• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

💕நெஞ்சம் மறப்பதில்லை.💕.10.

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

S.M.Eshwari.

அமைச்சர்
SM Exclusive
Joined
Jun 7, 2021
Messages
2,164
Reaction score
6,070
Location
India
நெஞ்சம் மறப்பதில்லை.10

கன்னியவளின் பார்வை‌ முழுதும் தன் கண்ணன் மீதே படிந்திருக்க,

ஃபைலில் பார்வையைப் பதித்திருந்தவன், அறையின் காற்றில் கலந்திருந்த ரூம் ஃப்ரெஷ்னரின் வாசனையையும் தாண்டி, அவள் சூடியிருந்த ஜாதிமல்லியின் வாசனையோடு, வாசனை சந்தனமும், தாழம்பூ குங்கும வாசனையும் கலந்து, தன் நாசியைத் தீண்டிய நறுமணத்தில்…, 'என்ன‌ வாசனை இது?' என எண்ணியவாறு நிமிர்ந்து பார்த்தான்.


அவன் பார்வை எதிரில் நின்றிருந்தவள் மீது படிந்தது.


பதினொரு மணி வெயிலில் வண்டி ஓட்டி வந்தவளின் முடிகள், ஆங்காங்கே சிலிப்பி இருக்க... அதில் ஒருசில முடிகள் நெற்றி மற்றும் கன்னத்து வியர்வையில், தூரிகையின் ஒற்றைத் தீற்றலாய்ப் படிந்திருக்க… அவனைக் கண்ட பதட்டத்தில் லேசாக நீர் பூத்து சிவந்திருந்த கண்களும்... ஃபைலை இருகப் பற்றி, பதட்ட மூச்சு வாங்க நின்றிருந்தவளின் தோற்றம்... அவனைத் தன்னிலை மறந்த மோன நிலைக்கு இட்டுச் செல்ல…

நெற்றிக் குங்குமமும் மஞ்சளும் மகரந்தத் தூளாய் உதிர்ந்து... மூக்கின் மீது படிந்திருந்ததைக் கண்டவனது வலது கரம், அதைத் துடைப்பதற்காக, ஃபைலிலிருந்து தானாக மேலெழும்பியது.

பார்வையும் மேலெழுந்து அவள் நெற்றி வகிட்டில் படிய… வகிட்டில் குங்குமத்தைக் கண்டவனது கரம், தீச்சுடர் தொட்டக் குழந்தையாய் சட்டெனப் பின்‌வாங்கியது. பார்வைக் கழுத்திற்கு இறங்க, கழுத்திலிருந்த மஞ்சள்கயிறு சுட்டியது அவள் திருமதி என்பதை.


சட்டெனத் தன்னிலைத் திரும்பியவனுக்கு, தான் செய்யத் துணிந்த காரியத்தின் வீரியம் புரியவே, சில கணங்கள் பிடித்தது.


'நானா இப்படி?' என ஒரு நிமிடம் திகைத்தவன், பதட்டம் தணிக்கத் தன் இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டான். புருவத்தை இரு கைகளாலும் நீவி, முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டான்.


அவன் அசைந்ததில் தன்னிலை வரப்பெற்ற, ஆதியாவும் மூச்சை இழுத்துத் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு,


"சார்..." என்று அழைத்தாள், கண்ணா என அழைக்க எழுந்த நாவினை அடக்கி.


தற்சமயம் எதையும் ஆலோசிக்கும் மன நிலையில் அவன் இல்லை.


"நீங்க போயிட்டு கொஞ்ச நேரம் கழிச்சு வாங்க! இப்ப நான் வேற ஃபைல்சப் பாக்க ஆரம்பிச்சுட்டேன். எப்ப வரச் சொன்னா... எப்ப வந்து நிக்கறீங்க?" என்றான் சற்றுக் கோபமாக.


இது அவள் மீது வந்த கோபமல்ல. தான் செய்யத் துணிந்த காரியத்தை எண்ணித் தன் மீது வந்த கோபம்.



"சார்… நேத்தே பெர்மிஷன்….' என்று
அவள் விளக்கம் கூற‌வர,

"இப்ப நான் வேலையைப் பாக்கவா? இல்ல... உங்க விளக்கத்தைக் கேட்கவா? என்றான் சற்று எரிச்சலாக.


"சாரி சர்…'' என்றவாறு திரும்ப வெளியேறினாள்.


