• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

AVAV 13 to FINAL & EPILOGUE

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
அத்தியாயம் – 18



காரை ஓட்டிக்கொண்டிருந்த பிரஜன், த்ரிவிக்ரமனிடம் அலைபேசியில் வந்த தகவலை காண்பித்து, "அண்ணா... இப்போ வீட்டுக்கா இல்ல ஸ்டேஷனுக்கா?", என்று கேட்டான்.

நொடி கூட தாமதிக்காமல், "அந்த விஷயத்தை போலீஸ் பாத்துக்கட்டும். நாம வீட்டுக்கு போலாம்", என்றான். யார் அவன் என்று தெரிந்து கொள்ள த்ரிவிக்கிரமனுக்கு ஆர்வம் இருந்தபோதும்... மனைவி போனில் பேசியபோது அழுததும், நேற்று அவனை வெகுவாக தேடியதையம் அறிந்தவன்... நங்கையை பார்க்க வேண்டுமென முடிவெடுத்தான்.



தவிர அவனுக்குமே ஒரு எண்ணம்... என்னதான் செல்வாக்குள்ள அமைச்சரை தெரிந்திருந்தாலும், காவல்துறையில் மேலதிகாரியைத் தொடர்பு கொள்ள இயலும் என்றிருந்தாலும், எதிரியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற உந்துதலுடன், சம்பந்தப்பட்ட துறைக்கு, சென்றது தவறோ என்று.



அந்த காணொளியால் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்த மனைவியிடம் அல்லவா முதலில் சென்றிருக்க வேண்டும்?. நான் உன்னுடனிருக்கிறேன், கவலைப்படாதே என்றல்லவா நின்றிருக்க வேண்டும்? என்பது ... நங்கை தன்னைத் தேடியிருப்பதை உணர்ந்தபின்தான்..., இத்தனை தாமதமாகத்தான் தோன்றியது.



நேற்று மாலை, விமான நிலையத்தில் அமர்ந்து யோசித்தபோது, தன் மனைவியை ஒருவன் குற்றம் சுமத்துவதா?, அவ்வாறு செய்த அவனை சும்மா விடுவதா? என்று எண்ணினானே தவிர.. அவனது மனைவி, கணவனாக... தான் என்ன நினைக்கிறோம் என்பதைப் பற்றிய குழப்பத்தில் இருப்பாள் என்றிவன் யோசிக்கவில்லை. காரணம் வேறொன்றுமில்லை. அங்கே த்ரிவிக்ரமன், ஆணாக நின்று, அவன் என்ன செய்யவேண்டுமென தீர்மானித்தான், ஒரு மனைவியாக , நங்கை என்ன நினைப்பாள், தன்னிடம் என்ன எதிர்பார்ப்பாள் என்பதை யோசிக்க மறந்தான். ஆங்கு.. அவனிடத்து அறிவு பேசியது... நங்கையின்பால் இருந்த அன்பு.. அவளது சுற்றங்களை வரச் சொன்னது.



தவிர.. த்ரிவிக்-கிற்கு அவ்வீடியோ செய்தி குறித்த சந்தேகம், ஒரு சதமாவது இருந்தால்தானே..., மனையாள் குறித்த இப்பழிச் சொற்கள் உண்மையா என்று யோசிக்கத் தோன்றும்? த்ரிவிக்ரமன், அவனை எந்தளவிற்கு நம்புகிறானோ அதே அளவு தன மனைவி நங்கையையும் நம்புகிறான். அதுவும்...., எதிரியைத் தேடிச்சென்ற இவனது செயலுக்கு ஒரு காரணம். என்ன ஒன்று , அவனது நம்பிக்கையை, தன் மனைவியிடம் வெளிப்படுத்த த்ரிவிக்-கிற்கு சந்தர்ப்பம் அமையவில்லை.



கார் நங்கையின் வீட்டை சமீபித்திருந்தது. வீட்டிற்குச் சென்றதும், நங்கையிடம் த்ரிவிக்-கிற்கு சொல்ல வேண்டியது ஒன்றே ஒன்று மட்டுமே., 'உன்னைப் பத்தி எவன் என்ன சொன்னாலும், நான் நம்பமாட்டேன். எனக்கு உன்னைத் தெரியும்", என்பதே அது. அதைத்தான் யோசித்துக் கொண்டிருந்தான். அவன் சொல்லப்போவது அவனைப் பொறுத்தவரை மிகச் சிறிய வாக்கியமே. ஆனால், அது அவனது அரிவைக்கு எத்தனை வலிமை தரும் என்பதை அவன் கண்டிப்பாக அறியான்.



அங்கே வீட்டிலோ... நங்கைக்கு அண்ணியிடமிருந்து, விதவிதமாக அர்ச்சனைகள் கிடைத்துக் கொண்டிருந்தது.



"நீ பண்றது நல்லால்ல நல்லா., இருக்கிற பிரச்சனைல இருந்தே எப்பிட்றா வெளிய வர்றதுன்னு தெரியாம இருக்கு.. இதுவே நம்மூரா இருந்தா நிலமையே வேற. இப்டி செஞ்சவன, நம்மாளுங்க உண்டு இல்லைன்னு பண்ணிருப்பாங்க.."



"இப்போ என்னடான்னா... வெளியூர்ல வம்பு வேணாம்னு சொல்லச்சொல்ல கேக்காம.. உங்கண்ணன் வேற பத்து தடிப்பசங்கள வரவெச்சிருக்கு. யாரும் யார் பேச்சையும் கேக்கறதில்லன்னு முடிவோட இருக்கீங்களா?"



"இதுல நீ பேட்டிங்கிற பேர்ல... இன்னும் கொஞ்சம் அவன தூண்டி விட்டு இருக்க?, பொண்ணுன்னு அச்சம் கொஞ்சங்கூட இல்லாம... வீராப்பு பேசிட்டு..?"



"அங்க விக்கித்தம்பி வேற டிபார்ட்மென்ட், டிபார்ட்மென்டா சுத்திட்டு கிடக்கு", ஆரம்பித்த அண்ணி முடிப்பதாகக் காணோம்.



காப்பாற்றுவார் என்று நங்கை அப்பாவைப் பார்க்க.. அவரோ என்னாகப்போகிறதோ என்ற கவலையுடன் இருந்தார். சிறிது நேரம் யோசித்தவர்.. ஒரு தீர்மானத்திற்கு வந்தவராக...



"நல்லா... மாப்பிள்ளைக்கு போன் போடு பேசணும்", என்று நங்கையிடமும்...



"சின்னவனே.. வந்த ஆளுங்களை அப்படியே திரும்ப போகச் சொல்ற. ஏதாச்சும் தகறாருன்னு தெரிஞ்சுது ...", தனது அண்ணனின் மகனை மிரட்டினார்.



"நீ உடனே நம்ம எல்லாருக்கும்...", நிறுத்தி நங்கையை பார்த்தபடி.. "மாப்பிள்ளைக்கும் சேர்த்து நைட் பிளைட்-ல சென்னைக்கு டிக்கட்டை போடு.", என்றார் மருமகளிடம்.



"நல்லா... இன்னிக்கு நாம சென்னைக்கு போறோம்.. ஒரு ஒருவாரம் அங்க இருங்க. இங்க இந்த பரபரப்பெல்லாம் ஓயட்டும். அப்பறமா, எல்லாரும் கூடி பேசி நிதானமா, என்ன வேணா முடிவெடுத்துக்கலாம்.", கறார் குரலில் கூறினார்.



அப்பா, கணவனை தொடர்புகொள்ளச் சொன்னதால்... தனது அலைபேசியை, அருகிலிருக்கிறதா எனத் தேடிய நங்கை..., "உங்க இஷ்டம்பா", ஒருவித மரத்த குரலில் பதிலுரைக்க... சரியாக அதே நேரத்தில் த்ரிவிக் உள்ளே வந்தான். நங்கையின் இந்த "உங்க இஷ்டம்பா", வின் மரத்த த்வனி, ஏனோ மனதுள் தைத்தது.



என்னவென்று அதனுள் ஆழ்ந்து போகமுடியாதவனாய்.. "வாங்க மாப்ளே", "வாங்க தம்பி", மாமனாரின் குரலும், மச்சானின் குரலும் அவனைக் கலைக்க... சின்னதான தலை அசைவுடன் இதழ் நோகா புன்னகை சிந்தி, வீட்டைப் பார்வையிட்டபடி, உள் நுழைந்தான். விருந்தினர்களுக்கான படுக்கையறை விரியத் திறந்திருக்க.. அங்கிருந்த சோஃபாவில் நங்கை அமர்ந்திருந்தாள், அருகில் அண்ணி, நங்கையின் இடக்கையைப் பிடித்தபடி அமர்ந்திருந்தார்.



கூடத்திலிருந்து பார்த்தால் அவர்கள் இருப்பது தெரியும். ஆனால், வாயிலில் இருந்து வருபவர்கள் சற்று உள்ளே வந்தால்தான் படுக்கையறையில் நங்கை அமர்ந்திருப்பது தெரியும்.



'மாப்ள' என்ற அப்பாவின் அழைப்பிலேயே, த்ரிவிக்கின் வருகையை அறிந்து, ஆனந்தமாய் அதிர்ந்தவள்.., சட்டென்று எழுந்துவந்தாள்.



