16 நிழலின் காதல்

#1
அடுத்த நாள் காலை கவலையுடன் விடிந்தது இருவருக்கும்... அருளின் மனதில் குற்ற உணர்ச்சி தலைவிரித்து ஆடியது...
'நான் எப்படி இப்படி ஒரு தவறு செய்தேன்? எனக்கு அவள் மீது கோபம்தான்... ஒத்துக் கொள்கிறேன்... ஆனால் ஏன் அவளுடன் அப்படி நடந்து கொண்டேன்? என்னைப் 'பொறுக்கி' என்று நினைத்து இருப்பாளா? 'பெண்பித்தன்' என்று நினைத்து இருப்பாளா? ஆம் நான் பித்தன் தான்... நிழல் எது நிஜம் எது என்று புரியாமலேயே காதலித்திருக்கிறேன்... அவளோ நிழலாக என்னுடனே இருந்து இருக்கிறாள்... எனக்கேத் தெரியாமல் எனக்கு உதவி இருக்கிறாள்... ஆனால் என்னால் ஏன் ஏற்றுக் கொள்ள முடியவில்லை?
ஒருவேளை அப்பா கூறுவது போல், பெண்களைக் கீழாக நினைக்கிறேனோ? ஆனால் ஒரு பெண்ணிடம் உதவி வாங்கி வாழ்க்கை நடத்தி இருப்பது, கேவலம் தானே...

அவள் யாரோ ஒரு பெண் இல்லையே... என் மனைவி தானே...
ஐயோ! மனைவியா? 'மனைவி என்றாலும் விருப்பம் இல்லாமல் தொடக்கூடாது' என்று சித்தாந்தம் பேசும் இந்தக் காலத்தில், அவளை நான் நேற்று இரவு... நான் 'காமக்கொடூரனோ'?

என்னை அறியாமல் தான் தவறு செய்தேன்... அவள் எங்கள் குழந்தையை மாலுவிடம் கொடுப்பதாகக் கூறினாளே... அதனால் தான் அப்படிச் செய்தேன்
வேண்டாம்... இனி இவ்வாறு யோசித்து யோசித்து வாழ்க்கையைத் தொலைக்க வேண்டாம்... நான் அவளிடம் நேற்று நடந்த முறை தவறு தான் என்றாலும், அவள் என்னிடம் கேட்காமல் குழந்தையைக் கொடுப்பேன் என்று கூறியது 'மகாபாவம்'... இவளை இனி என் வாழ்க்கையில் இருந்து துரத்தப் போகிறேன்
இப்போதே போய் 'டைவர்ஸ்' பிராசஸ் ஆரம்பிக்கிறேன்...

இவளைத் தலைமுழுகி விடலாம்... இவள் சென்று விட்டால் என் வாழ்க்கை? 'என் லவி' இல்லாமல் என்னால் இருக்க முடியாதே...
அவள் உன் லவி அல்ல... நீ அவளை விடுவித்தால், அவள் வாழ்க்கையாவது நன்றாக இருக்கும்... ஆமாம் அதுதான் சரி... நான் அவள் வாழ்க்கையில் இருந்து போய்விட்டால் அவள் நன்றாக இருப்பாள்' முடிவெடுத்தவன் வழக்கறிஞரைத் தேடிச் சென்றான்...

அவன் திரும்பி வீட்டுக்கு வரும்போது வொயிட் போர்டு மீண்டும் இருந்தது... அதில்,

"சிறிது நாட்கள் தனிமை தேவைப்படுவதால், நான் US செல்லப் போகிறேன்... visa processக்காக வெளியே செல்கிறேன்... குடும்பத்தினரிடம் நீங்களே சொல்லி விடுங்கள்
-மாளவிகா"
என்று எழுதப்பட்டிருந்தது...

இதுவரை என்ன எழுதினாலும், 'மாளவிகா அருள்பிரசாந்த்' என்று எழுதுபவள் இன்று வெறும் மாளவிகா என்று மட்டும் எழுதி இருப்பதைக் கவனிக்கத் தவறவில்லை பிரசாந்த்...

