17 நிழலின் காதல்

#1
மாளவிகா திருமணத்திற்கு பிரகாஷ் வாழ்த்துக் கூறியதாக சொல்லச் சொல்லி ஒன்றரை மாதங்கள் கடந்து விட்டது... இடையே அந்தப் பையன் 'டேவிட்' அடிக்கடி பன்னீர் மற்றும் இந்திராணியுடன் பேசினான், அப்பா அம்மா என்று... மாளவிகாவுக்காகவே தமிழ் படித்ததாக வேறு கூறினான்...

இந்திராணிக்கு முதலில் ஏற்றுக்கொள்ள கடினமாகத் தான் இருந்தது, பின்னர் 'ஒருவேளை பாப்பா என் மகளாக இருந்தால், திருமணம் செய்ய வேண்டும் என்று தானே நினைத்திருப்போம்' என எண்ணியவர், மனதை மாற்றிக் கொண்டார்...

இந்த ஒன்றரை மாதத்தில் அவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டது... இருவரும் ஒரே வீட்டில் வசிக்கின்றனர்... இருவரும் இணைந்தே போன் பேசுவர் இந்திராணி மற்றும் பன்னீரிடம்...
டேவிட் அன்பாக தங்களை அம்மா அப்பா என்றழைக்கும் போதெல்லாம் இவர்கள் இருவருக்கும் மகிழ்ச்சியாக இருக்கும்... தங்கள் மருமகளின் வாழ்க்கை நன்றாக அமைந்து விட்டது என்று எண்ணி சந்தோஷப்படும் அதே வேளையில், இப்படி ஒரு பெண்ணை பிரசாந்த் இழந்து விட்டானே என்று வருத்தப்படவும் செய்தனர்...

அன்று பிரசாந்த் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது, கையில் குழந்தையுடன் வந்தாள் மாலினி... 'இவள் இங்கு ஏன் வருகிறாள்?' என பிரசாந்த் யோசிக்கும்போதே,
"வாம்மா மாலினி... இதுதான் தீப்தி குட்டியா?! வாங்க வாங்க வாங்க... தாத்தா கிட்ட வாங்க" ஆசையோடு தூக்கினார் பன்னீர்...

'தீப்தியா? இது யாரு?' என யோசித்துக் கொண்டு இருக்கும் போதே, இந்திராணி
"நீ போன்ல சொன்னாலே போதாதா? குழந்தையை அலைகழிக்கனுமா? பாப்பா சொன்னாமா... ரொம்ப சந்தோஷம்... இப்போ உனக்குன்னு தீப்தி வந்துட்டா... அவளுக்காக நீ வாழனும்... தனியா வாழ்க்கையை கடக்கறது ரொம்ப கஷ்டம்... அதையெல்லாம் சகிக்கனும்... நல்ல முறையில் குழந்தையை வளர்க்கனும்" கண்டிப்பு கலந்த குரலில் கூறினார்...

"நிச்சயமாக அம்மா... தீப்தி பெயரிடும் விழாவுக்கு நீங்க கண்டிப்பாக வரணும்"

சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தவள், மெதுவாக பிரசாந்த்தின் அறைக்குச் சென்றாள்...

"பிரசாந்த்... இவங்க எல்லாருமே ஏதோ மாளவிகா கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருக்கிறதா சொல்றாங்க... நிச்சயமாக இருக்காது... அவளுடைய சந்தோஷம் உயிர் எல்லாமே நீதான் அருள்... அது நிச்சயமா உண்மையாக இருக்காது"

"அது உண்மையாக இருந்தால் எனக்கென்ன? பொய்யாக இருந்தால் எனக்கென்ன?"

"நீ மாளவிகாவைத் தவறாகப் புரிந்து கொண்டு இருக்கிறாய் என்று நினைக்கிறேன்"

"அதுசரி... உடன் பழகுபவள் நிழலா நிஜமா எனத் தெரியாத பைத்தியம் தானே நான்... எனக்கு எப்படி புரியும்?"

"உனக்கு மாளவிகா மேல் என்ன கோபம் அருள்?"

"நன் ஆஃப் யுவர் பிஸினஸ்"
மாலினியின் முகச்சுருக்கம் அந்த பதிலை எதிர் பார்க்கவில்லை எனக் கூறியது... தன்னிடம் வழியாமல், தனக்காக தன் வாழ்க்கைக்காகத் தானே பேசுகிறாள் என்ற எண்ணம் தோன்றியதும்
"சாரி" என்றான் அருள்...

"இட்ஸ் ஓகே... ஒன்னு புரிஞ்சுக்கோ அருள்... இப்ப எனக்குன்னு என் பொண்ணு இருக்கிறாள்... எந்த காலத்திலும் உன் வாழ்க்கையில் தலையிட மாட்டேன்... மாளவிகாவின் பிரெண்டா உன்கிட்ட கேக்கிறேன்... என்ன பிரச்சனை?"

