You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.


விமர்சனம்

Jaalan

Author
Author
SM Exclusive Author
#1
அந்த இடமே மயான அமைதியாக இருந்தது.. இன்னும் சொல்லப்போனால் அதுவே மயானம் தான், சுற்றிலும் இருட்டு, மணி நள்ளிரவு இரண்டை தாண்டியிருக்கும்.
தூரத்தில் ஏதோ ஊளையிட்டது. ஓநாயோ வெறும் நாயோ இல்லை வேறு என்னவோ அதை பற்றியெல்லாம் யோசிக்க அவனுக்கு நேரமில்லை, மூச்சிரைக்க, வியர்வை வழிய சம்மட்டியை தூக்கி எறிந்து விட்டு , தான் வெட்டிய குழியை ஆழ்ந்து பார்த்தான், கண்ணை மறைத்த வியர்வையை சட்டையை இழுத்து துடைத்துக் கொண்டு, குழியில் மண்டியிட்டான், ஒரு முறை அக்கம் பக்கம் ஆள் யாரும் தென்படுகிறார்களா என பார்வையை வீசி விட்டு, மெல்ல குழியை முகத்தால் நெருங்கினான், குழிக்குள் முழு முகமும் முங்கிய பின் , இதழை லேசாக திறந்தான்,

" யாருடா அது… " பகீரென இருந்தது, வெடுக்கென முகத்தை தூக்கி பார்த்தான், முழு போர்வையில் உடலை மறைத்துக் கொண்டு கையில் கம்புடன் ஒரு முரட்டு ஆசாமி.. பிணத்தை அடக்கம் செய்பவர்.. இவன் எப்படி திடீரென வந்தான் என யோசிப்பதற்குள்,

" டேய் கேக்குறேன்ல வாயில என்ன மண்ணா கிடக்கு.. "

" ஐயா அது வந்து.. "

" அடப்பாவி குழியெல்லாம் தோண்டி வச்சுருக்க.. யாரை புதைக்க வந்த.. யாரை கொன்ன.. ரேப்பிஸ்ட் தானே நீ.. "

" அய்யோ… ஐயா நான் ரேப்பிஸ்ட்லாம் இல்லீங்க.. கவர்மெண்ட் ஆபீஸ்ல டைப்பிஸ்ட்டா இருக்கேங்க.. "

" டைப்பிஸ்ட்க்கு நடுராத்திரி சுடுகாட்டுல என்னடா வேலை.. "

" ஒரு கருத்து சொல்லனும்ங்க.. என் சொந்த கருத்து அதான்.. நீங்க அனுமதிச்சா… "

" சொந்த கருத்தா.. சந்தேகமா இருக்கே.. நீ உன் முழு கதையும் சொல்லு.. அப்புறம் பாப்போம் "

மறுபடியும் முதலில் இருந்தா என்று மனம் அங்களாய்த்தாலும் அலுத்தப்படியே தொடங்கினான்.

" எனக்கு சின்ன வயசுல இருந்தே பரோட்டான்னா உசுருங்க.. எங்கே பரோட்டா கடையை பாத்தாலும் வாங்கி திம்பேன்.. கேள்வி பட்டா கூட தேடி கண்டு புடிச்சு திம்பேன்.. அப்படி தான் அன்னைக்கும்.. " என அவன் மேலே பார்க்க , சுடுகாட்டு காவலனும் மேலே பார்க்க… நாமும் மேலே பார்ப்போம்.

" ஆபீஸ்ல இருந்து லேட்டா கிளம்பி வந்துட்டு இருந்தேன், செம பசி.. வழக்கமா சாப்பிட போகிற பாதையிலே குழி தோண்டுறாங்கன்னு பிளாக் பண்ணி, என் தலையில மண்ணள்ளி போட.. வேறு வழியில்லாமல் புது பாதை.
பசி வேற வயித்தை கிள்ளி கடிச்சு வச்சுட்டு இருந்துச்சு.. சட்டுனு பாக்குறேன் .. பரோட்டா கடை.. சுட சுட பரோட்டா.. ஆவி பறக்க குருமா.. சும்மா இருப்பேனா.. உடனே நுழைஞ்சேன்.. ஆர்டர் பண்ணி ரெண்டாவது நிமிஷம் தட்டில் பரோட்டா ஆஜராக, கொஞ்சம் கொஞ்சமா பிச்சு.. குருமாவுல ஊற வச்சு.. ததும்ப ததும்ப.. நாக்கில் எச்சில் ஊற.. வாயில் வச்சேன்.. "
என்றவன் சட்டென நிறுத்தி, அக்கம் பக்கம் பார்த்து விட்டு , மெல்லிய குரலில்,
" பரோட்டா நல்லாவே இல்லைனு என் நண்பன்கிட்ட சொன்னேன் சார் … தடார்னு எங்களுக்கு எதிர்ல சாப்பிட்டு இருந்தவர் எழுந்துட்டார்.. ஏன்டா.. என்ன துணிச்சல் இருந்தா இந்த பரோட்டா நல்லா இல்லைனு சொல்லுவ.. ஒரு பரோட்டா செய்யறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா.. உன்னால பண்ண முடியுமா.. உன்னால முடியுமா.. எங்க நீ சூடு பாப்போம்.. நீ பரோட்டா சுடுறா பாப்போம்.. அப்படின்னு பரோட்டவ விட அவர் சூடா கொதிச்சுட்டாரு."

