03
வெகு நேரமாகியும் எதுவும் பேசாமல் தன் கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு தன்னையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்த தன் நண்பனின் கையை சட்டென்று தட்டி விட்ட கௌதம், "இப்போ என்ன ஆச்சுன்னு ஏதோ மியூசியத்தில் இருக்கிற சிலையைப் பார்க்கிற மாதிரி என்னையே ஆன்னு பார்த்துட்டு இருக்க? நான் கேட்டதற்கு ஏதாவது வழி சொல்லேண்டா" என்று கூற,
தன் கையிலிருந்த காகிதத்தை தூக்கிப் போட்டு விட்டு கோபமாக இருப்பது போல எழுந்து நின்று கொண்டவன், "ஏன்டா நீ கேட்ட கேள்விக்கும், எனக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா சொல்லு? வேண்டாம் வேண்டாம்னு சொல்லிட்டு காலையில் பொண்ணு பார்க்க கிளம்பி போனது நீ, அங்கே போய் அந்தப் பொண்ணைப் பார்த்து அவங்க ஊரே மூழ்கிப் போற அளவுக்கு ஜொல்லு விட்டது நீ, இதற்கு எல்லாம் மேலே அந்தப் பொண்ணோட பேரைக் கூட சரியாக கேட்காமல் அந்தப் பொண்ணை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்னதும் நீ, இப்படி எல்லா வேலையும் நீ பண்ணிட்டு இப்போ வந்து அந்தப் பொண்ணை தனியாகப் பார்த்து பேசணும் ஏதாவது ஐடியா சொல்லுன்னு என்கிட்ட கேட்குறீயே இது நியாயமா சொல்லு?" என்று வினவ, கௌதமோ அவனைப் பார்த்து சமாளிப்பது போல சிரித்துக் கொண்டே அவனது கைகள் இரண்டையும் சட்டென்று எட்டிப் பற்றிக் கொண்டான்.
"எனக்கு உன்னை விட்டால் வேறு யாரு இருக்கா சொல்லு? சின்ன வயசிலிருந்து நான் உனக்கு எவ்வளவு உதவி பண்ணியிருக்கேன், அதெல்லாம் நீ மறந்துட்ட இல்லையா?
நம்ம எல்.கே.ஜி படிக்கும் போது உனக்கு நம்ம கிளாஸ் பத்மினியை ரொம்ப பிடிக்கும், அவளுக்கோ தேன்மிட்டாய்ன்னா இஷ்டம், அதற்காக வேண்டி அவளுக்கு கொடுக்கணும்னு தேன் மிட்டாய் வாங்க கடை கடையாக உனக்காக நான் ஏறி இறங்கினேன், அதை மறந்துட்ட இல்லையா?
அதற்கு அப்புறம் நம்ம செவன்த் கிளாஸ் படிக்கும் போது அதே செவன்தில் பி செக்ஷனில் படிச்ச ஐஸ்வர்யா மேலே உனக்கு ஒரு க்ரஸ் இருந்தது, அதற்காக அவளுக்கு பிடிக்கும்னு நீ ஜவ்வு மிட்டாய் வாங்கி வைச்சுட்டு அதை எப்படி அவகிட்ட கொடுக்குறதுன்னு தயங்கி தயங்கி நின்னப்போ உனக்காக அவகிட்ட போய் பேசி அதைக் கொடுத்து, அதற்குப் பதிலாக அவ என்னைப் போட்டுக் கொடுத்து அதற்காக பிரின்சிபால் கிட்ட உனக்குப் பதிலாக நான் அடி வாங்கினேன், அதையும் மறந்துட்ட இல்லையா?
இது எல்லாவற்றிற்கும் மேலே காலேஜ் படிக்கும் போது..."
