🙏மீராவின் வரலாறு🙏

srinavee

Author
Author
SM Exclusive Author
#1
மீராவின் வரலாறு:

மீரா அல்லது மீராபாய் (கி.பி 1498 – கி.பி 1547) வட இந்திய வைணவ பக்தி உலகில் மறுக்கமுடியாத கிருஷ்ண பக்தை ஆவார்.

1300 பாடல்களுக்கு மேல் கிருஷ்ணரின் மீது இயற்றி பாடிய மீரா தற்போதைய ராஜஸ்தானில் பிறந்தவர்.

ராஜபுத்ர சிற்றரசனின் மகளாய் அவதரித்தாள் மீரா. அவளுடைய மூன்றவது வயதில் அரண்மனைக்கு வந்த துறவி அளித்த கிரிதரகோபாலனின் சிலையைத் தான் அவள் தாய் காண்பித்து அவளுடைய மணவாளன் என வேடிக்கையாய் சொன்னாள்.

ஆனால் மீராவுக்கு அது வேடிக்கையாய் விளங்காமல் உயிரில் கலந்த உறவாய் வியாபிக்க ஆரம்பித்தது.

விக்கிரஹத்துக்கு நீராட்டி
அலங்கரித்து அதனுடன் ஆடிப்பாடி என பக்தியோடு வளர ஆரம்பித்தாள்.

அவளுடைய எட்டாவது வயதில்(சில குறிப்பு 13வயது என்கிறது) சித்தூர் இளவரசன் போஜராஜனுடம் மீராவுக்குத் திருமணம் நடந்தது. மீரா கிரிதர கோபாலனின் விக்ரகத்துடன் சித்தூர் சென்றாள்.

போஜராஜன் குடும்பத்தின் குலதெய்வமான துள்ஜா பவானி எனும் துர்க்கை வழிப்பாட்டை மேற்கொள்ளாத மீராபாயின் கிருஷ்ண வழிபாட்டிற்கு எதிர்ப்பு கிளம்பியது.

ஆயினும் மீரா பணிவோடு தன் கொள்கையைக் கணவனிடம் கூறி அவனுக்கு வேண்டிய பணிவிடை களைக் குறைவின்றி செய்தாள்;

குடும்பகாரியங்களை சரியாக கவனித்து முடித்தபின்னரே தனது தெய்வ மணாளனுக்கு வழிபாடுசெய்வாள்; ஆடல்பாடல் சேவைகளில் மனதைப் பறி கொடுப்பாள்.

போஜராசன் ராஜபுத்ரவீரன், அழகன். மீராவிடம் காதல்கொண்ட அன்புக் கணவன். அவளை உயிரினும் மேலாய் நேசித்தான். அவளோ ஆண்டவனிடமே மனதைச் செலுத்தினாள்.

ஒரு நாள் போஜன் மீராவின் பூஜை அறைக்குள் நுழைந்தான். அங்கே மீரா கிரிதர கோபால விக்கிரஹத்திடம் மனமுருக பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்ததும் அவன் மனைவிக்கு புத்தி பேதலித்து விட்டதென வருத்தமாயும் வந்தது .

மீரா மீதுள்ள அன்பில் அவளுடைய கண்ணனுக்காக ஆலயம் கட்டி கொடுத்தான்.

1521 இல் தில்லி சுல்தானின் இசுலாமிய சாம்ராச்சியத்திற்கு எதிராக ராஜபுத்திரர்கள் ஒன்றுசேர்ந்து போர்புரிந்த போது இறந்த பலர் அரசர்களில் மீராவின் கணவர் போஜராஜனும் ஒருவர். மாமனார் அரவணைப்பில் அரண்மனையில் வாழ்ந்தார் மீரா.

கோயில் மூலமாய் மீராவின் வெளி உலக உறவு வளர்ந்தது. சத்சங்கம் சாதுக்கள் என மீரா பக்தியுடன் பாடிஆடி பக்தியின் உச்சத்திற்கே போய்விட்டாள்.

