• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

‘காமம் குரோதம்’

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
1596951094777.png
‘காமம் குரோதம்’ என்று சேர்த்துச் சொல்வது வழக்கம். காமம் என்பது ஆசை. குரோதம் என்பதுதான் கோபம், ஆத்திரம், துவேஷம் இவை எல்லாமாகும். மனிதனை பாபத்தில் தள்ளுபவை காமமும், குரோதமுமே என்று கிருஷ்ண பரமாத்மா கீதையில் சொல்லியிருக்கிறார்.

ஒரு வஸ்துவிடம் ஆசை உண்டாகி விட்டால், அதைத் தவறான வழியிலாவது அடைய முயல்கிறோம். இப்படியாகக் காமம் என்பது நம்மைப்பாவத்தில் தள்ளுகிறது. அது நமக்குப் பெரிய சத்ரு. அதே போன்ற இன்னொரு சத்ருவே கோபம். நாம் ஆசைப்படுகிற வஸ்து கிடைக்காதபொழுது இதற்குத் தடையாக இருந்தவர்கள்மீது, அல்லது தடை என்று நாம் நினைத்தவர்கள்மீது கோபம் வருகிறது. அதாவது நிறைவேறாத காமமே கோபம் என்று பெயர் கொள்கிறது.

ரப்பர் பந்தைச் சுவரில் ஏறிகிறோம். அது எதிர்த்துக் கொண்டு நம்மிடமே திரும்பி வருகிறது. எறியப்படும் பந்து காமம். அதே பந்து திரும்பி வருகிறபோது கோபமாகிறது. திரும்பி வருகிற பந்து நம்மையே தாக்குகிறது. அப்படியேதான், நம்முடைய கோபத்தால் பிறரைத் தாக்குவதாக நினைத்தாலும், அது நம்மையேதான் அதிகம் தாக்குகிறது. கோபத்தில் நம் உடம்பெல்லாம் ஆடிப்போகிறது. நம் தேகம், மனசு இரண்டுக்கும் கோபத்தினால் பெரிய கிலேசம் உண்டாக்கிக் கொள்கிறோம். நாம் ரௌத்ராகாரமாகச் சத்தம் போடும்போது நம்மை யாரேனும் போட்டோ பிடித்து, அப்புறம் நம்மிடம் காட்டினால் போதும். கோபாவேசத்தில் நம்மை நாமே எத்தனை கோரமாக்கிக் கொள்கிறோம் என்று புரிந்து கொண்டு வெட்கப்படுகிறோம்.

சாதாரணமாக மனிதர்களுக்கும் பிராணிகளுக்கும் வயிற்றுக்கு ஆகாரம் கொடுத்தால் அப்போதைக்கு பசி அடங்குகிறது. அடுத்த வேளை மறுபடியும் பசி ஏற்படுகிறது. நெருப்புக்கு மட்டும் நாம் ஓர் ஆகாரத்தைப் போட்டால் அது அடங்குவதேயில்லை. இன்னும் அதிகமாகக் கொழுந்து விட்டு எரிகிறது. மேலும் பல பொருட்களைத் தகித்து கபளீகரம் செய்கிறது. நெருப்பு பிரகாச மயமாக இருந்தாலும், தான் ஸ்பரிசித்துவிட்டுச் செல்கிற பண்டங்களை எல்லாம் கன்னங்கரேல் என்று கருப்பாக்கிக் கொண்டு போகிறது.

இதனால் நெருப்புக்கு ‘கிருஷ்ண வர்த்மா’ என்று ஒரு பெயர் ஏற்பட்டிருக்கிறது. காமமும் இப்படிப்பட்ட ‘கிருஷ்ண வர்த்மா’ தான். அது தீயாக எரிகிறது; அதற்குப் பிரியமான வஸ்துவைக் கொடுப்பதால் பசி அடங்காமல் அதிகரித்துக் கொண்டே போகிறது; அது நம் மனசையே கறுப்பாக்கிக் விடுகிறது. ஓர் இச்சை பூர்த்தியாகிற போது தற்காலிகமாக ஒரு மகிழ்ச்சி உண்டானாலும், பிற்பாடு அதையே மீண்டும் தேடி அலைந்து அமைதியையும் சந்தோஷத்தையும் குலைத்துக் கொண்டு அழுகையையும் கோபத்தையும் உண்டாக்கிக் கொள்கிறோம். அழுகை துக்கத்தில் உண்டாவது.

நிறைவேறாத ஆசையின் இரண்டு உருவங்கள் தாம் துக்கமும் கோபமும். நம் ஆசையின் நிறைவேற்றத்துக்குத் தடையாக இருந்தவர்கள் நம்மைவிடக் கீழ்ப்பட்டவர்களாக இருந்தால் அவர்களிடம் கோபத்தைக் காட்டுகிறோம். அவர்கள் நமக்கு மேலே இருந்து விட்டால் கோபித்துக் கொள்ள முடியாமல் நமக்குள்ளேயே துக்கப்பட்டுக்கொண்டு அழுகிறோம். கோபத்தின் கெட்ட சக்தி காமத்தின் சக்தியைவிடப் பெரியது. இதை நள சரித்திரமான ‘நைஷதம்’ வெகு அழகாகச் சொல்கிறது.

கலி அரசன் வருகிறான். அவனது சேனாதிபதிகளாகக் காமனும் குரோதனும் வருகிறார்கள். கட்டியக்காரன் இவர்களுடைய பெருமைகளைப் பாடுகிறான். குரோதனைப் பற்றி அவன் என்ன பாடுகிறான்? ‘காமன் புகாத இடமில்லை என்பார்கள். ஆனால் காமனும் புகாத ஒரு கோட்டை உண்டு. அந்தக் கோட்டைக்குள்ளும் இந்தக் குரோதன் குடி கொண்டிருக்கிறானாக்கும். அது எந்தக் கோட்டைத் தெரியுமா? துர்வாஸருடைய இதயம்தான்’ என்று குரோதனின் புகழைப் பாடுகிறான். காமமே அறியாத துர்வாஸ மகரிஷியும் கோபத்துக்கு ஆளானவர் என்று தாத்பரியம்.

நாம் இந்த மகாபாவியான குரோதனிடம் ரொம்பவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கொஞ்சம் யோசித்துப் பார்த்தாலும் நமக்கே தெரியும்; யாரையும் கோபித்துக் கொண்டு சத்தம் போட நமக்கு சிறிதும் யோக்கியதை இல்லை என்றும், யாரை நாம் கோபித்துக் கொள்கிறோமோ அவர்கள் செய்கிற தவறுகளை, அதைவிடப் பெரிய தவறுகளைக்கூட செய்தவர் நாம் என்பதும் நம் அந்தராத்மாவுக்குத் தெரியும். அப்படியே நாம் தவறு செய்யாவிட்டாலும்கூட, அந்த மனிதன் அந்தச் சூழ்நிலையில் செய்த தவற்றை நாமும் கூட அந்தச் சூழ்நிலையில் இருந்தால் செய்திருக்கக்கூடும் என்று எண்ணிப்பார்க்க வேண்டும்.

குரோதன் நம்முடைய பெரிய சத்ரு. அவனை அண்டவிடாமல் எப்போதும் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top