Aadhirai - 2

how was the epi?

  • interesting

    Votes: 14 100.0%
  • boring

    Votes: 0 0.0%

  • Total voters
    14
#1
ஒரு நூலின் பரிசு
அப்போது அவளது முதல் சந்திப்பு நினைவுக்கு வந்தது.....அது ஒரு மார்கழி மாதம். வியாழக்கிழமை என்று நினைக்கிறேன்......

இரவு எட்டு மணி வரை திருப்புவனம் நூலகத்தில் அமர்ந்திருந்தேன்.நூலகம் மூடும் நேரம் வந்ததும் வெளியில் வருகிறேன்... ஆறுமுகம் மகன் ராஜா நின்றுகொண்டிருந்தான்...

என்னைப்பார்த்ததும்"என்னடா உங்க ஊர்ல சிலோன் அகதிகள்லாம் வந்திருக்காங்களாம்" என்றான்.

"ஆமா" என்றேன்.

"பொம்பலைப்புள்ளைகள்லாம்....ரொம்ப அழகா இருக்காளுகளாமே?" அவன் பேச்சு எனக்கு சரியாகப்படவில்லை அந்த இடத்திலிருந்து நான் விலகிவிட நினைத்து என் சைக்கிளின் பின்புறமுள்ள கேரியரில் ஒரு டிபன்பாக்ஷும் ஒரு புத்தகமும் வைத்துவிட்டு நகர்கிறேன் அவன் "டேய் டேய்.." என்று கூப்பிட்டுக்கொண்டே இருந்தான் நான் நிற்கவே இல்லை.

உயிருக்குபயந்து எல்லாவற்றையும் இழந்து..ஒருவேளை சோற்றுக்கு கையேந்தி நிற்கும் அவர்களைப்பார்த்து இப்படியொரு எண்ணம் எப்படிதான் இந்த மனுசப்பயலுகளுக்கு வருகிறதோ?

என் சைக்கிள் லாடபுரத்தை நோக்கி புறப்பட்டது....நல்ல இருட்டு...

செல்லப்பனேந்தல் தாண்டி போகும்போது கொஞ்சம் பசித்தது.

கொஞ்சம் தூரம் போனதும் வீடு வந்துவிடும் என்ற நம்பிக்கையில் சைக்கிளைஓட்டுகிறேன்.

இலங்கை அகதிகள் முகாம் வருகிறது.....பாவம் எதையோ சமைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அதையும் தாண்டி லாடபுரம் வந்துவிட்டது...எல்லோரும் உறங்கும் நேரம் ஊரின் இருட்டுஎன் மீதும் படர்கிறது...

வழக்கம்போல் என் அம்மா காத்திருக்கிறாள்..

"காடுகரைக்குப்போய் வேலைபார்க்குறவங்கடா நாங்க...தூக்கமா வருது வந்து சாப்பிட்டுட்டு தூங்குப்பா ...." என்றாள்.

சைக்கிளை நிறுத்திவிட்டு திரும்பி பார்க்கிறேன் டிபன்பாக்ஸ் இருக்கிறது புத்தகத்தை காணவில்லை..எங்கு விழுந்திருக்கும்? எனக்கு தலை சுற்றுகிறது...காரணம் அது என் பேராசிரியர் கருணாமூர்த்தி வாங்கிக்கொடுத்தது..புத்தகத்தை வாங்கிவிடலாம் அதை அவர்கொடுக்கும்போது சிந்திய புன்னகையை நான் எங்கேபோய் வாங்குவது?

நல்ல புத்தகம்....

"அங்க என்னடா நின்னுட்டே இருக்குற?"

அம்மா என் வயிற்றை நிரப்ப கூப்பிடுகிறாள்..அறிவை நிரப்ப வேண்டிய புத்தகத்தை தொலைத்துவிட்டேன்.

தயங்கி தயங்கி சாப்பிடுகிறேன்...சாப்பாடு இறங்கவில்லை.

"என்னடா ஆச்சு?"- என்கிறாள் அம்மா

"புத்தகம் தொலைஞ்சுபோச்சுமா?"

"போனா புதுசு வாங்கிக்கலாம்"

அம்மாவிற்கு பணம் இருக்கிற தைரியம்..எதையும் வாங்கிவிடலாம் என்கின்ற நம்பிக்கை.அப்பா இறந்தபிறகு அம்மாவின் எல்லா நம்பிக்கையுமே பணம்தான் அவள் அப்பாவீட்டிலிருந்து வந்தது என்பதால் கூடுதல் நம்பிக்கை.

