Aththiyaayam 146: Kaalam Tharkaalam

#1
காலம்: தற்காலம்

அத்தியாயம் 146:


சங்கரன் அப்படியே நெடுஞ்சாண் கிடையாக விழுந்தான்.

"தாயே வனப்பேச்சி உன் மகிமை ஞான் கேட்டுட்டுண்டு. ஆனா இன்னைக்கு நேர்ல பார்த்துட்டேன். எங்களை காப்பாத்து தாயே" என்று வேண்டினான்.

"ஆமா நவீன்! இந்த குகையில ஏதோ ஒரு தெய்வீக சக்தி இருக்கத்தான் செய்யுது. அது தான் நம்மைக் காப்பாத்தியிருக்கு. நாமளும் ஆசான் அகத்தியருக்கு துரோகம் செய்ய நெனச்சு வந்திருந்தோம்னா நமக்கும் ஏதாவது ஆகியிருக்கும். " என்றார்.

"பூபாலனை என்ன சார் செய்ய?" என்றான் நவீன். அவனது பார்வை அவர் பக்கம் போனது. இப்போது அவர் மிகவும் உளறத் தலைப்பட்டிருந்தார். செங்குன்றன், விந்தையன் என என்னென்னவோ சொல்லிக்கொண்டிருந்தார். அத்தனை நேர பதட்டங்கள் அடங்கியதாலோ என்னவோ பேராசிரியர் ராமநாதனுக்கு வலி மீண்டும் எழுந்தது. தனது உதடுகளால் கடித்து வலியை மறைத்தார். வர்ஷினியும் எழுந்து வந்தாள். அவளுக்கு தான் வாள் வீசியது நவீனை செங்குன்றன் என்றது எதுவுமே நினைவில் இல்லை. அப்படியே விட்டு விடச் சொல்லி விட்டார் பேராசிரியர். குறிப்பிட்ட சில ஓலைகளை மட்டும் எடுத்துக்கொண்டு மற்ற ஓலைகளை மீண்டும் பெட்டியில் வைத்துப் பூட்டினார்கள். எடுத்துக்கொண்டு செல்ல வேண்டிய ஓலைகளை பெட்டியின் மேல் வைத்து வனப் பேச்சியிடம் அனுமதி கேட்டார்கள். அவள் அனுமதி கொடுத்ததன் அடையாளமாக செண்பக மலர்களின் வாசம் வர அவற்றை எடுத்துப் பத்திரப்படுத்துனார் பேராசிரியர்.

"நவீன் இதைப் பார்த்தியா?" என்றார் திடும்மென.

"என்ன என்ன?" என்று மூவரும் அருகில் வந்தனர். பேராசிரியர் ராமநாதன் சுட்டிக்காட்டிய இடத்தில் வனப்பேச்சியின் சிலையில் ஒரு சில்லு பெயர்ந்திருந்தது. அதில் லேசாக ஈரமும் தெரிந்தது. கண்களை மூடி மீண்டும் வேண்டினார் பெரியவர்.

"இது என்னான்னு தெரியுதா? இது தான் கேசவன் சுட்ட குண்டு துளைச்ச இடம். குண்டை தான் வாங்கிக்கிட்டு வர்ஷினியையும் நம்மையும் காப்பாத்திருக்காங்க வனப்பேச்சி! இவங்க கருணைக்கு எல்லையே இல்ல" என்று தழுதழுத்தார்.

சூரியன் மேற்கில் சாய முற்பட்டான். இனியும் தாமதிக்கக் கூடாது என்று ரகசிய ஓலைகளை மீண்டும் ஒரு முறை பார்த்து விட்டு பழையபடியே மூடினார்கள். பூபாலன் குகையின் வாசலில் அமர்ந்து எதையோ பேசிக்கொண்டிருந்தார். அடிக்கடி எனக்கு எதுவும் தெரியாது என்று சொல்லிக்கொண்டிருந்தார். அந்த மரப்பந்தினை தன் கையில் வாங்கி ஆமணக்குச் செடியின் விதைகளை வைத்து அதற்கு எரியூட்டினான் சங்கரன். மந்தமாக எரியத்துவங்கிய அது சட்டென நீலமாக எரிந்து அணைந்து விட்டது. அந்த இடத்தில் ஒரு இதயத்தின் வடிவம் போல ஆழப் பதிந்திருந்தது. அதனை ஒரு கல் கொண்டு மூடினர் மூவரும்.

"சங்கரா! உனக்கு எத்தனை நன்றி சொன்னாலும் தகுமப்பா! நீ இல்லைன்னா எங்களால இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது. ஆனா இந்த ஓலைகளைப் பத்தின ரகசியத்தை நீ ரகசியமாவே வெச்சுப்பேன்னு நம்புறேன்" என்றார் ராமநாதன்.

"நிச்சயமாயிட்டு சார்! வனப்பேச்சிக்காக நான் இதைச் செய்யும்" என்றான்.