அவள்‌ அவ்வாறு சோர்ந்து வெளியேறியதும் அவனுக்குப் பிடிக்கவில்லை.


தான் செய்ய நினைத்ததை மீண்டும் ஒரு‌முறை நினைத்துப் பார்த்தவனுக்கு, தன் சுயம் மறந்ததன் காரணம் மட்டும் விளங்கவில்லை. கல்லூரி வாழ்க்கையிலும் சரி... அதற்குப் பிறகும் சரி… அவன் கடந்து வராத பெண்களா? அப்பொழுதெல்லாம் அந்தந்த வயதிற்குரிய குறுகுறுப்போடு சரி. மனம் சலனப்பட்டதில்லை.


சலனப்படுத்த நினைத்தப்‌ பெண்களுக்கும், 'எட்டி நில்! எச்சரிக்கிறேன்!' என்கிற பார்வை தான் அவன் பதிலாக இருக்கும். ஆனால் இப்பொழுது, அதுவும் திருமணமான பெண் மீது… அதை நினைத்துப் பார்க்கவே‌ மனது கூசியது.


ஆனால் அந்த முகம், வேற்றுமையாக எண்ணத் தோன்றவில்லை. ஒரு பெண்ணைப் பார்த்தால் இவள் எனக்கானவள் என்று உள் மனது சொல்ல‌ வேண்டும் என ஆசைப்பட்டவன். அவளைப் பார்த்ததும் கை உரிமையாக மேலெழுந்ததே ஒழிய… தடுமாற்றம் இல்லை. அந்தக் கண்கள் அவனை
ஆழிச் சுழலாக உள்ளிழுத்ததே. ஒரு வேளை‌ நாம் இவளைத் தாமதமாக சந்தித்து விட்டோமோ? எனப் பலவாறாக் குழம்பித் தவித்தவன், நாற்காலியில் பின்புறமாக தலையைச் சாய்த்து ஆழ்ந்து மூச்சு விட்டான்.


உள்ளுணர்வு அவளை உன்னவள் என்று அடையாளம் காட்டும் முன் அறிவு விழித்துக் கொண்டு, ஏன் என்று கேள்வி கேட்டது.


மனசுக்குத் தெரிந்தது இரண்டே விஷயங்கள் தான். விருப்பு மற்றும் வெறுப்பு.


அறிவு அப்படி இல்லை. ஏன் என்று கேள்வி கேட்கும். விவாதம் பண்ணும். ஆராய்ச்சி செய்யும்.‌ சில சமயங்களில் நம்மைக் குழப்பி விட்டு, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க‌வைக்கும்.


அறிவு தோற்கும் இரண்டே இடங்கள். தாய்மை மற்றும் காதல்.


'சூர்யா… பி ஸ்டெடி… இதுக்குத் தான் தாத்தா சொன்ன மாதிரி காலாகாலத்துல கல்யாணம் பண்ணனும்கறது. பூவும் புடவையமா ஒரு பொண்ணப் பாத்ததும் மனசு அலைபாயுது பாரு…' என்று தனக்குத்தானே சமாதானம் செய்து கொண்டான். அப்பொழுதும் அவன் உள் மனது இது சபலம் இல்லை என அடித்துச் சொல்லியது. அவளை வெளியே போகச் சொன்னானே ஒழிய, அந்த முகம் மட்டும் மனக் கண்ணை விட்டு நீங்கவில்லை.

அவள் முகத்திலும்‌ சிறு தடுமாற்றம் இருந்ததே. ஒருவேளை தாத்தாவை எதிர் பார்த்து வந்தவள் என்னைப் பார்த்ததும் வந்த தடுமாற்றமாக இருக்கும் என‌ எண்ணிக் கொண்டான்.


அவனுக்குத் தெரியவில்லை. இது மனதின் அலைபாயல் இல்லை. சலனம் இல்லை. சபலம் இல்லை. ஆழ்மனதில் உறங்கிக் கொண்டிருக்கும் அவனவளுக்கான வேட்கை என.


மனதை ஒரு நிலைப்படுத்தினான் எண்ணக் குவியல் செய்தான். வேலையில் கவனமாகினான்.


அவனைப் பார்த்து விட்டு, வெளியே வந்தவளுக்கோ இன்னும் படபடப்பு அடங்கவில்லை. தனது கேபினுக்கு வந்தவள், வாட்டர் பாட்டில் எடுத்து நிதானமாக நீரைப் பருகினாள்.

