You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.


Current Krishnan - Part 2.

Srija Venkatesh

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
கரண்டு கிருஷ்ணன்......பார்ட் 2.

கோபம் தலைக்கேற சாப்பாட்டுத்தட்டை அப்படியே தூக்கி எறிந்தான். "நான் கீரை ஆயணுமா? நான் என்ன பொட்டையாடி? இப்ப கீரை ஆயச் சொல்லுவ அடுத்து முறைவாசல் செய்யச் சொல்லி கூவுவ? நீ இன்னாடி நெனச்சுக்கினு கீற? பக்கத்து வூட்டுல இருந்து சாம்பாரு, சோறு எங்கக்கா கொடுத்திருக்கும், அப்புறம் என்ன ......நீ இருக்க? ஒரு கீரை வெக்க முடியலையா உனக்கு?" என்று கோபமாய் எழுந்தவனை கண்டு பயந்து அப்படியே நின்றாள். நிச்சயம் இன்றைக்கு மதியத்துக்கு தன்னை துவையல் செய்து விடுவான் என்று வேணி முடிவு செய்த நேரம் வாசலில் மெக்கானிக் மோகனின் ஆள் வந்து நின்றான். "அண்ணாத்தே உன்னை முதலாளி இட்டுக்கினு வரச் சொன்னாரு" என்றான். வேணிமேல் இருந்த கோபமெல்லாம் அந்தச் சிறுவன் மேல் திரும்ப கையை ஓங்கிக்கொண்டு ஓடி வரும் கிருஷ்ணனைக் கண்டு அலறி ஓடினான் அவன். கோயில் வாசலில் இருந்த சிலர் அதைக்கண்டு சிரிக்க ஆத்திரம் அதிகமானது அவனுக்கு. அவர்களை நோக்கி வசை பாடியபடி அடிக்கவும் போகவே அவர்களும் மாயமாக மறைந்தார்கள். அவனது கோபம் வலுவிழந்ததால் வேணி தப்பினாள். அன்றிலிருந்து முடிகிறதோ இல்லையோ எப்படியாவது கீரையும் புளிக்குழம்பும் செய்து விடுவாள்.

பழைய கதையை நினைத்துக்கொண்டே தனது மீசையை தடவிக்கொண்டான். எனக்கு வயதானால் என்ன? இன்னமும் வீரம் குறையவில்லையே? நான் கொஞ்சம் அமைதியாக இருப்பதால் தான் எல்லாரும் என்னை ஏளனம் செய்வது போல நடந்து கொள்கிறார்கள். அதிலும் மருமகள் அம்பிகாவிற்கு மாமனார் என்ற மரியாதையே இல்லை. எனக்கு எதிரேயே புருஷனை அதட்டுகிறாள், வேலை வாங்குகிறாள். வேணியும் ஒன்றும் சொல்லாமல் பார்த்துக்கொண்டிருக்கிறாள். ரெண்டு பொட்டைங்களும் சேர்ந்து வீட்டையே ஆளுதுங்க. இன்றிலிருந்து பழைய மாதிரி அதட்டி உருட்டினால் தான் சரி வரும் என்று தீர்மானம் செய்து கொண்டான்.

காலை உணவு முடிந்ததும் நேராக மைத்துனன் கடைக்குப் போய் கீரைக்கட்டு, மீன், எண்ணெய் என எல்லாம் வாங்கிக்கொண்டான். நேரே மருமகளிடம் சென்று பையைக் கொடுத்தான். "இந்தா இதுல சாளையும் கீரையும் இருக்கு. கீரை கடஞ்சு சாளையைப் பொறிச்சு வையுங்க! சொம்மா சாம்பாரு, ரசம்னு வெச்சீங்க நான் மனுஷனா இருக்க மாட்டேன் ஆம்மா சொல்லிப்புட்டேன்" என்று உறுமி விட்டு கோயில் வாசலில் மீண்டும் வந்து உட்கார்ந்து கொண்டான். அப்போது தான் கோய்யாப்பழக்காரர் பழம் கொடுத்ததும் கிருஷ்ணன் சாப்பிட்டதும். வீட்டினுள்ளே மாமியாரும் மருமகளும் மெல்லிய குரலில் பேசுவது தெரிந்தது. மனதுக்குத் திருப்தியாக இருந்தது.

