50:50 Episode 8

#1
Dear Friends,
Thank you so much for your likes and comments. :):):):)

50:50 Episode 8

ராதா வண்டியைச் சாலையில் கவனமாக ஓட்டினாலும், அவள் எண்ணங்கள் யதுநந்தனை சுற்றிக் கொண்டிருந்தது.

'தந்தை மருத்துவமனையிலிருந்து திரும்பிய நாள் முதல் இன்று வரை, தன் குடும்பத்திற்கும் யதுநந்தனுக்குமான உறவு நெருக்கமாகிருகிறது' என்று எண்ணினாள் ராதா.

அரசுப் பணியில் இருக்கும் ஸ்ரீதரும், யதுநந்தனும் நெருங்கிய நண்பர்கள் ஆனதை எண்ணி ஆச்சரியப்பட்டபடியே தன் வண்டியை வலது பக்கமாக திரும்பினாள்.

'ஆனால், இன்று நடக்கும் விஷயம், ஒத்து வருமா?' என்று எண்ணியபடி ராதா வண்டியை யதுநந்தனின் அலுவலகம் நோக்கிச் செலுத்தினாள்.

அலுவலகத்திற்குள் சென்ற ராதா, இன்று நொடி நேரம் கூட காக்கும் அவசியமில்லாமல் யதுநந்தனின் அறைக்குள் சென்றாள்.

தன் மனதுள் இருக்கும் குழப்பத்தை மறைத்து, ராதாவை பார்த்து மெலிதாக சிரித்தான்.

ராதா பேச எத்தனிக்கும் முன், "ரோஸ் மில்க் சாப்பிடு ராதா. இப்ப எங்க ஆபீஸ் canteen யிலும் ரோஸ் மில்க் கிடைக்கும்" என்று கேலி புன்னகையோடு கூறினான் யதுநந்தன்.

"என்ன சிரிப்பு?" என்று ராதா அவன் முகம் பார்த்து கேட்க, யதுநந்தன் தன் தலையை இருபக்கமும் அசைத்தான்.

அதன் பின் சிரிப்போடு, "ஒரு காலத்தில் என் கூட இருக்கிறவங்க என்னன்னவோ சாப்பிடுவாங்க, ஆனால் இப்ப என் கூட இருக்கிறவங்க ரோஸ் மில்க் சாப்பிடறாங்க" என்று புன்னகையோடு கூறினான் யதுநந்தன்.

'நான் பேச வந்ததைத் திசை திருப்பும் யுக்தியா?' என்று ராதா யதுநந்தனின் முகத்தை ஆராய்ந்தாள் ராதா.

அவளால், எதையும் அறிந்து கொள்ள முடியவில்லை.

"நீங்க என்ன பண்ணிருக்கீங்க?" என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தாள் ராதா.

"தெரிந்து தானே மேடம் வந்துருக்கீங்க?" என்று யதுநந்தன் தன் சூழல் நாற்காலியை அரை வட்டம் அடித்து, தன் மேஜையில் கை வைத்துக் கேட்டான்.

"நாளைக்கி தான் வருவேன்னு நினைத்தேன்..." என்று ஆழமான குரலில் கூறினான் யதுநந்தன்.

"தாத்தா, பாட்டி இப்ப தான் உங்க வீட்டுக்கு போயிருக்காங்க. நீ ஸ்கூல இருந்திருப்ப..." என்று யோசனையோடு கேள்வியாக நிறுத்தினான் யதுநந்தன்.

"அண்ணி, whatsapp பண்ணிருந்தாங்க." என்று ராதா சுருக்கமாக கூறினாள்.

"10G வந்தா கூட, லேடீஸ் G யை அடித்துக்க முடியாது." என்று கண்ணில் குறும்போடு யதுநந்தன் கேலி பேச, "ரொம்ப சந்தோஷமா இருக்கிற மாதிரி தெரியுது" என்று ராதா இன்முகமாகக் கேட்டாள்.

"பதட்டமான நேரத்தை, பதட்டத்தோடு கழிக்காமல், சந்தோஷமா கழிக்கலாமுன்னு ஒரு நல்ல எண்ணம். நீ என்ன நினைக்கிற ராதா" என்று யதுநந்தன் சுவாரசியமாக கேட்டான்.

"ஏன் இப்படி பண்றீங்க?" என்று ராதா கூர்மையாக கேட்க, "நான் தான் ஏற்கனவே சொன்னேனே ராதா. ஒரு நண்பனா மட்டும் எந்நாளும் இருக்க முடியாதுன்னு." என்று அழுத்தமாகக் கூறினான் யதுநந்தன்.