அவனைப் பார்த்ததினால் மேலெழுந்த ஞாபகங்களை மீண்டும் உள் அழுத்தும் விதமாக. ஆனால் அதுவோ காற்றூதிய பலூனாக மேலெழும்பியது.


சிறிது தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டவள், வெயிலில் வந்ததும், அவளவனைக் கண்ட எதிர்பாரா சந்திப்பும் அவளுக்கு தலை‌பாரத்தை உண்டு பண்ணியது. சூடாக காஃபி குடித்தால் நன்றாக‌ இருக்கும் எனத் தோன்ற, நந்தினியைத் திரும்பிப் பார்த்தாள். அவள் வேலையில் மும்முரமாக இருக்க, இன்டர்காம் அழைத்தது.


அழைப்பை ஏற்றவள், "எஸ் சார்." என்க,


"மிஸஸ் ஆதியா?"

இந்த அழைப்பு… அதுவும் அவனது குரல் வழி‌ மிஸஸ் எனும் சொல்‌ கேட்டவளுக்கு, நெஞ்சமெங்கும் பூ மழைச் சாரல்.


"எஸ் சார்."


"ஆஃப்டர் லன்ச். ஐ வான்ட் சி‌ தெ பேக்கிங் செக்ஷன்… ஜாய்ன் வித் மி!"


"ஓகே சார்." என்று பதிலளித்தவள்,

'பெரிய மணிரத்னம் பட ஹீரோ… அதிகமா பேசமாட்டாரோ…' என‌ நினைத்தவாறு டைம் பார்க்க மணி பனிரெண்டைத் தாண்டிக் காட்டியது. லன்ச் டைம் நெருங்குவதால் காஃபிக்கு உகந்த நேரமில்லை என காஃபி ஆசையைத்‌ தள்ளி வைத்தாள்.


வேலையில் ‌கவனமாகியவளை, சிறிது நேரத்தில் நந்தினியின் குரல் கலைத்தது.


"ஆதியா…"


"ம்ம்ம்…"


"சாப்பிடப் போலாமா… காலையில் பிரசாதம் மட்டும் சாப்பிட்டது பயங்கரப் பசி ஆதி…"


"நந்து மேடம்… பிரசாதம்னு ஏதோ கொஞ்சமா கோயில்ல‌ வாங்கி சாப்பிட்ட மாதிரி சொல்றீங்க. சுண்டல், கொழுக்கட்டை, பொங்கல் அதுவும் பத்தாதுனு ஸ்வீட்டு, பழம் இப்படி எத்தனை வகை. ஒவ்வொன்னையும் ஒரு வாய்‌ சாப்பிட்டிருந்தா கூட ரெண்டு நாளைக்குத் தாக்குப் பிடிக்குமே மேடம்." என்றாள் தன்‌ முன்னிருந்த கம்யூட்டர் திரையில் கண்களை ஓட்டியவாறே.


"கண்ணு வைக்காதே ஆதி… வயித்துக்கு வஞ்சனை பண்ணக் கூடாது... அது நம்ம பேச்சைக் கேக்காது… நாம தான் அது பேச்சைக் கேட்கணும்னு ஔவையார் பாட்டியே சொல்லியிருக்காங்க தெரியுமா?"


"அவங்க எப்போப்பா... சொன்னாங்க?"


''ஒரு நேரம் சாப்பிடாமப் பொருத்துக்கோனாலும் கேட்க மாட்டேங்கிறே… அடுத்த வேளைக்கும் சேத்து சாப்பிடுனாலும் கேட்க மாட்டேங்கறேனு… அவரே புலம்பி இருக்காருப்பா."


"என்ன...மேடம்? இலக்கியமெல்லாம் பேசறாங்க… நல்லாத் தெரியுமா? ஔவையார்‌ தானா?"


"ஔவையாரா…?அதியமானா…?" என வடிவேலு பாணியில் யோசித்து விட்டு.

"யாரா இருந்தா என்ன சொன்னது கரெக்ட் தானே?'' என்றாள்.


"சோறுன்னு வந்துட்டா நீ எல்லா வியாக்கியானமும் பேசுவ. வா போகலாம்!" எனக் கூறியவளை,


"நீ என்ன வெறும் காத்தும் தண்ணியும் குடிச்சா உயிர் வாழப் போற. இல்லையில… பேசாம வா…" எனக் கூறிய நந்தினியோடு சேர்ந்து, ஆதியாவும் டைனிங் ஹால் நோக்கி சென்றாள்.



