• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode ஸ்தம்பித்தேனடி உன் கண்களால் - 04

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,632
Reaction score
26,356
Age
28
Location
Sri Lanka
04
IMG_20250522_191851.jpg
தான் சொன்ன விடயங்களை எல்லாம் கேட்ட பின்னர் தனக்கு எந்தவொரு பதிலுமே சொல்லாமல் தங்களைச் சுற்றி பறந்து கொண்டிருந்த சிட்டுக்குருவிகளின் கீச்சிடும் சத்தத்தை அமைதியாக நின்று கேட்டுக் கொண்டிருந்த கயல்விழியைப் பார்த்து பெருமூச்சு விட்டுக்கொண்ட கௌதம், "சரி மித்...சாரி, சாரி கயல்விழி, நான் கிளம்புறேன், நான் சொல்ல வந்த விடயத்தை எல்லாம் உங்க கிட்ட சொல்லிட்டேன், இதற்கு அப்புறம் நீங்க உங்க முடிவை உங்க அப்பா கிட்ட சொல்லிடுங்க, அவங்க அதற்கு அப்புறம் என்ன பண்ணுறதுன்னு பார்க்கட்டும்" என்று விட்டு சற்று தள்ளி நின்று கொண்டிருந்த மாதவனையும் அழைத்துக் கொண்டு அந்தக் கோவில் வளாகத்தை விட்டு வெளியேறி சென்றிருக்க, மறுபுறம் கயல்விழி அவன் சென்ற வழியையே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டு நின்றாள்.

சிறிது நேரத்திற்கு முன்னர் அவன் தன்னை 'மித்ரா' என்று அழைத்ததும் ஏதேதோ நினைவுகள் அவள் கண் முன்னே வந்து செல்ல, ஒரு சில நொடிகளில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு அவனை வியப்போடு திரும்பிப் பார்த்தவள், "என்னோட பேரு கயல்விழி, இந்த மித்ரா யாரு?" என்று வினவியிருக்க, அவளது அந்தக் கேள்வியில் கௌதமின் முகத்தில் இருந்த புன்னகை இருந்த இடம் தெரியாமல் மறைந்து போய் இருந்தது.

"உங்க பேரு நிஜமாகவே கயல்விழி தானா?" அவள் சொன்ன வார்த்தைகளை நம்ப முடியாதவனாக கௌதம் மீண்டும் மீண்டும் அவளைப் பார்த்து அந்தக் கேள்வியை வினவ,

அவளோ சிறு தயக்கத்துடன் சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்தபடியே, "முதல்ல நீங்க இங்கே இருந்து வாங்க, நம்ம இரண்டு பேரையும் யாராவது இங்கே பார்த்து அப்பாகிட்ட சொல்லிட்டாங்கன்னா அவங்க ரொம்ப மனசு கஷ்டப்படுவாங்க, என் அப்பா என்னால கஷ்டப்படக்கூடாது" என்றவள் அவனையும் , மாதவனையும் அந்தக் கோவிலின் பின்புறமாக அழைத்துக்கொண்டு சென்றிருந்தாள்.

கௌதமும், கயல்விழியும் பேசிக் கொள்ளட்டும் என்று நினைத்துக் கொண்ட மாதவன் அவளோடு வந்திருந்த சிறு பிள்ளையுடன் அவர்கள் இருவரையும் விட்டு சிறிது தூரம் தள்ளி நின்று பேசிக் கொண்டு நிற்க, மறுபுறம் அவர்கள் இருவருமோ ஒருவரை ஒருவர் குழப்பம் சூழ்ந்தவர்களாகப் பார்த்துக் கொண்டு நின்றனர்.

"உங்களுக்கு என்னோட பேரு கயல்விழின்னு கூட தெரியாதா?" அவளது அந்தக் கேள்வியில் கௌதமின் மனது சங்கடம் கொள்ள,

அவசரமாக அவளைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தவன், "இல்லை, இல்லை அப்படி கிடையாது. நான் உங்ககிட்ட இதைப்பற்றி எல்லாம் நேற்றே பேசி இருக்கணும், ஆனா ஒரு சின்ன குழப்பம், அதனால்தான் இவ்வளவு ரிஸ்க் எடுத்து உங்களைப் பார்க்க வந்தேன்" என்றவன் தன் வாழ்வில் நடந்த விடயங்களை எல்லாம் அவளிடம் விரிவாக சொல்லி முடித்து விட்டு,

