• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

விழி அழகே 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Krisha

அமைச்சர்
SM Exclusive
Joined
Sep 27, 2021
Messages
1,455
Reaction score
2,009
Location
UAE
Hi பட்டூஸ்

நீண்ட நாட்களுக்குப் பிறகு, இல்லை இல்லை சில மாதங்களுக்கு பிறகு, மீண்டும் உங்களை சந்திக்க ஓடோடி வந்துட்டேன். என்னை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன் அடுத்த கதையை துவங்குகிறேன்.

விழி பேசும் கவிதை அழகே கதையின் தலைப்பு. நல்லா இருக்கா? இது பொங்கல் அன்று ஒரே ஒரு பதிவை போட்டுட்டு நிறுத்திய கதை.😁😁😁 மீண்டும் தொடர்கிறேன்.😊 Comments நிறைய வந்தால் பதிவும் விரைவில் வரும். 😜 Enjoy reading and don't forget to comment

eiTQU7M99605.jpg

விழி அழகே 1

திருச்சி என அழைக்கப்படும் திருச்சிராப்பள்ளி. இது தமிழ்நாட்டின் மையப் பகுதியில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த நகரமாகும். காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி, சங்க காலத்தில், சோழர்களின் தலைநகரமாகவும், தற்போதைய தமிழகத்தின் முக்கிய பெருநகரங்களுள் ஒன்றாகும். இந்நகரம் தமிழ்நாட்டின் பரப்பளவு அடிப்படையில் மூன்றாவது பெரிய மாநகரமும், மக்கள் தொகை அடிப்படையில் நான்காவது பெரிய மாநகரமும் ஆகும். (Google உபயம்)

இங்கு மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், ஸ்ரீ ரங்கம் போன்ற தெய்வ ஸ்தலங்களும், கல்லணை, முக்கொம்பு போன்ற பல பிரபல சுற்றுலா தலங்களும் உள்ளது.

அந்த திருச்சி மாநகரத்தில் பெரும் செல்வந்தர்கள் வசிக்கும் பகுதி அது. அங்கிருந்த ஒரு பிரைவேட் கூடைப்பந்து மைதானம், அனைத்து விளக்குகளும் ஒளிர பிரகாசமாக மிளிர்ந்தது. அங்கு பார்வையாளர்கள் இல்லை, விளையாடுபவர்களின் பெயரைச் சொல்லி உற்சாகப்படுத்தும் ஆர்ப்பரிப்பு இல்லை, காதை துளைக்கும் கரகோஷம் இல்லை, அவ்வளவு ஏன் அங்கு ஆட்டக்காரர்களும் இல்லை. அங்கு இருந்ததெல்லாம் அமைதி மட்டுமே.

ஆம்! அமைதியே தான்… மயான அமைதி…

அந்த அமைதியை கிழித்துக்கொண்டு, ‘தட் தட்’ என பந்தடிக்கும் சத்தம் கேட்டது. யாரும் இல்லாத அந்த மைதானத்தில், அந்த சத்தம் எங்கிருந்து வருகிறது?

அதோ அங்கு ஒருவன், முகத்தில் இறுக்கத்துடன் பந்தை வைத்து தனியாக விளையாடிக் கொண்டிருக்கிறான்.

‘ஆறடி உயரம் அழகிய உருவம் ஆப்பிள் போல இருப்பானே’ என்ற பாடல் வரிகள், இவனுக்காகவே எழுதியது போல் அவ்வளவு கச்சிதமாக பொருந்தியது. பார்த்தவுடன் மனதை கவரும் வகையில் இருந்தான் அவன். ஆனால் வெறுமையை சுமந்திருக்கும் அவனது இறுகிய முகம், யாரையும் கிட்ட நெருங்க விடாமல் தள்ளியே நிறுத்தும்.

அவனது கவனம் எங்கும் சிதறாமல் ஆட்டத்தில் மட்டும் இருக்கிறது என்பதை, அவன் போடும் பந்துகள் அனைத்தும் சரியாக கூடையில் விழுந்து சொன்னது. அதை கண்டு உற்சாகத்தில் துள்ளி குதிக்க வேண்டியவனின் முகம் வெறுமையை மட்டுமே சுமந்திருந்தது.

எவ்வளவு நேரம் அங்கு ஆடிக்கொண்டிருக்கிறானோ மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. அவன் அணிந்திருந்த உடை முழுவதும் வேர்வையால் நனைந்திருந்தது. அப்படியும் அவன் ஆட்டத்தை நிறுத்துவது போல் தெரியவில்லை… அதை தொடர்ந்தால் அவன் மயங்கி விழுவது உறுதி…

அவனது வெறித்தனமான ஆட்டத்தை நிறுத்துவதற்காகவே அவனது கைப்பேசி இனிய காணத்தை இசைத்தது. அழைப்பு யாரிடமிருந்து என அந்த பாடலை வைத்து தெரிந்து கொண்டான். யார் சொல்லி அழைப்பு வந்திருக்கும் என்பதும் தெரியும். யார் அவனுடன் பேசப் போகிறார்கள் என்பதும் தெரியும். அதுவரை இறுகி கிடந்த அவன் முகத்தில், சின்னதே சின்னதான புன்னகையின் கீற்று. அதுவே அவனை வசிகரானாக காட்டியது.