ஆதியா சாப்பாட்டில் ஆர்வமில்லாமல் பேருக்கு சாப்பிட்டுக் கொண்டிருக்க… நந்தினி அவளிடம்,


"ஆதி! ஏன் பசிக்கலயா… சாப்பிடாம சும்மாக் கிண்டிட்டிருக்க. ஒரு வேளை... உன்ற வூட்டுக்காரர் ஞாபகமோ?"


நந்தினி கேட்டது போல் அவளுக்குத் தன்னவன் ஞாபகம் தான். லன்ச் முடித்து விட்டு, அவனோடு பேக்கிங் செஷன் போக வேண்டும். அந்நியப் பார்வை கொண்டு அவன் பார்க்கும் கணங்களை அவள் விரும்பவில்லை. தன்னால் இயலாததும் கூட. அதனால் தான்‌ இவ்வளவு நாட்களாக ஒதுங்கி இருந்ததும். ஆனால் அவனை நேரில் சந்தித்தப் பிறகு… இனியும் தன்னைக் கட்டுப் படுத்திக் கொள்ள முடியும் என்று அவளுக்குத் தோன்றவில்லை. யோசனையோடு ஆதியா அமைதியாக இருக்க,


"ஏன் ஆதி… இப்படி வாழ்ற வயசுல
வெளி நாட்டுல போய் உக்காந்துகிட்டு… காச மட்டும் சம்பாதிச்சு என்ன பண்ணப் போறீங்க?" ஆதியாவைப் பற்றி அவள் கூறியதை வைத்துக் கேட்க,


'என்ற வூட்டுக்காரர்… வெளி நாட்டுல‌ இல்லைங்க… எம்.டி. ரூம்ல தான் உக்காந்திருக்காருங்க அம்மணி…' என்று
கூறினால் எப்படி‌ இருக்கும் என்று நினைத்தவளுக்கு, சிறு புன்னகை முகத்தில் தோன்றியது.


"நான் என்ன இப்ப காமெடியா பண்ணிணேன். காலம் போன கடைசியில வந்து பொண்டாட்டி கூந்தலுக்கு இயற்கை மணமா? செயற்கை‌ மணமான்னு பாண்டிய மன்னன் மாதிரி ஆராய்ச்சி பண்ண முடியாது. என்ன பிராண்ட் ஹேர்டை வாங்கலாம்னுதான் ஆராய்ச்சி பண்ண முடியும்."


அவள் கூறியதைக் கேட்டு ஆதியா சிரித்து விட, நந்தினி அவளை முறைத்துக் கொண்டிருந்தாள்.


"சரி...சரி… நீ சொல்றது எனக்குப்‌புரியுது. என் மேல உள்ள அக்கறைல தானே சொல்ற?"


"ஆமா ஆதி… வெளி நாட்டுல வேலைக்கிப் போயிட்டு, அவங்க அங்க கஷ்டப்பட... அவங்க வொயிஃப்ஸ் இங்க கண்டவன் கண்ணுல விழுகறதும்… கண்ட கண்ட பேச்சுக்கு ஆளாகறதும்னு எத்தனையப் பாக்குறோம்…"


''ஏய் நந்தினி இது என்ன புதுசா? வணிகம் செய்யத் தலைவன் போறதும்… தலைவி பசலை படறத் தலைவனுக்காகக் காத்திருப்பதும்னு… இலக்கியம் படிக்கையில... எவ்ளோ நல்லா இருந்துச்சு… காத்திருக்கறது கூட ஒரு சுகம் தான் தெரியுமா?
திரவியம் தேட திரைகடல் ஓடச் சொல்லியிருக்காங்க மேடம் நம்ம தாத்தாக்கள் எல்லாம்."


"திரைகடல் ஓடித்‌ திரவியம் தேடச் சொன்னாங்க தான்… பொண்டாட்டி, புள்ளயத் தவிக்க விட்டுப் போகச் சொல்லல…"


அவள் சொல்வது உண்மை தான். அன்று வணிகம் செய்யச்‌ சென்றவர்கள் விற்கவோ அல்லது வாங்கவோ சென்றனர். வியாபாரம் சிறிதோ… பெரிதோ... அவன் தான் முதலாளி. நினைத்த நேரத்தில் திரும்ப முடியும்.


