• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

வாமன புராணம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
இப்புராணம் பற்றி….

வாமன புராணம் விஷ்ணு எடுத்த அவதாரத்தைப் பற்றிப் பேசுவதாகும். இது 6,000 பாடல்களை உடையது. இந்தப் புராணத்தில் பின்வரும் தலைப்புகள் விரிவாகப் பேசப்பெறுகின்றன. தட்ச யக்ஞம், இமவான் மகளாகப் பார்வதியின் தோற்றம், பார்வதியின் தவம், கணேசர் தோற்றம், கார்த்திகேயன் கதை, பிரகலாதன் நைமி சாரண்யத்திற்கு யாத்திரை சென்ற கதை குருகேத்திரச் சிறப்பு சிவபெருமான் அணிந்திருக்கும் பாம்புகள் பற்றிய கதை, மகிஷாசுரன் வதம், அந்தகன் கதை விஷ்ணு வாமன அவதாரம் எடுத்த கதை ஆகியவை இடம் பெற்றுள்ளன.

ஒருமுறை நாரதர் புலஸ்திய முனிவரிடம் சென்று வாமன புராணத்தைச் சொல்லுமாறு வேண்டினார். புலஸ்தியர் சொன்ன கதை வாமன புராணமாக வந்துள்ளது.

சிவ - பார்வதி

சிவபெருமானும், பார்வதியும் மந்தர மலையில் வசித்துக் கொண்டிருந்த பொழுது, கோடையின் வெம்மை தாங்காத பார்வதி, சிவனைப் பார்த்து, எப்படியாவது ஒரு வீடு கட்டிக் கொண்டு மற்றவர் போல நாமும் வாழக் கூடாதா என்றார். அதற்கு திறந்த வெளியில் வாழ்வதுதான் என்னுடைய முடிவு. நீ வெயில் கொடுமையில் அவதிப்படுகின்றாய் என்றால், காடுகளில் மரத்தடியில் சென்று வாழலாம் வா என்று கூறிப் பார்வதியை அழைத்துக் கொண்டு, மரங்களின் நிழலில் வாழத் தொடங்கினார்.

கோடை போய், மழைக் காலம் வந்தது. மேகங்கள், இடியையும், மின்னலையும் உண்டாக்கின. மயில்கள் ஆடத் தொடங்கின. சோவென்று பெய்த மழையில் மலை அருவிகள் வீழ ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிற்று. இப்பொழுது பார்வதி சிவனைப் பார்த்து நாமும் எல்லோரையும் போல வாழ வேண்டாமா? அழகிய வீட்டைக் கட்டிக் கொண்டு அதில் வாழ்ந்தால் இந்த மழையில் நனைந்து குளிரில் வாடும் நிலைமை ஏற்படாதே’ என்று கேட்டுக் கொண்டார். அதைக் கேட்ட சிவன், “பார்வதி, நிலைமை புரியாமல் பேசுகிறாய். கட்டுவதற்கு ஒரு துணிகூட இல்லாமல் புலித்தோலை அணிந்திருக்கிறேன். பொன்நகை என்று சொல்வதற்கு எதுவு மில்லாமல் இந்தப் பாம்புகளை அணிந்திருக்கிறேன். இந்த நிலையில் வீடு கட்டப் பொருளுக்கு எங்கே போவது, வா! மழைக்காலம் முடியும் வரை மேகங்களில் சென்று வாழலாம்" என்று கூறிப் பார்வதியையும் அழைத்துக்கொண்டு மேகங்களில் வாழப் புறப்பட்டார். வடமொழியில் ஜீமுதா என்றால் மேகம் என்று பொருள்படும். மேகத்தில் வாழ்ந்ததால் சிவனுக்கு 'ஜீமுதகேது’ என்ற பெயர் வந்தது.

பிரம்மனின் வெற்றி

முன்னொரு காலத்தில் பிரபஞ்ச உற்பத்திக்கு முன்னர் எங்கும் இருள் சூழ்ந்திருந்தது. சூரியன், சந்திரன் முதலிய எதுவுமில்லை. எங்கும் இருள். பூமியைத் தண்ணீர் மூடி இருந்தது. அத்தண்ணீரில் விஷ்ணு உறங்கிக் கொண்டிருந்தார். ஒருவாறாக யுக முடிவில் விஷ்ணு கண் விழித்தார். பொழுது விடிந்ததைப் பாராட்ட தட்சன் ஒரு யாகம் செய்தான். சிவனைத் தவிர ஏனைய தேவர்கள் அனைவரையும் தட்சன் அழைத்திருந்தார். 'சிவனை ஏன் அழைக்கவில்லை? என்று நாரதர் கேட்க, அவர் கையில் பிரம்மகபாலம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. அதனால்தான் அழைக்கவில்லை என்று புலஸ்தியர் கூறினார். பிரம்மன் மண்டை ஓடு எப்படி சிவனிடம் வந்தது என்று நாரதர் கேட்க, புலஸ்தியர் கூறத் தொடங்கினார்.

பிரபஞ்ச உற்பத்திக்காக விஷ்ணு ஒருமுறை பிரம்மனைத் தோற்றுவித்தார். அவர் நான்கு வேதங்கள் கற்றவராகவும், ஐந்து தலை உடையவராகவும் இருந்தார். திடீரென்று அவர் எதிரே காளை வாகனத்தின் மேல் பார்வதியுடன் சிவன் வந்து தோன்றினார். சிவன் பிரம்மனைப் பார்த்து, நீ யார்? இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய்? என்று கேட்டவுடன், பிரம்மன் படுகோபம் கொண்டு, சிவனைப் பார்த்து, “மூன்று கண்களை உடைய உன்னை எனக்குத் தெரியும். நீ
இருட்டில் வாழ்பவன். நான் யார் என்று தெரியவில்லையா? நான்தான் பிரபஞ்சத்தைப் படைக்கும் பிரம்மன். இவ்வாறு பிரம்மன் கூறியதும், கோபம் கொண்ட சிவன் பிரம்மனின் ஐந்து தலைகளில் ஒன்றைக் கிள்ளிவிட்டார். ஆனால் கிள்ளப்பட்ட தலை சிவன் கையில் ஒட்டிக் கொண்டு கீழே விழ மறுத்தது. கோபம் கொண்ட பிரம்மன் நான்கு கைகளை உடைய ஒரு வீரனை உற்பத்தி செய்து சிவனைக் கொல்லுமாறு பணித்தார். சிவனும் பார்வதியும் விஷ்ணுவிடம் ஒடினர். சிவன் நடந்தவற்றைக் கூற விஷ்ணு, தன் இடக்கையை உயர்த்தி திரிசூலத்தால் அக்கையில் குத்துமாறு கூறினார். சிவன் அவ்வாறு செய்தார். அது திரிசூலமாகையால் விஷ்ணுவின் கையில் மூன்று காயங்கள் ஏற்பட்டு மூன்றிலிருந்தும் இரத்தம் கொட்டிற்று. முதல் காயத்தில் இருந்து சொரிந்த இரத்தம் நட்சத்திரங்களுடன் சென்று சேர்ந்து விட்டது. இரண்டாவது காயத்தில் இருந்து வந்த இரத்தம் பூமியில் விழுந்ததால் அதிலிருந்து அத்ரி, துர்வாசர் தோன்றினர். அத் துர்வாசர் பிறந்த கதை மற்ற புராணங்களில் வேறுவிதமாகக் கூறப்பட்டுள்ளது, மூன்றாவது காயத்தில் இருந்து வந்த இரத்தம் சிவனுடைய நெற்றியில் பட அங்கிருந்து ஒரு வீரன் தோன்றினான். கரிய நிறமுடைய அவ்வீரன் வில்லும் அம்பும் வைத்திருந்தான். அந்த வீரன் சிவனைப் பார்த்து, 'நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான். பிரம்மன் உண்டாக்கிய வீரனைக் கொல்வாயாக என்று சிவன் கட்டளை இட்டார். இருவரும் ஆயிரம் தேவருடன் போர் புரிந்தனர். இறுதியில் பிரம்மன் வீரன் வெற்றி பெற்றான். வெற்றி பெற்ற அவன் சூரிய மண்டலத்தில் சென்று மறைந்து விட்டான். சிவன் வீரன் விஷ்ணுவின் விக்கிரகத்தில் கலந்து விட்டான்.

சிவனும், விஷ்ணுவும்

துண்டிக்கப்பட்ட பிரம்மன் தலை, சிவனுடைய கையில் ஒட்டிக் கொண்டு கீழே விழ மறுத்தது. பிரம்மன் பிராமணர் ஆகையினால், சிவனை பிரம்மஹத்தி தோஷம் வலுவாகப் பற்றிக் கொண்டது. சிவன் ஒவ்வொரு தீர்த்தமாகச் சென்று குளிக்க பிரம்மஹத்தி தோஷம் காரணமாக தீர்த்தங்கள் வற்றி விட்டன. கடைசியாக விஷ்ணுவிடம் சென்று தன் குறையைச் சொன்னார் சிவன். வாரணா என்ற ஆறும், அசி என்ற ஆறும் சங்கமிக்கும் இடத்தில் வாரணாசி என்ற ஊர் உள்ளது. அதில் தச அஸ்வமேதா என்ற ஊர் உள்ளது. அங்கு சென்று நீ பிரார்த்தனை செய்தால் கபாலம் நீங்கும் என்று கூறினார். சிவன் அவ்வாறே செய்ய கபாலம் கையை விட்டு நீங்கியது. நீண்ட காலம் கபாலம் கையில் இருந்ததால் சிவனுக்குக் கபாலி என்றும், அந்த இடத்திற்குக் கபால மோட்சனா என்ற பெயரும் நிலைத்தது.

தட்சயக்ஞம் : புதிய கோணம்

(ஏனைய பல புராணங்களிலும் தட்சயக்ஞம் சொல்லப் பட்டிருப்பதால் அவற்றினின்று மாறுபடும் பகுதிகளை மட்டும் இங்கே கொடுக்கிறோம்.)

