• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

வாழ்க்கையின் ரகசியம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Divya suge

மண்டலாதிபதி
Joined
Jun 19, 2018
Messages
291
Reaction score
864
Location
Tindivanam
வாழ்க்கை ரகசியத்தை உணர்த்த ஒரு எருமைக் கதை சொல்லவா ?

ஒருநாள் எருமைக்கு அசாத்திய கோபம் வந்தது.
கோபத்தை தீர்த்துக் கொள்ள அது நேரடியாய்ப் போய் நின்ற இடம் கைலாயம்.
கழுத்தில் பாம்பு படமெடுத்து நிற்க தியானத்தில் அமர்ந்திருந்த சிவன் மெல்லக் கண் திறந்தார். வந்திருப்பது எருமை என்று மட்டுமல்ல ஏன் வந்திருக்கிறது என்ற காரணமும் அவருக்குத் தெரியும். ஆயினும் சுற்றியிருக்கும் பூத கணங்களும் தெரிந்து கொள்ளட்டுமே என்ற எண்ணத்தில்,
வந்தாயா எருமையே! வா, வா எப்படி இருக்கிறாய்? என்றார்.
எருமைக்கு கோபம் தீர்ந்தபாடில்லை.
முக்காலமும் உணர்ந்த ஐயனே! நீர் அறியாததா? எனது நலம்?! ஆயினும் நீங்கள் கேட்டதன் பின் பதிலுரைக்காமல் இருத்தல் தகுமோ! அதனால் சொல்லித்தான் தீர வேண்டும்.
எம்பெருமானே! எங்களை ஏன் இப்படிப் படைத்தீர்கள். பூலோகத்தில் மானுடர்கள் எங்களைச் சுத்தமாக மதிப்பதே இல்லை. நாளும் அவர்களது பொல்லாச் சொற்களில் மாட்டிக் கொண்டு அவஸ்தைப் பட்டுக் கொண்டிருக்கிறோம் நாங்கள். சேற்றில் புரளும் எருமைகளே! மந்த புத்தி எருமைகளே! எருமை மாட்டில் மழை பெய்தார் போல, எருமை போல அசையா ஜென்மமே, சூடு, சொரணை இல்லாத எருமைகளே! என்று எப்படியெல்லாம் மானுடர்கள் எங்களைத் திட்டித் தீர்க்கிறார்கள் தெரியுமா? நினைத்தால் கோபத்திலும், ஆத்திரத்திலும் மனம் புழுங்கிச் சாகிறது. நாங்கள் அப்படியென்ன பாவம் செய்தோம்? இப்படி ஒரு பெயர் வாங்க?!
எம்பெருமான் தமக்குள் புன்னகைத்துக் கொண்டவராக எருமையை நோக்கி இப்படிச் சொன்னார்...
என்னைக் கூட சுடுகாட்டில் ஆடுபவன், பிணம் எரித்த சாம்பல் பூசித் திரிபவன், கபால ஓட்டில் பிச்சையெடுப்பவன் என்று மானுடர்களில் பலர் சொல்வதுண்டு என்றார்.
எருமை அவரது பகடியைக் கவனித்தது போலத் தெரியவில்லை.
ஐயனே... உங்கள் அருமை அறியாதவர்கள் கிடக்கிறார்கள் அவர்களை விடுங்கள்... எங்களுக்கு ஆறாத மற்றொரு ரணம் உண்டு. பசுக்களுக்கும், எங்களுக்கும் என்ன பெரிய வித்யாசம்? அவை தரும் பாலும் வெண்மையாகத்தான் இருக்கிறது. நாங்கள் தரும் பாலும் வெண்மையாகத் தான் இருக்கிறது. ஆனால், இந்த மட மானுடர்கள் அவைகளை மட்டும் புனிதம் என்ற பெயரில் போற்றிப் புகழ்கிறார்கள். கோமியத்தைப் பிடித்து வீட்டு மூலை, முடுக்கெல்லாம் தெளித்து பரிமள வாசம் என்று மெச்சிக் கொள்கிறார்கள். ஆனால், எங்களை என்னடாவென்றால் வீட்டுக்குள் நுழையவே விடுவதில்லை. எப்போது பார்த்தாலும் மந்த புத்தி எருமை என்று கரித்துக் கொட்டுகிறார்கள். இதிலிருந்து நாங்கள் விடுபட வேண்டும். நாங்களும் பசுக்களுக்கு இணையாக மதிக்கப்பட வேண்டும். பரம்பொருளான உங்களால் முடியாதது உண்டா?! எங்களை தயவு செய்து பசுக்களுக்கு இணையாக மாற இக்கணமே வரமளியுங்கள்.
- என்று சிவனிடம் கோரிக்கை வைத்தது எருமை.
இதழ்களில் நெளியும் புன்னகையுடன், சாந்த ஸ்வரூபியாக எருமை சொன்னதைச் செவி மடுத்த ஈசன்... அதைக் காத்தருளும் அபய முத்திரையுடன் எருமையை ஆசிர்வதித்து.
எருமையே பிரம்மன் படைப்பில் அனைத்து உயிர்களும் சமமானவையே. ஒன்றில் உயர்வும் பிறிதொன்றில் தாழ்வும் எப்போதும் இல்லை. உன் கோரிக்கை நியாயமானது தான். ஆதலின் அதை நிறைவேற்ற நான் முயற்சிக்கிறேன். அதற்கு முன்பு நீ எனக்கொரு உறுதிமொழி அளிக்க வேண்டும். அளித்தால் நான் உன்னை பசுக்களுக்கு இணையாக மானுடர் மதிக்கும் படியாகச் செய்வேன் என்றார்.