நங்கையை த்ரிவிக் பார்த்தான். அவளது நலுங்கிய தோற்றம், இவளைப் பிரிந்து இரண்டு நாள்தான் ஆனதா?, என்றுதான் எண்ணத் தோன்றியது. அதையும் மீறி அவள் கண்களில் ஒளி, முகத்தின் மலர்ச்சி. அது தன்னைக் கண்டதினால் என்று புரிந்தது. அவளது இதயத்தின் அதிவேகத்துடிப்பு, இரண்டே எட்டில் அவளை நெருங்கியிருந்த கணவனுக்குக் கேட்டது. உடனே மனைவியை ஆரத்தழுவி, தோள் சேர்த்துக் கொள்ள ஆசை வந்தது . இருந்தும், வீட்டிலிருக்கும் சுற்றத்தோருக்கு மதிப்பளித்து.. பேசாதிருந்தான்.



எப்போதும்போல, ஊரிலிருந்து வரும்போது கணவனின் கையிலிருக்கும் அமெரிக்கன் டூரிஸ்ட்டரை வாங்க மனைவியின் கைகள் நீள... அதைக் நங்கையின் கையில் கொடுக்க தன்னிச்சையாக அவன் கைகள் உயர... பார்த்தவனின் கண்கள்... அதிர்ந்தது. நங்கையின் உள்ளங்கை சதை முழுவதும் தாறுமாறாக கிழிபட்டிருக்க... விரல் நுனிகளைத்தவிர, ஆங்காங்கே சதை பெயர்ந்து.. செவசெவ-த்திருந்தது. அவனது முகம் தீவிரத்தன்மை கொண்டது.



நங்கையின் அண்ணி, அப்போதுதான் நங்கையின் கைக் கட்டினைப் பிரித்து, டெட்டால் கொண்டு பஞ்சினால் ரணத்தை சுத்தம் செய்துகொண்டிருந்தார். [கூடவே நங்கைக்கு வசவும்.. இலவச இணைப்பாக... (ஒருவேளை வலி தெரியாதிருக்கவோ?)].



த்ரிவிக், பெட்டியை தானே எடுத்துக் கொண்டு, அவளைப்பார்த்து, "காஃபி எடுத்திட்டு வா", என்றுவிட்டு விடுவிடுவென அவர்களது அறைக்குச் சென்றான்.



நங்கை, இரண்டு நிமிடத்தில்.. காஃபியுடன் அவர்களது அறைக்குச் சென்றாள். உடை மாற்றிக்கொண்டிருந்த த்ரிவிக்.. கதவின் தாள் திறக்கும் சப்தம் கேட்டு திரும்ப.. மறுநொடி அவன் மார்பில் தஞ்சமடைந்திருந்தாள் நங்கை நல்லாள். அவள் வேகத்துக்கு சற்றும் குறையாமல், த்ரிவிக்கும் அவளை இறுக்கி அணைத்திருந்தான். காம, காதல் கசடுகளேதுமின்றி கணவனும் , அவனுக்கு சற்றும் குறையாத பேருவகையுடன் மனைவியும், நானிருக்கிறேன் உனக்கு என்ற உறுதியான அரவணைப்பில். பேசினால் இக்கணம் களங்கப்படும். இது மொழியறியா ஆதி மனிதனின் உடல்மொழி, வார்த்தைகளில் வடிக்கயியலாத ஓர் உள்ளுணர்வு.



சிறிது நேரம் பொறுத்து, நங்கையை விடுவித்தவன் கண்கள் பணித்திருக்க, அவளது நெற்றியில் செல்லமாக முட்டி, "லூஸு" என்றான்.. அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளின் கண்களில் கண்ணீர் படலம், நகைமுரணாக முகம் அன்றலர்ந்த மலர் போல் இருக்க.. இதழில் அவன் சொன்ன லூஸு -க்கு சிரிப்பு. இதென்ன சிறுபிள்ளை போல?.

"ஏன்?", நங்கை கேட்டாள்.

" போன்ல அப்படி அழற? "

"தப்பா எடுத்திட்டீங்களோன்னு நினச்சு....",

" லூஸு , உன்னப்போயி தப்பா நினைப்பேனாடீ?", என்க...

"அதான் ஏன்?",

'நீ அழகு', என்று பிறர் சொல்ல கேட்கும் பெண்கள், அதை இன்னும் ஊர்ஜிதப்படுத்த.. மேலும் மேலும், அதைக் குறித்து மற்றவரிடம் கேட்டு, இன்னின்னவாறு நீ அழகாக இருக்கிறாய் என்று அவர்கள் வாய் மொழியில் தெளிவுபடுத்துவத்தைக் கேட்டு இன்புறுவதைப்போலிருந்து , நங்கையின் கேள்வி.
 




lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
மூக்கைப் பிடித்து ஆட்டி, "ஏன்னா நீ என் வொய்ஃப்டி, என் பொண்டாட்டி.", விளையாட்டாய் பதில் சொன்னாலும், அதில் ஒரு தீவிரம் இருந்தது. நீ என் மனைவி என்ற ஒரு காரணம் போதும், உன்னை நான் நம்புவதற்கு. அழகாக சுருக்கமாகக் கூறிவிட்டான்.



"க்ஹும். க்ஹும்.. எத்தனை டீ", என்றிவள் சினுங்க..



த்ரிவிக், தலையை சற்றே பின்னோக்கி நகர்த்தி சிரித்ததும்... நங்கை, "ஸ்ஸ்..", என்றாள். த்ரிவிக் சட்டென விலகி, "என்னடா", என்று கேட்டான். த்ரிவிக் பின்னோக்கி நகர்ந்ததால், அவன் கழுத்தைச் சுற்றியிருந்த நங்கையின் கைகள் உராய்ந்து வலியெடுக்க... மெதுவாக கீழிறக்கியவள், "ம்ச், ஒண்ணுமில்ல... லைட்டா வலிக்குது", கட்டுகள் இல்லாத கைகளின் பச்சை ரணம், மீண்டும் ரத்தம் உகுக்கவா என்றது.



இத்தனை நேரம் இருந்த இதம் மறைந்து, சுறுசுறுவென கோபம் வர, "முட்டாள்.. அறிவில்ல உனக்கு.. என்ன பண்ணிவச்சிருக்க நீ?", த்ரிவிக் நங்கையைக் கடித்தான். இது, இந்த சூழ்நிலையில்.. தன்னால் ஏதும் செய்ய இயலாத ஆற்றாமையினால் வரும் கோபம். மனைவியின் மீதான அக்கறையின் மற்றோரு பரிணாமம்.



"ம்ம்.. என்புருஷன நா கட்டி பிடிச்சிட்டிருந்தேன். இதிலென்ன தப்பிருக்கு?", என்று பகடி பேசினாள்.



அவள் பதிலில் தலையை இடவலமாய் ஆட்டியவாறு நகைத்தவன், "சான்ஸே இல்ல.. நீ ம்யூஸியம் பீஸ்தான்டீ ..முதல்ல கைக்கு கட்டு போடு, வா.. ", கை மணிக்கட்டை பிடித்து, அவளை வெளியே இழுத்துச் சென்றான்..



"என்னங்க..", அவனை நிறுத்தும் முயற்சியில் நங்கை கூப்பிட....



அவளை பேச விட்டால் ஏதாவது சொல்லி சமாளிப்பாள் என்று நினைத்து, "ச்.. பேசாத வா ", கடித்த பற்களுக்கிடையே சொன்னான் த்ரிவிக். அதுவரை அவன் இழுத்த இழுப்பிற்கு வந்தவள், த்ரிவிக் கதவினைத் திறந்து அறையை தாண்டிச் செல்ல.., "விக்..க் ..ரமா", என்று அழுத்தி, பல்லைக் கடித்துக்கொண்டு நங்கை விளித்தாள்.



த்ரிவிக், திரும்பி கேள்வியாக நங்கையைப் பார்த்து, என்ன எனப் புருவம் உயர்த்த... "துண்டோட வெளிய வந்துருக்க லூஸு... ", அவனுக்கு மட்டும் கேட்கும்படி கிசுகிசுத்தாள்.



த்ரிவிக்ரமன், அலுவலகத்தில் ஃபார்மல் உடை , வீட்டிற்கு வந்தால் ஷார்ட்ஸ் டீ ஷர்ட் என்றிருப்பவன், பனியனுடன் கூட வெளியே சுற்றாதவன், இவ்வாறு இடுப்பில் துண்டுடன் வெளியே வர..., நிச்சயமாய் அவன் சுயத்தில் இல்லை என்பதை புரிந்து நங்கை சொன்னாள். கூடவே அவனின் லூஸு விளிப்பையும் அவனுக்கே திருப்பினாள்.



'சட்', தன கையாலேயே நெற்றியில் தட்டி, ஒரு நொடி அசடு வழிந்தவன்.. கூடத்தில் அமர்ந்து இவர்களைப் பார்த்தவாறிருந்த மாமனாரையும் ப்ரஜனையும் கண்டு, நொடியில் முகம் மாற்றினான். முறைப்பாக [ கெத்தாக ??] நங்கையைப் பார்த்து, "போ போய் கட்டு போடு", என்றான்.



அதற்குள் அடுத்த அறையிலிருந்து அண்ணி வரும் அரவம் கேட்க.. நொடியில் அவனது அறைக்குள் அந்தர்த்யானமானான்.



நங்கை, ப்ரஜனுக்கு சிற்றுண்டி கொடுத்து உபசரித்தாள். பின் அவன் விடைபெற.. காலை உணவு முடிந்த பின், மோகனசுந்தரம் அனைவருக்கும் சென்னை செல்ல, பதிவு செய்திருப்பத்தைச் சொல்லி, கூடவே 'ஒரு வாரம் ரிலாக்ஸ்டா இருங்க, மிச்சத்தை அங்க முடிவு பண்ணிக்கலாம்', என்றுரைத்து மறுத்துப் பேச முடியாதவாறு முடித்துவிட்டார்.



