• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aththiyaayam 19: Akathiyar Kaalam...

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
அகத்தியர் காலம்

அத்தியாயம் 19:

கரியூர் என்னும் அந்த சிற்றூர் தாமிரபரணி நதி பாய்ந்து வளம் செய்யும் மற்றொரு ஊர். அது மலை அடிவாரத்திலிருந்து சற்றே தள்ளி அமைந்துள்ள ஒரு இடம். அந்த ஊரிலுள்ள ஒரு வீட்டின் முன்னால் சிறு கூட்டம் கூடியிருந்தது. கரியூர் அதன் சுற்று வட்டார சிற்றூர்களான அரியநாயகி புரம், கருமலை போன்ற ஊர்களிலிருந்து சிலர் வந்து ஒரு குடிலின் வாயிலில் நின்று கொண்டிருந்தனர். அனைவருமே விவசாயப் பெருமக்கள் அல்லது தச்சு அல்லது இரும்பு வேலை செய்யும் தொழிலாளிகள் தான். அவர்கள் அனைவரையும் ஒரு சேர இப்படி நிற்க வைத்திருப்பது வேரு யாருமல்ல அகத்தியரின் மாணவனான ஆதவன் தான்.

"ஆசான் தியானத்தில் இருக்கிறார்! அவர் உணர்ந்ததும் உங்களை ஒவ்வொருவராக அழைக்கிறேன்" என்று சொல்லி விட்டுப் போனாள் பொன்மகள்.

சிறிய சலசலப்பு எழுந்தது.

"ஐயா! எதற்காக நீங்கள் இங்கே கூடியிருக்கிறீர்கள்?" என்றார் தெருவில் சென்ற ஒருவர்.

"இது என்ன ஐயா? இப்படிக் கேட்டு விட்டீர்கள்? உங்களுக்கு விஷயமே தெரியாதா? எல்லாம் தெரிந்த ஞானியான ஆதவன் என்பவர் இந்தக் குடிலினுள் இருக்கிறார். அவர் முக்காலமும் உணர்ந்தவர். அவரால் எந்த விதமான நோயையும் தீர்க்க முடியும். அத்தனை மந்திர சக்தி வாய்ந்தவர்" என்றார் மற்றொருவர்.

"ஆ! அப்படியா?"

இப்போது ஒரு நடு வயது பெண்மணி இந்தப் பேச்சில் இணைந்து கொண்டாள்.

"ஆம் ஐயா! எனது மகளுக்கு தாள முடியாத கால் வலி உடற் சோர்வு என வாட்டி வதைத்தது. அவளை ஏதோ ஒரு வகையான காற்று தீண்டியிருக்கிறது என அவர் மந்திரிந்து திருநீறு கொடுத்தார். தினமும் இறைவனை வணங்கி பின்னர் அந்த திருநீற்றுக் குளிகைகளை உட்கொண்டால் ஒரு வாரத்துக்குள் சரியாகி விடும் என்று சொன்னார். அவர் சொன்னது போலவே சரியாகி விட்டது. அதோ பாருங்கள் என் மகள் மற்ற குழந்தைகளோடு எப்படி விளையாடுகிறாள் என்று. அவர் ஞானி ஐயா ஞானி" என்றாள் உணர்ச்சியுடன்.

"அது மட்டுமல்ல! என் மனைவிக்கு உணவே செல்லவில்லை. எதைப் பார்த்தாலும் மஞ்சளாகத் தெரிகிறது எனச் சொன்னாள். அதோடு வயிற்று வலி வேறு. மருத்துவர்கள் மஞ்சட்காமாலை என்று சொல்லி கடுமையான பத்தியமும் சில மருந்துகளும் கொடுத்தனர். ஆனால் குணம் தெரியவே இல்லை. அவளை இங்கே அழைத்து வந்தேன். மந்திரித்த நீரும் சில குளிகைகளும் கொடுத்தார். சரியாகி வருகிறது. இன்னும் இரு தினங்களில் என் மனைவி முற்றிலும் குணமாகி விடுவாள். ஆசானுக்கு நன்றி சொல்லி விட்டு இதனை எனது காணிக்கையாகக் கொடுத்து விட்டுப் போகலாம் என வந்தேன்" என்று சொல்லி இளஞன் ஒருவன் தங்கச் சங்கிலி ஒன்றைக் காட்டினான்.

ஒவ்வொருவராக அழைக்கப்பட அமைதி நிலவியது அங்கு. முதலில் உள்ளே சென்றது ஒரு வயதான பெண்மணி. அவள் கூடவே பருவப் பெண் ஒருத்தியும் சென்றாள். அவளை கையைப் பிடித்து அழைத்துச் சென்றாள் அந்த முதியவள். குடிலுக்குள் நுழைந்ததும் ஆதவனை வணங்கினாள். அந்தப் பெண் எங்கோ பார்த்தபடி இருந்தாள்.

