15 நிழலின் காதல்

#1
"பொய்க்கு ஆயுசு குறைவு தான் மாலு... நீ வாழ்வில் தடம்புரள நானுமே ஒரு காரணமாகிப் போனேன்... மன்னித்து விடு மாலு... காதலோ நட்போ, பொய்யின் மூலம் பெற முடியாது மாலு... பொய்யில் ஆரம்பித்த எந்த உறவும் நிலைக்காது மாலு... ஆனால் உன் வாழ்வில் நீ இவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாய் என்பது உண்மையாகவே எனக்குத் தெரியாது மாலு... நீ இப்போது என்னை இங்கு அழைத்ததின் நோக்கம்?" கேள்வியாய்க் கேட்டாள் மாளவிகா

"எனக்கு உன்னிடம் ஒரு உதவி வேண்டும்"

"என் கணவரைத் தவிர வேறு எந்த உதவியும் செய்ய நான் தயாராக உள்ளேன் மாலு"

"ச்சே ச்சே... இனி உன் அருளை அடைய நினைக்க மாட்டேன்... கடவுள் எனக்கு நல்ல தண்டனையை அளித்து விட்டார்... இனி எப்படி யாருடனும் என்னால் வாழ முடியும்? குடும்ப வாழ்க்கைக்கு தகுதி இல்லாதவள் ஆகி விட்டேனே... என்னால் இனி ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க முடியாதே"

"கவலைப்படாதே மாலு... ஏதாவது ஒரு வழி இருக்கும்... எந்த பூட்டுக்கும் சாவி என்று ஒன்று இருக்கும் மாலு"

"அந்த சாவியைத் தான் உன்னிடம் கேட்கிறேன்... எனக்கு உதவி செய்வாயா?"

"என்ன வேண்டும் மாலு?"

"எனக்குக் குழந்தை வேண்டும்... அம்மாவாக அப்பாவாக, நானே அதைக் கொஞ்சி கொஞ்சி வளர்க்க வேண்டும்... என்னைப் போல அல்லாமல் நல்லவளாக வளர்க்க வேண்டும்... எனக்குக் கிடைக்காத எல்லாம் அவளுக்குக் கிடைக்கும்படி வளர்க்க வேண்டும்... என் உயிராய் வளர்க்க எனக்கு ஒரு குழந்தை வேண்டும் மாளவிகா... உதவி செய்வாயா?"

"நிச்சயமாக மாலு... நான் உதவுகிறேன் உனக்கு... ஆனால் நீ மறுதிருமணத்தைப் பற்றியும் கன்சிடர் பண்ண வேண்டும்"

இவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டு இருந்த அருளுக்கு, வழக்கம் போல அவசர புத்தி வேலை செய்தது... 'என்னிடம் ஒரு வார்த்தையும் கேட்காமல் எனக்குப் பிறக்கும் குழந்தையை அவளுக்குக் கொடுப்பேன் என்று வாக்குக் கொடுக்கிறாள்... மெத்தப் படித்தவள், எனக்கே லோன் தர உதவி செய்தவள், பணக்காரி அல்லவா... சும்மா பெயருக்குப் பின் போடுவதற்கு மட்டுமே நான் தேவை... என்னை எதற்கும் உதவாதவன் என்று நினைத்து, இவள் உதவி செய்து இருக்கிறாள்... கேவலம், யாரென்றே தெரியாத ஒரு பெண் போட்ட பிச்சையில் நான் உயர்ந்துள்ளேன்' ஏதேதோ எண்ணி குழம்பிக் கொண்டவன், கோபமாக அவ்விடத்தைக் காலி செய்தான்...

இங்கு பாப்பாவோ, "எனக்குத் தெரிந்த சமூக ஆர்வலர் மேடம் ஒருவர் இருக்கிறார்... அவர்கள் மூலம் முயன்று உனக்கு எல்லா ஃபார்மலிட்டியும் முடித்துத் தருகிறேன்... இந்த உதவியை என்னால் நிச்சயமாக செய்ய முடியும் மாலு" உற்சாகமாகக் கூறினாள் பாப்பா...