அதற்குள் வைதேகியும், ஸ்ரீராமுலுவும், நங்கையிடம் பேசியிருந்தனர். இருவரும் கிளம்பி டெல்லி வருவதாக கூற... அவர்களிடமும் மோகனசுந்தரம் பேசி, நங்கையையும், த்ரிவிக்-கையும் சென்னை அழைத்துவருவதாக சொல்லி, அவர்களை அங்கேயே இருக்கச் சொல்லி விட்டார்.



த்ரிவிக், அவனது அலுவலகத்தில் ஒரு வாரத்திற்கான மாற்று ஏற்பாடுகளை, திட்டமிட , அவனது கணினியில் அமர்ந்தான். நங்கை.. இன்னும் ஒரு படி மேலே போய்.. அவளது காரியதரிசியை வீட்டிற்கே வரப் பணித்தாள். பின் அவருடன் பேசி, ஒரு வாரம் தான் இல்லாது சமாளிக்குமாறு அறிவுறுத்தி.. நேற்று நிகழ்ந்ததைப் போல்.. இன்னொரு முறை நிகழக்கூடாதென வலியுறுத்தி, அவரை அனுப்பி வைத்தாள்.



Aththiyaayam 19



கோபம், துவேஷம், பொறாமை இவை உடன்பிறப்புக்கள்.. எந்த ஒன்று வந்தாலும், மற்றிரண்டும் பின்னோடே வந்துவிடும். கோபம், எத்தனை பெரிய அறிவாளியையும் முட்டாளாக்குகிறது. எங்கு துவேஷம் இருக்கிறதோ, அங்கு தெளிவு காணாமல் போகிறது. எங்கு பொறாமை நுழைகிறதோ, அது அவன் முடிவுக்கு பிள்ளையார் சுழி போடுகிறது.



சூரஜ் தாக்கூர், டெல்லியின் பிரதான பகுதிகளில் மழலையர் பள்ளிகள் நடத்தி வருபவன். தமிழ் உட்பட பல மொழிகளை, அந்தந்த பிராந்திய ஏற்ற இறக்கங்களுடன் பேசத்தெரிந்தவன். இத்தனை வருடத்தில், எத்தனை பிள்ளைகளின் பெற்றோரைப் பார்த்திருப்பான்? அவரவர்க்குத் தகுந்தாற்போல் பேசி அவர்களை வாடிக்கையாளர் ஆக்குவதில் விற்பன்னன். பேச்சில் கவனமெடுத்தவன்.. சிறிது சேவைத்தரத்திலும் கவனம் செலுத்தியிருக்கலாம். என் செய்ய?



நங்கை நல்லாள், இவனுக்கு தொழிற்முறை போட்டியாக மாற... முதலில் ஃபிரான்சீஸ் தொடர்பை ஏற்படுத்தி, பின் தனது பணபலத்தால்.. அவளுடைய பள்ளியையும் சொந்தமாகிக் கொள்ள நினைத்தான். அதற்கு நங்கை ஒப்புக்கொள்ளாதாது மட்டுமன்றி.. இவனது விடுதி பிள்ளைகள் பலரும் அங்கு மாறுதலாக... மக்களிடம் நங்கையின் நம்பிக்கையைக் குலைத்தாக வேண்டும் என்று எண்ணம் கொண்டான். அதற்கு தோதாக, ரியாஸ் அவன் கண்களில் பட.. அவனுடன் பேசியதில், எதிரிக்கெதிரி நண்பன் என்றானான்.



த்ரிவிக் வெளியூர் சென்ற நேரத்தில், ரியாஸின் நண்பன் அமர்ஜோத் [வேன் டிரைவர்/அடிபட்டவன்], குர்ஷரனைக் கடத்தச் செல்லும்முன், சரியான நேரத்தில்.. ரியாஸ் அக்குழந்தையின் அம்மாவின் அலைபேசியை திருட, பின் அமர் ஜோத்தால் அக்குழந்தை வதைபடுவதை... ரியாஸ் காணொளிபடுத்தி.. சூரஜிடம் கொடுத்து.. நங்கையை சிக்கலில் மாட்டி விடுவதென்று திட்டமிட..., ஹும் ... நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் .... ? மனிதனின் திட்டமிடுதல்கள், நிச்சயமாக இறையருள் என்ற ஒன்று இருந்தாலன்றி சாத்தியமாகாது.



த்ரிவிக்கின் வெளியூர் பயணம், மொபைலை திருடுவது, குழந்தையைக் கடத்துவது, ஒதுக்குப்புறமான பாழடைந்த வீட்டிற்கு கொண்டு செல்வது வரை அனைத்தும் சரியாகச் செல்ல, ரியாஸ் வீடியோ எடுக்க வரும் நேரம், யாரும் எதிர்பாராமல் தாமதமானது. அந்த இடைப்பட்ட நேரத்தில் நங்கை அமர்ஜோத்தினை கண்டுபிடித்து, குழந்தையைக் காப்பாற்றி, தப்பிச் செல்ல நினைத்த அவனையும் சராமாரியாகத் தாக்கி நிலை குலைய வைத்தாள். அமர்ஜோத் தெருவில் மயங்கி விழுந்த அந்த சமயம், அவ்விடம் வந்த ரியாஸ், சரி இதையாவது பதிவு செய்வோம் என்று, நங்கை..அமர் ஜோத்-தை அடிப்பது, ப்ரஜன் வந்து நங்கையை அழைத்துச் செல்வது.. இவற்றை படமாக்க... பின் அதைத் திரிக்கும் வேலைகளை சூரஜ் செவ்வனே செய்தான்.



த்ரிவிக்ரமன் நங்கை நல்லாள் திருமணத்தை வாழ்த்தி பத்திரிகையில் வந்த புகைப்படத்தை கடைசியாக அந்தக் காணொளியுடன் இணைத்தான்.



நங்கையின் கையில் அமர்ஜோத் அகப்படுவான், என கண்டிப்பாக சூரஜ் நினைக்கவில்லை. அதே நேரத்தில், கண்முன்னே அடிபடுவது உயிர் நண்பன் என்ற போதும், ரியாஸ் அதைக் காணொளிப்படுத்தினானே தவிர, அவனைக் காப்பாற்ற விழையவில்லை. தானும் மாட்டிக்கொண்டால் என்னாவது ..? ஆஹா!! என்னே அவன் நட்பு..!!



தன் பதிவினை சூரஜிற்கு அனுப்பி, பேசியபடி அதற்குண்டான தொகையையும் பெற்றுக்கொண்டு.. ரியாஸ் தலைமறைவாகிவிட்டான்.



ஒற்றை வீடியோ அனுப்புவதற்காக, சூரஜ் எத்தனை முன்னேற்பாடுகளை செய்திருந்தான்? நங்கையின் தைரியமான பேட்டியில்... அத்தனையும் தரைமட்டமானது. இவனது திட்டம், இவனே எதிர்பாராத திருப்பமாக, நங்கையை பிரபலப்படுத்தியது. எந்த தொழிலை முடக்க நினைத்து செய்தானோ அதுவே, அவளது தொழிலின் விளம்பரமானது. இதை கண்டு அவன் பொறாமைத்தீயில் வெந்து போக.., மூளை அதன் செயல்திறனை இழந்தது.



அப்போதும் மிச்சம் மீதிருந்த உள்ளுணர்வின் எச்சரிக்கையினால்.. அவனுடைய அலைபேசியில் இருந்து த்ரிவிக்கிற்கு அழைக்காமல், அவனது ஓட்டுனரின் எண்ணிலிருந்தே பேசினான்.



என்ன பிரிவின் கீழ், யார் கொடுத்த புகாரின் பேரில் என்னைக் கைது செய்கிறீர்கள், என்று சூரஜ் கைதாக முரண்டு பிடித்து கேட்க.., தலையில் இடியாய் இறங்கியது காவலர்களின் மறுமொழி. அமர்ஜோத்-தினால் கடத்தப்பட்ட குழந்தையான குர்ஷரன் கவுர்-ன் பெற்றோர்கள், 'குழந்தையை கடத்தியதாக', காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சூரஜ் கைது என்று அவர்கள் தெரிவிக்க.. மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானான்.



அக்குடும்பம் சற்று பழமையில் ஊறிய குடும்பம், தவிர போலீஸ், கோர்ட் கேஸ் என்று எந்த வம்பினையும் விரும்பாத குடும்பம் என்று தெரிய வந்ததால்தான், சூரஜ்... குர்ஷரனை தேர்ந்தெடுத்ததே.. அவர்களே இதன் பின் விளைவுகளைக் குறித்து கவலை கொள்ளாமல், இப்படி புகாரைக் கொடுத்திருப்பார்கள் என்பதை நம்ப இயலாமல்தான் போனான்.



அதற்குப்பிறகும், காவல் துறை அதிகாரியிடம், நங்கையிடம் அவனது ட்ரைவர் பேசியிருக்கலாம் என்று சூரஜ் சாதிக்க... அங்கிருந்த காவலர் ஒருவர், வீட்டிலிருந்த CCTV கருவியைப் பார்த்ததும், அதன் பதிவினைக் காணச் சென்றார். சூரஜின் துரதிர்ஷடம்.. அவன் வீட்டின் கண்காணிப்பு கருவியிலேயே ட்ரைவரிடமிருந்து மொபைலை வாங்குவது, பின்னர் சூரஜ் பேசியது, மணி நிமிடம் நொடி உட்பட அனைத்தும் தெளிவாக பதிவாகி இருந்தது. இது கடவுள் செயலன்றி வேறென்ன?