குடும்பத்தினரிடம் சென்றவன், தான் டைவர்ஸ் அப்ளை பண்ண ஆரம்பித்து இருப்பதாகவும், அவள் வெளிநாடு செல்ல முயற்சிப்பதாகவும் கூறவும், வீடே துக்க வீடாய் மாறியது

"நான் படிச்சு படிச்சு சொன்னேனேடா, அவ என் பொண்ணு... அவளைக் கஷ்டப் படுத்தாதே என்று... ஏன்டா கேட்கலை... நீ என்ன மிரட்டினாய்? அவள் உன்னை விட்டு செல்வதற்கு?" பன்னீர் கேட்கவும்

"நான் தான் எனக்கு கல்யாணம் வேணாம்னு எவ்வளவோ சொல்லியும் கேட்கலையே நீங்க... இப்போ ஏன் இப்படி கத்தறீங்க?" பதிலுக்கு கத்தினான் அருள்...

"இவ்வளவு நாட்கள் என்னை எதிர்த்து பேசினாலும் குரல் உயராது உனக்கு... இன்னைக்கு என்னை விட அதிகமாக கத்துறே நீ! ஏன் தெரியுமா பிரசாந்த்? அந்தப் பொண்ணை நீ காதலிக்கிறே.. அவள் பிரிவைத் தாங்க முடியாமல் தவிக்கிறே"

"சும்மா கற்பனை பண்ணாதீங்க... எப்பவுமே எனக்கு ஒரே கருத்து தான்... பெண்கள் மோசமானவர்கள்"

"அப்போ நான் பொம்பளை இல்லையா?" சோர்வாகக் கேட்டார் இந்திராணி

"யாருக்குத் தெரியும்? எனக்கு நீ நல்லவள் தான்" அசால்ட்டாக சொல்லி விட்டு, எழுந்து உள்ளே சென்றான் பிரசாந்த்...

பன்னீர், ஆறுமுகத்தையும் ஜோதியையும் வரச்சொல்லி நடந்ததைக் கூற, கண்கலங்கினார் ஆறுமுகம்... "இவனுடன் என் வீட்டில் வாழாவெட்டியாக இருப்பதற்கு, அவள் வெளிநாட்டுக்குச் செல்வதே உத்தமம்" ஆறுதல் கூறினார் பன்னீர்...

"இதுவரை எங்கள் மகள் ஒரு முடிவு எடுத்தால், மிகச் சரியாக இருக்கும்... இப்பவும் நான் நம்பறேன் என் பொண்ணை..." கண்ணீரோடு கூறினார் ஜோதி

அதற்குள் வீட்டுக்கு வந்தவள், இவர்கள் அனைவரையும் எதிர்பார்த்து இருந்ததால், அமைதியாக அவர்களிடம்
"எனக்கு USல ஒரு ஜாப் ஆஃபர் பண்ணாங்கல... அங்கே ஜாயின் பண்ணப் போகிறேன்... ஃபோர் டேய்ஸ்ல கிளம்பிடுவேன்" பொதுவாகச் சொல்ல,

"உன் இஷ்டப்படியே செய்மா... உன் விருப்பம் தான் உன் வாழ்க்கை" கலங்கிய படியே கூறினார் ஜோதி

"அம்மா" என்று கட்டிப்பிடித்து அழுதவள், இத்தனை நாட்கள் வருத்தத்தை ஒரே மூச்சில் அழுது முடித்தாள்... அவள் அழுகையின் குரல், அறையினுள் அமர்ந்து இருந்த, அருளின் மனதைப் பிசைந்தது... 'ஐயோ? தப்பு பண்ணிட்டியே பிரசாந்த்... ராணி மாதிரி வச்சு வாழ வேண்டிய பெண்ணை, இப்படி பண்ணிட்டியே... என் லவி அழறா... என்ன பண்றது? செல்லம் நீ அழாதேமா... நான் தான் உன் மனசைப் புரிஞ்சுக்காம தப்பு பண்ணிட்டேன்' ஊமையாக அழுதான் பிரசாந்த்...

