• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

வாஷிங்டனில் திருமணம் முன்னுரை

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
"வாஷிங்டனில் திருமணம்"
(பூமியின் துயரங்களிலிருந்து மீட்டுச் செல்லும் ஒரு நகைச்சுவை காவியம்)
சாவி (சா.விஸ்வநாதன்)

திரு. சாவி

தமிழறிந்தோருக்கெல்லாம் தெரிந்த பெயர் ‘சாவி’. (சா.விஸ்வநாதன்) வட ஆற்காடின் மாம்பாக்கம் கிராமத்து வைதீக பிராமணக் குடும்பத்தை சேர்ந்த சிறுவன் விசுவுக்குப் பிடித்தமானவை: கேழ்வரகுக் கூழ், மாட்டு வண்டி சாரத்தியம், தொழுவத்தில் நண்பர்களுடன் (நாடகக்) கூத்து நடத்துவது.

காலவெள்ளம் சிறுவயதிலேயே சென்னைப் பத்திரிகைத்துறையில் சேர்த்துவிட, அப்போதே நெருங்கிப் பழகவும், பயிலவும் கிடைத்தவர்கள்: கல்கி, வாசன், ராஜாஜி, காமராஜ், பெரியார், ஜி.டி.நாயுடு, ஆதித்தனார், எம்.ஜி.ஆர். என பல பிரபலங்கள்.

காந்தியுடனும் பழக்கம் கருணாநிதியுடனும் நெருக்கம் என்று தலைமுறை இடைவெளிகளைத் தாண்டி தடம் பதித்திருக்கும் இவரது சொந்த வாழ்வும் / பத்திரிகையுலக அநுபவங்களும் பன்முக சிறப்பு கொண்டவை. அவரின் பரமபக்தராயிருந்தும் காஞ்சி பரமாச்சார்யரிடம், "நீங்கள் சொல்கிறபடி என் பத்திரிகையில் ரிலிஜன் பற்றியெல்லாம் எழுத முடியாது”. மன்னிக்க வேண்டும் என்றவர்; எம்.ஜி.ஆர். ("சோ" பற்றி) எழுதிய பகுதிகளை பிரசுரிக்க மறுத்தவர்; தமிழ் எழுத்தாளர்களுக்கு சஞ்சிகைகளில் சன்மானத் தொகை உயர காரணமாயிருந்தவர்; இன்றைக்கு சென்னையில் ஒரு "லேண்ட் மார்க் "காக இருக்கும் பனகல் பார்க் மார்க்கெட் ஸ்தாபிதமாக காரணமானவர் என்று பட்டியலை நீட்டிப் போகலாம்.

1942-இல் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத் தில் ஈடுபட்டு சிறை சென்ற அந்நாளிலிருந்து 2000-ஆம் ஆண்டின் இன்றுவரை அவரது சரிதம் தமிழ்ப் பத்திரிகை உலகில் ஓர் சகாப்தம்தான்.

--- நர்மதா ராமலிங்கம்​

******

பொருளடக்கம்

அத்தியாயம் -1 வா
அத்தியாயம் -2 ஷி
அத்தியாயம் - 3 ங்
அத்தியாயம் - 4 ட
அத்தியாயம் - 5 னி
அத்தியாயம் - 6 ல்
அத்தியாயம் -7 தி
அத்தியாயம் - 8 ரு
அத்தியாயம் - 9 ம
அத்தியாயம் - 10 ண
அத்தியாயம் - 11 ம்
--------------


முன்னுரை


இருபத்து இரண்டு வருடங்களுக்கு முன் நானும் நண்பர்கள் சிலரும் திருவையாற்றில் நடைபெற்ற தியாகய்யர் உற்சவத்துக்குப் போயிருந்தோம். காவிரிப் படித்துறையில் இறங்கி ஸ்நானம் செய்து கொண்டிருந்தபோது, நாலைந்து வெள்ளைக்காரர்கள் தண்ணீரில் இறங்கி முகம் கழுவிக் கொண்டிருப்பதைக் கண்டோம்.

தென்னையும், வாழையும் மண்டிய காவிரிக் கரைச் சூழ்நிலையில், சட்டை களைந்த சங்கீதக்காரர்களுக்கும், விபூதி பூசிய ரசிகர்களுக்குமிடையே அந்த வெள்ளைக் காரர்கள் சற்றும் பொருத்தமில்லாதவர்களாய்க் காணப் பட்டனர். சிறிது நேரம் அவர்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

"என்ன பார்க்கிறீர்கள்?" என்று கேட்டனர் நண்பர்கள்.