"என்னோட மித்ரா மாதிரியே நீங்க இருக்கவும் நீங்க மித்ராதான்னு நினைச்சு நான் ஏதேதோ பேசிட்டேன், ஆனா இப்போ உங்ககிட்ட பேசிய பிறகு தான் நீங்க மித்ரா கிடையாதுன்னு புரியுது, இதில் என்னோட தப்பும் இருக்கு, நான் தான் எதையும் சரியாகத் தெரிஞ்சுக்காமல் ஏதேதோ பண்ணிட்டேன்.
ஆனா இப்போ சொல்லுறேன்ங்க, எப்போ நான் உங்களை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்னேனோ அப்போவே உங்களை நான் என்னோட மனதார ஏற்றுக்கிட்டேன். என்னோட வாழ்க்கையில் மித்ரா ஒரு கடந்தகாலமாக இருந்தா, இதை எல்லாம் நீங்க தெரிஞ்சுக்கணும்ன்னு நான் நினைச்சேன், அதனாலதான் எல்லாவற்றையும் உங்ககிட்ட சொல்லிட்டேன், இதற்கு அப்புறம் முடிவு உங்களோடது" என்றவன்,

"நான் உங்களை மித்ரான்னு நினைச்சு இவ்வளவு நேரமாக பேசிட்டேன், அது நிச்சயமாக உங்களுக்கு ரொம்பவே கஷ்டமாக இருந்திருக்கும், அதற்காக தயவுசெய்து என்னை மன்னிச்சிடுங்க" என்று விட்டு அவள் ஏதாவது பதில் சொல்லுவாளா? என்பது போல அவளைத் திரும்பிப் பார்க்க, அவளோ அந்த இடத்தில் சுற்றி சுற்றி பறந்து வந்து கொண்டிருந்த சிட்டுக்குருவிகளை நோட்டம் விட்டுக் கொண்டு நின்றாள்.

வெகு நேரமாகியும் அவளிடம் இருந்து எந்த பதிலும் வராமல் இருப்பதைப் பார்த்து விட்டு கௌதம் மாதவனை அழைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றிருக்க, அத்தனை நேரமும் இயல்பாக இருப்பது போல தன்னைக் காண்பித்துக் கொண்டு நின்றவள் அவர்கள் அந்த வளாகத்தை விட்டே வெளியே சென்று விட்டார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு தன் சக்தி மொத்தமும் வடிந்து போனது போல அப்படியே சோர்வாக அமர்ந்து கொண்டாள்.

"என்னை மன்னிச்சிடுங்க கௌதம், என்னால உங்களை மாதிரி மனதில் இருக்கும் எல்லாவற்றையும் வெளியே சொல்ல முடியல, நம்ம வாழ்க்கையில் நமக்கு தேவையில்லாத ஒரு சில விஷயங்களை நம்ம அப்படியே தூக்கிப் போட்டு போயிடணும் சொல்லுவாங்க, அது போலத்தான் என்னோட அந்த மித்ரா என்கிற அடையாளத்தை நான் என்னோட வாழ்க்கையை விட்டே தூக்கிப் போட்டுட்டேன், மறுபடியும் அதை நான் நினைச்சுப் பார்க்க விரும்பல, நீங்களும் அதை மறந்துடணும்னு நான் அந்த கடவுள் கிட்ட வேண்டிக்கிறேன்
அதுமட்டுமில்லாமல் நான்தான் மித்ரான்னு உங்களுக்கு தெரிஞ்சு, நான் எதற்காக இப்படி கயல்விழி என்கிற அடையாளத்தோடு இருக்கிறேன்னும் உங்களுக்குத் தெரிய வந்தால் நிச்சயமாக நீங்க இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டீங்க‌ கௌதம், ஒரு தடவை நான் உங்களை இழந்தது போதும் மறுபடியும் என்னால உங்களை இழக்க முடியாது கௌதம், என்னை மன்னிச்சிடுங்க" என்றவாறே தன்னையும் அறியாமல் தன் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்து விட்டுக் கொண்டவள் தான் மறக்க நினைத்த விடயங்களை மறந்தே ஆகவேண்டும் என்கிற தீர்மானமான எண்ணத்துடன், சிறிது நேரத்தில் தன்னைத்தானே தேற்றிக் கொண்டு அந்தக் கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பூஜையில் கலந்து கொள்ள வேண்டித் தயாராக, மறுபுறம் கௌதம் தான் எவ்வளவு தூரம் மித்ராவைப் பற்றி நினைக்க கூடாது என்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முயன்றும் அந்த முயற்சியில் வெற்றி காண முடியாதவனாக அவளை சந்தித்த அந்த முதல் நாளைப் பற்றிய நினைவுகளிலேயே மீண்டும் லயித்துப் போக ஆரம்பித்திருந்தான்.