"அது தான், ஊரிலிருந்து தாத்தா, பாட்டியை வர வைத்து, உன்னைப் பெண் கேட்கச் சொன்னேன்." என்று யதுநந்தன் நிதானமாகக் கூறினான்.

ராதா ஏதோ கூற வருமுன், "எதிர்மறையா எதுவும் இப்ப சொல்லாத ராதா." என்று பொறுமையாக கூறினான் யதுநந்தன்.

"வீட்டில், முடிவை என்கிட்டே தான் கேட்பாங்க." என்று ராதா தலை குனிந்து தரையை பார்த்தபடி கூறினாள்.

"தெரியும்." என்று ராதாவின் முகம் பார்த்து கூறினான் யதுநந்தன்.

"நான் என்ன பதில் சொல்லணும்?" என்று ராதா யதுநந்தனின் கண்களை பார்த்துக் கேட்டாள்.

யதுநந்தனின் காதல் பேசிய கண்கள் அவளுக்கான பதிலை கூற, அந்தக் காதல் பார்வையின் காந்தத்தை தாங்க முடியாமல் தன் முகத்தை வேறு பக்கம் திருப்பினாள் ராதா.

"ராதா..." என்று மெல்லமாக அழைத்தான் யதுநந்தன்.

"ம்ம்ம்.. சொல்லுங்க." என்று ராதா தன்னை சமாளித்துக் கொண்டு கூற, 'ராதா பேச தடுமாறுவது, இதுவே முதல் முறை' என்றெண்ணினான் யதுநந்தன்.

"ஒரு கதை சொல்லட்டுமா?" என்று யதுநந்தன் கேலியாக கேட்டான்.

"மாணவர்களுக்குக் கதை சொல்லும் டீச்சருக்கு கதையா? சொல்லுங்க." என்று சலிப்பாக கூறினாலும் சுவாரசியமாக கேட்டாள் ராதா.

"இது ஒரு பெண்ணின் மனதைப் பற்றிய கதை" என்று முன்குறிப்போடு கதையை ஆரம்பித்தான் யதுநந்தன்.

"இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்ற மன்னன் வென்றவனிடம் ஒரு கேள்வியை கேட்டு, நான் கேட்கும் ஒரு கேள்விக்கு, சரியான பதிலைச் சொன்னால், உன் நாடு உனக்கே என்று கூறினான்" என்று யதுநந்தன் கூற, "அப்படி என்ன கேள்வி?" என்று ராதா கேட்டாள்.

"ஒரு பெண், தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்?" என்று யதுநந்தன் கூற, ராதா ஏதோ பேச ஆரம்பித்தாள்.

தன் ஆள் காட்டி விரலை தன் உதட்டின் மீது வைத்து," நான் கதையை முடிக்கும் வரைக்கும் நீ குறுக்கப் பேச கூடாது" என்று யதுநந்தன் கண்டிப்பாக கூற, ராதா வேகமாகத் தலை அசைத்தாள்.

"வென்ற மன்னனின் காதலி, அவனிடம் இக்கேள்வியைக் கேட்டு விட்டு, விடை சொன்னால்தான், நமக்குத் திருமணம் என்று சொல்லியிருந்தாள். தோற்ற மன்னன், பலரிடம் கேட்டான். விடை கிடைக்கவில்லை. கடைசியாக சிலர் சொன்னதால், ஒரு சூனியக்காரக் கிழவியிடம் சென்று கேட்டான். அவள் என்ன சொன்னாள் தெரியுமா?" என்று யதுநந்தன் சுவரசியாயமாக கேட்க, ராதா அமைதியாக தன் தலை அசைத்து , தன் ஆள் காட்டி விரலை அவள் உதட்டின் மீது வைத்து அமைதியாக இருப்பதாகச் செய்கை காட்டினாள்.

ராதாவின் செய்கையில், சிரித்துவிட்டு மீண்டும் கதையை தொடர்ந்தான் யதுநந்தன்.

"விடை சொல்கிறேன். அதனால்,அந்த மன்னனுக்குத், திருமணம் ஆகும். உனக்கு உன் நாடு கிடைக்கும். ஆனால் எனக்கு என்ன கிடைக்கும்?" என்று கேட்டாள் கிழவி.

"என்ன கேட்டாலும் தருகிறேன்." என்று கூறினான் மன்னன்.

"தன் சம்பந்தப்பட்ட முடிவுகளை, தானே எடுக்க வேண்டும் என்பதே, ஒரு பெண்ணின் ஆழ்மனது எண்ணம்" என்று சூனியக்காரக் கிழவி, விடையைச் சொன்னாள்.

இப்பதிலை அவன் ஜெயித்த மன்னனிடம் சொல்ல, அவன் தன் காதலியிடம் சொல்ல, அவர்கள் திருமணம் நடந்தது. இவனுக்கு நாடும் கிடைத்தது. மன்னன் சூனியக்கார கிழவியிடம் வந்து, "வேண்டியதைக் கேள்." என்று கூறினான்.