தட்சன் யக்ஞம் செய்வதையும், சிவன் அழைக்கப் படவில்லை என்பதையும், தட்சன் மகளும் சிவன் மனைவியுமாகிய சதி தன் தங்கை மகள் விஜயாவின் மூலம் அறிந்து அங்கேயே உயிரை விட்டு விட்டாள். அங்கிருந்த சிவனின் கோபத்தில் கரிய நிறமுடைய வீரபத்திரன் தோன்றினார். விஜயாவையும் சிவன் தோற்றுவித்தார். வீரபத்திரன், விஜயாவுடன் சேர்ந்து தட்சன் யாகசாலைக்குச் சென்று அதனை அழிக்க முற்பட்டனர். அதனைத் தடுக்க வந்த விஷ்ணுவுடன் வீரபத்திரன் போர் செய்தார். விஷ்ணுவுடைய சக்கரம் வீர பத்திரனுடைய சூலாயுதத்தை எதிர்த்து நிற்க முடியாததால், விஷ்ணு வீரபத்திரனுடன் மற்போர் புரிந்தார். மற்போரில் விஷ்ணுவிடம் தோற்ற வீரபத்திரன் சிவனிடம் வந்தார். சிவன் விஷ்ணுவிடம் சண்டை போட விஷ்ணு தோற்று ஒடிவிட்டார். பிறகு அங்கிருந்த முனிவர்களை எல்லாம் வீரபத்திரன் தண்டித்தார். புஷா என்ற முனிவர் காலைப் பிடித்து ஆகாயத்தில் சுழற்றினார். புஷாவின் பற்களை எல்லாம் உடைத்தார்.

பகா என்ற முனிவரின் கண்களைத் தோண்டினார். யாகம் இப்படி முடிந்ததால் யாகமே ஒரு மான் வடிவெடுத்து ஆகாயத்தில் ஒடத் தொடங்கியது. யாக சாலையில் இருந்த சிவ உருவம் இரண்டாகப் பிளந்தது. ஜடாபாரத்தோடு கூடிய ஒரு பகுதியாக சாலையில் தங்கிவிட்டது. மறுபகுதி பாசுபதாஸ்திரம் பூட்டிய வில்லுடன் ஆகாயத்தில் செல்லும் மானைத் துரத்திச் சென்றது. ஆகாயத்தில் சென்ற சிவனது ஒரு பகுதி காலபுருஷ என்ற பெயருடன் ஆகாயத்தில் தங்கிவிட்டது. யாக சாலையில் தங்கிய பகுதி ஜடாதரா என்ற பெயரைப் பெற்றது.

வானத்தில் தங்கிய சிவனுடைய பாகம் மேஷத்தில் தலையும், ரிஷபத்தில் முகமும், மிதுனத்தில் தோள்களும், சிம்மத்தில் இதயமும், கடகத்தில் இரு பக்கங்களும், கன்னியின் வயிறும், துலாத்தில் கொப்பூழும், விருச்சிகத்தில் இடுப்பும், தனுசுவில் தொடையும், மகரத்தில் கால்களும், கும்பத்தில் கணுக்கால்களும், மீனத்தில் பாதங்களும் இடம் பெற்றன. இதுவே வான் மண்டலத்தில் உள்ள பன்னிரண்டு வீடுகளும் பிறந்த கதையாகும்.

மன்மத தகனம்

வெகு காலத்திற்கு முன்னர், நேர்மையான விவ்ரிசா என்ற பிராமணன் ஒருவன் இருந்தான். அவனுக்கு அஹிம்சா என்ற மனைவியும், ஹரி, கிருஷ்ணா, நர, நாராயண என்ற நான்கு மகன்களும் முனிவர்களாகி தவத்தில் ஈடுபட்டனர். இமயமலையில் உள்ள வதரிகாசிரமத்தில் பர்ணசாலை அமைத்துத் தவம் செய்தனர். இவர்கள் கடுமையாகத் தவம் செய்வதை அறிந்த இந்திரன் தன்னுடைய இந்திரப்பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்று கருதி, அவர்கள் தவத்தைக் கலைப்பதற்காக ரம்பா என்ற அப்ஸரஸையும், மதனா என்பவரையும் அனுப்பிவைத்தார்.

இவர்கள் இருவரும் வதரிகாசிரமம் அடைந்த பொழுது, அங்கு பருவத்தில் மாற்றம் ஏற்பட்டது. மலர்கள் மலர்ந்தன, கொடிகள் செழுமையாக வளர்ந்தன. தன் தவம் கலைந்த நாராயண முனிவர் வியப்புடன் இவற்றைப் பார்த்துவிட்டு, அனங்கனைப் பார்த்தார். அனங்கன் என்று சொன்னது யாரை?’ என்று நாரதர், புலஸ்தியரைக் கேட்க, அவன்தான் மதன் என்றும், காமன், கந்தர்வன் என்றும் அனங்கன் என்றும் அழைக்கப்படும் காதலுக்குத் தேவனவன் என்று புலஸ்தியர் கூற, அனங்கன் என்று ஏன் பெயர் வந்தது என்று நாரதர் கேட்க, 'அவன் சிவனால் எரிக்கப்பட்டான்' என்று விடையளித்தான் புலஸ்தியன். சிவன் அவனை எரித்த வரலாற்றையும் கூறத் தொடங்கினார்.

தட்சயக்ளுத்தைக் கேள்விப்பட்டு சதி உயிரை விட்டதில் இருந்து சிவன், சதியைப் பிரிந்த துயரத்தில் மிகவும் ஆழ்ந்து போனார். சில நேரம் நாட்டியமாடியும், சில நேரம் ‘ஓ’ என்று குமுறியும் மனநிம்மதியின்றி அலைந்தார். பிரிவினால் ஏற்பட்ட துடு மிகுதிப்பட்டமையில் ஒவ்வொரு தீர்த்தமாகச் சென்று நீராடத் தொடங்கினார். காளிந்தி நதியில் அவர் நீராட இறங்கியதும் அந்த நதியின் நீரே கருமையாக மாறியது. அப்பொழுது முதல் சிவனுக்கு ஏப்பம் அதிக சப்தத்துடன் வரலாயிற்று. அதை அடக்க முடியாத சிவன் ஏப்பமிட்டுக் கொண்டே இங்குமங்கும் அலைந்தார். வழியில் குபேரன் மகனாகிய பாஞ்சலிகாவைக் கண்டு, என்னுடைய ஏப்பத்தை நீ வாங்கிக் கொண்டால் உன்னை வாழ்த்துவேன் என்றார். அவன் அதனை வாங்கிக் கொண்டதால் அவன் பாஞ்சாலேஸ்வரன் என்று வணங்கப்பட்டான். அதன் பிறகு சிவன் விந்திய மலைப்பகுதிக்குச் சென்றார். அங்கே தவம் செய்து கொண் டிருக்கும் பொழுது திடீரென்று அடி, முடி காண முடியாத லிங்க வடிவை எடுத்தார். அதனால் உலகம் முழுவதும் ஏற்பட்ட அதிர்ச்சியும், பூகம்பமும், மிகவும் அஞ்சத்தக்கனவாக இருந்தன. இதைக் கண்டு அஞ்சிய பிரம்மன் விஷ்ணுவிடம் சென்று அதிர்ச்சியின் காரணம் கேட்டார். விஷ்ணு, சிவன் விந்திய மலைப் பிரதேசத்தில் லிங்க வடிவெடுத்ததன் விளைவாகும் இது என்று கூறினார். இருவரும் விந்திய மலைக்கு வந்து சிவன் நின்ற காட்சி கண்டனர். லிங்கத்தின் முடி கற்பனைக்கடங்காத உயரத்தில்
இருந்தது. அப்படி யானால் அதனுடைய அடியும் வெகுதூரம் சென்றிருக்க வேண்டும் என்று பேசிக் கொண்ட பிரம்மா, விஷ்ணு இருவருமே எப்படியாவது லிங்கத்தின் அடியையும் முடியையும் கண்டு வரவேண்டும் என்று விரும்பினர். உடனே பிரம்மன் தன் வாகனமாகிய அன்னத்தின் மேல் ஏறிக் கொண்டு உயர உயரப் பறந்து சென்றார். விஷ்ணு தன் வாகனமாகிய கருடனில் ஏறிக்கொண்டு கீழ்லோகங்கள் சென்றார். எவ்வளவு உயர்ந்து பறந்தும், எவ்வளவு தாழ்ந்து கிடந்தும் இருவரும் லிங்கத்தின் முடியையோ, அடியையோ காண முடியவில்லை. வெற்றி அடையாத இருவரும் ஒன்று கூடி சிவனை நோக்கிப் பிரார்த்தித்தார்கள். சிவன் அங்கே தோன்றினார். இவர்களுக்குப் பின்னே கந்தர்ப்பன் என்று சொல்லப்படும் மன்மதனைப் பார்த்தார். உடனே அவனது வில்லை ஒடித்து அவனையும் அழித்து விட்டார். அவனது வடிவம் எரிக்கப் பட்டதால் வடிவமில்லாதவன் என்ற பொருளில் அனங்கன் என்ற பெயர் நிலைத்தது. உடனே சிவன் இமயத்திற்குச் சென்று தவம் செய்யப் போய்விட்டார்.

ஊர்வசி பிறந்த கதை

புலஸ்தியர் நாரதரைப் பார்த்து நர, நாராயணர் நாரத கதையை எங்கே விட்டேன் என்று நினைவுக்குக் கொண்டு வாரும். நர, நாராயணன் இருவரும் மிகத் தீவிரமான தவத்தில் ஈடுபட்டு இருந்தனர். இந்திரனால் அனுப்பப்பட்ட ரம்பையும் மதனனும் இவர்கள் எதிரே வந்து நர, நாராயணர் தவத்தைக் கலைக்க நினைத்தனர். கண்விழித்த நாராயண முனிவர் ஒரே நொடியில் இவர்கள் யார் என்பதையும், எதற்காக வந்துள்ளனர் என்பதையும் அறிந்து கொண்டார். சிரித்துக் கொண்டே மதனனைத் தன் பக்கத்தில் வருமாறு கூறினார். அவன் வந்து அமர்ந்தவுடன், அவனிடம் பேசிக் கொண்டே, ஒரு கொத்துப் பூவை எடுத்துத் தன் தொடையில் வைத்து திரித்தார். திரிக்கப்பட்ட பூங்கொத்தில் இருந்து ரம்பையைத் தோற்றோடச் செய்யும் அழகே வடிவான ஒரு பெண் உருவானாள். மதனனைப் பார்த்து, 'ஊர்வசி என்ற இந்தப் பெண்ணுக்கு நிகராக உங்கள் தேவலோகத்தில் எந்த அப்ஸரஸும் இல்லை. இந்திரனுக்கு நான் கொடுக்கும் பரிசாக இந்தப் பெண்ணை அழைத்துச் செல் என்றார். பிரம்மன் மட்டுமே செய்யக் கூடிய காரியத்தை, கேவலம் பூங்கொத்துக்களில் இருந்தே நாராயண முனிவர் செய்ததைக் கண்ட காமன் பயந்து ஒடிச் சென்று நடந்தவற்றை விவரமாகக் கூறினான். இந்த விவரம் அறிந்த இந்திரன் அன்றிலிருந்து இவர்கள் பக்கம் திரும்புவதையே விட்டு விட்டான்.

