்புகளை உடைய தர்ப்பைப் புல்லைக் கொடுத்தது. அதனாலேயே பாம்புகளுக்குப் பிளவுபட்ட நாக்கு ஏற்பட்டது. அதனாலேயே பாம்புகளுக்கும், கருடனுக்கும் பெரும் பகை ஏற்பட்டது.

கருட மந்திரம் சொல்பவர்களப் பாம்புகள் தீண்டுவதில்லை.

சஷ்டி

சுக்கிலபட்சம் ஆறாவது நாள் சஷ்டி எனப்படும். இந்நாளில் கார்த்திகேயனைத் துதிப்பவர்களுக்கு நீண்ட ஆயுளும், நினைத்த காரியங்களும் கைகூடும்.

சஷ்டி அன்றுதான், பிரம்மன் கார்த்திகேயனைப் படைத் தளபதியாக நியமித்தார். அசுரர்களில் ஹிரண்ய கசிபு, ஹிரண்யாகூடின், விப்ர சித்தி ஆகியோர் திறம்படப் போர் செய்தனர். தேவர்கள் படைப்பில் இந்திரன் மட்டுமே திறம்படப் போர் செய்யக் கூடியவன். இதனால் அசுரர்கள் தேவர்களை விரைவில் வென்று விடுவர் என்று கருதி, பிரகஸ்பதி முனிவர் ஒரு நல்ல படைத் தளபதியைத் தேர்ந்தெடுக்கும்படி கூறினார். ஆகையால் தேவர்கள், பிரம்மன் தலைமையில் சிவனைச் சென்று சந்தித்து உதவி கோரினர். சிவனும், பார்வதியும் அழகும், பலமும் பொருந்திய மகனைத் தோற்றுவித்தனர். அந்த மகனே குமாரன், ஸ்கந்தன், கார்த்திகேயன் என்று அழைக்கப் பட்டான். அந்தக் கார்த்திகேயனையே பிரம்மா படைத் தளபதியாக நியமித்தார்.

சப்தமி

சுக்கிலபட்சம் ஏழாம் நாள் சப்தமி எனப்படும் சூரிய தேவனுக்கு உகந்த நாள். சூரியனுடைய கதிர்களின் மிகு வெப்பம் காரணமாகப் பிரபஞ்சத்திலுள்ள உயிரினங்கள் அழிந்துவிடும் அபாயம் தோன்றிற்று. சப்தமி அன்று, மற்ற தேவர்கள் சூரியனிடம் அவனது ஒளியினைச் சிறிது குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும், அதனால் உலகம் அழிவினின்று காப்பாற்றப்படும் என்றும் கூறினர். சூரியனும் அதை ஒப்புக் கொண்டான்.

அஷ்டமி

சுக்கில பட்சம் எட்டாவது நாள் அஷ்டமி எனப்படும்.

காசிய முனிவருக்கும், திதிக்கும் பிறந்த மகனே அந்தகன் என்ற பெயர் பெற்றான். இவனுக்கு ஆயிரம் கைகள், ஆயிரம் கால்கள், ஆயிரம் கண்கள் இருந்தன. அந்தகர்' என்றால் பார்வை இழந்தவன் என்று பொருள். ஆனால் அந்தகனுக்குப் பார்வை இருந்தது. அவன் ஆயிரம் கைகளும் கால்களும் பெற்றிருந்தமையால் அவன் நடை, குருடனைப் போல் தள்ளாடி நடக்க வேண்டி இருந்தமையால் அவனுக்கு அந்தகாசுரன் என்ற பெயர் வந்தது. யாராலும் தனக்குச் சாவு ஏற்படக் கூடாது, தன் தலை கீழே விழக்கூடாது என்று பிரம்மனிடம் வரம் வாங்கியபின் தேவர்களுக்குக் கொடுமை விளைவிக்கத் தொடங்கினான். தேவர்கள் பிரம்மனிடம் வேண்ட நானே கொடுத்த வரத்தை என்னால் மீட்க முடியாது. ஆகவே நாம் அனைவரும் சிவனிடம் சென்று முறையிடுவோம் என்று கூறிய பிரம்மன் அவர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு சிவனிடம் சென்றார்.

இதை அறிந்த அந்தகன் பெருஞ்சேனையுடன் வந்து சிவலோகத்தை எதிர்க்கத் தொடங்கினான். அவன் எண்ணம் சிவனைக் கொன்று பார்வதியைத் திருமணம் செய்து கொள்வதாகும். பெரும் போர் நிகழ்ந்தது. சிவனுடைய சூலம் அவனுடைய மார்பைப் பிளக்க அதிலிருந்து ஒழுகிய ரத்தம் பூமியில் விழுந்ததும் புதிய புதிய அந்தகாசுரர்களை உண்டாக்கிற்று. இதை அறிந்த சிவன் நெற்றிக் கண்ணைத் திறக்க அதிலிருந்து தோன்றிய மாத்ரி என்ற தேவதை பெரு நெருப்பை உண்டாக்கி அவன் ரத்தம் கீழே விழாமல் செய்துவிட்டது. இந்த நிலையில் விஷ்ணுவின் சக்கரம் அந்தகாசுரன் கழுத்தை அறுக்க, அவன் தலை கீழே விழக்கூடாது என்ற பிரம்மனின் வரத்தைக் காக்க சிவன் அந்தத் தலையை சூலத்தில் குத்தி ஆகாயத்தில் தூக்கி விட்டார். இந்த முறையில் அந்தகாசுரன் அழிந்தான்.

