ஷ் இது வேடந்தங்கல் 16(1) 16(2)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Bala sundar

Author
Author
Joined
Feb 12, 2019
Messages
26
Reaction score
74
Points
13
Location
Sivakasi
“ராஜன் சார். என்னால இங்க இருக்க முடியல. நாளுக்கு நாள் வெறுப்பா இருக்கு. நான் சென்னைக்கு போறேன்.”

“அப்புறம்? ”

“ரொம்ப கஷ்டமாக இருக்கு சார். ”

அமைதியாக செய்தித்தாளை லேசாக விலக்கியவன் அவன் முகம் மட்டுமே அவளுக்கு தெரியும்படி வைத்துக்கொண்டு கேட்டான் அவனவன்கிட்ட காசுக்காக ஒன்றுமில்லாமல் நின்னபோது கஷ்டமாக இல்லையா? ”

ஸ்ரீ அவன் கேள்வியால் அதிர்ந்தாள். அவன் கூசாமல் பேசிய பேச்சால் இனி பேசிப் பயன் இல்லை என்று தெரிந்து அமைதியாக உள்ளே சென்றாள். கழுத்தைப் பிடித்து தள்ளியது போல் உணர்ந்தாள். வலித்தது. ஆனால் எங்கு? என்றுதான் சொல்லத் தெரியவில்லை அவளுக்கு.

வாக்குவாதத்தையோ வாயிதாவையோ விரும்பாதவன் போலிஸ்காரன். அவளுடன் இவ்விரண்டையும் விரும்பாதவன் பொறுமையிழந்ததால் போலீஸ்காரன் கையாளும் முறையைக் கையாண்டுவிட்டான். லத்தி சார்ஜ்!
பேச்சுக்கே இடம் இல்லாத வழிமுறை. கைகளில் லத்தி இல்லை அதனால் வார்த்தைகளால் ஒரு போடு போட்டு விட்டான். சும்மாவா சொன்னார்கள்? நல்ல மாட்டிற்கு ஒரு சூடு என்று. இப்படித்தான் வார்த்தைகளால் சூடு போடுவார்களோ? அவர்களிடம் சொல்ல வேண்டும் இதயம் சதையால்தான் ஆனது என்று!

உள்ளே சென்றவள் ஒரு துளி கண்ணீர் கூடச் சிந்தவில்லை. பவித்ராவும் அம்மாவும் ஒரே நாளில் இறந்தபோதே கண்ணில் சுரப்பிகள் தான் அணைத்தும் இறுகி ஒன்றுக்குடன் ஒன்று முன்பே ஒட்டிக்கொண்டு விட்டதே! அதிலிருந்து எப்படி கண்ணீர் வரும்?

மறுநாள் கடிகாரம் முன்தினம் போலச் சுழலவில்லை ஸ்ரீக்கு. காலை எட்டு மணியளவில் ராஜன் எழுந்து வாக்கிங் சென்றதை உறுதி செய்துவிட்டு கையில் தனது ஒரு பையில் பர்ஸைமட்டும் போட்டுக்கொண்டு மொட்டை மாடிக்குச் சென்றாள். மொட்டை மாடியிலிருந்து பக்கத்து வீட்டு மாடிக்கு தாவுவதில் எந்த சிரமமும் இருக்கவில்லை. நெருக்கமான காவலர் குடியிருப்புப் பகுதியால் விளைந்த நன்மை. (நன்மையா?)

அமைதியாக அரவமோ பதட்டமோ மருந்துக்குக்கூட இல்லாமல் படியில் இறங்கி நிதானமாக நடந்தாள். இருபது படிகள் இருந்தது. நான்கு படிக்கட்டுகள் தாண்டியிருப்பாள். அடுத்த படியில் கால் வைக்கப் போனபோது அவள் எதிரே ராஜன் வேர்த்து வடிந்த டி சர்ட்டுடன் நின்றுகொண்டிருந்தான்.

