• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் அடைமழை காலம் - 19

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

பர்வீன்.மை

மண்டலாதிபதி
Author
Joined
Jun 20, 2019
Messages
266
Reaction score
2,133
Location
Chennai
காதல் அடைமழை காலம் – 19

அத்தியாயம் – 20

விடியற்காலை 4.15 மணி

பாலை பொழியும் நிலவை ரசிக்க கூட ஆளில்லாமல் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தது கமர் வீடு. பிரமாண்டமான அந்த பெரிய கட்டிலில் மைசரா ஒரு ஓரத்திலும், ரிஸ்வி மறு ஓரத்திலும் அவர்களுக்கே தெரியாமல் தூங்கி கொண்டிருந்தனர். ரிஸ்வியின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த அவனது அலைபேசி மௌனமாய் குறுகுறுத்தது. போதையின் பிடியில் எதையும் உணராது உறங்கி கொண்டிருந்தவனை விடாமல் குறுகுறுத்து எழுப்பியது அலைபேசி.

“ம்ப்ச்... சை....யாரது தூங்க விடாம இம்சை பண்றது” எரிச்சலாக முணுமுணுத்தபடி அலைபேசியை எடுத்தான். மெல்ல கண்களை திறக்க கல்லை கட்டி விட்டது போல கனத்தது இமைகள். முயன்று விழித்தவன் கண்களை சுருக்கி திரையை பார்க்க,’ மாம் காலிங்’ என ஒளிர்ந்து கொண்டிருந்தது. சட்டென எழுந்தமர்ந்தவன் திரையையே வெறித்து பார்த்தான். சத்தியமாய் இந்த நிலைமையில் அவனால் பேச முடியாது. அலைபேசியை அப்படியே தலையணை அருகே போட்டவன், மீண்டும் படுக்கையில் விழுந்தான். இப்போது சற்றே போதை தெளிந்திருந்தது. இரவு நடந்தது எல்லாம் அரைகுறையாக ஞாபகம் வர, அவன் மனம் உலை களமாய் கொதித்தது.

மீண்டும் குறுகுறுத்த அலைபேசியை திரும்பி பார்த்தவனின் விழிகளில் அப்போது தான் அருகில் ஓர் உருவம் வரி வடிவமாய் தெரிந்தது.

“ எம்மாடி.... நேரங்கெட்ட நேரத்தில வெளியே சுத்துனதுல மோகினி பிசாசு ஏதும் பின்னாடியே வந்துடுச்சா?” கண்ணை கசக்கி விட்டு பார்க்க, இப்போதும் அந்த உருவம் அதே போல் தெரிந்தது. கூடவே லேசான நறுமணமும் நாசியில் உரைத்தது.

“ என்னடா இது....பிசாசு மல்லிகை பூ வைக்கும் னு கேள்விபட்டிருக்கேன். இது பெர்ப்யூம்( perfume) லாம் போட்டிருக்கு” என குழம்பியவனுக்கு அப்போது தான் தான் அறை மாறி வந்துவிட்டோமோ என தோன்றியது.

“ அய்யய்யோ.... ரிதா ரூமுக்கு வந்திடேனா?” என பதறியவன் உற்று பார்க்க நிலவொளியில் தெரியும் ஓர் நிலவாய் தூங்கி கொண்டிருந்தாள் மைசரா. அடித்த போதை எல்லாம் சர்ரென இறங்க,” இவளா???? இதுக்கு அந்த மோகினி பிசாசு கிட்டயே மாட்டியிருக்கலாமே” என புலம்பினான். தலை வேறு வலிக்க, இருட்டில் எதையும் ஆராய முடியவில்லை. கட்டிலில் அமர்ந்தபடியே அருகே இருந்த மின்விளக்கு பொத்தானை போட்டான். கைகள் இரண்டையும் கன்னத்துக்கு அடியில் கொடுத்து சுகமாக தூங்கி கொண்டிருந்தாள் மைசரா. சற்று நேரம் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன், அப்போது தான் அதை செய்தான்......

