• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

வாயு புராணம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
இப்புராணம் பற்றி….

வாயு புராணம், சிவ புராணம் என்றும் கூறப்பெறும். மிகப் பழைமையான புராணங்களில் இதுவும் ஒன்று. இதில் 24,000 பாடல்கள் உள்ளன என்று ஸ்கந்த புராணம் கூறுகிறது. பதினெட்டு மகா புராணங்களில் இதுவும் ஒன்று. இந்தப் புராணமும் நட்சத்திரங்களை எண்ணுவதில் கிருத்திகையில் ஆரம்பித்து, பரணியில் முடிகிறது. கி.மு. 550 இல் இருந்த கார்காவின் காலத்திலிருந்து, அஸ்வினியை முதலாக வைத்து எண்ணும் பழக்கம் ஏற்பட்டதால், இப்புராணம் அதற்கு முற்பட்டது என நினைக்க இடமுண்டு. புராணங் களுக்குரிய ஐந்து பொருள்களைப் பற்றி இதுவும் பேசுகிறது.

இப்புராணத்தில் காணப்படுகின்ற பல பாடல்கள் மார்க்கண்டேய புராணத்திலும் காணப்படுகின்றன. ஸ்காந்தம் இதில் 24,000 பாடல்கள் உள்ளன என்று கூறினாலும், இப்பொழுது நமக்குக் கிடைக்கும் வாயு புராணத்தில் 12,000 பாடல்களே உள்ளன. இது நான்கு பெரும் பாகங்களையும், 112 அதிகாரங்களையும் கொண்டது.

பாசுபத யோகம் பற்றியும் இப்புராணம் பேசுகிறது. இப்புராணத்தில், விஷ்ணுவாகிய தானும், பிரம்மனும் தெய்வங்கள் என்றாலும் சிவனே இருவருக்கும் மேலான தெய்வம் என்றும், அச் சிவனே எல்லாவற்றிற்கும் மூலமாக உள்ளார் என்றும், விஷ்ணுவாகிய தானும், பிரம்மனும் சிவனிடத்தில் இருந்தே தோன்றினர் என்றும் விஷ்ணு பிரம்மனுக்குக் கூறுவதாக இப்புராணம் கூறுகிறது. மனித குலத்தின் நன்மைக்காகவே சிவன் உள்ளர் என்றும், சிவன் என்ற பெயருக்கு மங்களம், நன்மை செய்பவர் என்ற பொருளுண்டு என்றும் இப்புராணம் பேசுகிறது.



நைமிசாரண்ய வனத்தில் கூடியிருந்த முனிவர்கள் லோமஹர்ஷனரைச் சந்தித்து, "முனிவரே! வேதவியாசரிடத்தில் நேரிடையாக புராணங்களைக் கற்கும் பாக்கியம் பெற்றவர் நீங்கள். இதுவரை தாங்கள் பலவற்றைச் சொல்லியும், மேலும் தெரிந்து கொள்ள வேண்டிய ஆசையும், பலவற்றைத் தெரிந்து கொள்ளவில்லையே என்ற எண்ணமும் எங்களை வாட்டுகிறது. சிவனைப் பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை” என்று அவர்கள் கேட்டவுடன், லோமஹர்ஷனர் எனக்குத் தெரிந்த அனைத்தையும், ஒன்றையும் மறைக்காமல் உங்களுக்குச் சொல்லப் போகிறேன்' என்று சொல்லிவிட்டுப் பின்வருமாறு பேசத் துவங்கினார். வெகு காலத்திற்கு முன்னர் பிரம்மனின் புத்திரனாகிய நாரதர் தம் தந்தையைப் பார்த்து, சிவ பெருமானைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். பிரம்மன், நாரதருக்குக் கூறியதை இப்பொழுது அப்படியே உங்களுக்குக் கூறுகிறேன்.

பிரபஞ்சத் தோற்றத்தின்போது எங்கும் நீரே நிறைந் திருந்தது. அதில் விஷ்ணு படுத்துறங்கிக் கொண்டிருந்தார். அவர் தொப்புளில் இருந்து பொன்னிறத்துடன் ஜொலிக்கும் தாமரைத் தண்டு ஒன்று மிக உயர்ந்து நின்றது. ஆயிரக் கணக்கான இதழ்களை உடைய அத் தாமரையில் பிரம்மன் இருந்தான். அந்த பிரம்மன் தான் யார், எங்கிருக்கிறோம், ஏன் இங்கு இருக்கிறோம் என்ற சந்தேகங்களுடன் சுற்று முற்றும் பார்த்து ஆராயத் தொடங்கினான். மெதுவாக அத் தாமரைத் தண்டைப் பிடித்துக் கீழே இறங்கிய பிரம்மன் அதைச் சுற்றி நூறு ஆண்டுகள் தேடினான். தாமரைத் தண்டின் தொடக்கத்தைக் காணமுடியவில்லை. இப்பொழுது தான் பிறந்த தாமரைப் பூவில் தான் பிறந்த நடுப்பகுதியைத் தேட முயன்றான். நூறு ஆண்டுகள் தேடியும் தான் புறப்பட்ட இடத்தை அடைய முடியவில்லை. களைத்துப் போன பிரம்மன் ஒரு இடத்தில் தங்கி ஒய்வெடுத்துக் கொண்டான். அப்பொழுது “பிரம்மனே! தவம் செய்” என்று ஒரு குரல் கேட்டது. யார் அக்குரலுக்குரியவர் என்று தெரியாவிட்டாலும் பிரம்மன் 12 ஆண்டுகள் தவம் செய்தான். தவம் முடிந்தவுடன் விஷ்ணு எதிரே நின்றார். விஷ்ணுவைப் பார்த்த பிரம்மன் நீ யார்? என்று கேட்டான். உடனே விஷ்ணு “என் கைகளைப் பார். சங்கு, சக்கரம், கதாயுதம், தாமரை ஆகியவற்றை நான்கு கைகளிலும் ஏந்திக் கொண்டிருக்கும் என்னைத் தெரிய வில்லையா? நான்தான் விஷ்ணு. என்னுடைய உடம்பிலிருந்து தான் நீ தோன்றினாய்’ என்றார். அந்த வார்த்தைகளை நம்பாத பிரம்மன் விஷ்ணுவுடன் சண்டை போடத் துவங்கினான்.
இலிங்கத் தோற்றம்

பிரம்மனும் விஷ்ணுவும் தம்முள் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் பொழுது ஜோதி வடிவமான லிங்கம் ஒன்று வந்து நின்றது. பிரம்மனும் விஷ்ணுவும் தங்கள் சண்டையை நிறுத்திக் கொண்டு, இடையே வந்தது யார் என்று நினைத்தனர். அந்த ஜோதி ஸ்வரூபம் கண்ணுக்கெட்டிய தூரம் உயர்ந்தும், மிகக் கீழே சென்றும் காட்சி அளித்தது. அதைப் பார்த்த விஷ்ணு, பிரம்மனே! நம்முடைய சண்டையை நிறுத்திக் கொள்வோம். இந்த வடிவத்தின் ஆதியையும், அந்தத்தையும் நாம் காணவேண்டும். நான் காட்டுப் பன்றி வடிவெடுத்து இதன் அடியைக் காண விரும்புகிறேன். நீ அன்னப் பறவை வடிவெடுத்து, இதன் முடி எங்கிருக்கிறதென்று பார்த்து வா என்று கூறினார். விஷ்ணுவின் யோசனையைக் கேட்ட பிரம்மன் உடனே அன்னப் பறவையாக மாறி மேலே மேலே பறந்து சென்றான். விஷ்ணு, ஆண்பன்றி வடிவாகி பூமியைத் துளைத்துக் கொண்டு கீழே சென்றார். 4000 ஆண்டுகள் அவர்கள் இருவரும் தேடும் பணியில் ஈடுபட்டும் லிங்கத்தின் அடி முடியைத் தேட முடியவில்லை. பிறகு இருவரும் பழைய இடத்திற்கு வந்து சிவனைத் துதித்தனர். அப்பொழுது 5 முகங்களும், 10 கைகளும் கொண்ட லிங்க வடிவில் பரமேஸ்வரன் தோன்றினார். இவர்களைப் பார்த்து, "பிரம்மனே, விஷ்ணுவே, நீங்கள் இருவரும் என்னில் ஒவ்வொரு பகுதியாவீர்கள். நாம் மூவரும் ஒன்றுதான். பிரம்மனாகிய உனக்குப் படைக்கும் தொழில், விஷ்ணுவாகிய உனக்குக் காக்கும் தொழில் கொடுக்கப்பட்டுள்ளது. சிவனாகிய நான் அனைத்தையும் அழிக்கும் தொழில் செய்கிறேன். என்னிடத்திலிருந்து 'ருத்ரன்' என்பவன் தோன்றுவான். அவனும் நானும் ஒன்றுதான். அவன் இந்த அழித்தல் தொழிலைச் செய்வான். நாம் அனைவரும் ஒன்றுதான் என்பதையும், ஒரு பணியைச் சேர்ந்து செய்கிறோம் என்பதையும் அறிந்து கொள்ளல் வேண்டும்” என்றார்.

பிரபஞ்சத் தோற்றம்

எங்கும் நிரம்பி இருந்த நீரில் விஷ்ணு ஒரு மிகப் பெரிய முட்டையை உண்டாக்கினார். பிறகு விஷ்ணு மிகப் பெரிய வடிவெடுத்து அந்த முட்டைக்குள் சென்று அமர்ந்து கொண்டார். இதனிடையே பிரம்மன் தியானத்தின் மூலமாகவே கர்தமன், தட்சன், மரீச்சி ஆகிய முனிவர்களை உண்டாக்கினான். மரீச்சியின் பிள்ளை காசிபன் தட்சனின் 60 பெண்களுள் 13 பேரை மணந்து கொண்டான். காசிபனின் பிள்ளைகளும், தட்சனின் மற்றப் பெண்களும், ஆதித்தர்களாகவும், தைத்தியர்களாகவும், தானவர்களாகவும், மரங்களாகவும், பறவைகளாகவும், பாம்புகளாகவும் ஆயினர்.

ருத்ரன் என்ற பெயரில் சிவனே பிரம்மாவினின்று தோன்றினான். இந்த ருத்ரன் தட்சனின் மகளாகிய சதியைத் திருமணம் செய்து கொண்டான். ஆனால் ருத்ரனும் தட்சனும் ஒருவரையொருவர் வெறுத்தனர். ருத்ரனைத் தள்ளி வைத்து விட்டு தட்சன் யாகம் ஒன்று ஏற்பாடு செய்தான். சதியை அழைக்காவிடினும், அவள் சென்று அதில் கலந்து கொண்டாள். தட்சன் அவளைப் பேசிய ஏச்சுக்களால் சதி தன் உயிரை விட்டு விட்டாள். இதனால் கோபமுற்ற ருத்ரன் தன்னுடைய துணைவனை அழைத்து தட்சனுடைய யாகத்தை அழித்து அவனையும் கொன்று வருமாறு கட்டளையிட்டான். தட்சன் யாகம் அழிக்கப்பட்டு அங்கு வந்த தேவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். இறுதியில் ருத்ரன் கோபம் தணிக்கப்பட்டு தேவர்கள் பிழைக்கச் செய்யப் பெற்றனர். சதிஇமவானுக்கும், மேனகைக்கும் மகளாகப் பார்வதி என்ற பெயருடன் பிறந்தாள். மறுபடியும் சிவபெருமானை மணந்தாள்.
தாரகாசுரன் கதை

தாரா என்ற அசுரனுக்குத் தாரகன் என்ற பிள்ளை தோன்றினான். தாரகன் தேவர்களை வெல்ல வேண்டும் என்று கடுந்தவம் செய்ய முடிவு செய்தான். ஒரு காலைக் கட்டை விரலில் ஊன்றிக் கொண்டு, மற்றொரு காலை மடக்கிக் கொண்டு, இரண்டு கைகளையும் உயர்த்தி சூரியனைப் பார்த்தபடியே, தண்ணீரை மட்டும் பருகிக் கொண்டு நூறு ஆண்டுகள் தவம் செய்தான். அதன்பிறகு தண்ணிர் குடிப்பதையும் நிறுத்திவிட்டுக் காற்றை மட்டும் உட்கொண்டு இன்னொரு நூறாண்டு தவம் செய்தான். நீரின் நடுவே நின்றும், பஞ்சாக்கினி மத்தியில் நின்றும் நூறு நூறு ஆண்டுகள் தவம் செய்தான். ஒரு மரக்கிளையில் தலைகீழாகத் தொங்கி மற்றுமொரு நூறு ஆண்டுகள் தவம் செய்தான். இறுதியாக பிரம்மன் தோன்றி, "உன் தவத்தைக் கண்டு மகிழ்ந்தேன். உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டான். தாரகன் 'சிவபெருமானின் பிள்ளையைத் தவிர வேறு யாராலும் எனக்கு சாவு வரக் கூடாது என்ற வரத்தையும், என்னளவு பலமுடைய மற்றொருவனைப் பிரம்மன் படைக்கக் கூடாது' என்ற வரத்தையும் கேட்டுப் பெற்றுக் கொண்டான். சிறிது காலத்தில் தேவர் உலகம் உள்பட எல்லா உலகங்களையும் ஜெயித்து தேவர்களை எல்லாம் தனக்கு அடிமைகள் ஆக்கினான். நொந்து போன தேவர்கள் பிரம்மனிடம் சென்று முறையிட்டனர். பிரம்மன், நான் கொடுத்த வரத்தை மீற என்னால் முடியாது. மேலும் மகாதேவன் இமயமலையில் தவம் செய்து கொண்டிருக்கிறார். பார்வதி தனியே தவம் செய்து கொண்டிருக்கிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு மைந்தனைப் பெற்றால் ஒழிய தாரகனை யாரும் வெல்ல முடியாது என்று சொல்லி விட்டார். தேவர்கள் அனைவரும் சேர்ந்து கந்தர்பன் என்ற பெயருடைய மன்மதனிடம் சென்று ‘எப்படியாவது மகாதேவருடைய நிஷ்டையைக் கலைத்து, பார்வதியை மணந்து கொள்ளுமாறு செய்வாயாக!' என்று வேண்டினர்.

அவர்கள் விருப்பப்படியே மன்மதன் சிவனிருக்கும் இடம் சென்றான். அவன் வரவால் இயற்கையும் கூடக் கால மாறுதலைச் செய்தது. திடீரென்று இளவேனிற்காலம் வந்தது. தென்றல் வந்தது. மரங்கள் மலர்கள் பூத்தன. வண்டுகள் ரீங்காரமிட்டன. பறவைக் கூட்டங்கள் ஜோடி ஜோடியாக இசைபாடிக் களித்தன. சிவபிரான் கண்ணை விழித்தார். அதே நேரத்தில் மற்றொரு பக்கத்தில் தவம் செய்து கொண் டிருந்த பார்வதியும் இங்கு வந்து சேர்ந்தார். கண்விழித்த சிவபெருமானுக்குச் சுற்றுமுற்றும் பார்க்கையில் திடீரென்று தோன்றிய வசந்தகாலம் யாரால் வந்தது என்று பார்த்தார். தன் தவம் கலைக்கப்பட்டதைப் பார்த்தார். மன்மதன் இங்குமங்கும் ஒடி ஒளிந்து கொள்ள முயற்சிப்பதையும் பார்த்தார். உடனே அவர் நெற்றிக்கண் திறந்தது. மன்மதன் எரிந்து சாம்பலானான். அவன் மனைவியாகிய ரதி ஒலமிட்டு அழத் துவங்கினாள். தேவர்கள் சிவபிரானை வந்து வணங்கி, ‘ஐயனே! தாரகாசுரன் கொடுமையைத் தாங்க முடியாத நாங்கள் செய்த சூழ்ச்சிதான் அது. எங்கள் வேண்டுகோளை ஏற்றுத்தான் மன்மதன் இவ்வாறு செய்தான். அவனை மன்னித்து உயிர்ப் பிச்சை தர வேண்டும்” என்று வேண்டினர்.