இன்று வெளி நாட்டு மோகம் கொண்டு, வேலைக்குச் செல்பவர்கள் திரும்ப வேண்டும் என்றால் இன்னொருத்தன் அனுமதி வேண்டும். ஒப்பந்தம் முடிய வேண்டும். இல்லை என்றால் தண்டத்தொகைக் கட்ட வேண்டும்.


நந்தினியின் பேச்சைக் கேட்டவளுக்கு, அவள் தன் மீது கொண்ட அக்கரைப் புரிந்தது. அவளுக்கு நெருங்கிய தோழிகள் என்று யாரும் இல்லை. பெற்றோர்களே அந்த இடத்தை நிரப்பி விட்டதால் அவளுக்கு அது பெரிதாகத் தெரியவில்லை.

இங்கு வேலைக்கு வந்ததில் இருந்து நந்தினி நெருங்கியத் தோழி‌ ஆகிவிட்ட போதிலும்… தான் அவளிடம் ஆரம்பத்தில் கூறியதையே தொடர்ந்து கொண்டிருப்பது அவளுக்கும் சற்று நெருடலாக இருந்தது.


"ஆதி! பருவத்துல பயிர் செய்யறது… வெள்ளாமைக்கு (விவசாயத்திற்கு) மட்டும் இல்ல… பருவத்தையும் பயிர் செய்யணும்… அப்புறம் வெளி நாட்டுல சம்பாதிச்ச காசை ஃபெர்ட்டிலிட்டி சென்டர்க்கு கட்றதுக்குத்தான் சரியா இருக்கும்."


'அய்யோ! இவ ரெம்பப் பொங்குறாளே! உண்மை தெரிஞ்சா என்னைய என்ன பண்ணுவானு தெரியலியே? இருந்தாலும் வெளி நாட்டுல வேலை‌ பாக்குற ப்ரதர்ஸ்… நோட் திஸ் பாய்ன்ட் .' என எண்ணிக் கொண்டாள்.


''யாரோ இங்க நான் பச்சப்புள்ளைனு சொன்னாங்க. ஒன்னுமே தெறியாதுன்னாங்க… " என்று கூறிச் சிறித்தவளை… நந்தினி முறைக்க,


"ஓகே. இன்னைக்கே என்ற வூட்டுக்காரருக்கு ஒரு மனுப்போட்டு… வாழ்க்கைத் திட்டத்தை மறுபரிசீலனை பண்ணச் சொல்றேன்… போதுமா… இப்ப சாப்பிட்டு முடி போகலாம்."


*******************************


இந்தியா. மசாலாப் பொருட்கள் ஏற்றுமதியில் முன்னனியில் விளங்கும் நாடு. ஆந்திரா உற்பத்தியில் முன்னனியிலும், கேரளா 'சிட்டி ஆஃப் ஸ்பைஸஸ்' எனவும் அழைக்கப் படுகிறது. தங்கத்துக்கு ஈடாக விற்பனை செய்யப்படும், சிவப்புத் தங்கம்‌ என அழைக்கப்படும் குங்குமப் பூவின் உற்பத்தியகமும் இந்தியா தான். நாமெல்லாம் குங்குமம் பூவை எப்படிக் கலக்கிக் குடித்தாலும், 'நான் திராவிடனாக்கும்.' எனும் வகையில் தான் நிறம் மாறாமல் நம் குழந்தைகள் பிறக்கும்.
உலகத்திலேயே அதிக காரமான , ரெட் பெப்பர் என அழைக்கப் பெறும் மிளகாய் விளைவதும் இங்கு தான். மசாலாக்களின் அரசனாகிய கருப்பு மிளகும், அரசியாகிய ஏலக்காயும் கேரளாவின் சிறப்பு. நம் நாட்டு மசாலாக்களின் மணமும், சுவையுமே உலக நாடுகள் அவற்றை விரும்பக் காரணம்.


அங்கு அனைத்து வகையான மசாலாப் பொருட்களும் நேர்த்தியாக பேக் செய்யப்பட்டுக் கொண்டிருக்க...

சூர்யப்பிரகாஷ் அவற்றைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தான். உடன் ஆதியாவும். பத்து கிராமிலிருந்து, கிலோ கணக்குகள் வரைப் பேக்கிங் நடைப் பெற்றுக் கொண்டிருந்தது.


ஒருபுறம் பேக்குகளில் உற்பத்தி மற்றும் காலாவதியாகும் தேதிகள் பதியப் பட்டுக் கொண்டிருந்தது.