பால்கனி வழியே வீசிய காற்றில் அவளது பொன் நெற்றியில் ஒயிலாக வந்து விழுந்தது முடி கற்றை. அதில் லேசாய் அவள் உசும்ப, பதறி போனவன் அவனையுமறியாமல் அவள் முகதருகே குனிந்து ஊதினான். அவன் ஊதியதில் முடி ஒதுங்கியதோ இல்லையோ அவள் துயில் கலைந்தது. தன் முகத்திற்கு வெகு அருகில் உதட்டை குவித்தபடி ஒரு ஆடவனின் முகம் தெரிய, குப்பென அடித்த வாடையில் குடலை பிரட்ட, அவன் தன்னை முத்தமிட வாரானோ என மேனி நடுங்க, அலற திறந்த வாயை கையருகே கிடந்த சிறிய தலையணை கொண்டு பொத்தினான் ரிஸ்வி. அவன் அழுத்தியதில் மூச்சு முட்ட, கைகள் தலையணையை எடுக்க முயல, பயத்திலும் பதட்டத்திலும் கருவிழிகள் இங்கும் அங்கும் அலைந்தது.

அவள் மூச்சுக்காக போராடுவதை உணர்ந்தவன்,” ஷ்..... சத்தம் போடாதே” என எச்சரித்து விட்டு தலையணையை விலக்கினான். சடாரென எழுந்து நின்றவள் சில நொடிகள் மூச்சு வாங்கினாள். எச்சிலை கூட்டி விழுங்கி அவனை ஏறிட்டு பார்த்தவள், அது தன்னுடன் ரயிலில் வந்தவன் என புரிய மீண்டும் அலற தொடங்கினாள்.

“காகா.... ஆச்சா எல்லாரும் வாங்க.... என்னை காப்பாதுங்க.... காப்பாத்துங்க”

“ ஏய் சத்தம் போடாத னு சென்னேனில்ல.... சுப்....” என அதட்ட, இரண்டு கைகளாலும் தன் வாயை பொத்தி கொண்டு விசும்பினாள். மனம் தாறுமாறாக யோசித்து தொலைத்தது. ரிஸ்விக்கு என்ன செய்வதேன்றே தெரியவில்லை. இவளுக்கு எப்படி புரிய வைப்பது என யோசித்து கொண்டிருக்க மைசரா வெளியே ஓட முயன்றாள்.

இவளை விட்டால் ஊரை கூட்டி பஞ்சாயத்து வைத்துவிடுவாள் என எண்ணியவன், கட்டிலிலிருந்து பாய்ந்து வந்து அவள் முன்னே நின்றான். அவன் தன்னை வழிமறித்ததில் அரண்டு போனவள்,”

“ ஹே.... நீ.... நீ எப்படி இங்க வந்த? நான் ட்ரெயின்ல தெ....தெரியாம உன் கூட சண்ட போட்டுட்டேன். அதுக்காக என்னை பாலோ பண்ணிட்டு என் வீடு வரைக்கும் வர்றதெல்லாம் ரொ....ரொம்ப தப்பு.... ப்ளீஸ்.... என்னை விட்டுடு.... என்னை ஒன்னும் பண்ணிடாத” என கெஞ்ச, ரயிலில் தன்னை முறைத்தபடியே திரிந்தவள் இப்போது தன்னிடம் கெஞ்சி கொண்டிருப்பதை சுவாரசியமாக பார்த்துக் கொண்டிருந்தான் ரிஸ்வி.

அவன் பார்வையில் கோபம் இல்லாமல் குறும்பு தெரிய நடுங்கி போனாள் மைசரா.

“ ஆமா.... ஸ்டேஷன்ல காட்டுனியே குட்டையா, சிவப்பா ஒரு ஆளு.... நீ அவரோட தங்கச்சி தானே? உனக்கு இங்க என்னமா வேலை? எப்படி....எப்படி.... நான் உன் வீட்டுக்கு வந்திருக்கேனா? ஹலோ.... நீ தான் என் வீட்டுக்கு வந்திருக்கே.” என்றதும், கண்களை குடையென விரித்தவள் அதிர்ச்சியில் அவனையே பார்த்தாள்.