"எப்படி மாளவிகா என்னை மன்னித்தாய்? ஏன் உதவி செய்கிறாய்? நான் உனக்குத் துரோகம் செய்த துரோகி... உன் சந்தோஷத்தைப் பறித்தவள்"

"எனக்கு நீ என் தோழி... ஒரு தோழியாக உனக்கு உதவி செய்வது என் கடமை... வேறு ஏதேனும் உதவி வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் அழைத்துக் கொள்... உனக்கு உண்மையான நட்பாக நான் இருக்கிறேன்... மனதைப் போட்டுக் குழப்பாதே... ஆபரேஷன்க்கு ரெடியாகு... அருள் பணம் தரவில்லை என்றால் என்னிடம் கூறு... நான் அனுப்புகிறேன்... இனி புதிய மாலுவாக, என் தோழியாக உனக்குக் காத்திருக்கிறேன்" என்றவாறு மாளவிகாவும் கிளம்பி வீட்டுக்குச் சென்றாள்...

பாப்பாவின் மனம் ஏனோ அதிக சந்தோஷமாக இருந்தது, மாலுவின் மனமாற்றத்தில்...

அன்று இரவு நெடுநேரம் கழித்து, குடித்து விட்டு வீட்டுக்கு வந்தான் அருள் பிரசாந்த்... அவன் நிலையைப் பார்த்ததும், ஓடிச்சென்று அவனைப் பிடித்தவள், தங்கள் அறைக்குக் கூட்டி வந்து,

"என் மேல கோபம்னா சொல்லுங்க அருள்... ஏன் புதுபுது பழக்கங்களுக்கு போறீங்க... ஏன் இப்படி பண்றீங்க? என்ன பிரச்சினை உங்களுக்கு" கேட்டுக்கொண்டு இருக்கும் போதே அவளைப் படுக்கையில் தள்ளி, அவள் மீது படர்ந்தான் அருள்...

"அருள்... ப்ளீஸ்... என்ன பண்றீங்க? விடுங்க... ப்ளீஸ்... எந்திரிங்க" என எவ்வளவோ முயன்றும், அவனைத் தள்ளிவிட முடியாமல் திண்டாடினாள் பாப்பா...

அவள் தள்ளிவிட முயற்சிக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும், அருளின் பிடி இறுகியது... குடிபோதையில் தன்னவளை மனம்நிறைந்த வெறுப்புடன் கலந்தான் அருள்... காதலோடு வரவேண்டியவன், இப்படி குடிபோதையில் தன்னை சீரழிப்பதைப் பார்த்து மௌனமாக கண்ணீர் விட்டாள் பாப்பா...

அவள் அருகில் படுத்தவன், அவளது கரங்களை இறுகப் பிடித்திருந்தான்... கலைந்த ஆடைகளை சரிசெய்யவும் தோன்றாமல், வெறித்து நோக்கிக் கொண்டு இருந்தாள் பாப்பா...

"ஏண்டி... ஒரு வார்த்தை, அப்போவே வந்து அந்த பெயின்ட்டிங் நான் வரைஞ்சது... நான் தான்டா உன் ஆளுனு சொல்லி இருக்கலாமே... ஏன்டி என்னை அவகிட்ட தள்ளி விட்டுட்டே... இல்லைடி, நீ என்னை காதலிக்கவே இல்லை... இல்லைனா என்னை விட்டுக் கொடுத்துருப்பியா?

ஒவ்வொரு நாளும் மாலினியைப் பார்க்கும் போதெல்லாம் தோணும்... இவ எனக்கு சொந்தமானவள் இல்லைனு... பிரேக்அப் பண்ணிடலாம்னு நினைப்பேன்... வீட்டுக்கு வந்ததும் அந்த ஓவியம் அப்படியே என்னை மாற்றி விட்டு விடும்...

நீ சொல்லாத கதை எல்லாம் அந்த ஓவியம் சொல்லுச்சுடி... உன்மேல உயிரையே வச்சிருக்கிறேன்னு அந்த ஓவியம் என்னை வாழ வச்சுதுடி... ஆனால் அந்த ஓவியம், நீ விரும்புற பொண்ணு மாலினி இல்லைனு மட்டும் என்கிட்ட சொல்லவே இல்லைடி...

