Aanandha Bairavi 2

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#48
Hi friends,
அடுத்த பதிவு ரெடி. உங்கள் கமெண்ட்ஸூக்கு நன்றி. அறிமுகமான பெயர்களையும் தாண்டி சில புது முகங்கள் என்னை மிகவும் மகிழ்ச்சிப் படுத்தியது.
மீண்டும் நன்றி!
பைரவி தடுமாறியது ஒரு கணப்பொழுது தான். தன்னை சுதாகரித்தவள் சட்டென்று எழுந்து..

"ஹலோ மிஸ்டர் ஆனந்தன், ஐம் பைரவி"

இயல்பாக நீண்ட கைகளோடு அவள் தன்னை அறிமுகப்படுத்த..
அவன் ஏளனப் பார்வை இப்போது அவள் முகத்திலிருந்து கைக்கு இடம் மாறி இருந்தது.

அடடா.. என்று தன்னையே நொந்து கொண்டவள்
சொதப்பிட்டயே பைரவி என்று நினைத்து, கையை மடக்கி வணக்கம் வைத்தாள்.

ஒரு சிறு தலை அசைப்போடு அதை ஏற்றவன் அவள் பக்கமிருந்த நாற்காலியைக் காட்டிவிட்டு தானும் அமர்ந்தான்.

"மிஸ் பைரவி சந்திரன்?"

"யெஸ் ஸேர்" தனது சான்றிதழ்கள் அடங்கிய ஃபைலை நீட்டியபோது அதை தலையசைத்து மறுத்தவன்..

"ப்ரின்சிபல் உங்க குவாலிஃபிகேஷன்ஸ் எல்லாம் திருப்தியா
இருக்கிறதா தான் சொன்னார்.. எனக்கு ஒரே ஒரு கேள்வி மட்டும் தான் உங்ககிட்ட மிஸ்.பைரவி."

"சொல்லுங்க ஸேர்.."

"அல்ட்ரா மாடர்ன் சிட்டயிலே பிறந்து வளரந்திட்டு எதுக்கு இந்த கிராமத்து பிரவேசம்னு நான் தெரிஞ்சுக்கலாமா??"
அவன் இயல்பாய் கேட்ட போது, இதுக்கு என் அம்மாவே தேவலை என்றுதான் தோன்றியது பைரவிக்கு.
அவன் தன் பதிலுக்கு காத்திருப்பது புரிய,

"கிராமத்து அட்மோஸ்ஃபியர்ல வாழனும்னு ரொம்ப நாள் ஆசை!
உங்க ஆட் பாத்ததும் அப்ளை பண்ண தோணிச்சு." என்றாள்.

"இப்ப இப்படித்தான் தோணும்... இரண்டு நாள் போனா உங்களுக்கெல்லாம் இந்த கிராமம் போரடிக்கும்!!"

உங்களுக்கெல்லாம்னா.. இன்னும் யாரையெல்லாம் இவனுக்குத் தெரியும்???
கண்களில் கேள்வியோடு அவள் அவனைப் பார்க்க அவன் அலட்சியமாய் தோள்களைக் குலுக்கினான்.
அந்தப் பார்வையின் அலட்சியம் அவளை சீண்டிப்பார்க்க..

"அத்தனை சீக்கிரம் என் முடிவுகளில் பின்வாங்க மாட்டேன்"
என்றாள் அவன் கண்களை பார்த்தபடி.

அவன் கண்களில் பாராட்டைப்போல் ஏதோ ஒன்று வந்து போனது. சட்டென இயல்புக்கு வந்தவன்,

"பார்க்கலாம்" என்றான்.

"என்ன ஆனந்தா...என்ன சொல்லுறாங்க நம்ம புது டீச்சர்"
கைகளில் டீ கப்புகளோடு பாட்டி வந்தபோதுதான் பைரவிக்கு பசியே தெரிந்தது.

"எடுத்துக்கோம்மா" அழகான புன்னகையோடு பைரவிக்குக் கொடுத்தவர் தன் பேரனுக்கும் ஒன்றைக் கொடுத்து விட்டு தானும் ஒரு சேரில் அமர்ந்தார்.

"அப்புறம் எங்கம்மா தங்கி இருக்க??" என்க,

"இல்லை பாட்டி இனித்தான் எங்கேயாவது வீடு பாக்கணும்" என்றாள்.

"வயசுப் பொண்ணு தனியா எப்படீம்மா?"

"பழகிடுச்சு பாட்டி அம்மா அப்பா வெளியூர்ல இருக்காங்க. இப்ப வரமுடியாத சூழ்நிலை, வீடு ரெடியானதும் தெரிஞ்சவங்க ஒருத்தர் துணைக்கு வருவாங்க"

"அது சரிம்மா, வீடு எப்படி தேடுவ?"