"இவரை என்ன செய்ய?" என்றான் நவீன் மீண்டும். அது மட்டுமில்ல கேசவனோட பாடி கெடக்குது. இதை நாம போலீஸ்ல சொன்னா நம்மைத்தான் சந்தேகப்படுவாங்க! சரியான இக்கட்டுல மாட்டிக்கிட்டோம்" என்றான் நவீன்.

"இல்ல நவீன்! நல்லா யோசனை பண்ணு! பூபாலனும் கேசவனும் நம்ம கூட வந்தது யாருக்கும் தெரியாது. ஏன் வன ஆதிகாரிகளோட அனுமதி ரெஜிஸ்டர்ல கூட இவங்க பேரு இல்ல! நாம இங்க ஆராய்ச்சிக்காக வந்தோம். அப்ப இந்த பகுதிகள்ல தனியா அலைஞ்சுக்கிட்டிருந்த பூபாலனைக் காப்பாத்திக் கூட்டிக்கிட்டுப் போறோம். அவ்வளவு தான். என்ன வர்ஷினி புரிஞ்சதா?" என்றார் ராமநாதன். அவரை ஆச்சரியத்தோடு பார்த்தனர் அவரது மாணவர்கள். கேசவனின் உடலை அப்படியே விட்டுச் செல்ல மனமின்றி ஒரு குழியைத் தோண்டி அதில் புதைத்தனர். சில நொடிகள் அவனுக்காக பிரார்த்தனையும் செய்தனர்.

மெல்ல மெல்ல பூபாலனையும் அழைத்துக்கொண்டு மலையிறங்கினார்கள். பேராசிரியருக்கு முதுகு வலி தாங்க முடியவில்லை. இருந்தும் மன உறுதியோடு இறங்கினார். இறங்குவது மிகவும் எளிதாக இருந்ததால் அன்றைய மாலையே சொரி முத்தையனார் கோயில் வரைக்கும் சென்று விட்டனர். அங்கே இரவைக் கழித்து விட்டு மறு நாள் அதிகாலை காணிகள் குடியிருப்புக்கு விரைந்தனர். அவர்களை உயிரோடு பார்த்து விட்டு மிகவும் ஆச்சரியமும் சந்தோஷமும் அடைந்தனர் காணிகள். மூட்டுக்காணியும் சங்கரனின் தாயும் அவனைத் தழுவிக்கொண்டு கண்னீர் வடித்தனர். வனப்பேச்சியின் அருளால் உயிரோடு வந்ததாக சொன்னான் சங்கரன். அவளுக்கு நன்றி கூறினர் மற்றவர்கள்.

சங்கரனுக்குக் கொடுக்க வேண்டிய தொகையை விட அதிகமாகவே கொடுத்து பிரியா விட பெற்றுக்கொண்டார்கள். நவீன் வர்ஷினி திருமணத்துக்கு தனக்கு கட்டாயம் அழைப்பு அனுப்ப வேண்டும் என்றான் சங்கரன். அப்படியே ஒப்புக்கொண்டனர். அடிக்கடி வந்து அனைவரையும் பார்ப்பதாக வாக்களித்தான் சங்கரன். அவனைப் பிரியும் போது ஏனோ வர்ஷினிக்கும் நவீனுக்கும் கண்கள் கலங்கின. அவனுக்கும் அப்படியே. திருவள்ளுவர் கல்லூரியில் விட்டு வந்திருந்த வண்டியை எடுத்துக்கொண்டு வீடு நோக்கிப்[புறப்படு முன் சாவித்திரி மேடத்துக்கு ஃபோன் செய்தார் ராமநாதன். அவர்கள் திரும்ப வருகிறார்கள் என்பதை அறிந்ததும் அழுது விட்டார்கள் மேடம்.

தென்காசிக்கு வந்து குளித்து முதலில் ஆர்த்தோ டாக்டரிடம் காட்டி சிகிச்சை செய்து கொண்டார் பேராசிரியர் ராமநாதன். நல்ல வேளை முதுகுத்தண்டில் எலும்பு முறிவு எதுவும் இல்லை. மூன்று மாதங்கள் அணிய வேண்டிய பெல்ட்டும் சாப்பிட வேண்டிய வலி நிவாரணி மாத்திரைகளையும் வாங்கிக்கொண்டு நேரே கோயிலுக்குச் சென்றார்கள். அங்கே இருந்த பராக்கிரமனின் சிலையையும் கோயிலில் இருந்த விந்தையன் சிலையையும் வணங்கினார்கள். அவர்கள் கண்கள் முன்னால் மணி சேகரன் காளையன் கீரார் ஆகியோர் வந்து போயினர். எடுத்து வந்த ஓலைகளை விந்தையனது சன்னதியில் வைத்து வணங்கினார்கள். வீட்டுக்குச் சென்று தூங்கி எழுந்து நடந்தவைகளை சாவித்திரி மேடத்திடம் மீண்டும் மீண்டும் சொன்னார்கள். பூபாலனை வனத்துறையினர் பொறுப்பேற்றுக்கொண்டு விட்டனர். அவர் மன நலக் காப்பகத்துக்கு அனுப்பட்டார்.