எனக்குதான் தூக்கம் வரவில்லை.புரண்டு புரண்டு படுக்கிறேன் புத்தகத்தின் நினைவுகள் என்னை புரட்டிஎடுக்கிறது.அது அருமையான புத்தகம்.

மிகெயில்நைமி எழுதிய "தி புக் ஆஃப் மிர்தாத்" தின் தமிழாக்கம் 'மிர்தாதின் புத்தகம்'அவர் லெபனான் நாட்டைச்சேர்ந்தவர்.ஜிப்ரானின் நண்பர்.எல்லாவற்றிற்கும் மேலாக என் ஆசான் கொடுத்தது.அதில் முதல்பக்கத்தில் என் பெயர் இருக்கும்

படித்தவர் எடுத்தால் என் கைக்கு வந்துவிடும்

படிக்காதவர் கைக்கு போனால் குப்பைக்கு போய்விடும்

பலசரக்குக்கடை பாண்டி கைக்குபோனால் பொட்டலம் மடிக்கப்போய்விடும்

ஒருசில பெண்கள் கைக்குப்போனால் தங்கள் குழந்தைகளின் மலம்துடைக்கப்போய்விடும்.

என் புத்தகம் என்னவாகிப்போனது?.

அடக்கடவுளே...உறக்கமற்றுகிடக்கையில்...ஓலமிடும் நாய்களின் சப்தம், அச்சத்தின் முதுகில் என்னை ஏற்றிவிட்டு வேடிக்கை பார்க்கிறது.

விடிந்துவிட்டது

மகாலிங்கம் வந்தான்..தூக்கமற்ற என் முகத்தில் படர்ந்துகிடக்கும் கவலையை நுகர்ந்தவனாய்

"என்னடா மாப்ள தூக்கமில்லையா?" என்றான்.

"ஆமாம்டா" என்றேன்.

"புத்தகத்துக்காகவா?" என்றான் எனக்கு தூக்கிவாரி போட்டது.

"அது எப்படி உனக்குத்தெரியும்?" என்றேன்.

"உன் புத்தகத்த, முகாம்ல இருக்குற ஒரு கிழவன் கொண்டு வந்து அபுபக்கர் கடைல கொடுத்திருக்காராம்..அபுபக்கர் என்கைல கொடுக்க மாட்டனாம் உன்னை வரசொல்லியிருக்கான் வா போகலாம்" என்றான்.

நாங்கள் இருவரும் அபுபக்கர் கடைக்குச்சென்று புத்தகத்தை வாங்கிவிட்டோம்.இருந்தாலும் அந்த புத்தகத்தைக்கொடுத்த அந்தப்பெரியவரைப்பார்க்கவேண்டும் போல் இருந்தது....

நாங்கள் முகாமுக்குச்சென்றோம்...அந்தப்பெரியவர் பெயர் சாத்தனார்...பார்ப்பதற்கு படித்தவர்போல இருந்தார் வயதுஎழுபது இருக்கும்.

புத்தகத்தை எடுத்துக் கொடுத்ததற்கு நன்றி சொல்ல வந்தோம் என்றேன்...

அவர் சிரித்துக்கொண்டே சொன்னார்

"புத்தகத்தை தொலைத்தவனின் வலியும் வேதனையும் எனக்குத்தெரியும்" என்று.

அவரைப்பற்றிக்கேட்டேன்.

"சொல்றதுக்கு எதுமே இல்லை..எல்லாத்தையும் சிங்களன் புடுங்கிட்டான்...வேலைக்குப்போய்ட்டு வந்த என் மகனையும் மருமகளையும் என் கண்ணுக்கு முன்னாடியே சுட்டுக்கொன்னுட்டானுங்க...என் பேத்தியும் நானும்தான் மிச்சமா நின்னோம்....என் பேத்திய தூக்கிட்டுபோக சிங்களபயலுக எவ்வளவோ முயற்சி பண்ணுனானுங்க...நான் காப்பாத்திட்டேன் இனி எதுக்கு வாழனும் சயனைடு குப்பிய நக்கி செத்துப்போய்ரலாம் வா நு கூப்பிட்டா என் பேத்தி வரமாட்றா"

ஒரு சின்ன மெளனத்திற்குப்பிறகு தொடர்கிறார்.