ப்ரஜன் மற்றும் த்ரிவிக்ரமன் வீட்டிற்கு வந்த சில மணி நேரங்களில் மேற்சொன்ன நிகழ்வுகள் நடக்க.... விஷயம் கேள்விப்பட்ட த்ரிவிக் மற்றும் நங்கை, அடைந்த அதிர்ச்சியை வார்த்தையில் சொல்ல இயலாது. வீடியோ குறித்து வெளியானபோது, அவப்பெயர் வந்ததே என்றுதான் நங்கை கவலை கொண்டாளேயன்றி, பயம் வரவில்லை அவளுக்கு. ஆனால் இப்போது, அப்பெண் குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்படுமே என நங்கை பயந்தாள். பிரஜன் த்ரிவிக்ரமன் மற்றும் நங்கை மூவரும் அவர்கள் வீட்டிற்கே சென்றனர்.



அங்கு அவர்கள் புகார் அளிக்கச் சொன்ன காரணம், இவர்கள் மறுமொழி பேசக்கூட முடியாததாக இருந்தது.
 




lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
அத்தியாயம் 20



நங்கை விமானத்தில் ஏறி இருக்கையில் அமர்ந்தவள்தான், அருகில் கணவன் இருக்க... சாய்ந்துகொள்ள அவன் தோள் இருக்க, கேட்பானேன்? மூன்று மணி நேரமும் மிக அருமையான நிம்மதியான உறக்கம். த்ரிவிக்ரமனுக்கோ, வெளியூரில் பாதியில் விட்டு வந்த வேலைக்கு அனுப்பியவன் சரியாக செய்வானா என்று குழப்பம் ஒரு பக்கம். நிறுவனங்களுக்கு மென்பொருள் திட்டமிடுதலில், அவனைத்தவிர, வேறு யார் செய்தாலும் ஏதேனும் ஒரு குறையிருப்பதாகத் தோன்றும், நண்பர்களைக்கூட அனுப்ப மாட்டான். வடிவைப்பை நண்பர்கள் செய்தாலும், கடைசியாக த்ரிவிக் பார்த்து, திருப்தியான பின்னர்தான் அது அந்நிறுவனத்திற்கு கைமாறும். அனைத்துமே, இவன் நேரடியாக இருந்து செய்ய வேண்டியவை.



அவ்வாறு நிற்கும் வேலைகளை மின்னஞ்சலாக அனுப்பும்படி அலுவலகத்தைப் பணித்திருந்தான். ஏற்கனவே தரவிறக்கம் செய்திருந்தபடியால்... அவற்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். கிட்டத்தட்ட ஒருமணி நேரத்தில் வேலையை முடித்தவன், அருகில் அசந்து தூங்கும் மனைவியைக் கண்டான். கைகளின் கட்டுக்கள் தெரியாதிருக்க, கையுறை அணிந்திருந்தாள், கூடவே குளிருக்கு இதமாக ஸ்வட்டரும் அணிந்திருந்ததால், வித்யாசமாக ஏதும் தெரியவில்லை.

அவனது இருக்கைக்கு பின்னால், மைத்துனனும், அவர் மனைவியும், அவர்களுக்கு பின் இருக்கையில் மாமானார். இது திட்டமிடா பயணம், நேற்றைய தினத்திற்கு முன்பு வரை.. திட்டமிடாத செயல் எதையும், அவன் செய்ததில்லை.



நங்கையை அறிவதற்கு முன்பு இருந்த த்ரிவிக்ரமனாக இருந்திருந்தால், இவ்வாறு தலைக்குமேல் நியமனம் செய்யப்பட்ட வேலைகள் அணிவகுத்துக் காத்திருந்தால், "நீங்க நங்கையை கூட்டிட்டு போங்க மாமா, எனக்கு வேலை இருக்கு ", என்று சர்வநிச்சயமாக, நிர்தாட்சண்யமாக கூறி இருப்பான். அதென்னமோ, இருவரின் குறுக்கேயும் மேகத்திரை இருந்தாலும், இப்பொழுதெல்லாம் அவள் கூடவே இருக்க வேண்டுமென தோன்றுகிறது. உடல் தேவைகளைக் கட்டுப்படுத்தியவனுக்கு உள்ளத்தேடல்களைக் கட்ட முடியவில்லை. இதோ, வேலைகளை போட்டது போட்டபடி விட்டுவிட்டு, எப்படியாவது சமாளிக்கலாம், என்று கிளம்பிவிட்டான்.



குர்ஷரனின் வீட்டில் அவளது பெற்றோருடனும், தாத்தாவுடனும், நங்கை வாதிட்டது நினைவில் வந்தது. ஏன் குழந்தை கடத்தப்பட்டதாக புகாரினை அளித்தீர்கள் என்று நான்கையும், த்ரிவிக்ரமனும் கேட்டதற்கு, இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நிகழும்போது, அதை தடுக்க நினைப்பவர்களுக்கு, நம் சமூகம் உறுதுணையாக நிற்கும் என்பதைத் தெரிவிக்க இதைவிட வேறு வழியில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.



இதற்கு என்னவென பதிலுரைப்பது?, இவ்வாறான குற்றங்கள் தடுக்கப்பட வேண்டுமானால், முதலில் குற்றங்கள் குறித்து புகாரளிக்க சம்பந்தப்பட்டவர்கள் முன்வர வேண்டும், பேர் கெட்டுவிடுமே? ஊர்பேசுமே? என்றெல்லாம் யோசித்து வாளாவிருந்தால், பதிவே செய்யப்படாத குற்றங்களின் தண்டனைகள் பற்றி யார் பயப்படுவார்? அவ்விடங்களில் குற்றச்செயல்களைத் தடுக்க வருபவர்களையும் ஊக்கப்படுத்துவது சமூகக்கடமையல்லவா? ஆயினும், புகைப்படங்கள் எதுவும் தரவில்லையாதலால், குர்ஷரன் குறித்த விபரங்கள், ரகசியமாக வைக்கப்பட வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரியிடம் வேண்டுகோள் விடுத்ததாக கூறி வாதிட, ஏதும் மறுத்துப் பேச இயலவில்லை.



பின் மதியத்திலேயே, அவர்களுடனான சந்திப்பு முடிந்ததால், மோகனசுந்தரம் திட்டமிட்டபடி இரவு விமானத்தில் அனைவரும் கிளம்பிவிட்டனர்.



நங்கை குடும்பத்தினர் அனைவரும் சென்னை வந்து சேரும் போது , இரவு மணி பதினொன்றானது. இவர்களை கூட்டிச் செல்ல. நங்கையின் பெரியண்ணன், வேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல், தானே டொயாட்டோவுடன் வந்து விமான நிலையத்தில் காத்திருப்பதாகக் கூறினான்.



அதிக பயணப்பொதிகள் ஏதும் இல்லாததால், விமானம் வந்திறங்கிய பத்து, பதினைந்து நிமிடங்களில், அனைவரும் வெளியே வந்து விட்டனர். ஒரு போன் செய்ததும், வாகன நிறுத்துமிடத்தில் காத்திருந்த பெரியண்ணன வந்து விட்டார். கிட்டத்தட்ட நடுநிசியானதால், அதிக வாகன நெரிசலின்றி இருக்க, மோஹனசுந்தரத்தின் வீட்டிற்கு செல்லும் ஒருமணிநேர பயணத்தை, அரைமணி நேரமாகச் சுறுக்கியது.



வண்டியில் சலசலத்தவர்கள், வீடு வந்து சேர்ந்ததும், பெரியண்ணி விழித்திருந்து இவர்களுக்கு ஊர்க்கண் பட்டுவிட்டதாகக் கூறி, அந்த நேரத்திலும் நங்கையையும் த்ரிவிக்ரமனையும் அமரவைத்து, திருஷ்டி சுத்திப் போட்டார். அவர், 'நாளைக்கு எல்லாக் கதைகளும் பேசலாம். இப்போ போய் தூங்குங்க' எனவும்..., அசதியிலும், அரைத்தூக்கத்தில் இருந்த அனைவரும் உறங்கவென அவரவர் அறைகளுக்குச் சென்றனர். நங்கை, மாடிக்குச் செல்ல... த்ரிவிக் உடன் சென்றான்.



த்ரிவிக் உடை மாற்றி, படுக்கைக்கு வந்ததும் நங்கை, அவளது ஸ்வெட்டர், கையுறையை கழட்டியவாறு. "அவங்க கம்பளைண்ட் குடுப்பாங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல தெரியுமா?", என்று சொல்லி கட்டிலில் அமர்ந்தாள்.



"ஆனா, அவங்க சொன்ன காரணம் சரிதானே?, சோ அவங்க பண்ணினதுதான் கரெக்ட்."



"ம்ம்ம் .சரிதான்.. ஆனா, அந்தக் குட்டிக்கு பியூச்சர்-ல ஏதாவது ப்ராபளம் வந்தா?"



"அவளுக்கு இப்போதான் அஞ்சு வயசு, கொஞ்ச நாள்ல இதெல்லாம் மறந்துடுவா, இப்போவே சொசைட்டி ரொம்ப முற்போக்கா மாறிட்டு இருக்கு, இன்னும் அவ காலத்துல... இது ஒண்ணுமில்லன்னு ஆயிடும். இப்போ நாம தூங்கலாமா?"