"ப்ரின்ஸிபல்கிட்ட சொல்லி இருக்கேன் பாட்டி, ஹெல்ப் பண்ணுறதா சொல்லி இருக்கார்"

"அப்படியா" சற்று யோசித்தவர்

"ஏன் ஆனந்தா நம்ம தோட்ட வீடு சும்மாதானே இருக்கு? அதைக் கொடுத்தா என்ன நம்ம டீச்சருக்கு??" பைரவியை அந்த யோசனை சங்கடப்படுத்த

"இல்லை பாட்டி நீங்க சிரமப் படுத்திக்க வேணாம். நான் கொஞ்சம் தேடிப் பாக்கிறேன்"

"ஊருக்கு புதுசு, நீ எங்கேன்னுமா தேடுவ?"

இத்தனை சம்பாஷனை நடக்கும் போதும் ஏதோ ஓர் சிந்தனை ஓட அப்படியே உட்கார்ந்திருந்தான் ஆனந்தன்.

"ஆனந்தா என்ன நான் பேசிக்கிட்டே இருக்கேன் நீ எதுவுமே சொல்லலையேப்பா"
சட்டென கலைந்தவன்..

"உங்க இஷ்டப்படி செய்ங்க பாட்டி இதுல நான் சொல்ல என்ன
இருக்கு.. எனக்கு நேரமாச்சு பாட்டி" சொல்லி விட்டு எழுந்தவன்

மிஸ்.பைரவி.. உங்களுக்கு எப்ப சௌகர்யப் படுதோ இந்த வீக்ல
டியூட்டியில ஜொயின் பண்ணிடுங்க. நிர்வாகத்திற்கு நான்
தெரியப்படுத்திடுறன். ஓ கே"

"ஓ கே ஸேர்"
இரண்டெட்டு நடந்தவன்..

"மிஸ்.பைரவி இதுக்கு முன்னாடி நாம எங்கேயாவது மீட் பண்ணியிருக்கோமா?"
நேரடியாக அவன் கேள்வி முகத்தை தாக்க சட்டென பிடிபட்ட உணர்வு பைரவிக்குள்.

"மீட்.. மீட் பண்ணி இருக்கோமா ஸேர்?" சாதுர்யமான அவள் பதில் அவனுக்கு எரிச்சலைக் கிளப்ப

"கேள்வி கேட்டா பதில் சொல்லனும்.. இப்படி திரும்ப கேள்வி கேட்கக் கூடாது. எனிவே லீவ் இட்," என்றவன்

"நான் கிளம்பறேன் பாட்டி" என்று விடு விடு என நடந்துவிட்டான். அவன் போவதையே பைரவி பார்த்திருக்க..

"அவன் அப்படித்தாம்மா, கால்ல சக்கரத்தை கட்டின மாதிரி
எப்ப பாரு ஓட்டம். ஊருக்கு நல்லது பண்ணுறேன்னு எல்லாத்தையும் தூக்கி தன் தலையிலே போட்டுக்குவான்.
அவன் சாப்பிடாம நான் சாப்பிட மாட்டேன் அப்படீங்கிறதால
வேளா வேளைக்கு சாப்பிட வந்திருவான், இல்லைன்னா அதுவும் இல்லை"

"ஏன் பாட்டி அவங்க அம்மா அப்பா எல்லாம்?"
தனக்கு இது அதிகப்படி என்று தோன்றினாலும் பைரவியால் கேட்காமல் இருக்க முடியவில்லை.

"என் மகனையும், மருமகளையும் கேக்கிறயா??? அவங்க என் பேத்தி படிப்புக்காக பக்கத்துல திருநெல்வேலி டவுனுல இருக்காங்க. என் பேத்தி சாதனா டாக்டருக்கு படிக்குதில!!"
பாட்டி முகத்தில் அத்தனை பெருமை. லேசாகப் புன்னகைத்தவள்

"அப்படியா பாட்டி சந்தோஷம், அப்போ நான் கிளம்புறேன் பாட்டி"

"பொறும்மா தோட்ட வீட்டோட சாவியைக் குடுக்கிறேன் எடுத்துக்கிட்டே போ, ஆனந்தன் அடிக்கடி அங்க போறதால வீடு எப்பவுமே சுத்தமாத்தான் இருக்கும்"

பாட்டி சாவிக்காகப் போக பைரவிக்கு ஏனோ அந்த ஏற்பாடு
அத்தனை இனித்தது.

வாழ்க்கை தனக்கு வசப்படுமா..??!!
மெல்லிய கீற்றாய் புன்னகை தோன்ற காத்திருந்தாள் பைரவி. சாவிக்காக மட்டுமல்ல,
வசந்தத்திற்காகவும்....!
.
vasantham vaasalil vanthatho......
 
#49
அப்போ ஆல்ரெடி ஆனந்தனை தெரியுமா பையு உனக்கு....பிளான்யோட தான் இங்க என்ட்ரி போட்டு இருக்கீங்களா
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top