14 நிழலின் காதல்

#1
பிரசாந்த் ஆசை ஆசையாக எதிர்நோக்கி காத்திருந்தான் பாப்பாவின் பிறந்த நாளுக்கு... ஆனால் பாப்பாவோ, 'இனி அருள் என்னிடம் பேச மாட்டாரோ?' என்ற கவலையில் வலம் வந்தாள்...

'ச்சே... எனக்குக் கிடைத்த நல்ல சந்தர்ப்பம்... ஆனால் நானே என் தலையில் மண்ணை வாரி போட்டுக் கொண்டேனே... அவராக இறங்கி வந்து பேசும்போது, நான் ஏன் உதாசீனப்படுத்தினேன்... இப்போது என்ன செய்வது? அவரை எப்படி என்னிடம் பேச வைப்பது? எனக்குத் தேவைதான்... அன்று அப்படி நடந்து கொண்டது என் தவறு தான்... அந்த மாலினி மட்டும் என்னிடம் பேசாமல் இருந்து இருந்தால், இதெல்லாம் நடந்து இருக்காது... மாலு, ஏன் மாலு இன்னும் என் வாழ்க்கையில் விளையாடுகிறாய்? என்னை வாழவிடு மாலு... அன்று மாலு என்னிடம் ஏதோ பேச வேண்டும் என்று கூறினாளே! என்னவாக இருக்கும்? போய்ப் பார்க்கலாமா? நிச்சயமாக என்னை அருளிடமிருந்து பிரிக்கத்தான் நினைப்பாள்... போக வேண்டாம்... நான் ஏன் போகக்கூடாது? நிச்சயமாக செல்வேன்... அவள் என்ன கூறினாலும் நம்ப மாட்டேன்... அவளுக்குப் பயந்து செல்லாமல் இருப்பதா? நான் செல்கிறேன்' தீவிரமாக யோசித்துக் கொண்டு இருந்தாள் பாப்பா... இந்திராணியிடம் கூறிவிட்டு, வெளியே கிளம்பினாள் பாப்பா...

அதேநேரம் அருள், தனது கம்பெனியை பார்ட்னர்ஷிப் ஆக்கி, பாதிப் பொறுப்பை பாப்பாவிடம் கொடுப்பதற்காக, தான் லோன் எடுத்த வங்கிக்குச் சென்றான்...

விவரத்தைக் கூறியவன், மனைவியின் பெயர் மாளவிகா எனவும், மனைவியின் தந்தை பெயர் ஆறுமுகம் எனவும் கூறினான்...

"அந்த ஆக்ஸ்போர்டு சயின்டிஸ்ட் மேடமா?" வியப்பாகக் கேட்டார் மேனேஜர்...

"ஆம் சார்... ஆனால் உங்களுக்கு எப்படித் தெரியும்?" அதிர்ச்சியாகக் கேட்டான் பிரசாந்த்

"நீங்கள் இந்த வங்கியில் லோன் எடுக்கும்போது, நான் லோன் அப்ரூவ் பண்ணும் அலுவலகத்தில், வேலை பார்த்தேன்... இந்த பிரான்ச்சில் இருந்து வந்த உங்கள் ரெக்வஸ்ட்டை நான் அப்ரூவ் பண்ணவில்லை... எந்த முன்அனுபவமும் இல்லாத ஒருவருக்கு என்னால் சான்க்ஷன் பண்ண முடியாது என்றும் கூறினேன்... ஆனால் திடீரென ஆக்ஸ்போர்டு சயின்டிஸ்ட் ஷுயரிட்டி சைன் பண்ணி, எனக்கு மெயில் வந்தது, மேலும் சோனல் ஆபிஸில் இருந்து அக்செப்ட் பண்ண ரெகமன்டேஷனும் வந்தது... வேறு வழியின்றி, நம்பிக்கையில்லாமல் நான் சான்க்ஷன் பண்ணிய லோன் தான் உங்களுக்கு... அதுவும் அந்த சயின்டிஸ்ட் என்ற அவர்கள் பதவிக்கு மதிப்பு கொடுத்து தான்... அப்போதே நினைத்தேன், ஒருவேளை காதலியாக இருக்குமோ என்று? ஆனால் இப்போது தான் புரிகிறது, அவர்கள் உங்களை அந்த அளவுக்கு காதலித்து இருக்கிறார்கள்..."