"போட்ட போடுல பொட்டைக்களுதைக பயந்திருச்சுங்க! இனிமே வழக்கம் பொலத்தான் இருக்கும். நான் யாரு?" என்று மனதில் நினைத்துக்கொண்டு மீசையை தடவிக்கொண்டான். சற்று நேரத்திற்கெல்லாம் மருமகள் அம்பிகா கீரைக்கட்டோடு வந்து அதனை கிருஷ்ணன் முன் தொப்பெனப் போட்டாள்.

"மாமா! இதை ஆஞ்சு தருவீங்களாம். அத்தை சொல்லிச்சு! எனக்கு சாளையை உரசவே நேரம் சரியாயிரும்" என்று சொல்லிவிட்டு நிற்காமல் போய் விட்டாள். திகைத்துப் போனான் கிருஷ்ணன். கோயிலில் அமர்ந்திருந்த பாண்டியன் மெல்ல சிரித்தார். அது ஆத்திரத்தை அதிகரித்தது.

"இன்னாடி நெனச்சுக்கினீங்க? என்னிய கீரை ஆயச் சொல்லுற? முன்ன ஒருக்கா நடந்தது மறந்திருச்சா?" என்றான் ஓங்கிய குரலில்.

"இந்தா அம்பிகா! மதியத்துக்கு கீரை ஓணும்னா அவரை சொன்ன வேலையைச் செய்யச் சொல்லு! இல்லாங்காட்டி கம்முனு இருக்கச் சொல்லு! இப்படிக் கூவுனாருன்னா ஒண்ணியும் நடக்காது. இன்னமும் இவர்க்குப் பயந்துக்கின்னே இருக்க முடியுமா?" என்று சொல்லி கத்தியோடு வந்து அமர்ந்து வெங்காயம் நறுக்கத்துவங்கினாள் வேணி.

"எனக்கு உன் சோறும் ஓணாம்! மீனும் ஓணாம். மானங்கெட்டு பொம்பளை சொன்ன வேலையைச் செஞ்சுட்டு சோறு துண்ண நான் ஒண்ணியும் கணேசன் இல்ல" என்றான்.

"மாமா! அவரைப் பத்தி ஏதாவது சொன்னா நான் சும்மாயிருக்க மாட்டேன். உங்களுக்கு சோறு வேணாம்னா போங்களேன்" என்று சொல்லிவிட்டுப் போய் விட்டாள் அம்பிகா. வேணி மருமகளின் முகம் வழித்து திருஷ்டி கழித்தாள். இருவரையும் அடித்துத் துவைத்து விடலாமா என்ற அளவுக்குக் கோபம் வந்தது. ஆனால் அம்பிகா திருப்பி அடித்தால் மானமே போய் விடுமே எனத்தயங்கினான்.

வாழ்க்கையை வெறுத்து விட்டது கிருஷ்ணனுக்கு. ஏதாவது செய்தாக வேண்டும் என்று துடித்தது அவனது கௌரவம். ஓவெனக் கத்தினான். "இனி இந்த வூட்டுல நான் கை நனச்சேன்னா என் பேரு கிருஷ்ணன் இல்லடி, நீங்களா என்னைக் கெஞ்சினாத்தான் சாப்பிடுவேன். இல்லை நான் சாவுற வரையில உங்க கையால சோத்தை வாங்கித்திங்க மாட்டேண்டி ! எனக்கு ஆயிரம் ஹோட்டலு . காசை விட்டெறிஞ்சா பிரியாணியே போடுவான். " என்று கத்தி விட்டு புறப்பட்டான். புத்தியில் கோபம் நிறைந்திருந்ததால் நடை தெரியவில்லை. பிரிட்ஜடி வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடைந்தான். அங்கிருந்த ஒரு தெரிந்த பஞ்சர் ஒட்டும் கடையில் அமர்ந்து கொண்டான். உள்ளம் தீயாக எரிந்தது.