அந்த பிரத்தியேக இசை முடியும் முன்னே அழைப்பை ஏற்றிருந்தான், இல்லையென்றால் அவனிடம் கோபித்துக் கொண்டு பேசாமல் முகம் திருப்பிக்கொள்வாள் அவள். பிறகு கெஞ்சி கொஞ்சி அவளை சமாதானப்படுத்த, அவன் தலையால் தண்ணி குடிக்க வேண்டும். அழைப்பை ஏற்று அவன் காதில் வைத்ததுமே, “டேடா, எனக்கு நொம்ப (ரொம்ப) பசிகுது. உங்கக்காக வெயிட் பண்ணேன்... எப்போ வ(ரு)வீங்க? வேத(க)மா வாங்க… இல்லைனா உங்க டாலி சாப்பிதாம தூங்குதுவேன்.” ஒரு மழலை குரல் கொஞ்சியது. தன் பாட்டி சொல்லிக்கொடுத்ததை அச்சு பிசகாமல் சொல்லி முடித்த அந்த செல்ல சிட்டு, தன் பாட்டியை பெருமையாக பார்த்தது.

“என் செல்ல குட்டி! சர்க்கரை கட்டி!” பாட்டியும் பேத்திக்கு நெட்டி முறித்து திருஷ்டி கழித்தார்.

அதன் பிறகே அவன் மணியை பார்க்க, இரவு எட்டை தாண்டி சில மணித்துளிகள் கடந்திருந்தது. தன் தலையில் அடித்துக்கொண்டு, “நான் டைம் பார்க்காம விட்டுடேன் டாலி. இன்னும் ஃபைவ் மினிட்ஸ்ல வீட்டில் இருப்பேன்.” என தன் மகளுக்கு வாக்கு கொடுத்தவன், சொன்னது போல் அவன் மனதின் வெறுமையை போக்க வந்த தேவதையிடம் விரைந்து சென்றான்.

ஆம்! அந்த மைதானத்தைப் போலவே அவன் மனதிலும் சில ஆண்டுகளாக வெறுமை மட்டுமே சூழ்ந்திருந்தது. ஒருகாலத்தில் உற்சாகத்தின் மறு உருவமாக துள்ளித் திரிந்தவன், இப்போது சிரிப்பு என்பதையே மறந்திருந்தான். அவன் உதடுகள் லேசாக விரிவது இருவரிடம் மட்டுமே. அந்த இருவருக்காக மட்டுமே இப்போது அவன் உலகம் இயங்குகிறது. ஒன்று அவனைப் பெற்றவள், மற்றொன்று அவன் பெற்றவள். காலம் வகுத்த கோலம், அவன் வாழ்வில் வர்ணம் சேர்க்கவில்லை.

❤❤❤

அவன் வீட்டுக்குள் நுழைந்ததும், அதற்காகவே காத்திருந்த அந்த மூன்று வயது சின்ன சிட்டு, “டேடா” என பாய்ந்து வந்து அவன் கால்களை கட்டிக்கொண்டது. அவனும் அவளை கைகளில் அள்ளி, பந்து போல் உயர தூக்கி போட்டு பிடித்தான். தன்னை கீழே தவற விட மாட்டார் தன் தந்தை, என அவனின் மேல் அலாதி நம்பிக்கை கொண்ட அந்த சின்ன சிட்டுவும், மகிழ்ச்சியில் சத்தமாக சிரித்தது. இது அவர்களுக்கான செல்ல விளையாட்டு.

சில முறை அவளை தூக்கி போட்டு பிடித்தவன், பிறகு தரையில் விட்டுவிட்டு, “ஒரே சுவெட்டிங்கா இருக்கு டாலி. நான் போய் குளிச்சிட்டு வந்துடறேன்.” என சொல்லி
சென்றான்.

அவன் குளித்து முடித்து வந்து சோபாவில் அமரவும், அவன் மடி மேல அமர்ந்து கொண்ட சின்ன சிட்டு, தன் பிஞ்சு கைகளால் அவன் முகத்தை பற்றி தன்னை பார்க்குமாறு திருப்பி, “டேடா இன்னைக்கு…” என கதை சொல்ல தொடங்கினாள். அவனும் தன்னை மறந்து மகளுடன் ஐக்கியமானான்.

சிறிது நேரம் சுற்றம் மறந்து தங்களுக்குள் மூழ்கினர் தந்தையும் மகளும். இது அன்றாடம் நடக்கும் நிகழ்வு. அதை எப்போதும் போல் இப்போதும் ரசித்தது நாயகனை பெற்றவரின் உள்ளம். அவன் குழந்தையுடன் இருக்கும் நேரம் மட்டுமே மகிழ்ச்சியுடன் இருப்பான் என்பது தெரிந்ததால், முடிந்தளவு மகளை அவன் பொறுப்பில் விட்டுவிட்டார்.