"போதும், போதும், போதும். போதும்டா சாமி, நீ இதற்கு மேலே ஒரு வார்த்தை பேச வேண்டாம். ஏதோ அறியாத வயதில் தெரியாமல் நடந்த விஷயத்தை எல்லாம் ரொம்ப பெரிய விஷயம் மாதிரி சொல்லி இப்படி என்னை டார்ச்சர் பண்ணுறியேடா, இதற்கு எல்லாம் என்னை சொல்லணும். வேலை விஷயமாக அவுட் ஆஃப் சிட்டி போயிட்டு ஊருக்கு திரும்பி வந்த கையோடு பார்த்து ரொம்ப நாள் ஆச்சேன்னு உன் வீடு தேடி வந்தேன் இல்லையா? என்னை சொல்லணும் டா"
"என்ன சொல்லுறதா இருந்தாலும் முதல்ல நான் கேட்டதற்கு ஒரு பதில் சொல்லிட்டு அப்புறம் உன்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கோடா என் ஆருயிர் நண்பனே!" என்றவாறே கௌதம் மாதவனின் அருகில் வந்து அமர்ந்து கொள்ள,
அவனைப் பார்த்து சலித்துக் கொள்வது போல உச்சுக் கொட்டியவன், "சரி ரொம்ப கெஞ்சாதே, என்ன பண்ணலாம்ன்னு யோசிக்கிறேன். நீ கேட்டது கேள்வியாக இருந்தால் பதில் யோசிக்கலாம், ஆனா பதிலை சொல்லிட்டு இதற்கு ஏற்ற கேள்வி எதுன்னு கேட்டால் நான் என்ன பண்ணுறது? கடவுளே! ஏதாச்சும் ஒரு வழியைக் காட்டுப்பா" என்றவாறே தன் கைகள் இரண்டையும் தலைக்கு மேல் கும்பிட்டுக் கொள்வது போல செய்ய, அவன் சொன்னதைக் கேட்டு சிறிது நேரம் எதையோ யோசிப்பது போல பாவனை செய்தவன் சட்டென்று மாதவனை தாவி அணைத்துக் கொண்டான்.
"மச்சான், ரொம்ப ரொம்ப நன்றிடா, இதற்குத்தான் ஒரு நண்பன் வேணும்னு சொல்லுறது, பார்த்தியா ஒரே நிமிஷத்துல என் குழப்பத்திற்கு பதில் சொல்லிட்ட" என்று கூறிய கௌதமைப் பார்த்து திருதிருவென விழித்துக் கொண்டு நின்ற மாதவன்,
"டேய்! நீ நல்லாத்தானே டா இருக்க, இன்னைக்கு உனக்கு என்ன தான்டா ஆச்சு? நானும் வந்ததில் இருந்து பார்க்கிறேன், சம்பந்தம் சம்பந்தமில்லாமல் ஏதேதோ பேசிட்டு இருக்க, எனக்கு என்னவோ ரொம்ப பயமாக இருக்குடா, நான் வீட்டுக்கு போறேன், என்னை விட்டுடுடா" என்றவாறே அங்கிருந்து எழுந்து ஓடிச் செல்லப் பார்க்க,
சிரித்துக் கொண்டே அவனது கையைப் பிடித்து இழுத்து அவனை அமரச் செய்தவன், "டேய், டேய் ஓவரா நக்கல் பண்ணாதே டா, நான் எல்லாம் நார்மலாக தான் இருக்கேன். நீ இப்போ கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி அந்தக் கடவுள் தான் வழி காட்டணும்ன்னு சொன்ன இல்லையா, அப்போதான் எனக்கு ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது.
நாங்க அந்தப் பொண்ணு வீட்டில் இருந்து வெளியே வரும் போது வீட்டுக்குள்ள இருந்த பாட்டி ஒருத்தங்க 'இந்தப் பொண்ணு பார்க்குற சடங்கு எல்லாம் முடிந்த பிறகு நம்ம ஊர் எல்லையில் இருக்குற நம்ம குலதெய்வம் கோயிலுக்கு போய் ஒரு பூஜை பண்ணணும்யா முருகா, அப்போதான் இனி நடக்குற எல்லா சடங்கும் எந்தவொரு குறையும் இல்லாமல் நல்லபடியாக நடக்கும்' அப்படின்னு சொல்லிட்டு இருந்தது என் காதில் ரொம்ப நல்லாவே கேட்டது, அதனால்தான் நீ என் குழப்பத்திற்கு பதில் சொல்லிட்டேன்னு சொன்னேன்.