மேனேஜர் கூறியதும் வெற்றுச்சிரிப்பு சிரித்தான் அருள்... இப்போது நினைத்துப் பார்க்க அவமானமாக இருந்தது, ஒரு பெண்ணின் தயவால் நான் முன்னுக்கு வந்துள்ளேன் என்பது அவனுக்கு நிஜமாகவே அவமானமாக இருந்தது... நான் லோன் வாங்கும் விஷயம் முதற்கொண்டு தெரிந்து இருக்கிறது என்றால், எப்படி? நிச்சயமாக மாலினி தான் சொல்லி இருக்க வேண்டும்... அவளிடமே கேட்போம் என நினைத்தவன் மாலினியைப் பார்க்க மருத்துவமனைக்குச் சென்றான்...

அங்கே தனக்கு முன் பாப்பா நடந்து செல்வதைப் பார்த்தவன், அமைதியாக பின்தொடர்ந்து சென்றான்... உள்ளே சென்ற பாப்பா சிறிது நேரத்தில், மாலினியுடன் வெளியே வருவதைப் பார்த்தவன், மறைவாக அவர்களைப் பின்தொடர்ந்தான்...

அவர்கள் மருத்துவ மனையில், வெளியே மரங்கள் சூழ்ந்த பகுதியில் கட்டி வைக்கப்பட்டிருந்த சிமென்ட் பெஞ்ச்சின் மேல் அமரவும், மரத்தின் பின்பகுதியில் அவர்கள் பேசுவது தெளிவாக கேட்கும் இடத்தில் அமர்ந்து கொண்டான் அருள்...

மாளவிகா மெதுவாக கேட்டாள், "சொல்லு மாலு... என்ன பேசனும் என்கிட்ட?"

"நிறைய பேசனும்... மனசுவிட்டு பேசனும்... யாருமே இல்லை நட்புனு சொல்ல... நான் துரோகம் செய்த உன் ஞாபகம் வந்தது... அதான் வரச் சொன்னேன்... நான் பேசறதைக் கேட்பியா? யார்கிட்டயாச்சும் மனசு விட்டுப் பேசனும்னு தோணுது... நீ கேப்பியா மாளவிகா?"

"மாலு... நீ எப்போதுமே என் பிரெண்டு தான் மாலு... சொல்லும்மா"

"உன்னைப் பணக்காரியா என்னை ஏழையா படைத்தது யார் தவறு? சொல்லு மாளவிகா"

"லூசு மாதிரி பேசாதே மாலு... நீ நடுத்தர குடும்பம்... உன்னை விடவும் கஷ்டப்பட்டவங்க நிறைய பேர் இருக்காங்க"

"இருக்கலாம்... ஆனால் நான் ஏன் கஷ்டப்படனும்? கடவுள் ஏன் எல்லாரையும் ஒரே போல படைக்கலை... நான் பட்ட கஷ்டத்துல பாதியாச்சும் நீ பட்டு இருப்பியா? ச்சே ச்சே... உனக்கு எல்லாம் கஷ்டம்னா என்னன்னே தெரியாது... உனக்கு எப்படி நான் பேசறது புரியும்?"

"அப்படி எல்லாம் இல்லை மாலு... உனக்கு ஒரு வகையில் கஷ்டம் என்றால் எனக்கு வேறு வகையில்... கஷ்டம் இல்லாதவங்கனு யாருமே இருக்க மாட்டாங்க மாலு... நீ ஏன் இப்படி உடைந்து போய் பேசறே? நீ எவ்ளோ போல்டா இருப்பே? ஒரு சின்ன ப்ராப்ளம், க்யூர் பண்ணிடலாம்னு டாக்டர் சொல்லிட்டாங்க... வேற என்னமா? கண்டதையும் நினைத்துக் குழப்பிக் கொள்ளாதே..."