மாலை வீடு திரும்புவதில் இருந்து மறுநாள் காலை கிளம்பும் வரை மகள் அவனது பொறுப்பு. சரியாக மாலை ஆறு மணிக்கு தந்தையின் வரவை எதிர்பார்த்து வாசலில் காத்திருப்பாள் மகள். இரவு தந்தை ஊட்டினால் மட்டுமே பெண்ணுக்கு உணவு தொண்டையில் இறங்கும். அவன் வர தாமதமானால், அழுது ஆர்ப்பாட்டம் செய்து, உண்ணாமலே உறங்கிவிடும் அந்த சின்ன சிட்டு. அதனால் முடிந்தளவு நேரத்திற்கு வீட்டை அடைந்து விடுவான் நம் நாயகன்.

இன்றும் எப்போதும் போல் நேரமே வந்து விட்டான். ஆனால் மாலையில் வந்த ஒரு அழைப்பு, அவனுக்கு மன அலைக்கலைப்பை தந்தது. ஏனென்று தெரியாமல் மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்தது. ஒரு மனம் உற்சாகத்தில் துள்ள, இன்னொரு மனம் வேதனையில் துவண்டது. அது நல்லதுக்கா? கெட்டதுக்கா? என தெரியவில்லை. ஆனால் அது அவன் மனதை ஏதோ செய்தது.

தன் மனதை கட்டுப்படுத்த முடியாமல் கூடைப்பந்து மைதானத்திற்கு சென்றான். அது அவனுக்கென்று பிரத்தியேகமாக அமைக்கப்பட்டது. உடல் வலுவிலக்கும் வரை அசுரத்தனமாக விளையாடினான். இதுவும் அவனது அன்றாட நிகழ்வு. தேவையில்லாத நினைவுகளை மனதிலிருந்து விரட்ட உடலை வருத்திக் கொள்வான். உடல் தளர்ந்து சோர்ந்த பிறகே அவனால் சிறிதாவது உறங்க முடியும்.

உணவை டைனிங் டேபிளில் அடுக்கிய அவன் அன்னை காமாட்சி, “சாப்பிடாம என்ன அரட்டை? மணியை பாருங்க…” என மிரட்டுவது போல் நடிக்க, அவர்களும் பயந்தது போல் வேகமாக வந்து சாப்பிட அமர்ந்தனர்.

மகளை டேபிள் மேல் அமர வைத்தவன், தட்டில் பரிமாறிய உணவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து அவளுக்கு ஊட்டினான். அவளும் தன் சொப்பு இதழை திறந்து சமர்த்தாக வாங்கிக் கொண்டாள்.

தந்தை மகளின் பாசத்தை ஆசையோடு பார்த்துக் கொண்டிருந்த காமாட்சியின் மனதில் வேதனை சூழ்ந்தது. அவன் வாழ்வு இப்படியே வறண்ட பாலைவனமாகவே போய்விடுமோ என அஞ்சியது அந்த தாயுள்ளம். அவன் வாழ்வை பூஞ்சோலையாக மாற்ற, அவன் மகாலட்சுமியை சீக்கிரம் அனுப்பி வை கிருஷ்ணா, என எப்போதும் போல் இறைவனுக்கு ஒரு மனு போட்டார்.

பாதி உணவிலேயே கண்ணை கசக்க தொடங்கினாள் இனியா. நம் நாயகன் யதுநந்தனின் உயிரானவள். அவன் வாழ்வை இனிமையாக்க வந்தவள் இனியா.

“டாலி இன்னும் ஒரே ஒரு வாய்” என சொல்லி சொல்லியே அவள் வயிற்றை நிறைத்தான் யதுநந்தன். அவள் உண்டு முடித்தவுடன் அவளை தூக்க வந்த பாட்டியிடம் செல்ல மறுத்து, தந்தையின் கழுத்தை கட்டிக்கொண்டு அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள் சின்னவள்.

“டேடா சாப்பிடட்டும் செல்லம். நீ ஆத்தா கிட்ட வா”

“ம்ஹும்” சினுங்கிய இனியா அவனை விட்டு நகர மறுத்தாள்.

“இருக்கட்டும் மா. சாப்பாடு வைங்க நான் இப்படியே சாப்பிடுறேன்.” என்றான் யதுநந்தன்.

“அவள வச்சுட்டு எப்படி யது சாப்பிட முடியும்?”

“பரவாலம்மா, எனக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்ல. நான் பார்த்துக்குறேன்” என்றவன் எப்போதையும் விட கம்மியாக சாப்பிட்டு எழுந்தான். ஏற்கனவே பாதி வயிற்றுக்கு மட்டும் சாப்பிடுபவன் இன்று அதுவுமில்லை. பரிதவித்தது அந்த தாய் உள்ளம். ‘என் மகன் வாழ்வை வசந்தமாக்கு கிருஷ்ணா…’ என மீண்டும் மனு போட்டார்.

காமாட்சி போடும் மனுக்கள் எல்லாம் அவரை சென்று அடைந்ததா? காலம் தான் அதற்கு விடை கொடுக்க வேண்டும்!!! காலம் சொல்லும் விடையாக அவள் வருவாளா??? அவன் வாழ்வை வசந்தமாக மாற்ற…

❤❤❤

இனியாவை படுக்கையில் விட்டவன், அவள் சிணுங்கவும், “டேடா இங்கதான் இருக்கேன் டாலி… நீ சமத்தா தூங்கு” என நெற்றியில் முத்தம் வைத்து தட்டிக்கொடுத்தான். தந்தையின் அருகாமையில் அவளும் அயர்ந்து உறங்கினாள்.