நாளைக்கு மட்டும் எப்படியாவது அந்தக் கோவிலுக்கு போய் அந்தப் பொண்ணை மீட் பண்ணி பேசிட்டேன்னு வை என்னோட எல்லாக் குழப்பத்திற்கும் பதில் கிடைச்சிடும்" என்று கூறியிருக்க, மாதவனோ சற்றே குழப்பம் கொண்டது போல பாவனையுடன் அந்த இடத்தில் இருந்து எழுந்து நின்றிருந்தான்.
தன் நண்பனின் முகத்தில் தெரிந்த குழப்பத்தைப் பார்த்ததும் அவனருகில் சென்று அவனது தோளில் தன் கரத்தை வைத்து அழுத்திக் கொடுத்த கௌதம், "என்னாச்சு மாதவா, ஏன் திடீர்னு அமைதியாகிட்ட?" என்று வினவ,
அவனைப் பார்த்து பெருமூச்சு விட்டுக்கொண்டவன், "இல்லை நீ அந்தப் பொண்ணைப் பார்த்து பேச நினைக்கிறது எல்லாம் சரிதான், ஆனா ஒரு வேளை அந்தப் பொண்ணு மித்ரா இல்லை கயல்விழி தான்னு உறுதியாகிடுச்சுன்னா என்ன பண்ணுவ? இந்தக் கல்யாணப் பேச்சையே நிறுத்திடுவியா?" என்று வினவ, அவனோ சிறு புன்னகையுடன் அவனைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தான்.
"நிச்சயமாக நான் இந்தக் கல்யாணத்தை நிறுத்தப் போறது இல்லை, அது என்னோட நோக்கமும் கிடையாது. எனக்குத் தேவையான விஷயம் என்னன்னா அந்தப் பொண்ணு மித்ராவா இல்லையா? ஒருவேளை அவ மித்ராவாக இருந்தால் ஏன் என்னைத் தெரியாத மாதிரி நடந்துக்கணும், இத்தனை வருஷமாக ஏன் என்னை அவ இப்படி விலக்கி வைக்கணும்? அவ்வளவு தான்
"ஒருவேளை அவங்க மித்ரா இல்லை கயல்விழி தான்னு உறுதியாகிடுச்சுன்னா?"
"நான் எதற்காக அவங்ககிட்ட அப்படி கேட்டேன்னு உண்மையை சொல்லி, என்னைப் பற்றியும், மித்ரா பற்றியும் எல்லாவற்றையும் சொல்லி அதற்கு அப்புறம் அந்தப் பொண்ணுக்கும் என்னைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதம்ன்னா இந்த கல்யாணம் நடக்கும்"
"எது எப்படியோ மொத்தத்தில் இந்த கல்யாணம் நடக்கப் போறது உறுதிதானே, அது எனக்குப் போதும். கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி நீ பேசியதை எல்லாம் கேட்டு எங்கே நீ அந்தப் பொண்ணு மித்ரா இல்லைன்னு தெரிந்ததும் இந்தக் கல்யாணத்தை நிறுத்திடுவியோன்னு பயத்துட்டேன்"
"சேச்சே! நிச்சயமாக நான் அப்படி எல்லாம் பண்ண மாட்டேன், ஒரு பொண்ணோட மனதில் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு ஆசையை வளர்த்துட்டு அதற்கு அப்புறம் இதெல்லாம் வேணாம்னு சொல்லி அவங்களை கஷ்டப்படுத்துற அளவுக்கு நான் மோசமானவன் கிடையாது டா. நிச்சயதார்த்தம் நடக்க முதலே எல்லா விஷயத்தையும் தெளிவாகப் பேசிட்டு இரண்டு பேரும் எந்தவொரு குழப்பமும் இல்லாமல் இந்த வாழ்க்கையை ஆரம்பிக்கணும் அவ்வளவுதான். நான் அம்மாகிட்ட பொண்ணு பார்க்க வரமாட்டேன், அங்கே வைச்சே பொண்ணைப் பிடிக்கலேன்னு சொல்லுவேன்னு சொன்னது எல்லாம் ஏதோ அப்போ இருந்த மனநிலையில் பேசியது, மற்றபடி நான் மனதார அப்படி எல்லாம் பண்ணணும்னு நினைச்சதே இல்லை" என்ற கௌதமின் தோளில் தட்டிக் கொடுத்த மாதவன்,
"எனக்குத் தெரியாதாட உன்னைப் பற்றி? ஆனாலும் எனக்கு என்னவோ இந்தப் பொண்ணு மித்ராவாக இருப்பான்னு தோணல, ஏன்னா மித்ராவுக்கு என்ன ஆச்சுன்னு உனக்கும், எனக்கும் ரொம்ப நல்லாவே தெரியும். எனக்கு என்னவோ நீ ஏதோ குழப்பத்தில் இருக்கேன்னு தான் தோணுது, அதனால நாளைக்கு நானும், உன் கூட அந்தக் கோவிலுக்கு வர்றேன், உன்னோட குழப்பத்திற்கு எல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறேன், சரியா?" என்று வினவ, கௌதம் முகம் நிறைந்த புன்னகையுடன் அவனைப் பார்த்து ஆமோதிப்பாக தலையசைத்தான்.