அந்தகன் அழிவு அஷ்டமி திதியில் நடைபெற்றதால் அந்தக் குறிப்பிட்ட திதியில் மாத்ரிகாவை வணங்குவதற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
நவமி

சுக்கிலபட்சம் நவமி என்று சொல்லப்படுவது ஒன்பதாவது நாள். காயத்ரி தேவியினால் சொல்லப்பட்ட வேத்ராசுரனின் கதை நடந்தது நவமி அன்றே.

(வேத்ராசுர என்ற பெயர் எந்தப் புராணத்திலும் குறிப்பிடப் பெறவில்லை. ஆகவே இது வராக புராணத்தின் கற்பனை என்று நினைக்க வேண்டியுள்ளது,)

முன்னொரு காலத்தில் வேத்ராசுரன் தந்தை இந்திரனால் கொல்லப்பட்டார். தனது அடுத்த பிறவியில் வேத்ராசுரன் தந்தைக்கு முற்பிறவியில் நடந்த நிகழ்ச்சிகள் தெரிய வந்தன. இதனால் கடுமையான விரதம் மேற்கொண்டு, இந்திரனைக் கொல்வதற்காக ஒரு மகனைப் பெறமுடியும் என்று நினைத் தான். வேத்ரவதி நதி தேவதையை மணந்து, வேத்ராசுரனைப் பெற்றான். இந்த வேத்ராசுரன் தேவர்களுக்கு எதிரியாகத் திகழ்ந்தான். தேவர்கள் சிவனின் உதவியை நாடிச் சென்றனர். வேத்ராசுரனை அழிக்க முடியாது என்று உணர்ந்த சிவபிரான், தேவர்களிடம், பிரம்மனைச் சென்று பார்க்கும்படி கூறினார்.

தேவர்கள் பிரம்மனைக் காணச் சென்ற பொழுது கங்கைக் கரையில் காயத்ரி மந்திரத்தைச் சொல்லியவாறு அமர்ந்திருந்தார் பிரம்மன். அவர் தன்னைச் சுற்றி நடப்பதைப் பற்றி ஒன்றும் அறியாமல், சிவன் மீதோ, மற்ற தேவர்கள் மீதோ எந்தக் கவனமும் செலுத்தாமல் இருந்தார்.

அப்பொழுது திடீரென்று காயத்ரி தேவி தோன்றினாள். அவருக்கு எட்டு கைகளும், அக்கைகளில் எல்லாவிதமான ஆயுதங்களும் இருந்தன. இத்தேவி அசுரர்களுடன் ஒராயிரம் தேவ வருடங்கள் போர் செய்து, முடிவில் வேத்ராசுரனைக் கொன்றாள். பிரம்மனின் தவம் முடிவடைந்து, இமயமலையில் காயத்ரி தேவி வந்து தங்குவதற்கு ஒரு தகுந்த இடத்தை நிர்மாணித்தார்.

வேத்ராசுரன், காயத்ரி தேவியினால் கொல்லப்பட்டது நவமி திதி ஆகையால், அன்று காயத்ரி தேவியை வணங்குவது சாலச் சிறந்தது.

தசமி

சுக்கிலபட்சம் பத்தாம் நாள் வருவது தசமி திதியாகும். பிரம்மனால் படைக்கப்பட்ட பத்து தேவதைகளை வணங்க வேண்டும். இந்நாளில் வெறும் தயிர் மட்டும் சாப்பிட்டு விரதம் அனுஷ்டிக்க வேண்டும்.

ஏகாதசி

படைப்புத் தொழிலைத் தொடங்க வேண்டும் என்று நினைத்த பிரம்மனுடைய வாயிலிருந்து ஒரு புழுதிக் காற்று புயல்போல் வெளியில் வந்தது. வந்தவுடன் அந்தப் புழுதி குபேரனுடைய வடிவைப் பெற்றது. இவ்வாறு குபேரன் பிறந்தது சுக்கிலபட்ச ஏகாதசி ஆகும். பிரம்மனின் உத்தரவுப் படி தேவர்களின் கஜானா அதிகாரியாகக் குபேரன் நியமிக்கப்பட்டான். குபேரனை நினைத்துச் செய்யும் இவ் விரதம் இந்த ஏகாதசி அன்று பொங்கலை உண்டு அனுஷ்டிக்க வேண்டும்.

துவாதசி

சுக்கிலபட்சம் பன்னிரண்டாம் நாள் அனுஷ்டிப்பது துவாதசி திதி. வாயுதேவன் வேண்டிக் கொண்டதால், நாராயணன் விஷ்ணுவாக அவதரித்தார். லட்சுமி தேவி விஷ்ணுவை மணந்து கொண்டது துவாதசி அன்றுதான். இவர்கள் இருவரையும் துவாதசி அன்று வழிபடுவது நல்லது.