"ப்ளீஸ்... என்னைப் பேசவிடு மாளவிகா... நீயாச்சும் கேளு நான் பேசறதை"

"சரி சொல்லு மாலு"

"சின்ன வயசுல இருந்து நிறைய அவமானங்கள்... அப்பா பேரு தான் பேங்க்ல வேலை பாக்கிறார்... ஆனால் குடும்பத்தில தரித்திரம் தான் தாண்டவம் ஆடும்... அவரைச் சொல்லியும் குத்தமில்லை... அவர் நாலு அக்கா கூடப் பிறந்த ஒரே தம்பி... அதனால ஒவ்வொருத்தருக்கும் மேரேஜ் பண்ண வாங்கின கடன், அத்தனை பேர் பிள்ளைகளுக்கும் தாய்மாமன் அப்படி இப்படினு அவரால குடும்பத்தைப் பார்த்துக்க முடியலை

அத்தைங்க எல்லாரையும் வசதியான இடத்தில தகுதிக்கு மீறி கடன் வாங்கி திருமணம் செய்து வைத்தார் அப்பா... ஆனால் அவங்க, நன்றி இல்லாதவங்க... அவங்க பசங்க கூட நான் விளையாடப் போனா 'பிச்சைக்காரி கூட எல்லாம் விளையாடாதே'னு அவங்க பசங்களைத் திட்டுவாங்க...

பக்கத்து வீட்டுக்கு விளையாடப் போனா, 'அவளுக்கு ஏன் சைக்கிள் ஷேர் பண்றே? உன் டாய்ஸ் அவளுக்கு ஏன் கொடுக்கிறே? அவளை வீட்டுக்குக் கூட்டி வர்ற வேலை எல்லாம் வேணாம்... எங்க வீட்டுக்கு ஏன் வந்தே? போய் ரோட்டுல விளையாடு' இப்படித்தான் ரெஸ்பான்ஸ் இருக்கும்... எங்கே போனாலும் அவமானம்... காரணம், ஒன்னே ஒன்னுதான், நான் ஏழை...

அப்போதான் சிக்ஸ்த் ஸ்டான்டர்டுக்கு உங்க ஸ்கூல்க்கு வந்தேன் நியூ அட்மிஷன்... அங்கே எனக்கு எவ்வளவு அவமானமா இருக்கும் தெரியுமா? நீங்க எல்லாரும் யூனிஃபார்ம் போட்டு இருந்தாலும், கெத்தா இருப்பீங்க... நான்? உங்க முன்னால கூனிக்குறுகி நிற்பேன்... அவமானம் பிடுங்கித் தின்னும் அந்த சின்ன வயசுல

உங்களுக்கு பணம் அதோட அருமைனு எதுவுமே தெரியாது... ஆனால் அதே வயசுல, அந்தப் பணம் இல்லைனு நான் அசிங்கப்பட்டு அவமானப் பட்டுக்கொண்டு இருந்தேன்...

உங்க கேங்க் என்னை உங்க கூட சேர்த்துக்கிட்டீங்க... ஆனால் எங்கேயாவது போகனும்னா, என்கிட்ட சஜ்ஜெஷன் கூட கேட்க மாட்டீங்க... ஏன்னா நான் ஓசியில் உங்க கூட வருகிறேன்ல... அதனால...

முதல்முறையா, எனக்கு ஒருத்தன் சாப்பாடு வாங்கிக் கொடுத்தான்... சாப்டியானு விசாரித்தான்... என் கஷ்டத்தைக் கேட்க காது வச்சிருந்தான்... அந்த வயசுல எனக்கு காதல் வரத்தான் செய்யும்... ஒருத்தன் அன்பா பேசினா, சந்தோஷமா வச்சிக்கிட்டா நான் காதலிக்க மாட்டேனா மாளவிகா... ஆனால் நீ தான், அவன்கிட்ட பேசினா எங்கப்பா கிட்ட சொல்லிக் கொடுப்பேன்னு ரெண்டு பேரையும் மிரட்டி பிரிச்சு வைச்சிட்ட"