" ஆங்.. அப்புறம்.. " என்றார் காவலர்.

" நானும் பேசிப் பாத்தேன்.. சார் எனக்கு பரோட்டா சுட தெரியாதுன்னு தானே இங்கே சாப்புட வந்தேன். சாப்புட தானே பரோட்டா கடை வச்சுருக்காங்க.. அப்டின்னு தான் சொல்லயிருப்பேன். படார்னு இன்னொருத்தர் கிளம்பிட்டாரு.. ஒரு பரோட்டா செய்ய மாஸ்டர் எவ்வளவு கஷ்டப்படுறார் தெரியுமா.. அடுப்புல நின்னு வேர்வை சிந்தி….
அதே தான் சார் நானும் சொல்றேன்.. அந்த வேர்வை தான் கொஞ்சம் பரோட்டாலயும் சிந்திட்டாரு.. ஒரே உப்பு.. சொல்லி தான் முடிச்சேன் டக்குன்னு அப்பிட்டாரு ஒரு மீசைக்காரரு,..
ஏன்டா.. கிண்டலா.. மாஸ்டர் வாழ்க்கையுல எத்தனை பரோட்டா சுட்டுருக்கார் தெரியுமா .. அதெல்லாத்தையும் நீ சாப்புட்டு பாத்ருக்கயா.. இந்த ஒரு பரோட்டா மட்டும் சாப்புட்டுட்டு எப்படி நீ நல்லா இல்லன்னு சொல்லுவ..
சார் அவரு சுட்ட அவ்வளவு ப்ரோட்டோவும் நான் சாப்புடனும்னு, அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டு பொண்டாட்டியா ஆனா தான் உண்டு. நான் முடிக்கறதுக்குள்ள, எல்லோரும் கும்பலா கூடிட்டாங்க. நான் தனி ஆளு.. அங்கேயும் ஒருத்தர் கொஞ்சம் அமைதியா டீல் பண்ணுனாறு.. "

" அப்படியா.. அவரு என்ன சொன்னாரு. " காவலன்.

" அண்ணே.. குறுக்க குறுக்க பேசுனீங்கன்னா நான் மறந்துருவேன்.. " என்றவன் மேலும் தொடங்கினான்.

" அவரு பார்சல் வாங்க வந்தவர் போல, எல்லாத்தையும் பார்த்துட்டு.. என்ன ஓய்.. நானெல்லாம் இங்கே பல வருசமா சாப்புட்டுண்டு தான் இருக்கேன்.. எனக்கெல்லாம் நல்லா இருக்கு.. உனக்கு மட்டும் எப்படி இல்லாம போகும்.. அப்படியே போனாலும் நீ என்ன பண்ணியிருக்கணும்.. சம்பந்தப்பட்ட பரோட்டா மாஸ்டராண்டலா சொல்லியிருக்கணும்.. இங்கே எப்படி புலம்பலாம்..
அவரு சொன்னதுல ஒரு நேர்மை இருந்துச்சு சரிடான்னு.. மாஸ்டரை பார்த்து.. பவ்யமா.. சார் உங்க பரோட்டா நல்லா இல்லாத மாதிரி இருக்கேன்னு சொன்னேன்..
அவரோ ஏற இறங்க பார்த்துட்டு, இது நேத்து போட்ட பரோட்டா அதுக்கு நான் மாஸ்டர் இல்ல.. அந்த மாஸ்டரை பிடிக்கணும்னா.. டபிள்யு டபிள்யு டபிள்யு சூப்பர் மாஸ்ட்டர் டாட் காம்க்கு மெயில் அனுப்புன்னு சொல்லிட்டு வேலையை பார்க்க ஆரம்பிச்சுட்டாரு.. திரும்பி பார்த்தா இவங்கல்லாம் கூட்டமா சேர்ந்து என்னை கலாய்க்க ஆரம்பிச்சுட்டாங்க..
அவன் மூஞ்சே சரி இல்லை.. பரோட்டா சரி இல்லைன்னு சொல்ல வந்துட்டான்.. ஹாஹா.. ஹாஹா..
வாங்குனது பரோட்டா ஒன்னு.. புடிக்கலைனா ஓரமா போய் துன்னு.. ஹாஹா.. ஹாஹா..
பிஜிபிக்கு பிடிக்கலை நோட்டா.. உனக்கு புடிக்கலையா புரோட்டா..ஹாஹா.. ஹாஹா..
இப்படியான மரண மொக்கை கலாய்ல இருந்து தலை தெறிக்க ஓடி வந்து, என் வீட்டுக்கு போய் பாத்ரூம்ல பூட்டிக்கிட்டு கண்ணாடி முன்னாடி சொன்னேன் சார் பரோட்டா நல்லா இல்லைனு.. "

" அப்புறம் " மறுபடியும் காவலன்.