உறங்கும் இனியாவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் யதுநந்தன். தானாக அவன் நினைவுகள் அவள் அன்னையிடம் சென்றது. அவளும் இப்படித்தான் அவன் அருகாமையில் நிம்மதியாக உறங்குவாள். அவன் தாமதமாக வரும் நேரம் குட்டி போட்ட பூனையாக அறைக்குள்ளேயே அலைந்து கொண்டிருப்பவள், அவனை பார்க்கவும் தாவி கட்டிக்கொள்வாள். வெளியூர் சென்றால் மணிக்கு ஒரு முறை போன் செய்து கொண்டே இருப்பாள். “காலையில மீட்டிங் இருக்கு… என்னை தூங்க விடுமா…” என அவன் கெஞ்சிய பிறகே சற்று அமைதி காப்பாள். அப்படி உயிராக இருந்தவள், எப்படி தன்னை தனியே விட்டு செல்லலாம் என்ற கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது. சில வினாடிகளில் வந்த கோபம் அப்படியே அடங்கியது. அவன் கோபத்தை காட்ட அவள் வேண்டும் அல்லவா!!! கண் காண இடம் சென்றவளின் மீது கோபத்தை எப்படி காட்டுவது??? விரக்தி புன்னகை உண்டானது அவன் உதடுகளில்.

மகளை கட்டிக்கொண்டு படுத்தவன், உடல் அசதியால் தன்னை மறந்து உறங்கினான். பாதி உறக்கத்தில் அவன் செவியை அடைந்தது மெல்லிய கொலுசின் ஓசை. பூமி அதிராமல் மெல்ல நடக்கும் நடைக்கேற்ப, மயிலிறகால் மனதை வருடுவது போல் கேட்டது அந்த கொலுசொலி. அந்த கொலுசொலிக்கு ஏற்ப அவன் தலையசைந்தது. மூடிய இமைகளுக்குள் கண்கள் உருண்டது. உறக்கத்திலேயே அவன் உதடுகள் விரிந்தது. அந்த ஓசை அவனை நெருங்கி வந்தது.

“நந்தா” அவன் பெயருக்கு வலிக்குமோ என மென்மையாக அழைத்தது ஒரு பெண்ணின் குரல். அவன் உடல் சிலிர்த்து அடங்கியது. “நந்தா” மீண்டுமொரு அழைப்பு, ஆனால் இப்போது ரசித்து ராகமாக உச்சரித்தது. அந்த குரலில் இருந்த இனிமை அவன் உயிர் வரை சென்று தாக்கியது. ஏதோ ஒரு ஸ்பரிசம் தன் தலையை கோதுவதை போல் உணர்ந்தவன், கண்களை திறக்க முயன்றான்… முடியவில்லை. கைகளால் துலாவினான்… எதுவும் ஆகப்படவில்லை.

“என்னை மறந்துட்டீங்களா நந்தா? நான் உங்களுக்கு வேண்டாமா?” மீண்டும் அதே குரல், “நான் உங்களுக்காக காத்திருக்கேன். சீக்கிரம் எந்திரிச்சு என்கிட்ட வாங்க…” என்ற குரல் தேய்ந்து மறைந்தது.

“...” ஏதோ பெயரை சொல்லி, அலறியடித்துக் கொண்டு தூக்கத்திலிருந்து எழுந்தான். அந்த ஏசி அறையிலும் முகம் முத்து முத்தாக வியர்த்திருந்தது. தன்னை சுற்றி கண்களை ஓட்டினான். இருட்டு மட்டுமே தெரிந்தது. சிறிது நேரத்தில் மீண்டவன் கனவை நினைவு கூர்ந்தான். மீண்டும் உடல் சிலிர்த்தது. அது இன்று மட்டும் வந்த கனவல்ல, சில வருடங்களாக அவனை துரத்தும் கனவு அது. இது கனவா? நிஜமா? ஒன்றும் புரியாமல் குழம்பித் தவித்தான் யதுநந்தன்.
 




Krisha

அமைச்சர்
SM Exclusive
Joined
Sep 27, 2021
Messages
1,455
Reaction score
2,009
Location
UAE
தங்கத் தாம்பாளமாக ஜொலித்த கதிரவன் கடலுக்கருகே ஒளி வீசிக்கொண்டிருந்த அழகான மாலை நேரம். இதமான காற்று உடலை தழுவியது. வெயில் காலம் ஆரம்பிக்க இன்னும் சில நாட்கள் மட்டுமே இருந்ததால், காற்றில் சிறிய வெப்பம் கலந்திருந்தது. ஆனால் அதுவும் உடலை சுகமாக வருடியது.

அரபு நாடுகளில் முக்கிய இடத்தை பிடித்தது துபாய். அந்த முக்கிய நகரமான துபாயில் எண்ணற்ற அற்புத சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர். அந்த பல அற்புதங்களில் ஒன்றான பாம் ஜுமேரா. அது கடலில் செயற்கையாக உருவாக்கிய இடம். அங்கு நட்சத்திர விடுதி அட்லாண்டிஸ் இருப்பது தனிச்சிறப்பு. ‌பல கிளைகளாகப் பிரிந்து செல்லும், அந்தப் பகுதி அனைத்தும் நம் கற்பனைகளுக்கு அப்பாற்பட்டது.