சிவபிரான், "அது நடவாத காரியம். நடந்தது நடந்து விட்டது. மன்மதன் கிருஷ்ணனின் பிள்ளை பிரத்யும்னனாகத் தோன்றுவான். அதுவரையில் ரதி பொறுத்திருக்க வேண்டும்” என்று கூறிவிட்டார். தேவர்கள் எண்ணம் நிறைவேறவில்லை. சிவன் - பார்வதி திருமணம் நடைபெறவில்லை. மன்மதன் சாம்பலானதுதான் மிச்சம்.

பார்வதியின் தவம்

சிவபிரானிடம் மனத்தைப் பறிகொடுத்த பார்வதி, மன்மதனும் எரிந்து விட்டதால் என்ன செய்வது என்று அறியாமல் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தாள். அப்பொழுது நாரதர் தோன்றி, "அம்மா! நான்முகனும், விஷ்ணுவும் கூட சிவனைப் பார்க்க முடியாது. கடும் தவம் ஒன்றினால்தான் அவரைக் காண முடியும். அதைவிடக் கடுமையான தவத்தை மேற்கொண்டால்தான் அவரைத் திருமணம் செய்து கொள்ள முடியும். எனவே தாங்கள் கெளரிசிகரம் என்ற மலையுச்சியை அடைந்து தவத்தில் ஈடுபடுங்கள்” என்று கூறிவிட்டுப் போனார். பார்வதியும் தாய் தந்தையரிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு, தம் அணிகலன்கள், ஆடைகள் அனைத்தையும் துறந்து மரஉறி
உடுத்தி கெளரிசிகரம் என்ற மலை உச்சி சென்று கடும் தவம் இயற்றினாள். வெயில், மழை, குளிர், பனி போன்ற எதைக் கண்டும் துவளாமல் தவத்தை மேற் கொண்டாள். அவளுடைய தவத்திற்கு அஞ்சிக் கொடிய விலங்குகளும் அப்பால் சென்றுவிட்டன. தேவர்கள் அனைவரும் கூடி சிவபெருமானிடம் சென்று, ‘ஐயனே! பார்வதியின் கடுந் தவத்திற்குப் பரிசாகத் தாங்கள் அவளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வேண்டினர். அதற் கிணங்கிய சிவன், கிழட்டு அந்தணர் வேடம் பூண்டு பார்வதி தேவியின் பர்ணசாலை சென்றார். அந்தணரைக் கண்ட பார்வதி அவருடைய பாதங்களுக்கு மலரிட்டு வழிபட்டாள். அந்த வேதியர், 'அம்மா, நீ எதற்குத் தவம் செய்கிறாய்? என்று கேட்டார். பார்வதி தன் கருத்தைக் கூறியதும், 'அம்மா நீ பெருந்தவறு செய்துவிட்டாய். சிவபிரான் ஒரு பைத்தியக்காரன். ஐந்து முகங்களும், சாம்பல் பூசிய உடம்பும், ஜடா முடியும், பாம்பை அணிந்தவனுமாகிய அவனை மணக்க நினைப்பது முட்டாள்தனம்’ என்று கூறினார். கடும் கோபம் கொண்ட பார்வதி, கிழட்டுப் பிராமணரே, நீர்தான் முட்டாள். சிவபிரானின் பெருமை தெரியாமல் உளருகின்ற உம்மைப் பெரியவர் என்று மதித்து மலரிட்டு வணங்கியது என் தவறு. உம்முடைய முகத்தில் விழிப்பதே பாவம். நான் வெளியே போய் விடுகிறேன் என்றாள். அவள் திரும்பியதும் சிவபிரான் தம்முடைய உண்மையான வடிவத்தைப் பெற்றுக்கொண்டு. “பார்வதி, திரும்பிப்பார். நீ யாரை நினைத்துத் தவம் செய்தாயோ, நானே வந்திருக்கிறேன்” என்றதும், பார்வதி திரும்பிப் பார்த்துப் பெருமகிழ்ச்சியடைந்தாள். சிவன் என்ன வரம் வேண்டும்? என்று கேட்க, பார்வதி, எல்லார் எதிரிலும் என்னை மணக்க வேண்டும்’ என்றாள். சிவபெருமான் அதனை ஏற்றுக் கொண்டார்.

சிவ - பார்வதி திருமணம்

கைலையில் இருந்த சிவன் சப்தரிஷிகள் என்று சொல்லப்படும் ஏழு முனிவர்களை அழைத்து, இமவானிடம் சென்று அவனுடைய மகளான பார்வதியைத் தான் மணக்க விரும்புவதாகச் சொல்லுமாறு பணித்தார். மிக்க மகிழ்ச்சி கொண்ட முனிவர்கள் இமவானைக் கண்டு சொல்ல, அவனும் பெரு மகிழ்ச்சி கொண்டான். திருமணத்திற்குரிய நாள் குறிப்பிடப்பட்டது. திருமணத்தன்று முனிவர்கள், யோகிகள், ரிஷிகள், கந்தர்வர்கள், அப்ஸரஸ்கள், தேவர்கள், திக்பாலர்கள் ஆகியவர்களும் திருமால், நாரதர், பிரம்மன் ஆகியவர்களும் வந்து கூடினர். பார்வதியின் தாயாகிய மேனகைக்குத் தன் மருமகனாகிய சிவபிரானைப் பார்க்க வேண்டும் என்று விருப்பம். அப்போது ஒவ்வொருவராகப் பார்த்துக் கொண்டு வந்தாள். கந்தர்வர்களின் தலைவனாகிய விஸ்வவசு அழகாக இருந்ததால் அவன்தான் மருமகன் என்று நினைத்தாள். நாரதர் இல்லை என்றவுடன் அவனை விட அழகான குபேரனைப் பார்த்தாள். அழகில் ஒருவரை ஒருவர் விஞ்சும்படியாக இருந்த வருணன், அக்னி, இந்திரன், சத்திரன், சூரியன், பிரம்மன், பிரகஸ்பதி, விஷ்ணு ஆகியோரை ஒவ்வொருவராகப் பார்த்து ஒருவரைவிட ஒருவர் அழகாக இருப்பதால் இவர்கள்தான் மாப்பிள்ளையோ என்று சந்தேகப்பட்டாள். நாரதர், இவர்கள் அனைவரும் சிவனுடைய பணியாட்கள். அதோபார் சிவபிரான் வருகிறார்’ என்றார். மேனகை திரும்பிப் பார்த்தாள். என்ன கொடுமை, ஒரே பிசாசுக் கூட்டங்கள். எல்லாம் கறுப்பு நிறம். அந்தக் கூட்டத்தின் நடுவே ஐந்து தலைகளுடனும், பத்துக் கைகளுடனும் ஒரு வடிவம். அந்த வடிவமெல்லாம் சாம்பல் பூசப்பட்டிருந்தது. கழுத்தில் எலும்பு மாலை, பாம்புகள் இடுப்பில் புலித்தோல், தலையில் சடைஇவர்தான் மாப்பிள்ளை என்று நாரதர் சொல்லியவுடன், மேனகை மயங்கியே விழுந்துவிட்டாள். மயக்கம் தெளிந்து எழுந்தவுடன், “என்ன ஆனாலும் சரி, இந்தப் பைத்தியத்திற்கு என் பெண்ணைக் கொடுக்க மாட்டேன். இந்திரன் முதலிய யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளட்டும். இல்லை என்றால் அவளை விஷத்தைக் கொடுத்துக் கொன்று விடுவேன். என்ன ஆனாலும் இந்தத் திருமணத்தை நடக்க விடமாட்டேன்” என்று கூறினாள். இதைக் கேட்ட நாரதர் சிவபிரானிடம் சென்று மிக்க பணிவோடு, 'ஐயனே! தயவு செய்து தங்களின் உருவத்தை மாற்றிக் கொண்டு மேனகையின் துயரத்தைப் போக்குங்கள்” என்று வேண்டிக் கொண்டார். ஒரு விநாடி நேரத்தில் தன்னுடைய உருவத்தை மாற்றிக் கொண்டார், சிவபிரான். அழகே வடிவாக மாறிவிட்ட அவரைப் பார்த்து மேனகை காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டாள். பிரம்மன் சடங்குகள் செய்ய சிவபார்வதி திருமணம் இனிதே நிறைவேறியது.

திரிபுரத்தின் அழிவு

தாரகாசுரனின் மைந்தர்களாகிய வித்யுன்மாலி, தாரகாட்சன், வீர்யவனா ஆகிய மூவரும் கடும் தவம் புரிந்தனர். ஒரே காலில் நின்றும், நீரில் இருந்தும், தலைகீழாக நின்றும் ஆயிரக்கணக்கான வருடங்கள் தவம் செய்தனர். தவத்தின் முடிவில் எதிர்ப்பட்ட பிரம்மனிடம் தாங்கள் சிரஞ்சீவியாக இருக்க வரம் வேண்டினர். அப்படி ஒரு வரத்தைத் தர தனக்கு ஆற்றலில்லை என்று பிரம்மன் கூறியவுடன், அப்படியானால் தங்கம், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் ஆன மூன்று பெரிய கோட்டைகளை அமைத்துக்கொண்டு தாங்கள் ஆயிரம் வருடங்கள் அவற்றுள் வாழ வேண்டும் என்றும், அதன்பின் இந்த மூன்று கோட்டைகளும் ஒரே கோட்டையில் அடங்கி பலம் பெற்றதாக இருக்கவேண்டும் என்றும் கேட்டனர். மேலும் யாராவது தன்னை அழிக்க வந்தால் ஒரே அம்பை மட்டும் பயன்படுத்தி ஒன்றுக்குள் ஒன்றாக இருக்கும் இந்த மூன்று கோட்டைகளை அழித்தால் அதை ஏற்றுக் கொள்வதாகவும் கூறினர். பிரம்மன் தந்த வரத்தின்படி மூன்று கோட்டைகளை அமைத்து ஆயிரக்கணக்கான தைத்தியர்கள் அவற்றுள் வாழ வழிசெய்தனர். பல்லாண்டுகள் கழித்தவுடன் அவர்கள் சிவபூசை செய்வதை மறந்து அகங்காரம் மிக்கவர்களாக தங்களை யாரும் அழிக்க முடியாது என்ற காரணத்தால் தவறான வழிகளில் செல்ல முற்பட்டனர். தேவர்கள், பிரம்மா, விஷ்ணு ஆகிய அனைவரும் சிவனிடம் சென்று முறை யிட்டனர். கடவுள் வழிபாட்டை மறந்து தவறான வழிகளில் செல்லும் அவர்களை அழிக்க சிவன் ஒத்துக்கொண்டார். விஸ்வகர்மா முழுதும் தங்கத்தால் ஆன தேரைத் தயாரித்தான். பிரம்மனே சாரதியாக இருந்து தேரை இயக்க முன்வந்தான். திரிபுரத்தை நோக்கிச் சென்ற அத்தேரிலிருந்து பாசுபதம்’ என்ற ஒரே அஸ்திரத்தை செலுத்தவே திரிபுரம் எரிந்து சாம்பலாயிற்று.

சிவன் ஏற்காத சம்பங்கிப் பூ

லோமஹர்ஷ்ன முனிவர் உடனிருந்த முனிவர்களுக்குச் சிவ புராணத்தைச் சொல்லிக்கொண்டு வருகையில் பெருமானைத் திருப்தி அடையச் செய்வது மிகமிக எளிது. சம்பங்கிப் பூவைத் தவிர வேறு எந்தப் பூ கிடைத்தாலும் அதைச் சிவனுக்கு அர்ப்பணித்தால் அதை அவர் ஏற்று மகிழ்வார்” என்று கூறினார். முனிவர்கள், “அது ஏன் சம்பங்கிப் பூவை சிவன் ஏற்பதில்லை?” என்று கேட்டார்கள். அதற்குரிய நிகழ்ச்சியை லோமஹர்ஷனர் பின்வருமாறு கூறினார்.

இராம, இலக்குவர்கள் சீதையை அழைத்துக் கொண்டு வனவாசம் வந்தனர். அவர்கள் காட்டில் இருக்கும் பொழுது தசரதன் இறந்துபோன செய்தி அவர்களை எட்டிற்று. உடனே இராமன் இலக்குவனைப் பார்த்து அருகில் இருக்கும் கிராமம் சென்று சிரார்த்தம் செய்யும் பொருள்களைப் பெற்றுவா என்று கூறினார். இலக்குவன் சென்று நெடுநேரம் ஆகிவிட்டபடியாலும், உச்சி நேரத்திற்கு முன், சிரார்த்தத்தைச் செய்து முடிக்க வேண்டும் ஆதலாலும், இராமன் இலக்குவனைத் தேடிச் சென்றான். நெடுநேரம் அவனும் வராமையால் உச்சிக்காலம் நெருங்குவதை அறிந்து சீதாவே சிரார்த்தத்தைச் செய்து முடிக்கச் சென்றாள். பால்கு நதியில் குளித்து விட்டு ஒரு விளக்கை ஏற்றிப் பக்கத்தில் இருந்த சம்பங்கிச் செடியில் இருந்து பூக்களைப் பறித்து சிரார்த்தத்தை முடித்தாள். சிரார்த்தத்தின் முடிவில் ஆகாயத்தில் இரண்டு கைகள் மட்டும் தோன்றி அவள் அளித்த பூக்களை ஏற்றுக் கொண்டன. அசரீரி, "சீதா! நான் மகிழ்ச்சி அடைந்தேன். உன்னை வாழ்த்துகிறேன்” என்று கூறிற்று. சீதாவிற்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. அந்தக் கைகளையும், அசரீரியையும் பார்த்து, “நீங்கள் யார் என்று எனக்குத் தெரியவில்லையே?’ என்றாள். அசரீரி, 'மருமகளே! நான்தான் உன் மாமனார். நீ சிரத்தையுடன் செய்த இறுதிச் சடங்கை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டேன்’ என்று கூறிற்று. உடனே சீதை, "என் கணவரும், என் மைத்துனரும் இதை நம்ப மாட்டார்களே” என்று கூறினாள். அதற்கு அசரீரி, 'கவலை வேண்டாம். இந்த நதி, இந்த விளக்கில் உள்ள சுடர், சம்பங்கிப்பூ பக்கத்தில் நிற்கின்ற பசு ஆகிய நான்கும் இது நடந்தது என்பதற்கு சான்று கூறும், என்று கூறி மறைந்து விட்டது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
சற்று நேரத்தில் இராம, இலக்குவர்கள் திரும்பினார்கள். சீதாவை நோக்கி. “விரைவாக சமையல் செய். உச்சிப் பொழுதிற்குள் சிரார்த்தச் சடங்கு செய்ய வேண்டும்” என்றனர். சீதை, அது தேவையில்லை. சடங்கு நடந்து முடிந்து விட்டது என்று கூறி, நடந்ததை விவரமாகச் சொன்னாள். சகோதரர்கள் அதைச் சிறிதளவும் நம்பாமல், மறுபடியும் சமையல் செய்யச் செய்து தர்ப்பணத்திற்குப் போவதற்கு முன் அவள் கூறிய சாட்சிகளை அழைத்து, “நடந்ததை நடந்தபடி கூறச் சொல்” என்றார்கள். சீதையும் முறைப்படி இந்த நான்கையும் ஒவ்வொன்றாக வரவழைத்தாள். அந்த நான்கும் ஒன்றும் நடைபெறவில்லை என்று பொய்ச்சான்று கூறின. இராம இலக்குவர்கள் சமைத்த உணவை எடுத்துக் கொண்டு காட்டிற்குச் சென்று சிரார்த்தச் சடங்கை ஆரம்பித்தனர். இப்போது தசரதன் அசரீரியாய்ப் பேசத் துவங்கினான். "மகனே! மருமகள் அளித்த பிண்டத்தை ஏற்றுக் கொண்டு நான் திருப்தி அடைந்து விட்டேன். மறுபடி எதற்காக என்னை அழைக்கிறாய்?" என்று கூறியவுடன் இராம, இலக்குவர்கள், "இது உண்மை என்றால் ஏன் ஆறு, பசு, விளக்கு பூ என்பவை சான்று பகரவில்லை?” என்று தசரதனைக் கேட்டனர். தசரதன் “இன்னும் சந்தேகம் இருந்தால் சூரியனைக் கேள்" என்றான். இராமன் சூரியனைக் கேட்க அவனும் நடந்ததை ஒப்புக் கொண்டு சான்று பகர்ந்தான். சகோதரர்கள் இருவரும் சீதையிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டனர். அவள் கற்பின் திண்மையைப் போற்றிப் புகழ்ந்தார்கள். இந்த நான்கின் மேலும் சினம் கொண்ட சீதை பால்கு நதியைச் சபித்து பூமிக்குள் மறைந்து விடுமாறு கூறினாள் விளக்கில் இருந்த சுடரை 'நீ எதைப் பற்றினாலும் தாரதன்மயம் பாராமல் எல்லாவற்றையும் அழித்துவிடும் கொடிய சக்தியைப் பெறுவாய்' என்று சபித்தாள்: பசுமாட்டைப் பார்த்து உன் வாய் பொய்ச் சாட்சி சொன்னதால் அது தூய்மை யற்றுப் போகட்டும். உன் பின் பகுதியே பூஜைக்குரியதாகட்டும் என்றாள்; சம்பங்கிப் பூக்களைப் பார்த்து இன்றிலிருந்து நீங்கள் சிவபிரானுக்கு ஏற்காத பூக்களாகி விடுங்கள் என்று சபித்தாள். அன்றிலிருந்து சம்பங்கிப் பூவைச் சிவபிரான் ஏற்பதில்லை.