"இந்த இடத்தில் இவர்களைக் காணும்போது விசித்திரமாயிருக்கிறது" என்றேன்.

"நம்முடைய கர்நாடக சங்கீதத்தின் பெருமை அத்தகையது. வெளிநாட்டுக்காரர்களையும் கவர்ந்திழுக்கும் சக்தி வாய்ந்தது!" என்றார் நண்பர்களில் ஒருவர்.

"ஒரு வருடம் தியாகய்யர் உற்சவத்தை வெளிநாட்டிலேயே கொண்டு போய் நடத்தினால் எப்படி இருக்கும்?" என்றேன்.

"ரொம்ப வேடிக்கையாகத்தான் இருக்கும். அதுவும் இம்மாதிரி ஒரு நதிக்கரையில் நடத்த வேண்டும். அங்கே தியாகய்யருக்கு ஒரு கோயில் கட்டி அந்தச் சந்நிதியில் அந்த நாட்டவர்களும் நாமும் சேர்ந்து உட்கார்ந்து பஞ்சரத்னக் கீர்த்தனங்கள் பாட வேண்டும்" என்றனர் நண்பர்கள்.

அவ்வளவுதான்; வெறும் வாயை மெல்லும் என் போன்ற எழுத்தாளர்களுக்கு அவல் ஒன்று கிடைத்தால் போதாதா? அதிலிருந்து என் கற்பனையை ஒடவிட்டேன். அது எங்கெல்லாமோ சுற்றி அலைந்தது. என்னென்னவோ எண்ணங்களெல்லாம் உருவெடுக்கத் தொடங்கின. முழு நீள நகைச்சுவைத் தொடர் ஒன்று எழுத வேண்டுமென்று பல ஆண்டுகளாக ஆசைப்பட்டுக் கொண்டிருந்த லட்சியம், கடைசியாகக் காரியத்தில் நிறைவேறப் போகிற காலம் வந்துவிட்டது என்பதை உணர்ந்தபோது உள்ளம் உற்சாகத்தில் மிதந்தது.

அடுத்த கணமே, காவிரிக் கரை, கர்நாடக சங்கீதம் எல்லாம் இரண்டாம் பட்சமாகி விடுகின்றன. தொலைவில் ஷேக் சின்ன மெளலானாவின் நாதஸ்வர இசை ஒலித்துக் கொண்டிருக்கிறது. அந்த ஒலியே என் கற்பனைக்குப் பின்னணியாகவும் அமைந்து விடுகிறது. மறு நிமிடமே மானசீகமாக வெளிநாடுகளுக்குப் பற்க்கிறேன். நான் போகுமிடங்களுக்கெல்லாம் அந்த நாதஸ்வர இசையும் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது.

சிறுகதைகள் எழுதலாம்; தொடர் கதைகள் எழுதலாம். நகைச்சுவை பொருந்திய சிறுசிறு கதைகளும், கட்டுரைகளும் கூட எழுதலாம். பல பேர் எழுதியிருக்கிறார்கள். எழுதி வெற்றியும் கண்டிருக்கிறார்கள், ஆனால் நகைச்சுவையுட்ன் கூடிய நீண்ட தொடர் கதைகளேர், தொடர் கட்டுரைகளோ எழுதுவது அவ்வளவு எளிதல்ல. தமிழில், கல்கியும்,எஸ்.வி.வி.யும் எழுதினார்கள். அவர்களுக்குப் பின்னர் நகைச்சுவையுடன் எழுதுபவர்கள் அரிதாகிவிட்டார்கள்.

முழு நீள நகைச்சுவைத் தொடர் கதை ஒன்று எழுதவேண்டுமென்ற ஆசை வெகு காலமாக என்னில் இருந்து வந்தது. அதற்குரிய திறமையும், காலமும் வரவேண்டாமா?
"எதைப் பற்றி எழுதுவது? எப்படி எழுதுவது?" என்ற கவலையிலேயே காலம் போய்க் கொண்டிருந்தது.