திரயோதசி

சுக்கிலபட்சம் பதின்மூன்றாம் நாள் திரயோதசி எனப்படும். பிரம்மன், பிரபஞ்ச உற்பத்தி பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது, அவருக்கு வலப்பக்கமிருந்து தோன்றினவன் தர்மதேவன். அவனுக்கு நான்கு கால்களும், மூன்று கொம்புகளும் இருந்தன. எருது வடிவில் தோன்றி யிருந்தான். மக்கள் நல்வழியில் தம்மை ஈடுபடுத்திக் கொள்கிறார்களா என்பதைக் கண்காணிப்பதே தர்மதேவனின் கடமையாகும். மக்கள் தவறான பாதையில் சென்றால், தர்ம தேவதையின் ஒரு கால் இல்லாமல் போகும். அதாவது சத்யயுகத்தில் தர்ம தேவதைக்கு நான்கு கால்களும், திரேதா யுகத்தில் மூன்று கால்களும், துவாபர யுகத்தில் இரண்டு கால்களும், கலியுகத்தில் ஒரு காலும் இருக்கும்.

ஒரு சமயம் பிரஹஸ்பதியின் மனைவியாகிய தாராவை, சந்திரன் கவர்ந்து சென்றான். இதைக் கேள்வியுற்ற தர்மதேவன் மிகவும் மனம் வருந்தி காட்டில் சென்று தவம் புரியலானான். தர்மத்தின் தலைவனான தர்மதேவன் இல்லாமையால், எங்கும் சட்டம் சீர்கெட்டு, கொடுரமான நிகழ்ச்சிகளே நடைபெற்றன. இதைக் கண்ட பிரம்மன், திரயோதசி திதி என்ற தர்மதேவனைச் சமாதானப்படுத்தி அழைத்து வந்தார். ஆதலால் இத்திதி மிகச் சிறப்புப் பெற்றதாகும். சுக்கிலபட்சம் பதினான்காம் நாள் ருத்திரனைப் பற்றி நினைப்பவர்கள் விரதம் அனுஷ்டிப்பவர்கள், எல்லாப் பாவங்களினின்றும் விடுதலை பெறுவர்.

அமாவாசை

பிரம்மனிடத்து தோன்றியவர்களாகிய தன்மாத்திரர்கள் என்பவர்கள் ஆகாயத்திலே தங்கி சோமபானத்தை உணவாகக் கொண்டு தியானத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களே மக்கள் அனைவருக்கும் மூதாதையர்கள் என்று சொல்லப்படுவார்கள். இவர்களைத் திருப்திப்படுத்த அமாவாசை அன்றைக்கு எள், தண்ணிர், தர்ப்பை என்பவற்றைப் படைத்து வழிபடுவதால் இவர்கள் திருப்தி அடைகிறார்கள். இதற்குத் தர்ப்பணம் என்பது பெயர்.

பெளனர்மி

சோமன் அல்லது சந்திரன் என்று அழைக்கப்படும் தேவன், அத்ரி முனிவரின் மகனாவான். தட்சனின் பெண்களுள் இருபத்தி ஏழு பெண்களை மணந்து கொண்டவன். அவர்களுள் ரோகிணியிடம் மட்டும் அதிக அன்பு செலுத்தியதால், மற்ற பெண்கள் தந்தையிடம் முறையிட்டனர். தட்சன் அறிவுரை கூறியும், சோமன் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை. கடும் கோபம் கொண்ட தட்சன் சாபமிட்டான். ஆகையால் சந்திரன் சிறிது சிறிதாகத் தேய்ந்து பதினைந்தாம் நாள் அமாவாசை அன்று மறைந்து விடுகிறான். மருந்தாகும் மூலிகைச் செடிகள், சந்திரன் மறைந்து விடுவதால் தங்களின் ஆற்றலை இழந்து விட்டன. தேவர்கள் சென்று விஷ்ணுவிடம் முறையிட, அவர் பாற்கடலைக் கடையும்படி கூறினார்.

(பாற்கடல் கடைத்ததைப் பற்றி எல்லாப் புராணங்களும் பேசுகின்றன. சாவா மருந்தாகிய அமிர்தத்தை எடுப்பதற்காகப் பாற்கடல் கடையப்பட்டது என்பது மற்ற புராணங்கள் கூறும் கதையாகும். ஆனால் வராக புராணம் மற்றவற்றிலிருந்து மாறுபடுகிறது )

பாற்கடலைக் கடைந்த தேவர்களுக்குச் சோமபாணம் கிடைக்கின்றது. இந்தச் சோமபாணம் சந்திரனே ஆகும். சிவ பெருமான், சந்திரனை எடுத்துத் தன் தலையில் சூடிக் கொண்டார். மேலே கூறிய நிகழ்ச்சிகள் அனைத்தும் பெளர்ணமி அன்று நடைபெற்றதால் பெளர்ணமி விரதம் மிகச் சிறப்பு வாய்ந்ததாகும். இவ்விரதத்தினை முடித்த பின்னர் ஒருவர் அரிசிச்சோறு சாப்பிடலாம். இவ்விரதம் அனுஷ்டிப்ப வர்களுக்கு எல்லாச் செல்வமும் கிடைக்கப் பெறும்.