பிரகலாதன் கதை

ஹிரண்யகசிபுவைக் கொன்று அவன் மகனாகிய பிரகலாதனுக்கு முடி சூட்டினார் விஷ்ணு. அவன் ஆட்சி செய்யும் காலத்தில், சாயாவனர் என்ற முனிவர், நகுலேஷ்வா தீர்த்தத்தில் நீராடப் போனார். அப்பொழுது ஒரு கரிய பாம்பு அவரைக் கடித்தது என்றாலும் அவர் விஷ்ணுவைத் தொழுது விஷத்திலிருந்து விடுபட்டார் என்றாலும் அந்தப் பாம்பு அவரைச் சுற்றி இழுத்துச் சென்று அரக்கர் லோகத்தில் ஆண்டுகொண்டிருந்த பிரகலாதன் முன் நிறுத்தியது. பிரகலாதன் அவரை வணங்கி "முனிவரே! மூன்றுலகிலும் தலைசிறந்து விளங்கும் தீர்த்தங்களில் நீராட விரும்புகிறேன்.” என்றான். அதற்கு முனிவர் “அரசே! மேலுலகத்தில் புஷ்கர தீர்த்தமும், பூலோகத்தில் நைமிச தீர்த்தமும், கீழ்லோகத்தில் சக்கர தீர்த்தமும் தலைமையானவையாகும்” என்று கூறிப் போனார்.

பிரகலாதன் தன்னுடைய படைகளுடன் நைமிச தீர்த்தத்தில் நீராடப் போனான். அங்கே அவனுக்கொரு அதிசயம் காத்திருந்தது. தீர்த்தக் கரையில் உள்ள பெரிய மரம் ஒன்று ஒரு எள்முனைகூட இடமில்லாமல் அடிமரத்திலிருந்து நுனி மரம் வரை அம்புகள் துளைக்கப்பட்டிருந்தது. ஆயிரக் கணக்கான அம்புகள் ஒவ்வொரு பகுதியிலும் குத்திக்கொண்டு அப்படியே நின்றிருந்தன வியப்புத் தாங்காத பிரகலாதன், சுற்று முற்றும் பார்க்கையில், பக்கத்தில் உள்ள ஆசிரமத்தில் இரண்டு முனிவர்கள் தவம் செய்து கொண்டிருப்பதையும், இருவருடைய
பக்கத்திலும் இரு மிகப்பெரிய வில்களும் அம்புகள் நிறைந்த இரண்டு அம்பறாத்துணிகளும் இருக்கக் கண்டான். தவசிகள் வில்லையும், அம்பையும் வைத்திருப்பது பொருத்தமில்லாத செயல் என்று கருதினான் பிரகலாதன். எனவே அவர்களிடம் வந்தான். நாராயண முனிவரைப் பார்த்து, "அம்பையும், வில்லையும் வைத்திருக்கும் நீங்கள் போலித்துறவிகள் என்பதில் ஐயமில்லை. தவம் செய்கின்ற இடத்தில் வில்லுக்கும், அம்புக்கும் என்ன வேலை? நீங்கள் யார்?' என்று கேட்டான். முனிவர் அவனைப் பார்த்து, நாங்கள் யாராயிருந்தால் உனக்கென்ன? என்று கூற, பிரகலாதன் நான் அரசன், இப்படிப்பட்ட போலித் துறவிகளைத் தண்டிக்க வேண்டியது என் கடமை என்றான்.

உடனே நர முனிவர் வில்லை எடுக்க பெரும் போர் மூண்டது. பிரகலாதன் எய்த எல்லா பானங்களையும் நர முனிவரின் பாணங்கள் செயலிழக்கச் செய்தமையால், பிரகலாதன், இவர்கள் சாதாரண மனிதர்கள் அல்லர் என்று தெரிந்துகொண்டு சிறப்பு மிகுந்த பிரம்மாஸ்திரத்தை ஏவினான். நர முனிவர் மிக எளிதாக நாராயணாஸ்திரத்தை ஏவி அதனைத் தடை செய்தார். பிரகலாதன் அக்னியாஸ்திரத் தையும், முனிவர் மஹேஸ்வராஸ்திரத்தையும் பயன்படுத்தினர். மாலை ஆகிவிடவே முனிவர் பிரகலாதனைப் பார்த்து சூரியன் மறைந்த பிறகு சண்டை இடுவது தருமம் அன்று. நாளை பொழுது விடிந்தவுடன் போர் செய்யலாம் என்று கூற, பிரகலாதன் சென்று ஒய்வெடுத்துக் கொண்டு மறுநாள் காலை வந்தான். இப்பொழுது நாராயண முனிவர் போருக்கு வந்தார். ஆயுதங்கள் எதுவும் பயன்படாமல் போகவே, பிரகலாதன் கதாயுதத்தை எடுத்து நாராயண முனிவர் மண்டையில் அடித்தான். கதாயுதம் சுக்கு நூறாயிற்று. தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்பதறிந்த பிரகலாதன் விஷ்ணுவை தியானிக்க, விஷ்ணு தோன்றினார்.

'நான் இவர்களை வெல்ல வேண்டும் என்று பிரகலாதன் கேட்க விஷ்ணு, இவர்களை யாரென்று நினைத்தாய். இவர்கள் என் அம்சமாவர். இவர்களை வெல்வது என்பது இயலாத காரியம் என்று கூறியவுடன், பிரகலாதன், "இவர்களை வெல்ல வேண்டுமென்று விரதம் பூண்டுள்ளேன். அது முடியாது என்றால் நான் என் உயிரை விடுவதைத் தவிர வேறு வழியில்லை” என்றான். அதுகேட்ட விஷ்ணு, "இவர்களை ஆயுத பலத்தால் வெல்ல முடியாது என்றுதான் சொன்னேன். ஆன்ம பலத்தாலும், பக்தியாலும் இவர்களை நீ உன்னிடம் வருமாறு செய்து கொள்ளலாம்” என்று கூறினார்.

அதைக் கேட்ட பிரகலாதன் வில்லையும், அம்பையும் துர எறிந்துவிட்டு, நர, நாராயணர்களைப் பிரார்த்தனை செய்யத் துவங்கினான். அவர்கள் கால்களில் விழுந்து வணங்கி, அவர் யார் என்று தெரியாமையால் அவரை ஏசியும், பாணத்தால் துன்புறுத்தியும் பல தவறுகளைச் செய்துவிட்டேன். என்னை மன்னித்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூற நாராயண முனிவர் "உனக்கு என்ன வரம் வேண்டும்?” என்று கேட்க, உங்களையும் விஷ்ணுவையும் என்றும் மறவாதிருக்க வேண்டும் என்று வேண்டினான். அங்ங்னமே ஆகட்டும்’ என்று முனிவர் கூறியவுடன் பிரகலாதன் தன் நாட்டிற்கு

யாத்திரைக்குப் புறப்படுமுன் அந்தகன் என்னும் அசுர னிடம் அரசை ஒப்படைத்துவிட்டுப் பிரகலாதன் புறப்பட்டிருந் தான் அல்லவா? இப்பொழுது அந்தகன் வந்து அரசை ஏற்று ஆள வேண்டும் என்று கூறியவுடன் பிரகலாதன் எந்தப் பகுதியிலும் எனக்கு இப்பொழுது விருப்பமில்லை. நீயே இதனை ஆள்வாயாக என்று அவனிடமே பொறுப்பை ஒப்படைத்துவிட்டுக் காட்டிற்குத் தவம் செய்யச் சென்று விட்டான்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அந்தகன்

பிரகலாதனும், அந்தகனும் அண்ணன்-தம்பி மக்கள். ஹிரண்யாக்ஷன் மகன் அந்தகாசுரன். ஹிரண்யகசிபு மகன் பிரகலாதன். அந்தகன் முதலில் குருடனாக இருந்தாலும் பிறகு கண்களைப் பெற்று பிரகலாதன் கொடுத்த ஆட்சியை மேற்கொண்டான். அவன் பெரிய சிவபக்தன். ஆதலால் ஆட்சிக்கு வந்தவுடன் சிவனை நோக்கிக் கடுந்தவம் செய்து தேவர்கள், அசுரர்கள் ஆகிய யாராலும் தனக்குச் சாவு வரக்கூடாது என்றும், பூமியிலோ, நெருப்பிலோ தனக்கு இறப்பு வரக்கூடாது என்றும் பல வரங்களைப் பெற்று ஆளத் தொடங்கினான். வரங்களைப் பெற்ற தைரியத்தில், இந்திரனை ஜெயிக்க வேண்டும் என்ற வேகத்துடன் பிரோச்சனன் என்னும் படைத் தலைவனுடன் போருக்குப் புறப்பட்டான். இவன் வருவதை அறிந்த இந்திரன் தேவர்கள் படையை வரிசைப்படுத்தி நிறுத்தினான். இந்திரன் ஐராவதத்தின் மேலும், யமன் ஒரு எருமை மேலும், வருணன் கடற்பன்றி மேலும், கந்தர்வர்கள் நாகங்களின் மேலும், ருத்ரர்கள் வெள்ளைநிறக் காளைகள் மேலும், ஆதித்தியர்கள் குதிரைகள் மேலும், மருத்துக்கள் மான்களின் மேலும் ஏறிவந்தனர். சந்திரன் அன்னங்கள் பூட்டிய ரதத்தில் வந்தான்.

அந்தகன் குதிரை மேலும், விரோச்சனன் யானை மேலும், அயாசங்கு என்பவன் சிங்கத்தின் மேலும் வந்தனர். போர் தொடங்கியது. இந்திரன் முதலியவர்கள் அடி பொறுக்காமல் ஒடத் தொடங்கினர். விரைவில் தேவருலகம் அந்தகன் வசமாயிற்று. அந்தகன் தலைநகரம் அஷ்மகா எனப்படுவதாகும்.

மகிஷாசுரன்

முன்னொரு காலத்தில் ரம்பன், கரம்பன் என்ற இரண்டு அசுரர்கள் இருந்து கொண்டு மூன்று உலகத்திற்கும் பெருந் தீமை புரிந்து வந்தனர். ஆனால் அவர்கள் இருவருக்கும் குழந்தை இல்லை என்ற பெருங்கவலை இருந்து வந்தது. இருவரும் தவம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார்கள். கரம்பன் என்பவன் தண்ணிருக்கு அடியில் சென்று தவம் செய்தான். அதனை அறிந்த இந்திரன் முதலை வடிவில் சென்று கரம்பனை விழுங்கிவிட்டான். தம்பி இறந்ததை அறிந்த ரம்பன் இந்திரன் மேல் கடுங்கோபம் கொண்டான். இந்திரனை அழிக்கக் கூடிய ஒரு பிள்ளை வேண்டும் என்று வேண்டினான். தவம் செய்தான். தவத்தின் முடிவில் யாரும் வராததால் தன் தலையை அறுத்து அக்னிக் குண்டத்தில் போடுவதற்காகக் கையில் வாளை எடுத்து விட்டான். உடனே அக்னி தேவன் அவன் முன் தோன்றி, "தற்கொலை செய்து கொள்ள வேண்டாம். உனக்கு வேண்டிய வரத்தைத் தருகிறேன்” என்று கூறியவுடன் ரம்பன் "எனக்கு ஒரு மகன் வேண்டும். மூன்று உலகத்தையும் வெல்பவனாகவும் மனிதர்கள், தேவர்கள், தெய்வங்கள் யாராலும் கொல்லப் படாதவனாகவும் இருக்க வேண்டும்.” என்றான். அப்படியே ஆகட்டும் என்று கூறிவிட்டு அக்னி மறைந்தான்.