“ என்ன பாக்குற???? இது எங்க வீடு. நான் ரிதாவோட கசின் ரிஸ்வி....ஜிஷான் ரிஸ்வி....” என கர்வமாக கூற, அதுவரை அவனை கண்டு அஞ்சியவள் இப்போது கொதிக்க தொடங்கினாள்.
“ ம்.... அதானே பார்த்தேன். அந்த ரசியாவோட வளர்ப்பு வேற எப்படி இருக்கும்?” மனதினுள் எண்ணியவள்,” இ....இங்க பாருங்க... ஒரு பொண்ணு படுத்திருக்க ரூமுக்குள்ள வர்றதே தப்பு. அதுலயும் குடிச்சிட்டு இப்படி வழி மறிச்சி கலாட்டா பண்றதெல்லாம் ரொம்ப ரொம்ப தப்பு. முதல்ல என்னை வெளியே போக விடுங்க. இல்ல.... நான் சத்தம் போடுவேன்.” என்றாள்.

ஏதோ சற்று சாந்தமாக பேசிக் கொண்டிருந்தவன் ,” ஏய்.... என்ன மிரட்டுறியா? எங்க சத்தம் போடு பார்ப்போம்.... “ என எகிறியவன்,” ஒரு பொண்ணு படுத்திருக்க ரூமுக்குள்ள வர்றது தப்பு தான். ஆனா அந்த பொண்ணு ஏன் என் ரூமுக்குள்ள படுத்தா? ம்?” என கேட்க, மலங்க மலங்க விழித்தாள்.

“ ஆச்சா.... இரண்டாவது ரூம் னு தானே சொன்னாங்க? சரியா தானே வந்தோம்..... ம்.... இந்த குடிக்காரன் போதையில ரூம் மாறி வந்துட்டு நம்மள அதட்டுறான்” என யோசித்துக் கொண்டிருந்தவளின் முகத்திற்கு முன்னே சொடுக்கியவன்,” இங்க நடந்ததை ரிதா கிட்டயோ, ரமீஸ் கிட்டயோ இல்ல வேற யார் கிட்டயாவது சொன்னே னு தெரிஞ்சிச்சி அப்புறம் நடக்குறதுக்கு நான் பொறுப்பில்ல. புரிஞ்சிதா.... போ....” என கர்ஜித்தான்.

அவன் அறையிலிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடி வந்தவளுக்கு இருட்டில் எங்கே செல்ல என தெரியவில்லை. மாடி படியில் தடதடவென ஓடி வந்தவள் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ஹால் சோபாவில் அமர்ந்தாள். பயத்தில் வேர்வை அருவியாய் வழிய, இதயம் எம்பி வாய் வழியே குதித்து விடும் அளவிற்கு தாறுமாறாக துடித்தது. தான் வந்த முதல் நாளிலேயே இத்தகைய அனுபவத்தை சற்றும் எதிர்பார்க்கவில்லை மைசரா. பயத்திலும் பதட்டத்திலும் தேம்பி தேம்பி அழுதாள். தான் வந்தது தவறோ? என பயந்தாள். ஒரு ஆடவன் உள்ளே நுழைந்து, அவள் அருகே படுத்து, அவளை முத்தமிட வரும் வரை எதையும் உணராது தூங்கி கொண்டிருந்ததை நினைத்து தன் மீதே வெறுப்பு கொண்டாள்.

இஸ்லாம் தந்தை, உடன் பிறந்த அண்ணன் தவிர ஒரு ஆணும், பெண்ணும் தனித்திருப்பதை தடுக்கிறது. அவர்கள் எத்தகைய உன்னதமான நோக்கத்தோடு சந்தித்து கொண்டாலும் அதை வரவேற்பதில்லை. ஏனெனில் அதில் இருவரின் கண்ணியமும் கெட வாய்ப்புள்ளது. தேவையற்ற சஞ்சலங்கள், கருத்துகள், விமர்சனங்கள் எழும். ஆதலால் இறையச்சம் உள்ள எவரும் ஒருவரோடு தனித்திருப்பதை விரும்ப மாட்டார். மைசராவும் அதை நினைத்து தான் துயரம் கொண்டாள்.

