விடியாத இரவுகள் 25

Yuvakarthika

Author
Author
SM Exclusive Author
#1
விடியாத இரவுகள் 25

நாட்கள் வேகமாக கடந்து செல்வதைப் போல் தோன்றியது. சங்கடங்கள் எல்லாம் விலகி போக, இப்போது அந்த வீட்டில் சந்தோசமும் உற்சாகமும் மட்டுமே நிறைந்திருந்தது.

உச்சி வேளை பொழுதில், வீட்டின் சமையலறையை போர்க்களம் ஆக்கி கொண்டிருந்தாள் மகேஸ்வரி.

சிடுசிடுத்த முகத்துடன் டனாடன் என பாத்திரங்கள் உருள, மதிய உணவு போராட்டமாக தயாராகி கொண்டிருந்தது.

மகியின் இந்த மாற்றம் புதிது. இதுவரை மகியை யாரும் இத்தனை எரிச்சலாக பார்த்ததில்லை.

இன்று தங்கள் 'மகி மேடமுக்கு என்னாச்சு' என்பது புரியாமல் வேலையாட்களும் கமுக்கமாக நழுவிக் கொண்டனர்.

வானதியும் பூரணியும் காலையிலேயே ஏதோ ஷாப்பிங் என்று கழன்றி கொண்டனர்.

வீட்டு ஆண்களுக்கு இருக்கவே இருக்கிறது ஆஃபிஸ் வேலை. இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அவர்களுக்கான சமையலை தயார் செய்து முடிக்க வேண்டும்.

ஆனால், மகி ஏடாகூடமாக பாத்திரங்களை உருட்டுவதைப் பார்த்தால், சமையல் முடிகிற வழியாய் காணோம்!

அமர் வந்து தன் பின்னால் நின்றதை கூட உணராமல், தனக்குள்ளே முணுமுணுத்தபடி, தேவையான காய்கறிகளை அரிந்து கொண்டிருந்தாள்.

'அப்பாவாம் அப்பா,ஏன்? சாரு! அந்த புவிக்கு கூட புத்தி இல்ல! கல்யாணம் முடிச்சு துரத்தி விட்ட உடனே, இந்த மகிய மறந்துட்டாங்க இல்ல, ஃபோன் செஞ்சு சாரி சொல்லட்டும் கவனிச்சிக்கிறேன் அவங்கள!'

அவள் கைகளில் மாட்டி கொண்ட அந்த புடலங்காய் உண்மையிலேயே பாவம்!

அமர் பொறுமையிழந்து அவள் இரு தோளையும் பற்றி உலுக்கினான். சுய நிலைக்கு வந்தவள் அங்கு அமரை பார்த்து விழித்தாள்.

"அமர், இந்த நேரத்தில நீங்க இங்க" குழப்பமாக இழுக்க,

"உனக்கு என்னாச்சு மகி, ஏன்? காலையில் இருந்து ஒரு மாதிரியா இருக்க?" அமர் புருவம் சுருக்கி கேட்டான்.

அவள் எதிர் பக்கமாய் திரும்பி தக்காளியை அரிந்த படி, "நான் எப்பவும் போல தான் இருக்கேன்! நீங்க தான் புதுசா ஆஃபிஸ் நேரத்தில வீட்டுக்கு வந்திருக்கீங்க?" என்று பேச்சை மாற்றினாள்.

"இன்னைக்கு பெருசா வேலை எதுவும் இல்ல, அதான் நான்!" அமர் வாய்க்கு வந்த காரணத்தை சொல்ல, மகி மேலோட்டமான தலையசைப்போடு தன் வேலையில் கவனமாயிருந்தாள்.

அமர் பற்களை கடித்தபடி, அவளை மறுபடி தன் பக்கம் திருப்பினான்.

"நான் சொல்றதை கூட கேட்காம, அப்படி என்ன செய்திட்டிருக்க?" அமர் படபடத்தான்.

மகி அவன் முகத்தை நேராய் பார்த்து, "தினமும் உங்களுக்கு என்னோட ரெண்டு வார்த்தை பேசக்கூட நேரமிருக்காது! இன்னைக்கு என்ன புதுசா அக்கறை?" என்று காரமாகவே கேட்டாள்.

அமரின் முகம் சுருங்கி போனது. "சாரி சாரி மகி, ஆஃபீஸ்ல புது டார்கேட் ரீச் பண்ண வேண்டிய கட்டாயத்தில உன்னோட என்னால டைம் ஸபெண்ட் பண்ண முடியல, ப்ளீஸ் சாரிடி" என்று கொஞ்சலாக கெஞ்சினான்.
மேலும், "இப்ப நான் ஃப்ரீயா இருக்கேன், எங்காவது வெளியே போலாமா?" என்று வினவினான்.