சிலகாலம் கழித்து ரம்பன் குபேரன் வாழும் இடத்திற்குச் சென்றான். யக்ஷினிகள் வாழும் உலகில் ஒர் அழகான பெண் எருமையைப் பார்த்து அதன் மேல் மோகம் கொண்டு அந்த எருமையை மணம் செய்து கொண்டான்.

எருமை மனைவியை அழைத்துக் கொண்டு அசுரர் உலகத்திற்கு வந்தபோது அங்கு அந்த எருமை மனைவியை யாரும் மதிக்கவில்லை. அதனால் வருத்தம் அடைந்த ரம்பன் எருமை மனைவியை அழைத்துக் கொண்டு யகதினி உலகத்திற்கே சென்றுவிட்டான். அங்கே அவனுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு மகிஷாசுரன் என்று பெயரிட்டனர். சிலகாலம் கழித்து மகிஷாசுரனின் தாய் எருமை மற்றொரு எருமையுடன் சண்டை செய்ய நேரிட்டது. தன்னுடைய மனைவியைக் காப்பாற்றச் சென்ற ரம்பன் மற்றொரு எருமையால் குத்திக் கொல்லப்பட்டான். இறந்து போன ரம்பனுடைய உடம்பு எரிகின்ற சிதையின் மேல் அவனுடைய மனைவியாகிய பெண் எருமையும் விழுந்து இறந்தது. அந்தச் சிதை நெருப்பில் இருந்து மிகக் கொடுமையான இரக்கவிஜா என்ற ஒர் அசுரன் தோன்றினான். அவன் சுற்றி இருந்த யக்ஷினிகள், எருமைகள் ஆகியவர்கள் அனைவரையும் கொன்று விட்டான். அவனுடைய பாதுகாவலில் வளர்ந்த
மகிஷாசுரன் பெருவீரனாக மாறி தேவலோகத்தில் இந்திரன் முதலியவர்களை விரட்டினான். அவனை எதிர்க்க முடியாத தேவர்கள் பிரம்மனிடம் சென்று முறையிட்டனர். பிரம்மன், உங்களைக் காப்பாற்ற என்னால் முடியாது. நாம் எல்லோரும் சென்று விஷ்ணுவிடம் முறையிடுவோம் என்று கூறி அனைவரையும் அழைத்துக்கொண்டு விஷ்ணுவிடம் சென்றனர். அங்கு சிவனும் இருந்தார். இதைக் கேட்ட விஷ்ணுவும், சிவனும் பெருங்கோபம் கொண்டனர். சிவனுடைய கோபத்திலிருந்தும், விஷ்ணு, பிரம்மன் முதலியவர்கள் கோபத்திலிருந்தும் ஒவ்வொரு ஆற்றலும் கிளம்பிற்று. இந்த ஆற்றல்களை எல்லாம் ஒன்று திரட்டி காத்யாயன முனிவர் ஆசிரமத்திற்குக் கொண்டு சென்றனர். அம்முனிவர் தம்முடைய ஆற்றலையும் அதனுடன் சேர்க்க எல்லா ஆற்றல் களும் கூடி காத்யாயனி என்ற பெயரில் ஒர் அழகான பெண் வடிவைக் கொண்டது. சிவனுடைய ஆற்றல் அவள் முகமாகவும், அக்கினியின் ஆற்றல் அவள் கண்களாகவும், எமனின் ஆற்றல் அவள் தலைமுடியாகவும், விஷ்ணுவின் ஆற்றல் கைகளாகவும், இந்திரன் ஆற்றல் இடையாகவும், வருணன் ஆற்றல் கால்களாகவும், பிரம்மன் ஆற்றல் பாதங் களாகவும், சூரியன் ஆற்றல் கட்டைவிரலாகவும், யட்சர்கள் மூக்கையும் சத்தியர்கள் கண், புருவங்களையும், மருத்துகள் காதுகளையும் கொடுத்தனர். தேவர்கள் காத்யாயனிக்குப் பலவித ஆயுதங்கள் கொடுத்தனர். சிவன் திரிசூலத்தையும், விஷ்ணு சக்கரத்தையும், வருணன் சங்கையும், அக்கினி சக்தியை யும், வாயு வில்லையும், சூரியன் அம்பராதூணியையும், அம்புகளையும், இந்திரன் வஜ்ராயுதத்தையும், எமன் கதையையும், குபேரன் கதாயுதத்தையும், விஸ்வகர்மா கோடாரியையும் கொடுத்தனர். மற்ற தேவர்கள் அவளுக்கு ஆபரணத்தைக் கொடுத்தனர். இமயமலை ஒரு சிங்கத்தைக் கொடுத்தது.

இவ்வாறு தரப்பட்ட பல்வேறு ஆயுதங்களை எடுத்துக் கொண்டு காத்யாயனி விந்தியமலைக்குச் சென்றாள்.

விந்தியமலையில் நிகழ்ந்தவை

விந்தியமலை சென்ற காத்யாயனி அதையே தன் இருப்பிடமாகக் கொண்டாள். அந்த மலையில் மகிஷாசுரன் தூதர்கள் சண்டா, முண்டா என்ற இருவர், காத்யாயனியைப் பார்த்தவுடன் அவள் அழகில் ஈடுபட்டு தங்கள் அரசனுக்கு ஏற்ற மனைவி என்று முடிவு செய்து அரசனிடம் கூறினர். இதைக் கேட்ட மகிஷன் மகிழ்ந்து தன்பால் உள்ள வீரர்கள் பலரையும், சண்டா, முண்டா, வித்லக்ஷா, கபிலா, வஷ்கலா, உக்ரபுதா, சிக்ஷீரா, ரத்தவிஜா, மாயையின் மகனாகிய துர்தபி ஆகிய தலைவர்கள் பலரையும் காத்யாயனியிடம் பேச அனுப்பினான். அவர்களில் துந்துபி காத்யாயனியிடம் வந்து, எம்முடைய அரசனாகிய மகிஷா மூன்று உலகத்தையும் வென்று அடிமைப்படுத்தியவன். அவனை எதிர்ப்பார் மூவுலகிலும் எவருமில்லை. நீயோ அழகில் சிறந்தவள். உன் அழகுக்கு ஏற்றவன் எங்கள் அரசன். அவனுக்கு ஏற்ற பட்டமகிஷி நீதான். ஆகவே நீ எங்கள் அரசனை மணந்து கொள்ள வேண்டுகிறோம் என்றான். அதைக் கேட்ட காத்யாயனி, நீங்கள் சொல்வது அனைத்தும் எனக்குத் தெரியும். நான் மணந்து கொள்வதில் த.படவில்லை. ஆனால் எங்கள் குடும்ப வழக்கம் என்று ஒன்று உள்ளது. எங்கள் குடும்பத்தில் உள்ள பெண்ணை யாராவது மணக்க வேண்டும் என்றாலும் மணமகளுடன் போர் செய்ய வேண்டும். அவன் வெற்றி பெற்றால் அவள் அவனுக்கு மாலையிடுவாள். அம்முறையைப் பின்பற்றினாலும் நான் மணம் செய்து கொள்கிறேன்’ என்று காத்யாயனி கூறினாள்.

துந்துபி அதனைச் சென்று மகிஷனிடம் கூறியதும் அவன் போருக்குத் தயாரானான். சிக்ஷீராவைத் தலைமைத் தளபதியாக நியமித்து நமரா முன்நின்று போர் செய்தான். சண்ட முண்டா தவிர அனைவரையும் கொன்ற பிறகு காத்யாயனி மகிஷனை எதிர்த்தாள். அவன் எருமை வடிவம் கொண்டு தாக்கவும் காத்யாயனி சிம்மத்தை விட்டுவிட்டு அவன் முதுகில் ஏறி அமர்ந்து அவன்
முதுகு ஒடிகின்ற வரையில் காலால் அழுத்தினாள். அவனுள் இருந்து ஆயுதபாணியாக ஒருவன் வெளிப்பட காத்யாயனி அந்த வீரனைக் கொன்று மகிஷன் தலையை அறுத்தாள்.

தேவர்கள் காத்யாயனியை வாழ்த்த, தேவைப்படும் பொழுது “நீங்கள் வேண்டினால் நான் மீண்டும் வருவேன்" என்று கூறி மறைந்தாள்.

உமாவின் தோற்றம்

நாரதர், புலஸ்தியரைப் பார்த்து தேவையான பொழுது வருவேன்' என்று காத்யாயனி சொன்னாரே, எப்பொழுது மறுபடியும் வந்தார்?' என்று கேட்க, புலஸ்தியர் சொல்ல ஆரம்பித்தார்.

முன்னொரு காலத்தில் மகிஷனோடு சேர்ந்த அசுர குலத்தில் சும்ப நிசும்பர்கள் என்ற இரு சகோதரர்கள் இருந்தனர். மிக்க வரபலம் உடைய அவர்கள் தங்கள் குலத்திற்கு எதிரிகளாகிய தேவர்களை வென்று, இந்திரனை விரட்டி எல்லையற்ற கொடுமைகள் செய்தனர். செய்வதறியாத தேவர்கள் விஷ்ணுவிடம் சென்று தங்கள் பரிதாப நிலையை விளக்கினர். அது கேட்ட விஷ்ணு, எங்களில் யாரும் இவர்களைக் கொல்ல முடியாத அளவிற்கு வரம் பெற்றுள்ளனர். நீங்கள் அனைவரும் சென்று குருக்ஷேத்திரத்தில் பிருதுதாகா என்ற தீர்த்தத்தில் உங்கள் முன்னோர்களைக் குறித்து வேண்டுங்கள். அவர்களிடத்தில் மேனகா என்ற பெண் இருக்கிறாள். அவளை இமவானுக்கு மணமுடித்தால், அவள் வயிற்றில் உமா என்ற பெயருடன், ஒரு பெண் தோன்றுவாள். அவள் சிவனை மணந்தால் கார்த்திகேயன் என்ற குழந்தையும் தோன்றுவான்’ என்று கூற குருக்ஷேத்திரம் எங்கே உள்ளது என்று தேவர்கள் வினாவினார்கள்.

