• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

வாஷிங்டனில் திருமணம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 10. ண


காலையிலிருந்தே கல்யாண வீட்டில் பரபரப்பாயிருந்தது. சாஸ்திரிகள் அனைவரும் ஸ்நானத்தை முடித்துவிட்டு கோஷ்டியாக உட்கார்ந்து இட்லி காப்பி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். பெண்டுகள் அலங்காரத்தில் ஈடுபட்டிருந்தனர். பொழுது புலர்ந்த பிறகும் அணைக்கப்படாமல், ஆங்காங்கே நிறுத்தி வைக்கப் பட்டிருந்த காஸ் லைட்டுகள் உஸ்ஸ் என்று சத்தமிட்டுக் கொண்டிருந்தன. - -

"காட்டன் ஸாரை எங்கே காணோம்?" என்று கேட்டார் அம்மாஞ்சி.

"ஹாலிவுட்டிலிருந்து சினிமா ஸ்டார்ஸெல்லாம் வருகிறார்களாம். ஏர்போர்ட் போயிருக்கிறார்" என்றார் அய்யாசாமி.

அந்தச் சேதியைக் கேள்விப்பட்ட அம்மாஞ்சி வாத்தியார், "அடாடா தெரிந்திருந்தால் நானும் ஏர்போர்ட்டுக்குப் போயிருப்பேனே!" என்றார்.

"இந்த நியூஸெல்லாம் நம்மிடம் யாரும் சொல்ல மாட்டார்கள். வைதிகாள் தானேங்கற அபிப்பிராயம்" என்றார் சாம்பசிவ சாஸ்திரிகள்.

"...ஹ்ம்... மர்லின் மன்ரோவைத்தான் நேரில் பார்க்க வேண்டும் என்று ரொம்ப நாளாக ஆம்பிஷன். கொடுத்து வைக்கவில்லை" என்று மிகவும் வருத்தத்துடன் கூறினார் அம்மாஞ்சி.

"அதோ யார் வரா பாருங்கோ!" என்றார் சாம்பசிவ சாஸ்திரிகள் சிரித்துக் கொண்டே.

"அடேடே! ராக்ஃபெல்லர் மாமி" என்று அதிசயப் பட்டார் அம்மாஞ்சி.
ஸ்பெஷலாக வரவழைத்திருந்த சரிகை போட்ட பனாரஸ் பட்டுப் புடவையை உடுத்திக் கொண்டு, நெற்றியில் குங்குமப் பொட்டுடன் வந்து கொண்டிருந்தாள் அந்தச் சீமாட்டி.

"பேஷ்! பேஷ்! உங்களுக்கு இந்த ரோஸ் கலர் புடவை பிரமாதமாயிருக்கு!" என்றார் அம்மாஞ்சி.

"மகாலட்சுமி மாதிரி இருக்கு" என்றார் சாஸ்திரிகள்.

"அது யார் மகாலட்சுமி!” ராக் மாமி கேட்டாள்.

"அந்த அம்மாள் வைகுண்டத்திலே இருக்கிறார். உங்க மாதிரி பெரிய கோடீசுவரி!" என்றார் அம்மாஞ்சி.

"லாஸ்ட்ரீஸெல்லாம் இட்லி சாப்பிட்டாச்சா? இட்லியும் கோகனட் சட்னியும் நல்ல காம்பினேஷன். நான்கூட நாலு இட்லி சாப்பிட்டேன்" என்றாள் மிஸஸ் ராக். -

"எங்களுக்கென்ன அவசரம்? முதல்லே சம்பந்திகளை கவனிக்கச் சொல்லுங்க! பிள்ளைக்கு மாமா ரொம்பக் கோபமாக இருக்கிறாராம். சம்பந்தி வீட்டார் யாருமே சாப்பிடவில்லையாம்!" என்றார் அம்மாஞ்சி.

"என்ன கோபம்?" என்று கேட்டாள் மிஸஸ் ராக். "சம்பந்திகளுக்கு பவுடர் பால் காப்பி அனுப்பி விட்டார்களாம். அதான் கோபம்!" என்றார் அம்மாஞ்சி.

"கோபத்துக்கு அது மட்டும் காரணமில்லே! நேற்று ஜானவாசத்தின்போது மாப்பிள்ளையின் மாமாவை நீங்க யாருமே கவனிக்கவில்லையாம். அவர் ஒரு கார் கேட்டிருந்தாராம். அதுவும் கொடுக்கவில்லையாம். அதனால் அவர் ரொம்பக் கோபமா இருக்கிறார்!" என்றார் அய்யாசாமி.

"அதோ காட்டன் ஸார் வராரே! " என்று கூறினார் அம்மாஞ்சி.

"மெட்ராஸிலிருந்து பாப்ஜியும் வந்தாச்சு மேடம்!" எனக் கூறிக்கொண்டே வந்த பஞ்சு தன் நண்பனை மிஸஸ் ராக்ஃபெல்லருக்கு அறிமுகப்படுத்தி வைத்தான்.

அந்தச் சீமாட்டி மகிழ்ச்சியோடு பாப்ஜியின் கையைக் குலுக்கி, "பாப்ஜி! ஐ ஆம் வெரி ஹாப்பி டு மீட் யூ! யு ஹாவ் கம் ஜஸ்ட் இன் டைம்! வெரி வெரி சந்தோஷம்! சங்கீத கோஷ்டியினர் எப்போது வருகிறார்கள்?" என்று விசாரித்தாள். -

"பத்து மணிக்கு" என்றான் பாப்ஜி.

"சரி; முதலில் இட்லி காப்பி சாப்பிட்டு விட்டு வா. மறுபடியும் ஏர்போர்ட் போகணும்" என்றான் பஞ்சு.

"பஞ்ச் ! உனக்கு ஏன் இப்படி தொண்டை கட்டிப் போச்சு? பாவம், சரியாகவே பேச முடியவில்லையே உன்னால்!" என்று வருத்தப்பட்டாள் மிஸஸ் ராக்.

"ஒரு மாசமாய்க் கொஞ்சமான அலைச்சலா? கத்திக் கத்திக் குரலே வரவில்லை அவருக்கு" என்றார் அம்மாஞ்சி.

"ஸ்டார்ஸை யெல்லாம் மேப்ளவர் ஒட்டல்லே இறக்கிட்டேன், மேடம் ! " என்றான் பஞ்சு.

"வெரி குட்! இப்ப சம்பந்திச் சண்டை எந்தப் பொஸிஷன்லே இருக்குதுன்னு எனக்குச் சொல்ல முடியுமா?" என்று கேட்டாள் மிஸஸ் ராக்.

"இதோ, இம்மீடியட்டா நான் போய்ப் பார்த்துட்டு வந்து சொல்றேன் மேடம் ! " என்று கூறிவிட்டு வெளியே புறப்பட்டான் பஞ்சு.

பஞ்சுவைக் கண்டதும் பிள்ளைக்கு மாமா ஒரேயடியாய்க் குதிக்க ஆரம்பித்துவிட்டார்.

"ஏன் இப்படி அலட்டிக்கிறீங்க? என்ன நடந்துவிட்டது இப்போது?" என்றான் பஞ்சு.

"இன்னும் என்ன நடக்கணும்? செய்வதையெல்லாம் செய்துவிட்டு, என்ன நடந்துவிட்டது என்று வேறு கேட்கிறீர்களா?" என இரைந்தார் மாமா.

"சாமாவய்யர்! உமக்குச் சரியாகக் கத்துவதற்கு எனக்குத் தொண்டை இல்லை. விஷயத்தைச் சொல்லாமல் கத்தினால் எப்படி?" என்றான் பஞ்சு.

"ஒகோ! நான் கத்துகிறேனா? அவ்வளவு தூரத்துக்கு வந்துவிட்டதா விஷயம்? இன்னும் கொஞ்ச நேரம் போனால் குரைக்கிறேன் என்று கூடச் சொல்வீர்! ஆகட்டும், ஆகட்டும்; இன்றைக்குப் பெண்ணின் கழுத்தில் தாலி ஏறி விடுகிறதா என்று பார்த்துவிடுகிறேன்" என்று கறுவினார் பிள்ளைக்கு மாமா.