"என்கிட்ட ஒரு வார்த்தை கூட கேட்காமல், அன்று மருத்துவமனையில் எங்களுக்குப் பிறக்கும் குழந்தையை உனக்குத் தருவதாக வாக்குக் கொடுத்தாள் உன் தோழி... கேட்டதும் நொறுங்கிப் போனேன்"

"முட்டாள்"

"ஏய்... யாரை முட்டாள் என்கிறாய்?"

"நீ தான் முட்டாள்... வடிகட்டிய முட்டாள்... அவள் எனக்கு குழந்தைக்கு ஏற்பாடு பண்ணித் தருகிறேன் என்று தான் கூறினாளே ஒழிய, உங்கள் குழந்தையைத் தருவதாகக் கூறவும் இல்லை, நான் உங்கள் குழந்தையைக் கேட்கவும் இல்லை"

"நீ என்னக் கூறுகிறாய்?"

"அவள் அவளுக்குத் தெரிந்த சமூக ஆர்வலரின் மூலம் இந்தக் குழந்தையை ஏற்பாடு பண்ணிக் கொடுத்தாள்... ஃபார்மலிட்டிஸ் முடிந்து குழந்தையை வாங்கி விட்டேன்... மாளவிகாவின் மேல் எந்தத் தவறும் இல்லை" கூறிவிட்டு வெளியே சென்றாள் மாலினி

'தவறிழைத்து விட்டேனே... ஐயோ... அவளிடம் ஒரு வார்த்தை கேட்டு இருக்கலாமே... என் அவசர புத்தியை என்ன சொல்வது? இப்போது சென்று விட்டாளே... என்னை விட்டுத் தூரமாகச் சென்று விட்டாளே... அவளைப் பார்க்க முடியாத இடத்திற்குப் போய்விட்டாளே" ஊமையாக அழுதான் பிரசாந்த்

"பிரசாந்த்... பாப்பா போன் பண்ணுச்சுடா... கன்சீவா இருக்காளாம்... எனக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா?" உச்சக்கட்ட சந்தோஷத்தில் கத்தினான் சரவணன்...

"உன் தங்கைக்கு வாழ்த்துக் கூறியதாக கூறிவிடு" உணர்வுகள் துடைத்த குரலில் கூறினான் பிரசாந்த்...

"சாரி பிரசாந்த்... ஒரு சந்தோஷத்துல உன்கிட்ட வந்து சொல்லிட்டேன்... உனக்கு அது வருத்தமாக இருக்கும்னு நினைக்கவில்லை" சரவணன் கூற, வெற்றுச்சிரிப்பைச் சிந்தினான் பிரசாந்த்...

வாழ்க்கையில் நம்மை உயிராக நேசிக்க ஒருத்தர் கிடைப்பதே கடினம்... அதைத் தவற விட்டால்?! அப்படித்தான் இருந்தது பிரசாந்த்தின் வாழ்க்கையும்... பிஸினஸ் எப்போதும் போல ஏறுமுகமாகத் தான் இருந்தது... ஆனால் பணக்காரன் என்ற அகந்தையோ, பெண்கள் மோசம் என்ற எண்ணமோ இப்போது துளியும் இல்லை பிரசாந்த்க்கு...
சரவணனுக்கு நண்பனின் மாற்றம் பயத்தைத் தான் கொடுத்தது... கிடைக்காத பாப்பாவுக்காக ஏங்குகிறானோ? என்ற எண்ணம் தோன்றியதும் அல்லாமல், பாப்பாவின் வாழ்க்கையை சிக்கலாக்கி விடுவானோ என்ற பயமும் எழுந்தது...


மாலினியின் வாழ்க்கை நல்ல முறையில் மாற்றம் அடைந்தது... அவள் இழந்ததாக நினைத்த அனைத்தும் கொடுத்து, தீப்தியை வளர்க்க ஆரம்பித்தாள்... அடிக்கடி இந்திராணியுடன் பேசி உறவையும் வளர்த்துக் கொண்டாள்...
தன் மகனைக் குறித்த வருத்தத்தில் இருந்த இந்திராணிக்கு மாலினியும் தீப்தியும் தான் ஆறுதல்... மாலினியை அருள் பிரசாந்த்க்கு திருமணம் செய்து வைக்கலாமா? என பாப்பாவிடம் கேட்டு, பாப்பாவின் சந்தோஷமான ஒப்புதலையும் பெற்றுக் கொண்டார்... பன்னீரிடமும் சம்மதத்தை வாங்கியவரால், மாலினியின் சம்மதத்தை வாங்க முடியவில்லை...

"எனக்கு அருள் மீது ஒரு காலத்தில் காதல் இருந்தது... இப்போது என் முழு காதலும் தீப்திக்கு மட்டுமே" உறுதியாக மறுத்து விட்டாள் மாலினி...