குருக்ஷேத்திரம் பற்றி…

இந்த குருக்ஷேத்திரமும், பிருத்துதாகா தீர்த்தமும் எங்கே உள்ளன என்று கேட்ட தேவர்களுக்கு விஷ்ணு சொல்ல ஆரம்பித்தார்.

பன்னெடுங்காலத்திற்கு முன்னர் ரிக்ஷா என்ற மன்னன் உலகை ஆண்டு வந்தான். அவனுடைய மகனாகிய சம்வரணன் வசிட்டரை குருவாக ஏற்றுக் கொண்டு எல்லா சாத்திரங்களையும், அரசியல் முறையையும் கற்று அறிந்தான். சம்வரணன் வேட்டைக்குச் சென்றபொழுது வைப்ரஜா என்ற வனப்பகுதியில் பல அப்ஸரஸ்கள் இருப்பதைக் கண்டார். அவர்களுள் தப்தி என்பவளைக் கண்ட வுடன் அவள் மீது எல்லையில்லாக் காதல் கொண்டான். அதன் பயனாகக் குதிரை மீதிருந்த அவன் மயங்கிக் கீழே விழும்படி ஆயிற்று. அங்கு வந்த வித்யாதரர்கள் அவன் மயக்கத்தைத் தெளியவைத்து நாட்டிற்கு அனுப்பினர். என்றாலும் சம்வரணன் தான் சந்தித்த மங்கையை மறக்கவில்லை. தப்தி சூரியனின் மகளாவாள். இருவரும் மணம் புரிந்துகொள்ள விரும்பினர்.

விஷயத்தை அறிந்த வசிட்டர் சூரியனைக் கூப்பிட்டுப் பேசித் திருமணத்தை முடித்து வைத்தார். இவர்களுக்குப் பிறந்த குழந்தைதான் குரு' என்ற பெயருடையவன். இவர்கள் பிறந்ததில் இருந்தே வசிட்டரிடம் கல்வி பயின்றனர். ஆதலின் பத்து வயதிற்குள் கற்க வேண்டிய அனைத்தும் கற்று விட்டான். குருவிற்குப் பதினாறு வயதாகும் பொழுது அவன் தந்தை, சுதாமா என்ற அரசனின் மகள் செளதாமினியை குருவுக்குத் திருமணம் செய்து வைத்தான். நாளாக நாளாக குருவின் மனத்தில் ஒர் ஆழமான எண்ணம் பிறந்தது. இதுவரை உலகத்தில் யாரும் செய்யாத காரியத்தைத் தான் செய்து, உலகம் புகழும்படித் தன் பெயரை நிலைநாட்ட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான். ஒவ்வொரு இடமாகத் தேடிச் சென்று, துவைத வனம் என்ற இடத்தை அடைந்தான். பிரம்மன் வந்து தங்குவதற்கு இந்த உலகில் ஐந்து இடங்கள் உண்டு. அவை
வடபகுதியில், சரஸ்வதி நதியின் கரையில் உள்ள சமந்தபஞ்சகா என்ற இடமும், கிழக்கே கயாவும், தெற்கே விராஜாவும், மேற்கே புஷ்கராவும், நடுவே பிரயாகையும் அந்த இடங்களாகும்.

குரு, சமந்தபஞ்சகம் என்ற இடத்தில், பொன்னாலாகிய ஏரினைப் பூட்டி நிலத்தினை உழ ஆரம்பித்தான். அப்பொழுது இந்திரன் வந்து இந்த இடத்தை ஏன் உழுகிறாய்? என்றான். குரு, இங்கே நிலத்தை உழுது, நற்பண்புகளை விதைக்கப் போகிறேன்' என்று கூறினவுடன் இந்திரன் போய்விட்டான். குரு நிலத்தை உழுதுகொண்டே இருந்தான். விஷ்ணு அங்கே வந்து நிலத்தை ஏன் உழுகிறாய் என்று கேட்க, குரு அதே விடையைக் கூறினார். என்ன விதை வைத்திருக்கிறாய்? எங்கே வைத்திருக்கிறாய் என்று கேட்க, குரு என் உடலில் இருக்கிறது என்றான். என்ன விதைகள் என்று விஷ்ணு கேட்க, "தியானம், சத்தியம், இரக்கம், தூய்மை, மன்னித்தல், தானம் செய்தல் ஆகியவையே அந்த விதைகள்” என்று குரு கூற, விதை எங்கே என்று விஷ்ணு கேட்க, குரு தன் வலக்கையை நீட்டினான். அவன் வலக்கையை ஆயிரம் துண்டுகளாக வெட்டி, உழப்பட்ட வயல்களில் விதைத்துக் கொண்டே வந்தார். அதேபோல அவன் இடக்கை, இரண்டு தொடைகள் ஆகியவற்றை வெட்டி விதைத்த பிறகு அவன் தலையையும் வெட்டக் கொடுத்தான். அப்பொழுது விஷ்ணு அவனைத் தடுத்து 'உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்க, குரு, பெரும்பகுதி நிலத்தை உழுதுவிட்டேன். வரம் தருவதானால் இந்த இடம் சிறந்த புண்ணிய க்ஷேத்திரமாக விளங்கட்டும் என்று வேண்டிக் கொண்டான். விஷ்ணுவும் அப்படியே ஆகட்டும். இந்தப் புண்ணிய பூமிக்கு இன்று முதல் குருக்ஷேத்திரம் என்ற பெயர் வழங்கட்டும் என்றார்.

இந்தப் புண்ணிய பூமியின் பக்கத்தில் பிருதுதாகா என்ற ஆறு ஒடுகிறது. அந்தத் தீர்த்தக் கரையைத்தான் பிதுர்க்களை வணங்கி, மேனகாவை அழைத்து வரவேண்டிய இடம் என்று விஷ்ணு கூறினார். இதே குருக்ஷேத்திரத்தில்தான் லோமஹர்ஷன முனிவர் மற்ற முனிவர்களுக்கு வாமன புராணத்தைச் சொன்னார். வாமன புராணக் கதை வருமாறு:

வலியின் கதை (மகாபலி)

பிரஹலாதனின் மகன் விரோச்சனுக்கு வலி மகனாகப் பிறந்தான். நேர்மையும் சத்தியமும் உடைய அவன் மூன்று உலகங்களையும் ஆண்டு வந்தான். இந்திரன் மட்டும் தன் பதவி பறி போனதால், மிகவும் வருத்தத்துடன் இருந்தான். தேவர்களை அழைத்துக் கொண்டு தேவர்களின் தாய்தந்தை யாகிய அதிதி, காசியபன் ஆகிய இருவரையும் சந்தித்தான். அவர்கள் இருவரும் நேர்மையுடன் நடக்கும் தைத்தியனாகிய வலியை ஒன்றும் செய்ய முடியாது. தேவையானால் பிரம்மாவைச் சென்று பாருங்கள் என்று கூறினார்கள். பிரம்மனிடம் சென்ற பொழுது "வலியை ஒன்றும் செய்ய முடியாது. நீங்கள் வடகடலின் கரைக்குச் சென்று விஷ்ணுவை தியானியுங்கள்” என்று கூறினர். இப்பொழுது இந்திரன் முதலிய தேவர்களுடன் அதிதி, காசிபன் ஆகிய இருவரும் உடன் சேர்ந்துகொண்டு விஷ்ணு தியானத்தில் இடம்பெற்றனர். விஷ்ணு அவர்கள் எதிரே வந்து, நான் காசிபனுக்கும், அதிதிக்கும் பிள்ளையாகப் பிறக்கப் போகிறேன். உங்கள் துயர் தீரும் என்று கூறி மறைந்தார். அதே நேரத்தில் வலியின் நாட்டில் தீய சகுனங்கள் பல தோன்றின. வலி அதன் காரணம் யாது என்று தனது பாட்டனாகிய பிரகலாதனைக் கேட்டான். பிரகலாதன், அதிதியின் வயிற்றில் விஷ்ணு பிறக்கப் போகிறார். அதனால்தான் தைத்தியர்களிடையே இந்தத் தீய சகுனங்கள் ஏற்படுகின்றன என்று கூறினார். அதைக் கேட்ட வலி “அந்த விஷ்ணு என்பவன் யார்? என்னை விட அதிக பலம் பொருந்தியவனா?” என்று விஷ்ணுவை இழிவாகப் பேசினான். சிறந்த விஷ்ணு பக்தனாகிய பிரகலாதன் மனம் நொந்து, “நீ உன் பலத்தை இழக்கப் போகிறாய்” என்று சாபமிட்டான். பயந்து போன வலி, பாட்டனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். பிரகலாதன் அவனை மன்னித்தாலும் கொடுத்த சாபத்தைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
மாற்றும்படிக் கூறினார். பிரம்மன் அவ்வாறே செய்து, அவளிடம் இருந்து எடுக்கப்பட்ட கருமை நிறத்தை காத்யாயனி என்ற பெண்ணாகப் படைத்தார். உடைக்குச் சிவப்பு நிறம் வந்ததும் அவள் கெளரி என்ற பெயர் பெற்றாள்.

சிவனும், கெளரியும் ஒர் ஆண் மகவு தோற்றுவித்தால், தன் இந்திரப் பதவிக்கு ஆபத்து என்றுணர்ந்த இந்திரன், சிவன் குழந்தை பெறாமல் இருக்கப் பார்த்துக் கொண்டார். அங்கு இருந்த கெளரி, இந்திரன் மேல் கோபம் கொண்டு, சிவனுடைய உதவி இல்லாமல் தானே ஒரு ஆண் மகவை உண்டாக்கினார். அக்குழந்தையைக் கண்ட சிவன் பெரிதும் மகிழ்ந்து, நாயகனாகிய தன் உதவி இல்லாமல் பிறந்த குழந்தை ஆதலால், விநாயகன் என்று பெயரிட்டார். சிவகணங்கள் அனைத்திற்கும் தலைவனாக இருந்தமையால் கணேசன் என்றும், கணபதி என்றும் அழைக்கப்பட்டார்.

சும்ப - நிசும்பர்கள்

காசிட முனிவர், தனு என்ற தைத்தியப் பெண்ணை மணந்து சும்ப, நிசும்பர் என்ற மக்களைப் பெற்றனர். (இவர்களைக் காளி அழித்த கதை ஏற்கெனவே மார்க்கண்டேய புராணத்தில் கூறப்பட்டுள்ளது)

முராரியின் கதை

விஷ்ணுவுக்கு முராரி என்ற பெயருண்டு என்று புலஸ்தியர் சொல்ல, அவருக்கு முராரி என்று பெயர் வரக் காரணம் என்ன என்று நாரதர் கேட்க, புலஸ்தியர் கூற ஆரம்பித்தார்.