"பேத்தி அறிவாளி எம்.ஏ. படிச்சுருக்காள் இந்த உலகம் அவளுக்கு ரொம்ப பிடிச்சுருக்கு.... அவளுக்கு வாழனும்னு ஆசை...அதனால அவள கூட்டிக்கிட்டு கள்ளத்தோணியில தனுஷ்கோடி வந்தோம்..மண்டபம் கேம்ப்லேயே ஒரு மாசம் வச்சிருந்தாங்க அதுக்கப்புறம் இந்த ஊருக்கு வந்தோம்"

"இந்த ஊர் பிடிச்சுருக்கா அய்யா?" என்றேன்.

எதையோ சொல்வதற்காக..நிமிர்கிறார் அதற்குள் முகாமில் இருந்த மக்கள் வெடிகுண்டு சப்தம் கேட்டதைபோல "என்ன ஆச்சு.... என்ன ஆச்சு" என்று சாலையை நோக்கி ஒடிக்கொண்டிருந்தனர் நாங்களும் ஓடினோம்......................................................................(தொடரும்)

ஓடிய கூட்டம் திரும்பி வந்து கொண்டிருந்தது.என்ன என்று கேட்டோம்.."ஏதோ சாதிச்சண்டையாம் வெட்டிக்கொண்டார்களாம்" என்றார்கள் மிகச்சலிப்போடு.........காரணம் இருக்கிறது.இந்த ஊர் அப்படிதான் சாதிதான் பெரியது என்பார்கள்.

சாதிக்காக எத்தனை உயிர் போனாலும் கவலைப்படாமல் சாதியை மட்டுமே வாழவைக்கிற சண்டாளப்பய ஊர்.

.நாங்கள் போகவில்லை திரும்பிவிட்டோம்.

சாத்தனார் அய்யா என் முகத்தைப்பார்த்தார்.

"நான் இதைத்தான் சொல்லவந்தேன் இந்த ஊர் நல்ல ஊர் ஆனா எதுக்கெடுத்தாலும் சாதி பாக்குறாங்க" என்றார்.

என்னால் எதுவும் பேச இயலவில்லை.பிறகு அவரே தொடர்ந்தார்...

"எங்க நாட்டுல ரெண்டு விசயம்தான் ஒன்னு தமிழனா?இல்லை சிங்களனா? எங்களுக்கு இந்த சாதியெல்லாம் தெரியாது..." பேசிக்கொண்டே என்மீது கை வைத்தார் அவர் வீடு வந்துவிட்டது..நாற்காலி இல்லை தரையில்தான் அமர்ந்தோம்..அய்யாவின் பேச்சு அறிவு மழையாக இருந்தது.

மகாலிங்கம்... பாவம் அவனுக்கும் இந்த பேச்சுக்கும் ரொம்ப தூரம்..ஆனால் அவன் எனக்காக இருப்பான்.இப்போதும் இருக்கிறான்.

"இவர் எதுமே பேச மாட்டாரா?" என்று மகாவை பார்த்து அய்யா கேட்டதும்

"உங்க பேத்தி எங்க?" எங்க என்றான்.

அவன் தொடையில் ஒரு கில்லு கில்லினேன்.அய்யாவோ மிகப்பொறுமையாக அவள் அரசு மருத்துவமனைக்கு போயிருப்பதாகக்கூறினார்.

நேரம் போய்க்கொண்டே இருந்தது...

காலைநேரம்

பசி இல்லவே இல்லை

வீட்டில் அம்மா தேடுவாள்...தேடட்டும் அதைவிட என்மனம் இவரிடம் எதையோ தேடுகிறது.

பணத்துக்கு என்ன செய்கிறீர்கள் என்றேன்.

"நானும் என் பேத்தியும் கூலி வேலைக்குதான் போகிறோம்" என்றார்.

"யாரு தாத்தா இவங்க?" ஏதோ ஒரு பெண்குரல்....................................

திரும்புகிறோம்............................................ அவள் நிற்கிறாள்..

அழகாக......... அழகின் அழகாக.

"இவள்தான் என் பேத்தி ஆதிரை" அய்யா அறிமுகப்படுத்துகிறார்.

வணக்கம் சொல்கிறோம்..பதிலுக்கு அவளும் வணக்கம் சொன்னாள்.