விரதங்கள்

பிருத்வி வராகத்தைப் பார்த்து விரதங்கள் பற்றி அறிய விரும்புகிறேன் என்று சொல்லியவுடன் வராகம் கூறத் தொடங்கியது. “விரதங்கள் பலவகைப்படும். முதல்வகை பிரமச்சரியம், சத்தியம் காத்தல் ஆகிய இரண்டையும் தலையாய கடமையாகக் கொண்டது. இரண்டாவது பஜனை செய்தல், இறைவனின் புகழைப் பாடுதல் ஆகியவையாவன. மூன்றாவது வகை குறிப்பிட்ட நாட்களில் பட்டி இருத்தல் ஆகியவையாம்.

இதுபற்றிப் பல கதைகள் சொல்லலாம் எனினும், உதாரணத்திற்கு ஒன்றிரண்டைச் சொல்கிறேன்.

துர்வாசர் ஒருமுறை அவருக்கு நண்பனாக இருந்த ஒரு வேடனுக்கு சத்யதபா என்று பெயர் சூட்டினார். காரணம் அவன் வேடனாகப் பிறந்தும் நேர்மை, சத்தியம் என்ற இரண்டிற்கும் பெருமதிப்புக் கொடுத்து வாழ்க்கையில் கடைப் பிடித்தான் ஆதலின் அவனுக்கு இந்தப் பெயரைத் தந்தார். ஒருமுறை வராகம் பிருத்விக்குக் கூறிய ரகஸ்யமான ஒரு விரதச் சடங்கை துர்வாசர் இப்பொழுது சத்யதபாவிற்குக் கூறினார். ஏகாதசி அன்று பட்டினி கிடந்து துவாதசி அன்று காலையில் ஆற்றுக்குச் சென்று, ஆற்று மண்ணை உடம்பில் பூசிக் கொண்டு நாராயணனை நினைத்தவாறே நீந்திக் குளிக்க வேண்டும். பிறகு வந்து உணவு கொள்வதே துவாதசி விரதத்தின் மகிமை. இந்த விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் கல்வி அறிவு இல்லாதவர்களாய் இருந்தாலும் பிரம்மத்தை அடையும் வழியை அவர்கள் அடைய முடியும். இந்த விரதம் மார்கழி மாதத்தில் அனுஷ்டிக்கப்பட வேண்டும்.

இதே போன்று வராக துவாதசி விரதத்தை மாசி மாதத்தில் அனுஷ்டிக்க வேண்டும். இந்த விரதத்திற்கு வராகத்தின் வடிவத்தைச் செய்து, அதை வெள்ளைத் துணியால் உடுத்தி மண்பானையில் வைத்து பகலில் பூஜிப்பதுடன் ஏகாதசி இரவு கண் விழித்து பூஜித்தால் சிறந்த பயன் உண்டு. இவற்றை அல்லாமல் ராம துவாதசி ஆனி மாதத்தில் கிருஷ்ண துவாதசி ஆடி மாதத்திலும் புத்த துவாதசி ஆவணி மாதத்திலும் அனுஷ்டிக்கப்பெற வேண்டும்.

கந்திவிரதம்

சந்திரன், தட்சனின் சாபத்தை முறியடிக்க மேற்கொண்ட விரதமாகும். சுக்கிலபட்சம் என்பது வளர்பிறை என்றும், கிருஷ்ணபட்சம் என்பது தேய்பிறை என்றும் கூறப்படும். இந்த விரதம் கார்த்திகை மாதம் சுக்கிலபட்சம் துவிதியை திதியில் ஆரம்பமாகும். கிருஷ்ண பலராமர்களை வழிபட வேண்டும்.

அவிஞ்ஞ விரதம்

திரிபுராசுரனைக் கொல்வதற்கு முன்பு சிவபெருமானாலும், கடல்நீரைப் பருகுவதற்கு முன்பு அகத்திய முனிவராலும் கடைப்பிடிக்கப்பட்ட விரதமாகும். பங்குனி மாதத்தில் வரும் சதுர்த்தி திதி அன்று கணேசனின் மந்திரங் களைச் சொல்லுதலும், அதைத் தொடர்ந்து பஞ்சமி திதியில் விநாயகனைத் தயிர், எள், பூக்கள் முதலிவற்றால் பூஜை செய்வதும் முக்கியமானதாகும். ஒருவருக்கு வாழ்க்கையில் ஏற்படும் தடைகளை நீக்குவதற்கு அனுஷ்டிக்கப்படும் விரதம்.

காமவிரதம்

தைமாதம், சுக்கிலபட்சம் பஞ்சமி திதியில் ஸ்கந்தனை நினைத்து வழிபடுவது இவ்விரதமாகும்.