அகப்பட்டதை ஒப்பவில்லை மனது ஆனால் அவனிடம் பதில் ஏதும் பேசாமல் அமைதியாக அவன் பின்னே நடந்து சென்றாள். ஆனால் இதயம் மட்டும் அவள் ஆடைக்கு வெளியே எவ்விக் குதித்துவிடும் அளவிற்கு துடித்தது. பத்து நிமிடம்கூட நீடிக்காத விடுதலை. அடிமைகள் விடுதலைக்காக உயிரை விடுவதுகூட புரிந்தது அவளுக்கு.

வீட்டிற்கு வந்தபிறகும் எதுவும் இருவரும் பேசவில்லை. டேபிளில் நியுஸ்பேப்பர் கிடந்தது. ஸ்ரீ அதை எடுத்துக்கொண்டு சோபாவில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள். ராஜன் அன்று டியுட்டிக்கு கிளம்பாமல் இருப்பது கண்டு அவளுக்கு உள்ளுர திகில் பரவியது. ஆனால் செய்தித்தாளை புரட்டியபோது அவள் கண்ணில் பட்டது அவளை ஏதோ செய்தது. அது ஏதோ செய்த காரணத்தாலே அவள் சிரித்தாள்.

முதலில் அவளுக்கு மட்டுமே கேட்கும் விதம் சிரித்தவள் அடுத்த இரண்டு நிமிடங்களில் அடுத்த அறையில் ஷார்ஸ்சுடன் கட்டிலில் கால் நீட்டி படுத்திருந்த ராஜனுக்கும் கேட்கும் வண்ணம் சிரித்தாள்.

‘பிடிபட்டதால் உசுப்பேத்துறா’ என்று நினைத்தான். ஆனால் சிரிப்பை அவள் நிறுத்தவேயில்லை. கடுப்பாகிப்போய் அவள் இருக்கும் அறைக்குச் சென்றான்.

ராஜன் அவள் அருகே சென்று “ஏய் இப்ப எதுக்கு சிரிக்கிற? தப்பிக்க முடியலைன்னு பைத்தியம் பிடிச்சிருச்சா? ”

ஸ்ரீ சிரிப்பை நிறுத்தவில்லை. அடக்கமாட்டாமல் சிரித்தாள்.

“ஏய் சிரிப்பதை நிறுத்து. ”

பைத்தியம் என்று ராஜன் அவளை சொன்னதுக்கு ஏற்ப சிரித்துத் தள்ளினாள்.

ராஜன் அவளிடம் கடுமையை மிக அதிகமாக காட்டி ஸ்ரீ என்று அழைக்கவும் ஸ்ரீ சிரிப்பை நிறுத்தினாள்.

ஆனால் இகழ்ச்சியாக செய்தித்தாளை அவன் முன்பாக நீட்டினாள். செய்தித்தாளில் ராஜன் கண்கள் அதிலிருந்த புகைப்படத்தில் பதிந்த நொடி அவனுக்கு ஸ்ரீயின் சிரிப்பின் காரணம் புரிந்தது.

புருவங்களை உயர்த்தி அவளிடம் “இவர்களோடு ஒப்பிட்டு பார்ப்பதா? உனக்கே இது தப்பா தெரியல? ”
“ஏன்? ஏன் பார்க்க கூடாது? ” என்று நியுஸ்பேப்பரை அகலமாக விரித்தாள்.

அதில் முதல்நிலைக் காவலர்களுக்கான உடல் தகுதி தேர்வுக்காக நானூறு ஆண்கள் வரிசையாக நின்றனர்.

அவன் முன்தினம் பேசிய பேச்சு அவளை பித்து பிடித்தவள் போல பேசவைத்தது.