நாளை எப்படியாவது கயல்விழியிடம் பேசியே தீர வேண்டும் என்கிற யோசனையுடனே அன்றைய இரவை பாதி தூக்கத்திலும், பாதி சிந்தனையிலும் கழித்தவன் அடுத்த நாள் காலை சூரியன் உதயமாகி சிறிது நேரத்திலேயே தனக்கு வேலை இருப்பதாக வள்ளியிடம் சொல்லி விட்டு மாதவனை அழைத்துக்கொண்டு தன் குழப்பத்திற்கான பதிலைத் தேடி பயணம் செய்ய ஆரம்பித்தான்.
நேற்றைய பொழுது பலவிதமான சிந்தனைகளுடன் பிரயாணம் செய்ததால் என்னவோ அவனது பார்வைக்கு அந்த ஊரின் எழில் அவ்வளவாக தென்படவில்லை, ஆனால் இன்று அவனது சிந்தனையில் எந்தவொரு சஞ்சலமும் இல்லாததால் என்னவோ அவனது பார்வை அந்த ஊரின் வனப்பை கண்டு பிரமித்துப் போய் இருந்தது.
திரும்பும் பக்கமெல்லாம் பச்சைப் பசேலென்ற வேளாண்மையும், காவலர்கள் போல் ஓங்கி வளர்ந்திருக்கும் பல்வேறு மரங்களும், ஒவ்வொரு வீட்டிலும் வீட்டின் பரப்பை விட இரு மடங்கு பரப்பில் அமைக்கப்பட்டிருந்த தோட்டங்களும் இயல்பாகவே இயற்கை சூழல் விரும்பியான அவனை இன்னமும் அந்த இயற்கை மீது காதல் கொள்ளச் செய்திருந்தது.
காலையிலேயே இவ்வாறான ஒரு மனநிறைவான விடயத்தைப் பார்த்ததில் கௌதமின் மனது பூரண திருப்தி அடைந்திருக்க, அவனது மூளையோ இன்று அவனுக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்பது போல அவனுக்கு கட்டளையிட்டிருந்தது.
தன் மனதும், மூளையும் சொன்ன விடயங்களை எல்லாம் கேட்டு பூரண நிறைவுடன் அந்தப் பெரிய கோவிலின் முன்னால் தன் காரை நிறுத்தியவன், "மாதவா, இதுதான் அவங்க சொன்ன கோவில்ன்னு நினைக்கிறேன், ஊர் எல்லையில் கண்ணுக்கு எட்டுற தூரம் வரைக்கும் இதைத்தவிர வேறு எந்தக் கோவிலும் இல்லை" என்றவாறே அந்தக் காரில் இருந்து இறங்கி நிற்க,
பதிலுக்கு, "ஓஹ்!" என்று ஒரு வார்த்தையில் பேச்சை முடித்து விட்டு மாதவனும் அந்தக் காரில் இருந்து இறங்கி நின்று சுற்றும் முற்றும் எதையோ தேடிப் பார்த்துக் கொண்டு நின்றான்.