எருமைக்கு ஒரே சந்தோசமாகி விட்டது.
உத்தரவிடுங்கள் எம்பெருமானே... என்றது.
ஈசன் சொன்னார்... பூலோகத்தில் பசுக்களுக்கு இணையாக மதிக்கப்பட வேண்டும் என்ற உனது விருப்பத்தை நான் நிறைவேற்ற வேண்டுமெனில், நீ இன்று முதல் சேற்றில் புரளும் உன் இன்பத்தைக் கைவிட வேண்டும். சொந்த ஆசையிலோ அல்லது சூழ்நிலை காரணமாகவோ கூட நீ இனி எப்போதும் சேற்றில் அமிழ்ந்து புரளக்கூடாது. இந்த உத்தரவாதம் மட்டும் அளித்தாயானால் நாளை முதல் பூலோகத்தில் எருமைகளும், பசுக்களும் ஒரே விதத்தில் மதிக்கப்பட வேண்டும் என்று நான் வரமளிக்கிறேன்' என்றார்.
எம்பெருமானின் கருணையில் முகம் பூரித்தாலும் எருமைக்கு அவர் கேட்ட உத்தரவாதம் நடு மண்டையில் கல்லைத் தூக்கிப் போட்டாற் போலிருந்தது.
அது ஒரு நொடி திகைத்து நின்றது. பின் எம்பெருமானை நோக்கி;
சர்வேஸ்வரா, நீங்கள் கேட்கும் உறுதிமொழியை என்னால் தர இயலாது. மானுடர்களின் மதிப்பு, மரியாதைக்காக என்னால் எனது சிற்றின்பத்தைப் பலி கொடுக்க முடியாது. சேற்றில் புரள்வது எருமைகளான எங்கள் இனத்திற்கு கோடானு கோடி இன்பங்களில் ஒன்று. அதைத் தாரை வார்த்து விட்டு பசுக்களுக்கு இணையாக மதிக்கப்பட்டு நாங்கள் பெறப்போவது ஏதுமில்லை. என் கோபத்தின் மீதே எனக்கிப்போது கோபம் வருகிறது. உங்கள் ஆசி போதும். எனக்கு வரம் ஏதும் வேண்டாம்' என்று சொல்லி புறமுதுகிட்டு ஓடிப் போனது.
நடந்தது அத்தனையையும் கவனித்துக் கொண்டிருந்த நந்தி தேவரும், பூத கணங்களும் எம்பெருமானின் அருகில் அணைந்து;
மகாதேவரே! எருமையின் கோரிக்கையில் தவறென்ன? என்றார்கள்.
ஜடைமுடியில் உச்சிப் பிறைநிலா பளீரென ஒளி விட... மந்தகாசப் புன்னகையுடன் அவர்களை நோக்கிய மகா நீலகண்டர்...
கோரிக்கையில் தவறில்லை நந்தி... அந்தக் கோரிக்கையை அடைவதற்கான முயற்சியில் தான் தடை. எருமை முடிவெடுத்து விட்டது சேற்றில் புரள்வது தான் தனக்கு இன்பம் என. அப்படி இருக்கையில் மானுடர்கள் அதை குளிப்பாட்டி பூஜித்து நடு வீட்டில் கொண்டு வைக்க நினைத்தாலும் அதன் நினைவெல்லாம் சேற்றைத் தேடிக் கண்டடைவதாகத் தான் இருக்கும். நினைவில் எப்போதும் சேற்றைத் தேடும் எருமையை மானுடர் எப்படி பூஜிப்பர்? எருமை சேற்றைக் கைவிட முடியாததோடு தமக்கு நிஜமான இன்பம் மானுடர்களின் மரியாதையில் இல்லை என்பதையும் கண்டு கொண்டது. இது தன்னையறிந்த நிலை. இந்த நிலையை மனிதர்கள் அடைவார்களாயின் அவர்களுக்குள் போட்டி பொறாமை என்பதே இல்லாமல் நீங்கி விடும்.
வாழ்வின் ரகசியம் இது தான்.
ஒவ்வொரு மனிதனும் தன்னைத் தானறிந்து செயல்பட்டால் அதற்குண்டான வெற்றிக்கும், தோல்விக்கும் தானன்றி வேறெவரும் காரணமில்லை என்பதையும் உணர்வார்கள். அதோடு வாழ்வில் எதையாவது சாதிக்க வேண்டுமெனில் எதையாவது தியாகம் செய்தே தீர வேண்டும் என்பது எழுதப்படாத விதி. அந்த தியாகத்தைச் செய்து வாழ்வின் அடுத்த படிக்கு முன்னேற எருமைக்கு மனமில்லை. அதனால் அது தனது வழக்கமான நிலையிலேயே நீடிக்கிறது என்றும் ஈசன் பகர்ந்தார். இனிமேல் அதற்கு தன்னைப் பற்றிய சுயமதிப்பீட்டில் மனக்குறை இருக்காது என்று மென்னகையுடன் நிஷ்டையில் ஆழ்ந்து போனார் மூவுலகையும் பரிபாலிக்கும் எம்பெருமான் ஈசன்..
ஓம் நமச்சிவாய..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top