இதைப்பற்றி பிரசாந்த்திடம் பேசும்போது, அமைதியாகவே இருந்தான் பிரசாந்த்... பிரசாந்த்தின் அமைதியை சம்மதமாக எடுத்துக் கொண்டார் இந்திராணி...

தினமும் பாப்பாவிடம் புலம்புவதையே வாடிக்கையாக வைத்துக் கொண்டார்... "பிரசாந்த் கூட இப்போ மாலினியை கல்யாணம் பண்றதுக்கு ஒத்துக்கிட்டான்... அவதான் பிடி கொடுக்க மாட்றாள்" என்று... அப்போதும் பிரசாந்த் அமைதியாகவே இருந்தான்...

சில சமயங்களில், அந்த இடத்தைக் கிராஸ் செய்யும்போது, பாப்பாவின் முகத்தைத் தள்ளி நின்று பார்ப்பான்... 'இப்போது தான் அவள் முகம் முழுமையடைந்து இருக்கிறது... எவ்வளவு மகிழ்ச்சியாக கலகலவென்று இருக்கிறாள். அவளது வாழ்க்கையைக் கெடுக்க நினைத்தேனே' என நினைத்து இப்போது அவள் சந்தோஷமாக இருப்பதற்காக ஆறுதல் பட்டுக்கொள்வான்...

யாருக்கும் பிடி கொடுக்காமல் நேரமும் காலமும் கடந்தது... இந்த இடைப்பட்ட காலத்தில், அமைதி மட்டுமே எஞ்சி நின்றது அருளுக்கு... எதிலும் அமைதி, எங்கும் அமைதி... நோக்கம் முழுவதும் பிஸினஸில் மட்டுமே... அப்போது தான் மீண்டும் மோனிக்கா வந்தாள் அருளின் முன்...

"உங்கள் நிறுவனத்தில் 5 மாதங்கள் வேலை செய்கிறேன்... நான் யார் என்று கூடத் தெரியவில்லையா மிஸ்டர்.அருள்பிரசாந்த்?"

"நீ... நீங்கள்?"

"மோனிக்கா... ஏழு மாதங்களுக்கு முன், உங்கள் மனைவியாகப் போகிறவள் என்ற கனவில் இருக்கும் போது, என்னைக் கடத்தி அந்தப் பாக்கியத்தைப் பெற முடியாதபடி தடுத்து..."

"சாரி... என்னால நீங்கள் கஷ்டப்பட்டு இருப்பீர்கள்..."

"ஆனால் இப்போது உங்களாலே தான் நான் நன்றாக இருக்கிறேன்"

"என்ன கூறுகிறீர்கள்?"

"உங்களுக்கு திருமணம் முடிந்து விட்டது என்று தெரிந்து, இனி யார் என்னைத் திருமணம் செய்வார்கள்? என்ற கவலையில் இருக்கும்போது, உங்கள் மனைவி எங்களைத் தேடி வந்தார்கள்... நடந்த தவறுக்கு வருத்தம் தெரிவித்தார்கள்... இனி என் மகளை யார் திருமணம் செய்வார்? என்ற என் தாயின் கண்ணீருக்கு உடனே பதிலும் கொடுத்தார்கள்... அவர்கள் ஏற்பாடு செய்த மாப்பிள்ளையைத் தான் நான் திருமணம் செய்துள்ளேன்... என் மனதிருப்திக்காக இங்கே வேலைக்கு வந்தேன்... அவருடன் US செல்ல எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுத்ததும் மாளவிகா அக்கா தான்... அதனால் தான் வேலையை விட்டு செல்லும் இந்த நேரத்தில் நான் நன்றி சொல்ல வந்தேன்" முடித்தாள் மோனிக்கா...

பேச்சே வராமல் நின்றவன், "ஆல் த பெஸ்ட்" எனக் கூறி, அவளை அனுப்பியும் விட்டான்...

'எல்லாருக்கும் நல்லது மட்டுமே தான் செய்வியா பாப்ஸ்... ஆனா எனக்கு? நீ இல்லாமல் நான் இல்லைனு தெரியாதா பாப்ஸ்? ஏன்டி என்னை மட்டும் தவிக்க விட்டுட்டே? என்னவோ! நீ ஹேப்பியா இருக்கிறாய் அல்லவா லவி? அது போதும் லவி எனக்கு' நினைத்துக் கொண்டான் அருள்

அடுத்த இரு வாரத்தில் அவனது சுகுணா அத்தை, வேறு ஒருவனுடன் வீட்டுக்கு வருவதைப் பார்த்தவன் அதிர்ந்து நின்றான்... முப்பத்தெட்டு வயதில் ஆண் துணையைத் தேடிய அத்தையை நினைத்து வருத்தம் கொண்டான்...
 
Advt

Advertisements

Top