காசியப முனிவனுக்கு, தைத்திய குலத்தைச் சேர்ந்த முரா என்றொரு மகன் இருந்தான். மூன்று உலகங்களையும் வெல்ல எண்ணிய அவன் கடுமையான தவம் புரிந்து பிரம்மனிடம் புதுமையான வரம் ஒன்றினைப் பெற்றான். அதன்படி “போர்க்களத்தில் யாரேனும் ஒருவர் மேல் நான் என் கையை வைத்தால் அவர்கள் உடனே இறந்துவிட வேண்டும்” என்றான். பிரம்மனும் அவ்வரத்தை அளித்தார். முரா இவ்வரத்தைப் பெற்றவுடன் அவனை வெல்ல முடியாது என்று அறிந்த இந்திரன், இந்திராணி, தன் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு காளிந்தி நதிக் கரையோரம் ஒரு நகரத்தை நிர்மாணித்து அதில் சென்று வாழ்ந்தான். ரகு அரசன் ஒரு யாகம் செய்து கொண்டிருந்தான். முரா அவனிடம் வலுச் சண்டைக்குப் போனான். வசிட்டர் அவனிடம், "உனக்கு இணையான வலிமை கொண்டுள்ளவரிடமே நீ போரிட வேண்டும் என்று கூறி யமனிடம் அனுப்பினார்.

முராவின் வலிமை பற்றி அறிந்த யமன் தன் வாகனத்தில் ஏறி விஷ்ணுவிடம் சரணடைந்தான். விஷ்ணு அவனைச் சமாதானப்படுத்தி, அந்த அசுரனைத் தன்னிடம் அனுப்பும்படிக் கூறினார். யமனும், முராவிடம் சென்று விஷ்ணு அவனுடன் போர் புரியக் காத்திருப்பதாகவும், அவன் ஷிரோதா கடற் கபரக்குச் செல்ல வேண்டும் என்றும் கூறினான். அது கேட்ட முரா அங்கு சென்று விஷ்ணுவிடம், "உன்னிடம் சண்டை யிட வந்துள்ளேன்” என்று கூறினான். அது கேட்ட விஷ்ணு முராவிடம், "நீ என்னுடன் சண்டையிட வேண்டுமானால் உன் இதயம் ஏன் வேகமாகத் துடிக்கிறது. நீ மிகவும் பயப்படுகிறாயா? அவ்வாறு பயந்து இருக்கும் உன்னுடன் நான் சண்டையிட விரும்பவில்லை” என்று கூறியவுடன், முரா விஷ்ணு கூறிய வார்த்தைகள் உண்மைதானா என்று அறிய தன் நெஞ்சின் மீது கை வைத்துப் பார்க்கவும், பிரம்மன் வரத்தின்படி உடனே இறந்து போனான். இறந்த அவன் உடலை விஷ்ணு தன் சக்கரத்தினால் துண்டாக்கினார். முரா என்ற அசுரனைக் கொன்றதால், அன்று முதல் விஷ்ணுவுக்கு 'முராரி என்ற பெயர் வழங்க ஆரம்பித்தது.
அந்தகன்

அந்தகன் என்ற அசுரனைப் பற்றி நாம் முன்பே அறிந்துள்ளோம். அந்த அசுரன் ஒருநாள் பிரகலாதனுடன் மந்தர மலைக்குச் சென்ற பொழுது, பார்வதியைக் கண்டு அவளை மணந்து கொள்ள விரும்பினான். இது கேட்ட பிரகலாதன், அந்தகனிடம், "பைத்தியக்காரனைப் போல் உளறாதே. பார்வதி சிவனின் மனைவியாவார். இந்த அகில உலகத்திற்கு அவரே தாய் ஆவார். ஆகையால் நீ உன் புத்தியை மாற்றிக் கொள்” என்றான். அதைக் காதில் போட்டுக் கொள்ளாத அந்தகன் பார்வதியைத் தாக்க நினைத்து அங்கு சென்றான். சிவனின் நண்பனாகிய நந்தி, அந்தகனைத் தடுக்க, கோபம் கொண்ட அசுரன் நந்தியைக் கலப்பையால் அடித்து மயக்கமுறச் செய்தான்.

இதை அறிந்த பார்வதி ஒரே மாதிரி தோற்றம் தரக் கூடிய நூறு உருவங்கள் பெற்றார். அங்கு வந்த அந்தகன் உண்மையான பார்வதியைக் கண்டுபிடிக்க முடியாமல் சோர்ந்து போனான். இத்தருணத்தைப் பயன்படுத்திக் கொண்ட பார்வதி அவனை ஒர் ஆயுதத்தால் வீழ்த்தினார். அந்தகன் மயக்கமுற்றுக் கிடந்த சமயத்தில் பார்வதி அவ்விடத்தை விட்டுச் சென்று விட்டார். நீண்ட நேரத்திற்குப் பிறகு கண் விழித்த அந்தகன், பார்வதியைக் காணாமையால் ஏமாற்றத்துடன் பாதாளலோகம் திரும்பினான். சில நாட்கள் கழிந்தன. அந்தகன் பார்வதியை மறக்க முடியாததால், தன் படைகளைக் கூப்பிட்டு, பார்வதியைக் கவர்ந்து கொண்டு வருபவர்களுக்குத் தக்க பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறினான்.

இதைக் கேட்ட பிரகலாதன் அந்தகனிடம், "உனக்குப் பைத்தியம் பிடித்து விட்டது. பார்வதி உன் தாய் என்பதையும், சிவன் உன் தந்தை என்பதையும் நீ மறந்துவிட்டாய். இப்போது அதை உனக்குச் சொல்லப் போகிறேன்” என்று கூறி, சொல்லத் துவங்கினான் பிரகலாதன்.

ஒருமுறை சிவன் தனியே வீற்றிருக்கும் பொழுது, பார்வதி பின்புறமாக வந்து அவர் கண்களைப் பொத்தினார். அண்டங்கள் முழுவதும் இருண்டன. சிவனுடைய உடம்பிலிருந்து ஒரு பிள்ளை உதயமானான். ஹிரண்யாக்ஷன், பிள்ளை இல்லை என்று தவம் செய்தபொழுது சிவன் தோன்றி, "இந்த ஜென்மத்தில் உனக்குப் புத்திரபாக்கியம் இல்லை. என்னிடம் கண் இல்லாத ஒரு பிள்ளை இருக்கிறான். அவனை உன் மகனாக ஏற்று வளர்ப்பாயாக’ என்றார். சிவன் பார்வதி இருவருக்கும் மானசீகமாகப் பிறந்தவன் நீ பிறர் மனைவியை விரும்புவது பெருங்குற்றம். அல்லாமலும் உன் தாயின் இடத்தில் இருக்கின்றவளை விரும்புவது பெரும் பாதகம் என்று கூறிவிட்டு, பிறன் மனைவியை விரும்புவது எவ்வளவு தவறு என்பதற்கு ஒரு கதை கூறினான் பிரகலாதன்.

தண்டா

தண்டா என்ற தைத்திய மன்னன் ஒருமுறை தன் குருவான சுக்ராச்சாரியார் மகளைப் பார்த்தான். உடனே அவளை விரும்பி மணம் செய்து கொள்ளக் கேட்டான். அரஜா என்ற அப்பெண், என் தந்தையைக் கேள். மேலும் என் தந்தை உனக்கு குரு ஆவார். குருமகள் உனக்குத் தங்கை முறை ஆவாள். எனவே நீ விரும்புவது சரியன்று என்றாள். அதற்கு இசையாத அவன் மேலும் வற்புறுத்தவே என் தந்தை வெளியூர் சென்றிருக்கிறார். அவர் வந்தவுடன் அவருடைய உத்தரவைக் கேட்டுக் கொண்டு என்னை மணந்து கொள் என்றாள். தண்டன் குருவின் மகளைத் திருமணம் செய்து கொள்வது புதிதன்று. தந்தையின் உத்தரவுப்படிதான் செய்யவேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதை வலியுறுத்துவதற்காகச் சித்ராங்கதாவின் கதையைக் கூறினான்.

சித்ராங்கதா, விஸ்வகர்மாவின் மகள், சுரதா என்ற ராஜ குமாரனை மணம் செய்து கொள்ள நினைக்கையில், விஸ்வகர்மா ஊரில் இல்லை. அவன் வரும்வரை காத்திராமல் இருவரும் மணம் செய்து கொண்டனர். வந்த விஸ்வகர்மா நடந்ததைக் கேள்வியுற்று, உன் கணவனைப் பிரிந்து வாழ்வாயாக என்று சாபமிட்டார். அந்தச் சாபத்தின்படி ஆற்றுத் தண்ணிரில் சுரதா
அடித்துக்கொண்டு போகப்பட்டான். விஸ்வகர்மா சாபப்படி, அவள் தனிமையில் வாழ நேரிட்டது என்று அவன் கூறியதும், தண்டா இடைமறித்து, இவ்வளவு தான் உனக்குத் தெரியும். இதற்கு மேல் நான் சொல்கிறேன். தண்ணிரோடு போன சுரதா கரை ஒதுங்கிப் பிழைத்துக் கொண்டான். சித்ராங்கதா ரிதத்வஜா என்ற முனிவரை அணுகி அவரது உதவியால் தண்ணிரில் சென்று தப்பித்துக் கொண்ட தன் கணவனை அடைந்து வாழத் தொடங்கினாள் என்று சொல்லி, சுக்ராச்சாரியார் மகள் வாயை அடைத்தான். இந்தக் கதையினைச் சொல்லி, தண்டா பிடிவாதமாக அரஜாவை மணந்து கொண்டார். யாத்திரையில் இருந்து மீண்ட சுக்ராச்சாரி, தண்டாவையும், அவன் நாட்டையும் எரித்து விட்டார். தண்டனுடைய நகரம் இருந்த இடம் சுக்ராச்சாரியாரால் எரிக்கப்பட்டதால் ஒரு காடு முளைத்தது. அதற்குத் தண்டகாரண்யம் என்ற பெயர் வந்தது. தண்டன் பெரிய தவறு இழைத்ததால், தண்டகாரண்யம் என்ற அவ்விடத்திற்கு தேவர்கள் செல்ல மாட்டார்கள்.