சூனியக்காரக் கிழவி, "நீ என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்." என்று கேட்டாள்.

கொடுத்த வாக்கைக் காப்பாற்ற மன்னன் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டான். உடனே கிழவி ஒரு அழகிய தேவதையாக மாறிக் காட்சி அளித்தாள்.

அவள் சொன்னாள், "நாம் வீட்டில் தனியாக இருக்கும் போது நான் கிழவியாக இருந்தால், உன்னுடன் வெளியே வரும்போது தேவதையாக இருப்பேன். ஆனால் நான் வெளியே உன்னுடன் வரும் போது, கிழவியாக இருந்தால், வீட்டில் உன்னுடன் அழகிய தேவதையாக இருப்பேன். இதில் எது உன் விருப்பம் என்ன?” என்று மன்னனிடம் கேட்டாள்.

மன்னன் சற்றும் யோசிக்காமல், "இது உன் சம்பந்தப்பட்ட விஷயம்.முடிவு நீ தான் எடுக்க வேண்டும்” என்று கூறினான்.
 
Last edited:
#2
அதற்கு அவள், "முடிவை என்னிடம் விட்டு விட்டதால், நான் எப்போதும் அழகிய தேவதையாக இருக்கத் தீர்மானித்து விட்டேன்.!” என்று கூறினாள். "

என்று கதையை யதுநந்தன் முடித்தான்.

"இது என்ன, whatsapp , facebook கதையா?" என்று ராதா வினவ, அவளை முறைத்துப் பார்த்து, "என்ன புரியுது?" என்று யதுநந்தன் கேட்டான்.

'ஒரு பெண், அவள் சம்பந்தப்பட்ட முடிவுகளை அவளே எடுக்கும்போது, தேவதையாக இருக்கிறாள். முடிவுகள், அவள் மீது திணிக்கப்படும் போது, சூனியக்காரக் கிழவியாகி விடுகிறாள். ' என்பதைக் கூறுகிறான் என்று புரிந்தாலும் ராதா மௌனமாக அமர்ந்து ஒரு நொடி யோசித்தாள்.

பின் கண்ணில் புன்னகையோடு, முகத்தைக் கோபமாக வைத்துக் கொண்டு, "நீங்க ராஜா, நான் சூனியக்கார கிழவியா?" என்று சிடுசிடுப்பாக அவன் கூறியது புரிந்தும் புரியாதது போல் கேட்டாள் ராதா.

"உன்னை ராணியாகத் தான் வர சொல்றேன் ராதா." என்று யதுநந்தன் குழைவான குரலில் கூறினான்.

"நான் உங்க கூட சண்டை போட கோபமாக வந்தேன். நீங்க ஏதேதோ பேசி, என்னை திசை திருப்பிடீங்க. " என்று மிருதுவான குரலில் கூறினாள் ராதா.

'சண்டை போட வந்தவளின் குரலா இது?' என்று ராதாவிற்கே சந்தேகம் வந்தது.

யதுநந்தன் அமைதியாக அமர்ந்திருக்க, "இது வேண்டாம்." என்று ராதா சுருக்கமாக கூறினாள்.

"எது வேண்டாம்?" என்று யதுநந்தன் கேட்க, அவனை முறைத்தாள் ராதா.

ராதாவின் முறைப்பைப் புன்னகையோடு எதிர்கொண்ட யதுநந்தன், "இந்தக் கண்ணாம்பூச்சி ஆட்டம் போதும் ராதா. இதை முடித்துக் கொள்வோம்" என்று பக்குவமாகா கூறினான் யதுநந்தன்.

" என் ஆழ் மனம் என்ன சொல்லுது தெரியுமா?" என்று ராதா நிதானமாக யதுநந்தனின் முகம் பார்த்து கேட்டாள்.

யதுநந்தன் அவளை அமைதியாகப் பார்க்க, "ஒரு தோழியா, இந்த ராதா வேற. ஒரு வாழ்க்கைத் துணையா ராதா வேற." என்று ராதா தீவிரமாக கூறினாள்.

யதுநந்தன் தலை அசைத்து கேட்டுக் கொண்டான்.

" உங்களுக்கு நான் சரியான துணையா இருக்க மாட்டேன். தூரமா இருந்து பார்க்கும் பொழுது, சில விஷயங்கள் ரசிக்கும் படியா இருக்கும். ஆனால், பக்கத்தில் இருந்தா கஷ்டமா இருக்கும். என் கொள்கைகள் உங்களுக்குக் கோபத்தை வரவழைக்கலாம்.நீங்க கஷ்டப்படுவீங்க. ஒரு வேளை உங்களுக்கு என்னை பிடிக்காமல் போகலாம்." என்று ராதா கூறிக் கொண்டே போக, அவளை இடை மாறித்தான் யதுநந்தன்.