சாந்தி விரதம்

கார்த்திகை மாதம் சுக்கிலபட்சம் பஞ்சமி திதியில் கடைப் பிடிக்கப்படும் இவ்விரதம் குடும்பத்தில் ஏற்படும் துன்பங்களை விலக்கிவிடும். இவ்விரதம் அனுஷ்டிப்பவர்கள் சூடான உணவை ஒரு வருட காலத்திற்குத் தவிர்க்க வேண்டும். ஆதிசேஷனை வணங்க வேண்டும்.

புத்ரேஷ்டி விரதம்

இவ்விரதம் இருப்பவர்கள் பால், தயிர் முதலியவற்றைத் தானமாகக் கொடுக்க வேண்டும். குழந்தை கிருஷ்ணனை வணங்க வேண்டும்.

யுகங்கள்.

பத்ரஷ்வா அரசனுக்கும், அகஸ்திய முனிவருக்கும் இடையே யுகங்கள் பற்றிய உரையாடல் நடைபெற்றது.

கலியுகத்தில் வர்ணாசிரம தர்மங்கள் அழிந்துவிடும். இந்த யுகத்தில் நல்லவை அழிந்து, கொடுமைகளே தலைதூக்கி நிற்கும். உண்மையான சக்தி இல்லாமல், வெறும் சடங்குகள் மூலம் இறைவனை அடைதல் இயலாது. நாராயணனே அனைத்திலும் முன்நிற்பவர் என்று சிவபெருமானே கூறியுள்ளார். ஆதலால் படைக்கப்பெறும் பொருட்கள் யாவும் விஷ்ணுவுக்கே முதலில் படைக்கப்பெற வேண்டும்.

கலியுகம் என்பது, நாராயணனால் தோற்றுவிக்கப் பட்டாலும், கெளதம முனிவரின் சாபம் பற்றித் தெரிந்து கொண்டால் மட்டுமே, கலியுகம் பற்றி அறிந்து கொள்ள முடியும். அப்படி கெளதம முனிவரின் சாபம் என்ற ஒன்று இல்லையென்றால், கலியுகம் என்பது வேறுமாதிரி அமைந் திருக்கும். ஒருமுறை கெளதம முனிவர், அரிசியும் பழங்களும் எப்பொழுதும் தன்னிடம் நிறைய இருக்க வேண்டும் என்ற வரத்தினை, நாராயணனிடம் இருந்து பெற்றிருந்தார். ஒரு சமயம் கடுமையான பஞ்சம் ஏற்பட்ட பொழுது, சடவிருங்காவில் இருந்த முனிவர்களுக்கு, தன்னிடம் இருந்த அரிசி, பழங்கள் முதலியவற்றைக் கொடுத்துப் பசி தீர்த்தார். அவர்களும் பெரிதாக மகிழ்ந்தனர். சில நாட்கள் கழித்து அம்முனிவர்கள், பஞ்சம் தீர்ந்தவுடன் கெளதம முனிவரிடம் சொல்லாமல் அவரது ஆசிரமத்தை விட்டுச் சென்றுவிட்டனர். அவ்வாறு செல்லுமுன், கெளதம முனிவர் ஏதோ தவறு செய்து விட்டது போலவும், அதன் காரணமாகவே தாங்கள் அந்த ஆசிரமத்தை விட்டுச் செல்வதாகவும் ஒரு சூழ்ச்சி செய்திருந்தனர்.

அந்த முனிவர்கள் தம்முடைய சக்தியால் ஒரு பசுவை, கெளதம முனிவரின் ஆசிரமத்திற்கு வரவழைத்து அவர் பார்க்கும் இடத்தில் நிறுத்தி வைத்தனர். வெளியே சென்றிருந்த முனிவர், வந்தவுடன் பசுவைப் பார்த்து மிக்க மகிழ்ச்சியுடன் நீர் அருந்தக் கொடுத்தார். நீரை அருந்திய பசு, இறந்துவிட்ட பசுவினைப் போல் கீழே விழுந்துவிட்டது. இதைக் கண்ட மற்ற முனிவர்கள் கெளதம முனிவர் ஒரு பசுவினைக் கொன்று விட்டார் என்று கூறி, அதனாலேயே தாங்கள் அந்த ஆசிரமத்தை விட்டுச் செல்வதாகவும் கூறிச் சென்றனர்.