"நான் பிளைட்-ல நல்லா தூங்கிட்டேன், இப்போ ரொம்ப பிரெஷ்ஷா இருக்கு."



"நான் நேத்திலேர்ந்து தூங்கலை, வெரி டயர்ட். குட் நைட்.", த்ரிவிக் கொட்டாவி விட்டு, கண்களை மூட...



"சரியான சாமியார்", அவன் காதில் கேட்கமாறு வேண்டுமென்றே முணுமுணுத்தாள்.



கேட்டவன்... "சாமியாராக்கினவங்க அதைச் சொல்லக் கூடாது, பேசாம பட்றீ", கண்களைத் திறக்காமல் த்ரிவிக்.



"இப்போ சம்சாரியாகச் சொல்றேன். ஓகேவா? ", அவன் காதருகில் கிசுகிசுக்க....



சின்னதாக பெருமூச்சு விட்டு.. ஆதரவாக அவளை அணைத்தவாறு, "ம்ப்ச்., கை காயம் சரியாகட்டும்"



"அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்....?", மெல்லிய சிணுங்கலுடன் நங்கை கேட்க....



கண்களைத் திறந்து அவளைப் பார்த்து, "அடியேய், உன்னோட.... ", என்று சிரித்த விக்ரமனுக்கு வெட்கம் வந்து தொலைத்தது.



நங்கை அவளது கெத்தை விடாமல்.. "ம்ம்ம்.. என்னோட... ?", என்று புருவம் உயர்த்த... த்ரிவிக்ரமனின் மொத்தமும் அவுட்...



அவளை இழுத்து மேலே போட்டு, "முடில ... ரொம்ப பேசற ..நீ...", கட்டிக் கொண்டு சிரித்தான். அதற்குமேல் முன்னேறும் எண்ணமெல்லாம் இல்லை.



அதைப் புரிந்தவளாய்.. அவன் மார்பிலிருந்து தலையை தூக்கி, கண்ணடித்தவாறு..., "காந்தக் கண்ணழகா.. லுக்கு விட்டு கிக்கு ஏத்தும் முத்து பல்லழகா..", பாட்டு பாட..



இப்படி ஒரு பாட்டு இருப்பது தெரியாத த்ரிவிக்... "யாரு .... நானா லுக்கு விடுறேன்?", அவனுக்கு நங்கை அடிக்கும் லூட்டியை பார்த்து சிரிப்பு பொங்கியது..



அடுத்த வரியான, "முத்தம் ஒன்னு தாடா", நங்கை பாட...



"டா... வா...உன்ன.....", குனிந்து அவள் இதழ் கொய்ய..., தன்னிலை மறந்தவளாய் நங்கை மயக்கத்தில் இருக்க.... த்ரிவிக், தனது மற்றொரு கையால் கனகாரியமாக முந்தானையை கொண்டு அவளது கைகளை கட்டினான்..



அப்புறம் பாட்டு .....

சாரி..... மறந்து போச்சு..
 




lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
அத்தியாயம் 21

அடுத்து வந்த நான்கு நாட்களும், விருந்து உபசாரங்களில் கழிய, இதற்கிடையே த்ரிவிக்கின் பெற்றோர்களும் வந்து சென்றனர். த்ரிவிக் நங்கை மனம் குளிரும்படி... இருவரும், விருப்ப ஓய்வு பெறுவதாக எழுதிக் கொடுத்து விட்டதாகவும், இனி மகன், மருமகள், மற்றும் பேரப்பிள்ளைகளுடன்தான், அவர்கள் காலம் என்று முடிவெடுத்து விட்டதாகவும் கொசுறு செய்தியாக கூறினர்.



மறுநாள், விடுமுறை தினமாதலால், அனைவரும் ஹாலில் குழுமி இருக்க... மோகனசுந்தரம் பேச்சைத் துவக்கினார்...



"என்ன முடிவெடுத்திருக்கீங்க மாப்ளே?"



"நாங்க என்ன செய்யணும்னு நீங்க நினைக்கிறீங்க மாமா?",



"டெல்லி வேண்டாம், இங்க சென்னைலேயே என்னோட பிசினெஸ் இருக்கு, அண்ணன் பசங்க தான் பாக்கறாங்க, ஆனா அவங்களுக்கும் வேற வேற ஊர்ல பிரான்ச் வெச்சு கொடுத்திருக்கேன். பாக்டரியையும், ஹெட் ஆபிஸும் நான் பாக்கறேன். அதை இனிமே நீங்க பாருங்க.. இல்ல இந்த லைன் பிடிக்கலையா, சொல்லுங்க, உங்க பிசினெஸையே இங்க ஆரம்பிக்கலாம், பணத்தைப் பத்தி கவலை வேணாம்", நயமாக கூறினார்.



"மாமா, சப்போஸ் இங்க பிசினெஸ் ஆரம்பிக்கனும்னு முடிவெடுத்தாலும் எனக்கு உங்க பணம் தேவைப்படாது, டெல்லில, சென்ட்ரல் கவர்ன்மென்ட் ப்ரொஜெக்ட்ஸ் சிலது என்னை நம்பி இருக்கு. என்னைன்னா நான் மட்டுமில்ல, என் பிரிண்ட்ஸ்-ம் சேர்த்துதான். அவங்களை கன்சல்ட் பண்ணாம, தன்னிச்சையா முடிவெடுக்க முடியாது", இவன் நிறுத்தவில்லை... அதற்குள்...மோகனசுந்தரம் குறுக்கிட்டு "அவங்களும் இங்க வரட்டும் மாப்ளே, நான் தனியா நீங்க வரணும்னு சொல்லவேயில்லை"



"எல்லாம் சரிதான் மாமா, நங்கை என்ன சொல்றான்னு நாம கேக்கவேயில்லயே?"



"சின்னப் பொண்ணு அவ, அவளுக்கென்ன தெரியும்? செய்-ன்னா செய்ச்சிட்டு போறா.. இல்லன்னா உங்க இஷ்டம் பா,ன்னு சொல்லுவா.. நீங்க சொல்லுங்க மாப்ள.?"



"இல்ல மாமா, அவளுக்கு நல்லாவே தெரியும், எதை எங்க எப்படி பண்ணனும், எப்படி பேசணும்-னு அவளுக்கு தெரியும், இப்போ நான் உங்க பிசினெஸ் பாக்கணும்னு நினைக்கிற நீங்க, ஏன் நங்கையை பாத்துக்கச் சொல்லல? அவ பிளானிங் பக்காவா இருக்கும். அவளை விட்டிருந்தா, இன்னமும் ரெண்டு பாக்டரியே ஆரம்பிச்சு இருப்பா.. சரி அதை விடுங்க.., உங்களுக்கு நங்கை முடிவு தேவைப்படாம இருக்கலாம், பட் எனக்கு நங்கை என்ன யோசிக்கிறான்னு தெரியணும்", தீர்மானமாக கூறினான். சற்று தள்ளி, ஊஞ்சலில் அண்ணிகளுடன் அமர்ந்திருந்தவள் முகத்தில் பெருமை.



"அப்போ ஏற்கனவே பேசி முடிவு பண்ணிடீங்கன்னு சொல்லுங்க?", மண்ணச்சநல்லூரில் இருக்கும் காடு கழனியை விட்டு விட்டு, அதன் அருகே திருச்சியில் மோகனசுந்தரத்தின் தொழிற்சாலையில் தயாராகும் கட்டுமான கம்பிகளின் கிடங்கு, விற்பனைப்பிரிவுகள் என சொந்தமான தொழில் இருந்தும், சென்னைக்கும் திருச்சிக்குமாக அலைந்து கொண்டிருக்கும் ஆதங்கத்துடன் கூறினார், பெரியண்ணன். த்ரிவிக் சென்னை பொறுப்பை ஏற்றால், இவர் குடும்பத்துடன் சொந்த ஊர் சென்று நிம்மதியாக இருக்கலாமே?



"சே சே.. நாங்க இன்னும் அந்த டாபிக்கே ஆரம்பிக்கல" அவசரமாக கூறியவன் "உங்கள நம்ப வைக்கணுங்கிறதுக்கு சொல்லல, நிஜமா இன்னமும் அந்த யோசனைக்கு போகவேயில்ல", என்றான் த்ரிவிக் உண்மைக்குரலில். ஆனால் அவனுக்குத் தெரியும், நங்கை இதற்கு உடன்பட மாட்டாளென்று.



"ஏண்டி.. எதையாவது பேசி கீசி, தம்பிய சம்மதிக்க வச்சி நம்மூருக்கே வந்துடலாமில்ல? வடக்கையும் தெக்கயும் எம்புட்டு நாளுக்கு அலையறது?", இது நங்கையிடம், அருகே அமர்ந்திருந்த பெரியண்ணி.



"நாங்க பேசவேயில்லண்ணி.", என்றாள் நங்கை யதார்த்தமாக.



நங்கையின் பின் மண்டையில் செல்லமாக தட்டி., "அய்ய..., கூறு கெட்டவளே.. பேச்ச பாரு பேச்ச?", என்று மிகவும் சிவந்து வெக்கப்பட்டார்.



'இவ்ளோ வெக்கப்படற அளவுக்கு நாம என்னடா சொன்னோம்?" என்றானது நங்கைக்கு. பின் அவரது எண்ணவோட்டம் புரிந்து, 'ச்சு. சும்மாயிருங்கண்ணி", என்றாள்.