இந்தச் சமயத்தில் அய்யாசாமி அய்யரே அங்கு வந்து சேர்ந்தார். அவர் பிள்ளையின் மாமாவைப் பார்த்து, "ஒய்! என்ன சொன்னீர்? என் பெண் கல்யாணம் நின்றுவிடும் என்றா சொன்னீர்? பார்த்து விடலாமே அதையும்தான். என்னய்யா செய்து விடுவீர்! நானும் ராத்திரியிலிருந்து உம்மை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். வேண்டுமென்றே வலுச். சண்டைக்கு இழுத்துக் கொண்டிருக்கிறீரே!” என்றார். -

இதற்குள் அவ்விரண்டு பேரும் சண்டையிட்டுக் கொள்வதை வேடிக்க பார்க்கப் பெரும்கூட்டம் கூடிவிட்டது. சம்பந்திச் சண்டை முற்றிவிட்டது என்ற சேதியைக் கேள்விப்பட்ட மிஸஸ் ராக்ஃபெல்லர் தன்னுடைய சிநேகிதர்களை எல்லாம் கூட்டிக் கொண்டு ஓடோடிச் சென்றாள்.

சம்பந்தி வீட்டு மாமாவும், அய்யாசாமி அய்யரும் மல்யுத்தத்துக்கு நிற்பவர்களைப் போல் சீறிக் கொண்டிருந்தார்கள். -

"வாட் பஞ்ச்! அங்கிள் ஸாம் என்ன சொல்கிறார்?" என்று கேட்டாள் மிஸஸ் ராக்.

"முகூர்த்தம் நடக்காதாம். பார்த்து விடுகிறேன் ஒரு கை என்கிறார்" என்றான் பஞ்சு.\

மிஸஸ் ராக்ஃபெல்லருக்கு கவலை வந்துவிட்டது. கல்யாணமே நின்று விடுமோ என்று அஞ்சினாள்.

"சம்பந்திச் சண்டையை நிறுத்த என்ன செய்யலாம் பஞ்ச்?" என்று வேதனையோடு விசாரித்தாள்.

"ஒன்றுமில்லை மேடம்! நீங்க மாமாவைப் பார்த்துப் பேசிவிட்டால் போதும் எல்லாம் சரியாய்ப் போய்விடும்" என்றான் பஞ்சு.

உடனே மிஸஸ் ராக்ஃபெல்லர் கோபமாக நின்று கொண்டிருந்த மாமாவின் அருகில் சென்று அவர் கைகளைக் குலுக்கி, "வெரி ஸாரி மிஸ்டர் ஸாம்! ஏதோ தெரியாமல் நடந்து போச்சு, எக்ஸ்க்யூஸ் மி! எழுந்து வாங்க; முகூர்த்தத்துக்கு நேரமாச்சு" என்றாள்.
-
அவ்வளவுதான்; மாமாவின் கோபம் மாயமாக மறைந்துவிட்டது! முகத்தில் அசடு வழிய, "எனக்கொன்றும் கோபமில்லை. இந்தப் பெண்டுகள் தான் பவுடர் பால் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கென்ன வேலை?" என்றார் மாமா.

"நீங்கள் எதையும் ‘ஹார்ட்’லே வச்சுக்கக் கூடாது. இது உங்க வீட்டுக் கல்யாணம். எனக்குப் பிள்ளை வீடு, பெண் வீடு இரண்டும் ஒண்ணுதான். வாங்க, வாங்க... பஞ்ச்! மாமாவுக்கு ஒரு கார் கொண்டு வரச் சொல்லு!" என்றாள் மிஸஸ் ராக். இதைக் கேட்டதும் மாமாவின் உச்சி குளிர்ந்து போயிற்று உடனே, "அடே ராஜா!... முகூர்த்தத்துக்கு நேரமாச்சு. உம். உம்! புறப்படு" என்று மாப்பிள்ளையைத் துரிதப்படுத்தினார்.

வெளியே வந்த மிஸஸ் ராக், பஞ்சுவைப் பார்த்து, "வாட் பஞ்ச்! ஷம்பந்தி ஷண்டய் இவ்வளவுதானா?" என்று கேட்டாள்.

"இவ்வளவுதான் மேடம்! இப்படித்தான் ஒன்றுமில்லாத அற்ப விஷயத்துக்கெல்லாம் சண்டை போட ஆரம்பித்து விடுவார்கள். கல்யாணமே நின்றுவிடுமோ என்று கூடத் தோன்றிவிடும். விசாரிக்கப் போனால் விஷயம் ஒன்றுமிருக்காது. அநேகமாகக் காப்பியில்தான் தகராறெல்லாம் கிளம்புவது வழக்கம்!" என்றான்.

"அங்கிள் ஸாம் ஸீம்ஸ் டு பி வெரி மிஸ்சுவஸ்! இவரை ரொம்ப உஷாரா கவனிச்சுக்கணும்" என்றாள் மிஸஸ் ராக்.

"கார் கொடுப்பதாகச் சொல்லி விட்டீர்கள் அல்லவா! அது போதும்; இனி எல்லாக் கோபமும் தீர்ந்துவிடும்" என்றான் பஞ்சு.

மாப்பிள்ளை ராஜகோபாலன் பரதேசிக் கோலம் புறப்படுவதற்குத் தயாராக நின்றான்.

அங்கிள் ஸாம் மிகவும் உற்சாகத் தோடு புதுக் குடையைப் பிரித்து மாப்பிள்ளையின் தலைக்கு நேராகப் பிடித்தார். மாப்பிள்ளைத் தோழன் விசிறியைக் கொண்டு வந்து ராஜாவிடம் கொடுத்தான்.

நாதஸ்வரக்காரர்கள் முன்னால் செல்ல, ஆடவரும், பெண்டிரும் பின் தொடர, மாப்பிள்ளை மை தீட்டிய விழிகளுடன் காசிக்குப் புறப்பட்டார்.

அவர் முகத்தில் காணப்பட்ட மைப் புள்ளிகளைக் கண்ட அமெரிக்க நண்பர்கள், ‘பிக் மோல்ஸ்’ என்றனர்.

"ப்ரைட்க்ரூம் எங்கே போகிறார்?" என்று கேட்டார் அமெரிக்க நண்பர் ஒருவர்.

"பனாரஸ்!" என்றான் பஞ்சு.

"மாப்பிள்ளைக்கு என்ன கோபம்? அங்கிள் ஸாம் தூண்டி விட்டுக் காசிக்கு அனுப்புகிறாரோ?" என்று சந்தேகப்பட்டனர் சிலர். -

"பனாரஸ் இண்டியாவில் அல்லவா இருக்கிறது. அவ்வளவு தூரம் எப்படிச் செல்லப் போகிறார்? விமானத்திலே போய் வரட்டுமே" என்றார் இன்னொரு நண்பர்.

"மாப்பிள்ளை பனாரஸ் போனால் நீங்கள் கட்டிக் கொண்டிருப்பதுபோல எனக்கும் ஒரு புடவை வாங்கி வரச் சொல்ல முடியுமா?" என்று மிஸஸ் ராக்ஃபெல்லரிடம் அவருடைய சிநேகிதி ஒருத்தி கேட்டார். -

ப்ரைட்க் ரூம் பனாரஸ் டுர் போவதைப் பார்க்க பல்லாயிரக்கணக்கான மக்கள் வழி நெடுகக் காத்திருந்தனர். பத்திரிகைக்காரர்கள் மாப்பிள்ளை கோபித்துக் கொண்டு செல்லும் காட்சியைப் படமெடுத்துப் போட்டு

  • "ப்ரைட்க்ரூம் லெப்ட் பார் பனாரஸ்!"
    "பாத யாத்ரா லைக் வினோபாஜி!
    அன்வில்லிங் டு மேரி ருக்கு!
    எலிச்சுவேஷன் வெரி க்ளுமி!
  • என்று எழுதியிருந்தனர்.

    அந்தச் செய்தியைக் கண்ட அமெரிக்க மக்கள் பரபரப்படைந்து, ‘ஒருவேளை கல்யாணமே நடக்காமல் போய்விடுமோ?’ என்ற கவலையில் ஆழ்ந்தனர்.

    நல்லவேளையாக பனாரஸ் யாத்திரை தெருக்கோடியிலேயே நின்றுவிட்டது! ஆனால் அதற்குக் காரணம் என்ன என்பது அமெரிக்கர்களுக்குப் புரியவில்லை.

    மாப்பிள்ளையிடம் சென்று, "ஏன் திரும்பி விட்டீர்கள், பனாரஸ் போகவில்லையா?" என்று கேட்டனர்.

    "இல்லை; பனாரஸில் வெயில் அதிகமாயிருக்கிறதாம். ஆகையால் அப்புறம்தான் போகப் போகிறார்" என்று பஞ்சுவே அவர்களுக்குப் பதில் கூறி அனுப்பிவிட்டான்.

    பத்திரிகைக்காரர்கள் உடனே, "ப்ரைட்க்ரூம் கான்ஸ்ல்ஸ் ஹிஸ் பனாரஸ் டூர்!”
    "முகூரட் இஸ் டேக்கிங் ப்ளேஸ்!” என்று மறுபடியும் ஒரு செய்தியைப் பிரசுரித்தார்கள். அதைக் கண்ட பிறகு தான் அமெரிக்க மக்களின் கவலை நீங்கிற்று. -

    மாப்பிள்ளை சம்மர் ஹவுஸ் வாசலில் வந்து நின்றதும் பெண்டுகள் ஆரத்தி சுற்றிக் கொட்டினார்கள்.