“ஏன்? ஏன் பார்க்க கூடாது?அவனவன் எப்படி நிற்குறான் பாரு ராஜன். அவன் ஏன் அப்படி நிற்கிறான்? வேலை வேணும். அதனால் அவன் அப்படி நிற்கிறான். வேலை எதுக்கு வேணும்? நாட்டுக்காக உழைச்சி உழைச்சி முதுகு வளைக்கவா? இல்லை பத்து பேரை திருடன்கிட்டயிருந்து காப்பபாற்றி தானும் கத்தி குத்துபட்டு சாகவா? எத்தனை பேர் அப்படியிருப்பாங்க? ஒருத்தன்? இரண்டு பேர் ? எண்ணிப்பார்க்க ஒரு கை விரல் போதும்! மீதிபேர் எதுக்கு சட்டையில்லாம பேன்ட்இல்லாம நிற்குறாங்க? ஃபேஷன் ஷோவா நடக்குது? வேலை ராஜன்! வேலை வேணும்! வேலை எதுக்கு வேணும்? காசு ராஜன்! காசு வேணும் அதனால் வேலை வேணும்!

அவள் கத்திக்கொண்டே போகப் போக ராஜன் எதுவும் பேசவில்லை.

அவள் அவனை ராஜன் என்று மரியாதை கொடுக்காமல் கூப்பிட்டதையோ இல்லை ஆவேசமாக அவன் பேசியதற்கு பதிலடிகொடுக்க தப்புத்தப்பாக உவமை சொன்னதையோ ராஜன் கண்டு கொள்ளவேயில்லை. அமைதியாக சென்று கதவை பூட்டியவன் சாவியை அவள் முன்னே தூக்கிக் காட்டினான். சாவியும் அவளை பார்த்து கிளுக்கென்று சிரித்துவிட்டு அவன் ஷார்ட்ஸ் பாக்கெட்டில் போய் அமர்ந்துகொண்டது. அவன் அதன்பிறகு நேரே தனது அறைக்குச் சென்று அதே இடத்தில் படுத்துக்கொண்டான்.

அவள் சொன்னது தப்பான உவமையாக இருந்தாலும் அவனை சங்கடத்தில் ஆழ்த்தியது. ‘ச்ச! அவளுக்கும் நாம பேசினப்ப இப்படித்தானே இருந்திருக்கும்?’ என்று நினைத்துக்கொண்டான். நினைத்ததோடு சரி. மேலே சுழலலும் மின்விசிறியை பார்த்தவாரு ஏதேதோ நினைத்துக் கொண்டிருந்தான். மழையில் உப்பு விற்றவன் நிலை என்ன? படுத்துக் கொண்டே கண்இமைக்காமல் மின்விசிறியைப் பார்த்துக் கொண்டிருந்தவனின் நிலை என்ன? விடை தெரிந்துவிட்டதா? மிகச் சரி!

சிறிது நேரத்தில் ராஜனின் கண்கள் தானாக மூடிக்கொண்டது. தனது ஷார்ட்ஸ் பாக்கெட்டில் எலி நுழைவதுபோல் இருந்தபோதும் அவன் அசையக்கூடயில்லை. ஸ்ரீக்கு ஒரு லேடிஸ் ஹாஸ்டல் கேட்டிருந்தோமே இவளை எத்தனைநாள் அடை காக்க? அங்கேயும் இடம் கிடைக்கணுமே என்ற நினைப்பில் கண்களை மூடியவன் எலியின் சில்மிஷத்தைக் கூட அறியவில்லை. ஆனால் கதவு திறக்கப்படும் சத்தம் மட்டுமே தெளிவாக சந்தேகமறக் காதினில் கேட்டது. அப்போதுதன் அவன் ஆறாவது அறிவு அவன் காதில் சொன்னது ஷார்ட்ஸில் நழைந்தது எலி அல்ல ஸ்ரீயின் கைகள் என்று. கண் விழித்து பார்த்தபோது ஸ்ரீ என்னும் பெண்னொருத்தி அவன் வீட்டில் இல்லை. சன்னல் வழியே எட்டிப் பார்த்தபோது ஸ்ரீ வெளி கேட் தாண்டி ரோட்டில் நடந்து கொண்டிருந்தாள். ‘ச்ச! அவளை பிடித்ததும் இரண்டு அப்பு அப்பியிருக்கணும். பாவம் என்ன செய்வாள்? தப்பிக்கத்தானே தோணும் என்று நினைத்ததற்கு இதுவும் வேணும் எனக்கு இன்னமும் வேணும் ’ என்று மனதில் நினைத்தவன் இனி நடக்க வேண்டியதை வேகமாக யோசித்தான்.