"நங்கை... ", த்ரிவிக்ரமன் அழைக்க.. அவனருகில் வந்தவள்.. பதவிசாக , "சொல்லுங்க ", எனவும்,



"மாமா, நம்பள இங்க வந்துட சொல்றார், நீ என்ன சொல்ற ?", நேரடியாக வினவ...



எப்போதும் அப்பாவை எதிர்த்து பேசும் வழக்கமில்லாதவள், தலை குனிந்து , "நீங்க ரெண்டு பேரும் என்ன முடிவெடுக்கறீங்களோ, அப்படியே பண்ணலாம்", வருத்தமோ, சந்தோஷமோ எதையும் வெளிப்படுத்தாத, ஒருவித குரலில் கூறினாள்.



"ம்ச். நான் கேட்டது நீ என்ன நினைக்கிற-ன்னு ?", கடினமாக கேட்டான்.



"அதான் சொல்லிட்...", நிமிர்ந்து த்ரிவிக் -கைப் பார்த்தவள் பேச்சு அப்படியே நின்றது. தீவிரமாக நங்கையை முறைத்தவன் கண்கள், "இப்போ சொல்றயா இல்லையா?"என்று நங்கையை மிரட்டியது.



வெகுவாக முயன்று மனதில் தைரியத்தை வரவழைத்து, "அது அது வந்துப்பா... அங்க எல்லா மீடியா முன்னாலயும் பெரிசா பேட்டி கொடுத்தாச்சு, ஸ்கூல், யூனிவர்சிட்டி ஆரம்பிக்கறேன்னு", மென்று விழுங்கியவள்.... , தந்தையின் கூர்மையான பார்வையில் .. பதட்டம் வர... வேகமாக "பின்னால அதெல்லாம் பண்றமோ இல்லையோ, இப்போ ... ஆரம்பிச்சி இருக்கறத அம்போன்னு விட்டுட்டு வரமுடியாதில்லையா?, எத்தனை பசங்க? இந்த நாலு நாள்ல மட்டும், முப்பத்தேழு பசங்க வந்திருக்காங்க, இடமே பத்தலைன்னு, நம்ம வீட்டுக்கு கொஞ்சம் பெரிய பசங்கள அனுப்பி மேனேஜ் பண்ணிருக்காங்க. இதுக்கும் மேல அட்மிஷனுக்கு வந்தவங்கள இடமில்லைன்னு திருப்பி விட்டிருக்காங்க", திக்கி திணறி ஒருவழியாக சொல்லி விட்டாள்.



"அதென்னமா வேலை?, இங்க ஒரு நாள்ல அந்த காசை எடுத்துடலாம் ", சலித்தார் தந்தை.



"பணத்துக்காக இல்லப்பா.. அங்க நான் சம்பாதிச்ச பேருக்காக, அவங்க எம்மேல வச்சிருக்கிற நம்பிக்கைக்காக நான் அங்க போணும்பா", இப்போது குரலில் நம்பிக்கை, அதன் பிரதிபலிப்பாக பேசும் வார்த்தைகளில் தைரியம்.



"அந்த தொழில்தான் வேணும்னா இங்கயே ஆரம்பிச்சுக்கோ நல்லா", இப்படியொரு விவாதம் தொடர்வது அவருக்கு பிடிக்கவில்லை. மகள் தன் கண் முன் இருக்கவேண்டும் என்பது ஒரு புறம் என்றாலும், மீண்டும் எந்த சிக்கலிலும் மாட்டிக்கொள்ளக் கூடாதென்பது, தந்தையாக அவர் எண்ணம். தவறில்லையே?



"உனக்கு "... "உங்க யாருக்குமே தெரியாது ... நீங்க வந்த ரெண்டு நாளா மீடியாக்காரங்க நம்ம வீட்டை சுத்தி சுத்தி வந்தது, யாரையும் உள்ள விடக்கூடாதுன்னு ஸ்ட்ரிக்ட்-ஆ செக்யூரிட்டிக்கிட்ட சொல்லி வச்சிருந்தேன். நல்லதோ கெட்டதோ ஊர் வாயில எம்பொண்ணு விழக்கூடாதுன்னு நான் யோசிக்கறது ஏன் புரிய மாட்டேங்கிது உங்களுக்கு ? ", ஆதங்கமாக கேட்டார்.



சரி, இனி அவளது எண்ணங்களை உடைத்துப் பேசுவது என்று முடிவெடுத்து விட்டாள். "புரியுது ப்பா. ஊரென்னப்பா ஊரு?, இன்னிக்கு ஒன்னு பேசும் நாளைக்கு அதையே மாத்திப் பேசும். ஆனா.. அதுக்கு பயந்து நான் வர முடியாது."



"ப்பா, எனக்கான டெஸ்டினி அங்கதான்னு தோணுது, இப்போ ஆரம்பிச்ச ப்ளே ஸ்கூல் கூட பிளான் பண்ணி ஆரம்பிக்கல... ஏதோ ஒரு வாக்குவாதம், என்னென்னமோ பேச்சு.. ஆனா கடைசில இப்படி ஒரு க்ரீச் ஆரம்பிக்கறேன்னு முடிவு. இதுதான்-ன்னு தீர்மானிச்சு நான் பேசல.. அதுவா வந்தது. இதோ, கண் மூடி திறந்த நேரத்துல... தானா வளந்து நிக்கிது. பிசினெஸ்ன்னு பாத்தாகூட, ஆரம்பிச்ச இந்த சின்ன டைம் ஸ்பான்-லேயே போட்ட இன்வெஸ்ட்மென்ட் திரும்ப எடுத்துட்டேன். பெருமைக்கு க்காக சொல்லல்ல... "



"அதே மாதிரிதான், போன வாரம் ஏகப்பட்ட கன்ஃபியூஷன், ஆனா இன்டர்வ்யூ-ல, எனக்கே இதான் சொல்றோம்னு தெரியாம தானா வந்தது, தெரியாம சொன்னாலும், பேச்சு பேச்சுதான், நீங்க சொல்லுவீங்களேப்பா... வார்த்தைகள்-ல நிக்கணும்-ன்னு, நானும் அதையேதாம்ப்பா சொல்றேன், முடியாதுன்னு ஒரு சின்ன தாட் வந்தாலும், நான் நிறுத்திடுவேன். ப்ளீஸ் எஸ் சொல்லுங்கப்பா"., நீளமாக விளக்கம் கொடுத்தவள் மகளாக அல்லாமல், தனது பிரதி பிம்பமாக தெரிந்தாள்.



அவர் .. சென்னையில் தொழில் துவங்க முடிவெடுத்த பின்... அதற்கு, பெற்றோரிடம் கடுமையாக போராடி நின்றது நினைவலையில் வந்தது. தவிர இதுவரை தன் சொல்லுக்கு எதிர்ப் பேசாத தன் மகள் கேட்டதை கொடுத்தால்தான் என்ன என்று தோன்றியது.



"சரி மா. செய், உனக்கு என்ன தோணுதோ... செய், என்ன வேணும் கேளு. நான் தரேன் ", முழுமனதோடு, விகசித்துக் கூறினார்.



" தேங்க்ஸ் பா.. தேங்க்யூ தேங்க்யூ தேங்க்யூ வெரி மச்", கண்களை இறுக்க மூடி, முகம் முழுவதும் சிரிப்பால் நிறைந்திருக்க, பூரித்துச் சொன்னவள்... தந்தையின் கைகளை பிடித்து குலுக்கியவாறே, "லவ் யூ பா", என்றுவிட்டு அண்ணியிடம் சென்றாள்.
 




lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
அத்தியாயம் 22

மறுநாளே, மதிய உணவு நேரத்தில் வீட்டிற்கு வந்த தந்தையிடம் முதலீடு குறித்து ஆலோசனை கேட்கவென வந்து நின்றாள். எதையும் ஒத்திப் போடும் எண்ணம் இல்லை. நங்கை, அவளிடம் உள்ள கிலோ கணக்கில் இருக்கும் தங்கத்தில் பாதியை, பணமாக மாற்றினாலே இவள் துவங்க நினைத்துள்ள பள்ளிகளுக்கும், பல்கலைக்கழகத்துக்குமான இடத்தினை வாங்கிவிட முடியுமென்பது அவள் கணக்கு.



கட்டிடம் எழுப்ப.. உள்கட்டமைப்பு வசதிகளை செய்ய, அரசாங்கத்திடம் தகுந்த அனுமதி வாங்க, என பல செலவுகளையும் சரியான திட்டமிட்டு அதன் பின்னர், இடத்தைக்காட்டி வங்கிக்கடன் பெற்று விடலாம் என்ற எண்ணமும் இருந்தது. ஆனால், தற்போது மேலெழுந்தவாரியாக பார்த்ததில், முதலில் கையிருக்கும் தங்கத்திற்கு வரிகட்ட வேண்டிய அவசியம் வருமோ என்ற சூழல். இரண்டாவது, விஷமாக ஏறும் நிலத்தின் மதிப்பு.



எந்த ஒன்றிணைத் தாமதித்தாலும், நட்டம் இவளுக்கே. நங்கையின் முடிவைக் கேட்டவர், "உன் விருப்பம்போல செய்மா... ஆனா அம்மா போட்ட நகைகளை மட்டும் வித்துடாத. அவ உனக்குன்னு பாத்து பாத்து வாங்கினா.", மனைவியின் நினைவில் சிறிது கலங்கியதால் மோகனசுந்தரத்தின் குரல் கரகரத்தது.