அதன்பின் பாப்பா பொதுவாக வீட்டினுள் இருப்பதே இல்லை... எங்கே செல்கிறாள்? என்ன செய்கிறாள்? யாருக்கும் தெரியாது... அவள் கிளம்ப வேண்டிய நாளும் வந்தது... எந்தப் பிறந்த நாளை அவன் எதிர் நோக்கி காத்திருந்தானோ? அதே நாள் அவள் அவனை விட்டு பிரியும்படி செய்தது விதி...

அன்றைய நாளுக்குப் பிறகு இருவரும் பேசிக்கொண்டதே இல்லை... அந்த வொயிட் போர்டிலும் எதுவுமே இல்லை... அவர்கள் மனதைப் போல அந்த போர்டும் வெறுமையாக இருந்தது...

லக்கேஜ் பேக் பண்ணி கிளம்பி இருந்தவளை அறையில் வந்து பார்த்தான் பிரசாந்த்... இதுவரை சேலையில் மட்டுமே பார்த்து இருந்த அவனது மனைவி, இன்று வொயிட் ஷேர்ட் அன்ட் ப்ளூ ஜீன்ஸ் போட்டு ஃப்ரீ ஹேரில் இருந்தாள்... ஆழ்ந்து நோக்கினான் அவளை! சிறிய நெற்றி, வில் போன்ற கண்கள், கொஞ்சம் சப்பை மூக்கு ஆனாலும் அழகாக இருந்தது, அழகான உதடுகள்... உதட்டுச்சாயம் எதுவும் இல்லை... முகத்தில் ஒரு டாட்ஸ் கூட இல்லை... பிழை இல்லா முகம் சொல்லிக் கொண்டான் மனதில்... கவிதை எழுதும் கவிஞன் அல்லவா?! தன் முன்னே நின்றவளை கவிதையாக்கினான் அருள்...

'ச்சே என்ன நினைப்பு இது... நாங்கள் பிரியப் போகும் இந்த நிமிடம் இவளை வர்ணித்துக் கொண்டு இருக்கிறேனே... என்ன ஆயிற்று எனக்கு?' தன்னை மீட்டெடுத்தான் அருள்...
மீண்டும் அவளை நோக்கினான், அவளது கழுத்தில் தாலி தெரிகிறதா என பார்க்க... என்ன முயன்றும், அவள் போட்டிருந்த சட்டையும், விரித்து விட்டிருந்த கூந்தலும் அதைக் காண்பிக்கவேயில்லை... மனதினுள் ஏதோ ஒரு வருத்தம்... மிகச்சிறியதாக தோன்றிய வலி மனதை நிறைத்து, பேசவிடாமல் தொண்டை அடைத்தது...

மெதுவாக "அருள்" என அவள் அழைக்கவும்,

"சொல்லு லவி"

"சைன் பண்ணிட்டேன் டிவோர்ஸ் பேப்பர்ஸ்..."

"ஆங்"

"நான் போறேன்"

"ம்ம்ம்ம்"

"உடம்பைப் பார்த்துக்கோங்க"

"நீயும் தான்"

"நீங்க வேற கல்யாணம் பண்ணிக்கோங்க... நானும் என்னை மாத்திக்கிறேன்... யாரையாவது கல்யாணம் பண்ண டிரை பண்றேன்"

"ம்ம்ம்ம்"

"நான் போறேன்" கிளம்பியவளை இறுக்கி அணைத்தவன் அவள் நெற்றியில் இதழ் பதித்தான்...
"ஹேப்பி பர்த்டே பாப்ஸ்" அருள் கூறவும், அவள் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டு இருந்தது

"சாரி... ஒரு எமோஷனல்ல"

"பாய் அருள்" அவனைப் பேச விடாமல் இடத்தைக் காலி செய்தவள் நேராக ஏர்போர்ட் சென்றாள் பன்னீருடன்...

இங்கு சரவணன் ஒரு வாரம் மினிஸ்டர் பாதுகாப்புக்கு சென்று வந்தவன், வீட்டுக்கு வந்தான் பாப்பாவின் கையால் சாப்பிட... நடந்ததை அறிந்தவன் துடிதுடித்து போனான்...