    "நேரம் ஆகிறது; மாலை மாற்ற வேண்டாமா? மணப்பெண்ணைக் கூப்பிடுங்கோ" என்று இரைந்தார் அப்பு சாஸ்திரிகள்.

    தஞ்சாவூரிலிருந்து ஸ்பெஷலாகக் கொண்டு வந்திருந்த மலர் மாலைகள் இரண்டையும் எடுத்துக் கொண்டு ஓடிவந்தான் பாப்ஜி.

    இரண்டு மாமன்மார்களும் கச்சத்தை வரிந்து கட்டிக் கொண்டு, பெண்ணுக்கும், பிள்ளைக்கும் தோள் கொடுக்கத் தயாராக நின்றனர்.

    மாலை மாற்றும் வேடிக்கையைக் காண, தெரு முழுதும், ஜே ஜே என்று கூட்டம் அலை மோதிக் கொண்டிருந்தது.

    புத்தாடை உடுத்தி, பூச்சூடி, புது நகைகள் அணிந்து புன்முறுவல் பூத்த முகத்துடன் அழகு வடிவமாக நின்ற மணப்பெண் ருக்மிணியை, வசந்தாவும், லோரிட்டாவும் கைபிடித்து வாசலுக்கு அழைத்து வந்தனர்.

    முதலில் பெண்ணின் மாமா மணப்பெண்ணை தோள் மீது தூக்கிக் கொடுத்தார். அடுத்தாற்போல் பிள்ளையின் மாமா, "வாடா ராஜா, வா!" என்று உற்சாகத்தோடு குதித்து வந்து மாப்பிள்ளையைத் தூக்கிக் கொண்டார். டெலிவிஷன் காமிராக்களும் செய்திப் படக் காமிராக்களும் மூலைக்கு மூலை இயங்கிக் கொண்டிருந்தன.

    நாதஸ்வரக்காரர்களும் பாண்டு வாத்தியக்காரர்களும் இங்கிலீஷ் நோட் வாசிக்கத் தொடங்கினார்கள்.

    மாமன்மார்கள் இருவரும் நாதஸ்வர இசைக்கு ஏற்ப ஆடத் தொடங்கினார்கள். பிள்ளைக்கு மாமா குதித்துக் குதித்து ஆடினார். பெண்ணுக்கு மாமா கால்களை முன்னும் பின்னுமாக எடுத்து வைத்து ஆடினார். கடைசியில் பெண்ணும் பிள்ளையும் கொட்டு மேள கோஷத்துடன் மாலை மாற்றிக் கொண்டார்கள். அந்த டான்ஸைக் கண்ட அமெரிக்க மக்கள் ஆனந்தம் தாங்காமல் கை கொட்டி ஆரவாரம் செய்தார்கள் சிலர் இரண்டு மாமன்மார்களையும் கை குலுக்கி, ‘ஒண்டர்புல் டான்ஸ் வெரி டிபிகல்ட் ஆர்ட்!’ என்று பாராட்டி மகிழ்ந்தனர்.

    "நியூயார்க்கில் இம்மாதிரி ஒரு டான்ஸ் செய்வதற்கு ஒப்புக்கொள்ள முடியுமா?" என்று கேட்டார் நியூயார்க் பிரமுகர் ஒருவர்.

    ` "வெரி ஸாரி! மாஸ்கோவில் நடைபெறும் சர்வதேச நாட்டிய விழாவில் கலந்து கொள்வதற்காக ஏற்கனவே ஒப்புக் கொண்டுவிட்டோம். ஆகவே, இந்த இயர் வருவதற்கில்லை" என்றார் பெண்ணுக்கு மாமா.

    பிரஸ்காரர்கள் பெண்ணின் மாமாவிடம், "தங்கள் பெயர் என்ன?" என்று விசாரித்தனர்.

    "ராமய்யர்" என்றார் அவர். அடுத்தாற் போல் பிள்ளையின் மாமாவை அணுகி, "யுவர் நேம் ப்ளீஸ்" என்று கேட்டனர். "சாமாவய்யர்!" என்றார் அவர். அவ்வளவுதான்; அவர்கள் பெயரை அங்கிள் ஸாம் அண்ட் ராம் என்று சுருக்கி "தி மேரேஜ் டான்ஸ் ஆப் ஸாம் அண்ட் ராம்" என்று பத்திரிகைகளில் போட்டோவுடன் செய்தியும் பிரசுரித்துவிட்டார்கள்!

    அடுத்தாற்போல் ஊஞ்சல் நிகழ்ச்சி ஆரம்பமாயிற்று. பெண்ணும், பிள்ளையும் ஊஞ்சலில் அமர்ந்ததும், உள்ளூர் நாதஸ்வரக்காரர் லாலியும் ஊஞ்சலும் பாட, ராக்ஃபெல்லர் மாமி உள்பட சுமங்கலிகள் ஏழெட்டுப்பேர் மஞ்சள் சிவப்பு நிற அன்னப் பிடிகளை எடுத்துக் கொண்டு ஊஞ்சலை வலமாக வந்து நாலு திசைகளிலும் உருட்டி விட்டனர். இரண்டு சுமங்கலிகள் குத்து விளக்கைப் பெரிய பெரிய வெள்ளி அடுக்குகளில் வைத்துப் புடவைத் தலைப்பால் மூடியபடி சுற்றி வந்தனர். இன்னும் இரண்டு பேர் செம்பில் தண்ணீரை நிரப்பிக் கொண்டு ஊஞ்சலைச் சுற்றிலும் ஊற்றிக் கொண்டே மெதுவாகச் சுற்றி வந்தனர்.

    மஞ்சளும் சிவப்பும் வெள்ளையுமாக அன்னப் பிடிகளைக் கண்ட அமெரிக்க மக்கள், "ஹவ் டு தே மேக் தீஸ் கலர்ட் ரைஸ் பால்ஸ்?" என்று வியந்தனர்!

    மணப் பந்தலில் கூட்டம் நிரம்பி வழிந்தது. அமெரிக்க மாதர்களில் பலர், புடவை அணிந்து, தென்னிந்திய சுமங்கலிகளைப்போலக் காட்சி அளித்தனர். ராக்ஃபெல்லர் மாமி மட்டும் அரை மணி நேரத்துக்கெல்லாம் புடவையை மாற்றிவிட்டு தனனுடைய வழக்கமான டிரஸ்ஸை அணிந்து கொண்டுவிட்டாள்.

    மணப் பந்தலுக்கு அருகே வைத்திருந்த வெள்ளிப் பாத்திரங்களும், மற்றச் சீர்வரிசைகளும் ஒரு பெரிய கண்காட்சி போல் விளங்கின.

    ஒமப் புகை, நாதஸ்வர இசை, சாஸ்திரிகளின் மந்திர கோஷம், புதுப் புடவைகளின் சலசலப்பு, ஊதுவத்தி, சந்தனம், பழம், புஷ்பம் ஆகியவற்றின் கலவையான மணம் இவ்வளவும் அமெரிக்கர்களுக்குப் பெரும் அதிசயத்தையும், உற்சாகத்தையும் அளித்தன.
    இலை போடுவதற்கான ஏற்பாடுகளில் முனைந்திருந்தான் பஞ்சு.

    மிஸஸ் ராக்ஃபெல்லர் மணப்பந்தல் வாசலில் நின்று விருந்தினர்களை வரவேற்றுக் கொண்டிருந்தாள். ஈவினிங் ரிஸெப்ஷனுக்கு வரப்போவதாகச் சொல்லியிருந்த மிஸஸ் கென்னடி திடீரென்று முகூர்த்தத்துக்கே காரில் வந்து இறங்கியதைக் கண்ட மிஸஸ் ராக்ஃபெல்லருக்கு ஆனந்தம் தாங்கவில்லை. மிஸஸ் கென்னடியை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்று மணமகன், மணமகள், பஞ்ச், கோபாலய்யர், அய்யாசாமி, அங்கிள் ஸாம் அண்ட் ராம் அனைவரையும் அறிமுகப்படுத்தினாள்.

    வைதிகச் சடங்குகள் யாவும் முடிந்ததும் சரியாகப் பத்து மணிக்கு மணப்பெண் அரக்கு வர்ண கூறைச் சேலையை உடுத்தி வந்து, தன் தந்தையின் மடி மீது அமர்ந்தாள். கெட்டி மேளம் முழங்க, சாஸ்திரிகள் ‘மாங்கல்யம் தந்துநா நேந’ என்ற மங்கள சுலோகத்தைச் சொல்ல, மணமகன் சிரஞ்சீவி ராஜகோபாலன் செளபாக்கியவதி ருக்மிணியின் கழுத்தில் தாலியைக் கட்டி முடித்தான்.