பிரிந்து செல்லும் அந்த ஒவ்வொரு கிளைகளிலும் அழகான தனி வில்லாக்கள் அமைந்திருந்தது. அப்படிப்பட்ட ஒரு வில்லாவின் முதல் மாடி. தன் அறையின் பால்கனியில் நின்று, மறையும் சூரியனை முகத்தில் மின்னும் சின்ன புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் ஒரு மங்கை.

நல்ல வேலை, கை நிறைய சம்பளம், அழகான குடும்பம் என அவளது வாழ்க்கை சீராக ஓடிக் கொண்டிருக்கிறது. வீடு விட்டால் அலுவலகம், அலுவலகம் விட்டால் வீடு என இருக்கும், இவளின் ஒரே பொழுது போக்கு இந்த இயற்கையின் அற்புதத்தை ரசிப்பதே.

அவள் இந்த நாட்டுக்கு வந்து மூன்று வருடங்களாகி இருந்தது. இங்கிருக்கும் ஒவ்வொரு நாளும் அந்த இயற்கையிடம் சரணடைந்து விடுவாள். சினிமா, பார்க், பீச் என எங்கும் செல்ல மாட்டாள். அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டுமே வெளியே செல்வாள். அதுவும் தனக்கு தேவையான பொருட்களை அரை மணி நேரத்தில் எடுத்துக்கொண்டு வீட்டை அடைந்து விடுவாள். இது இன்று நேற்று வந்த பழக்கமல்ல, கிட்டத்தட்ட ஒன்பது வருடமாக அவள் கடைபிடிக்கும் பழக்கம். ஒரு காலத்தில் தன் சிறகுகளை விரித்து சிறகடித்து பறந்தவள்தான். ஆனால் அவளது சிறகுகள் வெட்டப்பட்டு வானிலிருந்து தள்ளிவிடப்பட்டாள்.

அவள் நிறைவாக வாழ்கிறாளா? தெரியாது. மகிழ்ச்சியாக இருக்கிறாளா? தெரியாது. ஆனால் எப்பொழுதும் அவள் முகத்தில் ஒரு அழகான புன்னகை ஒட்டிக் கொண்டிருக்கும். துன்பம் வரும்போது துவண்டாலும் மீண்டும் அவள் புன்னகையை மீட்டெடுப்பாள். அவளது சிரித்த முகத்தை பார்த்து அவளுடன் பணிபுரிபவர்கள், அவளுக்கு ஸ்மைலிங் பியூட்டி என செல்ல பெயர் வைத்திருக்கின்றனர். யார் மனதும் புண்படும்படி பேச மாட்டாள். மென்மையான மனம் கொண்ட சாதுவான பெண்.

தன் நிலவு காதலிக்கு வழிவிட்டு, கதிரவன் கடலுக்குள் மறைந்து கொண்டிருந்தது. கதிர்களின் ஜொலிப்பு கடல் நீரில் பட்டு கடலே தங்கமாக மின்னியது. கண்கள் நிறைய அதை பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் மனதில் எண்ணற்ற நினைவுகளின் ஊர்வலம். சரியாக அப்போது அவளது கைப்பேசி அழைத்து, அவளது கவனத்தை தன்னிடம் திருப்பியது. அதில் வந்த இந்திய எண்ணை பார்த்து அவளது புருவங்கள் முடிச்சிட்டது.

‘இவ எதுக்கு கால் பண்றா?’ என நினைத்துக்கொண்டே அதை உயிர்ப்பித்தாள். மறுபக்கம் பேச பேச அவள் முகத்திலிருந்த புன்னகை கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தது. முகம் ரத்த பசையை இழந்து வெளிறியது. அதுவரை புன்னகையை தாங்கிய வதனம் இப்போது குழப்பத்தை சுமந்தது.

‘இதை என்னால் பேஸ் பண்ண முடியுமா?’ என்ற மனதின் கேள்விக்கு, ‘முடியாது’ உடனே பதில் கிடைத்தது. அதனால்தான் யாருடனும் தொடர்பில் இல்லாமல் இருந்தால். ஆனால் இரண்டு மாதங்களுக்கு முன் தற்செயலாக சந்தித்த கல்லூரி தோழியை தவிர்க்க முடியவில்லை. தன் எண்ணை பகிர்ந்து கொண்டாள். இப்போது அது வினையை இழுத்து வந்துள்ளது.

தனக்கு ஆறுதல் அளிக்கும் இயற்கையை மறந்து, ஹாலின் நடுவே இருந்த சோபாவில் அமர்ந்தாள். அவள் முகம் ஏகத்துக்கும் குழம்பி இருந்தது.

அப்போது வீட்டுக்குள் நுழைந்தான் ஆறடி ஆண்மகன் ஒருவன். அட்டகாசமாக இருந்த அவனின் நேர்த்தியான உடையே சொன்னது அவன் பெரிய பதவியில் இருக்கிறானென்று. அவன் முகத்திலும் குழப்பம் தெரிந்தது. பெண்ணை பார்க்கவும் அவன் முகத்திலிருந்த குழப்பம் மறைந்து புன்னகை வந்தது.