"இப்ப எப்படி? இன்னும் சமையலே முடியலையே!" என்று அவள் காரணம் சொன்னாள்.

"ம்ம் என்ன செய்யலாம்" என்று யோசித்த அமர் அவளை அப்படியே பொம்மை போல தூக்கி சமையல் மேடையில் அமர வைத்து விட்டு, தன் கை சட்டையை மடித்து விட்டு கரண்டியை கையில் எடுத்து கொண்டான்.

ஆண்களின் கைகளுக்கு சமைப்பதில் வேகம் அதிகம் தான் என்றாலும் அமரின் கைகள் மின்னலின் வேகத்தில் அப்படியும் இப்படியும் கண்கட்டி வித்தை காட்டியது.

மகி விழி விரித்து பார்த்து கொண்டிருக்க, அரை மணியில் அவன் சமையலை முடித்திருந்தான்.

மகியிடம் திரும்பி 'எப்படி'யென்று தொரணையாக அமர் கேட்க, அவள் இதழ் வளைத்து ஒற்றை புருவம் உயர்த்தி மெச்சினாள்.
அவன் பதார்த்தங்களை ஒவ்வொன்றாய் கொஞ்சமாய் எடுத்து அவளை சுவைக்க வைத்தான்.


அவன் சமையலில் உரப்பு(காரம்) கொஞ்சம் அதிகமாக சேர்த்திருப்பது புரிந்தது. ஆனாலும் வித்தியாசமான தனிச் சுவையுடன் நன்றாகவே இருந்தது.

அவன் முரட்டு கன்னத்தை கிள்ளி முத்தமிட்டு அவள் அவனை பாராட்ட, அமர் முகம் சுளித்தான். "நான் என்ன சின்ன குழந்தையா? டைரக்டா இங்க கொடுக்கணும்" என்று தன் கன்னக்குழியை ஒற்றை விரலால் சுட்டி கேட்டான் உரிமையாய்,

அவன் சுட்டிய கன்னத்தை கையால் தட்டியவள், "ம்க்கும் ஆச தோச தான்" என்று அவனுக்கு அழகு காட்டி கீழே இறங்கி சென்றாள் மகேஸ்வரி.

விரைவாகவே இருவரும் தயாராகி வெளியே கிளம்பினர்.

அவளோடு இன்று நேரங்கழித்தே ஆக வேண்டிய சூழ்நிலை அவனுக்கு. எனவே, அதற்கான சரியான வழியாய் நேராக சினிமாவிற்கு அழைத்து சென்றான்.

அதுவோ, ஆழமான காதல் திரைப்படம். படம் முடிந்து வெளியே வர மகேஸ்வரி அமரை புதிதாக பார்த்தபடி, உடன் வந்தாள்.

அமர், 'என்ன?' என்பது போல் புருவத்தை உயர்த்தி காட்ட,

மகி விழிகளை தாழ்த்தி, "கதையில காதல் எவ்வளவு அழகா இருக்கு இல்ல" என்றாள்.

அவன் இதழில் வரட்டு சிரிப்பு படர, "கதையில மட்டும் தான் காதல் அழகா இருக்கும், நிஜத்தில?" அமர் முடிக்காமல் விட்டான்.

"...!"

"ஆமா மகி, உன் வாழ்க்கையில காதல்னா என்ன?" என்று அமர் இயல்பாய் கேட்க,

"நேரமாச்சு, நாம வீட்டுக்கு போலாம், அமர்" அவள் பேச்சை மாற்றினாள்.

"என்ன? இவ்ளோ சீக்கிரமா!" என்று பதைதைத்தவன், "இல்ல மகி நாம பீச் போகலாம் நல்லாயிருக்கும்!" என்று அவளை அழைத்து சென்றான்.

இன்று அமர் தன்னிடம் நடந்து கொள்வது மகிக்கு வித்தியாசமாக தான் தோன்றியது. ஆனால், அதற்கான காரணம் தான் புரியவில்லை.

காரணம் தெரிய வந்தபோது அவள் மகிழ்ச்சியில் நிரம்பி விட்டாள்.


 

Yuvakarthika

Author
Author
SM Exclusive Author
#2
கடற்கரையில் கால்கள் நனைய வெற்று கதைகள் பேசி, இருவரும் வீடு வந்து சேர இருள் கவிழ தொடங்கி இருந்தது.

வாசலில் மகியை இறக்கி விட்டு, அமர் கார் பார்க் செய்ய போனான்.