***************
தன்னிடமிருந்து தப்பித்தால் போதும் என்பது போல ஓடிச் சென்ற மித்ராவையும், அவளது தோழியையும் பார்த்து சிரித்துக் கொண்டே கௌதம் தனது வேலையைப் பார்க்க சென்று விட, மறுபுறம் மித்ரா ஒருவழியாக அவர்களது வகுப்பை வந்து சேர்ந்திருந்தாள்.


மித்ராவும், கௌரியும் தாங்கள் அமர்ந்திருந்த வகுப்பிற்குள் நுழைவதைப் பார்த்ததும், சிறிது நேரத்திற்கு முன்னர் அவர்கள் இருவரிடமும் மாட்டிக் கொண்டு தவியாய் தவித்துப் போய் இருந்த அந்த மூன்று பையன்களும் ஒருவரையொருவர் அதிர்ச்சியாக திரும்பிப் பார்த்துக் கொள்ள, மித்ராவோ அவர்கள் மூவரையும் கடந்து செல்லும் போது, "என்ன ஜூனியர்ஸ், முதல்நாள் காலேஜ் டே ரொம்ப என்டர்டெயின்மென்டாக இருந்ததா? இனிமேலாவது சீனியர்ன்னு யாராவது சொல்லி ஏதாவது பண்ண சொன்னா முதல்ல அவங்க சீனியர் தானான்னு தேடிப் பார்க்கணும் சரியா?" என்று விட்டு சிரித்துக் கொண்டே சென்று விட, அந்த மூவரில் ஒருவன் அவளைப் பார்த்து கோபமாக ஏதோ பேச ஆரம்பித்து விட்டு, பின்னர் சட்டென அமைதியாக அமர்ந்து கொண்டான்.

அவனது அந்த திடீர் அமைதியில் அவனருகில் அமர்ந்திருந்த அவனது நண்பன் அவனிடம் அவனது அமைதிக்கான காரணத்தை வினவ, அவனோ சிறு புன்னகையுடன், "இன்னைக்கு இவங்க இரண்டு பேரும் நம்மளை வைச்சு செஞ்சாங்க இல்லையா, அதற்குப் பதிலாக அவங்களை வைச்சு செய்ய ஒரு ஆள் இங்க வரப்போறாங்க, நீ கொஞ்ச நேரம் வெயிட் பண்ணிப் பாரு, செம்ம என்டர்டெயின்மென்ட் நடக்கப் போகிறது" என்று கூற, அவனது நண்பனோ அவன் சொன்னது புரிந்தும் புரியாமலும் ஆமோதிப்பாக தலையசைத்து விட்டு அமைதியாக அமர்ந்திருந்தான்.

சிறிது நேரத்தில் அவர்களது அந்த வகுப்பிற்குள் இரண்டு, மூன்று புதிய மாணவர்கள் நுழைவதைப் பார்த்ததும் அங்கிருந்த எல்லா மாணவர்களும் எழுந்து நின்று கொள்ள, அவர்களைப் பார்த்து புன்னகைத்த படியே பேச ஆரம்பித்த அந்தப் புதிய மாணவர்களில் ஒருவன், "முதல்ல எல்லோரும் உட்காருங்க, நாங்களும் உங்களை மாதிரி இந்த காலேஜில் படிக்கும் ஸ்டூடண்ட்ஸ் தான், என்ன உங்களை விட இரண்டு, அல்லது மூன்று வயது பெரியவங்களாக இருப்போம், அவ்வளவு தான் உங்களுக்கும், எங்களுக்கும் நடுவே இருக்கும் வித்தியாசம். மற்றபடி நம்ம எல்லோரும் ஒண்ணு தான், அதனால இப்படி எழுந்து நிற்கிறது எல்லாம் வேண்டாம், உட்காருங்க. புரபசர்ஸ் வந்தால் மட்டும் எழுந்து நின்று குட் மார்னிங் சொல்லுங்க போதும்" என்று விட்டு,