மாதவன் எதையோ தேடிக் கொண்டு நிற்பதைப் பார்த்து அவனருகில் வந்து அவனது தோளில் தட்டியவன், "என்னடா காரில் இருந்து இறங்கி நின்னு இரண்டு செக்கன் கூட ஆகல, அதற்குள்ள யாரைத் தேடுற?" என்று வினவ,
"உஸ், பேசாதே!" என்றவாறே அவனது வாயில் தன் கையை வைத்தவன் தன் சட்டைப் பாக்கெட்டில் இருந்து மாஸ்க் ஒன்றை எடுத்து கௌதமிற்க்கு அணிவித்து விட்டிருந்தான்.
"டேய் என்னடா பண்ணுற? இப்போ எதற்காக எனக்கு இந்த மாஸ்க்கை போட்டு விட்ட?" என்றவாறே கௌதம் அதை கழட்டப் பார்க்க,
சட்டென்று அவனது கையை எட்டிப் பிடித்துக் கொண்ட மாதவன், "கிறுக்குத்தனமாக எதுவும் பண்ணிடாதே, நான் இந்த ஊருக்குள்ள வந்ததில் இருந்து பார்க்கிறேன், உன்னை எல்லோரும் ஒரு மாதிரி குறுகுறுன்னே பார்த்துட்டு போறாங்க, எனக்கு என்னவோ நேற்று நீ பொண்ணு பார்க்க வந்த விஷயம் இவங்க எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும்ன்னு தோணுது.
ஒருவேளை யாராவது உன்னை இங்கே பார்த்த விஷயத்தை பொண்ணு வீட்டில் போய் சொல்லிட்டா அது வேற பெரிய பிரச்சினை ஆகிடும் இல்லையா? அதனாலதான் ஒரு பாதுகாப்புக்கு இந்த மாஸ்க், எப்படி நம்ம ஐடியா?" என்றவாறே தன் சட்டைக் காலரை தூக்கி விட்டுக் கொள்ள,
அவனைப் பார்த்து திருஷ்டி கழிப்பது போல செய்த கௌதம், "உன்னை என் பிரண்ட்ன்னு சொல்லிக்கவே ரொம்ப பெருமையாக இருக்குடா, சரி, சரி வா உள்ளே போகலாம், அப்புறம் வந்த வேலையை செய்யாமலேயே ஊருக்கு திரும்பி போக வேண்டி வந்துடப் போகுது" என்று விட்டு முன்னே நடந்து செல்ல ஆரம்பித்தான்.
அன்று அந்தக் கோவிலில் பெரியதொரு பூஜை நடப்பதற்கான ஏற்பாடுகள் எல்லாம் நடந்து கொண்டிருந்ததைப் பார்த்துக் கொண்டே கௌதமும், மாதவனும் கயல்விழியைத் தேடி அந்தக் கோவிலை சுற்றி வலம் வந்து கொண்டிருந்த தருணம் மாதவன் திடீரென தன் நண்பனின் தோளில், "டேய் கௌதம், டேய் கௌதம்!" என்றவாறே படபடவென அடிக்க ஆரம்பிக்க,
"டேய் ஏன்டா இப்படி போட்டு அடிக்கிற? இப்போ கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி தானேடா உன்னை ரொம்ப நல்லவன்னு சொன்னேன், அதற்குள்ள உன் சேட்டையை ஆரம்பிச்சுட்டியா?" என்றவாறே அவனைத் திரும்பிப் பார்த்தவன் அவனது பார்வை நிலைத்து நின்ற திசையைத் திரும்பிப் பார்க்க, அங்கே கயல்விழி ஒரு சிறு பெண் பிள்ளையுடன் சிரித்துப் பேசியபடியே நடந்து வந்து கொண்டிருந்தாள்.