அந்தகன் தோல்வி

பிரகலாதன் எவ்வளவு சொல்லியும் அந்தகன் புத்திமதி கேட்கவில்லை. பார்வதியை மணந்து கொள்ள வேண்டும் என்ற அவன் எண்ணம் மாறவில்லை. சம்பரன் என்ற அசுரனை சிவனிடம் தூது அனுப்பினான். சிவனிடம் சென்ற சம்பரன் “எங்கள் அரசன் அந்தகன் மூன்று லோகத்திற்கும் தலைவன். அவன் அதிகாரத்தின் கீழ்தான் மந்தர மலை இருக்கிறது. இதில் நீங்கள் வாழ விரும்பினால் பார்வதியை எங்கள் அரசிடம் ஒப்படையுங்கள் என்று கூறினான். இதைக் கேட்ட சிவன், “எனக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை. நீ சென்று பார்வதியைக் கேட்டுவிடேன்” என்று கூறினார். சம்பரன் பார்வதியைப் பார்த்துக் கேட்க, அவர் சிவனும், அந்தகனும் போரிட வேண்டும் என்றும், வெற்றி பெறுபவரை மணந்து கொள்வதில் தனக்கு ஆட்சேபணை இல்லை என்றும் கூறினார்.

சம்பரன் சென்று அந்தகனிடம் நடந்தவற்றைக் கூற, அவன் போருக்குத் தயாரானான். மாபெரும் படையைத் திரட்டிக் கொண்டு மந்தர மலைக்கு வந்தான். சிவனுடைய கணங்கள் நந்தியின் தலைமையில் போர்புரிய வந்தன. மருத்துக்கள், ருத்திரர்கள், ஆதித்தர்கள் ஆகிய அனைவரும் சிவன் பக்கம் நின்றனர். விஷ்ணுவின் படைகளும், சக்கரமும் இப்பக்கத்தில் நின்றன. போர் தொடங்கியவுடன் நந்தியும் கணங்களும் அந்தகன் படைகளை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்தன. ஆனால் ஒர் அதிசயம் நிகழ்ந்தது. கொல்லப்பட்ட அனைவரும் மீண்டும் போராட வந்தனர். சுக்ராச்சாரியின் சஞ்சீவினி மந்திரத்தால் இறந்தவர்கள் எழுப்பப்படுவதை சிவனிடம் நந்தி கூற, சுக்கிராச்சாரியாரைக் கொண்டுவருமாறு சிவன் பணித்தார். நந்தி சுக்ராச்சாரியாரை இழுத்து வர, சிவன் சுக்ராச்சாரியாரை விழுங்கி விட்டார். சுக்ராச்சாரியார் இல்லாததால் அந்தகன் படைகள் வெகு விரைவில் காலியாயின. இறுதியில் அந்தகன் சிவனிடம் நேரிடையாகப் போரிட்டான். சிவன் அந்தகனை திரிசூலத்தால் குத்தி ஆகாயத்தில் ஏற்றிவிட்டார். சாகப்போகும் வேளையில் சிவனிடம் மன்னிப்புக் கேட்டு சிவபக்தனாக மாறிவிட்டான். அவனே மறுபிறப்பில் பிருங்கி முனிவனாகத் தோன்றினான்.

(இதற்குப் பிறகு மருத்துக்களின் கதை முன்னரே மற்ற புராணங்களில் கொடுக்கப்பட்டுள்ளதால் இங்கு எழுதப் பெறவில்லை,)

துந்துவின் கதை

(மாவலி கதையின் வேறுபட்ட கதை) தனு, காசியப முனிவர் தம்பதிகளின் மகன் துந்து என்னும் அரக்கன். அவன் பிரம்ம தேவனைக் குறித்துத் கோரத்தவம் செய்து தேவர்களால் தனக்கு மரணம் ஏற்படாதவாறு வம் பெற்றான். துந்து இந்திரனை வென்று அப்பதவியைப் பெற்றான். இந்திரன்
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
தேவர்களுடன் தம்மைக் காப்பாற்றிக் கொள்ள பிரம்மாவின் இருப்பிடமாகிய சத்திய லோகம் சென்று அடைந்தான்.

அதையறிந்த அரக்கன் துந்து படைத்தலைவனிடம் பிரம்ம லோகம் அடைந்து தேவர்களைத் துரத்தித் தங்க இடமின்றிச் செய்ய வேண்டும் என்றான். பிரம்மலோகம் செல்லும் வழியில் ஏற்படக்கூடிய கஷ்ட நஷ்டங்கள் பற்றி அவர்கள் எடுத்துரைத்தனர்.

அரக்கன் சுக்கிராச்சாரியாரை அடைந்து, பிரம்மலோகம் செல்ல என்ன செய்ய வேண்டும் என்று கேட்க, அவர், இந்திரன் நூறு அசுவமேத யாகங்கள் செய்து அந்தச் சக்தியை அடைந்தான் என்றார். உடனே துந்துவும் நூறு அசுவமேத யாகங்கள் செய்யும் முயற்சியில் ஈடுபட்டான்.

அப்படியானால் ஒரே நேரத்தில் நூறு அசுவமேத யாகங்களைச் செய்ய ஏற்பாடு செய்யுங்கள் என்றான் துந்து. அதற்குரிய ஏற்பாடுகள் நடைபெறும் செய்தி சத்யலோகத்தை எட்டவே, தேவர்கள் அஞ்சி நடுங்கினர். பிரம்மனிடம் சென்று முறையிட, பிரம்மன் துந்துவின் வரபலம் அறிந்தவர் ஆதலால் அவனைக் கொல்ல முடியாது, எல்லோரும் சென்று விஷ்ணுவிடம் முறையிட்டால் ஏதாவது வழி பிறக்கும் என்று கூறினார். அனைவரும் விஷ்ணுவிடம் சென்றனர். அவர்கள் குறை கேட்ட விஷ்ணு அஞ்ச வேண்டாம். துந்துவைக் கொல்ல முடியாது என்றாலும், அடக்கி வைக்கிறேன்’ என்றார்.

அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது, குள்ளன் வடிவத்தில் ஒரு இளைஞன் தோன்றினான். அதைக் கண்ட அசுரர்கள் ஒடிச் சென்று அவனைக் காப்பாற்றி துந்துவின் எதிரிலே நிறுத்தினர். துந்து, குள்ளனைப் பார்த்து 'உனக்கு ஏன் இந்த நிலை ஏற்பட்டது? என்றான்.

வாமனன் (குள்ளன்) தன் கதையைச் சொல்லத் தொடங்கினான்: “பிரபசா என்ற பிராமணனுக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தனர். நேத்ரபாசா, கதிபாசா என்றும் அழைக்கப்பட்டனர். தந்தை இறந்தவுடன் பாகப் பிரிவினையில் தகராறு எழுந்தது. வீட்டின் பாதிப்பகுதி எனக்குச் சேர வேண்டும் என்று நான் கூறியவுடன் என் அண்ணன், 'குள்ளன் முழுமனிதன் அல்லன். ஆகவே அவனுக்கு ஒரு பங்கு தருவது என்பது அர்த்தமற்ற செயலாகும் என்று கூறினான். நான் பிடிவாதமாக என் பங்கைத் தரவேண்டும் என்று கேட்டதற்கு என்னைத் துக்கி ஆற்றில் எறிந்து விட்டான்” என்று கூறி முடித்தான்.

இதைக் கேட்ட துந்து, மிகவும் மனம் வருந்தி “கவலைப் படாதே! உனக்கு எவ்வளவு நிலம் வேண்டுமோ, அது எந்த இடத்தில் வேண்டுமோ அங்கு உனக்குத் தருகிறேன்” என்றான். குள்ளன் பயந்தவன் போல, உடலைச் சுருக்கி வளைத்துக் கொண்டு, “எங்கே எனக்கு இடம் கொடுத்தாலும் என் அண்ணன் பிடுங்கிக் கொள்வான். ஆகவே என் கால் அளவால் மூன்றடி நிலம் தந்தால் போதுமானது” என்றான். துந்து ஒப்புக் கொள்ள வாமனன் விஸ்வரூபம் எடுத்து பூமியை ஒர் அடியாகவும், ஆகாயத்தை ஓர் அடியாகவும் அளந்த பிறகு மூன்றாவது அடியை துந்துவின் முதுகில் வைத்து அழுத்த பூமியில் ஒரு பெரிய பள்ளம் தோன்றி அதில் துந்து வீழ்த்தப்பட்டான். அங்கு துந்து கயிற்றால் கட்டப்பட்டு, தொங்க விடப்பட்டான்.

புரூரவர்களின் வரலாறு

சந்திர வம்சாவளியின் முதல் அரசன் புரூரவன் ஆவான். அம்மன்னனின் பழைய வரலாற்றை, வாமன புராணம் பேசுகிறது.
மத்ரா அரசாட்சியில், சகலா என்றொரு நகரம் உள்ளது. அந்நகரத்தில் தர்மா என்ற பெயருள்ள வணிகன் வாழ்ந்து வந்தான். அவன் சாஸ்திரங்களை நன்கு கற்றவனாகவும், நேர்மையான குணம் கொண்டவனாகவும் இருந்தான். வாணிபம் செய்யும் பொருட்டு செளராஷ்டிரா என்ற இடத்திற்குச் சென்றான். வழியே செல்லும் பொழுது, தர்மாவிடம் இருந்த பொருட்கள் அனைத்தும் களவு போயின. தர்மா பல இடங்களில் சுற்றிவிட்டு, முடிவில் க்ஷமி மரத்தின் அடியில் வந்து சேர்ந்தான். அம்மரத்தில் பறவைகள் எதுவும் இல்லை. அங்கு வந்த தர்மா களைப்பின் காரணமாக உறங்கிவிட்டான்.

உறங்கி எழுந்தவுடன், அங்கு ஒரு பேய் அந்த மரத்தை நோக்கி வருவதைக் கண்டான். அந்தப் பேயைச் சுற்றி ஆயிரக்கணக்கான பேய்கள் உடன் வந்தன. முதலில் வந்த தலைவனாகிய பேய், தர்மாவை நோக்கி, “நீ யார்? எங்கிருந்து வருகிறாய்?’ என்று கேட்டது. தர்மா தன் கதையைக் கூற, மிகவும் மனம் வருந்திய அப்பேய், அவனுக்கு விருந்தினைத் தயார் செய்யும்படி மற்றப் பேய்களிடம் கூறிற்று. அப்பேய் கூறிய மறுவிநாடி, இரு பாத்திரங்களில் பலவித உணவு மற்றும் தண்ணிர் கொண்டுவரப்பெற்றது. அவை அனைத்தையும் தர்மா உண்டு முடித்தான். உணவு உண்ட பின்பு, அந்தப் பேய்களின் தலைவனிடம், "இந்த உணவு, நீர் எங்கிருந்து வந்தது? நீங்கள் யார்? எவ்வாறு இந்த வனாந்திரத் திற்கு வந்தீர்கள்? உங்கள் கதையினைக் கூறுங்கள்” என்று கேட்க, அத்தலைவன் கூற ஆரம்பித்தான். “நண்பனே! முன் ஜென்மத்தில் நான், சகலா என்ற ஊரில் சோமசர்மா என்ற பெயருடன் வசித்து வந்தேன். வணிகம் செய்வது எனது தொழில். சோமஷ்ரவா என்ற பெயருடைய நண்பன் என் வீட்டின் பக்கத்தில் இருந்தான். அவன் விஷ்ணு பக்தன். நான் மிகவும் கஞ்சனாகவும், யாருக்கும் தானம் எதுவும் கொடுக்காமல் இருந்தேன்.