"மாலு... அவன் நல்லவன் இல்லை... டென்த் வரை நல்லாத்தான் இருந்தான்... ஆனால் லெவன்த் வந்ததில் இருந்து நியூ ஸ்டூடன்ஸ் கூட சேர்ந்து ரொம்ப கெட்டுப் போயிட்டான்... பொண்ணுங்க கூட தப்பா பழகினான் அவன்... உன் வாழ்க்கையைக் காப்பாற்ற என்னால அப்போ அப்படித்தான் செய்ய முடிந்தது"

"எனக்கு அது தெரியும்... ஆனால் ஏற்றுக்கொள்ள முடியலையே... அவன் கெட்டவன்னாலும், என்கிட்ட பொய்யாவாது சாப்டியா சாப்டுனு சொன்னானே... எனக்குப் பார்த்து பார்த்து எல்லாம் செய்தானே... அதனால் உன்மேல ஒரு வருத்தம் இருந்தது...

அப்றோம் காலேஜ் போனோம்... நமக்குள்ள நல்ல பிரெண்ட்ஷிப் வந்தது... நீ அருளை முதன்முதலா கோவில்ல பார்த்து இம்ப்ரெஸ் ஆகி, என்கிட்ட வந்து சொன்னியே... அப்போதே நானும் இம்ப்ரெஸ் ஆகிட்டேன்...

உனக்கு காதல் என்றதும், எனக்கு உன்னைப் பழிவாங்கத் தோன்றியது... உன்னை வெறுப்பேற்றி அதில் சந்தோஷமும் அடைந்தேன்... என்னைப் பைத்தியம்னு நினைச்சா நான் பைத்தியம்தான்... சைக்கோனு நினைத்தா நான் சைக்கோ தான்... ஏன்னா, என்னைப் படைத்தவன் எனக்குப் பணத்தைக் கொடுக்கலீயே...

ஒவ்வொரு விஷயத்துலயும், ஒதுங்கி நிக்கனும்... காலேஜ்ல பங்ஷன் அப்போ ரிசெப்ஷன் ல நிக்க 3000ரூபாய் சேலை வாங்கனும்... என்னால முடியாது, ஒதுங்கிட்டேன்...

கல்ச்சுரல்ல டான்ஸ் பண்ண, 2500ரூபாய் கவுன்... என்னால முடியாது, ஒதுங்கிட்டேன்... இப்படி திறமை இருந்தும் வெளிப்படுத்த முடியாமல் நான் இருக்க, என் கூடவே இருக்கிற பிரெண்டு, உனக்கு எல்லாமே கிடைக்குது... ஏன்னா பணம்... பணம் இருந்தா டிராமா போடலாம், டான்ஸ் ஆடலாம், ரிசெப்ஷன்ல இருக்கலாம், என்னன்னாலும் பண்ணலாம்...

என்கிட்ட அது இல்லை... நம்ம கோயம்புத்தூர் போனது கூட, உன் காசுல... நீ கூட்டிட்டுப் போனே... ஏன், என்னால முடியலை... ஏன்னா பணம் இல்லை

தெரியாத ஒரு பையன் டிராயிங்க நீ மாற்றி வரையறே... கேட்டா, அப்பா பிரெண்டோட சன்தான்... ப்ராப்ளம் இல்லைனு சொல்றே... அப்போ பணம் இருந்தா நினைச்சது நடக்குமா?

இந்த உலகத்துல பணம் இல்லாமல் ஒன்னுமே இல்லை... மானம் மரியாதை கூட பணம் இருக்கிறவங்களுக்குத் தான் கிடைக்குது

நீ யாருன்னேத் தெரியாம, உன்னை லவ் பண்ணான் பாரு அருள்... அப்போ நான் நினைத்தேன், அவனும் பணக்காரன் என்று... அவனிடம் பணம் இருப்பதால் எல்லாம் சாதிக்கிறான் என்று நினைத்தேன்...