ஸ்ரீ இருந்தால்தான் கேஸை முடிக்க முடியும். முதல் குற்றவாளி பவித்ராவாக இருந்தாலும் ஸ்ரீயின் ஒத்துழைப்பால் பணத்தை கண்டுபிடித்துவிட்டால் கௌன்சிலர் தலைவலி கிடையாது. கொஞ்ச நாள் பொறுமையாகயிருகக்கூடாதா? என்று நினைவுகளை விரட்டிக்கொண்டே கைபேசியை எடுத்தான்.

ராஜன் தனது வீடு வெளியிலிருந்து பூட்டப் பட்டிருப்பதை அறிந்தவன் தனது செல்ஃபோனில் காவலர் துரைக்கு அழைப்புவிடுத்தான்.
“ராஜன் சார் சொல்லுங்க. ”

“துரை நீங்க எங்க இருக்கீங்க? ”

“நம்ம அப்பார்ட்மென்டுக்கு அடுத்த தெருவில் டீக்கடையில் சார். ”

“என்ன டியுட்டி உங்களுக்கு இன்னைக்கு? ”

“சார் டியுட்டியில்தான் மஃப்டியில் இருக்கேன். இங்க ஒரு ஈவ் டீசிங் கேஸ் பற்றி நியுஸ் கொடுக்க ஆர்டர் சார். மகளிர் போலிஸில் புகார் கொடுத்திருக்காங்க. அங்கயிருந்து நம்மகிட்ட அசிஸ்டன்ஸ் கேட்டிருக்காங்க. ”

“துரை ஒரு அரை மணிநேரம் எனக்கு தரமுடியுமா? ”

“சொல்லுங்க சார். அந்த பையன் வர இன்னும் ஒரு மணிநேரம் இருக்கு. ”

“நல்லது. நீங்க எங்க தெருவில் இருந்து உங்க தெருவுக்கு யெல்லோ கலர் சுடிதார் போட்ட பொண்ணு வருதான்னு பாருங்க. ”

“ஆமாம் சார். ஒரு பொண்ணு வருது. கையில் ஒரு ஜவுளி கடை கட்டப்பை இருக்கு. ”

“கரக்ட். அந்தப் பொண்ணை ஃபாலோ பண்ணுங்க. மதுரையைவிட்டு நகரக்கூடாது. மதுரைக்குள் எங்க வேணும்னாலும் சுத்தட்டும். ஆனா கண்காணிங்க. ஒவ்வொரு மூவ்மென்ட்டும் கண்காணிங்க. ”

“சரி சார். மதுரையை விட்டு நகர்ந்தால் உங்களுக்கு இன்ஃபார்ம் பண்றேன். நான் அவுங்களை ஃபாளோ பண்றேன். ”

“ம். சரி. பதினைந்து நிமிஷத்தில் கால் பண்றேன். ”

எதிர்முனையில் அழைப்பு துண்டிக்கப்பட்ட ஒலி கேட்டது.
ராஜன் தனது பாத்ரூமில் வெண்ணீர் பட்டனை ஆன் செய்தான். நல்ல சுடுநீரில் குளித்தான். குளித்துவிட்டு தனது அலமாரியைத் திறந்து அணியவேண்டிய உடைகளைத் தேர்வு செய்ய ஆரம்பித்தான். இரண்டு சட்டைகளை எடுத்தான். இரண்டிற்கும் பேன்ட்டைக் காணவில்லை. எங்கடா வைத்தோம் என்று வேறு இரண்டு பேன்ட்டை எடுத்தான் கையில்.