    அனைவரும் அட்சதைகளை மணமக்கள் மீது போட்டு ஆசீர்வாதம் செய்தார்கள். வெகு நேரமாக இடைவிடாமல் முழங்கிக் கொண்டிருந்த கெட்டி மேளம் ஒருவிதமாக அடங்கியபோது பந்தலில் கூடியிருந்த மக்களின் கூக்குரல் மேலோங்கி ஒலித்தது. -

    மிஸஸ் ராக்ஃபெல்லர் ஒரு பெருமூச்சு விட்டபடியே, "மை காட்! தாலி கட்டி முடிந்தது. இப்போதுதான் எனக்கு நிம்மதி ஆயிற்று. செளத் இண்டியன் மேரேஜ் என்பது சாதாரண விஷயமில்லை. ‘கல்யாணம் செய்து பார்’ என்று டமிலில் சொல்லுவாங்களே, ‘நல்ல ப்ராவர்ப்’ அது” என்றாள் தன் கணவரிடம்.

    முகூர்த்தத்திற்கு வந்திருந்த பிரமுகர்களும், சீமாட்டிகளும் ஒவ்வொருவராக வந்து ராக்ஃபெல்லர் தம்பதியரிடம் விடை பெற்றுக் கொண்டனர். பாப்ஜியும், லல்லியும் வாசலில் நின்ற வண்ணம் வந்தவர்களுக்கெல்லாம் தாம்பூலமும், தேங்காயும் அடங்கிய பிளாஸ்டிக் பைகளை வழங்கிக் கொண்டிருந்தனர்.

    "மேடம்! இலை போடலாமா?" என்று கேட்டுக் கொண்டே வந்தான் பஞ்சு.

    "ஒ எஸ். அமெரிக்கன் பிரண்ட்ஸுக்கெல்லாம் ஆஸ் யூஷ்வல் ஸபரேட் பந்திதான்" என்றாள் மிஸஸ் ராக்.

    கல்யாண விருந்தை அமெரிக்க நண்பர்கள் மிகவும் விரும்பிச் சாப்பிட்டார்கள். அன்றைய விருந்துக்குச் சுமார் ஐயாயிரம் அமெரிக்கர்கள் வந்திருந்தார்கள். விருந்தில் பரிமாறப்பட்ட ஜாங்கிரியையும், வடுமாங்காயையும் கையில் எடுத்து அதிசயத்துடன் திருப்பித் திருப்பிப். பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு அவை பெரும் புதிராக இருந்தன. ஒருவர் ஜாங்கிரியைக் கையில் எடுத்து, அதற்கு ஆரம்பம் எது, முடிவு எது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தார். இன்னும் சிலர், சிக்கலான ஜாங்கிரிப் பின்னலைப் பார்த்துவிட்டு, "வெரி காம்ப்ளிகேடட் ஸ்வீட் !”என்றனர்.

    ‘ஆரம்பம் தெரிந்துவிட்டால் முடிவைக் கண்டுபிடித்து விடுவேன்’ என்றார் ஒருவர். ‘முடிவு தெரிந்துவிட்டால் நான் ஆரம்பத்தைக் கண்டுபிடித்து விடுவேன்’ என்றார்
    இன்னொருவர். ஆரம்பம் தெரியாததால் பல பேர் ஜாங்கிரியை எந்த இடத்தில் சாப்பிட ஆரம்பிப்பது என்று சாப்பிடாமலேயே விட்டு விட்டார்கள். இன்னொருவர் ஜாங்கிரி இழையைப் பாதியில் கத்தரித்து அதைக் கயிறு போல் நீளமாகச் செய்து அதன் மொத்த நீளம் எவ்வளவு என்பதைக் கண்டுபிடிக்க விரும்பினார்.

    பலர் வடு மாங்காயைக் கடிக்கத் தெரியாமல் விரலைக் கடித்துக்கொண்டு "ஆ| ஆ ஆ!" என்று அலறினர். பற்களுக்கிடையில் விரல்கள் அகப்பட்டுக் கொண்டதால் காயம் ஏற்படவே, விரல்களைச் சுற்றி பிளாஸ்திரி போட்டுக் கொண்டார்கள்.

    அதைக் கண்ட ஹாரிஹாப்ஸ், "ராத்திரி டின்னருக்கு வடு மாங்காய் பரிமாறும்போது ஒவ்வொருவர் பக்கத்திலும் ஒவ்வொரு ‘பஸ்ட் எய்ட் பாக்ஸ்’ வைத்துவிட வேண்டும்” என்று சொல்லிவிட்டுப் போனார்.

    கை விரல்களில் கட்டுப் போட்டுக் கொண்டிருந்த அமெரிக்க நண்பர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டபோது, "ஒ! வடுமாங்காய் சாப்பிட்டீர்களா?" என்று கேலியாக விசாரித்துக் கொண்டனர்.

    வடுமாங்காய் சாப்பிட்டுக் கை விரல்களில் கட்டுப் போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை பத்திரிகைகளில் வெளியாயின. -

    இன்னும் சரியாக எண்ணி முடியவில்லை என்றும், இரவு விருந்தின்போது மேலும் பல காஷவாலிடிகள் ஏற்படலாமென்றும் தகவல் கொடுக்கப்பட்டிருந்தது.

    விரலில் துணி சுற்றிக் கொண்டு நின்ற தவில் வித்வான்களைக் கண்ட அமெரிக்கர் சிலர், "ஐயோ பாவம்! இவர்களுக்கும் வடுமாங்காய் சாப்பிடத் தெரியவில்லை போலிருக்கிறது" என்று சொல்லி அனுதாபப்பட்டனர்.

    "மிஸ்டர் பஞ்ச் நாரிக்ரூவாஸெல்லாம் சாப்பிட்டாச்சா? முதல்லே அவங்களைச் சாப்பிடச் சொல்லு!" என்று சொல்லிக் கொண்டே வந்தாள்!” மிஸஸ் ராக்,

    "அவர்களைத் தான் தேடிக் கொண்டிருக்கிறேன். ஒருத்தரைக் கூடக் காணவில்லை" என்றான் பஞ்சு.

    "அவர்கள் வாஷிங்டன் வீதிகளிலே ஊசி விற்றுக் கொண்டிருக்கிறார்களாம்" என்றார் அம்மாஞ்சி.

    சம்மர் ஹவுஸிலும் , டம்பர்ட்டன் ஓக்ஸிலும் சாப்பாட்டுப் பந்திகள் நடந்தது நடந்தபடியே இருந்தன.

    பஞ்சு மிகவும் களைத்துப் போயிருந்தான்.

    "பஞ்சு அண்ணா நீங்க சாப்பிடவே இல்லையே! இலை போடட்டுமா?" என்று விசாரித்தார் ஹெட் குக் வைத்தா.

    "எனக்கு ஒன்றுமே வேண்டாம். ஒரு டம்ளர் மோர் மட்டும் கொடு; அது போதும். எங்காவது ஒரு துண்டைக் கீழே போட்டு முடங்கிப் படுத்துக் கொண்டால் தேவலை போலிருக்கிறது" என்றான் பஞ்சு.
    "பஸ்ட் க்ளாஸ் பன்னீர் ரசம் அண்ணா இன்றைக்கு! ரசம் மட்டும் கொஞ்சம் சாப்பிடுங்கோ. அப்புறம் பாதம் கீர் தருகிறேன்" என்றான் வைத்தா.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 11. ம்


வைதிக கோஷ்டியினர் ‘ராக் க்ரீக் பார்க்’கை நோக்கி அணி அணியாகப் படையெடுத்துக் கொண்டிருந்தனர். உண்ட மயக்கத்துடன் நடந்து கொண்டிருந்த கனபாடிகள் ஒருவர், "என்ன இருந்தாலும் நம் தஞ்சாவூர் ஸைடைப் போல் ஆகாது. இந்த வாஷிங்டனில் பெரிய பெரிய கட்டடங்களாகத்தான் கட்டி வைத்திருக்கிறார்கள். என்ன பிரயோசனம்? எந்த வீட்டிலாவது ஒரு திண்ணை உண்டா, சாப்பிட்டதும் படுப்பதற்கு?" என்று குறைப்பட்டார்.

"ஒய் ! ‘ராக் க்ரீக் பார்க்’ கிலே வந்து பாரும். குளுகுளுவென்று காற்று வீசும். எங்கே பார்த்தாலும் பெஞ்சுகள் போட்டிருக்கும்" என்று கூறினார் சாம்பசிவ சாஸ்திரிகள்.