நாரதரும், சம்பங்கி மரமும்

ஒருமுறை நாரதர் திருக்கோகர்ணம் சென்று சிவனை வணங்கப் புறப்பட்டார். வழியில் ஓர் அழகான சம்பங்கி மரம் பூத்துக் குலுங்கி நின்றது. அந்த அழகைக் கண்டு ரசித்துக் கொண்டிருந்தார். அதன் அருகில் ஒரு பிராமணன் வந்தான். அவன் கையில் ஒரு பாத்திரம் இருந்தது. நாரதர் அவனைப் பார்த்து, “நீ யார்? எங்கே போகிறாய்?” என்று கேட்டார். அந்த பிராமணன் “நான் பிச்சை எடுக்கப் போகிறேன்” என்று பொய் கூறினான். அதை நம்பிய நாரதர், கோயிலுக்குச் சென்று சிவனை வணங்கிவிட்டு மீண்டார். கையில் உள்ள பாத்திரத்தில் சம்பங்கிப் பூவை நிறைத்துக் கொண்டு அதை மூடி வைத்திருந்தான். மறுபடியும் அவனைப் பார்த்து “எங்கே போகிறாய்?’ என்றார். ‘பிச்சை கிடைக்கவில்லை. வீட்டிற்குப் போகிறேன்” என்றான்.

அவனுடைய வார்த்தைகளில் சந்தேகப்பட்டு நாரதர் சம்பங்கி மரத்தினிடம், “ஏ மரமே! அந்த பிராமணன் உன் பூக்களைப் பறித்தானா?” என்று கேட்டார். பிராமணனைப் போலவே, அந்த மரம், “பிராமணனா, அப்படி ஒருவரும் இங்கு வரவில்லை. என் பூக்களை யாரும் பறிக்க வில்லை” என்று துணிந்து பொய் கூறிற்று. நாரதர் சந்தேகம் வலுக்கவே மறுபடியும் கோயிலுக்குச் சென்று பார்த்தார். சிவலிங்கத்தின் தலையில் புதிய சம்பங்கிப் பூ வைக்கப் பட்டிருந்தது. பக்கத்தில் தியானம் செய்து கொண்டிருந்த ஒரு அன்பரைப் பார்த்து, "இந்தப் பூவை யார் லிங்கத்தின் தலையில் வைத்தார்கள்?’ என்று நாரதர் கேட்டார். அந்த அன்பர், "மிகத் தீயவனும், பொய் பேசுபவனும் ஆகிய ஒரு பார்ப்பான் இருக்கிறான். சிவன் தயவை வைத்துக் கொண்டு இந்த ஊர் ராஜாவை கைக்குள் போட்டுக் கொண்டான். அந்த ராஜாவை ஏமாற்றிப் பணம் பறிப்பதுடன் மக்களையும் ஏமாற்றுகிறான்” என்று கூறினார். உடனே நாரதர் சிவலிங்கத்தைப் பார்த்து "இந்த அநியாயம் நடைபெற நீங்கள் உதவியாக இருக்கலாமா?” என்று கேட்டார். "என்னை வந்து பூஜிப்பவர்களை நான் கெடுக்க முடியாது” என்று சிவன் கூறிவிட்டார்.

இதனிடையில் ஒரு பார்ப்பினி, "ஓ! என்று அழுது கொண்டு கோயிலுக்கு வந்தாள். தன் கணவன் பக்கவாத நோயால் அவதிப்படுவதையும், தன் மகனின் கல்யாணத்திற்கு அரசனிடம் முறையிட்டுக் கொஞ்சம் பணமும், ஒரு பசுவும் அன்பளிப்பாகப் பெற்றதையும், அந்தப் பணத்தில் பாதியை அந்தத் தீய பார்ப்பான் பிடுங்கிக் கொண்டதையும் சொல்லி அழுதாள். கோபம் கொண்ட நாரதர், அந்தத் தீய பார்ப்பானை விராதன் என்ற அரக்கனாகப் போகுமாறு சபித்தார். சம்பங்கி மரம் பொய் சொன்னதால் அந்தப் பூவை சிவன் இனிமேல் ஏற்றுக் கொள்ளமாட்டார் என்றும் கூறினார். சாபம் அடைந்த பார்ப்பான் சிவன்மேல் தினம் பூக்களைப் போட்டதால், இராமன் வந்து விராதனைக் கொன்று சாபநீக்கம் செய்வான் என்றும் கூறினார்.

கணேசர் தோற்றம்

பார்வதிக்குத் தனியாக ஒர் அரண்மனை இருந்தது. அவ்வரண்மனைக் காவலர்களாக நந்தியும், பிருங்கியும் காவல் செய்தனர். அவர்கள் உத்தரவு இல்லாமல் யாரும் பார்வதியைப் பார்க்க முடியாத நிலைமை நீடித்தது. பார்வதியின் தோழிகளான ஜெய, விஜயா என்பவர்களுக்கு இந்த நிலை நீடிப்பதில் விருப்பமில்லை. எனவே, பார்வதியிடம் சென்று முறையிட்டனர். அவர்கள் பேசிய பிறகு பார்வதி அருகில் இருந்த குளத்தில் இருந்து களிமண்ணை எடுத்து, அழகிய பிள்ளை வடிவை உண்டாக்கினாள். பிறகு அப் பிள்ளைக்கு நன்றாக அலங்காரம் செய்து, “நீ என் மகன்; உனக்கு கணேசன் என்று பெயர் வைக்கிறேன். இன்றுமுதல் நீ என் மெய்க்காவலன்” என்று கூறினாள். அப் பிள்ளை ஒரு தடிக்கம்பை எடுத்துக் கொண்டு காவல் தொழிலை ஆரம்பித்தான். யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. சிவன் வந்த பொழுதும் தடுத்து நிறுத்தி விட்டான். சிவபிரான் நான்தான் சிவபிரான் என்று கூறியும், அப்படி யாரையும் எனக்குத் தெரியாது என்று கூறிவிட்டான். சிவபிரான் எவ்வளவு சொல்லியும் அவன் கேளாமையால் அவனை மீறிக்கொண்டு உள்ளே நுழைய முயன்றார். கணேசன் அவரை விட மறுத்துத் தடியால் அடித்துத் துன்புறுத்தினான். உதவிக்கு வந்த நந்தி முதலானவர்களையும் தண்டித்தான். பின்னர் வந்த பிரம்மா, விஷ்ணு ஆகியவர்களையும் அவன் விடவில்லை. ஒரு பெரும் போரே மூண்டுவிட்டது. பிரம்மா முதலியவர்கள் பயன்படுத்திய எந்த ஆயுதமும் அவனை ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்நிலையில் விஷ்ணு ஒரு சூழ்ச்சி செய்தார். தந்திரத்தால்தான் இவனை வெல்ல முடியும். ஆகவே நாங்கள் முன் பக்கம் சண்டை செய்யும் பொழுது பின்புறமாக வந்து இவனை அடக்கினால்தான் உண்டு என்று விஷ்ணு தந்திரம் சொல்லிக் கொடுத்தார். விஷ்ணுவின் சக்கரம் கூடப் பயன்படவில்லை என்று தெரிந்து கொண்டபின் பிள்ளையின் பின்புறம் வந்த சிவன் தன் துலாயுதத்தால் பிள்ளையின் கழுத்தை வெட்டி விட்டார். போர் அமளியில் பிள்ளையின் தலையும் எங்கோ போய் விழுந்து விட்டது.

அப்பொழுது பார்வதி மிக்க கோபத்துடன் தன் பிள்ளையைக் கொன்றவர்களை, தான் பார்க்கவோ மன்னிக்கவோ போவதில்லை என்று முடிவு செய்து இந்தப் பிரபஞ்சத்தையே அழித்துவிடத் தயாரானாள். நாரதர் நிலைமையைப் புரிந்துகொண்டு பார்வதியை சமாதானம் செய்து போருக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தார். தாம் விதிக்கும் இரண்டு நிபந்தனைகளுக்குச் சிவன் உட்பட்டால் தன் கோபத்தை அடக்கிக் கொள்வதாகப் பார்வதி கூறினாள். என்ன நிபந்தனைகள் என்று நாரதர் கேட்க, பார்வதி பின்வருமாறு கூறினாள்: 1. என் பிள்ளையின் உயிரைத் திருப்பித் தர வேண்டும், 2. சிவ கணங்கள் அனைத்திற்கும் அவனைத் தலைவனாகச் செய்ய வேண்டும். இரண்டு நிபந்தனைகளையும் சிவன் ஒப்புக் கொண்டார். முதல் நிபந்தனையை நிறைவேற்றுவதில் சிக்கல் எழுந்தது. பிள்ளையின் தலை எங்கோ போய்விட்டதால் தேடி எடுக்க முடியவில்லை. உடனே சிவன் தன் உடன் வந்தவனை அழைத்து எந்த ஒரு வடிவத்தை நீ முதலில் சந்திக்கிறாயோ அந்த வடிவத்தின் தலையைக் கொய்து கொண்டு வா என்று கட்டளையிட்டார். அவ்வாறு போன துணைவனுக்கு முதன் முதலில் கிடைத்தது ஒரு யானையின் தலையாகும். அந்த யானையின் தலையை இந்த இளைஞனின் தலையில் பொருத்தி சிவன், விஷ்ணு, பிரம்மன் ஆகிய மூவரும் கூடி அதற்கு உயிர் உண்டாக்கினர். சிவ புராணத்தின்படி இதுவே கணேசன் பிறந்த கதை.

கணேசன் - கார்த்திகேயன் இருவரிடையே மாறுபாடு

சிவனுக்கும் பார்வதிக்கும் கணேசன், கார்த்திகேயன் என்று இரு குமாரர்கள் இருந்தனர். பருவம் அடைந்த இருவரும் திருமணம் செய்துவைக்கும்படி தாய் தந்தையரை வற்புறுத்தினர். இவர்களுள் யாருக்கு முதலில் திருமணம் செய்வது என்று பெற்றோருக்குப் பிரச்சனை. ஒருவருக்கு முதலில் செய்தால் மற்றவருக்கு மனவருத்தம் ஏற்படும் என்பதை அறிந்த பெற்றோர், இதற்கு ஒரு வழியைக் கண்டனர். இருவரையும் அழைத்து சிவன், “நீங்கள் இருவரும் உலகைச் சுற்றி வர வேண்டும். யார் முதலில் வருகிறீர்களோ அவர்களுக்கு முதலில் திருமணம் செய்து வைக்கப்படும்” என்றார். இந்த வார்த்தையைக் கேட்ட கார்த்திகேயன் உடனே புறப்பட்டு விட்டார். கணேசன் சிறிது தூரம்கூடத் தன்னால் களைப்படையாமல் போக முடியாது என்பதை உணர்ந்தார். ஆதலால் சிறிது நேரம் கண்ணை மூடிக்கொண்டு யோசனையில் ஆழ்ந்தார். உடனே குளித்துவிட்டு வந்து தாய், தந்தை இருவரையும் பக்கத்தில் பக்கத்தில் அமரச் செய்தார். அவர்களை ஏழுமுறை சுற்றி வந்து எதிரிலே நின்று வணங்கி, உடனே திருமணத்திற்கு ஏற்பாடு செய்யச் சொன்னார். அவரைப் பார்த்துச் சிவன், "உலகைச் சுற்றிவருமாறு உங்களுக்குக் கட்டளையிட்டோம். நீ இன்னும் இங்கேயே இருக்கிறாய். கார்த்திகேயன் முன்னரே புறப்பட்டுச் சென்று விட்டான். உடனே புறப்பட்டுப்போ” என்றார். கணேசன் அவரைப் பார்த்து, "என் அருமைப் பெற்றோரே! தாய் தந்தையை ஒருமுறை பிரதட்சணம் செய்தால் உலகையே ஒருமுறை வலம் வந்ததாக அர்த்தம் என்று வேதங்களில் சொல்லியிருக்கிறது. நானோ என் பெற்றோரை ஏழுமுறை சுற்றி வந்து விட்டேன். அப்படியிருக்க, நான் உலகை வலம் வரவில்லை என்று சொன்னால் வேதத்தில் சொல்லியது பொய் என்று ஆகிவிடும். உடனே திருமணத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்” என்று கேட்டுக் கொண்டார்.

அவர் கூறியதற்கு மறுப்புக் கூற முடியாமையால் சிவன் அவர் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தார். காசிய முனிவனின் மகன் விசுவருபனின் பெண்களாகிய சித்தி, புத்தி என்ற இருவரையும் கணேசருக்கு மணம் செய்வித்தனர். சித்திக்கு 'லக்ஷா என்ற மகனும், புத்திக்கு 'லபா என்ற பிள்ளையும் பிறந்தனர்.