நானே கடிதம் எழுதி நானே மாலுவாக மாறினேன்... எனக்குத் தேவை பணம் தான்... உங்கள் முன் நானும் பெரியவள் என்று காட்ட ஒரு வெறி... அவனை ஆட்டி வைத்தேன்... என் இஷ்டத்துக்கு இயங்கினான்... ஆனால் அவனால் என்னுடன் ஒன்ற முடியவில்லை

நான் தான் மாலு என்ற எண்ணத்தில் பழகினானே ஒழிய, இதுவரை என் கையைக் கூடப் பிடித்தது இல்லை... அப்போது அவனிடம் ஸ்கூட்டி வாங்கி உன்னிடம் பெருமை பேசி சென்ற எனக்கு, அதன்பின் நீ வெளிநாடு சென்றதும் பணம் இல்லாமல் நான் இருக்கிறேன் என்ற உணர்வு அதிகம் வந்தது...

ஒரு பைத்தியக்காரி போல அலைந்தேன்... பணம் இருந்தால் மகிழ்ச்சி... சம்பளம் வந்து பத்து நாட்களுக்குள் காலி செய்து விடுவேன்... பப் பப் என்று பப்க்கு போனால் நான் எதிர் பார்த்த சந்தோஷம் கிடைக்குமா என்று பார்த்தேன்... கிடைக்கவில்லை... குடிக்க ஆரம்பித்தேன்... பல ஆண் நண்பர்களை உருவாக்கிக் கொண்டேன்... எதிலும் சந்தோஷம் கிடைக்கவில்லை...

ஒருநாள், என்று அருள் என்னை விட்டுப் பிரிந்தானோ? அன்று, அன்றைய நாளில் முதல்முதலாக தனிமையை உணர்ந்தேன்... என் சந்தோஷம் அருள் தான் என்று அறிந்து கொண்டேன்... அப்பப்போ அருளுக்கு உன் மூலம் உதவிகளும் செய்தேன்... உதவிகள் செய்தது கூட அவனை மீண்டும் இணைவதற்காகத்தான்...

ஆனால் அருள், உடைந்த கண்ணாடித் துண்டுகளை ஒட்டவைக்க முடியாது என்று கூறிவிட்டு சென்று விட்டான்... அவன் பின் நாய் போல சுற்றினேன்... அவன் என்னை ஏறிட்டும் பார்க்கவில்லை

அதைவிட அவன் தோழன் சரவணன், என்னை அருளைப் பார்க்கவே அனுமதிக்கவில்லை... எப்படியோ அருளின் வீட்டில் கெஞ்சி திருமணம் செய்ய நினைத்தனர்... நான் முந்தைய நாள் இரவில், யாருக்கும் தெரியாமல் மணப்பெண்ணைக் கடத்தினேன்...

ஆனால் விதியைப் பார்த்தாயா? நான் எவ்வளவு முயன்றும் உன் அருளை உனக்கேக் கொடுத்து விட்டது... எனக்குத் தெரியும், அருள் உணர்வால் காதலித்தது உன்னை... உருவம் மட்டுமே நான் என... ஆனால் அந்த பொய்க்காதல் கூட எனக்குக் கிடைக்கவில்லை பாரேன்"

"பொய்க்கு ஆயுசு குறைவு தான் மாலு... நீ வாழ்வில் தடம்புரள நானுமே ஒரு காரணமாகிப் போனேன்... மன்னித்து விடு மாலு... காதலோ நட்போ, பொய்யின் மூலம் பெற முடியாது மாலு... பொய்யில் ஆரம்பித்த எந்த உறவும் நிலைக்காது மாலு... ஆனால் உன் வாழ்வில் நீ இவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாய் என்பது உண்மையாகவே எனக்குத் தெரியாது மாலு... நீ இப்போது என்னை இங்கு அழைத்ததின் நோக்கம்?" கேள்வியாய்க் கேட்டாள் மாளவிகா என்ற நம் பாப்பா அருளின் லவி...
 
Advt

Advertisements

Top