சென்னைக்கு வந்த பேராரியர் ராமநாதன் வர்ஷினி நவீன் மூவரும் தொல் பொருள் ஆய்வுத்துறைக்குச் சென்று அந்த ஓலைகளைப் பற்றிச் சொல்லி அவைகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார்கள். பல பத்திரிகைகளிலும் டிவி சேன்னல்களிலும் அவர்களை பேட்டி கண்டனர். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அகத்தியர் பேட்டரியையும் பறக்கும் பொறியையும் கண்டு பிடித்திருக்கிறார் என்பதையும் அதற்கு ஆதாரம் இருக்கிறதென்பதையும் மக்கள் பரபரப்பாகப் பேசினார்கள். பல முன்னணி நிறுவனங்கள் பேராசிரியர் ராமநாதனுக்கும் அவரது மாணவர்களுக்கும் ஆராய்ச்சி செய்ய தேவையான உதவிகளைச் செய்ய முன் வந்தார்கள்.

அடுத்த ஆண்டில் வர்ஷினியும் நவீனும் ஆராய்ச்சியை முடித்துக்கொண்டு விட்டார்கள். இருவரும் இப்போது டெல்லிப்பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகின்றனர். பேராசிரியர் ராமநாதன் தென்காசியில் இருந்து கொண்டு பல விதமான தொல்லியல் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். அவர் இப்போது தமிழரின் பெருமையை அனைவருக்கும் எடுத்துச் சொல்கிறார். சங்கரன் அவருக்கு உதவி செய்கிறான்.

அங்கே அகத்திய மலைக்குகையில் புதைக்கப்பட்ட அந்த ரகசிய ஓலைகள் இன்னமும் பத்திரமாக இருக்கின்றன. காணிகள் இன்னமும் பூங்குளத்தைத் தாண்டிச் செல்வதில்லை. சங்கரன் அடிக்கடி தென்காசி சென்று பேராசிருக்கு உதவுகிறான். நவீன் வர்ஷினி இருவரது திருமணம் கோலாகலமாக நடந்தது. சங்கரனை டெல்லிக்கு அழைத்துச் சென்று சுற்றிக் காண்பித்தார்கள் இருவரும். மறந்தும் கூட அவர்கள் ரகசிய ஓலைகளைப் பற்றிப் பேசுவதில்லை. மலைக்குகையில் வனப்பேச்சி இன்னமும் காவல் காத்துக்கொண்டிருக்கிறாள் அந்த ஓலைகளை. சுய நலமில்லாத பேராசை இல்லாத அறிவியல் பரம்பரை வரும் வரை அந்த ஓலைகளை அவள் பாதுக்காப்பாள் நிச்சயம்.

தொடர்ச்சி

2332ஆம் ஆண்டு.

இடம் அகத்திய மலை.

பூங்குளத்துக்கு மேலே இயற்கை ஆராய்ச்சிக் கூடம் ஒன்றை நிறுவுவதற்காக இடங்களை சுத்தம் செய்யும் பணி ரோபோக்களால் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. அதில் ஒரு ரோபோ அங்கிருந்த சில மரங்களைப் பெயர்த்த போது அதன் கண்களில் நெஞ்சு வடிவ தோற்றம் மண்ணில் தட்டுப்பட்டது. தன் லேசர் விழியால் சுற்றிலும் பார்த்த போது பல கருங்கற்களைத் தாண்டி ஒரு குகையும் அதனுள் சில சிலைகளும் தெரிகின்றன. அதில் தெரிந்த வாள், மரப்பெட்டி இவைகளைப் பார்த்து விட்டு மேலதிகாரியான கேமேருக்குத் தகவல் கொடுக்க அவர் வந்து பார்க்கிறார். மேற்கொண்டு அவர் என்ன செய்யப் போகிறார்? அகத்திய ரகசியங்கள் ரோபோ மூலமாகவாவது வெலியில் வருமா?

ஓலைகள் தொடரும்.....
 
#5
excellent story sisமூன்று காலமாக பிரித்து எழுதி இருப்பது அருமை. அகத்தியர் காலnataiku ஏற்றார் போல வர்ணனைகள் ............ பராக்கிரம பாண்டியன் பற்றி மோஹினி தீவு கதையில் குறிப்பிட்டு இருப்பார் கல்கி அவர்கள்....... பொறிகள் அமைப்பது, படங்கள் மூலம் கண்டுபிடிப்புகளை விளக்குவது...... சுவாரசியமாக இருந்தது சில ரகசியங்கள் காக்க பட வேண்டியவை தான்........... நம்ம முன்னோர்களின் அறிவாற்றல் வியக்க வைக்கிறது. அறிவியல் குறிப்போடு உங்கள் கற்பனை திறமும் அந்த, அந்த காலகட்டத்திற்கு எங்களை பயணிக்க வைத்தது....... நன்றி சகோ இந்த அற்புதமான கதைக்கு 1528369553547.png
 

Find SM Tamil Novels on mobile

Latest updates

Mobile app for XenForo 2 by Appify
Top