உலகைச் சுற்றச் சென்ற கார்த்திகேயன் அப்பணியை முடித்துக் கொண்டு தாய் தந்தையரிடம் வந்து சேர்ந்தார். ஏற்கெனவே கணேசருக்குத் திருமணம் முடிந்து பிள்ளைகளும் பிறந்திருப்பதைப் பார்த்து பெற்றோருடன் தங்குவதில்லை என்று சொல்லிவிட்டு கிரெளஞ்ச மலைக்குச் சென்று தங்கிவிட்டார். இனித் திருமணம் செய்து கொள்வதில்லை என்றும் முடிவு செய்துவிட்டார். சிவனும் பார்வதியும், தனியே இருக்கும்,மைந்தனைக் காண முறையே அமாவாசை அன்று ஒருவரும், பெளர்ணமி அன்று ஒருவருமாக கிரெளஞ்சலை சென்று பார்த்து வருகின்றனர். இதனால்தான் வட்நாட்டில்' உள்ள கார்த்திகேயன் கோயிலுக்குள் பெண்கள் அனுமதிக்கப் படுவதில்லை. - • .

லிங்க வடிவங்கள்

பக்தர்கள் எங்கே கூடினாலும் அங்கே சிவன் லிங்க வடிவில் தோன்றுகிறார். ஆயிரக்கணக்கான இடங்களில் சிவன் இருந்தாலும் 12 முக்கியமான லிங்கங்கள் ஜோதிர் லிங்கங்கள்” என்ற பெயரில் போற்றப்படுகின்றன. அவை, சோமநாதம், மல்லிகார்ஜுனம், மகாகாளன், ஓம்காரம், கேதாரம், பீமசங்கரன், விசுவநாதன், திரியம்பகம், வைத்தியநாதன், நாகேசுவரன், இராமேஸ்வரம், குஷ்மேஷா ஆகியவை.

நந்திகேசுவர தீர்த்தம்

வெகு காலத்திற்கு முன் கர்ணகி என்ற இடத்தில் ஒரு வேதியன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தன. மனைவியுடன் இரண்டு பிள்ளை களையும் கர்ணகியில் விட்டு விட்டு பிராமணன் வாரணாசி சென்றான். அவன் அங்கேயே இறந்து விட்டதாகத் தெரிய வந்ததால் அங்கேயே சடங்குகளைச் செய்தனர். அவனுடைய மனைவி இறப்பதற்குரிய நேரம் வந்ததும் உயிர் பிரியாமல் அவதிப்பட்டாள். அவள் பிள்ளைகள், "தாயே! உன்னுடைய ஏதோ ஒரு விருப்பம் நிறைவேறாததால் உன் உயிர் பிரிய மறுக்கிறது. அது என்னவென்று தெரிவித்தால், நாங்கள் அதனைச் செய்கின்றோம்” என்றனர். கிழவி, 'பிள்ளைகளே! இறப்பதற்குள் உங்கள் தந்தையைப் போல வாரணாசி போய் வர நினைத்தேன். அது இயலாமல் போய்விட்டது. இப்பொழுது என்னுடைய எலும்புகளையாவது வாரணாசியில் கொண்டு சேர்ப்பதானால் நான் அமைதியாகச் சாவேன்” என்றாள். பிள்ளைகள் அவ்வாறு செய்வதாகக் கூறியவுடன் அவள் உயிர் நீத்தாள். அவள் மூத்த பிள்ளையாகிய சுவடி அந்த எலும்புகளை எடுத்துக் கொண்டு வாரணாசிக்குப் புறப்பட்டான். மிக நீண்ட தூரம் ஆகையால் வழியில் தங்கிச் செல்ல நேர்ந்தது. ஒர் இரவு ஒரு பிராமணன் வீட்டில் தங்கினான். வீட்டுக்கார பிராமணன் காலையில் பால் கறக்க முற்படுகையில் கன்றுக்குட்டி அடம் பண்ணி அவனைப் பாலைக் கறக்க விடாமல் செய்தது. கோபம் கொண்ட பிராமணன் கன்றுக்குட்டியை நன்றாக அடித்து விட்டு, பாலைக் கறந்து கொண்டு வீட்டிற்குள் சென்றான். இப்போது அடிபட்ட கன்றுக்குட்டியுடன் பசுமாடு பேச ஆரம்பித்தது. திண்ணையில் படுத்திருந்த சுவடிக்கு இந்த உரையாடல் நன்கு கேட்டது. பசு கன்றுடன் பின்வருமாறு பேசிற்று: "என் அருமைக் கன்றே! அந்தக் கொடிய பார்ப்பான் உன்னை நன்றாக அடித்து விட்டான் என்று நீ வருந்த வேண்டாம். நான், இதற்குப் பழி வாங்கும் முறையில் இவனுடைய மகனை என் கொம்புகளால் குத்திக் கொன்று விடுகிறேன்” என்று கூறிற்று. இதைக் கேட்ட சுவடி எல்லையற்ற வியப்படைந்து, மறுநாள் என்ன நடக்கிறது என்று பார்க்க அங்கேயே தங்கி விட்டான். மறுநாள் விடியற்காலம் பார்ப்பானின் மகன் பால் கறக்க வந்தான். பசுமாடு தன் கொம்புகளால் அவனைக் குத்திக் கொலை செய்து விட்டது. சுவடி வியப்புடன் இதைப் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே வெண்மை நிறமுடைய அப்பசு கருமை நிறமானது. பார்ப்பனனைக் கொன்றதால் 'பிரம்மஹத்தி தோஷம் பசுமாட்டைப் பற்றிக்கொண்டது. திடீரென்று அப்பசு வீட்டை விட்டுப் போகத் துவங்கியது. பார்த்துக் கொண்டிருந்த சுவடி அது எங்கே போகிறது என்று அறிந்து கொள்ள அதன் பின்னே போனான். நெடுந்துாரம் போன பசு, நர்மதை ஆற்றில் நந்தி தீர்த்தம் என்ற இடத்தில் இறங்கிக் குளித்தது. உடனே அதன் கறுமை நிறம் மாறி வெள்ளை நிறம் அடைந்தது. நந்தி தீர்த்தத்தில் மூழ்கினால் பிரம்மஹத்தி தோஷம்கூடப் போய்விடும் என்பதை அறிந்தான். தான் மட்டும் அங்கே குளித்து விட்டு வாரணாசிக்குப் புறப்பட்டான். அந்நிலையில், ஒர் அழகிய பெண் அவனெதிரே தோன்றினாள். "சுவடி! உன் தாயின் எலும்புகளை எடுத்துக் கொண்டு எங்கே போகிறாய்?” என்று கேட்டாள். தன் பெயரைச் சொல்லி அழைத்த அந்தப் பெண்ணைக் கண்டு வியப்படைந்த சுவடி, “நான் என் தாயின் எலும்புகளை கங்கையில் கரைக்கப் போகிறேன். நீ யார்?' என்று கேட்டான். அப்பெண் “நான் தான் கங்கை நீ கங்கை வரை செல்லத் தேவையில்லை. உன் தாயின் எலும்புகளை இந்த நந்திகேசுவரத்திலேயே கரைத்து விடு' என்று கூற, சுவடியும் அப்படியே செய்தான். அவன் தாய் ஆகாயத்தில் தோன்றி, "மகனே! நான் முழுத் திருப்தி அடைந்து விட்டேன். இதோ மோட்சம் போகிறேன்” என்று கூறி மறைந்தாள்.

'நந்தி தீர்த்தம் இவ்வளவு சிறப்புப் பெற்றதற்கு ஒரு காரணம் உண்டு. முன்னொரு காலத்தில் ஒரு பிராமணப் பெண் சிவனை நோக்கி மிகக் கடுமையான தவம் செய்தாள். அப்படி தவம் செய்த இடம்தான் 'நந்தி தீர்த்தம்.'

அத்ரிஈசுவர தீர்த்தம்

கமதா என்றொரு வனாந்திரம் இருந்தது. அங்கு 100 ஆண்டுகளாக மழை பெய்யாததால் மரங்கள் கருகி அங்குள்ள உயிரினங்கள் மிகவும் துன்புற்றன. அவ்வனத்தில் அத்ரி முனிவரும் அவர் மனைவி அனுசுயாவும் வாழ்ந்து வந்தனர். மழை வேண்டி சிவனைக் குறித்து அத்ரி தவம் இயற்றினார். அன்ன ஆகாரமின்றி அவர் தவம் இயற்றுவதைப் பார்த்து அனுசுயாவும் சிவனைப் பார்த்துத் தவம் இயற்றினாள். 54 ஆண்டுகள் தவம் நீண்டது. திடீரென்று அத்ரிக்கு அதிக தாகம் எடுக்கவே அனுசுயாவைப் பார்த்து, “எங்காவது சென்று கொஞ்சம் தண்ணிர் கொண்டு வா!” என்றார். குடத்தை எடுத்துக் கொண்டு காட்டினுள் சென்ற அனுசுயாவின் எதிரே ஒரு பெண் வந்தாள். அப்பெண் இவளைப் பார்த்து, 'அனுசுயா! நான்தான் கங்கா தேவி. உன் தவத்திற்கு மிகவும் மெச்சினேன். வேண்டும் வரத்தைக் கேள்” என்று சொன்ன வுடன், அனுசுயா அப்பெண்ணைப் பார்த்து, “நீதான் கங்கை என்றால் இங்கே ஒரு குளத்தை உண்டாக்கி அதை கங்கை நீரால் நிரப்புக!” என்றாள். அவ்வாறே நடந்தது. அனுசுயா குடம் நிறைய அந்நீரை எடுத்துக் கொண்டு கணவனிடம் சென்றாள். அதைக் குடித்துப் பார்த்த அத்ரி முனிவர். "இது நாம் வழக்கமாகச் சாப்பிடும் தண்ணீர் இல்லையே, எங்கே கிடைத்தது?" என்றார். நடந்ததைக் கூறிய அனுசுயாவுடன் குளக்கரைக்குச் சென்றார். அங்கு இருந்த கங்கையைப் பார்த்து, "தாயே! நீ இங்கேயே இருக்க வேண்டும்’ என்று வேண்டினார். கங்கையும் ஒப்புக் கொண்ட பிறகு சிவன் அனுசுயாவிடம் “உன் தவத்திற்கு மெச்சினேன்; வரம் என்ன வேண்டும்?” என்று கேட்க, "தாங்களும் இந்த வனத்திலே தங்கிவிட வேண்டும்” என்று அனுசுயா வேண்ட சிவனும் ஒப்புக் கொண்டார். சிவனும் கங்கையும் தங்கிய இந்த இடத்திற்கு “அத்ரிஈசுவர தீர்த்தம்” என்ற பெயர் வந்தது.

ஜோதிர்லிங்கங்களின் கதை :

1. சோமநாதர்


தட்சனுடைய 27 பெண்களையும் மணந்துகொண்ட சந்திரன் (சோமன்). அவர்களுள் ரோகிணியிடம் அதிக அன்பு பாராட்டி மற்றவர்கள் மனம் வருந்துமாறு செய்துவிட்டான். அந்தப் பெண்கள் தங்கள் தந்தையாகிய தட்சனிடம் சென்று முறையிட்டனர். தட்சன் எல்லாரிடமும் சமமாக நடந்து கொள்ள வேண்டுமென்று பலமுறை சந்திரனை எச்சரித்தும் அவன் அதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. ரோகிணி யிடம் இருந்துவிட்டான். கோபம் கொண்ட தட்சன் சந்திரனைப் பார்த்து “நீ தேய்ந்து (க்ஷீணித்து) போவாயாக’ என்று சாபமிட்டான். பயந்து போன சந்திரன் பிரம்மனிடம் சென்று முறையிட்டான். பிரம்மன் "உனக்கு உதவும் சக்தி எனக்கில்லை. நீ சிவனிடம் சென்று முறையிடுக!” என்று அறிவுரை கூறினான். சோமன் சரசுவதி நதியின் கரையில் பிரபச தீர்த்தத்தில் ஒரு லிங்கம் அமைத்து ஆறு மாதங்கள் தீவிரமாக வழிபட்டான். சிவன் நேரில் தோன்றி "உனக்கு என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டார். சோமன் நடந்த வற்றைக் கூறி தன்னைக் காக்குமாறு வேண்டினான். செய்த தவறுக்குத் தண்டனையாக வழங்கப்பட்ட சாபத்தைப் போக்க முடியாது என்று கூறிய சிவன், "இதற்கு ஒரு வழி காணலாம். கிருஷ்ணபட்சம் 14 நாட்களும் உன் மாமனார் சாபப்படி நீ தேய்ந்து (க்ஷீணித்து) போவாயாக சுக்கிலபட்சம் 14 நாட்களும் நீ வளர்ந்து முழுவடிவம் பெறுமாறு நான் வரம் தருகிறேன்” என்றார். அதிலிருந்து சந்திரன் தேய்வதும், வளர்வதும் நிலைத்து விட்டன. சோமன் வழிபட்ட இடம்தான் சோமநாதர் இருக்குமிடம்.

2. மல்லிகார்ஜுனர்

தனக்கு முன்னர் கணேசனுக்குத் திருமணம் ஆகி விட்டதால் பெற்றோர்கள் தன்னை ஏமாற்றி விட்டார்கள் என்று கோபம் கொண்ட கார்த்திகேயன், கிரெளஞ்ச மலையில் வந்து தங்கினான். பெற்றோர்கள் மகனைப் பிரிந்த துயரத்தால் அடிக்கடி பார்க்க வந்த பொழுது, கார்த்திகேயன் அவர்களை நெருங்க விடவில்லை. தூரத்தில் இருந்து அடிக்கடி வருவது கஷ்டம் என்பதால், கிரெளஞ்ச மலைக்கு மிகச் சமீபத்தில் இருக்கும் மல்லிகார்ஜுனத்தில் சிவனும், பார்வதியும் வந்து தங்கினர்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
3. மகாகாளர்

சிப்ரா நதிக் கரையில் உள்ள அவந்தியில் வேதப்பிரியா என்ற பிராமணன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு தேவப்பிரியா, பிரியமேதா சுவரிதா, சுவரதா என்ற 4 பிள்ளைகள் இருந்தனர். இந்த பிராமணன் வேத வழியைப் பற்றி சிவனை வழிபட்டதோடு, தன் பிள்ளைகளையும் அதே வழியில் பழக்கி இருந்தான். இவர்கள் வாழ்ந்த இடத்திற்குப் பக்கத்தில் ரத்னமலை' என்று ஒரு மலை இருந்தது. அம்மலையில் துஷ்ணன் என்ற ஓர் அரக்கன் வாழ்ந்து வந்தான். இந்த பிராமணர்கள் சிவ வழிபாடு செய்வது அவனுக்குப் பிடிக்க வில்லை. இதனிடையில் இந்தப் பிள்ளைகளின் தந்தை இறந்து விட்டார். என்றாலும், பிள்ளைகள் சிவனை வணங்குவதில் தீவிரமாக இருந்தனர். இதைக் கண்ட அரக்கன் அவந்தியை முற்றுகையிட்டு இவர்களை அழிக்க முயன்றான். நால்வரும் சிவலிங்கத்திடம் சென்று தங்கள் குறைகளைக் கூறி வேண்டினர். திடீரென்று ஒரு பெரிய சப்தம் கேட்டது. அங்கு வெளிப்பட்ட சிவபெருமான் அரக்கனான துஷ்ணனை எரித்துச் சாம்பலாக்கி விட்டார். அன்றிலிருந்து பக்தர்களின் வேண்டுகோளின்படி மகாகாளர் அங்கேயே தங்கிவிட்டார்.