"எல்லோருக்கும் முதல்ல என்னோட வாழ்த்துக்கள், உங்களோட இந்த காலேஜ் பயணம் இன்னைக்கு சிறப்பாக ஆரம்பித்த மாதிரி இந்த காலேஜை விட்டுப் போகும் வரைக்கும் அப்படியே இருக்கணும்னு நான் வேண்டிக்கிறேன். அப்புறம் என்னடா இந்த பையன் இங்கே வந்ததில் இருந்து ஏதேதோ பேசிட்டு இருக்கான், யாரு இவன்? அப்படின்னு எல்லோருக்கும் டவுட் வந்திருக்கும், சோ முதல்ல எங்களைப் பற்றியும், நாங்க எதற்காக இங்கே வந்திருக்கோம் என்கிறது பற்றியும் சொல்லிடுறேன். என்னோட பேரு மகேஷ், உங்களோட சீனியர், அப்புறம் இது கமல், அது ராஜா. இவங்க இரண்டு பேரும் கூட உங்களோட சீனியர்ஸ் தான், அப்புறம் இன்னும் இரண்டு பேரு வெளியே நிற்கிறாங்க, அவங்க எங்களோட சீனியர்ஸ், அதாவது உங்களோட சுப்பர் சீனியர்ஸ், கொஞ்ச நேரத்தில் அவங்களும் உங்க கூட பேச வருவாங்க, அப்போ அவங்களை பற்றி உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன்.
சரி, இப்போ நான் எதற்காக நாங்க இங்கே வந்திருக்கோம்ன்னு சொல்லுறேன். வழக்கமாக எல்லா காலேஜிலும் பர்ஸ்ட் டே ஒரு இன்ட்ரோ கிளாஸாகத் தான் இருக்கும், நம்ம காலேஜிலும் அப்படிதான், ஆனா கொஞ்சம் டிஃபரண்ட் என்னன்னா அந்த இன்ட்ரோவை இங்கே ஸ்டூடண்ட்ஸ் தான் பண்ணுவோம். அதற்கு காரணம் ஸ்டூடண்ட் எல்லோரும் முதல் நாளே புரபசர்ஸ் கூட அவ்வளவு சீக்கிரம் இன்ட்ராக்ட் பண்ண மாட்டாங்க, சிலர் ரொம்ப இன்ட்ரோவர்டாக இருப்பாங்க, அதே அவங்களை மாதிரி ஸ்டூடண்ட் கிட்டன்னா ரொம்ப ஈஸியாக பேச ஆரம்பிச்சுடுவாங்க. அதனாலதான் நம்ம காலேஜில் ரொம்ப வருஷமா இந்த முறையை ஃபாலோ பண்ணிட்டு வர்றோம்.
அது மட்டுமில்லாமல் நாங்க இங்கே உங்க கூட பேசிட்டு இருக்கும் போதே உங்க பேட்ச் எப்படி, ஸ்டூடண்ட் ரெஸ்பான்ஸ் எப்படின்னு எல்லாம் மார்க் பண்ணி வைச்சுக்குவோம், அதை ஒரு அனலைஸ் மாதிரி பண்ணி புரபசர்ஸ் கிட்ட கொடுப்போம், அதை வைச்சு அவங்க உங்க கூட எப்படி இன்ட்ராக்ட் பண்ணுறதுன்னு ஒரு செட் அப் உருவாக்குவாங்க, சோ, இதுதான் இந்த இன்ட்ரோ கிளாஸோட‌ முக்கியமான நோக்கம்.
சரி, இப்போ கிளாஸை ஆரம்பிக்கலாம், அதற்காக இந்த கோர்ஸ் பற்றிய விளக்கம், அப்புறம் இதைப் படிச்ச அப்புறம் உங்களுக்கு என்ன மாதிரியான வேலைவாய்ப்பு கிடைக்க முடியும், அப்புறம் இதற்கு அப்புறமாகவும் நீங்க படிக்கிறதுன்னா என்ன ஃபீல்ட் தேர்வு செய்யலாம்ன்னு எல்லாம் டீடெயிலாக பேச நம்ம டிபார்ட்மெண்டில் மட்டுமில்லாமல் இந்த காலேஜிலும் பேட்ச் டாப் ஸ்டூடண்டாக இருக்கும் கௌதம் அண்ணாவும், அவரோட ப்ரண்ட் மாதவன் அண்ணாவும் இப்போ இங்கே வந்து பேசுவாங்க, நான் அவங்களை அழைச்சிட்டு வர்றேன்" என்றவாறே அங்கிருந்து வெளியேறி சென்று விட,