கெளதம முனிவர், இமயமலை சென்று இப்பாவத்தைப் போக்க எண்ணி சிவபெருமானை நினைந்து தவம் இயற்றினார். அவரது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் தன்னுடைய முடியினைக் கொடுத்தார். அந்த முடியினை கெளதம முனிவர் தன் ஆசிரமத்திற்குக் கொண்டு வந்தார். அதிலிருந்து கோதாவரி கங்கை உற்பத்தியாயிற்று. அந்த நீர் பட்டவுடன் இறந்து கிடந்த பசு உயிருடன் எழுந்ததைப் பார்த்த கெளதம முனிவர், தன்னை மற்ற முனிவர்கள் ஏமாற்றியதைத் தெரிந்து கொண்டார்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
கெளதமர், கோதாவரி கங்கையைத் தன் ஆசிரமத்திற்குக் கொண்டு வந்திருப்பதை அறிந்த சப்தரிஷிகள் அதைக் காண ஆசிரமம் வந்தனர். சப்தரிஷிகளின் முன்னிலையில், தன்னை ஏமாற்றிய முனிவர்கட்குச் சாபமிட்டார் கெளதம முனிவர். "இனி நீங்கள் பிராமணர்கள் என்று யாராலும் கருதப்பெற மாட்டீர்கள். எந்த யாகம் செய்வதற்கும் அனுமதிக்கப்பெற மாட்டீர்கள்” என்று சாபமிட்டார். இதைக் கேட்ட முனிவர்கள் அவரது சாபத்தின் கடுமையைக் குறைத்துக் கொள்ள வேண்டினர். ஆனால் கெளதம முனிவர், சிவபெருமான் ஒருவராலேயே அதனைச் செய்ய முடியும் என்று கூறி அனுப்பி விட்டார். கைலாய மலைக்குச் சென்று சிவனிடம் சாபத்தின் கடுமை குறைக்க வேண்டினர். சிவனும் அவர்கள் வேண்டு கோளுக்கிணங்க, துர்குணம் கொண்ட அம்முனிவர்கள், கலியுகத்தில் பிறப்பார்கள் என்றும், பொய் பேசுதல், ஏமாற்றுதல் போன்ற குணங்களை உடையவர்களாய் இருப்பர் என்றும் கூறினார்.



அம்முனிவர்கள் கலியுகம் என்பது மிகக் கொடுமை யானதாக இருக்கும் என்றும், தங்களால் அதைத் தாங்க இயலாது என்றும் கூறினர். சிவபெருமான் அவர்களிடம், சிவ சம்ஹிதை என்ற நூலினைக் கொடுத்து, அவர்களில் சிலர் நல்லவர்களாகப் பிறப்பார்கள் என்றும், சிலர் துன்மார்க்கர் களாய்ப் பிறந்து நரகத்தினை அடைவார்கள் என்றும் கூறினார். இதுவே சாபத்தின் காரணமாகக் கலியுகம் தோன்றும் என்பதற்கான கதை என்று முடித்தனர். அகஸ்திய முனிவரும், பத்ரஷ்வ அரசனும்.

விஷ்ணுவே அனைத்திலும் உயர்ந்தவர்

பிரம்ம சிவபெருமான் இவர்களை விட உயர்ந்து நிற்பவர் விஷ்ணுவே. சத்துவ குணம் மட்டுமே நிறைந்திருப்பவர் விஷ்ணு. சத்துவகுணமும், ராஜசகுணமும் இணைந்து பிரம்மனிடம் உள்ளன. சத்துவம், ராஜசம், தாமசம் ஆகிய மூன்று குணங்களும் சிவபெருமானிடம் உள்ளன.

ஒரு சமயம் பிரம்மன், பிரபஞ்ச உற்பத்தியின் போது சிவபெருமானிடம் இப்பொறுப்பினை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினார். உடனே சிவபெருமானும் நீரின் அடியில் சென்று தவம் புரியத் துவங்கினார். அப்பொழுது தன் எதிரே கை கட்டைவிரல் அளவு வடிவத்தில் விஷ்ணு சிவன் எதிரே தோன்றினார். அந்த வடிவத்தைச் சிவன் அலட்சியப்படுத்தி விட்டார். அதன் பிறகு ஒளிமயமான பன்னிரண்டு பிம்பங்கள் சிவன் எதிரே வந்தன. நீங்கள் யார்? எனச் சிவன் கேட்க பதிலே சொல்லாமல் அந்த 12 ஒளிகளும் மறைந்தன. அதன் பிறகு விஷ்ணு சிவனுக்கு நேரே தோன்றி பின்வருமாறு பேசலானார். “நீர் மிக உயர்ந்தவர் என்றும், அனைவரினும் மேம்பட்டவர் என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறீர். உண்மை அவ்வாறில்லை. உமக்கு எதிரே வந்த பன்னிரண்டு ஒளி வடிவங்களைக் கூட நீர் அறிந்து கொள்ளவில்லை. அவர்கள் துவாதச ஆதித்தர்கள். அவர்களை நீ தெரிந்து கொள்ள வேண்டுமானால், எதனையும் காணவேண்டுமானால் என் அருள் இருந்தால்தான் முடியும். இதோ உமது எதிரில் கட்டைவிரல் வடிவளவு உருவெடுக்கிறேன் பாரும்” என்று கூறிவிட்டுக் கட்டைவிரல் வடிவில் தோன்றிய விஷ்ணு, உயர வளர ஆரம்பித்து அண்டத்தை முட்டும் அளவில் வளரத் தொடங்கினான். அதைப் பார்த்த சிவன் விஷ்ணுவின் உண்மையான பெருமை அறிந்து கொண்டு தவம் செய்யப் புறப்பட்டார்.