“ஸ்ரீ” மென்மையாக அழைத்தான். அவளிடம் மாற்றமில்லை. அவன் முகம் சுருங்கியது. சற்று சத்தமாக மீண்டும் அழைத்தான். அதே நிலை தொடர்ந்தது.

அப்போது ஒரு மென் கரம் அவள் தோளில் பதிந்தது. திடுக்கிட்டு சுயத்துக்கு திரும்பினாள். தன் தோளை தொட்ட கரத்துக்கு சொந்தக்காரியை என்னவென்று பார்த்தாள்.

கண்களால் அவள் கேட்ட கேள்விக்கு, “மாமா உங்களை கூப்பிடுறாங்க அக்கா” என மெல்லமாக பதிலளித்தாள், அவளின் தங்கை நித்யஸ்ரீ. அனைவருக்கும் நித்யா.

இப்போது நாயகியின் பார்வை ஆடவனை தொட்டது. “உனக்கு என்ன குழப்பம்?” என்றான் அவன் நேரடியாக.

“ரேணு போன் பண்ணுனா அஜூ”

ரேணுகா இரண்டு மாதங்களுக்கு முன் நாயகி சந்தித்த அவளது கல்லூரி தோழி. மிகவும் நெருங்கிய தோழி இல்லை என்றாலும் நன்றாக தெரிந்தவள்.

அதற்கு மேல் அவனுக்கு கேட்கத் தேவையில்லை. அவனுக்கும் அது தெரிந்த விஷயம் தான். அதனால் தான் வீட்டுக்குள் நுழையும் போது குழம்பிக்கொண்டே வந்தான். “எனக்கும் கிஷோர் ஃபோன் பண்ணான்?” அந்த கிஷோர் அவனுடன் பயின்ற நண்பன்.

“இப்ப என்ன பண்றது?” பெண்ணின் குரலில் கலக்கமிருந்தது.

“பார்த்துக்கலாம்” திடமாக சொன்னான் ஆடவன். பெண் நம்பிக்கை இல்லாமல் பார்த்தாள்.

இவர்கள் பேச்சை கேட்டு குழம்பி நின்றாள் நித்யா. இப்போது அவளிடமும் விஷயம் பகிரப்பட்டது. அவளுக்கு என்ன சொல்வது என தெரியவில்லை. அவளும் நாயகியுடன் இணைந்து அனைத்தையும் கடந்து வந்தவள் அல்லவா???

❤❤❤

“ம்மா” தன் கண்ணை கசக்கிக்கொண்டு அழுதான் இரண்டு வயது பாலகன். நல்ல தூக்கத்தில் இருந்தவன் அப்போதுதான் முழித்தான். மங்கிய வெளிச்சம், அருகில் யாருமில்லை எனவும் பயந்து அழத் தொடங்கினான்.

மழலையின் குரலை கேட்கவும், அனைத்தையும் மறந்த நாயகி, “இதோ வந்துட்டேன் குட்டி கண்ணா...” என அவனிடம் ஓடினாள்.

அர்ஜுனின் முகம் புன்னகையை ஏந்தியது. ‘என் மகன் உன்னை உன் நினைவுகளில் தங்க விடமாட்டான்…’ என மனதில் நினைத்து சிரித்துக்கொண்டான்.

ஆம்! அர்ஜுன் (அந்த ஆடவனின் பெயர்) நினைத்தது போல் அந்த குட்டி பாலகன் (கோகுல்) அவளது நிமிடங்களை களவாடிக் கொண்டான். குழந்தையுடன் குழந்தையாக பேசி, மகிழ்ந்து, கொஞ்சி சுற்றியுள்ளவர்களை மறந்து, தங்களுக்கான தனி உலகத்தில் சஞ்சரித்தனர் தாயும் மகனும். தன்னை அவர்களுடன் இணைக்காத கோபத்தில் அர்ஜுன் அவர்களை முறைத்துக் கொண்டிருந்தான். இவர்கள் மூவரும் அடிக்கும் கூத்தை நித்யஸ்ரீ சிரிப்புடன் பார்த்திருந்தாள்.

“என்ன சிரிப்பு உனக்கு?” கோபத்தில் அவளிடம் ஏகுறினான் அர்ஜுன்.

‘ஐயடா உங்க பருப்பு அங்க வேகாது. என்கிட்ட எகுற வேண்டியது…’ என முனகினாள்.

“அங்க என்ன முணுமுணுப்பு. சத்தமா சொன்னா நாங்களும் தெரிஞ்சுக்குவோம்” மீண்டும் முறைத்தான்.

“அய்யய்யோ நான் இல்ல. நீங்களாச்சு, அக்காவாச்சு, உங்க பையனாச்சு. நான் இந்த ஆட்டைக்கு வரலை.” என பெரிய கும்பிடு போட்டு அந்த இடத்திலிருந்து ஓடினாள் நித்யஸ்ரீ. ஓடும் தங்கையை செல்லமாக முறைத்தாள் ஸ்ரீதேவி.