நேரம் ஆக ஆக வயிற்றில் இருந்த இட்லிகள் காணாமல் போய்க்கொண்டிருந்தன. கடைக்காரன் வாங்கிக்கொடுத்த டீ எரியும் நெருப்பில் மெழுகானது. எங்கோ வீட்டில் மீன் பொறிக்கும் மணம் இங்கே வருவதாக உணர்ந்தான். வேணி மீனைப் பொறித்தால் அப்படியே அல்வா போல சாப்பிடலாம். ஒரு முள் இருக்காது. நினைப்பே நாவில் நீர் ஊறச் செய்தது. அதோடு கீரைக் கடைசலும் புளிக்குழம்பும் இருந்தால் சும்மா அள்ளி அள்ளி சாப்பிடலாமே ? பக்கத்துக் கடையில் பிரியாணி விற்பனை ஆகிக்கொண்டிருந்தது. பேசாமல் அரைப்பிளேட் வாங்கிச் சாப்பிட்டால் என்ன? வீட்டுப்பெண்களுக்கு பாடம் கற்பித்தது போலிருக்கும். நான் சாப்பிடாமல் வேணியும் சாப்பிட மாட்டாள், வேணி சாப்பிடல்லைன்னா அம்பிகாவும் சாப்பிடாது. அப்ப என்னிய வந்து கெஞ்சுவாங்க! என்று மனம் என்ணியதை மூளை வழி மொழியவில்லை. "அவளுங்க சாப்பிட்டுட்டு சட்டியையும் கவுத்திருவாங்க! நம்ப முடியாது" என்று உண்மையை உரைத்தது மூளை.

பையில் இருக்கும் காசுக்கு பிரியாணி வாங்கலாம். ஆனால் வீட்டுச்சுவை போல வராது. அதுவும் போக வரவர அவனுக்கு வெளிச்சாப்பாடு ஒத்துக்கொள்வதே இல்லை. உடனே பேதி ஆகிறது இல்லை வாந்தி வருகிறது. ஒரு நாள் மதியம் சாப்பிடவில்லை என்றால் உயிரா போய் விடும்? இத்தனை ஆண்டுகளாக ஒரு வேளை தவறாமல் சாப்பிட்டாகி விட்டதே? ஒரு நாள் வயிறு பொறுக்காதா? என்று யோசித்தபடியே நடந்தான். "என்ன அண்ணாத்தே? பார்க்காமலே போற?" என்ற குரல் ஒலித்ததும் தான் தன்னையறியாமல் வீட்டுப்பக்கம் வந்திருக்கிறோம் என்று புரிந்தது. கேட்ட தனபாலைப் பார்த்து சிரித்தவன் கோயிலில் போய் அமர்ந்தான். சமையல் வாசனை மூக்கைத்துளைத்தது. வேணி வந்து எட்டிப்பார்த்து விட்டுப் போனாள்.

எண்ணெயில் மீனைப் போடும் சொர்ரென்ற ஓசையும் அதன் வாசனையும் மூக்கில் ஏறியது. வேண்டுமென்றே காரத்தைக் கூடுதலாகச் சேர்த்திருப்பாள் மசாலாவில். எண்ண எண்ண அழுகை வந்தது. கீரைக் கட்டு அங்கேயே தான் இருந்தது. அதனை வெறிக்க வெறிக்கப் பார்த்தான் கிருஷ்ணன். எதிர் வீட்டில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி முருங்கைக்கீரை ஆய்ந்து கொண்டிருந்தார். மீண்டும் மீன் பொறியும் மணம், கார வாசனை. அவனது கை அவனையறியாமல் கீரைக்கட்டை எடுத்து ஆயத்தொடங்கியது. மருமகள் பாத்திரம் கொண்டு வந்து கொடுக்க அதில் ஆய்ந்த கீரைகளைப் போட்டான் கரண்டு கிருஷ்ணன். அவனைப் பார்த்து மெல்ல முறுவலித்தாள் அம்பிகா. பதிலுக்குச் சிரிக்காமல் முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டது எந்த கிழட்டுச் சிங்கம்.
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top