"பிரசாந்த் பாப்பா நிச்சயமா அவளாகவே சென்று இருக்க மாட்டாள்... என்ன நடந்தது? எதையும் மறைக்காமல் சொல்லு"

"உன் அருமைத் தங்கை எங்கள் குழந்தையை மாலினிக்கு தத்து கொடுக்கப் போவதாக வாக்குக் கொடுத்தாள்... நான் பார்த்து விட்டேன்... அவளாகவே விலகி விட்டாள்"

"நிச்சயமாக இருக்காது... அந்த மாலினி ஏதோ விளையாடலாம் அல்லவா?"

"உன் தங்கை அப்படித்தான் கூறினாள்... எது என்றாலும் அவளிடம் கேள்... என்னை விட்டு விடு... ப்ளீஸ்" குரல் தழுதழுக்க கண்ணீர் கண்களில் தேங்கி நிற்க, அருள் கூறினான்

அருளின் நிலையைப் பார்த்தவன் மனமிறங்கி, "வருத்தப் படாதே பிரசாந்த்.. பாப்பாக்கு உன்னை மட்டும் தான் பிடிக்கும்... சீக்கிரமே வந்து விடுவாள்"

வெற்றுச் சிரிப்பை சிந்தியபடி, "உன் தங்கை என்ன கூறினாள் தெரியுமா சரவணா? நீங்கள் வேறு திருமணம் செய்து கொள்ளுங்கள்... நானும் செய்து கொள்கிறேன் என்றாள்... அவளை ஏன் என் வாழ்வில் கொண்டு வந்தீர்கள்? இதுதான் பாசம் இதுதான் காதல் என்று உணர்த்தி விட்டு, அதை பறித்தும் சென்று விட்டாள்... நிழலில் இருந்தவள், நிழலாகவே இருந்து இருக்கலாம்... இப்படி நிஜத்தில் வந்து புரியவைத்து மீண்டும் நிழலாக போய்விட்டாள் சரவணா..."

"பிரசாந்த்... அவளிடம் நீ பேசவில்லை... அவளை வெறுத்தாய்... பின் எப்போது நீங்கள் சேர்ந்தீர்கள்? பாப்பா என்னிடம் அதுபோல எதுவும் கூறவில்லை... ஆனால் நீ கவிதையாக பேசுகிறாய்... அழுகிறாய்"

"சொல்லத் தவறி விட்டேன் சரவணா... அவளுக்கு புரியும் என்று நினைத்து ஏமாற்றம் கொண்டேன்... ப்ளீஸ்... தனிமையில் விடு என்னை"
தலையைச் சொறிந்தபடி வெளியேறினான் பிரசாந்த்...

அதன்பின் இரு நாட்கள் கழித்து, தினமும் காலை பிரசாந்த் எழுந்து வரும் போது, பன்னீரும் இந்திராணியும் அமர்ந்து தங்கள் மருமகளிடம் பேசிக்கொண்டு இருப்பதைப் பார்ப்பான்... அமைதியாகச் சென்று விடுவான்...

ஆனால் அன்று பேசி முடித்ததும், பன்னீரின் முகம் சந்தோஷத்திலும் இந்திராணியின் முகம் வெளிறியும் இருப்பதைப் பார்த்தவன், சாப்பிடும் போது மெதுவாக,

"அம்மா ஏதாவது பிரச்சனையா?" எனக் கேட்டான்...

அமைதியாக அவனையே நோக்கிய தாய், "எங்க மருமகளை நாலு வருஷமா ஆஸ்திரேலியவில லவ் பண்ணவரு, இப்போ அமெரிக்கால இருக்காராம்... கல்யாணம் பண்ணிக்கறீயானு கேட்டதுக்கு, ஒரு வாரம் டைம் கேட்டு இருக்கா... அவ வீட்ல ஓகே சொல்லிட்டாங்க... இங்க உன் அப்பாவும் சந்தோஷம்னு சொல்லிட்டாரு... இன்னைக்கே ஓகேனு சொல்றேன்னு சொன்னா..."

"நானும் வாழ்த்துக்கள் சொன்னேன்னு சொல்லுமா" அமைதியாகக் கூறி எழுந்து சென்றவனை மனம் நிறைந்த வலியுடன் பார்த்தார் இந்திராணி... தாய்க்கு தெரியாதா மகனின் மனம்?
 
Advt

Advertisements

Top