"ஏன் ராதா, என்னைப் பற்றி மட்டும் தான் யோசிப்பியா? உன்னைப் பற்றி யோசிக்கவே இல்லையா?" என்று யதுநந்தன் கேள்வியாக நிறுத்த, அவனைத் தடுமாற்றத்துடன் பார்த்தாள் ராதா.

"என் சந்தோசம் தான் உனக்கு முக்கியம் இல்லையா?" என்று யதுநந்தன் வினவ, ராதா பதில் கூற முடியாமல் அவனை அமைதியாகப் பார்த்தாள்.

"எனக்கும் உன் சந்தோசம் தான் முக்கியம் ராதா. உன் சிந்தனை சொல்லுது நம் வாழ்க்கை நல்லா இருக்குமுன்னு... " என்று யதுநந்தன் கூற, ராதா அவனை வாஞ்சையாகப் பார்த்தாள்.

"நீ எனக்காக உன்னை கொஞ்சம் மாத்திக்கோ. நான் உனக்காக என்னை நிறைய மாத்திக்கிறேன்." என்று யதுநந்தன் ராதாவிற்கு புரிய வைக்கும் நோக்கத்தோடு கூறினான்.

ராதா குழப்பமாக யதுநந்தனை பார்க்க, "உன் முடிவு தான் ராதா. பார்த்துக்கலாம்" என்று யதுநந்தன் நிதானமாகக் கூறினான்.

"ஒரு வேளை நான் மறுப்பு கூறினால்?" என்று ராதா கண்ணில் தயக்கத்தோடும், பயத்தோடும் கேள்வியாக நிறுத்த, "என்னைக்கும் ராதா எனக்கு ஒரு நல்ல தோழி" என்று கூறினான் யதுநந்தன்.

எதுவும் பேசாமல், தலை அசைத்து வீட்டை நோக்கிச் சென்றாள் ராதா.

ராதா வீட்டிற்கு செல்ல, வீடு அமைதியாக இருந்தது. ராதா குளித்து விட்டு, தன் அறையில் முடங்கிக் கொண்டாள்.

"ராதா." என்று சத்தமாக அழைத்தார் ராதாவின் தந்தை லோகநாதன்.

மொத்த குடும்பமும் நடு வீட்டில் இருக்க, "இன்னைக்கு, யதுநந்தன் தாத்தா, பாட்டி வந்திருந்தாங்க. உன்னைப் பெண் கேட்டு..." என்று நிறுத்தினார் லோகநாதன்.

"நான் என்ன பதில் சொல்லட்டும்?" என்று ராதாவின் முகம் பார்த்து கேட்டார் ராதாவின் தந்தை.

ராதா அமைதியாக நிறுக்க, "எனக்கென்னவோ, நல்ல வரனாகத்தான் தெரியுது. பெரிய இடம்." என்று கூறினார் ராதாவின் தாய்.

"நண்பர்கள், அப்படி இப்படின்னு கொஞ்சம் ஜாலி டைப்.. மற்றபடி நல்ல பையன்" என்று ஸ்ரீதர் தங்கையைப் பார்த்தபடி கூறினான்.

"மாப்பிள்ளைக்கு சில பழக்கங்கள் உண்டு. அது எனக்குத் தெரியும்" என்று அழுத்தமாகக் கூறினார் ராதாவின் தந்தை.

சித்ரா சஞ்சனாவை தன் மடியில் வைத்துக் கொண்டு அங்கு நடப்பதை அமைதியாகப் பார்த்து கொண்டிருந்தாள்.

ராதா தன் தந்தையைக் கூர்மையாக பார்க்க, "ஆனால் இது ராதா சம்பந்தப்பட்ட விஷயம். அவள் தான் முடிவு சொல்லணும். " என்று நிதானமாகக் கூறினார் லோகநாதன்.

ராதா தன் கண்களை இறுக மூடி யோசித்தாள். யதுநந்தனின் முதல் நாள் பேச்சும், இன்றைய பேச்சும் அவள் காதில் மீண்டும் மீண்டும் எதிரொலித்தது.

அவன் முதல் நாள் செய்த விபத்தும், நிரஞ்சனிடம் நடந்து கொண்ட முறையும் மாறி மாறி நினைவு வர, ராதா மௌனமாக நின்றாள்.

அவள் பதிலுக்காக மொத்த குடும்பமும் ராதாவின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தது.

50:50 வாழ்வின் ஓட்டம் தொடரும்.
 

Latest updates

Latest Episodes

Top