சூப்பர் வைசர் ராகவன் உடனிருந்து அனைத்தையும் விளக்கிக் கொண்டிருந்தான். அவன் பார்வை அவ்வப் பொழுது ஆதியா மீதும் படிந்தது. அவளோ அவன் பார்வையைத் கிஞ்சித்தும் கண்டு கொள்ளவில்லை. செக்குக்கும் சிவலிங்கத்திற்கும் வேறுபாடு தெரியாத நாயாகத்தான் அவனைப் பார்ப்பாள்.


இங்கு சூர்யாவின் பாடும் கொஞ்சம் திண்டாட்டமாகத்தான் இருந்தது. அவளைப் பார்த்ததால் வந்த தடுமாற்றத்தை, அவளைக் கொண்டே போக்க வேண்டும் என்று தான் அவளை உடன் அழைத்ததே. முகம்‌பார்த்து இயல்பாகப் பேசி விட்டால் தடுமாற்றம் போய்விடும் என்று நினைத்தான். ஆனால் மசாலாக்களின் நெடி தாக்காமலிருக்க முகக் கவசம் அணிந்து வந்தவளின் கண்களை மட்டும் கண்டவன், அவளது சுடர் விழியால் சாட்டையில்லாமலே சுழற்றப்பட்டான். இவளைக் கண்டால் மட்டும் ஏன் தான் சுயம் இழக்கிறோம் என்று புரியாமல் தவித்தான்.


அங்கு பெரும்பாலும் வேலை செய்வது பெண்கள் தான். அவர்கள் முகத்தில் தோன்றிய மாற்றத்தைக் கண்டவள், அவர்கள் பார்வை சென்ற திசையை நோக்க… அவள் கண்ணில் பட்டது ராகவனோடு பேசிக் கொண்டிருந்த அவளவனைத்தான்.


ப்ளாக் கலர் பேண்ட்டும்... க்ரே கலர் முழுக்கை ஷேர்ட்டும்… அவன் நிறத்தை எடுப்பாகக்காட்ட… வளர்வது குற்றமில்லை என்ற நோக்கில் வளர்ந்தவன்… இடது கையைப் பேண்ட் பாக்கெட்டில் விட்டவாறு பேசிக் கொண்டிருக்க…

அவன் தோரணையில் அவளும் மதி மயங்க… அப்பொழுது தான் அப்பெண்களின் பார்வை அவளுக்கு உறுத்தியது. கொஞ்சம் மிளகாய்‌ கடித்த உணர்வு அவளுக்கு. 'எப்படா இடத்தை விட்டு நகர்வோம்.' என்றிருந்தாள்.


பேக்கிங் செஷனை விட்டு வெளியே வந்தனர். அவளையும் தன்னறைக்கு அழைத்துச் சென்றான்.


அங்கு செய்ய வேண்டிய சில மாற்றங்களைப் பற்றிப் பேசி விட்டு, அது சம்பந்தமான விபரங்களைச் சேகரிக்க சொன்னான்.


"ஆதியா! ட்ரான்ஸ் போர்ட் பத்தித் தாத்தாகிட்டப் பேசியிருந்தீங்களாம்…"


"ஞாபகம் வச்சிருக்காரா சார்?" என்றாள் ஆச்சரியமாக.


"தாத்தா எதையும் மறக்க மாட்டார். நான் இன்னைக்கி இங்க வர்றதா சொன்னதும், அவர் தான் உங்க பேரைச் சொல்லி… எதுனாலும் உங்களைக் கேக்க சொன்னார்."


"அப்படி இல்லை‌ சார்… நான் ஒரு‌ அக்கவுண்டன்ட் தானே. என்னோட சஜ்ஜஷனையும் ஞாபகம் வச்சிருக்காரே."


"எப்பவுமே பிஸினஸ் பண்றவங்களுக்கு தன்னோடு பார்ட்னர்ஸ் ஒப்பீனியனை விட… கஸ்டமரோட ஒப்பீனியனும்… வேலை பாக்குறவங்களோட கம்ஃபோர்ட்டும் முக்கியம்னு தாத்தா எப்பவுமே சொல்லுவாங்க"


"பெரிய மனுஷன்னா பெரிய மனுஷன் தான் சார்."


" அப்படி சொல்லாதீங்க. அவரைப் பெரிய மனுஷன்னு சொன்னா அவருக்குப் பிடிக்காது. எப்பவுமே சின்னப் பையன் மாதிரி எங்கூட தான் மல்லுக்கு நிப்பாரு."