அவன் கூறிய கௌதம் என்கிற பெயரைக் கேட்டதும் தன்னருகே அமர்ந்திருந்த தன் தோழியின் தோளில் இடித்த மித்ரா, "ஏன்டீ கௌரி, இந்த கௌதம் என்கிற பெயரை எங்கேயோ கேட்ட மாதிரி இல்லை?" என்று வினவ,

அவளோ, "ஆமா அந்தப் பேரு அப்படியே யாருக்குமே இல்லாத பேரு பாரு, இங்கே தான் யாராவது பேசும் போது கேட்டு இருப்ப, அதைப் போய் ஏதோ பெரிய விஷயம் மாதிரி பேசிட்டு இருக்க" என்று கூறி முடித்த கணமே தங்கள் வகுப்பிற்குள் நுழைந்த நபரைப் பார்த்ததும் சட்டென்று அதிர்ச்சியாக தான் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து எழுந்து நின்று கொள்ள, மித்ராவோ அவளது அந்த திடீர் அதிர்ச்சிக்கான காரணம் புரியாமல் அவள் பார்வை நிலைகுத்தி நின்ற புறம் திரும்பிப் பார்த்தாள்.

கௌரி அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்த புறம் கௌதமும், அவனது நண்பனும் நின்று கொண்டிருந்ததைப் பார்த்ததுமே மித்ராவின் விழிகள் இரண்டும் அதிர்ச்சியில் வெளியே தெறித்து விடுவது போல விரிய, அவளது ஒவ்வொரு முகமாற்றத்தையும் வெகு நேரமாக கவனித்துக் கொண்டிருந்த கௌதம் அவளைக் கவனியாதது போல தான் வந்த விடயத்தைப் பற்றிப் பேச ஆரம்பிக்கவே, மித்ரா உடனே தன்னை சுதாரித்துக் கொண்டு கௌரியின் கையை பிடித்து இழுத்து தன்னருகே அமரச் செய்து கொண்டாள்.

கௌதம் தான் அவனிடம் வம்பு வளர்த்ததைப் பற்றி வேறு யாரிடமும் சொல்லி விடுவானோ என்கிற பயத்தில் மித்ராவும், மித்ராவோடு சேர்ந்து தானும் விளையாட்டு தனமாக நடந்து கொண்டதைப் பற்றி விரிவுரையாளர்களிடம் சொல்லி விடுவானோ என்கிற பயத்தில் கௌரியும் அவனது அந்த அறிமுக உரை முடியும் வரை ஒருவரையொருவர் பயத்துடனேயே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தனர்.

ஆனால் அவர்கள் இருவரும் பயந்திருந்ததைப் போல கௌதம் அவர்களைப் பற்றி எதுவுமே பேசாமல் அவர்களது கற்கைநெறி, அதற்கான வேலை வாய்ப்புகளைப் பற்றி மட்டும் தெளிவாக பேசி விட்டு அங்கிருந்து வெளியேறி சென்றிருக்க, அப்போதுதான் மித்ராவுக்கும், கௌரிக்கும் பன்மடங்கு நிம்மதியாக இருந்தது.