"இப்படி அமருங்கள் அம்மணி! உங்களுக்கு என்ன பிரச்சனை?"

"என் மகளுக்குத்தான் ஐயா பிரச்சனை! அவள் பெயர் மலராள். இரு திங்கள் முன்பாகக் கூட நன்றாகத்தான் இருந்தாள். திடீரென ஒரு நாள் எங்கோ நிலைத்த பார்வை, சீவாத கேசம் என ஒரு மாதிரி ஆகி விட்டாள். சில நேரங்களில் கேட்டால் பதில் சொல்கிறாள். பல நேரங்களில் எது கேட்டாலும் மௌனம் தான் பதிலாக வருகிறது. உண்பதில், உடுத்துவதில் எதிலும் ஆர்வம் இல்லை. மண வாழ்க்கையில் ஈடுபட்டு இல்லறம் நடத்த வேண்டியவள் இப்படி இருந்தால் நல்லதல்லவே?அது தான் தங்களிடம் அழைத்து வந்தேன்" என்றாள்.

"வீட்டில் யார் யார் இருக்கிறீர்கள்? இவளது தந்தை எங்கே?"

"அவர் ஒரு கடலோடி ஐயா! கொற்கையிலிருந்து கிளம்பும் தூர தேசக் கப்பலில் சென்று அங்கே வணிகம் செய்து பொருளீட்டுகிறார். இப்போது யவனம் சென்றிருக்கிறார். திரும்ப ஆறு திங்கள் செல்லும்"

"வேறு யார் உன் வீட்டில்?"

"எனது தோழி மற்றும் என் மகளின் தோழி என மொத்தம் நான்கு பெண்கள் இருக்கிறோம் ஐயா! எங்களுக்கு உதவியாக என் சிறிய தந்தையின் மகன் குணாளன் இருக்கிறார். அவ்வளவே!"

"குணாளனுக்குத் திருமணமாகி விட்டதா?"

"இல்லை ஐயனே! அவன் என்ன காரணத்தாலோ திருமணமே தேவையில்லை என நினைக்கிறான். பிரச்சனை அவனுக்கல்ல ஐயனே! என் மகளுக்குத்தான்"

"தெரியும் எனக்கு அம்மணி!" என்று சொல்லி விட்டு தியானத்தில் ஆழ்ந்தான் ஆதவன். அவனது வலக்கை மலராளின் தலை மீது இருந்தது. சில நொடிகள் அபப்டியே அமர்ந்திருந்தவன் கைகளைப் படீரென விலக்கினான்.

"பிரச்சனை மிகவும் சிக்கலானது அம்மணி! உன் வீடு எங்கே?"

"கருமலை ஐயா"

"இவள் இங்கே குறைந்தது பத்து தினங்களாவது தங்க வேண்டும். சில சிறப்பு வழிபாடுகளும் வேண்டுதல்களும் தேவைப்படுகின்றன. உன்னால் முடியுமா?"

"பொருளைப் பற்றிய கவலை இல்லை! இவளது தந்தை செல்வந்தர் தான்."

"நல்லது! உங்களுக்கென ஒரு குடிலை ஏற்படுத்திக்கொள்! தினமும் காலை உதயத்தில் இவளை என்னிடம் அழைத்து வா! பிறகு நீ வெளியில் சென்று விடலாம். என் உதவியாளரான பொன்மகள் அருகிலேயே இருப்பாள். நாங்கள் இருவரும் சேர்ந்து உன் மகளுக்கு சிகிச்சை அளிப்போம்"

"அவளுக்கு என்ன ஐயனே?"

"அவள் இப்படி ஆவதற்கு முன்னால் வீட்டில் திருமணப் பேச்சை எடுத்தீர்கள் அல்லவா?"

"ஆம்! அடையக்கருங்களத்திலிருந்து நல்ல குடும்பம் ஒன்று சம்பந்தம் பேச வந்தார்கள். அந்த மாப்பிள்ளை அரசரிடம் துணைப் படைதலைவனாக இருக்கிறார். சம்மதம் எனச் சொல்லி நிச்சயம் செய்வதற்கு நாள் பார்த்த வேளையில் தான் இப்படி நேர்ந்து விட்டது."

"அந்த சம்பந்தமே முடியும். கவலை வேண்டாம். நான் இன்றே சிகிச்சையைத்தொடங்கி விடுகிறேன். என் ஆசான் கற்றுக்கொடுத்த மிகவும் ஆற்றல் வாய்ந்த மந்திரங்களை நான் உபயோகப்படுத்த வேண்டியிருக்கும். அதன் வீரியத்தை உன்னால் தாங்க முடியாது என்பதால் தான் இந்த சிகிச்சைக்கு நீ வர வேண்டாம் எனக் கூறினேன்." என்றான்.