"அது ஒரு வகையான மனோ நிலை சார். தனக்குப் பிடிச்சவங்ககிட்ட மட்டும்‌ தன் சுயத்தைக் காட்டுவது."


'இப்பொழுது தன்னோடு மன நிலை என்ன? இவளிடம்‌… அதுவும் இன்று பார்த்தப் பெண்ணிடம்… இப்படிப் பல நாள் பழகியவரிடம் பேசுவது போல் பேசிக் கொண்டிருக்கிறேனே?' என்று யோசித்துக்கொண்டிருந்தான்.


"ஓ.கே. சார்! ஐ வில் கலக்ட் ஆல் தி டீடெய்ல்ஸ்." என்றவளிடம்


"குட். நெக்ஸ்ட், இங்க வேலை‌ பாக்குற பொண்ணுங்க சேஃப்டியும் முக்கியம், அப்யூஸ் கம்ப்ளைன்ட்ஸ் இருந்தா… தெரியப்படுத்தலாம். மறைமுக கம்ப்ளைன்டாகவும் கொடுக்கலாம். இதையும் சர்க்குலர் போட்ருங்க."


ராகவனின்‌ பார்வையையும், அதன் போக்கையும் கவனித்தவனின்‌ முடிவு இது. ஆணின் பார்வையின்‌ அர்த்தம் அறிந்தவன். அதுவும் ஆதியாவின் மீது அவன் பார்வைப் பட்டு மீண்ட பொழுதெல்லாம், அவனது மூளை ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றது.


'இவளை யாரு இப்படி சேலை கட்டிட்டு வரச் சொன்னது?' என்று அவள் மீதும் ஆத்திரம்‌ வந்தது.


'டேய்… இது உனக்கே ஓவராத் தெரியல. அவ சேலை கட்டிட்டு வந்தா உனக்கென்ன? அதை… அவன்‌ பாத்தா உனக்கென்ன? நீயும் தானே காலையில‌ பாத்த,' என்று அவன் மனசாட்சி கேள்வி கேட்டது.


ஆனால் அவன் அப்படிப் பார்க்கும்‌ பொழுது, தனக்கு ஏன் கோபம் வந்தது என்று யோசித்தான். 'இது எங்கே போய் முடியுமோ தெரியலை…
இனிமே இந்த ஆஃபிஸ்க்கு வரக்கூடாது… எதுவாக இருந்தாலும் வீட்ல, தாத்தாகிட்டயே கேட்டுக்குவோம்.' என்று‌ முடிவெடுத்துக் கொண்டான்.


"ஓ.கே. யு கேன் கோ."


"ஓ.கே.சார்" எனக் கூறி எழுந்தவள்... கதவை நோக்கி… பின்னழகில் பின்னலாடச் சென்றவளைக் கண்டவனது மனமும் சேர்ந்தே ஆடியது.


அக்கினிப் பழமுனு

தெரிஞ்சிருந்தும்

அடிக்கடி‌ நாக்கு துடிக்குதடி

ஒடம்பும் மனசும் தூரம் தூரம்

ஒட்ட நினைக்க ஆகல

மனசு சொல்லும் நல்ல சொல்ல

மாய ஒடம்பு‌ கேக்கல


ஒரே நாளில் தனக்குள் இத்தனை மாற்றமா? தனக்குத்தானே கேட்டுக் கொண்டான். பதில் தான் கிடைக்கவில்லை.


தெரிந்தவளும் சொல்ல முயலவில்லை.
 




Last edited:

S.M.Eshwari.

அமைச்சர்
SM Exclusive
Joined
Jun 7, 2021
Messages
2,164
Reaction score
6,070
Location
India
வணக்கம் தோழமைகளே! நெஞ்சம் மறப்பதில்லை.10. பதிவு போஸ்ட்டாகியுள்ளது. இதுவரை ஆதரவு அளித்தவர்களுக்கும், புதிதாக படிக்க ஆரம்பிப்பவர்களுக்கும், என்னுடைய முதல் முயற்சியை இந்த‌ அளவுக்கு ஊக்குவிப்பதற்கும் நன்றி. கருத்துக்களையும் சேர்த்து சொல்லிட்டுப் போங்க. நிரை குறைகளைத்‌ தெறிந்து கொள்ள விரும்புகிறேன்.🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top