ஒரு சமயம், பல யாத்ரிகர்களோடு சோமசர்மாவாகிய நான் பல தீர்த்தங்கள் சென்றேன். அச்சமயம் பசியால் வாடிய ஒருவனுக்குச் சிறிது உணவும் நீரும் கொடுத்தேன். நான் கொடுத்த உணவு, பேய்களுக்காக வைக்கப்பட்ட உணவாகும். ஆதலால் நான் இறந்தவுடன், பேயாக மறுபிறப்பில் பிறந்தேன். போன ஜென்மத்தில், நான் உணவும், நீரும் தானமாகக் கொடுத்ததால், இந்த ஜென்மத்தில் எனக்கு உணவுக்கும் நீருக்கும் பஞ்சமில்லை. அத்துடன் ஒரு குடையையும் தானமாகக் கொடுத்திருந்தேன். அதுவே க்ஷமி மரமாக மாறியுள்ளது. மற்றவர்கள் எந்த தானமும் முன் ஜென்மத்தில் செய்யாததால், இங்கு பேய்களாக மாறி உலவுகின்றனர்.

உடனே தர்மா, உங்களை எவ்வாறு இந்த வாழ்க்கையினின்று விடுவிப்பது என்று கேட்டான். சோமசர்மா கூறியபடி தர்மா கயைக்குச் சென்று சோமசர்மாவின் இறுதிக் கடனைச் செய்ய, சோமசர்மாவும், அவன் நண்பர்களும் சாபத்தினின்று விடுதலை செய்யப்பட்டனர். தர்மா அதன் பிறகு சிலகாலம் சொர்க்கத்தில் இருந்து, புரூரவா அரசனாகப் பிறந்தான்.

உபமன்யுவும், ரீதமாவும்

முன்னொரு காலத்தில் விதமன்யு என்றொரு பிராமணன் வசித்து வந்தான். அவன் மனைவி ஆத்ரேயி. இவர்களுக்கு உபமன்யு என்றொரு மகன் இருந்தான். அவர்கள் மிகவும் ஏழையாக இருந்த காரணத்தினால், அக்குழந்தைக்குப் பாலினைக் கொடுக்க அவர்களால் முடியவில்லை. ஆதலால் ஆத்ரேயி கஞ்சி தயாரித்து, அதனைப் பால் என்று கூறி உபமன்யுவைக் குடிக்குமாறு செய்து வந்தாள்.

ஒரு சமயம், உபமன்யுவும், அவன் தந்தையும் செல்வந்தனாகிய ஒரு பிராமணன் வீட்டிற்குச் சென்றனர். உபமன்யு, அதன்பிறகு தன் தாய் கொடுத்த கஞ்சியைக் குடிக்க மறுத்தான். வேறுவழி தெரியாத ஆத்ரேயி, மகனிடம் “நீ நல்ல பாலினைக் குடிக்க விரும்பினால், சிவனை ஜெபிக்க வேண்டும். விஷ்ணுவும் சிவனிடம் வேண்டித்தான் தனக்குத் தேவையானவற்றைப் பெற்றார். இதற்கு ஒரு கதை சொல்கிறேன் கேள்” என்று கூறினார்.
வெகு காலத்திற்கு முன்பு ஸ்ரீதமா என்ற அசுரன் இருந்தான். அவன் விஷ்ணுவையே வென்று விடுவதாக பயமுறுத்தி வந்தான். விஷ்ணுவும் உடனே சிவனிடம் சென்று வேண்ட, சிவபெருமான் சுதர்சன சக்கரத்தைக் கொடுத்தார். அதைக் கொண்டு விஷ்ணு தன் எதிரிகளை சுலபமாக அழித்துவிட முடியும் என்றும் கூறினார் சிவபெருமான். உடனே விஷ்ணு, சிவபெருமானே! நீர் சொல்வது உண்மை தான் என்று எப்படி நான் தெரிந்து கொள்ள முடியும். ஆகையால் உம்மையே முதலில் சோதித்துப் பார்க்கிறேன் என்று கூறி, சக்கரத்தை ஏவிவிட, சக்கரம் சிவன் உடம்பை மூன்று கூறுகளாகப் பிரித்தது. அவை ஹிரண்யக்ஷா, சுவர்ணக்ஷா, விஸ்வருபக்ஷா என்ற பெயருடன் அனைவராலும் வணங்கப் பெற்றது. சிவபெருமான் அழிக்க முடியாதவர் என்பது ஐயத்திற்கு இடமின்றித் தெரியுமாதலால், சக்கரம் உண்மையில் சிவபெருமானுக்கு எந்தத் துன்பத்தையும் இழைக்கவில்லை. விஷ்ணு, சிவபெருமானைச் சந்தேகப்பட்டதால் அவரிடம் மன்னிப்புக் கேட்டார். பிறகு சக்கரத்தைக் கொண்டு ஸ்ரீதமாவை வென்றார்.

உபமன்யுவின் வேண்டுதலில் உள்ளம் மகிழ்ந்த சிவபெருமான் அவனுக்கு என்றென்றும் பால் கிடைக்க அருள்புரிந்தார்.

நிஷாகரா

முன்னொரு காலத்தில் கோஷகரா என்றொரு பிராமணன் வசித்து வந்தான். அவன் மனைவி பெயர் தர்மிஷ்டா. இவர்களுக்குக் கண் தெரியாத, வாய் பேசாத குழந்தை ஒன்று பிறந்தது. அக்குழந்தையைச் சிறிதும் விரும்பாத தர்மிஷ்டா ஆறு நாட்களே ஆகி இருந்த அக்குழந்தை யைத் தன் வீட்டின் வெளியே கொண்டு சென்று விட்டு விட்டாள்.

அப்பொழுது அங்கு வந்த அரக்கி உருவம் கொண்ட பெண், அக்குழந்தையை எடுத்துக் கொண்டு, தன் குழந்தையை அங்கே விட்டுச் சென்றது. தான் எடுத்துச் சென்ற குழந்தை யைத் தன் கணவனிடம் காண்பிக்க, அவன் மனைவியிடம், “முட்டாளே! கோஷகரா என்ற பிராமணன் மிகவும் சக்தி வாய்ந்தவன். நடந்ததைத் தெரிந்து கொண்டு அவன் உனக்குச் சாபமிடுவான். ஆதலால் உடனே சென்று இந்தக் குழந்தையை விட்டு விட்டு வா” என்று கூறினான்.

அரக்கியின மகன், கோஷகராவின் வாசலில் குளிரினால் பெருங் குரலெடுத்து அழத் துவங்கினான். ஊமையான தன் குழந்தை சப்தம் செய்வதைக் கண்ட தர்மிஷ்டா தன் கணவனை அழைக்க, அவன் வந்து அக்குழந்தையைப் பார்த்தவுடன் அது தங்கள் குழந்தையன்று என்பதை அறிந்து கொண்டான். சில மந்திரங்களைக் கூறியவுடன் அக்குழந்தை தன் அழுகையை நிறுத்திற்று. அரக்கியும், அப்பிராமணர் மகனைக் கொண்டு வந்து கொடுத்து விட்டாள். ஆனால் அவளது குழந்தை, பிராமணன் மந்திரத்தில் கட்டுண்டு கிடந்ததால், அரக்கியால் தன் குழந்தையைத் திரும்பப் பெற முடியவில்லை. அப் பிராமணன் தன் குழந்தைக்கு நிஷாகரா என்றும், அரக்கியின் குழந்தைக்கு திவாகரா என்றும் பெயர் சூட்டினான். சிலகாலம் கழித்து அவர்கள் இருவருக்கும், கோஷகரா வேதங்கள் முதலியவற்றைப் பயிற்றுவித்தான். அவன் மகனாகிய நிஷாகரா மிகவும் மந்த புத்தி உள்ளவனாக இருந்தான். கோபம் கொண்ட பிராமணன் தன் மகனை ஒரு பாழுங்கிணற்றில் வீசி, அதனை ஒரு கல் கொண்டு மூடிவிட்டான். அவனது மனைவி தர்மிஷ்டாவும் குழந்தை காணாமல் போய்விட்டதாக நினைத்துக் கொண்டாள்.

நிஷாகரன், அக்கிணற்றினுள் நீண்ட காலம் தங்கி இருந்தான். அதில் ஒரு மரம் நிறைந்த பழங்களுடன் இருந்ததால், அதனைத் தின்று வாழ்ந்து வந்தான். பத்து வருடங்கள் சென்றன. தர்மிஷ்டா ஒருநாள் அந்த வழியே செல்லும் பொழுது, ஒரு கல்லினை வைத்து அக்கிணற்றினை மூடி இருப்பது கண்டு, இதனை யார் கல் கொண்டு மூடி யிருக்கிறார்கள் என்று பெருங்குரலில் கேட்க, கிணற்றின் உள்ளிருந்த நிஷாகரா, “அன்னையே! தந்தைதான் இக்காரியம் செய்தார்” என்று கூறினான். இதைக் கேட்ட தர்மிஷ்டா மிகவும் வியப்படைந்து, தன் மகனை வீட்டிற்கு அழைத்து வந்தாள். நிஷாகரா தன்னுடைய பழங்கதையினை அவர்களுக்கு விவரித்தான்.

தன்னுடைய முற்பிறவிகளில் பெரிதும் பாவம் செய்ததின் காரணமாக நரகத்தில் பலகாலம் இருந்து, பிராமணன், புலி, கழுதை, பறவை, எருது ஆகிய பல பிறவிகள் எடுத்து இறுதி யாக நிஷாகரா என்ற பெயரில் கோஷகராவிற்கு மகனாகப் பிறந்தான். ஜதிஸ்மரா என்னும் பழம் பிறப்பு அறியும் சக்தி பெற்றிருந்தமையால், அவனுக்குப் பழம்பிறப்புகள் பற்றித் தெரிந்தன. பத்து வருடங்கள் கிணற்றினுள் இருந்த பொழுது தன் தவறுகளுக்காகப் பெரிதும் வருந்தியதில் பேசும் சக்தி யையும், கேட்கும் திறனையும் பெற்றான். இனி அவன் நேர்மையான வாழ்க்கை வாழப்போவதாகக் கூறினான்.

மற்ற புராணங்களைப் போலவே, வாமன புராணத்தின் சிறப்பைப் பற்றியும், அதனைப் படிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் புலஸ்திய முனிவர் நாரதருக்குக் கூறி முடித்தார்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top