"மாதவா, இதுதான் கயல்விழி, நான் நேற்று பார்த்த பொண்ணு" என்று கௌதம் கூறவும்,
அவனை அதிர்ச்சியாக திரும்பிப் பார்த்த மாதவன், "நிஜமாவாடா? நான் கூட நேற்று நீ ஏதோ ஒரு குழப்பத்தில் தான் அந்தப் பொண்ணு மித்ரா மாதிரி இருந்தான்னு சொன்னேன்னு நினைச்சேன், ஆனா இப்போ தான் புரியுது, நீ கன்பியூஸ் ஆனதில் எந்தவொரு தப்பே இல்லை. இவங்க பார்க்க அப்படியே மித்ரா மாதிரியே இருக்காங்களேடா, உலகத்தில் ஒரே மாதிரி ஏழு பேரு இருப்பாங்கன்னு சொல்லுறது அப்போ நிஜம் தானா?" என்று கேட்க,
அவனைப் பார்த்து சிரித்துக் கொண்ட கௌதம், "இதை அவங்க கிட்டயே கேட்கலாம் வா" என்று விட்டு அவளை நோக்கி நடந்து செல்ல, மாதவனோ தான் பார்த்த விடயத்தை இன்னமும் நம்ப முடியாதவனாக தனக்குள்ளேயே ஏதேதோ பேசிக்கொண்டு அவனைப் பின் தொடர்ந்து நடந்து சென்றான்.
தன் முன்னால் திடீரென இரண்டு நபர்கள் வந்து நிற்பதைப் பார்த்து திடுக்கிட்டு போனவளாக அவர்களை நிமிர்ந்து பார்த்த கயல்விழி ஒரு நபர் தன் முகத்தை மறைத்தும், இன்னொரு நபர் அவளை ஆச்சரியமாக பார்த்தபடியும் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து சிறு சங்கடத்துடன் அங்கிருந்து விலகிச் செல்லப் பார்க்க, அவளது முக பாவனையை வைத்தே அவள் தன்னை அடையாளம் கண்டு கொள்ளவில்லை என்பதை உணர்ந்து கொண்ட கௌதம் தன் முகத்தில் இருந்த மாஸ்க்கை சட்டென்று கழட்டி எடுத்துக் கொண்டான்.
கௌதமை அங்கே பார்த்ததும் கயல்விழியின் கண்கள் அதிர்ச்சியில் விரிய, அவளருகில் நின்று கொண்டிருந்த சிறு பிள்ளையோ, "ஐ மாமா! அக்கா மாமா வந்திருக்காங்க, மாமா வந்திருக்காங்க" என்றவாறே சத்தமிடப் பார்க்க, அவளோ சட்டென்று அந்தப் பிள்ளையின் வாயை இறுக மூடிக்கொண்டாள்.
"ஐயோ! மீனா சத்தம் போட்டு ஊரைக் கூட்டிடாதே, அப்புறம் பெரிய பிரச்சினை ஆகிடும், நான் சொல்லுற வரைக்கும் நீ வாயே திறக்க கூடாது" என்றவாறே அந்த சிறு பிள்ளையின் வாயில் அந்தப் பிள்ளையின் கையையே எடுத்து வைத்தவள்,
சட்டென்று மறுபக்கம் திரும்பி நின்று கொண்டு, "நீங்க இங்கே எதற்காக வந்தீங்க? யாராவது உங்களை இங்கே பார்த்தால் பெரிய பிரச்சினை ஆகிடும், முதல்ல இங்கே இருந்து போங்க, நீங்க ஏதாவது பேசுவதாக இருந்தால் அப்பாகிட்ட பேசுங்க, இல்லையா நிச்சயதார்த்தம் வரைக்கும் வெயிட் பண்ணுங்க, இப்போ இப்படி யாருக்கும் தெரியாமல் பார்த்து பேசுவது எல்லாம் வேண்டாம்" என்று சிறு தடுமாற்றத்துடன் கூற,
அவனோ அவளது தடுமாற்றத்தைப் பார்த்து ரசித்துக் கொண்டே சிறு புன்னகையுடன், "மித்ரா!" என்று அழைக்க, அவளோ அவனது அந்த அழைப்பில் சற்றே வியப்போடு அவனை சட்டென்று திரும்பிப் பார்த்தாள்................