அவ்வளவு பேரும் ஆங்காங்கே மரத்தடிகளில் கும்பல் கும்பலாக உட்கார்ந்து, கல்யாண விமரிசைகளைப் பற்றிய சர்ச்சையில் ஈடுபட்டனர். .

"அடாடா மிஸ்ஸ் ராக்ஃபெல்லருக்குத்தான் என்ன மனசு! என்ன மனசு!" என்று புகழ்ந்தார் ஒருவர்.

"பெண்ணுக்கும், மாப்பிள்ளைக்கும் தனித்தனியாக இரண்டு கார் ‘ப்ரஸண்ட்’ பண்ணியிருக்காளாமே!" என்றார் இன்னொருவர்.

"ஆசீர்வாதத்தின்போது வந்து குவிந்த ‘ப்ரஸண்ட்டு’களைப் பார்த்தீரா? எத்தனை ரிஸ்ட் வாட்ச்! எவ்வளவு வெள்ளிப் பாத்திரம்? எத்தனை டிரான்ஸிஸ்டர்!" என்று வர்ணித்தார் மற்றொரு சாஸ்திரிகள்.

"உம்; நமக்கெல்லாம் என்ன செய்யப் போகிறாளாம்?” என்று கவலையோடு விசாரித்தார் வேறொருவர்.

"தலைக்கு நூறு டாலர்னு பேசிக்கிறா?" என்றார் கனபாடிகள்.

"கைக்கு ஒரு ரிஸ்ட் வாட்ச் இல்லையா?” என்று கேட்டார் மற்றொருவர்.

` "காட்டன் லார் மனசு வைத்தால் எல்லாம் நடக்கும்”என்றார் இன்னொருவர்.

"மயிலாப்பூர் சாஸ்திரிகளே! ஒரு ரவுண்டு ‘த்ரீ நாட்போர்’ போடுவோமா?" என்று கேட்டார் மாம்பலம் கனபாடிகள்.

"அதுக்கு முன்னாலே ஒரு ரவுண்டு வெற்றிலைச் சீவலைப் போடலாம்!" என்றார் திருவல்லிக்கேணி தீட்சிதர்.

"இது வாஷிங்டன் நகரம். திருவல்லிக்கேணி இல்லை. கண்ட இடத்திலே துப்பக் கூடாது" என்றார் மாம்பலம் கனபாடிகள்.

சம்மர் ஹவுஸில், பெண்டுகள் அலங்காரத்தில் ஈடுபட்டிருந்தனர். - .

"மணி மூன்றாகிறதே, நலங்குக்கு நேரமாகல்லையா?" என்று பொதுவாக இரைந்து கொண்டே போனார் அய்யாசாமி ஐயர்.

"இன்னும் ப்ளேன் வரவில்லையாம். புஷ்பத்துக்காகக் காத்திருக்கிறோம்!" என்றாள் அத்தை.

"ஷம்பந்தி வீட்டுக்கு டிபன் காப்பி அனுப்பியாச்சா? ருக்கு! நீ டிரஸ் பண்ணிக்கிட்டயா?" என்று கேட்டுக் கொண்டே வந்தாள் மிஸஸ் ராக்.

"எல்லாம் ஆயிட்டுது மேடம்! பூ வந்ததும் நலங்கு ஆரம்பிக்க வேண்டியதுதான்" என்றான் பாப்ஜி.

"பாப்ஜி, ஈவினிங் ரிஸெப்ஷன் அரேஞ்ச்மெண்டெல்லாம் எந்த மட்டில் இருக்குது? எத்தனை மணிக்குக் கச்சேரி?" என்று கேட்டாள் மிஸஸ் ராக்.

"கொஞ்சம் லேட்டாகத்தான் ஆரம்பிக்க வேண்டியிருக்கும், மேடம்!"

"ஏன்?”

"பால்காட் மணி ஐயர் ப்ளேன்லே வந்ததாலே, ப்ளேன் சத்தம் அவர் காதிலேயே இருக்காம். அதனாலே சுருதி சேர்ப்பதற்குக் கொஞ்சம் சிரமப்படுமாம். கொஞ்ச நேரம் போனால் சரியாகிவிடுமென்று சொல்கிறார்” என்றான் பாப்ஜி.

"பரவாயில்லை; கர்னாடிக் மியூஸிக்னா சுருதிதான் ரொம்ப முக்கியம்" என்றாள் மிஸஸ் ராக்.

"உங்களுக்கு மியூஸிக் கூட வருமா, மேடம்?"

"ஒ எஸ். பியானோ வாசிக்கறதுதான் எனக்கு பாஸ் டைம்" என்றாள் மிஸஸ் ராக்.

ஆழ்ந்த உறக்கத்தில் அழுந்திக் கிடந்த பஞ்சுவை மெல்லிய கரம் ஒன்று தீண்டி எழுப்பியது. சுய உணர்வு பெற்ற பஞ்சு கண் விழித்துப் பார்த்தபோது, கையில் : காப்பியுடன் நின்று கொண்டிருந்த லல்லி, மோகினி வடிவமாகக் காட்சி அளித்தாள். அவளிடமிருந்து காப்பியைக் கையில் வாங்கிக் கொண்ட பஞ்சு ‘தாங்க்ஸ்’என்றான் சிரித்துக் கொண்டே.

"எல்லோரும் நலங்குக்கு ரெடியாயிட்டாங்க... என்றாள் லல்லி.

"இதோ, ஒன் மினிட்" என்று கூறிவிட்டு எழுந்தான் பஞ்சு.

பந்தலில் பெரிய பெரிய பவானி ஜமக்காளங்களை விரித்து, நலங்குக்கு வேண்டிய ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருந்தான் பாப்ஜி.

புஷ்பங்கள் வந்ததும், டம்பர்ட்டன் ஓக்ஸிலிருந்து மாப்பிள்ளையை மேளதாளத்துடன் அழைத்து வந்தனர். நலங்கு ஆரம்பமாயிற்று. இதற்குள் பந்தலில் துளி இடமில்லாதபடி, அமெரிக்கப் பெண்மணிகளும், ராக்ஃபெல்லர் உறவினர்களும் கூடிவிட்டார்கள். மிஸஸ் ராக்ஃபெல்லர், கேதரின், லோரிட்டா மூவரும் பட்டுப் புடவை உடுத்தி, நலங்குப் பாய்களுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டனர். கூட்டம் நலங்குக் காட்சியைக் காண மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தது.

முதலில் மாப்பிள்ளை ராஜா மணையில் அமர்ந்தான். சற்று நேரத்துக்கெல்லாம் மணப்பெண் ருக்மிணி அவன் எதிரில் நாணத்துடன் வந்து நின்றாள்.

"நாயனக்காரர் ரெடியா?" என்று கேட்டார் அம்மாஞ்சி. நாதஸ்வரக்காரர் ‘பீபீ!’ என்று சீவாளியை எடுத்து ஊதி, தாம் இருப்பதை அறிவித்துக் கொண்டார்.

"ருக்கு முதலில் ஒரு பாட்டுப் பாடி விட்டு மாப்பிள்ளைக்குச் சந்தனம் பூசு" என்று சொல்லிக் கொடுத்தாள் பெண்ணுக்கு மாமி. பந்தலில் கேலியும் சிரிப்புமாக அமர்க்களப்பட்டது! -

கௌரி கல்யாணம் வைபோகமே ……!

"ஸைலன்ஸ்!" என்றார் அம்மாஞ்சி வாத்தியார்.

"நலங்கிட ராரா... ராஜகோபாலா... " என்று ருக்கு பாடியபோது அத்தனை பேரும் உற்சாகத்துடன் பலமாகச் சிரித்தார்கள். அமெரிக்கர்களுக்கு அந்தப் பாட்டின் அர்த்தம் விளங்கவில்லை. ஆனால், அவர்களும் மற்றவர்களுடன் சேர்ந்து கொண்டு சிரித்தார்கள்.

"ராஜகோபாலா" என்று தன் கணவன் பெயரைச் சொல்லிப் பாடிவிட்ட ருக்மிணிக்கு அப்போதுதான் தன்னுடைய தவறு புரிந்தது. சட்டென்று வெட்கம் சூழ்ந்து கொள்ளவே, நாக்கைக் கடித்துக் கொண்டு மெளனமாகிவிட்டாள்.

"எதுக்கு எல்லோரும் சிரிக்கிறீங்க?" என்று கேட்டாள் மிஸ்ஸ் ராக். .

"ருக்கு தன் ஹஸ்பெண்ட் பேரைச் சொல்லிவிட்டாள்; அதற்குத்தான் சிரிக்கிறோம்!" என்றாள் லோசனா.