வழக்கத்திற்கு மாறாக வாசல் கதவு சாத்தியிருக்க, யோசனையாக தாள் திறந்து உள்ளே வந்தாள். வீடு முழுவதும் இருள் சூழ்ந்து இருந்தது.

'வீட்ல யாரும் இல்லையா? வேலைகாரங்க கூட எங்க போனாங்க?' குழப்பத்துடன் சுவற்றில் சுவிட்சை தேடி அழுத்த,
ஒரே நேரத்தில் சட்டென எல்லா விளக்குகளும் ஒளியை உமிழ, அவள் கண்கள் கூசின.


அந்த பரந்த கூடம் முழுமையான அலங்காரத்தில் பிரம்மாண்டமாக காட்சியளித்தது.

மலர் தோரணங்கள், அழகு பூங்கொத்துக்கள், வண்ண திரைச்சீலை வனப்புகள், பலவகையான அலங்கார பலூன்கள், பல வண்ண ஒளியுமிழ் விளக்குகள் என அந்த இடமே புதிதாய் மிளிர்ந்தது.

ஆனந்த அதிர்ச்சியில் மகேஸ்வரி என்னவென்று யோசிப்பதற்குள், அனைவரும் அவள் முன்வந்து ஒரே குரலாய், அவளுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல, தாளாத பரவசத்தில் அவள் இரு கைகளால் தன் வாய் பொத்தி நின்றாள்.

அமரேந்தர், அன்னபூரணி, விஸ்வநாதன், ராமமூர்த்தி, சாரதா, புவனேஸ்வரி, ப்ரியா, வானதி, ராஜேந்தர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் என பெரும் கூட்டமாய் அவள் கண்முன்னே.

மகியிடம் வந்த அமர் அழகான ரோஜா மலர் கொத்தை அவளிடம் தந்து, "பிறந்த நாள் வாழ்த்துக்கள், மகி!" என்று கண்சிமிட்டி வாழ்த்த,

"இதெல்லாம் உங்க வேலை தானா?" என்று செல்ல கோபத்தோடு அவள் மனம் பூரித்தாள்.

" ம்ம் இதெல்லாம் உனக்காக தான் மகி, உன் முகத்தில இந்த சந்தோஷத்தை பார்க்க தான்!" அமர் மென்மையாய் சொல்ல, அவன் வார்த்தைகள் அவள் உயிர் தொட்டன.

எல்லோரின் கரவொலியோடு மகி பிறந்த நாள் கேக்கினை வெட்டினாள்.
சின்ன வெட்கத்துடன் கேக் துண்டை அமருக்கு ஊட்ட, அவனும் அவளுக்கு ஊட்டி விட்டான்.


புவனா தன் அக்காவை ஆர தழுவிக் கொண்டாள். சாரதா மகளின் உச்சி முகர்ந்து முத்தமிட்டாள். ராமு தன் செல்ல மகளுக்கு பரிசு தந்து ஆசிர்வதித்தார்.

விஷ்வாவும் பூரணியும் பரிசோடு ஆசி வழங்க. ராஜா, வானதி வாழ்த்தி பரிசளிக்க. ப்ரியா தன் சித்தியின் கன்னத்தில் அமுத முத்தம் ஈந்தாள்.

நண்பர்கள், உறவினர்களின் வாழ்த்தும் பரிசும் குவிய, மகி திக்குமுக்காடி போனாள்.

தடபுடலாக விருந்து தொடங்க, விழா களைகட்டியது. மகேஸ்வரி உள்ளம் நிறைந்து போனாள்.

"தன் பொண்டாட்டி பிறந்த நாளுக்கு அமர் இவ்வளோ தடபுடல் செய்வான்னு நாங்க எதிர் பார்க்கவே இல்ல" என்று பொறாமையும் வியப்புமாக பேசிய, உறவினர், நண்பர்களிடம், முகம் கொள்ளா புன்னகையுடன் நன்றி சொல்லி மகியின் வாய் ஓயவில்லை.

"அமர் எங்களுக்கு எல்லாம் நேத்தே சொல்லிட்டார், சர்பிரைஸ் பார்ட்டி பத்தி மகிகிட்ட யாரும் மூச்சு விட கூடாதுன்னு" புவனா துள்ளலோடு சொன்னாள்.

"...!"

"ஆமா மகி, எங்களை சீக்கிரமே கிளம்பி வரச்சொல்லி அமர், எத்தனை முறை ஃபோன் செஞ்சார், தெரியுமா?" சாரதாவும் பெருமை பொங்க பேசினார்.

"...!"