4. ஓம்கார லிங்கம்

விந்திய மலை எல்லா மலைகளையும்விடத் தான் உயர்ந்த தாகவும், தன்னிடம் எல்லாப் பொருளும் இருக்கின்றன என்றும் அதிகக் கர்வம் கொண்டிருந்தது. ஒருமுறை நாரதர் அங்கே வந்த பொழுது விந்தியம் தன் பெருமையைச் சொல்லிக் கொண்டது. உடனே நாரதர், “அதிக கர்வம் பட வேண்டாம். சிவன் வாழ்கின்ற காரணத்தால் மேருமலை உன்னை விட உயர்ந்தது” என்று கூறினார். அதைக் கேட்ட விந்தியம் உடனே சிவனை நோக்கித் தவம் செய்தது. ஆறு மாதம் தவம் செய்த பின் சிவன் வெளிப்பட்டார். விந்தியம் தன்னிடத்தில் சிவன் தங்கவேண்டும் என்று வேண்டிக் கொண்டதால் ஓம்கார லிங்கமாக அங்கேயே தங்கிவிட்டார்.

5. கேதார லிங்கம்

விஷ்ணு ஒருமுறை தன்னையே நரன் என்றும், நாராயணன் என்றும் இரு முனிவர்களாக மாற்றிக் கொண்டார். இமயமலையில் உள்ள பத்ரிகாசரமம்' என்ற இடத்தில் இந்த இரு முனிவர்களும் சிவனைக் குறித்து நெடுங்காலம் தவம் செய்தனர். கடைசியாக சிவன் தோன்றி, “என்னை ஏன் அழைத்தீர்கள்? நீங்களே வணங்கத் தகுந்தவர்கள் தானே?’ என்றார். இருவரும் ஆசிரமத்தின் பக்கத்தில் உள்ள கேதாரம் என்னும் மலை உச்சியில் சிவன் என்றும் லிங்க வடிவில் இருக்க வேண்டுமென்று வேண்டிக் கொண்டனர். அவர் அவ்விதம் தங்கிய இடமே கேதாரம். அந்த லிங்கத்தின் பெயரே கேதார லிங்கம்.

6. பீம சங்கர லிங்கம்

சகிய என்ற மலையில் பீமன் என்ற அரக்கனும், அவன் தாயும் வாழ்ந்து வந்தனர். ஒருநாள் பீமன் தன் தாயைப் பார்த்து, “நாம் ஏன் தனியாக இங்கு வாழ்கிறோம்? என் தந்தை யார்?' என்று கேட்டான். மிக்க வருத்தத்துடன் தாய் கர்கதி தன் வரலாற்றைச் சொன்னாள். விராதன் என்ற ராட்சச னுக்குத் தான் மனைவியாக இருந்ததாகவும், விராதனை இராமன் கொன்று விட்டபடியால் இராவணன் தம்பியான கும்பகர்ணனைத் தான் மணந்து பீமன் என்ற இப்பிள்ளையைப் பெற்றதாகவும், இலங்கைக்குச் சென்ற கும்பகர்ணனை இராமன் கொன்றுவிட்டான் என்றும், அதனால் வேறு போக்கிடம் இல்லாமல் காட்டிலே இருப்பதாகவும் கூறினாள். இராமன் விஷ்ணுவின் அவதாரம் ஆகையால், விஷ்ணுவைப் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பீமன் 1000 ஆண்டுகள் தவம் புரிந்தான். பிரம்மன் வெளிப்பட்டவுடன் அனைவரையும் வெல்லக்கூடிய சக்தி தனக்கு வேண்டுமெனக் கேட்டுக் கொண்டான். அது கிடைத்தவுடன் பக்கத்தில் உள்ள விஷ்ணு பக்தனாகிய அரசன் காமரூபனை வென்று அவனைச் சிறையிலும் அடைத்துவிட்டான். சிறையில் அகப்பட்ட பீமன் சிறைக்குள் வந்து காமரூபனை வாளால் வெட்ட முயன்றான். சிவன் எதிரே தோன்றி தன்னுடைய சூலாயுதத்தால் பீமனுடைய வாளைக் கீழே விழச் செய்தான். பீமன் பயன்படுத்திய எல்லா ஆயுதங்களும், சிவனுடைய திரிசூலத்தால் பொடியாயின. இறுதியில் சிவன் பீமனைக் கொன்று விட்டான். காமரூபனின் வேண்டுகோளின்படி பீமசங்கரன் என்ற பெயருடன் அங்கேயே லிங்க வடிவாகத் தங்கிவிட்டார். பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களுள் இது ஆறாவது ஆகும்.

7. விசுவநாதரும் வாரணாசியும்

ஏழாவது ஜோதிர்லிங்கம் வாரணாசியில் உள்ள விசுவநாதர் ஆகும். புண்ணியத் தலங்களில் எல்லாம் மிகச் சிறப்பு உடையதாகும். ஒருமுறை பிரம்மாவே இங்கிருந்து தவம் செய்தார். மிக உக்கிரமானதும், பிறர் எளிதில் செய்ய முடியாததும் ஆன அத்தவத்தைக் கண்டு விஷ்ணுவே தலையை உலுப்பிக்கொண்டார். உலுப்பிய பொழுது அவர் காதில் இருந்து ஒரு மணி வாரணாசியின் ஒரு பகுதியில் விழுந்தது. அப்பகுதிக்கு ‘மணிக்கரணிகை என்று பெயர் வந்தது. பிரளயகாலத்தில் உலகம் முழுதும் நீரில் மூழ்கி விடும் பொழுது, சிவன் தன்னுடைய சூலத்தால் வாரணாசியைத் தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறார். பிரளயம் முடிந்து உலகம் படைக்கப்படும் பொழுது வாரணாசியை அந்த இடத்தில் வைக்கிறார்.

ஒருமுறை சிவனையும், பார்வதியையும் கண்ட பிரம்மன், தன் ஐந்து முகங்களாலும் சிவனுடைய பெருமையைப் பாடினார். அதில் ஒரு தலை மந்திரங்களைத் தவறாகச் சொன்னதால் சிவன் அந்தத் தலையைக் கிள்ளிவிட்டார். பிராமணனாகிய பிரம்மனின் தலை கொய்யப்பட்டதால் சிவனை, பிரம்மஹத்தி தோஷம் பற்றிக் கொண்டது. சிவனிடம் ஒட்டிக் கொண்ட அந்தத் தலை என்ன செய்தும் கீழே விழவில்லை. சிவன் வாரணாசி பக்கம் வந்த பொழுது தலை தானே கீழே விழுந்து விட்டது. எனவே வாரணாசியின் பெருமையை அறிந்த சிவன், விசுவநாதராக அங்கேயே தங்கிவிட்டார்.

8. திரியம்பகமும் கெளதமனும்

நாட்டின் தென்பகுதியில் பிரம்ம பர்வதம் என்ற ஒரு மலை இருந்தது. அதன் ஒரு பகுதியில் கெளதம முனிவரும், அவன் மனைவி அகல்யையும் தவம் செய்து கொண்டிருந்தனர். பல ஆண்டுகளாக மழை இன்மையால் காடெல்லாம் கரிந்து சாம்பலாகும் நிலை வந்தது. அப்பொழுது கெளதமரும், அகல்யையும் வருணனைக் குறித்துத் தவம் செய்தனர். வருணன் எதிர்ப்பட்டவுடன் "நாடு முழுவதும் மழை பெய்ய வேண்டும்” என்று வரம் கேட்டார். வருணன் "அது தன்னுடைய சக்திக்கு அப்பாற்பட்டது” என்றும், "தன்னால் முடிந்தது ஒரு நீர் நிறைந்த குளம் அங்கு இருக்குமாறு செய்வதுதான்” என்றும் கூறினான். நீர் நிறைந்த குளம் உண்டாயிற்று. இந்தக் குளத்தை ஏனைய முனிவர்களும் பயன்படுத்தி வந்தனர். கெளதமரின் சீடர்களும் தண்ணிர் கொண்டுவரச் சென்று மிகவும் காலம் தாழ்த்தி வந்தனர். ஏன் என்று முனிவர் கேட்டபொழுது ரிஷிகளின் மனைவிமார்கள் தங்களைத் தண்ணிர் எடுக்க விடுவதில்லை என்று கூறினர். அன்றிலிருந்து அகலிகையே தண்ணிர் கொண்டுவரப் புறப்பட்டாள். அவளையும் அப் பெண்கள் எளிதில் நீர் எடுக்க விடவில்லை. அவளையும், கெளதமரையும் அந்த இடத்தை விட்டுத் துரத்திவிட வேண்டும் என்று மனைவிமார்கள் தங்கள் கணவன்மார்களை நச்சரித்தனர். வேறு வழியில்லாமல் முனிவர்கள் கணேசனை நோக்கி வேண்டினர். கணேசன் வந்த பொழுது கெளதமரையும், அகல்யையையும் அந்த எல்லையை விட்டுப் போக வேண்டுமென்று வேண்டிக் கொண்டான். அந்த வேண்டுகோள் தவறானது என்பதை அறிந்த கணேசன், இவர்களுக்கு புத்தி கற்பிப்பதற்காகத் தானே ஒரு பசுமாட்டு உருவம் எடுத்து அவர் ஆசிரமத்திற்குப் பக்கத்தில் வைத்திருந்த தானியத்தைத் தின்னத் தொடங்கிற்று. ஒரு புல்லை எடுத்து கெளதமர் விரட்ட அது அங்கேயே விழுந்து செத்து விட்டது. பசுவதை செய்ததால் கெளதமரையும், அகல்யையையும் அவ்விடத்தை விட்டு விரட்டி விட்டனர். பசுவதைக்குப் பிராயச்சித்தம் செய்ய விரும்பிய கெளதமர், பிரம்ம பர்வதத்தை நூறுமுறை சுற்றி வரவேண்டும் என்றும், இன்னும் சில கடுமையான கடமைகளையும் முனிவர்கள் கூறினார்கள். சொல்லப்பட்ட சடங்குகளை எல்லாம் முடித்தபிறகு கெளதமரும் அகல்யையும் சிவனை நோக்கிக் கடுந்தவம் புரிந்தனர். சிவன் தோன்றிய பொழுது, தங்களுடைய ஆசிரமத்திற்குப் பக்கத்தில் கங்கைநதி ஓட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். உடனே கங்கை, சிவனும் பார்வதியும் இங்கே தங்குவதானால் தான் இங்கே ஒடுவதாக ஒத்துக் கொண்டாள். சிவன் தங்கிய இடம் திரியம்பகம் என்று போற்றப்பட்டது. கோதாவரி என்ற பெயருடன் கங்கை அங்கே ஒடிக் கொண்டிருக்கிறது. கொடுமை செய்த முனிவர்களையும், அவர்கள் பத்தினிமார்களையும் மன்னிக்குமாறு கெளதமர் வேண்டிக் கொண்டார்.

9. இராவணனும் வைத்தியநாதனும்

இராவணன் இமயமலையில் பலகாலம் தவம் புரிந்தான். சிவன் வெளிப்படவில்லை. இன்னும் தெற்கே வந்து விருட்ச கந்தகம் என்னும் இடத்தில் தவம் புரிந்தான். அங்கும் வெளிப் படவில்லை. இன்னும் தெற்கே வந்து ஒரு பெரிய குழியைத் தோண்டி அதனுள் லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டான். அப்போதும் சிவன் வெளிப்படவில்லை. இது கண்ட இராவணன் உயிரோடு இருந்து பயனில்லை என்று நினைத்துப் பெரிய தீயை வளர்த்து தன் ஒவ்வொரு தலையாக அறுத்து அக்னியில் போட்டான். ஒரு தலை மிஞ்சி இருக்கும் பொழுது சிவன் தோன்றினார். "போதும் நிறுத்து. உனக்கு என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டார். “யாவரையும் வெல்லும் வலிமையையும், எரிந்துபோன ஒன்பது தலைகளும் வேண்டும்” என்று கேட்டான். சிவன் அப்படியே கொடுத்தார். குழி வெட்டிய இடத்தில் இருப்பவர்தான் ஒன்பதாவது ஜோதிர்லிங்கமாகிய வைத்தியலிங்கம்.

மிக்க மகிழ்ச்சியோடு இராவணன் இலங்கையில் இருக்கும்போது அவனைக் கண்டு அஞ்சிய தேவர்கள், நாரதரை ஏதாவது வழி செய்யுமாறு வேண்டினர். உடனே நாரதர் இலங்கைக்குச் சென்று இராவணனைச் சந்தித்து “சிவனுடைய வரங்களுக்கு இவ்வளவு மதிப்புத் தர வேண்டாம். இவ்வரங்கள் உண்மையா என்று சோதிக்க ஒரு வழி உண்டு. சிவன் அமர்ந்திருக்கும் கைலை மலையை நீ தூக்கிப் பார்” என்று சொன்னார். இராவணன் அப்படிச் செய்ய, "உன்னை அழிக்க ஒரு மனிதன் தோன்றுவான்” என்று சிவன் சாபம் கொடுத்தார்.

10. நாகேச லிங்கம்

மேலைக் கடற்கரையில் தாருகன் என்ற அரக்கனும், அவன் மனைவியாகிய தாருகியும் வாழ்ந்து வந்தனர். பார்வதியிடத்தில் அவள் பெற்ற வரத்தினால் அவள் எங்கே சென்றாலும், ஒரு பெரிய காடு அவள் பின்னேயே செல்லும். இந்த வர பலத்தால் நல்லவர்கள் இருக்கும் இடம், வேள்விகள் நடக்கும் இடம் ஆகியவற்றிற்குத் தாருகி சென்று அந்த இடமெல்லாம் காடாக ஆக்கி அவர்களை அழித்து வந்தாள். இந்நிலையில் அச்சமடைந்த தேவர்கள் அவுர்வா என்ற முனிவரிடத்தில் சென்று தங்களைக் காக்குமாறு வேண்டினர். முனிவர், அரக்கர்கள் யாரிடம் போர் புரிந்தாலும் அழிந்து விடுவார்கள் என்று சாபமிட்டார். அரக்கர்கள் பயந்து கொண்டு அமைதியாக இருந்த பொழுது, தேவர்கள் அவர்களைத் தாக்கினர். அசுரர்களுக்கு தர்ம சங்கடம். தேவர்களுடன் போரிட்டால் அழிய நேரிடும். போரிடாவிட்டால் தேவர்கள் கை ஓங்கி விடும். இந்த தர்ம சங்கடத்தில் இருந்து தப்பிக்க சமுத்திரத்தில் சென்று வாழ அரக்கர்கள் ஓடினர். ஆனால் கடல் மூலம் பயணம் செய்யும் மக்களைத் துன்புறுத்தினர். ஒருமுறை கப்பலில் சென்ற வைசியனை இவர்கள் பிடித்துச் சிறையில் அடைத்தனர். அந்த சுப்ரியா என்ற வைசியன் சிவ வழிபாடு செய்யும் பழக்கமுள்ளவன். எனவே சிறைக்குள் இருந்தபடியே சிவ பூசை செய்தான். இதை அறிந்த அரக்கர்கள் அவன் பூசையைக் கெடுப்பதற்காக அவனைக் கொல்ல பல ஆயுதங்களைப் பயன்படுத்தினர். சிவன் தந்த பாசுபதத்தைக் கொண்டு சுப்ரியா என்ற வைசியன் அரக்கர்களை அழித்தான். வைசியன் வழிபட்ட லிங்கமே நாகேச லிங்கமாகப் போற்றப் படுகிறது.