"ருக்குவின் ஹஸ்பெண்ட் நேம் அவ்வளவு ஹ்யூமரஸ்ஸா?" என்று கேட்டாள் மிஸஸ் ராக்.

"இண்டியன் லேடீஸ் தங்கள் ஹஸ்பெண்ட் பேரைச் சொல்லக் கூடாது" என்றாள் லோசனா.

"சொன்னால் என்ன? ரொம்ப வேடிக்கையாயிருக்குதே, உங்கள் கஸ்ட்டம்ஸ்!" என்றாள் மிஸஸ் ராக்.

"ருக்கு பாடேண்டி!... என்ன வெட்கம்?" எனறாள் அத்தை. " .

"அத்தை, எனக்குப் பாட்டே மறந்து போச்சு!" என்று கூறி விட்டாள் ருக்கு.

"நான் பாடுகிறேன்" என்று கூறிவிட் டு லோசனா பாடத் தொடங்கினாள்.

"நலங்கிட ராரா ராஜகோபாலா
என்னி ஜென்மமுலெத்தி நின்னே கோரி உன்னுரா"

என்று அவள் சிந்துபைரவியில் பாடி முடித்ததும் உள்ளூர் நாதஸ்வரக்காரர் தவில் வாத்தியத்தின் துணையின்றி அந்தப் பாட்டை, அதே ராகத்தில், அப்படியே தன் குழலில் நையாண்டி செய்தார்! அதைக் கேட்டு, பந்தலே பிய்த்துக் கொண்டு போகும் படியாகச் சிரித்துக் குதுகலித்தனர் சுற்றியிருந்த பெண்மணிகள்.

அடுத்தாற்போல் ருக்கு தன் கணவனின் காலில் மஞ்சளை எடுத்துப் பூசி நலங்கினால் அழகாக வரிகள் போட்டு முடித்தாள்.

"ராஜா! இப்போது உன் டர்ன்’டா...உம்!" என்று தூண்டினான் மாப்பிள்ளைத் தோழன்.

உடனே ராஜா, தன் மனைவி ருக்குவின் பாதங்களில் மஞ்சளைப் பூசி செம்பஞ்சால் கீற்றுகளைக் கண்டபடி இழுத்து முடித்தான். .

பின்னர், பெண்ணும் மாப்பிள்ளையும் சுட்ட அப்பளங்களைத் தங்கள் இரு கைகளிலும் எடுத்துக் கொண்டு ஒருவருக் கொருவர் சுற்றி ‘பட்பட்’ டென்று மோதி உடைத்தார்கள். அந்தக் காட்சியை ஆங்காங்கே தத்தம் இல்லங்களில் டெலிவிஷனில் கண்டு களித்துக் கொண்டிருந்த அமெரிக்க மக்கள் "அடாடா! அப்பளங்களை வீணாக உடைத்து நொறுக்கி விட்டார்களே!” என்று வருத்தத்துடன் சூள் கொட்டினர். -

கடைசியில், மாப்பிள்ளையும், மணப்பெண்ணும் தேங்காயை உருட்டிப் பந்தாடும் படலம் ஆரம்பமாயிற்று. தோழிகளின் விருப்பப்படி ருக்கு தேங்காயை உருட்டாமல் கெட்டியாகப் பிடித்து வைத்துக் கொண்டாள். ராஜா அந்தக் காயை அவள் கைகளிலிருந்து வெடுக்கென்று இழுத்துக் கொள்ள முயற்சி செய்தும் முடியாமல் போகவே, எல்லோரும் கை தட்டி நகைத்தனர். கடைசியில் ருக்கு ஏமாந்திருந்த வேளையில் தேங்காயைப் பறித்துக் கொண்டுவிட்டான் அவன். அதைக் கண்ட தோழியர்கள் ராஜாவைப் பார்த்து, ‘இது பெரிய ஆண் பிள்ளைத்தனமோ? அடி ருக்கு தேங்காயை நீ இழுத்துக் கொள்ளடி!’ என்றனர்.
"ஒரு தேங்காயை வைத்துக் கொண்டு எதற்காக சண்டை போடுகிறார்கள்? ஆளுக்கொரு தேங்காயை கொடுத்து விடலாமே!" என்றாள் அமெரிக்க மாது ஒருத்தி.

கடைசியில், அத்தையும் மாமியும் வந்து ஆரத்தி சுற்றிக் கொட்டியதும் நலங்கு வைபவம் முடிவுற்றது.

சரியாக ஆறு மணிக்கு ரிஸெப்ஷன் ஆரம்பமாயிற்று. சங்கீத வித்வான்களை மிஸஸ் ராக்ஃபெல்லருக்கு அறிமுகப்படுத்தி வைத்தான் பஞ்சு. பிள்ளைக்குத் தகப்பனாரான லால்குடி கோபாலய்யர் ‘வயலின் வித்வான் எங்க ஊர் பிள்ளையாண்டான்’ என்று பெருமையோடு சொல்லிக் கொண்டார். - -

"மிருதங்க வித்வான் எங்க ஊர், பால்காட்!" என்று சொல்லிச் சிரித்தாள் லல்லி.

"சொந்த ஊர் அபிமானத்தைப் பாருங்களேன்" என்றான் பஞ்சு.

"எங்க ஊர் ஆசாமி இங்கே யாரும் இல்லையா?" என்று சுற்று முற்றும் பார்த்தபடியே கேட்டு விட்டுச் சிரித்தார் அரியக்குடி.

"கச்சேரி முடிந்ததும் இரவு டின்னருக்கு எல்லாரும் இருந்து சாப்பிட்டு விட்டுப் போக வேண்டும்" என்று உபசரித்தாள் மிஸஸ் ராக்ஃபெல்லர்.

இன்னொரு பக்கத்தில் டீ பார்ட்டி நடந்து கொண்டிருந்தது. ஏதாவது புதுமையாகச் செய்ய வேண்டும் என்பதற்காக, தொன்னையில் ஐஸ் க்ரீம் வைத்துக் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தான் பாப்ஜி!.

மாப்பிள்ளையும், மணப்பெண்ணும் சோபாவில் அமர்ந்து கச்சேரியை ரசித்துக் கொண்டிருந்தனர். பாதிக் கச்சேரியில் அம்மாஞ்சி வாத்தியார் வந்து மணமக்களை அழைத்தார்.

"எதுக்கு அவங்களை டிஸ்டர்ப் பண்றீங்க?" என்று கேட்டாள் மிஸஸ் ராக்.

"ப்ரைடும், ப்ரைட்க்ரூமும் அருந்ததி பார்க்கணும்!" என்றார் அம்மாஞ்சி.

"அருந்ததின்னா?"

"அருந்ததின்னா, அது ஒரு ஸ்டார்!"

"ஸ்டாரா? ஸ்டார்ஸெல்லாம்தான் ‘முகூரட்’ முடிஞ்சதுமே போயிட்டாங்களே!" என்றாள் மிஸஸ் ராக்.

"ஸினிமா ஸ்டார் இல்லை, மேடம் !ஆகாசத்திலே உள்ள அருந்ததி ஸ்டார்!” என்றார் அம்மாஞ்சி. -

"அப்படியா டெலஸ்கோப் வரவழைக்கட்டுமா?" என்று கேட்டாள் திருமதி ராக். . -

"அதெல்லாம் வேண்டாம்; ஆகாசத்திலே அருந்ததி நட்சத்திரம் இருக்குமிடம் எனக்குத் தெரியும்..." என்றார் அம்மாஞ்சி. -

"ஆமாம்; நீங்கதான் ஸயண்டிஸ்ட் அம்மாஞ்சியாச்சே!" என்றாள் மிஸஸ் ராக் சிரித்துக் கொண்டு.

கல்யாணத்துக்கு வந்தவர்கள் எல்லோரும் அன்று மாலையில் மஞ்சள் நீராடி மகிழ்ந்தனர். மஞ்சள் நீரை ஒருவர் மீது ஒருவர் வீசிக் கொண்டிருந்ததைக் கண்ட மிஸஸ் ராக்ஃபெல்லர், "ஏன் இப்படி யெல்லோ வாட்டரை வேஸ்ட் பண்றீங்க?" என்று கேட்டாள்.

"கல்யாணத்துக்கு வந்து போகிறவர்களுக்கு இப்படி ஒரு அடையாளம் செய்து அனுப்புவது எங்கள் வழக்கம். இவர்கள் துணியில் உள்ள மஞ்சள் கறையைப் பார்க்கிறபோது "கல்யாணத்துக்குப் போய் வந்தவர்கள்’ என்று மற்றவர்கள் புரிந்து கொள்வார்கள்" என்றான் பஞ்சு. -

"இந்தத் துணிகளைப் பார்க்கிறபோது எனக்கு ‘ப்ளீடிங் மெட்ராஸ்’ ஞாபகம்தான் வருகிறது" என்றாள் மிஸஸ் ராக்.