எடுத்துவைத்த இரண்டு பேன்டுக்கும் சட்டை இல்லை. ஏதோ யோசனையில் கிடைத்த டி ஷர்ட்டையும் பேன்ட்டையும் போட்டுக்கொண்டு தனது கைபேசியை மேஜையிலிருந்து எடுத்துக்கொண்டு சோபாவின் கைகளில் அமர்ந்தான்.

துரைக்கு செல்பேசியில் அழைப்பு தொடுத்தான்.

“சார் இப்ப அந்த பொண்ணு பெரியார் பஸ் ஸ்டான்ட் பக்கத்தில் இருக்கும் பிள்ளையார் கோவிலில் வாசலில் நிற்குது சார். இப்ப அங்க இருக்கும் பிச்சைகாரங்களுக்கு பையிலிருந்து சட்டை பேன்ட்டை தானம் போடுது சார். ”

“என்ன சொன்னீங்க? ”

“பையிலிருந்து சில சட்டை பேன்ட் எடுத்து பிச்சைபோடுது சார். ”

ராஜன் தன் காதுகளின் செவித்திறனை பரிசோதித்துக் கொண்டிருந்த வேலையில் துரை தனது தகவலை தந்து கொண்டேயிருந்தார்.

“அந்தப் பொண்ணு இப்ப இரண்டு உண்டியலை எடுத்து உடைத்து சில்லரையையும் பிச்சைக்காரன்களுக்கு கொடுக்குது சார். ”

ராஜன் தனது பூஜை அறைக்குச் சென்றான். அங்கே ஸ்ரீயின் உண்டியலும் இல்லை. அவளுக்கு என்று ஏட்டையா பொண்ணு கொடுத்த உண்டியல்.

அவனது உண்டியலும் இல்லை. மதுரை பாண்டி கோயிலுக்கு அவன் உண்டியலில் பணம் சேர்ப்பது வழக்கம். நம்பிக்கை இல்லாவிடிலும் அம்மா ஞாபகமாக செய்வது.

“அம்மையார் இப்ப என்ன செய்யிறாங்க? ”

“அர்ச்சகர் தட்டில் பத்து ரூபாய் தாள் போடுறாங்க. கையில் ஒரு வாலட் இருக்கு சார். ”

ஒரு நிமிடம் இரு பக்கமும் பேச்சில்லை.

“புளு கலர் வாலட்” என்று சந்தேகமாய் துரை இழுத்தார். அடிக்கடி பார்த்த பொருள் ஆயிற்றே! கேட்பதற்குதான் கொஞ்சம் பயம் அவருக்கு. நிச்சயமாய் அது யாருடையது என்று தெரிந்தபோதும் கேள்விகேட்கத்தான் நாவு எழவில்லை.
ராஜன் அவர் அதன் நிறத்தை சொல்லும் முன்னே அவனே கண்டுபிடித்துவிட்டான் அதன் நிறத்தை. இன்னும் சொல்லப்போனால் கண்கள் முன்பாக அந்தக் காட்சி படம் போலவே ஓடியது.

மரியாதை கொடுக்கும் விதமாகவே துரை வாலட்டைப் பற்றி கேட்கவில்லை. ஆண்கள் உபயோகிக்கும் வாலட் பெண்கள் கையில் எப்படி? என்று யோசிக்கத் தெரியாத ஆண்மகனா? காவலரா?
துரையின் கற்பனை எங்கெல்லாம் விரியும் என்று நினைத்த ராஜன் காதினில் மற்றொரு தகவல் வந்தது
“சார் இப்ப ஹேட்டல் விஜயாவில் சாப்பிடப்போகுது. ”

‘சாப்பிடப்போறாளா இல்லை ஹோட்டல் கேஷ் டேபிளில் ஆதரவற்றோர் நிதி என்ற உண்டியளில் வாலட்டை காலி பண்ணப் போறாளா? என்று பாரும். ’
என்று சொல்லப்போனவன் அதைச் சொல்லாமல் “சரி நான் அங்க வந்ததும் நீங்க கிளம்பலாம் துரை. ரொம்ப தாங்க்ஸ். ” என்றான்.