போஜராஜன் தம்பியான விக்ரமாதித்யா தன் தங்கையான உதாபாயோடு சேர்ந்து பலமுறை மீராவை கொலைசெய்ய முயற்சித்தான்

கண்ணனுக்கு நிவேதனம் (படைத்த) செய்த பிரசாதத்தில் நஞ்சைக் கலந்து, அதனை மீராவை அருந்துமாறு செய்தான். பின்னர் கண்ணன் அருளால் நஞ்சு நீக்கப்பட்டது.

மீராவின் படுக்கையில் இரும்பு முட்களை நிறைக்க, கண்ணன் அருளால் அவைகள் ரோசாமலர் இதழ்கள் ஆனது.

கொடிய பாம்பு அடைத்த பூக்கூடையை கொடுத்து கண்ணனுக்கு அர்ப்பணிக்குமாறு கொடுக்க, அலங்கரிப்பதற்கு மீரா அப்பூக்கூடையை திறந்த போது அது அழகிய பூமாலை ஆனது.

மீராவின் புகழ் நாடெங்கும் பரவியது.
மொகலாய மன்னர் அக்பர் காதுக்கு அது எட்டியது.
மன்னர் சர்வ சமய சமரசத்தை ஆதரித்தவர். அவர் மீராவின்ன் பக்தியால் கவரப்பட்டு அவளைக் காண விரும்பினார்.

காலங்காலமாய் இரு பிரிவினருக்குள் கடும்பகை வேறு. அதனால் அக்பர் தன்னை ஹிந்து சாது போல மாறுவேடம் போட்டுக்கொண்டு சித்துர் வந்து மீராவின் பாதங்களை பயபக்தியுடன் தொட்டார். அவளுடைய கிருஷ்ணனுக்கு விலை உயர்ந்த முத்து மாலைகளை அளித்துச் சென்றார்.

அரச குடும்பத்தினர் மீராவை ஆற்றில் குதித்து உயிரைவிட கட்டளை இட்டனர். மீராவும் ஆற்றில் குதித்தாள் ஆனால் கண்ணனின் அன்புக்கரங்கள் அவளை மேலேற்றி, காதோரம் 'இன்றோடு உலகபந்தம் உனக்கு அற்றது, ஸ்ரீ பிருந்தவனம் சென்று அங்கே நீ என்னைச் சந்திப்பாய் 'எனக் கூறி மறைகிறார்.

குரு ரவிதாசர்க்கு சீடரான இவர், அரசக் குடும்பத்தின் தொல்லைகள் தாளாது கண்ணன் வாழ்ந்த பிருந்தாவனத்தை வந்தடைந்தார்.

பிருந்தாவனத்தில் மீரா கண்ணனுக்காக பாடிய பாடல்கள் அனைத்தும் அற்புதமானவை.

சூர்தாஸ் துளசிதாஸ் மீரா என ஹிந்தி கவிகளில் மூவரே முதல் சிறப்பு வாய்ந்தவர்கள்.

குஜராத்தியிலும் கவிதை எழுதினாள். குஜராத்தி இலக்கியத்தில் நர்சீ மேத்தாவுக்கு அடுத்த இடம் மீராவுக்கு உண்டு.

இறுதிக் காலத்தில் குஜராத்தின் துவாரகைக்கு வந்தடைந்தார்.

அங்கு கோயில்கொண்ட துவாரகதீசன் முன்பு பாடிக்கொண்டே அனைவரும் கண்ணெதிரிலேயே இறைவனோடு கலந்தார்.

தமிழ்நாட்டு ஆண்டாளுக்கும் ராஜபுதனத்து மீராவிற்கும் வாழ்வின் நோக்கம் ஒன்றாகவே இருந்தது.

கண்ணனையே மணாளனாய் மனத்தில் வரித்துக்கொண்ட மாமங்கையர்கள் இருவரும்.

திருஅரங்கத்தில் இறைவனுடன் இரண்டறக் கலந்தாள் ஆண்டாள்.

துவாரகையில் ஆடிப்பாடியபடியே கண்ணன் சந்நிதியில் மீராவும் இறைவனோடு ஒன்றாகக் கலந்தாள் என்கிறது மீராவின் வரலாறு.

பல்லாண்டுகள் மறைந்தாலும் மீராவின் பாடல்கள்
காற்றினிலே வரும் கீதமாய்
இன்னமும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.!!

ஹரே கிருஷ்ணா!!🙏🙏

😍😍படித்ததில் பிடித்தது😍😍
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top