பத்துநாள் பட்டினிகிடந்தவனின் கையில் கிடைத்த பிரியாணியைப்போல என்கண்கள் அவள் அழகை தின்றுகொண்டிருந்தது.

அவள் எதையுமே சட்டை செய்யாதவளாய் வீட்டிற்குள் போய்விட்டாள்.

முதன்முறையாக பட்டாம்பூச்சிகள் என்னை மொய்ப்பதாக உணர்கிறேன்.

சாத்தனார் அய்யா எதை எதையோ பேசிக்கொண்டிருக்கிறார் எதுவுமே எனக்குள் நுழையவே இல்லை.மகாலிங்கத்திற்கு ஆரம்பத்திலிருந்தே எதுவும் புரியவில்லை எனக்கு ஆதிரை வந்ததிலிருந்து எதுவுமே புரியவில்லை.

ஆதிரை வெளியே வந்தாள்..எங்களோடு அமர்ந்தாள்...அய்யாவும் அவளுமாக நிறைய பேசினார்கள்..கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும்போல இருந்தது..

திடீரென "நீங்க என்ன மாதிரி புத்தகம் வாசிப்பிங்க?" என்றாள்.

'நானும் உள்ளூர் இலக்கியத்திலிருந்து உலக இலக்கியம் வரை படிப்பேன்' என்றேன்.

"இப்ப புத்தகம் இருக்கா?" என்றவள் "தரமுடியுமா?" என்று கேட்டாள்.

'வீட்டில் இருக்கிறது' என்றேன்.

"நானும் வருகிறேன்" என்றவள்..எழுந்துவிட்டாள். வேறு வழியில்லை............அய்யாவிடம் விடைபெற்றுவிட்டு கிளம்பினோம்.

கொஞ்சம் தூரம் வந்ததும் மகாலிங்கம் என் காதருகில் வந்து.....

"மாப்ள...நீ அவள பார்த்ததுல இருந்து நிதானம் இல்லாம இருக்குற...பத்திரமா கூட்டிட்டுப்போ நான் வீடு வரைக்கும் போனதும் வாறேன்" என்று விலகிக்கொண்டான்.

இப்போது நானும் அவளும் மட்டும் நடந்து போகிறோம்.

.பிறந்ததிலிருந்து நடந்து திரிந்த வீதிதான், இன்றைக்கு என்னவோ மிகவும் அழகாய் படுகிறது எனக்கு...

வானம் குடைபிடிக்கிறது.

பூமி எங்களிடம் நடை படிக்கிறது.

மெளனம் அழகு...ஆதிரையின் மெளனம் இன்னும் அழகு..

மெளனமாக வந்தவள் சட்டென திரும்பி.."ஏன் பேசாம வர்ரீங்க..." என்றாள்.

எப்படி பேசுவது? என்ன பேசுவது? எல்லாமே நீயாகிப்போனபின்பு?

வார்த்தைகள் முதன் முதலில் எனக்குள் மறைந்துகொண்டு வேடிக்கைபார்க்கின்றன....

பாவம் என் மெளனம் மறுபடி மறுபடி என் முகத்தில் வந்து அமர்ந்துகொள்கிறது..

வீடு வந்துவிட்டது....நல்லவேளை வீட்டில் யாருமே இல்லை அம்மா வயலுக்கு போயிருப்பாள்போல..வழக்கம்போல ஆட்டு உரலுக்குப்பின்னால் சாவி வைத்திருந்தாள் எடுத்து கதவை திறக்கிறேன்.....

அவள் முகம் மலர்கிறது..பெளர்ணமி நேரத்து பாற்கடலைப்போல...

"பெரிய வீடு...." என்றாள்.

ம்ம்ம் என்றேன்.

என் அறையைப்பார்த்ததும் வியந்துபோய் கேட்டாள்..."இவ்வளவு புத்தகமா?"

'எட்டாயிரம் புத்தகம் இருக்கும்' என்றேன்.

"என்ன வகையான புத்தகங்கள்" என்றாள்.

'வரலாறு ஆன்மிகம் இலக்கியம்.......................இன்னும் இன்னும்'

இப்போது அவள் பேசவில்லை...புத்தகங்களைத்தேட ஆரம்பித்தாள்...அவள் அழகான விரல்கள் புத்தகங்களை வருடிக்கொண்டிருக்கின்றன.

.ச்சீ பாழாய்ப்போன என் மனசு அவள் அழகைத்திருடிகொண்டிருக்கின்றன...