தவம்

பிருத்வி, வராகத்தைப் பார்த்து ஒருவருடைய பாவங்களைப் போக்கிக் கொள்ளச் சிறந்த வழி யாது? என்று கேட்டது. அதற்கு வராகம் சொன்ன விடை வருமாறு:

ஒருவர் காலை எழுந்தவுடன் முதலில் உடம்பைத் தூய்மை செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சாணத்தால் மெழுகி தூய்மை செய்ய வேண்டும். பக்கத்தில் ஒரு விளக்கை ஏற்றிவைக்க வேண்டும். விஷ்ணு விக்கிரகத்தை அந்தத் தூய்மையான இடத்தில் வைத்து, மலர்களாலும் மாலையாலும் அலங்கரிக்க வேண்டும். பால், நெய் முதலியவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும். அதன் பிறகு விஷ்ணுவின் புகழைப் பாட வேண்டும். இவை எல்லாவற்றையும் விட முக்கியமாகத் தேவைப்படுவது தூய்மையான மனத்துடன் விஷ்ணு இடத்தில் அன்பு செய்வதாகும்.

இதற்கடுத்த படியாக ஒருவன் மறுபிறப்பில் மிருகமாகவோ, பறவையாகவோ பிறக்காமல் இருக்க வேண்டுமானால் அதற்கு ஒரேவழி நேர்மையான வழி நடத்தல், விரதங்களை மேற்கொள்ளல், பெற்றோர்களை மதித்து நடத்தல், காகமுகா என்ற தீர்த்தத்தில் உயிரை விடும் ஒருவன் உறுதியாக மறுபிறப்பில் மிருகமாகவோ பறவையாகவோ பிறக்கமாட்டான். இதற்கு ஒரு உதாரணக் கதையை வராகம் கூறிற்று.

ஒருமுறை ஒரு வல்லுறு மிக வேகமாகத் தண்ணிரில் பாய்ந்து ஒரு பெரிய மீனைக் கவ்வி அதை எடுத்துக் கொண்டு ஆகாயத்தில் எழுந்தது. மீனின் கனம் தாங்காமல் வல்லுறும், இருந்ததால் அந்த மீனும், அதில் முக்கிக் குளித்து எடுத்ததால் வல்லூறும் இப்பிறவி நீங்கி மீன் ஒரு ராஜகுமாரனாகவும், வல்லுறு ஒரு அரசகுமாரியாகவும் பிறந்தன. அந்த அரசகுமாரியை, அந்த அரசகுமாரன் மணந்து கொண்டான். சில நாள் கழித்து, அரச குமாரனுக்குத் தீர்க்க முடியாத தலைவலி வந்தது. தாய் தந்தையரிடம் விடை பெற்றுக் கொண்டு அவர்கள் இருவரும் கோகமுகா தீர்த்தத்திற்கு வந்தார்கள். அங்கே வந்தவுடன் அவர்களுக்கு பூர்வ ஜென்மத்தின் நினைவு வந்தது. மீனாக இருந்த அரச குமாரன் திடீரென்று தரையில் விழுந்து தலையில் அடிபட்டதால் இந்த ஜென்மத்தில் தலைவலி உண்டாயிற்று என்று அறிந்து விஷ்ணுவைத் தியானித்து தீர்த்தத்தில் மூழ்கி துன்பம் நீங்கப் பெற்றான்.