ஆம்! நம் நாயகியின் பெயர் ஸ்ரீதேவி. அனைவருக்கும் ஸ்ரீ. அவளுக்கு பொருத்தமாக பெயர் வைக்கப்பட்டதா? அல்லது பெயருக்குப் பொருத்தமாக அவள் இருக்கிறாளா? பெரிய பட்டிமன்றமே வைத்து விடலாம். அந்தளவு அவளுக்கு அந்தப் பெயர் பொருந்தியிருந்தது.

“ஸ்ரீமா தம்பிக்கு பசிக்கும். சாப்பாடு ஊட்டு” என ஸ்ரீதேவியையும், நித்யஸ்ரீயையும் பெற்ற சுலோக்ஷனா அழைத்தார்.

“இதோ வரேன் மா” என சென்றவள், ஒரு தட்டில் இரண்டு இட்லியையும், காரம் இல்லாத சட்னி சாம்பாரையும் எடுத்துக்கொண்டு, “குட்டி கண்ணா வாங்க சாப்பிடலாம்.” அவனை அழைத்தாள்.

“நோ மம்மம்.” என தந்தையின் கழுத்தை கட்டிக்கொண்டான் அந்த குறும்புக்கார கோகுல கண்ணன்.

அவன் செய்கையில் சிரிப்பு முட்டினாலும், அதை மறைத்துக் கொண்டு, “ஏண்டா இவ்வளவு நேரம் என்னை விட்டுட்டு அம்மாவும் மகனும் கொஞ்சுனீங்க, இப்பதான் நான் உன் கண்ணுக்கு தெரியறேனா?” என செல்லக் கோபம் கொண்டான் அர்ஜுன்.

அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்ட குட்டி கண்ணன், “டாடி மம்மு வேணா… பா(ர்)க் போலாம்.” செல்லமாக சிணுங்கினான்.

மகனின் பாவனையில் மயங்கிய அர்ஜுன், நாயகியின் புறம் திரும்பி, “ஸ்ரீ.‌‌..” என ஏதோ சொல்ல வர, ஸ்ரீதேவி அவனை முறைத்த முறைப்பில் அவன் வாய் தன்னால் முடி கொண்டது… பிறகு அவன் ஏன் வாயைத் திறக்கப் போகிறான்? “டாடிக்கு அவசரமா ஒரு கால் பண்ணனும். போன் பேசிட்டு வரேன்.” அந்த இடத்திலிருந்து எஸ்கேப் ஆனான்.

குழந்தை பாவமாக ஸ்ரீதேவியை பார்த்தான். “ம்மா நோ மம்மம். வித(ளை)யாட.” சாப்பாடு வேண்டாம், விளையாட செல்லலாம் என அவளிடமே அடம் பிடித்தான்.

“மொத இட்லி சாப்பிடலாம் கண்ணா.” அவன் தாடையை பிடித்து கொஞ்சினாள்.

“நோ வித(ளை)யாட…” அவள் மூக்கோடு மூக்கு உரசி ஐஸ் வைத்தான். பெண் உருகத் தொடங்கினாள்.

“என் செல்ல கண்ணால்ல சாப்பிட்டு விளையாடலாம்.” அவன் கொழு கொழு கன்னத்தை வருடினாள்.

“மொத வித(ளை)யாட… அப்புறம் சாபிட” மழலையில் மிலற்றினான்.

ஒரு பெருமூச்சுடன், “ரொம்ப அடம் பண்ற. சரி வா நம்ம ஜூலா விளையாடிகிட்டு சாப்பிடலாம்.” என அவனை தூக்கிக்கொண்டு, தங்கள் வில்லாவுக்கு என்று தனியாக அமைத்திருந்த பார்க்கில் உள்ள ஊஞ்சலில் அமர வைத்து இட்லியை ஊட்டினாள்.

விளையாடும் மும்மரத்தில் அவனும் அடம் பிடிக்காமல் சாப்பிட்டான். கடைசி வாய் இட்லியை அவன் தலையை சுற்றி வீசியவள், “குட் பாய்” என சொல்லி அவன் பட்டு கன்னத்தில் இதழ் பதிக்க, அவனும் பதிலுக்கு நாயகியின் கன்னத்தில் இதழ் பதித்தான்.

அவன் உதட்டில் ஒட்டி இருந்த உணவு அவள் கன்னத்தில் படிய, “டேய் கண்ணா இந்த சேட்டைதானே வேண்டாங்கிறது… என்னையும் உன்னை மாதிரி அழுக்காகிட்ட” பொய்யாக சிணுங்கினாள்.

குட்டிக் கண்ணன் தன் பால் பல்லை காட்டி அழகாக சிரித்தான். பெண் பாகாக உருகினாள்.

அதன் பிறகு அவளது நேரம் முழுவதையும் குட்டிக் கண்ணன் தன் வசமாக்கினான். உணவு முடிந்த சிறிது நேரத்தில் தூக்கத்திற்காக அவன் கண்ணை கசக்க, அவனைத் தூக்கிக்கொண்டு அறைக்கு சென்றாள்.

❤❤❤

இரவு பதினோரு மணியிருக்கும், தூக்கம் வராமல் தவித்த ஸ்ரீதேவி, அவர்கள் தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தாள்.

“என்னாச்சு ஸ்ரீ? யோசனை பலமா இருக்கு…”அவள் பின்னோடு கேட்டது அர்ஜுனின் குரல்.