"இல்லப்பா, அம்மா, பாட்டி, நீங்க கொடுத்ததுல நகையா, இருக்கற எதையும் மாத்தப் போறதில்ல, ஆனா அரை கிலோ, ஒரு கிலோ பார்களை கொடுத்துடலாம்னு இருக்கேன் பா.", ஒரு நாளில் திடீரென மாரடைப்பால் விட்டுச் சென்ற தாயை மனதுக்குள் நினைத்து, அவரது உணர்வுக்கு மதிப்பளித்து, பதிலுரைத்தாள்.



"அப்பா, நாங்க ரெண்டு மூணு நாள் அவங்க வீட்டுக்கு போகலாம்னு.. ",



" தாராளமா போயிட்டு வாடா, நான் ஆபிஸ் போகணும், ரெண்டு மணிக்கு ஒருத்தருக்கு அப்பாயின்மென்ட் கொடுத்திருக்கேன், மீட்டிங் முடிச்சதும், வந்துடறேன், என்ன? வந்ததும் சாயங்காலமா கிளம்புங்க, சரியா?"



"ஓகே பா... நீங்க கிளம்புங்க", விடை கொடுத்தவள், நேராக அறையில் தனது கணினியுடன் அவனது வேலையில் மூழ்கி இருந்த கணவனிடம் வந்தாள்.



நங்கை, இவளது திட்டத்தினைக் கூற... ஒரு கண் கணினியிலும், மனம் முழுதும் வேளையிலும் இருக்க... அரைகுறையாக கேட்டவன்..., "ரியல் எஸ்டேட் பத்தில்லாம் எனக்கு தெரியாது, டெல்லி பத்தி சுத்தி இருக்கிறவங்க சொன்னதுதான். நம்ம பிளாட் தவிர, வேற எதோட விலையும் எனக்குத் தெரியாது."



"என்னதான் தெரியும் உங்களுக்கு, இந்த பொட்டிய தொற்றாத தவிர... ?", சடைத்துக் கொண்டாள்.



"பொறுமையா, அங்க போயி எல்லாத்தையும் பாத்துக்கலாம்."



"அவசரமில்லைங்க.. ஆனா, இன்வெஸ்ட்மென்ட் மொபிலைஸ்-க்கு ஒரு ஐடியா கிடைக்குமில்ல அதான், உங்களுக்கு தெரியுமான்னு கேட்டேன்."



"தெரிஞ்சவங்க இருக்காங்க, விசாரிக்கலாம், நிதானமா செய்யலாம் ஓகே?"



"யா.. டன் டன்", பின் திட்டமிட்டபடி, மாமியார் வீட்டிற்கு சென்று இரண்டு நாள் சீரடி விட்டு, "இந்த அகடாமிக் இயர் முடிஞ்சதும், அங்க வந்துடுவோம்' , என்ற உறுதிமொழியை அவர்களிடம் வாங்கி கொண்டு, தலை நகரம் பயணித்தனர், தம்பதிகளிருவரும்.



இடைச் சொறுகலாக, ப்ரஜன் காதலிக்கும் கோவையைச் சேர்ந்த பெண்ணின் பெற்றோர்களை சந்தித்துப் ப்ரஜனைப் பற்றி கூறி, வட இந்தியாவைச் சேர்ந்தவன் என்ற தயக்கமோ பயமோ தேவையில்லை, அருமையான குணம் கொண்டவன், தாராளமாக பெண்ணைக் கொடுங்கள், என்று பலவாறாகப் பேசி.. அவர்களின் சம்மதத்தை வெற்றிகரமாக பெற்றாள்.



அப்பெண் முகத்தில் நல்ல திருத்தமான அழகோடு, அறிவுக்களை சொட்டியது. வீட்டைச் சுற்றிக் காண்பிப்பதாக கூறி தனியாக நங்கையை அழைத்துச் சென்றவள், "அக்கா... அவங்க சொன்னாங்க, நீங்க எப்படியும் எங்க பேரன்ட்ஸ்-சை கன்வின்ஸ் பண்ணிடுவீங்கன்னு, நான் நம்பவேயில்ல, தேங்க்ஸ் கா.. ஐம் ஆன் கிளவுட் நைன் ", கட்டிப் பிடித்து கன்னத்தில் இச். இச். கொடுத்தவளை, விஷமாகமாக பார்த்து புன்னைகைத்து, 'ப்ரஜனை நினச்சு எனக்கு கொடுக்கிறயா?, முத்தத்தோட நிறுத்திக்கோம்மா... "எனவும்...



"க்கா, போங்கக்கா.. ", என்று வெட்கியவள்.. "உங்களைப்பத்தி நிறைய சொல்லுவாங்க, உங்க மேனரிசம், நாம சிம்பிளாத்தான டிரஸ் பண்ணுவோமா, நம்ம மாதிரி நீங்களும் சிம்பிளா, ஆனா எலகண்ட்டா டிரஸ் பண்ணுவீங்கன்னு.. நிறைய சொல்லுவாங்க..", ப்ரஜனைப் பற்றி பேசும்போது அவளது முகம் மிளிர்ந்தது.



"ப்ரஜன ரொம்பப் பிடிக்குமோ ?", கேட்க.. கோவைப் பழமென சிவந்து சிரித்தாள்.



டெல்லி சென்றவளுக்கு, வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருந்தது, வீடியோ பரபரப்பெல்லாம் முடிந்திருக்கும் என்ற எண்ணத்தில் நிதானமாக வந்தவர்கள், இப்படி மாட்டிக் கொண்டனர். போக்ஸோ-வில் சூரஜ் தாக்கூர் மற்றும், அமர்ஜோத் உடனடியாக கைது செய்யப்பட, இரு நாட்களுக்கு பிறகு, உத்தரபிரதேசத்தில் ரியாஸ் கைதாகினர். புகார் தெரிவித்தவர்கள், வெளிச்சத்திற்கு வந்து நடந்தவைகளை விளக்க, தலைநகரம் நங்கையைத் தூக்கிவைத்துக் கொண்டாடியது.



இதன் தாக்கமாக.. நங்கை த்ரிவிக், சென்னை சென்றுவிட்டதாகத் தெரிய, அங்கும் மீடியாக்காரர்கள் மோகனசுந்தரத்தின் வீட்டை அணுகினர். ஆனால், இவர்கள் அங்கு வரவேயில்லை என்று சாதித்து விட்டார், மனிதர். அங்கு தொல்லைகள் இல்லாமல் இருந்தவர்களுக்கு, இங்கு ஒளிந்து கொள்ள இயலாமல் போனது. கேமரா பிளாஷ்களில் இருந்து தப்பிக்க... நங்கை த்ரிவிக்-கின் முதுகுக்கு பின் ஒண்டினாள்.



பழி சொன்னபோது துணிந்து நின்றவளால், புகழ் சேரும்போது கேமராவின் முன் நிற்க துணிவு வரவில்லை. நங்கையை விட்டு த்ரிவிக்ரனைப் பிடித்துக் கொண்டனர். "நீங்க யாரவது அப்படியொரு சூழ்நிலைல இருந்திருந்தா என்ன செய்வீங்களோ அதைத்தான், என் மனைவியும் செய்தாங்க. அவங்களை பெரிய்ய ஹீரோ ஒர்ஷிப் குடுத்து சங்கடப்படுத்தாதீங்க ப்ளீஸ்..., அவங்களுக்கு அது பிடிக்காது....", என்று தான் மனதில் நினைப்பதையே சொன்ன கணவனை கண்ணிமைக்காது பார்த்தாள்.



அவன் கையை நீட்டி... "போலாமா?", என்று கேட்க..., கண்களில் காதல் நிறைய..., மனமுவந்து, "உங்க இஷ்டம் .... ", என்று புன்னகை சிந்தி அவனுக்கு கைகொடுத்தாள்.



அவனது அரிவையான நங்கையை முற்றும் அறிந்தவனாக...... கணவனாக...... அவளை காப்பவனாக... அரணாக நின்றான் த்ரிவிக்ரமன்.

அரிவை அறிந்தான்....
 




lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
Epilogue -1



நங்கை, த்ரிவிக் டெல்லி வந்த பின் நான்கைந்து மாதங்கள் இடங்களைத் தேர்வு செய்வதில் செலவழிந்துபோக, இதனிடையே நங்கை கருவுற்றாள். வீடு கொண்டாடியது ஒரு புறமென்றால், தலைநகரும் சேர்த்துக் கொண்டாடியது.



இடங்களை தேர்ந்தெடுத்து வாங்கியவள், அங்கு அந்த சீதோஷ்ண நிலைக்கேற்ப , ஒரு வருட காலத்திற்குள் வளரும் மரங்களை நட்டு, ஏக்கர் கணக்கில் வாங்கிய நிலங்களை சீர் செய்து வளமாக்கினாள். பிள்ளைப்பேறு, அதன் வளர்ப்பு என இரண்டு வருடங்கள் உருண்டோரோட... பின்னர் அவளது கனவுகள் ஒவ்வொன்றாக ஈடேற ஆரம்பித்தது.



நங்கைக்கு தோள் கொடுக்க, கணவன் த்ரிவிக் நிற்க, தோழனாக ப்ரஜன், மற்றும் அவனது மனைவி லதா [நம்ம கோயமுத்தூர் பொண்ணு] கூடவே இருந்தனர். பள்ளி நிர்வாகத்தினை, ஸ்ரீராமுலு தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். வைதேகி, பல்கலைக்கழக மேலாண்மை குறித்து படித்து தெளிவான திட்டமிடலுடன் இருந்தார்.