மாயை

வராகம் பிருத்வியைப் பார்த்து யாரும் மாயை பற்றி அறிந்து கொள்ள முயலக் கூடாது. அதற்காக இந்தக் கதையைச் சொல்கிறேன் என்று ஆரம்பித்து பின்வரும் கதையைக் கூறிற்று. ஹிர்த்து வனத்தில் சோமசர்மா என்ற பிராமணன் வாழ்ந்து வந்தார். சிறந்த விஷ்ணு பக்தனான அவன் ஒருமுறை தவம் செய்கையில் விஷ்ணு எதிரே தோன்றினார். உனக்கு என்ன வரம் வேண்டும் என்று விஷ்ணு கேட்க மாயை பற்றி அறிந்து கொள்ள விரும்புகிறேன் என்றார் சோமசர்மா. அது மனிதனுக்குத் தேவை இல்லாத ஒன்று! என்று விஷ்ணு எடுத்துச் சொல்லியும் சோமசர்மா கேட்கவில்லை. பிடிவாதமாக இருந்ததால் அவனை அழைத்துச் சென்று பக்கத்தில் உள்ள ஆற்றில் குளிக்கச் சொன்னார். உடைகள், கமண்டலம் முதலியவற்றை தரையில் வைத்துவிட்டுச் சோம சர்மா தண்ணீருக்குள் பாய்ந்தான். திடீரென்று நிஷாதர்கள் வசிக்கும் எதிர்க்கரையிலுள்ள கிராமத்தில் பெண்ணாகப் பிறந்து நிஷாதன் ஒருவனை மணந்து கொண்டு, அவனிடத்தில் இரண்டு பெண்களையும், மூன்று நெறிகளையும் பெற்றார். பல ஆண்டுகள் கழிந்தன. சோமசர்மாவுக்குத் தவம் என்பதே மறந்துவிட்டது. அந்த இடத்தில் விஷ்ணு தோன்றி அவன் யார் என்பதை நினைவூட்டியவுடன் பழைய சோமசர்மா ஆக விரும்பினான். ஆற்றின் கரையில் அப்பெண் தன் துணிகளைக் களைந்து வைத்து விட்டுத் தண்ணிரில் குளிக்கச் சென்றாள். நீரில் பாய்ந்த அப்பெண் எதிர்க்கரையில் சோமசர்மாவாக வெளியே வந்தார். தன் உடைகளை மாற்றிக் கொண்டு, தான் நிஷாதப் பெண்ணாக இருந்ததை நினைத்தார். அப்பொழுது எதிர்க்கரையில் அந்த நிஷாதப் பெண்ணின் கணவன் கரைக்கு வந்து மனைவியின் துணிகள் இருப்பதைப் பார்த்து அவள் ஆற்றில் மூழ்கி இறந்து விட்டாள் என்று கருதி 'ஒ' என்று கதறி அழுவதைக் கண்ட சோமசர்மா அவனுக்குச் சமாதானம் சொல்லி வீட்டிற்குச் சென்று குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளுமாறு புத்திமதி சொன்னார். அந்த நிஷாதன் கவலை குறையாமல் அழுததைக் கண்டு, உண்மையைக் கூறிவிடலாமா என்று கூட சர்மா நினைத்தார். அந்த நிலையில் விஷ்ணு தோன்றியவுடன் சர்மாவைப் பார்த்து எதிர்க்கரையில் பார்’ என்று கூறினார். இங்கு விஷாதர்கள் தங்கிய எந்த ஒரு அடையாளமும் இல்லை. இதுதான் மாயையின் செயல். மானிடர்கள் மாயையின் செயலை அறியாமல் இருப்பதே சிறந்தது என்று கூறினார். சோமசர்மா வீட்டிற்கு வந்ததும், பக்கத்தில் உள்ள முனிவர்கள் ஒன்று சேர்ந்து, குளிக்கச் சென்ற நீ இவ்வளவு நேரம் கழித்துவரக் காரணம் என்ன என்றார்கள். அதற்கு விடைகூற விரும்பாத சோமசர்மா குப்ஜம்ரகாதீர்த்தம் சென்று கடுமையான விரதம் அனுஷ்டித்தார்..

மதுராவின் சிறப்பு

பல ஊர்களின் சிறப்பினைச் சொல்லிக் கொண்டு வந்தது வராகம். நைமிசாரண்யம், பிராயாகை, புஷ்கரா, வாரணாசி ஆகிய அனைத்திலும் மேம்பட்ட சிறப்பினை உடையது மதுரா. மதுராவில்தான் விஷ்ணு கிருஷ்ணனாக அவதரித்தார்.

நைமிசாரண்யத்தில் இருந்து மதுரா வந்த தாழ்ந்த ஜாதிக்காரன், சதுர்த்தசி திதியில் யமுனையில் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி இறந்துவிட்டான். மதுராவில் உள்ள யமுனையில் இறந்த கூத்திரிய மன்னன் யங்ஷமாதனுவாகப் பிறந்தான். அவன் மனைவி பிவரி என்பவள், தன் கணவன் உறக்கத்தில் பெருமூச்சு விடுவதையும், முனகுவதையும் கண்டு அதன் காரணத்தைக் கேட்டாள். அரசினை மூத்த மகனிடம் ஒப்பித்து விட்டு மதுராவிற்குத் தன்னுடன் வருவதானால் அந்த ரகசியத்தைச் சொல்வதாக மன்னன் கூறினான். மனைவி அதற்கு உடன்பட அரசை மகனிடம் கொடுத்துவிட்டு இருவரும் மதுரா வந்து சேர்ந்தனர். அங்கே வந்து யமுனையில் குளித்ததும் அந்த அரசிக்கு அவள் பழம் பிறப்பு நினைவுக்கு வந்தது. அவள் பழம்பிறப்பில் யமுனையைக் காணும் பொழுது நீரில் மூழ்கி இறந்ததால் காசிராஜன் மகளாகப் பிறந்து செளராஷ்டிர மன்னனாகிய யக்ஷ மாதனுவைத் திருமணம் செய்துகொண்டாள். அரசன் பெருமூச்சு விட்டதற்குக் காரணம் போன பிறப்பில் அவள் மதுராவில் பிறந்து இறந்ததால். இந்தப் பிறப்பில் அங்கே போக வேண்டும் என்ற எண்ணம் வந்ததால் பெருமூச்சு விட்டதாகக் கூறினான். இருவரும் அங்கேயே தங்கி மோட்சம் போயினர்.

ஏனைய புராணங்களைப் போலவே வராக புராணமும் அதைக் கற்பதாலும், கேட்பதாலும் உண்டாகும் பலன்களைக் கூறி முடிக்கின்றது.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top