"ஹப்பாடா! நல்ல வேளை அந்த சீனியர் நம்மளை வேறு யாருகிட்டேயும் போட்டுக் கொடுக்கல நல்லவேளை தப்பிச்சோம்" என்றவாறே கௌரி தன் முகத்தில் படிந்திருந்த வியர்வைத் துளிகளை துடைத்து விட்டபடியே கூறியதைப் பார்த்து ஆமோதிப்பாக தலையசைத்த மித்ரா,

"ஆமா, ஆமா. நான் கூட எங்க எல்லோர் முன்னாடியும் நம்மளை வைச்சு செஞ்சுடுவாரோன்னு பயந்துட்டேன், நல்லவேளை அப்படி எதுவும் பண்ணல. அவரு நம்மளை மாதிரி இல்லை, ரொம்ப நல்ல பையன் போல" என்று பேசிக் கொண்டிருந்ததை அவர்கள் அமர்ந்திருந்த இடத்தின் அருகே இருந்த ஜன்னல் பக்கமாக நின்று கேட்டு கொண்டிருந்த கௌதம் அங்கிருந்து புறப்பட்டுச் செல்ல அழைத்த மாதவனிடம்,

"ஒரு நிமிஷம் இரு எனக்கு ஒரு சின்ன வேலை இருக்கு , நான் அதை முடிச்சிட்டு வர்றேன், நீ நம்ம கிளாஸ்க்கு போ" என்றவாறே அவனது கேள்விகள் எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் சிறு புன்னகையுடன் மித்ரா அமர்ந்திருந்த இடத்தை நோக்கி நடந்து செல்ல, அவளோ அவனது அந்த திடீர் வருகையை எதிர்பாராமல் பதட்டம் மேலோங்க கௌரியின் கையை இறுகப் பற்றிக் கொண்டாள்.

கௌதம் மித்ராவை நோக்கிச் செல்வதைப் பார்த்ததும் சிறிது நேரத்திற்கு முன்னர் தனது நண்பனிடம் தான் கூறிய விடயத்தை மீண்டும் நினைவுபடுத்திய அந்த மூன்று மாணவர்களில் ஒருவன், "இப்போ புரியுதா, நான் ஏன் அவகிட்ட அப்போ எதுவும் பேசலேன்னு? அவங்க இரண்டு பேரும் இங்கே வரும் போதே கௌதம் அண்ணா வெளியே நின்னு அவங்களைப் பார்த்துட்டு இருந்ததை நான் பார்த்தேன், அது மட்டுமில்லாமல் அங்கே நின்னு அவங்க என்னை எதுவும் பேச வேண்டாம்ன்னு ஜாடையில் சொன்னாங்க, அதுதான் நான் எதுவும் பேசல, இப்போ பாரு கௌதம் அண்ணா அவங்களை வைச்சு செய்யப் போறாங்க" என்று கூற, அவர்கள் மூவரும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டே தங்களைக் கடந்து சென்ற கௌதமையும் பார்த்து சிரித்துக் கொண்டனர்.

கௌதம் தன் எதிரே வந்து நின்றதைப் பார்த்ததும் மித்ரா உடனே தன்னை சுதாரித்துக் கொண்டு எதுவுமே நடக்காதது போல மெல்ல அவனை நிமிர்ந்து பார்க்க, அவனோ முகம் கொள்ளாப் புன்னகையுடன், "அட சீனியர் மேடம், நீங்க எப்படி பர்ஸ்ட் இயர் கிளாஸில்? நான் உங்களை எங்கே எல்லாம் தேடினேன் தெரியுமா? நீங்க என்னடான்னா இங்கே வந்து உட்கார்ந்து இருக்கீங்க? ஒருவேளை இங்கே இருக்கும் எல்லோருக்கும் காலேஜ் பர்ஸ்ட் டேயை ரொம்ப ஞாபகார்த்தமானதாக மாற்ற வந்து இருக்கீங்களா?" என்று வினவ,


அவளோ சிறு தயக்கத்துடன் சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்தபடியே, "தயவுசெய்து என்னை மன்னிச்சுடுங்க அண்ணா, நான் ஏதோ ஒரு விளையாட்டு தனத்தில் அப்படி பண்ணிட்டேன், தயவுசெய்து நான் உங்களை ராக்கிங் பண்ண ட்ரை பண்ணதை வேறு யார்கிட்டேயும் சொல்லிடாதீங்க அண்ணா, ப்ளீஸ் அண்ணா, ப்ளீஸ்" என்று கூற, அவனோ அவளது அண்ணா என்கிற அழைப்பில் தன் முகத்தில் இருந்த ஒட்டுமொத்த புன்னகையும் மறைந்து போக அவளை திகைத்துப் போனது போல பார்த்துக் கொண்டு நின்றான்...........
 




Advertisements

Latest Episodes

Advertisements

Top