11. இராமனும் இராமேசுவரமும்

இராமன் வானர சேனைகளுடன் இலங்கைமேல் படையெடுத்துச் செல்ல கடற்கரைக்கு வந்து சேர்ந்தான். நீர் தாகமெடுத்ததால் குரங்கிடம் சொல்லி தண்ணிர் கொண்டு வருமாறு பணித்தான். தண்ணிர் வந்தவுடன் சிவனுக்குப் படைக்காமல் எதையும் உண்ணாதவனாகிய இராமன், ஒரு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து அதற்கு அந்நீரைப் படைத்தார். வழிபாடு முடிந்ததும், சிவனும் பார்வதியும் தோன்றி இராமனை வாழ்த்தினார்கள். அதே இடத்தில் சிவபெருமான் நிலையாக இருக்க வேண்டுமென்று இராமன் வேண்டிக் கொண்டதால், இராமலிங்கமாக சிவன் அங்கேயே தங்கிவிட்டார்.

12. குஷ்மேஸ் லிங்கம்

தென்பகுதியில் சுதர்மா என்ற பிராமணன் சுதேஹா என்ற தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தான். நீண்ட காலமாக இருவருக்கும் குழந்தையில்லை. எனவே அவன் வருத்தத்தை விட அவள் வருத்தம் பெரிதாக இருந்தது. பிற பெண்கள் அவளைக் கேலி செய்யத் தொடங்கினர். அதனால் வருத்தம் அடைந்த அவள் தன் உறவினராகிய குஷ்ணா என்பவளை அவன் மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினாள். கதர்மா "அப்படியே மணம் புரிந்து கொண்டு அவளுக்கு ஒரு குழந்தை பிறந்து விட்டால், நீ அதனைத் தாங்க மாட்டாய், பொறாமையால் மிகவும் துன்புறுவாய்” என்று கூறித் தடுத்தான். “அது பற்றிக் கவலை வேண்டாம். நான் தானே இதை முன்னின்று செய்கிறேன்” என்று கூறிவிட்டு, குஷ்ணாவை இரண்டாம் தாரமாக மணமுடித்து வைத்தாள். குஷ்ணா பெரிய சிவ பக்தை தினமும் களி மண்ணால் 108 சிவ லிங்கங்கள் செய்து அவற்றைப் பூசை செய்துவிட்டு, பக்கத்தில் உள்ள குளத்தில் லிங்கங்களைப் போட்டு விடுவது அவள் வழக்கம். இவ்வாறு ஒர் இலட்சம் லிங்கங்களைப் பூசை செய்து குளத்தில் போட்டிருந்தாள். உரிய காலத்தில் ஒர் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை வளர வளர முதல் மனைவியின் மனத்தில் பயங்கரமான பொறாமை உருவெடுத்தது. இதன் முடிவில் ஒரு நாள் மூத்தவள் குழந்தையின் கழுத்தை வெட்டி அந்த உடலைப் பக்கத்தில் உள்ள குளத்தில் போட்டு விட்டாள். மறுநாள் விழித்ததும் என்ன நடந்ததென்றே தெரியாமல் பூஜை செய்யத் தொடங்கி விட்டாள் குஷ்ணா. இதனிடையில் குழந்தை இல்லை என்று கண்டவுடன் அனைவரும் பெருங் கூச்சலிட்டுத் தேடுவாராயினர். இத்தனைக் கூச்சலிலும், குழப்பத்திலும் ஒரு சிறிதும் ஈடுபடாமல் குஷ்ணா சிவ பூஜையில் ஈடுபட்டிருந்தாள். அவள் பூசையை ஏற்றுக் கொண்ட சிவன் அவள் பிள்ளையைப் பிழைக்கச் செய்து அவளிடம் சேர்ப்பித்தார். மூத்தவளை தண்டிக்கத் துவங்கியபோது, அவளை மன்னித்து விடும்படி குஷ்ணா வேண்டிக் கொண்டாள். இந்தப் பெருந்தன்மையில் மகிழ்ச்சி அடைந்த சிவன், மற்றொரு வரம் கொடுக்கத் தயாரானார். குஷ்ணா சிவன் கொடுப்பதாகக் கூறிய வரத்தைப் பயன்படுத்தி அந்தக் குளத்தங்கரையிலேயே லிங்க ரூபமாகச் சிவன் இருக்கவேண்டுமென்று வேண்டிக் கொண்டாள். பன்னிரெண்டாவது ஜோதிர் லிங்கமாகக் குஷ்மேஸா என்ற பெயருடன் சிவன் அங்கே இருக்கிறார்.

சுதர்சன சக்கரக் கதை

முன்னொரு காலத்தில் நடைபெற்ற தேவாசுர யுத்தத்தில் தேவர்கள் மிகவும் நலிந்து போனார்கள். அவர்கள் அனைவரும் ஒடிச்சென்று விஷ்ணுவிடம் முறையிட்டனர். பலம் பொருந்திய அசுரர்களுடன் போர் புரிய வேண்டுமானால், அதற்குரிய ஆயுதம் எனக்கு வேண்டும். அதைக் கொடுக்கக் கூடியவர் சிவபிரானே என்று விஷ்ணு கைலை சென்று சிவனுடைய ஆயிரம் நாமங்களை தினமும் சொல்லி நீண்ட காலம் வழிபட்டார். ஆயிரம் நாமங்களை ஒவ்வொன்றாகச் சொல்லும் பொழுது ஒவ்வொரு தாமரைப் பூவை சிவனுக்கு அர்ச்சனை யாகச் செய்தார். ஒரு நாள் ஆயிரம் பூக்களில் ஒன்று குறைந்து விடவே தாமரைக் கண் என்று சொல்லப்படும் தன் ஒரு கண்ணைப் பறித்து அர்ச்சனை செய்து விட்டார். மகிழ்ந்த சிவபிரான் வெளிப்பட்டு, “என்ன வரம் வேண்டும்?” என்று கேட்க, “அசுரர்களை அழிப்பதற்கு ஒர் ஆயுதம் வேண்டும்” என்று கேட்டார். சிவபிரான் மகிழ்ந்து சுதர்சன சக்கரத்தைத் தந்தார்.

சிவராத்திரி விரதம்

முன்னொரு காலத்தில் ருருத்ரகா என்ற வேடன் காட்டில் வாழ்ந்து வந்தான். கொலை செய்வதும், கொள்ளை அடிப்பதும், மிருகங்களை வேட்டையாடுவதும் அவன் தொழிலாகும். அவனுக்கு யாரிடமும் கருணை காட்டிப் பழக்கமும் இல்லை. ஒருமுறை அவனுடைய குடும்பத்தினர் மிகவும் பசியால் வருந்தியபொழுது அவனிடம் "எதையாவது வேட்டையாடிக் கொண்டு வா” என்றனர். வேடன் வேட்டையாடப் புறப்பட்டான். எந்த விலங்கும் கிடைக்காமை யால் நீர் நிறைந்த குட்டையின் பக்கத்தில் நின்ற அவன் எப்படியும் ஏதாவது ஒரு மிருகம் தண்ணிர் குடிக்க வரும், பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து, ஒரு குடுவையில் தண்ணிர் நிரப்பிக் கொண்டு பக்கத்தில் உள்ள மரத்தில் அமர்ந்து கொண்டான். அது ஒரு வில்வ மரம். எனவே அதனடியில் ஒரு லிங்கம் இருப்பதே அவனுக்குத் தெரியாது. அன்று சிவராத்திரி என்பதும் தெரியாது. பொழுது சாய்ந்ததும் ஒரு பெண்மான் நீர் குடிக்க வந்தது. பெருமகிழ்ச்சி அடைந்த வேடன் தன்னுடைய வில்லைக் கையிலெடுத்தான். அவனுடைய குடுவையில் இருந்த நீர் கொஞ்சம் கீழே விழுந்தது. அவன் அசைந்து எழுந்ததால் மரத்தில் உள்ள வில்வங்கள் கீழே விழுந்தன. இவை இரண்டும் கீழே இருந்த லிங்கத்தின்மேல் விழுந்தன. வேடன் குறிபார்த்தபொழுது, அந்தப் பெண் மான் கூறிற்று: "வேடனே, என்னை இப்போது கொல்ல வேண்டாம். என் கணவரும் பிள்ளைகளும் காத்துக் கொண்டிருப்பார்கள். நான் போய் அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு நிச்சயம் வருவேன்” என்றது. அவன் தன் வார்த்தையை நம்பவில்லை என்று அறிந்தவுடன் பெண் மான் மீண்டும் வருவதாக சத்தியம் செய்தது. மனமிரங்கிய வேடன் அதனைப் போய் வருமாறு பணித்தான்.

அந்தப் பெண் மான் சென்ற சிறிது நேரத்தில் மற்றொரு பெண் மான் வந்தது. முதல் மானுக்கு நடந்த அனைத்தும் இம்மானிடமும் நடைபெற்றது. இரண்டாம் முறை சிவலிங்கத் திற்கு அபிஷேகம், வில்வார்ச்சனை அவனையுமறியாமல் செய்தான். இந்தப் பெண்மானும் முன்னர் வந்த பெண்மானும் சகோதரிகளாகும். ஒரே ஆண்மானுக்கு இந்த இரண்டு பெண் மான்களும் மனைவியாயிருந்தன.

இதற்கு அடுத்தபடியாக ஒர் ஆண் மான் வந்தது. அதே உரையாடல், அதே சக்தியால் மூன்றாம் முறையாக லிங்கத்திற்கு அபிஷேகம், வில்வார்ச்சனை நடைபெற்றது. ஆண் மான் போய் சிறிது நேரத்திற்கெல்லாம் மூன்று மான்களும் தாங்கள் செய்த சத்தியப்படியே வேடனிடம் வந்தன. ஒவ்வொன்றும் அவன் தன்னையே கொல்ல வேண்டும் என வேண்டிக் கொண்டன. இது போதாதென்று அவற்றின் பிள்ளைகளாகிய மான் கன்றுகள் வந்து தாய் தகப்பனில்லாது நாங்கள் உயிர் வாழ முடியாது. எனவே அவர்களை விட்டுவிட்டு எங்களைக் கொல்லுங்கள் என்று கூறின. வேடன் என்ன செய்வதென்று அறியாமல் திகைத்தான். அந்த நேரத்தில் அவனையும் அறியாமல் செய்த சிவராத்திரி மூன்று கால பூஜையால் சிவன் வெளிப்பட்டு அவன் குற்றங்களை எல்லாம் மன்னித்து இந்த விநாடி முதல் உன்னுடைய பெயர் குகன் என்று வழங்கட்டும். ஸ்ரீராமன் இங்கு வரும்பொழுது அவனுக்குத் தோழனாக நீ இருப்பாய் என்று கூறி மறைந்தார்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
சந்திரசேகரன்

முன்னொரு காலத்தில் பார்வதி சிவனைப் பார்த்து உங்கள் நெற்றியில் இருக்கும் சந்திரன் எப்படி அங்கே வந்தான் என்று எனக்குச் சொல்ல முடியுமா என்று வினவினாள். உடனே சிவன் அந்தக் கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.

பார்வதி முற்பிறப்பில் சதி என்ற பெயருடன் தட்சனின் மகளாகப் பிறந்திருந்தார். தட்சன் யாகத்திற்குச் சென்ற சதி அவனால் அவமானப்படுத்தப்பட்டு அங்கேயே உயிரை நீத்தார். சதியை இழந்த சிவன் இங்குமங்குமாக அலைந்தார். அங்கு கடுமையான தவம் மேற்கொண்டார். அவருடைய கடுமையான தவத்தினால் மரம், செடி, கொடிகள் ஆகிய அனைத்தும் எரிந்து சாம்பலாயின. மலைகளும் இதில் அடங்கும். தேவர்கள் எல்லாம் கூடி பிரம்மனிடம் இந்நிலையை எடுத்துக் கூறினர். பிரம்மன் சந்திரனை அமுத கலசத்திற்குள் போட்டு, அந்தக் கலசத்தையும், வேறொரு கலசத்தில் விஷத்தையும் நிரப்பிக் கொண்டு சிவனிடம் சென்றார்கள். சிவனிடம் இந்த இரண்டு கலசங்களிலும் இன்னதென்று சொல்லாமல் இந்த இரண்டு கலசங்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றார். சிவன் முதலில் அமுத கலசத்தை எடுத்துக் குடித்தார். அதனுள் இருந்த சந்திரன் திடீரென்று சிவனுடைய நெற்றியில் ஒட்டிக் கொண்டு அவரைக் குளிர்ச்சியடையச் செய்தான். விஷக் கலசத்தில் ஒரு விரலை நனைத்துச் சிவன் தொண்டையில் தொட்டார். உடனே அந்த இடம் நீல நிறமாக மாறி விட்டது. அதிலிருந்து சிவனுக்கு நீலகண்டன் என்று பெயர் வந்தது. நெற்றியில் ஒட்டிய சந்திரன் ஒர் அணியைப் போல இருப்பதால் சிவனுக்குச் சந்திரசேகரன் என்ற பெயர் ஏற்பட்டது.

சிவன் அணியும் விபூதி

ஒரு காலத்தில் பிருகுவின் பரம்பரையில் வந்த பிராமணர் மிகக் கடுமையான ஒரு தவத்தை மேற்கொண்டார். அவர் தவ வலிமையால் சுற்றிலும் உஷ்ணம் பரவியது. அதன்மேல் மேகம் மழையைப் பொழிந்தது. இந்த உஷ்ணமோ, நீரின் குளிர்ச்சியோ அந்த பிராமணனை ஒன்றும் செய்யவில்லை. தவம் தொடர்ந்தது. கொடிய விலங்குகளில் இருந்து மான் வரை அவரிடம் அச்சமின்றி அன்போடு பழகின. பசி எடுக்கும்போது பிராமணன் அந்த விலங்குகளைப் பார்த்து, "சாப்பிட ஏதாவது கொண்டு வாருங்கள்” என்று சொல்ல, உடனே அந்த மிருகங்கள் அவனுக்குத் தேவையான மாமிசத் தைக் கொண்டு வந்து கொடுத்தன. தவம் மேலும் தொடரவே, மாமிசம் சாப்பிடுவதை விட்டு விட்டுப் பச்சை இலைகளைச் சாப்பிடத் தொடங்கினார். பச்சை இலைகளுக்கு வடமொழியில் ‘பர்னா’ என்று பெயர். ஆதலால், அதைத் தின்னும் பிராமணர் ‘பிரன்னதா’ என்று அழைக்கப்பட்டார். மேலும் தவம் தொடர்ந்தது. ஒரு நாள் பிராமணத் தவசி புல்லறுக்கும் கத்தியைக் கொண்டு புற்களை வெட்டிக் கொண்டிருந்தான். அப்போது அந்தக் கத்தி அவர் நடுவிரலை வெட்டி விட்டது. என்ன அதிசயம்? இரத்தம் வருவதற்குப் பதிலாக வெட்டுண்ட விரலில் இருந்து செடி, மரம் முதலிய வற்றிற்கு உள்ளே இருக்கும் தாவர உயிர்ச்சாறு போன்ற ஒரு திரவம் காயத்தின் வழியே கசியத் துவங்கியது. பிராமணர் தான் மிகப் பெரிய நிலையை அடையத் துவங்கி விட்டதாகவும், இரத்தத்திற்குப் பதிலாக தாவர உயிர்ச்சாறு தன் உடம்பில் ஒடுகிறது என்றும் குதிக்கத் தொடங்கிவிட்டார். இதைப் பார்த்த சிவன் இவனுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்று கருதி பிராமணன் வடிவம் கொண்டு இந்தப் பார்ப்பனன் எதிரே வந்தார். இவனைப் பார்த்து, “என்ன ஆனந்தம் உனக்கு? ஏன் இப்படித் துள்ளித் துள்ளிக் குதிக்கிறாய்?" என்று கேட்டார். பிராமணத் தவசி நடந்தவற்றைக் கூறித் தவத்தின் உச்ச கட்டத்தை அடைந்துவிட்டேன். அதனால்தான் குதிக்கிறேன்" என்றான். இதைக்கேட்ட பிராமண சிவன், "பூ! இவ்வளவு தானா? இன்னும் உன்னுடைய உடம்பில் நீர்ச்சத்துதானே இருக்கிறது. என்னுடைய உடம்பைப் பார்!’ என்று கூறிவிட்டுத் தன்னுடைய விரலை வெட்டிக் கொண்டார். அதிலிருந்து விபூதி பொலபொலவெனக் கொட்டியது. பிராமணன் அகந்தை அடங்கியது. அதிலிருந்து சிவன் மேனி எல்லாம் விபூதி விளங்கத் தொடங்கியது.