ஒரு வழியாக ரஸ்ய நாட்டு எழுத்தாளர் குப்ரின் எழுதிய 'செம்மனிவளையல்' என்ற புத்தக்த்தை எடுத்துக்கொண்டாள்.

'போதுமா' என்றேன்."இதைப்படிச்சுட்டு வாங்கிக்கிறேன்" என்று வெளியே வந்தாள்.
 
#2

அவள் வருகையால் என் வீடே அழகானது.

"நான் கிளம்புகிறேன்.." என்று ஆதிரை சொல்லும்போது என் ஆழ்மனதில் தீ பிடித்தது 'அய்யோ கிளம்புகிறாளே' என்று...

நானும் வருகிறேன் என்று புறப்பட்டேன்.

அவள் புருவம் இரண்டும் ஒரு கேள்விக்குறியாய் விரிந்தது.

உன்னை ஒத்தையில அனுப்ப என் உசுருக்கு தைரியமில்லைனு நான் எப்படி சொல்வது ஆதிரை?

இருவரும் நடந்தோம் வழக்கம்போல மெளனம் எங்களை தழுவிக்கொண்டது.

அடிக்கடி இருவரும் திரும்பி............ ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.

மெளனம் இப்போது மொழியாகி விட்டது....... அதன் புரிதலில் இருவரும் சிரித்துக்கொண்டோம்.

வார்த்தைகள் சொல்லமுடியாத விசயங்களை மெளனம் மொழிபெயர்த்தது.

ஆதிரையின் வீடு வந்துவிட்டது.

"வருகிறேன்" என்று விடைபெறுகிறாள் அதற்கு போகிறேன் என்றொரு பொருளுண்டு என்பதைப்புரிந்துகொள்ளாமல் நான் நிற்கிறேன்...

"டேய் மாப்ள.."

திரும்புகிறேன்

மகாலிங்கம் ஒரு ரோஜாச்செடியோடு வந்து கொண்டிருந்தான்..............


Thanks friends...
unga comments and likes than enoda encouragement ...
intha kathai verum kathail alla... enodaya kanavu....
ungalin karuthukal en kanavai uyrpithu thara uthavum...


nanri... nanri ... nanri....

Gnanaguru
 

Vijayasanthi

Well-known member
#6
சூப்பராக உள்ளது....
அவள் அழகான விரல்கள் புத்தகங்களை வருடிக்கொண்டிருக்கின்றன.

.ச்சீ பாழாய்ப்போன என் மனசு அவள் அழகைத்திருடிகொண்டிருக்கின்றன
அருமையான தமிழ்நடை....வெகு நாள் கழித்து அழகிய தமிழ் நடையில் வாசிக்கும் அனுபவம்....
வாழ்துக்கள்...
 
#8
படித்தவர் எடுத்தால் என் கைக்கு வந்துவிடும்

படிக்காதவர் கைக்கு போனால் குப்பைக்கு போய்விடும்

பலசரக்குக்கடை பாண்டி கைக்குபோனால் பொட்டலம் மடிக்கப்போய்விடும்
புத்தகத்தை தொலைத்த தவிப்பை அழகாக சொல்லி உள்ளீர்கள்:):):):)
மெளனம் இப்போது மொழியாகி விட்டது....... அதன் புரிதலில் இருவரும் சிரித்துக்கொண்டோம்.

வார்த்தைகள் சொல்லமுடியாத விசயங்களை மெளனம் மொழிபெயர்த்தது.
(y)(y)(y)(y)
எட்டாயிரம் புத்தகமா....:eek::eek::eek::eek:....... நல்ல படிப்பாளி . இன படுகொலை நகரில் இருந்து உயிர் பிழைத்து சாதி கலவர ஊரில் மாட்டி கொண்டு விட்டார்களா அருமையான பதிவு சகோ(y)(y)(y)(y) பார்த்ததும் மனதில் பதிந்து விட்டாள் நீங்கள் குறிப்பிட்ட 2புத்தகங்கள் நான் படித்ததில்லை:(:(:(
 
#9
Miga arumaiyana nadai thangalathu(y).....vivarika vaarthaigal illai(y)........ungalin eluthu enaku kavithai pole thondrugirathu.....ondrirandu endral merkol kooralam....aanal ingu mothamum sirappaga ulathu...aathalal ennal kuripita ondrai koora mudiyavilai.......(y)
 
Top