அவனை முறைத்து விட்டு மேலும் தொடர்ந்தான்.
" சொல்லி தான் முடிச்சிருப்பேன்.. திடீர்னு ஒருத்தன் ஜன்னல் வழியா எட்டி பார்த்துட்டான், ஏன்டா.. எப்படி நீ பரோட்டா நல்லா இல்லைன்னு மொட்டையா சொல்லுவ.. அதுல எது நல்லா இல்லைன்னு சொல்லு .. மாவு கூடவா.. பதம் இல்லையா.. எண்ணை கம்மியா.. எது சரியில்லைன்னு தெளிவா சொல்லுடா..
இவ்வளவு தெரிஞ்சா நான் சொல்ல மாட்டேனா.. பரோட்டா மட்டும் தாண்டா தெரியும்.. பரோட்டா நல்ல இல்லைடா..
டேய் தெரியலைனா நீ சொல்ல கூடாதுடா..
ஆமா.. இது என் வீட்டு பாத்ரூம்ல.. இங்கே நீ ஏன்டா எட்டி பாக்குற..
அப்படிதான்டா பாப்பேன்.. நாளைக்கும் பாப்பேன்டா.. நீ எது சரியில்லைன்னு சொல்லணும்டா மொட்டையா பரோட்டா நல்லா இல்லைனு மட்டும் சொல்லிப்பாரு.. ரெண்டு மூணு கெட்ட வார்த்தையில் திட்டிட்டு போயிட்டான்.
அதான் அய்யா.. யாருமே இல்லாத இந்த சுடுகாட்டுல குழி தோண்டியாச்சும் மனசுல கிடக்குறதை சொல்லிடுவோம்னு இங்கே வந்தேன்.. " என்று அவன் முடிக்க , சுடுகாட்டு காவலனோ விழுந்து விழுந்து பேய் சிரிப்பு சிரிக்கத் தொடங்கினான்.

" ஏண்ணே சிரிக்குறீங்க. "

" அட மடப் பயலே.. இங்கே நீ பேசுனது.. நான் பேசுனது.. உன் சோக கதை எல்லாத்தையும் ஒரு ஆள் கேட்டுகிட்டு இருக்குடா.. "

கடவுளா இருக்குமோ.. ஒரு வேளை பேயா இருந்தா.. பதறிய அவன் தலையில் தன் தடியால் தட்டினான் காவலன்.

" மேல இருக்குறவனுமில்ல .. மண்ணுக்குள்ள இருக்குறவனுமில்ல.. போனுக்குள்ள இருக்கிறவன், இதையெல்லாம் கதையா வாசிச்சிட்டு இருக்கே இந்த கூட்டம் தான்.. " என தன் தடியை உங்களை நோக்கி காட்ட, அவன் விழிகள் விரிய.. வாயை பொத்தியபடி
" பரோட்டா சூப்பர்.. பரோட்டா சூப்பரோ சூப்பர்.. செம சூப்பர் மாஸ் பரோட்டா.. "

(இதனால் சொல்ல வருவது யாதெனில், விமர்சனம் நாட்டுக்கும் வீட்டுக்கும் பரோட்டாவுக்கும் நல்லது )

பின் குறிப்பு : இந்த கதையை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம், அதற்கான சுதந்திரத்தை நான் வழங்க தேவையில்லை, இதை முழுமையாக வாசிக்கும் பட்சத்தில் அது உங்களுக்கே உண்டு.

முற்றும்.
 
#5
:ROFLMAO: :ROFLMAO: :love: :love:
ஏங்கண்ணு, ஜாலன் டியர்?
நாட்டுல அவங்கவங்க பரோட்டாவே
தின்னக் கூடாதுங்கறாங்க
மைதா மாவு உடம்புக்கு
கெடுதல்ங்கிறாங்க
நீங்க என்னடான்னா இப்படி
பரோட்டாவுக்கு சப்போர்ட்
பண்ணுறீங்க
உங்களுக்கு ரொம்பவும்
பிடிக்குமோ?
 

Jaalan

Author
Author
SM Exclusive Author
#9
:ROFLMAO: :ROFLMAO: :love: :love:
ஏங்கண்ணு, ஜாலன் டியர்?
நாட்டுல அவங்கவங்க பரோட்டாவே
தின்னக் கூடாதுங்கறாங்க
மைதா மாவு உடம்புக்கு
கெடுதல்ங்கிறாங்க
நீங்க என்னடான்னா இப்படி
பரோட்டாவுக்கு சப்போர்ட்
பண்ணுறீங்க
உங்களுக்கு ரொம்பவும்
பிடிக்குமோ?
ஹாஹா.. சின்ன வயசுல அதை எனக்கு ரொம்ப புடிச்சது.. இப்போ அது என்ன புடிச்சிட்டு விட மாட்டேங்குது..
 

Sponsored

Advertisements

Top