நான் என்னடி பாவம் பண்ணேன்... சும்மா என் வாழ்க்கைய நான் பார்த்து போயிட்டு இருந்தேன்... நீதானடி இடையில வந்தே... நீதான் இடையே வந்துட்டு, எவளோ ஒரு பேய்க் கையில என்னைக் கொடுத்துவிட்டு போயிட்டே... ஏன்டி? என்னை பாவமாவே நினைக்கலயா?

அந்த கல்யாண மண்டபத்துல முதன்முதலா உன்னைப் பார்த்ததுமே, என் தேவதை இவதான்னு தோணிச்சு... உன்னைக் காயப்படுத்தறதா நினைச்சு, என்னை நானே காயப்படுத்திக் கிட்டேன்... அப்பக்கூட உனக்குச் சொல்லத் தோணலைல, உன் மனசுல இருக்கிறது நான்தான்னு...

நீ என் கன்னத்துல அறைந்து, ஏய் இடியட்... அவ இல்லை நான் தான் உன்னை உயிருக்குயிரா லவ் பண்றேன்னு சொல்லி இருந்தா சந்தோஷப்பட்டு இருப்பேன்... ஆனால் நீ, எனக்கு பிறக்கிற குழந்தையை அவளுக்குக் கொடுக்க நினைக்கிறே"

அதுவரை அமைதியாக கேட்டுக்கொண்டு இருந்தவளின் முகம் மாறியது... "என்ன சொல்றீங்க அருள்? யார் அப்படிச் சொன்னது?"

"யார் சொல்லனும்? எனக்கேத் தெரியும்... என் காதால நானே இன்னைக்கு ஹாஸ்பிடல்ல கேட்டேன்"

"நீங்க தப்பா புரிஞ்சுகிட்டீங்க அருள்... அங்கே என்ன நடந்துச்சுனா..."

"இன்னும் என்னை முட்டாள்னு நினைக்கிறீயா பாப்பா?"

"அருள்..."

"எனக்கு லோன் கிடைக்க ஹெல்ப் பண்ணது யாரு?"

"அது..."

"சயின்டிஸ்ட் மேடமாம்... மேனேஜர் சொல்றான்... உனக்கு சல்லிக்காசுக்கு துப்பு இல்லை... அந்த மேடமுக்காகத் தான் லோன் கொடுத்தேன்னு... நான் உன்கிட்ட உதவி கேட்டேனா?"

"இல்லை அருள்... ஒரு சின்ன சைன் மட்டும் தான்"

"எதுக்கு? எனக்கு பிச்சை போடுறதுக்கா? நீ போட்ட பிச்சைக்கு நான் பதில் கொடுத்துட்டேன்... இப்ப இன்னைக்கு ஒருநாள் மனைவியா என்கூட வாழ்ந்துட்டே... இனி நீ யாரோ? நான் யாரோ? அதுஎப்படி? என்கிட்டவே சொல்லாமல், என் புள்ளைய அவளுக்குத் தூக்கிக் கொடுப்பீயா? நான் புள்ளையே தரமாட்டேன்... நீ எதைத் தூக்கிக் கொடுக்கிறே என்று நானும் பாக்கறேன்...
ச்சே... அடுத்த வாரம் உன் பர்த்டே வருது... உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு பேசாத மாதிரி நடிச்சேன்... கடைசில நிஜமாவே பேச முடியாதபடி பண்ணிட்டேல நீ... நல்லா இரு" திரும்பிப் படுத்தவன் போதையின் மயக்கத்தில் தூங்கியும் போனான்...
பாப்பாவுக்கு அந்த இரவு தூங்கா இரவாகிப் போனது...

அவன் கூறிய வார்த்தைகளில் அவனது காதலை உணர்ந்தவள், 'சிறிது காலம் வெளிநாட்டுக்குச் சென்று வரவேண்டும்... காலம்தான் அனைத்துக் காயங்களையுய் ஆற்றும்' என மனதில் முடிவெடுத்துக் கொண்டாள்...
 
Latest Episodes

Advt

Advertisements

Top