கெளரியின் கதை

பார்வதி நீல நிறத்தோடு இருந்ததால் சிவன் அவளைக் காளி என்றே அழைத்தார். பார்வதிக்கு இது பிடிக்கவில்லை. ஏன் நான் கறுப்பாக இருக்கிறேன் என்று சுட்டிக் காட்டுகிறீர்கள். என்னை விரும்புவது போல் பாசாங்கு செய்து ஏன் என்னைக் கல்யாணம் செய்து கொண்டீர்கள்? இந்த நிறம் எனக்குப் பிடிக்கவில்லை. நான் பிரம்மனை நோக்கித் தவம் செய்து இந்த நிறத்தை மாற்றிக் கொள்கிறேன் என்று சொல்லி விட்டு பிரம்மனை நோக்கித் தவம் செய்தாள். பிரம்மன் எதிர்ப்பட்டு, “என்ன வேண்டும்?” என்று கேட்டபொழுது, இந்த நீல (கறுப்பு) நிறத்தை ஒழித்துவிட்டு நான் கெளரியாக வேண்டும் என்று கூறினார். பிரம்மன் வருவதற்கு முன்பே பார்வதியின் எதிரே ஒரு கொடிய புலி அவளை உண்ண வேண்டும் என்ற எண்ணத்துடன் அவள் எதிரே படுத்திருந்தது. தன்னிடம் அன்பு பாராட்டுகிறது என்று நினைத்து மகிழ்ச்சி அடைந்த பார்வதி புலியின் உடம்பினுள் பிரவேசித்தாள். அவளுடைய சக்தி உள்ளே புகுந்ததால் புலி மிகச் சாதுவான பிராணியாக மாறி அவளுடனேயே இருந்து விட்டது. பிரம்மன் பார்வதியைப் பார்த்து, “நீ விரும்பியதை அடைவாய்” என்று கூறியவுடன் பார்வதியின் மேனியிலிருந்து கறுப்பு நிறம் முழுவதும் கீழே உதிர்ந்து விட்டது. அக் கறுப்பை எல்லாம் ஒன்றாகத் திரட்டி பிரம்மன் எடுத்துக் கொண்டான். அவன் வேண்டியதும் அதுதான். காரணம் வருமாறு: இரண்டு அரக்கர்கள்- கம்பன், நிசும்பன் என்ற இரு அரக்கர்கள் பிரம்மனை நோக்கிக் கடுந்தவம் புரிந்து, பிரம்மன் எதிர்ப்பட்ட வுடன் எந்த ஆண் மகனும் தங்களைக் கொல்ல முடியாத வரத்தைப் பெற்றனர். அதன்பிறகு அவர்கள் செய்த கொடுமைக்கு அளவே இல்லை. பிரம்மன் சிவபெருமானிடம் சென்று, நடந்தவற்றைக் கூறிப் பார்வதியின் ஆற்றலின் ஒரு பகுதியைப் பெண்ணாக்கித் தந்தால் சும்ப, நிசும்பர்களை அழிக்க முடியும் என்று வேண்டிக் கொண்டார். பிரம்மனின் இவ் வேண்டுகோளுக்கு இணங்கவே பார்வதியைத் தவம் செய்யுமாறு அனுப்பினார் சிவன். கீழே விழுந்த கறுப்பை யெல்லாம் ஒன்றாகத் திரட்டி கெளசிகி என்ற பெயருடன், பிரம்மனிடம் ஒப்படைத்தார். பார்வதியின் அம்சமாக அவள் இருந்தாள். அவளைக் கொண்டே சும்ப, நிசும்பர்களை அழிக்கச் செய்தான் பிரம்மன். கெளரியாக மாறியவள் புலியையும் அழைத்துக் கொண்டு சிவனிடம் சென்றாள். அப்புலியை ஒர் ஆணாக மாற்றி நந்திக்குத் துணையாக சோமநந்தி என்ற பெயருடன் இருக்கச் செய்தார் சிவன்.

உபமன்யுவின் கதை

முன்னொரு காலத்தில் வியாக்ர பாதர் (புலிக்கால் முனிவர்) என்ற முனிவருக்கு உபமன்யு என்ற ஒர் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை வளர்ந்த பொழுது தனக்குப் பால் வேண்டும் என்று அழுதது. உபமன்யுவின் தாய் பால் போன்ற ஒரு பொருளைக் கொடுத்தாள். குழந்தை அதைச் சாப்பிட்டுப் பார்த்துத் தந்தையிடம் சென்று இது பாலில்லை. பாலின் ருசி இதிலில்லை என்று அடம் பிடித்தது. அப்போது உபமன்யுவின் தாய் 'நானோ வறுமையில் வாடுகிறேன். பாலுக்கு எங்கே போவது? நான் அரிசிக் கஞ்சிதான் உனக்குத் தந்தேன்' என்றார். உடமன்யு சிவனை நோக்கித் தவம் செய்து பாலைப் பெறப் போகிறேன் என்றார். அவன் தாய் சிவனைக் குறித்துத் தவம் செய்ய ஒரு மந்திரத்தையும், ஆபத்து நேர்ந்தால் காத்துக் கொள்ள அகோராஸ்திர மந்திரத்தையும் சொல்லிக் கொடுத்து அனுப்பினாள். இமயமலையில் ஒரு பகுதிக்குள் சென்று உபமன்யு தவத்தைத் தொடங்கினான். அரக்கர்களும், அசுரர்களும் எவ்வளவு முயன்றும் அவன் தவத்தைக் கலைக்க முடியவில்லை. இறுதியில் அவனைச் சோதனை செய்வதற்காகச் சிவன், இந்திரன் வடிவம் எடுத்துக் கொண்டு அவன் முன் தோன்றினார். உடமன்யு கண்விழித்துப் பார்த்து, தேவர்கள் தலைவனே! என்னை நாடி வந்ததில் பெருமகிழ்ச்சி என்றான். தேவேந்திரனாக வந்தவர், உனக்கு என்ன வேண்டும்? யாரைக் குறித்து நீ கடுந்தவம் செய்கிறாய்?" என்று கேட்டார். உடமன்யு சிவபெருமானைக் குறித்துத் தவம் செய்கிறேன் என்றான். அதைக்கேட்ட இந்திரன், சிவபிரானா, அவன் ஒன்றுக்கும் உபயோகமில்லாத பயித்தியம், அவனைக் குறித்து ஏன் தவம் செய்ய வேண்டும்? என்றார். அவர் சிவன் என்று அறியாத உடமன்யு மிக்க கொடியதாகிய அகோராஸ்திர மந்திரத்தைப் பயன்படுத்திவிட்டான். அது சிவனுடைய அஸ்திரம் ஆதலால் உடன் வந்த நந்தி அதை ஏற்றுக் கொண்டார். சிவன் தன் வடிவத்தைக் காட்டிப் பல மந்திரங் களையும் உபதேசித்துப் பாலுக்குப் பஞ்சமில்லாமல் இருக்கும் வரத்தையும் தந்தார்.

நீண்ட காலம் கழித்து கிருஷ்ணன் உபமன்யுவைப் பார்க்க வந்தார். உபமன்யு சிவனைக் குறித்த பல ரகசியமான மந்திரங்களையும் கிருஷ்ணனுக்கு உபதேசித்தார்.

அந்தகாசுரன் கதை

முன்னொரு காலத்தில் சிவன் தனியே அமர்ந்து எதையோ பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்குத் தெரியாமல் மெதுவாகப் பின்புறமாக வந்த பார்வதி அவருடைய இரண்டு கண்களையும் பொத்தி விட்டாள். சிவனின் கண்ணைப் பொத்தியதால் பார்வதியின் உடம்பில் ஏற்பட்ட உஷ்ணத்தால் வியர்வைத் துளிகள் கீழே விழுந்தன. அந்த வியர்வைத் துளிகள் எல்லாம் ஒன்றாகக் கூடி அரக்கனாக உருவாகிக் கூப்பாடு போட்டது. சிவன் கண்களை விடுவித்துக் கொண்டு 'யார் உறுமியது? என்று கேட்டார். கரிய அரக்கன் ஒருவன் கண்கள் இல்லாமல் இங்கும் அங்கும் அலைந்தான். சிவனுடைய கண்கள் பொத்தப்பட்ட நிலையில், இந்த அரக்கன் பிறந்ததால், அந்தகனாகவே (குருடனாகவே) இருந்தான். அவனுக்கு அந்தகாசுரன் என்ற பெயர் நிலைத்துவிட்டது.

ஹிரண்ய நேத்திரன் என்ற அரசன் தனக்கொரு பிள்ளை வேண்டுமென்று சிவனைக் குறித்துக் கடும் தவம் இயற்றி னான். சிவன் தோன்றி, "உனக்கென்று பிள்ளை பிறக்கும் பாக்கியமில்லை. எனவே நான் அவ்வரத்தைத் தரமுடியாது. என்றாலும், அந்தகனாகப் பிறந்த அசுரன் என்னிடம் இருக்கிறான். அவனை வேண்டுமானால் நீ பிள்ளையாக எடுத்துக் கொண்டு வளர்க்கலாம்” என்று சொன்னார்.

ஹிரண்ய நேத்திரன் மிக்க மகிழ்ச்சியோடு அந்தகாசுரனை எடுத்து வளர்த்தான். ஹிரண்ய நேத்திரன் சிவனைக் குறித்துப் பெரும் தவம் செய்து யாராலும் வெல்ல முடியாத வரங்களைப் பெற்று தேவருலகை வென்று, தேவர்களை அங்கிருந்து விரட்டி விட்டான். கடைசியில் பூமியையே சுருட்டிக் கொண்டு சென்று கடலுக்கடியில் வைத்து விட்டான். தேவர்கள் விஷ்ணுவிடம் முறையிட, விஷ்ணு வராக அவதாரம் எடுத்து கடலுக்கடியில் சென்று அவனைத் தன் கொம்பினர்ல் குத்திக் கொன்று விட்டு பூமியைத் தன் கொம்புகளுக்கு இடையே வைத்து மேலே கொண்டு வந்து அது இருக்க வேண்டிய இடத்தில் வைத்து விட்டார். பிறகு ஹிரண்ய நேத்திரன் மகனாகிய அந்தகாசுரனை அரசனாக்கி விட்டார்.

இது நிகழ்ந்த பிறகு ஹிரண்ய நேத்திரன் தம்பியாகிய ஹிரண்ய கசிபு பெரு வரங்களைப் பெற்றுத் தன்னை யாரும் கொல்லமுடியாத சக்தி பெற்றதால், தேவர்கள் எல்லாம் ஒடும்படி செய்து விட்டான். தேவர்கள் விஷ்ணுவிடம் முறையிட, அவர் சிங்க வடிவம் கொண்டு பல அரக்கர்களைக் கொன்று தீர்த்தார். இறுதியாக அந்த சிம்மம் ஹிரண்யகசிபு கோட்டைக்குள் நுழைந்தது. ஹிரண்ய கசிபுவின் பல மைந்தர்களுள் பிரகலாதன் என்று ஒருவன் இருந்தான். புத்திசாலியாகிய அவன், ஒரு சாதாரண சிங்கம் இவ்வளவு பெரிய அழிவினைச் செய்ய முடியாது, ஆகவே விஷ்ணுதான் இப்படி ஒரு சிங்க வடிவுடன் வந்திருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டான். தன் தந்தையிடம் சென்று சிங்கம் என்பது விஷ்ணுதான் என்றும், அதனிடம் போர் புரியப் போக வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். ஆனால் அவன் எல்லாம் சிங்கத்திடம் போர் புரிய அனுப்பினார். அவர்கள் அனைவரும் மாண்டனர். கடைசியாகத் தானே சென்று தன்னிடமுள்ள அத்தனை அஸ்திரங்களையும் பயன்படுத்திப் பார்த்தான். அவனுடைய ஆயுதங்கள் அந்த சிங்கத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை. இறுதியாகச் சிங்கம் தன்னுடைய நகங்களால் அவனுடைய இருதயத்தைப் பிளந்து கொன்றது. கடைசியில் விஷ்ணு பிரகலாதனுக்குப் பட்டம் சூட்டினான்.
அந்தகாசுரன் சிம்மாசனத்தில் இருக்கும் போது அங்கு வந்த பிரகலாதன் நீயோ குருடன், பெரிய தந்தையார் உன்னைத் தத்து எடுத்துக் கொண்டதே தவறு. குருடனாகிய நீ எப்படி ஆட்சி செய்ய முடியும். ஆகவே உன் ராஜ்ஜியத்தை என்னிடம் கொடுத்துவிடு என்று சொல்லியதோடு அல்லாமல் அந்தகனை விரட்டிவிட்டான். அந்தகன் காடு சென்று பிரம்மனைக் குறித்துத் தவம் செய்தான். பிரம்மன் எதிர்ப்படவில்லை. அக்கினியை வளர்த்துத் தன் உடம்பில் உள்ள சதைகளை யெல்லாம் வெட்டி பலியிட்டான். கடைசியாக பிரம்மன் வெளிப்பட்டு, உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். விலங்குகள், அரக்கர்கள், அசுரர்கள், மனிதர்கள், தேவர்கள் ஆகிய யாராலும் எனக்குச் சாவு வரக் கூடாது. விஷ்ணுகூட என்னைக் கொல்ல முடியாத வரம் வேண்டும் என்று கேட்டான். பிறந்தவர்கள் இறந்தே தீர வேண்டும். உனக்கு எப்படி சாவு வேண்டும் என்பதை நீயே முடிவு செய்து சொல் என்றார் பிரம்மா. அந்தகன், ‘என்னைவிட மூத்த பெண் ஒருத்தியிடம் நான் விருப்பம் கொள்வேனானால் அப்போது எனக்குச் சாவு வரலாம்’ என்று கேட்டுக் கொண்டான். அப்படியே ஆகட்டும் என்று பிரம்மன் வரம் தந்தார்.