“சரி சார். எதுக்கு நன்றியெல்லாம்? ஓ.கே சார். வச்சிடுறேன்.”
ராஜன் ஏட்டையாவிற்கு கால் செய்து கதவைத் திறக்க வழிசெய்தான்.

மாற்று சாவி கொண்டு கதவைத் திறந்ததும் பதினைந்து நிமிடத்தில் ஸ்ரீ சாப்பிட்டுக் கொண்டிருந்த ஹோட்டல் வாசலில் வந்து நின்றான்.

பிய்த்துப்போட்டு வைத்திருந்த தோசையின் கடைசி சிறு துண்டை எடுத்து வாயில் வைக்கப்போனவள் எதிரே ராஜன் போல் ஒரு மனிதன் தெரியவும் அவனை உற்றுப் பார்த்தாள். ராஜனே தான் என்று உறுதி செய்தவள் டேபிளில் நூறு ரூபாய் தாளை வைத்து அதன்மேல் டம்பளரை வைத்துவிட்டு பின்வாசல் தேடி ஹோட்டல் அடுக்களைக்குள் நுழைந்தாள். அவள் அடுக்களைக்குள் நுழைந்து மூன்று எட்டு வைப்பதற்குள் அவள் கைகளைப் பிடித்து அவள் நான்காவது எட்டை எட்டு வைக்காமல் தடுத்தது ராஜன் கைகள்.“நேரா வாசலுக்கு போ. எனக்கு கோபம் வந்து பத்துபேர் முன்னாடி அடிச்சிட்டு இழுத்திட்டு போக வைத்திடாதே.
அப்புறம் நிஜமாகவே உன்னை காவலில் வைத்துதான் விசாரிப்பேன். ”

ஒரே நாளில் இரண்டு முயற்சிகளும் தோல்வி ஆனதால் அனைத்தையும் அனைவரையும் தன்னையும்சேர்த்து முற்றிலும் வெறுத்தாள்.

ஸ்ரீ அவன் கண்களை பார்த்துக்கொண்டே அவன் கொஞ்சமாக வழிவிட்டிருந்த இடைவெளியில் பம்மிப் பம்மி வெளியேறினாள். அடித்துவிடுவானோ என்ற பயம் அவனைத் தாண்டிச் செல்லும்வரை அவளுக்கு இருந்தது. மற்ற வேளையாக இருந்தால் திரும்ப இவளும் கை நீட்டத் தயங்கப்போவது இல்லை. ஆனால் எந்நேரமும் F.I.R போடப் போறேன் என்று சும்மாவேணும் பயமுறுத்துறவன் நிஜமாகவே போட்டுவிட்டால்?

இருவரும் பைக்கில் சென்றபோதும் ஒன்றும் பேசவில்லை. அந்த ஹோட்டல் தெருவை தாண்டிச் சென்றபோது ரோட்டோரமாய் ஒரே சல சலப்பு. அழுகையும் இரைச்சலும். ராஜன் வண்டியை நிறுத்திவிட்டு ஸ்ரீ கைகளைப்பிடித்து கூட்டத்தை நோக்கி அழைத்துச் சென்றான்.

“ராஜன் வேண்டாம். அங்க போக வேண்டாம். ஏதோ ஆக்சிடன்ட்ன்னு பேசிக்கிறாங்க. நான் வரல்ல. இங்கேயே நிற்கிறேன். எங்கேயும் போக மாட்டேன். அங்க மட்டும் கூட்டிட்டு போகாத ப்ளீஸ். ப்ளீஸ் ராஜன். ”

ராஜன் ஸ்ரீயிடம் திரும்பாமலே அவளையும் இழுத்துக்கொண்டு கூட்டத்தை நெருங்கினான்.
 
Advertisements

Latest Episodes

Advertisements

Top