இந்தச் சமயத்தில்தான் வால்ட் டிஸ்னி தயாரித்த ‘ஆப்செண்ட் மைண்டட் புரொஃபஸர்’ என்னும் ஆங்கிலப் படம் சென்னைக்கு வந்தது. அந்த முழு நீள நகைச்சுவைப் படத்தை இருமுறை கண்டு களித்தேன். படம் முழுவதும் சிரித்து ரசிக்கும்படியாக அந்தப் படத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்று யோசித்தேன். விஷயம் அப்படி ஒன்றும் பிரமாதமாக இல்லை. ஒரு புரொஃபஸர் தம்முடைய விஞ்ஞானத் திறமையால் ‘ஃப்ளப்பர்’ (Flubber) என்னும் பறக்கும் ரப்பரைக் கண்டுபிடிக்கிறார். அடுத்தபடியாக, அதை வைத்துக் கொண்டு பறக்கும் மோட்டார் தயாராகிறது. பின்னர், அதற்கு வேண்டிய பலசம்பவங்களைப் புகுத்தி, நகைச்சுவை நிகழ்ச்சிகளாக்கிப் பார்ப்போரைப் பைத்தியமாக அடித்து விடுகிறார். நடக்காத ஒரு விஷயத்தை மிகைப்படுத்திக் கூறி, அதில் தம்முடைய கற்பனையை எப்படி எல்லாமோ ஓடவிட்டிருக்கிறார்!

‘தமிழிலும் இப்படி மிகைப்படுத்திக் கூறக்கூடிய நகைச்சுவைக் கதை ஒன்று எழுத முடியுமா? இம்மாதிரி அதற்கு ஒரு வித்து கிடைக்குமா?’ என்ற ஏக்கம் உண்டாயிற்று. என் ஏக்கம் வீண்போகவில்லை. அந்த வித்து திருவையாற்றில் கிடைத்தது!

‘நம் ஊர்க் கல்யாணம் ஒன்றை வெளிநாட்டில் நடத்தினால் அந்த நாட்டவர்கள் அதை எப்படி ரசிப்பார்கள்?’ திருவையாற்றில் வெள்ளைக்காரர்களைக் கண்டபோது நமக்குக் கிடைத்த வேடிக்கையும், தமாஷும் அமெரிக்காவில் நம் கல்யாணத்தை நடத்துகிறபோது அவர்களுக்கு ஏற்படலாம் என்று தோன்றியது. அந்த எண்ணம்தான் வாஷிங்டனில் திருமணத்துக்கு வித்தாக அமைந்தது.

நம் கல்யாணத்தில் உள்ள விஷயங்களை ஒன்றுவிடாமல் நுணுக்கமாகக் கவனித்துக் கட்டுரைகளாக எழுதினால் அதுவே மிகச் சுவையுள்ள ஒரு கட்டுரைத் தொடராக அமையும். அப்படியிருக்க நம்முடைய கல்யாணமே அமெரிக்காவில் நடப்பதாகக் கற்பனை செய்தபோது அதில் பல வேடிக்கைகளுக்கும், ‘தமாஷ்’களுக்கும் இடமிருப்பதாக ஊகிக்க முடிந்தது.

திருவையாற்றிலிருந்து திரும்பி வருகிறபோது இதே சிந்தனைதான். நம் நாட்டில் ஒரு கல்யாணத்தை நடத்தி முடிப்பதென்றாலே பெரும்பாடு பட வேண்டியிருக்கிறது. ஜாதகப் பொருத்தம், பண விவகாரம், சம்பந்திச் சண்டை போன்ற எத்தனையோ விஷயங்களைச் சமாளிக்க வேண்டியிருக்கின்றது. அமெரிக்காவுக்குப் போய் ஒரு கல்யாணத்தை நடத்தியாக வேண்டுமே என்று நினைத்த போது ஒரு பெரும் கவலை என்னைக் கவ்விக் கொண்டது. உண்மையாகவே கல்யாணம் செய்யப் போகிறவர்களுக்குக் கூட அவ்வளவு கவலை இருந்திருக்காது!

இந்த நகைச்சுவைத் தொடர் ‘ஆனந்த விகட’னில் பதினொறு வாரங்கள் வெளியாயிற்று. வாசகர்கள் இதற்கு அளித்த வரவேற்பு பற்றிச் சொல்லத் தேவையில்லை.

இந்தக் கதையின் வெற்றிக்குப் பாதிக் காரணம் திரு. கோபுலுவின் சித்திரங்கள்தான். உயிருள்ள அவருடைய சித்திரங்கள் வாசகர்களை வாஷிங்டன் நகருக்கே அழைத்துச் சென்று என் கற்பனைக்கெல்லாம் நிஜ உருவம் தந்து நேருக்கு நேர் காண்பது போன்ற பிரமையை ஏற்படுத்தித் தந்தன. அவருக்கு என் நன்றி.
- சாவி
 




Last edited by a moderator:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top