தவத்தால் கண்பார்வை பெற்றுவிட்ட அந்தகன் மூன்று உலகங்களையும் அடிமைப்படுத்தினான். அனைவரையும் துன்புறுத்தினான். சிலகாலம் கழித்து மந்தார மலைக்குத் தனது மூன்று சேனாதிபதிகளுடன் சென்றான். அந்த மலை மிக அழகாக இருந்ததால் அங்கேயே தங்கிவிட விரும்பினான். அவனுடைய சேனாதிபதிகள் அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்து வரும்பொழுது ஒரு குகையில் ஒரு முனிவர் தவம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்தனர். அந்த முனிவன் புலித் தோலை இடையில் கட்டி, மண்டை ஒடுகளை மாலையாக அணிந்திருந்தான். அவனுடைய சடையில் சந்திரன் இருந்தான். அவன் பக்கத்தில் அழகான பெண் ஒருத்தி வீற்றிருந்தாள். இதைக் கண்ட சேனாதிபதிகள் யோகத்தில் இருந்த முனிவனை எழுப்பி, "துறவியாகிய உனக்கு இவ்வளவு அழகான பெண் எதற்காக? எங்களுடைய அரசனுக்கு இவளைக் கொடுத்துவிடு” என்றனர். முனிவர் வேடத்தில் இருந்த சிவன் "அப்படியானால் உங்கள் அரசனே இங்கு வந்து அவளைப் பார்த்துவிட்டு அழைத்துச் செல்லட்டுமே” என்றார். முனிவர் வேடத்தில் இருந்தவர் யார் என்பதையும், அழகிய பெண் யாரென்பதையும் அறியாத அவர்கள் ஒடிச் சென்று முனிவன் சொன்னதை அந்தகனிடம் சொல்லவும், மிக்க ஆசையோடு புறப்பட்டு வந்தான் அந்தகன். வயதில் முதிர்ந்தவளை நான் விரும்பினால் எனக்குச் சாவு வரட்டும் என்று பிரம்மனிடம் கேட்டுக் கொண்டது நடைபெறும் காலம் வந்து விட்டது. அனைத்திற்கும் மூத்தவளாகிய பார்வதிதேவியை விரும்பியதால் முனிவர் வேடத்தில் இருந்த சிவன் எதிரே வந்து நின்றார். அவனுக்குப் பக்கபலமாகப் பல அசுரர்களும் அவர்கள் குருவாகிய சுக்ராச்சாரியாரும் வந்தனர். முனிவன் பக்கமாக நந்தி, விஷ்ணு ஆகியோர் போருக்குத் தயாரா னார்கள். நந்தியே பல அசுரர்களை அழித்தார். அந்தகனின் சேனாதிபதிகளுள் ஒருவனாகிய விகாசா என்பவன் விஷ்ணு உட்பட அனைவரையும் விழுங்கிவிட்டான். இந்நிலையில் சிவன் காளை வடிவம் கொண்டு வந்து விகாசாவின் வயிற்றைக் கிழித்து அனைவரையும் விடுவித்தார். அசுரர் படைகளைக் கொல்லக் கொல்ல, இறந்தவர்களை எழுப்பும் மந்திரங்களைக் கற்ற சுக்ராச்சாரியார் அத்துணை அசுரர்களையும் மறுபடியும் உயிர்ப்பித்தார். இதைக் கண்ட சிவன் சுக்ராச்சாரியாரை விழுங்கியவுடன் இறந்தவர் உயிர்பெறும் சூழ்நிலை மாறிவிட்டது. இந்திரனுடைய பாணங்கள், விஷ்ணுவின் கதாயுதம் ஆகியவை இவனை ஒன்றும் செய்யாமல் போகவே, சிவன் படைகளை அந்தகன் மீது ஏவினார். அவனது ஒவ்வொரு சொட்டு ரத்தமும் கீழே விழுந்தவுடன் ஒவ்வொன்றும் ஒரு அந்தகனாக உருவாயிற்று. அப்பொழுது சிவன் காளியைப் படைத்து அந்தகாசுரனின் இரத்தம் ஒரு சொட்டுக் கூடக் கீழே விழாதபடி குடிக்கச் செய்தான். இந்த நிலையில் சிவன் தன்னுடைய திரிசூலத்தை அந்தகாசுரன் மேல் செலுத்தி அவனைக் கொன்றார். போருக்குப்பின் சுக்ராச்சாரியாரைத் தன் வயிற்றில் இருந்து எடுத்துச் சிவன் வெளியே விட்டு விட்டார்.

ருருவின் கதை

முன்னொரு காலத்தில் ருரு என்றொரு அரக்கன் இருந்தான். அவன் தற்செயலாக ஒருமுறை பார்வதியைப் பார்த்துவிட்டு அவளையே தான் மணம் புரிய வேண்டும் என்று கடுந்தவம் இயற்றினான். தவத்தின் முடிவில் வந்த பிரம்மன், உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். ருரு, ‘நான் பார்வதியை மணந்து கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்றார். 'இது என்னால் முடியக் கூடிய காரியம் அன்று என்று பிரம்மன் போய் விட்டார். ருருவின் தவம் தொடர்ந்தது. அந்தத் தவத்தின் கடுமையில் வெளிப்பட்ட உஷ்ணம் சுற்று வட்டாரம் முழுவதையும் எரித்தது. ருரு தங்கியிருந்த மலையம் என்ற மலையும் எரியத் துவங்கியது. அந்தச் சூடு மேருவைத் தாக்கவே சிவனும் பார்வதியும் கூட ஒட வேண்டியதாயிற்று. அப்போது பார்வதி சிவனைப் பார்த்து, நாம் ஏன் ஒடுகிறோம் என்று கேட்டாள். சிவன், ருரு என்ற அசுரன் உன்னை மணந்து கொள்வதற்காகக் கடுந்தவம் புரிகிறான். அதன் விளைவுதான் இது என்று கூறிய வுடன் பார்வதி உடனே இதற்கு ஏதாவது செய்யுங்கள் என்றாள். அதைக்கேட்ட சிவன், பார்வதி! இது உன் சம்பந்தமான விஷயம். நீதான் ஏதாவது செய்ய வேண்டும்' என்று கூறியவுடன் பார்வதி சுற்றுமுற்றும் பார்த்தாள். ஒரு சிங்கமும் யானையும் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. சிங்கத்தைக் கொன்று அதன் தோலைப் போர்த்திக் கொண்டாள். சிங்கத்தின் குருதி வடிந்ததால் தலையும், முடியும் ரத்தத்தால் சிவந்தது. இந்த வடிவுடன் பார்வதி ருருவிடம் சென்று, ருரு! என்னை மணக்க வேண்டும் என்று தானே தவம் செய்கிறாய். இதோ நான் வந்து விட்டேன். என்ன செய்யப் போகிறாய் என்று கேட்க, ருரு கண்ணை விழித்துப் பார்த்தான். “நீ யார் என்று எனக்குத் தெரியாது. மகா கோர சொரூபியாய் இருக்கிறாய். பார்வதியின் சந்திரபிம்ப முகமும், தாமரை போன்ற கைகளும் கால்களும் உனக்கில்லை. உன் உருவத்தை நீயே பார்த்துக் கொண்டால் உன் சொரூபம் தெரியும்” என்று கூறிவிட்டுப் பார்வதியை கதாயுதத்தால் சாடினான்.

சினம் கொண்ட பார்வதி ருரு எறிந்த பல்வேறு ஆயுதங்களையும் தடுத்து விட்டுத் தன் பல்லாலும், கையாலும் அவனைக் கொல்ல முயன்றாள். இப்பொழுது ருருவின் உடலிலிருந்து பல்வேறு உருவங்கள் தோன்றின. பார்வதி தன் அம்சமான பல சக்திகளைப் படைத்தாள். அந்தச் சக்திகள் ருருவின் வடிவிலிருந்த பல்வேறு அசுரர்களைத் தின்று தீர்த்தன. பயந்த ருரு, பூலோகம், சொர்க்க லோகம், பாதாள லோகம் ஆகிய இடங்களுக்கு ஓடினான். பார்வதி அவனை எல்லா இடங்களிலும் துரத்தி வரவே ருரு ஒன்றும் செய்ய முடியாமல் நின்று விட்டான். பார்வதி அவன் உடலைக் கிழித்து அவன் தோலைப் போர்த்திக் கொண்டு வந்து நின்றாள். சிவனிடம் வந்த பார்வதி தான் அணிந்திருந்த சிங்கத்தோலைச் சிவனிடம் கொடுத்து விட்டு, ருருவின் தோலைத் தான் அணிந்து கொண்டாள்.

யமன் சொல்லிய கதை

ஒரு முறை பிரம்மாவின் மகனாகிய சனத்குமாரர் யமனைக் கண்டு பேசிவிட்டுப் போக வந்தார். அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது பொன்னிறமான விமானத்தில் ஒருவர் வந்தார். உடனே யமன் எழுந்து மிக்க மரியாதையுடன் அவரைக் குசலம் விசாரித்து, பிரம்ம லோகத்தில் உங்கள் இடம் தயாராக உள்ளது. நீங்கள் அங்கே போகலாம் என்று வழியனுப்பிவிட்டு, உட்கார்ந்து பேசத் தொடங்கவும், மற்றொரு விமானத்தில் இன்னொருவர் வந்து சேர்ந்தார். மறுபடியும் யமன் சகல மரியாதையுடன் வரவேற்று பிரம்ம லோகம் அனுப்பினான். இதைக் கண்டு ஆச்சரியப்பட்ட சனத்குமாரர், 'யமனே! உன்னைக் கண்டு எல்லோரும் அஞ்சுகிறார்கள். உன்னிடம் வந்த இவர்களுக்கு இவ்வளவு மரியாதை செய்தது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. இவர்கள் யார்?' என்று கேட்டார். வைதிஷா என்ற நகரை தாரபாலா என்ற அரசன் ஆண்டு வந்தான். இவன் நாட்டில் ஒடும் விதஸ்தா என்ற நதியும், வேத்ரவதியும் ******* ஆகும் இடத்தில் ஒரு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து, ஒரு நரி பூசை செய்து வந்தது. கைலையில் பார்வதி தவம் செய்யச் சென்ற பொழுது சிவனிடம் வேறு யாரும் தன்னைப் போல் வேஷமிட்டு நெருங்கிவிடாதபடி பார்த்துக் கொள்ளுமாறு ஏவிவிட்டுப் பார்வதி சென்று விட்டாள். அதி என்ற அசுரன் பார்வதியின் வடிவை ஏற்றுக் கொண்டு சிவனிடம் வந்தான். உண்மையான பார்வதிக்கும் போலிப் பார்வதிக்கும் வேறுபாடு தெரியாத நந்தி இந்த அசுரனை உள்ளே விட்டு விட்டார். நந்தி தன் கடமைகளைச் சரியாகச் செய்யாததால் 12 ஆண்டுகள் பூமியில் நரியாகப் பிறக்குமாறு பார்வதி சாபமிட்டார். அந்தச் சாபத்தால் நரியான நந்தி இப்பொழுது சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து சிவபூசை செய்து வந்தது. அந்த நரியின் செயலை அடிக்கடி பார்த்து வந்த அரசன் தாரபாலா சாப முடிவில், நரி ஜோதி வடிவுடன் சிவனிடம் செல்வதைப் பார்த்தான். சிவபூசை சிறப்பை அறிந்த தாரபாலா, தானும் தீவிரமாக சிவபூசை செய்ய ஒரு கோயிலைக் கட்டி அங்கே புராணப் பிரசங்கங்கள் நிகழ ஏற்பாடு செய்தான். அந்தப் புண்ணிய பலத்தால் இப்போது பிரம்ம லோகம் செல்கிறான்.

பயங்கரமான உலோபியாக வாழ்ந்தவன், ஒருமுறை புராணப் பிரசங்கத்தைக் கேட்டு முழுவதும் மாறிவிட்டான். பல இடங்களில் பலரை ஏற்பாடு செய்து ஆங்காங்கே புராணப் பிரசங்கங்கள் நடக்குமாறு செய்தான். தன் செல்வத்தை எல்லாம் அதற்கே செலவிட்டான். புராணத்தைக் கேட்டதாலும், புராணப் பிரசங்கத்தைப் பிறர் கேட்கச் செய்வதாலும் ஏற்பட்ட புண்ணியத்தால் அவன் இப்பொழுது பிரம்ம லோகம் போகிறான். புராணங்களின் பயன் இது. புராணத்தைக் கேட்பது பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியவர்களை வழிபடுவது போலாகும் என்று கதையை முடித்தான், யமன்.

சதநிகாவும், சகஸ்ரநிகாவும்

மன்னன் சதநிகா தினந்தோறும் பிராமணர்களுக்கு தானம் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்று நினைத்து நூற்றுக்கணக்கான பொற்காசுகளை தானம் செய்தான். இறுதியில் அவன் இறந்து விடவே மகன் சகஸ்ரநிகா பட்டத்துக்கு வந்தான். அவன் தகப்பனைப் போல தானம் செய்வதை நிறுத்தி விட்டான். வருமானத்தை இழந்த பிராமணர்கள் மன்னனிடம் வந்து உங்கள் தந்தை பிராமணர் களுக்கு தானம் செய்து பெரும் புண்ணியத்தைத் தேடிக் கொண்டார். நீ ஏன் அவ்வாறு செய்யவில்லை என்று கேட்டனர். சகஸ்ரநிகா அவர்களைப் பார்த்து தானத்தைப் பெற்றுக் கொண்டு என் தந்தைக்குப் புண்ணியம் தேடித் தந்தவர்களே. இப்பொழுது என் தந்தை எங்கிருக்கிறார் என்று சொல்ல முடியுமா என்று கேட்டான். அது முடியாது என்று அறிந்த பிராமணர்கள் எப்படியாவது அரசனைத் திருப்திப் படுத்த வேண்டும் என்பதற்காக, பார்க்கவ முனிவரைத் தேடிச் சென்று இறந்த அரசன் எங்கிருக்கிறார் என்பதை அவர் தவ வலிமையால் அறிந்து சொல்லுமாறு கேட்டனர். பார்க்கவ முனிவர் சூரியனின் உதவியை நாடினார். சூரியன் அவரை நரகத்திற்கு அழைத்துச் சென்றான். வழியில் ஒரு பிராமணன் பார்க்கவரைத் தடை செய்தான். நான் இறப்பதற்கு முன்னால் நீர் எனக்கு ஒரு பொற்காசு தரவேண்டியுள்ளது. அதை இப்பொழுது கொடுத்தால் ஒழிய மேலே போக விடமாட்டேன் என்றான். பார்க்கவரிடம் காசு இல்லாததனால் அவர் புண்ணியத்தைச் சிறிது பெற்றுக் கொண்டு மேலே அனுப்பினான். கடைசியாக நரகத்தின் மிக ஆழமான இடத்தில் இறந்து போன அரசன் பெருந் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருந்தான். ஆச்சரியப்பட்ட முனிவர் அரசனைப் பார்த்து, 'நீ பிராமணர்களுக்கு தானம் செய்து பெரும் புண்ணியத்தைச் சேகரித்தாய் என்றல்லவா கேள்விப் பட்டிருந்தேன். உனக்கு ஏன் இந்த கதி? என்று கேட்டார். அரசன், 'உழைக்கும் ஏழை மக்களிடம் வரி என்ற பெயரில் அநியாயமாகப் பணத்தை சம்பாதித்து, புண்ணியம் சம்பாதிக்கலாம் என்ற நம்பிக்கையில் பிராமணர்களுக்குக் கொடுத்தேன். எவ்விதப் புண்ணியமும் எனக்கு வரவில்லை. ஆனால் இந்த வரியைக் கொடுப்பதற்குப் பாடுபட்ட அந்த ஏழை மக்களின் கண்ணீர் பெரிய பாவ மூட்டையாக என்னை வந்து அடைந்தது. அதனுடைய பயனை இப்பொழுது அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்' என்று என் மகனிடம் சொல்லுங்கள் என்றான்.

அதைக்கேட்ட பார்க்கவ முனிவர், நேரே சகஸ்ரநிகாவிடம் வந்து நடந்ததைக் கூறினார். மன்னன் உழைப்பவர்களிடம் கடுமையான வரி வசூலிப்பதையும், பிராமணர்களுக்கு தானம் கொடுப்பதையும் உடனே நிறுத்தி விட்டான். தானும் உழைக்க ஆரம்பித்தான்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top