அந்தப் பெண்மணி வணங்கி விடை பெற்றாள்.

"பொன் மகள்! இவர் தங்குவதற்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடு!" என்று கூறிவிட்டு மீண்டும் தியானத்தில் ஆழ்ந்தான். வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து விட்டு வந்திருந்த அனைவரையும் ஒவ்வொருவராக அனுப்பினாள். இனிய முகத்தோடு எல்லாரது பிரச்சனைகளையும் கேட்டு சிகிச்சை அளித்தான் ஆதவன். சிலருக்கு அப்போதே குணமாகி விடுமென்றும் சிலருக்கு மூன்று தினங்கள் ஆகும் என்றும் நோயின் தன்மைகேற்ப சொன்னான். மந்திரங்களின் ஆற்றலால் தான் இவை நடக்கின்றன என்றும் கூறினான். அவன் முன்னால் காணிக்கைகள் குவிந்தன. அனைவரையும் பார்த்து முடிக்க மதியம் ஆகி விட்டது. நண்பகல் உணவருந்தி விட்டு ஓய்வாக உட்காராமல் மலராளுக்கு சிகிச்சையைத்தொடங்கினான் அவன். மீண்டும் அவன் குடிலுக்கு வரும் போது மாலை ஆகிவிட்டது. இது தான் அவர்கள் சற்றே ஓய்வாக அமரும் நேரம். குடிலிலின் கதவை தாழிட்டு விட்டு வந்தாள் பொன்மகள். இருவரும் எதிர் எதிரே இருந்த பலகைகளில் அமர்ந்து கொண்டனர்.

"மிகவும் களைப்பாக இருக்கிறது பொன்மகளே! சுவை நீர் ஏதாவது செய்திருக்கிறாயா?"

"சித்தரத்தைக் சுக்கு நீரில் பாலூற்றிக் கொண்டு வருகிறேன் இரு" என்று சென்றவள் ஆவி பறக்கும் திரவத்தை இரு கோப்பைகளில் ஊற்றி வந்தாள் ஆவலோடு அதனைப் பருகினான் ஆதவன். சற்று நேரம் மௌனமாக ஆதவனையே பார்த்திருந்தாள்.

"எப்ப அப்படிப் பர்க்கிறாய்?"

"உன் மனதில் என்ன இருக்கிறது எனக் கண்டு பிடிக்க முயன்றேன் ஆதாவா! என்னால் எதுவுமே கணிக்க முடியவில்லை! நீ எதற்காக இந்த சிற்றூரில் வந்து இருக்கிறாய்? எதற்காக மந்திரங்கள் எனச் சொல்லி ஆசான் நமக்குக் கற்பித்த மருத்துவ முறைகளை இழிவு படுத்துகிறாய் என்று என்னால் அறியக்கூடவில்லை! "

கண்களை மூடி அமர்ந்திருந்தான் ஆதவன். அவனது விழிகளில் இரு நீர்த்துளிகள் பளபளத்தன.

"இன்னொரு முறை ஆசானின் மருத்துவ முறைகளை இழிவு படுத்துகிறேன் என்று மட்டும் சொல்லாதே பொன்மகளே! என்னால அதனைத் தாங்க முடியாது. நமது ஆசான் அகத்தியரைப் போன்ற ஒரு மா மனிதர் இனியும் நம் நாட்டுக்குக் கிடப்பார்களா என்பதே என் ஐயம்! ஆனால் என்ன பயன்?"

"என்ன சொல்கிறாய் நீ?"

"நமது ஆசான் எத்தனை வகையாகன காய்ச்சல்களை வகைப்படுத்தியிருக்கிறார்? எத்தனை வகையான மன நோய்களுக்கு சிகிச்சை கண்டு பிடித்திருக்கிறார்? மருத்துவத்தில் மட்டுமல்லால் மற்ற துறைகளிலும் பல அரிய ஆராய்ச்சிகள் செய்து கருவிகள் கண்டறிந்திருக்கிறார். ஆனால் அவை எதுவுமே மக்களுக்குப் பயன்பட வில்லையே பொன்மகளே! அனைத்தையும் தனது குடிலில் உள்ள பெட்டியில் போட்டு பூட்டி வைத்தால் யாருக்கு என்ன பயன் விளையும்?"

"அவை மக்களுக்குப்பயன்படாமல் இல்லையே ஆதவா! தன்னை நாடி வரும் மக்களுக்கு சிகிச்சையும் அளித்துக்கொண்டு தானே இருக்கிறார்? நாமே தலையில் காயம் பட்ட ஒருவனை ஆசானின் பாடசாலைக்கு அனுப்பினோமே? அவன் நலமாக இருக்கிறான் என செய்தி கிடைத்ததே! நீ அதனை மறந்து விட்டாயா?"