அன்று இரவே பாதிப் பேருக்கு மேல் ஊருக்குத் திரும்பிச் சென்றுவிட்டதால், கல்யாண வீடு களையும் கலகலப்பும் இழந்து காணப்பட்டது.

"காலையில் கிரகப்பிரவேசம் ஆனதும், சம்பந்தி வீட்டில் நமக்கெல்லாம் எதிர் விருந்து நடக்கும். அது முடிந்ததும் நாளைக்கு ஈவினிங் டைடல் பேஸினில் பாலிகை விடணும். அப்புறம் நாங்களும் புறப்பட வேண்டியதுதான்" என்றான் பாப்ஜி.

"எதிர் விருந்து என்றால் அது என்ன?" என்று கேட்டாள் மிஸ்ஸ் ராக். -

‘ஆப்போஸிட் டின்னர்!’ என்று தமக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் அதை மொழி பெயர்த்தார் அம்மாஞ்சி.

"அத்தோடு மேரேஜ் கம்ப்ளீட் ஆயிடுமா? ..

"அப்புறம் சாந்தி கல்யாணம் இருக்கு" என்றார் அம்மாஞ்சி வாத்தியார்.

"வாட்! வாட்! சாந்தியா? அது யார் அது? ருக்கு கல்யாணம் ஒண்ணே போதும். வேறே யார் கல்யாணமும் இப்ப வேண்டாம்!" என்றாள் மிஸஸ் ராக். r

முக்கோண வடிவமாகக் கோடு வரைந்து அந்தக் கோணங்களில் மூன்று முனைகளிலும் மூன்று புள்ளிகள் வைத்தால் எப்படி இருக்கும்? லிங்கன் மண்டபம், ஜெபர்ஸன் மெமோரியல், வாஷிங்டன் ஸ்தூபி ஆகிய மூன்றும் அம்மாதிரி அமைப்பில்தான் ஒன்றை ஒன்று பார்த்துக் கொண்டு நின்றன. -

இந்த முப்பெரும் ஞாபகச் சின்னங்களுக்கு நடுவில் அமைந்திருப்பதுதான் டைடல் பேஸின்! வாஷிங்டன் நகரிலேயே இயற்கையும், செயற்கையும் கைகோத்துக் களி நடம் புரியும் அழகுமிக்க சூழ்நிலை இது.

டைடல் பேஸினைச் சுற்றிலும் வரிசையாக நிற்கும் செர்ரி மரங்கள் வசந்த காலத்தில் புஷ்பங்களாகப் பூரித்துச் சிரிக்கும் நாட்களில், ஆண், பெண் ஜோடிகள் அந்தத் தடாகத்தைச் சுற்றிலும் உல்லாசமாக உலாவிக் கொண்டிருப்பார்கள். நிலவு இல்லாத நாட்களில், உயரத்திலுள்ள ஸர்ச் லைட்டுகள் அந்தப் பூக்களின் மீது ஒளி வெள்ளத்தை வீசிப் பாய்ச்சும்போது அந்த இடம் கண்கொள்ளாக் காட்சியாகத் திகழும்.

ஜெபர்ஸன் மண்டபத்துக் கெதிரில் டைடல் பேஸின் படித்துறையில்தான் பாலிகை விடுவதென முடிவு செய்யப்பட்டிருந்தது. திருமண கோஷ்டியினர், தங்கள் கார்களை அங்கே கொண்டு போய் நிறுத்தினார்கள்.

டைடல் பேஸினும் செர்ரி மரங்களும் நிலவொளியைக் குடித்துவிட்டுப் போதையில் மயங்கிக் கிடந்தன. எல்லோரும் பாலிகைக் கிண்ணங்களுடன் காரை விட்டு இறங்கித் தடாகத்தின் கரையில் போய் நின்றார்கள்.

ருக்குவும், ராஜகோபாலனும் வெள்ளிக் கம்பிகளாக முளைவிட்டிருந்த இளம் பாலிகைப் பயிர்களைத் தண்ணிரில் மிதக்க விட்டனர்.

எங்கிருந்தோ வேகமாகப் பாய்ந்து வந்த மீன் கூட்டம் ஒன்று அவற்றைக் கொத்திக் கொண்டு போயிற்று.

" ‘லார்ஜ்-மெளத் பாஸ்! ’ என்ற இந்த வகை மீன்கள் இங்கே அதிகம்!" என்றாள் மிஸஸ் ராக்.

பாலிகை விடும் சடங்கு வெகு சீக்கிரமே முடிந்துவிட்டது. ஆனாலும் ஒருவருக்கும் அந்த இடத்தைவிட்டுப் போகவே மனம் இல்லை.

` "எல்லோரும் இப்படிப் புல் தரையில் சற்று நேரம் உட்கார்ந்து தமாஷாகப் பேசிக் கொண்டிருக்கலாமே!" என்ற யோசனையை வெளியிட்டாள் மிஸஸ் மூர்த்தி.

"வெரி குட் ஐடியா தோசையும் புளியோதரையும் செய்து கொண்டு வந்திருக்கிறார்கள். அதையும் இங்கேயே ‘பிக்னிக்’ மாதிரி சாப்பிட்டுவிட்டுப் போய் விடலாம்” என்றார் அய்யாசாமி.

"எடுங்கள் அதை" என்றார் மாமா.

அத்தையும், பாட்டியும் ஆளுக்கு இரண்டு தோசையும், கொஞ்சம் புளியோதரையும் எடுத்து வைத்தார்கள்.

"மிளகாய்ப்பொடி இருக்கா?" என்று நாக்கில் ஜலம் ஊறக் கேட்டார் மூர்த்தி.

சாப்பிட்டு முடிந்ததும் சற்று நேரம் எல்லோரும் தமாஷாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். -

"இந்த இடத்தில் உங்களோடு சேர்ந்து ஒரு குரூப் போட்டோ எடுத்துக் கொண்டால் எப்போதும் அது ஒரு ஞாபகார்த்தமாயிருக்கும்" என்று தன்னுடைய விருப்பத்தை வெளியிட்டார் அய்யாசாமி.

"ஓ. எஸ்! அதுவும் சரியான யோசனைதான். ஜெபர்ஸன் மண்டபப் படிகளில் நின்று எடுத்துக் கொள்ளலாமே! " என்றாள் மிஸஸ் ராக். -

லோரிட்டாவும், வசந்தாவும் சற்று தூரத்தில் செர்ரி மரங்களைச் சுற்றி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

போட்டோ என்றதும் சாம்பசிவ சாஸ்திரிகள் வாயிலிருந்த வெற்றிலைச் சாற்றைத் துப்பிவிட்டு வர ஓடினார்.

"ஒய்! கண்ட இடத்தில் வெற்றிலையைத் துப்பக் கூடாது. அமெரிக்காள் பார்த்தால் ஏதாவது நினைத்துக் கொள்வார்கள்" என்றார் அம்மாஞ்சி.

"என்ன நினைத்துக் கொள்ளப் போகிறார்கள் ஆரத்தி சுற்றிக் கொட்டியிருக்கிறது என்று எண்ணிக் கொள்வார்கள்" என்றார் சாஸ்திரிகள்.

மிஸஸ் ராக்ஃபெல்லர் எல்லோருக்கும் நடுநாயகமாக நின்று கொண்டாள். அந்தச் சீமாட்டிக்கு இரு பக்கத்திலும் மணப் பெண்ணும் மாப்பிள்ளையும் நின்றனர். ஒரு பக்கம் சம்பந்தி வீட்டாரும், இன்னொரு பக்கம் பெண் வீட்டாரும் நின்று கொண்டனர். ஞாபகமாகப் பிள்ளைக்கு மாமாவை அழைத்துப் பிள்ளையின் பக்கத்தில் நிற்கச் சொன்னாள் மிஸஸ் ராக். மாமாவுக்கு அதில் ரொம்பத் திருப்தி! வசந்தாவும், லோரிட்டாவும் ருக்குவின் பக்கத்தில் நின்றார்கள். குழந்தைகள் கீழ்ப்படியில் வரிசையாக உட்கார்ந்து கொண்டனர்.

"லல்லியும் பஞ்சுவும் எங்கே?" என்று திடீரென்று ஒரு குரல் எழுந்தது.

"அவர்கள் இரண்டு பேரையும் ரொம்ப நேரமாகவே காணோம்! எங்காவது ஜோடியாகக் கைகோத்துக் கொண்டு போயிருப்பார்கள். வசந்த காலமோன்னோ? என்று விஷமமாகச் சிரித்தார் அம்மாஞ்சி.