“இல்ல அஜூ அங்க நம்ம அவசியம் போகணுமா? அதுதான் யோசிக்கிறேன்?”

“நம்ம ரெண்டு பேத்தையும் தனித்தனியா கூப்பிட்ட அப்புறமும் போகாம இருந்தா நல்லா இருக்காதே?”

“நல்லா இருக்காதுதான். ஆனா என்…னால் முடியு…மா?” தடுமாறினாள்.

“நீ அதை கடந்து வந்து பல மாசம், இல்ல இல்ல வருஷமே ஆச்சு. இன்னும் ஏன் அதை போட்டு மனசை குழப்புற?”

“அவங்களை என்னால் எப்படி ஃபேஸ் பண்ண முடியும்? அவங்க என்னை பார்த்தால் எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க? பயமாயிருக்கு. எல்லாம் தெரிஞ்ச நீங்களே இப்படி பேசலாமா?”

“அக்கா அவங்களுக்கு உன்னை ஞாபகமே இருக்காது… உன்னை மறந்து போனவங்களை நினைச்சு நீ ஏன் பயப்படுற?” என அங்கு வந்த நித்யஸ்ரீ சகோதரியின் கரம் பற்றினாள்.

“நான் இன்னும் மறக்கலையே நித்தி குட்டி.”

“அப்ப மறந்ததா சொன்னதெல்லாம் எங்களை ஏமாத்தவா ஸ்ரீ?” ஏமாற்றத்துடன் கேட்டான் அர்ஜுன். ஸ்ரீதேவி மௌனமாக தலை குனிந்தாள்.

“நீ செய்யறது சரியில்லக்கா. மாமா மனசு எவ்வளவு கஷ்டப்படும்? நீ எல்லாத்தையும் மறக்கணும். உனக்குன்னு ஒரு அழகான வாழ்க்கையை அமைச்சுக்கிட்ட. நல்ல வேலை, நல்ல குடும்பம் அதை மட்டும் உன் மனசுல வை.”

“முடியலையே?”

“உன் உயிருக்கு உயிரான உன் மகன் கோகுல் இருக்கான். உன் கண்கள் கண்ணீர் சிந்தும் முன் துடைக்க அர்ஜுன் மாமா இருக்காங்க. உன் சந்தோஷம் துக்கம் எல்லாத்துலையும் ஷேர் செய்ய நான், அம்மா, அப்பா இருக்கோம். எங்களை மட்டும் நினைச்சுக்கோ, எல்லாத்தையும் மறக்க முடியும்.”

“அப்படியேனாலும் இப்ப என்னால் அங்கு போக முடியாது. யாரோ போல் அவங்க பார்க்கிற பார்வையை, பார்த்துட்டு என்னால் உயிரோடவே இருக்க முடியாது.” விம்மினாள். அர்ஜுனின் முகம் பாறையாக இறுகியது.

“என்னக்கா இப்படி பேசுற? உன்னால் மாமா மனசு உடைஞ்சு போய் நிக்கிறாங்க. ஒரு தடவை நேரடியா எல்லாத்தையும் ஃபேஸ் பண்ணுக்கா. அப்புறம் பயம் போய்டும். நல்லதே நடக்கும்.” ஆருடம் சொன்னால் நித்யஸ்ரீ.

“என்னால் முடியுமா?” தவிப்பாக வந்தது ஸ்ரீதேவியின் குரல்.

“உன்னால் முடியாதுன்னு ஏதாவது இருக்கா? எவ்வளவு பெரிய பிரச்சினையில் இருந்து வெளிவந்திருக்க? இதெல்லாம் ஜுஜுப்பி மேட்டர். அதுவுமில்லாம அங்க உன் கூடவே மாமா
வும் கோகுலும் இருப்பாங்க. அப்புறம் என்ன கவலை?” என தொடர்ந்து பேசி தன் சகோதரியை சம்மதிக்க வைத்தாள் நித்யஸ்ரீ.

விழிகள் பேசும்…
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,575
Reaction score
43,466
Age
39
Location
Tirunelveli
😳😳😳😳

ஏற்கனவே அப்பாவா தான் இருக்கான்,

இதுல புதுசா மஹாலக்ஷ்மி வேற வரணுமாமா 🤨🤨🤨

நல்ல இருக்கு ஆரம்பம் 👍🏼👍🏼👍🏼

வாழ்த்துகள் டியர் 💐💐💐💐💐💐
 




Krisha

அமைச்சர்
SM Exclusive
Joined
Sep 27, 2021
Messages
1,455
Reaction score
2,009
Location
UAE
😳😳😳😳

ஏற்கனவே அப்பாவா தான் இருக்கான்,

இதுல புதுசா மஹாலக்ஷ்மி வேற வரணுமாமா 🤨🤨🤨

நல்ல இருக்கு ஆரம்பம் 👍🏼👍🏼👍🏼

வாழ்த்துகள் டியர் 💐💐💐💐💐💐
குழந்தைக்கு அப்பாவா இருக்கான் அது சரிதான்...😁 ஆனா அந்தக் குழந்தைக்கு அம்மா வேண்டாமா?😝 அவனுக்கு மனைவி வேண்டாமா? 😜

Thank you dear
 




Advertisements

Latest Episodes

Advertisements

Top