"ஆசானின் வெற்றிச் செய்திகளை இந்த ஆதவன் ஒரு நாளும் மறக்க மாட்டான் பொன்மகளே! நன்றாக யோசித்துப் பார்! நமது ஆசான் இரு ஆண்டுகளுக்கொரு முறை உலகின் பல நாடுகளுக்கும் சென்று அங்கிருக்கும் பல புதிய விஷயங்களைத் தெரிந்து கொண்டு வருவார். அதற்குத் தேவைப்படும் பொருளை அளிக்க எத்தனை அரசரகள் தயாராக இருந்தனர்? அமைச்சர்களை நானும் பூங்குன்றனும் தனியாகச் சந்தித்து இறைஞ்சிய பிறகல்லவா அதற்கான பொன்னும் பொருளும் அவருக்குக் கிடைத்தன?"

"ஆம்! மறுக்கவில்லை"

"இத்தனை புத்தி சாதுர்யமும் ஆற்றலும் உள்ள நமது ஆசானுக்கு இந்த நிலை ஏன்? அவர் நினைத்தால் பொதிகை மலையின் அடிவாரத்தில் இருக்கும் தாமிரபரணி நதிக்கரையில் கூட குடில் அமைத்து மக்கள் தன்னைத் தேடி வரும்படி செய்யலாமே? அவரது சிகிச்சைக்கும் அவர் கண்டறிந்த கருவிகளுக்கும் அரசர்கள் மட்டுமல்ல பல செல்வந்தர்களும் காணிக்கைகளை கொட்டத் தயாரக இருக்கிறார்களே! ஆனால் அவர் அதனைச் செய்யாமல் எதற்கு யாசகம் கேட்க வேண்டும்?"

"இது தான் உன் மனக்குறையா?"

"இது மட்டுமல்ல! அவர் தனது கொள்கை இது என கோடிட்டுக் காட்டி விட்டார். அவர் வரையில் அது சரியென்றே வைத்துக்கொள்ளலாம். ஆனால் மாணவர்களையும் அதே போன்ற ஒரு வாழ்க்கைக்குச் சித்தப்படுத்டுவதைத்தான் என்னால் தாள முடியவில்லை."

"புரியவில்லை"

"உதாரணமாக மின் கல கண்டுபிடிப்பை எடுத்துக்கொள்! அதனை நாம் கல்லிடைக் குறிச்சியில் வைத்து மக்களுக்கு காட்டியபோது எத்தனை வரவேற்பு! எப்படி மக்கள் குலவையிட்டு அதனை விழுந்து வணங்கினார்கள். மகிழ்ச்சி கொள்ள வேண்டிய ஆசான் கோபமும் வருத்தமும் அடைந்து எதுவுமே பேசாமல் இரவுக்கிரவாகவே மீண்டும் குடிலுக்குத் திரும்பி விட்டாரே! இது என்ன வகையான பொறுப்புணர்வு?"

"ஆம்! எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது! என்னிடமும் குழலியிடமும் மக்கள் எத்தனை ஐயங்களைக் கேட்டார்கள்? எந்தக் கடவுளை வணங்க வேண்டும்? என்ன மந்திரம் அது? அந்தப் பெட்டியில் தான் அந்தக் கடவுளின் ஆற்றல் அடக்கப்பட்டிருக்கிறதா? இல்லை இது கொள்ளி வாய்ப்பிசாசு எனப்படும் கெட்ட சக்தியின் வேலையா? எனக் கேட்ட போது நாங்கள் வேதிப்பொருட்களைப் பற்றியும் அவற்றின் தன்மை பற்றியும் விளக்க முயன்றோம் ஆனால் அவர்களால் அதனை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லயே. அதனால் தானே ஆசான் கோபம் கொண்டார்"

"இங்கு தான் எனக்கு அவரது மனம் புரியவில்லை பொன்மகளே! அவர்களுக்குப் புரிந்தால் என்ன புரியாவிட்டால் என்ன? உலகில் பிறக்கும் அத்துணை பேரும் நமது ஆசானைப் போற புத்திக்கூர்மையுடன் தான் பிறக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லையே? சிலவற்றை அவர்களால் புரிந்து கொள்ள இயலவில்லை அல்லது புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் என்றால் விட்டு விட வேண்டியது தானே? மக்கள் சொல்வதை ஒப்புக்கொண்டு இந்த மின் விளக்குக்கு இத்தனை பொன் என சொல்லியிருந்தால் நாம் இந்நேரம் நம் நாட்டு மன்னரை விட நாம் செல்வந்தர் ஆகியிருக்கலாம். " என்றான் ஆதவன்.மீண்டும் சில நொடிகள் மௌனமாகக் கடந்தன. ஏதோ நினவுக்கு வந்தவள் போல ஒரு குளிகையையும் சிறிது நீரையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டாள் பொன்மகள்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top