அதற்குள் லல்லியும், பஞ்சுவும் தொலைவில் நடந்து வந்து கொண்டிருப்பதைக் கண்ட அய்யாசாமி, "அதோ வருகிறார்களே!" என்றார்.

அவர்கள் வந்ததும், "பஞ்ச்! அதுக்குள்ளே எங்கே போயிட்டீங்க? குரூப்லே வந்து நில்லுங்க" என்றாள் மிஸஸ் ராக்,

குரூப் போட்டோ எடுத்து முடிந்ததும் எல்லோரும் காரில் ஏறி சம்மர் ஹவுஸை அடைந்தனர்.

"சம்பந்தி வீட்டார், பெண் வீட்டார் இவர்களைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் இன்று இரவே புறப்பட்டுப் போகிறார்களாம்" என்றான். பஞ்சு.

"ஸாஸ்ட்ரீஸெல்லாம் கூடவா?" என்று கேட்டாள் மிஸ்ஸ் ராக்.

"ஆமாம். அவர்களும் கூடத்தான்" என்றான் பஞ்சு.

"அம்மாஞ்சி, அப்பு ஸாஸ்ட்ரி, ஸாம்ஸன் ஸாஸ்ட்ரி இவங்க மூணு பேரும் மட்டும் நாளைக்குப் போகட்டும்! ஆயிரம் லாஸ்ட்ரீஸ்லே யாராவது ஒருத்தர் இந்த ஜார்ஜ் டவுனிலேயே பர்மனெண்ட்டாக இருந்து பிள்ளையார் கோயில் பூஜையைக் கவனித்துக் கொள்ளட்டும்" என்றாள் மிஸஸ் ராக்ஃபெல்லர். -

"சரி மேடம். நான் அதற்கு வேண்டிய ஏற்பாட்டைச் செய்துவிடுகிறேன்" என்றான் பஞ்சு.

"ஸாஸ்ட்ரீஸுக்கெல்லாம் ஈச் டு ஹண்ட்ரட் டாலர்ஸ் கொடுத்துடுவோம். அதைத் தவிர ஆளுக்கு ஒரு வாட்ச்! போதுமா?" என்றாள் மிஸஸ் ராக். –

"எதேஷ்டம்னா இந்த மாதிரி மனசு யாருக்கு வரும்!" என்றார் அம்மாஞ்சி. - -

"இண்டியாவின் வேதிக் கல்ச்சரை ஸாஸ்ட்ரீஸுங்க தான் காப்பாத்திக்கிட்டிருக்காங்க. தே ஆர் ப்ரம் தி லாண்ட் ஆப் சங்கராச்சார்யா அவங்களையெல்லாம் நல்லபடியா கெளரவமா வைத்துக்கொள்ள வேண்டியது ரொம்ப இம்பார்ட்டெண்ட்" என்றாள் மிஸஸ் ராக்.

"ஆகா! சத்தியமான வார்த்தை ! " என்றார் சாம்பசிவ சாஸ்திரிகள்.

"அம்மாஞ்சி வாட்யார், ஸாம்ஸன் ஸாஸ்ட்ரி, அப்பு லாஸ்ட்ரி மூன்று பேருக்கும் ஈச் தெளஸண்ட் டாலர்ஸ், ஒன் ரிஸ்ட் வாட்ச், அண்ட் ஒன் ஸ்கூட்டர்" என்றாள் மிஸஸ் ராக்.

சந்தோஷ மிகுதியால் அம் மூவருக்கும் சற்று நேரம் பேச்சே கிளம்பவில்லை.

"அங்க்கிள் ஸாமைக் கூப்பிடுங்கள்" என்றாள் மிஸஸ் ராக்.

அவர் வந்ததும், "உங்களுக்கு ஒரு கார் ப்ரஸண்ட் பண்ணியிருக்கேன்" என்றாள் மிஸஸ் ராக்.

"எனக்கா? எனக்கெதற்கு கார்?" என்று கேட்டார் பிள்ளைக்கு மாமா.

"நீங்க மனசு வைக்கலேன்னா ஷம்பந்தி ஷண்டையே நடந்திருக்காதே! ஷம்பந்தி ஷண்டை நடக்கல்லேன்னா நானும் என் ப்ரண்ட்ஸும் ரொம்ப ஏமாந்து போயிருப்போமே" என்று கூறி, மாமாவின் கையைக் குலுக்கினாள் மிஸஸ் ராக்.

அடுத்தாற்போல் பாப்ஜியை அழைத்து, வைர மோதிரம் ஒன்றும் ரிஸ்ட் வாட்ச், ஒன்றும் அவனுக்குப் பரிசாகக் கொடுத்துவிட்டு, "பாப்ஜி, உனக்கு நான் எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. கடைசி நேரத்தில் நீ டாக்ஸ் அனுப்பலேன்னா ஜான்வாசமே ‘டல்’ லாப் போயிருக்கும்" என்று அவன் முதுகில் ஒரு ‘ஷொட்டு’ கொடுத்தாள்.

"பஞ்சுவுக்கு என்ன கொடுக்கப் போறீங்க?" என்று கேட்டார் அய்யாசாமி.

"பஞ்ச்சுக்கு நான் ஒண்ணும் கொடுக்கப் போறதில்லே. தாங்க்ஸ் கூடச் சொல்லப் போறதில்லை" என்று கூறியபோது உணர்ச்சிப் பெருக்கில் அந்தச் சீமாட்டியின் குரல் கரகரத்தது.

"லல்லி! உனக்கும் நான் ஏதும் கொடுக்கப் போவதில்லை" என்று கூறிய மிஸஸ் ராக், "பஞ்ச்! இந்தா இவளை உனக்குப் பரிசாகவும், லல்லிக்கு உன்னைப் பரிசாகவும் கொடுக்கப் போகிறேன். உங்கள் இருவருக்கும் அடுத்த, மே மாதம் பால்காட்டில் திருமணம் நடக்கும். நானே நேரில் வந்து அதை நடத்தி வைக்கப் போகிறேன்" என்று இருவர் கைகளையும் சேர்த்து வைத்தாள்.

வாஷிங்டன் விமான கூடம்.

மணப்பெண் ருக்கு, மணமகன் ராஜா, பஞ்சு, லல்லி, பாப்ஜி, அப்யாசாமி ஐயர், அம்மாஞ்சி, சாஸ்திரிகள், மாமா, பாட்டி, அத்தை எல்லோரும் மிஸஸ் ராக்ஃபெல்லரிடம் வந்து ஒவ்வொருவராக விடை பெற்றுக் கொண்டிருந்தனர். மிஸஸ் ராக்ஃபெல்லர் பொங்கி வந்த கண்ணீரைத்துடைத்துக் கொண்டே, "உங்களை யெல்லாம் விட்டுப் பிரியவே மனமில்லை. நீங்க எல்லோருமே என்னிடம் ரொம்ப அன்போடு பழகிக் கொண்டிருந்தீர்கள். உங்களையெல்லாம் மறுபடியும் எப்போது பார்க்கப் போகிறேனோ?” என்றாள்.

"அதற்கென்ன? சீக்கிரமே ரிஷிபஞ்சமி விரதம் எடுத்துக் கொள்ளுங்கள். நாங்கள் எல்லோரும் வந்து நடத்தி வைக்கிறோம்" என்றார் அம்மாஞ்சி.

அத்தையும், பாட்டியும் கட்டுச் சாத மூட்டையுடன் விமானத்தை நோக்கி நடந்தனர். -

மணப்பெண் ருக்மிணி கலங்கிய கண்களுடன் ராக்ஃபெல்லர் மாமிக்கு நமஸ்காரம் செய்தாள்.

"அழக் கூடாது; ஸ்மைல் பண்ணணும். தெரிஞ்சுதா? அடிக்கடி லெட்டர் போட்டுகிட்டு இரு. நெக்ஸ்ட் இயர் நான் இண்டியாவுக்கு வரப்போ உன்னை ‘பேபி’யோடு பார்க்கணும்" என்று செல்லமாக அவள் கன்னத்தைக் கிள்ளி விடை கொடுத்தனுப்பினாள் ராக்.

எல்லோரும் ராக்ஃபெல்லர் மாமிக்குக் கைகூப்பி நமஸ்காரம் செய்துவிட்டுப் போய் விமானத்தில் ஏறிக் கொண்டனர். விமானம் மேல் நோக்கிப் பறக்கத் தொடங்கியது. மிஸஸ் ராக்ஃபெல்லர் அந்த விமானத்தையே பார்த்தவண்ணம் கைகளை ஆட்டிக் கொண்டிருந்தாள். அந்தச் சீமாட்டியின் கண்களில் பனித் திரையிட்டது.

சுபம்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top