பள்ளிகள் ஆரம்பித்து மூன்று வருடங்களுக்குப் பிறகே, நங்கை மொழிந்த பல்கலைக்கழகம் உருவானது, இரவு பகல் பாராமல், அனைவரும் உழைத்து, யூனிவர்சிட்டி நிர்மாணித்தனர்.



மாணவர்கள் குறித்த இரு கொள்கைகளில், நங்கை உறுதியாக இருந்தாள். முதலாவது... கண்டிப்பாக, இவளது பள்ளி கல்லூரிகளில் சேர்பவர்கள், கீழ்ப்படிதல் என்ற இயல்பை நிச்சயம் பெற்றிருக்க வேண்டும், எவனொருவன் கீழ்படியக் கற்றுக் கொள்கிறானோ, அவனே உத்தரவிடத் தகுதியானவனாகிறான்.



இரண்டாவதாக, மாணவர்கள் அனைவரும் ஐந்தாம் வகுப்பிலிருந்து, கண்டிப்பாக தொழிற்கல்வி ஏதாவது ஒன்றை படித்தே ஆக வேண்டும்.நங்கையைப் பொறுத்தவரை இயன்முறைக்கல்வி [பிராக்டிகல்], படிப்போடு சம்பந்தப்பட்டது. இவளது குழுமத்தில் படித்த எந்த ஒரு மாணவனும், திறமையுடையவனாகவே வெளிவரவேண்டும் என்பதில் உறுதியுடன் இருந்தாள்.



காரணம்... வரவிருக்கும் பத்து ஆண்டுகளில், திறமையான இளைஞர்கள் ஐம்பது விழுக்காட்டிற்கு குறைவாக இருப்பர் என்கிற த்ரிவிக்ரமன் காண்பித்த புள்ளிவிவரக் கணக்கு. கூடவே அவன் சொன்ன ஒரு 'கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள் ; கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்', யுக்தி. மெத்தப் படித்திருந்தாலும், ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாதல்லவா?.



அவளது கல்விச் சாலைகளில் நீக்கமற நிறைந்திருக்கும் வாசகம்



எங்கே உன் கைகளோ.... அங்கே உன் பார்வை...

எங்கே உன் பார்வையோ.. அங்கே உன் மனம்...

எங்கே உன் மனமோ .. அங்கே உன் லயிப்பு...

எங்கே உன் லயிப்போ .. அதுவே உன் செயல்......



உனது செயலே நீ..........



யதோ ஹஸ்த; ததோ த்ருஷ்டி:

யதோ த்ருஷ்டி; ததோ மனஸ்:

யதோ மனஸ்; ததோ பாவ: [bhaava]

யதோ பாவ ; ததோ ரஸ;
 




lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
Epilogue 2



சரியாக நங்கை தனது பல்கலைக்கழகத்தினைத் திறந்து பத்து வருடங்களுக்குப் பிறகு :



அது ஒரு பதவி ஏற்பு விழா நிகழ்ச்சி. அரங்கம் முழுவதும் பெரிய பெரிய தலைவர்கள் குழுமியிருந்தனர்.



ஆ! அதோ அங்கே யார்? அட நம் நங்கை .... கையில் ஒரு எட்டு வயது குழந்தையை கையில் பிடித்தபடி அமர்ந்திருந்தாள். அருகே வேறு யார் நமது திரிவிக்கிரமன்தான், அவனருகே அவனையொத்த சாயலில் நின்ற சீர் நெடுமாறனாக, அவனது மகன் அமர்ந்திருந்தான். கூடவே ப்ரஜனும், அவனது மனைவியும்... அவளது மடியில் சுமார் ஆறு வயது மதிக்கத்தக்க பையன் பிரஜன் ஜாடையுடன் மிக உரிமையாய் அமர்ந்திருந்தான்.



ஏதோதோ பேசிக்கொண்டிருந்த பரஜன், த்ரிவிக் இருவரும், ஒலிபெருக்கியில் நங்கை நல்லாள் என்ற அழைப்பு வர... இருக்கையை விட்டு நங்கை எழுந்து சென்றதும், ப்ரஜன் அவளைப் பார்த்தவாறு "அண்ணா இப்போவாவது தீதி தோழியா எதிரியான்னு புரிஞ்சுகிட்டீங்களா?", த்ரிவிக்ரமனிடம் கேட்டான்.



"ம்ம்ம்... என்று கண்ணை மூடி யோசித்த த்ரிவிக், "அவ என் தோழி ப்ளஸ் எதிரி, எந்த நேரம் எப்படி இருப்பான்னு சொல்ல முடியாது, திடீர்னு திட்டுவா அப்பறம் அவளே சரியாயிடுவா, ஆனால் ஒரு விஷயம் கட்டாயம் தெரியும். என் வொய்ஃப் செஞ்சா அது சரியாத்தான் இருக்கும்.", பதில் சொன்ன த்ரிவிக்-கின் முகத்தில் கர்வத்துடன் கூடிய பெருமை இருந்தது.



சிரித்த ப்ரஜன் திடீரெனக் கேட்டான் "எனக்கு ஒரு டவுட்.., மேடம் தமிழ்ல உறுதிமொழி சொல்லி பதவியேத்துப்பாங்களா இல்ல... ஹிந்தி , இங்கிலீஷ்-லயா? "



"சந்தேகமே வேண்டாம் நிச்சயமா தமிழ்லதான்", த்ரிவிக்ரமன் அறுதியிட்டுக் கூறினான்.



"ஏன்? ஏற்கனவே சொல்லிட்டாங்களா?", ப்ரஜன் கேட்க..



"எங்கடா? பேசறதுக்கே அவ பி.ஏ. கிட்ட அப்பாயின்மென்ட் வாங்க வேண்டியிருக்கு , மேடம் அவ்ளோ பிஸி, நைட் வர்றா, பசங்க என்ன பண்ணினாங்க, வீட்ல என்ன நடந்ததுன்னு கேள்வி கேக்கத்தான் அவளுக்கு நேரம் சரியா இருக்கு.. நைட் நான் தூங்கறதுக்கு முன்னயே அவ தூங்கிடறா. இதுல எங்க பேசறது? ஆனா எனக்கு நிச்சயமா தெரியும்.. நங்கை தமிழ்ல்லதான் பதவியேத்துப்பா.", கொஞ்சம் கேலி போல ஆரம்பித்து.. சீரியஸாக த்ரிவிக் பேசிக்கொண்டிருக்கும்போதே நங்கையை பதவியேற்க அழைத்திருந்தார்கள். அங்கு சென்றவள், "நங்கை நல்லாள் த்ரிவிக்ரமன், ஆகிய நான் ........................", என்று தெள்ளு தமிழில் உறுதியளித்து, பாராளுமன்ற உறுப்பினராகவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும் பதயேற்றாள். ஆம்.



அன்று நடந்த அந்நிகழ்வு.... ஊடகங்களின் உதவியால், நங்கையை இந்த இடத்தில் நிறுத்தியது. தேர்தலில் நிற்க வேண்டிய அவசியமின்றி, ஆட்சியாளர்கள், நங்கையை நேரடியாக ராஜ்யசபை உறுப்பினர் ஆக்கினர்.



தனக்கு தகுதியோ, அனுபவமோ இல்லை என்ற அவளது எதிர்ப்புகள், ஒன்றுமில்லாமல் போயின. அவள் பள்ளி, பல்கலைக்கழகத்தின் ஒழுக்கக் கோட்பாடுகள், விதிமுறைகள், பொழுதுபோக்கு விளையாட்டுகள், உணவு மேலாண்மை... என்றவற்றை பார்த்த அரசாங்கம், "உன் திறமை, ஆக்கப்பூர்வ எண்ணங்கள், தன்னலமில்லா குணம், இந்த பிள்ளைகளோடு மட்டும் நின்றுவிடாமல், ஒட்டு மொத்த நாட்டின் எதிர்கால தலைமுறைக்கே தேவை", என்று அவளை பதவியிலமர்த்தி அவள் திறமைகளை பரீட்சித்துப் பார்க்க முடிவு செய்தது. ஆம் பரிட்சைதான். தேச சேவை என்பது நாம் நினைப்பது போல் மலர் கிரீடம் அல்ல.



செய்யும் ஒவ்வொரு செயலும் பலராலும் விமர்சிக்கப்படும், என்பதை அறிந்தும்... அவ்விமர்சனங்கள் நேர்மறையோ, எதிர்மறையோ.... அனைத்தையும் தாங்கி தாண்டி கடமையை செய்ய வேண்டும் அதற்கு அர்ப்பணிப்பான மனம், எப்பக்கமும் சாயாத மனஉறுதி வேண்டும். நங்கை நல்லாளின் உறுதிதான் ஊரறிந்ததாயிற்றே?



இவளுக்கான கடவுள் நிர்ணயித்த இலக்கினை... வந்தடைந்தாள் நம் நங்கை நல்லாள். அவள் பாரதம் போற்றும் நங்கை ஆனாள்.



முற்றும்
 




umasundaram

மண்டலாதிபதி
Joined
Feb 17, 2018
Messages
303
Reaction score
1,342
Location
canada
உணர்வு அண்ட் ஆக்க பூரணமா ஒரு கதை ....
அதுவும் கடைசி எபிசொட்ஸ் அப்படி விறுவிறுப்பா போனது ...
நன்றி ஆதி :love::love:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top