எண்ணற்ற எண்ணங்களால் மனம் குழம்பி கொண்டிருக்க, காலை வேளை தொழுகைகான அழைப்பொலி அவளது சிந்தையை கலைத்தது. விடியற்காலை, மதியம், மாலை, அந்தி நேரம், இரவு என ஒரு நாளிற்கு ஐந்து முறை தொழ வேண்டும். ஒவ்வொரு தொழுகைக்கும் பள்ளிவாசல்களில் பாங்கு (அழைப்பொலி) கூறப்படும். பாங்கு சொல்லபட்டதும் ஆண்கள் கூட்டாக பள்ளிவாசல்களிலும், பெண்கள் வீடுகளிலும் தொழ வேண்டும்.

மைசரா கண்களை துடைத்து கொண்டு மௌனமாக பாங்கு சத்தத்தை செவியுற்றாள். அதனை தொடர்ந்து கமரின் அறை கதவு திறக்கப்பட, ஓரளவு தன்னை சரிபடுத்தி கொண்டாள்.

அறையிலிருந்து வெளியே வந்து ஹாலில் விளக்குகளை போட்டு விட்டு திரும்பியவர், மைசராவை கண்டு திகைத்தார்.

“ மைசரா.... என்னம்மா இங்க உட்கார்ந்திருக்கே? நீ மேல தானே தூங்க போனே?”

நடந்ததை சொல்லிவிடலாம் என ஒரு மனம் உந்தினாலும், வந்த அன்றே பிரச்சனை செய்வதில் அவளுக்கு உடன்பாடில்லை. இப்போது இதை சொல்லி என்ன ஆக போகிறது? நடந்ததை மாற்றவா முடியும்? மிஞ்சி மிஞ்சி போனால் அவனை அழைத்து கண்டிப்பார்கள்? ஒரு ஆடவனோடு இரண்டு மணி நேரம் தனித்திருந்தோம் என்பதை கூறினால் தனக்கு தான் அவமானம் என்று நினைத்தவள் இதை இப்படியே விட்டுவிடலாம் என முடிவு செய்தாள்.

“ என்னம்மா கேட்டுட்டே இருக்கேன்.... நீ அப்படியே நிக்குற?”

“ ஓ.... ஒன்னுமில்ல ஆச்சா..... அது.... அது...”

“ பஜர் தொழுகை ( விடியற்காலை தொழுகை) தொழ வந்தியா?”

“ ஆ.... ஆமா ஆச்சா”

“ ரொம்ப சந்தோஷமா இருக்குமா.... இந்த காலத்து பிள்ளைங்க எங்கே பஜர் தொழுகைக்கு எழுந்துக்குதுங்க. ஆனா ரிதா சொல்லிருக்கா..... நீ அஞ்சு வேளையும் தவறாம தொழுதுடுவ னு. நைட் நேரங்கழிச்சி தூங்கினியே விடியற்காலைல எழுந்துக்க முடியுமோ முடியாதோ னு நெனச்சேன். “ பேத்தியை புகழோ புகழ் என புகழ, அமைதியாக நின்றிருந்தாள் மைசரா.

“ சரி டா. அந்தா.... இடது பக்கம் தெரியுதில்ல.... முதல் ரூம்பு.... அது தான் தொழுகை ரூம்பு... முகம் கழுவிட்டு வா.

“ சரி ஆச்சா...என்னோட லக்கேஜ் எல்லாம் எங்க இருக்கு?”

சுற்றும் முற்றும் தேடியவர்,“ அந்தா.... என் ரூம்பு வாசல்ல தான் இருக்கு.”

“ சரி ஆச்சா.... நீங்க போய் தொழுவுங்க. நான் முகம் கழுவிட்டு வரேன்” என்றவள் அவர் போகும் வரை நின்று எந்த அறை என உறுதி செய்து கொண்டு, பெட்டியோடு கமர் அறைக்குள் சென்றாள். ரிதா இன்னமும் தூங்கி கொண்டிருந்தாள். அவளுக்கு தெரியும் மாத்திரை சாப்பிட்டால் அவள் தாமதமாக தான் எழுவாள். தன் தோழி இருந்திருந்தால் இந்த சம்பவமே நடந்திருக்காதே என நினைத்தவளுக்கு மீண்டும் கண்ணீர் துளிர்க்க, பெருமூச்சு விட்டபடி குளியலறை நோக்கி சென்றாள்.

- மழை வரும்

தங்கள் ஆதரவை எதிர்நோக்கும்

- பர்வீன்.மை
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top