"ஒரு பெரிய லிஸ்ட்ட கைல கொடுத்து, இவங்க எல்லாரையும் இன்வைட் பண்ண சொல்லி, காலையிலேயே எங்களை கிளப்பி விட்டுட்டான்" என்று வானதி நொடிந்து கொண்டாள் உற்சாக மிகுதியாய்.

மகிக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. அவர்கள் சொல்வதை மனதில் ஓட்டி பார்த்து நின்றாள்.

"சித்தி, வாங்க, உங்கள அமர் சித்தப்பா கூப்பிட்டார்" ப்ரியா அவள் விரல் பிடித்து இழுத்து சென்றாள்.

அங்கே, மிதமான இசைக்கேற்றபடி பலர் இணை இணையாக நடனம் பழகி கொண்டிருந்தனர்.

அமர் வசீகர புன்னகையுடன் அவளிடம் வந்து, அவள் மென்கரம் பிடித்து நடுவில் அழைத்து வந்தான்.

அத்தனை பேருக்கு நடுவே தன்னவன் அருகாமையில் அவள் நெஞ்சுக்குள் குளிர் பரவியது.

அமரின் செல்ல பார்வை சீண்டலோடு, அவனோடு இணைந்து அவளும் கைசேர்த்து நடனமாடினாள். மென்மையான இசை கசிய, இருவரும் கைகள் கோர்த்து விழிகள் சேர்த்து முகம் கொள்ளா பூரிப்பும் புன்னகையுமாய் அசைந்தாட,
அவர்களை காண்பவர்களின் உற்சாக கைதட்டலோடு விழா நிறைவடைந்தது.


அனைவரும் மெதுவாக கலைந்து செல்ல, அமர் அவளை தன் கையணைப்பிலேயே வைத்திருந்தான்.

மகி அவனை சங்கடமாய் பார்க்க, சின்ன சிரிப்புடன் விலகி சென்று கையில் பரிசோடு திரும்பி வந்தான்.

"இது, என் தேவதைக்காக!" என்று அவளிடம் நீட்ட,
அவளுக்கோ ஆர்வம் தாங்கவில்லை அவன் பரிசை வாங்கி கொண்டு அறைக்கு விரைந்தாள்.


ஆர்வமாக பிரித்து பார்க்க, அவள் கண்கள் விரிந்தன. அவன் பரிசளித்தது விலையுயர்ந்த அழகான வைர நெக்லஸ் உடன் இணையான வைர தோடுகள்.

மகி ஆசையாய் தன் கையில் எடுக்க, "பிடிச்சிருக்கா?" அவள் காதோரமாய் மிக ரகசியமாய் அமரின் குரல் கேட்டது.

மகி மெய் சிலிர்த்து திரும்ப, அவன் அந்த நெக்லஸை தன் கையால் அவளுக்கு பூட்டி அழகு பார்த்தான்.

சந்தோச பேரலைகளில் சிக்கி கொண்ட சிறு துரும்பாக, அவளின் உள்ளமும் தத்தளித்து கொண்டிருந்த நேரமது.

அவளின் களங்கமில்லா நிலா முகத்தை கைகளிலேந்தி, "நீ சந்தோசமா இருக்க இல்ல, மகி?" என்று ஆவலாக அவள் முகத்தில் தன் பார்வையை அலையவிட்டபடி கேட்டான்.

மகி வார்த்தைகள் இன்றி மேலும் கீழுமாக தலையசைத்து, அவன் கழுத்தை கட்டிக் கொண்டு, அவன் திண்மையான தோளில் முகம் புதைத்தாள்.

அமரின் கைகளும் அவளை வளைத்து கொண்டன. "இனிமே சந்தோசத்தை மட்டுமே உனக்கு தரணும்னு ஆசபடறேன் மகி!" என்றான் அவனும் உணர்ச்சி மிகுதியில்.

இருவரும் எத்தனை நேரம் கட்டுண்டு இருந்தனர் என்பது அவர்களுக்கு தெரியாது. அமர் தன்னை சமாளித்துக் கொண்டு அவளை தன்னிடமிருந்து மெல்ல விலக்க, மகி மருதாணி வெட்கத்துடன் தலை தாழ்த்திக் கொண்டாள்.

அமர் அவள் நெற்றியில் செல்லமாக முட்டி விட்டு, வெளியே சென்றான் விருந்தினர்களை கவனிக்க,

குடும்பத்தினர் அனைவரும் விருந்தாட வந்தவர்களுக்கு மனநிறைவாய் விடை கொடுத்து வழியனுப்பினர்.

இரவுகள் நீளும்...
 
Last edited:

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#8
:love:(y)
 

Sponsored

Latest Episodes

Advertisements

Latest updates

Top